1960 களில் ரஷ்யாவின், அப்போதைய சோவியத் யூனியனின் மலைப்பிரதேசங்களில் ஒன்றில் அமைந்திருக்கும் லுமும்பா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ படிப்புக்காக இலங்கையிலிருந்து ஒரு துடிப்பான மாணவன் சென்றிருந்தான். சூழலில் நடக்கும் எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்ளும் தன்மையும், அமைதியாக இருந்து இயற்கையினை இரசிக்கும் தன்மையும் அவனிடம் அதிகமாகவே காணப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் நுழைவின்போதிலும் யாருடனும் அவன் உடனடியாக பேசுவதோ, அல்லது தன்னை அறிமுகப்படுத்த முண்டி அடிப்பதோ கிடையாது.
அமைதியாகவே இருப்பான். ரஷ்ய மொழியினை கற்பதில் அதீத ஆர்வத்தை காட்டி நின்றான்.
மருத்துவ படிப்பு கற்றுவந்தாலும், மார்க்ஸிஸ சிந்தனைகள் அவனை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுக்க முற்பட்டது. அவனும் அதன்பக்கம் மிக வேகமாக முன்னோக்கிச்சென்றான். அவனது பல்கலைக்கழக விடுதி அறைமுழுவதையும், மாஸ்ஸிச, கொமினிஸ் புத்தகங்கள் தொகை தொகையாக அலங்கரிக்கத்தொடங்கின, மலைச்சாரலிலும், அருகில் இருந்த பெரிய, எவரும் ஏறமுடியாத வழுக்கலான மலையின் பக்கத்திலும் இவனது அறை இருந்ததன் காரணத்தினால், வாசிப்புக்குரிய சூழலை தாளாரமாக இவனுக்கு வழங்கியிருந்தது.
அதிக நேரங்கள் இவனது முகம் புத்தகங்களின் உள்ளேயே புதைந்து கிடந்தது.
மாக்ஸிஸ, கொமினீஸிய சிந்தனைகள் உச்ச நிலைக்கு சென்று, புரட்சியின் செங்கதிராக உயர்ந்து நின்ற சேகுவாரா இவன் முன்னால் ஒரு உலக சரித்திர நாயகனாக உயர்ந்து தெரிந்தான்.
இவன் மனம் முழுவதையும் அந்த சரித்திரநாயகன் கொள்ளை கொண்டிருந்தான்.
ரஷ்யாகூட மர்க்ஸிஸ தத்துவம் பேசியும், லெனிலின் பெயரால் ஒரு சோஷலிச பூமியை உலகில் பிரமாண்டமாக கட்டுவதாக சொன்னாலும், சோவியத் யூனியனின் கொள்கைகளில் இவனுக்கு முரண்பட்ட கொள்கைகள் தோன்றின.
இவன் தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் பெரும் சர்ச்சை, நாளாந்தம் நடந்துகொண்டிருக்கும், என்னவென நின்றுபார்க்காமல். அதை தாண்டி இவன் ஒவ்வொருநாளும் வெளியேறிக்கொண்டிருப்பான்.
அந்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகமாகி இறுதியில் ரஷ்யக்காவற்துறையினர் குழுமி ஆராயும் நிலைக்கும் சென்றது.
அந்த சார்ச்சைகளுக்கும், ரஷ்யக்காவற்துறை பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் ஆராய்வு நடத்தியதன் காரணம் இவைதான், யாருமே ஏறமுடியாத, விடுதியின் அருகில் உள்ள அந்த வழுக்கி மலையின் மேற்பகுதிகளில், சோவியத் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து, புதிய சிந்தனைகளை விதைக்கும் வசனங்கள் உள்ள பெரிய பிரசுரங்களை அதில் ஒட்டும் அந்த அசாதாரண மனிதன் யார் என்பதே!
எவருக்குமே விடை தெரியவில்லை. காவற்துறைகூட ஆராய்ந்துபார்த்துவிட்டு, உதட்டை புதுக்கிகொண்டு சென்றுவிட்டது. உண்மைதான் இந்த வழுவழுப்பான மலையின் இந்த அளவு தூரத்திற்கு ஏறி, எந்த மனிதனாலும் பிரசுரங்களை ஒட்டமுடியாது.
ஆனால் இவனுக்கு மட்டும் அதன் விடை தெரிந்திருந்தது. ஏனென்றால், அந்த விளையாட்டை விளையாடுபவனே இவன்தானே.
இவன் செய்யும்வேலை இதுதான், ஒரு பெரிய கடதாசியில் எழுதவேண்டிய வாசகங்களை மிகப்பெரிதாக சிவப்பு மையினால் எழுதுவான், அதுமட்டும் இன்றி கடதாசியின் மறுபக்கத்திலும் அதேபோல எழுதிவிடுவான். எழுதி முடிந்த உடன், அந்த கடதாசியின் இரண்டு பக்கங்களிலும், பசையினை அப்பலாகப்பூசிவிட்டு, அனைவரும் உறங்கிவிட்டபின்பு, விடுதியின் மொட்டைமாடிக்குச் செல்வான், காற்று பலமாக அடிக்கும்போது அந்த கடதாசியை விரித்துப்பிடித்து அந்த மலைக்கு எதிராக நின்று விட்டுவிடுவான். கன கச்சிதாக மலையின் மேற்பகுதிகளில் அந்த பிரசுரம் காற்றினால் ஒட்டப்பட்டு. காலையின் எழுந்திருப்பர்களின் கண்களுக்கு காலை வணக்கம் கூறிக்கொள்ளும்.
பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டுவரை மருத்துவம் கற்றான். அதைவிட அதிகமாக மாக்ஸிஸத்தையும், அரசியல் பொருளாதார தகவல்களையும் கற்றுக்கொண்டான். கிடைக்கும் ஓய்வுநேரங்களில் தன் இருப்பிடத்தை சுற்றியுள்ள, விவசாயிகளின் நிலங்களில் அவர்களுடன் விருப்பத்துடன் இணைந்து வேலை செய்துவந்தான்.
1963ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக மொஸ்கோ மருத்துவமனையில், சிகிற்சை பெற்று அதன்பின்னர் இலங்கை திரும்பிய இவன், இலங்கையின் வரலாற்றில் ஒரு திசைதிருப்பியாளனாக மாறியிருந்தான்.
ஆம் 1989ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் முதன்நாள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனதா விமுத்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிதாமகன்தான் ரோஹன விஜயவீர என்ற இந்த புரட்சியாளன்.
1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பட்டபெண்டி நந்தசிறி விஜயவீர என்ற இயற்பெயருடன் பிறந்து, 1971ஆம் ஆண்டு இலங்கையில் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு புரட்சியாளன்.
பின்னாட்களில் இவர் ஆரம்பித்த அதேகட்சி, பல தடங்கள் புரண்டு இவரது கொள்கைகளுக்கு மாறாக நடந்து, இன்றும் ஜனதா விமுத்தி பெரமுன என்ற பெயருடன் கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கின்றது என்பது வேறுகதை.
(அனுர விமுத்தி தயாநந்த என்ற நண்பன் பல்கலைக்கழகக்காலங்களில் எனக்கு சொன்ன ஜே.வி.பி. கதைகளில் இருந்து)
குறிப்பு - உபாலி பற்றிய முன்னைய மீள் இடுகை மீண்டும் பலருக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். இதுபோல இலங்கை சரித்திரத்தில் மறந்துவிடக்கூடாத ஒரு சரித்திரம் ரோஹன பற்றியது. இதுவும் அறியாத பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக இந்த மீள் இடுகை.
நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜீ.ஜீ.பொன்னம்பலம், கல்லடி வேலுப்பிள்ளைபோன்றவர்களின் சுவையன தகவல்களை தர விரைவில் முயற்சி செய்கின்றேன். தேடல்களுடனான இதுபோன்ற அன்பு நண்பர்களின் அன்பு விருப்பங்களை பதிவுலகில் வாஞ்சையுடன் நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சந்தோசத்தை அடைகின்றேன். நன்றிகள்.
13 comments:
முயற்சிக்கு பாராட்டு...
இவரின் இளமைகால வரலாற்றை இப்போதுதான் அறிகிறேன்....
நான் ஏலவே அறிந்த விடயங்களை சிறப்பான எழுத்தாற்றலால் என்மனதில் இருத்திவிட்டுவிட்டீர்கள். நன்றி. இனி இவை வாசிப்பவர் மனதிலிருந்து மறக்காது என நினைக்கிறேன் யார் வாசித்தாலும். (எழுத்து நடை அழகு)
தொடருங்கள்
எனக்கு புதுமையானது அந்த மைஒட்டப்பட்டதாள்
மனதை நெருட வைக்கும் ஒரு வரலாற்றுக் கதையினைப் படித்ததாய் உணர்வு. எங்களுக்காக சிரமம் எடுத்து எழுதியுள்ளீர்கள் என எண்ணுகிறேன். இப் பதிவு நினைவுகளை மீட்டிப் பார்க்கும் பசு மரத்தாணி.
லங்காவில் உருப்படியானவர்களையும், விசயங்களையும் நாளாந்தம் அழித்தவாறுதானே இருக்கிறான்கள்...
அருமையான தகவல்கள் ஜனா அண்ணா, விசேடமாக அந்த போஸ்டர் ஒட்டியது அந்தப் பழக்கம்தான் இன்னமும் ஜேவிபியினரிடம் தொடர்கிறது என நினைக்கிறேன்.
//கே.ஆர்.பி.செந்தில் said...
லங்காவில் உருப்படியானவர்களையும், விசயங்களையும் நாளாந்தம் அழித்தவாறுதானே இருக்கிறான்கள்...//
அவர் வீரன்,பொதுவுடைமை சிந்தனைவாதி என்பதெல்லாம் உண்மைதான் ஆனால் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளாதவர்.
புதிய தகவல்கள் .நன்றி
இவரை பற்றி தெரியாத பல விடயங்களை தெரிந்து கொண்டேன். பள்ளி காலத்தில் இவர்களுடைய கவர்ச்சிகரமான இக்கட்சியின் கொள்கைகளை தொடர்ந்த நான் சற்று விவரம் புரிந்தவுடன், எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.
இக்கட்சியில் தற்போது மார்க்கசியவாதமும் இல்லை கொள்கைகளும் இல்லை, இப்போது இருப்பதெல்லாம் இனவாதம் மட்டுமே. இவர்களோடு ஒப்பிடும் போது பெயரிலேயே இனவாதத்தை கக்கும் கட்சிகள் பரவாயில்லை.
இதுபோன்ற பயனுள்ள அறிய வேண்டிய பல விடையங்களையும் தொடர்ந்து பதிவிடுங்கோ அண்ணை. உண்மையில் இது பலபேருக்கு பிரயோசனமாக இருக்கும்.
எத்தனை முறை வேண்டுமானாலும் மீள்பதியுங்கள் ஜனா... உங்களின் ஆகச்சிறந்த (நன்றி: சு.ரா.) பதிவு இதுதான்
நன்றி அண்ணா! தேவையான பதிவு!
thanks.. anna..
Post a Comment