Tuesday, February 15, 2011

ஹொக்ரெயில் - 15.02.2011

33 மணிநேரம் தொடர்ந்து பெய்த முத்தமழை…
பாங்கொக்கில் 33 மணிநேரம் உதட்டோடு உதடு சேர்த்து தொடர்முத்தம் பொழிந்து 7 ஜோடிகள் புதிய உலக சாதனையினை நிலை நிறுத்தியுள்ளார்கள்.
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, தாய்லாந்தின் பற்றயா கடற்கரையில் இந்த முத்த போட்டி இடம்பெற்றுள்ளது. பெருமளவிலான ஜோடிகள் முத்தமழைப்போட்டியில் ஈடுபட்டிருந்தாலும், இறுதிவரை உதடு பிரிக்காமல்; 7 காதல் ஜோடிகள், 33 மணிநேரம் முத்தமழையில் நனைந்து புதிய ரெக்கோhட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைரமோதிரங்களும், பெரும் பணப்பரிசும் வழங்கப்படடுள்ளன. அழவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்றாலும், முத்தம் மட்டும் எப்போதும் அமிர்தமாகவே இருந்திருக்கும்போல (அவர்களுக்கு)

அது சரி..எப்படி தொடர்ந்து 33 மணிநேரம் முத்தம் கொடுக்கமுடியும் என்று உங்கள் அறிவார்ந்த மூளை கேட்பதை உணரமுடிகின்றது.
அதாவது போட்டியில் கலந்துகொள்பவர்கள், குறிக்கப்பட்ட தடவைகள், குறிக்கப்பட்ட நேரத்தினுள், இயற்கை உபாதைகளை போக்கி கொள்ளவும், ஸ்ரோ மூலம் பானங்களையும், குடிநீரையும் அருந்தவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த போட்டியில் போட்டியாளர்கள், தங்களைச்சுற்றிய மூன்று ஸ்கொயாட் சுற்று வட்டத்தினுள்ளேயே நின்று முத்தமிடவேண்டும், உக்காரமுடியாது. உக்கார்ந்தாலோ மயங்கி விழுந்தாலோ அவுட்.
“முத்தம் முத்தம் முத்தமா? மூன்றாம் உலக யுத்தமா?”

தாய்லாந்திற்கும், கம்போடியாவுக்கும் இடையில் சிக்குண்ட சிவன்கோவில்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினைகள் இருந்து வருகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்டு எல்லைக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள “ப்ர விஹார்” என்ற சிவன் கோவிலால் தற்போது இந்த சிக்கல் தீவிரமடைந்துள்ளது. இரண்டு நாட்டு இராணுவத்தினரும், ஏட்டிக்குப்போட்டியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாலும், எறிகணைகளை தொடர்ந்து ஏவிவருவதாலும், இந்த பகுதிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையிலும் இந்த எல்லைப்பிரச்சினைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1962ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் இந்த சிவன் கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் எனவும், அதை சூழவுள்ள பகுதிகள் தாய்லாந்திற்கு சொந்தம் எனவும் வழங்கிய சிக்கலான தீர்ப்பும் கவனிக்கப்படவேண்டியதே.
இந்த விவகாரத்தில் தற்போது தலையிட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்ஸில் இருநாடுகளும் உனடியாக அமுலுக்கு வரும்படியான சண்டைநிறுத்தத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் வண்ணமும், பேச்சுவார்த்தைகள்மூலம் இந்தப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டும் எனவும் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
அதெல்லாம் சரி. இங்கிருக்கும் சிவன் கோவில் 11ஆம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆக ராஜராஜ சோழன் கட்டிய கோவில் இது என்று சட்டென்று புரிகின்றது அல்லவா?
இதேவேளை இந்தக்கோவிலை தாய்லாந்து படையினர்தான் எரித்து அழிவுக்குள்ளாக்கியதாக கம்போடியா குற்றம்சுமத்தியுள்ளது.
“தென்னாடுடைய சிவனே போற்றி”

“ஸியேஸ் வித் ஜனா” வலைப்பூவின் ஆக்கங்கள் இனி, இணைய சஞ்சிகை, பத்திரிகை, வானொலியில்.
கடந்த வாரம் தொடர்ச்சியாக பல விண்ணப்ப மின்-அஞ்சல்கள் இந்த தளத்தின் ஆக்கங்கள் குறித்து அனுமதிக்காக வந்து சேர்ந்தன.
நான்கு இணைய சஞ்சிகை ஆசிரியர் குழுமமும், ஒரு ஐரோப்பிய வானொலி ஒன்றின் மின்-அஞ்சலும், கனடிய தமிழ் பத்திரிகை ஒன்றின் மின்-அஞ்சலும், இந்த தளத்தில் ஆக்கபூர்வமான ஆக்கங்கள்! பல உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்த அனுமதி தருமாறும், அதேவேளை இன்னும் சிறப்பான உபயோகமான பதிவுகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்ததில் செயற்பாட்டார்கள் கல்வி மற்றும் சமுக அந்தஸ்துகளில் உயர்ந்தவர்கள், பலராலும் மதிக்கப்படுபவர்களாக இருந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இவர்கள் எல்லாம் இந்த தளத்தின் பகுதிகளை முழுமையாக பார்த்திருக்கின்றார்கள் என்பது மிகப்பெரிய சந்தோசமாக இருக்கின்றது.
ஆக்கபூர்வமான பதிவுகள் என்று மற்வர்களால் கருதப்படுபவை சகலருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கத்துடன் அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை அனுமதி பெறாமலே பல இணையங்களில், பத்திரிகைகளில், இந்த தளத்தின் பதிவுகள் “நன்றி இணையம்” என்ற பெயருடன் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
எது எப்படியோ.. பதிவெழுத வந்து எதை சாதித்தோம் என்று அடிக்கடி மனதில் தோன்றும் கேள்விகளுக்கு, அதன் முதற் படிக்கட்டாக இந்த ஆக்கங்கள் இணைய, அச்சு, ஒலி வடிவங்களை பெறுவது மகிழ்ச்சியான விடயமே.
அது மட்டுமன்றி இது உபயோகமான தேவையான பதிவுகளை மேலும் எழுத தூண்டுதலாகவும் உள்ளது.
இதற்கு காரணமாக இருந்த வாசகர்கள், சக பதிவர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் இதை பகிர்ந்துகொள்கின்றது “ஸியேஸ் வித் ஜனா”

குறும்படம்.

நேரில் கண்ட விசித்திரத்திருடன்.
நேற்யை தினம் நல்லூர் பின் வீதியால் எனது மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது கண்ட சம்பவமும், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அதிர்ச்சியும், விசித்திரத்தையும் சேர்த்து தந்ததாக இருக்கின்றது.
நேற்று மதியம் தாண்டிய வேளை வீதியில் பெரிதாக வாகன நெருக்கம் இல்லாத சந்தர்ப்பம். ஒரு பெண்மணி நடந்துவந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர் பின்னாலே வேகமாக சைக்களில் வந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் அந்த பெண்ணை முட்டுவதுபோல செல்வதை தூரத்தில் அதே பாதையில் நேரே முன்னால் வந்துகொண்டிருந்த எனக்கு தெரிந்தது. உடனடியாக அந்தப்பெண், கையை காட்டி கத்திக்கொண்டு அவனை துரத்திக்கொண்டிருந்தமையும் தெரிந்தது.
சற்று முன்னால் இரண்டு மோட்டார் சைக்களிள்களில் நின்று பேசிக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் அந்த இளைஞனின் சைக்கிளை உதைந்து விழுத்திவிட்டு அவனை பிடித்துக்கொள்கின்றனர். இந்த கட்டத்தில் நான் அவர்களை அண்மித்து விட்டேன். “அந்த அம்மாவின்ட சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுறான் அண்ணை” என்று அவனை பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் என்னிடம் சொல்கின்றான்.
அதற்குள் இன்னும் ஐந்து பேர் கூடிவிட்டனர். இதை கண்டு சற்று தொலைவில் கடமையில் இருந்த இராணுவத்தினரும் ஓடிவரவே, அந்த திருடனை பின்னர் வந்த ஒரு வயதானவர் அடிக்க முற்பட்டார். ஆனால் அந்த அம்மா..அடிக்கவேண்டாம். ஆமிக்காரங்கள் வாறாங்கள். அவர்களிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தவேளை…இராணுவத்தினரை கண்டு திடுக்கிட்டு பார்த்த அந்த திருடிய இளைஞன் உடனடியாக செய்த காரியம் அதிர வைத்தது.
அந்த சங்கிலியை வாய்க்குள் திணித்து விழுங்கிவிட்டான்;.
பிறகென்ன பிடித்த இளைஞர்களும், அந்த பெண்மணியும், இராணுவ வீரர் ஒருவரும் ஒரு ஆட்டோவில் அவனை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அவசரமாகச்சென்றனர்.
எதுக்காக அந்த இளைஞன் திருடிய சங்கிலியை விழுங்கினான் என்பது மனதில் கேள்வியாகவே உள்ளது!

மியூஸிக் கபே
ஜேசுதாஸின் குரலில் எப்போதும் ததும்பும், காந்த ஈர்ப்பும், மானஸ சஞ்சாரமும், மனதுக்குள் ஏதோ செய்யும் உணர்விலும் எப்போதும் அப்படியே மெய்மறந்துபோகும் தன்மைகள், சம்பவங்கள் ஒன்றா இரண்டா..
ஜேசுதாஸின் பாடல்களை, அந்த குரலை கேட்பதே என்னைப்பொறுத்தவரையில் தவம்தான்.
அந்த வகையில் எப்போதும் இரசிக்கும் அவரின் வித்தியாசமான பாடல் இது..
கண்டிப்பாக கேட்டுப்பாருங்கள்..வானம்.. எத்தனை லயங்களில், எத்தனை ரிதங்களில் உங்கள் மனதில் சஞ்சாரிக்கின்றது என்று..

ஜோக் பொக்ஸ்
கணவன் அலுவலகத்தில் இருந்து வருவதற்கு முன்னதாகவே தன் அண்ணா வீட்டிற்கு புறப்பட்டுவிட்ட மனைவி கணவனுக்கு எழுதிவைத்துவிட்டுப்போன குறிப்பு..
அண்ணன் மகன் நாளை வெளிநாடு போகவுள்ளதால் நான் அண்ணா வீட்டிற்கு அவசரமாக போகின்றேன். நாளை மதியம்தான் திரும்புவேன்.
மூன்று சான்ட்விச் செய்து வைத்துவிட்டு செல்கின்றேன்…
ஓன்றை எடுத்து டாமிக்கு போடுங்க..
மற்றதை எலிப்பொறியிலை வைத்திடுங்க..
மிச்சம் உள்ளத நீங்க சாப்பிடுங்க..

17 comments:

Ramesh said...

Hot...
முத்தம் சத்தம் கேட்டதா???
சிவன்கேயில் சாமிக்குத் தெரியுமா அவர்கள் சண்டைபோடுவது?? சாமிகளால் பிரச்சனையா இல்ல......??
சியேஸ்....... வாழ்த்துக்கள்
சிரியஸ் பதிவர்போல ..

குறும்படம் பார்த்துகிறேன் பிறகு.

நேரில் கண்ட சாட்சி எழுத்துக்களில் அதிகரிக்கும் கொள்ளை யாழில்.. சுதந்திரதினம் கொண்டாடப்பட்டதே லங்காவில்.. ஓ இதுதானா??

பாடல் ரசனை..

சுதர்ஷன் said...

ராஜ ராஜ சோழன் அங்கை எல்லாம் போனாரா ? நல்ல செய்திகள் . முத்த மழை போட்டி இங்கே எல்லாம் நடைபெறாதா ?!

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, இந்த வாரம் போதை கொஞ்சம் அதிகம்.

தொடர் முத்தம்: முத்தம் முத்தம் முத்தமாம் மூன்றாம் உலக யுத்தமாம் எனும் பாடலை நினைவூட்டுகிறது. சாதனை செய்பவர்கள் எந்த துறைகளையும் விட்டு வைப்பதாக இல்லை.

தாய்லாந்து கம்போடியா சிவன் கோவில்: பேணிப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுத் தொல் பொருள்.

ஜனாவின் ஆக்கங்களின் அங்கீகாரம்: நீண்ட நாளும் நானும் எதிர்பார்த்திருந்த விடயம், வாழ்த்துக்கள் சகோதரம், உங்கள் இலக்கிய மொழி நடைக்கு கிடைத்த அங்கீகாரம். மகிழ்ச்சியான செய்தி என்பதை விட இன்னும் இன்னும் உங்களை எழுத்தாற்றலை கூராக்கி மெரு கூட்டி நிறைய விடயங்களை எங்களுக்குத் தரும் ஒரு சிறப்பான செய்தி.

குறும்படம்: சின்ன வயசிலை தும்பிப் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி கலைத்ததை கண் முன்னே கொண்டு வந்தது. பாவம் அந்த நாயகன் பேய் போத்திலை கலைக்கிறார். விடா முயற்சியையும் எச்சரிக்கை இல்லாத அலட்சியப் போக்குக் கொண்ட இளைஞனின் பின் விளைவுகளையும் சுட்டி நிற்கும் அற்புதமான ஒரு குறுங்காவியம்.

விசித்திரத் திருடன்: தந்திரமான மனிதன், பிழைக்கத் தெரிந்தவன், அதனை விட சமயோசிதமுள்ளவன் என்பதற்கு எடுத்துக்காட்டு, அவனின் திருட்டுச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது, ஆயினும் அவனின் சமயோசிதம் மலைக்க வைக்கிறது.

ஜேசுதாஸ் பாடல்: கானக் குரலோனின் காந்தர்வ வரிகள், அதுவும் இப்போது தூங்கப் போகும் நேரத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். மனதிற்கு இசையால் மயக்கம் தந்து உறங்க வைக்கும் அற்புத குரலைப் பகிர்ந்துள்ளீர்கள்.

ஜோக்ஸ், வீட்டிலை உள்ள நாய் குட்டி, எலி, கணவன் இவை எல்லாம் மனைவியின் பார்வையில் ஒரே மாதிரித் தெரிகிறதை உணர்த்துகிறது.

சுருங்கக் கூறின் இவ்வாரம் காதிற்கு இனிய செய்தி தந்து, ஜேசுதாஸின் அற்புத கானத்தோடு கிக்கினையும் அதிகரித்திருக்கிறது உங்களின் ஹொக்ரெயில். வாழ்த்துக்களோடு நிரூபன்.

Riyas said...

எல்லாமே இனித்தது.. அந்த முத்தங்கள் உட்பட. விஷேடமாக ஜேசுதாஸின் பாடல்.. இவரின் பாடல்களாய் தேடி தேடி கேட்கும் இந்த பாடலை எப்படி தவறவிட்டேனோ தெரியவில்லை.. உன்மையில் அழகான பாடல்..

//ஜேசுதாஸின் பாடல்களை, அந்த குரலை கேட்பதே என்னைப்பொறுத்தவரையில் தவம்தான்// உண்மை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல நல்ல தகவல்களை தேடி எடுத்திருக்கிறீர்கள் ஜனா! முத்த மேட்டர், சிவன்கோவில், குறும்படம் ஜோக் என எல்லாமே சூப்பர்! உங்கள் பதிவுகளை நாடி பலர் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!!

Unknown said...

//பதிவெழுத வந்து எதை சாதித்தோம் என்று அடிக்கடி மனதில் தோன்றும் கேள்விகளுக்கு, அதன் முதற் படிக்கட்டாக இந்த ஆக்கங்கள் இணைய, அச்சு, ஒலி வடிவங்களை பெறுவது மகிழ்ச்சியான விடயமே//
வாழ்த்துக்கள்! :-)

Chitra said...

அந்த திருடன் செய்த காரியம், அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

Chitra said...

lovely song.

Unknown said...

நான் அப்பவே சொன்னேன் உங்க பதிவுகள் தான் தரமானது எண்டு..
மொதல்'ல எனக்கு ட்ரீட் வையுங்க பாஸ்..

நல்லூர்......இப்பிடி போயிட்டுதா?அப்ப இனி வரவேண்டாம்??

ஜோக்....ஹிஹிஹி

முத்தம்....இங்க அப்பிடி ஒண்டும் இல்லையா பாஸ்??

சக்தி கல்வி மையம் said...

“ஸியேஸ் வித் ஜனா” வலைப்பூவின் ஆக்கங்கள் இனி, இணைய சஞ்சிகை, பத்திரிகை, வானொலியில்.////
தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

பலவிதமான தகவல்களை, தகவல் களஞ்சியமாக தந்தது.

டிலான் said...

ஹொக்ரெயில் வழமைபோல அருமையானதே. தங்கள் எழுத்துக்கள் பல பதிவுகள் எற்கனவே இங்கே பத்திரிகையில் வந்துவிட்டன,

எழுபதுகளின் தேவதை, சிறுவர்களை மையமாக வைத்து வெளிவரும் ஈரானிய குறும்படங்கள், சிறுவர் துஸ்பிரயோகமும் இலங்கையின் சவாலும், பரணி இலக்கியம், மெல்ல தமிழ் இனி அச்சாகும், சி.ஜே.செவின் பற்றிய விமர்சனம், நயினாதீவு என வெளிவந்துவிட்டன.
அவற்றை ஸ்கான் செய்து அனுப்பிவிடுகின்றேன்.

நுங்கம்பாக்கம் இலக்கிய கூட்டங்களில் பிரபஞ்சன், பெரியார்தாசன், என்போர் உங்களை கவனித்து உங்களுடன் நீண்ட நேரம் உரையாடியபோதும், ஞாநியின் ஈழம் சம்பந்தமான கருத்துக்களை; வரும்போது நாங்கள் அங்கிருந்து கோமாக வெளியேறியபோதும் அப்போதே நான் நினைத்ததுண்டு ஒரு எழுத்தியல் தகுதியான ஈழத்தவன் உருவாகின்றான் என்று. இன்னும் பலரின் பார்வைகள் தகுதியான உங்கள்எழுத்துக்களின்மேல் படவேண்டும் என்பதே என் அவா.
வாழ்த்துக்கள் அண்ணா.

டிலான் said...

பாட்டு சுப்பர் அண்ணை. நிழல்கள் ரவிக்கு இந்தப்பாடலும், துள்ளித்துள்ளி போகும் பெண்ணே பாடலும் கிடைத்திருக்கின்றது கவனித்தீர்களா? அதேபோல ராதாரவிக்கு பூவே செம்பூவே பாடல் கிடைத்தள்ளதும் கவனிக்கவேண்டியதுதான்.

Unknown said...

இன்னிக்கு காக்டெயில் பிரமாதம் ..

ஷஹன்ஷா said...

முத்த போதையில் தொடங்கி இசை போதையில் முடிவு...அருமை..


ஃஃஸியேஸ் வித் ஜனா” வலைப்பூவின் ஆக்கங்கள் இனி, இணைய சஞ்சிகை, பத்திரிகை, வானொலியில்.ஃஃஃ

மகிழ்ச்சி..வாழ்த்துகள் அண்ணா..தொடர்ந்து எழுதுங்கள்..

உணவு உலகம் said...

இன்றைய பதிவில் முத்தத்தின் சத்தம் முழுமையாக கேட்கிறதே!
இசையில் லயித்தேன்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Unknown said...

//எது எப்படியோ.. பதிவெழுத வந்து எதை சாதித்தோம் என்று அடிக்கடி மனதில் தோன்றும் கேள்விகளுக்கு, அதன் முதற் படிக்கட்டாக இந்த ஆக்கங்கள் இணைய, அச்சு, ஒலி வடிவங்களை பெறுவது மகிழ்ச்சியான விடயமே//
சந்தோஷத்தை தரும் சாதனையே...

LinkWithin

Related Posts with Thumbnails