Tuesday, August 18, 2009

தென் கொரிய மக்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார் கிம் டே ஜங்.


தென் கொரியாவின் 15ஆவது ஜனாதிபதியாக 1998 முதல் 2003 வரை பதவி வகித்தவர் கிம் டே ஜங். ஐந்துவருடங்கள் அந்த நாட்டின் தலைவராக அவர் பதவி வகித்தாலும் அவரின் சேவைகள், அரசியல் நடவடிக்கைகள் என்பன நீளமானது.
2000 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற இவர். தென்கொரியாவிலேயே முதன்முதலாக நோபல் பரிசு என்ற மிகப்பெரிய விருதைப்பெற்றவர் என்ற பெருமையினையும் பெற்றுக்கொண்டார். அத்தோடு “ஆசியாவின் நெல்சல் மண்டேலா” என்ற சிறப்பு பெயரால் இவர் சிறப்பிக்கப்பட்டார்.


1925ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 03ஆம் திகதி பிறந்த இவர், பிறப்பினால் ஒரு ரோமன் கத்தோலிக்கனாக இருந்து 1957ஆம் ஆண்டுவரை கத்தோலிக்கனாகவே வாழ்ந்தார். சிறந்த, பல ஆண்டு கால அரசில் அனுபவத்துடன் அனைத்து தகுதிகளுடனும் 1998 ஆம் ஆண்டு தென் கொரியாவின் ஜனாதிபதியாகி முக்கியமான ஒரு கட்டத்தில் அந்த நாட்டின் நிர்வாகத்தினை திறமையாக முன்கொண்டு சென்றார். வடகொரியாவுடன் நல்லுறவை கட்டியெழுப்பி இரண்டு நாடுகளும் நட்புடன் இருக்க அயராது பாடுபட்டார்.
தற்போது 85 வயதாகிய கிம் டே ஜங், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா நோயாலும், கடும் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிற்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி ஓகஸ்ட் மாதம், சிகிற்சைகள் பயனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார்.


1954 ஆம் ஆண்டே தனது நேரடி அரசியலில் இறங்கினார் கிம் டே ஜங். அந்தக்காலம்தான் தென் கொரியாவின் முதலாவது ஜனாதிபதி சிக்மன் றீயினுடைய கால கட்டம். எனினும் 1961ஆம் ஆண்டே கொரிய தேசிய சபைக்கு அவர் ஒரு உறுப்பினராக தெரிவாகியிருந்தார். அதன் பின்னர் தென் கொரிய சர்வாதிகாரி என வர்ணிக்கப்பட்ட பார்க் சாங் கீ 1963 முதல் தென்கொரியாவின் அதிகாரங்களை கைப்பற்றியதன் பின்னர். பார்க் சாங் கீயினுடைய செற்பாடுகளை தைரியமாக எதிர்த்து குரல் கொடுத்து, தமக்கு நேரடியாகவே விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் நியாம்கேட்டார் கிம் டே ஜங்.


இந்த நிலையில் 1973ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இவர் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தபோது டோக்கியோவில் இவர் தங்கியிருந்த ஹொட்டலில் வைத்து, கொரியன் சென்றல் இன்வஸ்ரிகேஷன் ஏயென்டினால் (கே.சி.ஐ.ஏ) கடத்தப்பட்டார்.
பார்க் சாங் கீயை கடுமையாக விமர்சித்தமையினாலேயே இவர் கடத்தப்பட்டதாகவும், கடத்தப்பட்ட இவர் கொல்லப்பட்டார் என்றே அப்போது செய்திகள் வெளியாகியிருந்தது. இவரின் ஆதரவாளர்கள் பலரே, இவர் இறந்துவிட்டார் என்றே அப்போது நினைத்திருந்தார்கள்.
இருப்பினும் சில மாதங்களின் பின்னர் இவர் உயிருடன் மீண்டு வந்தார். இருப்பினும் அன்றைய பார்க் சாங் கீயினுடைய நிர்வாகம் இவர் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்தது.


அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டில் இவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று பொஸ்ரனில் தங்கிருந்தார். அந்த நாட்களில் ஹவாட் யூனிவர்சிட்டியில் சர்வதேச விவகார நிலையத்தின் அழைக்கப்பட்ட பேராசியராக இவர் பணிபுரிந்தார். 1985 ஆம் ஆண்டு இவர் தனது தாய்நாட்டிற்கு திரும்பினார். இந்த வேளை அப்போதைய பாப்பரசர் ஜோன் போல் அவர்கள், கிம் டே ஜங் பொருட்டு தென்கொரியாவின் அப்போதைய ஆட்சியாளர் ஷான் டூ க்வானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


அதன் பின்னர் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் இவர்போட்டியிட்டாலும் இவர் சார்ந்த கட்சி தோல்வியையே சந்தித்தது. அதனைத்தொடர்ந்து 1992, 1995 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது.
எனினும் தனது பாதையினை மிக நேர்த்தியாக அமைத்துச்சென்ற கிம் டே ஜங் 1997ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் 40.3 வீத வாக்குகளைப்பெற்று 1998ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 23 ஆம் திகதி பெப்ரவரிமாதம் 2003ஆம் ஆண்டுவரை தென்கொரியாவின் ஜனாதிபதியாக பதவிவகித்தார்.


தனது ஆட்சிக்காலத்தில் முக்கியமாக தென்கொரியாவின் பொருளாதராத்தினை வலுவானதொரு நிலைக்கு இட்டுச்செல்லும் பொருட்டு, பாரிய திட்டங்களை இவர் அறிமுகப்படுத்தியதுடன், பொருளாதரத்தை உயர்த்துவதற்கு அயராது பாடுபட்டார். அதேபோல வட கொரியாவுடன் நேரடியான பேச்சுவார்த்தைகளில் ஆர்வம்காட்டி உலக நாடுகளின் பார்வைகளை தம்பக்கம் திருப்பிக்கொண்டார். இந்தக்கட்டங்களிலேயே 2000 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.


பல காலங்களின் பின்னர் தென்கொரியாவுக்கு கிடைத்த ஒரு வெளிச்சம், தென் கொரியாவின் விடிவெள்ளி, ஆழ்ந்த அனுபவம் மூலம் உலக நாடுகளின் ஆதரவினை தமது சாமர்த்தியத்தால் பெற்றவர், உலகின் முக்கியமான தலைவர்களின் ஒருவர் என அப்போதைய தென்கொரிய பத்திரிகைகளால் உச்சத்தில் வைத்து வர்ணிக்கப்பட்டார் கிம் டே ஜங்.


அண்மைக்காலமாக வயோதிபம் மற்றும் நோய் காரணமாக பெரிதும் அவதிப்பட்டுவந்த அவர், பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதையே பெரிதும் குறைத்துக்கொண்டிருந்தார் எனினும் இந்த வருடம் கடந்த மே மாதம் 23ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட, இவருக்கு அடுத்து தென் கொரியாவின் ஜனாதிபதியாக வந்த ரோ மூ ஹயூனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்தார். இதுவே அவர் இறுதியாக கலந்துகொண்டிருந்த பொது நிகழ்வு எனக்கருதலாம்.


இன்று இவரது மரணச்செய்தி கேட்டதைத்தொடர்ந்து தென் கொரியா சோகத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் இவரது படங்களை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதேவேளை நாடளாவிய ரீதியில் தென்கொரியா எங்கும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் பாங் கி மூன் நேரடியாகவே தென் கொரியா சென்று தமது இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது இழப்பினை இன்று தென்கொரியாவின் கறுப்பு நாள் என பத்திரிகை ஒன்று விமர்சித்துள்ளது.

5 comments:

Pradeep said...

அந்த அனுபவம் நிறைந்த அரசியல்தலைவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கலாம்...

மனோன்மணி said...

இத்தனை நீண்டகால அரசியலில் அவர் தனது வாரிசுகளை முன்னிறுத்தவில்லை, மக்களின் முன் வெக்கமின்றி நாடகங்களை அரங்கேற்றவில்லை. தன் குடும்ப நலனிற்காக இனத்தினையும், தன்னை நம்பிய மக்களையும் விற்கவில்லை. அந்த விதத்தில் அவர் மேலானவரே...அவருக்கு எழுந்துநின்று அனுதாபங்களை தெரிவிக்கலாம்.

கவிஞர்.எதுகைமோனையான் said...

மனோன்மணி சார் சொல்வது எங்கேயோ உதைக்குதே...என்றாலும் உண்மைதானே...மூன்று மாதங்களுக்குள் தென் கொரியா தனது இரண்டு முன்னாள் அதிபர்களை இழந்துள்ளது. நானும் ஒரு வெள்ளை மலரை வைக்கின்றேன்.

Unknown said...

எந்த நாட்டில் என்றெல்ல, எந்த நாட்டிலாவது. தனது நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் நினைவுகொண்டு மரியாதை செலுத்தப்படவேண்டியவர்களே. அந்த வகையில் கிம் டே ஜங்கும் மரியாதை செலுத்தப்படவேண்டியவரே.

தயா said...

சிறந்த தகவல். பதிவுக்கு நன்றிகள்.

LinkWithin

Related Posts with Thumbnails