Sunday, August 30, 2009

சென்னையில் ஓர் நாள் மழையில்.


ஓர் ஐந்து நாட்களின் முன்னர், மனது கொஞ்சம் இலேசாக இருந்தது. ஆய்வொன்றை முழுமையாக மனநிறைவுடன் எழுதி சமர்ப்பித்த சந்தோசம் மனதை முழுமையாக நிறைத்திருந்தது. சென்னையில் நான் தற்போது தங்கியிருக்கும் கிழக்கு கடற்கரைச்சாலையில் கால்கள் ஆற, கடற்கரை வரை நடந்துசென்று அங்கு தனிமையில் இருந்து கடற்கரை இரைச்சலை செவிமடுத்து, அந்த ஈரலிப்பான காற்றினை முழுமையாக இழுத்துமூச்சுவிட்டு கடலின் இரைச்சலை தவிர்த்த நிசப்தமான அந்த பொழுதுகளை இரசிப்பது எனது வழமை.
அன்றும் அவ்வாறே சென்று அமர்ந்திருந்தேன். ஆய்வுகளை சமர்ப்பித்து முடித்திருந்தபோதிலும், அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது என் மனது. என்னமோ, கடலையும் தரையினையும் பற்றி சார்பியலில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது. இந்த கடலின் அமைவிடத்தினையும், தரையின் அமைவிடத்தினையும் புரியவேண்டுமெனில் திசையும், வலம் இடமும் தெரியவேண்டும். தனியே எனது வலதுபக்கம் கடல், இடது பக்கம் தரை என்று சொல்லிவிட முடியாதே, அங்கே கண்டிப்பாக ஒரு திசைவேண்டுமே! வலது இடம்பற்றி பேசும்போது அவை சார்பான திசைகளையும் சொல்லவேண்டிவரும். ஸோ..லெப்ட் அன்ட் ரைட் கூட சார்பான கருத்துக்கள்தான். அட மிகக்கஸ்டமான சார்பியலை நம்மளால இவ்வளவு சிம்பிளாக யோசிக்கமுடியுதே! என மனம் அது பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தது.


எத்தனை சிரமப்பட்டு மனதை அடக்கினாலும், அன்று என்னமோ அது தன்னை ஒரு ஆராட்சியாளனாகவே காட்டிக்கொண்டு நின்றது. ஐங்ஸ்ரின் முதல் சுயாதாவினுடைய உதாரண மேற்கோள் விளக்கங்களை அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டிருந்தது.
வழமையினைவிட நேரத்திற்கே இருட்டிவிட்டது போன்ற உணர்வு ஏற்படவே, நேரத்தைப்பார்த்தேன். நேரம் ஒன்றும் அதிகம்போய்விடவில்லை; மாலை 5.30 மணிதான் ஆகியிருந்தது. அப்போதுதான் புரிந்தது சில வேளைகளில் இந்த பாழாப்போன மனது எனது பலவீனப்புள்ளிகளை அறிந்து அதற்கேற்றால்போல விடயங்களை அடுக்கி, தன்பாட்டுக்கு இலவச பேருரை நிகழ்த்தி சூழலில் இருந்தும் சுற்றாடலில் ஏற்படும் மாற்றங்களைக்கூட கவனிக்காத விதத்திலும் அவற்றில் இருந்து என்னை வேறுபடுத்திவிடுகின்றது என்று.


வானம் மிக விரைவாக கடுமையாக இருட்டிக்கொண்டுவந்தது. கடலை நோக்கி பார்வையினை செலுத்திக்கொண்டு மணலில் இருந்து கால்களை மடக்கி, முழங்கால்களை இரண்டு கைகளாலும் கோர்த்துப்பிடித்துக்கொண்டிருந்த எனக்கு, பின் திசையில் இருந்துவந்த இடிமுழக்கங்கள் தூரத்தில் மழை பெய்துகொண்டிருக்கின்றது என்ற வெளிப்படை உண்மையினை தெரிவித்துக்கொண்டன. மப்பும் மந்தாரமுமாக கடும் கறுப்பாக மாறிவிட்ட வானம், ஈரலிப்பான கடற்காற்று, என்பவற்றுடன் நிதானமாக கடலை பார்க்கும்போது கடல் அலையின் இரைச்சல் தற்போது பேரொலியாக கேட்பதுபோல இருந்தது.
உடனடியாக மனம் நீண்டநாட்களின் பின்னர், மழை தருகின்ற சுகங்களை இன்று முழுமையாக அனுபவித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தது.


கடற்கரைக்கு சமாந்தரமாக இருந்த வீதியிலும் மக்கள் நடமாற்றம் மிகவும் குறைவாக இருந்தது. விதியின் மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்திருந்தன. ஒன்றிரண்டு மழைத்துளிகள் என் முகத்தில் விழ ஆரம்பித்தன. எழுந்து விதியை நோக்கி நடக்க ஆரம்பிக்கும்போது மழைத்துளிகளின் வேகமும் கூட ஆரம்பித்து, நான் வீதியினை அடைந்தபோது மழை தனக்கே உரிய அடைமொழியான “சோ” என்ற மழையாக பெய்ய ஆரம்பித்து. இனிவரும் முனிவரும், கவிஞரும், புலவரும் சொன்ன மழையின்சுகம் அத்தனையினையும் இன்று முழுதாக அனுபவிக்கவேண்டும் என்று முடிவெடுத்தவனாக வான்பார்த்து மெதுவாக வீதியில் நடந்தேன்.
(அட மடையா! அவங்கள் சொன்னாங்களாம் என்று இவரு நடக்கிறாராம். நல்லா நனை மகனே!! உனக்கு சுகம் கிடைக்குதோ என்னமோ கண்டிப்பா யுரம் கிடைக்கும்!!! என்று மனம் எச்சரித்துக்கொண்டே வந்தது)
அட நம்ம ஊரில் நனைய முடியுமா? மழையின் சுகத்தை அணுவணுவாக இரசித்து கொட்டும் மழையில் மெதுவாக நடந்து வானத்தை பார்க்கமுடியுமா? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்பது தொடக்கம் பல்வேறு காரணங்களுக்காக எங்களுக்கு நாங்களே பல தடைகளை போட்டு ஒதுங்கிவிடுவோம். ஆனால் நம்மைத் தெரியாத அன்னியமான ஒரு இடத்தில் சன நடமாற்றமே இல்லாத பொழுதுகளில் இந்த சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அனுபவிக்காமல் இருக்கமுடியுமா?


மெதுவாகவே கொட்டும் மழையில் நடந்துகொண்டிருந்தேன். வீதியில் பட்டு தெறிக்கும் மழை வீதியின் இருபுறங்களிலும் சிறுவெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது.
எனது உடைகள் முழுமையாக நனைந்து தொடர்ந்துவரும் மழை உடையில் பட்டு உடைகளால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனது ஆதி அந்தம் முழுவதும் நனைந்துகொண்டிருந்த பொழுதுகளில், “நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சௌர்க்கம் எய்துவாய்” என்ற வரிகளின் உண்மையான அர்த்தங்கள் அனுபவமாகப்புரிந்தது. முன்னிரவின் இருட்டு, பெருமழையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் வீதிவிளக்கின் ஒளி, தூரப்பட்டுக்கொண்டிருந்த கடல்அலைகளின் ஓசை என்பன மனதிற்கு ஒரு முழுமையான சுகத்தினை கொடுத்தன. எதேட்சையாக மழையில் நனைவதைவிட, காத்திருந்து திட்டமிட்டு மழையினை அணு அணுவாக இரசிப்பதன் சுகம் எனக்கு அன்று புரிந்தது.


வீதி திரும்பி கிழக்கு கடற்கரைச்சாலைக்கு செல்லும் சந்துக்களில் ஒன்றில் தேனிர்க்கடை ஒன்று இருந்தது. மழையில் நனைந்துவந்து சுடச்சுட தேனீர் குடித்தால் இதமாக இருக்கும் அல்லவா என்று மனதின் கருத்தினை எற்றுக்கொண்டேன். பால் கலக்காத தேனிர் மட்டும் தரும்படி கடைக்காரிடம் தெரிவித்தேன். “தம்பி சிலோனுங்களா? என்று தேனிரை ஆற்றியபடியே கேட்டார் அவர்” வெறுமையாக தேனீர் கேட்டதனாலா? அல்லது எனது பேச்சிலிருந்தா அவர் அப்படி கேட்டார் என்று எனக்கு புரியவில்லை.
அப்பா…உச்ச வெயிலில் நெடுந்தூரப்பயணங்களின் நடுவில் மர நிழல் ஒன்றில் நின்று, மண்குடத்தில் வைத்திருந்து தரும் மோர்குடிக்கும்போது எவ்வளவு சுகமோ, அதைவிட சுகமானது, தெப்பமென மழையில் நனைந்து சிறுநடுக்கத்துடன் தேனீர் பருகுவது.


எனது வாழ்நாளில் பல நாட்களாக என் மனத்தில் அடக்கி வைத்திருந்த அந்த மழையில் நனையும் ஆசை சென்னையில் ஓர் நாள் மழையில் தீர்த்துவைக்கப்பட்டது.
பொதுவாகவே வீட்டில் இருக்கும் இராக்காலங்களில் நான் மழையினை வரவேற்பது வழமை. அந்த இராக்கால மழைப்பொழுதுகளில், பல்கனி என்று சொல்லும் வீட்டின் அமைவிடத்தில் இருந்து சிறிய தூவானத்துடன் புத்தகம் படிக்க ஆசைகள் இப்பவும் உண்டு. அதேபோல இராக்காலங்களின் கடும் மழை பெய்கையில் உடலை போர்வையால் போத்துக்கொண்டு கால் தரையில் படாமல் செற்றியில் சம்மட்டி போட்டிருந்து பிடித்த கார்ட்ரூன்கள் பார்க்கவேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. அதே போல இராப்பொழுதுகளில் அனேகமாக யாழ்ப்பாண வீடுகளில் கூரை ஓடுகளின் இடையில் உள்ளே வெளிச்சம் வருவதற்காக கண்ணாடிகள் வைத்திருப்பார்கள் அல்லவா, அந்த கண்ணாடியின் ஊடாக சிந்தும் மழையினை பார்த்துக்கொண்டே, மழையின் இரைச்சல் ஓசையுடன் தூங்கவேண்டும் என்பது இப்போதும் எனக்கிருக்கும் ஆசை.
இப்படி மழை வந்தால் உள்ளேயும், வெளியேயும் நிறைவான சந்தோசங்கள் உள்ளதல்லவா? இந்த சிறு சிறு இன்பங்களில் இருந்தே நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். சிறுவயதில் மழை பெய்யும்போது யன்னல் கம்பிகளை பிடித்தவண்ணம் “மழையே மழையே மெத்தப்பெய்” என்று உச்ச குரலில் பாடி குதூகலித்தவர்கள் அல்லவா நாங்கள் அத்தனைபேரும்.

11 comments:

Unknown said...

வாசிக்கும்போதே நனைந்தபோனேன் நான்..

தவா said...

மிகவும், சுவாரகசியமான ஒரு மழை பற்றிய பதிவு. பறவாய் இல்லை கௌதம்மேனனை முந்திவிட்டீர்கள்.

Unknown said...

மழையில் நனைவது இயற்கையை ரசிப்பது உண்மையில் சுகம்தான் ஆனால் மழையின் மண் வசனை எப்படி என்று சொல்லலை

பிரியா said...

மின்னலடிக்காத மழைநீர் எவ்வளவு சுத்தமானதோ அதேபோல உங்கள் குழந்தைத்தனமான, இயற்கையின் சுகங்களை அனுபவிக்கும் மனதும் தொடர்ந்தும் சுத்தமாகவே இருக்க வாழ்த்துக்கின்றேன்.

ஷமிலா said...

மலைத்துப்போபவனே திருவருள் பெற்றவன். அவனே ஆண்டவனின் அருகில் இருக்கின்றான். அதாவது இயற்கையில் இலகிப்பவனே சகல இன்பவங்களையும் பெறுபவனாக இருப்பான் என்பது அர்த்தம். வானம் மண்ணை முத்தமிடும் மொழுதுகள் மழை. வருடத்தில் ஒருநாளாவது கறுப்புக்குடை பிடித்து அதன் வருகையினை எதிர்க்காமல் முழுவதும் நனைந்து பார்ப்போமே...மழை.. மழை மட்டும் அல்ல. அன்னியப்பட்ட மனிதனை இயற்கை அழைத்து மீண்டும் அவனுக்கு வழங்கும் திருமுழுக்கு.

Jana said...

பதில் :Vinoth
நன்றி வினோத்

Jana said...

பதில் :தவா
நன்றிகள் தவா
ஆம் கொளதம் வாசுதேவ மேனனின் சென்னையில் ஓர்நாள் மழையில் என்ற தலையங்கமே நன்றாகத்தான் உள்ளது.

Jana said...

பதில் : பிரியா
நன்றி பிரியா
குழந்தை மனதுடன் அனைவருமே இருந்தால் சுகமாகவே இருக்கும்.
தங்கள் வருகைக்கும். வாழ்த்திற்கும் நன்றிகள்

Jana said...

பதில் : vithu
மழை தூறலுடன் வரும்போது எழும் மண்ணின் வாசனை அற்புதமானது. அந்த மண் வாசனை பாரதிராஜாவை மட்டும் அல்ல அனைவரையுமே கவரும். நான் மறந்த ஒன்றை தொட்டுக்காட்டினீர்கள் நன்றிகள் விது.

Jana said...

பதில் : ஷமிலா

அருமை அருமை...உங்கள் எழுத்துக்களில் இருந்து தாங்கள் எந்த அளவுக்கு இயற்கையின் காதலி என்பது புரிகின்றது. "மழை மட்டும் அல்ல. அன்னியப்பட்ட மனிதனை இயற்கை அழைத்து மீண்டும் அவனுக்கு வழங்கும் திருமுழுக்கு".
அற்புதமான வசனங்கள். நன்றிகள் ஷமிலா

Ramesh said...

மழை வந்து எனை நனைத்தது இன்று இந்த பதிவும் கூட அணு அணுவாய் ரசனை எழுத்துக்களில் வாசிக்கும் போது இன்னும் நனைந்து கொண்டு நான்.
வாழ்த்துக்கள் அண்ணா

LinkWithin

Related Posts with Thumbnails