Tuesday, August 25, 2009

மீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ.


2007ஆம் ஆண்டு வெளிவந்த கொலிவூட் திரைப்படமான வோர் , த போர்பிடன் கிங்டொம் (The Forbidden Kingdom) , 2008ஆம் ஆண்டு வெளியாகியிருந்த, த மம்மி : ரொம்ப் ஒவ் த ராஹென் எம்பெரெர் (The Mummy: Tomb Of The Dragon Emperor) , மற்றும் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள, த எக்ஸ்பென்டபிள்ஸ் (The Expendables) ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து “ஓஷன் பரடைஸ்” (Ocean Paradise)என்ற சீனத்திரைப்படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக ஜெட் லீ அறிவித்துள்ளார்.
சீன எட்கோ பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்தத்திரைப்படம் எதிர்வரும் ஆண்டு வெளியிடப்படவுள்ளதாகவும், வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள எட்கோ பிலிம்ஸ் நிறுவனம் அதற்கு முன்னதாக இந்த திரைப்படம் தொடர்பாக பீஜிங்கில் ஒரு செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


அடுத்து “ஓஷன் பரடைஸ்”திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்த எட்கோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஷாங் ஹொங்ஜான், இந்த திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், இதில் ஜெட் லீயின் திறமைகளுக்கு ஏற்ற பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன் இந்த திரைப்படத்தினை புதிய இயக்குனர் ஒருவரே இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவல் ஒன்றில் இந்த திரைப்படத்தில் ஜெட் லீ பறக்கப்போவதும் இல்லை, சாகசம் நிறைந்த சண்டைகள் போடப்போவதும் இல்லை, இந்த திரைப்படம் அவரது நடிப்பின் முழு அத்தியாமாக அவரது திரையுலக வாழ்வின் முதல் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என அறிவித்துள்ளது.


தற்போது 46 வயதாகும் ஜெட் லீயின் கடந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்கத் தயாரிப்பாகவே வந்திருந்தன. இதிலும் குறிப்பாக த போர்பிடன் கிங்டொம் திரைப்படத்தில் இவரும், மிகப்பெரும் நடிகர் ஜாக்கி ஸானும் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவரது எக்ஸ்பென்டபிள்ஸ் திரைப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்புக்கள் சில நாட்களின் முன்னர்தான் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தற்போது ஜெட் லீ சிங்கப்பூரில் வசித்துவருகின்றார். இவர் தற்போது சிங்கப்பூர் குடியுரிமையினையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் விதிமுறைகளுக்கு அமைய அங்கு குடியுரிமையை பிறிதொரு நாட்டினர் பெறவேண்டும் என்றால் சிங்கப்பூரில் அவருக்கு சொத்துக்கள் இருக்கவேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய ஜெட் லீ சிங்கப்பூரில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை வாங்கியுள்ளதாக முன்னர் செய்திகள் வந்திருந்தமை நினைவிருக்கலாம்.


லீ லியன்ஜி என்ற சொந்தப்பெயர் கொண்ட ஜெட் லீ, ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி 1963ஆம் ஆண்டு சினத் தலைநகர் பீஜிங்கில் பிறந்தவர். 1982ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் “ஷயொலின் ரெம்பிள்” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த “வன்ஸஃபோனர் ரைம் இன் சைனா”, 1998ஆம் ஆண்டு முதல் முதலில் கொலிவூட்டில் இவர் நடித்துவெளிவந்த “லெத்தல் வெப்பன் -4”, 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஜெட் லீ முதல்தர கதாநாயகனாக நடித்த “ரோமியொ மஸ்ட் டை” ஆகிய திரைப்படங்கள் இவரை உலகத்திரைப்பட நட்சத்திர மட்டத்திற்கு உயர்த்தியது.


“த எக்ஸ்பென்டபிள் திரைப்படம் 2010” ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளபோதிலும் அதன் எதிர்பார்ப்பு உலக அளவில் பலமானதாக உள்ளது. காரணம் அந்த திரைப்படத்தில் ஒன்று கூடியுள்ள உலக முன்னணி நடிகர் பட்டாளமே. சில்வஸ்ரன் ஸ்ராலோன், ஆனோர்ல்ட் சிவாஸினேகர், மிக்கி ரொக்கி, ஜசான் ஷதாம், டொல்ப் லக்றென், எரிக் ரொபோர்ட்ஸ், ரெர்றி, ஸ்ரீவ் ஒஸ்ரின் இவர்களுடன் ஜெட் லீ என ஒரு பட்டாளமே நடித்தால் எதிர்பார்புகள் கூடாதா என்ன?


மிகவும் இழகியமனமும், இரக்க சுபாவமும் கொண்டவர் ஜெட் லீ என அவரது உதவியாளர்கள் மற்றும் பலர் அவர் பற்றி கூறியுள்ளனர். அதேபோல மிகவும் ஒழுக்கமுள்ள அவர், திபத்தியன் பௌத்த தர்மத்தை பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் தனது மகளுடன் கடற்கரையிலிருந்து மிக அண்மையில் இருந்த நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்தார் லீ. அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலைத்தாக்கம் காரணமாக வந்த அலைகளால் அடிக்கப்பட்டாலும் சுதாகரித்துக்கொண்டு தனது மகளையும் காப்பாற்றி மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார் லீ. இந்தச்சம்பவத்தால் அவர் காலில் காயமடைந்திருந்தார். தமது வாழ்நாளில் இந்தச்சம்பவத்தை மறக்கமுடியாது என அண்மையில்க்கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் அவர்.

4 comments:

துளசி said...

சிறந்ததொரு பதிவு. பதிவுக்கு நன்றிகள்.

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

ஞானம் said...

EXPENDABLES திரைப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை கூட்டிவிட்டீர்கள். நல்லதொரு பதிவு.

நந்தா said...

2004ஆம் ஆண்டு சுனாமித்தாக்கத்தின்போது அதில் அகப்பட்டு ஜெட் லீ, மரணமடைந்ததாக செய்திகள் கூட வந்திருந்தன. பின்னர் அவைகள் பொய் அவர் சிறுகாயம் மட்டுமே அடைந்தார் என செய்திகள் வந்திருந்தன. அந்த தத்தில் இருந்து தப்பி இன்றுவரை அச்சத்திக்கொண்டிருக்கின்றார் மனிதர். சிறந்த ஒரு பதிவு, புதிய தகவல்களை முந்திக்கொண்டு தந்தீர்கள். நன்றிகள்.

LinkWithin

Related Posts with Thumbnails