நம் வாழ்விலும் சரி, எம் வாழ்வின் அன்றாடம் நாம் தொடர்பு பட்டிருக்;கும் துறைகளிலும் சரி, சில மிகத்திறமையானவர்களும், எம்மை மெய்சிலிர்க்க வைத்தவர்களும், அர்ப்பணிப்புடன், தனது தொழில் மற்றும் துறைகளில் ஈடுபடுகின்றவர்களும் சில வேளைகளில் அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதும், பெருமைப்படவேண்டிய திறமைகள் அவர்களிடம் இருந்தாலும்கூட அவர்கள் உச்சத்திற்கு வரமுடியாதவர்களாக இருப்பதையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
அவன் பாவம், மிகவும் திறமையானவன் அனால் அவனுக்கு அதிஸ்டமில்லையே! என எம்மில் சிலர் உச்சுக்கொட்டிச்சொல்லும் “அதிஸ்டமின்மை” என்ற ஒரு காரணத்தையும், சந்தர்ப்பங்களை தவறவிட்டதனால்த்தான் ஏதோ ஒரு கட்டத்தில் அவன் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளான் என்ற காரணத்தினையும், அவன் “தேவைக்கதிக திறமையுடையவனாக” இருக்கின்றான் அப்படி இருப்பதும் வேலைக்கு உதவாது. என்ற கருத்தினையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, அந்த சந்தர்ப்ப நிகழ்வுகளுக்கு எற்றவாறு அவன் இயங்க மறந்துவிட்டான் என்ற ஓரளவு நியாமான காரணங்களையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
சிறந்ததொரு உதாரணத்தை இந்தச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டலாம் என நினைக்கின்றேன். 1979ஆம் ஆண்டு வெளிவந்தபடம் “நினைத்தாலே இனிக்கும்” இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். இப்போது கேட்டாலும் சொக்க வைக்கும் அந்தப்பாடல்கள் அன்று வெற்றிபெறவில்லை.
அந்த அற்புதமான பாடல்கள் பின்நாட்களில்த்தான் பலராலும் கேட்கப்பட்டன. அன்று அந்தப்பாடல்கள் தோற்றுப்போனதற்க காரணம் என்ன? என்று இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்ன பதில், அன்று அந்தப்பாடல்கள் தோற்றதற்கு காரணம் விச்சு அண்ணன் 1989ஆம் ஆண்டுக்குரிய பாடல் மெட்டுக்களை 1979ஆம் ஆண்டிலேயே கொடுத்தமைதான் என்று சொல்லியிருந்தார். ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் அந்தக்கருத்து மிகச்சரியானதாகவே இருக்கின்றது.
எனது வாழ்க்கையிலும் நான் சந்தித்த மிகத்திறமையான பலர், உச்சத்திற்கு ஏதோ ஒரு காரணத்தினால் வரமுடியாமல் உள்ளனர். அதேபோல் பல துறைகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் என்னை மெய் மறக்கச்செய்த நான் சிலிர்த்த, நான் இரசித்த பலர் இன்னும் உச்சத்திற்கு வரமுடியாதவர்களாகவே உள்ளனர். அவர்களில் சிலரைப்பற்றியே நான் இந்தப்பதிவுகளில் எழு நினைத்தேன்.
கண்டிப்பாக இவர்கள் அனைவரும் உங்களையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருப்பார்கள், நீங்கள்கூட, அட! ஏன் இவரால் முன்னுக்கு வரமுடியாமல் போனது என்று சிந்தித்து இருப்பீர்கள். அப்படி சிலிர்க்க வைத்து உச்சத்திற்கு வராத நான்கு சூரியன்களை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கின்றேன்.
கார்த்திக்ராஜா
இசைஞானி இளையராஜாவின் வாரிசு, குரலால் மட்டும் இன்றி உருவத்தாலும் இசைஞானியைப்போலவே உள்ள ஒருவர். முதல் முதலாக இவரது அரவிந்தன் திரைப்படப்பாடல்கள் வெளிவந்தபோது, இவரது கைவிரல் பட்டு, அந்த இசையில் வரும் கீபோர்ட் சிலித்ததுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது.
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்…என்ற பாடலும்
ஈரநிலா விழிகளை மூடி தோழ்களில்…என்ற பாடலும் முதல் முதலில்கேட்டபோது நெஞ்சம் சிலிர்த்து என்னமோ உண்மையே. “இளையராஜாவின் இட்லி சட்டிகூட இசையமைக்கும்” என்று எனது ஒரு நண்பன் அடித்த கொமன்ட்கூட இன்னும் நினைவில் உள்ளது. தொடர்ந்து உல்லாசம், காதலா காதலா, உட்பட பல படங்களில் இவரது இசை இரசிக்கும்படியாகவே இருந்தது. டும் டும் டும் படப்பாடல்கள் கூட சுப்பர் ஹிட் ஆகின. “வீசும் காற்றுக்கு பூவைத்தெரியாதா?” என்ற உல்லாசம் திரைப்படப்பாடல், “உன்பேரைச்சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குதே” என்ற டும் டும் டும் திரைப்படப்பாடல், மடோனா பாடலா நீ, மும்பாயின் மோடலா நீ?” என்ற காதலா காதலா பாடல் என்று பல பாடல்கள் அனைவரையும் இரசிக்க வைத்தன.
ஆனால் கால ஓட்டத்தில் அவருக்கு இசையமைப்புக்கான சந்தர்ப்பங்கள் குறைந்துகொண்டே போய்விட்டன. பாடல்கள் ஒரே மெட்டுபோலவே உள்ளன, நாங்கள் எதிர்பார்க்கும் இசை வரவில்லை என்பன “இவரைப்பற்றி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெரிவித்த கருத்துக்கள் “.
விநோத் கம்ளி.
உலகின் நட்சத்திரத்துடுப்பாட்டக்காரரும், மாஸ்ரர் பட்ஸ்மன் என போற்றப்படுபவருமான சச்சின் தென்டுல்கரின் உற்ற நண்பர். அண்மையில்க்கூட சச்சின் நினைத்திருந்தால் தன்னை அணியில் மீண்டும் இணைத்திருக்கலாம் என இவர் கூறியதாக வெளியான செய்தியால் பெரும்பரபரப்பு உண்டானது.
இருவரும் மும்பை கல்லூரியில் ஒன்றாகப்படித்து கல்லூரி அணிக்காக விளையாடியபோது ஒரு போட்டியின் இணைப்பாட்டமாக 664 ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்திருந்தனர். இதில் ஆட்டமிழக்காமல் 349 ஓட்டங்களை வினோத் கம்ளி பெற்றிருந்தார். இந்தச்சாதனை கூட மிக அண்மையில்தான் ஹைதராபாத்திலுள்ள கல்லூரி மாணவர்களால் முறியடிக்கப்பட்டது.
அதன் பின்னர் ரஞ்சித் போட்டிகளில் விளையாடிய இருவரிலும், வினோத் கம்ளியே அதிரடி ஆட்டக்காரராக இருந்தார். ரஞ்சித் கோப்பையின் தனது அறிமுகத்தின்போதே தான் சந்தித்த பந்தை ஆறு ஓட்டங்களாக பெற்று 157 ஓட்டங்களை மிகவும் வேகமாக குவித்திருந்தார்.
90-91ஆம் அண்டு காலங்களில் இந்திய அணியில் இடம்பிடித்த வினோத் கம்ளி, இரண்டு, இரட்டை சதங்கள், மற்றும் இரண்டு சதங்களை வெறும் ஏழு ரெஸ்ட்களில் பெற்றதன்மூலம் அட்டகாசமாக தனது ரெஸ்ட் வரவை அனைவராலும் உற்றுப்பார்க்கவைத்தார்.
ஒருநாள் போட்டிகளிலும் அதிரடி மற்றும் அதிக ஓட்டங்களை குவிக்கும் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் அதேவேளை களத்தடுப்பில் சிறப்பான ஒரு வீரராகவும் இவர் விளங்கினார். 1996ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இலங்கையுடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா அடுத்தடுத்து இலக்குகளை இழந்தபோதும் மறுமுனையில் கம்ளி நிதானமாக நின்றும் இறுதியில் இந்தியா தோற்றபோது கண்ணீருடன் அவர் மைதானத்தை விட்டு வெளியேறியது இன்னும் கண்களில் உள்ளது.
பிரசாந்த்.
இன்றைய இளைய தலைமுறை நடிகர்களின் சீனியராக வைகாசி பிறந்தாச்சு திரைப்படத்தில் அறிமுகமான பிரசாந்த் அன்றைய 90களின் ஆரம்ப ஆண்டுகளில் நடிப்புலக இளவரசனாகவே வலம்வந்தார். பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்றதுடன், பல நாடுகளிலும் (முக்கிமாக இலங்கை) பிரசாந்த் நைட்ஸ் என்ற நிகழ்ச்சியையும் பலத்த ஆதரவோடு நிகழ்த்திவந்தார். அதன் பின்னர் இயக்குனர் சங்கரின் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் பாரிய ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு செதுக்கப்பட்ட பிராசாந்தின் காலம் அதன் பின்னர் ஏறுமுகமாகவே சென்றது. அதன் பின்னர் நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். அருமையான திரைப்படங்களை தேர்தெடுத்து சிறப்பாக நடித்தார். கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஆசையில் ஓர் கடிதம், பூமகள் ஊர்வலம், பிரியாத வரம் வேண்டும் என அத்தனை படங்களும் இரசிக்கும் வண்ணம் இருந்தன.
மற்ற நடிகர்களைப்போல அல்லாமல் எந்தவித ரிஸ்க்காக இருந்தாலும் தான் நடிப்பதில் பிரசாந்திற்கு நிகர் யாரும் இல்லை. அதேபோல சகல திறமைகளையும் அவர் தன்னகத்தே வைத்திருந்தார். யாருமே எதிர்பார்க்காத விதத்தில் உச்சத்தில் இருந்த அவர் சிறந்த படங்கள் இல்லாமல் இருப்பது சற்று ஜீரனிக்கமுடியாதவாறே இருக்கின்றது.
சுரேஸ் பீட்டர்ஸ்
ஜென்டில் மேன் திரைப்படத்தில் பிரபுதேவாவும், கௌத்தமியும் ஆடும் ஒரு பாடல் கட்டம் வருகின்றது அல்லவா? அந்த “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே” என்ற பாடல் ஒலிக்கத்தொடங்கியபோது தமிழ் இசை ரசிகர்கள் புதிதாக மேலைத்தேய குரலை தமிழில் பாடும் ஒரு பாடகனை இனங்கண்டுகொண்டார்கள். அன்றைய நாட்களில் இளைஞர்கள் எல்லோரும் சுரேஸ் பீட்டர்ஸின் திடீர் இரசிகர்கள் அனார்கள்.
அடுத்து, காதலன் திரைப்படத்தில் ஊர்வசி.. ஊர்வசி, பெட்டராப் போன்ற பாடல்கள் அன்றைய இளைஞர்களை சுரேஸ் பீட்டர்ஸின் பாடல்கள் மேல் பைத்தியம் பிடிக்க வைத்தன.
சுப்பர் பொலிஸ் திரைப்படத்தின் சுந்தரா நீ யாரடா? என்ற பாடலில் சுரேஸ் அனைவரையும் எழுந்து ஆடவைத்தார்.
கீபார்ட், பியானோ மற்றும் றம்ஸ் என்பன வாசிக்கத்தெரிந்த சுரேஸ் பீட்டர்ஸ், திரைப்படங்களில் பாடுவது மட்டும் இன்றி மின்னல், ஓவியம், எங்கிருந்தோ போன்ற அல்பங்களையும் வெளியிட்டிருந்தார். பாராட்டப்படவேண்டிய வித்தியாசமான இசை, மேற்கத்தேய ரப், ஜாஸ் என பல வகைகளிலும் அவர் பல மெட்டுக்களை தமிழில் போட்டார். கூலி, தென்காசிப்பட்டணம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் 15ற்கும் மேற்பட்ட மலையாளத்திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார்.
இருந்தபோதிலும் இவருக்குரிய இடம் கிடைக்கவில்லை என்பது வேதனையே.
7 comments:
நாம் இருவர் நமக்கிருவர் திரைப்படத்தில் "இந்தச்சரிப்பினை எங்கோ பார்த்தேன்" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த கார்த்திக் ரரஜா இசையமைத்த பாடல், அதேபோல 96களின் பின்னர் வினோத் கம்ளி இல்லாத சச்சினை பார்க்க கொஞ்சம் கஸ்டப்பட்டேன், பிரசாந்தும் அற்புதமான ஒரு நடிகர், சுரேஸ்பீட்டர்ஸ் தற்போதும் நான் தேடி பாடல்கேட்கும் ஒரு பாடகர் இதேபோல நடிகர் மோகன் (மைக் மோகன்), பாடகர் மனோ, ஷடகோபன் ரமேஸ், போன்றோரும் உச்சத்திற்கு வராத திறமையானவர்களே.
நீங்கள் குறிப்பிட்டுள்ள நால்வரும் Extra ordinary persons.
அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதில் காம்ளியும், பிரசாந்தும் ரொம்பவே காலத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள்.
இவர்களைப்பற்றி நானும் சிந்தித்திருக்கின்றேன். வினோத் கம்ளியை தவிர மற்றவர்கள் இனிவரும் காலங்களில் முன்னேற வாய்ப்புக்கள் உண்டு. முன்னேறவும் வேண்டும்.
நீங்கள் சொன்னது போல் நான்கு பேருமே நிஜமாகவே திறமை சாலிகள் தான்.அதில் வினோத் காம்ளியை தவிர மற்ற அனைவருக்கும் இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது தங்களின் திறமையை உலகிற்கு காட்ட.மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தது கார்த்திக் ராஜா அல்ல.அது யுவன் சங்கர் ராஜா முதன் முதலாக இசையமைத்த படம்.
அரவிந்தன் படத்திற்கு இசையமைத்தது கார்த்திக் ராஜா அல்ல.அது யுவன் சங்கர் ராஜா
"கல்லூரி அணிக்காக விளையாடியபோது ஒரு போட்டியின் இணைப்பாட்டமாக 664 ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்திருந்தனர். இதில் ஆட்டமிழக்காமல் 349 ஓட்டங்களை வினோத் கம்ளி பெற்றிருந்தார் "
not colleage they did in school level match,
இந்தச்சாதனை கூட மிக அண்மையில்தான் ஹைதராபாத்திலுள்ள கல்லூரி மாணவர்களால் முறியடிக்கப்பட்டது.
and also school level
please refer all details once again before post
Post a Comment