கிழக்காசிய நாடுகளை தொடர்ச்சியாக இரண்டு சூறாவளிகள் தாக்கியதின் காரணமாக அங்கு தொடர்சியாக கடும் மழை பெய்துவருகின்றது. தாய்வான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்துவருகின்றது.
இந்த நிலையில் இதில் தொடர்ந்து பெய்யும் அசுர மழை காரணமாக தாய்வான் திக்குமுக்காடுகின்றது.
தாய்வானை மொராகொட் புயல் தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கியுள்ள 2000 இற்கும் அதிகமானவர்களை மீட்பதற்கு தாய்வான் சர்வதேச தொழில்நுட்ப உதவியை கோரியுள்ளது.
பாதிக்கப்பட்ட மலைப் பிராந்தியங்களிலுள்ள வீதிகளை மீண்டும் அமைப்பதற்கு பாரிய மண் அகற்றும் இயந்திரங்கள் மற்றும் ஏனைய கனரக இயந்திரங்களை அப்பகுதியில் இறக்குவதற்கேற்ற பெரிய சரக்கு விமானங்கள் தமக்கு தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான விமானங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இம் மண்சரிவில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்கள் அரசாங்கம் மீட்புப் பணிகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இவ் அனர்த்தத்தில் காணாமல் போயுள்ள தமது உறவினர்கள் குறித்த செய்திகளை அறிவதற்காக இவர்கள் கியுசான் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலையத்தில் பல நாட்களாகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மண்ணுக்குள் புதையுண்டிருந்த சுமார் 700 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, இப் புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களில் பலியானோர் தொகை 108 ஐ எட்டியுள்ளது. மலைப் பகுதி சிதைந்து விழுவதற்கு முன் கற்கள் உருண்டு வந்தமை காரணமாக, தாம் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெவித்துள்ளனர்.
எனினும், மேற்படி ஹஸியோலின் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் மண்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெவித்தனர். மீட்புப் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி மலையை அண்டிய கிராமப் பகுதிகளுக்கான பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
"அப்பகுதியிலுள்ள 3 கிராமங்களில் சுமார் 700 பேர் உயிருடன் இருப்பது செவ்வாய்க்கிழமை இரவு கண்டறியப்பட்டது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு 25 உலங்குவானூர்திகளை ஈடுபடுத்தியுள்ளோம்'' என இராணுவ மேஜர் ஜெனரல் றிச்சர்ட் ஹ_ தெரிவித்தார்.
இதேவேளை, கியுசான் பிராந்தியத்தை பார்வையிடச் சென்ற அந்நாட்டு ஜனாதிபதி மாயிங்ஜியோயு மேலும் அதிகளவானோர் பலியாகியிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக மேலதிகமாக 4 ஆயிரம் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ஜனாதிபதி மர் அனைத்து விதமான உதவிகளையும் நாம் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, பாரந்தூக்கிகளை காவிச் செல்லக்கூடிய ஹெலிகொப்டர்கள் எமக்குத் தேவையெனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளியேற முடியாமல் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு ஹெலிகொப்டர்கள் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்ற போதும் தொடர்ந்து கடும் மழை பெய்து கொண்டிருப்பதால் மீட்பு முயற்சிகள் தாமதமடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
50 வருட காலப் பகுதியில் சந்தித்திராத வகையில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என இந்த அனர்த்தம் விமர்சிக்கப்படுகின்றது.
இதேவேளை சூறாவளித் தாக்கியலில் கிராமம் ஒன்று அப்படியே வெள்ள நீரில் சிக்கி மூழ்கி விட்டது. அதில் வசித்து வந்த யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏராளமான வீடுகள், தெருக்கள், பாலங்கள் நீரில் மூழ்கிப் போய் விட்டன. எங்கு பார்த்தாலும் பேரழிவாக காணப்படுகிறது. தண்ணீர் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கிறது.
தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் கடல் போல புகுந்துள்ளது.
தெற்கு கஹோசியுங் என்ற பகுதியில் உள்ள சியாலின் என்ற கிராமத்தில், ஏராளமான பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்தக் கிராமத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது
புயல் காரணமாக வரலாறு காணாத அளவாக 3 மீட்டர் அளவுக்கு அங்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிரளவைக்கும் வெள்ளத்தின் புகைப்படங்கள் இதோ…
4 comments:
Let us pray for them now..
மீட்பு படையினரின் அசாத்திய துணிச்சலான செயற்பாடுகளை பாராட்டலாம். விரைவில் தாய்வான் வழமைக்குத் திரும்பட்டும்.
3 மீற்றருக்கு மழை பெய்துள்ளது என்றால் அது சாதராண விடயம் இல்லை. மீட்பு நடவடிக்கைகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை உலக நாடுகள் உடனடியாக அவர்களுக்கு வழங்கவேண்டும்.
3 மீற்றருக்கு மழை பெய்துள்ளது என்றால் அது சாதராண விடயம் இல்லை. மீட்பு நடவடிக்கைகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை உலக நாடுகள் உடனடியாக அவர்களுக்கு வழங்கவேண்டும்.
Post a Comment