நேற்று ஒன்பதாம் நாள், ஓகஸ்ட் மாதம் 2009ஆம் அண்டு ஆன திகதியில், கர்நாடக மாநிலம் பெங்களுரில் திருவள்ளுவர் தரிசனத்தை தொடக்கிவைத்துள்ளார் தமிழகத்தின் முதலமைச்சர்.மு.கருணாநிதி அவர்கள்.
1991 ஆம் ஆண்டு பெங்களுர் தமிழ்ச்சங்கத்தினால் அமைக்கப்பட்டு, அப்போதிருந்த கர்நாடக முதலமைச்சர் பங்காரப்பா திறந்துவைப்பதாக இருந்த இந்த ஐயன் திருவள்ளுவர் சிலை கன்னட அமைப்புக்களின் கண்டனங்கள், சிலை திறக்கப்படக்கூடாது என்ற விடாப்பிடியான செயற்பாடுகளால் இன்றுவரை தள்ளப்போகியவாறே.. வந்து இறுதியில் இங்கு நீ, அங்கு நான் என்ற ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளுவரும், சர்வக்ஞரும், மாறிவந்து சிரித்துக்கொண்டு நிற்க, இருக்கப்போகின்றார்கள்.
முத்தமிழை வித்தவர் ம்ஹ_..ம்….மன்னிக்கவும் முத்தமிழ் வித்தகர் மு.கருணாநிதி அவர்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை திருவள்ளுவருக்கு சிலை வைக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கின்றதோ என்னமோ தெரியவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதில் குற்றமும் இல்லைத்தான்.
ஆனால் ஈழத்தில் எங்களைக்காப்பாற்றுங்கள், என்று சதைதொங்க, பாதி எலும்புடன் குண்டுகள் விழ, எழுந்த தன் இனத்தின் மரண ஓலத்தை காதுகளில் விழுத்தாமல் இருந்த ஒருவரால், தன் தமிழ்நாட்டு மீனவர்களையே காப்பாற்றமுடியாமல் இருப்பவரால், ஈழத்தில் இன்றும் காயாத அந்த இனப்படுகொலைகளுக்கு ஒருவிதத்தில் காரணமானவர் என்ற கறைபடிந்த இரத்தக்கைகளால் அந்த ஐயன் திருவள்ளுவரின் சிலையினை திறந்துவைக்க அவருக்கு இப்போது தகுதி உள்ளதா என்பதே உலகத்தமிழர்கள் அனேகமானவர்களின் கேள்வியாக உள்ளது.
ஒருவிதத்தில் கலைஞரைவிட ஒருபடி மேலாக 1991ஆம் ஆண்டு நிறுவப்படத்தயாராக இருந்த இந்தச்சிலை பெங்களுரில் திறக்கப்படவேண்டும் என கன்னட நடிகர் ராஜ்குமாரைக்கடத்தியபோது வீரப்பன் அவர்கள் தனது கோரிக்கைகளில் முக்கிமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி..விடயத்திற்கு வருவோம் மாற்றுச்சிலைவைப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 13ஆம் நாள், சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள எல்.ஐ.சி.நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள யுனைட்ரட் இந்தியா கொலினியில் உள்ள பூங்காவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவினால் சர்வக்ஞர் சிலை திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யார் இந்த சர்வக்ஞர்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும் என்பதால் இது பற்றி பதிவில் இடலாமே என்று, வலையமைப்பிலும், நூலகத்திலும் தேடிக்களைத்ததுதான் மிச்சம். எனக்கு தெரிந்தது என்னமோ தமிழும், ஆங்கிலமும் என்பதனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில இடங்களில் அவர் பற்றிய தகவல்கள் கிடைத்தது. முக்கிமாக பல தடவைகள் உதவி செய்வதுபோல இந்தத்தடவையும் விக்கிபீடியாவே குறைந்த பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உதவி செய்தது. கன்னடம் தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவர் பற்றிய முழு தகவல்களையும் அறிந்திருக்க ஏதுவாக இருந்திருக்கும்.
அறிவிலிக்கு அறிவுரை கூறுவதன் விளைவு
கருங்கற்பாறைமேல் நூறுவருடங்கள் மழைபொழிவதாம்
இதில் ஏதுபயன் அறிவீரோ பாரீர்?
யாவருக்குமே யாதும் தெரியாதே, அறிவதும் கொஞ்சமே
வாழ்வியல் எனும் வேதியலுக்கு எவருக்கும் உத்தரவாதம் இல்லை
அறிவு எவருக்கும் விற்பனைக்கு இல்லை.
நாம் அனைவரும் ஒரே மண்ணை மிதிக்கிறோம்
ஒரே நீரை குடிக்கிறோம்,அடுப்புத்தீயும் பிரிப்பதில்லை
எங்கிருந்து சாதி வந்தது கடவுளே.
தீண்டத்தகாதவர் வீட்டில் விழும் ஒளியும் தீண்டத்தகாததா?
மேலோர்,கீழோர் எனப்பேசாதீர்;
கடவுள் அருள் பெற்றவனே மேன்மையானவன்.
அரியோ பன்றியாக திரிந்தார்,அரனோ பிச்சையெடுத்து திரிந்தார்,
பிரமன் தலையோ கிள்ளப்பட்டது
இவர்கள் விதியை விதித்தவர் யார்.
இதுபோன்ற தேடுதல்களின்போது கிடைக்கத்தக்க தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட பெரும்பாலும், கன்னடத்தில் இந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர், ஆங்கிலத்தில் இருந்து அண்மையில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்ட அவரது செய்யுள்கள் மூலம் அவர் தமது படைப்புக்களை ஒவ்வொன்றும் மூன்றுவரிச்செய்யுள்களாகவே புனைந்திருப்பது புரிகின்றது.
அத்துடன், அவர், கவிஞராக மட்டும் இன்றி அவரது செய்யுள்களின் மூலம் முற்போக்குச் சிந்தனையாளர், தத்துவவாதி, புரட்சிகர சிந்தனை உடையவர் என்று தெரியவருகின்றது.
தீண்டாமையினை எதிர்க்கும் அவரது செய்யுள்மூலம் அவர் ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகவும், யாருக்கும் யாதுமே தெரியாதே என்ற செய்யுள்மூலம் அவர் ஒரு தத்துவவாதியாகவும், அரி, அயன், பிரமன் தலைவிதிகள் பற்றிய செய்யுளில் இவர் ஒரு நாத்திகராகவும் என பன்முகப்படுத்தப்பட்ட ஒருவராக தெரிகின்றார்.
அவரைப் பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவரது மொழிநடையையும் அவரைப்பற்றிய பிற அறிஞர்களின் குறிப்புகளையும் கொண்டு அவர் பதினாறாம் நூற்றாண்டின் பின்பகுதி அல்லது பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.
அவரது இயற்பெயர் புசுபதத்தா என்று அவரது செய்யுள்கள் சிலவற்றில் உள்ள குறிப்புகள் மூலம் கணிக்கின்றனர். அவர் தந்தை ஓர் விதவை குயவர் பெண்ணை மணம் புரிந்து பிறந்த குழந்தையுடன் காசிப்பயணம் மேற்கொண்டார். இதனால் சர்வக்ஞர் நாடோடி துறவியாகவே வளர்ந்தார். இவரது படிப்பற்றவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான பாடல்கள் ஏழை மக்களைச் சென்றடைந்து மிகவும் வாய்மொழியாகவே பரவியது. தற்போது ஏறத்தாழ இரண்டாயிரம் செய்யுள்கள் 47 அல்லது 49 தலைப்புகளில் கிடைத்துள்ளன. இரண்டு அச்சு செய்யுள்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. தவிர இடைச்செருகல்களும் உள்ளன. அவை சமயம், பண்பாடு, ஒழுக்கம், குமுகம் என்ற பொருட்களில் உள்ளன.
அனேகமாக சமயம் சம்பந்தமாக இவர் கூறியதாக பின்னால் வந்தவர்களால் பல சொருகல்கள் நடந்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை. நாத்திகம் கொப்பளித்த இவரது செய்யுள்களில் இடைக்கிடையே கடவுள்கள் பற்றி போற்றுதல் தெரிவது இதையே குறித்து நிற்கின்றது.
எது எப்படியோ, வள்ளுவருடன் இவரை ஒப்பிடுவதா? வள்ளுவர் அளவுக்கு இவர் உயர்ந்த கருத்துக்களை சொல்லி இருக்கின்றாரா? என தற்போது பலரிடம் தொடங்கியுள்ள விவாதங்கள் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. ஏனெனில் இந்தப்பாளாய்ப்போன அரசியல் நலங்களுக்காகவே இந்தப்பாளாய்போன சிலைமாற்றுத்திட்டங்கள் இடம்பெறுகின்றதே தவிர இவர் அளவுக்கு அவர் சிறந்தவர் என்ற எண்ணத்தில் அல்ல. அத்தோடு எந்த மொழிக் கவிஞன் என்றாலும் அந்த கவிஞனின் கவித்துவத்தையும் வரவேற்று மதிப்பளிப்பதே தமிழர்களின் பண்பாடு. அந்த ரீதியில் சர்வக்ஞர் தமிழ்நாட்டிற்கு சிலையாக எழுந்து நிற்க எடுக்கப்பட்ட முறை தவாறக இருந்தாலும், அவருக்கு மதிப்பளித்தல் பிழையாகாது.
4 comments:
அட கர்நாடகத்தில் இருந்துவந்த ஒருவரை சூப்பர் ஸ்ரார் ஆக்கி, தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் நமக்கு இந்த சர்வக்ஞர் மட்டும் வேறுபட்டவரா என்ன?
சரியாகச்சொன்னீர்கள்....தமிழ் பெரியவர்களின் சிலைகளைத் திறப்பதன்முன் உலகத்தமிழர்களின் மனங்களைத் திறந்திக்கவேண்டும்.
சிலை எழுப்புவதை விடுங்கள், வள்ளுவரின் கருத்தின்படி தமிழர்களும், சர்வக்ஞரின் கருத்துகளின்படி கர்னடர்களும் நடந்தாலே எல்லாம் நலமாகவும், சுபமாகவும் இருக்குமே!
காலமறிந்து பதிவிடுகின்றீர்கள்...மிகச்சிறப்பான பதிவுகள்.
Post a Comment