உலக நாடுகளின் புதியவை எவை அறிமுகமாகின்றதோ அதனை உனடியாக சோதித்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்பார்க்க பிரியப்படுபவர்கள் யாழ்ப்பாண மக்கள். ஆரம்ப காலங்களில் இலங்கையில் ட்ரான்ஸ் சிஸ்ரர் என்று சொல்லப்பட்ட அப்போதைய பெரிய திருகு வட்டங்கள் கொண்ட ரேடியோக்கள், கிராமோபோன் ரெக்காடர்கள், தொலைக்காட்சிகள் என அவை முதன் முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
19ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே யாழ்ப்பாணத்தவர்கள், வெளிநாடுகளில் வர்த்தகங்கள், தொழில்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், யாவா போன்ற நாடுகளுக்கு அன்றைய பிரித்தானிய கொலனித்தவ ஆட்சியின் அரச அலுவலகர்களாக பெருமளவிலான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர்கள் அன்றே கல்வி நிலையில் ஆசியாவில் உயர்ந்து நின்றதன் காரணத்தால் வெள்ளையர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். அது தவிர அன்றைய நிலையில் இலங்கையில் ஏனைய பிரதேசங்களுக்கு கொடுக்காத ஒரு சலுகையினை ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருந்தனர் என்பது அன்றைய நாட்களில் பல நூல்களை எழுதியவர்களின் கருத்துக்களில் இருந்து தெரியவருகின்றது.
இந்த நிலையில் இலங்கைக்குள்ளேயே ஏனைய சமுதாயங்கள் சுழன்றுகொண்டிருந்தபோது உலகஓட்டத்திற்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்த ஆரம்பித்துக்கொண்டவர்களும் யாழ்ப்பாண மக்களே. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் மேல்நிலையினை அடைந்திருந்த அந்த மக்கள், இலங்கை பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர், அவர்களின் ஆத்திரங்களாலும், பொறாமைகளாலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதும், குழிபறிக்கப்பட்டதும் வரலாறு அறிந்த உண்மை. இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல சளைத்துவிடவில்லை. பெரும்பான்மை இனத்தினர் நினைத்ததுபோல அவர்களின்மூளை வெள்ளையனால் வந்ததல்ல, ஜீன்களிலேயே உள்ளது.
1979 ஆம் ஆண்டு இலங்கையில் ஒளிபரப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் ஆரம்பமாக தொடங்கின. இந்த நிலையில் 1979ஆம் ஆண்டு ஐ.ரி.என். என்ற சுவாதீன ஒளிரப்பு சேவையும், 1982ஆம் ஆண்டு இலங்கையின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினியும் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் இவை இரண்டுமே அரசாங்க தொலைக்காட்சி சேவைகளாகவே நடத்தப்பட்டன. இந்த சேவைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகள் மிக மிக அரிதாகவே காணப்பட்டன. இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ்த்திரைப்படங்கள் என்பவற்றை வீட்டில் இருந்தவாறே பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் யாழ்ப்பாண மக்களிடம் எழுந்தது.
அந்த எண்ணங்கள் உடனடியாகவே செயற்பாடுகளாக மாற்றம் கண்டன. 1983 ஆம் ஆண்டு, மற்றும் 1984ஆம் ஆண்டு காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பு சேவைகளை நடத்தத் தொடங்கிவிட்டன
அன்றைய நிலையில் வி.எச்.எஸ் அலையமைப்பில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஒளிபரப்புக்கள் யாழ்ப்பாண மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஒன்று இரண்டென ஆரம்பிக்கப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் 15 ற்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் உருவாகும்வரை தொடர்ந்தன.
யாழ்ப்பாணத்தில் ஈச்சமோட்டை மற்றும் அரியாலை பகுதிகளில் வைத்து “றீகல் வீடியோ மூவிஸ்” என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச்சேவை யாழ்ப்பாண நகரை பெரும்பாலும் மையப்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண நகருக்குள் தௌ;ளத்தெளிவாக அதன் ஒளிபரப்புக்களை பார்க்கக்கூடியதாக அந்த ஒளிபரப்பு இருந்தது.
அதேபோல மானிப்பாய், நவாலி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு ஒளிபரப்பினை தெளிவாக பார்க்கக்கூடியவாறு “விக்னா” என்ற ஒளிபரப்பு சேவை ஒளிபரப்பட்டது. அதேபோல யாழ்ப்பாணம் கச்சேரியடிப்பகுதியில் இருந்து “செல்வா வீடியோ மூவிஸ்” என்ற தொலைக்காட்சி அலைவரிசையும், யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம் சகோதரர்களால் “வாஹிட்” என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளும் நடத்தப்பட்டு வந்தன.
புலவர் வீடியோ, லவ்பேர்ட்ஸ், நல்லூர் வீடியோ, என 15 க்கும்; மேற்பட்ட தனியார் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.
இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் என்னவென்றால், இவர்கள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்ளாது, ஒரு செயற்குழு ஒன்றினை அமைத்து, நேரப்பிரகாரம் தமது ஒளிபரப்பு சேவைகளை வழங்கிவந்தார்கள்.
ரூபவாஹினியில் “என்ன சுந்தரி புது சட்டையா?” என்ற சண்லைட் விளம்பரம் சிரிக்கத்தக்க ஒரு விளம்பரமாக வந்தபோதே தரமான விளம்பரங்களை யாழ்ப்பாண விளம்பர அமைப்புக்கள், யாழ்ப்பாண விற்பனை நிலையங்களின் விளம்பரங்களை தரமாக அமைத்திருந்தார்கள். ரூபவாஹினியில் மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்திற்கு தவமிருந்து பார்த்து இரசித்த மக்களுக்கு, புதிய புதிய திரைப்படங்களை திகட்ட திகட்ட வழங்கினார்கள் இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையத்தவர்கள்.
விளம்பரங்கள், விசேட நிகழ்வுகள், போட்டிகள், பண்டிகை விழாக்கள், மாணவர்களின் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கள், விளையாட்டுப்போட்டி ஒளிபரப்புக்கள், கல்வி நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள், கலைநிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்கள், கோவில்களின் உற்சவங்களின் நேரடி ஒளிபரப்புக்கள் என்று மெல்ல மெல்ல தரமான தனியார் ஒளிபரப்புக்களுக்கான வித்தினை 1983-84ஆம் ஆண்டுகளிலேயே போட்டுவிட்டன யாழ்ப்பாண தனியார் தமிழ் ஒளிபரப்புக்கள்.
பொழுபோக்கு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டாலும் திரைப்படங்கள் மட்டும் என்ற வரையறைக்குள் நின்றுவிடாது, அன்று மக்களுக்கு புதிதாக இருந்த சிங்கப்பூர் ஒளியும் ஒலியும் என்ற மேடைநிகழ்சிகள், முதல் முதல் இடம்பெற்ற திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற ஸ்ரார் கிரிக்கட் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கார்ட்ரூன் நிகழ்வுகள், ஆழ்கடல் உலகம், வினோத உலகம் போன்ற நிகழ்வுகள் என்பவற்றையும் ஒளிபரப்பு செய்தனர். அடுத்து முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய சம்பவங்கள் என்னவென்றால் மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை மற்றும் சாதாரண தரப்பரீட்சைகள் என்றால் தமது ஒளிபரப்புக்களை அந்த பரீட்சைகள் முடியும்வரை ஒத்திவைத்திருந்தனர்.
வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்து உச்ச பயனை அடைவது பொருளியலின் சவால் என்றாலும், யாழ்ப்பாண மக்களே இந்த விடயத்திற்கு எடுத்துக்காட்டானவர்கள். அவர்களின் பல கட்டங்களிலும் கவனித்துப்பார்த்தால் அந்த விடயம் புரியும். குறைந்த வளங்களை வைத்து நிறைந்த பயனை அடையும் அவர்களின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை. பெற்றோல் தட்டுப்பாடாக இருந்தபோதும் வாகனங்களை இயக்கியது, மின்சாம் இல்லாத போதும், டைனமோவில் இருந்துவரும் ஏ.சி மின்சக்தியை டி.சி சக்தியாக ஒரு சேர்க்கிட்மூலம் மாற்றி சைக்களை சுற்றி ரேடியோகேட்டது, அதேபோல வாகனங்களின் வைப்பர் மொட்டர்களை சற்றி தொலைக்காட்சி பார்த்தது, திகைக்கவைக்கும் பல சுதேச கண்டுபிடிப்புக்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் இதற்கு முன்னதான காலத்தில் அதி நவீன கருவிகள் இல்லாமல் தம்மிடம் இருக்கம் ஒரு சில சிறிய கருவிகள் துணைகொண்டே இவர்கள் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை மிகவும் தரமாகவும், சிறப்பாகவும் செய்துகாட்டினார்கள். கிட்டத்தட்ட 1987வரை தொடர்ந்த இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்புக்கள் அதன் பின்னர் இந்தியப்படையின் ஆக்கிரமிப்பும், அதன் பின்னர் இடம்பெற்ற மோதல் காலங்களில் யாழ்ப்பாணம் மின்சாரமின்றி இருந்ததும் அனைவரும் தெரிந்தவிடங்களே.
இன்று இலங்கையில் தமிழ் தனியார் தொலைக்காட்சி வரலாற்றினை ஆரம்பித்தவர்கள் நாங்களே. தமிழ்வளர்ப்பவர்கள் நாங்களே என்று சொல்லிக்கொள்பவர்கள்!! யாழ்ப்பாண ஒளிபரப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு என்பதை புரிந்துகொண்டால் சரி.
(அது சரி பெரும்பான்மையான இலங்கைத்தமிழ் ஊடகங்கள் சிங்களத்தை எமது (தமிழ்) சகோதர மொழி என்று குறிப்பிடுகின்றிர்களே! இப்படி சொல்ல யார் உங்களுக் அனுமதி தந்தது? கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனவே தமிழின் சகோதரமொழிகள், அதைவிட்டு கண்ட கண்ட காட்டு மொழிகளை எல்லாம் தமிழின் சகோதர மொழி ஆக்காதீர்கள்)
23 comments:
இந்தப் பதிவு மிகவும் நல்ல பதிவு....
இறுதியில் அடைப்புக் குறிக்குள் சொல்லியிருந்த சகோதர மொழி பற்றிய விடயம் ரொம்பப் பிடித்திருக்கிறது...
வாழ்த்துக்கள்....
தொடரட்டும் உங்கள் பணி....
சபாஷ். மிக மிக அருமையான பதிவு. அனைத்து இலங்கை எழுத்தாளர்களும் பாராட்டவேண்டிய பதிவு இது. எனக்கு இவைகள் குறித்து நல்ல நினைவுகள் உள்ளன. ஆனால் இதுகுறித்து எழுத நானே மறந்துபோய்விட்டேன். கண்டிப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயம் இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு. அதை முதன் முதலில் எழுத்து வடிவில் தந்து அடிக்கல்லை நட்டுவைத்துள்ளீர்கள். அடுத்து இறுதியாக நீங்கள் சொன்ன விடயங்கள் உண்மையே. தயவு செய்து சகோதர இனம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் சகோதர மொழி என்று சொல்லவேண்டாம் என்பதுவே எனது கருத்தும்.
உங்கள் நினைவாற்றல்கள் திடுக்கிட வைக்கின்றது ஜனா. நீங்கள் குறிப்பிட்ட இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் நடத்தப்படும்போது எனக்கு 16 வயது. ஆனால் நீங்கள் இதில் எழுதும்போதுதான் எனக்கு அந்த ஒளிபரப்பு நிலையங்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றது அனால் அப்போது ஆறுவயதுதான் ஆயிருந்த உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு பாராட்டுக்கள்.
பழைய நினைவுகள், அன்ரனாவை திருப்பி திருப்பி சரியா, சரியா கேட்ட நினைவுகள், ஒளிபரப்பாளர்கள் வீட்டுக்கு படையெடுத்துச்சென்று "இதயக்கோவில்" படம்போடுங்கள் என்று நாங்கள் நின்ற நினைவுகள் அத்தனையினையும் ஒருதடவை கொண்டுவந்தவிட்டீர்கள் நண்பரே. அருமை..அருமை
// கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனவே தமிழின் சகோதரமொழிகள், அதைவிட்டு கண்ட கண்ட காட்டு மொழிகளை எல்லாம் தமிழின் சகோதர மொழி ஆக்காதீர்கள் //
முற்றிலும் உண்மை .
சிறந்த பதிவு
ஷஷினி
//பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர், அவர்களின் ஆத்திரங்களாலும், பொறாமைகளாலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதும், குழிபறிக்கப்பட்டதும் வரலாறு அறிந்த உண்மை. இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல சளைத்துவிடவில்லை. பெரும்பான்மை இனத்தினர் நினைத்ததுபோல அவர்களின்மூளை வெள்ளையனால் வந்ததல்ல, ஜீன்களிலேயே உள்ளது. //
எவரும் மறுக்க முடியாத உண்மைகள் இவை ஜனா அண்ணா.இறுதியாக நீ
ங்கள் எழுதிய மொழி பற்றிய கருத்தும் நூற்றுக்கு நுர்று உண்மையான கருத்தே.
மிக அவசியமான ஒரு பதிவு. யாழ்ப்பாண ஒளிபரப்பு பற்றிய தகவல்களை முதல்முதலில் எழுத்தில் தந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும் நண்பரே. அப்புறம் அந்த இறுதிவரிகள், மறுக்கமுடியாத உண்மை. தமிழர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வாழும் இனங்களின் மொழிகள் எல்லாம் சகோதரமொழிகள் ஆகிவிடுமா என்ன?
பாராட்டி வாழ்த்த வேண்டிய ஒரு பதிவு. இப்படித்தான் பல விடயங்கள் எம்மவர்களால் தொடங்கப்பட்டாலும் மற்றவர்களால் இன்று உரிமை கோரப்படும் ஒரு நிலையில் எமது ஆவணக்காப்புகள் இருக்கின்றன. நன்றியும் வாழ்த்துக்களும். தொடரட்டும்.
1983 1984 ஆம் ஆண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கையினை மீட்டிப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தினை தந்தீர்கள் நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
பதில் :மயில்வாகனம் செந்தூரன்..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் மயில்வாகனம் செந்தூரன். தமிழால் இணைந்திருப்போம்.
பதில் :மனோன்மணி...
நன்றி ஐயா. தங்களைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்துவழர்ந்தவன் என்ற ரீதியில் உங்கள் பாராட்டுக்கள் கிடைப்பது மகிழ்ச்சி. நீங்கள் சொன்னதுபோல எழுத்துவடிவுக்கு வராத பல நிகழ்வுகளை ஆவணப்படுத்தவேண்டிய கடைப்பாடு இலங்கை எழுத்தாளர்களுக்கு உண்டு. ஏனெனில் எழுத்துவடிவம் பெறாத எவையும் அழிந்துபோய்விடும்.
பதில் :Pradeep
நன்றி பிரதீப் அண்ணா. (என்னைவிட 10 வருடங்கள் மூத்தவரா தாங்கள்?)
அந்த நிலாக்காலங்களை இன்றும் மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொள்வேன் அப்பப்போ. மீண்டும் மீண்டும் அசைபோடப்படுவதால் மறப்பதற்கு இல்லை.
பதில் :குணா
நன்றிகள் நண்பர் குணா.
ம்ம்ம்ம்...உண்மைதான் அந்த நாட்களில் இதயக்கோவில் திரைப்படம் பலராலும் இரசிக்கப்பட்டது. நம்ம இசைஞானி இயற்றி இசையமைத்து பாடிய "நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது, மீதித்தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா..." என்ற அந்த வரிகளையும் மறந்துவிடமுடியுமா?
பதில் : shazini
நன்றி ஷஷினி.
தொடர்ந்தும் இந்த தளத்திற்கு வாருங்கள்.
பதில் :அஜ்மல்
நன்றி அஜ்மல்.
ஆம் நண்பரே...மொழியில், மொழி ஆராட்சி, தமிழ் மொழி இயற்பியல், என்பவை தெரிந்தவர்கள் கண்டிப்பாக இதனை எற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் நீங்கள் நூற்றுக்கு நாறு உண்மை என்று சொல்வதும் பெருமையே.
பதில் :Vinoth
நன்றி வினோத்.
கண்டிப்பாக.... சிறுபகுதி என்றாலும் உடனடியான ஒரு எழுத்துவடிவத்தினை கொடுப்பதன்மூலமே பலவற்றை நாம் பேண முடியும்.
பதில் :கதியால்
நன்றி கதியால்
ஆம் நீங்கள் கூறியதுபோல பல ஆவணக்காப்புகள் எமக்கு இருக்கின்றன. அதேபோல நாங்கள் சாதித்தவை பல இன்னும் ஆவணப்படுத்தப்படாமலும் உள்ளன. அவற்றை உடனடியாக இனங்கண்டு ஆவணப்படுத்தவேண்டியதே எமது முதற்கடமை என நினைக்கின்றேன்.
பதில் :சுரேஸ் UK
நன்றி .. நன்றி. தொடர்ந்தும் இந்த தளத்திற்கு வாருங்கள் பழைய நினைவுகளை மீட்டித்தரும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த தளத்தில் வரும்.
ஜனா உண்மையில் நீங்கள் மலரும் நினைவுகளின் களஞ்சியம் என்று சொல்லலாம். என் நினைவில் மானிப்பாய் பகுதியில் மணியம் என்பவரது ஒளிபரப்பு மட்டுமே உள்ளது.அவரா விக்னா? பாராட்டுக்கள் ஜனா. இன்று எத்தனையொ தொழில்நுட்பவசதிகளுடன் பல ஒளிபரப்புகள் முளைத்தாலும் அவர்களை வென்றுவிடமுடியாது.
நல்ல தேடல். நன்றிகள்
பதில் :தேவதாசன் dilshaad
நன்றிகள் தேவதாசன் டில்ஷாட்.
பழைய இனிமையான அந்த நினைவுகள், எம்மவர்களின் சாதனைகள் என்பவற்றை மறந்துவிடமுடிமா என்ன? தாங்கள் குறிப்பிட்டவரின் சகோதரர்தான் அவர். பறவாய் இல்லை கண்டுபிடித்துவிட்டீர்களே. அபபுறம் உங்கள் பகுதிக்கு கொல்லன் கலட்டியில் இருந்து கண்ணன் என்பவரும் ஒளிபரப்பு சேவைகளில் ஈடுபட்டிருந்தார். நினைவுகள் இக்கின்றதா?
பதில் :இளையதம்பி தயானந்தா
நன்றிகள் தயா அண்ணா.
இந்த வலைத்தளத்திற்கு உங்கள் வருகை வலுச்சேர்க்கின்றது. ஆரம்பகாலங்களில் இணையத்திலும் உங்கள் வழிகாட்டல்கள், கருத்துக்கள் கிடைத்தது எனக்குபெரும்பேறாக இருந்தன. அந்த நாட்கள் மறப்பதற்கு இல்லை. “அந்த முற்றுப்பெறாத ஆச்சரியக்குறிகள்” முற்றுப்பெறாதபோதும் என் இதயத்தில் முழுதாக தாங்கள் உட்கார்ந்துகொண்டது முழுமையானதே.
இந்த பதிவுடன் தங்கள் முந்தைய பதிவான "சிலோன் பொப் இசைப்பாடல்கள்" என்ற பதிவையும் நினைவூட்ட எண்ணுகின்றேன்.
http://janavin.blogspot.com/2009/06/blog-post_1378.html
Post a Comment