Friday, August 7, 2009

இன்றே மணிமுடி களையப்படும் நாளைய மன்னர்கள்.


இன்றைய சிறுவர்களே நாளைய எதிர்காலம்!, நாளைய எதிர்காலத்தின் சிப்பிகள் அவர்களே!! என்பதுபோன்ற பலதரப்பட்ட பேச்;சுகளை நாம் மேடைகளிலும், அரசியல் கட்சி தலைவர்களுடைய திருவாய்களில் இருந்துவம் மொழிகளில் இருந்தும் கேட்டிருப்போம். அனால் இன்று குறிப்பாக தென்னாசிய நாடுகளில் சிறுவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசடைந்துசெல்வதாக அண்மைய சர்வதேச அமைப்பு ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாலியல் ரீதியான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள், சிறுவர் வேலைக்கமர்த்தல் நடவடிக்கைகள், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தல், சிறுவர் போராளிகள் என இன்றைய உலகில் பச்சிளம் பாலகர்கள் திரும்பிய இடங்களில் எல்லாம் மேற்படி உருவெடுத்திருக்கும் பூதங்கள் வாயை பிழந்தவண்ணம் உள்ளன.
உலகம் நாயகரிகம் அடைந்து செல்வதாக கூறிக்கொண்டாலும், மறுபக்கம் நாகரிகம் அடையாத மனிதன் செய்யாமல் இருந்த இனச்செயல்களைக்கூட இன்றைய மனிதன் செய்துவரும் நிலைமைகளை நாம் காணாமல் இருக்கமுடியாது. புதினப்பதிரிகைகளை இன்று தூக்கியவுடன், சிறுவர்சம்பந்தமாக, சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக எதாவது ஒரு செய்தி வராமல் இருப்பதில்லை. அந்த அளவுக்கு இன்று உலகெங்கும் சிறுவர்கள் அடக்குமுறைகளுக்குள் அளாகியவண்ணம் உள்ளனர். சிறுவர்களுக்கே உரிய உணர்வுகள். எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கை துளிர்விடம் சிந்தனைகள், சந்தோசங்கள், என்பவை அவர்களிடம் இருந்து மழுங்கடிக்கப்படுவதனால், நாளைகள் மீது ஒரு நம்பிக்கை இல்லாத விரக்தியுடனேயே அவர்கள் வழர்ந்துவருவதும்; நாளை பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிடும்;. நிச்சயமாக அப்படி வழரும் குழந்தைகள், தமக்கு மட்டும் இன்றி சமுதாயத்திற்கும் ஆபத்தாகும் சந்தர்ப்பங்கள் பல உண்டு என பிரபல மனோதத்துவ நிபுணர்கள் திரும்பத் திரும்ப சொல்லிவருகின்றனர்.


இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற கோட்பாட்டிற்கிணங்க ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் சிறுவர்கள் கைகளில் தான் தங்கியுள்ளது. சிறுவர் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தங்களைத் தனித்து வழிநடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் அற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். மனித வாழ்க்கையில் சிறுவர்கள் பராயமானது மிக முக்கியமான பருவமாகக் காணப்படுகின்றது. இப்பருவத்தில் இவர்கள் பெரியவர்களின் வழிகாட்டல், அன்பு, ஆதரவு என்பவற்றினை வேண்டி நிற்கின்றனர். பிள்ளைகளின் ஆளுமை முழுமையாக வளர்ச்சியடைவதற்கு அன்புடனும், அரவணைப்புடனும் வழிகாட்டக்கூடிய குடும்பம் அவசியம். இவை சிறுவர்களது உரிமையும் ஆகும். எனினும், சரியான வழிகாட்டலின்மையாலும் போதிய பாதுகாப்பின்மையாலும் சிறுவர்கள் தங்கள் உரிமைகளை இழந்து துன்பப்படுகின்றனர்.
இன்றைய சிறுவர்களினது பிரச்சினையானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்று ரீதியாக நோக்கும் போது ஆரம்ப காலத்திலிந்தே வழமை, பாரம்பரியம், சமயம் என்பவற்றின் அடிப்படையில் சிறுவர்களது உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றைய சிறுவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவ்வகையில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே சர்வதேச ரீதியாக சிறுவர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளமை அறியக்கூடியதாகவுள்ளது.


சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் 1924 ஆம் ஆண்டு ஜெனிவாவில் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அது சட்டரீதியான அங்கீகாரம் பெறாமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டது. இப்பிரகடனத்தில் சிறுவர்கள் உரிமைகளை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எனினும், தொடர்ந்தும் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட குழுவாகவே காணப்பட்டனர். எனவே, 1959 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கும் பத்து அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது.
இப்பிரகடனமும் 1924 ஆம் ஆண்டு பிரகடனத்தைப் போலவே சட்ட வலுவற்றதாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டை சர்வதேச சிறுவர் ஆண்டாக அடையாளப்படுத்தியதையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவானது முழுமையாக சிறுவர்களைப் பாதுகாக்கும் பல அம்சங்களை கவனத்தில் கொண்டு சிறுவர் உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமவாயத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.


பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல்பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன.


சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும் மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.
யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை.. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.


இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் ருNஐஊநுகு போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன.
பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம்.


இந்தியாவில், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1 கோடியே 28 லட்சம் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால், 5 முதல் 14 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் சிறுவர் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று யூனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியவாவைப்பொறுத்தவரை, தீப்படி, பட்டாசு போன்ற தொழிற்சாலைகள், கட்டிடவேலைகள், உணவக வேலைகள், போன்ற வேலைகளுககே பெருமளவில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். கிராமங்களில் மட்டும் இன்றி சென்னை போன்ற இடங்களிலேயே உணவங்களில் நீங்கள் சாப்பிட்டதன் பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்யவோ அல்லது, நிங்கள் உணவருந்திய இலையினையோ, பிளேட்டினையோ எடுத்துப்போட சிறுவர்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். உலகத்திலேயே பிறேசிலிலும், இந்தியாவிலுமே சிறுவர் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.
இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக வறுமை, குடும்ப வன்முறைகள், பெற்றோரின் போதிய பராமரிப்பின்மை, பெற்றோரின் மதுபாவனை, தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை நாடிச் செல்லல் போன்ற காரணிகளே இலங்கையின் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பிரதான காரணிகளாக அமைகின்றன. இதனால், பாடசாலையிலிருந்து இடைவிலகல், இலக்கின்றி அலைதல், மதுப்பாவனைக்கு உட்படல், சமூக குற்றச் செயல்களில் ஈடுபடல் போன்றவை சிறுவர் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஒன்றான சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற போக்கு சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களுக்கான கேள்வியானது நகர்ப் புறங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. இன்று நகர்ப்புறங்களில் பெண்கள் தொழிலடிப்படையில் சேருகின்ற வீதம் அதிகரித்துச் செல்வதால் அது சிறுவர் தொழிலாளர்களுக்கான கேள்வியை அதிகரிக்க வழி வகுக்கின்றது.


சொல்லப்போனால் உலகில் இன்று உள்ள அத்தனை பேரும் சிறுவர் என்ற ஒரு கட்டத்தினை தாண்டியவர்களாகவே இருப்பர். அந்த பருவத்தில் தனக்கிருந்த ஏக்கங்கள், தனது அபிலாசைகள் எப்படி இருந்தது என்பதை அவன் நன்கு அறிந்திருப்பான் அந்த நிலையில், இன்று இருக்கும் சிறுவர்களின் ஏக்கங்கள் கண்டிப்பாக அவனுக்குப்புரியும். தனி மனித இலாபங்களுக்காகவும், சில நிறுவனங்கள் தமது வருமானங்களுக்காகவும், மனதில் எந்த ஒரு இரக்க குணமும் இன்றி இன்றும் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி தொழில் நடத்திவருகின்றமை கண்கூடே. உண்மையில் சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யவேணடும், சிறுவர்களுக்கு கட்டாயக்கல்வி பெற ஆவன செய்யவேண்டும் என எண்ணி மெகா புறஜெக்ட்க்கள் போட்டு, பல பில்லியன்கள் செலவழித்து, போக்கு காட்டிக்கொண்டிருக்கும் யுனிசெப் போன்ற அமைப்புக்கள் உண்மையில் அடி மட்டத்திற்கு இறங்கிவந்து ஒவ்வொரு சமுதாயத்திலும் இந்த சிறுவர் தொழிலாளர் என்பது மிகப்பெரிய கொடுமை என்ற வழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். சமுதாயத்தின் கண்களில் சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர்களை எந்த வழியிலும் இம்சைப்படுத்தல் எற்றுக்கொள்ளப்படமுடியாது என்ற கடினமான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். தனியே சிறுவர்களுக்கு மறுமலர்ச்சி அளிக்கவேண்டும் எனத்தெரிவித்து தொழிற்சாலைகளில்போய் அவர்களைப்பிடித்து சீர்திருத்தம் செய்யாமல், சிறுவர் தொழிலுக்கமர்த்தப்படுவதற்கான காரணிகளை கண்டறிந்து அதனையும் இல்லாமற்செய்யவேண்டும்.
இப்படியான நடவடிக்கைகளின் மூலமாகவே ஓரளவுக்காவது சிறுவர்களை சிறுவர்களாக வாழவைக்கலாம்.

3 comments:

மனோன்மணி said...

நாளைய சந்ததிக்கு எதையாவது விட்டுப்போகவேண்டும் என்ற எண்ணமே இன்று வாழும் மனித குலத்திற்கு இல்லாமற்போனதன் ஒரு எடுத்துக்காட்டே இந்த சிறுவர் தொழிலாளர்கள். எவராலும் ஜீரணிக்கமுடியாத பெருங்கொடுமை

Unknown said...

கண்டதற்கெல்லாம் போராட்டம் நடத்தும் இந்தியர்களின் கண்களில் நாள்தோறும் தம் கண்முன்னாலேயே கசக்கப்படும் இந்த மலர்கள் மட்டும் கண்ணுக்கு புலப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது.

ப்ரியா said...

புத்தகம் சுமக்க வேண்டிய பிஞ்சு கைகளில் கல் சுமக்க வைக்கும் கொடுமை..... மனதை நெகிழ வைக்கும் படங்கள்.... அருமையான பதிவு... வாழ்த்துகள் நண்பரே.....

LinkWithin

Related Posts with Thumbnails