Saturday, August 22, 2009

குடும்ப மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லுங்கள்…


இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் நாளாந்தம் வேலை, வேலைமுடிந்ததும் வீடு, இடைக்கிடை உணவு, இரவு உறக்கமில்லா இறுக்கம் என அவிழ்க்கமுடியாத அளவுக்கு கழுத்தில் ஒரு கயிறு ஒவ்வொருவர்மீதும் விழுந்துவிட்டது.
உலகம் இயந்திரத்தனமாக இன்னும் வேகம்பெற வேகம்பெற, மனிதனின் முகத்திலும் இறுக்கங்கள் வலுக்கின்றன. “நேரான மனிதர்களையும் வளைத்துப்போடும் உதட்டின் சிரிப்பு எனும் வளைவு”, இன்று பல முகங்களில் இருந்து விடைபெற்றுப்போய்விட்டன.
பணம் என்னும் பெயரில் உள்ள வெறும் காகிதத்தாள்களுக்காக மனிதம் தொலைந்துபோய்க்கிடக்கின்றது.


இவை எல்லாம் எனக்கிருந்தால், இவற்றை எல்லாம் நான் செய்தால், இப்படி எல்லாம் நான் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக, காலம் முழுவதும் சந்தோசமாக வாழலாம் என்று எமக்கு நாமே நீண்டதொரு தேவைப்பட்டியல்களை தயார் செய்துவைத்திருக்கின்றோம். அதை எதிர்பார்த்து அதைப்பூர்திசெய்வதற்கான வழிகளில் எமது வாழ்க்கையினை நாம் நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்.
இதற்கெல்லாம் தேவை பணம்..பணம்..பணம்.. இந்தப்பணத்திற்காக ஒரு கணம்கூட ஓய்வில்லை. ஓட்டம், அலைச்சல், போட்டி, பொறாமை, இவற்றின் விiளைவுகளாக ஏமாற்றங்கள், பிரச்சினைகள், தோல்விகள். மகிழ்ச்சி என்பது உண்மையில் பணம் சம்பந்தப்பட்ட விடயமா? உண்மையில் இல்லை. ஏன் பணம் இல்லாமல் மகிழ்ச்சி கிடைக்காதா? உண்மையில் மகிழ்ச்சி என்பது ஒரு மன நிலை. அது மனது மற்றும் உணர்வு சம்பந்தப்பட்டது.


சரி விடயத்திற்கு வருவோம். கடல் அடிமட்டத்தில் (ஆளத்தில்) உலாவும் மீன்கள் கூட இடைக்கிடை மேல் மட்டத்திற்கு வந்து சுத்தமான காற்றினை சுவாசித்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்செல்லுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் மட்டும் இன்று இயற்கையிடமிருந்து தன்னை தூரப்படுத்திக்கொண்டு நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கின்றான். ஒரு சிலருக்கு தனது மனைவியுடனோ அல்லது கணவனுடனோ அல்லது குழந்தைகளுடனோ சிறிது நேரத்தை ஒதுக்கி பேசுவதற்கே நேரமில்லாமல் போய்விட்டது. காரணம் பணம் தேடல்.
பணம் என்பதும், அவர் அவர் வகிக்கும் பதவிகள், அவர்களுக்கான வேலைகள் என்பவை மிக முக்கிமானதே. இருந்தாலும் கூட இந்த உழைப்புக்கள் எல்லாம் எதற்கு? எமது பணம்தான் மகிழ்ச்சி என்ற தவறான எண்ணத்தினாலேயே.


ஒரு குழந்தைக்கு அவனது உள்ளத்தின் முதல் கதாநாயகன் அந்த குழந்தையின் தந்தைதான். அதேபோல அந்த குழந்தைக்கு தெரிந்த முதல் அன்பானவள், முதல் உலக அழகி அந்த குழந்தையின் தாய்தான். பெற்றோர்கள் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசத்தைவிட குழந்தைகள் பெற்றோர்கள்மீது அளவுகடந்த நம்பிக்கையினையும், பாசத்தையும் வைத்துள்ளன. எனவே அந்தக்குழந்தைகளின் ஏக்கங்கள் எப்படி இருக்கும் என்று யாம் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில் தமது அப்பாவினதும், அம்மாவினதும் கைகளை பிடித்தவண்ணம் இயற்கையோடு இணைந்த இடங்களில் நடந்துசெல்வதுதான் அந்த குழந்தையின் சொர்க்கமாக இருக்கும்.


சுற்றுலாக்கள், முக்கிய இடங்கள், சுற்றுலா தளங்கள், என்பவற்றுக்கு குடும்பத்துடன் செல்ல உங்களுக்கான நேரங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள். அந்த சுற்றுலாக்கள் உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி உங்களுக்குள்ளும் ஒரு குதூகலத்தை தரும். உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெறும். கணவன் மனைவியருக்கிடையிலான பாசத்தினையும். குழந்தைகள்மேல் உங்களுக்குள்ள பாசத்தினையும் பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைக்கும். குழந்தைகளுக்கும் பெருங் குதூகலமும் புதிய பல அனுபவங்களும் கிடைக்கும். பின்னாட்களில் அவர்கள் இந்த பயணங்களை நினைத்து சந்தோசம் கொள்ள ஏதுவாக அமையும்.


அட, இதெல்லாம் பணம் உள்ளவங்களுக்கு சரி நமக்கு எங்க? என்ற எண்ணம் எவருக்கும் வரவேண்டாம். நிச்சயமாக சுற்றுலா பயணங்களுக்கு என உங்கள் சம்பளத்தில் ஒரு தொகையினை தனியாக சேமித்து வையுங்கள். வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கான சேமிப்புக்கணக்குகளே உள்ளன. குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் சேர்க்கும் பணம் கணிசமான ஒரு தொகை வந்தவுடன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஜாலியாக கிளம்புங்கள். குடும்பத்தாருடன் செல்லும் சுற்றுலா ஆனந்தமானதே அதையும் விட குறிப்பிட்ட ஒருநாளில் உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களது குடும்பங்கள் இணைந்து சுற்றுலா செல்வது பேரின்பமானதாகவும், சந்தோசமானதான அனுபவங்களையும் தரும்.


சுற்றுலா என்றால் உடனடியாக சுவிஸர்லாந்திற்கோ, அல்லது நயாகராவை பார்க்கப்போவதாகவோ நினைத்துக்கொள்ளாதீர்கள். அருகில் உள்ள கடற்கரைக்கோ, மிருகக்காட்சிச்சாலைக்கோ, சற்று தொலைவிலுள்ள கோவிலுக்கோ செல்வது கூட சுற்றுலாதான். அங்கு நீங்கள் சென்று நின்மதியாக பொழுதை கழித்துவிட்டு வரலாம்.
“எவ்வளவு தூரம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு மகிழ்வானது என்பதே முக்கியமானது”


சுற்றுலாவுக்கு சென்றால் உங்கள். தொழில், கல்வி, அந்தஸ்துக்களை ஒருபுறம் தள்ளிவைத்தவிட்டு நீங்களும் ஒரு குழந்தைகளாகுங்கள். உங்கள் மகிழ்வுகளை குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். திருமணவீடுகள், பூப்புனித நீராட்டுவிழாக்கள், குடிபுகல்விழாக்கள், நண்பர்களின் பிறந்ததின நிகழ்வுகள் என்பவைகூட உங்களுக்கு மகிழ்வுகளை தரக்கூடிய நிகழ்வுகளே. அவர்கள் ஏன் உங்களை அழைக்கின்றார்கள் என எண்ணிப்பாருங்கள். தங்கள் மகிழ்ச்சிகளை உங்களுடன் பகிரவேண்டும் என்பதற்காக அல்லவா? அதேபோல சுற்றுலாவுக்கு சென்று உங்கள் மகிழ்ச்சிகளை மற்றவர்களுடன், குடும்பத்தாருடன் பகிர்ந்து உங்கள் மனங்களையும், மற்றவர்களின் மனங்களையம் மலரச்செய்வதுடன், குடும்பத்திலும் நிலையான ஒரு மகிழ்ச்சிக்கு அத்திவாரம் இடுங்கள்.


இத்தனை சொன்னதற்கப்புறம். சப்பா…ஈஸியா சொல்லிவிடலாம், எனக்கிருக்கிறவேலைகளுக்கு இது எல்லாம் முடியிறகாரியமா? என்று உங்களில் பலர் நினைப்பது எனக்கு புரிக்கின்றது. உண்மையும்தான்..
என்றாலும் உலகில் முதல்தர வல்லரசு நாடு ஒன்றின் ஜனாதிபதியாக இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும்? உலகில் எந்தநாளும் பெரும் ரென்ஸனாக இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவே இருப்பார். அப்படி ஜனாதிபதியாக உள்ள பாரக் ஓபாமா அவர்களே, இத்தனை தனது பதவி, வேலைப்பழுக்கள், அரசியல் நகர்வுகள், என அத்தனைக்கும் மத்தியில் தனது குடும்பத்துடன் உற்சாகமாக சுற்றுலாவுக்கு செல்கின்றார் என்றால் உங்களால் செல்லமுடியாதா என்ன?

3 comments:

Surendar said...

SUPERB Sir.

Pradeep said...

“எவ்வளவு தூரம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு மகிழ்வானது என்பதே முக்கியமானது”
இந்த வரிகள் அனைவராலும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை. வாழ்வில் சுற்றுலாக்கள் மகிழ்வுகளை மட்டும் அல்ல இனிமையான நினைவுகளையும் பரிசாக அளிக்கும்.

கவிஞர்.எதுகைமோனையான் said...

சுற்றுலாக்களும், பயணங்களும், அனைவர்களுக்கும் அவசியமே அதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு அது ஒரு பதிய படைப்பின் ஆரம்பமாக இருக்கும்.புதியபல சிந்தனைகள் பிறக்கும். பயணக்கட்டுரைகள், சுவாரகசியமான தகவல்கள் என்பவைகூட கிடைக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails