Wednesday, December 15, 2010

ஆபிரிக்கக் கவிதைகள்.


ஆபிரிகக்கவிதைகள் என்ற அருமையான புத்தகத்தை நண்பர் ஒருவர் நூலகம் ஒன்றில் இருந்து எடுத்துவந்து தந்தார். பிரபலமான சில ஆபிரிக்கக்கவிதைகளை தொகுத்து, அதை தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார் சோ.பா என்று பலராலும் அறியப்பட்ட சோ.பத்மனநாதன் அவர்கள்.
பொதுவாகவே பிறமொழிகதைகள், கவிதைகளை படிப்பதில் எனக்கு பெரு விருப்பம் உண்டு, இவற்றின்மூலம் வித்தியாசமான கலாச்சாரப்பின்னணிகளையும், வித்தியாசமான சிந்தனைகளையும், வித்தியாசமான கற்பனைகளையும் கண்டுகொள்ள ஏதுவாக அவைகள் இருக்கும்.

இருந்தாலும் இந்த ஆபிரிக்கக் கவிதைகள், படித்து முடித்தபின்னர் நெஞ்சில் கொஞ்சம் வலி இருந்தது என்பதே உண்மை. காரணம் அவற்றில் பல எம்வாழ்வியலிலுடன் ஒத்துப்போய் இருந்ததே.
ஓளி பொருந்தி, கனிமங்களும், இயற்கை வரங்களும், நிறைந்த ஒரு பரந்த பூமி, முழுமையாக சுரண்டப்பட்டு “இருண்டகண்டம்” என இரக்கமின்றி அடைமொழி கொண்டு அழைக்கப்படுவது எவ்வளவு கேவலமான விடையம் என்பது மனதை சாட்டையால் அடிக்கவைக்கின்றது.

ஆபிரிக்க கண்டத்தில் வாழும் மக்களுக்கு இது விதி என்று நினைப்பவர்களுக்கு, இந்த கவிதைகள் இது விதியல்ல ஆதிக்க சக்திகளின் சதி எனத் தெளிவுபடுத்துகின்றன.
ஆதிக்க சக்திகள் கொண்டுவந்த அந்நிய மொழிகற்று அந்த அந்நிய மொழிகளிலேயே தங்கள் மண்ணியம் பற்றி கூறவேண்டிய நிர்ப்பந்தம் அந்த மக்களுக்கு வந்தது மிகப்பெரும் கொடுமை.

இதோ அந்த ஆபிரிக்க கவிதைகளில் இருந்து சில கவிதைகள் உங்கள் இரசனைக்கு விருந்தாக மட்டும் இன்றி, சிந்திக்கும் மருந்தாகவும்…

பிணந்தின்னிகள்

நாகரிகம் எங்கள் முகத்தில் அறைந்த
அந்நாட்களில்
ஆசிநீர் எங்கள் கூனிய புருவங்களில் மோதிய
ஆந்நாட்களில்
பிணந்தின்னிகள்,
நம் நகரங்களின் நிழலில்,
நம் ‘பாதுகாவலுக்காக’
இரத்தம் தோய்ந்த சின்னங்களை எழுப்பிய
அந்நாட்களில்,
கல்லடுக்கிய பெரு நகரங்கள் தோறும்
வேதனைச் சரிப்பே விளைந்தது

பரமண்டலத்தில் இருக்கும் பிதாவைத்
தோத்தரிக்கும் தொணதொணப்பு
பெருந்தோட்டங்களில் இருந்து கிழம்பிய
அழுகுரலை அழுத்தியது!

ஓ..வலிந்து பெற்ற முத்தங்களின்
கசந்த நினைவுகள்!
துப்பாக்கிய முனையில் பொய்யாகிய வாக்குறுதிகளின்
கசந்த நினைவுகள்!

மனிதராகத் தென்படாத அந்நியர்கள் பற்றிய
கசந்த நினைவுகள்!
எல்லா நூல்களும் தெரிந்தும்
அன்பு தெரியத நீங்கள்!
பூமியை சூழ்கொள்ளச்செய்யும் நம் கைகளை
வேரிலேயே புரட்சி வீறுபடைத்த நம்கைகளை
அறியா நீங்கள்!
இடுகாடுகளிடை நீங்கள் பாடும்
பரணிகளுக்கு மத்தியிலும்
குலைந்து வெறிச்சோடிப்போன
ஆபிரிக்க கிராமங்களுக்கு மத்தியிலும்
குலையாத கோட்டை போன்று
நம் நெஞ்சில்
நம்பிக்கை வாழ்ந்தது!

சவீசுலாந்தின் சுரங்கங்கள் தொடக்கம்
புழுங்கி வியர்க்கும் ஐரோப்பிய தொழிற்சாலைகள்
வரை
ஒளிமிக்க எங்கள் காலடிகளின் கீழ்,
வசந்தம் மீண்டும் மலரத்தான் போகின்றது!

- டேவிட் டியோப் (செனகல்)

ஒரு சாதாரண ஆபிரிக்கனின் காதல்ப்பாட்டு.

இனியவளே
உன் நிழல்போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில் நிழல்கள்
அந்தியில் மங்கிவிடும்
நானோ
சாமக்கோழி கூவும்வரை
உன்னை
என்னருகில் வைத்திருக்க விரும்புகிறேன்

குடமிளகாய்போல
என்னை நேசிக்காதே
அது வயிற்றை காந்தும்
என் பசிக்கு
உன்னை உட்கொள்ள முடியாது
தலையணைபோல என்னை நேசிக்காதே
ஏனெனில்
உறக்கத்தில் ஒன்றாய் இருப்போம்
பகலில் சந்திக்கவே மாட்டோம்

சோற்றைப் போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில்
விழுங்கியபின் அதை யார் நினைக்கின்றார்கள்?

மெல்லிய உரையாடல்போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில்
அதுவிரைவில் மறந்துவிடும்

தேனைப் போல்
என்னை நேசிக்காதே
இனியதாயினும்
அதுதான் எழிதில் கிடைக்குமே!

பகலில் என் நம்பிக்கையாய்
இரவில் உன் உயிராய்
அழகிய கனவாய்
இம் மண்ணில் என்னை விட்டுப்பிரியாத
நாணயமாய்
பயணத்தில் கூடவரும் நண்பனாய்
உடைந்தாலும்
என் கிட்டாரில் பாலமாகும்
நீர் கொள்ளும் ஒரு சுருவைக்குடுவைபோல
என்னை நேசிப்பாய் இனியவளே!

- பிளேவியன் ரனைவோ (மடகஸ்கார்)

நான் மரம்

வெட்ட வெளியில்
காற்றில் கிறீச்சிடும்
முறுக்கேறிய
முரட்டு மரம் நான்!

காற்றில் கிறீச்சிட்டு
தன் சோக எதிர்ப்பைக்காட்டும்
முறுக்கேறிய தகரக் கொட்டகையின்
கூரைத்தகடு நான்!

இரவு முழுவதும்
முடிவின்றி அழுது அரற்றியபடி
ஆறுதல் அடைய மறுக்கும்
குரல் நான்!

- டெனிஸ் புரூட்டஸ் (தென் ஆபிரிக்கா)

ஒரு சிறுமியின் கதை

முன்பு
பின்னி விட்ட கூந்தல்
முற்றவர்களைப் பார்த்து
வானை நோக்கி உணர்த்தியஇ
முடக்கிய கைகள்
ஏட்டு வயதான
சிறுமி என்று சொன்னார்கள்!
பின்னொரு நாள்-
ஒரு சிவப்பு கலவை
சிதறிய மாமிசத் துண்டங்கள்
காற்றில் படபடக்கும்
கந்தைத் துணி
பூப்போட்ட சட்டை அணிந்த
முன்னை நர்
சிறுமியென்று சொன்னார்கள்

- டெனிஸ் புரூட்டஸ் (தென் ஆபிரிக்கா)

தேடல்

கடந்த காலம்
நிகழ் காலத்தின் கரி
எதிர்காலம்
வான் முகிலுக்குள் மறைந்த
புகை

கோமாளிகள் கைகளில்
சொற்கள் நினைவுகளாக
நினைவுகள் கருவிகளாவதால்
அன்பே, இரங்கு
பரிவுகாட்டு

புத்தரின் முகத்தில்
கிறிஸ்துவின் கைரேகையை பார்த்துவிட்டதால்
அறிஞர்கள் மௌனித்துவிட்டார்கள்

ஆகவே அன்பே
அவர்கள் பேச்சில்
ஞானத்தை,
வழிகாட்டலை தேடாதே
அவர்களை நாவெழாது செய்த
அந்தப் பொறி
எமக்கு பாடமாகட்டும்

இரவின் மோகச்சுமைகளை
நீயும் நானும்
உறங்கித் தீர்த்த வேளை
மழை பொழிந்தது
அவர்கள் புதிதாய்ப்பெற்ற
ஞானமெனும் மின்னற் கீற்று
மூடர்களின் அடிமைகளாக
அவர்கள் வாழ்ந்துவிட்ட உண்மையை
வெளிச்சம்போட்டு காட்டியது.

-க்கியீசி ப்பியூ (கானா)

9 comments:

ஜீ... said...

//இரவு முழுவதும்
முடிவின்றி அழுது அரற்றியபடி
ஆறுதல் அடைய மறுக்கும்
குரல் நான்!//

உண்மைதான் எமது நாட்டின் சூழ்நிலைக்கு ஒத்துப் போகின்றன! :-(

ம.தி.சுதா said...

ஃஃஃஃசுவீசுலாந்தின் சுரங்கங்கள் தொடக்கம்
புழுங்கி வியர்க்கும் ஐரோப்பிய தொழிற்சாலைகள்
வரைஃஃஃஃஃ

நல்லதொரு புத்தகத்தை காட்டியுள்ளீர்கள்... அருமையாக இருக்கிறது...

Assouma Belhaj said...

தங்கள் உலகளாவிய தேடலுக்கு வாழத்துக்கள்..

Subankan said...

அருமையான தேடல்கள். பகிர்வுக்கு நன்றி அண்ணா :)

கவிதை ஆர்வத்தில் சொந்தப் பணத்தில் புத்தகம் வெளியிட்டுக்கொண்டிருக்கும் நம்நாட்டுக் கவிஞர்களையும் இவ்வாறு அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சில காலத்திற்கு முன் படித்திருந்தேன். நல்ல கவிதைகள். சிறப்பான மொழிபெயர்ப்பு. கவிதைகளுடன் உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.

Balavasakan said...

நல்லாருக்கே..

றமேஸ்-Ramesh said...

பதிவுக்கும் பகிர்வும் நன்றி.
காதல் மரம் தேடல்
கவர்ச்சி

பார்வையாளன் said...

அருமை..

ஒரு புதிய விஷ்யததை அறிமுகம் செய்துள்ளீர்கள்

Jawid Raiz said...

பதிவு எண்ணிக்கையை கூட்டிக் கொள்வதற்காக அர்த்தமில்லாத விஷயங்களை அடுக்கிக் கொண்டு போபவர்கள் மத்தியில் உங்கள் வலைப்பூவை வித்தியாசமானதாகவும், கருத்தோட்டம் உள்ளதாகவும் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் சகோ

LinkWithin

Related Posts with Thumbnails