Sunday, December 12, 2010

இந்தவாரப் பதிவர் - திரு. வந்தியத்தேவன்


ந்தியத்தேவன்…தமிழ் பதிவுலகம், பதிவுகள், வலையுலக வாசகர்களால் எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு முத்திரை பதித்துவிட்ட ஒரு பெயர். இலங்கைப்பதிவுலக மூத்தவர்களில் (பதிவுகளால்) ஒருவர் என்றுகூட இவரைச்சொல்லிக்கொள்ளலாம். மயூரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர், ஒரு தகவல் தொழிநுட்பத்துறையை சேர்ந்தவர். ஆரம்பகாலத்தில் தகவல் தொழிநுட்பம் சம்பந்தமாக சில பத்திரிகைகளில் எழுதிவந்துள்ளமையும் குறிப்பிடப்பிடவேண்டிய ஒன்று.

பதிவுலகத்தில் வந்தியத்தேவன் என்ற பெயருடன் அந்தப்பெயருக்கு ஏற்றால்ப்போல தனக்கேயான கம்பீரமான எழுத்து நடையுடன் பயணித்துக்கொண்டிருப்பர் இவர்.
2006 ஆம் ஆண்டுமுதல் பதிவுலகத்திற்கு வந்த இவர், தனது ஓயாத தேடல்களாலும், மேலும் மேலும் சிறப்பு என்ற முகாமைத்துவ மகுடத்தை தன் எழுத்துக்களில் அமுல்ப்படுத்தியதாலும், பதிவுலகம் நின்று கவனிக்கும் இடமாக தன் தளத்தை பதிவர்கள், வாசகர்களின் மனங்களில் ஆழமாகப்பதித்துவிட்டவர்.

அலட்டலில்லாமல், வர்ணனைகள், சுற்றிவளைப்புக்கள் இல்லாமல் எடுத்துக்கொண்ட விடயத்தை பொட்டில் அடித்தாலப்போல இலகு நடையில் வாசகர்களுக்கு புரியவைப்பது இவரின் எழுத்துக்களின் முறை. இலக்கியம், அரசியல், விளையாட்டு, சமுகக்கண்டோட்டம், சமகால உலகம் என்று எழுத்துக்கள் வாசகர்களை சுற்றிக்கொண்டு வந்து ஒரு இடத்தில் விட்டுச்செல்லும் வித்தைத்தனம் இவரது எழுத்துக்களில் உண்டு. தான் உட்பட உலக விடையங்கள் அனைத்தையும் தர்க்கரீதியில், அதேநேரம் நியாயப்பாடாக ஆழமாகச்சென்று பார்க்கும் தன்மையினை இவரின் எழுத்துக்களை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம்.

சினிமா என்றுவந்துவிட்டால். “தமிழ் சினிமா ஒரு கோவில் என்று கொண்டால் கமல்ஹாசனே அங்கு தெய்வமாக இருக்கமுடியும்” என்ற கொள்கையில் அசைக்கமுடியாதவராக இருக்கின்றார். இதனால்த்தானோ என்னமோ இவரின் சுயவிபரப்படத்தில்க்கூட அந்த “களத்தூர் கண்ணம்மா” குழந்தைக்கமலின் விபரிக்கமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை என்றும் மாற்றம் செய்யாமல் இட்டுவருகின்றார்.

இடைவிடாத தேடல், தொடர்ச்சியாக்கும் தன்மை, எடுத்துக்கொண்ட விடயப்பரப்பில் தளம்பல் இல்லாத உறுதியான தன்மை என்பவையே வந்தியத்தேவனின் சிறப்பியல்புகள். தான் பதிவுலகில் மூத்தவர் என்ற எண்ணம், அல்லது ஈகோ எதுவும் இன்றி இன்று எழுதத்தொடங்கும் பதிவர்வரை சென்று அவர்களை ஊக்கப்படுத்துவது அவரது பண்பட்ட தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் “காதல் உணர்வு பூர்வமானதா? அறிவுபூர்வமானதா?” என்ற கேள்வியுடனான பதிவுடன் வலையுலகில் வந்தியத்தேவன் காதலுடன் அறிமுகமானார். வாசித்துப்பார்த்தால் “நான் ஈழத்தில் உள்ள சராசரி இலக்கிய இரசிகன். என் உளறல்கள் என என் வலைப்பதிவுக்கு தலைப்பிட்டகாரணம், என் பதிவுகள் வெறும் உளறல்களே” என்று அவர் கூறிய வார்த்தை அப்போதே அடிபட்டுப்போய்விட்டது. அவை வெறும் உளறல்களாகத்தோன்றவில்லை. வெறும் அவையடக்கமே அது என்பது இவரது எழுத்துக்களுடன் பயணிப்பவர்களுக்கு தெரிந்துவிடும்.

“ஹொட் அண்ட் சவர்சூப்” பதிவுலகத்திற்கும், வாசகர்களுக்கும் இவர் வைக்கும் ஒரு சுவையான கலவை விருந்து. பதிவுலகில் ஐந்து வருட அனுபவங்கள் கொண்டுள்ள அதேவேளை இன்றும் புதிய பதிவாளனாகவே தன்னை வெளிப்படுத்தும் சிறந்த தன்மை கொண்ட ஒரு சில மாயைகளுக்குள் அகப்படாத பிரகாச வெளிச்சமாக இன்றும் வீரத்துடன் நிற்கின்றார் இந்த வந்தியத்தேவன்.

இப்போதாவது ஒரு உண்மையை சக பதிவர்களுக்கு இதை எழுதும் நானும், வந்தியத்தேவனும் மேலும் மறைக்காமல் சொல்லிவிடவேண்டும். அதாவது நானும் பதிவர் வந்தியத்தேவனும் பதிவுலகத்திற்கு வரமுன்னரே நண்பர்கள். 1999 முதல் 2005 வரை எங்கள் சந்திப்புக்கள் சகநண்பர்களுடன் அடிக்கடி ஏற்பட்டுள்ளன.

சரி.. இந்தவார பதிவரான பதிவர் வந்தியத்தேவனினிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும், அவரின் பதில்களையும் வாசிக்க ஆர்வமாக இருப்பீர்கள்..
அவை இதோ..

கேள்வி:இலங்கையில் பதிவர்களில் ஒரு மூத்தவர் நீங்கள். வலைப்பதிவுகள் எழுதவேண்டும் என நீங்கள் முடிவெடுத்த காரணங்கள் என்ன? அப்போதைய வலைப்பதிவுலகம் எப்படி இருந்தது?

வந்தியத்தேவன் :2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா,
சினேகிதி, சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன்
ஆனால் பின்னூட்டம் இட்டத்தில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம்,
பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில்
எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.


2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக்
களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது
நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு
வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார். அத்துடன்
கருத்தக்கொழும்பான் மாம்பழம் மூலம் அறிமுகமான என் சகா கானாப் பிரபாவின்
ஆலோசனைகளினாலும் எனக்கான வலையை உருவாக்கினேன்.

ஆகவே ஒரு ஆர்வக்கோளாற்றில் சரி நானும் எழுதிப்பார்ப்போம் என
துணிந்தேன்.பாடசாலை நாட்களில் கட்டுரை எழுதிய அனுபவம் நிறைய
இருக்கின்றது. அத்துடன் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்தபோது
பத்திரிகைகளில் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்(என்
வலையில் இதுவரை எந்த தொழில்நுட்ப பதிவும் எழுதவில்லை என்பது தனிக்கதை).
ஆகவே தைரியத்துடன் களத்தில் குதித்தேன்.

அந்தநாட்களில் வலைப்பதிவர்களிடையே தற்போது இருப்பது போல் நட்புகள்
அவ்வளவாக இல்லாவிடிலும் கருத்துமோதல்களும் மறுதலிப்புகளும் ஓரளவு இருந்தன
ஆனால் தற்போது இருப்பதுபோல் தனிமனிதத் தாக்குதல்களும்
காழ்ப்புணர்ச்சிகளும் இல்லை அல்லது அவ்வளவு இல்லை எனலாம்.

கேள்வி:வந்தியத்தேவன் என்ற பெயரை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? வாசிப்புக்களின்மேல் உங்கள் ஆர்வம் கூட ஏதுவாக அல்லது காரணமாக இருந்தவை அல்லது இருந்தவர்கள் யார்?

வந்தியத்தேவன் :எனது சொந்தப்பெயரில் எழுதலாம் என்றால் ஏற்கனவே மு.மயூரன், மயூரேசன், மாயா
என்ற மயூரன் எனப் பல மயூரன்கள் வலையுலகில் இருப்பதால் கல்கியின் அழியாப்
புகழ் கொண்ட பாத்திரமான வந்தியத்தேவன் என்ற பெயரை எனக்கு புனை பெயராகச்
சூட்டினேன். வலையுலகில் என் சொந்தப் பெயரை விட வந்தி என்ற பெயரே நிலைத்து
நின்றுவிட்டது.

எனது ஆச்சி, தாத்தா, அம்மா அப்பா போன்றவர்களின் வாசிப்புப் பழக்கத்தைப்
பார்த்து எனக்கும் இந்த ஆரவம் ஏற்பட்டது. என் வாசிப்புக்கு சிறுவயதில்
மிகவும் உதவியவர் என் அம்மா ஆவார். கிட்டத்தட்ட ஐந்து வயதில்
எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தது என் வாசிப்புப் பழக்கம்.
ஆரம்பத்தில் அம்மா எனது வயதுக்குரிய புத்தகங்களை மட்டும் எனக்கு
வாசிக்கத் தருவார். பின்னர் நானாகவே என் வயதுக்கு மீறிய‌ பல புத்தகங்களை
(பெரும்பாலானவை துப்பறியும் நாவல்கள்) தேடி வாசிக்கத் தொடங்கினேன். இந்த
ஆர்வத்தால் வடமராட்சி வதிரிப் பொது நூலகத்தில் ஒரு தடவையும் சாகவச்சேரி
பொது நூலகத்தில் ஒரு தடவையும் நான் என்னை மறந்து வாசித்து நூலகர் என்னைக
கவனிக்காமல் உள்ளே விட்டுப்போன கதையும் நடந்தது.

வாசிப்பில் இலங்கை இந்திய எழுத்தாளர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி
எனக்குப் பிடிக்கும் எதையும் விட்டுவைத்ததில்லை. என் அப்பா ஆங்கிலப்
புத்தகங்களை எனக்கு அறிமுகப்படித்தினாலும் எனக்கு பலகாலம் அவற்றில் காதல்
வரவில்லை ஆனால் இப்போ கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலப் புத்தகங்கள்
வாசிக்கின்றேன்.


கேள்வி:பதிவுலகம் பெருத்துக்கொண்டு செல்வது ஆரோக்கியமானதா? பதிவுகளும், பதிவர்களும் எப்படி இருக்கவேண்டும் என்று உங்கள் ஆழ்மனத்தில் உள்ள ஆசைகள் எவை?

வந்தியத்தேவன் :சர்ச்சையான கேள்வி. பதிவுலகம் பெருத்துக்கொண்டுபோவது ஒரு வகையில்
ஆரோக்கியமானதாக இருந்தாலும் இன்னொரு வகையில் தனிமனிதக்
காழ்ப்புணர்ச்சிகளும் சுய விளம்பரப் பிரியர்களின் தொல்லைகளும்
அதிகரித்திருப்பது என்பது என் கருத்து. இவற்றையும் தாண்டிச் சிலர் நல்ல
நட்புகளுடன் இருப்பது பாராட்டத்தக்கது.

ஒரு பதிவு போட்டவுடனேயே தம்மை சுஜாதா, செங்கைஆழியான் என நினைத்துச் சிலர்
போடும் ஆட்டங்களும் தம்முடைய வலையைப் பிரபலப்படுத்த போலி வலைகள் போலிப்
பின்னூட்டங்கள் போட்டு நாடகம் ஆடுவது என ஒரு சில பதிவர்களின்
செயற்பாடுகளினால் பதிவுலகம் என்றால் வம்புச் சண்டைபோடும் இடம் என
வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைக்கின்ற நிலைக்கு வந்துவிட்டது.

சில நாட்களாக இந்தியப் பதிவுலகில் நிகழ்ந்த புனைவுப் பிரச்சனைகளும்,
இலங்கைப் பதிவர்களிடையே சச்சரவுகளை ஏற்படுத்த ஒரு வெளிநாட்டுப் பதிவருடன்
சேர்ந்து இன்னொரு இலங்கைப் பதிவர் நடத்தி தோற்றுபோன நாடகங்களும் சிறந்த
உதாரணங்களாகும்.

எவரும் தங்கள் கருத்துகளை எழுதும் உரிமை ஜனநாயக நாடுகளில் உண்டு. அந்த
வகையில் பதிவர்களும் தங்கள் மாற்றுக் கருத்தை மற்றவருக்கு இடிக்காததுபோல்
எடுத்துரைக்கலாம்.

பதிவுகளைப் பொறுத்தவரை அவர் அவருக்கு எது முடியுமோ அதை எழுதுவதே
சிறந்தது. அதே நேரம் வெறுமனே ஒரே வகையான பதிவுகளை பதிவேற்றாமல்
நகைச்சுவை, விளையாட்டு, அரசியல், திரையுலகம், சமூக தார்மிக உணர்வுகள் என
பலதையும் கலந்து எழுதினால் மட்டுமே பலரால் ரசிக்கமுடியும்.

இந்தியாவில் பதிவுலகம் பலராலும் கவனிக்கப்பட்டு வருவது மிகவும்
ஆரோக்கியமானது ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஒரு சில ஊடகங்கள் மட்டுமே
பதிவுலகத்தை ஓரளவு கவனிக்கின்றன. இந்த நிலையை மாற்றவேண்டும்.

உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். அத்துடன் வளர்ந்துவருகின்ற
இளம்(நானும் இளம் தான்)புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்துங்கள்.


நல்லது நண்பர்களே இன்று பதிவர் திரு. வந்தியத்தேவன் பற்றியும் அவரது பதில்களையும் பார்த்தோம். மீண்டும் அடுத்த ஞாயிறு பதிவர் சந்திப்பு என்பதால் நிறையப்பதிவர்களை நேரிலேயே சந்தித்துவிட்டு, அதற்கு அடுத்த ஞாயிறு ஒரு பதிவுலக நண்பருடன் உங்களை சந்திக்கின்றேன்.

நன்றிகள்.

18 comments:

test said...

நன்றி உங்கள் அறிமுகப்படுத்தலுக்கு! :-)

balavasakan said...

ஓ.. வந்தியண்ணாவா ..!!

நல்லது ஜனா அண்ணா !! வரும்போது பெபெபெபெ...பெரிய குடையுடன் வரவும் மழை !! மழை!

Unknown said...

இந்த வார பதிவராகியிருக்கும் வந்திய தேவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அவரது வார்த்தைகள் எம்மை போன்ற புதியவர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது..

Unknown said...

//ஒரே வகையான பதிவுகளை பதிவேற்றாமல்
நகைச்சுவை, விளையாட்டு, அரசியல், திரையுலகம், சமூக தார்மிக உணர்வுகள் என
பலதையும் கலந்து எழுதினால் மட்டுமே பலரால் ரசிக்கமுடியும்.//
நல்ல வழிகாட்டல்..

என்.கே.அஷோக்பரன் said...

திரு.வந்தியத்தேவன் அவர்களைப் பற்றி முக்கியமாகச் சொல்ல வேண்டிய விடயம், அவர் பழகுவதற்கு மிக இனிமையானவர்!!!

வாழ்த்துக்கள்!!!

pichaikaaran said...

சிறப்பான பதிவு . நல்லவரை பற்றிய நல்ல எழுத்து

கன்கொன் || Kangon said...

நல்ல மனிதர், அருமையான பதில்களைத் தந்திருக்கிறார். :-)

Bavan said...

அட நம்ம பச்சிளம் பாலகர் சங்கத்தலைவர் வந்தியண்ணா..:P

கேள்விகளையும், அதற்கான பதில்களையும் இரசித்தேன்..:)

நேரில் இதுவரை அவரைச் சந்தித்ததில்லை, விரைவில் சந்திக்க ஆவலாயுள்ளேன், வந்தியண்ணா பற்றிப் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா..:)

தாருகாசினி said...

பதிவுலகில் மூத்தவர் என்ற எண்ணம், அல்லது ஈகோ எதுவும் இன்றி இன்று எழுதத்தொடங்கும் பதிவர்வரை சென்று அவர்களை ஊக்கப்படுத்துவது அவரது பண்பட்ட தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.//

மிகவும் உண்மை

தான் உட்பட உலக விடையங்கள் அனைத்தையும் தர்க்கரீதியில், அதேநேரம் நியாயப்பாடாக ஆழமாகச்சென்று பார்க்கும் தன்மையினை இவரின் எழுத்துக்களை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம்.//

நானும் உணர்ந்திருக்கிறேன்.

பதிவு பின்னூட்ட கலந்துரையாடல் தவிர தனிப்பட்ட ரீதியில் அவரோடு பழக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றாலும் கூட நான் சந்தித்த மனிதர்களில் நல்லவர் என என் மனதுக்கு பட்டவர்களில் வந்தியண்ணாவும் ஒருவர்..முகஸ்துதிக்காக இல்லை..உண்மையாகத்தான் சொல்கிறேன்..

டிலான் said...

வணக்கம் வந்தியத்தேவன் அண்ணை.

Subankan said...

எங்கள் வந்தியண்ணா பற்றிய அறிமுகப்படுத்தலுக்கு நன்றி அண்ணே :)

ARV Loshan said...

ஆகா.. வந்தியைப் பற்றி நீங்கள் விபரித்துள விடயங்கள் மிக நிதர்சனமானவை. அதிகமாக நாம் சொல்லவேண்டியதில்லை.
இவரது அறிவின் ஆழமும் அதே வேளையில் அடக்கமும் எப்போதும் நான் வியப்பவை.

எங்கள் வந்தியின் பதில்களில் தெரியும் தீர்க்கமும்,தெளிவும் காரமும் போதும் அவரது அனுபவம் பற்றி சொல்ல.

மூன்று பதிவர் தெரிவுகலுமே கலக்கல் ஜனா.

நீங்கள் வருகிறீர்கள் என்ற உறுதி மகிழ்ச்சி தருகிறது. வாங்க பழகலாம் :)

SShathiesh-சதீஷ். said...

ஒ நம்ம மாம்ஸ் இந்தமுறை. வாழ்த்துக்கள் இருவருக்கும். யார் சொன்னா இந்த மனிசன் சாதுவானது என்று. இளவரசர்கள் அப்படி தான் இருப்பார்கள் ஆனால் வீரம் உள்ளே நிறைய இருக்கும். லண்டனில் கலக்குறார் மாம்ஸ்.

ம.தி.சுதா said...

உண்மையில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்னே தவிர வேறு எதுவம் அறிந்ததில்லை.. அவரத எழுத்துக்களின் வலிமை கண்டிருந்தலும் இவ்வளவு இனிமையானவர் எனத் தெரியாது.. முக்கியமாக
////வடமராட்சி வதிரிப் பொது நூலகத்தில்////

அவர் படித்த நிலையத்தில நானும் படிப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்...

சஞ்சயன் said...

மிகவும் சிறப்பான அறிமுகம்.

வந்தியத்தேவனுக்கு எனது வாழ்த்துக்கள்.

”பதிவுகளைப் பொறுத்தவரை அவர் அவருக்கு எது முடியுமோ அதை எழுதுவதே சிறந்தது” என்னும் எங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

நன்றி
சஞ்சயன்

visaran.blogspot.com

யோ வொய்ஸ் (யோகா) said...

வந்தி ஒரு சிறப்பான தெரிவு ஜனா.

இலங்கை பதிவர்கள் கூட்டாக செயற்பட ஒரு முக்கியமானவர் வந்தி எனப்படும் மயுரனாவார்

வந்தியத்தேவன் said...

நன்றிகள் ஜனா. என்னைப் பற்றி அதிகமாகவே கூறிக் கூச்சப்பட வைத்திருக்கின்றீர்கள். உங்கள் பதிவை வாசித்த என் குடும்பத்தினரும் தங்கள் நன்றிகளை உங்களுக்குச் சொல்லிவிடச் சொன்னார்கள். காரணம் அண்மைக்காலமாகத் தான் அவர்களுக்கு நான் வலைப்பதிவு எழுதுவது தெரியும்.

இந்தப் பதிவில் என்னைப் வாழ்த்திய ஜீ, பாலவாசகன், பாரத்பாரதி, என்,கே.அசோக்பரன், பார்வையாளன், கன்கோன், பவன், தாருகாசினி, டிலான், சுபாங்கன், லோஷன், சதீஸ், மதிசுதா, சஞ்சயன் மற்றும் யோகா ஆகியோருக்கு நன்றிகள்.

இவர்களைப்போன்ற பல நண்பர்களை எனக்குப் பெற்றுத் தந்த பெருமை வலையுலகிற்க்கே சேரும்.

KANA VARO said...

முதலாவது பதிவர் சந்திப்பு காலகட்டத்தில் தினம் ஒரு பதிவு எழுதும் இவரை எண்ணி வியந்திருக்கின்றேன்.

நகைச்சுவையான மனிதர். பழகுவதற்கு இனியவர்.

LinkWithin

Related Posts with Thumbnails