வித்தியாசங்கள் பார்க்கும் நபர்களை திரும்பி பார்க்கவைத்துவிடும். அதேபோல பதிவுலகிலும் ஒரு வித்தியாசமான பாணியை கடைப்பிடிப்பவர் பதிவர் டிலான்.
“தவறணை” இவரது தளத்தின் பெயரே கொஞ்சம் கிறுங்க வைக்கின்றது.
தவறணைக்குள் சென்று பார்த்தால் திகட்ட திகட்ட கள்ளு மட்டும் அல்ல பல விடயங்களையும் நகைச்சுவை கலந்து, யாழ்ப்பாண பேச்சுவழக்கிலேயே, விழுந்து விழுந்து சிரிக்கவும் பின்னர் கொஞ்சம் யோசித்து அதிசயிக்கவும் வைப்பன டிலானுடைய எழுத்துக்கள்.
டிலானுடைய பதிவுகளை “மண்ணின் பதிவுகள்” என்ற தலைப்பின்கீழ் கொண்டுவந்துவிடலாம். ஏனென்றால் அவரது பதிவுகளில் முக்காலத்தையும் மண் மணத்துடன் கண்முன் கொண்டுவந்துவிடுகின்றார்.
அதிலும் பெரிய அதிசயம் என்னவென்றால் பல சர்வேக்கள் கூறுகின்றன, டிலானுடைய தவறணைக்கு பெண் வாசகர்களின்கூட்டமே அதிகம் என்று.
நகைச்சுவை எழுத்துக்கள் என்பது சிலருக்கு மட்டுமே அரிதாக கிடைக்கும் ஒரு வரம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் டிலானுடைய ஒவ்வொரு வசனங்களும் சிரிக்கவைத்துக்கொண்டே போகும். ஆனால் சில இடங்களில் நன்றாக சிரிக்க வைத்துவிட்டு, இறுதியாக சோக உணர்வை கொடுத்து கண் கலங்க வைத்துவிடுவதும் டிலானுடைய திறமை.
ஒரு முகாமைத்துவத்துறை சார்ந்தவரான டிலான் இலக்கியங்கள்மீது ஆர்வம் கொண்டவர். அதேபோல குறும்படங்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர்.
தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களைக்கூட மனது மறக்காது நகைச்சுவையாக சொல்லி, நாம் மறந்துபோன பல விடயங்களையும் வந்து எடுத்து தருவது டிலானின் எழுத்துக்களின் மெனாரிசம்.
சண்முகநாதன் டிலக்ஸ்மன் என்ற இயற்பெயரைக்கொண்ட டிலான், யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்தவர். சிறந்த ஒரு பந்துவீச்சாளராகவும், உதைபந்தாட்ட வீரனாகவும் இருந்தவர் என அறியமுடிகின்றது.
தற்போது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அவர், வேலைப்பழுக்கள் காரணமாக பல நாட்களாக வலைப்பதிவுகளை எழுதவில்லை என்பது வாசகர்களுக்கு ஏமாற்றமே.
“அன்னம்மா பெத்தவளே” என்ற வைரமுத்துவின் கவிதையை பழனிச்சாமி பெத்தவனே என்று மாற்றி எழுதி வயிறு வெடிக்க சிரிக்கவைத்தவர் டிலான், அதேபோல தவறணையில் க்யூ வரிசை, எல்லாம் செப்படி வித்தை என்பவற்றை வாசித்து வயிறு நொந்தவர்கள் பலபேர்.
தற்போதைய முகாமைத்துவ முறைகளின் முக்கியமானது, கட்டளையிடுதல், பழமையான முறைகளை விட, நகைச்சுவை இழையோட உரையாடி பல விடயங்களை முடித்தல் என்னும் சாதகமான முறை! இதையே டிலான் தனது எழுத்துக்களில் கொண்டுவருவது தெரிகின்றது. படு சீரியஸான விடயங்களைக்கூட நகைச்சுவையாக சிரிக்கவைத்து, மெல்லமாக சிந்திக்க வைத்துவிடுகின்றன டிலானுடைய எழுத்துக்கள்.
தனக்கென வித்தியாசமான பாதையினை அமைப்பதே, முக்கியமான ஒரு பிரச்சினை என்ற நிலையில், மிக மிக ஆச்சரியமாக தனது வலைத்தளத்தின் பெயராலும், எழுத்து முறையாலும் வாசகரை நெருங்கி வந்து உட்கார்ந்துவிடுகின்றார் பதிவர் டிலான்.
சரி… இந்த வாரப்பதிவரான டிலானிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும்.
கேள்வி – பேச்சுவழக்கத்திலான எழுத்து முறையினை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன?
டிலான் - எதாவது வித்தியாசமாக தெரிந்தால் முதலில் அங்கே அது என்னவென்று பார்ப்பதுதான் என் சுபாவம். மாற்றங்களையும், வித்தியாசங்களையும் விரும்பும், சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறிக்கொள்ளலாம்.
ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் என் வலையை தொடங்கினேன்.
என்னை இழுத்துக்கொண்டு வந்ததில் உங்கள் பங்கும் உள்ளது.
அதேநேரம் மண் சார்ந்த எழுத்துக்கள் மனங்களை சென்டிமென்டாக நெருங்கிவிடுவதையும், அந்த எழுத்துக்கள் என்றும் மரித்துப்போவது கிடையாது என்பதையும் புரிந்துகொண்டேன். அதனாலேயே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் எழுதுவதை நடைமுறைப்படுத்தினேன்.
குறிப்பாக சிறுவயதில் “டிங்கிரி சிவகுரு” குழுவினரின் மண் மணம் கமழும் பேச்சுக்கள் அடங்கிய நகைச்சுவை ஒலிநாடாக்களை கேட்டது உண்டு. அவை என்மனதில் பெரியதொரு தாக்கத்தை செலுத்தின. இன்றும் அவர்களின் வசனங்கள் அத்தனையும் பாடமாக மனதில் உள்ளன. இரசிக்கக்கூடியதாகவும் உள்ளன.
என் எழுத்துக்களிலும் அவர்களின் பாதிப்பை காணலாம்.
அதேவேளை மண்ணிய எழுத்துக்களினால் சில பாதிப்புக்களும் உண்டு. அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு பிரதேசங்கள், நாடுகளைச்சேர்ந்தவர்கள் இதை புரிந்துகொள்ள சற்று சிரமப்படவேண்டியதாக இருக்கும்.
கேள்வி – பதிவுகள், பதிவுலகம் பற்றிய உங்கள் பார்வை?
டிலான் - குறிப்பாக ஒன்றைச்சொல்லிக்கொள்ளவேண்டும் என்றால் என் எழுத்துக்களை, என் கருத்துக்களை மற்றவர்களும் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும், என்ற அடிப்படையில், அதே ஆசைகளுடன் எழுதப்படும் ஒரு சைக்கோலொஜி எபெக்ட்தான் பதிவுகள். எத்தனைபேர் இதை ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது.
ஆனால் தெரிந்தோ தெரியாமலோ பதிவுகள் மூலம் பல ஆரோக்கியமான விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றது. பொதுவாக வாசிப்பு அதிகரித்துள்ளது, எண்ணங்கள் பகிரப்படுகின்றது, மாறு பட்டகோணங்களுடனான சிந்தனைகள் வளம் பெறுகின்றன.
அதேவேளை நான் கூறியதுபோல பதிவு எழுத வருவதற்கு ஒரு சைக்கோலொஜி எபக்ட் உள்ளது என்பதுபோல சில சைக்கோக்களும், தாறுமாறாக பதிவுலகில் உருவாகிவருவது வருந்தத்தக்கதே. கணணிகளில் ஏற்படும் வைரஸ்கள்போல, பதிவுகளில் உள்ள வைரஸ்கள் அவை. அவற்றிற்கும் ஒரு ஆன்டி வைரஸ் கண்டுபிடிக்கட்டால் பதிவுகள், சிறப்பாக இருக்க ஏதுவாக அமையும்.
கேள்வி – தற்போது தங்களின் பதிவு பற்றி?
டிலான் - குறும்பான ஒரு கேள்வி. கடுமையான வேலைப்பழு, சில கற்றல் நடவடிக்கைகள், என்பவற்றால் சிறு தேக்கம் கண்டுள்ளது என் பதிவுகள்.
குறிப்பாக ஒரு சிலருக்கு தவிர மற்றவர்களுக்கு என் பதிவுகள் சென்றடையவில்லை காரணம் என்னை நான் வெளிப்படுத்திய சந்தர்ப்பங்கள் குறைவு என்பதே. எனினும் நான் பல பதிவுகளை படிப்பதுண்டு, பெரிதாக பின்னூட்டம் இடுவதில்லை.
தற்போது 3 மணிநேரம்தான் உறக்கம் என்ற நிலை. நிலமை புரிந்திருக்கும்.
எனினும் விரைவில் வழமைபோல எழுத தொடங்குவேன். குறிப்பாக இலங்கை பதிவர்கள் பற்றி அண்மையில் சந்தோசமான தகவல்கள் பதிவுகள் மூலம் கிடைத்தன. உங்களின் ஒற்றுமை, கிரிக்கட் ஆட்டம், சந்திப்பு என அத்தனையும் பெருமிதம் கொள்ள வைக்கின்றது. என்றும் மாறாத அதே அன்புடன் இணைந்த பதிவுகளாக நாங்கள் இருக்க வாழ்த்துக்கள்.
இந்தவாரம் என்னையும் ஒரு பதிவராக அறிமுகப்படுத்திய அன்பு அண்ணர் உங்களுக்கும் என் நன்றிகள்.
நல்லது நண்பர்களே இன்று பதிவர் திரு.டிலான் பற்றி ஒரு சின்ன பார்வை ஒன்றை பார்த்தோம். சிரிப்பதற்கு ரெடியாக டிலானுடைய தளத்திற்கு சென்று பாருங்கள்....
டிலானின் தவறணை.
சரி..அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் ஒரு பதிவுலக நண்பர் பற்றிய தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.
நன்றி.
8 comments:
sudu soru
ya.. dilan's very sensitive writter... i can blive... dil come back the blog.
அடடே நம்ம ஜாதி, மொக்கைப் பதிவரா..:P
நான் இதுவரை இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அறிமுகத்துக்கு நன்றி..:)
பதிவர் டிலானி அறிமுகம் செய்த ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்
ஆக்கபூர்வமான பதிவு
டிலானுடைய பதிவுகளை வாசித்திருக்கின்றேன். முன்னர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் நீங்களே! இந்த அறிமுகமும் பிடித்திருக்கிறது. ஆள் எழுதுவதில்லை... அது தான் குறை.
வணக்கம் டிலான் :)
//Anuthinan S said...
பதிவர் டிலானி அறிமுகம் செய்த ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்//
யோவ்.. அது டிலான், not டிலானி..:P
205 எஃபட்டோ..:P
Post a Comment