விபத்து என்ற சொல்லிலேயே எதிர்பாரது, சந்திக்கும்போது அபத்தம் கொண்டது என்ற அர்த்தம் உள்ளதை கண்டுகொள்ளலாம்.
விபத்துக்கள் எவருமே எதிர்பாராதுதான், என்றாலும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் மிகக்கொடியவை. வேலைப்பழு அதிகம் உடையவர்கள், வாகனம் ஓட்டும்போது சிந்தனைகளை சிதறவிடாமல் கட்டுப்படுத்த தெரியாதவர்கள், இசையில் இலகிப்பவர்கள், பிரச்சினைகளுக்கு உள்ளானவர்கள், ரென்சனாக உள்ளவர்கள் என இப்படி பலர் குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனங்களை ஓட்டுவதை தள்ளிப்போடுவது மிக்க நல்லது. அப்படி ஓட்டத்தான் வேண்டும் என்றால்….
நிதானம்…நிதானம்…நிதானம்…
வாகன விபத்துக்களால் பாதிக்கப்படப்போகின்றவர்கள், குறிப்பிட்ட நபர் மட்டும் அன்றி இன்னொருவருமே ஆவார்கள். விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் ஓட்டும் நபர் ஒருவரிடம் எப்போதும் இருக்கவேண்டும். ஏனெனில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்படும் பட்சத்தில் உயிர் அபாயம், உடல் உறுப்புக்களை இழக்கும் நிலை, இயங்கா நிலமை என பல்வேறு கோர விளைவுகள் ஒரு நொடிப்பொழுதில் ஏற்பட்டுவிடும்.
நேற்று மாலை ஒரு திடீர் விபத்து ஒன்றை நான் சந்தித்து இருந்தேன். வழமையாக நான் பயன்படுத்தும் அதேவீதி, மாலை நேரம் என்பதால் வாகன நெருக்கங்களும் அதிகமாக இல்லாத நேரம். குறிப்பிட்ட ஒரு நாற்சந்தி, அதில் எப்போதுமே நான் நிதானமாகவே செல்வதுண்டு, நேற்றும் ஒலி எழுப்பி, வலம் பார்த்து இடம் பார்த்துக்கொண்டே திருப்பினேன். எனக்கு இடப்பக்கமாக வீதியில் நேரே செல்ல முற்பட்டவர் அதிவேகமாக வந்த காரணத்தால் ஒரு நொடிப்பொழுதில் ஒரு விபத்து.
என் மோட்டார் வாகனம் அடித்து விழுத்தப்படும்போது, எப்படி ஒரு முன்னெச்சரிக்கையோ, அல்லது தெய்வாதினமோ, ஒரு செக்கன் முடிவாக நான் வாகனத்தின் போக்கின்கு போகாமல் அதற்கு எதிரான பக்கம், வாகனகத்தில் இருந்து முற்றாக விலகி, விழுந்துகொண்டேன், அதே வேகத்திற்கு சற்றுத்தூரம், வீதியில் இழுத்து செல்லப்பட்டதால், என் ஆடைகள் அத்தனையும் கிழிந்து போய் இருந்தது. காலில் சிறு சிராய்ப்பு காயம் மட்டுமே. என்றாலும், விழுந்த அடியின் வேகம், மோதியவரின் மோட்டார் வாகனத்தின் அதிவேகம் என்பவற்றை கணிக்கையில் நான் உயிர் தப்பியதே பெரும் அதிசயம், அதிலும் எந்தவித காயங்களும் இன்றி நான் நானாக இரும்பு மனிதனாக எழுந்து நின்றது எனக்கு அதிசயத்தின் மேல் அதிசயமே. (தலைக்கவசம் அணியாது இருந்திருந்தால் இந்த நேரம் சங்குதான்.)
எனக்கு எதுவும் இல்லை என்று தெரிந்துகொண்டு உடனயடியாகவே எழுந்து, தன் வாகனத்தை என்மீது போதிய புண்ணியவானை பார்க்கின்றேன். மெதுவாக எழுந்தவர் திடீர் என்று மயக்கமடைந்து விழுந்துவிட்டார். எப்போதும் ரென்ஸனுக்கு மனதில் இடங்கொடுக்காத எனக்கு அப்போது படு ரென்ஸன் ஆகிவிட்டது.
அருகில் உதவிக்குக்கூட ஆட்கள் இல்லை. மக்களின் உதவும் மனநிலை எப்படி என்பது எனக்கு துல்லியமாக தெரியும் என்பதால், இரண்டு மோட்டார் வண்டிகளையும் அவசரமாக (இரண்டும் பாரிய சேதம்) அருகில் இருந்த வீடு ஒன்றில் தூக்கி போட்டுவிட்டு, அந்தநேரம் தெய்வாதீனமாக அங்கு வந்துகொண்டிருந்த ஆட்டோ ஒன்றை மறித்து மேற்படி நபரை, ஏற்றி, வைத்தியசாலையில் கொண்டுசென்று அனுமதித்து, அவரது பெற்றோருக்கும் அறிவித்தேன். பெற்றோர்கள் வந்ததும் அவர்களுடன் உரையாடி, முதலில் அவர்களை அமைதிப்படுத்தி, விடயங்களைப்புரியவைத்து கொண்டேன், என்னுடன் மோதியவர் ஒரு தொழிநுட்பக்கல்லூரி மாணவன் என்பது தெரிந்தது. அவர் நினைவு வந்து என்னை கண்டவுடனேயே, உங்களுடனா அண்ணா மோதினேன்? என்ற கேள்வியையே கேட்டார். நான் அவருக்கு அது இருக்கட்டும், முதலில் அந்த நினைவுகளை கொஞ்சம் மறந்துவிடுங்கள், ஒன்றும் ஆகிவிடவில்லை என்று தேற்றினேன். (அவருக்கு காலில் பெரிய காயம், கை ஒன்று முறிவு)
இல்லை அண்ணா…நான் தான் கொஞ்சம் வேகமாக வந்துவிட்டேன் சொறி அண்ணா என்றார். இல்லை என்மேலும் பிழை உள்ளது நான் நின்று வந்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு.
அவரது தந்தையை அழைத்துச்சென்று அவரது மோட்டார் வண்டியை, குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு சென்று, சேதங்களை பார்த்து, அவை முழுவதற்குமான தொகையை கொடுத்துவிட்டு, பின்னர் மருத்துவமனைவந்து, அவரை பார்த்து மருத்துச்செலவுக்கும் ஒரு தொகையினை கொடுத்து (அவர்கள் மறுத்தபோதும்) சிறிது நின்மதியுடன், இரவு வீடு வந்து சேர்ந்தேன்.
உண்மையாக எனது ரென்ஸன் இன்னும் ஒருவர் பாதிக்கப்பட்டதற்கு நான் காரணமாகிவிட்டேன் என்பதாகவே இருந்தது.
அங்கு பலர், குறிப்பாக மேற்படி நபரின் உறவினர்கள், நண்பர்கள், உங்களைப்போல எல்லோரும் இருக்கமாட்டார்கள், இத்தனையையும் தனி ஆளாக விரைவாக செய்து விட்டீர்களே, உங்களுக்கு ஒரு குறையும்வராது, பார்க்கப்போனால் நீங்கள்தான் இந்த விபத்தில் மரணமடைந்துகூட இருக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கு, அனால் உங்களுக்கு சிறு காயம்கூட இல்லை, இப்படி ஒரு அபூர்வமானவராக இருக்கின்றீர்கள், அதனால்த்தான் என்று எல்லாம் சொன்னார்கள்.
அவற்றை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றால் அது பொய்! காதில் வாங்கியபடியால்த்தான் எழுதமுடிகின்றது.
இருந்தபோதிலும் நேற்று இரவு முழுவதும் எனக்கு இந்த விபத்தும் குற்றமனமும் உறுதிக்கொண்டே இருந்தது. அதேவேளை அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைக்கையில் நான் சமயோசிதமாக ஒரு கணத்தில் என்னை பாதுகாத்து கொண்டது என் தன்னம்பிக்கையா, அல்லது தெய்வாதீனமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அது என்னைப்பொறுத்தவரையில் தெய்வாதீனமான செயலாகவே உள்ளது.
இன்று மீண்டும், முதல் வேலையாக என் மனைவி சகிதம் மருத்துவமனை சென்று அந்த சகோதரனை மருத்துவமனையில் பார்த்து உரையாடினேன். அண்ணா..நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பாடாதீர்கள் என்றார். எனக்கு ஒன்றும் இல்லை. நாளை மருத்துவமனையில் இருந்து வீடு செல்லலாம் என்றார். அவரது தந்தையார் இன்று என்னை நிர்ப்பந்தப்படுத்தி, வாகனத்திற்கான பணத்தில் நான் கொடுத்ததில் பாதி தொகையினை திருப்பி தந்துவிட்டார். தம்பி, இவன் எனக்கு ஒரு பிள்ளைதான். ஆனால் இவனுக்கு ஒரு அண்ணன் இருந்தால் என்ன செய்வானோ அதை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்களும் எனக்கு பிள்ளைபோல்த்தான் என்றுவேறு கூறி என்னை முழுவதும் நெகிழ வைத்துவிட்டார்.
அடடா.. விபத்துக்கள் கூட பல அன்பான நெஞ்சங்களை உறவுகளாக தந்துவிட்டனவே!
இதையேன் கூறுகின்றேன் என்றால், மற்றவர்களைவிட ஒருபடி மேல் என் அன்புக்குரிய சக பதிவர்களே, நண்பர்களே, வாசகர்களே…
நீங்கள் அனைவரும் வாகனங்களை ஓட்டுபவர்கள்தான்…
விபத்து என்பது சொல்லி வருவது கிடையாது. ப்பிளீஸ்… அவதானம், நிதானம், ஒருங்கீர்ப்புக்களுடன் வண்டிகளை செலுத்துங்கள்.
இப்போது எனக்குத்தேவை ஒரு முழு றிலாக்ஸ்…ஆம் என் அபிமான நடிகரின் “மன் மதன் அம்பு” பார்க்கப்போகின்றேன்.
16 comments:
வாசிக்கவே தெரியது விபத்தின் தாக்கம்.
உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தெய்வாதீனம் பிடிச்சிருக்கு
கடைசி பந்தியிலுள்ளதை கடைப்பிடித்துவருகிறேன்
வணக்கம் அண்ணா. நீங்கள் கூறியது உண்மைதான். சில பல விபத்துக்களில் நானும் உள்வாங்கப்பட்டிருக்கின்றேன். அந்த தருணத்தில் ஏற்படக்கூடிய மனநிலை நன்கு உணர்ந்தும் இருக்கின்றேன். உங்கள் தருணத்துக்கேற்ப இயங்கிய பாங்கு வியக்க வைத்தது. எவ்வாறாயினும்,இருவருக்கும் மிகவும் மோசமாக எதுவும் நடக்காம் இருந்தது சந்தோசமே.
வாசிக்கும்போது விபத்தை நடந்த கணத்தை உணர முடிகிறது. மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் புரிகிறது.
விபத்து அனுபவம் எனக்கும் இருக்கிறது. உடல் ரீதியாக அன்றி மனதளவில் வெளிவர நாளாகும். விரைவில் வழமைக்குத் திரும்ப முயற்சிக்கவும்
நல்ல கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் . ஆனால் பட்ட காலிலேயே படும் என்பது போல , மன்மதன் அம்பு படம் பார்க்க முடிவு செய்திருக்கிறீர்கள் . விபத்து எதிர்பாராமல் வந்த துன்பம் . கமல்படம் நீங்களாக தேடி செல்லும் துன்பம்
புரிகிறது, உங்கள் மன உணர்வு!
அந்தப் பதட்டமான நேரத்தில, குழம்பாம உடனடியாக செயற்பட்டீங்களே, அதுதான் ரொம்ப பெரிய விஷயம்!
படம் நல்லா இருக்கான்னு சொல்லுங்க! :-)
நினைத்துப் பார்க்கவே ஒரு பயமாக உள்ளது.
பெரிய காயங்களின்றி தப்பியது பெருமகிழ்ச்சி, சமயோசித்ததால் தப்பிவிட்டீர்கள், அத்தோடு தலைக்கவசத்தின் அருமையும் புரிகிறது.
கெட்டதிலும் நல்லது என்பார்களே அது போலத்தான் விபத்தின் மூலம் கிடைக்கும் அன்பும்...
நீங்கள் விபத்திலிருந்து தப்பியது மகிழ்ச்சி, அந்த நண்பருக்கும் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் இதே போன்ற ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் எனது கையில் ஒரு எழும்பு முறிவு ஏற்பட்டது நினைவுக்கு வருகிறது.
எனது விபத்திற்கான முழு காரணம் எனது கவனயீனமே, பயணம் செல்கையில் கைபேசியில் அழைப்பு வந்தது, அதில் பேசிய பின்னர் ஞாபக மறதியில் சைட் ஸ்டேண்டை தூக்காமல் அப்படியே செல்கையில் அதன் காரணமாக விழுந்து விட்டேன். அதிலிருந்து முழுமையாக குணமாக கிட்ட தட்ட 6 மாதம் ஆனது, இப்போதெல்லாம் மிகவும் நிதானமாக செல்கிறேன், முன்னரை போல் அதிவேகமாக சைக்கிள் ஓட்டுவது கிடையாது.
இப்போது தான் யாழ் வந்து.. மோட்டார் சைக்கிளை தூக்கியிருக்கிறேன்.எனக்கு நல்லதோர் எச்சரிக்கை
நிலைமை தெரியாமல் நேற்றிரவு நான் உங்களுக்கு கோல் செய்த போது அக்ஸிடன்ட் பற்றி சொல்கையில் முதலில் நம்பவில்லை. ஆனாலும் சில நொடிகளில் புரிந்து கொண்டேன். விபத்து என்பது எதிர்பாராத விதமாக வரும்போது நாம் என்ன செய்வது. கூடியவரை கவனத்தை திசை திரும்ப விடாமல் செல்ல வேண்டும். அதிகமாக கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்கள்.
உங்களுடன் மோதிய நண்பரின் செய்கைகள் நெகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் தவறுதலாக நிகழ்ந்த விபத்துக்காக இந்நேரம் உங்கள் வீடு புகுந்து அடித்திருப்பார்கள்.
புது சினேகிதத்தை வலைப்பக்கமும் இழுத்து வாருங்களேன்... லொல்...
இந்த விபத்து, காசுக்கணக்கில் செலவு வைத்து பாசக்கணக்கில் வரவுவைத்துள்ளது!
நேயத்தையும்
நேசத்தையும்
ஏற்படுத்தி இருப்பதால்,
விபத்தே உன்னை ஆராதிக்கிறேன்!
எனக்கு சீக்கிரம் நடக்குமென்று நினைக்கிறேன்..அவதானமில்லை வீதிகளில்...ஹிஹி இனி பார்த்து நடப்போம்!
ம்ம்ம்.. உங்களை சந்தித்த போது ஒரு தன்னம்பிக்கையான மனிதராக உணர்ந்தேன்,
இப்பதிவில் விபத்தைக் கண்முன்னால் காண முடிந்தது..:-o
டென்சன் ஆகாத மனிதர்களை அவ்வளவு சிக்கிரம் மனந்தளரச் செய்ய முடியாது..:)
உங்கள் மனஉறுதி, தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட்..:D
பெரு விபத்தானபோதும் உங்கள் நல்ல மனத்தால் தப்பிவிட்டீர்கள். அவர்கள் உறவு போலாகிவிட்டீர்கள். விபத்திலிருந்தும் நன்மை.
மேயர் வாழ்க...!!!
தன்னம்பிக்கைக்கும் சமயோசித ஐடியாக்களுக்கம் தலைவணங்குகிறேன்...
Post a Comment