உபயோகமான தொலைக்காட்சி நிகழ்வுகள் குறைந்துகொண்டுவரும் நிலையில் நாளாந்தம் தொலைக்காட்சி பார்க்கும் பட்டியலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஷீ தமிழின் டொப் 10 செய்திகள் இடம்பிடித்தன. ஆரம்பத்தில் இருந்து கடந்த சில நாட்கள்வரை, தமிழகச்செய்திகள், இந்தியச்செய்திகள், உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள் என்ற பிரிவில் சில உடனயடியான தகவல்களை தொகுத்து செய்தியாக வழங்கிவந்தனர்.
அலட்டலில்லாத உடனடிச்செய்திகள் பார்க்க விரும்பும் விதமாகவே இருந்தது.
இப்போது இந்த செய்திகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. முழுவதுமே பொழுதுபோக்கு செய்திகளாக மாறிவிட்டனவோ என்ற நிலையில், டொப் 10 தமிழகம், டொப் 10 இந்தியா, டொப் 10 வெளிநாடு அத்தனையுமே சினிமாவை மையப்படுத்திய செய்திகளே தொடர்ந்து வருவது எரிச்சலை உண்டாக்கின்றது.
முன்னர் ஒருகாலத்தில் (1999-2000) சக்தி எவ்.எம் வானொலியில் “கடந்தவார உலகம்” என்ற தலைப்பில் அந்த வாரத்தில் உலகில் இடம்பெற்ற முக்கியமான நிகழவுகள் குறித்த ஆழமான பார்வையாக ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுவந்தது. அந்த நிகழ்ச்சி கேட்டதனாலேயே அப்போது ஒரு பரீட்சையில் நான் இலகுவாக சித்தியடையத்தக்கவாறு சமகால கண்ணோட்டம் அற்புதமாக அமைந்த நிகழ்ச்சி.
அப்போது அந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.வி.லோஷனும், மற்றவர் மாறன் என நினைக்கின்றேன் இருவருமே சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
காலப்போக்கில் பொழுதுபோக்கே முக்கியத்துவம் பெற்றதனால் அவ்வாறான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படாமலே விடப்பட்டு, பின்னர் நிர்வாகமே அடியோடு மாற்றப்பட்ட கதைகள் வேறு.
தற்போதுகூட அப்படியான ஒரு நிகழ்வு எந்தவானொலியிலாவது இடம்பெறாதா என்ற ஏக்கம் என்னைப்போன்றவர்களிடம் உண்டு.
பதிவெழுதுவதுடன் நாம் நின்றுவிடாது எம் மத்தியில் உள்ள ஒருதுறையில் அபாரமான எழுத்தாற்றல் உள்ள பதிவர் ஒருவரை, நாம் மட்டும் அன்றி பலரும் அறியும் வகையிலும் அவரது திறமையினை ஏனையவர்களுக்கும் பகிரும் வகையிலும் பதிவர்கள் செயற்படுவது ஆரோக்கியமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.
எம்மத்தியில் எம்முடனே இருந்து கிரிக்கட் உட்பட விளையாட்டு செய்திகளை அபாரமான புதிய நுணுக்கங்களுடன், தனக்கே ஆன பாணி ஒன்றில், மிகத்தரமானதாக எழுதிவருகின்றார் பதிவர் கன்-கொன் என்ற பதிவர் கோபி.
சர்வதேச கிரிக்கட் விமர்சகர்களின் தரத்திற்கு அவர் தமிழிலே திறம்பட ஆராய்வு செய்கின்றார் என்பது ஒரு மிகைப்பட்ட வசனம் கிடையாது.
இவர் போன்ற திறமையானவர்களை சில ஊடகங்கள் பயன்படுத்திக்கொண்டால், அது அவருக்கு அல்ல, ஆர்வமுடைய வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் பெருவிருந்தாக இருக்கும் அல்லவா?
ஊடகங்களில் பணியாற்றும் பதிவுலக நண்பர்களே… இதைக்கொஞ்சம் கவனியுங்கள்.
யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் வழிமுறையே “கல்வி” என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பட்டுவருகின்றது. முதலில் இது அனைவராலும் பாராட்டப்படவேண்டிய முக்கியமான விடயங்களாகும். சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான கருத்துரைகள், ஒருவகுப்பறைபோன்ற ஒளிபரப்புக்கள், பரீட்சை வழிகாட்டுதல் போன்றன இந்த ஒளிபரப்பில் இடம்பெறுகின்றது. பெரும்பாலான பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பிள்ளைகளை இதை பார்க்கும் வண்ணம் பணிப்பதை நான் கண்ணூடே பார்த்திருக்கின்றேன்.
இதேவேளை மாணவர்களிடையேயான பிரச்சினைகள், மாணவர்களின் கலந்துரையாடல்கள், மாணவர்களை உளவியல்ரீதியாக தயார்ப்படுத்தல், மாணவர்களுக்கான போட்டிகள், கல்வியுடனான பொதுஅறிவு என்பவற்றையும் இனிவரும் காலங்களில் செய்தார்களே ஆனால் இது மேலும் பெலம்பெறும் என்பது உண்மை. தொலைக்காட்சி என்பது மாணவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றது என்று கருத்து நிலவும் வேளையில் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயம் பாராட்டத்தக்கதே.
அடுத்ததும் பதிவர்கள் - ஊடகங்கள் சம்பந்தப்பட்டதே. தென்னிந்தியாவில் சில எப்.எம்கள் உட்பட ஜெயா ரீ.வி. பல பதிவர்களை அறிமுகம் செய்து அவர்களின் பதிவுகள், பதிவுலகம், அவற்றின் பயன்கள் பற்றி சாதாரண மக்களுக்கு அறிமுகம் செய்து. பதிவுகளுக்கான கௌரவத்தை கொடுத்துக்கொண்டுவருகின்றனர்.
ஜேயா.ரி.வியின் காலைவசந்தம் நிகழ்ச்சியில் பல பதிவர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊடகம் ஒன்றின் இந்தப்பணியை வெகுவாகப்பாராட்டிவருகின்றனர்.
இதேபோல இலங்கையிலும் யாழ்தேவி – தினக்குரல் இணைந்து பதிவர்கள் பற்றியும் பதிவுகள் பற்றியும் பொதுமக்களுக்கான ஒரு அறிமுகவாளராக செயற்பட்டமை பாராட்டப்படவேண்டியதே. ஆனால் மற்றைய ஊடகங்கள் பதிவுகள், பதிவர்கள் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மாறாக அந்த ஊடகங்களால் சிலவேளைகளில் பதிவர்களின் பல ஆக்கங்கள் வெளிப்படையாகவே களவாடப்பட்டுவரும் சந்தாப்பங்களும் உண்டு.
இதில் பெரியவேதனை என்னவென்றால் இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் சக்தி மிக்க வானொலி ஒன்றும் பதிவர்களை அறிமுகம் செய்து, பதிவுகளை ஒலிபரப்பினார்கள்தான். ஆனால் அதில் எவருமே இலங்கைப்பதிவர்கள் இல்லை என்பதும், அந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து மேற்படி பதிவர்களுடன் தொடர்பு கொண்டவர்கூட ஒரு இலங்கைப்பதிவர்தான் என்பதையும், இந்த அறிந்ததும் அனுபவங்களை எல்லாம் எங்கே போய் சொல்வது?
டான் தொலைக்காட்சி என்று ஒரு தொலைக்காட்சி இங்கே கேபிள் லைனாலும் வருகின்றது. ரூபவாஹினி, ஐ.ரி.என் என்பவற்றைவிட சூப்பராக நல்லா ஊதுது.
82 சனல்கள் இருப்பதனால் யார் கவனிக்கப்போகின்றார்கள் என்று நினைத்தாலும், போர் அடிக்கும்போது அப்பப்போ சனலை மாற்றிக்கொண்டு போகும்போது அந்த ரி.வியில் சில பிள்ளைகள் வந்து வாசிப்பு பழகுவதை அவதானிக்கமுடிகின்றது.
இரவானால் தேடிக்கண்டுபிடித்து பலர் அழைத்துவரப்பட்டு மன்னர்துதி பாடவைக்கப்படுகின்றார்கள்.
இதைவிட பெரிய சிரிப்பு என்னவென்றால் “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” பாடலைப்போட்டுவிட்டு, சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தீர்கள் என்று சொல்லுறாங்கப்பா…
அன்று ஒருநாள் ஞாயிறு வீட்டில் இருக்கும் நாளாச்சே என்று கலைஞர் ரி.வி.யில் “ரசிகனே” நிகழ்ச்சி பார்த்தேன். அங்கே பல நெஞ்சங்களையும் வென்ற பி.எச்.ஏ.ஹமீத் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.
நான் கூட அவரது குரலுக்கு இரசிகனே. என்றாலும்கூட அன்று மலேசியா வாசுதேவன் பாடியபாடல்கள் பற்றிய நிகழ்ச்சி என்பதால் மலேசியா வாசுதேவனும் வந்திருந்தார். அங்கே மலேசியா வாசுதேவன் அவர்களே 1959 ஆம் ஆண்டு நீங்கள் அதை செய்தீர்கள், பின்னர் சென்னைவந்து 1963 இல் இப்படி இருந்தீர்கள், இந்தப்பாடலைபாடினீர்கள், இந்த இசையமைப்பாளருக்கு இந்தப்பாடல் பாடினீர்கள் என்று மலேசியா வாசுதேவனை பேசவிடாமல் தானே அனைத்தையும் சொல்லிக்கொண்டுபோனார் ஹமீத். பார்க்க எரிச்சலாகவும், அதேநேரம் அப்போது ஏன் அங்கே மலேசியா வாசுதேவன் வந்தார் என்பதுபோலவும் மனதில் கேள்வி எழுந்தது.
தீ..படப்பிடிப்பு இலங்கையில் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்தை செவ்விகாணப்போய் வித்துவச்செருக்கை காட்டி ரஜினியிடம் வாங்கிய அனுபவங்கள் தற்போது ஹமீத்துக்கு மறந்துவிட்டதோ என்னமோ?
19 comments:
அண்ணா உண்மையில் இன்ற பல விடயங்களை நினைவுபடுத்தக் கூடியதாக இருந்தது பல காரசாரமான விடயங்களை தொட்டுச் சென்றீர்கள்...
உண்மையில் நீங்கள் பதிவுலகம் சம்பந்தமாகச் சொன்னவை கவனிக்கப்பட வேண்டியவையே.. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு பதிவர்களின் செயற்பாடு கவனத்திலெடுக்கப்பட்டள்ளது....
இலங்கையில் ஒன்றும் இல்லை என்றே நான் சொல்வேன் (இப்போது) அதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கலாமோ என எனக்கு எண்ணத் தோன்றுகிறது...
அருமையான அலசல் :)
பதிவுலகம் பார்க்கப்படும் அளவு கூடிக்கொண்டே செல்கிறது.
தொலைக்காட்சிகள் யாராவது ஒரு ngo வந்து காசுதந்து ஒரு நாளைககு இத்தினை தரம் இதைப்போடு, பாட்டுப் போட்டி வை, இந்த நிகழ்வை ஏதோ உலக நிகழ்வு போலக் காட்டு என்று கூறினால் நிகழ்ச்சிகளைச் செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.
பார்ப்போம்.
///சர்வதேச கிரிக்கட் விமர்சகர்களின் தரத்திற்கு அவர் தமிழிலே திறம்பட ஆராய்வு செய்கின்றார் என்பது ஒரு மிகைப்பட்ட வசனம் கிடையாது.//
உண்மை..:)
அருமையான அலசல்..:)
காத்திரமான பதிவு ஜனா. கோபியை பற்றி நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை.
ஊடகங்கள் பதிவர்களின் பதிவுகளை இப்போதும் பாவித்து கொண்டிருக்கிறது. என்ன தெரியாமல் திருடி பாவிக்கின்றனர்.
அருமையான அலசல்...
பதிவர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html
நன்றி!
கோபியிடம் நான் பலமுறை கூறிவிட்டேன் கிரிக்கட் ஆய்வாளராக தொழில்ரீதியாக ஈடுபடுவதற்கு அவர் மிகத் தகுதியானவர் என்று... பார்ப்போம், அவர் அந்தத் துறைக்குச் சென்றால் தமிழர்க்குப் பெருமை!
பதிவர்கள் கவனிக்கப்படுவது நல்லது, சிறப்பு ஆனால் பதிவர்கள் ஊடகங்களாக மாறும் போது அல்லது ஊடகங்களில் இணையும் போது அவர்களது தனித்தன்மைகள் பாதிக்கப்படலாம்.
இலங்கைத் தமிழர்கள் ஒரு அமைப்பாக உருப்பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் முன்பு குழுமத்தில் பதிவு செய்திருந்தேன், ஆனால் பதவிச் சண்டை வரும் வேறு பிரச்சினைகள் வரும் என்றும் பலதரப்பட்ட அபிப்ராயங்கள் வந்தது - அவையும் உண்மைதான்!
தமிழ்ப்பதிவுலகம் வளர்ந்து வருகிறது! இன்னும் பலமடையும் என்று எதிர்பார்ப்போம்!
காலமுணர்ந்தறிந்த பதிவு! வாழ்த்துக்கள்!
இலங்கைத் தமிழர்கள் என்று அந்த இடத்தில் (முன்னைய பின்னூட்டத்தில்) வந்திருக்கக்கூடாது மாறாக இலங்கைத் தமிழ்ப்பதிவர்கள் என்று வரவேண்டும்.
(முன்னையதும் சரியே - வேறு பார்வையில் ;-) )
//“காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” பாடலைப்போட்டுவிட்டு, சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தீர்கள்//
ஹெக்கெக்கே....
நல்லா தகவல்கள் அண்ணா!
இலங்கை தமிழ் பதிவர்களுக்கு என்று ஏதாவது தளம் உள்ளதா? அல்லது வலைத்திரட்டி ?இங்கு எத்தனை பதிவர்கள் உள்ளார்கள்? இதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது...
ஒரு dairy போல் blog ஐ பாவிக்கலாம்ன்னு blogspot .com இல் சொன்னதி அப்படியே ஆரம்பத்தில் கடைப்பிடித்தவன் நான். இதைப்பற்றி, கதைக்கவோ, கேட்கவோ ஒரு நண்பனும் அப்போது இல்லை! இப்போது அடிக்கடி வலைப்பூ வழியாக தொடர்பில் நீங்கதான் (இலங்கையில்) இருக்கிறார்கள்! நன்றி! :-)
கல்வி தொலைக்காட்சி பற்றி இப்போது தான் அறிகிறேன்.நல்ல முயற்சி..
// ஜீ... said...
நல்லா தகவல்கள் அண்ணா!
இலங்கை தமிழ் பதிவர்களுக்கு என்று ஏதாவது தளம் உள்ளதா? அல்லது வலைத்திரட்டி ?இங்கு எத்தனை பதிவர்கள் உள்ளார்கள்? //
இலங்கைப் பதிவர்களுக்காக திரட்டியோ, தளமோ இல்லை. ஆனால் கூகில் குழுமம் உள்ளது. விரும்பினால் இங்கே போய் இணைந்துகொள்ளுங்கள்
http://groups.google.com/group/srilankantamilbloggers?hl=en
Thanks bro!
அண்ணர், இருபது வருசத்துக்கு முதல் எடுத்த படத்தை profile picture ஆ போட்டு ஊரை ஏமாத்த வேண்டாம்.
வாழ்த்துக்களுக்கு தகுதியானவனோ தெரியாது என்றாலும், வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
பதிவர் சந்திப்பில் பதிவர்கள் பதிவுலககத்தைத் தாண்டி என்ன செய்யலாம் என்பது பற்றி நிச்சயமாகக் கலந்துரையாடுவோம்.
அந்தத் தலைப்பே இருக்கிறது.
மாற்றங்கள் வரவேண்டும், வரும் என்று நம்புவோம்.
நல்ல பதிவு...!
மொக்கப்பீஸ் நெறய்ய காதுல ரத்தம் வரவச்சிட்டிருக்கிற ஊடகத்துறைல தகுதியானவங்க இருக்கறதுதான் ஊடகத்துக்கு பெருமை...
கோபிக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.. உங்கள் ஆதங்கங்கள் எங்கள் பலர் ஆதங்கங்களே. விரைவில் கோபியை ஊடகங்களில் எதிர்பாக்கிறேன்.. கோபியை பயன் படுத்தும் ஊடக நண்பர்கள் ஏன் கோபியை நேரடியாக ஊடகத்துக்குள் இணைத்துக்கொள்ளகூடாது?
அருமையான பதிவு.. நிறைய,நல்ல விஷயங்கள் சொல்லியுள்ளீர்கள்.
Zee Tamil செய்திகள் நானும் பார்ப்பதுண்டு .. இந்த 'வர்த்தக' மாற்றங்கள் பார்த்தேன்.. ம்ம்
நிறையப் பேர் மறந்த நிகழ்ச்சியை, நான் ரசித்து செய்த ஒரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி ஜனா...
அதன் பெயர் 'கடந்த வாரக் கண்ணோட்டம்'
கங்கோன் - நான் அடிக்கடி பாராட்டும் சகல துறையாளன். சில விஷயங்களை இப்போது சொல்ல முடியாது :) ;)
ஆனால் கண்கோனுக்கு நான் முதல் சந்தித்ததிலிருந்து சொல்லும் ஒரு விஷயம் - சில விஷயங்களுக்கு முனனால் வரவேண்டுமடா. தயக்கம் உன்னைப் பல இடங்களில் தோல்வியடைய செய்யும்
பதிவர்கள் இப்போது பலமான ஒரு சக்தியாக மாறியிருக்கிறோம்.
ஆனால் எப்போதும் இப்போதைப் போல நிலை இராது. அடுத்தது இப்போது நடப்பதைப் போல எம் இடங்களை யாரும் தரார். நாமே ஈம்க்கான இடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்னொன்று ஒலி,ஒளி ஊடகங்களின் குறைகளைப் பலர் சொல்கையில் நிறைகளை சொல்வோர் மிகச் சிலரே.. இதையும் கவனிக்கலாமே.. இந்த விமர்சகர்கள் :)
*நீங்கள் பதிவேற்றிய உடனேயே வாசித்தாலும் மற்றவரின் கருத்தை அறியக் காத்திருந்தேன்.
வித்தியாசமான பல துறைகளைப் பதிவில் தொடுகிறீர்கள் ஜனா :)
LOSHAN
www.arvloshan.com
Post a Comment