Wednesday, January 6, 2010

சென்னையில் 33ஆவது மாபெரும் புத்தகக்கண்காட்சி –ஒருபார்வை


எங்கள் மனதில் நெடுநாட்களாகவே வாங்கவேண்டும், எப்படியாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று மனதில் உள்ள புத்தகங்களை இலகுவில் அடைவதற்கும், அந்த நெடுநாள் ஆவலை பூர்த்தி செய்ய ஏதுவானதாகவும் புத்தக கண்காட்சிகள் அமைந்துவிடுகின்றமை உண்மையே.
குறிப்பாக என்னைப்பொறுத்தவரையில் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்தே, முக்கியமாக வாசிக்கவேண்டும் என்று நான் பட்டியலிடும் புத்தகங்களை சொந்தமாகவே வாங்கி வாசித்து பாதுகாத்துவைக்கும் பழக்கம் எனக்கு உண்டு.
இவற்றில் பல புத்தகங்கள் நண்பர்களால் வாசிக்கவேண்டும் என்று கூறி வாங்கப்பட்டு பின்னர் அறவிடமுடியாத புத்தகங்களாக மாறிய கதைகள் வேறு உண்டு.

பொதுவாகவே மாபெரும் புத்தக கண்காட்சிகள் இடம்பெறுவது புத்தக பிரியர்களுக்கு, இன்னும் சொல்லப்போனால் வாசிப்பு வெறியர்களுக்கு பெரிய வேட்டையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பாக மாபெரும் புத்தக கண்காட்சி ஒன்று இடம்பெறும்போது, பல பதிப்பகங்களும் தங்கள் பதிப்புக்களை, கொண்டுவந்து விற்பனைக்கு வைப்பதன்காரணத்தினால் நாங்கள் தேடிவந்த புத்தகங்களை இலகுவில் சென்றடையக்கூடியதாக இருக்கும்.


இந்த வகையிலேயே கடந்த மார்கழி மாதம் 30 திகதி முதல் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிவரை சென்னை பச்சையப்பன் கல்லூரி (150ஆம் ஆண்டு நிறைவு வாயில்) எதிர்ப்பக்கம் அமைந்துள்ள சென். ஜோர்ஜ் அஞ்சலோ மேல் நிலை பாடசாலையில் இடம்பெற்றுவருகின்றது.
வெளியில் தெரியும் அலங்கார வளைவுகளே உள்ளே புத்தகக்கண்காட்சியின் பிரமாண்டத்தை பறைசாற்றுவதாக இருந்தது.
கொழும்பில் இருந்து சென்னை வந்த மறுதினமே இந்த புத்தக கண்காட்சிக்கு செல்வது, மனதில் நெடுநாட்களாக பட்டியலிட்ட புத்தங்களை அள்ளுவது என்ற எண்ணத்துடன் இருந்தேன்.
எங்கள் சக தவறணைப்பதிவர் டிலான் அவர்களும் ஒரு பரீட்சை நிமித்தம் சென்னை வந்துள்ளதால் அவரையும் சந்தித்து அவருடன் இணைந்தே புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.

தாராளமாக வாகன தரிப்பட வசதிகள் இருந்தன. அதற்கான ஒழுங்கும் சிறப்பாகவே இருந்தது. வழமையாக விழாக்கள், கண்காட்சிகளில் சொதப்பிவிடுபவை அவைதான்.
உள்ளே செல்லும் போது வாசலின் மிக அருகே செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் பலர், இரத்த தானம் செய்ய அழைப்பு விடுக்கின்றனர். நல்ல விடயம்தான்.
நுளைவுக்கட்டணமாக பற்றுச்சீட்டு ஐந்துரூபா அறவிடப்படுகின்றது. (பறவாய் இல்லை) அதன் பின்புறம் அதிஸ்டலாப குலுக்கல் ஒன்றுக்காக எமது பெயர் விடயங்களை எழுதி, அருகில் இருக்கும் பெட்டியில் போடச் சொல்கின்றார்கள். இத்தனை பெரிய புத்தக கண்காட்சியில், இத்துனை இலட்சம்பேர்கள் கூடும் இடத்தில், கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் புத்தக வியாபாரம் நடக்கும் இடத்தில், குலுக்கல் பரிசு வெறும் 1000, 500, 250 தான் என்று போட்டிருகின்றார்கள். (கஞ்சத்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா?)

உள்ளே, பிரதான வாசல் வழியே நுளைந்தால் பாரிய ஒரு அறிவிப்பு பலகையில் பதிப்பகங்களின் அமைவிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேல்ல மெல்ல ஒவ்வொரு பதிப்பங்களாக சென்று கொண்டிருந்தோம். முதற்காரியமாக நான் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகங்களை வாங்கி அடுக்கிக்கொண்டிருந்தேன். நண்பர் டிலான், வணிகவியல், முகாமைத்துவம் சம்பந்தமாக தேடிக்கொண்டிருந்தார்.
அடுத்து எனது கண்களில், கொழும்பில் இருந்து புறப்படும்போது நண்பர் ஒருவர் வாங்கிவரும்படி தெரிவித்திருந்த முன்னாள் சி.பி.ஐ. தலைமை அதிகாரி ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அப்படியே அமுக்கிக்கொண்டேன். ஏற்கனவே கார்த்திகேயனின் சோடிப்புக்கதைகளையும், எழுத்தாளர்களை மிஞ்சிய சில கற்பனைகளையும் அவர் எழுதிய இதே கருத்துள்ள புத்தகத்தில் படித்துள்ளோம் அல்லவா??

உயிர்மெய் பதிப்பகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் நான் தேடிவந்த பெரும்பாலான புத்தகங்களை வாங்கிக்கொண்டேன் மொத்தமாக சுஜாதாவின் 30 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே என் மதிப்புக்குரிய எழுத்தாளர் சாரு.நிவேதிதா அவர்கள் அமைதியாக நின்றிருந்தார். பின்னர் உண்மையில் எனது மனதிற்கு பிடித்த விகடன் பிரசுரம் பகுதிக்கு சென்றேன்.
வேறெங்கும் இல்லாத உபசரிப்பு. கவனிப்பு, உதவிகள், “ஈகோ வரமா சாபமா”, “சிகரம் தொட்ட சச்சின்” உட்பட சில புத்தகங்களை பொறுக்கிக்கொண்டேன்.
இந்த நேரத்தில் எங்கள் தமிழ் இலக்கியக் கூட்டத்தில் சந்திப்பு நிமித்தம் நண்பராகியவர் எனவே நண்பர் என்று சொல்லலாம். நண்பர் கோபிநாத் (விஜய் ரி.வி.) அவர்கள் எழுதிய “ப்பிளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க” என்ற புத்தகம் கண்ணில் விழுந்தது சரி…அவர் சொல்வதை ஏன் மீறுவான், வாங்கவேண்டாம் என்று தான் நினைத்தேன், என்றாலும் அவர் எதிர்பாhத்ததுபோலவே நான் வாங்கிக்கொண்டேன்.

பின்னர் ஒரு பதிப்பகத்தையும் மிச்சம் விடாமல் சற்றிப்பார்த்து சில புத்தகங்களை தேர்தெடுத்து வாங்கிக்கொண்டிந்தேன். அதற்கள் டிலானும் பல புத்தகங்களை வாங்கியிருந்தார். முன்னரே உத்தேசித்து முதுகில் கொழுவக்கூடிய பெரிய ஒரு பையினை கொண்டுவந்திருந்ததனால் எல்லா புத்தகங்களையும் அதற்குள் போட்டு சுமந்துகொண்டு வெளியேறினோம்.
ஒரே ஒரு விடயம் மட்டும் மனதில் உதைத்தது. நான் கொழம்பில் இருந்து சிறி லங்கன் ஏர்லைன்ஸில்த்தான் வந்திருந்தேன். அதில் 20 கிலோ கிராம் தான், கொண்டு செல்லமுடியும், இந்த புத்தகங்களே அதை தொட்டுவிட்டன போல் இருந்தன.

இனிமேல்த்தான் செல்லப்போபவர்களுக்கு சில டிப்ஸ்:
முதல் முறை சென்று அனைத்து புத்தக பதிப்பர்களிடமும், இலவசமாக வழங்கப்படும் பக்லெட்டினை வாங்கிக்கொள்ளுங்கள், பதிப்பகங்களின் அமைவிடங்களை முதலில் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து எதுவும் வாங்காமல் வீட்டுக்கு போய்விடுங்கள்.
அசுவாசமாக வீட்டில் இருந்து அந்த புக்லெட்டுக்களை எடுத்து அதில் உள்ள புத்தகங்கள் விலைகள் என்பவற்றை பார்த்து உங்களுக்கு தேவையானவற்றை ரிக் செய்து கொள்ளுங்கள்.
பன்னர் ழுமுவதையும் பார்த்து பைனலைஸ் பண்ணிக்கொள்ளுங்கள்.
பட்ஜட் இவ்வளவுதான் இதற்குமேல் வாங்குவதில்லை என்ற முடிவுடன் சென்று அமைதியாக ஆறுதலாக உங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிவாருங்கள்.

புத்தக கண்காட்சியில் குறைபாடுகள்.
பிற்பகல் 2.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரைதான் என்பது
வெறும் 10 வீதமே தள்ளுபடி.
பல புத்தக பதிப்பக கடைகளில் உள்ளவர்களின் ஏனோ தானோ மனோநிலை.
சில இடங்களில் புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள விதம்
ஒரே பெரிய கூடாரமாக இருப்பது..

இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், மாபெரும் அளவில் ஒரு புத்தக கண்காட்சி நடைபெறுவது வருடத்தில் ஒரு முறையாவது தேவையானதுதான். புத்தகங்களுக்கு வருமானத்தில் கணிசமான ஒரு பகுதியினை ஒதுக்கிக்கொள்வதிலும் எந்த தவறும் இல்லை. உங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் எழுதிய உங்களுக்கு தெரியாத புத்தகங்களைக்கூட நீங்கள் கண்டுகொள்ளலாம்.
எனவே முடியுமானவர்கள் ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்...
இன்னும் நான்கு நாட்களே உள்ளன!!

Saturday, January 2, 2010

மீண்டும் தொடங்கும் மிடுக்கு..


ஒவ்வொரு வருடங்களும் எம் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்கள் என்பது மறுக்கமுடியாத ஒன்றுதான். அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளையும், சுகங்களையும், சுமைகளையும், வருத்தங்களையும், திருப்திகளையும், இனிய நினைவுகளையும், மீண்டும் இதுபோல நடக்கக்கூடாது என்பதுபோன்ற சம்பவங்களையும், ஏன் பயங்கரமான நிகழ்வுகளையும் கூட தந்துவிட்டு போய் இருக்கும்.
ஆனால் கண்டிப்பாக ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அதி அற்புதமான அனுபவங்களையும், உலக மாற்றங்களையும், சிந்தனை மாற்றங்களையும் உலகில் வாழும் அத்தனை மனிதனுக்கும் சுட்டிக்காட்டிவிட்டுத்தான் போகின்றது.

நம்மில் அனேகமானோர் ஒவ்வொரு வருட ஆரம்பங்களிலும் இந்த வருடம் நான் இவற்றை செய்துமுடிக்கவேண்டும், அதற்கான திட்டங்கள் என்ன? செல்லும் நடைமுறைகள் என்ன? என்பவற்றை ஆராய்ந்து குறிப்பெடுத்து, அதற்கேற்றாற்போல செயற்படுவதை காண்கின்றோம். ஆனால் ஓரிரு ஆண்டுகளே எமக்கு நாம் நினைத்தபடி பூரணமான திருப்திகளையும், மன நிறைவினையும் தந்துவிட்டு போய் உள்ளன. பெரும்பலான ஆண்டுகளில் எம் திட்டங்கள் கால், அரை, முக்கால், என முன்னேற்றம் பெற்றோ அல்லது மிக மோசமாக திட்டங்கள் கைவிடப்பட்டோ இருந்திருக்கும். அவை கூட நமக்கு சில படிப்பினைகளை தந்துவிட்டு போகின்றன.
அதாவது முக்கியமாக ஏதாவது வியாபார விஸ்தரிப்பு திட்டங்கள் எங்களிடமிருந்தால், நேர்த்தியான எமது திட்டங்கள், எமது திறமைகள் மட்டும் போதுமானது என்ற எண்ணம் இலங்கையினைப்பொறுத்தவரை மிகத்தவறு.

ஓவ்வொரு ஆண்டும் முன்பு இருந்ததுபோல இல்லை மாறிக்கொண்டே இருக்கும். அதாவது மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லைத்தவிர மற்றய அத்தனையும் மாறிக்கொண்டிருக்கும். மூன்று தினங்களின் முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பல ஆண்டுகளின் முன்னர் அறிமுகமாகியிருந்த யாழ்ப்பாணத்தின் பிரபலமான வர்த்தகர் ஒருவரை சந்தித்திருந்தேன். 2002-2004 காலப்பகுதியில் அவர் புதிய ஒரு வர்த்தகத்தையும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆரம்பித்திருந்தார். அவர் மிகத்திறமையானவர் என்பதுடன், பண பலம் உடையவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் - கொழும்பு என இரண்டு இடங்களிலும் அவரது வர்த்தகம் அடிபட்டு மிக மோசமான நட்டத்தை எதிர்நோக்கியிருந்தார் என்பது நான் அறிந்தது.

ஆனால் அதே வர்த்தகத்தை கடந்த வருடம் 2009 ஆவணியில் இருந்து மீண்டும் தொடங்கி மேற்குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் தான் அதிக இலாபம் பெற்வருவதாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஓன்றை சிந்தித்து பார்த்தீர்களா? அவரோ திறமையானவர், பண பலமும் இருக்கின்றது, மிகவும் தடிதுடிப்பாக இயங்கும் நிர்வாகி இருந்தபோதுலும், அப்போது முடியாத காரணிகள் இப்போது சாதகமாக ஆகிவிட்டதை!
எம் திட்டங்களையும், தீர்மானிக்கும் சக்திகள், எம் திறமைகள், எமது முயற்சிகள் என்பவற்றைத்தவிர, சூழல், அரசியல், நாட்டின் அபிவிருத்தி வளர்ச்சி, நாட்டு சூழ்நிலை என பல காரணங்கள் உண்டு.
புலர் கூறிக்கொள்வதைப்போல இலங்கையில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது ஒரு தவறான எடுகோள் என்றே நானும் கூறுவேன். வேண்டும் என்றால் இராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள், கீழ்ப்படிநிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள், அத்தோடு இனவாத சிந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் இல்லாதொழிக்கப்படவேண்டும்.

2004 ஆம் ஆண்டின் முடிவே எமக்கு மீள முடியாத ஒரு பெரும் சோகத்தை ஒரே போடாக போட்டுவிட்டு போனது சுனாமி என்ற பெயருடன். 2005 மீண்டும் யுத்தம் தொடங்கியது மொத்தத்தில் பொதுவான இலங்கையர்கள் என்ற பார்வையில் கடந்த ஐந்துவருடங்களும் எமக்கு அரோக்கியமானதாக இல்லை. அதிலும் 2009 ஒரு ஊழிக்கூத்தே ஆடிமுடிக்கப்பட்டு இலட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.

சக நிகழ்வுகளின் கோர்வை தானே சரித்திரம்! எனவே ஒவ்வொரு அண்டுகளும் மிக முக்கிமானவைகள்தான். ஓவ்வொரு வருடங்களும் எமது வாழ்வின், வர்த்தகத்தில், சுய முன்னேற்றத்தின், எமது உயர் கல்வி திட்டங்களில் என சுயத்துக்குள் நின்று பல திட்டங்களை போட்டு வைத்துக்கொண்டு, புதிய ஆண்டுகளை வரவேற்காமல், ஒரு முறையாவது இந்த ஒரே ஒரு ஆண்டாவது நான் 365 நாட்களும் மனித நேயத்துடன் நடந்துகொள்கின்றேன், 365 நாட்களும் மற்றவர்களின் சுயங்களுக்கும் மரியாதை கொடுக்க தயாராகின்றேன், வருடம் முழுவதும் என்னால் இயன்ற தேவையான உதவிகளை உரியவர்களுக்கு கொடுக்கின்றேன், ஒரு வருடம் முழுவதும் சுயத்தை விட்டுவிட்டு அன்புள்ளவனாக வாழ்கின்றேன் என்று திட்டங்கள் போட்டால் அந்த ஒரே ஆண்டே போதும், அந்த ஆண்டு முழுவதும் வசந்தங்கள் மட்டுமே வரும்…

Happy 2010

LinkWithin

Related Posts with Thumbnails