Friday, July 31, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -04


சரி இன்றைய நிலையில் ஈழத்தில் தமிழர்களின் நிலையினை எடுத்துப்பார்ப்போமானால், யூதர்களுக்கு கிடைக்காத பல சந்தர்ப்பங்களும், புவியியல் மையங்களும், இனரீதியான அருகாமை தொடர்புகளும் தமிழர்களுக்கு நிறையவே இருந்தன, அனால் இவை அனைத்துமே காலங்காலமாக வந்த தமிழ்த்தலைமைகளின் தவறான எண்ண ஓட்டங்களாலும், தூர நோக்கற்ற சிந்தனை இல்லாத தன்மைகளாலும், சுயநல, புகழ்ச்சி விருப்பங்களாலும் சரிவர கைக்கொள்ளமுடியாத நிலைக்கு போய்விட்டன. அதுவே மறுக்கப்படமுடியாத உண்மையும் கூட. பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெறும்போது ஜின்னாவுக்கு இருந்த தெளிவும், தூரநோக்கும், தமிழ்த்தலைமைகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

இந்த தொடரை எழுத தொடங்கியதில் இருந்து பல தமிழ் இளைஞர்கள் வெள்ளையரின் ஆட்சியில் இருந்து ஆயுதப்போராட்ட காலங்கள் தொடங்குவதற்குள் ஏன் தமிழ்த்தலைவர்கள் பின்னர் நிகழப்போபவற்றை எதிர்வுகூறவில்லை? தமிழ்த்தலைவர்கள் யார் யார் அப்போது இருந்தனர்? இந்தத்தொடரில் அந்த தலைவர்கள் பற்றியும் அன்றைய சூழ்நிலைகள் பற்றியும் தரும்படி தமது மின்னஞ்சல்களில் குறிப்பிட்டிருந்தனர். குறிப்பாக சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் ஏன் இலங்கை சுதந்திரம் அடையும்போதே தனது செல்வாக்கினையும், வெள்ளையர்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதையினையும் பயன்படுத்தி தமிழர்கள் பிரிந்து தனிநாடு அமைக்கும் வண்ணம் செய்யவில்லை எனக்கேட்டிருந்தனர். இவற்றின்மூலம்! சரி இந்த பாகம் இவர்களுக்கு மட்டும் இன்றி இது பற்றி அறியாத பலருக்கும் உபயோகமாக இருக்கும் என எண்ணி இந்த தொடர் நீடித்தாலும் பரவாய் இல்லை என்ற நிலையில் இந்த தொடரின் பாகம் - 04 இனை இந்த ஆர்வமான இளைஞர்களுக்கு சமர்ப்பிக்றேன். (வாசகர் சித்தம்! என் பாக்கியம்!!)


ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரை இலங்கை சுதந்திரம்பெறும்போது இங்கிலாந்துமற்றும் சிங்களவர்களாலேயே போற்றப்பட்ட சேர்.பொன்.இராமநாதன் தனது செல்வாக்கினையும், சிங்களவர்கள் அவர் மேல் அப்போது வைத்திருந்த நன்மதிப்பையும் பயன்படுத்தி இலகுவாகவே தமிழ் மக்களுக்கு தனியான ஒரு தேசத்தை பெற்றிருக்கலாமே என்று இன்னும் என் காதுபட என் வயதையுடைய சிலர் பேசிக்கேட்டிருக்கின்றேன். 26 ஆம் திகதி, நவம்பர் மாதம், 1930 ஆம் ஆண்டிலேயே சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் காலமாகிவிட்டார். இலங்கை சுதந்திரம் அடைந்தது 1948 என்பது கூட இன்னும் அவர்களுக்கு தெரியாமல் இருந்தது மிக வேதனைப்படவேண்டிய விடயமே.

ஆனால் அவர்கள் சொல்லவந்த கருத்து முற்றிலும் உண்மையானதே, பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் 1879 இல் இலங்கை சட்ட நிரூபண சபையில் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு, 1910 ஆம் ஆண்டு மக்கலம் சீர்திருந்த யாப்பின்கீழ் கல்விகற்ற இலங்கையருக்கான ஆசனத்தின் பிரகாரம் 1911 ஆம் ஆண்டு முழு இலங்கையினரையும் பிரதிநிதிப்படுத்தும் ஒரே முதலாவது சுதேச இலங்கையனாக தெரிவுசெய்யப்பட்டு, இலங்கையின் வரலாற்றிலேயே இலங்கையில் வாழும் இரு இனங்களுக்கிடையில் 1915ஆம் அண்டு இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் கலவரத்தின்போது சிங்கள தலைவர்களை கண்டவுடன் சுடும்படி உத்தரவிடப்பட்டபோது கப்பலேறி லண்டன் விரைந்து அவர்களுக்காக வாதிட்டு, திரும்பும்போது சிங்களவர் தோழில் காவிச்செல்லப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டு, தான் சார்ந்த யாழ்ப்பாண மண் எழுச்சிபெறவேண்டும் என பல வழிகளிலும் முயற்சியும் செயற்பாட்டு ரீதியாகவும் செயற்பட்டு, பாடசாலைகள், அமைத்து, கீழைத்தேய மெய்யியல் தத்துவராக அமெரிக்காதேசம் சென்று சொற்பொழிவாற்றி, சிறந்த அறிவாளி, தூரசிந்தனை உடையவர் என்று தெரிவிக்கப்பட்ட அதே சாட்சாத் சேர்.பொன்.இராமநாதன் 1915 ஆம் அண்டு தன் கண்முன்னே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத எழுச்சியை நிதானமாக யோசித்திருந்தார் என்றால், அன்றைய சூழ்நிலையில் மிக மிக எழிதாக தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வு எது என்பதை கண்டுகொண்டிருக்கக்கூடாதா? அவர் மயங்கியது என்னமோ சிங்களவர்களின் புகழ்ச்சிக்கு.


அடுத்துவந்த முக்கிமான தமிழ்தலைவர் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) கேம்பிரிட்ஜ் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (முiபெ’ள ஊழரளெநட) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் கொங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக்கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச்சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது.
1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் பிரஜா உரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் கொங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவுபட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட இரசாயனத் தொழிற்சாலையும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலையும் இவற்றுள் முக்கியமானவை.
தமிழர்களின் எதிர்காலம் பற்றி மிகத்துல்லியமாக இவர் அறிந்திருந்தபோதிலும், பின்நாட்களில் தேர்தல்களின்போது இவருக்கு கிடைத்த தொடர் தோல்விகளும், இவரை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்.


1970 இல் பதவிக்கு வந்த சிறி லங்கா சுதந்திரக் கட்சி அரசு பல தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியல் இவர் நேரடியாக இறங்கவில்லை. தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர்
அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.
இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் 9, பெப்ரவரி மாதம் 1977 ஆம் ஆண்டு அவர் காலமானார்.
அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.
50 ற்கு 50 என்ற ஒரு ஆழுத்தமான கொள்கையினை வலியுறுத்தியபோதிலும், சமயோசிதமில்லாத இவரது நடவடிக்கைகள் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்தி உறுதியாக நிற்கமுடியாத நிலையொன்றினைத் தோற்றுவித்துவிட்டது.


அடுத்தவர், ஈழத்தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமானவர், ஈழத்தமிழர்களால் தந்தை என்ற ஸ்தானம் கொடுத்து அழைக்கப்பட்டவர், ஈழத்து காந்தி என பாராட்டப்பட்டவர், சாமுவெல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட தந்தை செல்வா அவர்கள்.
கொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் அழைப்பின்பேரில் கட்சியல் சேர்ந்து காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்.
1948 மார்கழியில் இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை அரசு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பொழுது திரு. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்தார். குடியுரிமையைப் பறிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். அவரும் திரு. வன்னியசிங்கமும் திரு. நாகநாதனும் பிறருமாக, 1948 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவினர். 1949 மார்கழி 19 ஆம் நாள், கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில்
"சிறியதான தமிழ் நாட்டினம் அழிந்து போகாமலும், பெரிதான சிங்கள நாட்டினத்தால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு கூட்டாட்சி அரசியலமைப்புத் தீர்வு எனத் தெரிவித்து பேசினார்.

1948 இலிருந்து 1976 வரையாக அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள். 1949 இலிருந்து 1976 வரை திரு. செல்வநாயகமும், அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள்.
1958 இன் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இன் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன, சிங்களவரும் தமிழரும் ஒரே ஆட்சியின் கீழ், கூட்டாட்சி அரசு அமைப்பதை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களே. எனினும், இந்த ஒப்பந்தங்களைச் சிங்கள அரசுகள் ஒரு தலைப்பட்சமாகக் கைவிட்டன.
1972 மே 22 ஆம் நாள் சிங்களவர் சேர்ந்து இயற்றிய புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பின் பிரதி ஒன்றை, 1972 மே 25 ஆம் நாள், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின் நாவலர் மண்டபத்தில் பலர் முன்னிலையில் திரு. செல்வநாயகம் தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்பை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு சகல தமிழ் அரசியல் கட்சிகட்கும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் வந்திருந்தன. அங்கு அவர்கள் தமிழர் கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
1972 அக்டோபர் 3 ஆம் நாள் தனது பாராளுமன்றப் பதவியைத் திரு .செல்வநாயகம் உதறித் தள்ளினார். விலகுமுன் அவர் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார்."....தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் இச்சபையில் எனது உறுப்புரிமையை நான் துறந்து, எனது கொள்கையை முன்வைத்து நான் மீண்டும் போட்டியிடும் பொழுது, அரசாங்கம் தனது கொள்கையை முன்வைத்து என்னோடு போட்டியிட வேண்டும் என்று கேட்கிறேன்' அத்தேர்தல் முடிவு தமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.
"....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.'
1972 இல் இடைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அரசு 1975 பெப்ரவரி 6 ஆம் நாள் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலில் திரு. செல்வநாயகம் மிக அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். பாராளுமன்றம் சென்றார். தமிழர்களின் விடுதலை முயற்சியை அங்கு அறிவித்தார். 1976 பெப்ரவரி 4 ஆம் நாள் "தமிழீழம் விடுதலைபெற்ற இறைமையுடைய நாடாகப்' பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்."....இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை விடுதலைபெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழீழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது'. இத்தீர்மானம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.


1976 மே 14 ஆம் நாள் தமிழர் கூட்டணி தனது பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றிக் கொண்டது. திரு. செல்வநாயகம், திரு. பொன்னம்பலம், திரு. தொண்டமான் ஆகிய மூவரையும் கூட்டுத் தலைவர்களாகத் தெரிவு செய்தது.
அந்நாளில் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் இறைமையும் தன்னாட்சியும் சுதந்திரமும் உடைய சுதந்திர நாடாகத் தன்னைத் தமிழீழம் அமைத்துக்கொள்ளும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். தனது வாழ்நாளில் இறுதிவரை செல்வநாயகம் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. எந்தத் தனிப்பட்ட சலுகையையும் பெறவில்லை. செல்வந்தராக அரசியலில் நுழைந்த அவர், சில காலங்கள் தனது செலவுக்குக் கூடச் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடையை எதிர்பார்த்து வாழவேண்டி வந்தது.
1949 இல் இரு வழிகளைப் பற்றிக் கூறிய அவர், 1972 வரை கூட்டாட்சி அரசியலமைப்பைச் சிங்களவர் ஏற்றுக்கொள்ளப் பலவாறு முயன்று தோல்வியடைந்தார். அந்த வழியில் சென்று உரிமை பெறாத மக்கள், மற்ற வழியில் செல்லும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து அதற்காகத் தமிழ் மக்களைப் படிப்படியாக 1972 இல் இருந்தே தயார் செய்து 1976 இல் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.
தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல அரசியல் போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் அறவழிப் போராட்டங்களாகவே அமைந்தன. அவரின் நேர்மையும் உறுதிகுன்றாக் கொள்கைத் தெளிவும் தமிழ்மக்களைக் கவர்ந்தன. அதனால், அவர்கள் அவரைத் தந்தை செல்வநாயகம் என அழைத்தனர். அவர் காட்டிய வழிகளைச் சரியான வழிகள் எனக் கைக்கொண்டனர்.
அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
"தமிழீழம் அமைப்பது வில்லங்கமான ஒரு காரியம்' என்று அவர் கூறினார். எனினும், அதைத் தவிர வேறுவழிகள் மூலம் தமிழ் மக்கள் அடிமைத் தளையை அகற்ற முடியாது என அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.
(உசாத்துணை -50 க்கு 50, தந்தை செல்வா தந்த கொள்கை, விக்கிபீடியா)
அடுத்த பதிவில் இஸ்ரேலின் உதயம்….
தொடரும்…

Monday, July 27, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -03)


ஓர் ஒஸ்ரிய இளவரசன், ஒரு செர்பிய இளைஞனால் ஆற்றங்கரை ஒன்றில்வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டான். அதையடுத்து ஒஸ்ரியா, ஜெர்மனியின் உதவியுடன் செர்பியா மீது போர்தொடுத்தது. செர்பியாவுக்கு உதவ ரஷ்யா வந்தது. 1914, ஜூலை 28 இல் அந்த யுத்தம் ஆரம்பமானது. ஜெர்மனியின்மீது பெரும் கோபத்துடன் இருந்த பிரான்ஸ் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஜெர்மனியை எதிர்த்தது. இந்த நிலையில் ஜெர்மனி பெல்ஜியம் வழியாக பிரான்ஸை நோக்கி தனது படைகளை நகர்த்தியது. பெல்ஜியம் அப்போது நடுநிலமை வகித்துவந்த நாடு, எனவே ஜெர்மனி செய்தது மகாதவறு எனத்தெரிவித்துக்கொண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனும் போரில் குதித்தது. ஜப்பானும் பிரிட்டனோடு சேர்ந்துகொண்டது. சீனாவும் தன் பங்கிற்கு பிரிட்டனை ஆதரித்தது. அனால் பல்கேரியா ஜெர்மனிக்கு அதரவாக செயற்பட்டது. இவ்வாறு தான் முதலாம் உலக மகா யுத்தம் தொடங்கியது. இந்த நிலையில் அப்போது பலஸ்தீனத்தை அண்டுகொண்டிருந்த துருக்கி ஜெர்மனியின் அணியிலேயே இருந்தது.

இந்தக்கட்டத்தில் யூதர்கள் என்ன செய்தார்கள்? தமது இனத்தின் இலட்சியம் ஒன்றுக்காக எந்த இனமும், செய்யாத காரியத்தைக்கூட செய்யத்தயாரானார்கள். யூதர்கள் பல நாடுகளில் வாழ்ந்துவந்தாலும் அவர்கள் தாம் யூதர்கள் என்ற அடையாளத்தினை ஒருபோதும் இழக்காதவர்கள். இந்த நிலையில் முதலாம் உலகப்போரின்போது, தாம் வசிக்கும் நாடுகள் என்ன நிலைகளை எடுத்திருக்கின்றனவோ அந்த நிலையை ஆதரித்தார்கள். அந்த நாடுகளின் படைகளோடு சேர்ந்து போரிட்டார்கள். ஓர் அணியில் இருந்த யூதப்படையினர், எதிரணியில் இருந்த யூதர்களுடன் மோதவேண்டிய இக்கட்டான ஒரு வரலாற்று நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். முதன்முதலாக ஒரு யூதனை இன்னும் ஒரு யூதன் கொல்லவேண்டிய நிலை வந்தது. ஆனால் அவர்கள் அதையும் செய்தார்கள்.
காரணம், யுத்தத்தில் ஏதோ ஒரு அணி ஜெயிக்கப்போகின்றது. அந்த அணி வெற்றிபெற்றமைக்கு காரணமாக இந்த யூதர்களைப்பற்றி அவர்கள் கண்டிப்பாக நினைத்துப்பார்ப்பார்கள். யூதர்களுக்கு அதற்கான வெகுமதியாக பலஸ்தீனத்தில் தனிநாடு ஒன்றை அமைத்துக்கொடுக்கவேண்டும் என நினைப்பார்கள், அப்படியாவது நாம் எம் இனத்திற்கான ஒரு நாட்டினை அடைந்துவிடலாமே என்பதற்காகத்தான்.
முதலாம் உலகப்போரில் உலகம் முழுவதும் யூதர்கள் என்ற ரீதியில் ஒன்றுபட்டு, வலையமைப்புக்களை அவர்கள் பலப்படுத்தியிருந்தபோதிலும் கூட, யூதர்களுடன் யூதர்கள் மோதலுக்கும் அவர்கள் தயாரானது அவர்களின் இலட்சியத்தின் நோக்கத்திற்காகவே.
முதலாம் உலகப்போரில் பண உதவிகள். ஆயுத வடிவமைப்பு, பெருந்தொiகையான படை அணிகள், மருத்துவம், விஷவாயுக்கள் தயாரிப்பு என சகலத்திலும் யூதர்களின் கையே ஓங்கியிருந்தது. முதலாம் உலகப்போரில் யூதர்கள் நிறைந்திருந்தார்கள்.
எனினும் அந்த யூதர்கள் அனைவரினதும் கனவு இஸ்ரேல் என்ற யூதர்களுக்கேயான தேசம் மட்டுமே.


போரின் முடிவில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையினை பார்த்தால் பலத்த அதிர்ச்சி ஏற்படும். ஒரு இலட்சம் ரஷ்ய யூதர்கள், நாற்பதாயிரம் ஒஸ்ரிய யூதர்கள், பன்னிரெண்டாயிரம் ஜெர்மனிய யூதர்கள், ஒன்பதாயிரம் பிரான்ஸ் யூதர்கள், ஒன்பதாயிரம் பிரித்தானிய யூதர்கள் என்ற தொகையில் மடிந்திருந்தனர்.
போர் முடிவுறப்போகும் சமயத்தில் பிரிட்டனின் கையோங்குவதை யூதர்கள் கணித்து. பிரிட்டனில் உள்ள யூதர்களை இந்தச்சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்தும்படி கோரிக்கை வைத்தனர்.
அதன்பிரகாரம், பிரிட்டனில் உள்ள யூதர்களின் பிரதிநிதிகள் உடனடியாக பிரித்தானிய அதிகாரிகளின் உறவுகளை மேலும் சுமுகமாக்கிக்கொண்டு யூத இனம் பிரித்தானியாவுக்காக என்னவெல்லாம் செய்தது, எதிர்வரும் காலங்களிலும் பிரிட்டனுக்காக என்னவெல்லாம் செய்யவுள்ளோம் என பெரிய பட்டியல்களையே பெரும் அறிக்கையாக சமர்ப்பித்தார்கள். இதற்கெல்லாம் பிரதிபலனாக தமது தாயக தேசத்தின் தனிநாட்டு கோரிக்கையினை மிக அழுத்தமாக தெரிவித்தனர். இதன் பலனாக பிரிட்டனுடன் யூதர்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் பல கட்டப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
யூதர்களின் கோரிக்கை பிரிட்டனுக்கும் நியாயமாகத்தான் பட்டது. காரணம் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், என்ற மூன்று வல்லாதிக்க தேசங்களை பின்னுக்குத்தள்ளிக்கொண்டு அமெரிக்கா வல்லரசாகிவிடுமோ என்ற பயம் அதற்கு இருந்தது. இந்த நிலையில் யூதர்களுக்குரிய நாடு ஒன்றை உருவாக்கிக்கொடுத்தால் பின்நாளில் தனக்கு மத்தியகிழக்கு நாடுகளில் ஒரு வலுவான அதரவு கிடைக்கும் என்று மனக்கணக்கு போட்டது.
இதற்கு பிரித்தானியாவாழ் யூதர்கள் தொடர்ந்தும் தூபம் போட்டுக்கொண்டே இருந்தார்கள். பிரிட்டனும் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியவண்ணமே இருந்து.
ஒரு பிரகடனம் வழியாக அதற்கும் பலன் கிடைத்தது. அந்தப்பிரகடனத்தின் பேரே பல்ஃபர் பிரகடனமாகும்.


1917 டிசெம்பர் 9ஆம் திகதி பிரிட்டன் அலன்பே என்ற தளபதியின் தலைமையில் தன் படைகளை ஜெருசலேமுக்கு அனுப்பியது. இன்னொருபுறம் சிரியாவை பிரான்ஸ் ஆக்கிரமித்தது. கண நேரத்தில் பலஸ்தீன் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டினுள்ளும், சிரியா பிரஞ்சுக் கொலனியாகவும் மாறின.
அப்போதைய இங்கிலாந்தின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்த பல்ஃபர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்றினை உருவாக்கவேண்டும், இதன்போது பலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் உரிமைகளுக்கோ, மத உரிமைகளுக்கோ பங்கம் வராது என அந்த அறிக்கை தெரிவித்தது.
பாஸ்போட், விசா என்று எந்தக்குறுக்கீடுகளும் இல்லாமல், யூதனா? உள்ளே வா! என்று ஏஜென்டுகள் எல்லா இடங்களிலிருந்து வந்து பலஸ்தீன எல்லையோரம் காத்திருக்கும் யூதர்களை ஏஜென்டுகள் கும்பல் கும்பலாக அழைத்துச்சென்றனர். யூதக்குடியிருப்புக்கள் மேலும் ஏற்படுத்தப்பட்டன. யூத வங்கிகள் மூலம் ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த நிலங்களிலும் குடியேற்றப்பட்டனர், அத்தோடு சில யூதர்கள் தாங்களாகவே நிலங்களை வாங்கி தம் மனைகளை அமைத்துக்கொண்டனர்.

1922 ஜூனில் பலஸ்தீன ஆட்சி அதிகாரம் தொடர்பான இறுதித்திட்ட வரைபு, தேசங்களின் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டது. பலஸ்தீனத்தினுள் ஒரு யூத தேசத்தை நிறுவுவது, மற்ற மக்களின் சிவில், மத உரிமைகளை பாதுகாப்பது, என்ற பிரிட்டனின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட அந்த இறுதித்திட்டவரைபு, யூதர்களுக்கு ஒரு சதவிகிதம் கூட பாதகமாக அமைந்துவிடக்கூடாது, அவர்களின் உரிமைகளை பெறுவதிலோ, வாழ்வதிலோ எந்தவித சிறு இடையூறும் வந்துவிடக்கூடாது எனத் தெளிவாக இருந்தது. மீண்டும் எமது தாயகத்தை, நமது பூமியாக்கிவிட்டோம், இஸ்ரேல் என்றதொரு யூத தேசம் மலரப்போகின்றது. இன்னும் தேவ தூதர்கள் வரவேண்டியது ஒன்றுதான் பாக்கி. வந்துவிட்டால் சொலமன் தேவாலயத்தையும் புதிதாக கட்டிவிடலாம். இப்படித்தான் உலக யூதர்கள் அனைவரும் கனவு கண்டுகொண்டிருந்தார்கள்.
எந்த நூற்றாண்டிலும், எல்லா நேரத்திலும், அதிஸ்டக்காற்று யூதர்களின் பக்கம் தொடர்ந்து வீசியதே இல்லை. ஐரோப்பிய யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி வருவதை தடுத்து நிறுத்த ஒரு சக்தி வந்தது. ஐரோப்பாவைத் தான் ஆளவேண்டும். அந்த ஆளுகைக்குக் கீழ் யூதர்கள் என்போர் வாழ்ந்தற்கான தடயங்களே இன்றி அழிந்துபோகவேணடும். இந்த இரண்டும் தான் அந்த சக்தியின் வாழ்நாள் இலட்சியமாகவே இருந்தது…ஆம் அந்த சக்திதான் ஹிட்லர்.


ஜெர்மனிக்கும் யூதர்களுக்கும் சுமார் 1600 ஆண்டுகால உறவுகள் இருந்தன. அதாவது பிற ஐரோப்பிய நாடுகளைப்போல யூதர்கள் ஜெர்மனியிலும் தஞ்சம்பெற்று வாழ்ந்துவந்தார்கள். சில விசயங்களை துல்லியமாக எடுத்துரைக்க வார்த்தைகள் கிடையாது என்பார்கள். அப்படிப்பட்ட விடயங்கள்தான் யூதர்கள் மீது ஹிட்லரின் நாஜிப்படைகள் கொண்டிருந்த வெறுப்பு.
1933, ஜனவரி 30, அதாவது இரண்டாம் உலகமகா யுத்தம் தொடங்குவதந்கு ஆறு ஆண்டுகள் முன்னர் ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியை கைப்பற்றினார்.
யூதர்களின் குழந்தைகளுடன் ஜெர்மனியக்குழந்தைகள் பள்ளியில் ஒன்றாக உட்காரக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தார். யூதர்களைத்தொடாதே, அவர்களின் உடலில் ஓடுவது கெட்ட இரத்தம்! இந்த ரீதியில்த்தான் ஜெர்மனியக்குழந்தைகளின் மனங்களில் யூத எதிர்ப்புக்கள் விதைக்கப்பட்டன.
சில நாட்களிலேயே யூதக்குழந்தைகள் பள்ளிகளில் சென்று படிக்கத்தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தத்தடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என தொடரத்தொங்கின. ஒவ்வொரு அலுவலகங்களில் இருந்தும் யூதர்கள் பணி நிக்கம் செய்யப்பட்டார்கள்.
1935 இல் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் ஹிட்லரால் “நியூரம்பெர்க் சட்டங்கள்” என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்த யூதர்களை அபாண்டமாக ஒடுக்குவதற்கு இயற்றப்பட்ட சட்டத்தில் ஹிட்லரே கையொப்பமிட்டார்.


யூதர்களை கைது செய்யுங்கள், சிறையில் அடையுங்கள், விசாரணைகளை நடத்துங்கள். அதிலும் திருப்தி இல்லையா, கொன்று விடுங்கள். இதற்கு யோசிக்கவேண்டாம், யூதர்களை கொல்வதே எமது கடமை, ஹிட்டரின் குட்டி மீசைக்கு கீழிருந்த உதடுகளில் இருந்து அனல்கொட்டும் வார்த்தைகள் உத்தரவுகளாக வந்துவிழுந்துகொண்டிருந்தன.
ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுக்கவேண்டும், ஹிட்லரின் யூத எதிர்ப்பிற்கான காரணம் என்ன? இதுகுறித்து பக்கம் பக்கமாக விபரித்து எழுத எந்த விளக்கங்களும் இல்லை. ஹிட்லரைப்பொறுத்தவரையில் ஆரியர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் ஆரியர்களிடம் அடிமைப்பட்டு சாகவே பிறந்தவர்கள். இங்கே அவர்களின் எண்ணப்படி ஆரியர்கள் என்பவர்கள் ஜெர்மனியர்கள், மற்றவர்கள் என்றால் யூதர்கள்.
தான் ஆட்சிக்கு வருவதற்கு பத்து பதினைந்து அண்டுகளுக்கு முன்னதாகவே, ஹிட்லர் தான் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தீவிரமாக திட்டமிட்டு வைத்திருந்தார். பதவியேற்றதும் ஒவ்வொன்றாக செயற்படுத்தத்தொடங்கினார்.
“ஹிட் லிஸ்ட்” தயார் செய்து யூதர்களை அழிப்பதற்கெனறே, ஹிட்லர் இரண்டு படைகளை உருவாக்கினார். “ஹெஸ்ரபோ” என்ற இரகசிய காவற்படை, எஸ்.எஸ்.என்ற கறுப்பு உடை தரித்த பாதுகாப்பு படை.


அன்று ஜெர்மனியில் வசித்துவந்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 இலட்சம். ஹிட்லர் பதவிக்கு வந்து ஐம்பத்தி ஏழாவது நாள், யூதர்களின் நிரந்தர எமகண்டம் தொடங்கியது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு யூதர்களையாவது கொலை செய்யவேண்டும் என திட்டமிட்டு தமது துப்பாக்கிகளை யூதர்களை நோக்கித்திருப்ப தொடங்கினர்.
யூதர்களை பிடித்து அடைப்பதற்காகவும், அவர்களை கொல்வதற்காகவும் பிரத்தியேகமாக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. அவை ஜெர்மனியர்களால் “கெண்ஸ்ரன்;டேஷன் காம்ஸ்” என அழைக்கப்பட்டன. ஹிட்லரின் நாடு பிடிக்கும் வேட்கையினைவிட அவரின் யூத அழிப்பு வேட்கை தீவிரமாக இருந்தது.
1938 மார்ச் மாதத்தில் ஒஸ்ரியா ஜெர்மன் வசமானது. நாஜிப்படைகள் ஜெர்மனியில் செய்த யூதப்படுகொலைகளை ஒஸ்ரியாவிலும் செய்யத்தொடங்கினர். ஓஸ்ரியாவும் யூதப்பிணங்களால் நிறைய ஆரம்பித்தது.
ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் தொகையினைக் கண்டு உலக யூத இனமே வெலவெலத்துப்போனது. உலக நாடுகள் அனைத்திற்கும் சில வினாடிகள் மூச்சு நின்றுபோனது. 1941ஆம் அண்டு ஜூன் 22அம் திகதி ஹிட்லரின் நாஜிப்படைகள் சோவியத் ஜூனியனை தாக்கக்கிளம்பின. யுத்தத்தில் மூன்று வாரங்களில் ஐம்பதாயிரம் யூதர்களை கொன்றுகுவித்தனர். யூதக்குழந்தைகளை மேலே எறிந்துவிட்டு விழுவதற்கு முன்னரே சுட்டுக்கொன்றனர். பெரிய பெரிய கட்டங்களில் இருந்து மக்களை தள்ளிவிட்டு வலியில் துடிப்பவர்களை சுடடுக்கொன்றனர். “உலகின் மிகக்கொடுரமான மூன்றுவாரப்படுகொலைகள்” என சரித்திர ஆசிரியர்கள் இதனைக்குறிப்பிடுகின்றனர்.


யூதர்களை கொல்லாத தினங்களில் அவர்களால் இயல்பாக இருக்கமுடியாத நிலைக்கு மனநோயாளிகளாக நாஜிப்படைகள் ஆகினர். அக்கம் பக்கத்து கிராமங்களில் பகுந்து அங்குள்ள யூதர்கள் அனைவரையும் பிடித்துவந்து, தம்மால் தயாரிக்கப்பட்ட பாதாள சிறைகளில அவர்களை அடைத்து குழாய் வாயிலாக அதனுள் விஷ வாயுக்களை செலுத்தி பிடித்துவந்தவர்களை பெரும் பிணக்குவியலாக வெளியில் எடுத்தனர். இந்தச்சம்பவம் 1941 டிசெம்பரில் போலந்தில் எல்லையோரக்கிராமத்தில் இடம்பெற்றது.
ஐரோப்பா முழுவதும் உள்ள யூதர்கள் அனைவரையும் இன்னும் இரண்டு வருடத்தில் ஒழிப்பதற்கு இதுவே சிறந்தவழி என ஹிட்லர் திட்டமிட்டார். மேற்படி விஷவாயு சிறைச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. யூதர்களின் இறப்புத்தொகை இலட்சக்கணக்காக உயர்ந்தது.
நாஜிப்படைகள் கைப்பற்றிய நாடுகளில் இருந்த யூதர்கள் எல்லாம் சிறைப்பிடிக்கப்பட்டு. பிரிவு பிரிவாக புகையிரத வண்டிகளில் கொலைக்கூடங்களுக்கு அனுப்பி கொலை செய்யப்பட்டனர்.
இப்படி யூதர்கள் இரக்கமின்றி உலகிலேயே பெரும் கொடுமையாக அழிக்கப்பட்டுவந்தநேரத்தில், பலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் ஹிட்லருக்கே தமது ஆதரவு என பகிரங்கமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா போரில் குதித்தது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கப்படைகள் ஜப்பான், இத்தாலி, ஜெர்மனியப்படைகளை துவம்வசம் செய்ய ஆரம்பித்தன. தேவையில்லாத வேலையாக அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தை தாக்கியது ஜப்பான். அவ்வளவுதான், ஜப்பானின் நாகஷாகி, ஹிரொஷிமா ஆகிய இரண்டு நகரங்கள் மீது அணுகுண்டினை வீசி தன் பலத்தினை உலகத்திற்கு முதனமுறையாக நிரூபித்தது அமெரிக்கா. எதற்கும் அஞ்சாத ஹிட்டலருக்குள்ளேயே உதறல் எடுக்க ஆரம்பித்த சம்பவம் அது.
இறுதியில் ஹிட்லரால் கொல்லப்பட்ட இருபது இலட்சம் யூதர்களின்மேல் எழுந்த இரக்கம் இஸ்ரேல் என்ற யூததேசம் உருவாவதற்கான எல்லா வாசல்களையும் திறந்துவைத்தது.

-தொடரும்.

Saturday, July 25, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -02)


தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.
ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது. வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும், இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை. ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தந்திரத்தில், ஏதோ ஒரு முறையில் அவர்களின் இலக்குகள் அடையப்பட்டே தீரும்;. உண்மையான நியாயமான தமது இலட்சியங்களை இன்று அடையாதவர்கள் நிற்சயம் அதை நாளை அடைந்தே தீர்வார்கள்.
தமிழ்ழர்களுக்கு உரிய நாடு ஒன்று இன்றோ அல்லது நாளையோ பிறந்தவிடும் என கால நிர்ணயம் தந்து கூறிவிடமுடியாதுதான், அனால் இன்னும் 10 வருடங்களிலோ அல்லது 100 வருடங்களிலோ அது சாத்தியப்படலாம் அல்லது இன்னும் நாட்கள் எடுக்கலாம். யூதர்களின் வரலாறே இதற்கான சாட்சியம்தானே…சரி நாம் விடயத்திற்கு வருவோம்…

1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் பிரித்தானியாவின் பிரதமராகவே ஆகிவிட்டாரே. அப்பறம் என்ன நீண்ட நூற்றாண்டுக்குப்பிறகு யூதர்களின் வரலாற்றில் ஒரு வசந்தகாலம் உருவானது. அவர்கள் அதுவரை தாங்கள் அனுபவித்திருக்காத சுகங்களை அனுபவித்தனர். அதுவரை எட்டாத உயரங்களை தொட்டனர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் யூதர்கள் சம அளவு உரிமைகளை பெற்றனர்.
ஆனால் மறுபக்கம் ஜெர்மனி, போலந்துபோன்ற நாடுகளில் யூதர்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்தவண்ணம் இருந்தனர். கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு “மதம் மாறு அல்லது மடிந்துபோ” என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
பிரிட்டனில் சாதகமான நிலை இருந்தமையினால் யூதக்குடியிருப்புக்களின் எண்ணிக்கை பல மடங்குகள் உயர்ந்தது. ஜோர்ஜ் மன்னர் இரண்டாவது அலெக்ஸ்ஸாண்டர் படுகொலைக்குப்பின்னர் ரஷ்யாவின் யூத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்துகொண்டே இருந்தது.


தொடர்ந்தும் துரத்தப்படும், அழுத்தப்படும் இனமாக இருந்த யூதர்கள் சிந்தித்தனர்.
நமக்குத் தேவை நாம் நின்மதியாக வாழ்வதற்கு எமக்கேயான நிரந்தரமான ஒரு தேசம். எத்தனைகாலம்தான் நாம் இப்படி ஓடிக்கொண்டே இருப்பது? உலகில் பெரும்பான்மையான இனங்களுக்கு தாம் வாழ்வதற்கென்று நிரந்தரமான தேசங்கள் இருக்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு என்று எங்கள் நிலமான பாலஸ்தீன் இருக்கின்றதே! அதை நாங்கள் எப்படி அடைவது? இன்றைய உலகியலின் பார்வையில் அது சாத்தியமே இல்லையே! சாத்தியப்படாதவற்றையும் நாம் எப்படி சாத்தியப்படவைப்பது? என இவற்றைத்தான் அவர்கள் சிந்தித்தார்கள். சிறு சிறு குழுக்களாக கூடிப்பேசினார்கள். எல்லாமே இரகசியக்கூட்டங்கள். சுற்றியிருக்கும் சுவர்களில் ஒருவார்த்தைகூட எதிரொலிக்காத வண்ணம் தமது வார்த்தைகளை மிக இரகசியமாகப்பேசினார்கள்.
இவர்களில் தியொட்டர் ஹெசில் என்ற ஜெர்மனியில் இருந்த யூதர், பாலஸ்தீனத்தை நாம் கைப்பற்ற என்ன வழி என்று ஒரு பாரிய திட்டமே போட்டு வைத்திருந்தார்.
அந்த திட்டத்தை நிறைவேற்ற யூதப்பணக்காரர்களின் உதவிகளை அவர் நாடினார். எவ்வளவுதான் பணக்காரர்களாக யூதர்கள் மற்ற நாடுகளில் மாறியிருந்தாலும் அவர்கள் யூதர்கள் என்ற இன உணர்வு மிக்கவர்களாகவே இருந்தார்கள். ஹெசில் இந்த திட்டம் குறித்து பல யூதப்பணக்காரர்களுடன் இரகசியப்பேச்சுக்களை நடத்தினார். ஹெசிலின் இந்த திட்டம் ஜியோனிசம் எனப் பெயரிடப்பட்டிருந்தது.


முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.
இந்த ஜியோனிஸம், 1975 களில் மிகத்தீவிரமாக மிக இரகசியமாக யூதர்களிடம் பரவிக்கொண்டிருந்தது. ரபிக்கள் ஜியோனிஸம் பற்றி யூதமக்களிடம் விரிவாக, ஆழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினர்.
“யூதர்களிடையே இந்த எண்ணத்தினை மிக ஆழமாக விதைக்கவேண்டும். யூத தேசிய உணர்வை அவர்களுக்குள்த் தூண்டவேண்டும். நமக்கு நாடு வேண்டும் என்றால் நாம்தான் அதற்காக உழைக்கவேண்டும். கலாலங்காலமாக நாம் எத்தனையோ பாhர்த்தாகிற்று, எத்தனையோ இழந்தாயிற்று. யாரும் எமக்கான தனிநாட்டை தட்டில்வைத்து தூக்கிக்கொடுத்துவிடப்போவதில்லை. எல்லோரும் அவர் அவர்களின் சுயநலங்களிலேயே தங்கிருக்கின்றனர். ஆனால் எமக்கான நாட்டை நாமே மலரச்செய்யவேண்டும்”
நாடு என்றால் என்ன? ஒரு நிலப்பரப்பு. குடியிருபுக்கள். வணிகநிலங்கள், வயல்வெளிகள் தோட்டங்கள் என பலவற்றை அடுக்கியது. அவ்வளவுதானே? நாம் அவற்றை விலைகொடுத்துவாங்குவோம். வீடுகளில் இருந்து பெரிய நிறுவனங்கள்வரை வாங்குவோம், விவசாயம் செய்ய நிலங்களை வாங்குவோம். வாங்கி வாங்கி யூதர்களுக்கே உரியதாக சேர்ப்போம். சேர்த்துக்கொண்டே போவோம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பினை நாம் காசு கொடுத்துவாங்கியிருப்போம். கிட்டத்தட்ட ஒருதேசமே யூதர்களுக்குச்சொந்தமாக இருக்கம். அந்த நிலப்பரப்பு பாலஸ்தீனமாக இருக்கட்டும் அது தானே எம் பல நூற்றாண்டுக்கனவு! ஹெசிலின் இந்தத்திட்டம் யூதப்பணக்காரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உணர்சிவசப்பட்டவர்களாக எவ்வளவு பணம் என்றாலும் வழங்க தாம் தயார் என்றனர்.


இதன் முதற்கட்டமாக 1896ஆம் ஆண்டில் “உலக யூதர் கொங்கிரஸ்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சுவிட்ஸர்லாந்தில் மிக இரகசியமாக அழைக்கப்பட்ட ஒரு சிலருடன் நடைபெற்றது. இங்குதான் ; The grand Plane என்ற நூறுபக்க அறிக்கையினை ஹெசில் வாசித்தார். அதை “ஒபரேஷன் பாலஸ்தீன்” என்று கூட அழைக்கலாம். யூதர்கள் இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் தமது புத்திசாலித்தனங்களை உபயோகித்து தந்திரமாக காய்களை நகர்த்தவேண்டும். எப்படி எல்லாம் செயற்படவேண்டும், எப்படி எல்லாம் செயற்படக்கூடாது என சகலவற்றையும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்தது.
அந்த அறிக்கையில் யூதர்கள் அன்றைய நிலையில் எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என சொல்லப்பட்வைகளில் முக்கியமானதை பார்த்தோமானால்,
“யூதர்களுக்கு என்று ஒரு தேசத்தை அமைத்தே தீருவோம் என நாம் சபதம் எற்றுக்கொள்வோம். எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தாலும், எத்தனைபேர்களை நாம் இழந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் எமக்கான தேசம் என்ற நிலையில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது. எம் தேச உருவாக்கலை தகர்க்க பல சக்திகள் எம்மைத்தடுக்க எப்படியான சதித்திட்டங்களையும் தீட்டும், அவற்றை உடனடியாக இனங்கண்டு நாம் தகர்க்கவேண்டும். எம் இனம்மீதான பற்றும், எமக்கான நாடு என்ற உறுதியும் எம்மனங்களில் இருந்தால் எவராலும் எதனையும் செய்துவிடமுடியாது”

ஜேசுவைக்கொன்றவர்கள், ஜேசுவைக்கொன்றவர்கள் என்று நம்மீது பல ஆண்டுகளாக பழி சுமத்தி எம்மை அழித்துக்கொண்டே வருகின்றனர். அவர்களின் அடிப்படை மரபுகளிலும், விசமத்தனமான சிந்தனைகளிலும் ஊறிப்போன இதனை உடனடியாக அழித்துவிடமுடியாது. சாமர்த்தியமாக சமாளிக்க நாம் தயாராகவேண்டும். கிறிஸ்தவர்களுடன் பல வழிகளிலும், தோன்றல்களிலும் நாம் ஒத்திருந்தும் அவர்கள் நீண்ட நாட்களாக எமக்கு தொடர் துரோகங்களையே செய்துவந்துள்ளனர்.
ஐரோப்பாவில் மிக அதிகமாக வாழ்பவர்கள் கிஸ்தவர்கள்தான். அவர்கள் நம்பகைவர்களே. அனால் இப்போது அது எமக்கு முக்கிமல்ல. உணர்ச்சிகளையும் பழிவாங்கல்களையும் விட்டுவிட்டு, இனிநாம் தந்திரமாக முன்னேறவேண்டும், கிறிஸ்தவர்களுடன் நட்பு கொள்ளவேண்டும். அவர்கள் மனதில் இருந்து நம்மீதான பகைமை உணர்வை சிறிதாவது அகற்றவேண்டும். இந்த திட்டங்கள் உடனடியாக நிறைவேறப்போகும் திட்டங்கள் அல்ல. பல ஆண்டுகள் நாம் தீராமல் உழைப்பதன்மூலம் அடையப்போகும் திட்டங்களாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த இடத்தின் எம்தமிழினத்தின் இன்றைய சூழலில், யூதர்களாக தமிழர்களையும், கிறிஸ்தவர்கள், ஐரோப்பாவாக இந்தியாவையும், ஜேசுவாக ராஜூவ் காந்தியையும் ஒப்பிட்டு பார்த்து மீண்டும் வாசித்துப்பாங்கள் கன கச்சிதமாக எப்படி பொருத்தமாக உள்ளது என்று)

சரி…யூதர்களின் இந்த திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவை. அதற்காக யூதர்களால் ஒரு வங்கி உருவாக்கப்படும். அதன் பெயர் “யூத தேசிய வங்கி” யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாஙகுவதற்கான சகல உதவிகளையும் அந்த வங்கி தரும் என அறிவிக்கப்பட்டது.
சொன்னபடியே எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இயங்கியது யூத தேசிய வங்கி. பிற நாடுகளிலும் இருந்த யூதர்கள் மெல்ல மெல்ல பலஸ்தீனத்தை நோக்கி நகரத்தொடங்கினார்கள். பலஸ்தீன யூதர்கள் மௌனமாக புரட்சிக்கு தயாராகிகொண்டிருந்தனர்.
இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது, பலஸ்தீனத்தில் இருந்த மொத்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தை தாண்டியது.
மெல்ல மெல்ல பலஸ்தீனத்தில் யூத நில வங்கிகள் முளைக்க ஆரம்பித்தன. அதிக இலாபம் கிடைக்குதென எண்ணி அரேபியர்கள் யூதர்களின் வலையில் விழுந்தனர். அரேபியர்கள் அபபோது நினைத்ததெல்லாம் ஒன்றுதான். இன்னும் எவ்வளவு அதிகமாக விலை சொல்லலாம் என்பதுதான.; அதன்படியே புறம்போக்கான தங்கள் நிலங்களுக்கு எல்லாம் தாறுமாறாக விலைகளைச்சொன்னார்கள், எவ்வளவு சொன்னாலும் யூதவங்கிகள் அவற்றை வாங்கிப்போட்டுக்கொண்டே இருந்தன. மறுபுறம் யூத வங்கியின் நிலங்கள் பெருகிக்கொண்டே இருந்தன.
இன்னொருபுறம் உலகமெங்கும் உள்ள யூதர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடையாக தமது பணத்தினை இந்த வங்கிக்கு வழங்கிக்கொண்டே இருந்தனர். பணம் இல்லாத யூதர்கள் கூட, தம்மாலான வழிகளில், புத்தகம்விற்று, கலைநிகழ்வுகளை நிகழ்த்தி, சாகசங்கள் புரிந்து, என உணர்வுடன் இந்த வங்கிக்கு பணம் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.


யூதர்களை எப்படி அடக்கலாம்? இழந்த நிலங்களை எப்படி மீட்கலாம் என அரேபியர்கள் காலம்தாழ்த்தி விழித்துக்கொண்டு தமக்குள் பேசிக்கொண்டிருக்கையில், இன்னும் மிச்சமிருக்கும் நிலங்களையும் எப்படி அபகரிக்கலாம் என யூதர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். யூத தேசிய நிதி என்ற பெயரில் ஜியோனிஸ இயக்கத்திற்காக உலக யூதர்களிடமிருந்து பணம், மூட்டை மூட்டையாக குவிந்துகொண்டிருந்தது. யூதர்களின் பொருளாதார பலம் என்பது படு சுபீட்சமாக இருந்தது. சமுதாய பலத்திலும், அவர்கள் முக்கிய நாடுகளின், பெரிய பதவிகளிலும். ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுபவர்களாகவும் இருந்தார்கள். பண பலம் இருக்கின்றது. எதையும் சாதிக்கலாம் என்ற தைரியம் அவர்களுக்கு இருந்தது, தாராளமாக எங்கும் இலஞ்சத்தை பழக்கிவிட்டார்கள். அதன்மூலம் தமது காரியங்களை பணத்தினால் சாதித்துக்கொண்டார்கள். பலஸ்தீனத்தில் மட்டும் இன்றி, இங்கிலாந்துபோன்ற பல மேலை நாடுகளிலும் உயர் அதிகாரிகளுடனான நட்பை, பணத்தினால் பலப்படுத்தி இருந்தார்கள்.
அரேபிய முஸ்லிம்களின் யூதர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்தபோது யூதர்களுக்காக பலஸ்தீன் என்ற கோரிக்கையோடு, ஹெசில் சில நாடுகளின் ஆட்சியாளர்களை சென்று சந்தித்தார். ஜெர்மனியச்சக்கரவர்த்தி ஹெய்ஸர் வில்லியம் 2, துருக்கியின் சுல்த்தான் மெஹ்ருத் பதிதீன் ஆகிய இருவரும் அவருக்கு உதவ பின்வாங்கினர்.

ஹெசின் பிரிட்டனுக்குச்சென்றார். பிரித்தானியாவுக்குரிய காலணிகளை நிர்வகித்துக்கொண்டிருந்த மூத்த அமைச்சர் ஜோசப் ஷேம் லெலினை சந்தித்து பேசினார். அவர் நிதானமாக யோசித்து, அப்போதிருந்த யதார்த்த நிலையில் யூதர்களுக்கு பலஸ்தீனம் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார். ஆனால் வேண்டும் என்றால் கிழக்கு ஆபிரிக்காவில் உகண்டாவில் யூத நாட்டினை அமைக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த பதிலால் ஹெசில் மகுந்த வருத்தமடைந்தார். அப்போதைய நிலமைகளை மட்டும் வைத்துக்கொண்டு எவ்வாறு பலஸ்தீன் யூதர்களுக்கு சாத்தியப்படாது என சொல்லமுடியும் என வேதனைப்பட்டார். என்றாலும் அதை பிரிட்டனிடம் காட்டாமல் இது குறித்து யோசித்து முடிவெடுக்கலாம் எனச்சொல்லிவிட்டு விடைபெற்றார்.
எத்தனை நூற்றாண்டுகளாக நாம் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டே இருப்பது? நமக்கென்று பலஸ்தீனத்தை வாங்கிவிடலாம் எனத் திட்டம் தீட்டி, அந்த திட்டமும் ஓரளவு வெற்றிகரமாக தனது இலக்கை நோக்கிக்கொண்டு செல்லும் வேளையில், இன்னொரு புறம் எமக்கு எதிரான சக்திகள் கூட்டுச்சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்;வு தனி நாடுதான். பிரிட்டனின் யோசனைப்படி உகண்டாவை ஏற்றுக்கொண்டால் என்ன? ஒரு தற்காலிகத்தீர்;வு கிடைக்குமே! இதிலிருந்து பலஸ்தீனத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாமே!! என ஹெசில் யோசித்தார்.

இந்த யோசனையினை ஆறாவது யூதர்கள் கொங்கிரஸ் மாநாட்டில் அவர் முன்வைத்தார். அவ்வளவுதான், ஹெசில் தடம்மாறிவிட்டார். பாலஸ்தீன் கனவை கைவிடச்சொல்கின்றார், இவருக்கு பித்து பிடித்துவிட்டது, பிரிட்டனிடம் விலைபோய்விட்டார் இப்படி பல விமர்சனங்களுக்கு அவர் ஆளானார்.
யாருக்காக பாடுபட்டோமோ அந்த மக்களே இப்படித்தாற்றுகின்றார்களே என்று பெருமளவில் உடைந்துபோனார் ஹெசில். இதனால் படுத்த படுக்கையாகி 1904 ஆம் அண்டு இறந்துபோனார். அதன்பின்னரே ஹெசிலின் வார்த்தைகளில் இருந்த உண்மையினையும், தங்கள் வார்த்தைகளில் இருந்த விசத்தன்மையினையும் யூதர்கள் புரிந்துகொண்டு கண்ணீர்வடித்தனர். ஹெசிலிடம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டனர்.
-தொடரும்…

Tuesday, July 21, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -01)


இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழர்ச்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இந்த நிலையில் நமக்கு யூதர்களின் போராட்ட வரலாறுகள், அவர்கள் அனுபவித்த வேதனைகள், அவர்களுக்கு நடந்த துரோகங்கள், அவர்கள் எழுச்சி பெற்ற ஒவ்வொரு கட்டத்திலும், அவர்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உலகில் இடம்பெற்ற மாற்றங்களால் அவர்களின் எழுச்சிகள் அமர்ந்துபோன ஏமாற்ற வரலாறுகள் என்பனபற்றிய முழுமையான வரலாற்றினை நாம் தெரிந்துவைத்திருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது.இந்த நிலையில் இந்த தளத்தில் இஸ்ரேலின் முழுவரலாற்றினையும் எழுதுவதென்றால் அதற்கு பிறம்பாக ஒரு தளம் அமைக்கவேண்டும் என்பதால் அப்பப்போ எனது வலைப்பதிவுகளில் இஸ்ரேலின் உருவாக்கம் பற்றியும், யூதர்களின் பேளெருச்சி பற்றியும் பதிவுகளை மேற்கொண்டு நண்பர்களான உங்களுடன் பகிரலாம் என நினைத்துள்ளேன். ஏனென்றால் இஸ்ரேல் பற்றியோ, அல்லது யூதர்களின் வரலாற்றினையோ சரியாக தெரிந்துகொள்ளாதவர்கள்கூட தமிழர்கள் இன்று யூதர்கள்போல செயற்படவேண்டும், யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டார்களோ அதேபோல தமிழர்களுக்கான ஒரு தேசத்தை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் யூதர்களுடன் தமிழர்கள் ஒத்துப்போகும் சில இடங்கள், தமிழர்கள் யூதர்களாக மாறுவற்கு இன்னும் எடுக்கவேண்டிய விஸ்வரூபங்கள், மாற்றிக்கொள்ளவேண்டிய குண இயல்புகள், இன்னும் செய்யத்தயாராக வேண்டியுள்ள தியாகங்கள் என பலவற்றை சுட்டிக்காட்டவேண்டிய தேவை வந்துள்ளது. எனவே யூதர்கள் மற்றும் இஸ்ரேல், பற்றிய இந்த ஆய்வுத்தொடரினை நீண்டதாக அல்லாமல் மிகவும் சுருங்கியதாக ஆகக்கூடியது மூன்று தொடர்களில் முடிக்க முயற்சிக்கின்றேன்.


“இன்றைய உலகில் நோபல் பரிசுகள் பெற்றவர்கள், ஒஸ்கார் விருதுகள் பெற்றவர்கள், மிகப்பெரிய கலைஞர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியல் வல்லுனர்கள், அரசியல் ஆய்வாளர்கள், என எந்தத்துறையை வேண்டுமானாலும், அதில் எத்தனை பேரை வேண்டுமானாலும் பட்டியலிட்டுப்பாருங்கள். அந்தப்பட்டியலில் எத்தனை யூதர்கள் உள்ளனர் என கணக்கிட்டுப்பாருங்கள், அதிர்ந்துபோவீர்கள்.
யூதர்களின் சரித்திரமே எத்தனைக்கெத்தனை அவர்கள் போராடினார்களோ, கஸ்டப்பட்டார்களோ அத்தனைக்கத்தனை சாதித்தும் காட்டியுள்ளனர்.”
சரி…நாம் இப்போ யூதர்களைப்பற்றிப்பார்ப்போம்….


அது ஒரு வெள்ளிக்கிழமை, ஏப்ரல் மாதத்தில் முதற்கிழமையாக இருக்கலாம் என நம்பப்படும் நாள்.
“நஸரேத் நகரத்தைச்சேர்ந்த இவர், யூதர்களின் அரசன் என்று எழுதி ஒட்டப்பட்ட அந்த சிலுவையில் ஜேசு சிலுவையில் அறையப்பட்ட நாள். (Iesus Nazarenus Rex Inudaeorum –INRI) மூன்றாவது நாள் அவர் உயிர்த்து விண்ணுலகம் சென்றதாக கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகின்றது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
மரணத்தின்பின்னர் தேவதூதன் உயிர்தெழவில்லை என்பதே யூதர்களின் நம்பிக்கை. ஜேசு மரணத்தின் பின்னர் உயிர்த்தெழவில்லை என்று நம்பியவர்கள் யூதர்களாகவே இருந்தனர்.
ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ். ஜேசுவைக்காட்டிக்கொடுத்தவன், ஜேசுவை கொலை செய்தவன் எனக் கிறிஸ்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டவன்.
யூதாஸ் என்ற தனி மனிதன் ஒருவன் சரிவர யோசிக்காமல் அவசரப்பட்டு செய்த ஒரு காரியம், யூதர்கள் என்றாலே காட்டிக்கொடுப்பவர்கள் என்று காலம்காலமாக உலகம் மாறி மாறி யூதர்களை பழிவாங்கும் நிலைக்கு ஆக்கியது. இதில் முக்கிமான ஒரு விடயம் என்னவென்றால், ஜேசுவும் யூதனே என்ற வாதம் முன்வைக்கப்படுவதுதான்.
இதன்மூலம் யூதர்கள் அனுபவித்த வலிகள் வேதனைகள் எராளம். இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு என்றால் அது யூதர்களுடையதுதான்.

இந்த நாட்களில் இருந்து ஒரு யுகத்தொடர்ச்சியாக கால காலங்களிலும் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளும், வேதனைகளும் மிக அதிகம், அவர்களுக்கான ஒரு மேய்ப்பானுக்காக அவர்கள் தமக்குள்ளேயே அழுத காலங்கள் மிக நீண்டவை.
தோழ்கொடுக்க ஆள் இன்றி அவர்கள் ஒரு கையால் தமது நிர்வாணங்களை மறைத்துக்கொண்டே மறுகையால் ஆடைநெய்து அணிந்துகொண்டார்கள்.


யூதர்கள் ஆரம்ப நாட்களில் இருந்து மோஸஸ், ஜோசப், ஜோஸ_வா, சாமுவேல், தாவீது, சொலமன், ஜேசு, ரோமானிய மன்னர்கள், நபிகள் நாயகம், சலாவுதீன், கலிபாக்கள், சிலுவைப்போர், போன்ற மன்னர்களையும், சம்பவங்களையும் கடந்தே யூதர்களின் வரலாறு வருகின்றது. இவை முழுவதையும் பதிவிடுவது இயலாத காரியம் என்பதால் அங்கிருந்து ஒரே பாய்ச்சலாக 18ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். எனினும் எதிர்வரும் காலங்களில் யூதர்களின் பண்டையகால வரலாறுகளை தொகுத்து சிறு சிறு பதிவுகளாக தருவது சிறப்பாக இருக்கும் எனவும் எண்ணுகின்றேன்.


கி.பி. 1772 தொடக்கம் 1815 க்குள் போலந்து லித்துவேனியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஜோர் என்ற மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அன்றைய ரஷ்யாவின் இளவரசர் பொட்ரம்கின் யுதர்களுக்கு அதரவான ஒரு அறிக்கையினை வெளியிட்டார். “ஐரோப்பிய நாடுகளில் வாழமுடியாத யூதர்கள் ரஷ்யாவுககு வந்து ரஷ்யாவின் தென்பகுதிகளில் வாழலாம் என்பதே அந்த அறிவிப்பு. இது யூதர்களே சற்றும் எதிர்பாராத அறிவிப்பு. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக அங்க சென்று பெரும் குடியிருப்புக்களை உருவாக்கினார்கள். துருக்கி மீது பெடையெடுக்கும் நோக்கத்துடன் அதில் தந்திரமாக யூதர்களையும் இணைத்துக்கொண்டார். யூதர்கள் மயங்கும் வண்ணம் பல சலுகைகளையும் வழங்கினார். 1768 இல் ரஷ்யா துருக்கியை கைப்பற்ற போரினை மேற்கொண்டது. இதில் யூதர்களின் படையும் பங்கு கொண்டமையினால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு யூதர்களின்மேல் தோன்றியிருந்த வெறுப்பு இன்னும் அதிகரித்தது.


இந்த யுத்தங்களின் பின்னர் ரஷ்யாவில் இருந்து போலந்து பிரிந்துசென்றது. அந்தநேரத்தில் ரஷ்யா போலந்து எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்த பிரிவினைச்சுழலில் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திய யூதர்கள் பல நிலங்களையும் வளைத்துப்போட்டார்கள். பல குடியிருப்புக்களை உருவாக்கி பெருமளவில் விவசாயத்திலும் ஈடுபட்டனர். நாளடைவில் யூதர்களின்மீது ரஷ்யாவுக்கு இருந்த காழ்ப்புணர்வு உயர்ந்து யூதர்களுக்கெதிரான கலவரங்கள் ஆரம்பித்தன.
ரஷ்யர்களை யூதர்கள் அடிமைப்படுத்த முயல்கின்றார்கள், அவர்களை மதமாற்ற முற்படுகின்றார்கள் என்று பொய்க்குற்றங்களை ரஷ்யர்கள், யூதர்கள் மீது சுமத்தி மேலும் 1802ஆம் ஆண்டு ரஷ்யாவின் மன்னராக இருந்த அலெக்ஸ்ஸாண்டர் 01 என்ற மன்னனால் யூதர்கள் அடித்து விரப்பட்டவேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் பல்வறு அழுத்தங்கள் யூதர்கள் மீது திணிக்கப்பட்டன.
இந்தவேளைகளில் ரஷ்யாவின் கெடுபிடிகள் காரணமாக ரஷ்யாவை விட்டு யூதர்கள் மெல்ல மெல்ல வெளியேறத்தொடங்கினர், அனால் காலங்கள் சென்றாலும் யூதர்களை அடிமைகளாக்க ரஷ்யா முயன்றுகொண்டே இருந்தது. இந்த நிலையில் 1881ஆம் அண்டு ரஷ்ய கிளர்ச்சியாளர்களே அலக்ஸாண்டர் 02 மன்னனை கொலை செய்ய அந்தப்பழியினை யூதர்கள்மீது சுமத்தி யூதர்கள் மீது பெரும் இனவெறியினை கட்டவிழத்து யூதர்களை கொன்று குவித்தனர் ரஷயர்கள். வகைதொகையின்றி யூதர்கள் கொலை செய்யப்பட்டனர். இது ரஷ்யாவில் மட்டும் இன்றி யூதர் ஒழிப்பு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல ஐரோப்பா முழுக்க பரவ தொடங்கியது.


ரஷ்யாவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் யூதர்கள் மீது கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, அப்போதைய சக்கரவர்த்தியாக திகழ்ந்த நெப்போலியன் “பாலஸ்தீனத்தில் இருந்துவந்தவர்கள் யூதர்கள், இதன் அடிப்படையில் அவர்களுக்கு அவர்களது குடியேற்ற உரிமைகள் பாதுகாக்கப்படும், இருப்பு அங்கீகரிக்கப்படும்” என அறிவித்தார்.
ஒரு மாபெரும் சக்கரவர்த்தி பாலஸ்தீனம் யூதர்களின் நிலம் என அங்கீகரித்தமையினாலும், ஐரோப்பா முழுவதும் யூதர்களை அடித்து ஒதுக்கியபோதும் தமக்கு அதரவாக குரல் கொடுத்ததாலும், நெப்போலியனை உளமார வாழ்த்தினார்கள் யூதர்கள். கி.பி.1799 இல் நெப்போலியன் எகிப்தில் இருந்து சிரியா நோக்கி படையெடுத்திருந்தார். அவரது நோக்கமே அன்றைய பாலஸ்தீனத்தில் இருந்த ஏர்க் கோட்டையினை பிடிப்பதாகும். எனவே போகும்வழியல் பாலஸ்தீன ரமல்லா என்ற இடத்தில் தங்கியிருந்த நெப்போலியன், அங்கிருந்த யூதர்களைத்திரட்டி “நீதி கேட்கும் ஊர்லம்” என்ற பெயரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது அவரது இராஜதந்திரமே ஆகும்.
இநத்ப் போரில் அரேபியர்களை வெற்றி கொள்ள நீங்கள் உதவினால், ஜெருசலத்தினை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து உங்களுக்கே தருவேன் என யூதர்களிடம் ஊர்வலத்தில் தெரிவித்தார் நெபபோலியன்.
யூதர்கள் உடனடியாக நெப்போலியனின் படையுடன் இணைந்து செயற்பட்டார்கள். அனால் துருக்கிக்கு அப்போது பிரித்தானியாவின் உதவி இருந்தமையினால் நெப்போலியானால் வெற்றிகொள்ளமுடியவில்லை. நாளடைவில் பிற ஐரோப்பிய நாடுகளில் நடந்துகொண்டதுபோலவே யூதர்களை நெப்போலியனும் அடக்கி ஆழ தொடங்கினார்.


கொலை செய்யப்பட்டாலும் துரத்தியடிக்கப்பட்டாலும் அதே இடங்களில் மீண்டும் வந்து வாழ்வதற்கு யூதர்கள் தயங்கியதே கிடையாது. உலகமெல்லாம் பரவி தங்கள் வியாபாரங்களை வலைப்பின்னலாக பரவச் செய்தவர்கள் யூதர்களே. அதாவது Multi Level Marketing ஐ யூதர்கள் 17அம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டார்கள். வியாபாரத்தை விஸ்தரிக்க எந்தவிதமான குறுக்கு வழிகளில் நுளைய அவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால் தமது வாடிக்கையாளர்களை அவர்கள் சிறிதளவும் ஏமாற்றவில்லை. எவ்வளவு தாம் முன்னேறினார்களோ அவ்வளவு தமது இனமும் முன்னேற வேண்டும் என்பதில் யூதர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். தம்மினத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சிறப்பானவராக இருந்தார் என்றால் அவர் அதேதுறையில் உச்சத்திற்கு செல்ல சகல உதவிகளையும் மற்ற யூதர்கள் வழங்கினர்.
1839 இல் ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மெஷாக் என்ற இடத்தில் இருந்த பழமையான யூத தேவாலயம் ஒன்று முஸ்லிம்களால் தீ வைததுக்கொழுத்தப்பட்டது. அங்கே பற்ற வைக்கப்பட்ட கலவரத்தீ யூதர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் தீயாக பரவியது. இஸ்லாமியனாக மாறு இல்லை என்றால் இறந்துவிடு இதுவே முஸ்லிம்களால் யூதர்களுக்கு அன்று கொடுக்கப்பட்ட தெரிவுகள். யூதர்களுக்கு எதிராக எங்கும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்து யூதர்களை தாக்கினார்கள்.


19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல ஐரோப்பிய தேசங்களில் ஜனநாயகம் மலரத்தொடங்கியது. எவ்வாறு ஒவ்வொரு தேசத்திலும் தங்கள் இருப்பை யூதர்கள் நிலைநிறுத்த முயற்சித்தார்களோ, அதேபோல ஜனநாயக நாடுகளிலும் தமது உரிமைகளைப்பெறவும். உரிய பதவிகளைப்பெறவும் முயற்சிகளை செய்தனர்.
1848 இல் பிரான்ஸில் இடம்பெற்ற தேர்தலில் யூதர் ஒருவர் வெற்றி பெற்று நாடாளுமன்றப்பிரதிநிதியானார். தொடர்ந்து 1870 இல் பெஞ்சமின் டி இஸ்ரேலி என்ற யூதர் தேர்தலில் நின்று வெற்றிபெற்று பிரித்தானிய பிரதமராகவே ஆகினார்.

தொடரும்….

Friday, July 17, 2009

யாழ்ப்பாணக் காலாசாரத்தில் நிலைத்து நிற்கும் ஆடிப்பிறப்பு.


யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும்.
ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் உள்ளனர். இந்த அளவுக்கு ஆடிமாதத்தின் சிறப்பு பண்டைய யாழ்ப்பாணத்து மூத்த குடியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சிறப்பான அம்சமும், பெருமைப்படவேண்டிய அம்சமும் என்னவென்றால், பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டுவருவதே ஆகும்.
தமிழ்நாட்டு தமிழர்கள் கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பெரும்பாலும் அம்பாள் கோவில்களில் கூழ் ஊற்றல் என்ற சடங்கினை செய்துவருகின்றனர் எனினும் யாழ்ப்பாண மக்களைப்போல தமிழில் ஆடிமாதம் முதலாம் நாளில் தமக்கே உரிய வகையில் அந்த நாள் மட்டும் சமைக்கும் இனிப்பு கூழ்பற்றி அவர்கள் அறியமாட்டார்கள்.


ரி பண்டைய யாழ்ப்பாணத்து ஆதிக்குடியினர் ஏன் ஒரு மாதத்தின் தொடக்க நாளினை இப்படி கொண்டாடுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றதுதான். ஆனால் எந்த சமய சம்பிரதாய நூல்களிலோ அல்லது மத அனுஸ்டானங்களிலோ இந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் தரப்படவில்லை. அப்படி இருக்க யாழ்ப்பாணத்து மக்கள் ஏதோ ஒரு காரணத்தை மையமாக வைத்தே இந்த ஆடிமாத முதல் தேதியில் ஆடிப்பிறப்பினை கொண்டாட முற்பட்டுள்ளனர்.
சரி நாம் அறிந்த வகையில் ஆடிமாதத்தின் சிறப்பினை எடுத்துப்பார்த்தால், ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்கும் என்ற பழமொழிகளுக்கேற்ப, யாழ்ப்பாணத்தின் மீது தென்மேல் பருவக்காற்று பலமாக வீசும் காலம் இது, யாழ்ப்பாணத்தை நோக்கி தெற்கில் இருந்து வடக்காக காற்று வீசும். இந்தக்காலத்திலேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் வர்ண வர்ணமாக, வித விதமான வகையில் பல பட்டங்களை கட்டி வானில் பறக்கவிட்ட மகிழ்வார்கள்.
அதேபோல பண்டைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஆடி மாதத்தில்த்தான் பெரும்பாலும் கார்னிவேல்கள், வானவேடிக்கை விழாக்கள், களியாட்ட விழாக்கள் எல்லாம் நடந்ததாக பல மூதாதையர்களின் கதைவழியாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.


அடுத்ததாக 12 மாதங்களை கொண்ட ஒரு ஆண்டில் முதல்பாக அரையாண்டு முடிவடைந்து அடுத்த பாகம் தொடங்கும் நாள் ஆடி முதலாம் நாள் என்றபடியால் இந்த நாளையும் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டிக்கலாம் எனக்கருதப்படுகின்றது.
அதாவது தை மாதம் முதலாம் நாள் எவ்வாறு தைப்பொங்கல் என கொண்டாடி பொங்கல் செய்து படைத்து கொண்டாடுகின்றார்களோ அதேபோல, ஆடி மாதம் முதலாம் நாளினையும் கொண்டாட அவர்கள் தலைப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க முதல் பாக ஆண்டு தேவர்களுக்குரியதென்றும், அடுத்த பாதி ஆண்டு பிதிர்களுக்கு உரியதென்றும் கூறப்படும் ஒரு ஐதீகமும் இருப்பதன் காரணத்தினால், இனிப்பான கூழும், கொழுக்கட்டையினையும் சமைத்து பிதிர்களுக்கு படைத்தனர் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.


எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியானதான மாதமாகவே இருக்கும் ஏனெனில் காற்றில் பட்டங்கள் விடுவதும், யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லார் கந்தசுவாமி கோவில் பேருட்சவம் இந்த மாதம் முழுமையாக இடம்பெறுவதாலும், இதன்காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளி இடங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் ஒன்று கூடும் காலமாக இருப்பதால் நவீன காலத்தில்க்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான காலரமாகவே தெரிகின்றன.
ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படி கொண்டாடப்பட்டது என்பதும். அதன் முதல்நாளே நாளைய ஆடிப்பிறப்பு பற்றி சிறுவர்கள் கொள்ளும் சந்தோசத்தையும் மையமாக வைத்து நவாலியூர். சோமந்தரப்புலவர் என்ற யாழ்ப்பாணத்து சிறந்த புலவர் ஒருவர் பாடியுள்ள பாடலில் இருந்து தெரியவருகின்றது. இதிலிருந்து ஒரு காலத்தில் ஆடிப்பிறப்பிற்கு யாழ்ப்பாணத்தில் விடுமுறை விடப்பட்டுள்ள வரலாறும் புலப்படுகின்றது.
சரி அந்தப்பாடலை இந்த நாளில் மீட்டிப்பார்ப்பது சிறப்பாக இருக்கும்…


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


என அந்தப்பாடல் வரிகள் அமைந்துள்ளது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால் அடிப்பிறப்புக்கு கூழ் எப்படி ஆக்குவது என்ற ரெசிப்பியையும் புலவர் பாடலிலேயே தெரிவிததுள்ளதான்.
எனவே யாழ்ப்பாண மக்கள் ஆடிப்பிறப்புக்கு வழங்கியிருந்த முக்கித்துவம் இந்தப்பாடலில் இந்து புலனாகியிருக்கும்.
இன்று கடந்தகால மூன்று தசாப்த யுத்தத்தின் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் கூடிழந்த குருவிகளாக சிதறிப்போய் வௌ;வேறு நாடுகளின் கூடுகளில்அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தாம் எங்கெல்லாம் இக்கின்றார்களோ அங்கும் தமது கலாசாரங்களை மறக்காமல் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை பேணிவழர்ப்பதற்கு உலகத்தமிழினமே எழுந்து நின்று ஒரு சபாஸ் போடலாம்.

Thursday, July 16, 2009

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர் விமான விபத்துக்கள்.


ஒன்றரை மாத கால இடைவெளிக்குள் மூன்று பயணிகள் விமானங்கள் தமது பயணங்களின் இடைநடுவில் விபத்துக்குள்ளாகி விழுந்தமையினால் இன்று உலகம் பாரிய அச்சமும் அதிர்ச்சியும்; கொண்டுள்ளது.
ஏராளாமான காரணங்கணை ஒருபக்கம் அடுக்கிக்கொண்டிருக்கின்றார்கள் தொழிநுட்பவியலாளர்கள.; இருந்தபோதிலும் உண்மையான காரணங்கள் என்ன என்ற உண்மை உலகின் கவனத்திற்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை.
“அது என்ன சொல்லி வைத்ததுபோல இந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் இந்த தொடர் விபத்துக்கள்”? அதுவும் பயணிகள் விமான விபத்துக்கள்?
பல கேள்விகளை தம் மனதால் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் உலகமக்கள்!

வானிலையில் ஏதும் அசாதாரணமான மாற்றங்களா? காற்றோட்டத்தின் சுற்றில் ஏதாவது புதிய அழுத்தங்களா? அல்லது சதி முயற்சிகளா? பயங்கரவாத செயல்களா? அல்லது கடவுளின் சாபமா? என பல்வேறு கோணங்களில் மக்கள் யோசிக்க அரம்பித்துவிட்டார்கள்.
உலக ஊடகங்களும் தம்பாட்டிற்கு பல்வேறு கோணங்களில் தமது கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருக்கின்றன. இத்தகய கேள்விகள், விமான சேவை நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நாடுகள், வானோடிப்பாதை கட்டுப்பாட்டாளர்கள், பயணிகள் விமான தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரையும் தற்போது குறிவைக்கத் தொடங்கிவிட்டது.


கடந்த ஜூன் 1 ஆம் திகதியன்று ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 ரக “எயார் பஸ்” ரக விமானம் ஒன்று, 216 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன், ரியோ டி ஜெனிரோவிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், அந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
228 பேரை பலிகொண்ட ஏர் பிரான்ஸ் விமானம் , வானில் எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய பிரான்ஸ் விசாரணைக் குழு , விபத்துக்குள்ளான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நொருங்கி விழவில்லை என்றும், விபத்துக்கு வேறு ஏதோ காரணம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த கூற்றை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானம் , வானில் எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதன் அடிப்பாகம்தான் முதலில் கடலை தாக்கியுள்ளதாகவும் , இதன் காரணமாகத்தான் அதில் பயணம் செய்தவர்கள் ” லைஃப் ஜாக்கெட் ” கூட அணிய அவகாசமில்லாமல் நீரில் மூழ்கி உயிரிழக்க நேரிட்டதாக விசாரணைக் குழுவில் இடம்பெற்ற பொல்லியர்ட் என்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை


விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து கடைசியாக வந்த தானியங்கி செய்தியில், விமானம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் போனதாகவும் தகவல் உள்ளது.
இந்த விமான விபத்து நடக்கும் பொழுது பயணி ஒருவரின் புகைப்பட கருவியில் பதிவான இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இவரின் புகைப்பட கருவி முற்றிலும் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது இருப்பினும் , memory chip இல் இருந்து இந்த புகைப்படம் கண்டெடுக்கப்பட்டது

இது முடிந்து சரியாக ஒர மாதத்தில் அதாவது ஜூலை 01ஆம் திகதியன்று ஏமன் நாட்டில் இருந்து காமராஸ் நாட்டுக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இந்த விமானத்தில் 142 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் இருந்தனர். காமராஸ் தலைநகரம் மொரானி விமான நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் விமானம் கடலில் விழுந்தது கண்டு பிடிக்கப்பட்டது.


இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்த ஏமன் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டது.
142 பயணிகள் மற்றும் 11 விமான சிப்பந்திகளுடன் பாரீசில் இருந்து புறப்பட்ட ஏமனியா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம், ஏமன் நாட்டில் தரையிறங்கியது.
பின்னர் மீண்டும் மொரோனிக்கு புறப்பட்ட விமானம் இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, அதிகாலைவேளை விபத்துக்குள்ளானது.

விமான விபத்துக்கு வானிலை மோசமாக இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் முதலில் தரை இறங்க முயற்சித்த போது வானிலை மோசமாக இருந்ததால் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே விமானம் தரை இறங்காமல் வானில் சுற்றி விட்டு மீண்டும் தரை இறங்க முயற்சித்தபோதே விமானம் கடலில் விழுந்ததாகக்கூறப்படுகின்றது. எனவே வானிலை கோளாறு தான் விபத்துக்கு காரணம் என்று காமராஸ் விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.


இது இவ்வாறிருக்க இந்த விமானத்தில் பயணித்த சிறுமி ஒருத்தி உயிருடன்மீட்கப்பட்டுள்ளாள், இது குறித்து தெரியவருவதாவது,
விமானம் கடலில் விழுந்தவுடன், இந்தப்பிரதேசங்களில் மீட்பு பணியாளர்கள் உடனடியாக மீட்புப்பணிக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. சில உடல்களும் மிதந்தன. யாரும் உயிருடன் இருக்கிறார்களா? என்று தேடி பார்த்தனர். அப்போது ஒரு சிறுமி மட்டும் தண்ணீருக்குள் நீந்தியபடி இருந்தார். மீட்பு குழுவினர் அருகில் சென்று மிதவையை அவரிடம் போட்டனர். ஆனால் அதில் ஏறி மிதந்து வர சிறுமிக்கு தெரியவில்லை. எனவே நீச்சல் வீரர் ஒருவர் கடலில் குதித்து அந்த சிறுமியை மீட்பு படகுக்கு கொண்டு வந்தார்.
அவளுக்கு 14 வயது இருக்கும். மிகவும் அதிர்ச்சியாக இருந்தாள். எனவே அவளது பெயரை மட்டும் கேட்ட மீட்பு குழுவினர் அவளிடம் வேறு எதுபற்றியும் விசாரிக்கவில்லை. உடனடியாக கரைக்கு கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவள் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறினார்கள்.
அந்த சிறுமி விபத்து நடந்து 1 மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீந்தியபடி இருந்துள்ளாள். அப்போது அதிகாலை 4 மணி இருட்டாக இருந்தது. ஆனாலும் அவள் அவ்வளவு நேரம் நீந்தி உயிர் தப்பியது அதிசயமாக உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் மிகவும் பழமையானது. எனவே பராமரிப்பு சரி இல்லாமல் விபத்து நடந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஜூன் 01ஆம் திகதி, ஜூலை 01ஆம் திகதி, ஆகிய விபத்துக்களை அடுத்து நேற்று ஜூலை 15ஆம் திகதி 168 பேருடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் , அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகியுள்ளனர்.
ஈரான் நாட்டின் கஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று , தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியன் தலைநகர் ஏரேவேன் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.
153 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன் சென்ற அந்த விமானம் ஈரானின் வடமேற்கு பகுதியிலுள்ள கஸ்வின் என்ற நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது , திடீரென நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விமானம் முற்றிலும் நொருங்கி தீப்பிழம்புடன் கீழே விழுந்ததாகவும் , இதனால் அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கஸ்வின் அவசரகால சேவை துறை இயக்குனர் ஹோசீன் என்பவர் தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் , விமானம் நொறுங்கி விழுந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் தொர்டர்ந்தும் தமது பணிகளில் இடுபட்டுள்ளனர்.

1992 களில் தயாரிக்கப்பட்ட (அறிமுகப்படுத்தப்பட்ட) எயார் பஸ் ஏ 330ரக விமானங்கள், விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கும் சாத்தியங்கள் பல இருப்பதனால் இவை பயணிகள் சேவைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே கடந்த ஜூன் மாதம் முதல் நாள் ஏர் பிரான்ஸ்ஸின் இதேரக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
இதேபோல ஜூலை 01ஆம் திகதி இந்துசமுத்திரத்தில் விழுந்த ஏமன் நாட்டு விமானம், ஏயார்பஸ் 310 ரக ஐ.வை.626 ரகத்தைச்சேர்ந்ததாகும். இந்த விமானங்களும் எயார் பஸ் நிறுவனத்தால் 1982ஆம் அண்டுமுதல் தயாரிக்கப்பட்டுவருகின்றது. எயார் இந்தியா, பெட்டக்ஸ் எயார், பாகிஸ்தான் இன்டர் நஷனல் போன்ற விமான சேவைகள் இத்தகய விமானங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றன.
இதேபோல நேற்று ஈரானில் விபத்துக்குள்ளான கஸ்பியன் எயார் லைன்ஸ்ஸின் விமானம் 1987 ஆம் அண்டு ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட விமானமாகும்.
இத்தகய விமானங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இவற்றை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் விபத்துக்கு உள்ளான மூன்று விமானங்களும் பெரும்பாலும் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விமானங்களாகவே இருக்கின்றன. இதன் மூலமும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. தொழிநுட்பம் எவ்வளவோ முன்னேறியிருக்கும் இன்றைய நாட்களில் 20 வருங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விமானங்களை வைத்திருக்க இனியும் அனுமதிகக்கூடாது. குறிப்பாக பயணிகள் விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் விமானசேவை நிறுவனங்கள் ஆகக்குறைந்தது 10 வருடங்களுக்குள் தயாரிக்கப்பட்ட விமானங்களையே பயன்படுத்தவேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்படவேண்டும். விமான சேவைகள் மூலம் கொழுத்த லாபம் அடையப்பார்க்கும் விமானநிறுவனங்களின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படவேண்டும்.
இதேபோல வெளிநாட்டு சேவைகளில் மட்டும் இன்றி உள்நாட்டு சேவைகளில் ஈடுபடும் விமான சேவைகள் தொடர்பிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். விபத்துக்கள் தற்செயலானதுதான் என்றாலும் கூட அதி சிரத்தை எடுக்கவேண்டிய கடப்பாடுகளுக்கு விமானசேவையினை நடத்தும் நிறுவனங்கள் உட்படவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலமே இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான விமான விபத்துக்களை தடுக்கமுடியும் என்றதுடன், நின்மதியான பயணங்களையும் மேற்கொள்ளவும்முடியும்.

Monday, July 13, 2009

சிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரானியத் திரைப்படங்கள்.


ஆணும் பெண்ணும் தொட்டு, கைகோர்த்து நடிப்பதற்கு தடை, முத்தக்காட்சிகளுக்குத்தடை, வன்முறைகளின் காட்சிப்படுத்தலுக்குத் தடை, இஸ்லாமியச்சட்டத்திற்கு விரோதமாக படமாக்கலுக்கு தடை, சிறு சலன ஆபாசத்திற்கும் தடை, என ஈரானிய சினிமாவுக்கு தடைகள் மேல் தடைகள் போடப்பட்டாலும், அந்த தடைகளுக்குள்ளாகவே, உணர்வுகளை மட்டுமே கருப்பொருளாகக்கொண்டு வெற்றிபெறலாம் என்பதை நிரூபித்து தலைநிமிந்து நிற்கின்றது ஈரானிய சினிமா.

உலகின் வெற்றிபெற்ற, விருதுகளைப்பெற்ற படங்கள் அத்தனையையும் எடுத்துப்பாருங்கள், அதில் உணர்வு ஓட்டமான கட்டங்கள் பல இருக்கும். விருதுகளும், மரியாதைகளும் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களுக்கே வழங்கப்படுகின்றதே தவிர பிரமாண்டமான படங்களுக்கு அல்ல.
இன்றைய நிலையில் இரானில் அத்தனை அழுத்தமான சட்டங்களுக்கு மத்தியில் அந்த சட்டதிட்டங்களுக்கு எற்றதுபோல சிறுவர்களின் உணர்வுகள். அவர்களின் வாழ்வுலகம். அவர்களின் எண்ணங்கள், எதிர்பாhர்ப்புக்களை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி பெருவெற்றிபெற்றுள்ளதை அவதானிக்கலாம்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் நின்றுவிடாது அதை ஒரு சமுகத்தின் கருத்துக்களையும், முக்கியமாக மற்றவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களின் வலிகளை மற்றவர்களும் உணரும் ஒரு ஊடகமாக இத்தகய சினிமாக்கள் உள்ளன.
பிரமாண்டங்களைக்கண்டு பிரமிப்பவர்கள் கூட, இன்று மெல்ல மெல்லமாக இந்த உணர்வோட்டமான சினிமாவின் பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
முக்கியமாக ஈரானிய சினிமா இன்று கையில் எடுக்கும் முக்கியமான விடயம் சிறுவர்களின் உணர்வுகள், பிரச்சினைகளை உணர்விற்கும் விதமானவைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன.
இன்று உலகத்தில் உள்ள அனைவருமே சிறுவர் என்ற பராய வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். அன்றைய நாட்களின் வசந்தங்களையும், சிறுபிராயத்தின் தமது மனதின் உணர்வுகளையும் தொலைத்துவிட்டு இன்றும் அந்த இறந்தகாலத்தில் ஒரு தடவையாவது வாழமுடியாதா என ஏங்கி, இறந்தகாலத்திற்கு தமது நினைவுகளை கொண்டு செல்பவர்களாகவே நாம் அனைவரும் உள்ளோம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்காது.

இந்த நிலையில் இந்த சிறுவர்களை மையப்படுத்தி வரும் உலகத்தரமான சினிமாக்கள் எங்களை சிலிர்க்க வைக்கின்றது. இவை எங்கள் தமிழ் சினிமா உட்பட இந்தியச்சினிமா கட்டுண்டுகிடக்கும் பல மாஜைகளைளுக்கு அப்பால் உள்ள பிரகாசமான ஒளியாக தெரிக்கின்றது.
ஒரு நான்கு சண்டைக்காட்சிகள், ஆறு பாடல்கள், அவற்றில் இரண்டு குத்துப்பாட்டுக்கள், கீரோஹிசம், விரசம், கவர்ச்சி என்று மூன்றாம்தரமான நிலையில் இருக்கும் இந்திய சினிமாக்களின் தோலை உரிக்கின்றன இத்தகைய சினிமாக்கள்.


சரி…இன்றைய பகிர்வுக்காக நான் எடுத்துக்கொண்ட ஈரானிய திரைப்படங்கள் சிறுவர் சம்பந்தப்பட்ட மிகப்புகழும், விருதுகளும் பெற்ற படங்களே. உலகப்புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிடியின் திரைப்படங்களில் இருந்து
1996 ஆம் அண்டு வெளியாகிய “த ஃபாதர்” (The father), 1997 ஆம் ஆண்டு வெளியாகிய “சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven), மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளியாகிய “த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise) ஆகிய திரைப்படங்களை நாம் பார்த்தோமானால், முற்றிலும் இந்த திரைப்படங்கள் சிறுவர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டதாகவே உள்ளன. மூன்று திரைப்படங்களை பார்த்து வெளிவரும்போதும் இதயத்தில் ஒரு வலியும் நெருடலும், ஒரு செய்தியும் கண்டிப்பாக இருக்கும். உச்ச வெயிலில் பாலை வனத்தில், வறண்ட மணற்காற்றில் பயணிக்கும் எங்களை ஒரு மெல்லிய ஊற்று அருவி ஒன்று தடவிச்செல்வதுபோல உணர்வுகளை இந்தத்திரைப்படங்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி எம் மனதில் தடவிவிட்டுப்போகும்.

த ஃபாதர் (The father)

தந்தையை இழந்த தனது குடும்பத்தில் தனது தாயார் மற்றும் மூன்று தங்கைகளுக்கும், காப்பரனாக குடும்பத்தில் மூத்தவன் என்ற ரீதியில் தானே உள்ளதாக, தானே உணர்ந்து தனது ஊரில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பட்டணம் ஒன்றில் வேலை செய்துவருகின்றான். முஹ்மூத் என்ற சிறுவன்.
அவன் தொழில் செய்யும் இடத்தில் அவனுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பணமும் வழங்கப்படுகின்றது. அந்தப்பணத்தில் தனது தயாருக்கும், தனது தங்கைகளுக்கும் என பார்த்துப்பார்த்து ஆசை ஆசையாக அவன் பொருட்களையும், துணிமணிகளையும் வாங்குகின்றான். அவற்றை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு தனது ஊரை நோக்கி பயணமாகின்றான்.

ஊர் எல்லையில் சந்திக்க நேரும் நண்பன்வழியாக தெரியவரும் செய்தி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உள்ளூரில் இருக்கிற காவல்துறை அதிகாரிக்கும் அவன் தாயாருக்கும் திருமணம் நிகழ்ந்த செய்தியை அவனால் நம்பமுடியவில்லை. தாயார்மீது கடுமையான கோபம் கொள்கிறான் அவன். அவளையும் தங்கைகளையும் காப்பாற்றும் பொறுப்பை தானே விரும்பிச் சுமந்துசென்றவன் அவன். தன் தந்தையைப்போல குடும்பப் பாரத்தைச் சுமக்க நினைத்தவன். ஒரு தந்தையாக நின்று அக்குடும்பத்தை அவன் நிலைநிறுத்தவேண்டும். இப்படித்தான் அவன் மனம் நினைக்கிறது. இதனாலேயே அவன் பதற்றம் அதிகரிக்கிறது. சிறுவயதுக்கே உரிய துடுக்குத்தனமும் புரியாமையும் வேகமும் எகத்தாளமும் தந்திரமும் அவனிடம் அவ்வப்போது வெளிப்படாமல் இல்லை. ஆனால் அவையனைத்தும் சில கணங்கள்மட்டுமே நிலைத்திருக்கின்றன. மிக விரைவாகவே மறுபடியும் அவன் தந்தை என்னும் கோட்டுக்குச் சென்றுவிடுகிறான்.

தாயை மணந்துகொண்டு தன் சகோதரிகளுக்குத் தந்தையாக இருக்கிற அதிகாரிக்கும் அவனுக்கும் தொடக்கத்திலேயே மோதல் உருவாகிவிடுகிறது. மெல்லமெல்ல அம்மோதல் வலுப்பதில் சிறுவனுடைய இதயம் வெறியுணர்வால் நிரம்பிவிடுகிறது. ஆவேசத்தின் உச்சத்துக்குப் போன சிறுவன் தனக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமையையும் அதிகாரியின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தந்தைமையையும் ஒரே நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளும் தருணத்தை முன்வைத்துப் படம் முடிவெய்துகிறது. தந்தைமை என்பது ரத்த உறவால் உருவாவதில்லை. சட்ட உறவாலும் உருவாக்கப்படுவதில்லை. அது அனைத்துக்கும் மேலான ஓர் உணர்வு. அரவணைக்கிற உணர்வு. தன்னையே வழங்குகிற உணர்வு. அன்பைப் பொழிகிற உணர்வு. எங்கும் எதிலும் வேறுபாடுகளைக் காணாத உணர்வு. பாதுகாப்பை வழங்குகிற உணர்வு. அதைக் கண்டடையும்போது நம் நெஞ்சம் அடையும் பரவசத்துக்கு அளவே இல்லை.

ஒரு கட்டத்தில் காவல் பணியில் சின்னமாக விளங்கக்கூடிய கைத்துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிற சிறுவனை நகரத்தில் கண்டுபிடித்து கைவிலங்கிட்டு மீண்டும் அழைத்து வருகிறார் அதிகாரியான வளர்ப்புத்தந்தை. ஒரு கைதியாக அவரைத் தொடர்ந்து வரும் சிறுவனுக்கும் அவருக்கும் இடையே சாதாரண உரையாடல் எதுவுமே இல்லை. வளர்ப்புத் தந்தைக்கு தன் தரப்பில் எவ்வளவோ சொல்வதற்கிருந்தும் எதுவும் சொல்வதில்லை. அச்சிறுவனுக்கும் தன் தரப்பில் சொல்வதற்கிருந்தும் அவனும் எதையும் சொல்வதில்லை. எப்போதும் இருவருக்கும் ஒரு முறைப்பு. வெறுப்பு கலந்த பார்வை. எரிச்சல். இகழ்ச்சி புரளும் புன்னகை. இவைமட்டுமே அங்கே நிகழ்கின்றன. அதிகாரி ஏமாந்த தருணத்தில் வாகனத்தோடு தப்பிச் சென்றுவிடும் சிறுவனுடைய முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. குறுக்குவழியில் அவனை மீண்டும் பிடித்துவிடுகிறார் அதிகாரி. ஆனால் வாகனம் பழுதடைந்துவிடுகிறது. பாதைகள் மாறிவிட்டதில் திசை குழம்பிவிடுகிறது. உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட திசையைநோக்கி அவர்கள் பாலைவனத்தில் நடக்கத் தொடங்குகிறார்கள். எங்கும் ஒரே வெயில். நாக்கு வறள்கிறது. ஒரு வாய் தண்ணீருக்கு தவியாய்த் தவிக்கிறது நெஞ்சம். அங்கங்கே


தோண்டிவைக்கப்பட்டிருக்கும் ஊற்றுகள் வற்றிப்போய்க் கிடக்கின்றன. கானல்நீராய்த் தெரியும் ஓடைக்கரைகள் அருகில் சென்றதும் ஏமாற்றத்தைத் தருகின்றன. உணவு இல்லை. நீரும் இல்லை. இருவரையும் களைப்பு வாட்டியெடுக்கிறது. அதிகாரி சட்டென ஒரு முடிவெடுத்தவராக சிறுவனுடைய கைவிலங்கை அவிழ்த்து ஓடிப் பிழைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். தப்பிக்கும் கணங்களுக்காக அதுவரை காத்திருந்த சிறுவன் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகாரியைவிட்டு விலகாமல் அவர் அருகிலேயே நடக்கிறான். திடீரென பாலைவனத்தில் சூறாவளிக்காற்று வீசுகிறது. மண்புழுதி எங்கும் பற்றிப் படர்கிறது. பலமணிநேரம் வீசிய புயற்காற்றைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அதிகாரி கீழே விழுந்துவிடுகிறார். புழுதி தணிந்த கணத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒட்டகங்கள் மந்தையாக மேய்வதைப் பார்க்கிறான் சிறுவன். அவனுக்குள் ஒரு நம்பிக்கை ஊற்று சுரக்கிறது. அந்தப் புள்ளியைக் குறிவைத்து ஓடுகிறான். அவன் கணக்கு தப்பவில்லை. சளசளத்தபடி ஓரிடத்தில் நீர் பொங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருகணம்கூட தயங்காமல் திரும்பி ஓடிவரும் சிறுவன் மயக்கமாகி விழுந்திருக்கும் அதிகாரியின் கைகளைப் பிடித்து நீர்நிலைவரை இழுத்துச் செல்கிறான். கரையில் இருவரும் சரிந்துவிழுகிறார்கள். தண்ணீரின் குளுமை அவன் தவிப்புக்கு இதமாக இருக்கிறது. ஒரு கை அள்ளி பருகக்கூடத் தோன்றாமல் உடல்முழுக்கப் படரும் அந்தக் குளுமையில் ஆழ்ந்தபடி கிடக்கிறார்கள். ஒரு தந்தையின் பாதுகாப்பான கரங்களில் இருப்பதைப்போல அந்தத் தண்ணிரின் கரங்களில் அவர்கள் படுத்திருப்பதாகத் தோன்றுகிறது.
தண்ணீர் வலிமையான ஒரு படிமமாகப் படத்தில் இயங்குகிறது. சுட்டெரிக்கும் பாலைக்கு நடுவே தேடிவருகிறவர்களுக்கு ஆதரவாக ஓடிக்கொண்டிருக்கிறது அந்தத் தண்ணீரோடை. தந்தைமை என்பதும் ஒருவகையான ஆதரவு உணர்வு. வாழ்க்கை என்னும் பாலையில் நோய்வாய்ப்பட்டுவிட்ட பிள்ளைகளைக் காப்பாற்றமுடியாமல் தவிக்கிற பெண்ணுக்கு ஆதரவளிக்கத் தூண்டுகோலாக இருந்தது தந்தைமை உணர்வு. முதல்முறையாக சிறுவன் அதிகாரியைப் புரிந்துகொள்கிறான். அவருக்குள் வெளிப்பட்ட தந்தைமை உணர்வையும் புரிந்துகொள்கிறான்.

“சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven)

அலி எனும் சிறுவன் தனது தங்கையின் கிழிந்த சப்பாத்தினை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழங்கு வாங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே சப்பாத்தினை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் சப்பாத்தினை எடுத்துச் செல்கிறான்.
சப்பாத்து தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கை ஜாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.


அண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் சப்பாத்தினை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து சப்பாத்தினை வாங்கி அணிந்து சென்றால் சப்பாத்து தொலைந்ததை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.
தனக்குப் பொருந்தாத அண்ணனின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. மற்ற குழந்தைகளின் பளபளப்பான காலணிகள் அவளிடம் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தை மனதில் தோற்றுவிக்கிறது. மேலும் ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் சப்பாத்தினை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.


அப்படியும் வகுப்பு தொடங்கிய பிறகே ஒவ்வொரு நாளும் அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின்
பரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.
இதனிடையில் தொலைந்து போன தனது சப்பாத்தினை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் என்பது தெரிந்ததும் அண்ணனும் தங்கையும் ஏதும் பேசாமல் மவுனமாக வீடு திரும்புகிறார்கள்.
இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் மூன்றாவதாக வருகிறவர்களுக்கு பரிசு ஒரு ஜோடி சப்பாத்து என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் மன்றாடி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் மூன்றாவதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் சப்பாத்தினை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜதை சப்பாத்து வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.


பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு சப்பாத்தை கொடுக்க ஓடிவரும் சத்தமும், சப்பாத்து தொடர்பான அவர்களது உரையாடலும் ஒலிக்கிறது. இறுதியில் போட்டியில் மூன்றாவதாக வருவதற்குப் பதில் முதலாவதாக வருகிறான் அலி. தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் மூன்றாவதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான்;. மூன்றாவதா..? முதல்பரிசே உனக்குத்தான் என்கிறார் ஆசிரியர். அந்த சிறுவனின் முகம் வாடிப் போகிறது. ஏக்கத்துடன் சப்பாத்துப்பரிசை பாக்கின்றான் அனால் அவனுக்கு தங்கப்பதக்கமும், பெரிய வெற்றிக்கோப்பையும் பரிசளிக்கப்படுகின்றது.


வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் தொங்கிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.
அலியின் சப்பாத்து இப்போது நைந்து கிழிந்து போயிருக்கிறது. தொட்டியின் அருகே அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப் பந்தயம் அவன் கால்களில் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வலியும் ஏமாற்றமும் ஒரு சேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.

“த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise)

டெஹ்ரானில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் எட்டு வயதான மொகமது விடுமுறை மாதங்களைத் தன் பாட்டியோடும் இரண்டு சகோதரிகளுடனும் கழிக்க ஆவலோடு இருக்கிறான். விடுதியில் உள்ள சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வருகின்றனர். மாலை வேளையில் விடுதி அமைதியாக இருக்கிறது. மொகமது மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான். வெகு நேரம் கழித்து மொகமதுவின் அப்பா வருகிறார். பள்ளி நிர்வாகத்திடம், மொகமதுவைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடியாது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் அவனைத் தன்னோடு அழைத்துச் செல்கிறார்.

தங்களுடைய மலைக்கிராமத்தை அடைய அவர்கள் வெகுதூரம் பயணம் செய்கிறார்கள். மொகமது பேரூந்தில் பயணம் செய்யும் போது, தனது அப்பாவிடம் சன்னலுக்கு வெளியே என்ன காட்சிகள் தெரிகின்றன எனக் கேட்கிறான். அவனுடைய அப்பா வெறுப்பாக பதில் சொல்கிறார்.
அவர்களின் கிராமம் வருகிறது. நடக்கும் போதே தனக்குப் பழகிய இடம் வருதுவிட்டதை அறிந்த மொஹமத் உற்சாகமாகத் தனியே ஓடுகிறான். ஊர் எல்லையைத் தொட்டதுமே 'பாட்டி' , 'பாட்டி' என உரக்கக் கூப்பிடுகிறான். அவனுடைய இரு சகோதரிகளும் இவனை வரவேற்க ஒடி வருகின்றனர். மொகமது சகோதரியின் முகத்தைத் தடவி பார்த்து ''போன தடவ விட இப்ப வளர்ந்திருக்க'' என்கிறான்.
மொகமகவும், சகோதரிகளும் பாட்டியைப் பார்க்கத் தோட்டத்திற்கு செல்கின்றனர். பாட்டி பார்க்கும் போது தன்னை மரத்தின் பின்னால் ஒளித்துக் கொண்டு குரல் கொடுக்கிறான். மொகமத் இதைப் பார்த்த பாட்டியின் மனது நெகிழ்கிறது. மொகமதுவின் விடுமுறை நல்ல முறையில் செல்கிறது.
மொகமதுவின் அப்பா தன்னுடைய மனைவி இறந்த காரணத்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு மொகமது தடையாக இருப்பதனால் மரத்தச்சு செய்யும் ஒருவரிடம் மொகமதுவை சேர்க்க நினைக்கிறார். மரத் தச்சு செய்பவரும் கண்பார்வை இழந்தவர் என்பதனால் இதைக் காரணம் காட்டி பாட்டியிடம் சம்மதம் கேட்கிறார். ''உன்னுடைய சுயநலத்திற்காக படிக்க விரும்பும் பையனின் வாழ்க்கையைக் கெடுக்காதாதே'' என பாட்டி கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாள்.


மொகமது பிடிவாதம் செய்து உள்ளூரில் இருக்கும் சகோதரிகளின் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான். பள்ளியில் அவனை அனைவரும் அன்போடு வரவேற்கின்றனர். மொகமதுவின் 'பிரெய்லி' கல்வி முறையும், வாசிப்பும் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். மற்றவர்கள் வாசிப்பதைத் திருத்துகிறான் மொகமத். ஆசிரியர் மொகமதுவை வாசிக்கச் சொல்கிறார். எந்தத் தடையுமில்லாமல் வாசிக்கிறான். பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் மொகமதுவை சுற்றிக் கொள்கின்றனர். இதனைத் தூரத்தில் இருந்து அவன் அப்பா பார்க்கிறார். கோபத்தோடு பாட்டியிடம் சண்டை போடுகிறார்.
மொகமதுவின் ஆர்வத்தைக் கெடுக்க வேண்டாமென்று பாட்டி கெஞ்சுகிறாள்.

ஒருநாள் பாட்டி சந்தைக்கு சென்றிருக்கும் நேரத்தில் மொகமதுவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அப்பா. கடைக்குச் சென்று வரும் பாட்டி, முகமது வீட்டில் இல்லை என்றதும் புரிந்து கொள்கிறாள். முகம் இறுக்கமடைகிறது.
மொகமதுவும், அவன் அப்பாவும் பயணம் செய்கின்றனர். தான் வேலை செய்யும் நிலக்கரி தொழிற்சாலையில் மொகமதுவை உட்கார வைக்கிறார் அவன் அப்பா. மொகமது சுற்றிலும் கேட்கும் பறவைகளின் ஒலி, குதிரையின் கனைப்புச் சத்தம், நீரின் சலசலப்பு ஒலிகளை தன்னுள் மொழிபெயர்த்துக் கொள்கிறான்.
வேலை முடிந்ததும் மொகமதுவும் அவன் அப்பாபவும் மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அப்பா அழைத்துச் செல்லும் பாதையில் கேட்டும் ஒலிகளை வைத்து இது தன்னுடைய கிராமத்திற்கு செல்லும் பாதை இல்லை என தெரிந்து கொள்கிறான். பாட்டியிடம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் மொகமதுவை பலவந்தமாக அழைத்துச் செல்கிறார் அவன் அப்பா.
மரவேலை செய்பவரிடம்; மொகமதுவை விட்டு கிளம்பிச்செல்கிறார். மரவேலை செய்பவர் மொகமதுவிகம் தானும் அவனைப் போல பார்வை இல்லாதவன் தான் என ஆறுதல் சொல்கிறார். மொகமது அழுகிறான். ''ஏன் அழுகிறாய்'' என கேட்கிறார் அவர்;.


"எனக்கு கண் தெரியாத்தால் யாரும் என்னை விரும்புவதில்லை. என் பாட்டிக்குக் கூட என்னைப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆசிரியர் ''கண்பார்வையற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார். நான் கேட்டேன், பிறகு ஏன் கருணையுள்ள அவர் பார்வையற்றவர்களை படைக்கிறார்? அதற்கு ஆசிரியர், ' ஏனென்றால் கடவுளும் கண் பார்வையற்றவர்தான் ' என்கிறார். கடவுளை நாம் நம் விரல் நுனியில் அறிய முடியும் என்று சொன்னார். அதிலிருந்து நான் விரல் நுனியின் ஸ்பரிச்த்தில் கடவுளை அறிகிறேன். என் மனதில் உள்ள இரகசியங்களைக் கூட அவரிடம் சொல்கிறேன்" என்று அழுதுகொண்டே சொல்கிறான் மொகமத். மரவேலை செய்வர் சிறிது நேர மேளனத்திற்குப் பிறகு, "உங்கள் ஆசிரியர் சொன்னது சரி தான்" என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார்.

இங்கு பாட்டிக்கும், அப்பாவுக்கும் விவாதம் வருகிறது. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்புகிறாள். மொகமதுவின் அப்பா போக வேண்டாமென்று தடுக்கிறார். ஆனாலும் கிளம்பி விடுகிறாள் பாட்டி. போகும் வழியில் மயக்கமாகி விழும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா.
உடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறார் மொகம்துவின் அப்பா. பாட்டி அமைதியாக தன்னுடைய நகைகளை எடுத்துக் கொடுக்கிறாள். அன்றிரவே இறந்து போகிறாள்.
மரவேலை செய்பவர் மொகமதுவிற்கு வேலை கற்றுது தருகிறார்- அங்குள்ள சூழலோடு தன்னை இணைத்துக் கொள்கிறான் மொகமத். பாட்டியின் இறப்பைத் தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்து கொள்கிறான் மொகமது. வருத்தத்தில் அழுகிறான் . பாட்டியின் மரணத்தை துர்சகுனமாக நினைத்து மொகமத் அப்பாவின் திருமணத்தை நிறுத்துகின்றனர். மனம் நொந்து போய் மொகமதுவைத் தன்னோடு அழைத்துக் கொள்ள வருகிறார் அவனுடைய அப்பா.
இருவரும் மௌனமாகவே பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது எதிர்பாராத விதமாக பாலம் உடைந்து அற்றில் விழுகின்றான் மொகமத். ஆற்றியல் அவன் அடிததுச்செல்லப்படுகின்றான், அவனைக்காப்பாற்ற அவனது தந்தையும் அற்றில் குதித்து அடித்துச்செல்லப்படுகின்றார். இறுதியில் அவர் நினைவினை இழக்கின்றார். கண் விழிக்கும்போது ஒரு கடற்கரை ஓரம் அவர் ஒதுங்கி இருப்பதை உணர்கின்றார். சுற்றும் முற்றும் பார்த்து மொகமத் எங்காவது தென்படுகின்றானா என அராய்கின்றார், தூரத்தில் அவன் கரையொதுங்கி இருப்பது கண்டு ஓடிச்சென்று அவனை வாரி அணைத்து எழுப்பி பார்க்கின்றாh,; அவனிடம் இருந்து ஒரு சலனமும் இல்லை. அவனை தன் மார்போடு இறுக்கி அணைத்து கதறி அழுகின்றார். அந்த வேளை பறவைகளின் ஒலிகள் கேட்கின்றன. அந்த சத்தங்களையும், சூழலில் நிலவிய தட்பவெப்பத்தையும் கிரகித்து அவனது விரல் நுனிகள் அசைவதுடன் இந்த திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

LinkWithin

Related Posts with Thumbnails