Wednesday, December 16, 2009

கொன்ஸ்பிரஸி தியரி. (Conspiracy theory)


பொதுவாக தியரிகள் என்றாலே அவை சிக்கலானவைதான். ஆனால் தியரிகள் பற்றி கற்க கற்க, அவற்றைப்பற்றி அறிந்து, யதார்த்த வாழ்வின் ஒவ்வொரு செயல்களுடனும் ஒப்பிட்டு உற்று நோக்கும்போது நாம் செய்யும் சிறு செயல்கள் கூட ஒரு அதிசயமான விடயமாகவும், உலகின் பாரிய மாற்றங்கள்கூட சிறு துரும்புபோன்றதாகவும் கூட தென்படவாய்ப்புக்கள் உண்டு.
இவ்வாறான குவான்டம் தியரி, ரிலேட்டிவிட்டி தியரி, ஹெயாஸ்தியரி, போன்ற பல தியரிகள் தொடர்பான விடயங்களை நீங்கள் கண்டிப்பாக அறிந்தோ, கேள்விப்பட்டோ இருப்பீர்கள்.

இந்த வகையில் கொன்ஸ்பிரஸி தியரி ஒரு வகையில் சுவாரகசியமான ஒன்றுதான். வெளிப்படையாக கூறப்படும் ஒரு நிகழ்வு, ஒரு அனர்த்தம், வரலாறு, சம்பவம் என்பவற்றின் உள்ளே நடந்திருக்கும், ஆனால் உலகத்தின் பார்வையில் மறைக்கப்பட்டிருக்கும் விடயங்களை (சதிகளை) பெரும்பாலும் ஆதாரங்கள் அற்று, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஊகத்தின் அடிப்படையில் விவாதிப்பதே கொன்ஸ்பிரஸி தியரி என்று சொன்னால் ஒருவிதத்தில் அது சரியானதே.
தற்கால நிகழ்வுகள், அரசியல் அமைப்புக்கள், ஆட்சிமுறைகள், யுத்தங்களின் நோக்கங்கள், நிர்வாக நடைமுறைகள், வினோதங்கள், அமானுச சக்திகள், விஞ்ஞான முடிவுகள், மருத்துவம், ஊடகம் என பல துறைகளின் உள்ளேயும் இந்த கொன்ஸ்பிரஸி தியரி தாராளமாகவே ஊடுருவிவிட்டது என்பதே தற்கால யதார்த்தம். ஒரு வகையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதிமுதல் உலகத்தமிழர்கள் அனைவர் மத்தியிலும் இந்த கொன்ஸ்பிரஸி தியரி தாராளமாகவே தனது வேலையினை காட்டத்தொடங்கி தற்போதும் அது தொடர்கின்றது என்பது வேறுகதை.

சில உலக நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புக்கள், உலக பரப்புரைகள், இயற்கை அனர்த்தங்கள் பற்றி கொன்ஸ்பிரஸி தியரி, இவைகள் வெளிப்படையாக தெரிபவையாக இருந்தாலும், உலக மக்களின் பார்வையினை மாற்றுவதன் நோக்கமாக அதன் உள் விடயங்கள், சில சதிகள் மூலம் பொய்யாக வழங்கப்படுகின்றன. சில செயல்களின் பின்னால் சதிகள், பொய்கள், மறைப்புக்கள் உண்டு, என தொடர்ந்து விவாதித்து வருகின்றன.
இதேவேளை உலகத்தில் பிரபலமடையவும், உலக மக்களின் சீரான பாதையினை குழப்பவும், நாசவேலைகளை புகுத்தவும், மக்களின் மனங்களை சலனமடையச் செய்யவும் சிலர் இந்த கொன்ஸ்பிரன்ஸி தியரியை கையில் எடுத்து சதி செய்கின்றனர் என அதற்கெதிரான குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் இல்லை.
சரி இன்றைய உலகில் முக்கியமான சில சம்பவங்களுடன் இந்த கொன்ஸ்பிரன்ஸி தியரி சித்தரிக்கும் உண்மைகளை ஆராய்ந்துபார்ப்போம்.

உலகம் வெப்பமயமாதல்; என்பதில் உள்நோக்கம்.
இன்று உலகம் வெப்பமடைகின்றது, சுழல் பாரிய அளவில் மாசடைந்துசெல்கின்றது, இதன் மூலம் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கிவிட்டன, பூமி வெப்பமாதலினால், வடதுருவத்தில் பனிக்கட்டி உருகுதல் முதல் பல்வேறு இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் தோன்றிவிடும், எனவே உலக வெப்பமடைதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என வளர்ச்சியடைந்த நாடுகள் இன்று துள்ளிக்குதிப்பதை அவதானித்திருப்பீர்கள். உண்மைகளை சற்று ஆழமாக சிந்தித்துப்பாருங்கள், பூமி வெப்பமடைதலுக்கும், ஓசோன் ஓட்டை விழுந்ததற்கும், இயற்கைக்கு முரணாக செயற்பாடுகளை செயற்படுத்திப்பார்த்தவர்களும் இந்த அபிவிருத்தி அடைந்த முதலாம் உலக நாடுகளே.
தங்கள் வேலைகள் அனைத்தையும் பக்காவாக செய்து முடித்தபின்னர் இன்று, பூமி வெப்பமாகிவருவதும், காலநிலை மாற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பன அவர்களின் கண்களில் படுகின்றன.

பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமானவர்களே முதலாம் உலக நாடுகளே, அனால், தங்கள் தேவைகள் அனைத்தையும் செய்துவிட்டு, இன்று மூன்றாம் உலக நாடுகளின் முன்னேறத்தை தடுக்கும் ஒரு கபடநோக்க எண்ணமாகவே அவர்கள் இந்த பூமி வெப்பமாதல் என்ற பதத்தினை தூக்கிப்பிடித்து, அவர்களை கிடுக்குப்பிடி பிடித்து பல ஒப்பந்தங்களை செய்து, அவர்களின் தொழில் வளர்ச்சி, அணுத்திறன்களை தடுக்கின்றார்கள் என தற்போது கொன்ஸ்பிரன்ஸி தியரியை கொண்டு பல அறிஞர்கள் மற்றய பக்கத்தினை தெளிவுபடுத்திவருகின்றனர்.
அண்மைக்கால நிகழ்வுகள். ஒப்பந்தங்கள், முதலாம் உலக நாடுகளின் மூன்றாம் உலக நாடுகள் மீதான அழுத்தங்களை மிக அவதானமாக ஒரு தடவை கவனித்துப்பாருங்கள் இந்த விவாதங்களிலும் உண்மை இருப்பதுபோலத்தான் தோன்றும்.

2004 சுனாமி தாக்கம் இயற்கையானது இல்லை.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமித்தாக்கம் இயற்கையாக கடலடித்தடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுனாமித்தாக்கம் காரணமாக இந்தோனேசியா, இலங்கை, போன்ற பல நாடுகளில் பெரும் உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் உண்டாகியிருந்தன.
எனினும் இந்த சுனாமித்தாக்குதல் இயற்கையானது இல்லை எனவும், கடலடித்தளத்தில், பரீட்சித்துப்பார்க்கப்பட்ட ஒரு அணுகுண்டுப்பரிசோதனையோ, அல்லது சக்திமிக்க இரு வாயுக்களை சேர்த்து பரிசீலனை செய்யப்பட்டதாலோதான் இந்த சம்பவம் உண்டானதாக கொன்ஸ்பிரஸி தியரியின்படி அடித்து வாதாடிவருகின்றார்கள் பல அறிஞர்கள்.

இதற்காக காத்திரமான பல எடுத்துக்காட்டுக்களையும், சான்றுகளையும் அவர்கள் காட்டியுள்ளனர். அதாவது 1997ஆம் ஆண்டு அமெரிக்க சி.ஐ.ஏ. உயர் அதிகாரி ஒருவர், கடலின் அடிப்பரபில் சக்தி மிக்க குண்டுகளை வெடிக்கவைத்து நாசகார வேலைகளை செய்யும் அழிவுக்கு தற்போது உலகநாடுகளில் பயங்கரவாத அமைப்புக்களும் விஞ்ஞானத்தில் முன்னேறிவிட்டார்கள் என கூறியதை தொட்டுக்காட்டியுள்ளர் கொன்ஸ்பிரஸி தியரிக்காரர்கள். அதாவது இவரது கூற்று நிரூபிப்பது என்னவென்றால் கடலின் அடித்தளங்களில் மிகச்சக்தி மிக்க வெடிப்புக்களை உண்டாக்கக்கூடிய கண்டுபிடிப்பு உள்ளது என்பதும், அதனால் அழிவுகள் நிற்சயம் என்பதும் ஆகும். தங்கள் வசம் அதை ஏற்கனவே கொண்டுள்ளதனால்த்தான் அவரால் இவ்வாறு ஒரு அறிக்கையினை விடுக்கமுடிந்திருந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை 1944 மற்றும், 1945ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தென் பசுபிக் கடலடித்தளத்தில் நடத்திய அணுகுண்டு பரிசோதனையினை அடுத்து நியூசிலாந்தை இராட்சத அலைகள் தாக்கிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் இறங்கியது பொய்.
20ஆம் நாள், ஜூலை மாதம், 1969 ஆம் ஆண்டு, புஸ் அல்ரின், மைக்கெல் கொலின் மற்றும் நீல் ஆம்ஸ்ரோங் ஆகியோர் சந்திரனை நோக்கி பயணித்த அப்பல்லோ 11 அண்டவெளி ஊர்தி, சந்திரனை தொட்டதாகவும், அன்றைய தினம் அதில் நீல் ஆம்ஸ்ரோங் முதன்முதலாக கால் அடி எடுத்து சந்திரனில் வைத்ததாகவும், பின்னர் அவர்கள் மூவரும் சந்திரனில் இருந்து பூமியை கண்டு படமெடுத்ததாகவும் பின்னர் அங்கு அமெரிக்க கொடியினை நட்டு தமது பயண வெற்றியை கொண்டாடிவிட்டு. பூமி திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் 1969ஆம் ஆண்டு சந்திரனை அடையக்கூடிய அத்தனை துல்லியமான வசதிகள் இருந்திருக்கவே இல்லை எனவும், இது ஒரு ஜோடிக்கப்பட்ட கதை எனவும், உலக மக்கள் அனைவருமே முட்டாள்களாக்கப்பட்டுவிட்டனர் எனவும் கொன்ஸ்பிரஸி தியரிகள் அடித்துச்சொல்கின்றன.
சந்திரனின் எடுத்தவை என வெளியிடப்பட்ட புகைப்படங்களை வைத்தே இவை சந்திரன் இல்லை. சந்திரனைப்போல ஜோடிக்கப்பட்ட ஒரு இடத்தில் இவை எடுக்கப்பட்டன. எனவும் சந்திரனின் பள்ளங்களை அடிப்படையாக வைத்தும், அதேவேளை காற்றழுத்தம் குறைந்து காற்று வீசவே முடியாத இடத்தில் அமெரிக்க கொடி மட்டும் எப்படி பறப்பதுபோல தோன்றுகின்றது என்ற மிகப்பெரிய கேள்வியையும் கொன்ஸ்பிரஸி தியரி கேட்கின்றது.

செப்ரெம்பர் 11 தாக்குதல் எதிர்பாராதது அல்ல.
செப்ரெம்பர் 11 ஆம் திகதி 2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் சம்பமானது, திட்டமிட்டே அமெரிக்காவினாலேயே நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பல நாடுகளின் உள் விடயங்களில் அமெரிக்கா தலையிட எண்ணியதாகவும் கொன்ஸ்பிரஸி காரர்களின் வாதங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
அதாவது இந்த தாக்குதல் அமெரிக்காவால் எப்போதோ தீர்மானிக்கப்பட்டதாகவும், திட்டமிட்ட வகையில் இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதே இதற்கான ஆயத்தங்களை அமெரிக்க மெல்ல மெல்ல ஆரம்பித்துவிட்டதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

அதாவது, குறிப்பிட்ட தினத்தில், அந்த இடத்தில் அதிக மக்கள் வராது இருப்பதற்கான நடவடிக்கைகளை ஆறு மாதங்களின் முன்னதாகவே இரகசியமான முறையில் செயற்படுத்த தொடங்கப்பட்டதாகவும் அடுத்து, விமானம் மட்டும்மோதி, ஒருபோதும் முழுக்கட்டமும் இப்படி சாம்பலாக விழுந்து நொருங்காது எனவும், விமானமோதுகையுடன் உள்ளேயும் சக்திமிக்க குண்டுகள் முன்னதாகவே வைக்கப்பட்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளன எனவும், இத்தனை மாடித் தட்டுக்களை கொண்டிருந்த கீழ்த்தளம் எவ்வளவு பலமானதாக இருந்திருக்கவேண்டும், விமானத்தாக்குதல் காரணமாக ஒருபோதும் பலமிக்க உறுதியான கீழ்த்தளம் கடதாசி அட்டைபோல மடிந்துவிடமுடியாது எனவும் தொடர்ந்தும் வாதிட்டுவிருகின்றார்கள்.

ஆகவே தியரிகள் சில குழப்பங்களை உண்டாக்கினாலும் சிலவேளைகளில் அவை உண்மைகளாகக்கூட இருக்கும், நான் முன்னதாவே சொன்னதுபோல கொன்ஸ்பிரஸி தியரி சுட்டிக்காட்டும் முறைகளும், சதிகளின் புலனாய்வும் அறிவதற்கு ஆர்வத்தையும், சுவாரகசியத்தையும் கூட்டுகின்றதல்லவா? அவை முழுவதையும் உங்களுடன் பகிர ஆசைப்படுகின்றேன், எல்லவற்றையும் ஒரே பதிவில் தந்தால் என்ன நீளமாக இருக்கின்றதே என பலர் வேறு தளங்களுக்கு சென்றுவிடவும் கூடும் எனவே நீங்கள் நினைத்துப்பார்க்காத, முழுமையாக நம்பும் பல விடயங்களும் பொய் என்று கொன்ஸ்பிரஸி தத்துவங்கள் அடித்துச்சொல்கின்றன.
அது பற்றியும் அடுத்த பதிவில் தொடராகப்பார்ப்போம்.
சதிக்கோட்பாடுகள் தொடரும்..

Sunday, December 6, 2009

ஞாயிறு ஹொக்ரெயில் (06.12.2009)

சங்கீத சாகரத்திற்கு இதய அஞ்சலிகள்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த முதன்மை சங்கீத வித்வானும், உலகப்புகழ் பெற்றவருமான சங்கீத பூசஷணம் லயனல் திலகநாயகம் போல் அவர்கள் நேற்று இயற்கை எய்திய செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்தின் அண்ணாமலை பலக்லைக்கழகத்தில் சங்கீத மேற்பட்டத்தை பெற்று, அங்கு கல்வி கற்றவர்களில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த முதலாவது “சங்கீத பூஷணம்” என்ற பட்டத்தை முறைப்படி பெற்றவர் இவராவார்.

இவர், சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்களையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய கல்லாரி சங்கீத ஆசிரியராக இருந்து, அப்போது அங்கு கல்வி கற்ற எங்கள் மீதெல்லாம், அளவு கடந்த அன்புகொண்டு, சங்கீதப்பால் சொரிந்து, இந்த காக்கைகளையும் சுரம்பாடும் குயில்களாக மாற்றிய என் பெருமதிப்புக்குரிய என் குருநாதரும் அவரே ஆவார்.
இலங்கையில் ரூபவாஹினி தொலைக்காட்சி, மற்றும் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தர கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

இலங்கை தவிர, இந்தியா, சிங்கப்பூர், மலேசிய மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இசை கச்சேரிகளை நடத்திய இவர் யாழ்ப்பாண கர்நாடக இசை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளார்.
இறுதியாக உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுக்கொண்ட இவர் நேற்று சனிக்கிழமை (05.12.2009) இயற்கை எய்தியபோது அவரது வயது 68.
ஒரு உன்னதமான, பாராட்டி வளர்த்த ஒரு குருநாதரை தொலைத்துவிட்ட பரிதவிப்புடன், அவரது பிரிவில் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருடன் அவரது மாணவனான நானும் இணைந்துகொள்கின்றேன்.

தமிழே உன்னை தாலாட்டி மகிழ்ந்தே பாடுவேன்…
அமரர்.எல்.திலகநாயகம் அவர்களுடைய கச்சேரியில் இருந்து…


இந்திய பிரதான கட்சிகள் கையில் எடுத்திருக்கும் பிரமாஸ்திரங்கள்.
இந்திய பிரதான கட்சிகளில் ஆளும் கட்சியான காங்கிரசும், பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பியும் தற்போது ஒருவரை ஒருவர் தாக்க பிரமாஸ்திரங்களை மாறி மாறி ஏவத்தொடங்கியுள்ளனர் என்பது இப்போது தெரியவருகின்றது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் இன்றாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் பி.ஜே.பிக்கு முக்கியபங்கு உண்டு என எப்போதோ அறிந்த விடயத்தை, தற்போது அறிக்கையாக்கி காங்கிரஸ் கொக்கரித்து, பி.ஜே.பி மேல் இனி தலையெடுக்கமுடியாதபடி பாரிய அடியும், அழுத்தமும் கொடுக்க முனைந்துகொண்டிருக்கும் வேளையில், பி.ஜே.பி. காங்கிரஸை வீழ்த்த எடுத்துள்ள பிரமாஸ்திரம் ஈழப்பிரச்சினை. அதாவது ஈழத்தில் இந்த அழிவுக்கும், அங்கு நடந்த அவலங்களுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்ற மற்றும் ஒரு எப்போதோ அறிந்த விடயத்தையும் அஸ்திரங்களாக கைகளில் எடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்னைய தினம் பி.ஜே.பி. ஈழத்தமிழர்கள் மேல் காட்டிய அளவு கடந்த திடீர் அக்கறையும், புதுப்பிக்கப்பட்ட காலாச்சார, இரத்த உறவும் ஆச்சரியத்தையே உண்டாக்கியுள்ளது.

இதிலும் சுஸ்மா சுவராஜ் அம்மையார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, தனது தாய்மையின் உணர்வையும், இரத்த உறவு தாகத்தையும், இடைக்கிடையே தமிழிலும், பாரதியார் பாடல் வரிகளை குறிக்கோள் இட்டு பேசிய அக்கறையினையும் கண்டு, அங்கிருந்த ம.தி.மு.க கட்சியினரே திகைத்துப்போய்விட்டனராம். அத்தனை ஆவேசமாக, ஈழத்தின் அவலங்களையும், அதற்கு காரணமாக இருந்த காங்கிரஸையும் ஒரு பிடி பிடித்திருக்கின்றார்.
உண்மையில் சந்தோசம்தான், கொலை செய்யப்படும்போது தடுக்காமல், பிணம் எரிந்துகொண்டிக்கும்போது, கொலைக்கு உடந்தையானவர்களைப்பார்த்து கத்துவதில் ஈழத்தமிழர்களுக்கு ஏதும் நன்மைகள் கிடைத்துவிடப்போவதாக தெரியவில்லை.

குறும்படம்.
நாங்கள் பூமியின் கீழே (சிங்களக் குறும்படம்)


சர்தாஜி ஜோக்
ஷர்தாஜி -நான் இறப்பதென்றால் எனது பெரிய தந்தையாரைப்போல தூங்கிக்கொண்டே சுகமாக இறக்கவேண்டும். அவர் இறக்கும்போது 44பேர் அவர் கூடவே இறந்தார்கள் தெரியுமா?
மற்றவர் - அதெப்படி உன் பெரியப்பா தூங்கத்தில் அல்லவா இறந்தார்??
ஷர்தாஜி – ஆம்…அவர் பஸ் வண்டி ரைவராக அல்லவா இருந்தார்.

Saturday, December 5, 2009

கிறிஸ்மஸ் விருந்தாக த்ரீ இடியட்ஸ்

எதிர்ரும் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் விருந்தாக திரைக்கு வரவிருக்கின்ற பொலிவூட் திரைப்படம் த்ரீ இடியட்ஸ் (Three Idiots) இரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஸி ஆகிய மூவரும் பிரதான பாத்திரங்களாக த்ரீ இடியட்ஸாக நடித்துள்ளனர்.
இவர்களுடன், கரினா கபூர், போமன் ஈரானி அகியோர் இடம்பெற்றுள்ளனர். இதை தவிர இந்த திரைப்படத்தின் விசேடமான ஒரு பாத்திரத்தில் கஜோலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விது வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் தயாராகி வெளிவருவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது இந்த த்ரீ இடியட்ஸ் திரைப்படம்.
சந்தனு மௌய்ட்ரா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஷர்மன் ஜோஸி இந்த திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார் என்பது சிறப்பான அம்சமாகும்.

இந்திய பிரபல ஆங்கில எழுத்தாளர் சேட்டன் பகத்தினுடைய “பைவ்பொயின்ட் ஸம்வன்” (Five Point Someone) என்ற நாவலினை வைத்தே இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
“இந்த திரைப்படம் எடுப்பதற்கு தன்னிடம் அதன் இயக்குனர் முறைப்படி அனுமதி பெற்றிருந்ததாகவும், தான் இந்த திரைக்கதையில் எந்த பங்கினையும் கொள்ளவில்லை என்றும், இருந்தபோதிலும் சில மாற்றங்களை செய்யவும், இயக்குனர் தன்னிடம் அனுமதி பெற்றதாகவும், இருப்பினும் இறுதியில் அந்த திரைப்படத்திற்குரிய இறுதி திரைக்கதை அமைப்பு முழுவதையும் தனக்கு காண்பித்தாகவும், அந்த திரைக்கதையும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் சேட்டன் பகத் கூறியுள்ளார்.

இதேவேளை இவருடைய பிற நாவல்களான “வன் நைட் அட் த கோல் சென்டர்”
(One Night @ the Call Center) “ஹலோ” என்ற திரைப்படமாகவும், “த்ரீ மிஸ்ரேக் ஒவ் மை லைவ்”( The Three Mistakes of My Life) 3M என்ற திரைப்படமாகவும் எக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

த்ரீ இடியட்ஸ் திரைப்படத்தின் கதை மூன்று டபிள் ஐ.ரி. (IIT) மாணவர்கள் பற்றிய ஒரு கதை. இந்த கதையில் குறும்புத்தனம், இவர்களின் இலட்சியங்கள், தங்களுக்குள்ளான சவால்கள், அவர்களின் போராட்டங்கள் என்ற சகலதும் அடங்கியிருக்கும் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அடுத்து ஒரு முக்கிமான விடயம் அமீர்கான், மாதவன் அகிய நாற்பதுகள் கடந்த இரண்டு நடிகர்களையும், 30கள் கடந்த ஷர்மன் ஜோஸியையும் மீண்டும் 21 வயதுக்கு கொண்டுவந்த மாயம்தான். இந்த திரைப்படத்தில் மூவரும் இளமைத்தோற்றத்திலேயே காட்சியளிப்பது அனைவரையும் திரையில் அதிசயிக்கவைக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
(வேட்டைக்காரன் ரொம்ப சேட்டைக்காரனாகும் பச்சத்தில் த்ரீ இடியட்ஸ்ம், ஹொலிவூட் த்ரீ டி திரைப்படமான “அவதாரும்” மனதை ஆற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்)

LinkWithin

Related Posts with Thumbnails