Thursday, April 28, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள்…. 04


அந்த பேரிரைச்சல் தமிழர்களின் போராட்ட வலுவின் புதியதொரு உத்வேக பரினாமமாக கேட்டு, தென்னிலங்கையை நடுங்கவைத்தது. ஜூலை மாதம் 05ஆம் நாள் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தின் மூலம் ஈழத்தமிழரின் போராட்ட வலு உச்சம் கண்டுள்ளது என உலகம் வியந்துபார்த்தது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஒன்றே.

மறுமுனையில் இந்தியா, இலங்கையினை தனது வலைக்குள் விழவைப்பதற்கான திட்டங்களை செவ்வனே தீட்டிக்கொண்டிருந்தது. அதேவேளை அரசியல் தந்திர சாலியான ஜூலியன் ரிச்சர்ட் ஜெயவர்த்தன என்ற இயற்பெயர் கொண்ட அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அந்த வலையினை வெட்டி தன் வலைக்குள் இந்தியாவையும், தமிழ் போராட்ட குழுவையையும் ஒருமிக்க முடிய சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார்.

சரி… என் பார்வைக்கு வருகின்றேன்…
இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும்போது திடீர் என மாலை மங்கும் பொழுதில் ஒருநாள் யாழ்நகரின் கிழக்கு பகுதியில் போர் விமானங்கள், ஹெலி கொப்ரர்களின் சஞ்சாரம் திடீர் என்று அதிகரித்தது. இரண்டு தரப்பினரிடையிலான துப்பாக்கிச் சூட்டு பரஸ்பர வேட்டுக்கள் அந்த பகுதியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அதே பிரதேசத்தை நோக்கி சியாமா செட்டி விமானங்கள், அவ்ரோ விமானங்கள், இரண்டு ஹெலிகொப்ரர்கள் என அதே பரப்பினை மையமிட்டே இடைக்கிடை தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தது.

அந்த பகுதியில் அப்போது இருந்த ஸ்ரீ லங்கா இராணுவத்தின் நாவற்குளி இராணுவ முகாமை அண்டிய பகுதியில் துருப்பு காவி விமானம் ஒன்று பழுதடைந்த நிலையில் தரைதட்டியுள்ளதாகவும், அதை அழிப்பதற்கு போராளிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதை எதிர்த்தே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தன.
அந்த நாளில் இருளின் மையத்தில் விமானங்களின் விளக்குகளின் அணிவகுப்பு இப்போதும் என் கண்களுக்குள் நிற்கின்றன.
இருந்த போதிலும், வான்படையினரின் உதவியுடன், இராணுவத்தினர் போராளிகளின் எதிர்த்த தாக்குதல்களை சமாளித்தவண்ணம் விமானத்தை பாதுகாப்பாக நாவற்குளி முகாமுக்குள் இழுத்து சென்றுவிட்டனர்.

இவ்வாறான சம்பவங்களுடனேயே ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் கறுப்பாகவே இருக்கும் ஜூலை மாத முற்பகுதி சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் மறுமுனையில் இந்தியாவுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைநோக்கி பல் இழிக்க ஆரம்பித்தது. இந்த வேளையில் அப்போதைய செய்திகளில் முதற்கட்டமாக இந்தியாவின் சிறப்பு தூதுவர்கள் வருகை தரவுள்ளதாக செய்திகள் வரத்தொடங்கின.

பூரி, குப்தா வருகை
இந்தியாவின் உதவிப்பொருட்களை இப்போது இலங்கை அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் கொண்டுவருவதாகவும், அதேவேளை இந்தியாவின் முதற்கட்ட தூதுவர்களாகவும், போராளிகள், மற்றும் அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்த
கர்த்தீப் பூரி, கப்டன் குப்தா அகியோர் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டனர் என இந்திய செய்திகள் சொல்லின.

உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்றனர்தான். ரீயூசன் முடிந்து வீட்ட போகும்போது நல்லூருக்கு முன்னால் என்னடா சனம் என்று தண்ணி தொட்டியில் ஏறி நின்று எனது கண்களால் இந்த புண்ணியவான்களை பார்த்திருகின்றேன்.
யார் வந்தாலும் நம்பி வளவளக்கிறதுதானே எங்கட சனத்தின்ட பழக்கம், சில அம்மாமார், மொழிதெரியாதை இவையிட்ட, “அப்பனே ராசா நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும்!!! ஷெல்லால அடித்து சாக்கொல்லுறாங்கள், பொம்மறாலை வானத்திலை நிண்டு அடித்து கொல்லுறாங்கள், கடலிலை வந்து நின்று அடிக்கிறாங்கள், பட்டினி போடுறாங்கள், எத்தனை பேர ராசா நாங்கள் காவு கொடுத்துவிட்டு நிற்கிறம் என்று சொல்லி ஆழதிச்சினம்”.

பூரியும், குப்தாவையும் சும்மா சொல்லக்கூடாது, சீரியஸாக படு சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அந்த அம்மா மாரை ஆறுதல் படுத்திவிட்டு லான்ஸர் காரிலை ஏறி கிழம்பினார்கள்.

மறுநாள் இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய சம்மதித்துள்ளதாகவும், இந்திய பிரதமர் ராஜீவின் பணிப்பின்பேரில் போராட்டக்குழுத்தலைவரை டில்லிக்குவர அவர் அழைத்துள்ளதாக இவர்கள் இரண்டுபேரும் தெரிவித்துள்ளதாகவும் செய்தி இதழ்கள் தெரிவித்தன.

சிங்களவன் பயந்திட்டான் கண்டியோ! இந்தியா எண்டால் சும்மாவே!! பாரான் என்ன நடக்கப்போகுதென்று, ஏதோ இந்தியா நல்ல ஒரு முடிவை தரப்போகுது எண்டது சந்தோசம்தான்..என்று இப்போது போல அப்போதும் எங்கட பேய்த்தரவழிகள் கதைச்சுக்கொண்டுதான் இருந்திச்சுதுகள்…

இலைகள் உதிரும்…

Tuesday, April 12, 2011

ஹொக்ரெயில் - 12.04.2011

ரஜினி ஜோக்கும் ஹிந்தி குரோதமும்.

தற்போது வட இந்தியாவில் ஷர்தாஜி ஜோக்குகளுக்கு சமனானதாக ரஜினி ஜோக்ஸ் என்ற தொனியில் எஸ்.எம்.எஸ்கள், வலைப்பதிவுகள், நகைச்சுவை இணையசெய்திகள் என்பன பிரபலமடைந்துவருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள், ரஜினி ரசிகர்களை பெரும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான ஜோக் ஒன்றை பாலிவூட் சுப்பர் ஸ்ரார் அமிதாப் பச்சன் தன் ரூவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பவே,
தான் ரஜினியை கேவலப்படுத்தும் விதமாக அதை பகிரவில்லை என்றும், அவர் எப்போதுமே தனது பெருமதிப்புக்குரிய நண்பர் என்றும் தெரிவித்துக்கொண்டதுடன், அதற்காக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இருந்தபோதிலும் இவ்வாறான ஜோக்குகள், ரஜினி ஜோக்குகள் என்ற விடயப்பரப்புக்குள் வந்தமை, ஹிந்தி மேலாதிக்க குரோத மனப்பான்மையின் வெளிப்பாடு என்பதையே தெளிவாக காட்டுகின்றது.


எந்திரன் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் சிகரத்தை தொட்டுக்கொண்டமையும், ரஜினிகாந்த் என்ற தென்புல நடிகர் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தன்னை நிலைநாட்டிக்காட்டியமையும், வடக்கு பக்கம் எப்போதும் உள்ள குரோதத்தை மீண்டும் காட்ட வழிகோலியுள்ளமையின் வெளிப்பாடாகவே இதை கருத்தில் கொள்ளமுடிகின்றது.
80களின் ஆரம்ப காலங்களிலேயே தென்னிந்திய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்பவர்கள் ஹிந்தியிலும் வெற்றிகளை குவித்தபோது அதை பொறுக்காது திட்டமிட்டு அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்த குரோத நெஞ்சங்கள் அல்லவா அவர்கள்!

எந்தகால கட்டத்திலும் தெற்கின் பெருவளர்ச்சியையும், விஸ்வரூபங்களையும் வடக்கு ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ போவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகியுள்ளது.
அத்தோடு இப்போது ரஜினி போல உள்ள “பேவரிட் ஹீரோ” ஒருவர் கிரிக்கட் ஆடி அத்தனை பந்துகளையும் எல்லைக்கு வெளியே அனுப்புவதுபோன்ற விளம்பரம் ஒன்றையும் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது.
திராவிடத்தின் வளர்ச்சிகண்டு ஆரியம் கொதிப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லையே!!

வீழ்வது யாராகினும் வாழ்வது நானாகட்டும்!!

நாளை தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது அனைவரின் ஆர்வத்தையும் அந்தப்பக்கம் திருப்பியுள்ளது.
மக்களுக்கான நலத்திட்டங்கள், பாரிய சவால்மிகுந்த பொருளாதார பாதைக்கு முகம்கொடுத்து முன்னேற்றகரமான திட்டங்களை முன்வைத்து, மக்களை வளப்படுத்தும் நலத்திட்டங்களை யாராவது அறிவிப்பார்களா? என்று பார்த்தால், மாறிமாறி வசைபாடுவதே முக்கியம் பெற்றுள்ளது இன்னும் ஏனைய சமுதாயங்களை எட்டிப்பிடிக்க நாம் எவ்வளவோ தூரம் செல்லவேண்டி உள்ளது என்பதையே காட்டி நிற்கின்றது.
ஏதோ மக்கள் சக்தியே அரசியல்வாதிகளின் புண்ணியத்தில்த்தான் ஓடிக்கொண்டு இருப்பதுபோன்ற கட்சிக்காரர்களின் விளம்பரங்களை கண்டு அடக்கமுடியாத ஆத்திரம்தான் ஏற்படுகின்றது.


தமிழர்களை ஏனைய இனங்கள்தான் அடக்கவும், ஒடுக்கவும், கேவலப்படுத்தவும் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றார்கள் என்று பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகள்தான் அவ்வாறான ஏனையவர்களின் சிந்தனைகளுக்கு வழிகோலிநிற்கின்றனர் என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றனர்.
மமுக்கள் கூட்டம் ஒரு ஆட்டுமந்தைபோலவும், தாமே தேவலோக மீட்பர்களாகவும் எண்ணும் எண்ணங்கள் மக்களால் சரியான முறையில் கழையப்படவேண்டும்.
கட்சி, அரசியல், அரசு என்பன மக்கள் சேவர்களே தவிர மக்கள் அவர்களின் சேவகர்கள் அல்லர்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் “வீழ்வது நாமகினும் வாழ்வது தமிழாக வேண்டும்” என்று சொன்ன திருவாய்… இன்று (இன்று அல்ல என்றும்) வீழ்வது யாராகினும் வாழ்வது நானும் என் குடும்பமும் ஆகட்டும் என்று வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது தமிழ்நாட்டின் சாபக்கேடே.
அதைவிடச்சாபக்கேடு இந்தப்பக்கம் முதலை, அற்தப்பக்கம் கொடுநாகம் என்ற தலையெழுத்தே இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு!

இன்றைய காட்சி

கல்யாணம்…கல்யாணம்…

ஆயிரம் கல்யாணம் உலகத்தில் நடக்கலாம் ஆனால் ரோயல் கல்யாணம், பிரமாண்ட கல்யாணம் அல்வா?
இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளது இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - ஹேட் திருமண நிகழ்வுக்கு. உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் திருணம் என்றால் சும்மாவா என்ன?
இந்த நிலையில் அண்மையில் திருண நிகழ்வுகள் சம்பந்தமான நிகழ்வொழுங்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி
எதிர்வரும் 29 ஏப்ரல் (நிகழும் கர வருடம், சித்திரை 15, வெள்ளிக்கிழமை சுவாதி நட்சத்திரமும், மிதுன லக்கினமும், கூடிய சுபமூகூர்த்த வேளையில்! ஹி..ஹி..ஹி..) இலண்டன் வெட்மின்ஸ்ரர் அபேயில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
0830 BST (0730 GMT; 3:30 a.m. EDT): பிரதம விருந்தினர்கள் வெட்மின்ஸ்ரர் அபேயில் ஒன்று கூடுவர்.
110 a.m. BST (after 0900 GMT; 5 a.m. EDT): ரோயல் குடும்பத்தினர் நிகழ்விடத்திற்கு வந்து சேருவர். இறுதியாக மகாராணி இரண்டாவது எலிசபெத்தும் கோமகனும் வந்து சேர்வார்கள். இறுதியாக மணமக்கள் இளவரசர் ஹரியால் அழைத்துவரப்படுவர்.
1100 BST (1000 GMT; 6:00 a.m. EDT): மணமக்கள் அறிமுகத்துடன் திருமண நிகழ்வுகள் இடம்பெறும்.
1215 BST (1115 GMT; 7:15 a.m. EDT): இளவரசர் வில்லியம் தனது புதுமனைவி சகிதம் அபேயில் இருந்து பக்கிங் காம் அரண்மனைக்கு பவனிசெல்வார்.
1325 BST (1225 GMT; 8:25 a.m. EDT): புதுத்தம்பதியினரும், குடுபத்தினரும் அரண்மனை பல்கனியில் ஒருமித்து காட்சியளிப்பார்கள்
1330 BST (1230 GMT; 8:30 a.m. EDT): உள் அரங்கில் மகாராணி தலையில் விருந்தினருக்கான உபசரிப்புக்கள் நிகழும்.
எனவே அன்றையதினம் அனைவரும் இந்த நிகழ்வகளை பி.பி.ஸி, ஸ்கை போன்ற தொலைக்காட்சிகளில் பார்த்து மணமக்களை ஆசீர்வதித்து விசேடமாக உங்கள் வீடுகளிலேயே சiமைத்து உணவருந்தும்படி அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனவாம் 

மியூசிக் கபே
சுஜாதா…தமிழ் சினிமாவில் கண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நடிகை. ஆரம்ப காலங்களில் அவர்கள், அவள் ஒரு தொடர்கதைபோன்ற கே.பியின் படங்களில் நிலைத்து நின்று பெயர் சொல்லும்படியான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஒரு அற்புதமான நடிகை.
இன்றும் நினைவில் நிற்கும் “விதி”, “அந்தமான் காதலி” போன்ற படங்களில் தனககேயான தனிமுத்திரை பதித்து சென்றவர்.
அவருக்கு அஞ்சலியாக இந்தப்பாடல்…

இந்தவார வாசிப்பு

எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
எனக்கு மிகத்தேவையானதொரு புத்தகம் என்று தேடி வாங்கி வாசித்துக்கொண்டதல்ல, மனதில் நிறுத்திக்கொண்ட புத்தகம் இது.
வாழ்க்கையில் பலதரப்பட்டவர்களுடன் நாம் பழகிவருகின்றோம், அவர்களில் தாராளமாக எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை சந்திக்கவேண்டி வரும். இந்த நிலையில் அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் எப்படி வெற்றி கொள்வது என்பதே நமக்கு சிக்கலை தோற்றுவித்துவிடும்.
அந்த வகையில் இந்த நூலின் ஆசிரியர் அபிராமி யதார்த்தமாக மிக இலகுவான நடைமுறையில் பல விளக்கங்களுடன் பல தகவல்களை ஆணித்தரமாக தந்துள்ளார்.
சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும் என்பதுடன், வாழ்வின் தடங்கல்களாக நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணக்காரர்களை விரோதித்துக்கொள்ளாமல், அவர்களையும், அவர்களது கருத்துக்களையும் வெற்றி கொள்வது எவ்வாறு என்பதையும் மிக தெளிவாக கூறியுள்ளார் அபிராமி.
கண்டிப்பாக வாசித்துப்பாருங்கள்.

இன்றைய புகைப்படம்


ஜோக் பொக்ஸ்
இரண்டு கைராசிக்கார திருடர்கள், ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதிவாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில் ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்றுகொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ பொலிஸாருக்கு தெரிந்து அடுத்த ஸ்ரேசனில் இவர்களை பிடிக்க பொலிஸார் ஆயத்தமாக இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே பொலிஸாரை பார்த்துவிட்ட திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும் இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர். ஒருவன் தனது யடாமுடியினுள் வைரத்தை ஒழித்துவைத்தான், மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்.

சோதனை போட்டுக்கொண்டு வந்த பொலிஸார் இவர்களிடம் வந்ததும், இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து யடாமுடிக்குள் வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர். முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும் “அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்றதிருடனைப்பார்த்து கண்ணடித்தான். மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பொலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு.. பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.

Wednesday, April 6, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …03

ஒபரேஷன் பூமாலை….

வான்வெளியில் வழமைக்கு விரோதமான பேரிரைச்சல்களும், வித்தியாசமான பெரிய விமானங்களும், மக்களை ஒருகணம் குலைநடுங்க வைத்தன.
பேரிழவு வந்ததோ! குலத்தோடு கைலாயம்தானோ என்ற எண்ணங்களில் மக்கள் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள்.
சுமார் ஏழு மிகப்பெரிய விமானங்கள் அன்று வான் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் 10 நிமிடங்கள் ஆனாலும் எந்தவொரு குண்டு சத்தங்களும் கேட்டதாக தெரியவில்லை.
மாறாக அந்த விமானங்களில் இருந்து பல சிறிய பரசூட்டுக்கள், பொதிகள் என்பன விழுந்துகொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தன.
அதற்குள் உத்தேசமான செய்தி ஒன்று மக்கள் மத்தியில் ஆறுதல் படும் அளவுக்கு கிடைத்திருந்தது. வந்திருப்பவை இந்திய “மிராஜ“; இரக விமானங்கள் என்றும், அவற்றில் இருந்து உலர் உணவுப்பொதிகள் போடப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், செய்திகள் பரவின.


பிறகென்ன அன்றைய விடலைத்தர இளைஞர்கள், முந்தி அடித்துக்கொண்டு உணவுப்பொருட்கள் விழும் இடங்களுக்கு சந்தோசத்துடன் ஓடினார்கள்.
குறிப்பிட்ட சில நேரத்திற்குள் பெருமளவிலான உலர் உணவு பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன. குறிப்பாக, பயறு, பருப்பு உட்பட்ட தானியப்பொருட்கள், பிரட் வகைகள், குழந்தைகளுக்கான அமுல் பால்மா டின்கள் என்பவற்றை என் கண்காளல் பார்த்தேன்.
எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்பேர் எம் பக்கத்தில் பக்கபலமாக இருக்கின்றார்கள், எமக்காக இந்தியாவே இருக்கின்றது! பாரதம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும், எல்லாவற்றுக்கும்மேலாக எங்கள் எம்.ஜி.ஆர் இருக்கும்வரை எமக்கு எந்த கவலையும் இல்லை! தானாடாவிட்டாலும் தசை ஆடுமல்லவா!!
என்பன போன்ற பலதரப்பட்ட சம்பாசனைகள், அடிபட்டு நொந்துபோய், இருந்த மக்கள் மத்தியில் இந்த சம்பவத்தின்பின் ஒரு உற்சாகமாக பரவிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் ஒரு செய்தி இளைஞர்கள் மத்தில் போய்க்கொண்டிருந்தது. தோலைக்காட்சியில் அப்போது கொழும்பில் இடம்பெற்ற இந்திய - இலங்கை ரெஸ்ட்போட்டியின்போது சிறிகாந்த் துடுப்பெடுத்து ஆடும்போது இலங்கை பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து “தமிலகொட்டி” “கொட்டி” (தமிழ்ப்புலி) என்ற சத்தங்கள் அதிகமாக வந்ததாகவும், சிறி காந்த் அந்தப்போட்டியில் 50 அடித்து விட்டு அவர்களை நோக்கி பட்டை ஆவேசத்துடன் தூக்கி காட்டியதாகவும் பேசிக்கொண்டார்கள்.
இவ்வாறான இந்திய அதிவிரோத நிலை தென்னிலங்கையில் தலை தூக்கியது. சிறி லங்கா அரச சார்பான ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தியா பற்றி வசைமாரி பொழியப்பட்டுக்கொண்டிருந்தது.

பெரிய ஆச்சரியம் என்ன என்றால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் வந்து போனதன் பின்னர், அன்று முழுவதும் எந்தவொரு ஷெல், தாக்குதலோ, விமானத்தாக்குதல்களோ எதுவும் இடம்பெறாமல் வழமைக்கு விரோதமாக எந்தவொரு குண்டு சத்தங்களும் அற்ற ஒரு பொழுதை நீண்ட நாட்களின் பின்னர் அனுபவிக்கக்கூடியதாக இருந்தது அன்று.
அந்த சந்தோசம் அவ்வளவு நீண்டதாக இருக்கவில்லை. மறுநாளே யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களில் விமானத்தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் முருகன் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக போற்றப்படும் செல்வச்சந்நிதி ஆலயத்தின்மீதும் கடும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த கோவிலின் மிக உயரமான அதேவேளை அழகான சித்திரத்தேர், முற்றுமுழுதாக குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்டது.
அதேவேளை சொல்லி வைத்தாலப்போல், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆலயங்களை மையமாக வைத்து அடுத்து அடுத்து வான் தாக்குதல்கள் அப்போது இடம்பெற்றன.

ஒபரேஷன் லிபரேஷன்.

யாழ்ப்பாணத்தை பொதுவாக வலிகாமப்பிரதேசம் எனவும், ஏழு தீவுகள் அடங்கிய தீவகம் எனவும், தென்மராட்சி எனவும், வடமராட்சி எனவும் நான்காக பிரிக்கலாம். இந்த வகையில் சிறி லங்கா அரசாங்கத்தால், அப்போது வடமாராட்சியை கைப்பற்றி தொடராக யாழ்ப்பிரதேசம் முழுமையாக கைப்பற்ற எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த பயங்கர இராணுவ நடவடிக்கையே ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சிறி லங்கா அரசாங்கத்திற்கு பெருமெடுப்பிலான உதவிகளை செய்தவண்ணம் இருந்தன.
மேலும் மேலும் மக்கள் மீதான தாக்குதல்களும் உச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுக்கொண்டிருந்தன.

சரமாரியன ஷெல் வீச்சுக்களால் நாளாந்தம் பெருமளவிலானவர்கள், மடிந்துகொண்டிருந்தார்கள். பாரிய தாக்குதல்கள் மூலம் வடமாராட்சியில் இருந்து அங்கிருக்கும் நெல்லியடி என்ற இடம்வரையும் இராணுவத்தினர் முன்னகர்ந்து, நெல்லியடியில் இருக்கும் முக்கிமான பெரிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரியில் பாரிய முகாமிட்டு அங்கிருந்து பாரிய நடவடிக்கைகளை எடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்…
வந்து சேரும் செய்திகள் ஒவ்வொன்றுமே மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கிக்கொண்டிருந்தன. எல்லாம் ஒரே அடியாக முடியப்போகின்றதா என்று பயந்துகொண்டிருந்தனர்.
“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”. இலங்கை அதற்கு ஒரு பூச்சியைப்போல, தொடர்டந்து சேட்டை விட்டால் பார்த்துக்கொண்டா இருக்கப்போகின்றார்கள், அடித்து தூக்கி எறியமாட்டார்களா? என்று பேசி தம்மையும், சுற்றத்தாரையும் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார்கள் சில பெரியவர்கள்…

இப்படி பீதியுடனும், அவநம்பிக்கையுடனும், நாளை என்ற பெரிய பயங்கரத்துடனும் போராடிக்கொண்டிருக்கும்வேளையில்….. நெல்லியடி மட்டும் அல்ல முழு இலங்கையுமே ஒரு கணம் அதிர்ந்தது…
-இலைகள் உதிரும் -

Tuesday, April 5, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …02

" எல்லாச்சாலைகளும் ரோமுக்குத்தான் செல்கின்றதோ என்னமோ" ! அந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் உயிருக்கஞ்சி ஓடும் பாதைகள் எல்லாம் திடீர் மாற்றத்திற்கு உள்ளாகும் "அகதிமுகாம்களையே " சென்றடைவதாக இருந்தன.

ஓடுவார்கள் ஓடுவார்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள், கைகளில் அகப்பட்ட முக்கிய பொருட்களும், தமது உயிர்களுமே அவர்களுக்கு அப்போது சொந்தமாக இருக்கும். கெட்டதிலும் நன்மைகளாக பல நன்மைகளும் இந்த ஓட்டம்காணும் சமுதாயத்திற்கு அப்போது இல்லாமல் போனதும் இல்லை. எத்தனையோவருடங்களாக முகம்கொடுத்து பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.

பாடசாலைகளில் ஏதிலிகளாக வந்து தங்கும் மக்களுக்கு, அடுத்த ஆபத்து தமக்குதான் என்பதையும் உணர்ந்துகொண்டு முன்னின்று அவர்களைத் தேற்றும் நடவடிக்கைகளில் அயல் ஊர் மக்கள் ஈடுபடுவதையும், அங்கே அவர்கள் தங்குவதற்கு உரிய அத்தியாவசிய உதவிகளை வழங்குவதையும் கண்டு அந்த சிறுவயத்திலேயே என்னையும் அறியாமல் கண்கசிந்துள்ளேன். இயைபாக்கம் அடைவது உலகியலில், விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை என்பதை நிரூபிப்பதுபோல காலப்போக்கில், தொடர்ந்து முகம்கொடுத்துவரும் துயரங்களும், இழப்புக்களும் அவர்களுக்கு புழக்கமாகிவிட்டிருந்தன. வாழ்க்கையில் விரக்தி, நாளைகள்மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையீனம், வெறுப்பு என்பன அவர்களை ஆட்கொண்டிருந்தது மட்டும் இன்றி இவை அனைத்தையும் விட மோசமான தன்மீதே தனக்கான " சுயவெறுப்பு" மனோநிலைக்கும் அவர்கள் ஆளாகியிருந்தனர்.

இந்த மக்கள் இடம்பெயர் தொடர்கள் இடம்பெறும் காலங்களில் மழைவேறு வந்துவிட்டால் இவர்களின்பாடு இன்னும் மோசமானதாகவே வந்துவிடும். இந்தக்கால கட்டங்களில்த்தான் எனக்கும் நிற்சயமற்ற ரீதியில் எப்போது பாடசாலை தொடங்கும் என்ற கேள்வி மனதில் உதித்தது. பாடசாலை இல்லாது விட்டாலும் எங்கள் வயது " அரை ரிக்கட்டுகளின்" பாடு படு சந்தோசமாகவே போய்க்கொண்டிருந்தது. எங்கும் பிள்ளைகளை வெளியில் செல்ல பெற்றோர்கள் அனுமதிப்பது கிடையாது. ஆனால் பாடசாலையில் ஆசியர்களைவிட படுமோசமாக " புத்தகத்தை எடுத்து படி" என்ற வார்த்தைகள் மட்டும் எங்கள் காதுகளுக்கு வேத மந்திரம்போல் எப்போதும் ஓதப்பட்டுக்கொண்டிருக்கும்.

நாங்களும் படித்துக்கொண்டுதான் இருப்போம். ஷெல், மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் மத்தியிலும், ஓடிவரும் மக்களின் அவலக்குரல்கள், உறவுகளை இழந்த மக்களின் கதறல்களுக்கு மத்தியிலும் நாங்களும் படித்துக்கொண்டுதான் இருந்தோம்.
ஏன் … எனது பெரியம்மா ஒருநாள் வந்து "இன்று காலை விழுந்த ஷெல்லில உன்னோட படிக்கிற சிறாப்பர் தனபாலசிங்கத்தின்ட மகனும் தாயும் செத்திட்டினமாம். என்று சொல்லும்போது கூட நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.

" விமலகாந்தன்"! மனது ஒருமுறை அவனது பேரை உச்சரித்துக்கொண்டது. மனதுக்குள் என்னவென்று சொல்லமடியாத ஒரு உணர்வை அப்போது உணர்ந்துகொண்டேன். " விமலகாந்தன்" என் வாழ்நாளில் குண்டுவீச்சினால் நான் இழந்த முதலாவது நண்பன்.

படிப்பு சுமார்தான், அனால் இன்றும் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது அவன் நன்றாகப்பாடுவான். எங்களைப்போல் குழப்படி செய்வதில்லை. அப்போதெல்லாம் எங்களைப்போல் " நீ அவன்ர சைட்டா? எங்கட சைட்டா?" என கேள்விகள் கேட்டு " சைட்" பிரித்து அடிபடுவதில்லை. மாறாக யார் வம்புக்கும் போகாமல் அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டே இருப்பான் " என்ன சத்தம் இந்த நேரம்" , " தேன் மொழி என்தன் தேவி நீ" என்ற பாடல்கள் அவன் அதிகம் விரும்பி பாடும் பாடல்கள் என்பது மட்டும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.
ஆசிரியர்கள் வழித்துணையுடன் கைகளில் "நித்திய கல்யாணிப்பூவுடன் " அவனினதும், அவனை ஈன்ற தாயுடையதுமான சாவீட்டில் இருந்து சுடுகாடு மட்டும் சென்று அடிவயிற்றில் தீயிட்டவளுடனேயே அவனும் தீயுடன் சங்கமானது வரையான நிகழ்வுகள் இன்றும் அவ்வப்போது " கறுப்பு வெள்ளை" காட்சிகாக மனத்திரையில் வந்துவிட்டுப்போகும். கிட்டத்தட்ட என் விழிகளில் நின்று தூங்கவிடாமல் திரும்ப திரும்ப நினைவுகளில் வந்துகொண்டிருந்தான் விமலகாந்தன். மனம் அவனது இழப்பை ஏற்க மறுத்துக்கொண்டே இருந்தது. எங்கே அவன் என்னருகில் ஆவி ரூபத்தில் வந்துவிடுவானோ என்ற பயமும் என்னை சில நாட்களாக அலைக்கழிக்கத்தவறவில்லை.

அப்போதெல்லாம் நாம் செய்திகள் கேட்பதென்றால், காலையில் இந்தியச் செய்திகளைத்தான் கேட்போம். ஈழத்தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும், அவர்களின் போராட்ட வெற்றிகள் குறித்தும் உணர்வோடு குறிப்பட்டு இந்தியச் செய்திகள் முழங்கிய காலம் அது. யாழ்ப்பாணத்தில் மக்கள் அனுபவித்துவரும், உணவுப்பற்றாக்குறை, மனித அவலங்கள் குறித்து அந்த செய்திகளில் முக்கியமாக செய்திகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். எங்கள் ஊரிலிருந்தும், அயல் ஊர்களிலிருந்தும் ஓடுவதற்கு இனி இடம் இல்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் " தமிழ் நாட்டிற்கு" சென்றுகொண்டிருந்தனர்.
உணவுக்கான போராட்டத்திலும் மக்கள் அப்போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கூட்டுறவுக் கடைகள் உள்ள வீதிகள் " இப்போது ரஜினியின் படத்திற்கு முதல்நாள் திரையரங்குகளில் கூடிநிற்கும் இரசிகளர்களைவிட" மக்கள் கூட்டம் நிறம்பி இருக்கும்.வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, நிரம்பல் மிக்க தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கு இருந்தன.

எங்களுக்கான உணவுகளை தந்துவிட்டு தமது பகல்கால, இராக்கால உணவுகளாக வெறும் தண்ணீரையே அகாரமாக எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் நிறையப்பேர் இருந்தனர்.

ஒருநாள் மதியம் எதேட்சையாக "லங்கா புவத் " என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகள் காதில் விழுகின்றன. " இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுளைய முயன்ற இந்திய கடற்படையினரின் கப்பல்கள், எமது சிறி லங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டன என்பதே அந்த செய்தி.

அவசரமாக எனது பெரிய தந்தையார் ஆர்வம் மேலோங்க இந்திய செய்திகளை கேட்பதற்காக அந்த வானொலியுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆலிந்தியா ரேடியோ ….( All India Radio) என்ற சொல்லுடன் ஆரம்பமான அந்த இந்தியச் செய்தியை அப்போது சீத்தாராம் வாசித்துக்கொண்டிருந்தார், யாழ்ப்பாணத்தில் உணவின்றி இலங்கை அரசின் இனவாத நோக்கத்திலான பொருளாதார தடையினால் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் மக்களின் உணவுத்தேவையினை தீர்க்கும் பொருட்டு, இந்திய கடலோர ரோந்துப்படையினரும், இந்திய கடற்படையினரும் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை, யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியாதென சிறி லங்கா கடற்படையினர் வழிமறிப்பு செய்து தடுத்துள்ளனர் என்பதே அந்த செய்தி. இந்த செய்தி கேட்டு (லங்கா புவத்) தென்னிலங்கையில் பட்டாசு கொழுத்தி சிங்கள மக்கள் ஆரவாரம் செய்ததாகவும் அறியமுடிந்தது.

அதே நாள் மாலை சுமாராக 4.30 மணியிருக்கும் என நினைக்கின்றேன். காதைப்பிளக்கும் ஓசைகளுடன், நாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் எமது வான் பிராந்தியங்கள் மேலாக பேரோசை எழும்பியது … வழமைக்கு விரோதமான இந்த சத்தங்களும், நிலம் அதிர்வதைப்போன்ற பேரிரைச்சலும், மக்களை மேலும் பயமுறுத்தியன!
-இலைகள் உதிரும்-

Monday, April 4, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01முற்குறிப்பு – நான் ஜனனித்த ஈழ மணித்திருநாட்டில், யுத்த வடுக்களால் மட்டுமே எழுதப்பட்டிருந்த என் பால்குடிப்பருவங்களில் குறிப்பாக எனது நினைவு தெரிந்த அதேநேரம் நெஞ்சுக்குள் இன்றும் அடிக்கடி என்னை சித்திரவதை செய்துகொண்டிருக்கின்ற சம்பவங்களும், நிகழ்வுகளும் அன்றைய காலக்கண்ணாடியாகவே, ஒரு ஒன்பது வயது சிறுவனின் மனதில், பதிந்துள்ளவை, மரணப்படுக்கை வரை தொடர்ந்து பயணிக்கப்போகும் நினைவுகளை அந்த சிறுவனின் கண்களின் ஊடாகவே சொல்லவேண்டும் என நான் நினைத்து நினைத்து ஏங்கியவைகளை சொல்லத்தான் நினைத்து அடக்கி என் இதயக்கூட்டுக்குள் புதைந்து வைத்திருந்தவைகளை உங்களுடன் தொடராக பகிர்ந்து கொள்கின்றேன்.
சிந்தனைக்கும் அப்பால்ப்பட்ட இந்த சிறுவனின் ஏக்கங்களை, கண்ணால் கண்டவைகளை, சோகங்களை சிந்தனைக்கு உட்பட்ட எழுத்துக்களில் செதுக்கிவிடுபவை கஸ்டமான காரியம்தான். என்றாலும் கூட முடிந்தவரை என்கண்களினூடே உங்களையும் பயணிக்கவைக்க முயல்கின்றேன். இதில் வரும் சம்பவங்கள் நீங்கள் அறிந்தவைகள்தான், புரிந்தவைகளும் கூட, ஆனால் ஒரு சிறுவனின் மனம் அந்த சம்பவங்களை எப்படி உள்வாங்கிக்கொண்டது, அதன் தாக்கங்கள் உங்களை மட்டுமின்றி சிறுவர்களையும் எவ்வாறு தாக்கியது என்பதையும், அதேநேரம் இந்த சம்பவங்களுக்கு பிறகு பிறந்து இன்று வாலிபப்பருவங்களையும் தொட்டுவிட்ட என் இளையோருக்கு ஒரு சுவையான சோகத் தகவலாகவும் இது இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒன்று மட்டும் நிச்சயம் இன்று தொடர்ந்தும் ஈழத்தில் அணையாத காட்டுத்தீயாக கொழுந்துவிட்டெரியும் யுத்தத்தீ இன்றும் பல சிறுவர்களை இன்னும் இருபது வருடங்களில் இதுபோன்று சொல்லவைக்கும் என்பது மட்டும் உண்மை..
இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????

மேற்குறிப்பு -இதை பதிவுலகிற்கு வந்த புதிதில் தொடராக எழுதி வந்தேன். எனினும் இதில் நான் கண்ணால் கண்ட வேதனையான உண்மை சம்பவங்களையே எழுத வேண்டி வரும், குறிப்பாக இந்திய இராணுவம் அந்தக்காலங்களில் ஈழத்தில் நடத்திய அநியாயங்கள் அத்தனையும் விரிவாக வரும் என்பதால் அதை எழுதுவதை இடை நிறுத்தி இருந்தேன். என்றாலும், அன்றைய நிகழ்வுகள் தெரியாத, மறைக்கப்பட்ட சிலர் எம் வேதனை புரியாமல் விதண்டாவாதம் புரிந்து மேலும் மேலும் வேல்பாச்சும் கதைகளை தொடர்ந்து பேசிவருவதால், இந்த உண்மைகள் அவர்கள் புத்தியில் இப்போதாவது உறைக்காதா? என்ற எண்ணத்துடனனேயே மீண்டும் எழுத விழைக்கின்றேன். அன்று நான் கண்ணால்கண்ட, அனுபவித்த துயரங்கள், சம்பவங்களே இவை இதில் இம்மி அளவுகூட நான் கற்பனை செய்யப்போவதில்லை என என் எழுத்தின் மேல் சத்தியம் செய்கின்றேன்.
இந்த தொடர் இந்திய நண்பர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாதிக்கும். ஆனால் உங்கள் மனங்களை வேதனைப்படுத்தவோ, அல்லது இந்தியாவை பழிக்கவோ நான் இதை மீண்டும் எழுத முனையவில்லை. மறைக்கப்பட்டவைகள், காலம் கடந்தும் இன்றும் கவனியாது விடப்பட்ட பெரும் தவறுகள் என்றாவது வெளிச்சத்திற்கு வரவேண்டும், காந்தீயம் பேசும் இந்தியா என்றோ ஒருநாள் ஈழத்தமிழரிட்ம் இந்த சம்பவங்களுக்கு வெளிப்படையான மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே என் அவா...1987 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஓருநாள். ஆன்று காலைப்பொழுதே.. கதிரவன் ஒளி கசிந்து, வசந்தகால குறியீடுகளான குயிலின் கூவல்களிலும், அணிலின் கீச்சிடல்களிலும், பூக்களின் வாசங்களுடனும் விடிந்திருக்கவில்லை. வழமைபோல வானத்தில் இரண்டு உலங்குவானுர்திகளினதும், அவற்றினால் கக்கப்பட்டும் எரிகுண்டுகளுடனுமே விடிந்தது. அப்போதெல்லாம் சிறுவயது பேதமை மனமோ அல்லது விரக்தியோ தெரியவில்லை வானிலே பலியெடுக்கும், இரும்பு இராட்சதர்கள் வராது போனால் ஏதோ ஒரு வழமைவிரோத பண்பு தலைதூக்கும்.
அன்று அப்படி இல்லை. காலையிலேயே கச்சேரி ஆரம்பித்திருந்தது. "நல்லூர்க்கோவிலடிப்பக்கம்தான் கொட்;டுறாங்கள் " உடனடி முந்திய செய்தியை தெரிவித்துவிட்டு வீதியால் சைக்கிளில் செல்கின்றார் பாண் விற்பவர். மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரரின் சுற்றுப்பாதை அகலத்தொடங்கியது, கிணற்றுக்கட்டில் குளித்துக்கொண்டிருந்த என்தலைக்குமேலால் பறந்து செல்வது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. மறுகணம் பட பட என்ற பாரிய சத்தத்துடன் முற்றுப்பெறாத வாக்கியத்தொடர்போல் 50 கலிபர் துப்பாக்கி ரவைகள் வீதியோரங்களை நோக்கி பாய்ந்துகொண்டிருந்தன. குளித்துக்கொண்டிருந்த என் மனதுக்குள்ளும் பயம் வந்து புகுந்துகொள்ள, மனதுக்குள் அப்போது பெரும் காப்பகமாகப்பட்டது சுமார் 10 வாழைகள் உள்ள எங்கள் வீட்டின் வாழைத்தோட்டம் தான்.

அப்போது தான் கவனித்தேன் இரண்டு ஹெலி கொப்ரர்கள் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் இருந்த எங்கள் ஊர் வான்பரப்பின்மீது மேலும் "சியாமா செட்டி" என அழைக்கப்பட்ட இரண்டு குண்டு வீச்சு விமானங்களும், அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (பெரும்பாலும் அது பரல் குண்டுகள் என்ற வகை குண்டுகளையே வீசும்.) கூட்டுச்சேர்ந்திருந்தன.

வாழைகளின் மத்தியிலிருந்து அன்று என் சின்ன ஆராய்வு மூளை சொல்லியது "இன்று நடக்கப்போவது அதிகமாகவே இருக்கும் என்று ".அப்போதெல்லாம் எங்கள் அயலவர்களுக்கு தெரிந்திருந்த அறிவியல் உண்மை! பிளாட் போட்ட வீடுகளில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதுதான். அது எவ்வளவு முட்டாள் தனம் என்பது பிறகு நடந்த சம்பவங்கள் வேறு இருக்கின்றது.

இந்த நிலையில் பல அயலவர்களும் எங்கள் வீடு பிளாட் போடப்பட்டது என்பதால் எங்கள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். அங்கு மேலால் நிலவிய பதட்டங்களைவிட தங்கள் கதைகளால் பதட்ட நிலைகளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகரித்துக்கொண்டிருந்தனர். "இங்கபாருங்கோ … இவங்கள் பொம்பர்ல இருந்து ஓதோ எரிகுண்டு ஒன்று போடுறான்களாம், போட்டால் கீழே ஒரு சுற்று வட்டாரத்துக்கு ஒருத்தரும் தப்ப ஏலாதாம் " தன் ஆரம்ப உரையை மிகப்பயங்கரமாக அரங்கேற்றினார், ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலாயுதம். அவரது மாணவர் என்பதானாலோ என்னமோ உடனடியாக அதை வழிமொழிந்தார் மனோகரன் மாஸ்ரர். கேட்டுக்கொண்டிகொண்டிருந்த மற்றவர்களின் முகங்களில் ஈகூட ஆடவில்லை.

"மம்மி பின் கேட்டை லொக் பண்ணாமல் வந்திட்டேன், கேக் அடித்து வைத்திருக்கிறம் தானே.. இந்த ஏயார் பொம்பிங்கால பேக் பண்ணவும் குடுக்கேல்ல எங்கட "லான்ஸி" போய் அதுகளை சாப்பிட்டுபோடுமோ தெரியாது என்று தனது தாயிடம் செதல்லிக்கொண்டிருந்தா லக்ஸி அக்கா.அப்போது அவ உயர் தரம்படித்துக்கொண்டிருந்தா..அவவின்ட அப்பா வெளிநாட்டில இருந்தவர். கொஞ்சம் தமிழுடன் ஆங்கிலத்தை கலவி கொள்ள வைப்பதில் அவவுக்கு கொஞ்சம் விருப்பம் அதிகம் தான். அவ லான்ஸி என்று குறிப்பட்டது அவர்கள் வீட்டு நன்றியுள்ள நாலுகால் உடையவர்.

சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன? கொஞ்சம் அதட்டினார் வேலாயுதம் மாஸ்டர்.
இந்த சம்பவங்களுக்குள் எதுவுமே தெரியாமல் தனது தாயின் மடியில் இருந்துகொண்டே என் புது பேனாவை நான்காக உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் "காகத்தை" காவம் என்று சொல்லப்பழகும் 2 வயதுடைய சஞ்சீவன்.

திடீர் என மிக பதிவாக விமானத்தின் ஓசை ஒன்று எங்கள் காதுகளின் செவிப்புலன்களை கெடுத்துவிடுவதுபோல் பேரிரைச்சலுடன் பதிந்து வந்தது. ஐயோ… முருகா, பிள்ளையாரப்பா… என்றெல்லாம் யார் யார் சொன்னார்கள் என்பதற்கு இடையில் பெரும் சத்தத்துடன் குண்டு ஒன்று போடப்பட்டு வெடித்தது. என் நெஞ்சுக்கூட்டின் இடைகளில் அடைப்பது போன்ற உச்ச பய உணர்வு அப்போது தெரிந்தது. எனக்கு ஆறுதலாகவோ அல்லது அவரது பயத்தாலோ மனோகரன் மாஸ்ரர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

முதலில் நானும் அவரும்தான் வெளியில் எட்டிப்பார்ததோம் …நிலத்தில் கண்ணாடித்துண்டுகளும், சில குண்டு பிசிர்களும் முதலில் தென்பட்டன. வானத்தில் குண்டுச்சத்தம் கேட்ட திசையில் "நோட்டீஸ்கள்" பறப்பதுபோல மின்னி மின்னி ஏதோ பறந்தகொண்டிருந்தது. கீழே வந்து விழும்போது தான் அவைகள் நொட்டிஸ்கள் அல்ல விமானக்குண்டு விழுந்த கட்டடத்தின் ஸீட்கள்தான் மேலே பறந்து பின்னர் வந்து கீழே விழுவதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் பயப்பீதி உந்தவே வீட்டின் உள்ளே ஓடிச்சென்று விட்டோம். வீதியிலும் எவரையும் காணமுடியவில்லை. வானில் சத்தமும் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல வீதியில் ஆளலரம் அவலத்துடன் நடமாடுவதை உணரமுடிந்தது.

சொல்லி வைத்ததுபோல் அவ்விடத்தில் இருந்து அனைவருமே ஒன்றாக எழுந்து வீதிக்கு வந்தோம். முதலில் பல பொது இளைஞர்கள், தயவு செய்து இரத்தம் தேவைப்படுகின்றது கொடுக்கக்கூடியவர்கள் ஆஸ்பத்திரிக்கு உடனவாங்கோ எனத் தெரிவித்துக்கொண்டே சைக்கிள்களில் அவசரமாக ஓடினார்கள், அவர்களின் பின்னால், நான் கண்ட காட்சி அப்படியே சப்த நாடிகளையும் ஆட்டம் காணவைத்தது!! வயிற்றுப்பகுதியில் இரத்தம் வழிந்தோட கண்கள் மேலே சொருகியபடி மேல் மூச்சுவாங்க ஒரு நபரை இருவர் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல சன நடமாட்டம் காணத்தொடங்கியது வீதி.
அன்றைய குண்டு வீச்சு விபரங்களும் வெளிவரத் தொடங்கியது. இரண்டு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், நல்லூர் பகுதியில் இரண்டாம் குறுக்கு வீதி, முத்திரச்சந்தையில் உள்ள ஒரு உருக்கு நிறுவனம், நல்லூர் பின்வீதியில் முடமாவடியில் இருந்த ஒரு பிரபலமான கட்டம் என்பன இந்த குண்டுவீச்சு தாக்குதல்களால் தரை மட்டமாகியதாக செய்திகள் உடன் வந்தன.. பலரது வாய்மூல அறிக்கைகளாக.. சிறிய ஒரு ஓய்வுக்கு பின்னர் நல்லூரில் இருந்த எனது வீட்டிலிருந்து தென்கிழக்காக தொடர்ச்சியாக ஆழுத்தம் கொடுக்கும் ஒரு அதிர் வெடி போன்று தொடர்ச்சியாக குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நமக்கு அண்மையாக இருந்த இராணுவ முகாம்கள், ஒன்று கோட்டை இராணுவ முகாம், அடுத்தது நாவற்குளி இராணுவ முகாம்.

குடிமனைகளை நோக்கிய ஷெல்த்தாக்குதல்கள் கோட்டை இராணுவ முகாமிலிருந்தே இடம்பெறும். இரவு பகல் என்று காலவறைகள் எதுவும் அதற்கு கிடையாது. தென்கிழக்காக சத்தம் கடுமையாக கேட்டுக்கொண்டே இருந்தது. "நாவக்குளி காம்பில இருந்தும் அடிக்கத் தொடங்கிட்டான்போல! என வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் மதியப்பொழுதை தாண்டி செல்லும் வேளைவரை இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சந்று நேரத்தால் வீதியில் பெரும் சனமாட்டத்துடன் கூடிய குரல்கள் எழுந்தபோது என்னையறிமாலே வீதிக்கு ஓடிச்சென்று பார்த்தேன். குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு கிடைத்த தமது பொருட்களையும் ஏந்திக்கொண்டு பெருவாரியாக மக்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனர். வீதியில் நின்ற பெரியவர் ஒருவர் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் "எங்கியிருந்து தம்பி வாறிங்கள்? எங்க பிரச்சினை என்று கேட்டார். பாசையூர், குருநகர் இடங்களில இருந்து வாறம் அண்ணை. கண்போட்டால கொண்டுவந்து வெழுக்கிறான். கனபேருக்கு காயம் அண்ணை வீட்டு பக்கத்தில எல்லாம் வந்து விழுகுது. அதுதான் அங்கிருந்து பாதுகாப்புக்காக ஓடி வாறோம் என்றார்.

அவர்களில் பெரும்பாலான மக்கள் கல்விப்பணிமனைக்கு அருகில் உள்ள சாதனா படசாலையில் தங்கியிருந்தனர். நாங்கள் உட்பட பல எங்கள் இட மக்கள் தேனீர், படுக்கைகள் போன்றவற்றை அங்கு கொண்டுவந்து அந்த மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சில இன்னும் அந்த சத்தத்தினால் ஏற்பட்ட பதட்டம் மாறாமல் காணப்பட்டனர். பெரியவர்கள் பெரும் வேதனை கலந்த தோற்றத்துடன் இருந்தனர். ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்ற மும்முனைத்தாக்குதல்களாலும் மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருந்னர்.

நான் உட்பட அனைவரும் தொடரப்போகும் அபாயங்கள் பற்றி தெரியாமல் இன்றைய நாளில் எமது பயங்கரம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இது ஆரம்பம்தான் இதைவிட பயங்கர அனுபவங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கப்போகின்றது என்று …
( இலைகள் உதிரும்)

Friday, April 1, 2011

நாளெல்லாம் முட்டாள்கள் தினம்!

கடந்த 24 நாட்களாக பதிவுகளுக்காக கணணிக்கு முன்னால் வந்து உக்கார முடியவில்லை. திரும்ப எழுத தொடங்க நம்மளைப்பற்றிய விசேட நாள் ஒன்று வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்த்தான் இன்றைய நம்மநாளில் மீண்டும் எழுதத்தொடங்குவது என்ற திடசங்கர்ப்பம் பூண கொஞ்சம் நேரமும் தைரியமும், உரிமையும் வந்திடிச்சு!
சரி..25 தினங்களாக அண்ணனுக்கு என்னாச்சு என்று தொலைபேசியூடாகவும், மின் அஞ்சல் ஊடாகவும், பின்னூட்டமூடாகவும், சிலர் பதிவுகளுடாகவும் கேட்டிருந்தாங்க.
வெறும் 24 நாட்கள் தானுங்க.. எப்படியோ இதோ திரும்ப வந்திட்டோம்ல!!
காரணத்தை பதிவின் இறுதியில் தருகின்றேன்.

ஏப்ரல் மாதத்தின் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்று சிறுவயது முதல், ஏமாற்றியதைவிட, அதிகம் ஏமாந்து அசடுவழிந்தது என்போன்றவர்களுக்கு அதிகமாக நடந்திருக்கும்.
கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய வர்த்தக மற்றும் அரசியல் மயப்பட்ட வாழ்க்கையிலேயே நாம் நாளாந்தம் எப்ரல் ஏமாளிகளாக இருந்துகொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
சாதாரணமாக காலைக்கொள்வனவு முதல், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், தேர்தல் வாக்குறுதிகள் என்று தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றோம்!!

ஒரு வகையில் ஏப்ரல் முதலாம் திகதியான இந்த முட்டாள் தினத்தை; “உலக சமான்ய பொதுமக்கள் தினம்” என்று சொல்லிக்கொள்வது சாலப்பொருத்தமான ஒன்றாக இருக்குமோ என்னமோ!
உண்மையில் இன்றைய நிலையில் உலகில் வாழும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் கால தேச வர்த்த மானங்களை கடந்த நிலையில், பெரிய முதலைகளாலும், பரந்த கழுகுக் கண்களாலும், ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
உலக மக்கள் எல்லோரும் அப்பாவியாக போக்கற்று விழ்த்துக்கொண்டு நிற்கையிலே அரசியல்வாதிகளும், வர்த்தக முதலைகளும் அந்த மக்களைப்பார்த்து “ஏப்ரல் ப்பூல்” சொல்லி எக்காளம்போட்டு சிரிப்பதுபோன்ற தோற்றப்பாடு மனதில் உங்களுக்கும் தோன்றுகின்றது அல்லவா?

அடுத்த பார்வையாக ஏப்ரல் முதலாம் திகதியான முட்டாள் தினம் மக்களுக்கான ஒரு வழிப்புணர்வாக கொள்ளப்படவேண்டிய ஒரு நாளாக முக்கியமாக கொள்ளலாம். கிட்டத்தட்ட சத்தியங்கள், நியாங்கள், நேர்மைகள் என்பன 80களின் நடுப்பகுதியில் இருந்தே இந்த உலகில் இருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டு விட்டன. இன்றைய உலகம் அரசியல், மற்றும் பெருவர்த்தகம் சார்ந்ததாக முழுமையாக மயப்படுத்தப்பட்டே சுற்றிக்கொண்டிருக்கின்றது.
இரண்டுக்குமே தேவை நிறையவான நிறைய ஏமாளிகளே!
உண்மையில் இன்றைய நிலையில் உலகலாவிய வர்த்தக, அரசியல்களால் இன்று நாம் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஏமாளிகள் ஆக்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை.
எனவே இந்த நிலையில் எம்மைசசுற்றி அனைத்தும் எம்மை முட்டாள்கள் ஆக்கும் செயற்பாடுகளின் அஜன்டாக்களே என்று எம்மை சுதாகரிததுக்கொள்ள இந்த முட்டாள்கள் தினத்தை நாம் எமக்கான வழிப்பணர்வு நாளாக கொள்வதே சாலப்பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

குறிப்பு – எந்த விதமுன்னறிவுப்பும் இல்லாமல் கடந்த 24 நாட்களாக பதிவு பக்கம் வராது, பதிவிடாது. நண்பர்களுக்கு பின்னூட்டம் இடாது இருந்தமைக்கு அனைத்து பதிவுலக நண்பர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
தொழில் மாற்றம், அதிகளவிலான தொழில் விடயங்கள், செம்மையாக்கல்கள், பயிற்சிகள் என்பன இருந்தமையினால், இதனால் இரவும் இருந்து அந்த வேலைகளை செய்து முடிக்கவேண்டிய கடமைப்பாடுகள் கூடியதால் பதிவுப்பக்கத்தை நினைக்கவே முடியாது போய்விட்டது என்பதே உண்மை.
எனினும் இன்று முதல் வாரத்தில் 4 பதிவுகளைவுகளையாவது எழுதுவதற்கு முயற்சிப்பதாய் எண்ணியுள்ளேன். அதேவேளை பதிவுலக நண்பர்களின் பதிவுகள் அனைத்தையும் வாசித்து. பின்னூட்டம் இடுவதற்கு சில சமயம் தாமதங்கள் ஏற்பட்டால் பெருந்தகையோர் மன்னிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவருக்கும் என் நன்றிகள்.

LinkWithin

Related Posts with Thumbnails