Sunday, February 27, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.மைந்தன் சிவா"கார் காலம் கவிழும் வேளை..
கண்களிலோ காதல் விதை..
மொட்டவிழ்ந்த தாமரை போல்
புதுக்கவிதை பிறக்குதடி..!

கண்களால் உன்னை பார்க்க
காண கண் கோடி வேண்டும்..
பந்தத்தில் உன்னை சேர்க்க
கோடிகள் ஒரு பொருட்டே இல்லை..!!

கவிதையாக உன்னை வடிக்க
பாவல்கள் தவமிருப்பார்..
நான் வடிக்க முயன்று பார்த்தேன்..
தமிழுக்கு தான் பஞ்சமடி..!!"

மைந்தன் சிவா பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தபொழுதுகளில் அந்த பதிவில் தனது அரங்கேற்றமாக வலையேற்றிய ஒரு கவித்துவ பதிவே இது.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மைந்தனின் பதிவுலக பிரவேசம் கவிதைகளாலேயே நிறைந்திருந்தன. பெரும்பாலும் அவை காதல் என்ற நான்கு கண்களால் இழைக்கப்பட்ட விசித்திரமான ஆடைகளாகவே இருந்தமையினை கண்டுகொள்ளமுடிகின்றது.
இவற்றில் பெரும்பான்மைக்கவிதைகள் ஒருதலைக்காதலின் ரணங்களை புடம்போட்டு இதயங்களை மென்மையான மயிலிறகால், உணர்வுடன் வருடுவதுபோல அமைந்துள்ளன.
மெல்ல காதல்பேசிய அந்த எழுத்துக்கள், அடுத்த கட்டமாக இசை பற்றியும், பாடல் வரிகள் பற்றியும் சிலாகித்துக்கொள்ள ஆரம்பித்தன. அதை தொடர்ந்து பாடலாசிரியர்கள் பற்றியும், பாடல்கள் பற்றியும் மெல்ல இசைத்துவம் பற்றியும் பேசிய பதிவுகள், கிரிக்கட், அரசியல், சமுகம், சினிமா என்று வியாபிக்க ஆரம்பித்துக்கொண்டது.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நான் தொடர்ந்து செல்வேன் என்ற தனது “பஞ்சை” அழுத்தமாக பதிந்துவைத்துள்ள மைந்தன் சிவா, மிக அண்மைக்காலமாக பலரினால் போற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதை சொல்லிக்கொள்ளத்தான் வேண்டும்.
எனக்கு வருவதை எழுதிக்கொள்கின்றேன், வரவேற்பதும், வழிமறிப்பதும் உங்கள் கையில் என்றுவேறு தன்னைப்பற்றியதான குறிப்பில் தைரியமாக எழுதிவைத்துள்ளார் பதிவர் மைந்தன் சிவா.

சில யதார்த்தங்கள், அப்பட்டமான விடயங்களைக்கூட மிக இயல்பாக, உள்ளோட்டமாக ஒரு செமை கடியை வைத்துக்கொண்டு, நகைச்சுவையாகஎழுதிவிடுவது மைந்தன் சிவாவின் கலை. இயல்பான ஒரு சிரிப்பையும், இப்படியான உருபேற்றமா என்ற எண்ணத்தையும் அவை விதைத்துவிட்டு போய்விடும்.

மைந்தன் சிவாவிடம் முக்கிமான விடயம் ஒன்றை கவனித்தால் புரிந்துகொள்ளமுடியும், பாரிய ஒரு விடயப்பரப்புகளில் தேடல்கள், அறிவுகள் கொண்டிருந்தபோதிலும், பதிவுகளில் தன்னை எதுவும் தெரியாதவன்போல காட்டிக்கொள்வதில் ஒரு தந்திரத்தை புரிந்துகொள்ளலாம்.
அப்படிக்காட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம் அவருக்கு!
அதேநேரம் சில தைரியமான இடுகைகளும் இடைக்கிடை மிரளவைத்தும் விடுகின்றன.

நகைச்சுவையாக நக்கலுடன் போகும் பதிவுகளுக்கிடையில், மிக சீரியஸான பதிவுகளும், வந்து பிரமிக்கவைத்துவிட்டு சென்றுவிடும்.
தபு சங்கர், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் கவிதைகளில் மைந்தனுக்கு உள்ள அதீத நாட்டம் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேநேரம், சாண்டில்யன், கல்கியின் புத்தகங்களின் இரசிகனாக அவர் உள்ளமை, சில பேச்சுக்களில் சில விடயங்களை அவர் மேல்க்கோள் காட்டும்போது தெரிந்தது.

மிக அண்மையில், சீரான வேகத்துடன் சென்றுகொண்டிருந்த அவரது பதிவுகள், புதிய தளம் ஒன்றை இலாவகமாக பெற்றுக்கொண்டு, அதிரடியாக விரைந்துகொண்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.
மனிதர் இத்தனையும் மறைத்து வைத்துக்கொண்டுதானா, இத்தனைநாளும் கவிதைகளுடன் பேசிக்கொண்டிருந்தார் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிக அதிரடியாக பதிவுகள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
பலதரப்பட்ட பதிவர்களும் வந்துபோகும் விருப்பதிற்குரிய தளமாக தனது வலைப்பூவை பிரமிப்புடன் பேணிவருகின்றார் பதிவர் மைந்தன் சிவா.

மைந்தன் சிவா, தனது நட்புக்களை மற்றய பதிவர்களுடன், எந்த சதுரங்களும் இன்றி சகலருடனும் நட்பாகவே இருந்துவருகின்றார். அதேபோல மற்றய பதிவர்களின் ஆக்கங்களை ஊக்கப்படுத்துவதிலும் முதன்மையானவராகவும், பின்னூட்ட போட்டியாளராகவும் இப்போது மாறியுள்ளமை சிறப்பான ஒரு விடயமே.
எதிர்காலத்தில் பதிவுலகத்தில் பாரிய திட்டங்கள், பதிவுகள் என்பவற்றை பென்டிங்கிலேயே வைத்திருக்கும் மைந்தன் சிவா, வெகுவிரைவில் பதிவுலகில் மேலும் ஆச்சரியங்களை உண்டாக்குவார் என்று தெளிவாக தெரிகின்றது.

அவர் பற்றி எழுதுவதாக அவரிடம் சொல்லி கேள்விகளை கேட்டபோதே
அண்ணா.. கனக்க என்னைப்பற்றி எழுதவேண்டாம், உங்களால் எழுதவும் முடியாது!! கேள்விகளை கேளுங்க சொல்லுறன் என்றார்.
இதோ அவரிடம் கேட்ட அந்த மூன்று கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும்.

கேள்வி : பதிவுலகம்! பதிவெழுதல் என்பவை எப்படி உங்களுக்கு அறிமுகமானது?

மைந்தன் சிவா : உண்மையை சொல்லப்போனால் பேஸ்புக், ருவிட்டர் போன்றவை, அதை என்ன சொல்வாங்க! ஆ… சமூக தளங்களில் சில நண்பர்கள் போட்ட, மேல்கோள்காட்டிய சில பதிவுகளை “கிளிக்” பண்ணியதாலேயே பதிவுலகம் என்று ஒன்று இருப்பது புரிந்தது. அதை தொடர்ந்து சிலது நன்றாக இருக்க தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன். நமக்கும்தான் அப்பப்போ கவிதைகள் வருதே அதை சேமித்து வைத்தால் நல்லது என்ற நன்நோக்கத்திலேயே என் வலைப்பதிவுகளை எழுத தொடங்கினேன். பின்னர் என்ன?? ஏதோ …எழுதி இன்று இதோ நீங்கள் அறிமுகப்படுத்தும் அளவுக்கு பலருக்கு தெரிந்திருக்கின்றேன்.

கேள்வி : உண்மையை சொல்லுங்கள் எப்படியான பதிவுகள் உங்களுக்கு பிடிக்கும்?

மைந்தன் சிவா : உண்மையிலேயே தேவையான விடயங்கள் பலவற்றை எழுதும்போது கண்டிப்பாக அவற்றை முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பேன். சில பதிவுகள், அறிந்துகொள்ளவும், தேவையானதாகவும் இருக்கும் அப்படியான பதிவுகளை கண்டிப்பாக வாசிப்பேன். அதேபோல நகைச்சுவை பதிவுகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இன்னும் கவிதை, சினிமா என்று பலதரப்பட்டவைகளையும் படிப்பது உண்டு.

கேள்வி : பதிவு எழுதுவதால் உண்டான நன்மைகள் ஏதாவது?

மைந்தன் சிவா : முக்கியமாக வாசிப்பை அதிகரித்துள்ளதை கூறிக்கொள்ளவேண்டும், அதேபோல உண்மையான சில நண்பர்கள் கிடைத்துள்ளனர். தெரியாத விடயங்கள் பலவற்றை இலகுவாக புரிந்துகொள்ள கூடியதாக அமைந்துள்ளது. அதீத வாசிப்புக்களால், ஏயது எது தீயது எது என்பதை இலகுவாக புரிந்துகொள்ளவும் முடியுமாக ஆகிவிட்டது.
அவ்வளவு தான் அண்ணா.


Thursday, February 24, 2011

சிவாஜி கணேசனின் பிற்கால டுயட் மெலடிகள்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலகரீதியில் தலைசிறந்த நடிகன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளக்கூடிய முழுமையான தகுதி சிவாஜி கணேசனுக்கு மட்டுமே உண்டு. இதை எவரும் மறந்துவிடவோ, அல்லது மறுக்கவோ முடியாது என்பதே உண்மையிலும் உண்மை.
சிவாஜி கணேசனைப்பற்றி எழுதுவது என்றாலே சூரியனுக்கே வெளிச்சம் காட்டுவதா என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
முக்கியமாக சிவாஜி கணேசனுடைய “ரேஞ்ச் ஆவ் கரக்டர்ஸ்” அபாராமானவை.

சிங்கத்திற்கு வயது வந்தாலும் அதன் சீற்றம் ஒரு துளிகூட குறைவது இல்லை என்பதை சிவாஜிகணேசனின் 70கள், 80களில் வந்த திரைப்படங்கள் நன்றாகக்காட்டின.
அவற்றில் இருந்து காதுக்கும் மனதிற்கும், ஏன் சிவாஜி என்ற அந்த இமயத்தை தரிசிக்க கண்ணுக்கும் காட்சியாக சில இனிமையான சிவாஜிகணேசனின் பின்னைக்கால சில டுயட்களையே இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

பட்டாக்கத்தி பைரவனிலிருந்து எங்கெங்கோ செல்லும்…

வசந்தத்தில் ஒரு நாளில் இருந்து வேண்டும் வேண்டும்…

வாழ்க்கை திரைப்படத்தில் இருந்து காலம் மாறலாம்…

திருத்தேரில் வரும் சிலையோ…

அந்த மாலைப்பாருங்கள்….

இது ராஜ ராக சொர்க்கம்..
இனி பேச என்ன வெக்கம்?
கொஞ்சம் பேசிவிட்டு போங்களேன்..
(அவசரமாக கொழும்பு செல்லவதால், அதைவிட அவசரமாக போட்ட ஒரு பதிவு)

Tuesday, February 22, 2011

ஹொக்ரெயில் - 22.02.2011

றோயல் திருமண அழைப்பிற்கான தவம்!

மிகப்பிரபலமானவர்களின் திருமணம் என்றால், பல்வேறு சர்ச்சைகள், தடைகள், அறிக்கைகள், செய்திகள் என வருவது இயல்புதான் என்றாலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள பிரிட்டன் அரச குடும்ப கல்யாணத்தை இட்டு ஒரு வினோதமான செய்தி கண்ணை குத்துகின்றது.
தனக்கும் “வில்லியம் -ஹேத்” திருணமத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்படவேண்டும் என்றுகோரி கடந்த 10 நாட்களாக மெக்ஸிகோவின் தலைநகர், மெக்ஸிகோ சிட்டியில் உள்ள பிரித்தானிய தூதரகம் முன்னால் வடக்கிருக்கின்றாள் ஒரு 19 வயது மாணவி.
எஸ்ரிபலிஸ் ஷாவேஸ் என்ற இந்த மாணவி, மெக்ஸகோ சிட்டியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவி. இவளது தாயார் டயானாவின்மேல் அதிக அன்பும், அபிமானமும் கொண்டவர், அவரிடமிருந்து அந்த மோகம் இவளுக்கும் தொற்றியுள்ளது. இந்த நிலையில் டயானாவின் மகனின் திருமணத்தையாவது தான் பார்க்கவேண்டும் என்ற பெரும் விருப்பம் காரணமாக முறைப்படி பிரித்தானிய தூதரக்கத்திற்கு சென்று விஸாவுக்கு விண்ணப்பித்ருக்கின்றாள் எஸ்ரிபலிஸ் ஷாவேஸ்.

என்ன! இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்ற ரேஞ்சிற்கு சிந்தித்து இவளுக்கு விஸா வழங்காமல், திருப்பி அனுப்பியுள்ளது தூதரகம்.
இந்த நிலையில் விடாக்கண்டன், தொடாக்கண்டன் என்ற ரீதியில், தான் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும், அதற்காக தனக்கு அரச குடும்பத்தினரின் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த பிரித்தானிய தூதரக்கதின்முன்னாலேயே ஒரு சிறிய கூடாரம் அமைத்து 10 நாளாக தவம் இருக்கின்றாள் இவள்.
எனினும் இதுவரை இவளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.
தூதரகம் தம் நிலைப்பாடு பற்றி உரியமுறையில் அறிவிக்கமுயற்சி செய்யவில்லை என்றும், தன் முடிவில் இருந்து ஒருபோதும் தான் பின்வாங்கப்போவதில்லை என்றும் உறுதியுடன் தொடர்ந்தும் அதே இடத்தில் இருக்கின்றாள்.
தற்போது பெருமளவிலான மாணவர்களும், சில அமைப்புக்களும் அவளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு இந்தப்பெண் போவாளோ இல்லையோ! இன்று உலக நாடுகளின் பத்திரிகள் அனைத்திலும் இடம்பிடித்திருக்கின்றாள் இவள்.

The Adjustment Bureau
எதிர்வரும் மார்ச் 04ஆம் திகதி வெளிவரவுள்ள முழுமையான ஒரு திரில்லர் அனுபவம் The Adjustment Bureau. ஜோர்ஜ் நொல்பியின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் திரில்லர் திரைப்படம் இது என விபரிக்கப்பட்டுகின்றது.
மட் டமன்ட், எமிலி புலூட், ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளனர்.
இதேவேளை பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்த Battle: Los Angeles, Limitless, Mars Needs Moms, Red Riding Hood ஆகிய திரைப்படங்களும் மார்ச் மாதம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தவார வாசிப்பு

பொதுவாகவே பேய்கள், ஆமானுஷங்கள் சம்பந்தப்பட்ட கதைகள், வாசிக்கும்போது ஆர்வத்தையும், மனதில் ஒரு இனந்தெரியாத ஆர்வத்தையும், சிலவேளைகளில் பீதியையும் உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஜெயமோகனின் நிழல் வெளிக்கதைகள் மிகவும் சுவாரகசியமானதாகவும், வாசிக்கும்போது எல்லைகடந்த ஒரு ஒன்றிப்பை உண்டாக்கக்கூடியதாகவும் உள்ளது. ஜெயமோகனின் குறுநாவலான பிளாத்தீனம் படிக்கும்போதே அதில் சாடையாக எட்டிப்பார்த்த ஆமானுஷத்தைக்கண்டு, இந்த மனுசன் ஆமானுஷம், பேய்க்கதைகள் எழுதினால் சிறப்பாக இருக்கும், எழுதினாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது. அந்த கேள்விக்கான தரமான பதிலாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.
இதில் பழமையான கதைகள் சில உள்ளதையும் அவதானிக்கமுடிகின்றது.
ஆனால் ஒன்று உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும், ஒவ்வொரு கதையிலும், ஒவ்வொரு கட்டங்களும், ஆர்வத்துடன் படிக்கும்விதம் அமைந்துள்ளது.
இந்த கதைகளில் பாதைகள் கதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
ஓவ்வொருகதையும் எழுத்துக்களினூடான ஆமானுஷ பயணமான அனுபவத்தை தருவது நிஜமே. கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம்.

கீதாஞ்சலி…
மலேசியா வாசுதேவன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு குரல்கொண்டு, இசை பரப்பி வந்த ஒருபாடகர். “பாலுவிக்கிற பத்தம்மா” என்ற பாடலில் இருந்து தொடங்கிய அந்த இசை சாரங்கம் இப்போது ஓய்ந்துபோய்விட்டது.
“முதல் மரியாதை” பாரதிராஜா சிவாஜிக்கு செய்த முதல்மரியாதைபோல, இளையராஜா இவருக்கு செய்த முதல்மரியாதை என்றே சொல்லவேண்டும்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த மலேசியா வாசுதேவன், திரைப்படப்பாடல்கள் பாடுவதற்கு முன்னர், பாவலர் சகோதரர்கள் குழுவிலே முக்கிமான ஒரு பாடகராக இருந்திருக்கின்றார்.
பாடகராக மட்டுமின்றி ஒரு நடிகராகவும் தன்னை நெறிப்படுத்தி சாதித்த பெருமை இவருக்கு உண்டு.
இதோ அவருக்கு ஒரு கீதாஞ்சலி…(அருமையான ஒரு பாடல்)

சச்சின் அவுட்டா..! நிப்பாட்டு டி.வியை!!
இப்ப வேர்ள்ட் கப் பீவர்தானே! இப்படியான நாட்களில சிலருடைய சுவாரகசியமான சம்பவங்களுக்கும் பஞ்சம் இருப்பது கிடையாது. நம்ம வீட்டிற்கு பக்கத்திலை இந்த சுவாரகசியத்திற்கு பஞ்சம் இருக்காது.
பக்கத்து வீட்டில் உயர்ந்த ஊத்தியோகத்தில் உள்ள ஒருவர் இருக்கின்றார். அவருக்கு 5 பிள்ளைகள் ஐவருமே ஆண்கள். இருவர் பல்கலைக்கழகம் மற்றவர்கள் உயர்தரம், சாதாரண தரம் என்று கல்விகற்று வருகின்றார்கள்.
அவரோ கிரிக்கட்டில் தீவிரமான இந்திய இரசிகர். அதிலும் சச்சினின் பக்தர் என்றே சொல்லவேண்டும்.
இந்திய கிரிக்கட் அணி விளையாடும்போட்டிகளை போட்டுவிட்டு, சத்தமாக தன் பிள்ளைகளை அழைத்து மச் பார்க்கவிடுவார். சிலவேளைகளில் படித்துக்கொண்டிருக்கும் அவர்களைக்கூட கட்டாயப்படுத்தி இந்திய துடுப்பாட்டதை பார்க்கவைப்பார். ஆனால் என்ன சச்சின் அவுட் ஆகியவுடன் எமக்கு கேட்கும் அவரது குரல் “சரி..டி.வி.ஐ நிப்பாட்டு, எல்லோரும் போய் படியுங்கள்” என்பதாகவே இருக்கும்.
அதுசரி..நீங்க எந்த ரீமுக்கு சப்போர்ட் என்று நீங்க கேட்க நினைப்பது புரியுது..
நான் எப்போதுமே தென் ஆபிரிக்க இரசிகன்தான்.

இந்தவாரக் குறும்படம்.

மியூஸிக் கபே
இதுவும் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய ஒரு சிறப்பான பாடல்தான்.
ஒரு அண்ணன் தங்கை பாசத்தை புலப்படுத்தும் இந்த பாடல், தன் தங்கையின் எதிர்கால கனவில் மிதக்கும் பாசமான அண்ணனின் குரலின் பாசமும், தழுதழுப்பும் உன்னிப்பாக கேட்டீர்கள் என்றால் உணர்ந்துகொள்ளமுடியும்.
“கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா!
முன்னூறு நாள் தாலாட்டினால் என்பாசம் போகாதம்மா!
என் ஆலயம் பொன்கோபுரம், ஏழேழு ஜென்மங்கள் அனாலும் மாறாதம்மா”
அற்புதமான வரிகள்..

ஜோக் பொக்ஸ்
ஒரு சிறுவன் நான்கு வயது வந்தபோதும் கை சூப்பிர பழக்கத்தை விட்டபாடா தெரியலை. அவனது அப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு, பையா.. நீ விரல் சூப்பும் பழக்கத்தை விடாமல் போனால் அதோ போறாரே... ஒரு போலீஸ் காரர் அவரைப்போல உனது உயிறு பெரிசாயிடும் என்று பையனுக்கு காட்டினார். பயந்துவிட்ட சிறுவன், அப்போதிருந்து விரல் சூப்புவதை கஸ்டப்பட்டு விட்டுவிட்டான். அன்று மாலை அவனது தாயாரின் பிறந்த தினம் என்று தாயின் நண்பர்கள் நண்பிகள் அனைவரும் வந்திருந்தனர்.

அங்கே ஒரு கர்ப்பிணி பெண்ணும் வந்திருந்தாள்.. அவளிடம் சென்ற சிறுவன்.."ஆண்டி எப்படி உங்களுக்கு வயிறு பெருசாச்சு என்று எனக்கு தெரியும். எல்லோருக்கும் சொல்வா என்று கேட்டான்." அந்தப்பெண் வியர்த்து வறுவிறுத்தப்போனாள்.

Sunday, February 20, 2011

இந்தவாரப் பதிவர் - திரு. ஜீ

“கவிதையோ இலக்கிய உரைநடையோ எனக்கு தெரியாது> எனது கருத்துக்களையும்> அனுபவங்களையும்> நான் இரசித்தவற்றையும் கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்” என்பதே தன்னைப்பற்றி தனது வலைத்தளத்தில் பதிவர் ஜீ தெரிவித்துள்ள கருத்து.

உண்மைதான்> அவரது வலைத்தளத்திற்கு சென்றால்> சிந்திக்க தூண்டும் கருத்துக்களையும்> உணர்வோட்டமான அனுபவங்களையும்> பிரமிப்பான இரசிப்புக்களையும் கண்டு கொள்ளலாம்.

கௌரவமான எழுத்தோட்டம் ஜீயினுடைய எழுத்துக்களின் புலப்பாடு. இவரது எழுத்துக்களை வாசித்துகொண்டிருக்கும்போதே எழுதிய அவர்மேல் எம்மையும் அறியாத ஒரு கௌரவம் தோன்றிவிடுவது யதார்த்தம்.

பல பதிவுகள் அடடா..இவை நாமும் அனுபவித்த விடயங்களாயிற்றே> ஏன் நமக்கு இப்படி தோன்றவில்லை என ஆனந்தமான ஆச்சரியம் கொள்ளச்செய்யும் தன்மைகள் ஜீயினுடைய எழுத்துக்களின் புலப்பாடு.

இப்படியும் பலர் இரசிக்கத்தக்க அதேநேரம் சிறப்பான பதிவுகளை இடமுடியும் என்பதற்கு ஜீயினுடைய பல பதிவுகள் எடுத்துக்காட்டு.

கிருபாகரன் உமாசுதன் என்ற இயற்பெயரைக்கொண்ட பதிவர் ஜீ.. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்தில் தடம்பதித்துகொண்டார். அன்றிலிருந்து தன் தனித்துவமான அனைவரும் விரும்பும்> இலகுவான அதேநேரம் சிறப்பான ஒரு எழுத்துநடையை தனதாக்கிக்கொண்டு பலரையும் கவரும் வண்ணம் பதிவுகளை தந்துவருகின்றார்.

எந்த ஒரு விடயத்தையும் மிக ஆழமாக பார்க்கும் ஜீயின் பார்வைகள்> அனுபவங்கள்> தான் சந்தித்துகொண்டவை> ஏன் கசப்பான அனுபவங்களை பதிவிடும்பொழுது கூட> உணர்வானதாகவும்> அதேநேரம் யதார்த்தமானதாகவும்கூட தொட்டுச்செல்வது அவருக்கே உரித்தான பண்பு என்று தான் சொல்லவேண்டும்.

முக்கிமானதாக ஜீயினுடைய வாசிப்பு என்ற விடயத்தை சொல்லியே ஆகவேண்டும். பலவேளைகளில் ஜீயினுடைய வாசிப்பு பற்றிய அவரது பதிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும். காரணம் ஜீ.. பல எழுத்தாளர்களின் நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவர். இருப்பினும் அவர் தெரிவு செய்து படிக்கும் நாவல்களே இங்கு குறிப்பிடப்படவேண்டியவை. பிரபலமான எழுத்தாளர்களின் மிக தரமான நாவல்களை ஜீ தெரிவு செய்து படித்து வருவதும் அந்த அனுபவங்களை பிறருக்கும் தெரிவித்து பிறரையும் அந்த சுகாவனுபவங்கைளில் இலகிக்க வைப்பதிலும் ஜீ..க்கு அலாதியான பிரியம் உண்டு என்பது புலப்படுகின்றது. (றீடர்ஸ் ஹைட்)

நல்லதொரு கலைஞன், நல்லதொரு எழுத்தளான், தேடல்கள் உடையவன்> தன்மேல் திருப்திப்பட்டுக்கொள்ளாமல்> தன்னை நாளாந்தம் மென்மேலும் சிறப்பு செய்பவன்> இசை என்னும் விடையத்தில் அன்நியமாக நிற்பது என்பது முடியாத காரியம். அதற்கு ஜீ யும் விதிவpலக்கில்லை. ஜீ யினுடைய இசைக்காதல் அவரது பல பதிவுகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த இசைக்காதல்> இன்னது என்ற வரையறைக்குள் மடடுப்படாமல்> இலகிக்கவைக்கும் இசைகள் அனைத்தின்மீதும் பிரியம் கொள்ளும் தன்மைகள் தொக்கி நிற்கின்றன.

யாருக்கு தன் காதுகளால் முதன்முதலில் கேட்ட பாடல் நினைவு இருக்கும்?

ஒரு சிலருக்கு மட்டுமே இத்தனை நினைவாற்றல்கள் வரமாக கிடைத்திருக்கும். அப்படி ஒரு வரம்வாங்கிவந்தவராக ஜீ யை தைரியமாகக்கூறிக்கொள்ளலாம்.

நினைவுகள்> அவற்றின் ஞாபக சக்திகள் என்பனவே> உணர்வோட்டமான பழைய விடங்கள் பற்றி அனுபவங்களை எழுதுபவர்களுக்கும்> அவற்றை சுவாரகசியம் குன்றாமல் தருவதற்கும் மிகத்தேவையான விடயம். அந்த வகையில் ஜீயினுடைய அனுபவப்பகிர்வுகள்> ஜீயினுனைய கண்களினூடாக நாம் பார்க்கும் காட்சிகள்போல வாசிக்கும் எங்களை அந்த காலங்களுக்கு அழைத்துச்செல்வது ஆச்சரியமான ஒரு அனுபவம்.

உலகசினிமா> மற்றும் கொலிவூட் பார்வைகள்! ஆம்> இது தான் ஜீயின் விஸ்பரூபம் என்று மலைத்துப்பார்க்கும் அளவிற்கு இருக்கின்றன. முக்கிமான தரமான உலக சினிமாக்கள் பற்றிய ஜீயினுடைய ஆராய்வுகள். எப்படி இந்த மனிதன் ஒரு படத்தின் இத்தனை நுன்னிய விடயங்களையும்> அவதானிக்கின்றார் என்ற ரீதியில் அவை அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு படங்கள் பார்த்து முடிந்தவுடனும் ஒவ்வொருவர் மனதினுள்ளும் சில கேள்விகள் இருக்கும்> யதார்த்தமுரணான சில கட்டங்கள்> சில கட்டங்கள் திரைப்படத்தில் ஏன் புகுத்தப்பட்டன> சில கட்டங்கள் அர்த்தமின்றி வந்தனவே அதற்கும் பிரதான கதைக்கும் என்ன தொடர்பு! என்பனபோன்ற கேள்விகளை நாம் கேட்டுவிட்டு பேசாமல் இருந்துவிடுவதுதான் இயல்பு.

ஆனால் இந்த மனிதர்> அந்த கேள்விகளுக்காகவே மீள் பார்வை ஒன்றை பார்க்கின்றார் போல! பின்னர் மனதில் தோன்றும் அந்த கேள்விகளுக்கான விடைகளையும் கண்டுபிடித்து விடுகின்றார்> அதை எழுதியும் விடுகின்றார்.

ஆச்சரியம்தான்…

“உண்மையில் அந்த சிறகுகள் வானம் தாண்டிவிட்டன..”

இந்தவாரப்பதிவர் ஜீ.. பற்றிய சிறிய பார்வை ஒன்றை கண்டோம். சரி..இனி இந்த வாரப்பதிவர் ஜீ.. இடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும் பார்ப்போம்…

கேள்வி : பதிவு எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது உங்களுக்கு?

ஜீ : சிறு வயதிலிருந்தே பாடசாலைகளில் கதை, கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெறுகிறதென்றால் நான் முதல் ஆளா.........வெளிநடப்பு செய்திடுவேன்! அவ்வளவு பொருத்தம்!

எந்த ஒரு தமிழ் பரீட்சையிலும் ஒழுங்காக ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகமில்லை!சும்மா முயற்சி செய்யலாமேன்னு தான் எட்டுமாசமா பதிவுலகில்.

ஆனால் வாசிப்பு பழக்கம் மட்டும் சிறுவயதிலிருந்து இருக்கு! தீவிர சுஜாதா ரசிகன் நான்!


எந்த தயார்படுத்தலும் இன்றி வந்ததால் மற்றவர்களிடம் சேர்க்கவேண்டும் என்று யோசிக்காமல் முதல் நான்கு மாசம் நானே எழுதி நானே வாசித்தேன்! (முற்றிலும் ஒரு டைரியாகவே)

நான் என்ன நினைக்கிறேனோ, உணர்கிறேனோ அதை சரியாக எனது எழுத்துக்களில் சரியாக வெளிப்படுத்த முடிந்ததில்லை!


எழுதும்போது ஏற்படும் ஏதோ ஒரு அவசரம், பரபரப்பில் எல்லாமே காமாசோமாவாகி விடுகிறது!


கேள்வி : பதிவுலகிற்கு வந்தபின்னர் பதிவுலகம் தாண்டிய வாழ்க்கையில் ஏற்பட மாறுதல்கள்?

ஜீ :

பதிவுலகிற்கு வந்தபின்னர் பதிவுலகம் தாண்டிய வாழ்க்கையில் ஏற்பட மாறுதல்கள் என்று சொல்வதற்கு, பெரிதாக எதுவுமில்லை!

blog என்பது ஒரு டிஜிட்டல் டைரி போன்றது! என்ன ஒரு வித்தியாசம் மற்றவர்களைப் படிக்க அனுமதிக்கும் டைரி.

எனது நண்பர்களில் ஒரு பத்துப் பேருக்குகூட எனது டைரி அறிமுகமில்லை. அப்படித்தெரிந்தவர்களிலும் வாசிப்புப் பழக்கம் உள்ளோர் ஓரிருவர் மட்டுமே!

என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் எனது சமீபத்திய பதிவு ஒன்றை வாசித்துப் பார்க்க சொல்வேன்!

இப்ப அவன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திட்டான்! :-)


எனது பதிவுகள் பற்றி எப்போதாவது பேசுபவன் நண்பன் பார்த்தி மட்டுமே! ஜீ என்ற பெயர் யாழில் நான் வசித்த ஏரியால உள்ள சிலருக்கு மட்டுமே பரிச்சயம்.

எனது வீட்டிலும் யாருக்கும் தெரியாது! ஆகமொத்தத்தில் பதிவுலகம் என்பது என்வரையில் ஒரு தனியுலகமாகவே உள்ளது! இது எனக்குப் பிடிச்சிருக்கு!


அதே போல் ஏதோ ஒரு கணத்தில் நான் திடீரென நிறுத்திச் சென்றும் விடலாம்! :-)


என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இயல்பில் கூச்சசுபாவி என்பதாலும் இருக்கலாம்!

(ஆமா! இல்லாட்டி மட்டும் பாக்கிறவங்க எல்லாம் ஆட்டோக்ராப் கேட்டுடுவாங்க! யாருப்பா அது திட்டறது? :-))

நீங்கள் வற்புறுத்தியதால் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். அதன் மூலம் ஒருசில நண்பர்கள் அறிமுகமானார்கள். சமீபத்தில் மருதமூரான் எப்படியோ என்னை அடையாளம் கண்டுகொள்ள, பேசினோம்!

பதிவுலகில் நிறைய நண்பர்களை, ரசனையுள்ளவர்களைக் கண்டுகொண்டேன். அதே போல் ஜீ- யையும் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது!


கேள்வி : உலகசினிமா பற்றிய உங்கள் கவனம்!, உங்கள் எழுத்துக்கள், வாசிப்புக்கள், உங்கள் பார்வைப்பதிவுலகம்?

ஜீ :

எனக்கு சினிமா பிடிக்கும்! பிடிக்கும் என்பதைவிட I Love cinema. அனால் நான் படங்கள் பார்ப்பது குறைவு!

நான் பர்த்த சில படங்களில் உலக சினிமாக்களே அதிகம். ஹாலிவுட் குறைவு.


ஆரம்பத்தில் ஈரானிய சினிமா! Majid Majidi யின் படங்கள்!

அதேபோல் இத்தாலிய சினிமா என்னைக் கவர்கிறது - இயக்குனர் Guiseppe Tornatore, Roberto Benigni போன்றோரின் படங்கள்! என்னை ஆகக் கவர்ந்த இத்தாலியப் படம் 'Cinema Paradiso'.

அதே போல் கொரியப் படங்கள் குறிப்பாக Kim Ki -duk இன் படங்கள்!


அப்படிப் பார்த்ததில் பல படங்கள் எனது பதிவில் எழுதப்படாமலே இருக்கிறது! எல்லாம் சோம்பேறித்தனம் தான் காரணம்!

தமிழ்- இயக்குனர்,பதிவுலக விமர்சனங்களைப் பார்த்தே தெரிவு செய்து பார்ப்பேன்!

நான் இந்தியாவில் இருந்தால் இப்போது ஒரு உதவி இயக்குனராக மாற முயற்சியாவது செய்திருப்பேன்! :-)


கடந்த நான்கு வருடங்களாக எனது வாசிப்புப் பழக்கம் (புத்தகங்கள்)வெகுவாகக் குறைந்துவிட்டது! ஆனால் பதிவுகளை வாசிப்பதால் நிறையத் தெரிந்து கொள்ள, ரசிக்க, சிரிக்க, ஆச்சரியம் கொள்ள முடிகிறது!

இந்த உலகில் எந்த பேதமுமின்றி ஒவ்வொருவரிடமும், ஏதோ எங்களுக்குப் புதிய, ரசிக்கக்கூடிய ஒரு விஷயம், செய்தி இருக்கிறது! பதிவுலகமும் அப்படியே!


ஜீசஸ், நபி, புத்தர், கிருஷ்ணர் மட்டுமல்ல! ஒரு வகையில் எல்லா மனிதர்களுமே ஒரு Messenger என்றே நான் நினைக்கிறேன்!

எப்போதும் நான் ஒரு ரசிகனாகவும், பார்வையாளனாகவுமே இருக்கின்றேன்!


எனது பதிவுகளிலும் நான் ரசித்த, பார்த்த, என அனுபவங்களையே அதிகமாக சொல்லியிருக்கிறேன்!

உணர்ந்து கொள்ளாத எதையும், முழுதுவதும் கற்பனையாக என்னால் எழுத முடிவதில்லை!

எனக்கு நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் பிடிக்கும்! (சுஜாதா மாதிரி) அம்மாதிரி பதிவுகளை விரும்பி வாசிப்பேன்!. அம்மாதிரி எழுவது கடினமானதும் கூட.

நம்மிடையே அருகி வரும் நல்ல குணங்களில் ஒன்று நகைச்சுவை உணர்வு!


நம்மவர்கள் பலர், எபோதும் படு சீரியஸ் ஆகவே இருக்கிறார்கள்! வடிவேலு காமெடியையே படு சீரியஸா உர்ர்ர்ர்ரென்று பார்ப்பவர்கள் ஏராளம்! நம்மவரின் நகைச்சுவை உணர்வு அப்படி!


அதேநேரம், ஒரு சீரியசான விஷயத்தையும் 'அவல நகைச்சுவையாகச்' சொல்லிச் செல்லலாம்!


ஜீயின் "வானம்தாண்டிய சிறகுகள்"

Thursday, February 17, 2011

மரணத்தின் பின்னர்!!!!

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் உச்சமான ஒரு பயம் மரணபயமே. நாளை தனக்கு மரணம் உண்டு என்பதை மறந்து மனித இனம் வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட, மரணம் என்பது நிச்சயம் என்பது மனிதனுக்கு ஒவ்வொரு செக்கனும் சொல்லிக்கொண்டுதான் உள்ளது. மரணம் என்னும் முடிவை கண்டும் காணதவன்போல மனிதன் நடித்துக்கொண்டு தன்னைத்தானே சமாதனப்படுத்திக்கொண்டு வாழப்பழகிக்கொண்டுவிட்டான்.
ஒருவகையில் மனிதனது இந்த நடவடிக்கைகூட ஒருவகையில் அவனது முறையான சாமர்த்தியம், அல்லது அவனுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்லவேண்டும், ஏனெனில் மரணம், முடிவு என்பனபற்றிய சிந்தனைகளுக்கு மனிதன் உட்பட்டிருந்தால், அது மனித வாழ்வையே கேள்விக்குறி ஆக்கிவிட்டிருக்கும்.
அத்தோடு சாகத்தானே போகின்றோம் என்று வாழாதிருப்பதும் நியாமாகப்படவில்லை.

மரணம் என்பது இந்த பூமியில் ஒரு மனிதனின், ஆடி அசையும் வாழ்வியலின் முடிவு என்று பௌதீக ரீதியில் சொல்லிக்கொண்டாலும், மரணத்தின் பின்னர்..!! என்று மனிதன் யோசிக்காமல் இருந்ததில்லை.
இங்கே உடல், ஆன்மா என்ற சித்தார்ந்தத்திற்குள்ளும், விஞ்ஞான கண்ணோட்டத்திற்கும் சென்று வாசிப்பவர்களுக்கு சலிப்பை உண்டாக்க விரும்பவில்லை. இரண்டையும் தாண்டிய பேதமையான மனிதமனத்தின் கோணத்திலேயே மரணத்தின் பின்னர் என்ற கேள்வியுடன் பயணித்துப்பார்ப்போம்.

மரணத்தின் பின்னர் என்ன? என்ற கேள்வி மனிதன் சிந்திக்கத்தொடங்கிய நூற்றாண்டிலேயே மனித மனதிற்கு தோன்ற ஆரம்பித்திருக்கவேண்டும்.
ஒருவனுடைய செதுக்கப்பட்ட வாழ்க்கை, அவன் கற்றவை, பெற்றுக்கொண்டவை, அவனது தனக்குள்ளான ஆராய்வுகள், அவனது சிந்தனைகள், அவனது அனுபவங்கள், வாழ்வியலின் புரிதல்கள், கற்பனா சக்தி ஓட்டங்கள் என அவன் பூமிக்கு வந்து கஸ்டப்பட்டு சேகரித்த எல்லாமே அவனுடைய மரணத்துடன் முடிவுக்கு வந்துவிடுகின்றனவா? இவைதான் முடிவென்றால் அவன் இத்தனைக்கும் சிந்திக்கவே தேவையில்லையே? போன்ற கேள்விகள் எழுகின்றதல்லவா!
மரணம் முடிவு என்பதை பெரும்பாலான மனித மனங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதிருப்பதற்கு இவைகள்தான் காரணங்களாக இருக்கவேண்டும்.

இதன் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளே மதங்களிலும் தாக்கம் செலுத்த ஆரம்பித்தன.
சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, பாவ, புண்ணியம், இயமன், சித்திரபுத்தன், தேவதூதர்கள், பாவத்தின் சம்பளம் மரணம், மீட்க ஆண்டவர் வருவார், ஜின்கள், என பல்வேறு கருத்துக்கள் தோன்ற இந்த மரணபயமே காரணமாக இருந்திருக்கவேண்டும்.
“நீ பிறப்பதற்கு முன்பே உனக்கான உணவாக உன் தாயின் முலைகளில் பாலை சேகரித்தவன் எவனோ, நீ இறந்ததன் பின்னர் உனக்கான இடத்தையும் அவன் நிர்மாணித்திருப்பான்” என்கிறது கலீல் ஜிப்ரானின் ஒரு வசனம்.

சரி..அதைவிட்டு விடுவோம். மரணத்தின் பின்னான சம்பவங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. அதற்காக மரணத்தின் விழிம்பு வரை சென்று மாண்டு மீண்டவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஒரு சமுதாயத்தில் என்றிலில்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் இவ்வாறு மரணத்தின் விழிம்புவரை சென்று “மாண்டு மீண்டவர்கள்” என்று கருதப்படுபவர்களின் அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் குறிப்பிட்ட அளவு நபர்களின் செய்திகள், அவர்களது அனுபவங்கள், தங்கள் தங்கள் மதம் சார்ந்த கதைகளாக வருவதனால், அவ்வாறானவற்றை பொய்யானது என்ற கண்ணோட்டத்தில் தவிர்த்துவிட்டு பொதுவான கருத்துக்களை இது தொடர்பாக ஆராய்பவர்கள் சேகரித்து வருகின்றார்கள்.

விபத்துக்கள், கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள், உயரமான இடங்களில் இருந்து தவறி விழுந்தவர்கள், தற்கொலை செய்யப்போய் ஆபத்தான கட்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள், இறந்ததாக கருதப்பட்டு, சற்று நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தவர்கள், என பல்வேறு பட்டடோரிடம் இந்த மாண்டு மீண்ட தகவல்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.
இதிலும் பலர், இறக்கும் நேரத்தில் முன்னர் இறந்துவிட்ட, தன் உறவினர்கள், நண்பர்கள், தன்னை பரிதாபத்துடன் பார்த்ததாகவும், அந்த நேரத்தில் நிகழ்காலத்தில் நிகழ்வதை, தம்முடன் வாழ்பவர்களைவிட, இறந்த அவர்களது நினைவுகளும், அவர்களது அன்பும் தமக்கு தேவையானதாக இருந்ததை உணர்ந்ததாகவும், அவர்களுடன் செல்லவே மனது ஆசைப்பட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
வேறு சிலர் இறந்து சில செக்கன்களில் ஒரு கோணத்தில் மேல்நோக்கி நின்று தம் உடலைதாம் பார்த்து அதிசயித்ததாகவும், வலிகள், வேதனைகள், மறைந்து மிதக்கும் நிலையையும், தட்பவெப்பமான ஒரு அருமையான சூழலையும் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இங்கு மிக முக்கமான விடயம் என்னவென்றால், மாண்டு மீண்டவர்களாக பல்வேறு தரப்பினரிடமும், பல்வேறு பிரதேசத்தவரிடமும் பெறப்பட்ட தகவல்களில் பாரிய ஒரு ஒற்றுமை தன்மையே ஒரு திடுக்கிடும் கட்டமாக அமைந்துள்ளது.
அதாவது அவர்களில் பெரும்பான்மையானவர்கள், தாம் மீண்டும் உயிர்பெறும் நிலை குறித்து கூறிய இறுதி கட்டங்கள் பெரும்பாலும் ஒத்து இருக்கின்றமையே அது.
அதாவது இறுதியான பொழுதில், மிகவும் இருளாக காணப்படுவதாகவும், ஒளியின் எந்த அடையாளத்திற்கோ, எந்த அசைவுக்கோ வசதிகள் அற்றநிலையில் திடீர் என்று தோன்றும் பெரு ஒளி ஒன்று தம்மை பரவசத்தில் ஆழ்த்துவதாகவும், அதை காணும் கணமே எப்போதும் அனுபவித்திராத ஆனந்த அனுபவமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்து ஆச்சரியமானதாக இருந்தாலும்கூட, இதற்கும் விளக்கங்கள் உண்டு என்று ஆராட்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, விமானப்படையினர், மிகை வேகங்கொண்ட போர் விமானப்பயிற்சிகளை ஆரம்பத்தில் எடுக்கும்போது, நன்றாகப்பழக்கப்படுவதன்முன்னர், அந்த வேகம்கண்ட பிரமிப்பிலும், வேகமான சுழற்சிகளிலும், தம்நிலை இழந்து, அந்த வேகம், நினைவலைகளை தடைப்படுத்தும்நேரம், இதுபோன்ற இருட்டு, பின்னர் ஒளி போன்ற சம்பவங்களை நிறைய அனுபவித்துள்ளதாக ஆதாரங்களுடன் தெரிவிக்கின்றனர்.
அதேபோல வேறு சில சந்தர்ப்பங்களிலும், திடீர் என நினைவு நிலை இழக்கப்பட்டு, மீண்டும் அது சுயநிலையை அடையும் சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளதாக கூறவும்படுகின்றது.

இது தவிர “மறு ஜென்ம” அனுபவங்கள் கொண்ட சம்பவங்கள், நிறையவும் பதியப்பட்டு, எந்த தொடர்பும் இல்லாத இடமொன்றையும் நபர்களையும்கூறும் சிலர் பற்றியும், அவர்கள் கூறும் தகவல்கள் சரியாக இருப்பது பற்றியும் கண்டு மூளையை கசக்கிக்கொண்டுள்ளனர் ஆராய்வாளர்கள்.
மறு ஜென்ம சம்பவங்கள், பலவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கின்றது. இது குறித்த “டிஸ்கவரியின் டாக்குமென்றி” கூட இதை புரியாத கேள்வியுடனே முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மறு ஜென்மம் தொடர்பான சம்பவங்கள் உலகில் சிறி லங்காவிலேயே அதிகமாக உள்ளது.

ஆனால்… இவற்றுக்கான விடைகள், எமக்கு என்றோ ஒருநாள் கிடைத்துவிடுவது மட்டும் உறுதி. கண்டிப்பாக நாம் சாகும் அந்த நேரத்தில் இந்த மர்மங்கள் துலங்கிவிடும். அல்லது ஒன்றும் இல்லாமலே போயும்விடும்.

(மாண்டுமீண்டவர்களின் வாக்குமூலங்கள் சில யூடியூப்பில் உள்ளன. ஆர்வமாக இருந்தால் கொஞ்சம் தேடிப்பாருங்கள்.)

Tuesday, February 15, 2011

ஹொக்ரெயில் - 15.02.2011

33 மணிநேரம் தொடர்ந்து பெய்த முத்தமழை…
பாங்கொக்கில் 33 மணிநேரம் உதட்டோடு உதடு சேர்த்து தொடர்முத்தம் பொழிந்து 7 ஜோடிகள் புதிய உலக சாதனையினை நிலை நிறுத்தியுள்ளார்கள்.
நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, தாய்லாந்தின் பற்றயா கடற்கரையில் இந்த முத்த போட்டி இடம்பெற்றுள்ளது. பெருமளவிலான ஜோடிகள் முத்தமழைப்போட்டியில் ஈடுபட்டிருந்தாலும், இறுதிவரை உதடு பிரிக்காமல்; 7 காதல் ஜோடிகள், 33 மணிநேரம் முத்தமழையில் நனைந்து புதிய ரெக்கோhட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைரமோதிரங்களும், பெரும் பணப்பரிசும் வழங்கப்படடுள்ளன. அழவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்றாலும், முத்தம் மட்டும் எப்போதும் அமிர்தமாகவே இருந்திருக்கும்போல (அவர்களுக்கு)

அது சரி..எப்படி தொடர்ந்து 33 மணிநேரம் முத்தம் கொடுக்கமுடியும் என்று உங்கள் அறிவார்ந்த மூளை கேட்பதை உணரமுடிகின்றது.
அதாவது போட்டியில் கலந்துகொள்பவர்கள், குறிக்கப்பட்ட தடவைகள், குறிக்கப்பட்ட நேரத்தினுள், இயற்கை உபாதைகளை போக்கி கொள்ளவும், ஸ்ரோ மூலம் பானங்களையும், குடிநீரையும் அருந்தவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த போட்டியில் போட்டியாளர்கள், தங்களைச்சுற்றிய மூன்று ஸ்கொயாட் சுற்று வட்டத்தினுள்ளேயே நின்று முத்தமிடவேண்டும், உக்காரமுடியாது. உக்கார்ந்தாலோ மயங்கி விழுந்தாலோ அவுட்.
“முத்தம் முத்தம் முத்தமா? மூன்றாம் உலக யுத்தமா?”

தாய்லாந்திற்கும், கம்போடியாவுக்கும் இடையில் சிக்குண்ட சிவன்கோவில்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினைகள் இருந்து வருகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்டு எல்லைக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள “ப்ர விஹார்” என்ற சிவன் கோவிலால் தற்போது இந்த சிக்கல் தீவிரமடைந்துள்ளது. இரண்டு நாட்டு இராணுவத்தினரும், ஏட்டிக்குப்போட்டியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாலும், எறிகணைகளை தொடர்ந்து ஏவிவருவதாலும், இந்த பகுதிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையிலும் இந்த எல்லைப்பிரச்சினைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1962ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் இந்த சிவன் கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் எனவும், அதை சூழவுள்ள பகுதிகள் தாய்லாந்திற்கு சொந்தம் எனவும் வழங்கிய சிக்கலான தீர்ப்பும் கவனிக்கப்படவேண்டியதே.
இந்த விவகாரத்தில் தற்போது தலையிட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்ஸில் இருநாடுகளும் உனடியாக அமுலுக்கு வரும்படியான சண்டைநிறுத்தத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் வண்ணமும், பேச்சுவார்த்தைகள்மூலம் இந்தப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இரண்டு நாடுகளுமே முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டும் எனவும் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
அதெல்லாம் சரி. இங்கிருக்கும் சிவன் கோவில் 11ஆம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆக ராஜராஜ சோழன் கட்டிய கோவில் இது என்று சட்டென்று புரிகின்றது அல்லவா?
இதேவேளை இந்தக்கோவிலை தாய்லாந்து படையினர்தான் எரித்து அழிவுக்குள்ளாக்கியதாக கம்போடியா குற்றம்சுமத்தியுள்ளது.
“தென்னாடுடைய சிவனே போற்றி”

“ஸியேஸ் வித் ஜனா” வலைப்பூவின் ஆக்கங்கள் இனி, இணைய சஞ்சிகை, பத்திரிகை, வானொலியில்.
கடந்த வாரம் தொடர்ச்சியாக பல விண்ணப்ப மின்-அஞ்சல்கள் இந்த தளத்தின் ஆக்கங்கள் குறித்து அனுமதிக்காக வந்து சேர்ந்தன.
நான்கு இணைய சஞ்சிகை ஆசிரியர் குழுமமும், ஒரு ஐரோப்பிய வானொலி ஒன்றின் மின்-அஞ்சலும், கனடிய தமிழ் பத்திரிகை ஒன்றின் மின்-அஞ்சலும், இந்த தளத்தில் ஆக்கபூர்வமான ஆக்கங்கள்! பல உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்த அனுமதி தருமாறும், அதேவேளை இன்னும் சிறப்பான உபயோகமான பதிவுகளை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்ததில் செயற்பாட்டார்கள் கல்வி மற்றும் சமுக அந்தஸ்துகளில் உயர்ந்தவர்கள், பலராலும் மதிக்கப்படுபவர்களாக இருந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இவர்கள் எல்லாம் இந்த தளத்தின் பகுதிகளை முழுமையாக பார்த்திருக்கின்றார்கள் என்பது மிகப்பெரிய சந்தோசமாக இருக்கின்றது.
ஆக்கபூர்வமான பதிவுகள் என்று மற்வர்களால் கருதப்படுபவை சகலருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கத்துடன் அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை அனுமதி பெறாமலே பல இணையங்களில், பத்திரிகைகளில், இந்த தளத்தின் பதிவுகள் “நன்றி இணையம்” என்ற பெயருடன் வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
எது எப்படியோ.. பதிவெழுத வந்து எதை சாதித்தோம் என்று அடிக்கடி மனதில் தோன்றும் கேள்விகளுக்கு, அதன் முதற் படிக்கட்டாக இந்த ஆக்கங்கள் இணைய, அச்சு, ஒலி வடிவங்களை பெறுவது மகிழ்ச்சியான விடயமே.
அது மட்டுமன்றி இது உபயோகமான தேவையான பதிவுகளை மேலும் எழுத தூண்டுதலாகவும் உள்ளது.
இதற்கு காரணமாக இருந்த வாசகர்கள், சக பதிவர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் இதை பகிர்ந்துகொள்கின்றது “ஸியேஸ் வித் ஜனா”

குறும்படம்.

நேரில் கண்ட விசித்திரத்திருடன்.
நேற்யை தினம் நல்லூர் பின் வீதியால் எனது மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது கண்ட சம்பவமும், அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அதிர்ச்சியும், விசித்திரத்தையும் சேர்த்து தந்ததாக இருக்கின்றது.
நேற்று மதியம் தாண்டிய வேளை வீதியில் பெரிதாக வாகன நெருக்கம் இல்லாத சந்தர்ப்பம். ஒரு பெண்மணி நடந்துவந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர் பின்னாலே வேகமாக சைக்களில் வந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவன் அந்த பெண்ணை முட்டுவதுபோல செல்வதை தூரத்தில் அதே பாதையில் நேரே முன்னால் வந்துகொண்டிருந்த எனக்கு தெரிந்தது. உடனடியாக அந்தப்பெண், கையை காட்டி கத்திக்கொண்டு அவனை துரத்திக்கொண்டிருந்தமையும் தெரிந்தது.
சற்று முன்னால் இரண்டு மோட்டார் சைக்களிள்களில் நின்று பேசிக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் அந்த இளைஞனின் சைக்கிளை உதைந்து விழுத்திவிட்டு அவனை பிடித்துக்கொள்கின்றனர். இந்த கட்டத்தில் நான் அவர்களை அண்மித்து விட்டேன். “அந்த அம்மாவின்ட சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுறான் அண்ணை” என்று அவனை பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் என்னிடம் சொல்கின்றான்.
அதற்குள் இன்னும் ஐந்து பேர் கூடிவிட்டனர். இதை கண்டு சற்று தொலைவில் கடமையில் இருந்த இராணுவத்தினரும் ஓடிவரவே, அந்த திருடனை பின்னர் வந்த ஒரு வயதானவர் அடிக்க முற்பட்டார். ஆனால் அந்த அம்மா..அடிக்கவேண்டாம். ஆமிக்காரங்கள் வாறாங்கள். அவர்களிடம் ஒப்படைக்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தவேளை…இராணுவத்தினரை கண்டு திடுக்கிட்டு பார்த்த அந்த திருடிய இளைஞன் உடனடியாக செய்த காரியம் அதிர வைத்தது.
அந்த சங்கிலியை வாய்க்குள் திணித்து விழுங்கிவிட்டான்;.
பிறகென்ன பிடித்த இளைஞர்களும், அந்த பெண்மணியும், இராணுவ வீரர் ஒருவரும் ஒரு ஆட்டோவில் அவனை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அவசரமாகச்சென்றனர்.
எதுக்காக அந்த இளைஞன் திருடிய சங்கிலியை விழுங்கினான் என்பது மனதில் கேள்வியாகவே உள்ளது!

மியூஸிக் கபே
ஜேசுதாஸின் குரலில் எப்போதும் ததும்பும், காந்த ஈர்ப்பும், மானஸ சஞ்சாரமும், மனதுக்குள் ஏதோ செய்யும் உணர்விலும் எப்போதும் அப்படியே மெய்மறந்துபோகும் தன்மைகள், சம்பவங்கள் ஒன்றா இரண்டா..
ஜேசுதாஸின் பாடல்களை, அந்த குரலை கேட்பதே என்னைப்பொறுத்தவரையில் தவம்தான்.
அந்த வகையில் எப்போதும் இரசிக்கும் அவரின் வித்தியாசமான பாடல் இது..
கண்டிப்பாக கேட்டுப்பாருங்கள்..வானம்.. எத்தனை லயங்களில், எத்தனை ரிதங்களில் உங்கள் மனதில் சஞ்சாரிக்கின்றது என்று..

ஜோக் பொக்ஸ்
கணவன் அலுவலகத்தில் இருந்து வருவதற்கு முன்னதாகவே தன் அண்ணா வீட்டிற்கு புறப்பட்டுவிட்ட மனைவி கணவனுக்கு எழுதிவைத்துவிட்டுப்போன குறிப்பு..
அண்ணன் மகன் நாளை வெளிநாடு போகவுள்ளதால் நான் அண்ணா வீட்டிற்கு அவசரமாக போகின்றேன். நாளை மதியம்தான் திரும்புவேன்.
மூன்று சான்ட்விச் செய்து வைத்துவிட்டு செல்கின்றேன்…
ஓன்றை எடுத்து டாமிக்கு போடுங்க..
மற்றதை எலிப்பொறியிலை வைத்திடுங்க..
மிச்சம் உள்ளத நீங்க சாப்பிடுங்க..

Sunday, February 13, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.மாத்தியோசி றஜீவன்.

பெயரில் மட்டும் இன்றி தன் பதிவுகளாலும், பலரை மாற்றி யோசிக்கவைத்துவிடுபவர் இவர். அண்மைக்காலத்தின் அதிரடிப்பதிவர்களில்முக்கியமான ஒருவரும்கூட. வித்தியாசமாக, ஜனரஞ்சகத்தோடு அனைவரையும்கவரும் நடையில் எழுதும் பதிவர்கள்மேல் பலரின்பார்வைகள் கண்டிப்பாகமையமிடும் என்பதற்கு ஏற்றால்போல் பலரையும் தனக்கே உரியதானஜனரஞ்சகம் மிக்க எழுத்துக்களால் தன்னோடு சேர்ந்து பலரையும் மாற்றியோசிக்கவைத்துள்ளார் பதிவர் றஜீவன்.

சக நண்பன் ஒருவனுடன், கட்டை மதிற்சுவர் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு, இடைக்கிடை கடலையும்போட்டுக்கொண்டு, பல விடையங்கள் பற்றியும்சிலாகிப்பதுபோன்ற உணர்வினை இவரது பதிவுகள் ஏற்படுத்தி விடுவதே இவரதுபதிவின் பெரு வெற்றியாக அமைந்துள்ளது.
நகைச்சுiவாயக பேசவும், எழுதவும் தெரிந்தவர்கள் எல்லோரையும் தம்மகத்தேகவர்ந்துகொள்வது இயல்பு என்பது றஜீவனின் பதிவுகளில் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராமலிங்கம் றஜீவன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், யாழ்ப்பாணம்மானிப்பாயை பூர்விகமாகக்கொண்டவர். தனது உயர்தரக்கல்வியைவவுனியாவில் கற்று, பின்னர், ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியைபூர்த்திசெய்து வன்னி மண்ணில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியவர். அதன்பின்னர் ஈழத்தமினத்தின் தலைவிதியான புலர்பெயர்வு வாழ்வு இவரையும் வந்துசூழ, தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவருகின்றார்.
ஆனால் இவரது எழுத்து நடைகளையும், எழுதும் விடையப்பரப்பக்களையும்காணும் பலர் இவரை தமிழ்நாட்டுப்பதிவராகவே கருதுகின்றார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டும் இன்றி “With Me” என்ற ஆங்கில வலைப்பதிவையும், Avec மொய் என்ற பிரஞ்சுவலைப்பதிவையும்கூட இவர் பதிந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றே. ஒருவகையில் மூன்று மொழிகளில் பதிவெழுதும் பதிவர்களில் நாம் அறிந்துமும்மொழி புலமையுடன் இருக்கும் ஒருவர் றஜீவன் என்பதும் பெருமைசேர்க்கும் ஒருவிடயமே.

கடந்த வருடம் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்தில் முழுமையாககளமிறங்கிய றஜீவனின் பதிவுகளும், வாசகர் தொகையும் மளமளவெனஅதிகரித்து சென்றதற்கு அவரது தொடர் ஈடுபாடும், பல துறைத்தேடல்களுமேபெரும் காரணங்களாக அமைந்துள்ளதை கண்டுகொள்ளலாம்.
சினிமா, இசை, பாடல்கள், சமுகம், சமகால நிகழ்வுகள், அரசியல், அரசல்புரசல்கள், தொழிநுட்பத்தகவலல்கள், ஒவ்வொரு பதிவுலும்அட்மார்க்குடன் எட்டிப்பார்க்கும் கவிதைகள் என வாசிப்பவர்களை நிறையயோசிக்கவும் வைத்து, அதேநேரம் எந்தவொரு இடத்திலும் சலிப்புத்தன்மையைகொஞ்சமேனும் வாசகர்களுக்கு வராதபடி அவதானமாக கையாளும் எழுத்துக்கள்றஜீவனிடம் அலாதியாகவே உள்ளன.

நகைச்சுவைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் றஜீவனுடைய எழுத்துக்கள், தன் பதிவுகள் மற்றவர்களுக்கு ஒரு றிலாக்ஸ்ஸாக இருக்கவேண்டும் என்றஅவரது எண்ணத்தின் வெளிப்பாடாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும்இல்லை.
அதேவேளை சகல பதிவர்களுடனும், மென்மையான உணர்வோடும்நகைச்சுவையுடனும் அவர் எழுததுக்களால் தொடர்பு கொண்டுள்ளதும், காத்திரமான பதிவுகளுக்கும், உபயோகமான பதிவுகளுக்கும் ஓடிச்சென்றுவாசிப்பது மட்டும் அன்றி எழுதும் சக பதிவரை ஊக்குவிக்கும் பண்பும் அவரிடம்இயல்பாகவே உள்ளதை அவதானித்துகொள்ளமுடிகின்றது.

அடுத்த ஒரு முக்கியமான விடயம் என்னதான் நகைச்சுவைகள் கொண்டதாகஅவரது பதிவுகள் இருந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அந்த எழுத்துக்களிலும், கருப்பொருள்களிலும் எந்தவொரு யதார்த்த மீறல்களையோ, அல்லது சார்பானதகவல்களையோ காணமுடியாதிருப்பது அவரது எழுத்துக்களின் முக்கியமானஒரு சிறப்பு.

பதிவுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குள் மிக அதிகமானநண்பர்களையும், வாசகர்களையும், சக பதிவர்களையும் அவர்பெற்றுக்கொண்டுள்ளது மிக முக்கிமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயமே.
தனது வலைத்தளத்தில் “என்னைப்பற்றி” என்ற இடத்தில் எதையும் இதுவரைசாதிக்கவில்லை சாதித்துவிட்டு சொல்கின்றேன் என்ற கருத்தை இட்டுள்ளமை, அவையடக்கமாக மட்டுமே கருத முடிகின்றது. அதற்கு கீழேயே அப்படிபார்க்காப்போனால் எப்போதுமே என்னைப்பற்றி சொல்லப்போவதில்லை என்று, எழுத்தினால் கண்ணடிப்பதும் அதைவிட ஒரு அவையடக்கமாகவே தெரிகின்றது.

சரி.. இந்தவாரப்பதிவரான மாத்தியோசி றஜீவன் பற்றிய சிறிய பார்வையைஇதுவரை பார்த்தோம். இனி இந்தவாரப்பதிவர் றஜீவனிடம் கேட்கப்பட்ட அந்தமூன்று கேள்விகளையும் அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி: சம்பிரதாயக் கேள்விதான் தங்கள் வலையுலகப்பிரவேசம் எப்படி?

றஜீவன் : எங்க எது ப்ரீ யா குடுத்தாலும் அத வெக்கப்படாம வாங்குறது நம்ம பழக்கம்! கூகுளும் ப்ளாக்குகளை பிரீயாகத் தருவதால், சரி நம்மளும் ஆரம்பிப்போமே என்று தொடங்கினேன்!

கேள்வி: தங்கள் வலைப்பதிவில் குறிக்கோள் அப்படி ஏதாவது உண்டா?

றஜீவன் : எல்லோரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கவேணும்! இதுதான் எனது குறிக்கோள்! ஆனால் இது லேசான காரியம் இல்லை! கிரியேட்டிவ் மைன்ட் நிறைய வேணும்! எனக்கு கிரியேட்டிவ் மைன்ட் உள்ள எல்லோரையும் ரொம்ப பிடிக்கும்! எமது மூளையை கசக்கி பிழிந்து அதில் சாறெடுத்து, நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிறிய வயதில் இருந்தே யோசிப்பேன்!

கேள்வி: வலையுலகம், எழுத்துக்கள் சார்பாக எதிர்காலத்திட்டங்கள் ஏதாவது?

றஜீவன் :கண்டிப்பாக! முதல் முறையாக இதனை இப்போதுதான் ஏனைய நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்! அதாவது சினிமாவில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக வரவேண்டும் - அதுவும் மிகச்சிறந்த காமெடி ஸ்க்ரிப்டுகளை எழுதி அதனை நல்லதொரு இயக்குனரின் கையில் கொடுத்து, நல்ல நகைச்சுவைப் படங்கள் எடுத்து மக்களை சிரிக்க வைக்க வேணும் என்பதே எனது குறிக்கோள்!

எனது வலைப்பூ மூலமாக நான் இதற்கான பயிற்சியினை மேற்கொண்டு வருகிறேன்! நான் எழுதும் ஒவ்வொரு பதிவும் எனக்கான பயிற்சியே! இப்படியே எழுதி எழுதி நன்கு புடம் போடப்பட்ட பின்னர் - சினிமாவுக்குள் நுழைவதாக எண்ணம்! காமெடி ஸ்க்ரிப்டுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்!

திரைப்படங்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் எனது நண்பர்கள், இப்போதே எதையாவது எழுதும்படி கேட்கிறார்கள்! ஆனால் நான் அவசரப்படவில்லை! என்னை இன்னும் நிறைய வளர்த்துக்கொள்ள வேண்டும்! பின்னர்தான் கால்வைக்க வேண்டும்!

சரி நண்பர்களே! இதற்குமேல் நான் நீட்டி முழக்கி, நண்பர் ஜனாவின் ப்ளாக் கு இருக்கிற பெயரைக் கெடுக்க விரும்பவில்லை! என்னை இன்று அறிமுகம் செய்த நண்பன் ஜனாவுக்கு எனது நன்றிகள்!!

றஜீவனின் - மாத்தியோசி

Friday, February 11, 2011

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.


பூமிப்பந்தின் தென் பகுதியின் தென் அட்லாண்டிக் ஆழியில் மிதக்கும் முத்துக்கள்போல ஆர்ஜென்ரீனாவுக்கு கிழக்காக உள்ள, இரு பெரியதீவுகளையும், பல சிறு தீவுக்கூட்டங்களையும் கொண்ட தீவுகளே போக்லண்ட் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
சொரசொரப்பான மெதுமையான மண்ணியல் தன்மைகளையும், பெரிய இலைகளைக்கொண்ட, இளம்பச்சை தாவரங்களையும், வர்ரஜ் என்ற நரியினம், ஸ்ராரா, ரிட்டரா போன்ற பறவை இனங்களை தன்னகத்தே தனித்துவமாக கொண்டுள்ள தீவுக்கூட்டங்கள் இவை. வெதுவெதுப்பான காலநிலை, குளிர்க்காலநிலை என இரு பெரும் காலநிலைகளின் தாக்கங்கள் இந்த தீவுக்கூட்டங்களில் உண்டு.

1880களில் இந்த தீவுக்கூட்டங்கள் பிரித்தானிய ஆளுகைக்குள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தென் பிராந்திய யுத்தங்களின்போது பிரித்தானிய “ரோயல்” கடற்படையினரின் முக்கிமான ஒரு வலையத்தளமாக இந்த போக்லண்ட் தீவுகள் பயன்படுத்தப்பட தொடங்கின.
குறிப்பாக ஸ்கொடிஸ் இன மக்கள் இந்த தீவுகளில் குடியேறி பிரித்தானிய முடியாட்சியின்கீழ் வாழ்ந்துவரத்தொடங்கினார்கள்.
ஆனால் ஆர்ஜென்ரீனாவின் எண்ணங்கள், தமது சுதேச நில ஆளுகைகளை எண்ணி விம்மலுடனேயே இருந்து வந்தன. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலத்திற்கு உரிமை கோரும் வெளிப்பாடுகளை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே ஆர்ஜென்ரீனா வெளிப்படுத்த தொடங்கிவிட்டது.

இரண்டு உலக யுத்தங்களும் முடிவடைந்து, பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடுகள் சுதேசிகளிடமே கையளிக்கப்பட்டு, உலகம் தொழிநுட்பம், விஞ்ஞானம் என்பவற்றில் அதிஉச்சமாக பயணித்துக்கொண்டிருந்த 1980களின் ஆரம்பங்கள்.
உலகம் முழுவதுமே, அதிநுட்ப இலத்திரனியலில் இலகித்துக்கொண்டிருந்த காலங்கள். நாடுகாண் பயணங்களை முடித்துக்கொண்ட மனிதஇனம், கிரகம்காண் பயணங்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்த காலங்கள்.
1982 மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து ஆர்ஜென்ரீன கடற்படையினரின் கடல்ரோந்துகள், இந்த தீவு பகுதிகளில் அதிகரிக்கத்தொடங்கின. அந்த ரோந்துகள் மெல்மெல்ல சவுத் ஜோர்ஜியா தீவுகளை தரைதட்டி கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு சென்றன.

எப்போதுமே நிதானமாக அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டு கண்ணுக்குள் எண்ணை விட்டு கவனித்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரப்புத்தி இதை கவனிக்காமல் இருக்கவில்லை. மிக நிதானமாக கவனித்துகொண்டுதான் இருந்தது.
மறுபக்கம் 1982ஆம் ஆண்டு, ஏப்ரல் 02ஆம் நாள் ஆர்ஜென்ரீனா மேற்படி போக்லண்ட் தீவுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முழுமையாக அரங்கேற்றியது.
தீவுகள் தொடர்பான அதிகார உரிமம் தொடர்பான நூற்றாண்டு சர்ச்சைகளின் உச்சமாக இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஆர்ஜென்ரீனா திடீர் என எடுத்த இந்த கைப்பெற்றல் நடவடிக்கையினால் போக்லண்ட், சவுத் ஜோர்ஜியா ஆகிய தீவுகள் ஆர்ஜென்ரீனாவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டன.
இதை தொடர்ந்து ஆர்ஜென்ரீன வான்படை, மற்றும் கப்பல் படைகளை மேற்படி பிரதேசங்களில் எதிர்த்து முதல் நடவடிக்கையாக பிரிட்டன் பெரும் வான்தாக்குதலை தொடங்கியது.

அப்போது உலகம் இரண்டு வல்லரசுகளின் கைகளில் இருந்தது என்பது அறிந்ததே. இந்த விதத்தில் இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆர்ஜென்ரீனா இதை இராஜதந்திர ரீதியில் அணுகமுன்வரவேண்டும் என்றும், யுத்தம் சரியான முடிவாக இருக்கமுடியாது. இதில் பாதிக்கப்படபோவது ஆர்ஜென்ரீனாவே எனவும், அமெரிக்கா அழுத்தமாக கூறி, ஆர்ஜென்ரீனாவை சமரை நிறுத்திவிட்டு பேச்சுக்களுக்கு வரவேண்டும் என அமெரிக்கா வலியுறத்தியது. ஆனால் ஆர்ஜென்ரீனா அதை மறுத்துவிட்டது.
தமக்கே உரிமையான தமது நிலத்தின்மேல் உள்ள பிரித்தானிய ஆளுகைக்கு எதிரான போர் இது என உலகத்திற்கு ஆர்ஜென்ரீனா அவசரமாக வியாக்கியானம் செய்தது.
மறு கரையில் சோவியத் யூனியன் ஆர்ஜென்ரீனாவின் இந்த நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. இராஜதந்திர ரீதியிலேயே இதை அணுகப்படவேண்டும் என சோவியத் யூனியனும் உறுதியாகச் சொல்லிவிட்டது.

ஏப்ரல் 05ஆம் நாள் “ரோயல்” கப்பற்படை என்பது எத்தனை எல்லமையானது என்பதை கண்டு ஆர்ஜென்ரீனா மட்டும் அல்ல முழு உலகமும் திடுக்கிட்டது. அட்லாலாண்டிக் சமுத்திரத்தை கிழித்துகொண்டு, பிரிட்டன் ரோயல் கடற்படையினரின் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள், ஏவுகணை, நாகசாகி கப்பல்கள் என வந்த கடற்படைகள், தென் சமுத்திரம் தொடங்கும் இடத்தில் இரு பிரிவாக பிரிந்து போக்லண்ட் தீவுகளையும், சவுத்ஜோர்ஜியாத் தீவுகளையும், ஆளுகைக்குட்படுத்திய ஆர்ஜென்ரீன படைகள் மீது தாக்குதல்களை நடத்தியவாறே துரப்புக்களை மள மளவென தரையிறக்கம் செய்தன. அதேவேளை பி.எம்கே, மிராஜ் 3, சொனிக், போன்ற அதிநவீன ரோயல் யுத்த விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியை கொடுத்துகொண்டிருந்தன.

1880களின் பின்னர் பிரிட்டன் ஒரு நாட்டின்மீது தனித்து நின்று யுத்தம் செய்த ஒரு வரலாறாக இது பொறிக்கப்பட்டது. அடிக்கு உடனடியாக பெரும் பதிலடி கொடுத்து தான் இரும்புச்சீமாட்டிதான் என்பதை நிரூபித்துக்காட்டினார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர்.
இந்த யுத்தம் பற்றி இரு நாடகளுமே எந்தவிதமான முன்னறிவிப்பையும் விடவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. அடுத்ததாக முக்கிமான விடயம் இது எந்த நிலத்திற்காக யுத்தமோ அந்த நிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. அதை தவிர நாடுகளின் குரோதங்களை இரு நாடுகளுமே இரு நாடுகளின் வேறு பகுதிகளை தாக்கி காட்டவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியதே.

ஒரு கட்டம் வரை எதிர்த்த ஆர்ஜென்ரீனாவால் பிரிட்டனின் தொடர்ந்த ஓயாத அதிரடி நடவடிக்கைகளை தாங்கமுடியவில்லை. அத்தோடு பெருமளவிலான ஆர்ஜென்ரீன படையினர் பிரிட்டனின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆர்ஜென்ரீன படைகள் சரணடைவதாக அறிவித்த உடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான ஆர்ஜென்ரீன முப்படையினரும் பிரிட்டன் படைகளிடம் சரண்புகுந்தன.
1982 ஜூன் மாதம் 17ஆம் நாள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
74 நாள் யுத்தம் என வர்ணிக்கப்படும் இந்த யுதத்தத்தில் 257 பிரித்தானிய முப்படையினரும், 647 ஆர்ஜென்ரீன முப்படையினரும், மூன்று சிவிலியன்களும் இறந்தனர். ஆனால் இங்கு இடம்பெற்ற யுத்தத்தின் தன்மைகள், யுத்தத்தின் மூர்க்கம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் இறந்தவர்கள்தொகை குறைவானதே.

மீண்டும் போக்லண்ட் தீவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டன் இப்போ நீங்கள் இதை படிக்கும்வரை அதை தனது நிர்வாகத்தின்கீழேயே வைத்திருக்கின்றது. போக்லண்ட் தீவுகளில் வசிப்பவர்கள், பிரிட்டன் பிரஜைகளாகவே கருதுப்பட்டுவருகின்றார்கள். அதேவேளை அவர்கள் ஆர்ஜென்ரீன குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கும் தகுதியும் உள்ளவர்கள்.
போக்லண்ட் யுத்தத்தின் பின்னர் இரு நாட்டு கலாச்சாரத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. முக்கியமாக ஆர்ஜென்ரீன நாட்டு மக்களின் கலாச்சாரம் பெரும் மாற்றத்தை அடைந்தது. அந்த யுத்தத்தின் தாக்கம் பெரிதும் மக்களால் உணரப்பட்டது. இந்த யுத்தம் தொடர்பான திரைப்படங்கள், பாடல்கள், விபரணங்கள் என்பன பெரிதும் வெளிவரத்தொடங்கின.
இன்றும் போக்லண்ட் தீவுகளில் வாழும் மக்களிடையே இந்த யுத்தம் பற்றிய பேச்சு உண்டு.

இந்த யுத்தின் பின்னர் இதுவரை ஆர்ஜென்ரீன இந்த நிலத்தின் உரிமம் தொடர்பான அறிவுப்புக்களை கொண்டுவரவில்லை. ஆனால் இந்த யுத்த வெற்றிமூலம் அதிக அரசியல் லாபம் மட்டும் அடைந்தவராக அன்றி, பிரித்தானிய மக்களால் போற்றப்பட்டார் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கு அவருக்கு இந்த போக்லண்ட் யுத்தம் பெருமளவில் கைகொடுத்தது.
ஆனால் மறுகரையில் பிரித்தானிய – ஆர்ஜென்ரீன நாடுகளின் இராஜதந்திர உறவில் கரும்புள்ளி விழுந்தது. இருந்தாலும் 1989ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் சீர்அமைக்கப்பட்டன.
ஒரு குடையின் கீழான மாநாடு என்ற தொணியில் முக்கியமான மாநாடு ஒன்றும் இடம்பெற்றது.

இன்று போக்லண்ட் தீவுகள், பெருமளவில் அபிவிருத்தி கண்டு, பிரபலமான உல்லாசவிடுதிகள், உல்லாச மையங்களை கொண்டுள்ளன. உல்லாசப்பிரயாணம், மற்றும் நவீன மீன்பிடி என்பன இந்தப்பிரதேசத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இன்று இந்த பிரதேசத்துடன் ஆர்ஜென்ரீனா மிகவும் சினேகிதமாகவே உள்ளது என்பதும் இந்த கட்டுரையை முடிக்க ஒரு சுபமாக உள்ளது.

இலங்கையைச்சேர்ந்த வாசகர்களுக்கு – “புக்கரா” இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல தோன்றுகின்றது அல்லவா? நினைவுக்கு வரவில்லை என்றால், முன்னேறிப்பாய்தல், நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் என்ற சொற்களை போட்டு தேடிப்பாருங்கள். அந்த புக்காரா ரக விமானங்களை முதலன்முதல் ஆர்ஜென்ரீனா அந்த போக்லண்ட் யுத்தங்களுக்கு பயன்படுத்தியிருந்தது.

Tuesday, February 8, 2011

ஹொக்ரெயில் - 08.02.2011

இராத்திரியின் மன்மதன் சில்வியோ பெரிலுஸ்கோனி!

பிரபலம் ஒன்றின் காம லீலைகள் உலக மட்டத்தில் பலரையும் பேசவைக்கும் ஒரு விடயமாகிப்போவது இயல்புதான். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிலின்டனின் பின்னால் மிக முக்கியமான நபராக உலகம் உன்னிப்பாக கவனித்து வரும் அதே வேளை, அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவியும் நபராகவும் இப்போது இத்தாலிய பிரதமர் சில்வியோ பெரிலுஸ்கோனி உள்ளார்.
விலைமாதர்கள், மாடல்கள், 18 வயதிற்கு குறைவான பெண் என பட்டியல் நீண்டுகொண்டு சென்று இப்போது பெரிலுஸ்கோனி பல பெண்களுடன் சல்லாபித்துக்கொண்டு நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் புரளியையும், சுவாரகசியத்தையும் மேலும் அதிகரித்தள்ளது.
இந்த புகைப்படம் 7.2 கோடிவரை விலைபேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவருவது சிரிப்பதா! சிந்திப்பதா!! என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.


சாப்பாட்டுக்கடை.

சாதாரண சாப்பாட்டு கடைக்கு அழைத்துப்போகாமல் உலகில் படு சுவாரகசியமான, பிரமிப்பான ஹோட்டல்களுக்கு அழைத்துசெல்வதே ஹொக்ரெயிலின் வழக்கம் அல்லவா?
முன்னர் உலகில் உயரமான இடத்தில் இருந்து சாப்பிட அழைத்துச்சென்றது நினைவு இருக்கும் அதேபோல உலகில் அடியில் இருந்து சாப்பிட இன்று உங்களை ஹொக்ரெயில் அழைத்துச்செல்கின்றது.

ஆர்யன்ரீனாவின் தென் பிரதேசத்தீவான பூஜியோ தீவு, தென் துருவத்திற்கு, அந்தாட்டிக்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள ஒரு இடம்.
அங்கே உஸ்கியா ரேட் மார்க்குடன், பல மையங்கள், இயற்கை சுற்றுலா இடங்களுடன் பூமிக்கு அடியில் (பொட்டம் ஒவ் த வேர்ள்ட்) ரெஸ்ரூரன்ட் மிகப்பிரபலம் வாய்ந்தது. இங்கு சென்று உணவருந்தினால் நீங்கள் பூமியின் இறுதி அடிப்பகுதியில் இருந்து உணவருந்திவிட்டதாக தைரியமாக காலரை தூக்கிவிட்டு இறுமாப்புடன் யாருக்கும் பெருமை பேசிக்கொள்ளலாம்.

குளிரோட்டமான கடல், இயற்கைசூழந்த இடங்கள், கண்ணுக்கு குளிர்ச்சிதரும் பசுமை, வித்தியாசமான விலங்குகள், என பலவற்றை பார்த்தவாறே உணவுவகைகளையும் விருப்பம்போல ருசித்துவிட்டு வரமுடியும்.
முக்கிமாக கடல் உணவுகள் இங்கே விசேடமாக கிடைக்கின்றன. பல வெரைட்டிகளில் கடல் உணவுகளை ருசித்துக்கொள்ளலாம். அதுபோல இந்த பகுதியில் மட்டும் வளரும் ஒருவகை காளான் உணவின் ருசி அபாரம் என்று பலர் சொல்லிக்கொள்கின்றார்களாம்.
அவற்றுடன் கோதுமை, பர்கர்ரக உணவுகள், பார்லி, இத்தாலியன் ஸ்ரைல் பூட்ஸ் என்பன கிடைக்கின்றன என தகவல்கள் உள்ளன.
ஆனால் என்ன வெறி சாரி..பிறதேஸ் அன்ட் சிஸ்ரர்ஸ்..சோறு கிடையவே கிடையாது.

குறும்படம்

வரிகளுக்கிடையே – மீண்டும் தயானந்தா.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் எழுத்துக்களின் ஊடாக “வரிகளுக்கிடையே” அனைவரையும் சந்திக்க வருகின்றார் மூத்த ஊடகவிலாளரும், எழுத்தாளருமான இளைதம்பி தயானந்தா அவர்கள்.
“வானலைகளின் வரிகள்” என்ற நூல்மூலம் இளையதம்பி தயானந்தாவின் எழுத்துக்களில் மெய்மறந்த வாசகப்பிரியர்களுக்கும், அவரது மொழிக்கையாட்சியை புரிந்துகொண்டவர்களுக்கும் இது ஒரு இனிப்பான செய்தியாகவே இருக்கும் என்பது வெள்ளிடைமலை.
மிக விரைவில் இலங்கை முன்னணி பத்திரிகையின் வார இதழில் “வரிகளுக்கிடையே” என்ற மகுடத்துடன் இளையதம்பி தயானந்தா அவர்களின் எழுத்துக்களுடன் பயணிக்கும் புதுமையான அனுபவம் இலங்கை வாசகர்களுக்கும், இணையத்தில் பத்திரிகை படிப்பவர்களுக்கும் கிட்டப்போவதாக அறிந்தமை மிக மகிழ்ச்சியான செய்தியே.
புகழ்ச்சிக்காக அல்ல உண்மையாகவே நடமாடும் ஒரு பல்கலைக்கழகமாக தன்னகத்தே பெருந்தேடல்கள்மூலம் பல துறைசார்ந்த அறிவுடன் உலாவும் அவரிடமிருந்து உதிரப்போகும் எழுத்துப்பூக்களை பவுத்திரமாக பொறுக்கிக் கொள்ளக்காத்திருக்கும் இளையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் என்பதே என் எண்ணம்.

நெடுந்தீவுக்கு புதிய கப்பல் வெள்ளோட்டம்.

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணிப்பதற்கான கப்பல்சேவைக்கு நாளை புதன்கிழமை புதிய கப்பல் வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.
இதுவரைகாலமும், தரமற்ற படகின்மூலம் சிரமமான ஆபத்தான கடல்பகுதிப்பயணமாகவே குறிகட்டுவான் - நெடுந்தீவக்கான கப்பல் பயணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் சுமார் 800 மில்லியன் செலவில் கொழும்பில் அபிவிருத்தி அதிகார சபையின்மூலம், டொக்கியாட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய கப்பலில் சுமார் 200 பயணிகள் ஒரே பிரயாணத்தில் பயணிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன், லைவ் ஜக்கட், உள்காற்று கட்டமைப்புடன் இந்த கப்பல் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுமானவரை இது இலவச பயண ஒழுங்கில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியூசிக் கபே

ஜோக் பொக்ஸ்
ஒரு ஊரில் “கரிநாக்கன்” என்று மக்களால் சொல்லப்படுபவன் ஒருவன் இருந்தானாம். அவன் எதை கண்டு சொன்னாலும், மறுநாளே அது நாசமாய்ப்போய்விடும் அதுதான் அந்த பெயரை அவன் பெறக்காரணம். அவன் வாயும் சும்மா கிடக்காது.
ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவர் இருந்தாங்க..ரொம்ப பாசக்கார பயலுக..அண்ணன் சாப்பிட்ட மிச்சத்தைதான் தம்பி சாப்பிடுவான், தம்பி குடித்த தண்ணியைத்தான் அண்ணன் குடிப்பான் அப்படி ஒரு பாச இணைப்பு.
இந்தப்பாவிப்பயபுள்ளை ஒருநாள் அவர்களைப்பார்த்து…. இருந்தா அவங்கபோலத்தானய்யா இருக்கணும் என்று சொன்னான். கதை மறுநாள் கந்தலாகிப்போச்சு. ஒரு பெண் விடயத்திற்காக அண்ணனை வெட்டிப்புட்டு தம்பி ஜெயிலுக்கு போனான்.
அதேபோல ஊருக்கே பால் கொடுக்கும் பசு ஒன்றை கண்டு அப்பா..இது பசுவில்லை காமதேனு என்றான். சொன்ன கொஞ்ச நேரத்திலையே பசு வலிப்பு வந்து செத்துப்போச்சு.
இத்தனையையும் கண்ட ஒருவன் விருப்பத்துடன் கரிநாக்கனை தன் வயலுக்கு அழைத்துப்போனான். ஏனென்றால் அவன் விதைப்பு அப்படி. அறுவடை நாளாகிவிட்டது ஆனால் வயலில் முக்கால்வாசி களைதான். கால்வாசிதான் நெல்.
அதைப்பாத்து அட இம்புட்டு களையா என அவன் சொல்வான் உடன களையெல்லாம் பொசுங்கிப்போகும் என்ற எண்ணம்தான் வயற்காரனுக்கு.
ஆனால்..வயலைப்பார்த்து “கரிநாக்கன் சொன்னது இப்படி
“பார்ரா…இம்புட்டு களை பரந்து கிடந்தாலும் அங்கங்க நெல்லும் முளைச்சுத்தானே இருக்கு”

Sunday, February 6, 2011

இந்தவாரப் பதிவர் - திரு. கூல்போய்

இலங்கையில் உள்ள பதிவர்களில் மிக இளையவர்களில் ஒருவராகவும், அனைத்து பதிவர்களினதும் செல்லப்பிள்ளையாகவும் இருப்பதுடன், குறும்புகளுக்கும் சொந்தக்காரன் கூல்போய்.
தன் எழுத்துக்களில் மட்டும் அன்றி தனது சுயமான செயற்பாடுகளாலும் அனைத்து தரப்பினரையும் வயிறு வலிக்கும்வரை சிரிக்கவைத்து, கவலைகளை மறக்கவைக்கும் பதிவர் என்றும் கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

குகேந்திரன் கிருத்திகன் என்ற இயற்பெயரை உடைய பதிவர் கூல்போய், பதிவர், ஓடியோ டீஜே, வீடியோ எடிட்டர், தகவல் சேகரிப்பாளர், இணையத்தொகுப்பாளர், கமராமான், குறும்பட தயாரிப்பு என ஒரே நேரத்தில் பல நிபுணத்துவங்களை பேணிவருபவர்.
முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் “எந்திரன்” திரைப்பட விமர்சனத்தை வலைப்பதிவு வரலாற்றிலேயே முதன்முதலாக பதிவேற்றியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
வலைப்பதிவுகளில் நகைச்சுவைகளை இலகுவாக, யாரும் நோகாதவிதத்தில் கையாண்டு, அனைவரையும், வயிறு வலிக்கும்வரை சிரிக்கவைக்கும் மந்திரம் கூல்போயிடமும், டிலானிடமும் மட்டுமே உண்டு.

தொழிநுட்பம், நகைச்சுவை, சினிமா, அனுபவங்கள், கலாச்சாரம், காதல், நிகழ்ச்சிகள், சமுகம், பதிவர்கள் என்ற மட்டத்தில் கூல்போய் பல பதிவுகளை இட்டுள்ளார். எப்போதும் படு பிஸியாக இருக்கும் கூல்போய் பதிவுலகத்தில் அப்பப்பபோ திடீர் என்று சிறு சிறு ஓய்வுகளை கேட்காமலே எடுத்துக்கொள்வதும் உண்டு. ஆனால் மீண்டும் வந்துவிட்டால், வாசிப்பவர்கள் அனைவருக்கும் வயிறுகள் கொழுவிக்கொள்ளும் விதம் தன் எழுத்துக்களால் கவனித்துக்கொள்வது கூல்போய் உடைய கெட்டித்தனம்.

பதிவுலகத்தில் படு சீரியஸான விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது கூட, அதைக்கூட நகைச்சுவையாக்கிவிட்டு, மற்றவர்களின் கோபதாபங்களை மறக்க வைத்துவிடும் கூல்போயின் எழுத்துக்கள். ஒவ்வொரு சொல்லில் அல்ல ஒவ்வொரு எழுத்திலும் சிரிக்கவைக்கும் தன்மை இவரது எழுத்துக்களின் நாதம்.

மறுபக்கத்தில் ஆங்கில திரைப்படங்கள், குறிப்பாக அனிமேஸன் திரைப்படங்களில் அதீத காதல் கொண்டவர் கூல்போய். ஒவ்வொரு கட்டங்களையும் நுணுக்கமாக மனதில் வைத்திருந்து எழுதவும், பேசவும் முடியுமானவராக இவர் இருகிக்கின்றமை பெரும் ஆச்சரியம்தான்.
நகைச்சுவையாக எழுதினாலும் அப்பப்போ தன் நியப்புலமைகளையும், தேடல் ஆறிவுகளையும் கூல்போயுடைய எழுத்துக்கள் காட்டிநிற்பதும் உண்டு.
முக்கியமாக சுஜாதா மற்றும் சாருவின் எழுத்துக்களின் ரசிகனாக இருக்கும் கூல்போய், அவற்றிலும் இருக்கும் கவனிக்கமுடியாத தவறுகளைக்கூட சில உரையாடல்களில் சுட்டிக்காட்விடுவது அவரின் மேலோட்டமான வாசிப்பாக இன்றி ஆழமான வாசிப்பாளராக அவர் இருக்கின்றார் என்பதை புரியவைக்கின்றது.

பலரும் பலமுறை சொல்லிக்கொள்வதுபோல எழுத்துக்களால் சிரிக்கவைப்பது என்பது மிகப்பெரிய காரியம், அது எல்லோருக்கும் கைவரப்பெற்றது அல்ல. ஆனால் அந்த நகைச்சுவை எழுத்துக்களைக்கூட மேம்பட்டதாக எழுதும் தன்மைகள் பாராட்டப்படவேண்டியவை என்ற கோணத்தில் முழுப்பாராட்டிற்கும் தகுதியானவராக கூல்போய் உள்ளார்.

சரி..இந்த வாரப்பதிவரான கூல்போயிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி : பதிவுலகில் உங்கள் பிரவேசம் எப்படி? ஆரோக்கியமானதாக செல்கின்றதா?

கூல்போய் : பதிவுலகில் எனது பிரவேசம், எதேட்சையானதுதான். முக்கியமாக செய்திகள், பிற தேடல்களை தேடல் திரட்டிகளில் தேடும்போது எனக்கு கிடைத்த விடைகள் பல வலைப்பதிவுகளில் இருந்தே கிடைத்தன. அவற்றை அடிக்கடி பார்த்துவந்த நிலையில் நாமும் ஒரு தளத்தை தொடங்கலாமே என்ற எண்ணத்தில் உதித்ததே எனது தளம்.
எனது தளம் என்று சொல்வதுகூட தவறு ஏனென்றால் ஆரம்பத்தில் நாங்கள் நால்வர் சேர்ந்தே இந்த ஒரு வலைப்பதிவை உருவாக்கி எழுதிவந்தோம். காலப்போக்கில் மற்றவர்கள் வேலைப்பழுக்களால் எழுத முடியாற்போனவுடன், முழுவதும் என் தலையில் விழுந்தது.
வலைப்பதிவுகள் ஆரோக்கியமானவை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் பல தேடல்களில் எனக்கு கிடைத்த தகவல்கள் ஆரம்பத்திலேயே கூறியதுபோல வலைப்பதிவுகளில் இருந்தே கிடைத்தன. இதுபோல பல தகவல்கள் தொடராக வந்துகொண்டிருக்கின்றன. தமிழில் ஒரு சொல்லை வைத்துக்கொண்டு பல செய்திகளை தேடிக்கொள்ளமுடியுமானதாக வலைப்பதிவகள் உள்ளன என்பதே ஆரோக்கியமானதுதானே!

கேள்வி : பதிவுலகம், பதிவர்கள், நீங்கள்???

கூல்போய் : 2010 ஆம் ஆண்டு பதிவெழுத தொடங்கிய புதிதில் பெரிதாக பதிவர்கள் எனக்கு அறிமுகமாகி இருக்கவில்லை. அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் யாழ்தேவி நடத்திய யாத்திரா இணையத்தமிழ் மாநாடு சம்பந்தமாக அறிந்து,
முதன் முதலில் ஜனா அண்ணாவுக்கு அழைப்பை எடுத்து விசாரித்தேன். சிறுதயக்கம், முகம்தெரியாத நபர்கள் என்ற பயம் எனக்கு இருந்தது. இருந்தாலும் உடனயடிhகவே என்னையும் வந்து தங்களுடன் பேசுமாறு அவர் அழைத்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மறுநாள் நடைபெறவிருந்த யாத்திரா நிகழ்வுக்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கு சென்று அழைப்பை எடுத்த என்னை ஜனா அண்ணா அன்பாக அழைத்துச்சென்று மற்றவர்களையும் அறிமுகம் செய்தார்.
அங்கே எனக்கு ஒரே கல்லில் ஏழெட்டு மாங்காய்கள் கிடைத்தன.
அங்கே மருதமூரான், சேரன் கிரிஷ், கன்-கொன், பாலவாசகன், இலங்கன், புள்ளட், என பலர் அறிமுகமானார்கள். ஆரம்ப அறிமுகமே அசத்தலாக இருந்தது.
அதன் பின்னர், சுபாங்கன், வரோ என்று அறிமுகங்கள் கிடைத்து, ஒரு முறை கொழும்பு சென்றபோது ஆதிரை உட்பட பலரை சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர், பதிவர் சந்திப்பில் நிறைய நண்பர்கள் இதுதான் என் பதிவுலகம், பதிவர்கள், அவர்களுடன் நான்.

கேள்வி : பதிவுலகில் வேறு ஆரோக்கியமாக நீங்கள் விரும்பும் விடையங்கள்?

கூல்போய் : நான் எனது தேவைக்காக தேடும்போது கண்ணில் பட்டதே பதிவுலகம். அந்த வகையில் இன்னும்பலர் பல தேவைகளுக்காக தேடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே ஒவ்வொரு துறையிலும் துறைதோய்ந்தவர்கள் அவர்களின் துறை சம்பந்தமான விடையங்களை விரிவாக பதிவுகளில் தரவேண்டும் என்பது எனது அவா. அவை தொழிநுட்பம், மருத்துவம், பொறியில், விஞ்ஞானம், சூழல், என எவையாகவேண்டும் என்றாலும் இருக்கலாம். அவை பலருக்கும் பயன்படும் விதம் இருக்கவேண்டும்.
அடுத்து பதிவர் சந்திப்பில் ஜனா அண்ணா நீங்கள் சொன்னது ஒரு முக்கியமான விடயம். இன்று புலம்பெயர் சமுதாயமாக உலகநாடுகள் எல்லாம் பரவிவாழும் வாழ்வு, கெட்டத்திலும் ஒரு நன்மையாக எமக்கு கிடைத்துள்ளது. இந்த வகையில் இன்று தமிழுடன் உலகின் பல முக்கியமான மொழிகளை எழுதவும், படிக்கவும் தெரிந்த ஒரு சமுதாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்கள் அந்த அந்த மொழிகளில் உள்ள முக்கியமான தகவல்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து தந்தால், அது தமிழ்; எழுத்தியலில் பாரிய ஒரு பரிநாமமாக இருக்கும்.


Thursday, February 3, 2011

ரோஹன விஜயவீரவின் ரஷ்யக்காலங்கள்

1960 களில் ரஷ்யாவின், அப்போதைய சோவியத் யூனியனின் மலைப்பிரதேசங்களில் ஒன்றில் அமைந்திருக்கும் லுமும்பா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ படிப்புக்காக இலங்கையிலிருந்து ஒரு துடிப்பான மாணவன் சென்றிருந்தான். சூழலில் நடக்கும் எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்ளும் தன்மையும், அமைதியாக இருந்து இயற்கையினை இரசிக்கும் தன்மையும் அவனிடம் அதிகமாகவே காணப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் நுழைவின்போதிலும் யாருடனும் அவன் உடனடியாக பேசுவதோ, அல்லது தன்னை அறிமுகப்படுத்த முண்டி அடிப்பதோ கிடையாது.
அமைதியாகவே இருப்பான். ரஷ்ய மொழியினை கற்பதில் அதீத ஆர்வத்தை காட்டி நின்றான்.

மருத்துவ படிப்பு கற்றுவந்தாலும், மார்க்ஸிஸ சிந்தனைகள் அவனை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுக்க முற்பட்டது. அவனும் அதன்பக்கம் மிக வேகமாக முன்னோக்கிச்சென்றான். அவனது பல்கலைக்கழக விடுதி அறைமுழுவதையும், மாஸ்ஸிச, கொமினிஸ் புத்தகங்கள் தொகை தொகையாக அலங்கரிக்கத்தொடங்கின, மலைச்சாரலிலும், அருகில் இருந்த பெரிய, எவரும் ஏறமுடியாத வழுக்கலான மலையின் பக்கத்திலும் இவனது அறை இருந்ததன் காரணத்தினால், வாசிப்புக்குரிய சூழலை தாளாரமாக இவனுக்கு வழங்கியிருந்தது.
அதிக நேரங்கள் இவனது முகம் புத்தகங்களின் உள்ளேயே புதைந்து கிடந்தது.

மாக்ஸிஸ, கொமினீஸிய சிந்தனைகள் உச்ச நிலைக்கு சென்று, புரட்சியின் செங்கதிராக உயர்ந்து நின்ற சேகுவாரா இவன் முன்னால் ஒரு உலக சரித்திர நாயகனாக உயர்ந்து தெரிந்தான்.
இவன் மனம் முழுவதையும் அந்த சரித்திரநாயகன் கொள்ளை கொண்டிருந்தான்.
ரஷ்யாகூட மர்க்ஸிஸ தத்துவம் பேசியும், லெனிலின் பெயரால் ஒரு சோஷலிச பூமியை உலகில் பிரமாண்டமாக கட்டுவதாக சொன்னாலும், சோவியத் யூனியனின் கொள்கைகளில் இவனுக்கு முரண்பட்ட கொள்கைகள் தோன்றின.

இவன் தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் பெரும் சர்ச்சை, நாளாந்தம் நடந்துகொண்டிருக்கும், என்னவென நின்றுபார்க்காமல். அதை தாண்டி இவன் ஒவ்வொருநாளும் வெளியேறிக்கொண்டிருப்பான்.
அந்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகமாகி இறுதியில் ரஷ்யக்காவற்துறையினர் குழுமி ஆராயும் நிலைக்கும் சென்றது.

அந்த சார்ச்சைகளுக்கும், ரஷ்யக்காவற்துறை பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் ஆராய்வு நடத்தியதன் காரணம் இவைதான், யாருமே ஏறமுடியாத, விடுதியின் அருகில் உள்ள அந்த வழுக்கி மலையின் மேற்பகுதிகளில், சோவியத் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து, புதிய சிந்தனைகளை விதைக்கும் வசனங்கள் உள்ள பெரிய பிரசுரங்களை அதில் ஒட்டும் அந்த அசாதாரண மனிதன் யார் என்பதே!

எவருக்குமே விடை தெரியவில்லை. காவற்துறைகூட ஆராய்ந்துபார்த்துவிட்டு, உதட்டை புதுக்கிகொண்டு சென்றுவிட்டது. உண்மைதான் இந்த வழுவழுப்பான மலையின் இந்த அளவு தூரத்திற்கு ஏறி, எந்த மனிதனாலும் பிரசுரங்களை ஒட்டமுடியாது.
ஆனால் இவனுக்கு மட்டும் அதன் விடை தெரிந்திருந்தது. ஏனென்றால், அந்த விளையாட்டை விளையாடுபவனே இவன்தானே.

இவன் செய்யும்வேலை இதுதான், ஒரு பெரிய கடதாசியில் எழுதவேண்டிய வாசகங்களை மிகப்பெரிதாக சிவப்பு மையினால் எழுதுவான், அதுமட்டும் இன்றி கடதாசியின் மறுபக்கத்திலும் அதேபோல எழுதிவிடுவான். எழுதி முடிந்த உடன், அந்த கடதாசியின் இரண்டு பக்கங்களிலும், பசையினை அப்பலாகப்பூசிவிட்டு, அனைவரும் உறங்கிவிட்டபின்பு, விடுதியின் மொட்டைமாடிக்குச் செல்வான், காற்று பலமாக அடிக்கும்போது அந்த கடதாசியை விரித்துப்பிடித்து அந்த மலைக்கு எதிராக நின்று விட்டுவிடுவான். கன கச்சிதாக மலையின் மேற்பகுதிகளில் அந்த பிரசுரம் காற்றினால் ஒட்டப்பட்டு. காலையின் எழுந்திருப்பர்களின் கண்களுக்கு காலை வணக்கம் கூறிக்கொள்ளும்.

பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டுவரை மருத்துவம் கற்றான். அதைவிட அதிகமாக மாக்ஸிஸத்தையும், அரசியல் பொருளாதார தகவல்களையும் கற்றுக்கொண்டான். கிடைக்கும் ஓய்வுநேரங்களில் தன் இருப்பிடத்தை சுற்றியுள்ள, விவசாயிகளின் நிலங்களில் அவர்களுடன் விருப்பத்துடன் இணைந்து வேலை செய்துவந்தான்.
1963ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக மொஸ்கோ மருத்துவமனையில், சிகிற்சை பெற்று அதன்பின்னர் இலங்கை திரும்பிய இவன், இலங்கையின் வரலாற்றில் ஒரு திசைதிருப்பியாளனாக மாறியிருந்தான்.

ஆம் 1989ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் முதன்நாள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனதா விமுத்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிதாமகன்தான் ரோஹன விஜயவீர என்ற இந்த புரட்சியாளன்.
1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பட்டபெண்டி நந்தசிறி விஜயவீர என்ற இயற்பெயருடன் பிறந்து, 1971ஆம் ஆண்டு இலங்கையில் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு புரட்சியாளன்.
பின்னாட்களில் இவர் ஆரம்பித்த அதேகட்சி, பல தடங்கள் புரண்டு இவரது கொள்கைகளுக்கு மாறாக நடந்து, இன்றும் ஜனதா விமுத்தி பெரமுன என்ற பெயருடன் கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கின்றது என்பது வேறுகதை.

(அனுர விமுத்தி தயாநந்த என்ற நண்பன் பல்கலைக்கழகக்காலங்களில் எனக்கு சொன்ன ஜே.வி.பி. கதைகளில் இருந்து)

குறிப்பு - உபாலி பற்றிய முன்னைய மீள் இடுகை மீண்டும் பலருக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். இதுபோல இலங்கை சரித்திரத்தில் மறந்துவிடக்கூடாத ஒரு சரித்திரம் ரோஹன பற்றியது. இதுவும் அறியாத பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக இந்த மீள் இடுகை.
நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜீ.ஜீ.பொன்னம்பலம், கல்லடி வேலுப்பிள்ளைபோன்றவர்களின் சுவையன தகவல்களை தர விரைவில் முயற்சி செய்கின்றேன். தேடல்களுடனான இதுபோன்ற அன்பு நண்பர்களின் அன்பு விருப்பங்களை பதிவுலகில் வாஞ்சையுடன் நிறைவேற்றுவதில் மிகப்பெரிய சந்தோசத்தை அடைகின்றேன். நன்றிகள்.

LinkWithin

Related Posts with Thumbnails