Monday, January 31, 2011

றீபொக் டீ சர்ட்டும், அடிடாஸ் பொட்டமும்.


இன்று உடைகள், பாதணிகளில் சர்வதேச ரேட்மார்க்குடன் பல பிராண்டுகள் இருந்தாலும், நம்மத்தியில் றீபொக் மற்றும் அடிடாஸ் உடைகள், பாதணிகள் என்பன செல்வாக்கு செலுத்திவருகின்றன.
ஆரம்பத்தில் எம்மவர்கள் மத்தியில் ஸ்போர்ட் சம்பந்தமான உடைகள், மற்றும் பாதணிகள், கிரிக்கட் பாட்டுகள், கையுறைகளிலேயே இதை கண்டுகொண்டாலும்கூட,
இன்று கஸ்ஸ_வல் உடைகளாக பல டீ சர்ட்டுக்கள், பொட்டங்கள், டவுசர்கள் என றீபொக் மற்றும் அடிடாஸ் ரேட்மார்க்குகள் நம்மத்தியில் செல்வாக்கு செலுத்துகின்றன.

குறிப்பாக 1999 ஆம் ஆண்டுக்கு பின்னதான காலங்களில் தென்னாசிய கிழக்காசிய நாடுகளில் இந்த இரண்டு பிராண்டுகளும் ஆழமாக கால்பதிக்க தொடங்கின.
முன்னரே இருந்தாலும்கூட 2000 ஆண்டுக்கு பின்னதான காலங்களிலேயே தென்னாசிய ஆசிய நாடுகளில் இவற்றின் தாக்கங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து, இந்த பிராந்தியங்களில் அதிகளவிலான றீபொக், அடிடாஸ் வர்த்தக நிலையங்கள் கிளை பரப்ப தொடங்கின.
இது தவிர இந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கு ஏற்றவரான கஸ்ஸ_வல் உடைகளையும் இந்த நிறுவனங்கள் தயாரித்து விநியோகிக்கத்தொடங்கி வெற்றியும் பெற்றன.

ஆண், பெண் என இருபாலருக்குமான விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு உடைகள், விளையாட்டு பாதணிகள், என்ற வட்டத்தில் இருந்து, கஸ்ஸ_வல் உடைகள், கஸ்ஸ_வல் பாதணிகள், மணிக்கூடு, பாக், என பல பொருட்களை இவை சந்தைப்படுத்த தொடங்கியுள்ளபோதிலும், குறிப்பாக இந்தியா இலங்கையில் ஆண்களே பெருமளவில் இவ்வாறான நிறுவனங்களின் உடைகள் பாதணிகள்மேல் கண்வைக்கத்தொடங்கியுள்ளனர்.
ஆண்மைக்குரிய கம்பீரம், நவீனத்துவம், செல்வச் சீமை, என்பன இந்த உடைகள்மூலம் கிடைத்துவிடும் என்ற எண்ணங்கள்கூட பலபேரிடம் வேரூன்றி காணப்படுகின்றது.
என்ன..இந்த உடைகளின் உச்ச விலைகளும், சாமானியர்கள் எட்டமுடியாத நிலைமைகளும் இந்த எண்ணங்களுக்கு இன்னும் வலுச்சேர்த்து நிற்கின்றது.

பூமா, நைக், போலோ போன்றனவும் இவற்றுடன் மறு முனையில் போட்டிபோட்டு நின்றாலும்கூட அதிகமாக நம்மவர்களை கவர்ந்திழுத்துள்ளது என்னமோ இந்த றீபொக்கும், அடிடாஸ்ஸ_ம்தான்.


நானும் குறிப்பாக இந்த இரண்டு பிராண்ட் கஸ்ஸ_வல் உடைகளை அதிமாக பாவிப்பதால் இது குறித்து இதை பாவிக்கும் இந்திய, இலங்கை நண்பர்களிடம் கேட்ட தகவல்கள், அவர்களின் பாவனை அனுபவங்களை தருகின்றேன்.
இறுதியாக இவைகுறித்த பாவனையின் என் அனுபவங்கள்.

சென்னை நண்பர் - றீபொக் டீ சர்ட்டுக்கள், ஒவ்வொருவரின் உடல் அமைக்கும் பொருந்தக்கூடிய பிட்டிங் முறையில் தெரிவு செய்தால் அமைப்பாக இருக்கும்.
குறிப்பாக றீ பொக் டீ சர்ட்டுக்களின் தனித்துவம் அவற்றின் ஆம்கட், மற்றும் சோல்டர் ஜாயின்டுகளின் பொருத்தங்களில் தனித்துவமாக இருக்கும்.
இது அணிபவருக்கு ஒரு கவர்ச்சியை உண்டாக்குவதுடன், அவருக்கு இயல்பானதமாகவும் இருக்கின்றது.

மற்றுமொரு சென்னை நண்பர்: அடிடாஸ் பொட்டங்கள், றீ பொக் பொட்டங்களைவிட நம் பாவனைக்கு ஏற்றவாறாக நீடித்து உழைக்கக்கூடியதாகவும் உள்ளன. பொதுவாக றேட்;மார்க் பொட்டங்களில் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் நெட்கள், மிக நெருக்கமானதாக இருப்பதே பாவனைக்கு உதவுவதாக இருக்கும்.
பொதுவாக றீ பொக்கினுடைய டீ சர்ட்டுக்கள் இரட்டைத்தையல் அம்சம் உள்ளடக்கப்பட்டதனால் பாவனையும் அழகும் நன்றாக இருக்கும். அனால் அடிடாஸ் டீ சர்ட்டுக்கள் அதுபோல இல்லவே இல்லை.

கொழும்பு நண்பர் ஒருவர் : மேற்கூறிய பிராண்டுகள் நேரடியாக இன்னும் தமது நிறுவனங்களை இலங்கையில் உத்தியோகபூர்வமாக இன்னும் தொடங்காத காரணத்தால், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும், இந்தியா, சிங்கப்பூர் மலேசியா, தாய்லாண்ட் ஆகிய இடங்களில் இருந்துமே இந்த பிராண்ட் உடைகள் இங்கு வருகின்றன. இவற்றுடன் 6 ஒரிஜினலுடன் 4 டுபிளிகேட் என்ற வகையில் கலந்து கட்டப்படுகின்றன. எனவே தேர்வு செய்யும்போது உண்மையானதை தெரிவு செய்யும் தன்மை எம்மிடம்தேவை.
எமக்காக றீ பொக் கஸ்வலைஸ் பண்ணியிருக்கும் டீ சர்ட்கள், சில டிசைன் சர்ட்கள் என்பன கண்களை கவர்வதுடன், அணிகைளில் புதிய அனுபவங்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் அடிடாஸில் அவை இல்லை.

யாழ்ப்பாண நண்பர் - எனக்கு பொதுவாக அண்ணா மார் அனுப்பும் உடைகள் (வெளிநாடுகளில் இருந்து), அதுபோக சிங்கப்பூர் சென்றுவருகையில் எனக்கு பிடித்த இந்த இரண்டு பிராண்ட் உடைகளும் ஆவலாக வாங்கி வந்தேன்.
றீ பொக் டீ சர்ட்கள் பாவனைக்கு உகந்தன. அழகானவையும்கூட, ஆனால் றீP பொக் பொட்டங்கள், கஸ்வல் டவுஸர்கள் சொல்லும்படி இல்லை. அவற்றில் அடிடாஸ் பறவாய் இல்லை. இங்கே 2000 ரூபாவுக்கு ஒரு டீ சர்ட் வாங்கி இரண்டு மாதம் பாவித்து சாயம்போய், சுருக்கு விழுந்து எறிவதையும் விட, 4500 ரூபாவுக்கு ஒரு றீபொக் டீ சர்ட் வாங்கி இரண்டு வருடத்திற்கு புதிதாகவே உடுத்திக்கொள்ளமுடியும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

சரி.. இதுவே நன் இந்த பதிவுக்காக கருத்துக்கேட்ட நான்கு நண்பர்களின் கருத்துக்கள். இவர்கள் நால்வரினதும் கருததுக்களில் ஒரு ஒற்றுமை உண்டு.
அதாவது றீ பொக் டீ சர்ட்கள் நன்றாக இருக்கின்றது உழைக்கின்றது, அனால் பொட்டங்களோ, டவுஸர்களோ இல்லை. அடுத்தது அடிடாஸ் டீ சர்ட்டுக்கள் எங்களுக்கு எற்றதுபோல இன்னும் இல்லை. ஆனால் பொட்டங்கள், டவுஸர்கள் அதிகம் பாவிக்கின்றன என்பதே.

என் பாவனை அனுபவத்தில், அந்தக்கருத்தை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கின்றேன். பொட்டம், டவுஸர் டிசைன்களில் றீ பொக்கைவிட அடிடாஸில் நல்ல ஸ்ரைலிஸான மொடல்கள் உண்டு. அடுத்து றீ பொக் பொட்டங்களிலும், மென்மையான, அதேவேளை ட்றவ்வான துணிகள் கொண்டவையும் உண்டு. எமது பிரதேசங்களுக்கான பாவனைக்கு ட்றவ்வான துணி பொட்டங்களே உகந்ததாக இருக்கும். றீ பொக் டீ சர்ட்டுக்களிலும் இந்த சொப்ட், ட்றவ் தன்மைகள் உண்டு,
எமக்கு எற்றதுபோல பார்த்துவாங்குவது நன்று. என் அனுபவத்தில் ட்றவ்வான துணிகள் கொண்ட உடைகளே இந்த பிராண்களில் நம் சூழலில் அதிகமாக உழைக்கின்றது.

ஹலோ…பொறுங்க..எங்க அதுக்குள்ள கிளம்பிட்டிங்க.. சொப்பிங்குக்கா?

Sunday, January 30, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.ரமேஸ்

வலைப்பதிவுகள்மூலம் ஆக்கபூர்வமாக எதையாவது கொண்டுவரமுடியுமா! என்று சிந்தித்து, அதன்வழியே பதிவுகளை இட்டு, தன் குறிக்கோள்களில் சிலவற்றுக்கு வலைப்பதிவுகள்மூலம் சாதித்தும் காட்டியுள்ள ஒருவர் சிதறல்கள் ரமேஸ். நேர்தியான திட்டமிட்ட பதிவுகளை மிக இயல்பாக எழுதி யாவரையும் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்துவிடும் பதிவுகளின் சொந்தக்காரன் இவர்.
மிக சிக்கலான விடயம் ஒன்றைப்பற்றி எழுத வந்தாலும்கூட சகல மட்டத்தினரும் புரிந்துகொள்ளும் விதமாக இதமாக, ஆழமான கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதம் தெரிவிக்கும் நேர்த்தி ரமேஸ் உடைய எழுத்துக்களில் உண்டு.

சிவஞானம் ரமேஸ், இலங்கையின் மட்டக்களப்பில் உள்ள இயற்கை அழகு சூழ்ந்த இடமான தேத்தாத்தீவை சொந்த இடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர்.
ஆரம்பத்தில் சமுக சேவை நிறுவனத்தில் தொழில்புரிந்து தற்போது பொறுப்பான ஆசிரியத்தொழிலில் மாணவர்களுக்கு நல்ல ஒரு ஆசிரியனாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்து வரும் ஒருவர்.

வலையுலகில் ரமேஸ், சிதறல்கள் மூலமே பலராலும் அறியப்பட்டாலும்கூட, “தேனலை” என்ற வலைதளத்தையும் அவர் தொடர்ந்து எழுதிவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவிஞன், ஒரு உன்னத படைப்பாளி உண்மையிலேயே இயற்கையிடம் மனதை பறிகொடுத்தவனாகவும், இயற்கையின் காதலானகவே இருப்பான் என்பதற்கும் ரமேஸ் பெரியதொரு எடுத்துக்காட்டு என்றே சொல்லவேண்டும்.
ரமேஸ் எழுதிய பல கவிதைகளையும் உற்று நோக்கினால் அதில் ஆடிநாதமாக இயற்கை பற்றியதொரு வாஞ்சை, அபரிதமான இயற்கைநேசிப்பை கண்டுகொள்ளலாம்.

ஒரு சின்னவிடயம் ஒன்றை பதிவிட நினைத்தாலும், அதை முறையாக திட்டமிட்டு, அதுபற்றியதொரு முழுமையான அறிவுடன் அதை பதிவிடும் முறை ரமேஸ் இடம் உண்டு.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் ரமேஸ் சிதறல்கள்மூலம் பதிவுலகத்திற்கு அறிமுகமானார். “தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய்” என்று தனது முதலாவது பதிவை தன்தாய்க்கு ஒரு தாலாட்டாக அரங்கேற்றியவர்.
குடும்பவாழ்வு மீது அளவுகடந்த பற்றுறுதியும், சுற்றம் மீது பெரும் பாசமும் அவர் நெஞ்சில் உண்டு என்பதற்கு அவரது பதிவுகள் நல்லதொரு சான்று.

“சிதறும் சில்லறைகள்”, “ஸ்டேட்டஸ்ட்” என்பன பதிவுலகில் ரமேஸ் பதிந்து வைத்துள்ள முத்திரைகள்.
ரமேஸ் உடைய பதிவுகளில் பெரும்பாலான பதிவுகள் சமுகம்சார் பதிவுகளாகவே உள்ளன. சமுகசேவகனாக எப்போதும் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் ரமேஸ் உடைய அடி மனதில் ஆழமானதாக உள்ளது என்பதை அவை புலப்படுத்துகின்றன.
கவிதை, இசை, இலக்கியம், பகுப்பாய்வு, வாழ்வுநிலைகள், யதார்தவியல், புதிய உலகு, என்று பயணிக்கும் ரமேஸ் உடைய எழுத்துக்களில் ஆன்மீகமும் அப்பப்போ எட்டிப்பார்ப்பதையும் கண்டுகொள்ளலாம்.

பதிவுலகில் ரமேஸ், சகல பதிவர்களுக்கும் வாஞ்சையான ஒரு நபராக இருப்பது அவரது நல்ல பேர்சனாலிட்டிக்கு நல்லதொரு சான்று. சாதிக்கத்துடிக்கும் இளைஞன் ஒருவனுக்கு ரமேஸ் உடைய வலைப்பதிவுகள் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருப்பதில் எந்தவித சந்தேகங்களும் இருப்பதிற்கில்லை.
ரமேஸ் உடைய தேடல்கள் ஒரு வரையறைக்கள் இல்லை என்பதை தொடராக அவர் பதிவிடும் “சிதறும் சில்லறைகளை” பொறுக்கிக்கொள்பவர்களுக்கு நன்றாக புரிந்துகொண்டிருக்கும்.
நடிகர்களின் நடிப்பில் ஒரு யதார்த்தவியலை குறிப்பிடுவதுபோல, ரமேஸ் உடைய எழுத்துக்களில் யதார்த்தவியலை காணக்கூடியதாக உள்ளது.

அமைதியாக, மென்மையாக, மெல்லியதொனியில் பேசுவதுபோன்ற ஒரு தொனி ரமேஸ் உடைய எழுத்துக்களை படிக்கும்போது தோன்றும். அதுவே ரமேஸ் உடைய எழுத்துக்களின் மெனாரிஸம்.

சரி..இந்த வாரப்பதிவரான சிதறல்கள் ரமேஸிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளும் என்ன என்பதையும் அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி : பதிவுலகமும் வாழ்க்கையும் பற்றி ஏதாவது உங்கள் கருத்து?

ரமேஸ்: பதிவுலகம் என்னை அடயாளப்படுத்தியது இணைய நண்பர்களுக்கு. இன்னுமின்னும் என பல விடயங்கள் கிராமங்கள் சார்ந்தும் தெரியப்படாத அறிப்படாத தகவல்கள் உலகத்தரவேற்றம் செய்யப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்கிற முனைப்போடும் இரண்டுவருடங்களுக்கு முன்னர் பதிவுலகம் வந்தேன். இதுவரை பல விடயங்களை சாதித்திருக்கேன் என்று சொல்லுமளவுக்கு தன்னம்பிக்கை எனது எழுத்துக்களில் இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டு, பல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். எமது புலம்பெயர் உறவுகளின் தொடர்பறா உறவை எமது கிராமத்தோடு இணைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. "பதிவுலகம் என்பது எனது வாழ்க்கை அல்ல வாழ்க்கையின் ஒரு நிலையில் பதிவுலகத்துக்குள்ளும் இருக்க முடிகிறது" என்பது திருப்தி

கேள்வி :பதிவுலகத்தின் இன்றைய நிலை மற்றும் தேவை என்ன?

ரமேஸ்: பதிவுகள் எழுதப்படவேண்டும் இன்னுமின்னும் காத்திரமான எத்தனையோ விடயங்கள் எழுதப்பட்டு அவை ஆவணப்படுத்தப்படவேண்டும். காழ்ப்புணச்சிகள் களையப்பட்டு நல்ல உணர்வுகள் உறவுகள் நீண்டுகொள்ளவேண்டும். புதிய புதிய பதிவர்கள் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கும் முயற்சியில் இருக்கவேண்டும். மற்றவர்களின் நலனுக்காக எழுத முடிந்தளவு எழுதி தீர்வாக உதவியாக இருக்குமளவுக்கு பதிவுலகம் மாறவேண்டும் அதாவது முன்மாதிரி என்கிற அளவுக்காவது தாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்ற வேண்டும்.

கேள்வி : பதிவுலகம் தாண்டி பதிவுலகத்தினால் சொந்தவாழ்க்கையில் என்று ஏதாவது சொல்லமுடியுமா??

ரமேஸ்: பதிவுலகம் தாண்டி சமூக தமிழ் உறவுக்காக மாணவர்களின் கல்விக்காக எப்போதும் பாடுபடுகிறேன். "எங்கெல்லாம் மனம் காயப்படுமோ அங்கெல்லாம் பூக்கவேண்டும் உணர்வின் உறவின் கரங்கள்" என்ற தொனிப்போடு இருக்கிறேன். இதனால் இப்பொழுது சற்றுகவலைப்படுகிறேன் எனது தந்தை எனக்கு ஏதாவது ஆகிடுமோ அல்லது யாராவது என்னை நோகடித்துவிடுவார்களோ என்கிற எண்ணமும் தன் மகன் தனது முன்னேற்றத்தில் தனது படிப்பிலிருந்து உயர்வான நிலையை அடையாமல் போய்விடுவானோ என்கிற எண்ணத்தில் இப்பொழுது மன அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதற்கு என்ன முடிவெடுப்பது என்று நேற்றிலிருந்து தடுமாறுகிறேன்.

Saturday, January 29, 2011

பாக்கு நீரிணை சிவக்கின்றது!!

“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு!
தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.

என் சகோதரன் குருதியில் கடல் நனைந்துகொண்டிருக்கின்றது, மனம் துடித்தாலும், கண்ணீர் வந்தாலும், எழுதுவதற்கு கைகள் துடித்தாலும், எனக்குள் இருக்கின்றது பயம். (நான் இருக்கும் இடம் யாழ்ப்பாணம்).

அதிகமாக ரௌத்திரம் கொண்டதும், தேவையான நேரம் ரௌத்திரம் கொள்ளாமையும்தான் இன்று தமிழனுக்கு கிடைத்திருக்கும் சாபங்களுக்கான காரணங்கள்.
உணர்வுகள் இழப்புக்களைக்கூட அரசியலாக்க முண்டியடிக்கும் கூட்டங்களை, உயிர் பலிபோகும் அந்தக்கடற்பகுதிக்கே கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்.
உங்கள் அரசியல் முறையாக இருந்தால் என் சகோதரன் ஏன் நடுக்கடலில் பலியாகின்றான். உன் குரலில் சக்தியிருந்தால் ஏன் டில்லியின் இருப்பவன் குதவாயால் சிரிக்கின்றான். அரசியலுக்காய் உன்னை அடகுவை.. அதுவும் அரசியல்தான்..ஆனால் ஆறரைககோடி சமுதாயத்தை அடைவுவைக்க யார் உனக்கு அனுமதி தந்தது?

அரபிக்கடல் பக்கம் வேற்றுமானில மீனவர்கள் மீன்பிடிக்கசென்று பாகிஸ்தான் சுட்டிருந்தால் வெறும்வாய்களுக்கு அல்வாவே கிடைத்திருக்கும், சண்டைக்குக்கூட முண்டியிருப்பார்கள். இங்கே போவது தமிழன் உயிரல்லவா! அவ்வளவு கேவலம்தான்!!

இதோ ஒரு சம்பவம்.. இடம் வடபழனி. ஒரு சைவ சாப்பாட்டுக்கடை.
ஈழத்ழர்கள் நால்வர் (நான் உட்பட) சென்னை நண்பர்கள் இருவர் என ஆறுபேர் அந்த கடையில் சாப்பாட்டிற்கு ஆடர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம்.
எமக்கு முன்னமே வந்ததனால் அப்பளம், பாயசம் என்பவற்றையும் வைத்திருந்தார்கள். இரண்டு ஹிந்தி வாலாக்கள் எமக்கு அருகில் வந்திருந்து, தமக்கு ஹிந்தியிலேயே ஆடர் பண்ணி சாப்பாடு கேட்டார்கள்.

அப்பளம் முடிந்திருக்கவேண்டும் அவர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. எம்மையும் எங்கள் சாப்பாட்டையும் பார்த்த அவர்கள், ஏதோ ஹிந்தியால் கத்திவிட்டு, F.....தமிழ் பிளடி என்று அந்த சர்வரை அடிக்கப்போனார்கள்.
எங்களுக்கு சுர்… என்று ஏறிவிட்டது. திடீர் என நாங்கள் எழுந்து சர்வரை விலக்கிவிட்டு, எம்முடன் வந்த நண்பன் அவர்களுடன் ஆங்கிலத்தில் காரசாரமாக ஏசினான்…
“எப்படி நீ..சொல்வாய் F..... தமிழ் பிளடி என்று! உன்ட மாநிலத்தில வந்து ஒரு தமிழன் குரல் உயர்த்தி கதைக்கவே முடியாது இங்க வந்து அந்தளவுக்கு உனக்கு தைரியமா! தமிழ் பிளடிதானே! எங்கே இப்போ கையை வை.. என்றான்.
நாங்கள் அங்கே காரசாரமாக வாதிட்டோம்.

அந்த சர்வரிடம் மன்னிப்பு கேட்காமல் நீங்கள் இங்கிருந்து போகமுடியாது என்றோம். இறுதியில் அவர்கள் பணிந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றனர்.
என்ன கொடுமை என்றால் எங்களுக்கு வந்த வந்தரோசம், ரௌத்திரம் சுற்றிவர இருந்து சாப்பாட்டை கட்டிக்கொண்டிருந்த எந்த தமிழனுக்கு வரவில்லை. ஏன் என்றுகூட கேட்கவில்லை.
இதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த கடையின் முதலாளி..அவர்கள் சென்றவுடன்… ஏன் சார்..கேவலம் ஒரு சர்வருக்காக அவங்களுடன் சண்டைபோடுறீங்க என்றார்!

ரௌத்திரம் கொள்!!! என்று ஒருவர் இப்படி எல்லாம் எம் தமிழ்சமுகம் கண்டவன் வந்தவன் எல்லாம் அடித்துவிட்டப்போகும் கோவில் மணி ஆகிவிடுவான் என்று எண்ணித்தான் சொல்லிவச்சாரோ என்னமோ!

எனவே இன்றுவரை தொடர்கதையாக 500 மேலான எம் சகோதர்கள் பிழைப்புக்காக கடலேறி, சட்டவிரோதமான முறையில் உயிர் பலியெடுக்கப்படுகின்றார்கள். இந்த சம்பவம் இத்துடன் முடிவுக்கு வரவேண்டும்.
இன்னும் கடந்து இது ஒரு தொடர்கதையாக செல்லக்கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் வலையங்களில் சுதந்திரமான தொழில்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், அது வழங்கப்படமாட்டாது!! எனவே வழங்கப்படபண்ணவேண்டும்.
ஆம்..ரௌத்திரம் கொள்!!!

Friday, January 28, 2011

யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்புக்கள்.

(குறிப்பு : இந்தப்பதிவும் ஒரு மீள்பதிவே, இந்தப்பதிவு, இலங்கையில் வெளியாகும் சஞ்சிகை ஒன்றிலும், வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிலும், ஒலி ஊடகம் ஒன்றிலும் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.)

உலக நாடுகளின் புதியவை எவை அறிமுகமாகின்றதோ அதனை உனடியாக சோதித்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்பார்க்க பிரியப்படுபவர்கள் யாழ்ப்பாண மக்கள். ஆரம்ப காலங்களில் இலங்கையில் ட்ரான்ஸ் சிஸ்ரர் என்று சொல்லப்பட்ட அப்போதைய பெரிய திருகு வட்டங்கள் கொண்ட ரேடியோக்கள், கிராமோபோன் ரெக்காடர்கள், தொலைக்காட்சிகள் என அவை முதன் முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
19ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே யாழ்ப்பாணத்தவர்கள், வெளிநாடுகளில் வர்த்தகங்கள், தொழில்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், யாவா போன்ற நாடுகளுக்கு அன்றைய பிரித்தானிய கொலனித்தவ ஆட்சியின் அரச அலுவலகர்களாக பெருமளவிலான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர்கள் அன்றே கல்வி நிலையில் ஆசியாவில் உயர்ந்து நின்றதன் காரணத்தால் வெள்ளையர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். அது தவிர அன்றைய நிலையில் இலங்கையில் ஏனைய பிரதேசங்களுக்கு கொடுக்காத ஒரு சலுகையினை ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருந்தனர் என்பது அன்றைய நாட்களில் பல நூல்களை எழுதியவர்களின் கருத்துக்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்த நிலையில் இலங்கைக்குள்ளேயே ஏனைய சமுதாயங்கள் சுழன்றுகொண்டிருந்தபோது உலகஓட்டத்திற்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்த ஆரம்பித்துக்கொண்டவர்களும் யாழ்ப்பாண மக்களே. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் மேல்நிலையினை அடைந்திருந்த அந்த மக்கள், இலங்கை பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர், அவர்களின் ஆத்திரங்களாலும், பொறாமைகளாலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதும், குழிபறிக்கப்பட்டதும் வரலாறு அறிந்த உண்மை. இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல சளைத்துவிடவில்லை. பெரும்பான்மை இனத்தினர் நினைத்ததுபோல அவர்களின்மூளை வெள்ளையனால் வந்ததல்ல, ஜீன்களிலேயே உள்ளது.

1979 ஆம் ஆண்டு இலங்கையில் ஒளிபரப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் ஆரம்பமாக தொடங்கின. இந்த நிலையில் 1979ஆம் ஆண்டு ஐ.ரி.என். என்ற சுவாதீன ஒளிரப்பு சேவையும், 1982ஆம் ஆண்டு இலங்கையின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினியும் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் இவை இரண்டுமே அரசாங்க தொலைக்காட்சி சேவைகளாகவே நடத்தப்பட்டன. இந்த சேவைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகள் மிக மிக அரிதாகவே காணப்பட்டன. இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ்த்திரைப்படங்கள் என்பவற்றை வீட்டில் இருந்தவாறே பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் யாழ்ப்பாண மக்களிடம் எழுந்தது.

அந்த எண்ணங்கள் உடனடியாகவே செயற்பாடுகளாக மாற்றம் கண்டன. 1983 ஆம் ஆண்டு, மற்றும் 1984ஆம் ஆண்டு காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பு சேவைகளை நடத்தத் தொடங்கிவிட்டன
அன்றைய நிலையில் வி.எச்.எஸ் அலையமைப்பில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஒளிபரப்புக்கள் யாழ்ப்பாண மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஒன்று இரண்டென ஆரம்பிக்கப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் 15 ற்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் உருவாகும்வரை தொடர்ந்தன.

யாழ்ப்பாணத்தில் ஈச்சமோட்டை மற்றும் அரியாலை பகுதிகளில் வைத்து “றீகல் வீடியோ மூவிஸ்” என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச்சேவை யாழ்ப்பாண நகரை பெரும்பாலும் மையப்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண நகருக்குள் தௌ;ளத்தெளிவாக அதன் ஒளிபரப்புக்களை பார்க்கக்கூடியதாக அந்த ஒளிபரப்பு இருந்தது.
அதேபோல மானிப்பாய், நவாலி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு ஒளிபரப்பினை தெளிவாக பார்க்கக்கூடியவாறு “விக்னா” என்ற ஒளிபரப்பு சேவை ஒளிபரப்பட்டது. அதேபோல யாழ்ப்பாணம் கச்சேரியடிப்பகுதியில் இருந்து “செல்வா வீடியோ மூவிஸ்” என்ற தொலைக்காட்சி அலைவரிசையும், யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம் சகோதரர்களால் “வாஹிட்” என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளும் நடத்தப்பட்டு வந்தன.

புலவர் வீடியோ, லவ்பேர்ட்ஸ், நல்லூர் வீடியோ, என 15 க்கும்; மேற்பட்ட தனியார் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.
இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் என்னவென்றால், இவர்கள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்ளாது, ஒரு செயற்குழு ஒன்றினை அமைத்து, நேரப்பிரகாரம் தமது ஒளிபரப்பு சேவைகளை வழங்கிவந்தார்கள்.
ரூபவாஹினியில் “என்ன சுந்தரி புது சட்டையா?” என்ற சண்லைட் விளம்பரம் சிரிக்கத்தக்க ஒரு விளம்பரமாக வந்தபோதே தரமான விளம்பரங்களை யாழ்ப்பாண விளம்பர அமைப்புக்கள், யாழ்ப்பாண விற்பனை நிலையங்களின் விளம்பரங்களை தரமாக அமைத்திருந்தார்கள். ரூபவாஹினியில் மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்திற்கு தவமிருந்து பார்த்து இரசித்த மக்களுக்கு, புதிய புதிய திரைப்படங்களை திகட்ட திகட்ட வழங்கினார்கள் இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையத்தவர்கள்.

விளம்பரங்கள், விசேட நிகழ்வுகள், போட்டிகள், பண்டிகை விழாக்கள், மாணவர்களின் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கள், விளையாட்டுப்போட்டி ஒளிபரப்புக்கள், கல்வி நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள், கலைநிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்கள், கோவில்களின் உற்சவங்களின் நேரடி ஒளிபரப்புக்கள் என்று மெல்ல மெல்ல தரமான தனியார் ஒளிபரப்புக்களுக்கான வித்தினை 1983-84ஆம் ஆண்டுகளிலேயே போட்டுவிட்டன யாழ்ப்பாண தனியார் தமிழ் ஒளிபரப்புக்கள்.
பொழுபோக்கு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டாலும் திரைப்படங்கள் மட்டும் என்ற வரையறைக்குள் நின்றுவிடாது, அன்று மக்களுக்கு புதிதாக இருந்த சிங்கப்பூர் ஒளியும் ஒலியும் என்ற மேடைநிகழ்சிகள், முதல் முதல் இடம்பெற்ற திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற ஸ்ரார் கிரிக்கட் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கார்ட்ரூன் நிகழ்வுகள், ஆழ்கடல் உலகம், வினோத உலகம் போன்ற நிகழ்வுகள் என்பவற்றையும் ஒளிபரப்பு செய்தனர். அடுத்து முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய சம்பவங்கள் என்னவென்றால் மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை மற்றும் சாதாரண தரப்பரீட்சைகள் என்றால் தமது ஒளிபரப்புக்களை அந்த பரீட்சைகள் முடியும்வரை ஒத்திவைத்திருந்தனர்.

வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்து உச்ச பயனை அடைவது பொருளியலின் சவால் என்றாலும், யாழ்ப்பாண மக்களே இந்த விடயத்திற்கு எடுத்துக்காட்டானவர்கள். அவர்களின் பல கட்டங்களிலும் கவனித்துப்பார்த்தால் அந்த விடயம் புரியும். குறைந்த வளங்களை வைத்து நிறைந்த பயனை அடையும் அவர்களின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை. பெற்றோல் தட்டுப்பாடாக இருந்தபோதும் வாகனங்களை இயக்கியது, மின்சாம் இல்லாத போதும், டைனமோவில் இருந்துவரும் ஏ.சி மின்சக்தியை டி.சி சக்தியாக ஒரு சேர்க்கிட்மூலம் மாற்றி சைக்களை சுற்றி ரேடியோகேட்டது, அதேபோல வாகனங்களின் வைப்பர் மொட்டர்களை சற்றி தொலைக்காட்சி பார்த்தது, திகைக்கவைக்கும் பல சுதேச கண்டுபிடிப்புக்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் இதற்கு முன்னதான காலத்தில் அதி நவீன கருவிகள் இல்லாமல் தம்மிடம் இருக்கம் ஒரு சில சிறிய கருவிகள் துணைகொண்டே இவர்கள் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை மிகவும் தரமாகவும், சிறப்பாகவும் செய்துகாட்டினார்கள். கிட்டத்தட்ட 1987வரை தொடர்ந்த இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்புக்கள் அதன் பின்னர் இந்தியப்படையின் ஆக்கிரமிப்பும், அதன் பின்னர் இடம்பெற்ற மோதல் காலங்களில் யாழ்ப்பாணம் மின்சாரமின்றி இருந்ததும் அனைவரும் தெரிந்தவிடங்களே.

இன்று இலங்கையில் தமிழ் தனியார் தொலைக்காட்சி வரலாற்றினை ஆரம்பித்தவர்கள் நாங்களே. தமிழ்வளர்ப்பவர்கள் நாங்களே என்று சொல்லிக்கொள்பவர்கள்!! யாழ்ப்பாண ஒளிபரப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு என்பதை புரிந்துகொண்டால் சரி.

Thursday, January 27, 2011

அராஜகங்களின் உச்சங்களும் மக்களின் எழுச்சிகளும்!!

“ஜனநாயகம்! என்னும் ஆட்சிமுறை மக்களுக்கான வரமாகவும், அதேநேரம் அவர்களுக்கான சாபங்களாகவும் அமைந்துவிடுகின்றது” என்ற பொன்மொழிக்கேற்ப இன்று உலகில் ஜனநாயகத்தின்பேரால், அடக்குமுறைகள், ஊழல்கள், சுரண்டல்கள், ஏகபோகங்கள், பரம்பரை ஆட்சிகள், அதிகார துஸ்பிரயோகங்கள், சர்வாதிகார தன்மைகள் அத்தனையும் மலிந்துகிடக்கின்றன.
பல மூன்றாம் உலக நாடுகளில் ஈமைச்சடங்குகள் செய்து இன்னும் அடக்கம் செய்யப்படாமல் ஜனநாயகம் செத்துக்கிடக்கின்றது.

ஒரு நாட்டில் ஊழல், அராஜக ஆட்சி இடம்பெறுகின்றது என்றால் அதன் நேரடியான தாக்கம் பொருளாதாரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் பெரும் சிக்கலை உண்டாக்கி நாளை அந்த நாட்டின் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியைக்கூட தூக்கிச்சாப்பிட்டுவிடும். ஆனால் அதன் மறைமுகத்தாக்கங்கள் மக்களை பல வழிகளில் வாட்டிவதைத்துவிடும். உலக யுத்தங்களில் அனுபவிக்கும் கொடுமைகளைவிட கொடிய கொடுமைகள் நாட்டின் உள்ளேயே தலைவரித்தாட இது ஏதுவானதாக அமைந்துவிடும்.

நிச்சயமாக சொரணை உள்ள மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதில் முற்றுமுழுதான பிழைகளையும் அதிகார வர்க்கங்களையே சாரும் எனச் சொல்லமுடியாது.
பெரும்பாலும் நல்வர்களை, ஆழுமையானவர்களை புறக்கணித்துவிட்டு, குறுகிய எண்ணத்துடன், அந்த காலத்தேவைகளுக்காக தகுதி அற்றவர்களை அரியணணையில் ஏற்றிவிட்ட மக்கள்மேலும் குற்றங்கள் உண்டு என்பதையும் எற்றுக்கொள்த்தான் வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கமே மக்கள் அஜாரகங்கள், ஊழல்களுக்கு எதிராக வழித்தெழும் சம்பவங்கள் உலகலாவிய ரீதியில் தொடர்ச்சியாக எற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
எத்தனை கொடுமைகளையும், ஊழல்களையும், அராஜகங்களையும், அதிகார துஸ்பிரயோகங்களையும் மக்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ளமுடியாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்கு முன்னே பெரும் கேள்வி ஏற்பட்டவுடன் வீதிக்கு இறங்கி போராடத்தொடங்கிவிட்டார்கள்.

நியூ ஜோர்க்; டைம்ஸ் பத்திரிகையில் “நீல் ஜோன்ஸன்” அவர்கள் டிசெம்பர் 29 2010 அன்று எழுதியிருந்த அடுத்த ஆண்டு (2011) எப்படி உலகியலில் இருக்கும் என்ற தனது கட்டுரையில்,
“உலகியலில் சைபருக்கு பின்னதாக வரும் முதலாவது ஆண்டுகளில் உலகில் பாரிய மாற்றங்களும், புதிய சிந்தனைகளும், மக்கள் கை மேலோங்கும் நடவடிக்கைகளும், எதிர்பார்த்தவைகள் இயற்புடையதாகும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன.
உலகம் சந்தித்த யுத்தங்கள் ஆரம்பம், மதம் சார் யுத்தங்கள், நிலம் சார்யுத்தங்கள் என்பவற்றை கடந்து, பின்னர் வர்க்க யுத்தங்கள், இனரீதியான யுத்தங்கள் என்பன வந்தன அவையும் இப்போது அடக்கப்பட்டுவிட்ட சூழல்களில் இனி இடம்பெறும் யுத்தங்கள் பொருளாதார யுத்தங்களாகவே இருக்கும்
அதற்கான ஆரம்ப நிலைகள் 2011இல் தொடங்கும்.

“முக்கியமாக இன்று இரண்டாம், மூன்றாம் நிலை உலகநாடுகளில் ஊழல், அரச அராஜகங்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் என்பன மலிந்து மக்கள் நலிவடைந்துள்ள நிலையில், உலகலாவிய ரீதியில் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் கிளர்ச்சிகள் உலகம் முழுவதும் பரவலடைய ஆரம்பிக்கும்”
என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இது எத்தனை உண்மை என்பதைபாருங்கள்.
நடுப்பகுதி என்ன முதல்மாதத்தின் நடுப்பகுதியிலேயே இந்த மக்கள் கிளர்ச்சிகள் ஆரம்பித்துவிட்டனவே!


துனிஸியா, எகிப்து, ஏமன் என்று அராஜகங்களுக்கும், ஊழல்களுக்கும் எதிராக மக்கள் கொதித்து எழுந்து போரடி வீறுகொண்டு நிற்கின்றனர். அடுத்து லிபியா என்று ஆரூடங்கள் கூறுகின்றன!!
இந்திய இலங்கை மக்கள் இதை எழுதியும், படித்தும்கொண்டு நிற்கின்றோம்!!!

Wednesday, January 26, 2011

அறிவிப்பாளராக இருவர்.

தமிழ் மொழியில் ஒலி ஊடகத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நிகழ்ச்சிகள் வழங்குவதிலும், நிகழ்ச்சிகளின் தரத்திலும், குறிப்பாக தென்னிந்திய திரைப்படப்பாடல்கள், திரைப்படங்களுக்கு முதன்முதலில் ஒரு முகவரியினை தந்த ஊடகமாக இலங்கை வானொலியினையே கூறிக்கொள்ளவேண்டும்.
இன்றைய தமிழ் ஒலி, மற்றும் ஒளி ஒலி ஊடகங்களில் இடம்பெறும் சகல நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கொண்டால் அவற்றின் அத்திவாரமாக இலங்கை வானொலியின் அன்றைய நிகழ்ச்சிகளே உள்ளன என்றே முடிவாகக்கூறிக்கொள்ளலாம். இதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

இலங்கை என்ற வட்டத்தினை உடைத்து தென்னிந்தியாவிலேயே அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்றுகூடவைத்தவர்கள் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர்கள், மற்றும் அறிவிப்பாளர்களே. தமிழ்நாட்டில் 35 வயதினை தற்போது கடந்தவர்கள் எவரை கேட்டாலும் இலங்கை வானொலியினூடான தமது அனுபவங்களை மிக ஆர்வமாக பேசுகின்றார்கள். இலங்கை நேயர்களைவிட பல அரிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், தாளலயங்களை ஒலிப்பதிவு செய்து இன்றும் பொக்கிசங்களாக பாதுகாத்துவருகின்றனர்.
இத்தகய பெருமைகளையும், வரலாற்று முத்திரையினையும் பதித்து இன்றும் பலரது மனங்களில் அழியாத நினைவு ஓசையாக கேட்டுக்கொண்டிருக்கின்றது இலங்கை வானொலி.

இவ்வாறு தேச எல்லைகளைக்கடந்து பல கோடி நெஞ்சகளை செவி மடுக்கவைத்த இலங்கை வானொலியில் சிகரங்களாக கே.எஸ்.ராஜா மற்றும் பி.ஏச்.அப்துல்ஹமீத் அகியோர் பெரும்பாலானவர்களால் கருதப்படுகின்றார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் என்ற இருவருக்கும், பின்னர் கமல் - ரஜினி என்ற இருவருக்கும் எவ்வாறு தமிழ்நாட்டில் இடம்கொடுத்தார்களோ அதேபோல வானொலி அறிவிப்பில் கே.எஸ்.ராஜா - ஹமீத் அகியோரின் குரல்களுக்கு இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான இரசிகர்கள் இடம்கொடுத்திருந்தனர்.

கே.எஸ்.ராஜா அறிவிப்பு செய்த திரைப்பார்வை, இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய பாடல் தேர்தல், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலிநாடகம், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலி மாமா, இலங்கை வானொலி அறிமுகம் செய்துவைத்த வினோதவேளை, என பல நிகழ்ச்சிகள், இன்று ரொப் 10, பாடல் கவுண்டவுன், மெகா தொடர்கள், என தமிழ்நாட்டில் (தமிழ் தொலைக்காட்சிகளில்???) இடம்பெற்றுவருகின்றன. ஆதார சுருதி இலங்கைவானொலியே என்பதுவும், இன்றும் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் மதிக்கும், பெருமைகொள்ளும் ஒரு வானொலி இலங்கைவானொலி என்பதுவும், இன்றைய இலங்கை அறிவிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு புரியாமல், தென்னிந்திய அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி வழங்குனர்களின் பாணியில் தாம் அறிவிப்பு செய்வதை பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியாமல் உள்ளது.

தனியார் வானொலிகள் இலங்கையில் முளைக்கத்தொடங்கிய காலத்தில் ஒரு தனியார் வானொலி சுத்தமான தமிழில் உரையாடி மக்களை கஸ்டப்படுத்தியதால்த்தான் அது முதல் இடத்திற்குவரமுடியவில்லை என்று பணிப்பாளர்களையும், அறிவிப்பாளர்களையும் மாற்றிய அதி திறமைசாலிகள் உள்ள இடத்தில் தமிழின் நிலைமையினை எண்ணிப்பாருங்கள். அது இப்படியிருக்க தமிழுக்கு வந்த சோதனையாக சொர்ணமாக ஒலி ஒன்று நாரசுரமாக ஒலித்து கூச்சல் போட்டது, இலங்கை தமிழ் வானொலி நேயர்கள் செய்த புண்ணியமோ? அல்லது ஆரம்பகால அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்களின் நிகழ்சிகள் வந்த அலைவரிசையில் இந்த அவலமோ என இயற்கை எண்ணியதாலோ என்னமோ அந்த வானொலி இடையில் நின்றுவிட்டது. இதனால் நின்மதி பெருமூச்சுவிட்டது தமிழாகத்தான் இருக்கும்.

அறிவிப்பு என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று குன்றின் மேல் விளக்காக நின்றவர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்துமே. அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காதுவழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா. அதேபோல தமிழின் வசனங்களின் ஏற்ற இறக்கம், மொழியின் கம்பீரம், கேட்பன யாவையும் மனதில் நின்று அழியாத சொற்பிரயோகம் என்பவற்றை தனது அறிவிப்பு நடையாக பேசி, தமிழ் என்றால் ஹமீத் பேசுவதுபோல இருக்கவேண்டும் என அனைத்து தமிழர்களையும் சொல்லவைத்தவர் ஹமீத். இந்த இரண்டுபேருமே எடுத்துக்கொண்ட விடயத்தை சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்துநிற்பதாக, பொட்டில் அடித்தால்ப்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது.

கே.எஸ்.ராஜா
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா என்ற இயற்பெயர் கொண்ட கோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட கே.எஸ்.ராஜா அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக்கொண்டவர். அங்கிருந்து பின்னர் யாழ்ப்புறநகர்ப்பகுதியான கொட்டடியில் வசித்துவந்த இவர், இலங்கைவானொலியில் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தினை கொண்டவராக குறுகிய காலத்தினுள் அனைவரினதும் இதயத்தை கவர்ந்தவர்.
கம்பீரமான, வேகமான மிகத்தெளிவான உச்சரிப்பில் இவரது குரல் ஒலிக்கும்போதே வானொலியை நோக்கி மக்களை செல்லவைத்த வித்தகர் இவர்.

ஆரம்பத்தில் இருந்தே இவர் தனக்கேயான இந்தப்பாணியினை நடைமுறைப்படுத்தியிருந்தாரா? என்ற கேள்வி எனக்குள்ளே பல ஆண்டுகளாக குடியிருந்தது. நீண்டநாள் இந்தக்கேள்வியை தீர்த்துவைத்தவர் திரு.அப்துல் ஹமீத் அவர்களே. ஊடகப் பயிற்சி அரங்கு ஒன்றுக்குபல்கலைக்கழகம் சார்பாக நானும் சென்றிருந்தேன், அங்கே பிரதம அதிதியாக வந்திருந்த ஹமீத் அவர்களிடம் திரு.கே.எஸ்.ராஜாவை பற்றிய சில கேள்விகளை ராஜாவின் பக்கத்தில் இருந்து பணிபுரிந்தவர் என்ற ரீதியில் அவரிடம் நான் கேட்டிருந்தேன்.

அதற்கு பதிலளித்த ஹமீத் அவர்கள், கே.எஸ்.ராஜா அவர்கள் ஆரம்பகாலத்தில் அவருக்கு உரியது என்ற பாணியில் அறிவுப்புக்களை செய்யவில்லை எனவும். ஒருநாள் இரவு தாம் இருவரும் நெடு நேரமாக அறிவுப்பு குறித்தும், நிகழ்ச்சிகள் குறித்தும் பேசிவிட்டு சென்றதாகவும். மறுநாள் காலை கே.எஸ்.ராஜா அவர்களுக்கு நிகழ்ச்சிகள் இருந்ததாகவும், அன்று காலை எதேட்சையாக வானொலியை திருப்பியபோது தமக்கு அதிர்ச்சி காத்திருந்ததாகவும், வேகமான தொனியில், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில், கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக்கொண்டிந்ததாகவும், யாராவது புதிய அறிவிப்பாளர் ஒருவர் வந்துவிட்டாரா? என தான் யோசித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சி முடிவில் “அன்பு வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் கே.எஸ்.ராஜா” என்று புதிய தொனியில் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தான் உட்பட சக அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவிடம் இந்த வித்தியாசமான தொனி அறிவிப்பு குறித்து விவாதித்ததாகவும், எனினும் அடுத்து வந்த வாரங்களில் கே.எஸ்.ராஜா அவர்களுக்கு பெருமளவிலான பாராட்டுக்கடிதங்கள் வந்து குவியத்தொடங்கியதாகவும் அப்போதே அவர் சிகரங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டதை தான் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்றும் எனக்கு நினைவு இருக்கின்றது. நீயா திரைப்படம் பற்றிய விளம்பரம் ஒன்றில் அந்த திரைப்படத்தில் இச்சாதாரிப்பாம்பாக சிறீப்பிரியா மற்றும் கணேஸ் தோன்றும் காட்சியில் மனிதரூபம் கொண்ட பாம்பு என்று தெரியாமல் ஆண்பாம்பினை கமல் ஹாசன், வியஜகுமார் குழுவினர் சுட்டுக்கொல்லும் கட்டத்தில், குற்றுயிராக கிடக்கும் தமது ஜோடியை மடியில் தூக்கிவைத்து சிறீப்பிரியா கதறும், “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” என்ற வசனத்தை இறுதியில் ஒலிக்கவைத்துவிட்டு. இல்லை நேயர்களே உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன் என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெறுவது அதிசயிக்கவைத்தது.

அது மட்டுமின்றி அண்மையில் இராமேஸ்வரம் சென்றபோது நான் சந்தித்த ஒரு வயதான இளைப்பாறிய அதிபர் ஒருவர். என்னுடன் நீண்டநேரமாக அளவலாவியபோது கே.எஸ்.ராஜா அவர்களின் குரலுக்கு தான் பரம இரசிகர் என்பது மட்டும் இன்றி அவர் பற்றிய பல தகவல்களையும் உட்சாகத்துடன் தெரிவித்தார். கே.எஸ்.ராஜா அவர்களின் நிகழ்ச்சிகள் பலவற்றை தாம் ஒலிப்பதிவு செய்து தற்போதும் பொக்கிசமாக வைத்திருப்பதாக தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு சென்னையில் தான் அவரை சந்தித்து பலமணிநேரம் கே.எஸ்.ராஜாவுடன் உரையாடியதாகவும் அந்த நாளை இன்னும் தன்னால் மறக்கமுடியாது என்றும் தெரிவித்ததுடன் எனக்கு தெரியாத பல விடயங்களை என்னிடன் அவர் பேசியது என்னை பிரமிக்கவைத்தது.

கே.எஸ்.ராஜா பற்றியும், கே.எஸ்.ராஜாவுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒலிப்பதிவினையும், விளம்பர ஒலிப்பதிவு சிலவற்றையும் நண்பர் யாழ் சுதாகர் அவர்கள் -அறிவிப்பாளர் அரசர் கே.எஸ்.ராஜா
என்ற வலையமைப்பில் பதிந்துவைத்துள்ளார். கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி தெரியாத இன்றைய இளம் அறிவிப்பாளர்கள், இளையவர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து கே.எஸ்.ராஜாவின் மதுரக்குரலினை செவிமடுத்துக்கேட்டு, பல அரிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

1989ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவித செயல் ஒன்றின்மூலம் கே.எஸ்.ராஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

பி.எச்.அப்துல் ஹமீத்
இந்தக்குழந்தை தொட்டிலில் இருந்து கேட்டுக்கொண்டே வளர்ந்தது உங்கள் குரலைத்தான். கண்டிருந்தேன் பல கனவுகள் உங்களிடம் பேசுவதாக…இன்று!
கனவில்லை நிஜமாகவே உங்கள் பகத்தில் நான்”
திரு. அப்துல் ஹமீத் அவர்களை முதல் முதலாக சந்தித்து அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அன்று நான் அவரிடம் வாங்கிய ஓட்டோகிராப்பில் நான் எழுதிய வசனம் இதுதான்.
உண்மையில் அந்த அளவுக்கு நான் அவரது குரலுக்கும், தமிழுக்கும் மகுடி ஒலி கேட்ட பாம்பாகவே மாறிவிடுவது என்னமோ உண்மையே.
எந்த வளமில்லாத தமிழ்ச்சொல்லும் அவரது வாயில் இருந்து வரும்போது வயதிற்கு வந்துவிடுவது அச்சரியமே.

உலகத்தமிழ் அறிவிப்பாளர் என்ற சொல் கனகச்சிதமாக அவருக்கு பொருந்திவிட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு வானொலி நாடகக்கலைஞனாக அறிமுகமாகி, வானொலி நாடக நடிகனாக, நாடக நடிகனாக, நாடக தயாரிப்பாளனாக, அறிவிப்பாளராக, வர்த்தக அறிவிப்பாளராக, போட்டி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, செவ்வி காண்பவராக, திரைப்பட நடிகராக என பல பாத்திரங்களை தனது வாழ்க்கையில் அப்துல் ஹமீத் அவர்கள் வகித்துள்ளார்.
பெரிதாக கல்வி கற்றிராதபோதும் தனது முன்னேற்றத்திற்கு ஏற்றவாறும், அறிவிப்புத்துறைக்கு ஏற்றவாறும் பல தேடல்கள் மூலமாக சிறந்த ஒரு அறிஞனாக தன்னை உருவகித்துக்கொண்டது இவரது தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.

ஞாபக சக்தி என்ற பதத்திற்கு கண்டிப்பாக ஹமீத் குறிப்பிட்டு காட்டப்படவேண்டிய ஒருவரே. இன்றும் கூட தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து எத்தனை பாடல்கள் என்றாலும் அந்த பாடல் பற்றிய சகல விடயத்தினையும் தனது நினைவாற்றல்மூலம் கொண்டு சிறந்த ஒரு நடமாடும் ஒலிப்பேழை களங்சியமாக அவர் திகழ்ந்துவருகின்றார்.
திரு அப்தல் ஹமீத் அவர்களைப்பற்றி கூறிக்கொண்டேபோகலாம்.
மேலும் இவர் பற்றி பல அரிய தகவல்கள், அவரது செவ்விகள், அவர்பற்றிய தகவல்கள், என்பவற்றை பெற - தமிழ் ஒலிக்களஞ்சியம்
என்ற அவரது இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

இது ஒரு மீள்பதிவு

Tuesday, January 25, 2011

ஹொக்ரெயில் - 25.01.2011

மீண்டும் ஒரு பயங்கரவாதம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள ரொமொட்ரரோவோ விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலானது மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தின்மேல் உலகை அச்சம் கொள்ளச்செய்துள்ளது.
மிகைப்பட்ட பாதுகாப்புக்கள் இருந்தும் வருகை பயணிகள் வந்து தமது பொதிகளை பெல்ட்களில் இருந்து எடுக்கும் இடத்தில் இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது என்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

அசண்டையினமாக விடப்படும் ஒவ்வொரு கவலையீனப்பிழைகளும் பயங்கரவாதத்தின் கோரத்தனமான பயங்கரத்திற்கு போதுமான புகழிடாக அமைந்துவிடுவதை இந்த குண்டுத்தாக்குதல் மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை எச்சரிக்கப்பட்ட நிலையில் திடீர் என ரஷ்யாவில் நிகழ்ந்த தாக்குதல் மேற்குலக நாடுகளை அலேட் ஆக்கியுள்ளன.
எது எப்படியோ..பயங்கரவாதத்திற்கு அயிரம் காரணங்கள் கூறப்படலாம். ஆனால் பயங்கரவாதிகள் மட்டும் இன்றி எவர், எந்த வகையிலும், யாராலும் அப்பாவிப் பொதுமக்கள் கோரமான கொலை செய்யப்படுவதை எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.

ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ்.
2012 திரைப்படத்தின் பின்னர் மீண்டும் ஒரு திகில் அனுபவத்திற்கு எம்மை தயார்ப்படுத்துகின்றது ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படத்தின் செய்திகள்.
மார்ச் மாதம் 11ஆம் திகதி இந்த திகில் அனுபவத்தை காண நீங்கள் இப்போதே தயாராகலாம். அந்த அளவுக்கு மிக விறுவிறுப்பாகவும், கற்பனைக்கும் எட்டாத வகையிலும் ரெய்லர்கள் நம்மை பிரமிக்கவைக்கின்றன.

கொலம்பியா பிக்ஸர்ஸ் (சொனி) தயாரிப்பில், ஜொனத்தன் லீபெஜ்மனின் இயக்கத்தில் ஃபட்டில்: லொஸ் ஏஞ்சல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
யூ.எவ்.ஓ என்னும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக ஆச்சரியத்துடன் தலையை இன்னும் சொறிந்துகொண்டிருக்கும் உலகத்திற்கு, பறக்கும் தட்டுக்கள், வேற்றுகிரக மனிதர்கள் என்பவற்றின்மீது ஒரு பீதி அடிமனதில் இருந்துகொண்டே இருக்கின்றது.
இந்தப்பெரிய பிரபஞ்சத்தில் ஒரு தூசிக்கும் பெறாத பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் உள்ளது என்ற அறிவு, வேடிக்கையானது என்பதைவிட, மிகச்சுயநலமானது என்பதை இன்று மனதில் பலர் ஏற்றுக்கொண்டுவருகின்றனர்.

இதைவைத்தே விஞ்ஞான புனைகதைகள் வெளியாகின. கால காலங்களில் அவை திரைப்படங்களாகவும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் நம்மைமீறிய சக்திகள் சம்பந்தமான கற்பனைகளுக்கு வாயைப்பிழக்கும் மக்கள்கூட்டம் அதிகரித்துள்ள நேரத்தில் இதை திகிலுடன் தந்து வெற்றி அடைந்துவிடும் யுத்தியை இப்போது இயக்குனர்கள் கையாண்டுவருகின்றனர்.
11.03.2011இல் மீண்டும் ஒரு திகில், திரில்லர் காட்சிகளுக்கு தயாராகுங்கள்.

ஹெலி கொப்டர் ஷொட்.
இந்தியாவில் சச்சினுக்கு பின்னர் விளம்பரங்களில் பிரபலமான கிரிக்கட்டர் டோனிதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. சச்சினுக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து கொண்டாடும் குட்டீஸ்கள், தமது நாயக லிஸ்டில் இப்போ டோனியையும் சேர்த்துள்ளனர் என்பதை கண்டுகொள்ளலாம்.
அந்த வகையில் இப்போ பலதரப்பட்டவர்களையும் கவர்ந்திருக்கும் விளம்பரம், இந்த ஹெலி கொப்டர் ஷொட் விளம்பரம்.
ஆனா..ஒன்னுங்க.. இந்த விளம்பரம் டோனியை பாராட்டுதா? இல்லை ஓட்டுதா?

சாப்பாட்டுக்கடை

இந்த சமாசாரத்தை பற்றி பல பதிவர்கள் தொடராக எழுதிவாறாங்க.. நம்மளால இதை எல்லாம் எழுதமுடியாது. ஏன் என்றால் வீட்டுச்சாப்பாடே போதும் போதும் என்ற வகையில் கிடைக்கிறதுபோக வெளிச்சாப்பாடு, உடலுக்கும், மனதிற்கும் ஒத்துக்கொள்வதில்லை.
ஆனால் இந்த சாப்பாட்டுக்கடை சமாசாரத்தை எழுதி உங்களை ஏதாவது ஹொட்டலுக்கு கூட்டிப்போகணும் என்று பெரிய அவா…
ஸோ.. சும்மா இல்லை. உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஹொட்டலுக்கு அழைத்துப்போறேன்..

டுபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டத்தில் 122ஆவது மாடியில் அண்மையில் ஒரு ரெஸ்ரூரன்ட் திறந்திருக்கின்றார்கள். 442 மீற்றர் உயரத்தில் (அண்ணலாவாக அரை கிலோ மிற்றர் உயரம்) இந்த ரெஸ்ரூரன்ட் இருக்கு.
சைனிஸ், இன்டோ பூட்ஸ், இத்தலியன் பூட்ஸ், தாய் பூட்ஸ், என எந்த வகை உணவையும் சாப்பிட்டுக்கொள்ளலாம். (வடை, சுடுசோறு எல்லாம் அங்கையும் போய் கேட்கப்படாது ஆமா)
இங்கு ஒரே நேரத்தில் 210 பேர் அழகாக இருந்து உணவு சாப்பிடலாம்.
சும்மா உள்ளபோய்.. கோக், பெப்ஸி அருந்தி ஏதாவது சின்ன ஸிப்சை சாப்பிட
கிட்டத்தட்ட 93 டொலர்ஸ் கேப்பானுகளாம்! (என்ன போயிர்லாமா?)

இந்தவாரக் குறும்படம்.

இந்தவார வாசிப்பு
ஒரே ஒரு துரோகம்.

1980களின் ஆரம்பத்தில் சுஜாதா சாவிக்கு எழுதிய தொடர்கதை இது.
இதில் சம்பத், ராஜி என்ற இரண்டு பாத்திரங்களினூடாக அவர்களின் கோணங்களில் ஆரம்பம்முதல் முடிவுவரை கதையை மிகச்சுவாரகசியமாக நகர்த்திச்செல்கின்றார் சுஜாதா.
ஒரு சமூகநாவல் ஒன்றின் அம்பசங்கள் கதையின் இடைக்கிடை எட்டிப்பார்ப்பதையும் கவனிக்கமுடிகின்றது. விடும் மூச்சுக்காற்றைக்கூட பொய்யாகவே விட்டு வாழும் சம்பத், ஒரு பேராசிரியையான தன் மனைவி ராஜியையே எப்படி எல்லாம் பொய்சொல்லி ஏமாற்றுகின்றான். ஆனால் ராஜியின் பார்வையில் என்றும் பவித்திரமானவனாகவே அவன் இருப்பதும் அதிசயிக்கவைக்கின்றது.
அனால் கதையின் இறுதி முடிவில் நான் சுஜாதாவுடன் முரண்பட்டு நிற்கின்றேன். இந்த கதைக்கு முடிவு, இது அல்ல என்பதே வாசித்து முடிக்கும்போது மனதில் எற்பட்ட பீலிங்..

21ம் விளிம்பு.

20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பத்தில் நின்றுகொண்டு 21ஆம் நூற்றாண்டு எப்படி என்று தூரப்பார்க்கும் ஒரு படைப்பு என்றுதான் இதை சொல்லவேண்டும்.
குமுதம் இதழில் சுஜாதா ஆசிரியராக இருந்த காலங்களில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு.
அடுத்த நூற்றாண்டு என்றவுடன், ரெக்னோலொஜி, விஞ்ஞானம், சாட்டிலைட்கள் என்று மனதில் ஓடும், அனால் இதில் இவை மட்டும் இன்றி, இலக்கியம், பயணங்கள், நோய்கள், ஆராட்சிகள், ஆட்சிகள் என்று பல்வேறு விடயங்களையும் தொடடுக்கொண்டு செல்கின்றார் சுஜாதா.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் 1993-94 காலங்களில் 21ஆம் நூற்றாண்டில் இப்படித்தான் இருக்கும் என்று அப்போதே சுஜாதா தொட்டுக்காட்டிய பொருட்கள் இன்று எம் கைகளில் இருப்பது பெரும் ஆச்சரியமே. அதுபோல இலக்கிய வடிவங்களும் எம்மையறியாது சிறியமாற்றம் ஒன்றை எடுத்துள்ளதை கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அதேவேளை இந்தக்காலங்களுக்குள் இவை வந்துவிடலாம் என சுஜாதா ஆரூடம்கூறிய சில இன்னும் தொழிநுட்பரீதியாக இன்னும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படித்துமுடித்தவுடன், ஒன்று மட்டும் நன்றாக தோன்றுகின்றது.
இது தமிழில் சுஜாதாவால் மட்டுமே முடியும்.

மியூசிக் கபே

ஜோக் பொக்ஸ்
பூனை ஒன்றை எலி ஒன்று படாதபாடு படுத்திட்டே இருக்கும் (நம்ம ரொம் அன்ட் ஜெர்ரி போல) பூனையும் எலியை எப்படியாவது புடிச்சுப்புடனும் என்று எவ்வளவோ ட்ரை பண்ணி களைச்சுப்போயிட்;டுது. காரணம் எப்படியோ எலி ஓடிப்போய் தன் வளைக்குள்ள பதுங்கிடும். பூனையும் காத்திருந்து கழைத்துப்போய் அப்புறம் போய்டும்.
ஆனால் அடுத்த நாளும் எலியின் சேட்டை தொடங்கிடும்.
ஒருநாள் இன்று விடுறதில்லை என்று பூனையும், எலியை துரத்து துரத்து என்று துரத்தி, எலிவளைக்கு பக்கத்திலேயே காத்திருந்திச்சு.. எலியும் எட்டி எட்டி பார்த்துப்புட்டு பூனை நிற்கிறது என்று உள்ள பேசாமலே நின்னுடிச்சு..
திடீர் என்று நாய் குலைத்து சத்தம் கேட்டது.
“ஆஹா..நாய் வந்தால் நம்ம பூனையார் ஓடிடுவாருல்லை!! என்று நினைத்துக்கொண்டே எலி வெளிய வந்திச்சு. ஒரே ஆமுக்க எலியை ஆமுக்கிவிட்டு
எலிக்கிட்ட பூனை சொல்லிச்சாம்.
“இதுதான்டா சொல்லுறது ரெட்டு பாசை தெரிந்திருக்கணும் என்று”

Monday, January 24, 2011

மிட்சம்மர்ஸ் நைட்ரீம்ஸ்.


ஏதேதோ சப்தங்கள்
எங்கிருந்தும் ஆனந்த கோஷங்கள்..
எந்மொழி புரிவில்லை, பலமொழிகளின்
கலவைகள் அவை..
ஸ்பரிசங்களில் ஆனந்தம்..
முகர்ச்சிகளில் ஆனந்தம்..
உணர்வுகளில் ஆனந்தம்..
கதகப்பு சூழலும் ஒரு அனந்தம்.

ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சி..
என்மீது பூக்களின் சொரிவு..
மேலே பார்த்தால்..
கண்ணடித்து சிரிக்கின்றது ஒரு அணில்..
நடப்பது நிஜம்தானா..
கைகளில் வலியுடன் இரத்தம்வேறு வந்துவிட்டது.

வசந்தமான உணர்வு..
மனம் நினைக்கின்றது..
முன்னே ஒரு அழகான பூங்கா..
அப்போதுதான் கண்முன்னே பரினாமிக்கின்றது!!
வசந்தங்கள் என்றால் உடனே பூங்காதானா?
மனதின் சந்தேகம் முற்றுப்பெறுவதற்குள்..
பரிநாமம் நின்றுவிடுகின்றது..அங்கே வெறுமை.

ஓ… நீ இந்தரகம் அல்வா?
அந்தவெறுமையில் ஒரு முகக்குறிப்பு..
ஒரு மரத்தினால் ஆன பழமையான..
ஆனால் அழகான கட்டம் பரினாமிக்கின்றது.
உந்துதலுடன் உள்ளே செல்கின்றேன்
முப்பரிமானம்தாண்டிய அற்புதமாக அது..
சுவாசத்தில் புதிய புத்தகங்களின் வாடை..
எங்கே புத்தகங்கள்.????

ஓன்றையும் காணவில்லை..
ஒரு தேனீர்க்குடுவை..
அது வைத்திருந்த அழகியமேயை
என்னை அருகே அழைப்பதுபோன்ற உணர்வு
உற்றுப்பார்க்கின்றேன்..
குடுவையின் வாய்..எதையோ
உறிஞ்சுகின்றது…
ஆம் இதோ…இதோ…

ஷேக்ஸ்பியர், டாட்ரோய்ட், நெரூதா..பாரதி,
தூகூர், எனக்கு புகைப்படமாக தெரிந்தவர்கள்
உட்பட பலரின் புத்தகங்கள் அந்த உறிஞ்சலில்
வரிசையாக அதற்குள்ளே சென்று கொண்டிருந்தன.
கைகளில் மயிரிக்கூச்சம், தன்னிச்சை செயலாக
குளிருடன் ஒரு சிறு தலையாட்டம்..
எதுவுமே புரியாத ஒரு இதுவில் நான்..
அத்தனையும் அதன் உள்ளே போய்விட்டாலும்..
குடுவை அதே அளவிலேயே…

அநிச்சை செயலாக ஓடிச்சென்று
குடுவையை தூக்கி, அதற்குள்ளே
திராவகம் இருப்பதை உணர்ந்து குடிக்கின்றேன்..
எங்கேயும் நுகர்ந்திரா சுகந்தமான மணத்துடன்..
இனிப்பும், உறைப்பும் சேர்ந்ததுபோன்ற ஒரு பாணம்..
ஒருதுளி மிச்சமின்றி குடித்துவிட்டு
எதையோ தேடுகின்றேன்…

ஆம்..நான் தொலைந்துபோனேன்..
என்னைக்காணவில்லை..
எங்கும்வெறுமை…
வெறுமை..
வெறுமையைத்தவிர வேறொன்றும் இல்லை.

திடுக்கிட்டு கண்விழித்துக்கொண்டு
விளக்கைப்போட்டு..யோசித்துக்கொண்டே
கண்ணாடியைப் பார்க்கின்றேன்..
அங்கே நான் இல்லை.

Sunday, January 23, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.கன.வரோ.இலங்கை வலைப்பதிவர்களுக்குள் இருக்கும் ஊடகவியலாளர்களில் வரோவும் முக்கியமான நபர். ஆரம்பத்தில் வான்மீகி என்று தனது தளத்தின் பெயரை வைத்திருந்து, பின்னர் அகசியமாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருப்பவர்.
இதழியல் கல்லூரியில் ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறியை பூர்த்தி செய்து இன்று ஒரு ஊடகவிலாளனாக பணியாற்றிவருகின்றார் இவர்.
நான் வேறு யாரோ கிடையாது, “உன்னைப்போல் ஒருவன்” என்று வலையுலகத்தில் தன் நிலைபற்றி தெரிவித்து, வாசகர்களை தூரப்போகாது, தன் அருகில் வைத்திருக்க எத்தனிப்பவர்.

கனகநாயகம் வரோதயன் என்ற இயற்பெயர் கொண்ட இவர். 2009ஆம் ஆண்டு நடுப்பகுதிகளில் பதிவுலகத்தில் பதிவெழுதல் என்பதை முழுமையாகத்தொடங்கினார்.
அன்றிலிருந்து இன்றுவரை அயராத தொடர்ச்சியாக புதிய புதிய சிந்தனைகளை புகுத்தி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். பல்வேறுபட்ட தகவல்களை சுவாரகசியம் குன்றாமல் தருவது வரோவின் ஸ்ரைல்.
“மாற்றம் வேண்டும்” என்ற ஒரு கவிதையுடன் வலையுலகில் முழுமையானவனாக பிரவேசித்தார் வரோ. அதன் பின்னரும் கவிதைகளின் காதலனாக பல கவிதைகள்.

ஓவ்வொரு வலைப்பதிவாளருக்கும் ஒரு பெஸாலிட்டி இருக்கும் அந்தவகையில் வரோவின் பெஸாலிட்டி, நிகழ்வுகள் பற்றிய விபரிப்பு பதிவுகள்.
“விபரிப்புக்கு வரோ” என்ற அளவுக்கு இதில் வரோவுடைய முத்திரைகள் பல இடங்களில் நச் என்று பதிந்துவிட்டுள்ளன. ஒரு நிகழ்வின் ஆரம்ப நிலையில் இருந்து அந்த நிகழ்வின் இறுதிக்கட்டம்வரை, தன் எழுத்துக்களை கமரா போல கையாண்டு, எழுத்துக்களால் காட்சிப்புலங்களை காட்டிவிடுவார் மனிதர்.
வாசிப்பவர்களுக்கு நிச்சயமாக பக்கத்தில் வரோவுடன் இருந்து இந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டதுபோல ஒரு உணர்வை அந்த பதிவுகள் தந்துவிடுகின்றன.

“தலைநகரின் பூந்தோட்டம்” லங்கா மல் கண்காட்சி, விபரணைப்பதிவாக வரோ இட்ட முதல் விபரணப்பதிவு. அங்கேயே ஒரு மின்னல் தட்டுகின்றது.
தொடர்ந்து இன்றுவரை தான் பார்த்த நிகழ்வுகள் பற்றி செதுக்கி விபரணங்களை தந்துகொண்டிருக்கின்றார் வரோ. பதிவுலகில் விபரணப்பதிவுகளுக்கு வரோ..என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். யாராவது முக்கியமான ஒரு நிகழ்வு ஒன்றை மிஸ் பண்ணிவிட்டால் அந்த மிஸ்ஸிங் பீலிங்கை வரோவுடைய விபரண பதிவுகள் இல்லாமல் செய்துவிடும்.

கவிதை, விபரணம், சினிமா, சமகாலம், சமுகம், சமுகமேம்பாடு, வரலாறு, விளையாட்டு, சிறுகதை என்று வரோ பல விடயங்களையும் தொட்டுக்கொண்டு செல்கின்றார். அதேவேளை பல பதிவர்கள் பல விடயங்களையும் ஒரு மிக்ஸ்ஸிங்காக சுவாரகசியமாக தருவதுபோல அகசியத்திலும், “பாயாசம்” என்ற பெயரில் வரோ பல்சுவைப்பாயாசம் தருகின்றார்.
நடிகர் விஜய்யின் பரம இரசியன் நான் என்று விஜய்யை பதிவுலகம் வறுத்தெடுத்த வேளைகளிலும் மறைக்காமல் சொல்லிநின்றவர். சொல்லியும் வருகின்றார்.

அடுத்து வரோ பற்றி தெரியவேண்டிய முக்கிமான விடயம் அவர் தொடராக எழுதிய யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னரான “சங்கிலியன்” பற்றிய ஒரு சரித்திர தொடர். சலிக்காமல், இடைநடுவே கைவிட்டுவிடாமல், அதை ஒரு முழுமையாக கொண்டு சென்றுவிட்டிருக்கின்றார் வரோ. உண்மையில் இன்றைய நிலையில் சரித்திர தொடர்களை எழுதுபவர்களை ஊக்குவிக்கவேண்டும் பாராட்டப்படவேண்டும்.
அந்த வகையில் வரோ பாராட்டப்படவேண்டியவர்.

சமுக அக்கறையுடனான பல பதிவுகள் வரோவிடமிருந்து பெருமளவில் வந்ததை அவதானிக்கமுடிகின்றது. நம்மால் செய்யக்கூடிய ஏற்புடைய திட்டங்களைவேறு அவர் தனது பதிவுகளில் யதார்த்தமாக சொல்லியிருப்பதையும் அவதானிக்கமுடிகின்றது.
பதிவுலகில் எதையாவது சாதிக்கத்துடிக்கும் ஒரு இளைஞனை வரோவின் பதிவுகளில் கண்டுவிடமுடிகின்றது. இவை தவிர விளையாட்டுக்கள் என்ற விடயத்தை எடுத்தாலக்கூட, சர்வதேச விளையாட்டுக்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, உள்ளுர் விளையாட்டுக்கள், இலைமறைகாய்களாக இருக்கும் வீரர்களை வெளிக்கொண்டுவருவது போன்ற பதிவுகளும் வரோவிடமிருந்து வெளிப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இந்தவாரப்பதிவரான வரோவிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதில்களையும் பார்ப்போம்.

கேள்வி: உங்கள் பதிவுலக பயணம் எப்படி ஆரம்பித்தது?

வரோ:முதலில் என்னை இந்தவார பதிவராக தெரிவு செய்தமைக்கு உங்களுக்கு நன்றிகள். கூடவே என் அனுதாபங்களும். அண்மைக்காலமாக பதிவுலகில் தொடர்ந்து ஹிட்டடித்துக் கொண்டிருப்பவர் நீங்கள். உங்களுக்கு இன்று ஒரு 'பிளாப்' பதிவு.

விடயத்துக்கு வருகின்றேன், 2007 காலப்பகுதியில் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து வெறும் படங்களை மட்டும் போட்டிருந்தேன். பின்னர் 2009ஆம் ஆண்டு ஊடகவியலைக் கற்கையில் 'Online Journalism' படிக்கும் போது வலைப்பதிவை ஆரம்பித்தேன். முதலாவது பதிவர் சந்திப்புக்கு பின்னர் அதிகமாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. இரண்டாவது சந்திப்புக்குப் பின்னர் தான் பல திரட்டிகளில் இணைந்து கொண்டேன். தொடர்ந்து நான் அறிந்த, பார்த்த, கேட்ட விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வருகின்றேன்.

கேள்வி:இலங்கைப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு எப்படியிருக்கிறது?

வரோ:பதிவர்களில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் ஒரு சிலர் தான். நீங்கள் உட்பட அனைவரும் பதிவர்களாகவே என்னுடன் நட்பானவர்கள். தோள் தட்டிப் பழகியவர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என நினைத்தது என் அறியாமை. நான் பதிவுலகில் நுழைந்த சமயத்தில் ஒரு சிலரைக் கருத்துக்களால் பகைத்துக் கொண்டேன். இது மறுப்பதற்கில்லை. அவர்களும் கருத்துக்களாலேயே பதில் சொல்லியிருக்கலாம்! நடந்தது வேறு. 'ஒரு பதிவர் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க முடியுமோ, அவை அனைத்தையும் பதிவெழுத வந்த ஒரு வருடத்திற்குள் அனுபவித்துவிட்டேன்'. இனி பதிவுலகில் எதிர்கொள்வதற்கு எந்த கஷ்டங்களும் இல்லை போலும்!.

எனக்கு நேர்ந்த சில பதிவுலக துன்பியல் சம்பவங்களை என் தளத்திலேயே எழுதவில்லை. உங்கள் தளத்தில் அதை எழுதி உங்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையையும் நான் உருவாக்கவில்லை. "இயலாதவர்களின் அந்த செயல்களை நான் மன்னிக்கவும் இல்லை. காத்திருந்து பழி வாங்கப் போவதும் இல்லை. கூடிய வரை மறக்க நினைக்கிறேன்". ஆனாலும் சிலர் விடுவதாக இல்லை. ஏதேதோ சம்பவங்களுடன் என்னை தொடர்புபடுத்திப் பார்ப்பதும், தொடர்புபடுத்த நினைப்பதுமாக இருக்கிறார்கள். குறிப்பாக இலங்கையில் இல்லாத ஒருவர், கிடைக்கும் இடங்களிலெல்லாம் என்னை வசைபாடுவதையே தனது தொழிலாக கொண்டிருக்கிறார். என்னில் குற்றம் சுமத்துபவர்களுக்கு நான் குற்றமற்றவன் என தெரியும். என்னை அறியாதவர்கள் என்னைத் தப்பாக நினைத்தால் அதற்கு நான் எதுவுமே செய்ய முடியாது. கூடியவரை இன்றும் நான் யாரையும் பகைத்துக் கொள்ளாமலும், பகைக்க விரும்பாமலும் இருப்பவன். பல புதிய, இளைய பதிவர்கள் நட்பாக கிடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: பதிவுலகம் தாண்டி உங்கள் பொழுதுபோக்குகள் எவை?

வரோ:யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி பார்ப்பதையே என் முழு நேர தொழிலாக கொண்டிருந்தேன். கடந்த மூன்று வருடங்களாக அது மிஸ்ஸிங். அடுத்தது புத்தகம் வாசிப்பது. அதுவும் மிஸ்ஸிங். தொழிலுக்காக ஒரு வேலை. பொருளாதாரத்திற்காக இன்னொரு வேலை. கூடவே படிப்பு வேறு. நேரம் தான் பெரும் பிரச்சினை. ஆனாலும் புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்துவிடுவேன். அதுவும் வலைப்பதிவுக்காக!

Saturday, January 22, 2011

தம்பிகளின் பிறந்தநாள்.


பதிவெழுத வந்து நாம் பெற்றுக்கொண்டவை என்ன என்று கேள்வி ஒன்று வரும்போது கிடைக்கும் முதல் பதில், நல்ல பல நெஞ்சங்கள், அருமையான நண்பர்கள், நிறைய சகோதரர்கள்.
அந்த விதத்தில் எனக்கு இந்த பதிவுகள் மூலம் அன்பு தம்பிகள் பலர் கிடைத்துள்ளனர். (என்னடா கலைஞர் வாடை அடிக்குதே என்று ஒன்றும் யோசிக்ககூடாது ஆமா..)
அப்படி பதிவுலகில் எனக்கு கிடைத்த அண்ணர்களைவிட தம்பிக்களே என்னை அதிசயிக்கவைத்தவர்கள். அவர்களின் ஆற்றல்கள், அறிவின் ஆழங்கள் கண்டு பல முறை ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.
நாமதான் இந்த வயதில் எல்லாததுக்கும் பயந்துகொண்டு நல்லபிள்ளையா இருந்திட்டமோ என்றுகூட சிலநேரங்களில் சிந்திக்க வைத்தும் விடுவார்கள் பதிவுலகால் எனக்கு கிடைத்த தம்பிகள்.
அதேநேரம் அவர்களின் தேடல்கள், உலகநடப்புக்களில் கவனங்கள் என்பன என்னை பெரிதும் ஆச்சரியப்படவைத்துவிடும்.
அப்படியான எனக்கு கிடைத்த தம்பிக்களில் இன்று இரண்டு தம்பிகள் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்கள். இருவருமே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முத்துக்கள்.
ஒருவர் முகாமைத்துவம், மற்றவர் மருத்துவம். ஆனால் இரண்டுபேரும் இந்த இரண்டுதுறைகளுடனும் மட்டுப்பட்டவர்கள் மட்டும் அல்ல. இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு.(அதை பதிவில் சொல்லமுடியாதுங்கோ)

டிலான்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அப்போது நான் சென்னையில் இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை வந்திருந்தார் டிலான். ஈ.சி.ஆர். பாலவாக்கம் கடற்கரையில் அவரை முதல்முதலாக சந்திக்கின்றேன். ஏதோ கனகாலம் பழகியதுபோல அண்ணே..என்று கரங்களாலும், வார்த்தைகளாலும் இறுக்க கட்டிக்கொண்டார்.
இருவரின் வீடுகளும் சிறிய தூரத்தில்த்தான் இருந்ததனால், ஆரம்பத்தில் ஜிம்மில் சந்தித்துக்கொண்டோம், பின்னர் இலக்கிய கூட்டங்கள், குறும்பட திரையிடல் நிகழ்வுகள், குறும்பட தயாரிப்பு என்றும், சினிமாக்கள் பார்க்க, அப்படி இப்படி என்று நமது நட்பு இறுகி, ஒரு உதைபந்தாட்ட குழுவிலும் இருவரும் இணைந்துகொண்டு பல மச்கள் விளையாடினோம். எக்ஸ்ரீம் பொஸிஸனில் டிலான் புலி என்று அப்போது நான் கவனித்தேன்.
பின்னர் டிலானை சந்திக்கா நாட்கள் இல்லை என்ற அளவுக்கு பழகிக்கொண்டோம்.
அதன் பின்னர் பதிவு வட்ட நண்பர்கள், அருண், அடலேறு, நிலாரசிகன், கேபிள் சங்கர், ஒவனோ ஒருவன், சமுத்திரன் மற்றும் ஒரு இலங்கை பதிவர் சயந்தன் (நதிவழி) என அந்த நட்பு வட்டம் பெரிய வட்டமாக பரினாமித்தது.
அற்புதமான நாட்கள் அவை.. அதில் அற்புதமான நினைவுகள் டிலானுடன் என் தின அனுபவங்கள்.
டிலானுக்கு எப்படித்தான் ஒவ்வொரு சொல்லிலும் உண்மையிலேயே சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சரிக்க வைக்கும் மந்திரமும், அதேபோல அவற்றை எழுத்திலும் கொண்டுவரும் லாவகமும் அமைந்ததோ தெரியாது.
அந்த இடத்தையே கலகலப்பாக கட்டிப்போட்டு வைத்துவிடுவது டிலானின் தனித்துவம்.
இப்போது தொழில்த்துறையில் உறக்கநேரமே டிலானுக்கு 3 மணித்தியாலங்கள்தான் என அறிந்தேன். முன்னேற துடிக்கும் ஒருவனுக்கு இது பெரிய விடயம் அல்ல.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புத்தம்பி டிலான்.

பாலவாசகன்

சென்றவருடம் சித்திரை மாதமளவில் நான் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பியவுடன், இலங்கை பதிவர்களின் வலைத்திரட்டியான யாழ்தேவி நடத்திய யாத்ரா இணையத்தமிழ் மாநாடு ஒழுங்குகள் இடம்பெற்றன.
இலங்கை வந்தவுடன் பல பதிவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது இந்த யாத்ராதான். யாத்ரா மாநாட்டிற்கான ஒழுங்குகளை கவனித்துக்கொண்டிருந்தவேளையில் மருதமூரானிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு..
ஜனா.. நான் ராஜா கிறீம் ஹவுஸிலை நிற்கின்றேன். பதிவர் பாலவாசகன் வருவார் நீங்களும் வருகின்றீர்களா என்று. சரி.. என்றுவிட்டு, என் எவ்.எஸ்.இஸட்டை முறுக்கிக்கொண்டு அங்கு சென்றேன். மிக பவ்வியமாக அங்கே மருதமூரானுடன் ஒருவர் இருந்து சிரித்தார். களையான முகம், வஞ்சனை அறவே இல்லாத சிரிப்பு,
பரஸ்பரம்..மருதமூரானால் அறிமுகம் செய்யப்படுகின்றோம்.
அண்ணா.. நீங்கதான் ஸியேஸ் வித் ஜனாவா? பார்த்திருக்கின்றேன். நான் நீங்கள் இந்தியப்பதிவர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என்றார்.
அன்றில் இருந்து ஆரம்பமாகியது அந்த நட்பு.
நாளை ஒரு முழு வைத்தியனாக பரினாமிக்கவுள்ள அவர் தன்னை மருத்துவத்துறையுடன் மட்டுப்படுத்திவிடாமல், பல துறைகளிலும் ஆர்வமும் தேடல்களுடனும் இருப்பது பல தடவை என்னை அதிசயிக்கவைத்துள்ளது.
என் வலைப்பதிவில்; நான் என்னைப்பற்றி சொல்லிக்கொண்ட சுயவிளக்கம் அப்படியே தம்பி பாலவாசகனுக்கும் பொருந்திய சந்தர்ப்பங்கள் பலவற்றை கண்டுகொண்டேன்.
எனக்கு தெரியாத விடயத்தை எனக்கு புரியவைக்கும்போது ஒரு ஆசானாகவும், அதேவேளை என்னிடமிருந்து தான் அறியாத விடயங்களை பெறும்போது, மாணவனாக அல்லாமல் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவது பாலவாசகனின் இயல்பு. வைத்தியன் என்ற ஒரு நிலையுடன் நின்றுவிடாமல், என்ன சொல்வாங்க ஆ.. அந்த எம்.டி, எவ்.ஆர்.ஸி.எஸ்.. இன்னபெற மேற்படிப்புக்களையும் தொடர்ந்துகற்று வைத்தியத்திலகமாக தம்பி வரவேண்டும் என்பதே இந்த அன்பான அண்ணனின் அவா..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாசகன்.

Thursday, January 20, 2011

திரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்களும்.

நமது தமிழ்த்திரைப்படங்களை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். திரைப்படம் வந்தவுடன், விமர்சனம் செய்கின்றோம், விருதுகளைப்பற்றி சிலாகித்துக்கொள்கின்றோம், திரை நட்சத்திரங்களின் கருத்துக்களை வைத்து மோதிக்கொள்கின்றோம், சிறந்த நடிப்பை பார்த்து அதிசயித்து நிற்கின்றோம், அதேபோல பிளேட்டு படங்களை கண்டால் தூர ஓடுகின்றோம். இப்படி பல விடயங்களில் எமக்கு தமிழ்த்திரைப்படங்கள் பல விழிப்புணர்வுகளை! தந்திருக்கின்றன.
சாதாரணமாக பொழுதுபோக்கிற்காக பார்க்கும்படம் என்பதில் இருந்து, தற்போது, தமிழ் சினிமா இரசிகர்கள், இசை நுணுக்கங்களில் இருந்து. காமரா ஆங்கிள்வரை கவனிக்கத்தொடங்கிவிட்டதனாலும், பல ஆங்கிலப்படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டே தமிழ் சினிமாவுக்கு வருவதாலும், இப்போதெல்லாம் அவர்களின் காதுகளில் பூவை சொருகுவதற்கு இயக்குனர்கள் பெரும்பாடு படவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.

ஏன்றாலும்கூட சிறப்பான திரைப்படங்கள் ஒன்றில் சில காரக்டர்களில் சில நடிகர்கள் காரக்டர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். இந்த காரக்டருக்கு இவனை இயக்குனர் தெரிவு செய்ததற்கே கைகொடுக்கலாம்பா.. என்ற காமன்டுகள் உடனயடியாகவே வரும்படி சில காரக்டர்களில் சில நட்சத்திரங்கள் புகுந்துவிளையாடியிருப்பார்கள்.
இதைப்போல ஒரு காரக்டர்தான் வேண்டும்… வேண்டும் என மற்றய நடிகர்கள் ஆவலுடன் ஏங்கி காத்திருக்கும் வண்ணம் இவை அமைந்துவிடும்.
அப்படியான சிலகாரக்டர்களையும், படங்களையும், நட்சத்திரங்கள் பற்றியுமே இந்தப்பதிவில் பேச்சு….

மனோகர்.

மணிரத்னம் இயக்கிய “மௌனராகம்” படத்தில் கார்த்திக் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர்தான் மனோகர்.
அப்பா…. இப்படி ஒரு பாத்திரத்தை எவனாவது செய்யமுடியுமா? என்று சொடக்குப்போட்டு சவால்விடும்வகையில் இருந்தது கார்த்திக்கின் அபாரமான நடிப்பு.
மெதுவாக அசைந்துவரும் தேர்போல மெதுவாக ஓட்டத்துடன் வந்த திரைக்கதை ஓட்டம். பிளாஸ்பாக்காக வரும் கார்த்திக்கின் அறிமுகத்தில், ஜெட் விமானம் ரேக்காவ் ஆகி பறப்பதுபோன்ற உணர்வை தரும். விறுவிறுவென்று கதையோட்டம் கார்த்திக்கால் நகர்த்தப்பட்டுவிடும். குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் ரேவதியின் ஒரு பிளாஸ்பாக்காக வரும் கார்த்திக் பின்னர் படம் நிறைவுபெறும்வரை பார்ப்பவர்கள் மனதிலேயே நின்றுவிடுவது மாயம்.
இப்போதுகூட பல இளம்புயல்கள் இந்த மனோகர் பாத்திரம்போல ஏதாவது…(அப்படி முடியுமா என்பது வேறுகதை) என்று ஏங்குவது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ்

கிருஸ்ணவம்ஸி இயக்கத்தில் அந்தபுரம் திரைப்படத்தில் பார்த்தீபன் நடித்த பாத்திரம். கொலையுடனும், மனதில் வக்கிரம், வெறியுடன் அலைந்துதிரியும் தனது கணவனின் ஊருக்குவரும் சௌந்தர்யா, பயந்ததுபோலவே பல இக்கட்டுகளை சந்தித்து கணவனையும் இழந்துவிட்டு, மரணம் துரத்தப்பட ஒரு கட்டத்தில் தனக்கும் தன் குழந்தைக்கும் தப்பிக்க எந்தவழியும் இல்லை, என்ற நிலையில் திரையில் அறிமுகமாவார் பார்த்தீபன். பெரும் ரணகளத்தினுள்ளும் ஒரு கிலுகிலுப்பாக பின் கதையோட்டத்தை நகர்த்தி செல்லும் விதம் அபாராம். நெஞ்சில் நிலைதும்துவிடுகின்றது. இது பாத்தீபனால் மட்டுமே முடியும் என்ற முத்திரை அழியாமல் பதிந்துவிடுகின்றது.

ரமேஸ்

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நம்மவர் திரைப்படத்தில் நடிகர் கரன் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர்தான் இந்த ரமேஸ்.
அறிமுகமா? யார் சொன்னார்கள்? அப்போதே தன் ஆற்றல் மிகுந்த நடிப்பால் அனைவர் புருவங்களையும் உயரவைத்தவர் கரன்.
கமல்ஹாசனுக்கு சாலஞ்சிங்கான ஒரு காரக்டர் அதுவும், புதுமுகம் ஆனால் மிக யதார்த்தமாக ஒரு பெரும் நாகனின் நடிப்புக்கு ஈடாக நடித்து அழுத்தமான முத்திரையை நம்மவர் படத்தில் குத்திவிட்ட பாத்திரம் கரனுடைய கல்லூரி நிர்வாகியின் மகனாக வந்து அடாவடித்தனம் பண்ணும் ரமேஸ் என்னும் பாத்திரம்.

சிந்து

கே.பாலச்சந்தரால் செதுக்கப்பட்ட ஒரு அற்புதமான பாத்திரம் “சிந்துபைரவி” திரைப்படத்தின் சிந்து. சுஹாசினி…ஒருமுறை எழுந்துநின்று கைதட்டிவிடலாம்.
சிந்துவாக வாழ்ந்துகாட்டினார் சுஹாசினி. அந்த பாத்திரத்தின் தன்மையுணர்ந்து மிகச்சாலஞ்சிங்காக அதை ஏற்று, அறிமுகம்முதல் முடிவுவரை, உணர்வுகளுடான நடிப்பின்மூலம் மனதில் நின்றுவிடுவார் சுஹாசினி. ஏக்கம், ஏமாற்றம், பூரிப்பு, பரிதாபம், சந்தோசம், துக்கம், கவலை என அத்தனைபாவங்களையும் உடனுக்குடன் மாற்றி மறக்கமுடியாத பாத்திரமாக சிந்துவை எப்போதும் வைத்துக்கொள்ளவைத்துவிட்டவர் ஹாசினி.

ஜிந்தா.

பேரைக்கேட்டவுடனேயே புரிந்திருக்குமே? பிரதாப்போத்தனின் இயக்கத்தில் வெற்றிவிழா திரைப்படத்தில் சலீம் ஹோஷ் நடித்த பாத்திரம்தான் இந்த ஜிந்தா.
தமிழ் சினிமா வித்தியாசமான ஒரு வில்லனாக சலீம் ஹோசை பார்த்து ஆச்சரியப்பட்டது. வேற்றிவிழா திரைப்படம் என்றவுடன், கமல், பிரபுவை தள்ளிவிட்டு ஜிந்தா என்று சொல்லும் வண்ணம் அந்த திரைப்படத்தில் ஜொலித்துக்காட்டினார் சலீம் ஹோஸ். சலீம் ஹோஷின் பேச்சு, கம்பீரமான குரல், வித்தியாசமான வில்லத்தனம், அபாரமான சிரிப்பு என்பன திரைப்படம் பார்த்தவர்களை கட்டிப்போட்டு, இன்றும் அவரது பேரைக்கூட ஜிந்தா என்று சொன்னால்த்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த பாத்திரத்தில் முத்திரை பதித்துவிட்டவர் சலீம் ஹோஸ்.

கீத்தா…

கௌத்தம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தில்
ஜோதிகா ஏற்று நடித்த நெகட்டிவ் பாத்திரத்தின் பெயர் கீத்தா.
ஜோ… அதிரவைத்து அசத்திய பாத்திரம் கீத்தா. ஒரு நெகட்டிவ் ரோலில், அதுவும் மிக மிக சாலஞ்சிக்கான ஒரு பாத்திரத்தில் பாத்திரத்தின் போக்கிற்கு பாத்திரத்தின் உச்ச நிலைக்கே சென்று பிரமிக்கவைத்து விடுவார் ஜோ..
இறுதியில் சரத்குமார் அனைத்துவிடையங்களும் தெரியவந்ததும், ஜோ..மற்றும் மிலிந்த சோமன் ஆகியோரின் இடத்திற்கு வரும்போது, பல தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பலே ரவுடியாக ஜோ..வரும் ஸீன்…ஜப்பா…
சரத்தைப்பார்த்து கண்ணைக்காட்டி என்ன பார்க்கிறா…ஒருக்கா வந்திட்டுப்போறியா? என்று கேட்பது. ரவுடிப்பெண்ணாக யதார்த்தம்.

இப்படி முத்திரை குத்திய பாத்திரங்கள், நடிகர்களின் ஸீன்கள் பல இருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்தவைகளைத்தான் உங்களுக்கு சொல்லியிருக்கின்றேன்.
நீங்களும் சிலவேளைகளில் இதுபற்றி யோசித்திருப்பீங்க…

Wednesday, January 19, 2011

வட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.


கட்டுமானங்கள், திட்டங்கள், யாப்பமைப்புக்கள் என்பன பெரிய நிறுவனங்களுக்கோ, அல்லது நாடுகளின் கட்டமைப்புகளுக்கோ மட்டும் இன்றி நமது வாழ்க்கையிலும் தனி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்டுமானம் உண்டு.
அதை தெரிந்துகொண்டோ அல்லது தெரியாமலோ நாம் அந்த கட்டுமானங்களுக்குள்ளாகவே எமது வாழ்க்கையினையும் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.
இந்த கட்டுமானங்களை எமக்கே தெரியாமல் எம் கட்புலனுக்கு அப்பாற்பட்ட எம்மைச்சுற்றி நாமே போட்டுக்கொண்டு வாழும் வட்டங்களின்மூலம் ஓரளவுக்கு தெளிவு படுத்திவிடலாம். எம்மைச்சுற்றி குறைந்தது மூன்று வட்டங்களையாவது நாம் போட்டிருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரிய விடயம் ஒன்றை ஒரு பதிவில், சுருங்கச்சொல்வது என்பது இயலாதகாரியம் என்றாலும், அந்த பெரிய விடயத்தை சிறியதாக ஓரளவுக்காவது புரியும் வண்ணம் சொல்லநினைக்கின்றேன்.

நான்..என்ற இடத்தில் இருந்து எமக்காக நாம் போட்டுக்கொண்ட வட்டங்கள் ஆரம்பமாகின்றன.
இதில் முதலாவது வட்டமாக மனைவி, குழந்தைகளோ, பெண்கள் என்றால் கணவன் குழந்தைகளோ என்று வருகின்றது. இதுவே ஒருவனின் அல்லது ஒருத்தியின் மூலாதாரவட்டமாக அமைந்துவிடுகின்றது. (சில சமையங்களில் இந்த வட்டமே சிதைந்து ஏனையவட்டங்களில் தாக்கம் செலுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு அதற்கு பின்னர் வருவோம்.)

இரண்டாவது வட்டம். கணவனின் பெற்றோர்கள், சகோதரர்கள், அதேபோல மனைவியின் பெற்றோர்கள் சகோதரர்கள் என்போர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மூன்றாவது வட்டத்தினுள் ஏனைய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் உள்ளடக்கட்டிருக்கின்றனர்.

நான்காவது வட்டத்தினுள், கூடத்தொழில் புரிபவர்கள், அன்றாடம் பழகிக்கொள்பவர்கள், வாடிக்கை வைத்திருக்கும் கடைக்காரர்கள் இன்ன பிற நபர்களை கூறிக்கொள்ளலாம்.

இவற்றை தாண்டி ஐந்தாவது வட்டம், செல்வாக்கு, உச்ச பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், மத குருக்கள் என்போரை கொள்ளலாம்.

சரி… வாசித்துவிட்டீர்கள் அல்லவா? ஒருமுறை கண்களைமூடி…உங்கள் உறவுகள் நண்பர்களை, உங்களுக்கு தெரிந்த எழுமாறான நபர்களை நினைத்துப்பாருங்கள்.
உங்களுக்கும் உங்கள் வட்டங்கள் தெரிந்து, நீங்கள் நினைத்த நபர் எந்தவட்டமோ அந்த வட்டத்தினுள் நிற்பதை உணரமுடிகின்றதா?
அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.

எமக்கு உரிய, அறிமுகமான நபர்களை நாம் அன்றாடம் எந்த எந்த வட்டங்களில் போடவேண்டுமோ அந்த அந்த வட்டங்களில் போட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
உதாரணமாக மூன்றாவது வட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவரையோ, அல்லது அயலவர் ஒருவரையோ அவரது எம்சார்ந்த இயல்புகள், ஈர்ப்புக்கள், உச்ச அன்பு காரணமாக இரண்டாவது நிலைக்கு அவரை உற்ற உறவினர், சகோதரர்களின் நிலைக்கான இரண்டாம் வட்டத்திற்கு உள்ளீர்த்து வைத்துவிடுவதும் உண்டு.
அதேபோல பல்வேறு காரணங்களுக்காக இந்த வட்டத்தில், முன்னகர்வு, பின்னகர்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.
ஆனால் இரண்டாவது வட்டம் கட்டாயமானது, அந்த வட்டத்தை அழித்துவிடவோ, அல்லது சிதைக்கவோ நம்மால் முடியாது. ஏனெனில் அது பிறப்பால் அமைந்தது.

முதலாவது வட்டமே சிதைவுறும் நிலை விவாகரத்துக்களில் உண்டு. விவாகரத்துக்கள் மூலாதார வட்டத்தையே சிதைவுக்கு உள்ளாக்கிவிடுகின்றன. இதன் தாக்கம் பிறவிட்டங்களிலும் பிரதிபலிப்பை காட்டும்.
இரண்டாவது வட்ட உறவிர்களில் சரிபாதி எதிரிகளாகும் சந்தர்ப்பங்களும், ஏனைய உறவினர்கள், நண்பர்கள், இந்த நிலையில் மூலாதார வட்டத்திற்குள் வரவேண்டிய தேவைகளும் இதன்போது ஏற்பட்டு ஒரு குழப்பமான நிகழ்வே அரங்கேறிவிடுவது இயல்பு.

அடுத்து மூன்றாவது வட்டம் அந்த வட்டத்தின் தனிநபரான ஒருவனின் உணர்வுகள், அபிலாசைகளை தீர்த்துக்கொள்ள மிகவும் தேவையான விடயம். ஏனெனில் இந்த வட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் நண்பர்கள். யாரிடமும் சொல்லமுடியாத, மனக்கஸ்டங்களையும், பிரச்சினைகளையும் இரண்டு வட்டங்களைத்தாண்டி இந்த மூன்றாவது வட்டத்தினரிடமே சொல்லக்கூடியதாக இருக்கும். இந்த ஐந்து வட்டங்களிலும் இது சென்ஸிட்டிவ்வான வட்டம் என்று சொல்லலாம்.
ஏனைய வட்டங்களைவிட இந்த வட்டத்தினரிடமே ஒருவனுக்கு ஆறுதலும், அமைதியும் கிடைக்கும். எனவே இந்த வட்டத்தினுள் நிதானமாகவே ஆராய்ந்து நபர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

அடுத்த நான்காவது வட்டம் நாம் அன்றாடம் பழகிக்கொள்ளும் வட்டம். இந்த வட்டத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றாலும் உடனடியான உதவிகளுக்கும், அதேவேளை திடீர் என ஏற்படும் ஆபத்திற்கும் முன்னுக்கு நிற்கப்போகும் வட்டம் இதுவாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வட்டத்தில் உள்ளவர்களைத்தான் நாம் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். மறைமுகமாக எம்மீது செல்வாக்கு செலுத்துபவர்கள் இவர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியும்.

இறுதிவட்டம், ஐந்தாவது வட்டம் சிலருக்குத்தான் உண்டு. தொழில் நிமித்தம், நண்பர்கள் நிமித்தம், கலை நிமித்தம் கட்டாயமாக ஏற்பட்டுவிடும் வட்டம் இது.
குறிப்பாக இந்த வட்டம் பற்றி ஏனைய வட்டத்தினருக்கே தெரியாதபடி நாம் இந்த வட்டத்தை இரகசியமாக எம்முடன் வைத்திருப்போம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேச்சிலேயே சில வேலைகள் முடிவடையவும் இந்த வட்டமே பெரிதும் உதவும். எம்மால் முடியாத, எம்மைமீறிய ஒரு காரியத்திற்கு இந்த வட்டம் உதவலாம்.

ஆனால் உண்மையான அன்பு, நேசம், கபடமற்ற, கயமையற்ற நட்புக்கள், அன்பு உள்ளங்கள், இந்த வட்டங்கள் அத்தனையினையும் தாண்டி முதல் வட்டத்திற்கு மிக அருகில் வந்து நின்றுவிடுவதும் உண்டு. அதேபோல கடும் விரோதங்களால் எந்தவொரு வட்டத்தில் உள்ளவர்களும், அனைத்து வட்டங்களிலும் இருந்து நகர்த்தப்படாமல் ஒரே அடியாக அழித்துவிடப்படுவதும் உண்டு.
ஏன் என்றால் அனைத்துமே மனித மனம் அல்லவா?
சரி..இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி நீங்கள் போட்டிருக்கும் வட்டங்கள் எத்தனை?

LinkWithin

Related Posts with Thumbnails