Sunday, December 30, 2012

மெய் வருத்தக்கூலி!21ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கலைத்தொடர்ந்து இன்று மிலேனியம் ஆண்டுகளில் பல தொழில் பெருவளர்ச்சிகள், தொழில் மேன்மைகள் கண்டு உலகம் எங்கும் வர்த்தகமும், பொருளாதாரமும், உழைப்பு எனும் இயந்திரச்சுழற்சிகளால் உச்சம் பெற்று நிற்கும் இந்த வேளைகளில்கூட உழைப்பவர்கள் பலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறமுடியாமல் பண முதலைகளின்; உழைப்புச்சுரண்டலுக்கு ஆளாகிவருகின்றனர் என்பதே யதார்த்தமான உண்மை.

வளச்சுரண்டல், பணச்சுரணடல், சொத்து சுரண்டல், நிர்வாகச்சுரண்டல் என்பவற்றிலும் மிக வேதனையானதும், மிகக்கேவலமானதுமே இந்த உழைப்புச்சுரண்டல்.
பொதுவாகமே மூன்றாம் உலக நாடுகளில், நிலவும் பாரிய வேலையில்லாத்திண்டாட்டம், மற்றும் அரச தொழில்; சீரின்மையால் பெரும்பாலான படித்தவர்கள் தனியார் நிறுவனங்கள், அரசசாரா நிறுவனங்களிலேயே மிகப்பெரிய போட்டிகளின் மத்தியில் தமக்கான தொழிலை பெற்றுக்கொண்டு ஓடாய்த்தேய்ந்து உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மேலோட்டமாக பார்த்தோமானால் அதிக வருமானம்பெற்று சீராக வாழ்பவர்கள் அவர்கள் என்ற தோற்றப்பாடே புலப்படும். ஒருவகையில் அதுவும் உண்மைதான்.
இவர்கள் அதிக வருமானத்தை ஈட்டுபவர்களாகவும், அதேவேளை அதிகமாக வேலைநேரத்தை கொண்டிருப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.

இன்றைய தேதியில், கணனி மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தகவல் தொழிநுட்ப துறையினர், முதலீடு மற்றும் காப்புறுதி துறை சார்ந்தவர்கள், அரசசாரா நிறுவனங்களில் தொழில்புரிபவர்கள், தனியார் தயாரிப்பு நிறுவனங்களில் பதவி வகிப்;பவர்கள், தனியார் ஊடக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என பலர் மூன்றாம் உலக நாடுகளில் தனியார் துறைகளில் அதிக வருமானத்தினை பெறுபவர்களாக உள்ளனர். அதாவது ஆண்டு வருமானம் ஆகக்குறைந்தது 6000 அமெரிக்க டொலர்களை பெறுபவர்களாக இவர்கள் கணிப்பிடப்பட்டுள்ளனர்.

முதல், மற்றும் இரண்டாம் உலக நாடுகளில் (அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி கண்டுள்ள நாடுகள்) பாரிய அளவில் தனியார்துறைகளே பெருவளர்ச்சி கண்டுள்ளதனால் ஊழியர்கள் தொடர்பான நலன்கள், வசதிகள் உழைப்பையும் தாண்டிய சலுகைகள், மேலதிக ஊதியங்கள், ஊதியத்துடனான கட்டாய ஓய்வு விடுமுறைகள், உல்லாசப்பயணங்களுக்கான செலவுகள், குடும்ப நிகழ்வுகளுக்கான கொடுப்பனவுகள், சேமலாப நிதி, நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்டதொரு பங்கு என உழைப்பையும் தாண்டிய பல சலுகைகளை பெற்று பதட்டமில்லாத நிதானமான மனநிலையுடன் தொழில் புரிகின்றனர்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலும் உழைப்புச்சுரண்டல்களும், முளைச்சுரண்டல்களுமே நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெற்றுவருவதை கண்ணூடே காணக்கூடியதாக உள்ளது.
இந்த நாடுகளில் கற்றவர்களின் தொகை அதிகமாகவும், கற்றலுக்கேற்ற தொழில் திண்டாட்டமாகவும், இருப்பதே பண முதலைகள் எந்தவொரு அச்சமும் இன்றி தமது ஊழியர்களின் ஊதியத்திலேயே கைவைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

'தம்மிடம்; வந்திணையும் ஊழியர்களை பயன்படுத்தும் மட்டும் பயன்படுத்திவிட்டு ஊதியத்தில் கைவைத்து அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கி வெளியே அனுப்பிவிட்டு, புதியவர்களை மீண்டும் கொண்டுவந்து, இந்த நடவடிக்கைகளை தொடர்ச்சி சுற்றாக நடத்திக்கொண்டிருப்பதே இவர்களின் இப்போதைய ட்ரென்ட் ஆக உள்ளது'
இவ்வாறு ஊழியர்களின் ஊதியத்தில் வயிறு வளர்ப்பவர்கள், தமக்கு சாதமான வகையிலேயே ஒரு அக்ரிமென்டை தொழிலில் இணையும்போதே கொடுத்து அது குறித்த எந்த ஒரு பூரண விளக்கமும்; இல்லாமல் கையொப்பம் வாங்கிவிடுவர்.
புடித்துவிட்டு உரிய தொழில் எதுவும் இல்லை என்ற நிலையில் எதையும் பற்றி கவலைப்படாமல் உடனடியாக கையொப்பமிட்டு அந்த தொழிலில் இணையும் இளைஞர்களே இன்று அதிகம். (இது தொடர்பான வழக்குகள் பல தொழில் தருணருக்கு சாதகமாகவே தீர்நதமைக்கு பல உதாரணங்கள் உண்;டு. காரணம் மேற்குறித்த அக்ரிமென்டில் இடப்பட்டுள்ள கையொப்பம்)

இன்னொரு பக்கம் இலங்கையை பொறுத்தவரையில் பெட்டிக்கடைகளில் இருந்து சில பாரிய நிதி நிறுவனங்;கள் வரை முறையாக தமது ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதில்லை என்ற அண்மைய இந்த நிதியத்தின் அறிக்கை அதிர்ச்சி தரும் ஒன்றே ஆகும். அவ்வாறாயின் ஒரு ஊழியர் தமது வேலையினை இழக்கும் சந்தர்ப்பத்தில் அவரது நிலை என்ன? என்பதே பெரிய கேள்விக்குறி.

இன்னொரு பக்கத்தில் தமது தொழிலையும், நிறுவனத்தையும் நேசித்தவர்கள் கூட, மேற்படி நிறுவனங்களால் ஊழியச்சுரண்டலுக்குள்ளாக்கி தூக்கி எறியப்பட்ட சம்பவங்;களும் நிறைய இடம்பெற்றுமையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றே.
இலாபநோக்கம் ஒன்றே குறியாக உள்ள நிறுவனங்களில் தொழில் புரியும்போது மிக அவதானமாக செயற்படவேண்டிய நிலை ஊழியர்களுக்கு உண்டு. 'தொழிலை நேசி, தொழில் தருபவனை அல்ல. உன் உழைத்தலுக்கான ஊதியமே தரப்படுகின்றது' என்ற கோட்பாடே இங்கு பொருத்தமானதாக இருக்கும்.
இத்தகய நிறுவனங்களில் திறமைகளுக்கான பதவி உயர்வுகளும் ஒரு வரையறை உள்ளதாகவே அமைந்திருக்கும் மறைமுகமான ஒரு 'கிளாஸ் சீலிங் போல'.

சரி அவ்வாறெனில் புதிதாக ஒரு நிறுவனத்தினுள் தொழில் பெற நுளையும் ஒருவர் கவனிக்க வேண்டிய அவசியமான பண்புகள் என்ன?

01. தொழில் பாதுகாப்பு.
நீங்கள் சேரவுள்ள அந்த நிறுவனத்தில் உங்கள் தொழிலை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்லுவதற்கும், வருமானம் தவிர்ந்த உங்கள் முன்னேற்றம், சேலாபம், ஓய்வூதியத்திட்டம் என்பன உள்ளதா? என்பவற்றில் அதீத கவனமாக இருங்கள்.
தொழில் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் என்ற காரணத்திற்காகவே பலர் அரச பணிகளை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

02. ஸ்திரத்தன்மை மற்றும் முன்னணி.
நீங்கள் சேரும் நிறுவனம் நிதி மற்றும் வெற்றிகரமான ஸதிரத்தன்மையை கொண்டுள்ளதுடன், மற்றய நிறுவனங்களைவிட முன்னணியில் உள்ளதா என்பதை ஆராயுங்கள்.

03. ஊழியர்களுக்கான நன்மைகள்.
அபிவிருத்தி  அடைந்த நாடுகளில் ஊழியாகள் பெறும் நன்மைகளை கொண்டிருக்காதுவிடினும் ஒப்பீட்டளவில் ஊழியர்களுக்கான, வருமான உயர்வு, திறமைக்கு இடம், உயர்வுகளுக்கான சாத்தியம், சேமலாபம் என்பன உள்ளனவா என்பதை கண்டிப்பாக அறிந்திருங்கள்.

04. தொழில் தருனரின் பின்னணி தலைமைத்துவம்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு தொழில் தரவுள்ள நிறுவனத்தலைவரின் பின்னணி, அவரது தலைமைத்துவப் பண்பு என்பவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

05. உங்களை முழுமையாக நம்புங்கள்.
நேர்முகத்தேர்வின்போது அவர்கள் உங்களிடம் கேட்பதற்கு எவ்வளவு உரிமைகள் உண்டோ அதேபோல நிறுவனம் சார்ந்த முழுவதையும், உங்கள் தொழில் எத்தயது, ஊதியம் எவ்வளவு, முன்னேற்றங்களை எப்படி அடைதல், எதுவரை அடைதல் எனபவற்றை அவர்களிடம் கேட்க உங்களுக்கும் முழுமையான உரிமை உண்டு. வாககுறிதியின் அடிப்படையில் நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால் அத்தனையினையும் எழுத்துமூலமாக அடித்துக்கேளுங்கள்.
நீங்கள் நிறுவன அக்ரிமென்டில் கையொப்பம் இடும்வரையில் அவர்கள் உங்களுக்கு கட்டளை இடுபவர்கள் அல்லர்.
உங்களையும் உங்கள் திறமைகளையும் எந்த சந்தர்ப்பததிலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

குறைந்தது இந்த ஐந்துவிடையங்களையாவது தனியார் துறையில் நுளையமுன்னர் நீங்கள் கவனமாக அதேவேளை உறுதியாக கைக்கொண்டால் பின்வரும் காலங்களில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் தொழில் புரியலாம்.

உங்கள் உழைப்பு உங்களுக்கே சொந்தமானது அதில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்துகொள்ள உங்களுக்கு அவசியம் இல்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதே தொழிலாளர்களின் உலக அடிப்படை தாரக மந்திரம்.
உழைப்பை உறுஞ்சும் நிர்வாகமும், ஊதியத்திலும் அதிகமாக உழைப்பை வேண்டுதல் என்பவை இரத்தக்காட்டேறிக்குச்சமனான பண்புகள்தான்.

'மெய்வருத்தக்கூலி தரும்' என்ற ஐயன் வள்ளுவனின் திருக்குறளுக்கு அமைவான இடமே தொழில்புரிய ஏற்ற இடம். மெய்வருத்தி கூலிச் சுரண்டல் எனில்....
அந்த முற்றம் மிதியாமையே நன்று.

( எனது நண்பர்கள் பலர் இரண்டு நிறுவனங்களில் இவ்வாறான ஊதியச்சுரண்டலுக்;கு உள்ளான கதை, நேற்றைய தினம்தான் எனக்கு முழுமையாக தெரிந்ததால் உருவான பதிவே இது..)

Saturday, December 29, 2012

6 அடி, 6 அங்குலத்தில் ஒரு முழுமையான ஆளுமை...
1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணத்தின் காட்சி நினைவுகளுடன், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளச்சொந்தமான அழுத்தம் திருத்தமான ஒரு ஆங்கில உச்சரிப்பு, அதேவேளை உளமார இலங்கையின் வெற்றிகளை நேசிக்கும் உற்சாக ஒலியாக அனைத்து கிரிக்கட் இரசிகர்களின் மனங்களையும் கவர்ந்துகொண்டது அந்த ஆளுமையான குரல்.
அந்த குரலுக்குச்சொந்தக்காரன் ரொனி ஹிரேக்.
இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு அவரை ஒரு கிரிக்கட் வர்ணனையாளராகத்தான் அறிமுகம். 1996 உலகக்கிண்ணத்தினை இலங்கை வெற்றிகொண்டதைத்தொடர்ந்து இலங்கை குவித்த வெற்றிகளிலும், சனத்தின் விஸ்வரூபங்களிலும் இந்தக்குரல் இலங்கை மக்களின் குரலாகவே பெரும் குதூகலத்துடன் ஓங்கி ஒலித்தது.

அந்தநாட்களில் இலங்கை அணி வெற்றியின் விளிம்புகளில் இருக்கும்போது, வானொலி, தொலைக்காட்சிகளில் மேற்படி போட்டியை சத்தமாக போட்டுவிட்டு, சரவெடிகளுடன் தெருக்களில் காத்திருக்கும் இரசிகர்களுக்கு, வெற்றி என்ற சுப செய்தியை தரும் தேவதூதுவராகவே ரொனி ஹிரேக் தெரிவார்.
ஹெங்கிராருலேஷன் ஸ்ரீ லங்கா......... என்ற அவரின் குரலை கேட்டவுடனேயே சரவெடிகள் காதைப்பிளக்கும் நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடாது.

தனது வர்ணனைகளில் சில சுவாரகசிய சொற்களை புகுத்தி இரசிகர்களை லகிக்க வைத்த வல்லமை அவரிடம் உண்டு. 
தவறுவதற்கு சந்தர்ப்பமே இல்லாத பிடிகொடுப்பை 'லொலிபப் ஹச்' என்பது முக்கியமாக அன்றைய இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் களுவிதாரணாவை நகைச்சுவையாகப் போட்டுத்தாக்குவது குறிப்பாக 'லிட்டில் களு' என கொமன்ட் அடிப்பதை களுவிதாரணாவே ரசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறே இலங்கையர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட அந்த மனிதர் உண்மையில் இலங்கைமீது பெரு மதிப்பு வைத்திருந்தார். இலங்கை கிரிக்கட், சுனாமி, இலங்கை உல்லாசப்பயணிகள் வருகை என்பவற்றிற்காக தனது முழுமையான பங்களிப்புக்களையும் வளங்கியிருந்தார் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


ரொனி ஹிரேக் (சில குறிப்புகள்)  
1946 ஒக்ரோபர் மாதம் 06ஆம் நாள் தென்ஆபிரிக்காவின் ஹேப்மாகாணத்தில் க்யூன்ஸ்ரவுணில் பிறந்தவர். தனது கல்வியை தென்னாபிரிக்காவிலேயே தொடர்ந்த அவர், அதன் பின்னர் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணியில் தனக்கான இடத்தினை படித்துக்கொண்டார்.
1972 முதல்; 1977 வரையான ஐந்தாண்டு காலங்கள் அவரது சர்வதேச கிரிக்கட் காலகட்டங்களாக இருந்தது. ஒரு சகலதுறை ஆட்டக்காராக அவர் தனது பங்களிப்பினை இங்கிலாந்து அணிக்கு விளங்கியிருந்தார்.
வலது பக்க துடுப்பாட்டக்கரான இவர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 599 ஓட்டங்களை பெற்றதுடன், ஆகக்கூடியதாக 148 ஓட்டங்களை பெற்றதுடன், 141 விக்கட்களை தமது டெஸ்ட் வாழ்வில் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டு உலக கிண்ணப்போட்டிகளில் இவர் பங்களித்திருந்தார். அதன் பின்னதான 1976-1977 கால இங்கிலாந்து அணியின் இந்திய வருகை, டெஸ்ட்போட்டிகள் முக்கியமானவை என கூறப்படுகின்றது.
குறிப்பாக கல்கத்தாவில் நடந்த இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ஹிரேக்கின் ஆட்டத்தை அப்போதைய கல்கத்தா இரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என வர்ணிக்கப்படுகின்றது. அந்தப்போட்டியில் ஹிரேக் 103 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பதுடன் அப்போது இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த அவர் தனது தலைமைத்துவத்தையும் நிரூபித்திருந்தார்.

சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் ஹிரேக்கிற்கு இருந்து வந்துள்ளமையும், அதனால் அவர் சில அசௌகரியங்களை சந்திக்கவேண்டி இருந்ததாகவும் அறியமுடிகின்றது.
தனது ஓய்வின் பின்னர் வர்ணனையின் பக்கம் கவனம் செலுத்திய அவர் உலகின் தலைசிறந்த வர்ணனையாளனாக தன்னை நிரூபித்துக்கொண்டார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

2011 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாவின் விசேட தூதுவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவுஸ்ரேலியா சிட்னியில் மருத்துவம் பெற்றுவந்த அவர், இன்றைய தினத்தில் தனது இன்னுயிரை நீத்துள்ளமை கிரிக்கட் இரசிகர்களுக்கு அதிலும் குறிப்பாக இலங்கை அணி இரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான செய்திதான். 
அந்த ஆறடி ஆறங்குல ஆளுமைக்கு எமது இரங்கல்கள்.

Friday, December 28, 2012

அது.........கணம் தப்பித்துப்போகும் மாயங்களும், சில நொடி ஒரு நிகழ்தகவின் அடிப்படையில் போட்டுப்போகும் புதிர்களுக்குள்ளும் புரிதல்கள் சிக்கித்தவிக்கின்றமையே வாழ்க்கையோட்டமாக சென்றுகொண்டிருக்கின்றது போன்ற ஒரு பிரமை. 
அவன், அவள், அவர், அவர்கள், என்பவையே உயர்திணை என்பது கண்டிப்பாக முட்டாள் மனித மனத்தின் ஆரம்பநிலை பண்புகளாகவே இருக்கவேண்டும். 
இவை தாண்டி  அது புரியும் ஜாலங்களும், ஆச்சரியங்களும், பிரமாண்டங்களும் அதையும் தாண்டி ஏன் அவற்றின் விஸ்வரூபங்களும் அவன், அவள், அவர்களை தூசிலும் சிறியர் ஆக்கிவிடும்.

மனங்களில் ஏற்படும் அவன், அவள், அவர்களுக்குள்ளான முரண்பாட்டுச்சுழற்சிகளில், அது தன்பாட்டிற்கு ஏதோ செய்துகொண்டுதான் இருக்கின்றது. இவர்களின் முரண்பாட்டு உச்சத்தில் அது தன்னைப்பற்றி இவர்களை சிறிதுநேரம் சிந்திக்கத்தூண்டுவதும் உண்டு, அச்சமூட்டுவதும் உண்டு, மகிழ்வூட்டுவதும் உண்டு.
ஆனால் என்ன உயர்திணை எண்ணங்கள் அதை அகிறிணையாக்கி தமக்குத்தாங்களே மகுடம் சூட்டிக்கொண்டிருக்கின்றனர்.
'பிரமித்துப்போபவனே பாக்கியசாலி' என்ற மனநிலையில் ஆதியில் அவன், அவள் அவர், அவர்கள் இருந்தனர். 
இன்று 'பிரமாண்டங்களே எமைக்கண்டு பிரமிக்கவேண்டும்' என்ற எண்ணத்தில் அவர்தம், உயர்திணை வீரிய எச்சங்கள் கொக்கரிக்கின்றனர்.

பிரபஞ்சமையத்தின் திசை கெட்டு நிற்கும் ஏதோ ஒரு புள்ளியில் எங்களின் வாழ்விடம். மனித வெற்றுக்கண்ணிற்கும் புலப்படும் பிரபஞ்சவெளியின் தென்படும் அத்தனை வெள்ளொளிகளிலும் ஏதோ ஒரு ரகசியம் பொதிந்திருக்கத்தான் வேண்டும். இல்லை அத்தனையும் காட்சிப்பிழை என்ற ஒற்றைவரி வியாக்கியானங்களும் உயர்திணையாகிவிடுவதும் உண்டு.
'காரணங்கள் இன்றி எந்த காரியங்களும் இல்லை' என்பதை அது பல தடவைகளில் உயர்திணையாருக்கு உபதேசிப்பதும் உண்டு.

அவன், அவள், அவர், அவர்கள், ஒழுங்காக்கப்பட்டது! நாகரிகம் எனப்பட்டது.
அது ஓழுங்காகவே இருந்தது, ஒழுங்காகவே இருக்கின்றது, ஒழுங்காகவே இருக்கும் இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருந்ததில்லை. 
ஆனால் அதுவின் சிறு ஒழுங்கீனமே அவன், அவள், அவர், அவர்களை ஒழுங்கீனமான ஓலங்களாக்கிவிடமுடியும்.

அது பற்றிய அச்சம் குறித்த ஒரு ஒழுங்கீனத்தாலும், அதன் பின்னும் உயர்திணைக்கு வரும். அது வல்லது என்ற பேருண்மையும் ஆழ்மனதிற்கு அடிப்படையாகப்புரியும், இருந்தாலும் அவன், அவள், அவர், அவர்கள், உயர்ந்தவராகவே...

ஆனால் அந்த அது.....
பிரபஞ்சம், அகிலம், இயற்கை, நியதி, விதி, கடவுள்... எதுவானாலும்
அது அஃறிணையாகவே இருக்கட்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails