Wednesday, September 30, 2009

உயர்ந்த இடத்தில் உயர்ந்த நட்பு.


திறமைகள் இன்றி எவரும் உச்சத்திற்கு வரமுடியாது. அதிஸ்டங்களின்மூலம் எவரும் சிகரங்களை தொட்டதில்லை. அப்படி தொட்டுவிட்டாலும் அது நிலைத்து நின்றதில்லை. அந்த வகையில், உண்மையில் திறமைகள், அர்ப்பணிப்புக்களால் உயர்ந்தவர்களே நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும்.
மூன்று தலைமுறைகளை கடந்து இன்று பிறக்கும் குழந்தைகளையும் கவரவைக்கும், பாக்கியம் இந்த இரண்டுபேருக்குமே கிடைத்துள்ளது.
எப்படி இருந்தாலும், இந்த இரண்டுபேரின்மேலும் தொடர்ச்சியாக சேறுபூசும் நடவடிக்கைகளிலும், இவர்களை காரசாரமாக விமர்ச்சிக்கும் வகையிலும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் ஈடுபட்டே வருகின்றது.
இந்த விமர்சனங்களை படிக்கும்போதெல்லாம் எனக்கு மேல்எழும் கேள்வி, இந்த இருவரின் நிலையில் இந்த விமர்சனம் எழுதுபவர் போன்றோர் இருந்திருந்தால் தமிழ் திரையுலகம் என்ன பாடுபடும் என்பதே.
ஒரு துறையில் உச்சத்திற்கு வருவது என்பது மிக கஸ்டமான விடயம். அதேவேளை உச்சத்திற்கு வந்துவிட்டால் அதை தக்கவைத்துக்கொள்வது மிக மிக கஸ்டமானவிடயம். உச்சத்திற்கு வந்து அதை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்திருக்கின்றார்களே இது எவ்வளவு கஸ்டமான விடயம்?


கமல்ஹாசன் என்னைப்பொறுத்தவரையில் வார்த்தைகளால் விபரிக்கமுடியாத ஒரு அருமையான நடிகர். சூரியனின் பிரகாசம் எப்படி இருக்கும் என வார்த்தைகளால் சொல்லமுடியாது என்பதுபோல கமல்ஹாசனுடைய நுணுக்கமான நடிப்பினையும் எழுத்துக்களால் அடுக்கிவிடமுடியாது. உண்மையிலேயே கமராவுக்கு முன்னால் அன்றி வெளியில் நடிக்கத்தெரியாத அப்பாவியான ஒரு மனிதர் கமல்ஹாசன்.
தன் மனதில் உள்ளவற்றை தைரியமாக இரண்டு பேர்களே வெளியிடுவார்கள், ஒருவர் பைத்தியக்காரன் (நம்ம நண்பர் பதிவர் பைத்தியக்காரன் இல்லை, நிஜமான பைத்தியக்காரன்) மற்றவர் அனைவருக்கும் உண்மையாக, மனத்தைரியத்துடன், தன்னைமட்டும் முழுமையாக நம்பி எதையும் எதிர்கொள்ளத்துணிந்தவர்.
மதிப்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களையும், முதலாமவர்போல சிலர் விமர்சித்தும், இரண்டாமவர்போல பலர் ஏற்றுக்கொண்டும் உள்னர்.


ஒரு செவ்வியில் கமல்ஹாசன் கூறியிருந்தார், தேவர் மகன் திரைப்படம் எடுப்பதற்காக கதைவிவாதத்தில் கலந்துகொண்டிருந்தபோது, தனது தந்தை பாத்திரத்திற்கு நடிகர் திலகம் அவர்களை கேட்போம் என தான் கூறியபோது, இப்போ அவர் நீண்ட நாட்களாக நடிக்கவரவில்லை, அத்தோடு இப்போது அவரது மார்க்கட்டும் நல்லா இல்லை, வேறு யாரையாவது போடுவோமே என தனக்குக்கூறிய மேதாவிகளும் உள்ளனர். அந்தப்படத்தில் நடிகர்திலகம் நடித்தமையினால்த்தான் அது தேவர்மகன் ஆனது. இல்லை என்றால் அது வெறும் மகன்தான் என்று கூறியிருந்தார்.
அதேபோல கமலுக்கு என்ன தெரியும்??? என்று கேட்கும் மகா மேதாவிகளும் இப்போது அதிகம் கூடிவிட்டனர்.


கலைஞன் என்பவன் தான்மட்டும் முன்னேறாமல் சக கலைஞர்களையும் உயர்த்திச்செல்பவன் என்பதுக்கு தமிழில் நடிகர் கமல்ஹாசனைத்தவிர வேறு உதாரணங்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.
நம்மவர் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தைவிட நடிகர் கரனுடைய பாத்திரம் தன்னை தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு வந்திருந்தாலும், கரனுடைய சிறந்த நடிப்பினை பாராட்டி தான் அடங்கிநடித்திருந்தார், அதேபோல குருதிப்புனலிலும் மேலும் சில படங்களிலும் நடிகர் நாசரின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.
இறுதியாக உன்iனைப்போல் ஒருவனிலும், மோகன்லாலினுடைய பாத்திரம் கமல்ஹாசனைவிட உயர்ந்ததாகவே இருந்தது.
தன்னைமிஞ்சி ஒரு சக கலைஞன் இருந்துவிடக்கூடாது என்று இன்று பொறாமை கொண்டு அந்தக்காட்சியினையே கத்தரிக்க வைக்கும் பல கதாநாயகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் உண்மையிலேயே ஒரு கலைஞன்தான்.
எனக்கு இருக்கும் சந்தேகம் ஒன்றுதான் ஏன் கமல்ஹாசன் நடிகர் ரகுவரனுடன் இணைந்துநடிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை என்பதுதான். எப்போதாவது அதற்கான பதில் கமல்ஹாசனிடமிருந்துவரும் என காத்திருக்கின்றேன்.

சரி..மீண்டும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இரண்டுபேரிடமும் வருவோம். நான் பெரிதா நீ பெரிதா? என்னைவிட இவன் பெரிய ஆளா? இவனைப்பாராட்டுவதா? இவனை ஊக்கப்படுத்துவதா? என நடிகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என இருக்கும்போது எப்போதும் தமக்கு நேரடியான போட்டியாக இருக்கும் ஒருவருக்கொருவர் நட்பெனும் பாசத்தால் பிணைந்துகொண்டுள்ளது உண்மையானது, உண்மையான கலைஞர்களால் மட்டுமே அந்த பக்குவத்தை அடையமுடியும். (இந்த இருவர் தவிர நடிகர் சிவகுமாருக்கும் அந்த பக்குவம் உண்டு)
மனது பண்படுத்தப்பட்ட இருவரால்த்தான் அந்த நிலையில் அப்படி இருக்கமுடியும். உண்மையில் இந்த சிகரங்கள் இருவருமே மனங்களை மலரச்செய்தவர்கள், மனம் பண்பட்டவர்கள்.
தமிழ் நாடு இந்தியா என்று கடந்து ஆசியா, மற்றும் உலக நாடுகள் எல்லாம் அறியப்பட்ட முதலாவது இந்திய நடிகனாக இருந்தும்கூட தன்னைத்தாழ்த்தி தன் நண்பனான கமல்ஹாசனை உயரச்செய்யும் மலர்ந்த மனம், வெறும் புகழ்ச்சியாக அன்றி உண்மையாகவும் அதுவாகவே நடக்கவும் ஒரு ரஜினிகாந்தினால் மட்டுமே முடியும்.


அதேபோல என் நண்பன் ரஜினிகாந்த்தான் உண்மையான, எப்போதும் சுப்பர் ஸ்ரார் என வெளிப்படையாக பலர் மத்தியில் சொல்லும் பக்குவமும், அதேநண்பனை கட்டிஅணைக்கும்போது கண்கள் கலங்கி சொன்னவார்த்தைகளைவிட ஆளமான நட்பினை மௌனங்களால் வெளிப்படுத்தவும் ஒரே ஒரு கமல்ஹாசனினால் மட்மே முடியும். முக்கிமான இந்த இரண்டுபேருக்கும் இடையிலான புரிதல் இந்த நட்பின் அணிவேர். இருவரும் சந்திக்காமல் இருந்தாலும் ஏன், சொல்கின்றார்? எதற்காக செய்கின்றார்? என்ற புரிதல் இரண்டுபேரிடமும் இருந்தது. இருவருமே பந்தயத்தில் ஜெயிக்கவேண்டும் என்பதும் இருவரின் மனத்தில் நிலைத்தே இருந்தது.
போட்டிகள் இருந்தும் அவர்களிடம் பொறாமைகள் இருக்கவில்லை.
இதன்மூலமாகவே இருவராலும் இன்றுவரை முன்னணியில் ஓடமுடிகின்றது. நேற்றுவந்தவர்கள் என்ன நாளைவருபவர்களையும் முந்திக்கொண்டு ஓட அவர்களால் முடியும்.

Monday, September 28, 2009

சொட்டசொட்ட நனைந்து இதயங்களை பரிமாறிக்கொண்ட பதிவர்கள்…


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதனாலோ என்னமோ சென்னையில் குறிப்பிட்ட இடத்தை குறித்த நேரத்தில் அடையமுடிந்தது.
சென்னையில் மரினா பீச்சில் உள்ள காந்தி சிலையின் பினபுறம் பதிவர் சந்திப்பு ஒன்று நடப்பதாக அறிந்து, இந்த சந்திப்பு பற்றி கேள்விப்பட்டதும் நண்பர் கேபிள் சங்கரிடம் தொடர்புகொண்டு விடயங்களை ஏற்கனவே கேட்டிருந்தேன். சென்னைப்பதிவர்கள் ஒன்றுகூடல்தானே, ஈழப்பதிவாளனான நான் அங்கு செல்வது சரியா? என பல தயக்கங்கள் எனக்கு இருந்தது. அந்த தயக்கங்கள், இடப்பிரிவினைகள் இனியும் வேண்டாம், தமிழர், அதிலும் பதிவர் என்ற நிலையில் ஒன்றிணையலாம் என்பதை தன் குறுந்தகவலில் ஒரு வரியிலேயே தெளிவு படுத்தியிருந்தார் கேபிள் சங்கர்.


சரி, சென்னையில் பல்கலைக்கழக தேர்வுகள் இடம்பெற்றபொழுது, நான் சென்னை வந்தவேளையில்தான் இலங்கையில் கொழும்பு பதிவர் சந்திப்பு இடம்பெற்றது, எனவே அதில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே இந்த சந்திப்பிலாவது கலந்துகொள்ளவேண்டும், எழுத்துக்கள் மூலம் அறியப்பட்ட பல சக பதிவுத்தோழர்களை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வத்துடன் மெரினாவைநோக்கி சென்றுகொண்டிருந்தேன். (உந்து உருளியில்)
மெரினாவை நான் அடையும் முன்னதாகவே மழை வந்துவிட்டபோதிலும், மிகவேகமாக சென்றேன் நேரம் அப்போ 5.25 மழை சோ.. என்று கொட்டத்தொடங்கியவுடன் காந்தி சிலையடியில் நிறுத்தாமல் விவேகாந்தர் மியூசியத்தடியில் போய் மழைக்கு ஒதுங்கிவிட்டு. பின்னர் 5.35 மணியளவில் மழை சற்று ஓய..திரும்பவும் காந்தி சிலைக்கு அருகில் வந்தேன்.

அதற்கு முதல் இந்த மழையில் சந்திப்பு இடம்பெறுமா? அங்கேதான் நிற்கின்றீர்களா? என்பதை நண்பர் கேபிள் சங்கருடன் தொடர்புகொண்டு அறிந்துகொண்டேன். “ஜனா கெதியாக வாருங்கள், நாங்கள் 20 பேருக்குமேல அங்கேயேதான் நிற்கின்றோம் என்றார் அவர்.
ம்ம்ம்…காந்தி சிலையின் பின்புறம் நிறையப்பேர் நின்றிருந்தார்கள். நான் எதுவுமே பேசாமல் இது இவங்கதானோ??? என்ற சந்தேகத்துடன் கேபிள் சங்கரை தேடினேன், நண்பர் நடுவில நின்று படு சீரியசாக பல சக பதிவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.
ஆஹா…இதுதான் நம் நண்பர்கள் என அறிந்துகொண்டு சலனமே இல்லாமல் அந்தக்கூட்டத்தாருடன் கூட்டமாக நின்றிருந்தேன்.
நானும் போய் நிற்க பதிவர் முரளிக்கண்ணன் பேசத்தொடங்கினார், பதிவர்கள் நிலாரசிகன், மற்றும் அடலேறு ஆகியோர் என்னருகில் நின்றுகொண்டிருந்தனர்.

பின்னர் பதிவர்கள் அறிமுகம் ஒருவர் பின் ஒருவராக செய்துகொண்டனர், அதன்பின்னர் பல விடங்கள் பற்றி பேச்சைதொடங்க திரும்ப மழை சோ…என்று கொட்டத்தொடங்கியது. ஆரம்பபத்தில் நனைந்தாலும் பரவாய் இல்லை, அப்படியே பேசலாம் என்றபோதும், மழை விடுவதாக இல்லை, எனவே அருகில் இருந்த மரத்தின் கீழ், ஒருவரோடு ஒருவர் ஒட்டிநின்று பேசினோம். அந்த நெருக்கம் பதிவர்களை இன்னும் நெருக்கமாக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.


நிலா ரசிகன், எவனோ ஒருவன், அடலேறு, ஊர்சுற்றி ஆகியோர் என்னுடன் நெருங்கிப்பேசினார்கள். இதில் ஊர்சுற்றி இலங்கைப்பதிவர்களை நன்கு அறிந்திருந்தமை என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது.
எமது பேச்சுக்கள், கலை, இலக்கியம், எழுத்துக்கள், என்று அரசியல் பக்கமும் வந்தது. பதிவர் அடலேறுவின் ஈழத்தமிழர்களின் பால் உள்ள உணர்வு என்னை தழுவிக்கொள்ளச்செய்தது. கொஞ்சப்பேச்சுக்களிலேயே முன்னைய நாட்களில் நான் நடத்திய இணையம் பற்றியும், அதில் என் ஆக்கங்கள்; பற்றியும் அடலேறு பேசினார், எனக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. அந்த இணையத்தின் கட்டுரைகளை தாம் பிரிண்ட் ஒவுட் எடுத்து முக்கிமானவர்களுக்கு கொடுத்ததாக சொன்னது, எனக்கிருந்த ஒரு விரக்தி மனப்பான்மையினை அந்த நிமிடத்தில் கலைந்தது.
ஏன் என்றால் குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தினை நாம் நண்பர்கள் நால்வர் இணைந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பல்வேறு இடர்பாடுகள், கஸ்டங்கள், எமக்கான வேலைப்பழுக்களுக்கு இடையில், இரண்டரை அண்டுகளாக நடத்தினோம்.
பின்னர் அது கைவிடப்பட்டது. அந்த கஸ்டங்களுக்கு எந்தப்பயனும் இல்லையே என அந்த நான்குபேரும் இப்பொதும் தொலைபேசியில் உரையாடும்போது ஆதங்கப்பட்டுகொள்வோம்.
அது வீண்போகவில்லை என்பது எனக்கு அடலேறுமூலம் தெரிந்தது.

மேலும் என்னுடன் பேசிய சென்னைப்பதிவர்கள் சிலர், லோஷன், வாத்தியத்தேவன், யோவொயிஸ், அசோக்பரன், தங்கமுகந்தன், டயானா, மருதமூரான் அகியோர் பற்றியும் கேட்டனர்.
முக்கியமாக இலங்கைப்பதிவர் சந்திப்பு பற்றி தாம் ஆர்வமாக வாசித்ததாகவும், ஒளி-ஒலியினைக்கூட பார்த்து, கேட்டதாகவும் தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு உங்கள் சார்பில் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன் நண்பர்களே.


கேபிள் சங்கரைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், எனக்கும் கேபிள் சங்கரின் அறிமுகம் பதிவர்கள் என்ற முறையில் வந்ததல்ல, குறும்பட இயக்குனர்கள்; என்றவிதத்தில் உருவானது. எக்மோரில் நடந்த நிகழ்வு ஒன்றில் சங்கருடைய விபத்து (அக்ஸிடன்ட்) என்ற குறும்படம் அரங்கேற்றப்பட்டபோது அவரை முதன்முதலில் சந்தித்தேன்.
உண்மையில் அவர் சிறந்த குறும்பட இயக்கனரும்கூட.
அடுத்து நம்ம நண்பர் அதிஷா, எழுத்துக்களைப்போலவே மிக மிக கலகலப்பான ஒருவர். ஓல்லியான அவரது தேகத்தினாலோ என்னவோ, எனது உடல்வாகுவை பாராட்டினார். ஜிம் அதிகம் தூக்கிறிங்களோ??? என்று கேட்டுச்சிரித்தார்.
அடுத்து பதிவர் முரளி கண்ணன் எம்மை அழைத்து தேனீர் விருந்துபசாரம் செய்தார். அங்கிருந்தும் பதிவுகள் பற்றியும், எழுத்துக்கள் பற்றியும், பல எழுத்தாளர்கள் பற்றியும் பேசிவிட்டு, பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றோம்.
உண்மையில் கொட்டும் மழையில் பல பதிர்வர்களுடன் இதயங்களை பரிமாறிக்கொண்ட ஒரு நாளாகவே நான் அதை கருதகின்றேன்.

காலச்சக்கரம் -இறுதிப்பாகம்.


என்ன சத்தம் இது என்று ஊகிப்பதற்கு முன்னதாகவே பெருமளவிலான குதிரைகளில் பறங்கியர் கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும், சுட்டுக்கொன்றும், வெட்டிக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர், என்ன செய்வது என அறியாமலே பவுணன், தையல்முத்து, வெள்ளையன் ஆகியோர் கதிகலங்கிப்போய் நின்ற பொழுதுகளில் பறங்கியர்படை, அங்காடிக்குள் நுளைந்த அந்த நிமிடமே அங்காடிக்காவலாளியின் தலை வாசலில் உருண்டது. அசையவே முடியாத நினையில் மரணம் எவ்வாறு நெருங்குகின்றது என்பதை உணர்ந்த பவுணன், ஒருதடவை தையல்முத்துவையும், வெள்ளையனையும் பார்த்துக்கொண்டான். வெள்ளையன் அந்தப்பொழுதுகளில் என்ன நினைத்தானோ தெரியவில்லை, மாட்டுவண்டியின் அச்சாணியை இழுத்து நெருங்கும் ஒரு பறங்கிய குதிரைவீரனை நோக்கி ஓடி அவன் மார்பில், ஆழமாக அச்சாணினை திணித்துவிடுகின்றான். இரத்தம் கசிய அந்தப்பறங்கியன் குதிரையில் இருந்து வீழ்கின்றான், அந்த நிமிடமே பின்னால் நின்ற ஒரு பறங்கியனின் துப்பாக்கி வெடித்து வெள்ளையனின் கழுத்தை பதம் பார்க்கின்றது. மற்ற பறங்கியன் சுட்டது அவன் மார்பில் பாய வெள்ளையன் சரிகின்றனான்.


வெள்ளையன் காட்டிய தைரியமோ என்னமோ தையல்முத்தை நெருங்கிய பறங்கியன்மீது ஒரு பண்டமுடிச்சை தூக்கி எறிந்துவிட்டு அவன் சாய ஓடிச்சென்று அவன் கையில் இருந்த வாளைப்பறித்து அவனை வெட்ட பவுணன் முற்படும்போது, தையல்முத்தின் அலறல் கேட்கின்றது. பறங்கியனின் வாளைப்பறித்து அவன் தலையினை உடலில் இருந்து விடுவித்துவிட்டு திரும்புகின்றான் பவுணன், தையல்முத்தின் முகமே தெரியாதபடி முகம்முழுவதும் குங்குமம்போல இரத்தம் கசிந்துகிடக்க, பண்டமுடிச்சு ஒன்றுடன் சரிந்து இறுதி மூச்சினை இழுத்துவிட்டாள் அவள். அவளிடம் ஓடிவரும்போது, பாரிய சத்தத்துடன் தனது பின்தலையில் ஏதோ பாய்ந்ததுபோல உணர்கின்றான் அவன், ஓடமுடியாமல் அவனது கால்கள் சோர்வடைகின்றன, அவனது தோழில் அவனது சொந்த இரத்தம் விழுந்துகொண்டிருந்தது. அப்படியே குப்புறவிழுந்து ஏற்கனவே உயிரை விட்டுவிட்டு கிடந்த வெள்ளையனையும், அப்போதூன் இவன் திசைநோக்கி பாhத்தபடியே உயிரை விட்டுவிட்ட அவன் உயிர்மனையாள் தையல்முத்தையும் பார்த்துக்கொண்டான். இந்த நேரத்தில் மூச்சு எடுப்பது அவனுக்கு சிரமமாகின்றது, மெல்ல மெல்ல காட்சிகள் இருண்டு, முழுவதுமே இருட்டிவிட்டது.


அனைவரும் ஓடிவந்து நுளைந்து சில விநாடிகள் தான் இருக்கும், ஏதோ கனவில் நடப்பதுபோலவும், திடீரென ஒவ்வொரு அசைவுகளும் மெதுவாக நிகழ்வதுபோலவும் அவனுக்கு தோன்றியது. பேரிடிபோல தொடர்ச்சியாக பல முழக்கங்கள், வெளியில் இருந்து அவன் கண்ணுக்கு தெரிந்தது பாரிய தூசி மண்டலம். காதுகளில் அவலக்குரல்கள், ஒருமித்த மணத்திற்கெதிரான குரலாகவும், மரணபய குரலாகவும் அவனுக்கு கேட்கின்றது. என்னப்பா இது என்று துஸ்யந்தி நடுங்கியபடி சொன்னது காதில் கேட்டது. பக்கத்தில் பாணைத்தூக்கியபடியே, உச்சக்கட்ட பீதியில் காண்டீபன் எச்சிலை உமிழ்ந்ததும் அவனுக்கு தெரிந்தது.
இத்தனையும் நடந்து அடுத்த செக்கன், தேவாலயமே மாறிப்போயிருந்து. “வருந்திப்பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன்” என்ற வாக்கியமே பொய்யாகிப்போனது.

கர்ணகொடூரம் என்பதன், அவலம் என்றால் என்ன என்பதன், முழு அர்த்தம் இறக்கும் தறுவாயில் காண்டீபனால் உணரப்பட்டது. ஏதா ஒரு உந்துவிசையில் சரியும்போது அவனின் கண்ணுக்கு முதலில் பட்டது, அந்த பாண் பெட்டிதான் பாண்களின்மேல் இரத்தங்களும், மனித தசைப்பிசிறுகளும் கிடந்தன. மல்லாக்காக சரிந்துகொண்டிருக்கின்றான் பிரசாந்தன், காண்டீபனின் நெஞ்சும், தலையும் மேலே தூணில் தொங்கிக்கொண்டிருந்ததை காண்கன்றான். அப்படியே தரையில் அவன் உடல் படுகின்றது. துஸ்யந்தியின் உடையை வைத்து இது துஸ்யந்தி என்பதை உணர்கின்றான். இந்த காட்சியுடன், தையல்முத்தும், வெள்ளையனும் இறந்துகிடக்கும்போது தனக்கு அறிவு இழக்கும் நிலை தோன்றியதும், சமகால நிகழ்வும் அந்தப்பொழுதுகளில் நினைவுக்கு வருகின்றது. ஒரு கணம் மரணம் அடையும், மரணம் அடைந்துகொண்டிருக்கும்போதும் பயம் கொள்கின்றான். காட்சிகள் மறைகின்றது கண்ணில் இருந்து, அவலக்குரல்கள் தொடர்ந்து கேட்கின்றன. மெல்லமெல்லமாக அவையும் தூரத்திலே கேட்பதுபோல தோன்றுகின்றது, அதன்பின் ஒரு போதும் கேட்டிராத நிரந்தமான மொளனத்தின் ஒலி மட்டும் கேட்கின்றது.

(சரி…இந்த இறுதிப்பகுதி கொடூரமானதாக இருக்கின்றது என எண்ணுவீர்கள், அனால் சில கொடூரங்களை எழுத்துக்களால் சிறிதளவே கொண்டுவரமுடியும். இதில்; பாத்தரங்களே புனைகதை அதவிர இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை. ஈழத்தில் 1505ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட தமிழனது சுதந்திரம் இன்று ஐந்து நூற்றாண்டுகள் கழிந்தும் கிடைக்காமல், அவலத்தின்மேல் அவலங்களை மட்டுமே உலகம் அவனுக்கு பரிசாக கொடுத்துக்கொண்டிருக்கின்றது.
இந்த கதையின் தொடர்ச்சியாக மூன்றாவது சம்பவத்தை அதாவது 2505ஆம் ஆண்டு நடக்கும் இறுதி சம்பவத்தை நான் எழுதப்போவதில்லை. அதை எழுதி முடிக்கப்போவர்கள், என் நண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக நண்பர்களான நிங்களே…) பின்னூட்டல் மூலமாகவே அந்த பகுதியினையும் முற்றுப்பெற வையுங்கள்….
நன்றி

Saturday, September 26, 2009

காலச்சக்கரம். 04


ஹாய்…மாதவ்.. “எனி இம்புறூமென்ட்ஸ்”? என்று கேட்டாவாறே வந்தாள் ஷமி. நான் உனது செய்தி வரும் வரும் என எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன் என்றாள் அவள். உதட்டை பிதுக்கி காட்டினான் மாதவ். அப்பறம் என்ன செய்ய உள்ளாய்? இது எவ்வளவு பெரிய அதுவும் முக்கியமான வியடம் தெரியுமா? என்றாள் அவள். நீ போனவுடன் நான் சௌரத்துடன் தொடர்பு கொண்டேன் நாளை வருவதாக சொன்னான். பார்ப்போம் அவன் வரும்வரை ஏதாவது செய்து பார்க்க முற்படுகின்றேன். என்றான் மாதவ்.

சௌரத்தை பற்றிப்பேசும்போதுதான் அவனுக்கு சௌரத் இறுதியாகச்சொன்ன வசனம் நினைவு வந்தது. ஜெஸ்…அவர்கள் சிலவேளைகளில் எமது உரையாடலைக்கூட கேட்கலாம்….உடனடியாக அவன் மூளையில் உந்தவே சுய மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நெட்வேர்க் செயற்பாட்டை புதிதாக உருவாக்கி தனது வலையமைப்பில் புகுத்த அவன் முடிவெடுத்து அதில் மூழ்க ஆரம்பித்தான். நேரங்கள் பறந்துகொண்டிருந்தன. இடைக்கிடை ஷமியும் பல வழிகளில் அவனுக்கு ஒத்துளைப்பு வழங்கிக்கொண்டிருந்தாள். அதிகாலை இரண்டுமணி ஷமி தூங்கப்போய்விட்டாள்…

மாதவ் உலகத்தையே மறந்து தனது செயற்பாட்டில் மட்டும் முழுக்கவனத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவனது கடிகார சிக்னல் ஒலித்தது.
ஹாய்…மாதவ்…நான் சௌரத் உன் வீட்டின் முன்னால்த்தான் நிற்கின்றேன். உனது பாதுகாப்பு லேசர் கதிரை நிறுத்து நான் உள்ளே வருகின்றேன் என்றான். உள்ளே வந்து மாதவ்விடம் இருந்து சகலத்தையும் அறிகின்றான். உனது தூரகோள் தொடர்பாடல் தரவில் எப்படி அந்த சிக்னல் பதியாமல்ப்போயிருக்கும்? அப்படி என்றால் அந்த கோளில் உள்ளவர்களின் தொழிநுட்பம் எம்மைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். இதுதான் எனக்கு தோன்றுகின்றது. அப்படி மட்டும் இருந்துவிட்டால் உடனடியாக தொடர்புகளை அவர்களுடன் மேற்கொண்டு அவர்களால் எங்கள் பூமிக்கு ஆபத்து எற்படாமல் பார்ப்பது எங்களின் முதல்க்கடமை என்றான் அவன்.

ஜெஸ்…சௌரத் நான் எதை நினைத்தேனோ அதையே நீ சொல்லுகின்றாய்..என்றான் மாதவ். இருவரும் மாறிமாறி அந்த அக்ரோ வெளியில் அந்தக்கோளுடன் செய்திகளையும் சமிக்கைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். திடீர் என அந்தக்கோள் அவர்களது சுவர்த்திரையில் பிரசாகமாகின்றது…உள்ளே வந்த ஷமியும் ஆச்சரியத்தில் வாயைப்பிழந்தபடியே உட்காருகின்றாள். ரட்ஸி…ரட்ஸி.. என பிசிறலான ஒரு ஒலிச்சமிக்கை அந்தக்கோளில் இருந்து கிடைக்கின்றது. பிரமித்துப்போனபடியே…திரும்பி மாதவ்வைப் பார்க்கின்றான் சௌரவ்…


இராஜவிதியால் வண்டியைத்திருப்பி, பிரதான பாதையால் மேற்கு நோக்கி மாட்டு வண்டியை திருப்பினான் பவுணன். மாலை நேரம் கூடு திரும்பும், குருவிகளின் ரீங்காரங்களையும், இருபக்க மரங்கள், மற்றும் கண்ணில் தென்படும் பனங்கூடல்களுக்கு நடுவில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய பழம்போல மறைந்துகொண்டிருந்த சூரியனையும்பார்த்து மகிழ்ச்சியில் முகமலர்ந்தாள்; தையல்முத்து.
தூரத்தில் பல வண்டில்கள் செல்வதை சுட்டிக்காட்டியபடியே இன்று அங்காடி கழைகட்டும்போலதான் இருக்கு அம்மான் என சொன்னான் வெள்ளையன்.
“அப்படித்தான் நினைக்கின்றேன், இன்றைய அங்காடியில் மாமந்திரி அவர்கள் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் பற்றியும், அரசரின் வணிகர்களுக்கான செய்தினையும் தெரிவிக்கவுள்ளதாக நானும் கதை அறிந்தேன் என்றான் பவுணன்.

ஒருவாறு திருநெல்வேலி இரவு அங்காடியினை வந்தடைந்தார்கள் மூவரும், பவுணனைக்கண்டதும், மேல்த்திசை வடபுறத்தே மடைவிரி பவுணன்! என்றார் அங்காடிக்காவலர். குறிப்பிட்ட இடத்திற்கு அருகில் வண்டிலை நிறுத்திவிட்டு இறங்கினர் மூவரும், தையல்முத்தும், வெள்ளையனும் வண்டியில் இருந்து பொருட்களை இறக்கி அந்த இடத்தில் அடுக்க, வண்டியில் இருந்து இரண்டு மாடுகளையும் விடுவித்து, அருகில் இருந்த தென்னையில் கட்டினான் பவுணன்.
காதுக்கெட்டும் தூரத்தில் இதுவரை அவர்கள் கேட்டிராத வெடிச்சத்தங்களும், குதிரைகளின் குழம்பொலிகளும், மக்களின் அவலக்குரல்களும் ஒலித்துக்கொண்டு, இருந்தன.. அந்தச்சத்தங்கள் தற்போது அவர்கள் பக்கத்தில் வந்துகொண்டிருப்பதுபோல இருந்தன..


பெட்டியின் பாரம் தாங்காமல் மோட்டச்சயிக்கிளின் பின்பக்கம் இருந்து சரியப்போன காண்டீபனை பார்த்த துஸ்யந்தி, என்ன காண்டீபன் அண்ணை! என்று கூறியவாறே ஓடிச்சென்று அந்தப்பாண் பெட்டியை விழாத படி பிடித்துக்கொண்டாள். இங்க சும்மா வரமனமில்லை அதனாலதான் நானும் பிரசாந்தனும் முத்தண்ணையின்ட பேக்கரியில் பாணும் கொஞ்சம் பணிசும் கட்டி வந்தோம் என்றவாறு மோட்டார் சைக்களில் இருந்து பாண்பெட்டியை துஸ்யந்தியின் உதவியுடன் தூக்கி கிழே வைத்தான் காண்டீபன்.
ஒமோம்…அதுவும் சரிதான் அதுதான் நானும், பெரிய மச்சாளுடன் கணக்கெடுக்க வரேக்கயே, பெரிய வாளியில தேத்தண்ணி ஊத்திவந்து கொடுக்கலாம் என்று வந்தோம், ஆனால் அது இங்க காணாது, அதுதான் இருந்ததை முதல்ல சின்னனுகளுக்கு கொடுத்தனாங்கள், சனங்கள் இன்னும் வந்துகொண்டுதான் இருக்குதுகள். பாவங்கள் கனக்க சனங்கள் காயப்பட்டுதுகளாம் என்றாள் துஸ்யந்தி.

சரி…இப்ப கொண்டுவந்த பாணையும் பணிசையும் நீ சொன்னதுபோல முதல்ல சின்னனுகளுக்கு கொடுப்பம் பிறகு பெரியாக்களுக்கு ஏதும் செய்யலாம்தானே என்றான் பிரசாந்தன். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டியையும் தூக்கிக்கொண்டு அவர்கள் சேர்ச்சின் உள்ளே சென்று. பெட்டியை பிரித்தனர். நல்ல காலத்திற்கு விபரம் அறிந்து முத்தண்ணை பாண்களை கால் றாத்தலாக நாலுதுண்டுகளாக பிரிக்கக்கூடியதாகவே வெட்டி அடுக்கியிருந்தது நல்லதாய்ப்போச்சு என நினைத்துகொண்டு, அங்கிருந்த சிறுவர்களுக்கு பாண் பணிசுகளை கொடுக்கத்தொடங்கினர் மூன்றுபேரும். கொஞ்ச நேரத்தில், வெளியில் இருந்த பலர் தலைதெறிக்க தேவாலயத்திற்கள் ஓடிவருவதைக்கண்டு திடுக்கிட்டான் பிரசாந்தன். அவர்களின் ஓட்டத்தை தொடர்ந்து சிறி லங்கா விமானப்படையினரின் தாக்குதல் விமானமான புக்காரா கீழே பதியும் ஓசை மிக மிக அருகில் கேட்டுக்கொண்டிருந்தது.
தொடரும்....

Friday, September 25, 2009

காலச்சக்கரம். 03


கை காலை அலம்பிவிட்டு வாருங்கள்… களி சமைத்துவைத்திருக்கின்றேன் என்றவாறே கொல்லைப்புறம் இருந்த சிறுகுடிலுக்குள் வாழைக்குலையை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள் அவள்.
அவன் கை கால் நினைக்க அவளும் வந்து முகம் நனைத்துவிட்டு அவனுக்கு களி படைத்துவிட்டு…மெல்ல கதையை ஆரம்பித்தாள்..
என்னங்க…பறங்கியன் எங்களை அடிமைப்படுத்த எண்ணியுள்ளானாம்…மாதோட்டை, தொண்டை எல்லாம் அவர்கள் ஆளுமைதானாமே? சைவர் கோவில் எல்லாம் இடித்து பறங்கிமதக் கடவுளரைத்தான் இனித் தொழுக என்று அணைபிறப்பித்தனராம்.
எம்மன்னன் சங்கிலி.. ஒரு படையுடன் சென்று மாதோட்டையில் பறங்கியர், பறங்கி குருமார் பலரை தலையறுத்து வந்ததாக குந்தவை சொன்னாள் என்றாள். குந்தவையின் கணவனும் ஒரு படைவீரன் என்பது பவுணனுக்குத்தெரியும்.
பறவாய் இல்லை…எனக்கும் வெள்ளைக்கும் தெரியாத பல தகவல்கள் இவளுக்கு கிடைத்துள்ளதே என எண்ணியவாறே…பாவுணன் சொன்னான்
ஓம்…தையல்...அதுதான் நிலைமை. பறங்கியர் எந்த நேரமும் போர் தொடுக்கலாம்…மாமந்திரியும் நேற்று நல்லையில் வணிகர் மத்தியில் தகவல் சொன்னதாக வெள்ளை சொன்னான். அவர்கள் ஏதோ பெரும் இடியோசை போடும் ஆயுதங்கள் எல்லாம் கைவசம் வைத்துள்ளனராம்.. ஒன்று நுர்றுபேரைக் கொல்லும் வல்லமை கொண்டது என்று மக்கள் பேசுகின்றனர். அதுதான் எனக்கும் பயமாக உள்ளது என்றான்.

அவன் உண்டபின் அவளும் தானும் சிறிது உண்டுவிட்டு, தொழுவத்தில் நின்ற ஆடு, மாடுகளுக்கு இலை,குழைகள் பறித்துப்போட்டுவிட்டு இருவரும் சிறிது இளைப்பாறினர்.
பின்னர் சரி பிள்ளை….. நீ உலையை வை…நான் வயல்வரை போய் களைகள் பிடிங்கிவிட்டு வாறேன்…மாலை திருநெல்வேலியில் அங்காடியாம் வண்டிகட்டி போய்விட்டுவருவோம். வெள்ளையும் வருவதாக சொல்லி இருக்கின்றான் என்று தலையில் துணியை சுற்றிக்கொண்டு வயலுக்கு புறப்பட்டான் பவுணன்.


நெல் பிஞ்சுபிடித்து தலைகுனிந்த பெண்போல் இருந்த நெற்பயிர்களைக்கண்டு பேரானந்தம் கொண்டான் பவுணன். சின்னக்குழந்தையை அள்ளி அணைப்பதுபோல சில நெற்கதிர்களை கண்மூடியபடியே…அணைத்துக்கொண்டான்…
தான் சிறுவனாய்…வாழை மடலை இருபக்கம் சீவி…ஆட்டி ஆட்டி பட பட என்று சத்தம் கேட்க இதேவயலில் ஓடித்திரிந்ததும், அவன் ஐயனும், சின்னையன்மார்களும் வயலில் வேலை செய்த காலங்கள் அவன் மனதில் சிறிதுநேரம் வந்துவிட்டுப்போனது.
வயலில் இறங்கி நெல்லுடன் பிடுங்கப்பிடுங்க முளைத்துவரும் களைகளை பிடுங்கி வெளியில் ஒரு இடத்தில் குவித்துக்கட்டி… உடைப்பெடுத்த பாத்திகளை சரிக்கட்டிவிட்டு சிறிதுநேரம் வயல்கரையோரம் நின்ற பூவரசம் மரத்தின்கீழ் இளைப்பாறிவிட்டு. மீண்டும் களைகளை தூக்கி தான் கொண்டுவந்த வாழைநாரினால் இறுக்கக்கட்டி தோளில்ப்போட்டுக்கொண்டு வீடுநோக்கி நடக்கத்தொடங்கினான் பவுணன்.

அவன் வீதியால் நடந்துவர உச்சி வெயில் நெற்றிக்கு நேரே நின்றது. மணல் வீதியல் மண் கால்களைச்சுட்டது. வேகநடை நடந்தே வீடுவந்துசேர்ந்தான் பவுணன்.
பிடுங்கிவந்த களைகளை களைந்து ஆடுமாடுகளுக்கு போட்டுவிட்டு, வீட்டின் பின்னால் இருந்த பொதுக்கிணற்றடிக்குச்சென்று நன்றாக குளித்துவிட்டு வந்து வீட்டுத்திண்ணையில் உக்கார்ந்துகொண்டான்.
பின்னர் தையல்முத்துவுடன் மதிய உணவு அருந்திவிட்டு முற்றத்து வேப்பமரத்தின் கீழே பனையோலைப்பாயைப் போட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்க அயத்தமானான்.
தையல்முத்து சிறுபாத்திகட்டி நனையப்போட்டிருந்த தென்னை ஓலைகளை கிடுகுகள் ஆக்குவதற்காக வெளியில் இழுத்து பின்னிக்கொண்டிருந்தாள்.

“ஐயா…ஐயா…” என தையல்முத்து எழுப்பவும் திடுக்கிட்டெழுந்தான் பவுணன். என்ன பகலிலேயே அப்படி ஒரு அள்ந்த உறக்கம்? பாருங்கள் மாலை சாயப்போகின்றது. அங்காடிக்குப்போகவேண்டும் என்று சொன்னீர்களே?? இந்தாருங்கள் இதைக்குடித்துவிட்டு ஆயத்தமாகுங்கள் என சொல்லி பசும்பாலை பனம்வெல்லத்துடன் கலந்து அவனுக்கு கொடுத்தாள் தையல்முத்து. எழுந்திருந்து குடித்துவிட்டு.
சரி தையல் நான் வண்டியைக்கட்டி ஆயத்தமாகின்றேன். நீயும் தயாராகு என்று விட்டு வந்து. தனது இரண்டு நாம்பன் மாடுகளையும் வண்டியில்ப்பூட்டி விட்டு. பனைமரத்தில் நாண்கயிற்றைக்கட்டிவிட்டு. கை கால் அலம்பி துடைத்து. வேட்டியுடன் உடலைமூடிச் சால்வையும் அணிந்துகொண்டு.
நெற்துணிமுடிச்சக்களை வண்டியில் எற்றிவிட்டு தையல்முத்தையும் எற்றிக்கொண்டு வெள்ளையின் இல்லப்பக்கம் வண்டியை திருப்பினால் பவுணன். அந்த வேளைகளில் அந்த ஊரிலேயே அவனிடம் மட்டுமே மாட்டுவண்டி இருந்து. அவன் எப்போது வண்டிகட்டிப் புறப்பட்டாலும் மாட்டுவண்டியைப் பிடித்துக்கொண்டு அம்மணமாக சில சிறுவர்கள் அதன்பின்னால் சிலதூரம் ஓடிவருவது வாடிக்கை.
வெள்ளையின் வீட்டின் முன்னால் வண்டில் நிற்க…வெள்ளையும் கையைக்காட்டிவிட்டு வந்து அவனது ஒடியல் முடிச்சை வண்டியில் போட்டவிட்டு தானும் ஏறிக்கொண்டான்.
அங்காடி நோக்கிய அவர்கள் பயணம் தொடங்கியது.


அன்றைய நாள் வேலைகளாக முக்கியமாக பலபேரின் சம்பள நிலுவைகளுக்கு செக் எழுதவேண்டி இருந்தது. வந்தவுடன் அந்த வேலைகளில் படபட வென ஈடுபட்டான் பிரசாந்தன்.
அந்தப்பக்கம் ஏதாவது கதை சொல்லவேண்டும் என்ற ஆவலுடன் வந்த ஓ.ஏ.கூட அவன் வேலை செய்யும் பிஸியைப்பார்த்து ஒன்றும் பேசாமல் தனது இருக்கைப்பக்கம் போய்விட்டார்.
ஒருவாறு ஒரே மூச்சாக பக்கத்தில் என்ன நிகழ்கின்றது என்பதுகூடத்தெரியாமல் செக் போடவேண்டிய பலரில் பாதிப்பேரின் செக்களை எழுதிமுடித்துவிட்டான் அவன்…
பிரசாந்தன்…பிரசாந்தன்…என்ற ஓ.ஏயின் அழைப்பு அவனை அவரை நோக்கிப்பார்க்க வைத்தது. என்ன இப்ப என்று அதட்டுவதுபோல இருந்தது அவனது பார்வை “பன்ரெண்டே முக்காலகப்போகுது தம்பி. நாங்கள் சாப்ட்டுவிட்டு வரப்போறம். நீ வந்தநேரத்தில் இருந்து படு பிஸியாக இருக்கின்றாய்…கவனம் பக்கத்தில ஷெல் விழுந்தாலும் உனக்கு இப்ப கேக்காதுபோல” என இழித்துவிட்டு. நீயும் கொண்டுவந்த சாப்பாட்டை எடுத்தச்சாப்பிடு என்றுவிட்டுச்சென்றார் ஓ.ஏ.

கைகளை உதறி….முகத்தை கைகளால் அழுத்தி வருடிக்கொண்டே எழுந்து போய் கைகளுவிட்டு வந்து, சாப்பாட்டு பெட்டியைத்திறந்து சாப்பிடத்தொடங்கினான் அவன். சும்மா சொல்லக்கூடாது துஸ்யந்தியின் கைப்பக்குவம் தனிதான் என்று மனதுக்குள்ளேயே தன் மனைவியை மெச்சினான் பிரசாந்தன்.
ருசியின் சுவையோ…அல்லது பசியின் கிண்டலோ…மழமழவென்று சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவிவிட்டு. கச்சேரிக்கு வெளியில் வந்து பழையபூங்காவுக்கு எதிரில் இருந்த தற்காலிக எரிபொருள் கடையில் ராக்கிகளில் போத்தல்கள் அடுக்கப்பட்டிருந்த விதத்தைப்பார்த்தபடியே..3 அவுண்ஸ் பெற்றோலை கேட்டு தனது சூப்பிப்போத்தலை நீட்டினான். கடைக்காரர் அதை மிகக்கவனமாக வாங்கி 3 அவுண்ஸ் நிறப்பி விட்டு 300 ரூபா வாங்கிக்கொண்டார்.

மீண்டும் பணிமனை வந்து விட்ட இடத்தில் இருந்து மிகுதிப்பாதிப்பேரின் செக்களை எழுத அரம்பித்தான் பிரசாந்தன். இடையில் அலுப்புத்தட்ட ஆரம்பித்ததுதான் என்றாலும் இன்று எப்படியாவது இதை முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியத்துடன் எழதிக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு பத்துபேரின் செக்கள் எழுதி முடிக்க இருந்த நேரத்தில் 4.30 மணியாகி அனைவரும் வீடுசெல்ல பறப்பட்டனர். அவசரமாக ஒரு 05 நிமிடத்திற்குள் அவற்றையும் முடிதது பியோனை அழைத்து ஏ.ஜி.ஏயிடம் கொடுக்கும்படி தெரிவித்துவிட்டு வாகம் நிறுத்தும் இடத்திற்கு வந்து 3அவுன்ஸ் நிறப்பட்ட சூப்பிப்போத்தலில் இரண்டு துளிகளை குளாயில் விட்டுவிட்டு கிக்கரை அடித்தான் பிரசாந்தன். அட புதுப்பெற்றோல் கனக்க இருக்கு என்ற தைரியத்திலோ என்னமோ ஸ்ராட் பண்ணவில்லை மோட்டார்சைக்கிள். மீண்டும் ஒரு துளி விட்டுவிட்டு உதைந்தான். ம்ம்கூம்…முரண்டு பிடித்தது அது.
ஓ….ஊதமறந்தவிட்டனே…தம் கட்டி ஒரு ஊது ஊதிவிட்டு கிக்கரை அடித்தான்..முழு மண்ணெண்ணை புகையையும் கக்கிக்கொண்டு ஸ்ரார்ட் பண்ணியது வாகனம்.

தேவை இல்லாமல் ஒரு எட்டு ஒன்று போட்டுவிட்டு வீதிக்கு வந்து வீட்டை நோக்கி விரைந்தான் அவன். கிழக்கு பக்கத்தைத்தவிர, மற்ற மூன்று பக்கத்திலும் ஷெல் மற்றும் குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன. ஏன் இன்று காலையில் இருந்து வானத்தில் அச்சுறுத்தும் அசுரர்கள் வரவில்லை என மனதுககுள் கேள்வி எழுப்பியபடியே சென்றுகொண்டிருந்தான்.
வீட்டை அடைந்ததும்…வாசல் பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டு அக்காவிடம் துஸ்யந்தி எங்கே போயிருக்கின்றாள் எனக் கேட்டான்.
தம்பி…அங்க சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் கனக்க சனம் இடம்பெயர்ந்து வந்திருக்குதுகளாம். அதுதான் உங்கட பெரியக்கா விதானை, கணக்கெடுக்க துஸ்யந்தியைக் கூட்டிக்கொண்டு போயிருக்கின்றா என்றா அந்த அக்கா.


ம்ம்ம்…பாவங்கள் எப்பத்தான் அந்தச்சனங்களுக்கு ஒரு நின்மதி கிடைக்கப்போகுதோ தெரியாது என்று சொல்லிக்கொண்டு அவனும் பறப்பட்டான் தேவாலயத்தை நோக்கி.
போகும் வழியில் யாரோ பின்னால் இருந்து கைதட்டி அழைக்கவே திரும்பிப்பார்தான்…வேறு யாரும் அல்ல சாத்யாத் காண்டீபன்தான்..மச்சான் எங்க போறாய்? என்ற படியே வந்தான்…
இல்லை மச்சான் துஸ்யந்தி, அக்காவுடன் பீற்றர்ஸ் சேர்ச்சில வந்திருக்கின்ற சனங்களை கணக்கெடுக்க போய்ட்டாளாம்…அதுதான் நானுமத் அங்கபோய் சனங்களை பார்ப்பம் என்று வெளிக்கிடுறன்.. அப்படியே ஏதாவது சாப்பாட்டு சாமான்களும் வாங்கிக்கொண்டு போவம் எணடு என்றான் அவன்.
அதுக்கென்ன மச்சான்…நானும் வாறன் வா…முத்தண்ணையிட்ட ஒரு 50 றாத்தல் பாணும் சொஞ்ச பணிசும் வாங்கிக்கொண்டு போவம் என்ற படியே அவன் பின்னால் ஏறினான் காண்டீபன்.

முத்தண்ணையின்ட பேக்கரியில் நிறுத்தி பாண் கேட்டனர்.. தம்பி ஒரு பெட்டில அடுக்கித்தாறன் கொண்டுபோங்கோ என்று முத்தண்ணை பாண்களை அடுக்கியும் அதுக்குமேல் பணிஸ்களை வைத்தும் கொடுத்தார். வாங்கிக்கொண்டு இவர்கள் சேர்ச் வாசலில் போய் நிற்க எதேட்சையாக துஸ்யந்தியும் வெளியில் வந்தாள்.


அந்தநாள் மாலையே..மீண்டும் மீண்டும் அந்த அக்ரோ தொகுதிக்குள்ளேயே செய்திகளை அனுப்பி அனுப்பிப்பார்த்துக்கொண்டிருந்தான் மாதவ். எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவனுக்கு பைத்தியமே பிடிக்கும்போல இருந்தது.
அவன் மனதில் மட்டும் அந்த நீல நிறத்தில் சுழன்றுகொண்டிருந்த அந்தக்கோளில் இருந்து பிசிறிப் பிசிறி வந்த சமிக்கை அலை மட்டும் திரும்பித் திரும்பி வந்துகொண்டிருந்தது.
புதிய நுட்பங்கள் பலவற்றையும் பிரயோகித்து பார்த்தான் எதற்கும் சாதகமான சமிக்கை தெரியவில்லை. இது பற்றி மேலும் அறியவேண்டும் என்றால் சீன ஆராட்சி மையத்துடனோ அல்லது அமெரிக்க மையங்களுடனோ தொடர்புகொள்ளவேண்டும்…ஆனால் அது கண்டிப்பாக ஆபத்தில்த்தான் முடியும். அதைவிட இப்படியே இருப்பது மேல் என நினைத்துக்கொண்டிருந்தான்.
தொடரும்...

Thursday, September 24, 2009

காலச்சக்கரம். 02


தனது மோட்டர் சைக்கிளை ஏமாற்றும் விதத்திலே வெளியாலே தொங்கிய ரியூப்பின் ஊடாக பெற்றோல் 2 துளியை விட்டு ஊதிவிட்டு, கிக்கரை உதைந்தான் பிரசாந்தன்..என்ன அதிசயம் உடனடியாக ஸ்டார்ட் ஆகியது இன்று அது.
மெயின் ரோட்டில் இருந்த காண்டீபன் வீட்டில் மோட்டச்சைக்கிளை நிறுத்தாமலே நின்றான் அவன். மச்சான் உள்ள வாவன் தேத்தண்ணி குடிச்சிட்டு வெளிக்கிடுவோம் என்றான் காண்டீபன்…இல்லை மச்சான் நான் குடித்திட்டேன் நீ குடித்திட்டு கெதியா வா என்றான் பிரசாந்தன். ஒரு நிமிடத்துக்குள்ள காண்டீபன் வர புறப்பட்டார்கள் இருவரும்.

மச்சான் அளவெட்டி, தெல்லிப்பளை, நீர்வேலி எண்டு சனம் எல்லாம் எழும்பி கள்ளியங்காடு, நல்லூரடிப்பக்கம் போகுதளாமடா….ஒரே ஷெல் அடியும்…பொம்பர் அடியுமாமடா…என்று அன்றைய தகவல்களை சொல்ல தொடங்கினான் காண்டீபன்.
ஓமடா காண்டீ….சனங்கள் பாவம்தான் மச்சான் நாங்களும் நினைவு தெரிந்த நாளில இருந்து ஓடிக்கொண்டுதானே இருக்கிறம். இப்ப களியாணம் கட்டி எங்களுக்கும் பிள்ளைகள் பிறந்து…அதுகளும்….பேச்சை நிறுத்திக்கொண்டு மேல்மூச்சுவிட்டான் பிரசாந்தன்.
ஓமடா மச்சான்…எங்கட சந்ததிக்கே இது என்ன சாபக்கேடோ தெரியவில்லை…சரி இருந்து பார்ப்பமன்.

பேசிக்கொண்டே அவர்கள் வந்ததில்…தூரம் தெரியவில்லை. கோவில்வீதியில் காண்டீபன் இறங்கிக்கொள்ள நேரே கச்சேரிக்கு வந்து. வாகனத்தை நிறுத்திவிட்டு தனது பணிமனை அறைக்கு வந்து வாசலில் ஓ.ஏ. நிற்க இந்தாளிடம் பேச்சுக்கொடுத்தா நாளைக்கு காலையிலதான் முடிக்கும் என நினைத்து பின்பக்க ஓடையால் ஏறி வந்து தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான் பிரசாந்தன்.


என்ன? எங்கள் மில்க்ரோவுக்கு அடுத்த கலக்ஸியில் இருந்து நான் தயாரித்த Long planet Communication (தூரகோள் தொடர்பாடல்) ற்கு நீல நிறத்தில் சமிக்கை கிடைத்தது கனவா? அல்லது நினைவா? என முழுக்குழப்பத்துடனும், பதட்டத்துடனுமே கண்விழித்தான் மாதவ்.
ஐயோ….எவ்வளவு பெரிய விசயம்…ஏன் மனம் இவ்வளவு இலகுவாக சிந்திக்கிறது? என தனக்குள்ளே வினாவிக்கொண்டே. சுவர்த்திரையில் அவன் வைத்திருந்த அந்த கருவியை கட்டிலில் இருந்தவாறே இயக்கினான் மாதவ்.
யாழ்ப்பாணம்….வடமாகாணம்….தமிழீழம்…இலங்கை…தெற்காசியா..பூமி…
வானவெளி…பால்வீதி..எனக்கடந்து அருகில் இருக்கும் அக்ரோ…தொகுதியை மையப்படுத்தி மீண்டும் தூரகோள் செயற்பாட்டு தொடர்பாடல் முறையை திறந்து நேற்றைய திரட்டு 16.05.2505ஐப் பார்த்தான்…இல்லை…அக்ரோ வீதியின் தொகுதியில் இல்லை…கொழும்புத்துறையில் இருந்துகூட எந்தவொரு சமிக்கையும் அதில் பதிவாகியிருக்கவில்லை.

என்ன இது குழப்பம்? அப்படி என்றால்…அந்த அக்ரோ தொகுதியில் நீல மெழுகுவிளக்கு சுழல்வதுபோல உள்ள ஒரு கோளத்தில் இருந்து…பிசிறி பிசிறி வந்த அந்த வார்த்தை கனவா?
நெஞ்சம் படபடக்க…யோசித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
ஹே…மாதவ்…என்ன காலையிலேயே பலத்த யோசனையில இருக்கின்றாய்??? என்ன எங்கள் வெட்டிங் முடிந்து 720 மணிநேரம்…ஐ மீன்…வன் மந்த் அகிட்டே என்று யோசிக்கின்றாயா? என்று கேட்டவாறே அவன் அருகில் வந்திருந்தாள் அவன் மனைவி ஷமி.

இல்லை ஷமி…இது ஒரு மகப்பேற்று நிபுனரால் புரிந்துகொள்ளமுடியாத பிரச்சினை. விட்டுவிடு..நான் சொன்னால் நீகூட என்னைப் பைத்தியக்காரன் என்றுதான் சொல்வாய் என்றான் மாதவ்.
ஒரு மகப்பேற்று நிபுனராய்…ஒரு அண்டவெளி ஆராட்சியில் முக்கிய நபருடன் பேசமுடியாதுவிட்டாலும்…As a wife ஆக உன் பிரச்சினை பற்றி என்னால் பேசமுடியும்…சொல்லு மாதவ்…என்றாள் ஷமி.

ஷமி…நம்பு நேற்று நான் தூங்கப்போகும் முன்னர் எனது தூரகோள் தொடர்பாடலில் நம்ம மில்க்ரோவுக்கு அடுத்து இருக்கும் அக்ரோ ரோவில் உள்ள ஒரு நீலக் கோளில் இருந்து ஒரு சமிக்கை ஒன்று கிடைத்தது…இது ஒன்றும் கனவில்லை ஷமி...100 வீதம் எனக்கு நம்பிக்கை இருக்கு…பட்…இப்ப அப்படி ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை என்று அது தெரிவிக்கிறதைத்தான் என்னால நம்ப முடியாமல் இருக்கு….என்றான் மாதவ்.
ஓகே…மாதவ். ஒரு அண்டவெளி முதல்த்தர நிபுனரிடம் 3ஆம் வகுப்பு தரமாக பேசக்கூடாதுதான் என்றாலும்…நான் ஒன்று சொல்லுறேன்…நீ குறிப்பிட்ட அந்தக்கோள் நீலம்…நம்ம பூமிகூட நீலம்தான் என்பதை நீ மறந்துவிட்டாயா மாதவ்? ஸோ…நான் என்ன சொல்ல வாறேன் என்றால்…இந்த நிறத்தில் ஏதும் தொடர்புகள் இருக்கலாம் இல்லையா?

உண்மைதான்…ஷமி…இதையும் நான் கருத்தில்க்கொண்டு அங்கு 60 வீதத்திற்குமேல் நீர்ப்பகுதி இருக்கவேண்டும் ஸோ அங்கே..ஒட்சிசன் உண்டு என்பதை எல்லாம் சிந்தித்துத்தான் இவ்வளவு நம்பிக்கையாகச் சொல்கின்றேன் என்றான் மாதவ்.


ஏன்…மாதவ் இது தொடர்பாக நீ…சௌரத்துடன் பேசலாமே…அவனும் உன்னுடன் இறுதிவரை ஆராட்சியில் இருந்தவன்தானே..என்றாள் ஷமி.
ஜெஸ்…பட் அவன் இப்போ அமெரிக்க நாசாவுடன் தொடர்புடைய ஒரு ஆராட்சியகத்தில் பணிபுரிகின்றமைதான் என்னைத்தடுகின்றது. எனது இந்தக்கண்டுபிடிப்பை அமெரிக்காவோ, இல்லை சீனாவோ…கைப்பற்றுவதை நான் விரும்பவில்லை என்றான் மாதவ்.
ஓகே…மாதவ்…நான் இன்று ஹைதராபாத் போகின்றேன். ஈவினிங் வந்தவிடுவேன் பேசுவோம் என்றுவிட்டு சென்றாள் ஷமி.
ஷமி….இந்த விடயம் தொடர்பாக…..இழுத்தான் மாதவ்…பிலீவ் மீ..மாதவ்…மூச்சுக்கூட விடயமாட்டேன்..வெளியில் சென்றாள் ஷமி.

என்ன செய்வது…சௌரத்தைத்தவிர நம்பிக்கையானவர்கள் எவருமே கிடையாது..நம்பிக்கையான பிறருக்கோ..இதுபற்றித்தெரியாது…யோசித்துக்குழம்பிய மாதவ். இறுதி முடிவெடுத்தவனாக…சுவர்த்திரையில் சௌரத்தின் அன்றைய நிகழ்ச்சிக்குறிப்பைப்பார்த்தான்…ஜெஸ் தற்போது அவன் இரவு உணவு அருந்தும் நேரம்தான்…தன் கைக்கடிகாரத்தில் உள்ள அதிநுட்ப தொடர்பாடல் கருவிமூலம் சௌரத்தை அழைத்தான். மறு முனையில்…ஜெஸ் மாதவ்…பேசலாமா? நான் திரையில் வரவா? என்றான் சௌரத்.
நானே அதுக்காகத்தான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் வா என்றான் மாதவ்.
மறுவினாடி மாதவ்வின் சுவர்த்திரையில் சிரித்துக்கொண்டே இருந்தான் சௌரவ்.
அத்தனை விடயத்தையும் சௌரத்திடம் விளக்கினான் மாதவ். நீ..என்னை நம்புகின்றாயா சௌரத்? நம்பகின்றேன்…ஏன் என்றால் நீ சொன்ன வகையில் சாத்தியங்கள் பல உள்ளன.
எது எப்படியோ…உன் தொடர்பாடல் வலையமைப்புப்பற்றி அமெரிக்காவிலும் எந்த விதத்திலோ தெரிந்துவிட்டது. முதலில் அவர்கள் இந்த வலையமைப்பு தமிழ்நாட்டில்த்தான் உள்ளதாக கணித்தார்கள் அனால் இப்போது ஈழத்தில் என்பது தெரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விடயம் உண்மை என்றால் இதை நீ மிக மிக அவதானமாகவே கையாளவேண்டும்.
நம்பிக்கையை தளரவிடாதே… பயப்படாதே நாளை நான் அங்கிருப்பேன்…நேரில் பேசுவோம்…இந்த தொடர்பாடலைக்கூட அவர்கள் அவதானிக்கக்கூடும் என்றுவிட்டு மறைந்தான் சௌரவ்.


குளித்துவிட்டு கரையேறி…உடைகளை பிழிந்து உடுத்திக்கொண்டே அருகில் இருந்த வைரவர் சூலத்தில் இருந்த திருநீற்றைப்பூசிக்கொண்டு கும்பிட்டுவிட்டு பவணனும், வெள்ளையும் தமது வீடுகளை நோக்கி நடக்கத்தொடங்கினர்.
அம்மான்…இன்று திருநெல்வேலியில் இரவு அங்காடி. எங்கள் குலசேகரன் தலைமையில் நடக்கிறதாம், உன்னிடமும் அரைப்புசல் நெல் இருக்குத்தானே..அப்படியே மாலை தங்காளையும் கூட்டிவா..என்னிடமும் கொஞ்சம் ஒடியல் உண்டு. பண்டம் மாற்றிவிட்டு வரலாம். என் அக்காளுக்கு துணிகள் வாங்கவேண்டியும் உள்ளது என்றான் வெள்ளை.
அங்காடி என்று வெள்ளையன் சொன்னதும் மனதுக்குள் பவுணனுக்கும் ஒரு சிறு சந்தோசம். ம்ம்ம்ம் ஆகட்டும் வெள்ளை…நான் வண்டி கட்டுகின்றேன், போகும்போது உன் இல்லம் வந்து அழைக்கின்றேன் என்ற வண்ணம் திரும்பி தன் வீட்டுப்பாதையில் சென்று வீட்டை அடைந்தான்;.
குலைதள்ளி பழுத்திருந்த வாழைமரத்தை சாய்த்து குலையை பிரித்துக்கொண்டிருந்தாள் தையல்முத்து. காலையிலேயே மஞ்சள்பூசிக் குளித்திருந்தாள் என்பது அவள் முகத்திலும் உடம்பிலும் தெரிந்தது.
தொடரும்....

Wednesday, September 23, 2009

காலச்சக்கரம்...01

(முற்குறிப்பு:இன்றைய நாட்களில் இளைய எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள், சிறுகதைகள் நாவல்களை எழுதுவதில்லை எனவும் குறிப்பாக ஈழத்து தமிழ் இளையோர் எழுத்தாளர்கள், வலைப்பதிவுகளை மேற்கொள்பவர்கள் கூட மேற்படி சிறுகதைகள் நாவல்கள் என்ற பகுதிகளை மறந்துவிட்டார்கள் என அண்மையில் மேற்கத்தைய நாடு ஒன்றில் புலம் பெயர்ந்துவாழும், புலம்பெயர் வலைப்பதிவர் (உண்மையில் தமிழ் உணர்வுள்ள தமிழ் இலக்கியம் கற்ற) ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார். வலைப்பதிவுகளில் குறைவாக இருக்கலாம் ஆனால் சிறுகதைகளை இளைய மற்றும் பல புதிய எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து வெளிவரும், தினசரிகள், மற்றும் வார மலர்களில் எழுதிவருகின்றார்கள் என்பதும் இன்னும் சிறப்பாக எழுதக்கூடிய பல இளைய எழுத்தாளர்கள் தமது வேலைப்பழு காரணமாக நேரமின்மையால் எழுத்துப்பக்கம் நெருக்கமுடியாமல் உள்ளனர் என்பதுவுமே உண்மை.
சரி…மற்றவர்களை சொல்லி குத்தமில்லை… இந்தக்கருத்தினை ஏற்று நீயே ஏன், ஒரு சிறுகதையினை எழுதக்கூடாது. உனது கதையினை மட்டும் எழுது அது நல்ல கதையோ, அல்லது கெட்டகதையோ என்பதை வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும், என என் எழுத்துக்களில் தொடர்ந்தும் எனக்கு ஆசானாய் விளங்கும் கலாநிதி.மனோண்மணி அவர்கள் என்னுடன் பேசும்போது தெரிவித்திருந்தார்.
சரி முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என நான் எழுத வந்த கதை இது, சற்றுவித்தியாசமான ஒரு கொஞ்சம் பெரிய சிறுகதை, அட… கதையா எழுதப்போறான்? என வேறெங்கும்போய்விடாமல் முழுவதும் வாசித்துப்பாருங்கள், உங்கள் கருத்தினையும் தவறாமல் தாருங்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுதிய ஒரு பெரிய சிறுகதை…….ஐந்நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை யாழ்ப்பாணத்துடன் சம்பந்தப்பட்ட மூவரை காலம் துரத்தும் கதையிது…)மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருந்தது, பின்னிரவுக்காலம் என்பதால் விடிவெள்ளி கீழ்வானில் முளைத்துவிட்டாலும்கூட மேல்வானத்திற்கு சற்று மேலாக ஐந்துகலை தேய்ந்த சந்திரன் நின்றுகொண்டுதான் இருந்தான்.
தூரத்து பனங்கூடல்கள் கரும்புகார்கள் போல் தெரிந்துகொண்டிருந்தன, சில்வண்டின் ஓசை, பச்சிலைப்பூச்சிகளின் ஓசைகள் என சேவல் விடியலை உணர்வதற்கு முன்னதான அதிகாலைப்பொழுது தான் அது.
பூவரசந்தடியால் வன்னப்பெற்ற சாரளத்தினூடாக கண்விழித்து இத்தனையும் பார்த்து சப்பாணி கட்டிக்கொண்டு சோம்பல் முறித்தான் பவுணன். பக்கத்தில் குளிருக்கு குறண்டிக்கொண்டே கொசுவத்தால் சுற்றிக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அவன் மனையாள் தையல்முத்து.

வாழ்க்கை பந்தத்தில் இருவரும்; இணைந்து முழுதாக ஒருமாதம் முடியவில்லை. அப்படியே அமர்ந்திருந்த பவுணன் ஓசைப்படாமல் தையல்முத்து தூங்கும் அழகை இரசித்துக்கொண்டிருந்தான்.
அந்தநேரத்தில் அந்த காலை அமைதியை குலைக்கும் வண்ணம் புரவிகளின் குளம்பொலி ஓசைகள் வட திசையில் இருந்து கேட்டுக்கொண்டே இவன் காதுகளை நெருங்கி வந்தன. ஓசையின் உச்சத்தால் ஒருகணம் திடுக்கிட்ட தையல்முத்து கண்ணைத் திறக்காதவாறே சுதாகரித்தக்கொண்டு, மீண்டும் தூக்கத்தில் ஆழுகின்றாள்.
ம்ம்ம்ம்ம்….. எங்கள் ஊர்வந்து ஒருமாதத்திலேயே வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் மன்னர் சங்கிலியன் கோயில்ப்பூசைக்கச்செல்வார் என்பதை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டாளே என வியந்துகொண்டான் பவுணன்.
வீட்டிற்கு வெளியில் வந்து பன்னையை விலக்கிவிட்டு வேப்பம் குச்சி ஒன்றை உடைத்து பல்தேய்தபடியே தன் நெல்வயலை நோக்கி நடந்து சென்றான் பவுணன்.
இராசபாதையில் வழக்கத்தைவிட புரவிகளின் குழம்படையாளங்கள் தொகையாகக்காணப்பட்டன. இதென்ன? என்வாழ்நாளில் நான் எங்கள் மன்னர் இத்தனை படையுடன் கிளம்புவதை காணவில்லையே என மனதுக்குள் விளவியபடியே..சென்றான்….


பவுணன் அம்மான்! திடுக்கிட்டுத்திரும்பினான் பவுணன்…அழைத்தவன் வெள்ளை. விடயம் அறிந்தனையோ…அம்மான் பொருள்படை செய்ய வந்த தூரநாட்டு வெள்ளைத்தோலர், கொடுபடை கொணர்ந்து எம்மை அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளனராம். அதனால்த்தான் எம் மன்னனும், வீரப்படையினரும் அவர்களை எதிர்கொள்ளப்போகின்றார்கள்…நேற்றிரவு நல்லையில்(நல்லூர்) மாமந்திரி வணிகர்களிடம் தெரிவித்தாக சின்னையன் சொன்னான் என்றான் வெள்ளை.

பார்த்தாயா வெள்ளை…அன்றே உனக்குச் சொன்னேனே…பறங்கியரின் முகம்..நேசம் நாடி வந்ததுபோல் அல்ல.. எம்மைப்பார்த்து அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றது என்று…
ஓம்…நீ சொன்னது என் நினைவில் உள்ளது பவுணன்…ஆனால்…அவர்கள் படைவலுவில் உச்சத்தில் உள்ளார்கள் என்பதுதான் “எங்கே நாம் அவர்களுக்கு அடிமைகள் ஆகிவிடுவோமோ என்று பயமாக உள்ளது” என்றான் வெள்ளையன்.
இல்லை வெள்ளை….எம் மன்னனதும், நம் மற வீரர்களதும் வீரத்தில் உனக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்…நல்லை முருகனிடமும், நம் மன்னன் சங்கிலியனிடமும் நாம் பாரத்தை போட்டுவிட்டு இருப்போம்…இறுதிவரை பறங்கியரை எதிர்ப்போம்…அடிமை நிலைதான் என்றால் அன்றே இறப்போம்…நாம் வீரவழிவந்த தமிழர் என்பதை மறந்தாயோ..என்றான் பவுணன்.

அன்றைய இக்கட்டுநிலைகள் பற்றி பேசிக்கொண்டே வயல்வரை சென்று வெள்ளையனின் உதவியுடன் துலா மிதித்து வரப்பு கட்டி நெல்லுக்கு நீர்;பாச்சி இருவரும் குளிக்க “யமுனா ஏரிக்கு” வந்தபோது சூரியன் கீழ்வானில் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தான்.மண்ணெண்ணை 3 லீட்டர் கிடக்கிறது…அந்த சிங்கர் ஓயில் போத்தலுக்க பெற்றோல் இருக்கோ தெரியாது…முந்தநாள்த்தான் 2 அவுண்ஸ் வாங்கினேன்..சீ…நேற்று என்ன நினைவில் இருந்தனோ தெரியாது என்ற நினைப்புடனேயே எழுந்தான் பிரசாந்தன்.
ஓடிப்போய் அவசர அவசரமாக குளித்துவிட்டு..வந்து நாள்க்களன்டரைக் கிளிக்க அது 17 செப்ரம்பர் 1995 என்று காட்டியது.
சச்சேரியில் எழுதுவினைஞனாக பணிபுரியும் அவன் நவாலியில் இருந்து கச்சேரியடிக்குச் செல்ல சில துளி பெற்றொலிலும்…பல துளிகள் மண்ணெண்ணையிலும் ஓடும் அந்த சீ.டி.125 என்ற ஒன்றைத்தான் நம்பியிருந்தான்.
ம்ம்ம்….அடுத்த நினைவு வந்தது…ஓகஸ்ட் 17 1995ல தான் அவனுக்கும் துஸ்யந்திக்கும் திருமணம் நடந்தது. சண்டிலிப்பாய்ல துஸ்யந்திட வீட்டதான் திருமணம் என்று இருந்து பிறகு அங்க அந்த நாளில் முன்னேறிப்பலபேர் பாய கடைசியாக கலாட்டாக்களியாணம் மாதிரி அங்க மாறி இங்க மாறி…பொம்பிள வரேல்ல, பொம்பிளேட தமையன்மார் இன்னும் வரேல்ல என்ற பல கதைகள் கேட்டு ஒருமாதிரி…கடைசியில நல்லூர் மனோன்மணி அம்மன் கோவில்லதான் கல்யாணம் நடந்திச்சு.
அந்தப்பகிடி முடிஞ்சும் சரியாக ஒரு மாதம் அகியிருந்தது.

வெளிக்கிட்டு வெளியால ஓடிவந்து அந்த சூப்பிப்போத்தில் என்று தான் அன்பாக அழைக்கும் சிங்கர் ஒயில்ப்போத்திலை பார்த்தான் ஒரு 15 துளிக்கு கிட்ட அதுக்குள்ள பெற்றோல் கிடந்தது…அப்பாடா…ஒருமாதிரி கச்சேரியடிக்குப்போகலாம்..அங்க போய் ஒரு 3 அவுண்ஸ் பெற்றோல் வாங்கினாப்போச்சு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…
இஞ்சாருங்கோப்பா…சொல்ல மறந்திட்டன் எங்கட காண்டீபன் அண்ணை நீங்கள் போகேக்க ஒருக்கா தன்னையும் கூட்டிக்கொண்டு போகச்சொன்னவர் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் தேத்தண்ணியை நீட்டினாள் துஸ்யந்தி..
பிறகு கெதியா வேளைக்கே போங்கோ…பிறகு வானத்தில இந்த தாலியறுப்பார் வந்திடுவான்கள் என்று அவள் சொல்லும்போதே சில ஷெல்ச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.
தொடரும்...........

Saturday, September 19, 2009

திருடர்கள் பல விதம்….


ஓவ்வொருவருக்குமே களவு கொடுத்த அனுபவங்கள், அல்லது களவுகொடுத்தவர்களின் கதைகள், அயல் வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள், என கண்டிப்பாக களவு பற்றிய சம்பவங்கள் மனதில் இருக்கும்.
சிறுகச்சிறுக பார்த்துப்பார்த்து, குருவி சேரிப்பதுபோல பணத்தை சேகரித்து வைத்திருக்கும்போது அதை கயவர்கள் கவர்ந்துசென்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும், வயிறு எப்படி பற்றி எரியும் என்பதையும் அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும்.
சில ஆயிரம் பெறுமதியான பணம் மற்றும் நகைகளுக்காக விலை மதிக்கமுடியாத உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்களும் உண்டு. அத்தோடு அப்போது ஆபத்தாக இருந்தாலும் கள்வர்களின் களவில் உள்ள நகைச்சுவைகளும்கூட அதன் பிறகு சிரிக்கவைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.
அந்த விதத்தில் நான் அனுபவித்த, நேரில் கண்ட, கேள்விப்பட்ட சில கள்வர்கள், மற்றும் களவு, கொள்ளைச்சம்பவங்களை நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.

01. 1988 ஆம் ஆண்டு கால கட்டங்கள், அப்போது என் வயது பத்து. இந்திய அமைதிப்படை என்ற பெயரில் என் மண்ணில் வானரக்கூட்டங்கள் நிறைந்திருந்த கால கட்டம். அவர்களின் ஆதரவுடன் அட்டூளியங்களும், களவு கொள்ளைகளும் தலைவிரித்தாடிய பயங்கரமான ஒரு கால கட்டம் அது.
அந்த நேரங்களில் பெரிதும் இராக்காலங்களில், கொள்ளைகள், களவுகள் என்பன அப்போது இந்தியப்படைகளுடன் சேர்ந்தியங்கிய சில துணை இராணுவ குழுக்களால் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன. கூக்குரலிடும் வீட்டின் ஆபத்தை அறிந்து அயலவர்கள் அங்கு அவர்களுக்கு உதவியாக வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அப்போதைய ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினர் வீதிகளில் நிற்பார்கள். வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் சுடப்படுவோம் என்ற அச்சத்தின்காரணமாக எவரும் வீதிக்கு வரமாட்டார்கள் என்ற நிலை எற்பட்டிருந்தது.


இப்படியே தொடர் கொள்ளைகளையும், களவு போகும் வீட்டுக்காரர்களின் கூக்குரலினையும், சில வேளைகளில் அந்தக்கொள்ளையர்களின் துப்பாக்கிப்பிரயோகத்தையும், கள்வர்களுக்கு காவலாக நிற்கும் இந்திய அமைதி காக்கும் படைகளின் ஹிந்தி மொழிகளையும், நான் அப்போது அச்சத்துடன் பல நாட்களாக கேட்டிக்கின்றேன்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த அநியாயங்கள் இடம்பெற்ற போது இதையும் தடுப்பதற்கு எனது சொந்த இடமான யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திட்டமிட்டு செயற்பட்டனர். இந்த திட்டங்கள் வெற்றியடைந்து பல கொள்ளைகள் தடுக்கப்பட்டன.
அந்த திட்டங்கள் இவைதான், கள்வர்கள், கொள்ளையர்களின் நடமாட்டங்கள் தெரிவதாக உறுதிப்படுத்தும் சம்பவங்கள் ஏற்பட்டவுடன் அனைத்து மக்களையும் உசாரடையச்செய்யும் விதமாக தகரங்கள், சட்டி பானைகளை தட்டி ஒலியெழுப்புதல், ஒவ்வொரு வீட்டிலும் எழுப்பப்படும் அந்த ஒலி அந்த பிரதேசம் முழுவதும் ஒலித்து அனைவரையும் உசாரடையச்செய்யும். அத்தோடு பக்கத்துவீடுகள், பின், முன் வீடுகளுடன் தொடர்புகளை ஒவ்வொரு வீட்டினரும் பேணிவருவார்கள், குறிப்பிட்ட ஒரு வீட்டில்த்தான் கொள்ளையர்கள் புக முற்படுகின்றார்கள் என்று அறிந்தவுடன், வேலிகள், மதில்கள் ஊடாக வீடுகளைத்தாண்டி ஊர்மக்கள் குறிப்பிட்ட அந்த வீட்டினை அடைந்து கொள்ளை இடம்பெறாமல் தடுப்பது என்ற அந்த நடைமுறை முழு வெற்றி அளித்ததுடன் இந்திய இராணுவத்தினரையும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு கொண்டுசென்றது.

02. இன்னும் ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடந்ததாக என் உறவினர் ஒருவர் கூறியது கொஞ்சம் நகைச்சுவையான திருட்டுச்சம்பவம் இது. மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் கத்தி முனையில் கணவனை வைத்துவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் பெறுமதியான பணமோ, அல்லது நகைகளோ அவர்களுக்கு கிடைக்கவில்லையாம், எனவே கணவனை கத்திமுனையில் வைத்திருந்த திருடர்கள், எதையும் காட்டிக்கொள்ளாமல் பக்கத்து வீட்டிற்கு சென்று கணவருக்கு திடீர் இருதய நோய் வந்துவிட்டது அவசரமாக 5000 ரூபா தாருங்கள் என கடன்வாங்கிவந்து தரும்படி மனைவியை மிரட்டி தொடர்ந்தும் கணவரை கத்திமுனையில் வைத்திருந்து பக்கத்துவீட்டில் அந்தப்பெண் பணம் கடன்வாங்கி வந்து கொடுத்ததும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறியிருந்தார்.


03. அடுத்து கடந்த மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது எனக்கு நடந்த சம்பவம். நீண்ட நாட்களின் பின்னர் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அங்கு எங்கு செல்வதென்றாலும் என் நண்பர்கள் தமது வேலைத்தள வேலைகள் முடிந்தபின்னர் வந்து என்னை காரிலோ, மோட்டார் வண்டியிலோ அழைத்து செல்வது வழமை. அன்று கிழமை நாள் என்பதனால் நண்பர்கள் வேலைத்தளத்திற்கு சென்றிருந்தமையால் ஓர் அலுவல் காரணமாக எனது புகுந்த ஊராகிய மானிப்பாயில் இருந்து சண்டிலிப்பாயிற்கு செல்லவேண்டி இருந்தமையினால் நான் பஸ்ஸில் செல்லவேண்டிய நிலை வந்தது. ரோசா ரக மினி பஸ்களே அதிகம் செல்வதனால் நேரத்தின் நிமித்தம் நான் மிக நெருக்கமாக பயணிகளை ஏற்றிவந்த அந்தவகை மினி பஸ் ஒன்றில் ஏறி பயணமானேன். காலைக் கீழே வைக்கக்கூட இடம் இருக்கவில்லை. ஒருவாறு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இறங்கிவிட்டு, ஜீன்ஸ் பொக்கட்டை தட்டிப்பார்த்தால் எனது கைப்பேசி இலாபகமாக களவாடப்பட்டிருந்தது.
உடனடியாக அருகில் இருந்த தொலைத்தொடர்பகத்தில் இருந்து எனது இலகத்துடன் தொடர்புகொண்டால் ரிங்கிங் போய் பின்னர் நிறுத்தப்பட்டு. பின்னர் நிரந்தரமாகவே போன் நிறுத்தப்பட்டிருந்தது. அட அதில் என்ன பெரிய விடயம் என்றால் என்னை சூழநின்றவர்கள் முழுப்பேரும் பெண்கள் என்பதுதான்.

04. எனது நிறுவனத்தின் வேலை நிமித்தம் நான் கொள்ளுப்பிட்டியில் இருந்து பறக்கோட்டை செல்வதற்காக கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள, கோப்பியின் மணத்தை சுவாசித்தபடியே பஸ்ஸை பிடிக்கும் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தேன். அப்போது மிக நேர்த்தியாக உடையணிந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்போல். மிக அழகான உயரமான ஒரு நபர் என் அருகில் வந்து ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்துகொண்டிருந்தேன். இலக்கண பிழை எதுவும் இன்றி மிக நேர்தியான உச்சரிப்பும், பேசும்போது அவரது முகபாவனைகளும் அவரை மதிக்கும்படியாகவே இருந்தது. தாம் கண்டியில் அரசாங்க பணிமனை ஒன்றில் பணி புரிவதாகவும், இங்கு வந்ததும் தனது பேர்ஸ் பறிபோய்விட்டதாகவும், தனக்கு தேவைப்படுவது அங்கிருந்து புறக்கோட்டை செல்லவும், பின்னர் கண்டிக்கு செல்லும் வரையிலான பணமே எனவும், தனக்கு 180 ரூபா தந்தால் போதும் எனவும் அதை தான் எப்படியாவது உங்களுக்கு திருப்பி அனுப்புவேன் எனவும் தெரிவித்து முடிப்பதற்குள் நான் அவருக்கு 200 ரூபாவை நீட்டினேன். பல முறை நன்றி சொல்லி எனது பணிபுரியும் நிறுவனம், பற்றி கேட்டு அங்கு வந்து நான் கண்டிப்பாக அந்தப்பணத்தினை தருவேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
அதன் பின்னர் என் நண்பர்கள் பலர் தமக்கும் இதேபோல நடந்த அனுபவங்களைக்கூறினார்கள். பின்னர் ஒருநாள் பம்பலப்பிட்டியில் தான் அனுராதபுரத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொண்டு முன்னர் என்னை ஏமாற்றியதை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் மீண்டும் வந்துபேசினார் அந்த நாகரீக திருடன். என்ன செய்வது திருடன் பெரும்பான்மை இனமாச்சே பேசாமல்த்தான் போகணும்.

இப்படி நிறைய சம்பவங்கள் பலபேருக்கு இடம்பெற்றிருக்கும், கொள்ளைகள் போன்றவை அதில் உச்சம், ஆபத்துக்கள் நிறைந்தவை, வழிப்பறி கொள்ளை மூலம் வெள்ளவத்தையில் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இறந்தும் உள்ளார். அதேபோல இன்னும் ஒரு கொள்ளைச்சம்பவத்தில் என் நண்பனின் தந்தையார் கால் நடக்கமுடியாத படி கால் அடித்து முறிக்கப்பட்டு சிறிதுகாலம் நடக்கமுடியாமல் இருந்தார்.
அதேபோல சில வீடுகளில் திருடர்கள், ஆறுதலாக வீட்டில் உள்ளவர்கள்; தூங்க முழுப்பொருட்களையும் களவாடிவிட்டு, அதேவீட்டில் தேனீரும் போட்டு குடித்துவிட்டு போன கதைகளும் உண்டு. எது எப்படியோ, தனது பொருள் ஒன்றை இழந்தவனுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும். ஒருபொருளை திருடிவிட்டு, திருடப்பட்டவரின் வயிற்றெரிச்சல், திட்டுக்களை வாங்கிக்கொண்டு அந்த திருடனாலும் தான் திருடிய பொருளை அனுபவிக்கமுடியாது என்பதும் உண்மை.
திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது தானே!

Tuesday, September 15, 2009

11.09.2001 இன் பின் உலகம் மாறிவிட்டதா?


2001 செப்ரெம்பர் 11ஆம் நாள், நியூயோர்க்கின் “உலக வர்த்தக மையத்தின் மீது” அல்-ஹொய்தா இயக்கம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுடன், இந்த உலகம் மாறிவிட்டது என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் அடிக்கடி கூறிக்கொண்டது சகிக்கமுடியாமல் இருந்தாலும் கூட அந்தக்கூற்றில் அணித்தரமான பல உண்மைகள் உள்ளதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
அந்த நாளின் பின்னால் நடந்தவிடயங்கள் ஒவ்வொன்றையும் எண்ணிப்பாருங்கள். உலகம் இதுவரை கண்டிராத வித்தியாசமான யாருமே கணிக்காத நிகழ்வுகள் பல நடந்துவிட்டிருப்பதை காணலாம்.
குறிப்பாக இந்த தாக்குதல்களின் பின்னால் ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கமும் “தேசிய பாதுகாப்பு” என்ற பதத்தை தூக்கிபிடித்து தமது பல தவறுகளை மறைத்ததையும், உலகின் பல உரிமைகளுக்காக போராடிய மக்கள் குழுக்கள், மக்கள் இயக்கங்களை பயங்கரவாத பட்டியலில் இலகுவாக இணைத்து அவற்றை ஒழித்து தம்மை நியாயப்படுத்திக்கொள்ளவும் உலகிலுள்ள அரசாங்கங்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துவிட்டதையும் நாம் ஆராய்ந்துபார்க்கலாம்.


இந்த தாக்குதலின் பின்னர் அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் அக்கிரமங்களை சொல்லித்தான் விளங்கவைக்கவேண்டும் என்ற தேவை இல்லை. கிட்டத்தட்ட இரண்டு சகாப்தகாலம் ஈராக்கினை ஆண்ட ஒரு ஜனாதிபதியை அவர் நாட்டினுள்ளேயே அத்துமீறி நுளைந்து காரணங்கள் தேடிக்கண்டுபிடித்து தூக்கில்போட்ட மிக (அ)நாகரிகமான செயல்கள் எல்லாம் நடந்துமுடிந்தவிட்டன.
ஈராக்கினுன் நுளையும்போது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுக்கள், ஈராக்கில் பேரழிவுகளை விளைவிக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன, அல் -ஹொய்தா போன்ற அமைப்புக்களுக்கு ஈராக் ஆதரவாக உள்ளது, செப்ரெம்பர் 11 தாக்குதலுடன் ஈராக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பவையே. ஆனால் இறுதியில் இந்தக்குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவும் இல்லை, அதற்கான ஒரு சிறு ஆதாரங்களும் இல்லாமல், ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹ_சைனை பிடித்து அவரை கொலை செய்ய பல காரணங்களைத்தேடி அதற்கு தாமே நீதிவழங்குவதாக அவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றி 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தனது நாகரிகத்தின் உச்சத்தினை காட்டியது அமெரிக்கா.
இறுதியாக “எமது புலனாய்வுத்துறையின் தவறான தகவலால்த்தான் ஈராக் மீது நடவடிக்கை எடுக்கும்படியாகிவிட்டது” என சர்வசாதாரணமாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியால் சொல்லமுடிகின்றது என்றால், கையாலாகாத ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை தேவையற்று இருப்பதும், உலக நாடுகள் அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பதும்தான் காரணம். இதுவே பின்னால் ஒரு இனத்தின்மீது பாரிய மனித படுகொலைகளை புரிந்துவிட்டு சில உலக நாட்டுத்தலைவர்கள் தம்மால்; அழிக்கப்படும் அந்த இனத்தின் மொழியிலேயே தைரியமாக ஐக்கிய நாடுகள் சபையில்பேச ஏதுவாக அமைந்துவிட்டது.

ஒரு அரசாங்கம், அந்த நாட்டு மக்களின் பொருளாதாரம், மருத்துவம், கல்வி, சுகாதாரம் என்பவற்றிற்கு வகை சொல்லும் முக்கிய பொறுப்பாளி என்பதில் இருந்து மேற்படி செப்ரெம்பர் 11, 2001இன் பின்னர் பல நாடுகள் களன்றுகொண்டு, தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை அமுல்ப்படுத்துவதே அரசாங்கத்தின் பணி, மற்றவைகளை பொதுமக்கள் தாங்களாகவே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுபோல பட்டும் படாமலும் பேசிவருவதையும் நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.


எமக்கு தெரிந்த விடயங்களாக இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கைளை எடுத்துக்கொண்டால், பாரிய மனிதப்பேரவலம் ஒன்று அப்பட்டமாக நிகழ்ந்தபோதும் ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருந்ததையும், இலங்கை அரசாங்கம் கூட பல பிடிகளை உலக நாடுகளுக்கு கொடுத்திருந்தாலும் கூட எவரும் தட்டிக்கேட்கமுன்வரவில்லை என்பதையும், இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது தேச வல்லாதிக்க மற்றும் மனதில் வஞ்சம் தீர்க்கும் பகையினை தீர்த்துக்கொள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் படு கேவலமாக நடந்துகொண்டவற்றையும் உலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் மௌனமாக பார்த்துக்கொண்டே இருந்தன.
இதில் மிக வேதனையான சம்பவங்கள் என்னவென்றால், கியூபா, பலஸ்தீனம், வெனிசூலா போன்ற நாடுகள் நியாயங்களை மறுதவலித்து செயற்பட்ட விதங்கள்தான்.

இவை அனைத்தினையும் ஒப்பிட்டு பார்க்கும்போது உலகத்தில் வேறு வெளித்தோன்றாத நிகழ்வு ஒன்று மெல்ல மெல்ல உள்ளுக்குள்ளே நிகழ்ந்துவருவது தெரியகின்றது. முதலாம் உலக யுத்ததின்போது கொல்லப்பட்டவர்களின் தொகையில் சிவிலியன்களின் எண்ணிக்கை 13 வீதம் என்றும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது அது 60 வீதத்திற்கும் அதிகமாக சிவிலியன்கள் இறந்ததை காட்டியதாகவும், அனால் இந்த இரண்டு மகா யுத்தங்களுக்கும் பின்னர் இடம்பெற்ற யுத்தங்களில் இலக்குகளே பொதுமக்கள் தான் எனவும் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது.
இன்றைய உலக நாடுகளின் போக்கு, நியாமான போராட்டங்கள் கூட்டுச்சதியாக நசுக்கப்படல் என்பவை முக்கியமாக ஒன்றை வெளிக்காட்டுகின்றது “நியாங்களும் தர்மங்களும் இறந்துவிட்டன” என்பவற்றையினையே இவை காட்டிநிற்கின்றது. இத்தகய போக்கு முழு உலகத்திற்குமே பேராபத்தாகவே முடியுமே தவிர ஒருபோதும் சுபீட்சமான சூழ்நிலைகளை உருவாக்கப்போவதில்லை.


தமது வக்கிரகங்களை அப்படியே வெளிக்காட்டும் உலகத்தலைவர்கள், பேச்சுக்கள், கூட்டுறவுகள் என்பவற்றின்மேல் நம்பிக்கையில்லாமல் சதி முயற்சிகளையே முதன்மையாக கொண்டுள்ள சர்வதேச திட்டங்கள், ஒரு நாட்டிற்கு இன்னொரு நாடு குழிபறிக்க தருணம் பார்த்திருக்கும் பொழுதுகள், ஆண்டுகள் பல கடந்தாலும் சில வக்கிரகங்களை மனதில் வைத்திருந்து வஞ்சம் தீர்க்கும் செயற்பாடுகள் என்பன ஒரு போதும் மேல் நிலைப்பட்ட உலகத்தினை கட்டியெழுப்பப்போவதில்லை.
ஒவ்வொரு நாட்டு பயங்கரவாதத்தையும் கண்டிப்பாக அந்த நாடோ அல்லது, இன்னுமொரு நாடோதான் வளர்த்துவிடுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.
பயங்கரவாதம், விடுதலைப்போராட்டம் என்பதை மேற்குறிப்பிட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின்பின்னர் உலகம் பிரித்துப்பார்க்கத்தவறிவிட்டது உலகலாவிய ரீதியில் பல ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உலகமே சேர்ந்து ஒடுக்கிவிட்ட நிலையினை எற்படுத்தியுள்ளது. ஆனால் என்றோ ஒருநாள் உலகம் தான் விட்டபிழைகளை உணரும் தருணம் வரும். ஆனால் காலம்கடந்து, கண் கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் யாருக்கும் தேவைப்பட்டிருக்காது. ஆதற்காக சாம்பல்களிலும், சமாதிகளிலும் விழுந்தே உலகம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை உருவாகும்.

இப்போது போன்ற நிலையில், கையாலாகாத ஒரு ஐக்கிய நாடுகள் சபையினையும், தேச நலன்களுக்காக தர்மங்களை நீதிகளை ஒடுக்கும்போக்கு கொண்ட வெளியுறவு கொள்கைகளையும், சதிவலைகளையும் சர்வதேசமும், நாடுகளும் ஒருவருக்கொருவர் பின்னிக்கொண்டிருந்தால், மீண்டும் ஒரு ஹிட்டலர் வந்துதான் உலகத்தை திருந்தவேண்டிய நிலை கண்டிப்பாக உருவாகும்.

Thursday, September 10, 2009

அறிவிப்பின் சிகரங்கள் (இருவர்….)


தமிழ் மொழியில் ஒலி ஊடகத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நிகழ்ச்சிகள் வழங்குவதிலும், நிகழ்ச்சிகளின் தரத்திலும், குறிப்பாக தென்னிந்திய திரைப்படப்பாடல்கள், திரைப்படங்களுக்கு முதன்முதலில் ஒரு முகவரியினை தந்த ஊடகமாக இலங்கை வானொலியினையே கூறிக்கொள்ளவேண்டும்.
இன்றைய தமிழ் ஒலி, மற்றும் ஒளி ஒலி ஊடகங்களில் இடம்பெறும் சகல நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கொண்டால் அவற்றின் அத்திவாரமாக இலங்கை வானொலியின் அன்றைய நிகழ்ச்சிகளே உள்ளன என்றே முடிவாகக்கூறிக்கொள்ளலாம். இதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

இலங்கை என்ற வட்டத்தினை உடைத்து தென்னிந்தியாவிலேயே அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்றுகூடவைத்தவர்கள் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர்கள், மற்றும் அறிவிப்பாளர்களே. தமிழ்நாட்டில் 35 வயதினை தற்போது கடந்தவர்கள் எவரை கேட்டாலும் இலங்கை வானொலியினூடான தமது அனுபவங்களை மிக ஆர்வமாக பேசுகின்றார்கள். இலங்கை நேயர்களைவிட பல அரிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், தாளலயங்களை ஒலிப்பதிவு செய்து இன்றும் பொக்கிசங்களாக பாதுகாத்துவருகின்றனர்.
இத்தகய பெருமைகளையும், வரலாற்று முத்திரையினையும் பதித்து இன்றும் பலரது மனங்களில் அழியாத நினைவு ஓசையாக கேட்டுக்கொண்டிருக்கின்றது இலங்கை வானொலி.

இவ்வாறு தேச எல்லைகளைக்கடந்து பல கோடி நெஞ்சகளை செவி மடுக்கவைத்த இலங்கை வானொலியில் சிகரங்களாக கே.எஸ்.ராஜா மற்றும் பி.ஏச்.அப்துல்ஹமீத் அகியோர் பெரும்பாலானவர்களால் கருதப்படுகின்றார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் என்ற இருவருக்கும், பின்னர் கமல் - ரஜினி என்ற இருவருக்கும் எவ்வாறு தமிழ்நாட்டில் இடம்கொடுத்தார்களோ அதேபோல வானொலி அறிவிப்பில் கே.எஸ்.ராஜா - ஹமீத் அகியோரின் குரல்களுக்கு இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான இரசிகர்கள் இடம்கொடுத்திருந்தனர்.

கே.எஸ்.ராஜா அறிவிப்பு செய்த திரைப்பார்வை, இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய பாடல் தேர்தல், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலிநாடகம், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலி மாமா, இலங்கை வானொலி அறிமுகம் செய்துவைத்த வினோதவேளை, என பல நிகழ்ச்சிகள், இன்று ரொப் 10, பாடல் கவுண்டவுன், மெகா தொடர்கள், என தமிழ்நாட்டில் (தமிழ் தொலைக்காட்சிகளில்???) இடம்பெற்றுவருகின்றன. ஆதார சுருதி இலங்கைவானொலியே என்பதுவும், இன்றும் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் மதிக்கும், பெருமைகொள்ளும் ஒரு வானொலி இலங்கைவானொலி என்பதுவும், இன்றைய இலங்கை அறிவிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு புரியாமல், தென்னிந்திய அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி வழங்குனர்களின் பாணியில் தாம் அறிவிப்பு செய்வதை பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியாமல் உள்ளது.

தனியார் வானொலிகள் இலங்கையில் முளைக்கத்தொடங்கிய காலத்தில் ஒரு தனியார் வானொலி சுத்தமான தமிழில் உரையாடி மக்களை கஸ்டப்படுத்தியதால்த்தான் அது முதல் இடத்திற்குவரமுடியவில்லை என்று பணிப்பாளர்களையும், அறிவிப்பாளர்களையும் மாற்றிய அதி திறமைசாலிகள் உள்ள இடத்தில் தமிழின் நிலைமையினை எண்ணிப்பாருங்கள். அது இப்படியிருக்க தமிழுக்கு வந்த சோதனையாக சொர்ணமாக ஒலி ஒன்று நாரசுரமாக ஒலித்து கூச்சல் போட்டது, இலங்கை தமிழ் வானொலி நேயர்கள் செய்த புண்ணியமோ? அல்லது ஆரம்பகால அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்களின் நிகழ்சிகள் வந்த அலைவரிசையில் இந்த அவலமோ என இயற்கை எண்ணியதாலோ என்னமோ அந்த வானொலி இடையில் நின்றுவிட்டது. இதனால் நின்மதி பெருமூச்சுவிட்டது தமிழாகத்தான் இருக்கும்.

அறிவிப்பு என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று குன்றின் மேல் விளக்காக நின்றவர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்துமே. அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காதுவழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா. அதேபோல தமிழின் வசனங்களின் ஏற்ற இறக்கம், மொழியின் கம்பீரம், கேட்பன யாவையும் மனதில் நின்று அழியாத சொற்பிரயோகம் என்பவற்றை தனது அறிவிப்பு நடையாக பேசி, தமிழ் என்றால் ஹமீத் பேசுவதுபோல இருக்கவேண்டும் என அனைத்து தமிழர்களையும் சொல்லவைத்தவர் ஹமீத். இந்த இரண்டுபேருமே எடுத்துக்கொண்ட விடயத்தை சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்துநிற்பதாக, பொட்டில் அடித்தால்ப்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது.

கே.எஸ்.ராஜா

கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா என்ற இயற்பெயர் கொண்ட கோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட கே.எஸ்.ராஜா அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக்கொண்டவர். அங்கிருந்து பின்னர் யாழ்ப்புறநகர்ப்பகுதியான கொட்டடியில் வசித்துவந்த இவர், இலங்கைவானொலியில் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தினை கொண்டவராக குறுகிய காலத்தினுள் அனைவரினதும் இதயத்தை கவர்ந்தவர்.
கம்பீரமான, வேகமான மிகத்தெளிவான உச்சரிப்பில் இவரது குரல் ஒலிக்கும்போதே வானொலியை நோக்கி மக்களை செல்லவைத்த வித்தகர் இவர்.

ஆரம்பத்தில் இருந்தே இவர் தனக்கேயான இந்தப்பாணியினை நடைமுறைப்படுத்தியிருந்தாரா? என்ற கேள்வி எனக்குள்ளே பல ஆண்டுகளாக குடியிருந்தது. நீண்டநாள் இந்தக்கேள்வியை தீர்த்துவைத்தவர் திரு.அப்துல் ஹமீத் அவர்களே. ஊடகப் பயிற்சி அரங்கு ஒன்றுக்கு பிரதம அதிதியாக வந்திருந்த ஹமீத் அவர்களிடம் திரு.கே.எஸ்.ராஜாவை பற்றிய சில கேள்விகளை அவரது பக்கத்தில் இருந்து பணிபுரிந்தவர் என்ற ரீதியில் அவரிடம் நான் கேட்டிருந்தேன்.
அதற்கு பதிலளித்த ஹமீத் அவர்கள், கே.எஸ்.ராஜா அவர்கள் ஆரம்பகாலத்தில் அவருக்கு உரியது என்ற பாணியில் அறிவுப்புக்களை செய்யவில்லை எனவும். ஒருநாள் இரவு தாம் இருவரும் நெடு நேரமாக அறிவுப்பு குறித்தும், நிகழ்ச்சிகள் குறித்தும் பேசிவிட்டு சென்றதாகவும். மறுநாள் காலை கே.எஸ்.ராஜா அவர்களுக்கு நிகழ்ச்சிகள் இருந்ததாகவும், அன்று காலை எதேட்சையாக வானொலியை திருப்பியபோது தமக்கு அதிர்ச்சி காத்திருந்ததாகவும், வேகமான தொனியில், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில், கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக்கொண்டிந்ததாகவும், யாராவது புதிய அறிவிப்பாளர் ஒருவர் வந்துவிட்டாரா? என தான் யோசித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சி முடிவில் “அன்பு வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் கே.எஸ்.ராஜா” என்று புதிய தொனியில் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தான் உட்பட சக அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவிடம் இந்த வித்தியாசமான தொனி அறிவிப்பு குறித்து விவாதித்ததாகவும், எனினும் அடுத்து வந்த வாரங்களில் கே.எஸ்.ராஜா அவர்களுக்கு பெருமளவிலான பாராட்டுக்கடிதங்கள் வந்து குவியத்தொடங்கியதாகவும் அப்போதே அவர் சிகரங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டதை தான் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.


இன்றும் எனக்கு நினைவு இருக்கின்றது. நீயா திரைப்படம் பற்றிய விளம்பரம் ஒன்றில் அந்த திரைப்படத்தில் இச்சாதாரிப்பாம்பாக சிறீப்பிரியா மற்றும் கணேஸ் தோன்றும் காட்சியில் மனிதரூபம் கொண்ட பாம்பு என்று தெரியாமல் ஆண்பாம்பினை கமல் ஹாசன், வியஜகுமார் குழுவினர் சுட்டுக்கொல்லும் கட்டத்தில், குற்றுயிராக கிடக்கும் தமது ஜோடியை மடியில் தூக்கிவைத்து சிறீப்பிரியா கதறும், “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” என்ற வசனத்தை இறுதியில் ஒலிக்கவைத்துவிட்டு. இல்லை நேயர்களே உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன் என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெறுவது அதிசயிக்கவைத்தது.

அது மட்டுமின்றி அண்மையில் இராமேஸ்வரம் சென்றபோது நான் சந்தித்த ஒரு வயதான இளைப்பாறிய அதிபர் ஒருவர். என்னுடன் நீண்டநேரமாக அளவலாவியபோது கே.எஸ்.ராஜா அவர்களின் குரலுக்கு தான் பரம இரசிகர் என்பது மட்டும் இன்றி அவர் பற்றிய பல தகவல்களையும் உட்சாகத்துடன் தெரிவித்தார். கே.எஸ்.ராஜா அவர்களின் நிகழ்ச்சிகள் பலவற்றை தாம் ஒலிப்பதிவு செய்து தற்போதும் பொக்கிசமாக வைத்திருப்பதாக தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு சென்னையில் தான் அவரை சந்தித்து பலமணிநேரம் கே.எஸ்.ராஜாவுடன் உரையாடியதாகவும் அந்த நாளை இன்னும் தன்னால் மறக்கமுடியாது என்றும் தெரிவித்ததுடன் எனக்கு தெரியாத பல விடயங்களை என்னிடன் அவர் பேசியது என்னை பிரமிக்கவைத்தது.

கே.எஸ்.ராஜா பற்றியும், கே.எஸ்.ராஜாவுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒலிப்பதிவினையும், விளம்பர ஒலிப்பதிவு சிலவற்றையும் நண்பர் யாழ் சுதாகர் அவர்கள் http://madhurakkural.blogspot.com/ என்ற வலையமைப்பில் பதிந்துவைத்துள்ளார். கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி தெரியாத இன்றைய இளம் அறிவிப்பாளர்கள், இளையவர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து கே.எஸ்.ராஜாவின் மதுரக்குரலினை செவிமடுத்துக்கேட்டு, பல அரிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

1989ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவித செயல் ஒன்றின்மூலம் கே.எஸ்.ராஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

பி.எச்.அப்துல் ஹமீத்

இந்தக்குழந்தை தொட்டிலில் இருந்து கேட்டுக்கொண்டே வளர்ந்தது உங்கள் குரலைத்தான். கண்டிருந்தேன் பல கனவுகள் உங்களிடம் பேசுவதாக…இன்று!
கனவில்லை நிஜமாகவே உங்கள் பகத்தில் நான்”
திரு. அப்துல் ஹமீத் அவர்களை முதல் முதலாக சந்தித்து அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அன்று நான் அவரிடம் வாங்கிய ஓட்டோகிராப்பில் நான் எழுதிய வசனம் இதுதான்.
உண்மையில் அந்த அளவுக்கு நான் அவரது குரலுக்கும், தமிழுக்கும் மகுடி ஒலி கேட்ட பாம்பாகவே மாறிவிடுவது என்னமோ உண்மையே.
எந்த வளமில்லாத தமிழ்ச்சொல்லும் அவரது வாயில் இருந்து வரும்போது வயதிற்கு வந்துவிடுவது அச்சரியமே.


உலகத்தமிழ் அறிவிப்பாளர் என்ற சொல் கனகச்சிதமாக அவருக்கு பொருந்திவிட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு வானொலி நாடகக்கலைஞனாக அறிமுகமாகி, வானொலி நாடக நடிகனாக, நாடக நடிகனாக, நாடக தயாரிப்பாளனாக, அறிவிப்பாளராக, வர்த்தக அறிவிப்பாளராக, போட்டி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, செவ்வி காண்பவராக, திரைப்பட நடிகராக என பல பாத்திரங்களை தனது வாழ்க்கையில் அப்துல் ஹமீத் அவர்கள் வகித்துள்ளார்.
பெரிதாக கல்வி கற்றிராதபோதும் தனது முன்னேற்றத்திற்கு ஏற்றவாறும், அறிவிப்புத்துறைக்கு ஏற்றவாறும் பல தேடல்கள் மூலமாக சிறந்த ஒரு அறிஞனாக தன்னை உருவகித்துக்கொண்டது இவரது தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.


ஞாபக சக்தி என்ற பதத்திற்கு கண்டிப்பாக ஹமீத் குறிப்பிட்டு காட்டப்படவேண்டிய ஒருவரே. இன்றும் கூட தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து எத்தனை பாடல்கள் என்றாலும் அந்த பாடல் பற்றிய சகல விடயத்தினையும் தனது நினைவாற்றல்மூலம் கொண்டு சிறந்த ஒரு நடமாடும் ஒலிப்பேழை களங்சியமாக அவர் திகழ்ந்துவருகின்றார்.
திரு அப்தல் ஹமீத் அவர்களைப்பற்றி கூறிக்கொண்டேபோகலாம்.
மேலும் இவர் பற்றி பல அரிய தகவல்கள், அவரது செவ்விகள், அவர்பற்றிய தகவல்கள், என்பவற்றை பெற http://www.bhabdulhameed.com என்ற அவரது இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

Sunday, September 6, 2009

C.J.7


மிகப்பிரமாண்டமாக அதிக பொருட் செலவுகளை கொண்டு தயாரிக்கப்படும் வர்த்தக படங்களைவிட ஒரு சிறிய உணர்வோட்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அதிசயிக்கவைக்கும் கதைகள் கூட மக்களின் மனதில் நிலைத்துநின்று வெற்றியினை இலகுவாக அடைந்துவிடுவதை நாம் பார்த்துள்ளோம்.
குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து 80களின் மையப்பகுதிகளில் இருந்து பல தரமான ஈரானிய, சீன திரைப்படங்கள் வெளிவந்து பார்ப்பவர்களின் உணர்வுகளை உறையவைத்துள்ளன.
இந்தப்பாதையில் தற்போது தமிழும் வர தயாராக இருப்பதை “பசங்க” திரைப்படம் உணர்த்தியுள்ளதாலும், ஈரானிய, சீன குழந்தைகள் திரைப்படத்தின் போக்கில் இருந்து மாறுபட்டு தமிழ்த்திரைப்பட நெடியில் இருந்து வெளிவரவில்லை என்றே கூறவேண்டும்.


பொதுவாகவே இன்று இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் இருக்கும் ஒவ்வொருவருமே, குழந்தைப்பருவத்தில் இருந்தவர்களே, அந்தப்பருவத்தின் சுகங்கள் மீண்டும் கிடைக்காத ஏக்கத்தில் தகிப்பவர்களே. எனவே குழந்தைகளின் உணர்கள், அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பவற்றை ஆழமாக உணர்வோடு ஊடுருவிப்பார்க்கும் திரைப்படங்கள், பார்ப்பவர்களை எழிதில் உறையவைத்து அவர்களின் மனங்களில் நின்றுவிடுகின்றன.
உதாராணங்களாக இத்தகய திரைப்படங்கக்களுக்காகவே எனது முன்னைய ஒரு பதிவில் (http://janavin.blogspot.com/2009/07/blog-post_13.html) விரிவாக சுட்டிக்காட்டியிருந்த, த பாதர், கலர் ஒவ் பரடைஸ், சில்ரன்ஸ் ஒவ் ஹவின் போன்ற திரைப்படங்களைக்கூறலாம்.


அந்த வகையில் சிறுவன் ஒருவனை மையப்படுத்தி அவனுடன் பாசம்காட்டும் அதிசய நாய் ஒன்றின் கதையே சீ.ஜே.7 திரைப்படத்தின் கதையாகும். சென்றவாரம் குமுதம் இதழிலும் “அரசு” அவர்கள் தமது கேள்வி பதில் பகுதியில் இந்த திரைப்படம் பற்றி குறிப்பட்டிருந்ததும், ஏதேட்சையாக இந்த திரைப்படத்தின் டி.வி.டி எனது கண்ணில் பட்டதும் இந்த பதிவினையே உருவாக்கியுள்ளது என்பதை கூறிக்கொள்கின்றேன்.
கொலம்பியா பிக்ஸர்ஸ் ஏசியா, பீஜிங் பிலிம்ஸ் ஸ்ரூடியோ என்பவற்றின் கூட்டுத்தயாரிப்பில், வோய் ஷிங் ரென்னின் நெறியாள்கையில் உருவாகி, 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட திரைப்படம் இதுவாகும்.

சரி.. இனி திரைப்படத்தின் கதைக்குவருவோம், கட்டிடம் கட்டும்பணியில் தினக்கூலியாக வேலை பார்க்கும் “ரீ” என்ற ஏழையின் ஒரே ஒரு மகனே இந்த கதையின் நாயகன் டிக்கி. ஆறுவயதுடைய இவன் தாய் இல்லாத பிள்ளை என்ற காரணத்தினால் அந்த ஏழைத்தந்தையால் மிகவும் செல்லமாக வளர்க்கப்படுகின்றான். அதனாலேயே வறுமைக்கோட்டிற்கு மிக அடியில் இருந்தாலும்கூட தனது மகனை பணம் படைத்தவர்கள் கற்கும் தனியார் பாடசாலை ஒன்றில் கற்கவைக்கின்றார். அழுக்கான உடைகள், கிழிந்த சப்பாத்துக்கள், அழுக்கான காலுறைகளுடன் பாடசாலை வரும் டிக்கியை வகுப்பாசிரியர் மிஸ்ரர். சாஓ தீண்டத்தகாத ஒருவனாகவே நடத்துகின்றார். அவன் பக்கத்தில் வருவதையே அவர் அனுமதிப்பது இல்லை. ஒரு கட்டத்தில் கைதவறி விழும் அவரது பாக்கர் பேனாவை மரியாதையாக எடுத்துக்கொடுக்கும் டிக்கியை, திட்டிவிட்டு. விழுந்த இடத்திலேயே பேனாவை போடும்படி கூறிவிட்டு, பேனாவை தனது கைக்குட்டையால் எடுத்து அவன்மேல் உள்ள அருவருப்பினை காட்டி நம்மை அருவருக்க வைக்கின்றார் அந்த ஆசிரியர்.


ஆனால் அந்தப்பாடசாலையில் ஆசிரியர் கேட்கும் வசந்தம் பற்றிய ஒரு கேள்விக்கு “வசந்தங்கள் வழமையானவைதான், ஆனால் ஒவ்வொரு வசந்தங்களிலும் இடம்பெறும் சம்பவங்கள் வேறுபட்டவை” என்று அவன் தெரிவிக்கும் பதிலில் இருந்தும், உடல் பருமன் காரணமாக அனைத்து மாணவர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு, ஒதுக்கப்படும் மஹ்கி என்ற உடல் பருத்த சக மாணவிக்காக டிக்கி வாதாடுவதில் இருந்தும், அவள்மேல் கருணை காட்டுவதில் இருந்தும் அவனது குண இயல்புகள் உணர்த்தப்படுகின்றது.
அவனுக்கு வில்லன்களாக அவனது வகுப்பைச்சேர்ந்த ஜோன்னி குழுவினர் எப்போதும் அவனை தாக்குவதிலும், அவனை கிண்டலடித்து ஒதுக்குவதிலுமே குறியாக இருக்கின்றனர். அவனுக்கு அந்தப்பாடசாலையில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் மிஸ்.யூஆன் என்ற அழகிய ஆசிரியைதான்.


பணக்கார சிறுவனான ஜோன்னி பாடசாலைக்கு சி.ஜே.2 என அழைக்கப்படும் ரோபோ ரக நாய் ஒன்றை கொண்டுவந்து தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிக்கின்றான். அதை ஒதுங்கியிருந்து, ஆவலுடனும் ஆசையுடனும், கண்களில் ஏக்கத்துடனும் பாhர்க்கின்றான் டிக்கி. அதைக்கவனித்த ஜோன்னி குழுவினர் அவனை விரட்டி அடிக்கின்றனர். அதன் பின்னர் தன் தந்தையுடன் வீதியோரம் அமர்ந்து தொலைக்காட்சி விற்பனை நிலையத்தின் கண்ணாடிச்சாளரத்தினூடாக தொலைக்காட்சியை பார்த்து இரசிக்கின்றான் டிக்கி. திடீரென அருகில் இருக்கும் சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் நுளைகின்றான். அங்கே அந்த ரோபோ ரக பொம்மையை பார்த்து அதை ஆசையுடன் எடுத்து பார்க்கின்றான். உள்ளே நுளைந்த தந்தை அவனை வெளியே வருமாறு அழைக்கின்றார். அனால் டிக்கி அந்த நாய் ரோபோ பொம்மை வேண்டும் என அடம்பிடிக்கின்றான். தமது நினைமையினை புரியாமலா நீ, இவ்வாறு நடக்கின்றாய், அதன் விலை என்ன தெரியுமா? என தந்தை அதட்டுகின்றார். இருப்பினும் அவன் அந்த பொம்மை வேண்டும் என தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றான். இறுதியில் தந்தை அவனுக்கு அடிக்கின்றார். அங்கிருந்து ஓடுகின்றான் டிக்கி. வழியில் அவனது ஆசிரியை மிஸ் யூஆனை கண்டு அவரைக்கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகின்றான் டிக்கி.


பழைய பொருட்கள் கொட்டப்படும் இடத்தில் இருந்து வீட்டிற்கு ஒரு மின்விசிறியை கொண்டு வருகின்றார் டிக்கியின் தந்தை. ஆவலுடன் இருவரும் அதை இயக்க முற்படுகின்றனர் ஆனால் மின் விசிறி சுழல ஆரம்பித்தவுடனேயே உள்ளே மின் ஒழுக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றாமல் நின்விடுகின்றது. சோர்வுற்றவர்களாக இருவரும் தூங்குகின்றனர்.
மறுநாளும் அதே பழைய பொருட்கள் கொட்டும் இடத்தில் வந்து பொருட்களை தேடுகின்றார் டிக்கியின் தந்தை. அப்போது அங்கே இருந்து “பறக்கும் தட்டு” ஒன்று மேலெழுந்து செல்கின்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக அங்கே நிற்கும் அவரின் கண் எதிரில் பச்சை நிறத்தில் பந்து போன்ற ஒரு பொருள் அந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து கிடப்பது தெரிகின்றது. அதை ஒரு விளையாட்டுப்பொருளாக தனது மகனுக்கு கொண்டுவந்து கொடுகின்றார் அவர்.


ஒரு கட்டத்தில் அந்தப்பந்தில் இருந்து நாய் ஒன்று உருவாகின்றது. அந்த நாய் உருவாகும்போது தான் பிரபஞ்சத்தில் மிதப்பதுபோன்றும், பிரபஞ்சத்தின் சக்தி அந்த நாய்க்கு உண்டு எனவும் டிக்கி அறிந்துகொள்கின்றான். அந்த நாய்க் குட்டியை யாருடைய கண்களிலுல் படாதபடி அவன் பாதுகாத்துக்கொள்கின்றான். அதற்கு சீ.ஜே.7 என்று பெயர் சூட்டுகின்றான். வழமையாக அழுகிப்போன அப்பிள் பழங்களை வெட்டி மிஞ்சும் சிறுதுண்டு நல்ல பகுதியை சாப்பிடும் அவன், பழத்தை எடுக்கும்போது அது தவறி கீழே விழுகின்றது, கீழே விழுந்த அந்தப்பழத்தினை சீ.ஜே.7 பார்த்ததும் ஒரு ஒளிதோன்றி மறைய அந்த அழுகிய பழம், புத்தம் புதிய பழமாக மாறுகின்றது. அன்று இரவே தந்தையும் மகனும் புழுக்கத்தில் படுத்திருப்பதை பார்க்கும் சீ.ஜே.7 தனது சக்தியால் மின் ஒழுக்கு ஏற்பட்டு தீர்ந்துபோயுள்ள மின் விசிறியின் வயர்களை சீரமைக்கின்றது உடனே மின்விசிறி சுற்றுகின்றது. அதாவது இறந்த கலங்களை மீண்டும் புதுப்பிக்கும் சக்தி இந்த நாய்க்குட்டிக்கு உள்ளது என்பது பார்வையாளர்களான எமக்கு புரிகின்றது.


ஆனால் அதனிடம் எதையும் செய்யும் சக்தி உள்ளது என்று நம்பும் டிக்கி, தான் பரீட்சை எழுதும் போது சீ.ஜே.7 தயாரித்துக்கொடுத்த கண்ணாடியை அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதாகவும், சீ.ஜே.7 தயாரித்துக்கொடுத்த ஒரு சப்பாத்தினை அணிந்து தான் ஒரு சுப்பர் ஹீரோ ஆவதாகவும் கனவு காண்கின்றான். அப்படியே நடக்கவேண்டும் என எண்ணுகின்றான். ஆனால் நிஜத்தில் எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றன. தான் எதிர்பார்த்த சக்தி சீ.ஜே.7 க்கு இல்லை என்றும் ஆத்திரத்துடன் அந்த நாய்க்குட்டியை அடித்து, சித்திரவதை செய்கின்றான் டிக்கி. ஆத்திரத்தின் உச்சியில் அதை ஒரு பையில்போட்டு குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வீதியில் நடக்கின்றான். அப்போதான் சுய நினைவுக்கு வந்தவனாக தான் கொஞ்சம் மோசமாக நடந்துவிட்டதாக உணரும் அவன் ஓடிச்சென்று குப்பை தொட்டியை பார்க்கின்றான் குப்பைத்தொட்டி காலியாக இருந்தது. தூரத்தில் குப்பைகள் சேகரிக்கும் வாகனம் சென்றுகொண்டிருந்தது.


சோகத்துடன் வீட்டிற்குவரும் அவன். வாசலில் நின்று அழுகின்றான். கதவை திறந்து அவனை உள்ளே இழுத்துச்செல்லும் அவனது தந்தை. உனக்கு ஆச்சரியமான பரிசு ஒன்று உள்ளது என சொல்லி, சீ.ஜே.7ஐ காட்டுகின்றார். அந்த நாய்க்குட்டியும், அவன்மேல் செல்லமாக தாவி தனது அன்பினை அவனுக்கு வெளிப்படுத்துகின்றது. அடுத்து நடந்துமுடிந்த பரீட்சையில் 00 மதிப்பெண்ணை பெற்ற அவன் அதை 100 என ஆக்கி தந்தைக்கு கொடுத்துவிட்டு போகின்றான். ஆனால் அவனது தந்தை அதை நம்பி தான் தொழில் புரியும் இடத்தில் தொழிலாளர்களிடமும், தனது முதலாளியான ஜொன்னியின் தந்தையிடமும் காட்டுகின்றார். ஆனால் முதலாளி உனது மகன் ஒரு ஏமாற்றுக்காரன், எனது மகனுக்குத்தான் அந்த வகுப்பில் முதல் புள்ளிகள் அவனுக்கே 100 வரவில்லை எனத் தெரிவிக்கின்றார். ஆத்திரமும் அவமானமும் உள்ளவராக வீடுவரும் தந்தை டிக்கியை அழைத்து விடயத்தை கேட்கின்றார். தான் புள்ளிகளில் மாற்றம் செய்ததை ஒத்துக்கொண்ட டிக்கி. தந்தையுடன் கோபித்தக்கொண்டு எனக்கு நீங்கள் தேவையில்லை என்று அழுதுகொண்டே ஓடுகின்றான்.


பின்னர் நன்றாக படித்து 65 புள்ளிகளை பெற்றுவிட்டு தந்தைக்கு அதைக்காட்ட ஓடிவருகின்றான் டிக்கி. தொழில் புரியும் இடத்தில், மேல் தளத்தில் இருந்து அசம்பாவிதம் ஒன்றினால் கீழே விழுந்து பலத்த காயத்திற்கு உள்ளாகின்றார் டிக்கியின் தந்தை. மரணத்துடன் போராடும் அவரை அவரது முதலாளி வைத்தியசாலையில் அனுமதித்திருக்கின்றார். டிக்கிக்கு எதுவும் புரியாமல் விழிக்கின்றான். ஆனால் அவனது அன்பு ஆசிரியை யூஆன் அவனுக்கு விடயத்தை புரியவைத்து அவனது வீட்டிற்கு அழைத்து செல்கின்றாள். அவளை தன்னை தனியாக விடும்படி கூறி அழும் டிக்கி, கதவைப்பூட்டிக்கொண்டு தனது தந்தையை நினைத்து அழுகின்றான். தனக்கு தந்தை தேவை என்பதையும், தனக்காக தனது தந்தைபடும் கஷ்டங்களையும் எண்ணி அழுகின்றான்.
அதேநேரம் தந்தையின் பையில் இருக்கும் சீ.ஜே.7 எழுந்து அவரது நிலையினை உணர்ந்து, தனது சக்தியால் அவரது கலங்களை புதுப்பித்து அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றது. அனால் இதற்கு தனது சக்தி முழுவதும் தேவை என்பதை உணர்ந்து, தனது உயிரின் சக்திகள் அனைத்தினையும் கொடுத்து அவரை காப்பாற்றுக்கின்றது.


மறுநாள் கண்விழிக்கும் டிக்கிக்கு அருகில் அவனது தந்தை படுத்திருக்கின்றார் சந்தோச மிகுதியால் அவரை கட்டிப்பிடித்து அழும் டிக்கி, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அவர் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று தனது அன்பை தெரிவிக்கின்றான். இறக்கும் தறுவாயில் இதை ஆனந்தக்கண்ணீருடன் பார்க்கின்றது சீ.ஜே.7. தனது எஜமானர்கள் தன்னை பார்க்கின்றனர் தனது அன்பினை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என துள்ளி எழுந்து அவர்களிடம் ஓட முற்படுகின்றது அது. ஆனால் முடியவில்லை. டிக்கியை பார்த்தவாறே தனது இறுதி பொழுதுகளை நெருங்கி மரணிக்கின்றது. அதன்பின்னர் சீ.ஜே.7 ஒரு பொம்மையாக மாறிவிடுகின்றது. அதை தனது கழுத்தில் அணிந்துகொண்டே அதன் நினைவுடனேயே திரிகின்றான் டிக்கி. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து தன் சீ.ஜே.7 தன்னிடம் திரும்பாதா? என ஆவலுடன் மைதானத்தில் படுத்திருக்கின்றான். அவனுக்கு நேரே பறக்கும் தட்டு ஒன்று பறந்து சற்றுத்தள்ளி இறங்குகின்றது. ஓடிச்சென்று ஆவலுடன் பார்க்கின்றான். அங்கே அவனும் சீ.ஜே.7ம் விருப்பத்துடன் ஆடும் பொனியம் இசைப்பாடலுடன் சீ.ஜே.7 முன்னால் ஓடிவர அதன்பின்னால் நிறைய அதை ஒத்த நாய்க்குட்டிகள் ஓடிவருகின்றன. இந்தக்காட்சியுடன் திரைப்படம் முடிவடைகின்றது.
இது உண்மையான நிகழ்வா அல்லது அவனது நினைவா? எனத் தெரியாமலேயே அந்த திரைப்படம் முற்றுப்பெறுகின்றது. ஆனால் பார்வையாளர்கள் நிச்சயம் டிக்கி சீ.ஜே.7ஐ மறுபடியும் அடைந்துவிட்டான் என்றே எண்ணுவார்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails