Sunday, October 9, 2011

சிங்களத் தலைமைத்துவத்தில் வித்தியாசமான ஒரு கருவறுப்பு விஜய குமாரணதுங்க!


விஜய குமாரணதுங்க!
இலங்கையில் வாழ்ந்துவரும் பெரும்பான்மையான சிங்களவர்களால் மட்டும் அல்ல சிறுபான்மையினரான தமிழர்களாலும் நேசிக்கப்பட்ட ஒரு மனிதர். இலங்கை சிங்கத்திரைப்பட புகழ்பெற்ற ஒரு நடிகர்.
'திரையில் தவிர நிஜத்தில் நடிக்கத்தெரியாத ஒரு நல்லவர்' என்று எப்போதும் மட்டுமல்ல இறக்கும்போதும்கூட அவரது நண்பன் ஒஸி அபயகுணசேகர சொல்லிக்கொண்டதற்கு ஏற்பவே வாழ்ந்தவர் அவர் என்று தமிழ்மக்கள்கூட இன்றும் கூறிக்கொள்ளும் மனிதர்.

தனது மனைவியும், இலங்கையின் இரண்டு பிரதமர்களான எஸ்.டபிள்யூ.அர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அகியோரின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தன் நாட்டின் உயர்சக்திமிக்க ஜனாதிபதியாக வருவார் என்று அவர் எப்போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
ஏன் என்றால் தனது மனைவி அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் அவர் பெரும் அக்கறை கொண்டிருந்தார் விஜய குமாரணதுங்க.

இடதுசாரி, சோசலிச சிந்தனைகளே விஜய் குமாரணதுங்கவை பெரிதும் ஈர்ந்திருந்தது. சோசலிஸ தத்துவத்தில் லெனினுடைய பல கொள்கைகள் பலவற்றில் அவர் பெரும் ஈடுபாடுடைய ஒருவராகவே இருந்துவந்தார்.
விஜய் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தி சிந்திக்கத்தெரியாத மனிதன் என்றும், மற்றவர்களின் கஸ்டங்களை கைகட்டி பார்த்திருக்கும் தன்மை விஜய்க்கு இல்லை எனவும், உதவி என்று கேட்குமுன்னமே ஒடி வந்து உதவும் ஒரு உன்னதமான நண்பன் விஜய குமாரணதுங்க என்று இன்றும் அவரது நண்பர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஏம்.ஜி.ஆரைப்போல சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் பிரவேசம் செய்துகொண்டவர் விஜய் குமாரணதுங்க, இலங்கையின் முதலவாது பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற பெருமையினை இன்றும் தன்னகத்தே வைத்துள்ள ஒரே கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியில் சேர்ந்துகொண்ட விஜய குமாரணதுங்க அந்த கட்சியின் பல செயற்பாடுகளிலும் முன்னிலையில் நின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 1974 ஆம் அண்டிலேயே அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்துப்போட்டியிட்ட சுதந்திரக்கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேஹடுவவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
இதனால் மீண்டும் ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவின் கழுகு கண்களுக்கு விஜய குமாரணதுங்க தப்பிக்க வாய்ப்பிருக்கவில்லை.
நக்ஸலைட் மற்றும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான அவதுர்று வழக்கில் விஜய் மாரணதுங்க சிறைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

பின்னர் சிறையில் இருந்து மீண்ட விஜய் குமாரணதுங்க முழுநேர அரசியலில் ஈடுபடும் நோக்கத்தை உறுதியாக எடுத்துக்கொண்டார். இந்தக்காலங்களில் இலங்கையில் இனப்பிரச்சினை விஸ்வரூபம் கொண்டு எழுந்து நின்றது.
அடக்குமுறைகளை அரசு தமது ஆயுதமாக தொடர்ந்தும் பயன்படுத்திவந்தது.
இந்த நடவடிக்கைகளை அடியோடு வெறுத்தார் விஜய் குமாரணதுங்க.
1984 ஆம் ஆண்டு ஸ்ர்P லங்கா மகஜன பக்ஸய (இலங்கை மக்கள் கட்சி) என்ற கட்சியை ஆரம்பித்தார். ஜாதி, மத, குலங்களுக்கு அப்பாற்பட்ட இலங்கை மக்கள் அனைவரும் சமம் எனவும் அனைவருக்கும் சமமான வாழ்வாதாரமும், சம பாதுகாப்பு உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கையுடன் நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவம் என்ற ஒரே குடையின்கீழ் கொணடுவரவதற்கு தாம் பாடுபட இருப்பதாகவும் அறை கூவினார் விஜய குமாரணதங்க.
இலங்கை சிங்கள தமிழர்களிடம் நிலவி வந்த இனப்பிரச்சினைக்கு சமஸ்டிமுறையிலான தீர்வே இறுதித்தீர்வு என்று அந்தக்காலகட்டத்திலேயே பெரும் சிங்கள பேரினவாத சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெளிப்படையாகவும், உறுதியாகவம் கூறியிருந்தார் விஜய் குமாரணதுங்க.
இந்த பதங்களை அவர் வெறும் பேச்சுக்கானதாக சொல்லவில்லை என்பதையும் செயல்வீரத்துடன் துணிவுடனே சொல்லியதாகவும் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளும் வண்ணம் எந்தவொரு சிங்களத்தலைவர்களும் செய்யமுடியாத செயலை செய்துகாட்டினார் விஜய குமாரணதுங்க.

1986 அம் அண்டு அப்போது விதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் குமாரணதுங்க.
அவர்மேல் உள்ள மரியாதை நிமித்தம். அவரது நேர்மைச்செயற்பாட்டிற்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் கைது செய்து வைத்திருந்த 12 பேர் அடங்கிய ஸ்ரீ லங்கா பொலிஸ் குழுவொன்றையும் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சாபக்கேடு இனவாதங்களில் ஊறிப்போன இரு கட்சிகளுமே மாறி மாறி அரசுக்கட்டிலில் வீற்றிருப்பதே. எபபோ சிந்தித்து புரட்சி ஒன்றை செய்ய முனையும் சிங்களத்தலைவன் ஒவ்வொருவனும் அதே இனவாதத்தினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அந்த குறிக்கு முன்னேற்றமான ஒரு பாதைக்கு இலங்கையை கொண்டு செல்ல எத்தனித்த விஜய் குமாரணதுங்கவும் தப்பிக்கமுடியவில்லை.
1988 அம் ஆணடு பெப்ரவரி மாதம் 16 ஆம் நாள் அவரது வீட்டில் இருக்கும்போதே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகளால் அவர் சுட்டு சரியக்கப்பட்டார்.

ஒரு பிரபல நடிகனாக விஜய் குமாரணதுங்க
காலங்களை மீறிய உடை அலங்காரம், நேர்த்தியான நடை உடை பாவனை, மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் முகம் என்பன சிங்ளகத்திரையிலே தோன்ற ஆரம்பித்தபோது, ஹிந்தி திரையில் சிக்கியிருந்த சிங்கள பார்வைகள், தமது சினிமாப்பக்கம் வர ஆரம்பித்தன.
'ஹந்தான கத்தாவ' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய விஜய குமாரணதுங்க தொடர்ந்தும் 141 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் சுவாரகசியமான விடயம் என்னவென்றால் 1979 ஆம் ஆண்டு இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பில் உருவாகிய நங்கூரம் என்ற திரைப்படம் வந்திருந்தது. முத்துராமன். லக்ஸ்மி ஆகியோர் இதில் நாயக நாயகியாக நடித்திருந்தனர், இந்த திரைப்படத்தில் விஜய் குமாரணதுங்க நடித்திருந்தார், அவருடன் இணைந்து இலங்கையரான ஏ.ஈ.மனோகரனும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதுடன், இந்த திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இலங்கை இசையமைப்பாளரான ஹேமதாஸவும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1945 ஆம் ஆண்டு இதேநாள் பிறந்திருந்த விஜய குமாரணதுங்க இன்றிருந்திருந்தால் அவருக்கு வயது 66.

Saturday, October 8, 2011

பெண்களுக்கு ஏற்ற இடம்!பெண் எனப்படுபவள் பூவைப்போன்றவள், தேவை ஏற்படும்போது புயலாகவும் மாறக்கூடியவள், நாளைய சமுகத்தின் வளர்ச்சி அவள் கையிலேதான் உள்ளது, பெண்மைபோற்றும் உலகமே உன்னத உலகம் என்றெல்லாம் எழுதி பெண்களையே கடுப்பேற்ற நான் விரும்பவில்லை.

இருந்தாலும்கூட பெண்கள் பற்றி சில விடையங்களை பேசாமல் இருந்துவிடவும் முடியாது. சமூக அக்கறை கொண்ட சமுகத்தின்மேல் அதன் முன்னேற்றத்தின்மேல் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பெண்களின் முன்னேற்றம் வளர்ச்சி சுதந்திரம் பற்றி பேசாமல் இருக்கமுடியாது.
அதனால்த்தான் உண்மையான சுதந்திரம் பற்றி பேசிய மகாத்மா காந்தி நள்ளிரவில் ஆபரணங்களுடன் தனிமையாக ஒரு பெண் சுதந்திரமாக அச்சமின்றி செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் என்று கூறியிருக்கின்றார்.
இங்கே அவர் நள்ளிரவில் தனிமையில் செல்லும் பெண் ஒருத்தியை தனியே முன்னிறுத்தவில்லை இந்த ஒரு உதாரணத்திலே சமுகத்தில் ஏற்படவேண்டிய பல மாற்றங்களையும், பெண்ணிய சுதந்திரம் அபரிதமான வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார் என்றே கூறலாம்.

ஒரு விடயத்தை உன்னிப்பாகவும், நேரடியாகவும் கவனித்தீர்களேயானால் பெண்ணை அடிமைப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக இருக்கும் என்பதையும், ஒரு பெண் அடிமைப்பட்டால் ஒரு நாட்டின் எதிர்காலமே அடிமைப்படப்போகின்றது என்பதும் வெளிப்படை உண்மை.
காரணம் ஒரு பெண்தான் நாளைய சமுதாயமான தன் குழந்தைகளை ஈன்று வளர்க்கின்றாள், அவளே அடிமைப்பட்டு, கல்வியறிவற்று திறனற்று இருந்தால் அவளின் குழந்தைகள் எப்படி அறிவாhர்ந்தவர்களாக மாறுவது?

இன்று வளர்ச்சி கண்ட அபிவிருத்தியை வெற்றிகொண்ட நாடுகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம், சமத்துவம், அனைத்துமே அந்த நாடுகளை இந்த நிலைக்கு கொண்டுவந்தன என்பதிலும் எந்த உண்மையும் இல்லாமல் இல்லை.
இன்றைக்கு பதினான்கு ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் ஒலித்துக்கொண்டிருக்கும் 33 வீத இட ஒதுக்கீடும், தொடர்ச்சியான கோரிக்கைகளும் எதைக்காடுகின்றது?
பெண் என்ற பார்வையினை இந்தியா போன்ற நாடுகள் இன்னும் களைந்துவிட்டு உலக சவால்களை வெற்றிகொள்ளும் பாதையில் பயனிக்க தயார் இல்லை என்பதையே. பெண்ணுக்கு உரிய இடத்தையோ உரிமைகளையோ இன்னும் வளங்காது இதுபோன்றே பயணிக்க எத்தனித்தால் 2020 இல் வல்லரசு என்ற கனவு பகல்கனவுதான்.

மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள் கல்விநிலையில் இன்று வியக்கத்தக்க முன்னேற்றங்களையும், சிறப்பு தேர்ச்சிகளையும் பெற்றுவருவது மனதிற்குள் ஒரு ஓரத்தில் ஒளியை பரவவிடுவதுபோன்ற உணர்வை தருகின்றது.
இருந்தபோதிலும் கிராமமட்டங்களில் பெண்களின் கல்வி நிலைகள் உயர் கல்விக்கு செல்லாது இருப்பது வேதனையானதே.
மற்றப்பக்கம் இன்று வெளியிடப்படும் சகல பரீட்சை பெறுபேறுகளிலும் பெண்கள் முன்னிலையில் நிற்பது ஆணாதிக்க வர்க்க சிந்தனைகளுக்கும், ஆதிக்கங்களுக்கும் கிடைக்கும் செருப்படி என்பது குறிப்பிடத்தக்கது.

சரி... இப்போது விடையத்திற்கு வருவோம் ஆம் இன்றைய உலகில் பெண்களுக்கு எற்ற இடம் என்று ஆய்வுகளில் முதல் இடத்தில் இருக்கும் இடம் அல்லது நாடு எது தெரிமா?
ஐஸ் லன்ட்.....

பெண்ணியம், சட்டபாதுகாப்பு, சுகாதாரம், உரிமைகள், பாதுகாப்பு, பெண் முன்னேற்றம், கல்வி என்பனவற்றை அடிப்படையாக வைத்து உலக நாடுகளில் மேற்கொண்ட ஆராட்சி முடிவுகளே இதை சொல்கின்றது.

இந்த வகையில் பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளாக முதல் ஐந்து இடத்தையும் பெற்றுள்ள நாடுகளாவன, ஐஸ்லன்ட். சுவீடன், கனடா, டென்மர்க் மற்றும் பின்லான்ட் ஆகியன.
இந்த வகையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா 8 ஆம் இடத்திலும், இங்கிலாந்து 19 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

அதேவேளை பெண்கள் வாழ்வதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக ஸாட், ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ, மலீ, சொலமன் தீவுகள், நைகர், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலிடப்படடுள்ளன.

அப்ப நம்ம நாடுகள் இதிலை எத்தனையாவது இடங்களை பிடித்துள்ளன என்று அறிய உங்களுக்கு மட்டுமில்லைங்க எனக்கும் ஆவலே. இந்த வகையில் ஸ்ரீ லங்கா பெண்களுக்கு வாழ்வதற்கு ஏதுவான நாடுகள் பட்டியலில் 74ஆவது இடத்தை பிடிச்சுருக்கு. பரவாயில்லையே என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது, இந்த முன்னிலைக்கு காரணம் கல்விவீதம் கூடியதாக இருப்பதே, சட்டபாதுகாப்பு, பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பதில் பின்னிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பெரும் யுத்தம் ஒன்றினால் சூழப்பட்டிருந்த ஒரு தேசம் என்ற வகையில் இந்த நிலை ஸ்ரீ லங்காவைப் பொறுத்தவரையில் போதுமானதே.

அடுத்து இந்தியா.... பெண்கள் நள்ளிரவு சுதந்திரமாக அபரணங்களுடன் செல்ல கனவு கண்ட தேசபிதாவின் நாடு இதில் இருப்பது 141ஆவது இடத்தில்.

வல்லரசுப்பார்வை ரொம்ப தெளிவா இருக்கு.....

Friday, October 7, 2011

வோட்டர் கேட்


கால் ஃபேர்ன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட், இந்த இருவரையும் இன்றைய ஊடகவிலாளர்கள் மட்டும் அல்ல, செய்தித்துறை, எழுத்துத்துறை, பதிவுலகத்துறையில் இருக்கும் அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
தமது பேனாமுனை என்ற ஆயுதத்தால் ஒரு மிகப்பெரிய வல்லரசின் தலைமை நாக்காலியையே சரித்துவிழுத்திய சரித்திர நாயகர்கள் இவர்கள்.
ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு என உலகிற்கு புடம்போட்டுக் காட்டியவர்கள் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர்.

வோட்டர் கேட் ஊழல்

அமெரிக்காவின் வரலாற்றிலேயே வோட்டர்கேட் ஊழல் மிக முக்கியமான ஒன்றாகும்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1968 முதல் 1974 வரை இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55 வயதில் 1968 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1972 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வேளையில் 1973ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர் ஜனாதிபதி நிக்ஸன் மேல் குற்றம்சாட்டி, சில ஆதாரங்களுடன் அமெரிக்காவையே திடுக்கிடவைத்த செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். என்னதான் பெரிய ஜனநாயக நாடு என்றாலும் அந்த நாட்டின் தலைவர்மேல், ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தி ஒரு செய்தியை வெளியிடுவதாக இருந்தால் இந்த இரண்டுபேரும் எத்தனை நெருக்குவாரங்களை சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இது குறித்து பின்னாளில் நிக்ஸனே தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.

சரி என்ன இந்த வோட்டர்கேட்? அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்.
தேர்தல் வேளையில் இங்கு இந்த எதிர்க்கட்சியின் தலைமையகம் இருந்த வோட்டர்கேட் மாளிகையில் நிக்ஸனின் பணிப்பின் கீழ், மிக இரகசியமான முறையில், நவீன தொழிநுட்பமுடைய ஒலிப்பதிவு கருவிகளைப்பொருத்தி, அங்கு எதிர்கட்சியினரின் உரையாடல்களை, மற்றும் அவர்களின் செயற்திட்டங்களை, கள்ளத்தனமாக அறிந்துகொண்டு, அவர்களின் தேர்தல் விபரங்கள் பற்றி முற்றுமுழுதாக அறிந்துகொண்டு, தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பதே இந்த இரண்டு பத்திரிகையாளர்களாலும் சில ஆதாரங்களுடன் எழுதப்பட்ட திடுக்கிடவைத்த செய்தியாகும்.


இந்த விவகாரம் 1974இல் பூதாகரமானது, அவரது கட்சியினரே, எதிர்கட்சியுடன் சேர்ந்து நின்று இந்த மோசடிகுறித்து விவாதிக்கும் நிலை உருவாகியது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோசடிக்குற்றச்சாட்டை நிக்ஸன் மறுத்தேவந்தார். இருந்தாலும், நாளுக்கு நாள் ஆதாரங்கள் வலுப்பெறத்தொடங்கியதுடன் பிரச்சினை மிகப்பெரிய நிலைக்குச்சென்றது.
இந்த நிலையில் இதுகுறித்து பூர்வாங்க விசாரணைகளை நடத்தி அமெரிக்க செனட் குழு “நிக்ஸன் குற்றவாளி என்றும்” அவரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவரலாம் எனவும் ஆணையிட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "நான் குற்றவாளி" என்றும் ஒப்புக்கொண்டார்.

தான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, "நான் பதவியில் இருந்து இராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்" என்று அறிவித்தார்.
உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.
நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். "பதவியை விட்டு நீங்களே விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்" என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக இராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
9.8.1974 அன்று அதிகாலை 6.30 மணிக்கு நிக்சன் தொலைக்காட்சியில் தோன்றி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு இராஜினாமா ஏற்கப்பட்டது.

நிக்ஸன் பதவி விலகியவுடன் அதற்கு காரணமாக இருந்த செய்தியார்களான கால் ஃபேன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட் அகியோரின் புகழ் எங்கும் பரவியது. அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய பல செய்திகள், புலனாய்வுச்செய்திகள், மற்றும் விபரணங்களை வாங்க பல நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றன.
ஒரு விதத்தில் நிக்ஸனால் இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால் பாவம் நிக்ஸன் பதவி விலகியதன் பின்னர் கலிபோர்னியாவில் வசித்த அவரால் அரசாங்க வரியைக்கூட கட்டமுடியாமல் போனது.

கால் ஃபேர்ன்ஸ்ரன்

1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வோஷிங்டனில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு யூதராவார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கல்வி கற்றாலும் இவர் அதை பூர்த்தி செய்து பட்டம் பெற்றிருக்கவில்லை.
பின்னர் ஒரு ஊடகவிலாளராகவும், எழுத்தாளராகவும் அவர் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட்; பத்திரிகையில் இவரும் ஃபொப் வூட்வேர்ட்டும் இணைந்து எழுதிய வோட்டர்கேட் ஊழல் மோசடி பற்றிய செய்தியே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அதைத்தொடர்ந்து அவருக்கு உச்ச விருதான புலிச்சர் விருதும் அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் பின்னர் ஒரு விடயம் சம்பந்தமாக ஆணித்தரமாக இவரது கட்டுரை ஒன்று வெளியானமையினைத்தொடர்ந்து சி.ஐ.ஏ.யினரின் விசாரணைகளுக்கு இவர் உட்படுத்தப்பட்டிருந்தார்.
இருந்தபோதிலும் தொடர்ந்தும் தனது எழுத்துப்பணிகளை தொடர்ந்துகொண்டிருக்கும் அவர் வினிட்டி ஃபெயார் என்ற சஞ்சிகையினை வெளியிட்டுவருகின்றார்.

ஃபொப் வூட்வேர்ட்

ரொபேர்ட் உப்ஷர் வூட்வேர்ட் என்ற இயற்பெயர்கொண்ட இவர் 1943ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ஆம் திகதி பிறந்தவராவார். ஜாலே பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர் ஊடகத்துறையில் பிரவேசம் செய்தார்.
பல்வேறு ஊடக நிறுவனங்களில் தொழிலாற்றிவந்த இவர் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், கால் ஃபேர்ன்ஸ்ரன் உடன் செய்தி வழங்கிய வோட்டர்கேட்டே இவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
1973,2002 ஆம் ஆண்டுகளில் இவர் புலிச்சர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த ஊடகவிலாளருக்கும் அமையாததுபோல முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸை ஆறு தடவை இவர் பேட்டிகண்டுள்ளார். அதேவேளை Bush at War (2002), Plan of Attack (2004), State of Denial (2006), and The War Within: A Secret White House History (2006–2008) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.


மீள் பதிவு

Thursday, October 6, 2011

தமிழ் மணமும் இந்த வார நட்சத்திர அறிமுகமும்.


தமிழ் வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு ஒரு நறுமண பூங்காவாக தமிழ் மணம் உள்ளது என்பது நான் கூறி தெரியவேண்டிய ஒரு விடயம் அல்ல.
எம் மனதுக்குள் கருக்கொள்ளும் விடையங்கள் எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்துவிடாது, வலைகளில் பிரசவமாகி பலர் கண்களில் சிரிக்கவேண்டும் என்றதனாலேயே பதிவர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த வகையில் பதிவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றையும் பல மட்டத்திற்கும் கொண்டுசெல்லும், உன்னதமான சேவைகளையே திரட்டிகள் என்ற வகையில் தமிழ் மணம் இந்த திரட்டிகளில் முன்னிலையில் நின்று செய்துகொண்டுள்ளது.

ஓவ்வொரு கட்டத்திலும் தமிழ் மணம் சமயோசிதமாக யோசித்து தமது ஒவ்வொரு தடங்களையும் இடுவதையும், தூரநோக்குடன் ஒவ்வொருபதிவரும் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் சிலநடைமுறைகளை கொண்டுவருவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயமே.

நன்றிகள்...
இந்தவாரம் தமிழ்மண நட்சத்திரமாக என்னை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ் மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேநேரம் புதிய இடுகைகள் பற்றிய தமிழ் மணத்தின் கொள்கைகள் முழுமையாக எனக்கு பிடித்துப்போயுள்ளது. அதேவேளை தமிழ் மணம் செய்யவேண்டும் என்ற அபிலாசைகள் சிலவும் என் மனதில் உள்ளன, அதை நான் இங்கே கூறத்தேவையில்லை. நான் நினைக்கும் தேவையான சில நடைமுறைகளையும் தமிழ் மணம் விரைவில் நிறைவேற்றும் என்ற முழுமையான நம்பிக்கை என்னிடம் உண்டு.

என்பதிவுகள் பற்றி.
என்னதான் திரட்டிகள் முன்னிடம் தந்தாலும் அந்த திரட்டிகள் என்னை கவனிக்க வைப்பவர்கள் என் வலையின் வாசகர்கள், மற்றும் பதிவர்கள் அல்லவா?
எனவே முக்கியமான நன்றிகளை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டிய தேவை எனக்கு உள்ளது.
ஆரம்பம் முதலே எழுதும் ஒவ்வொரு பதிவும், யாரோ ஒருவனுக்கு தேவையானதாக இருந்தாலே போதும் என்ற நோக்கத்துடனேயே தொடர்ந்தும் பதிவுகளை இட்டுவருகின்றேன். பயனுறப்பதிவெழுதல் என்ற வாக்கியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அயராது எழுதவேண்டும் என்பதே என் அவா.. தொடர்ந்தும் அந்தப்பாதையிலேயே பயணிக்கவேண்டும் என்பதே இந்த பதிவுலக இலட்சியமாக உறுதியாக என்னுள்ளே உள்ளது.

பதிவர்களுக்கு நட்பாக ஒரு வேண்டுகோள்...
உண்மையை சொல்லவேண்டும் என்றால், எனது இணைய மேச்சல்களில் பல தளங்களை எழுதும் புதியவர்களின் பல ஆச்சரியமான அபாராமான, பயனுள்ள, ஒரு அராய்வு போன்ற பதிவுகள் எல்லாம் திரட்டிகளில் இணைக்கப்பட்டிருந்தாலும் எவர் கண்களிலும் படாமல் இருப்பதை கண்டு ஆச்சரியம் மட்டுமல்ல வேதனையும் பட்டு, அவற்றை எனது சமுக இணைய தளங்களிலே இணைத்தவருகின்றேன்.
மறுபக்கத்தில் பலர் பதிவுகளில் அனைவரையும் தம் பக்கம் இழுக்கும் ரெக்னிக்களை கையாண்டு, தமது பதிவுகளை என்ன எழுதினாலும் திரட்டிகளில் முன்னுக்கு நிற்கும் வண்ணம் செய்துவருகின்றனர்.
இதை ஒரு பிழையாக நான் குற்றம் சுமத்தவில்லை இப்படியே தொடரும் என்றால் புதிதாக எழுததொடங்கும் பலர் தாம் கவனிக்கப்படாமல் பதிவுகளை எழுதுவதை நிறுத்தும் அபாயமும் உள்ளது.
உபயோமாக பலநாள் ஆராய்ந்து கஸ்டப்பட்டு நல்லபதிவு எழுதவேண்டும் என்று எண்ணும் புதியவர்களை கொஞ்சம் யோசித்துப்பார்க்கவும் வேண்டும் அல்லவா?
எனவே இனிவரும்காலங்களிலாவது புதியவர்களின்மேல் பல பதிவர்களின் கண்கள் பரவட்டும், அவர்கள் எங்கள் வலைப்பதிவுக்கு வருகின்றார்களா? எமக்கு ஓடடு போடுகின்றார்களா? பின்னூட்டம் போடுகின்றார்களா? என்ற சிந்தனைகளை கழைந்துவிட்டு, புதியவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட, ஏற்றிவிடும் ஏணிகளாக இப்போதைய பிரபல பதிவர்கள் முன்வரவேண்டும்.

ஒருவகையில் சொல்லப்போனால் இந்த பதிவை வடிக்கும் நான் உட்பட என்கால பதிவர்கள் பலர் புதியவர்களை ஊக்கிக்கும் பதிவர்களாகவும், அவர்களை பதிவுலகில் முன்கொண்டுவருபவர்களாகவுமே இருந்தோம். ஆனால் அதன் பின் வந்த சில பதிவர்கள் தமக்கு பின்னதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்கள் பற்றியும் சிந்திக்கவேண்டிய பெருந்தேவை உள்ளது.

ஹிட் என்னும் மாஜை!
பதிவுலகத்தில் இருக்கம் திரட்டிகளில் ஹிட் ஆவது என்னும் ஒரு மாஜை இன்று அனைத்து பதிவர்களிடமும் ஒரு வெறியாக உள்ளதை காணக்கூடியாதாக உள்ளது. இந்த ஹிட் மாஜைகள் நிற்சயம் சில வேறுகோணங்களுக்கு பதிவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே இழுத்துக்கொண்டு செல்கின்றது என்பதே என் எண்ணம்.
என்னைப்பொறுத்த வரையில் சத்தியமாக இந்த ஹிட் என்னும் நோக்கம் என்னிடம் சத்தியமாக இல்லை. (என் பதிவுகள் பிரயோசமானவை என்றால் அவை பலருக்கு சேரவேண்டும் என்பதற்காகவே திரட்டிகளில் இணைக்கின்றேன், எந்தவொரு காலகட்டத்திலும் எனக்கு ஓட்டுபோடுங்க என்று என் வலையில் எழுதவில்லை) நன்றாக ஆழமாக, பலவிடையங்களையும், சமுகத்திற்கு தேவையான விடையங்களையும் எழுத ஆசைகொண்டுள்ள ஒருவனைக்கூட இந்த ஹிட் மோகம் வெறு திசைகளுக்கு இழுத்து செல்கின்றது என்பதே இன்று பதிவுலகத்தில் கண்ட உண்மைகளாக உள்ளது, உதாரணமாக திசைமாறி இன்று சினிமாவும், மொக்கையும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள் அனேகர், அவர்களின் ஆரம்பகால பதிவுகளை எடுத்து பார்த்தால் அதிர்ந்துவிடுவீர்கள், ஏன் என்றால் அன்று அவர்கள் எழுதியவை அத்தனையும் தரமானதாக இருப்பதை காணலாம்.
எதோ கைவந்தபோக்கில் எழுதி ஹிட் ஆகும் பதிவு ஒன்றைவிட, கஸ்டப்பட்டு தேடி, அறிந்து எழுதும் பதிவு ஒன்றை முழுமையாக ஒரு நான்குபேர் வாசித்தாலே அது மெகா ஹிட் என்பதே என் அசைக்கமுடியாத உண்மை.
இராமசாமி அவர்களும், முனைவர் பாலகிருஸ்ணனும் அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதை சொல்ல இவர் என்ன பெரிய ஆளா? எதையோ யாரையோ மனதில் வைத்துதான் இவர் இதை எழுதுகிறாரோ என்று எண்ணுவது உண்மையில் மடமையே. உண்மையில் என் அபிலாசையையும் பதிவர் என இல்லாமல் பதிவுலக வெறும் வாசகன் என்ற கோணத்தில் நின்று யோசித்ததாலேயே பதிவர்கள் அனைவரும் நண்பர்கள் என்ற உரிமையுடனேயே இதை சொன்னேன்,
தப்பாக இருந்தால் மன்னித்துவிடவும்.

மன்னிப்பு
உண்மையில் கடுமையான நேரமின்மைக்கு மத்தியில் நட்சத்திரப்பதிவர் ஆக்கிவிட்டார்கள், ஒவ்வொரு நாளும் பதிவு போடவேண்டும் என்ற வெண்டுகோள் ஒன்றும் உள்ளதனாலேயே இந்தவாரம் கிடைக்கும் அரை மணி நேரத்தில் அவசரமாக ஓடிவந்து ஒரு பதிவினை போட்டுவிட்டு, மீண்டும் இரவு பகலாக வேலைகளில் மூழ்கிவிடுகின்றேன். இதனால் சக பதிவர்களின் தளங்களை இன்னும் ஒருவாரத்திற்கு வாசிக்கவோ கருத்து பகிரவோ முடியாதிருக்கும், இதற்காக பதிவுலக நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்ககொள்கின்றேன்.

மீண்டும் இந்த வார நட்சத்திரப்பதிவர் என்ற அந்தஸ்தை தந்த தமிழ் மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவிக்கும் அதே சமயம் மூன்றாண்டுகள் கடந்தும் எனது பதிவுகளுடன் பயணிக்கும் சக பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள், அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

Wednesday, October 5, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகின்றான்....


'வல்லகுரு நாதன் எம்மை வாட்டுவது கொல்லவல்ல கொல்லவல்ல கொடுப்பதற்கே'

இந்தவாசகம் குழந்தையாக கல்வி என்ற ஒன்றைத்தேடிப்போகும்போதே ஒவ்வொரு மாணவனின் மனங்களிலும் இருந்துவிட்டால் அவனால் அந்த வல்லகுருநாதன் கொடுப்பவைகள் அத்தனையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
வுல்லமை தாரோயோ இந்த மானிலம் பயனுற்று வாழ்வதற்கே என்று தெய்வத்தைக்கூட கேட்கவேண்டிய தேவைகளை நீக்கிவிடுகின்றார் ஒரு உண்மையான ஆசிரியன்.
ஓவ்வொரு துறையிலும் மேன்மையானவர்களை அந்த துறைகளை சார்ந்தவர்கள் உருவாக்கிவருகின்றனர் ஆனால் அந்த ஒவ்வொரு துறைநிலையாளர்களையும் உருவாக்கவிடுவது இந்த ஆசிரியன் அல்லவா?
இதனாலேதானோ என்னமோ தாய், தந்தையருக்கு அடுத்த நிலையில், தெய்வத்திற்கு முன்னதாக உயர்வில் வைக்கப்படுகின்றனர் இவர்கள்.

ஒரு தேசத்தின் எதிர்காலம், நாளைய தலைவர்களின் வரவுகள், ஆளுமையான ஒரு எதிர்காலம், என அத்தனையினதும் ஆணிவேர் இந்த அசிரியர்கள்தானே!
கண்களை மூடி ஒருமுறை நீங்கள் பள்ளி சென்ற முதன்நாள் முதல், பள்ளிவிட்டு செல்லும் இறுதிநாள்வரை அல்லது பல்கலைக்கழகத்தின் கோயிங் டவுண் நிகழ்வுகள் வரை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், எத்தனை ஆசிரியர்களின் கைகள் உங்களை அரவணைத்துள்ளன, கல்விகள் மடடுமன்றி அவர்கள் வாழ்வதற்கு தந்த அறிவுரைகள் எத்தனை! அவை இன்றும் உங்கள் காதுகளில் எதிரொலிக்கின்றதல்லவா?
எங்கே.... எங்கே... மீண்டும் ஒருமுறை அந்தக்காலத்திற்கே ஓடிச்சென்று அந்த ஆசிரியர்களின் பாதங்களை தொட்டுவிட மனம் துடிக்கின்றது அல்லவா!
இன்று கனவிலாவது அந்த பள்ளிக்காலங்கள் வந்துவிடாதா என்ற ஏக்கங்கள் கொண்டவர்கள் அல்லவா நாம் அனைவரும்!

விடலை வாலிபகால மிடுக்குகளில் அந்த புனிதமானவர்களை நண்பர்கள் வட்டாரத்தில் எப்படியெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்து சிரித்து மகிழ்ந்திருப்போம். அந்த ஒவ்வொரு கட்டத்திலும் குரு நிந்தனைகள் கூடாது என்று எத்தனைமுறை நம்மை நம் மனமே எச்சரித்திருக்கும்.
தம்மாணவர்கள் தமக்கு வைத்த பட்டப்பெயர்களை அறியும்போது கோபங்கள் இன்றி ஒருவித இரசிப்புடன் அந்த ஆசிரியர்கள் நாசுக்காக சிரித்துவிட்டு போகும் தன்மைகள் எப்படி ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ள பண்பாக உள்ளது!

எமக்குள் எமக்கு தெரியாமலே மிழிரும் திறமைகளை கண்டுகொண்டு அந்த திறமைகள் சிகரம் தொடுவதற்கு எடுத்துவைக்கும் முதல் அத்திவாரக்கற்கள் அவர்கள் கைகளால் வைக்கப்பட்டதல்லவா?
எத்தனை முறை தோல்விகண்டு சிறுபிள்ளையாக அழும்போது, முதுகுதடவி, கண்களில் சிந்தும் நீரைத்துடைத்து, மீண்டும் முயற்சிக்கும் பண்புகளை கொடுத்தது அவர்கள் அல்லவா!
எதை எம்மிடமிருந்து எதிர்பார்த்து அவர்கள் இவற்றை எமக்காக செய்தனர்? தாய் தந்தையருக்கு சில குழந்தைகள்தானே அனால் ஒரு ஆசிரியருக்கு எத்தனை குழந்தைகள். ஓவ்வொரு குழந்தையும் பூத்து குலுங்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே சிரமமங்கள் பாராது, அறிவு என்னும் நீரூற்றி, பண்பு என்னும் வாய்க்கால்களை கட்டி, திறமைகள் என்னும் பசளைகளை இட்டு எம்மை அளாக்கிவிடுகின்றனர்.
அந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் சமுக மட்டத்தில் பூத்துகுலங்கும்போது ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து மனதிற்குள் சந்தோசப்படும் அந்த உன்னதமானவர்களை இறைவனைவிட ஒருபடி மேலே வைத்தல் தகுமல்லவா!

உங்களுக்கு சில நினைவுகள் வருகின்றதா... ஏதாவத ஒரு போட்டிக்கு உங்கள் ஆசிரியர் உங்களை தயார்ப்படுத்தி அந்தப்போட்டியில் கலந்துகொள்ளும் தருணம் மட்டும் உங்கள் வெற்றிக்கான வழிவகைகளை சொல்லித்தந்து, மேடையிலோ. போட்டியிலோ பெருவெற்றிபெற்று அந்த மேடையில் நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போது அந்த ஆசிரியரின் முகத்தை பார்த்திருக்கின்றீர்களா!
அந்த முகத்தில் எத்தனை பெரிய பெருமை, எவ்வளவு சந்தோசம், ஓடிச்சென்று சேர்... இதைபாருங்கள் என்று அந்த வெற்றிக்கோப்பையை அவரிடம் சமாப்பிக்கும்போது எவ்வளவு பாசத்துடன் அந்த கரத்தின் அன்பான தழுவல்....
ஆம்... அசிரியரின் கற்பித்தல் மட்டும் அல்ல ஒவ்வொரு செயற்பாடுகளும் எதிர்கால எங்கள் ஆளுமைகளுக்கு வித்தாகின்றன.

இப்படிப்பட்ட ஆசிரியர்களை நாங்கள் உயர்ந்த இடங்களுக்கு வந்துவிட்டபின்னர் கண்டுகொள்கின்றோமோ? என்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் மனதைத்தொட்டுச்சொல்லும் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.
ஏன்.... குறைந்தபட்சம் அந்த ஆசிரியரின் பிறந்த தினங்களிலாவது அவரது வீட்டிற்கு சென்று சிறு பரிசுப்பொருளை வழங்கி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கலாமே... ஒருமுறை அப்படி வாங்கிப்பாருங்கள் மனதில் உங்களுக்கு தெரியாமல் உங்களுக்குள்ளேயே இருக்கும் நெருடல் ஒன்று அகன்று மனது இலேசாம்.
பெரும்பாலும் பல ஆயிரம் மாணவர்களுடன் பழகிய அவர்களுக்கு ஒய்வுக்காலங்கள், மனதில் ஒரு விரக்தியாகவே இருக்கும், அந்த நாட்களில் எங்காவது ஒரு இடத்தில் தங்கள் மாணவர்களை கண்டால் அவர்கள் முகம் எப்படி மலர்கின்றது என்பதை அவதானித்துப்பார்த்திருக்கின்றீர்களா?

இன்று இந்த பதிவை எழுதுகின்றேன், உயர்ந்த நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கின்றேன் என்றால் எல்லாமே என் ஆசிரியர்கள் எனக்குப்போட்ட பிச்சை என்றே நான் கருதுகின்றேன்.
யாருக்குமே கிடைக்காத ஒரு பேறு எனக்கு அமைந்தது இந்த ஆசிரியர்கள் விடையத்திலே. எனது முதலாவது ஆசிரியையே எனது தாயாரினுடைய தாயார் (அம்மம்மா – பாட்டி) தான்.
அதேபோல எனக்கு கற்பித்த அசிரியர்கள் நால்வர் எனக்கு கீழே பணிபுரிந்தனர். இதை நான் ஒருபோதும் எனது பெருமையாக கருதவில்லை தம்மாணவனை தமக்கு மேலோனாக ஆக்கிய பெருமைக்குரியவர்கள் அவர்களே.

இந்தவேளையில் எனக்கு அகரம் தொடக்கிய எழுத்தாளர், தமிழ் அறிஞர் சொக்கனில் இருந்து பட்டம் வழங்கிய பேராசியர்கள் வரை ஒவ்வொருவரினதும் பாதங்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.

எழுத்தறிவித்தவன் தெய்வத்தைவிட மேலானாவன்.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

Tuesday, October 4, 2011

குழந்தைகளின் நாயகன்!


குழந்தைகளின் உணர்வுகள், எண்ணங்கள் மட்டுமல்ல அவர்களின் இரசனைகளும் வித்தியாசமானவையே. அவர்களின் இரசனைகள் ஆச்சரியமானவை! பூக்களுடன் கைகுலுக்கிக்கொள்ளவும், அன்பு மிருகங்களுடன் பேசிக்கொள்ளவும், இயற்கையுடன் எந்த தயக்கமும் இன்றி உறவாடிக்கொள்ளவும், பிராமாண்டங்களை கண்டு பிரமிப்புக்கள் இன்றி இயல்பாகவே அந்த பிரமாண்டங்களையே கொஞ்சம் பிரமிக்க வைக்கவும் அவர்களாலேயே முடியும்.
எந்த வளைந்துகொடுக்காத மனிதர்களையும் தங்கள் உதட்டு வளைவுகளால் அடியோடு வளைத்துப்போடும் ஆற்றல் இந்த குழந்தைகளிடமே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட குழந்தைகளை தங்கள் கலைநயங்களாலும், நடிப்புகளாலும் வளைத்துப்போடும் கலைஞர்கள் அந்த ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?
ராபின் ஹீட், சார்லி சப்ளின், ரொபின்சன் குருஸோ, ஹரி பொட்டர், மிஸ்டர் பீன், போன்ற மேலை நாட்டு கதாபாத்திரங்கள் அவர்களின் கனவுகளின் நாயகர்களாக வலம் வந்தவர்களாக உள்ளனர்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்தக் குழந்தைகளுக்கு சாகசம் செய்யும் நாயகர்களையும் பிடிக்கின்றது, வீரமிக்க சீரியஸான நாயகர்களையும், ஹார்ஸமான நாயகர்களையும் பிடிக்கும் என்ற இந்த வகையறை நடிகர்களை மட்டுமே பிடிக்கும் என்ற கோடுகள் அற்றிருப்பதை காணலாம்.

குழந்தைகளை தனது கலைகளால் எவன் ஒருவன் கவர்கிறானோ அவன் சிறந்த கலைஞன் என்ற கட்டத்திற்கு வந்தவடுகின்றான் என்ற வார்த்தைகளை இவை நிரூபிப்பனவாக உள்ளன.
இதனால்தான் குழந்தைகள் தம்மை விரும்புகின்றனர் என்று அறிந்தவுடன் பல நடிகர்கள் குழந்தைகளை கவரும் விதத்திலும் தங்கள் படங்கள் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் நடிக்க தொடங்குகின்றனர்.
குழந்தைகளை கவருகின்றேன் என்ற இறுமாப்புடன் எவராலும் அவர்களின் இதய அறைக்குள் அவ்வளவு சீக்கிரம் நுளைந்துவிட முடியாது.

சரி... நமக்கு தெரிந்த பரீட்சியமான தமிழ் சினிமாவில் இந்த குழந்தைகளின் நாயகர்களாக வலம் வருபவர்கள் யார்? அவர்களின் எந்த இயல்பு குழந்தைகளை அப்படி இழுத்து வைத்திருக்கின்றது என்று கொஞ்சம் பார்ப்போம்.

இந்தவகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் குழந்தைகளின் முதலாவது நாயகன் அன்றும் இன்றும் என்றும் சுப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
இன்று தாம் குழந்தைகளாக இருந்து இரசித்த அதே ரஜினியை தங்கள் குழந்தைகளும் இரசிப்பதை கண்டு பலர் ஆச்சரியப்படுகின்றனர்.
இப்பேற்பட்ட தலைமுறை கடந்த மாறாத குழந்தைகளின் இதயம் கவரும் தன்மை ரஜினியிடம் எப்படி வந்தது? அப்படி அவரிடம் என்ன உள்ளது?

குழந்தைகளை பொதுவாக உன்னிப்பாக கவனிப்பீர்களே ஆனால், போலித்தனம். அல்லது நடிப்பு என்று தெரியாத உண்மையான மெனாரிஸங்களை வலுவாக அவர்கள் இரசிப்பார்கள். இப்பேற்பட்ட இயல்பான மெனாரிஸம் சிலருக்கு மட்டுமே உண்டு. ரஜினியிடம் அந்த இயல்பான ஸ்ரைலும், மெனாரிஸமும் நிறையவே உண்டு.
அதேபோல அவரது ஒவ்வொரு உடல்மொழியும் குழந்தைகளை அப்படியே கவரும் வண்ணம் உள்ளன என்பதே உண்மையாகவும் உள்ளது.

இந்த வகையில் ரஜினிக்கு பின்னரான குழந்தைகளின் நாயகன் என்ற கேள்வி இதை வாசிக்கும்போதே உங்கள் மனதில் தோன்றும்.
உண்மையில் ரஜினிக்கு பின்னரான குழந்தைகளின் நாயகன் என்ற இடம் நீண்ட காலமாகவே வெற்றிடமாகவே இருந்துவந்தது.
விஜய், பிரபுதேவா, சிலம்பரசன், போன்ற நடிகர்களின் தாக்கங்கள் குழந்தைகளிடம் செல்வாக்குச்செலுத்த தொடங்கியிருந்தாலும், ரஜினி அளவுக்கு அது அவ்வளவு நீட்சியாக இருந்திருக்கவில்லை.

ஆனால் இப்போது அந்த நீட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி முழுமையாக விழுந்திருக்கின்றது. அந்த இடத்திற்கு குழந்தைகளின் பேராதரவு பெற்ற நாயகனாக அவர்களின் இதய வாசல்களில் வரவேற்கப்பட்டிருக்கின்றார் நடிகர் கார்த்தி.
'நான் அவர்களை கவரும் வண்ணம் என்ன செய்திருக்கின்றேன் என்று எனக்கே தெரியவில்லை, தனம் தினம் குழந்தைகளிடமிருந்து வரும் அன்பு கடிதங்களும், சித்திரங்களும், பெற்றவர்களிடமிருந்து வரும் அழைப்புகளும், உங்கள் பாடல்களை பார்த்தால்த்தான் சாதமே வாய்க்குள் வைக்கின்றான் பையன்! என்ற உரிமைகளும் என்னை நெகிழ வைக்கின்றது' என்று ஆச்சரியம் மாறாமல் சொல்கின்றார் நடிகர் கார்த்தி.
இப்படி கார்த்தி சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை! ஏன் இதற்கு இதை எழுதும் எனது மகளும் விதிவிலக்கு அல்ல!!

கார்த்தியிடமும் அந்த குழந்தைகளை கவரும் இயல்பான மெனாரிஸம் நிறையவே இயல்பாக உண்டு. உண்மையை சொல்வதென்றால் உண்மையில் குழந்தைகளின் நாயகர்களாக இருப்பது ஒரு தவம்.
அது ரஜினிக்கு பிறகு கார்த்திக்கு கிடைத்திருக்கின்றது.

Monday, October 3, 2011

தொழில் மேன்மைக்கு படியமைக்கும் வலுவூட்டல்.


வரையறுக்கப்பட்ட வளங்களை அடைவதற்கு வரையறையற்ற தேவைகளுடன் இன்று உலகில் வாழும் ஒவ்வொருவரும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எங்கள் தேவைகள், எங்கள் இலட்சியங்கள் இவை என வரையறைகளை வகுத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில் பங்கு பற்றுபவர்கள் பலர் தமது விடா முயற்சியினால் குறிப்பிட்ட அளவுக்கு முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஏதோ வேலை ஒன்று இருந்தால் சரி, கையில் கொஞ்சம் பணம் இருந்தால் அதுபோதும் என்ற எண்ணத்துடனேயே இன்று பலர் அவர்களின் பின்னால் உலக ஓட்டத்தில் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

நாளைகள் என்ற சிந்தனைகளே அற்ற நிலையில் இன்று பல இளைஞர்கள் தங்கள் காலங்களை வீணாக்கிக்கொண்டிருப்பது இதில் கொடுமையிலும் கொடுமையானது.

இன்று உலகத்தில் சாதித்து காட்டியவர்கள் ஒவ்வொருவரையும் எடுத்தப்பாருங்கள், அவர்கள் வீட்டு கதவை எந்த ஒரு அதிஸ்ட தேவதையும் வந்து ஒருமுறை தட்டிவிட்டுப்போகவில்லை.

அவர்கள் தங்கள் சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும், தங்கள் இலட்சியங்களில் கொண்டிந்த இலட்சிய வெறிகளாலும், எல்லாவற்றையும்விட அவர்கள் தங்கள் தொழில்களின் மேல் வைத்திருந்த அர்ப்பணிப்பகளாலுமே அந்த எல்லைகளை அடைந்திருக்கின்றார்கள் என்பதற்கு மாற்கருத்து ஏதாவது இருக்கமுடியுமா?

ஒருவகையில் சொல்லப்போனால் இப்பேற்பட்ட கொள்கைகள் எந்தக்கணமும் மாறாத, அதேவேளை எதிர்மறை சிந்தனைகள் என்ற எண்ணமே அவர்களின் மனதில் உதிக்காததையே அதிஸ்டம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

நாம் இன்று பார்க்கப்போகும் விடயம் இந்த வெற்றியாளர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு ஒரு உந்துதல், வலுவூட்டல்கள் எவ்வளவு அவசியம் என்பதையும், சாதிக்கத்துடிக்கும் ஒருவனுக்கு இப்பேற்பட்ட வலுவூட்டல்கள் எத்தனை தூரம் வெற்றிகளுக்கான படிக்கட்டுகளாக அமையும் என்பதையே.


ஒருவனுக்கான வலுவூட்டல் என்பது அன்றாடம் அவன் காணும் காட்சிப்புலங்களிலேயே அவனுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றது என்கின்றார் உலகின் தலைசிறந்த வலுவூட்டல் பயிற்சியாளர் ஜோன் பெக்லம்.

ஒருவனுக்கு இவ்வாறான வலுவூட்டல்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவனை சுற்றி அவனை வலுவூட்ட நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது.

கஜினி முஹம்மதுவுக்கு சிலந்தி காட்டியதுகூட ஒரு வலுவூட்டலே, அதேபோல, அரிச்சந்திரன் என்ற ஒரு நாடகத்தின் வலவூட்டலே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவனை மகாத்மா ஆக்கியது.


ஆனால் இன்றைய வர்த்தகமய உலகத்தில் வலுவூட்டல் என்பது அத்தியாவசிய தேவையாகி வலுவூட்டல் என்பதே ஒவ்வொரு பெரிய நிறுவனங்களுக்கும் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. காரணம் அப்படியான வலுவூட்டல் நிகழ்ச்சிகளின் பின்னர் கிடைத்த விடைகள் பிரமாதமாக அமைந்துவிடுவதனால்த்தான்.


பலர் நினைக்கலாம் இதெல்லாம் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் செயற்படுத்தவதுதான் கஸ்டம். இப்படியே எல்லோரும் வலுக்கொண்டவர்களானால் உலகம் என்னத்துக்கு ஆவது என்று!

உண்மையில் கஸ்டம் என்று நினைத்து இதபோன்று கதைபேசுபவர்களை எந்த வெற்றியாளன் வந்தாலும், தேர்ச்சி பெற்ற வலுவூட்டல் பயிற்சியாளர் வந்தாலும் மாற்றமுடியாது. ஏன் என்றால் எவ்வளவுதான் வலுவூட்டல் கிடைத்தாலும் அதை நிறைவேற்ற தேவையான தன்னம்பிக்கை ஒவ்வொருவனினதும் மனங்களில்தான் உள்ளது.

நிற்க.... ஏன் ஒரு சிலர்தான் சிகரம் தொட்டவர்கள் வெற்றியாளர்களாக முன்னுக்கு நிற்கின்றார்களே என்பதற்கான கேள்விக்கு விடை இதுதான்.


உலகில் உள்ள மனிதர்கள் இன்று மூன்றுவகையினர் உள்ளனர்.

நல்லவர்கள், மேலே குறிப்பிட்டதுபோல கேள்விகேட்கும் எதிர்மறை சிந்தனையாளர்கள், அடுத்து வல்லவர்கள்.

இது கண்டிப்பாக அனைவரும் தெரியவேண்டிய விடையம் என்பதால் கொஞ்சம் தனித்தனியே பார்ப்போம்.


நல்வர்கள் யார்?

அனைத்துவிடயங்களையும் நல்லதாகவே பார்ப்பவர்கள் (மகாபாராதத்தில் யுதிஸ்திரன்போல) எளிதாக உணர்ச்சிவசப்படுபவர்கள், கடிவாளம் கட்டிய குதிரைகளைப்போல தங்களுக்கு வைக்கப்பட்ட கடமைகள் எவையோ அவற்றை பக்கவாக செய்துமுடிப்பவர்கள், இதற்கு அப்பால் சென்று சிந்திகத்தெரியாதவர்கள். தமது வாழ்வில் அனைத்து கட்டங்களிலும் நன்மைகளையே காணத்துடிப்பவர்கள். இவர்களுக்கு மற்றய இரண்டு பகுதியிரையும் கண்டு அறிய முடியாது. மனிதாபிமானம் என்ற வகையில் மற்றவர்களை திருப்திப்படுத்த தம் வாழ்க்கையை நாளாந்தம் இழந்துகொண்டிருப்பவர்கள்.


எதிர்மறையாளர்கள் யார்?

இவர்கள் சற்றும் இடத்தில் நேர்மை, கடமை, கண்ணியம், பொறுப்பு, என்பவற்றின் அகராதியே இருக்காது இவர்களுக்கு இவர்கள் செய்வதுதான் சரி. தாம் மனச்சாட்சிப்படி செய்வது தவறாக இருந்தாலும் தாம் செய்வது சரி என்று வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் குறுக்கு வழியில் வெற்றிகளை குறிவைப்பவர்கள். தொழில் செய்யுமிடவிசுவாசம் என்பது கிடையாது. அடிக்கடி தொழில்புரியும் இடங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அவற்றிற்கும் ஏராளமான காரணங்களை அடுக்க கூடியவர்கள் இவர்கள். தமது நலத்திற்காக எதையும் செய்யத்துணிவர்கள். பொறாமைக்குணம் பிறப்பிலேயே குடிகொண்டிருக்கும் இவர்களிடம்.


வல்லவர்கள் யார்?

இவர்களுக்கு நல்லவர்களையும் தெரியும், எதிர்மறையாளர்களை இனங்காணவும் தெரியும். வல்லவர்களிடம் மற்றய இருவரும் அதிக நாட்கள் அணுகமுடியாதவாறு இருக்கும். மற்றயவர்கள் இருவரும் இன்று பேசுவது இவர்களுக்கு ஒருபோதும் கேட்பதற்கு நியாமில்லை, ஏன் என்றால் இவர்கள் சிந்தனைகளாலும். திட்டங்களாலும் மற்றவர்களைவிட 20 வருடங்கள் முன்னுக்கு சென்றிருப்பார்கள்.

எண்ணம் சிந்தனை எல்லாமே குறிக்கோள் குறிக்கோள் குறிக்கோள் என்றே இருக்கும்.

இவர்களே அந்த சிகரம் தொட்ட, தொடும் வல்லவர்கள்.


இன்றைய சமுதாயமட்டத்தில் பார்த்தோமே ஆனால் நல்லவர்கள் 30 வீதமும், எதிர்மறையாளர்கள் 68 விதமும் அந்த வல்லவர்கள் வெறும் 02 வீதத்தினருமே உள்ளனர்.

இப்போது நீங்களே உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள் நீங்கள் யார்?

எப்போது வல்லவராவதாக உத்தேசம்?


வலுவூட்டல்களில் புதிய ஒரு ஆணுகுமறை என்னவென்றால், தனித்தவமாக முன்னேறமுடியாதவர்கள் தங்கள் ரோல் மொடல்களை அப்படியே கொப்பி அடிப்பது. அவர்களின் நித்துவ அறிக்கை, வேலை திட்டங்கள், அவர்களது பேச்சுக்கள், அனுபவங்கள். நுணுக்கங்கள், ஏன் அவர்களது நடை, உடை பாவனை அத்தனையும் போலச்செய்தல், இதிலும் அச்சரியம் என்னவென்றால் ஒரு ஆராட்சி சொல்கின்றது இவர்களும் வெற்றி பெற்றவர்களாக வந்திருப்பதாக..

எனவே இங்கே வெற்றி பெற்ற ஒவ்வொருவனும் எமக்கான வலுவூட்டும் நபரே.

இது நீங்கள் கேட்ட பாடல்தான், அனால் இங்கே உங்களுக்கு விஜய்யோ, ரஹ்மானோ தெரியமாட்டார்கள்...

ஒவ்வொருநாள் பணிகளை தொடங்குமுன்னரும் இந்த பாடலை உணர்வோடு கேட்டு வேலையை தொடங்கிப்பாருங்கள்...


மனம் இருந்தால் நிறையவே இடமும் உண்டு. மனம் மட்டும் வையுங்கள் எராளமான பணம் உங்கள் கையில்...


LinkWithin

Related Posts with Thumbnails