Sunday, December 30, 2012

மெய் வருத்தக்கூலி!21ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கலைத்தொடர்ந்து இன்று மிலேனியம் ஆண்டுகளில் பல தொழில் பெருவளர்ச்சிகள், தொழில் மேன்மைகள் கண்டு உலகம் எங்கும் வர்த்தகமும், பொருளாதாரமும், உழைப்பு எனும் இயந்திரச்சுழற்சிகளால் உச்சம் பெற்று நிற்கும் இந்த வேளைகளில்கூட உழைப்பவர்கள் பலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறமுடியாமல் பண முதலைகளின்; உழைப்புச்சுரண்டலுக்கு ஆளாகிவருகின்றனர் என்பதே யதார்த்தமான உண்மை.

வளச்சுரண்டல், பணச்சுரணடல், சொத்து சுரண்டல், நிர்வாகச்சுரண்டல் என்பவற்றிலும் மிக வேதனையானதும், மிகக்கேவலமானதுமே இந்த உழைப்புச்சுரண்டல்.
பொதுவாகமே மூன்றாம் உலக நாடுகளில், நிலவும் பாரிய வேலையில்லாத்திண்டாட்டம், மற்றும் அரச தொழில்; சீரின்மையால் பெரும்பாலான படித்தவர்கள் தனியார் நிறுவனங்கள், அரசசாரா நிறுவனங்களிலேயே மிகப்பெரிய போட்டிகளின் மத்தியில் தமக்கான தொழிலை பெற்றுக்கொண்டு ஓடாய்த்தேய்ந்து உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மேலோட்டமாக பார்த்தோமானால் அதிக வருமானம்பெற்று சீராக வாழ்பவர்கள் அவர்கள் என்ற தோற்றப்பாடே புலப்படும். ஒருவகையில் அதுவும் உண்மைதான்.
இவர்கள் அதிக வருமானத்தை ஈட்டுபவர்களாகவும், அதேவேளை அதிகமாக வேலைநேரத்தை கொண்டிருப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.

இன்றைய தேதியில், கணனி மென்பொருள் வடிவமைப்பாளர்கள், தகவல் தொழிநுட்ப துறையினர், முதலீடு மற்றும் காப்புறுதி துறை சார்ந்தவர்கள், அரசசாரா நிறுவனங்களில் தொழில்புரிபவர்கள், தனியார் தயாரிப்பு நிறுவனங்களில் பதவி வகிப்;பவர்கள், தனியார் ஊடக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என பலர் மூன்றாம் உலக நாடுகளில் தனியார் துறைகளில் அதிக வருமானத்தினை பெறுபவர்களாக உள்ளனர். அதாவது ஆண்டு வருமானம் ஆகக்குறைந்தது 6000 அமெரிக்க டொலர்களை பெறுபவர்களாக இவர்கள் கணிப்பிடப்பட்டுள்ளனர்.

முதல், மற்றும் இரண்டாம் உலக நாடுகளில் (அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி கண்டுள்ள நாடுகள்) பாரிய அளவில் தனியார்துறைகளே பெருவளர்ச்சி கண்டுள்ளதனால் ஊழியர்கள் தொடர்பான நலன்கள், வசதிகள் உழைப்பையும் தாண்டிய சலுகைகள், மேலதிக ஊதியங்கள், ஊதியத்துடனான கட்டாய ஓய்வு விடுமுறைகள், உல்லாசப்பயணங்களுக்கான செலவுகள், குடும்ப நிகழ்வுகளுக்கான கொடுப்பனவுகள், சேமலாப நிதி, நிறுவனத்தின் லாபத்தில் குறிப்பிட்டதொரு பங்கு என உழைப்பையும் தாண்டிய பல சலுகைகளை பெற்று பதட்டமில்லாத நிதானமான மனநிலையுடன் தொழில் புரிகின்றனர்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலும் உழைப்புச்சுரண்டல்களும், முளைச்சுரண்டல்களுமே நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெற்றுவருவதை கண்ணூடே காணக்கூடியதாக உள்ளது.
இந்த நாடுகளில் கற்றவர்களின் தொகை அதிகமாகவும், கற்றலுக்கேற்ற தொழில் திண்டாட்டமாகவும், இருப்பதே பண முதலைகள் எந்தவொரு அச்சமும் இன்றி தமது ஊழியர்களின் ஊதியத்திலேயே கைவைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

'தம்மிடம்; வந்திணையும் ஊழியர்களை பயன்படுத்தும் மட்டும் பயன்படுத்திவிட்டு ஊதியத்தில் கைவைத்து அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கி வெளியே அனுப்பிவிட்டு, புதியவர்களை மீண்டும் கொண்டுவந்து, இந்த நடவடிக்கைகளை தொடர்ச்சி சுற்றாக நடத்திக்கொண்டிருப்பதே இவர்களின் இப்போதைய ட்ரென்ட் ஆக உள்ளது'
இவ்வாறு ஊழியர்களின் ஊதியத்தில் வயிறு வளர்ப்பவர்கள், தமக்கு சாதமான வகையிலேயே ஒரு அக்ரிமென்டை தொழிலில் இணையும்போதே கொடுத்து அது குறித்த எந்த ஒரு பூரண விளக்கமும்; இல்லாமல் கையொப்பம் வாங்கிவிடுவர்.
புடித்துவிட்டு உரிய தொழில் எதுவும் இல்லை என்ற நிலையில் எதையும் பற்றி கவலைப்படாமல் உடனடியாக கையொப்பமிட்டு அந்த தொழிலில் இணையும் இளைஞர்களே இன்று அதிகம். (இது தொடர்பான வழக்குகள் பல தொழில் தருணருக்கு சாதகமாகவே தீர்நதமைக்கு பல உதாரணங்கள் உண்;டு. காரணம் மேற்குறித்த அக்ரிமென்டில் இடப்பட்டுள்ள கையொப்பம்)

இன்னொரு பக்கம் இலங்கையை பொறுத்தவரையில் பெட்டிக்கடைகளில் இருந்து சில பாரிய நிதி நிறுவனங்;கள் வரை முறையாக தமது ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதில்லை என்ற அண்மைய இந்த நிதியத்தின் அறிக்கை அதிர்ச்சி தரும் ஒன்றே ஆகும். அவ்வாறாயின் ஒரு ஊழியர் தமது வேலையினை இழக்கும் சந்தர்ப்பத்தில் அவரது நிலை என்ன? என்பதே பெரிய கேள்விக்குறி.

இன்னொரு பக்கத்தில் தமது தொழிலையும், நிறுவனத்தையும் நேசித்தவர்கள் கூட, மேற்படி நிறுவனங்களால் ஊழியச்சுரண்டலுக்குள்ளாக்கி தூக்கி எறியப்பட்ட சம்பவங்;களும் நிறைய இடம்பெற்றுமையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றே.
இலாபநோக்கம் ஒன்றே குறியாக உள்ள நிறுவனங்களில் தொழில் புரியும்போது மிக அவதானமாக செயற்படவேண்டிய நிலை ஊழியர்களுக்கு உண்டு. 'தொழிலை நேசி, தொழில் தருபவனை அல்ல. உன் உழைத்தலுக்கான ஊதியமே தரப்படுகின்றது' என்ற கோட்பாடே இங்கு பொருத்தமானதாக இருக்கும்.
இத்தகய நிறுவனங்களில் திறமைகளுக்கான பதவி உயர்வுகளும் ஒரு வரையறை உள்ளதாகவே அமைந்திருக்கும் மறைமுகமான ஒரு 'கிளாஸ் சீலிங் போல'.

சரி அவ்வாறெனில் புதிதாக ஒரு நிறுவனத்தினுள் தொழில் பெற நுளையும் ஒருவர் கவனிக்க வேண்டிய அவசியமான பண்புகள் என்ன?

01. தொழில் பாதுகாப்பு.
நீங்கள் சேரவுள்ள அந்த நிறுவனத்தில் உங்கள் தொழிலை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்லுவதற்கும், வருமானம் தவிர்ந்த உங்கள் முன்னேற்றம், சேலாபம், ஓய்வூதியத்திட்டம் என்பன உள்ளதா? என்பவற்றில் அதீத கவனமாக இருங்கள்.
தொழில் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் என்ற காரணத்திற்காகவே பலர் அரச பணிகளை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

02. ஸ்திரத்தன்மை மற்றும் முன்னணி.
நீங்கள் சேரும் நிறுவனம் நிதி மற்றும் வெற்றிகரமான ஸதிரத்தன்மையை கொண்டுள்ளதுடன், மற்றய நிறுவனங்களைவிட முன்னணியில் உள்ளதா என்பதை ஆராயுங்கள்.

03. ஊழியர்களுக்கான நன்மைகள்.
அபிவிருத்தி  அடைந்த நாடுகளில் ஊழியாகள் பெறும் நன்மைகளை கொண்டிருக்காதுவிடினும் ஒப்பீட்டளவில் ஊழியர்களுக்கான, வருமான உயர்வு, திறமைக்கு இடம், உயர்வுகளுக்கான சாத்தியம், சேமலாபம் என்பன உள்ளனவா என்பதை கண்டிப்பாக அறிந்திருங்கள்.

04. தொழில் தருனரின் பின்னணி தலைமைத்துவம்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு தொழில் தரவுள்ள நிறுவனத்தலைவரின் பின்னணி, அவரது தலைமைத்துவப் பண்பு என்பவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

05. உங்களை முழுமையாக நம்புங்கள்.
நேர்முகத்தேர்வின்போது அவர்கள் உங்களிடம் கேட்பதற்கு எவ்வளவு உரிமைகள் உண்டோ அதேபோல நிறுவனம் சார்ந்த முழுவதையும், உங்கள் தொழில் எத்தயது, ஊதியம் எவ்வளவு, முன்னேற்றங்களை எப்படி அடைதல், எதுவரை அடைதல் எனபவற்றை அவர்களிடம் கேட்க உங்களுக்கும் முழுமையான உரிமை உண்டு. வாககுறிதியின் அடிப்படையில் நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால் அத்தனையினையும் எழுத்துமூலமாக அடித்துக்கேளுங்கள்.
நீங்கள் நிறுவன அக்ரிமென்டில் கையொப்பம் இடும்வரையில் அவர்கள் உங்களுக்கு கட்டளை இடுபவர்கள் அல்லர்.
உங்களையும் உங்கள் திறமைகளையும் எந்த சந்தர்ப்பததிலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.

குறைந்தது இந்த ஐந்துவிடையங்களையாவது தனியார் துறையில் நுளையமுன்னர் நீங்கள் கவனமாக அதேவேளை உறுதியாக கைக்கொண்டால் பின்வரும் காலங்களில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் தொழில் புரியலாம்.

உங்கள் உழைப்பு உங்களுக்கே சொந்தமானது அதில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்துகொள்ள உங்களுக்கு அவசியம் இல்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதே தொழிலாளர்களின் உலக அடிப்படை தாரக மந்திரம்.
உழைப்பை உறுஞ்சும் நிர்வாகமும், ஊதியத்திலும் அதிகமாக உழைப்பை வேண்டுதல் என்பவை இரத்தக்காட்டேறிக்குச்சமனான பண்புகள்தான்.

'மெய்வருத்தக்கூலி தரும்' என்ற ஐயன் வள்ளுவனின் திருக்குறளுக்கு அமைவான இடமே தொழில்புரிய ஏற்ற இடம். மெய்வருத்தி கூலிச் சுரண்டல் எனில்....
அந்த முற்றம் மிதியாமையே நன்று.

( எனது நண்பர்கள் பலர் இரண்டு நிறுவனங்களில் இவ்வாறான ஊதியச்சுரண்டலுக்;கு உள்ளான கதை, நேற்றைய தினம்தான் எனக்கு முழுமையாக தெரிந்ததால் உருவான பதிவே இது..)

Saturday, December 29, 2012

6 அடி, 6 அங்குலத்தில் ஒரு முழுமையான ஆளுமை...
1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணத்தின் காட்சி நினைவுகளுடன், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளச்சொந்தமான அழுத்தம் திருத்தமான ஒரு ஆங்கில உச்சரிப்பு, அதேவேளை உளமார இலங்கையின் வெற்றிகளை நேசிக்கும் உற்சாக ஒலியாக அனைத்து கிரிக்கட் இரசிகர்களின் மனங்களையும் கவர்ந்துகொண்டது அந்த ஆளுமையான குரல்.
அந்த குரலுக்குச்சொந்தக்காரன் ரொனி ஹிரேக்.
இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு அவரை ஒரு கிரிக்கட் வர்ணனையாளராகத்தான் அறிமுகம். 1996 உலகக்கிண்ணத்தினை இலங்கை வெற்றிகொண்டதைத்தொடர்ந்து இலங்கை குவித்த வெற்றிகளிலும், சனத்தின் விஸ்வரூபங்களிலும் இந்தக்குரல் இலங்கை மக்களின் குரலாகவே பெரும் குதூகலத்துடன் ஓங்கி ஒலித்தது.

அந்தநாட்களில் இலங்கை அணி வெற்றியின் விளிம்புகளில் இருக்கும்போது, வானொலி, தொலைக்காட்சிகளில் மேற்படி போட்டியை சத்தமாக போட்டுவிட்டு, சரவெடிகளுடன் தெருக்களில் காத்திருக்கும் இரசிகர்களுக்கு, வெற்றி என்ற சுப செய்தியை தரும் தேவதூதுவராகவே ரொனி ஹிரேக் தெரிவார்.
ஹெங்கிராருலேஷன் ஸ்ரீ லங்கா......... என்ற அவரின் குரலை கேட்டவுடனேயே சரவெடிகள் காதைப்பிளக்கும் நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடாது.

தனது வர்ணனைகளில் சில சுவாரகசிய சொற்களை புகுத்தி இரசிகர்களை லகிக்க வைத்த வல்லமை அவரிடம் உண்டு. 
தவறுவதற்கு சந்தர்ப்பமே இல்லாத பிடிகொடுப்பை 'லொலிபப் ஹச்' என்பது முக்கியமாக அன்றைய இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் களுவிதாரணாவை நகைச்சுவையாகப் போட்டுத்தாக்குவது குறிப்பாக 'லிட்டில் களு' என கொமன்ட் அடிப்பதை களுவிதாரணாவே ரசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறே இலங்கையர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட அந்த மனிதர் உண்மையில் இலங்கைமீது பெரு மதிப்பு வைத்திருந்தார். இலங்கை கிரிக்கட், சுனாமி, இலங்கை உல்லாசப்பயணிகள் வருகை என்பவற்றிற்காக தனது முழுமையான பங்களிப்புக்களையும் வளங்கியிருந்தார் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


ரொனி ஹிரேக் (சில குறிப்புகள்)  
1946 ஒக்ரோபர் மாதம் 06ஆம் நாள் தென்ஆபிரிக்காவின் ஹேப்மாகாணத்தில் க்யூன்ஸ்ரவுணில் பிறந்தவர். தனது கல்வியை தென்னாபிரிக்காவிலேயே தொடர்ந்த அவர், அதன் பின்னர் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணியில் தனக்கான இடத்தினை படித்துக்கொண்டார்.
1972 முதல்; 1977 வரையான ஐந்தாண்டு காலங்கள் அவரது சர்வதேச கிரிக்கட் காலகட்டங்களாக இருந்தது. ஒரு சகலதுறை ஆட்டக்காராக அவர் தனது பங்களிப்பினை இங்கிலாந்து அணிக்கு விளங்கியிருந்தார்.
வலது பக்க துடுப்பாட்டக்கரான இவர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 599 ஓட்டங்களை பெற்றதுடன், ஆகக்கூடியதாக 148 ஓட்டங்களை பெற்றதுடன், 141 விக்கட்களை தமது டெஸ்ட் வாழ்வில் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டு உலக கிண்ணப்போட்டிகளில் இவர் பங்களித்திருந்தார். அதன் பின்னதான 1976-1977 கால இங்கிலாந்து அணியின் இந்திய வருகை, டெஸ்ட்போட்டிகள் முக்கியமானவை என கூறப்படுகின்றது.
குறிப்பாக கல்கத்தாவில் நடந்த இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ஹிரேக்கின் ஆட்டத்தை அப்போதைய கல்கத்தா இரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என வர்ணிக்கப்படுகின்றது. அந்தப்போட்டியில் ஹிரேக் 103 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பதுடன் அப்போது இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த அவர் தனது தலைமைத்துவத்தையும் நிரூபித்திருந்தார்.

சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் ஹிரேக்கிற்கு இருந்து வந்துள்ளமையும், அதனால் அவர் சில அசௌகரியங்களை சந்திக்கவேண்டி இருந்ததாகவும் அறியமுடிகின்றது.
தனது ஓய்வின் பின்னர் வர்ணனையின் பக்கம் கவனம் செலுத்திய அவர் உலகின் தலைசிறந்த வர்ணனையாளனாக தன்னை நிரூபித்துக்கொண்டார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

2011 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாவின் விசேட தூதுவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவுஸ்ரேலியா சிட்னியில் மருத்துவம் பெற்றுவந்த அவர், இன்றைய தினத்தில் தனது இன்னுயிரை நீத்துள்ளமை கிரிக்கட் இரசிகர்களுக்கு அதிலும் குறிப்பாக இலங்கை அணி இரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான செய்திதான். 
அந்த ஆறடி ஆறங்குல ஆளுமைக்கு எமது இரங்கல்கள்.

Friday, December 28, 2012

அது.........கணம் தப்பித்துப்போகும் மாயங்களும், சில நொடி ஒரு நிகழ்தகவின் அடிப்படையில் போட்டுப்போகும் புதிர்களுக்குள்ளும் புரிதல்கள் சிக்கித்தவிக்கின்றமையே வாழ்க்கையோட்டமாக சென்றுகொண்டிருக்கின்றது போன்ற ஒரு பிரமை. 
அவன், அவள், அவர், அவர்கள், என்பவையே உயர்திணை என்பது கண்டிப்பாக முட்டாள் மனித மனத்தின் ஆரம்பநிலை பண்புகளாகவே இருக்கவேண்டும். 
இவை தாண்டி  அது புரியும் ஜாலங்களும், ஆச்சரியங்களும், பிரமாண்டங்களும் அதையும் தாண்டி ஏன் அவற்றின் விஸ்வரூபங்களும் அவன், அவள், அவர்களை தூசிலும் சிறியர் ஆக்கிவிடும்.

மனங்களில் ஏற்படும் அவன், அவள், அவர்களுக்குள்ளான முரண்பாட்டுச்சுழற்சிகளில், அது தன்பாட்டிற்கு ஏதோ செய்துகொண்டுதான் இருக்கின்றது. இவர்களின் முரண்பாட்டு உச்சத்தில் அது தன்னைப்பற்றி இவர்களை சிறிதுநேரம் சிந்திக்கத்தூண்டுவதும் உண்டு, அச்சமூட்டுவதும் உண்டு, மகிழ்வூட்டுவதும் உண்டு.
ஆனால் என்ன உயர்திணை எண்ணங்கள் அதை அகிறிணையாக்கி தமக்குத்தாங்களே மகுடம் சூட்டிக்கொண்டிருக்கின்றனர்.
'பிரமித்துப்போபவனே பாக்கியசாலி' என்ற மனநிலையில் ஆதியில் அவன், அவள் அவர், அவர்கள் இருந்தனர். 
இன்று 'பிரமாண்டங்களே எமைக்கண்டு பிரமிக்கவேண்டும்' என்ற எண்ணத்தில் அவர்தம், உயர்திணை வீரிய எச்சங்கள் கொக்கரிக்கின்றனர்.

பிரபஞ்சமையத்தின் திசை கெட்டு நிற்கும் ஏதோ ஒரு புள்ளியில் எங்களின் வாழ்விடம். மனித வெற்றுக்கண்ணிற்கும் புலப்படும் பிரபஞ்சவெளியின் தென்படும் அத்தனை வெள்ளொளிகளிலும் ஏதோ ஒரு ரகசியம் பொதிந்திருக்கத்தான் வேண்டும். இல்லை அத்தனையும் காட்சிப்பிழை என்ற ஒற்றைவரி வியாக்கியானங்களும் உயர்திணையாகிவிடுவதும் உண்டு.
'காரணங்கள் இன்றி எந்த காரியங்களும் இல்லை' என்பதை அது பல தடவைகளில் உயர்திணையாருக்கு உபதேசிப்பதும் உண்டு.

அவன், அவள், அவர், அவர்கள், ஒழுங்காக்கப்பட்டது! நாகரிகம் எனப்பட்டது.
அது ஓழுங்காகவே இருந்தது, ஒழுங்காகவே இருக்கின்றது, ஒழுங்காகவே இருக்கும் இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருந்ததில்லை. 
ஆனால் அதுவின் சிறு ஒழுங்கீனமே அவன், அவள், அவர், அவர்களை ஒழுங்கீனமான ஓலங்களாக்கிவிடமுடியும்.

அது பற்றிய அச்சம் குறித்த ஒரு ஒழுங்கீனத்தாலும், அதன் பின்னும் உயர்திணைக்கு வரும். அது வல்லது என்ற பேருண்மையும் ஆழ்மனதிற்கு அடிப்படையாகப்புரியும், இருந்தாலும் அவன், அவள், அவர், அவர்கள், உயர்ந்தவராகவே...

ஆனால் அந்த அது.....
பிரபஞ்சம், அகிலம், இயற்கை, நியதி, விதி, கடவுள்... எதுவானாலும்
அது அஃறிணையாகவே இருக்கட்டும்.

Wednesday, June 13, 2012

கோப்பையில் குடியிருப்பவை :)

புராதனகால சோமபானத்தில் இருந்து இன்றைய நாகரிக உலகத்தில் புதிது புதிதாக கலக்கப்பட்டு பகிரப்படும் விதவிதமான குடிவகைகள் வரை போதை என்பது மனித குலத்தை வாழ்வியலின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவனுடனேயே ஒட்டிக்கொண்டே வருகின்றது. சாத்தானின் சாபமாகவும், தேவதையின் பரிசாகவும் ஒவ்வொருவராலும் விதம்விதமாக இந்த குடிபானங்கள் பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகின்றது. 

 எமது அன்றாட வாழ்வில்கூட குடிப்பதற்காக உழைத்து நிறைபோதையில் சுழன்றுவிழும் குடிமகன்களையும் கண்டிருக்கின்றோம், அதேபோல ஏழுநட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர மிடுக்கோடு விதவிதமான விலையுயர்ந்த குடிபானங்களை உட்கொள்ளும் மிடுக்குகளையும் பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் உலகில் அதிகம் மிடுக்கோடு நுகரப்படும் ( ஆனந்தத்தோடு அருந்தப்படும்) 10 குடிபானங்களை இப்போது உங்களுக்கு ஊத்திக்கொடுக்கப்போகிறேன்......

பியர் அல்லது (இந்திய நண்பர்களுக்கு பீர்) 
 
இன்று உலகலாவிய ரீதியில் குடிவகை பானங்கள் என்ற வகைப்படுத்தில் மிக அதிகமாக அருந்தப்படும் பானமாக பியர் உள்ளது. பியர் தயாரிப்பு பண்டைய நாட்களில் இருந்தே நெறிப்படுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. 'பார்லித் தண்ணி' என்று நண்பர் வட்டாரத்தில் பியரை அழைப்பத்திலும் அறிவியல் உண்மை ஒன்று உள்ளது. குறிப்பாக பியர் வகைகள் தானியங்களில் இருந்து பெறப்படும் மாப்பொருட்களை நொதிக்க வைத்தே வடித்தெடுக்கப்படுகின்றன. முக்கிமாக பார்லி தானியம் இதற்கு எடுக்கப்படுகின்றது.
 அத்தோடு கோதுமை, அரிசி, சோளம் என்பவையும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இன்று உலகில் பெரும்பாலான பியர் தயாரிப்பு நிறுவனங்களும் 'ஓவ்' என்னும் வகை தாவரத்தின் பூவையே இதற்கான சுவையூட்டியாக பாவிக்கின்றனர். பொதுவாகவே ஓவ் பூக்கள் கைப்பு தன்மை கொண்டவை. அதனாலேயே பியர்கள் ஒருவகை கச்சல் தன்மையினை கொண்டுருகின்றன. அப்புறம் 'லாகர்' என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? தானியமாவிலிருந்து வடிந்த தண்ணீர்.... சத்தியமாக பியர் மச்சம் இல்லைங்க (வெள்ளிக்கிழமைகளிலும் குடிக்கலாம்) 
  
ரம் அண்ட் கோக்.
 
இது மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு குடிவகை. இதன் ஸ்பெசாலிட்டி மற்றும் பிறப்பிடமாக கரேபியன் தீவுகள், கயானா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளை குறிப்பிடலாம். ரம் பொதுவாக சக்கரை, அல்லது வெல்லம், கரும்புச்சாரை புழிக்கவைத்து உருவாக்கப்படுகின்றது. ரம் பழுப்பு நிறம், மற்றும் வெள்ளை நிறத்திலும் அதிகமாக வடிக்கப்படுகின்றது. அதேநேரம் கொக்ரெயில் போடுவதற்கு ரம் முக்கியமானதாக பயன்படுகின்றது. ரம் அண்ட் கோக் குறித்த கலவை அளவில் வெள்ளை ரம், எலுமிச்சை சாறு, மற்றும் கோக் என்பன கலக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. 


வொட்கா அண்ட் ஒரேஞ்ச் 
 
இது ஒரு மிகப்பிரபலமான ஒரு பானம் இந்தப்பானத்தின் ஸ்பெஸாலிட்டி என்ன எனில் இதை குறிப்பிட்ட ஒரு குவளையிலேயே வழங்கவேண்டும். நல்ல உடன் பிடுங்கப்பட்ட ஒரேஞ்ச் சாற்றுடன் வரையறுக்கப்பட்ட அவளவில் வொட்காவை மிக்ஸ்ட் பண்ணி கொடுக்கப்படுகின்றது. தலையிடி, உடம்பு அசதியுடன் குடிக்கச்செல்பவர்களின் முதல் சொய்ஸ் இதுதான் என்று அடித்து சொல்கின்றார்கள் அனுபவசாலிகள். காரணம் இதை லபக் செய்தவுடன் தலையிடியும், உடல் அசதியும் போய்விடுமாம், அதன் பின்னர் வேறு விரும்பிய போதையினை விதம் விதமாக ஓடர் பண்ணி பெற்றுக்கொள்ளலாம். ஸ்க்குரூட்ரைவர் (திருகாணியினை கழட்டும் சாதனம்) வொட்கா அண்ட் ஒரஞ்ச் இன் அண்ணன்தான். 

ரெக்கியூலா (ரக்கிலா) 
 
நம்ம ஊர்க்கத்தாளை போல நீலக்கத்தாளை (ப்புளு அN ஹவ்) தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்பட்டதுதான் இந்த ரெக்கியூலா. அடிச்சா சும்மா கப் என்று ஏறுமே என்பார்களே அதேபோல இதன் அட்கஹோல் செறிவு 38 வீதத்தில இருந்து 42 வரை இருக்கும். முக்கிமாக மெக்ஸிகோ இதை உலகத்திற்கு உவந்து வழங்குகின்றது. அதேவேளை அதன் பின்னர் இந்த ரெக்கியூலாக்களில் ஒரு வகை புழுவை இட்டு குடிக்கும் வழக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு சில இடங்களில் அனேகர் அதைவிரும்பி லபக் என்று குடிக்கின்றார்கள். ஆனால் ஒரிஜினல் ரெக்கியூலாவின் ஓனர்ஸ் இது சந்தாப்பவாதிகள் சிலர் வியாபாரத்தை பெருக்க செய்யும் சதி என்று சொல்கிறார்கள்.

மார்கரிட்டா


   
50 வீதம் ரெக்கியூலா, 29 வீத ஹொயின்ரியோ, 21 வீத லைம் யூஸ், என்ற வீதத்திலான ஒரு மிக்ஸ்ஸர்தான் மார்கரிட்டா. இதை லபக் செய்யும்போது என்ன கொஞ்சம் தொண்டையில் இருந்து குடல்வரை ஒருவித எரிவுடனேயே பானம் பயனிக்குமாம். இதில் ஐஸ்கட்டிகள் இடுவது மிக மக்கிமாகுமாம். அது சரி நல்லா யோசித்துப்பாருங்க மார்கரிட்டா கிளாஸ் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே? ஆம் இதற்கும் பிரத்தியேகமான ஒரு தனித்தர குவளையிலேயே பரிமாறப்படுகின்றது. 


வைய்ட் ரஸ்ஸியன். 
  

வோட்கா, ஹலுவா, ஐஸ் கிறீம், பால், ஹாவ் அண்ட் ஹாவ், மற்றும் ஐஸ் கட்டிகள் கொண்டு பக்குவமாக இரண்டு தட்டுகளாக தயாரிக்கப்படுகின்றது வைய்ட் ரஸ்ஸியன். போதை இனிப்பாகவே கிடைக்கும்..... 

  செக்ஸ் ஒன் பீச்... 
 

பெயரே ஒரு ஹிக்காத்தானே இருக்கு? மிகப்பிரபலமான ஒரு குடிவகை இது. வொட்கா, ஒரேஞ்ச் யூஸ், கிரான்பெரி யூஸ், சம்போhட் என்பவற்றை மிக்ஸ் பண்ணி அருந்தும் ஒரு குடிவகையே இந்த செக்ஸ் ஒன் பீச்... இது பீச்சிலதான் குடிக்கிறதோ என்று தப்பா யோசிக்க கூடாது.

ஜஹர்...

    ஜெர்மன் சரக்கு என்றாலே சும்மா கும்முனு ஏறும் ஹிக்கு தன்னாலே! இது 1934 ஆம் ஆண்டு ஜெர்மனில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஹிக்கர். இதில என்ன விசியம் என்றால் நாம கௌ;விப்படுற ஐட்டங்கள் எல்லாம் இதில கலக்கப்பட்டு செய்யப்பட்டிருப்பதுதான். அப்படி என்ன நாம கேள்விப்பட்ட ஐட்டம் என்கிறீர்களா? அதிமதுரம், சோம்பு, குங்குமப்பூ, பாப்பி விதைகள், இங்சி இப்படி நம்ம ஊர் சமாரங்கள் நிறைய கலக்கப்பட்டிருக்கு! 

அப்ஸிந்தே 
   
அட்கஹோல் செறிவு மிக அதிகம் கூடிய மதுவகைகளில் ஒன்று, இது குறிப்பிட்ட தானியங்களை அதிக கொதிநிலைக்கு கொண்டு சென்று பின்னர் ஆவியாக்கி ஒடுக்கி நீராக எடுக்கப்படும் குடிவகையாகும். பச்சை தேவதை என்று சிறப்பாக அழைக்கப்படும் பெயர் கொண்டதும்கூட. சுவிஸர்லாந்தை பிறப்பிடமாக கொண்டாலும் இந்த பானம் பிரபலமானது பிரான்ஸிலதான்.

  முக்கிய குறிப்பு – குடி நாட்டுக்கும் வீட்டிற்கும், உடலுக்கும் கேடுவிளைவிக்கும். 

  நல்லது நண்பர்களே கடின வேலைப்பழு காரணமாக அதிகநாட்களாக உங்களுடன் ச்சியேஸ் சொல்ல முடியாமல் போனதிற்கு மனம் வருந்துகின்றேன். எனவேதான் மீண்டும் எழுத வந்தவுடன் உங்களுக்கும் ஒரு கிழு கிழுப்பூட்ட இந்தப்பதிவு இனிவரும் காலங்களிலும் அன்பு நண்பர்களாகிய நீங்கள் இது வரை தந்த ஆதரவையும் உற்சாத்தையும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் உங்களுடன்  CHEERS WITH JANA

Monday, March 26, 2012

பங்குனித்திங்களும் மட்டுவில் பண்டித்தலைச்சியும்............


யாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒன்றுகூடி விழா எடுப்பதும் ஒரு சிறப்பான அம்சமாகும். தெய்வபக்தி, ஆன்மிகம் என்பவற்றைத்தாண்டி, காலகாலமாக ஒரு சமுதாய மரபு பல பரம்பரையினரிடையே கொண்டு செல்லப்பட்டு இன்றும் தொடர்ந்து கைக்கொள்ளப்படுவது இங்கு மிகச்சிறப்பான ஒரு அம்சமாகும்.

அந்த வகையில், யாழ்ப்பாண நகரில் இருந்து வட கிழக்காக தென்மராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமே மட்டுவில் என்னும் மருதநிலம் சார் ஊராகும். அங்கு சிறப்பம்சம் பொருந்திய ஒரு தலமாக உள்ளது மட்டுவில் பண்டித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தானமாகும்.
தமிழில் பங்குனி மாதம் தொடங்கியவுடன், வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும், யாழ்ப்பாணத்தின் மற்ற அனைத்து ஊர்களில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பெருந்தொகையான மக்கள் இங்கு வந்து குவிவது சிறப்பான ஒரு அம்சமாகும்.

பெரும்பாலும் உற்றாரும் சுற்றத்தாரும் தமது ஊர்களில் இருந்து பெரிய பொங்கல்பானைகள், பாளைகள் என்பவற்றை வாகனத்தில் எடுத்துவந்து, காலைவேளையே இங்குவந்து ஒன்றுகூடி இங்குள்ள தேவஸ்தான கேணியில் நிராடிவிட்டு, அம்பாள் தரிசத்தை முடித்துவிட்டு, பொங்கல்வைத்து, மடைவைத்து வணங்கி அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வது சிறப்பான ஒரு அம்சமாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது சிறப்பம்சமாகும்.

இங்கு முக்கிமானதாக ஒன்றினை குறிப்பிடவேண்டும்,
ஆம் அதுதான் இந்த ஊரான மட்டுவில் என்ற ஊரினையே அடைமொழியாக வைத்து இங்கு மட்டுமே பயிரடப்பட்டு, சந்தைக்கு வரும் மட்டுவில் கத்தரிக்காய். நல்ல உறுண்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக்கத்தரிக்கயை, தேங்காய்ப்பால் நிறையவிட்டு, கறிசமைத்து, வெண்பொங்கல் பொங்கி இங்கு உண்பதே பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக இருக்கின்றதுஎது எப்படியோ, பெரும்பாலான மக்கள் இன்றும் தமது மரபு மாறாது பங்குனித் திங்களுக்கு இங்கு வந்து ஒன்று கூடுவது இன்றும் தொடர்வது மனதுக்குள் சந்தோசமே. பல வகையான நேத்திக்கடன்களும் இங்கு நடைபெற்றுவருவது வழமை. காவடி, முடி எடுத்தல், குழந்தைகளுக்கு காது குத்தல், புது வாகனங்களை பூசை செய்தல் என்பவை இந்த தினங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன.

கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையிலான தரைவழிப்பாதை தடை செய்யப்பட்டிந்தது.
தற்போது மக்கள் சுதந்திரமாக ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுவருவதனால் இம்முறை அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்றைய தினமே அதிகளவிலான மக்கள் வரத்தொடங்கியுள்ளமையும், தென்னிலங்கை வர்த்தகர்கள் கோவில் சுற்றாடல்களில் தமது வர்த்தக நிலையங்களை கொண்டுவந்து மடை விரித்துள்ளமையினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தற்போது புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்துவரும் ஈழத்து இதயங்கள் பலவற்றிலும், இந்த பங்குனித்திங்களும், பண்டித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் பொங்கலும் பசுமையான ஒரு நினைவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Thursday, February 9, 2012

அவன்... அவள்... அது...அவன்...
தொலைவாகிப்போன தூர ங்களும், ஆர்முடுகலான உணர்வுகளும் அப்பப்போ சுவாசத்தை ரணமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. வறண்டுபோன உதடுகளில் இடைக்கிடை எச்சில் தொடும் நாவின் இதம்போல சில நினைவுகள்.
கடந்தகாலங்கள், கசப்பானவை, அவையே சிலவேளைகளில் இனிய நினைவானவை, சில சமயம் ஏக்கமானவை ஏன் சில சமயங்கள் தித்திப்பானவை, இதயம் நாறிப்போகும் அளவுக்கு சில சமயம் அருவருப்பானவைகளும் கூடத்தான்.

எத்தனை சித்தார்த்தங்கள் கற்று தெளிந்துநின்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை புதிதாக சில சித்தார்ந்தங்களை போதித்துப்போவதையும் கவனிக்கத்தவறுவதில்லை. இப்போதெல்லாம் நிகழ்வுகளை கண்டு ஞானிகளின் மௌப்புன்னகையின் அர்த்தங்கள் புரிகின்றன அதே மௌனப்புன்னகையூடாக.

காலந்தின்ற எச்சமாகவே வந்துவிழுந்தேன் பூமியிலே, பஞ்சபூதம் தந்த உடல் இதனை அவ்வாறே அழிக்கின்றேன், நிலத்திற்காகவும், காற்றுக்காகவும், உதட்டில் தீ கொழுத்தி, வயிறுமுழுவதும் மது என்னும் நீர் நிரப்பி வான் பார்த்து நிற்கின்றேன்.

கண்முன்னே ஏராளமான ஞாபகங்கள். தன்னிலை மறந்து முதன்மை மறந்து இப்போதெல்லாம் இவன் அவனாகிப்போனான். நிற்சயமாக அவள் நினைவுகளுடன்.

அவள்...
என்னை மயக்கி வேற்றான் கையில் ஏறிய தாலி என் கழுத்தில், யுகமுடிவில் வருமென்றாலும், விழித்த நிமிடம், அறுத்தெறிந்துவிட்டு, மறுநிமிடம் உன் மடிவந்து சேர்வேன் எனக் கவி எழுதியவள் இவள்தான்.
சோன்னாங்கையா... இளமைக்காதல் 30 நாள் என்று அனுபவம் முதிர்ந்தவர்கள் சொன்னாங்கையா! மோகமயக்கதில் அகிலமே அணுவாகும் முனிவர்க்கே என்றாங்க, அப்படி என்றால் மடப்பெண் நான் மட்டும் எம்மாந்திரம்.

காதலிக்கும்போது இருக்கும் வீரமும், பற்றுக்களும் இப்போது சில வேளை பைத்தியமாகத்தோன்றுகின்றது. பெண்ணிவளால் என்ன செய்யமுடியும் என பேதைக்கதை சொல்ல நான் தயாரில்லை.
காதலித்தவன் ஒருவன் கரம்பிடிப்பது இன்னொருவன், என்ற எழுதாமறையில் நானும் குடமுழுக்காட்டப்பட்டது இப்போதும் எனக்கு ஆச்சரியமானது என நினைக்கும் பெண்ணாகத்தான் இப்போதும் அப்போதும்.

முறந்துவிடு மன்னித்துவிடு என்று உன்னிடம் கூற மறந்துவிட்டவள் நான் அல்ல.. அப்படி என்றும் உன்னிடம் கேட்காத கர்வக்காரிதான் நான்.
'நல்லாயிரு என்றுமட்டும் எப்போதும் உன்னைக்கேட்டுக்கொள்கின்றேன் நீயாவது!'
முதற்காதல் மறக்காதாம் எத்தனையோ சினிமாவின் டயலக் அது என்று கல்யாணம்முதல் இதயத்தை இறுக்கிப்பார்த்தேன். இறுதியில் என்னை சினிமா டயலாக்குகள் வென்றுவிட்டது குற்ற உணர்வுதான்.
இங்கே இவளாகவே வாழ்ந்திறக்கத்துடிக்கும் அவள்.

பெருமிடியெனச்சிரிக்கின்றது, திடீர் என அழுகின்றது, மௌனமாகப்புன்னகைக்க நினைத்து தோற்றுப்போய் கதறுகின்றது.
வயிறு புரட்டி வாந்தியெடுத்துவிட வேண்டும் என்றாலும், அவன். அவளின் வசனங்கள் கேட்டு, இறந்தே விடுவதென்று முடிவுகட்டுகின்றது

காதல் என்ற

அது.

Monday, February 6, 2012

மத்தியின் சாட்சியாக....


பெரும் அதிர்வு கொண்டு காதுபிளக்கும் எறிகணை சத்தங்களும், இடைவிடாது தொடர்ச்சியாக கோர்வையாக கேட்கும் துப்பாக்கி ரவை சத்தங்களுக்கும், யாழ்ப்பாண கோட்டையை சூழவுள்ள முழுமையான பிரதேசங்களே சுடுகாடாக காட்சி தந்தபோதும், இங்கு மட்டும் கல்விச்சத்தம் நின்றது கிடையாது.
கூரைஇல்லாத கட்டடமுகடுகளில் சுவர் உடைந்த பிசிறல்களுக்கு இடையிலும் சரஸ்வதி குடிகொள்வாள் என்று அப்போது கண்டுகொண்டது என்னமோ இந்த இடத்தில்த்தான்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.

முற்றுப்புள்ளி என சிலர் . இப்படி இட்ட புள்ளிகளைக்கூட அதே முற்றுப்புள்ளியில் இருந்து ...... இப்படி கோடிட்டு எழுந்து நின்று காட்டிய பெருமை பெற்ற கல்லூரி அது என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.
பீனிக்ஸ் பறவைக்கு ஜப்பானையும், ஜப்பான் மக்களையும் பலர் உவமானங்களாக காட்டுவார்கள். அதேபோல சாம்பலில் இருந்து மீண்டெழுந்து இன்று மீண்டும் யாழ்ப்பாணத்தின் தலைமை, நகர, பட்டிண கல்லூரி நான்தான் என்று வீறுகொண்டு எழுந்திருக்கின்றது இந்தக்கல்லூரி.

எண்பதுகளின் ஆரம்பம் முதல் தொண்ணூறுகளின் இறுதிவரை இந்தக்கல்லூரி ரணத்தோடு நடந்துவந்த சரித்திரம் ஆச்சரியமானது.
இலங்கைக்கு முதன் முதல் சர்வதேச ரீதியாக தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்த எதிர்வீரசிங்கம், அதை பெற்றது இந்தக்கல்லூரி மாணவனாகத்தான், பாதிரியார்கள் அதிபர்களாக இருந்த கிறிஸ்தவ பாடசாலை இது என்றாலும், சைவமும், தமிழும் போற்றும் ஆறுமுகநாவலரை உருவாக்கியதும், இந்த கல்லூரிதான், கிஸ்தவ சமயத்தின் வேதாகமமான பைபிளை தமிழுக்கு தந்ததும் இந்த பாடசாலைதான், அதேபோல காலகலமாக எத்தனையோ பொறியிலாளர்கள், மேலாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், முகாமையாளர்கள் என சமுகமட்டத்தில் உயர்ந்தவர்கள் பலரையும் தந்ததுடன், யாழ்ப்பாணத்தில் விளையாட்டு என்றால் சென்றல்தான் என்று விளையாட்டுக்கு அன்று தொட்டு இன்றுவரை முக்கியத்துவமளித்துவருவதும் இந்தக்கல்லூரியே.
அதற்குச்சான்றாக எந்த கல்லூரிக்கீதத்திலும் இல்லாத வகையில், இந்தக்கல்லூரியின் கீதத்தில் ஒரு உதைபந்தாட்டத்தை மையப்படுத்தியும், நேரம், மற்றும், ஒழுங்கை கொண்டாதவும் இசைக்கப்படுகின்றது.
இதேபோல வட மாகாணத்தில், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கொக்கி, ரக்பி, வலைப்பந்தாட்டம், என சகல விளையாட்டுக்களையும் முதன்முதல் அறிமுகம் செய்த பெருமையும் இந்தக்கல்லூரியை சார்ந்ததே.

எல்லாவற்றுக்கும் மேலாக நூற்றாண்டுகள் கடந்து சென்றாலும் சில பாரம்பரியங்களை எந்த இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கைக்கொண்டுவருவது இந்த கல்லூரியின் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் முக்கியமானது இந்தக்கல்லூரிபோலவே நூற்றாண்டு கடந்தும் கரம்கோர்த்து அந்தப்பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இணைந்து பயணிக்கும் பரி.ஜோவான் கல்லூரி. சென்றல் என்றால் அடுத்தது நிற்சயமாக சென்.ஜோன்ஸ் இருக்கும் என்ற அளவிற்கு இருகல்லூரிகளும் ஒன்றை ஒன்று அணைத்து சகாவாக பயணிப்பது பெரும் ஆச்சரியமே!

சரி... இந்த நாள் இந்தக்கட்டுரையை ஏன் நான் வரைய நினைத்தேன், என்பதற்கு உணர்வுபூர்வமான சம்பந்தம் உள்ளதால் இனி.. விடயத்திற்கு வருகின்றேன்.

இந்தக்கல்லூரி வெறும் சுவர்களையும், அத்திவாரங்களையும் மட்டும் இழந்து, இன்று வீறுகொண்டெழுந்து சர்வதேச பாடசாலைகளுக்கு ஒப்பான அளவுக்கு வீறு கொண்டு எழுந்திருக்கவில்லை. பெரும் ரணத்தோடு பயணித்தே இந்த இமாலயத்தை தொட்டுள்ளது.
கல்லூரி வேளையில், கல்லூரியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவன் பொன்.விபுலானந்தன், சாதாரண தரத்தில் எட்டு அதிசிறப்பு பெறுபேறுகளை தந்துவிட்டு, மீண்டும் உயர்தரத்தில் 4 அதிசிறப்பு பெறுபேறை தந்த சதீஸ்காந்தன் என பல உயிர்களையும் விலைகொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டுமுதல் முதற்பாதி கோட்டைப்பகுதியில் நிலவிய அசதாரண £ழ்நிலை கல்லூரியை பிடுங்கி எறிந்த நிலையை தந்தது. பின்னர் இந்திய இராணுவகாலங்களின் பின்னர் 1990 – 1993 வரையான கால கட்டங்களில் நிர்மூலமாக்கப்பட்ட நிலையிலும் கல்வி தொடர்ந்ததும், மாணவர்கள் தைரியத்த்டன், உயிரைப் பயணம் வைத்து கல்வி கற்றதும் மிகப்பெரும் ஆச்சரியமே.
இப்போதும் எனக்கு நினைவு இருக்கின்றது, உடைந்த கட்டடத்தின் முன்னால் ஒன்றுகூடும் நாம், அப்போதைய எமது அதிபர் திரு. நா.க.சண்கநாதபிள்ளை எழுதிய பாடலை உற்சாகமாகப்படிப்போம்.
'எங்கள் அரும் கல்லூரியை வளர்க்கப்போகின்றோம், இடிந்தவற்றை கட்டி மீள எழுப்பபோகின்றோம்' எனத்தொடங்கும் அந்தப்பாடல் கண்களில் கண்ணீருடன் ஆனால் மனம் முழுவதும் தைரியத்தையும் உற்சாகத்தையும் அப்போது எமக்குள் விதைத்தது.

எமது கல்லூரியின் பாராம்பரியம், விழுமியங்கள், முன்னைய சாதனையாளர்கள் பற்றி இடைவிடாது எமக்கு கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் எமது கல்லூரி மீண்டும் எழும், யாழ்ப்பாணத்தில் இதுபோல ஒரு கல்லூரி இல்லை என்ற நிலைக்கு வரும் என்று கனவு காண்போம்.
அந்த கனவு இன்று யாழ்ப்பாணம் மட்டும் அல்ல இலங்கையில் என்று சொல்லும் அளவுக்கு பெருவிருட்சமென கண்முன் நிற்கின்றது.

1991ஆம் ஆண்டு கோட்டை இராணுவ முகாமைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் எறிகணை சத்தங்கள், விமானத்தாக்குதல்கள் என பல இடம்பெறுகின்றன.
ஏல்லாமே எமக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டதனால், எமது கல்லூரியின் பழைய மாணவர் விடுதி உள்ள பிரதேசத்தில் நானும் இரண்டு நண்பர்களும் ஆவலாக மண்ணைஆழமாக வெட்டி அதன் மேல் பொலித்தீன் பைகைளை வைத்து தண்ணீர் விட்டு நீச்சல் தடகாம் கட்டி மகிழ்ந்தோம்.
எமது கல்லூரிக்கான நீச்சல் தடாகம் அது எனவும், 12 அடிக்கு மேலே ஆழம் எனவும், பல கதைகள் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம். அப்போது என் அருகில் நின்ற ஜனகன் என்ற மாணவன் இந்த நீச்சல் தடாகத்தை எமது ஜனாதிபதி டிங்கிரி பண்டார விஜேதுங்க (அப்போது அவர்தான் ஜனாதிபதி) திறந்துவைப்பார் என்று சொன்னது இன்னும் நினைவு.

அட... என்ன ஆச்சரியம் நாம் அப்படி கட்டி விளையாடும்போது எந்த தேவதை மேலால் கடக்கும்போது, இது அப்படியே பலிக்கட்டும் என்றுவிட்டு போனதோ தெரியாது.
இன்று அதே இடத்தில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்று இப்போதைய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்போது இதை சொன்ன அந்த ஜனகன் என்ற மாணவன் இப்போது இல்லை. ம்ம்ம்.... 1995 முதல் அவனது பெயரும் காணமற்போனோர் பட்டியலில்த்தான்.

சில ஊடகங்களின் கவனத்திற்கு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நீச்சல் தடாகம் என்பது சில தமிழ் ஊடகங்களுக்கு என்னவிதத்திலோ ஒருவித சலிப்பை, வெறுப்பை தருவதை சில தினங்களாகவே கவனித்தே வருகின்றேன்.
ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எதையும் அரசியல் பார்வை பார்க்கும் சிறு சுற்று சிந்தனையுடையவர்களாகவே அப்போது பார்க்கமுடிகின்றது.
அன்று ஒரு பத்திரிகையில் மிக ஆடம்பரமான மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக படத்தையும், அருகில் தகரம் அடித்த ஒரு பாடசாலையையும் காட்டி ஒரு பத்திரிகை தனது முதலாவது பக்கத்தில் செய்தி வெளியட்டிருந்தது.
வாஸ்தவம்தான், நகரம் மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். மறுக்கவில்லை.
ஆனால் அத்திவாரம் தெரியும் நிலையில் எமது கல்லூரி தகர்ந்து நின்றபோது, நாமே நம்மை அசுவாசப்படுத்தி எழுந்தபோதெல்லாம் உங்கள் கண்ணுக்கு ஏன் படவில்லை? அது பற்றி எமது நிலை பற்றி ஒரு செய்தியாவது போட்டிருந்தீர்களா?

இதே நீச்சல் தடாகம் இவர்கள் எதிர்பார்க்கும் இன்னும் ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தால், எந்தவித கதையும், செய்தியும், படமும், கேலிச்சித்திரமும் வந்திருக்காது.

ஒரு பிரபல கல்லூரிக்கு, தேசிய கல்லூரிக்கு, அதுவும் முக்கிமான மாவட்டம் ஒன்றின் நகரத்தில் உள்ள பாடசாலைக்கு உடனயடியான தரமுயர்த்தல்கள் அபிவிருத்திகள் தேவை அவையே இப்போது நடைபெறுவதாகத்தோன்றுகின்றது.

Saturday, January 21, 2012

டாக்டர் வாசகனின் மயக்கம் என்ன? கட்டுமஸ்தானனாக மாறும் டிலான்!
வருடத்தின் ஆரம்பமே கூதிர்க்காலத்துடன் ஆரம்பித்துவிட்டதோ என்னமோ! இலங்கையில் வெப்பவலய பிரதேசங்களிலேயே அப்படி ஒரு குளிர்.
இது இப்படி இருந்தால், இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் நாவலப்பிட்டியின் குளிரின் அளவை சொல்லித்தெரியத்தேவையில்லை!

நேரம் நள்ளிரவைத்தாண்டிய பின்னும்கூட, அந்த நகரின் வீதிகளின் பரிணாமங்கள், அங்கே ஊர்வன, பறப்பன, நடப்பன, விழுவன என்பவை எவையாக இருந்தாலும் கிளிக்... கிளிக் என்று ஒரு டியிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிபிளக்ஸ் கமரா ஒன்று உருவச்சிறைப்பiடுத்திக்கொண்டிருந்தது.
அந்த கிளிக்கில் அகப்படும் பொருள் நிலையில் இருந்து கொஞ்சம் சூம் போட்டுப்பார்த்தால் அங்கே கமராவுடன் சிரித்துக்கொண்டு இருப்பவர் டாக்டர் வாசகன்.

குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமன்றி இன்னுமொரு விடையத்தை பொழுதுபோக்காக அன்றி அதிலும் தேர்ச்சியாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வெற்றியாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அந்த ஒரு வெற்றியாளனாக மாறிக்கொண்டிருக்கின்றார் டாக்டர் பாலவாசகன் அவர்கள்.

அண்மைக்காலமாக பேஸ்புக், மற்றும் பிளிக்கரில் முகத்தை ஆச்சரியமாக்கத்தக்க பாலவாசகனால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. அவை நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டடோரினதும் பாராட்டுக்களையும் பெற்றவகையாகவே இருந்தன...

அவரால் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் கண்ணுக்கு விருந்தாக....
இந்த புகைப்படங்களில் ஒரு தவளையின் படம் இருக்கும் கவனமாகப்பாருங்கள். இந்த புகைப்படம் டாக்டர் பயணித்த ஆட்டோவில் தவளை நின்றபோது உடனடியாக டாக்டர் எடுத்த புகைப்படம்.
எனினும் சில செட்டிங்சை செய்து இன்னும் உருவொழுக்கு, மறுபிரதிப்பு என்பவை, மற்றும் கோணங்களை செட்செய்து தரமான படம் ஒன்றைபெற டாக்டர் முயற்சித்துக்கொண்டிருந்தவேளை ஆட்டோக்காரார் விவரம் தெரியாமல் தவளையை அடித்து ஓடவைத்துவிட்டாராம்.


2012 ஞாயிற்றுக்கிழமை 22 தேதி தனது பிறந்தநாளை நாவலப்பட்டியில் கொண்டாடும் அன்புத்தம்பி டாக்டர் பாலவாசகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

உடலினை உறுதி செய்....

டிலானை இப்போது பேஸ்புக்கிலோ, ஸ்கைப்பிலோகூட பிடிப்பது மிகக்கஸ்டமான காரியமாக இருக்கின்றது. பிஸி பிஸி என்றே அழைப்புக்கள் எடுத்தாலும் நிலமை உள்ளது.
இருந்தாலும்கூட பேஸ்புக்கிலே பல்வேறு உடற்பயிற்சிகளை டிலான் மேற்கொள்ளும் புகைப்படங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
புறவாய் இல்லை பயபுள்ளைகள், தங்கள் பிரபொஸனல்களைவிட போட்டோ கிராபியிலும், ஜிம்மிலும் பொழுதை கழிப்பது பாராட்டக்கூடியதாகவே உள்ளது.

நான் டிலானை சந்தித்தபொழுதுகளில் எல்லாம் சொல்லிக்கொள்வது, எப்போதும் ஸ்போட்ஸ் மற்றும் உடல்மீது கவனம் கொண்டிருக்கும் நீ... வெளியே போனால் இதெற்கெல்லாம் டைம் கிடைக்காமல் நம்மளைப்போல ஆகிவிடுவாய் பார் என்று.. இருந்தாலும்கூட அண்ணே! ஒருபோதும் இல்லை எனக்கு எதிலை கொன்ரோல் இருக்கோ இல்லையோ ஜிம் விடயத்தில் வேற கிரகத்திற்கு போனாலும் ஜிம்முக்கு போவேன் என்பான்.
அதைப்போல வேற தேசம்போனாலும் ஜிம்முக்கு போவது சந்தோசமே.
வெகு விரைவில் மங்களகரமாக இலங்கைவருவேன் என்ற டிலானுடைய அறிவித்தலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றேன்.

பதிவுலகில் பதிவர்கள் என்று பலர் நண்பர்களாக வந்தாலும், இருந்தாலும் எப்போதும் அத்தனையையும் தாண்டி என் சகோதரர்களாக இருப்பவர்கள் இந்த இருவர். எங்களுக்குள்ளான அதி உச்ச தொடர்பு என்ன வென்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்றால், என் பதிவுலகம் சம்பந்தமான சகல கடவுச்சொற்களும் பாலவாசகனுக்கு தெரியும், ஆதேபோல டிலானுக்கும் தெரியும், அதேபோல அவர்களுடையதும் எனக்கும் தெரியும் 

2012 ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் தேதி ஜிம்மிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடும் டிலானுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒரே ஆண்டு, ஒரே தேதி, ஒரே மாதத்தில் பிறந்து, என் இதயத்திற்கு மிக நெருக்காமாக உக்காந்திருக்கும் இரண்டு தம்பியருக்கும் எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.

Wednesday, January 4, 2012

மீண்டும் கொஞ்சநேரம் பேசலாமா???


நாம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி?
“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா? எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா? ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா?
ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா?

இன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்டும், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா?
ஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.

அத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா?

தேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.
இந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.
ஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா?

சில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள்! அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே!!

சில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.

கீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..
அந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.
அதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.
பார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…

Monday, January 2, 2012

வாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.

உலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன்? அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா மொழிப் புலவன் ஐயன் வள்ளுவன்.
திருக்குறள்... சொல்லியபொருளின் பொருள் உணர்ந்தார்க்கு உச்சி முதல் உள்ளம்கால்வரை சிலிர்ப்பை எற்படுத்தும். தமிழகனாகப்பிறந்துவிட்டு இன்னும் திருக்குறள் பாடி வாய்மணக்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?
'தமிழனாக அதிலும் தமிழ் மொழி படிக்கத்தெரிந்தும், திருக்குறளை படித்து இரசிக்காதவன் ஒவ்வொருவனும் இனிமேல் இவள்போல் பிறப்பதற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்ட உலக அழகியைசொந்தமாக அடைந்துவிட்டும், இன்னும் அவளை தொட்டுக்கூடப்பார்க்காமல் இருக்கும் பேடியர். என்று ஒரு இளங்கவிஞன் சொன்னபோது அந்த உவமானம் என்னை சிலிர்க்க வைத்தது உண்மையும் அதுதானே?

திருவள்ளுவர் இன்றைய எம்.பி.ஏ கற்றவரா? என்று கேட்கும் அளவுக்கு தொழில் நிபுணத்துவம் பற்றிய அத்தனை குறிப்புக்களையும் தந்திருக்கின்றமை ஆச்சரியப்பட மட்டும் அல்ல அதிசயிக்கவும் வைக்கின்றது. தலைமைத்துவம், முடிவெடுக்கும் தன்மை, ஆளுமை விருத்தி, கூட்டுச்செயற்பாடு, பங்கு, நிதி முகாமைத்துவம், நிதியியல், நிர்வாகம், அபிவிருத்தி, வியாபாராம், சுயமரியாதை, சுய கௌரவம் என எத்தனை குறள்கள் அன்றே ஒவ்வொன்றாக தித்திப்பாக தந்திருப்பது அபரிதமானதே.
திருக்குறளில் பொதுவுடமை கருத்துக்கள் 60, 70களில் எடுத்து மேடைகளில் முழங்கப்பட்டன, அதை விட்டுவிடவோம். முன்னேறத்துடிக்கும் பக்கா முதலாளித்துவ வாதிகள் மட்டும் இந்தக்கோணத்தில் திருக்குறளைப்பார்ப்போமா?

பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் - திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு (காலம் அறிதல் -02)

ஒருவரின் சாதுரியத்தால் இவர் சாதுரியர் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளோம், இவர் ஒரு 'சதுரா'; என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோமா? தமிழில் சதுரர் என்ற பதம் உண்டு.
ஒரு பிரச்சினை தோன்றிய இறந்தகாலம், இப்போதைய அதன் பரிணாமம், அதை நிவர்த்தி செய்வதால் எதிர்காலத்தில் வரும் நன்மைகள், ஒன்றும் செய்யாதுவிடின் ஏற்படும் நட்டங்கள் என நான்கு கோணங்களிலும், காலங்களை போட்டு சிந்தித்து தெளிவான முடிவெடுப்பவர்களே சதுரர்கள்.

பொருள் - காலத்துடன் பொருந்துமாறு முழுமையாக ஆராய்ந்து நடத்தல், ஓரிடத்தில் நில்லாத இயல்புகொண்ட செல்வத்தை, ஓரிடத்தில் இருந்து நீங்காமல் கட்டும் கயிறாகும்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் எனும் செருக்கு (ஊக்கம் உடமை -08)

ஊக்கத்தால் ஒருவர் அபரிதமான முன்னேற்றத்தை அடைந்தாலும், அதே ஊக்கத்தால் முன்னேறும் முயற்சியில் அவர் தோல்விகண்டாலும், அவர்கள் அந்த வெற்றியையோ தோல்வியையோ பெரிதாக எண்ணி அதில் தம்மை இழந்துவிடக்கூடாது.
அதேபோல எத்தனை சங்கடங்கள் வந்தாலும், இடையூறுகள் வந்தாலும் தம் இலட்சியங்களை அடைந்து உலகத்தை திரும்பிப்பாhக்க வைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றியின் இரகசியமாக பின்னால் நிற்பது அவர்களது ஊக்கமே. ஒருவேளை தோல்விகளை கண்டு அவர்கள் தங்கள் ஊக்கத்தை கைவிட்டு, விரக்தியில் நின்றிருந்தால் உலகம் இவர்களை பார்த்து பெருமைப்படும் சந்தாப்பம் இல்லாமற்போயிருக்கும்.

பொருள் - ஊக்கம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் நாம் வல்லவர்கள் ஆகிவிட்டோம் என்று தனக்கு தான் திருப்தியுடன் பெருமைப்பட்டு மகிழ்வுறும் உச்ச மகிழ்ச்சிகளை அடைய மாட்டார்கள்.

சீரினும் சீரல்ல செய்யாரே சிரோடு
பேராண்மை வேண்டு பவர் (குறள் -மானம் -02)

வெற்றி வெற்றி வெற்றி... இந்த வெற்றி மட்மே குறிக்கோள், அந்த வெற்றியை எந்தவழிகளில் வேண்டமானாலும் அடைவோம் என்று நினைப்பவர்கள் சிலரை நாம் கண்டிருக்கின்றோம் அல்லவா? இவர்களுக்கு குறுக்கு வழியில் வெற்றி கிடைத்துவிடலாம், அனால் அந்த வெற்றி ஒருபோதும் நிரந்தரமானதாக இருக்காது. மற்றவர்கள் உளமார அதை பாராட்டவும் போவதில்லை. இந்த வெற்றிக்குப்பின்னால் அது கொடுக்கப்போகும் அவமானங்கள் கண்டிப்பாக இருக்கும். அதேவேளை வெற்றி நேரன வழியில், போராடிக்கிடைத்த வெற்றி, பல தோல்விகள், கஸ்டங்கள், நேர்மைகளின்மேல் கட்டப்பட்ட வெற்றி என்றால் அந்த வெற்றி அவர்களை விட்டு எப்போதும் போகாது. உண்மையான வெற்றியை தேடுபவர்கள் குறுக்கு வழிகளை நாடமாட்டார்கள்.

பொருள் - புகழ் அதனுடன் பெரும் தலைமை என்பவற்றை விரும்புவர்கள் புகழ், தேடும் வழியிலும்கூட குடிப்பெருமைக்கு ஒவ்வாத எந்தச்செயல்களையும் செய்யமாட்டார்கள்.

கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (படைச்செருக்கு -02)

ஒரு பெரிய இலட்சியத்திற்காக நேரியபாதையில், பல அர்பணிப்புகளுடனும், முறையான திட்டம், நேர்மையுடனும் உழைத்தும் அல்லது போராடியும் அந்த உழைப்பு வெற்றிபெறாதுவிட்டாலோ, அல்லது போராட்டம் தோற்றுவிட்டாலோ ஏளனமாக சிரிப்பவர்கள்தான் ஏளனமானவர்கள்.
ஏனெனில் இலட்சியவாதிகள் ஒருபோதும் அற்ப விடயங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர்களின் உன்னதமான உழைப்பு, தியாகம், போராட்டம் என்பன தோற்றாலும் அவர்கள் மேன்மையுற்றவர்களே. அற்பர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்வை கொடுக்கலாம்.

பொருள் - காட்டில் ஓடும் முயலின்மீது பாய்ந்து அதை கொன்ற அம்பைவிட, வெட்ட வெளியில் நேருக்கு நேர்நின்று நேராக குறிவைத்து தவறிய ஈட்டி மிக மேலானது.

'ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (ஆய்வினை உடைமை -10)

சில தோல்விகள் எம்மை சலிப்படையச்செய்யும் என்பது உண்மைதான். ஏனென்றால் பல தியாகங்களை புரிந்து, பல்வேறுபட்ட நேர்த்தியான திட்டங்களை வகுத்து, பலநேரத்தை செலவு செய்து, ஒன்றிப்புடன், அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள்கூட சிலவேளைகளில் தோற்றுப்போகும்.
என்ன செய்வது தலைவதி அப்படி என்று பலர் சலித்திருப்பதை நாம் அனுபவங்களுடாக கண்டிருக்கின்றோம்.
அதிலும் தோல்விகளில் விழிம்புத்தோல்வி அதாவது ஆங்கிலத்தில் slip between cup and lip வகை தோல்விகள் ஒருவனை அப்படியே சோர்வின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும்.
இருந்தபோதிலும் அந்த தோல்வியிலும் சோர்வுறாது சிலித்துக்கொண்டு மீண்டும் முயற்சியில் இறங்கிவிட்டவன், அப்படி ஒரு விதி இருந்தால் அதையும் மாற்றுபவன் ஆகிவிடுவான்.

பொருள் - சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கம் அறிவுடை யார் - (தெரிந்து செயல்வகை -03)

சிந்தனை முன்னோக்கியும், அறிவு பின்னோக்கியும் எப்போதும் செல்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். நம்மில் சிலருக்கு பின் முதுகு மட்டும்தான் கவலையினைத்தரும் ஏனெனில் நம்மால் அதைப்பார்க்கமுடியாது. இவர்கள் மின்மினிப்பூச்சிகளைப்போன்றவர்கள். மின் மினப்பூச்சிகளின் விளக்குகள் எப்போதும் அவற்றின் பின் பக்கமே இருக்கும்.
ஒருவன் தன் தினசரிக்கடமைகளை ஆற்றும்போது அவனுக்கு நினைவாற்றல் மட்டும் இருந்தால்ப்போதும், ஆனால் முக்கிமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என்னும்போது அனுபவங்கள் கை கொடுக்கலாம் ஆனால் அறிவு மட்டுமே பயன்கொடுக்கும்.

உதாரணமாக ஒன்றைப்பார்ப்போம் சிறு வியாபாரி ஒருவன் அன்றாடம் காச்சியாக இருந்து ஒரு தொகை பணத்தை சேர்த்து, பணத்தை வங்கியில் தன் குடும்ப அவசர, விசேசங்களுக்காக போட்டு வைத்திருந்தான். ஆனால் பத்திரிகையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதாக அவனது நண்பனின், இப்ப வாங்கினால், இன்னும் நாலுவருடத்தில் பங்கு பெரும் இலாபமென்னும் அரைகுறை கதையை நம்பி அந்தப்பணத்தில் நிறுவன பங்குகளை வாங்கினான். அவனது சேமிப்பு அத்தனையும் போனது, பங்குகள் வாங்கியதைவிட சரிந்தன.

பொருள் - பின் விளையும் ஒரு ஊதியத்தை கருத்தில்க்கொண்டு இப்போது கையில் இருக்கும் முதலை இழக்க காரணமான செயலை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

-தொடரும்....

LinkWithin

Related Posts with Thumbnails