Sunday, August 30, 2009

சென்னையில் ஓர் நாள் மழையில்.


ஓர் ஐந்து நாட்களின் முன்னர், மனது கொஞ்சம் இலேசாக இருந்தது. ஆய்வொன்றை முழுமையாக மனநிறைவுடன் எழுதி சமர்ப்பித்த சந்தோசம் மனதை முழுமையாக நிறைத்திருந்தது. சென்னையில் நான் தற்போது தங்கியிருக்கும் கிழக்கு கடற்கரைச்சாலையில் கால்கள் ஆற, கடற்கரை வரை நடந்துசென்று அங்கு தனிமையில் இருந்து கடற்கரை இரைச்சலை செவிமடுத்து, அந்த ஈரலிப்பான காற்றினை முழுமையாக இழுத்துமூச்சுவிட்டு கடலின் இரைச்சலை தவிர்த்த நிசப்தமான அந்த பொழுதுகளை இரசிப்பது எனது வழமை.
அன்றும் அவ்வாறே சென்று அமர்ந்திருந்தேன். ஆய்வுகளை சமர்ப்பித்து முடித்திருந்தபோதிலும், அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது என் மனது. என்னமோ, கடலையும் தரையினையும் பற்றி சார்பியலில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது. இந்த கடலின் அமைவிடத்தினையும், தரையின் அமைவிடத்தினையும் புரியவேண்டுமெனில் திசையும், வலம் இடமும் தெரியவேண்டும். தனியே எனது வலதுபக்கம் கடல், இடது பக்கம் தரை என்று சொல்லிவிட முடியாதே, அங்கே கண்டிப்பாக ஒரு திசைவேண்டுமே! வலது இடம்பற்றி பேசும்போது அவை சார்பான திசைகளையும் சொல்லவேண்டிவரும். ஸோ..லெப்ட் அன்ட் ரைட் கூட சார்பான கருத்துக்கள்தான். அட மிகக்கஸ்டமான சார்பியலை நம்மளால இவ்வளவு சிம்பிளாக யோசிக்கமுடியுதே! என மனம் அது பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தது.


எத்தனை சிரமப்பட்டு மனதை அடக்கினாலும், அன்று என்னமோ அது தன்னை ஒரு ஆராட்சியாளனாகவே காட்டிக்கொண்டு நின்றது. ஐங்ஸ்ரின் முதல் சுயாதாவினுடைய உதாரண மேற்கோள் விளக்கங்களை அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டிருந்தது.
வழமையினைவிட நேரத்திற்கே இருட்டிவிட்டது போன்ற உணர்வு ஏற்படவே, நேரத்தைப்பார்த்தேன். நேரம் ஒன்றும் அதிகம்போய்விடவில்லை; மாலை 5.30 மணிதான் ஆகியிருந்தது. அப்போதுதான் புரிந்தது சில வேளைகளில் இந்த பாழாப்போன மனது எனது பலவீனப்புள்ளிகளை அறிந்து அதற்கேற்றால்போல விடயங்களை அடுக்கி, தன்பாட்டுக்கு இலவச பேருரை நிகழ்த்தி சூழலில் இருந்தும் சுற்றாடலில் ஏற்படும் மாற்றங்களைக்கூட கவனிக்காத விதத்திலும் அவற்றில் இருந்து என்னை வேறுபடுத்திவிடுகின்றது என்று.


வானம் மிக விரைவாக கடுமையாக இருட்டிக்கொண்டுவந்தது. கடலை நோக்கி பார்வையினை செலுத்திக்கொண்டு மணலில் இருந்து கால்களை மடக்கி, முழங்கால்களை இரண்டு கைகளாலும் கோர்த்துப்பிடித்துக்கொண்டிருந்த எனக்கு, பின் திசையில் இருந்துவந்த இடிமுழக்கங்கள் தூரத்தில் மழை பெய்துகொண்டிருக்கின்றது என்ற வெளிப்படை உண்மையினை தெரிவித்துக்கொண்டன. மப்பும் மந்தாரமுமாக கடும் கறுப்பாக மாறிவிட்ட வானம், ஈரலிப்பான கடற்காற்று, என்பவற்றுடன் நிதானமாக கடலை பார்க்கும்போது கடல் அலையின் இரைச்சல் தற்போது பேரொலியாக கேட்பதுபோல இருந்தது.
உடனடியாக மனம் நீண்டநாட்களின் பின்னர், மழை தருகின்ற சுகங்களை இன்று முழுமையாக அனுபவித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தது.


கடற்கரைக்கு சமாந்தரமாக இருந்த வீதியிலும் மக்கள் நடமாற்றம் மிகவும் குறைவாக இருந்தது. விதியின் மின் விளக்குகள் ஒளிர ஆரம்பித்திருந்தன. ஒன்றிரண்டு மழைத்துளிகள் என் முகத்தில் விழ ஆரம்பித்தன. எழுந்து விதியை நோக்கி நடக்க ஆரம்பிக்கும்போது மழைத்துளிகளின் வேகமும் கூட ஆரம்பித்து, நான் வீதியினை அடைந்தபோது மழை தனக்கே உரிய அடைமொழியான “சோ” என்ற மழையாக பெய்ய ஆரம்பித்து. இனிவரும் முனிவரும், கவிஞரும், புலவரும் சொன்ன மழையின்சுகம் அத்தனையினையும் இன்று முழுதாக அனுபவிக்கவேண்டும் என்று முடிவெடுத்தவனாக வான்பார்த்து மெதுவாக வீதியில் நடந்தேன்.
(அட மடையா! அவங்கள் சொன்னாங்களாம் என்று இவரு நடக்கிறாராம். நல்லா நனை மகனே!! உனக்கு சுகம் கிடைக்குதோ என்னமோ கண்டிப்பா யுரம் கிடைக்கும்!!! என்று மனம் எச்சரித்துக்கொண்டே வந்தது)
அட நம்ம ஊரில் நனைய முடியுமா? மழையின் சுகத்தை அணுவணுவாக இரசித்து கொட்டும் மழையில் மெதுவாக நடந்து வானத்தை பார்க்கமுடியுமா? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்பது தொடக்கம் பல்வேறு காரணங்களுக்காக எங்களுக்கு நாங்களே பல தடைகளை போட்டு ஒதுங்கிவிடுவோம். ஆனால் நம்மைத் தெரியாத அன்னியமான ஒரு இடத்தில் சன நடமாற்றமே இல்லாத பொழுதுகளில் இந்த சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அனுபவிக்காமல் இருக்கமுடியுமா?


மெதுவாகவே கொட்டும் மழையில் நடந்துகொண்டிருந்தேன். வீதியில் பட்டு தெறிக்கும் மழை வீதியின் இருபுறங்களிலும் சிறுவெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது.
எனது உடைகள் முழுமையாக நனைந்து தொடர்ந்துவரும் மழை உடையில் பட்டு உடைகளால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எனது ஆதி அந்தம் முழுவதும் நனைந்துகொண்டிருந்த பொழுதுகளில், “நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சௌர்க்கம் எய்துவாய்” என்ற வரிகளின் உண்மையான அர்த்தங்கள் அனுபவமாகப்புரிந்தது. முன்னிரவின் இருட்டு, பெருமழையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் வீதிவிளக்கின் ஒளி, தூரப்பட்டுக்கொண்டிருந்த கடல்அலைகளின் ஓசை என்பன மனதிற்கு ஒரு முழுமையான சுகத்தினை கொடுத்தன. எதேட்சையாக மழையில் நனைவதைவிட, காத்திருந்து திட்டமிட்டு மழையினை அணு அணுவாக இரசிப்பதன் சுகம் எனக்கு அன்று புரிந்தது.


வீதி திரும்பி கிழக்கு கடற்கரைச்சாலைக்கு செல்லும் சந்துக்களில் ஒன்றில் தேனிர்க்கடை ஒன்று இருந்தது. மழையில் நனைந்துவந்து சுடச்சுட தேனீர் குடித்தால் இதமாக இருக்கும் அல்லவா என்று மனதின் கருத்தினை எற்றுக்கொண்டேன். பால் கலக்காத தேனிர் மட்டும் தரும்படி கடைக்காரிடம் தெரிவித்தேன். “தம்பி சிலோனுங்களா? என்று தேனிரை ஆற்றியபடியே கேட்டார் அவர்” வெறுமையாக தேனீர் கேட்டதனாலா? அல்லது எனது பேச்சிலிருந்தா அவர் அப்படி கேட்டார் என்று எனக்கு புரியவில்லை.
அப்பா…உச்ச வெயிலில் நெடுந்தூரப்பயணங்களின் நடுவில் மர நிழல் ஒன்றில் நின்று, மண்குடத்தில் வைத்திருந்து தரும் மோர்குடிக்கும்போது எவ்வளவு சுகமோ, அதைவிட சுகமானது, தெப்பமென மழையில் நனைந்து சிறுநடுக்கத்துடன் தேனீர் பருகுவது.


எனது வாழ்நாளில் பல நாட்களாக என் மனத்தில் அடக்கி வைத்திருந்த அந்த மழையில் நனையும் ஆசை சென்னையில் ஓர் நாள் மழையில் தீர்த்துவைக்கப்பட்டது.
பொதுவாகவே வீட்டில் இருக்கும் இராக்காலங்களில் நான் மழையினை வரவேற்பது வழமை. அந்த இராக்கால மழைப்பொழுதுகளில், பல்கனி என்று சொல்லும் வீட்டின் அமைவிடத்தில் இருந்து சிறிய தூவானத்துடன் புத்தகம் படிக்க ஆசைகள் இப்பவும் உண்டு. அதேபோல இராக்காலங்களின் கடும் மழை பெய்கையில் உடலை போர்வையால் போத்துக்கொண்டு கால் தரையில் படாமல் செற்றியில் சம்மட்டி போட்டிருந்து பிடித்த கார்ட்ரூன்கள் பார்க்கவேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. அதே போல இராப்பொழுதுகளில் அனேகமாக யாழ்ப்பாண வீடுகளில் கூரை ஓடுகளின் இடையில் உள்ளே வெளிச்சம் வருவதற்காக கண்ணாடிகள் வைத்திருப்பார்கள் அல்லவா, அந்த கண்ணாடியின் ஊடாக சிந்தும் மழையினை பார்த்துக்கொண்டே, மழையின் இரைச்சல் ஓசையுடன் தூங்கவேண்டும் என்பது இப்போதும் எனக்கிருக்கும் ஆசை.
இப்படி மழை வந்தால் உள்ளேயும், வெளியேயும் நிறைவான சந்தோசங்கள் உள்ளதல்லவா? இந்த சிறு சிறு இன்பங்களில் இருந்தே நாம் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். சிறுவயதில் மழை பெய்யும்போது யன்னல் கம்பிகளை பிடித்தவண்ணம் “மழையே மழையே மெத்தப்பெய்” என்று உச்ச குரலில் பாடி குதூகலித்தவர்கள் அல்லவா நாங்கள் அத்தனைபேரும்.

Thursday, August 27, 2009

யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்புக்கள்.


உலக நாடுகளின் புதியவை எவை அறிமுகமாகின்றதோ அதனை உனடியாக சோதித்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்பார்க்க பிரியப்படுபவர்கள் யாழ்ப்பாண மக்கள். ஆரம்ப காலங்களில் இலங்கையில் ட்ரான்ஸ் சிஸ்ரர் என்று சொல்லப்பட்ட அப்போதைய பெரிய திருகு வட்டங்கள் கொண்ட ரேடியோக்கள், கிராமோபோன் ரெக்காடர்கள், தொலைக்காட்சிகள் என அவை முதன் முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
19ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே யாழ்ப்பாணத்தவர்கள், வெளிநாடுகளில் வர்த்தகங்கள், தொழில்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், யாவா போன்ற நாடுகளுக்கு அன்றைய பிரித்தானிய கொலனித்தவ ஆட்சியின் அரச அலுவலகர்களாக பெருமளவிலான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர்கள் அன்றே கல்வி நிலையில் ஆசியாவில் உயர்ந்து நின்றதன் காரணத்தால் வெள்ளையர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். அது தவிர அன்றைய நிலையில் இலங்கையில் ஏனைய பிரதேசங்களுக்கு கொடுக்காத ஒரு சலுகையினை ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருந்தனர் என்பது அன்றைய நாட்களில் பல நூல்களை எழுதியவர்களின் கருத்துக்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்த நிலையில் இலங்கைக்குள்ளேயே ஏனைய சமுதாயங்கள் சுழன்றுகொண்டிருந்தபோது உலகஓட்டத்திற்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்த ஆரம்பித்துக்கொண்டவர்களும் யாழ்ப்பாண மக்களே. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் மேல்நிலையினை அடைந்திருந்த அந்த மக்கள், இலங்கை பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர், அவர்களின் ஆத்திரங்களாலும், பொறாமைகளாலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதும், குழிபறிக்கப்பட்டதும் வரலாறு அறிந்த உண்மை. இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல சளைத்துவிடவில்லை. பெரும்பான்மை இனத்தினர் நினைத்ததுபோல அவர்களின்மூளை வெள்ளையனால் வந்ததல்ல, ஜீன்களிலேயே உள்ளது.


1979 ஆம் ஆண்டு இலங்கையில் ஒளிபரப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் ஆரம்பமாக தொடங்கின. இந்த நிலையில் 1979ஆம் ஆண்டு ஐ.ரி.என். என்ற சுவாதீன ஒளிரப்பு சேவையும், 1982ஆம் ஆண்டு இலங்கையின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினியும் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் இவை இரண்டுமே அரசாங்க தொலைக்காட்சி சேவைகளாகவே நடத்தப்பட்டன. இந்த சேவைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகள் மிக மிக அரிதாகவே காணப்பட்டன. இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ்த்திரைப்படங்கள் என்பவற்றை வீட்டில் இருந்தவாறே பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் யாழ்ப்பாண மக்களிடம் எழுந்தது.

அந்த எண்ணங்கள் உடனடியாகவே செயற்பாடுகளாக மாற்றம் கண்டன. 1983 ஆம் ஆண்டு, மற்றும் 1984ஆம் ஆண்டு காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பு சேவைகளை நடத்தத் தொடங்கிவிட்டன
அன்றைய நிலையில் வி.எச்.எஸ் அலையமைப்பில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஒளிபரப்புக்கள் யாழ்ப்பாண மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஒன்று இரண்டென ஆரம்பிக்கப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் 15 ற்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் உருவாகும்வரை தொடர்ந்தன.

யாழ்ப்பாணத்தில் ஈச்சமோட்டை மற்றும் அரியாலை பகுதிகளில் வைத்து “றீகல் வீடியோ மூவிஸ்” என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச்சேவை யாழ்ப்பாண நகரை பெரும்பாலும் மையப்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண நகருக்குள் தௌ;ளத்தெளிவாக அதன் ஒளிபரப்புக்களை பார்க்கக்கூடியதாக அந்த ஒளிபரப்பு இருந்தது.
அதேபோல மானிப்பாய், நவாலி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு ஒளிபரப்பினை தெளிவாக பார்க்கக்கூடியவாறு “விக்னா” என்ற ஒளிபரப்பு சேவை ஒளிபரப்பட்டது. அதேபோல யாழ்ப்பாணம் கச்சேரியடிப்பகுதியில் இருந்து “செல்வா வீடியோ மூவிஸ்” என்ற தொலைக்காட்சி அலைவரிசையும், யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம் சகோதரர்களால் “வாஹிட்” என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளும் நடத்தப்பட்டு வந்தன.


புலவர் வீடியோ, லவ்பேர்ட்ஸ், நல்லூர் வீடியோ, என 15 க்கும்; மேற்பட்ட தனியார் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.
இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் என்னவென்றால், இவர்கள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்ளாது, ஒரு செயற்குழு ஒன்றினை அமைத்து, நேரப்பிரகாரம் தமது ஒளிபரப்பு சேவைகளை வழங்கிவந்தார்கள்.
ரூபவாஹினியில் “என்ன சுந்தரி புது சட்டையா?” என்ற சண்லைட் விளம்பரம் சிரிக்கத்தக்க ஒரு விளம்பரமாக வந்தபோதே தரமான விளம்பரங்களை யாழ்ப்பாண விளம்பர அமைப்புக்கள், யாழ்ப்பாண விற்பனை நிலையங்களின் விளம்பரங்களை தரமாக அமைத்திருந்தார்கள். ரூபவாஹினியில் மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்திற்கு தவமிருந்து பார்த்து இரசித்த மக்களுக்கு, புதிய புதிய திரைப்படங்களை திகட்ட திகட்ட வழங்கினார்கள் இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையத்தவர்கள்.

விளம்பரங்கள், விசேட நிகழ்வுகள், போட்டிகள், பண்டிகை விழாக்கள், மாணவர்களின் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கள், விளையாட்டுப்போட்டி ஒளிபரப்புக்கள், கல்வி நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள், கலைநிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்கள், கோவில்களின் உற்சவங்களின் நேரடி ஒளிபரப்புக்கள் என்று மெல்ல மெல்ல தரமான தனியார் ஒளிபரப்புக்களுக்கான வித்தினை 1983-84ஆம் ஆண்டுகளிலேயே போட்டுவிட்டன யாழ்ப்பாண தனியார் தமிழ் ஒளிபரப்புக்கள்.
பொழுபோக்கு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டாலும் திரைப்படங்கள் மட்டும் என்ற வரையறைக்குள் நின்றுவிடாது, அன்று மக்களுக்கு புதிதாக இருந்த சிங்கப்பூர் ஒளியும் ஒலியும் என்ற மேடைநிகழ்சிகள், முதல் முதல் இடம்பெற்ற திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற ஸ்ரார் கிரிக்கட் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கார்ட்ரூன் நிகழ்வுகள், ஆழ்கடல் உலகம், வினோத உலகம் போன்ற நிகழ்வுகள் என்பவற்றையும் ஒளிபரப்பு செய்தனர். அடுத்து முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய சம்பவங்கள் என்னவென்றால் மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை மற்றும் சாதாரண தரப்பரீட்சைகள் என்றால் தமது ஒளிபரப்புக்களை அந்த பரீட்சைகள் முடியும்வரை ஒத்திவைத்திருந்தனர்.

வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்து உச்ச பயனை அடைவது பொருளியலின் சவால் என்றாலும், யாழ்ப்பாண மக்களே இந்த விடயத்திற்கு எடுத்துக்காட்டானவர்கள். அவர்களின் பல கட்டங்களிலும் கவனித்துப்பார்த்தால் அந்த விடயம் புரியும். குறைந்த வளங்களை வைத்து நிறைந்த பயனை அடையும் அவர்களின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை. பெற்றோல் தட்டுப்பாடாக இருந்தபோதும் வாகனங்களை இயக்கியது, மின்சாம் இல்லாத போதும், டைனமோவில் இருந்துவரும் ஏ.சி மின்சக்தியை டி.சி சக்தியாக ஒரு சேர்க்கிட்மூலம் மாற்றி சைக்களை சுற்றி ரேடியோகேட்டது, அதேபோல வாகனங்களின் வைப்பர் மொட்டர்களை சற்றி தொலைக்காட்சி பார்த்தது, திகைக்கவைக்கும் பல சுதேச கண்டுபிடிப்புக்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் இதற்கு முன்னதான காலத்தில் அதி நவீன கருவிகள் இல்லாமல் தம்மிடம் இருக்கம் ஒரு சில சிறிய கருவிகள் துணைகொண்டே இவர்கள் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை மிகவும் தரமாகவும், சிறப்பாகவும் செய்துகாட்டினார்கள். கிட்டத்தட்ட 1987வரை தொடர்ந்த இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்புக்கள் அதன் பின்னர் இந்தியப்படையின் ஆக்கிரமிப்பும், அதன் பின்னர் இடம்பெற்ற மோதல் காலங்களில் யாழ்ப்பாணம் மின்சாரமின்றி இருந்ததும் அனைவரும் தெரிந்தவிடங்களே.

இன்று இலங்கையில் தமிழ் தனியார் தொலைக்காட்சி வரலாற்றினை ஆரம்பித்தவர்கள் நாங்களே. தமிழ்வளர்ப்பவர்கள் நாங்களே என்று சொல்லிக்கொள்பவர்கள்!! யாழ்ப்பாண ஒளிபரப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு என்பதை புரிந்துகொண்டால் சரி.
(அது சரி பெரும்பான்மையான இலங்கைத்தமிழ் ஊடகங்கள் சிங்களத்தை எமது (தமிழ்) சகோதர மொழி என்று குறிப்பிடுகின்றிர்களே! இப்படி சொல்ல யார் உங்களுக் அனுமதி தந்தது? கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனவே தமிழின் சகோதரமொழிகள், அதைவிட்டு கண்ட கண்ட காட்டு மொழிகளை எல்லாம் தமிழின் சகோதர மொழி ஆக்காதீர்கள்)

Tuesday, August 25, 2009

மீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ.


2007ஆம் ஆண்டு வெளிவந்த கொலிவூட் திரைப்படமான வோர் , த போர்பிடன் கிங்டொம் (The Forbidden Kingdom) , 2008ஆம் ஆண்டு வெளியாகியிருந்த, த மம்மி : ரொம்ப் ஒவ் த ராஹென் எம்பெரெர் (The Mummy: Tomb Of The Dragon Emperor) , மற்றும் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள, த எக்ஸ்பென்டபிள்ஸ் (The Expendables) ஆகிய திரைப்படங்களுக்கு அடுத்து “ஓஷன் பரடைஸ்” (Ocean Paradise)என்ற சீனத்திரைப்படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக ஜெட் லீ அறிவித்துள்ளார்.
சீன எட்கோ பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்தத்திரைப்படம் எதிர்வரும் ஆண்டு வெளியிடப்படவுள்ளதாகவும், வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள எட்கோ பிலிம்ஸ் நிறுவனம் அதற்கு முன்னதாக இந்த திரைப்படம் தொடர்பாக பீஜிங்கில் ஒரு செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


அடுத்து “ஓஷன் பரடைஸ்”திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்த எட்கோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஷாங் ஹொங்ஜான், இந்த திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், இதில் ஜெட் லீயின் திறமைகளுக்கு ஏற்ற பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன் இந்த திரைப்படத்தினை புதிய இயக்குனர் ஒருவரே இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவல் ஒன்றில் இந்த திரைப்படத்தில் ஜெட் லீ பறக்கப்போவதும் இல்லை, சாகசம் நிறைந்த சண்டைகள் போடப்போவதும் இல்லை, இந்த திரைப்படம் அவரது நடிப்பின் முழு அத்தியாமாக அவரது திரையுலக வாழ்வின் முதல் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என அறிவித்துள்ளது.


தற்போது 46 வயதாகும் ஜெட் லீயின் கடந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்கத் தயாரிப்பாகவே வந்திருந்தன. இதிலும் குறிப்பாக த போர்பிடன் கிங்டொம் திரைப்படத்தில் இவரும், மிகப்பெரும் நடிகர் ஜாக்கி ஸானும் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவரது எக்ஸ்பென்டபிள்ஸ் திரைப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்புக்கள் சில நாட்களின் முன்னர்தான் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தற்போது ஜெட் லீ சிங்கப்பூரில் வசித்துவருகின்றார். இவர் தற்போது சிங்கப்பூர் குடியுரிமையினையும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் விதிமுறைகளுக்கு அமைய அங்கு குடியுரிமையை பிறிதொரு நாட்டினர் பெறவேண்டும் என்றால் சிங்கப்பூரில் அவருக்கு சொத்துக்கள் இருக்கவேண்டும் என்ற சட்டத்திற்கு அமைய ஜெட் லீ சிங்கப்பூரில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை வாங்கியுள்ளதாக முன்னர் செய்திகள் வந்திருந்தமை நினைவிருக்கலாம்.


லீ லியன்ஜி என்ற சொந்தப்பெயர் கொண்ட ஜெட் லீ, ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி 1963ஆம் ஆண்டு சினத் தலைநகர் பீஜிங்கில் பிறந்தவர். 1982ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் “ஷயொலின் ரெம்பிள்” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த “வன்ஸஃபோனர் ரைம் இன் சைனா”, 1998ஆம் ஆண்டு முதல் முதலில் கொலிவூட்டில் இவர் நடித்துவெளிவந்த “லெத்தல் வெப்பன் -4”, 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஜெட் லீ முதல்தர கதாநாயகனாக நடித்த “ரோமியொ மஸ்ட் டை” ஆகிய திரைப்படங்கள் இவரை உலகத்திரைப்பட நட்சத்திர மட்டத்திற்கு உயர்த்தியது.


“த எக்ஸ்பென்டபிள் திரைப்படம் 2010” ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளபோதிலும் அதன் எதிர்பார்ப்பு உலக அளவில் பலமானதாக உள்ளது. காரணம் அந்த திரைப்படத்தில் ஒன்று கூடியுள்ள உலக முன்னணி நடிகர் பட்டாளமே. சில்வஸ்ரன் ஸ்ராலோன், ஆனோர்ல்ட் சிவாஸினேகர், மிக்கி ரொக்கி, ஜசான் ஷதாம், டொல்ப் லக்றென், எரிக் ரொபோர்ட்ஸ், ரெர்றி, ஸ்ரீவ் ஒஸ்ரின் இவர்களுடன் ஜெட் லீ என ஒரு பட்டாளமே நடித்தால் எதிர்பார்புகள் கூடாதா என்ன?


மிகவும் இழகியமனமும், இரக்க சுபாவமும் கொண்டவர் ஜெட் லீ என அவரது உதவியாளர்கள் மற்றும் பலர் அவர் பற்றி கூறியுள்ளனர். அதேபோல மிகவும் ஒழுக்கமுள்ள அவர், திபத்தியன் பௌத்த தர்மத்தை பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் தனது மகளுடன் கடற்கரையிலிருந்து மிக அண்மையில் இருந்த நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்தார் லீ. அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலைத்தாக்கம் காரணமாக வந்த அலைகளால் அடிக்கப்பட்டாலும் சுதாகரித்துக்கொண்டு தனது மகளையும் காப்பாற்றி மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார் லீ. இந்தச்சம்பவத்தால் அவர் காலில் காயமடைந்திருந்தார். தமது வாழ்நாளில் இந்தச்சம்பவத்தை மறக்கமுடியாது என அண்மையில்க்கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் அவர்.

Monday, August 24, 2009

உச்சத்திற்கு வராத சில சூரியன்கள்.


நம் வாழ்விலும் சரி, எம் வாழ்வின் அன்றாடம் நாம் தொடர்பு பட்டிருக்;கும் துறைகளிலும் சரி, சில மிகத்திறமையானவர்களும், எம்மை மெய்சிலிர்க்க வைத்தவர்களும், அர்ப்பணிப்புடன், தனது தொழில் மற்றும் துறைகளில் ஈடுபடுகின்றவர்களும் சில வேளைகளில் அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதும், பெருமைப்படவேண்டிய திறமைகள் அவர்களிடம் இருந்தாலும்கூட அவர்கள் உச்சத்திற்கு வரமுடியாதவர்களாக இருப்பதையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
அவன் பாவம், மிகவும் திறமையானவன் அனால் அவனுக்கு அதிஸ்டமில்லையே! என எம்மில் சிலர் உச்சுக்கொட்டிச்சொல்லும் “அதிஸ்டமின்மை” என்ற ஒரு காரணத்தையும், சந்தர்ப்பங்களை தவறவிட்டதனால்த்தான் ஏதோ ஒரு கட்டத்தில் அவன் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளான் என்ற காரணத்தினையும், அவன் “தேவைக்கதிக திறமையுடையவனாக” இருக்கின்றான் அப்படி இருப்பதும் வேலைக்கு உதவாது. என்ற கருத்தினையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, அந்த சந்தர்ப்ப நிகழ்வுகளுக்கு எற்றவாறு அவன் இயங்க மறந்துவிட்டான் என்ற ஓரளவு நியாமான காரணங்களையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.


சிறந்ததொரு உதாரணத்தை இந்தச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டலாம் என நினைக்கின்றேன். 1979ஆம் ஆண்டு வெளிவந்தபடம் “நினைத்தாலே இனிக்கும்” இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். இப்போது கேட்டாலும் சொக்க வைக்கும் அந்தப்பாடல்கள் அன்று வெற்றிபெறவில்லை.
அந்த அற்புதமான பாடல்கள் பின்நாட்களில்த்தான் பலராலும் கேட்கப்பட்டன. அன்று அந்தப்பாடல்கள் தோற்றுப்போனதற்க காரணம் என்ன? என்று இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்ன பதில், அன்று அந்தப்பாடல்கள் தோற்றதற்கு காரணம் விச்சு அண்ணன் 1989ஆம் ஆண்டுக்குரிய பாடல் மெட்டுக்களை 1979ஆம் ஆண்டிலேயே கொடுத்தமைதான் என்று சொல்லியிருந்தார். ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் அந்தக்கருத்து மிகச்சரியானதாகவே இருக்கின்றது.

எனது வாழ்க்கையிலும் நான் சந்தித்த மிகத்திறமையான பலர், உச்சத்திற்கு ஏதோ ஒரு காரணத்தினால் வரமுடியாமல் உள்ளனர். அதேபோல் பல துறைகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் என்னை மெய் மறக்கச்செய்த நான் சிலிர்த்த, நான் இரசித்த பலர் இன்னும் உச்சத்திற்கு வரமுடியாதவர்களாகவே உள்ளனர். அவர்களில் சிலரைப்பற்றியே நான் இந்தப்பதிவுகளில் எழு நினைத்தேன்.
கண்டிப்பாக இவர்கள் அனைவரும் உங்களையும் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருப்பார்கள், நீங்கள்கூட, அட! ஏன் இவரால் முன்னுக்கு வரமுடியாமல் போனது என்று சிந்தித்து இருப்பீர்கள். அப்படி சிலிர்க்க வைத்து உச்சத்திற்கு வராத நான்கு சூரியன்களை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கின்றேன்.

கார்த்திக்ராஜா

இசைஞானி இளையராஜாவின் வாரிசு, குரலால் மட்டும் இன்றி உருவத்தாலும் இசைஞானியைப்போலவே உள்ள ஒருவர். முதல் முதலாக இவரது அரவிந்தன் திரைப்படப்பாடல்கள் வெளிவந்தபோது, இவரது கைவிரல் பட்டு, அந்த இசையில் வரும் கீபோர்ட் சிலித்ததுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது.
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்…என்ற பாடலும்
ஈரநிலா விழிகளை மூடி தோழ்களில்…என்ற பாடலும் முதல் முதலில்கேட்டபோது நெஞ்சம் சிலிர்த்து என்னமோ உண்மையே. “இளையராஜாவின் இட்லி சட்டிகூட இசையமைக்கும்” என்று எனது ஒரு நண்பன் அடித்த கொமன்ட்கூட இன்னும் நினைவில் உள்ளது. தொடர்ந்து உல்லாசம், காதலா காதலா, உட்பட பல படங்களில் இவரது இசை இரசிக்கும்படியாகவே இருந்தது. டும் டும் டும் படப்பாடல்கள் கூட சுப்பர் ஹிட் ஆகின. “வீசும் காற்றுக்கு பூவைத்தெரியாதா?” என்ற உல்லாசம் திரைப்படப்பாடல், “உன்பேரைச்சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குதே” என்ற டும் டும் டும் திரைப்படப்பாடல், மடோனா பாடலா நீ, மும்பாயின் மோடலா நீ?” என்ற காதலா காதலா பாடல் என்று பல பாடல்கள் அனைவரையும் இரசிக்க வைத்தன.
ஆனால் கால ஓட்டத்தில் அவருக்கு இசையமைப்புக்கான சந்தர்ப்பங்கள் குறைந்துகொண்டே போய்விட்டன. பாடல்கள் ஒரே மெட்டுபோலவே உள்ளன, நாங்கள் எதிர்பார்க்கும் இசை வரவில்லை என்பன “இவரைப்பற்றி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெரிவித்த கருத்துக்கள் “.

விநோத் கம்ளி.

உலகின் நட்சத்திரத்துடுப்பாட்டக்காரரும், மாஸ்ரர் பட்ஸ்மன் என போற்றப்படுபவருமான சச்சின் தென்டுல்கரின் உற்ற நண்பர். அண்மையில்க்கூட சச்சின் நினைத்திருந்தால் தன்னை அணியில் மீண்டும் இணைத்திருக்கலாம் என இவர் கூறியதாக வெளியான செய்தியால் பெரும்பரபரப்பு உண்டானது.
இருவரும் மும்பை கல்லூரியில் ஒன்றாகப்படித்து கல்லூரி அணிக்காக விளையாடியபோது ஒரு போட்டியின் இணைப்பாட்டமாக 664 ஓட்டங்களைப்பெற்று சாதனை படைத்திருந்தனர். இதில் ஆட்டமிழக்காமல் 349 ஓட்டங்களை வினோத் கம்ளி பெற்றிருந்தார். இந்தச்சாதனை கூட மிக அண்மையில்தான் ஹைதராபாத்திலுள்ள கல்லூரி மாணவர்களால் முறியடிக்கப்பட்டது.
அதன் பின்னர் ரஞ்சித் போட்டிகளில் விளையாடிய இருவரிலும், வினோத் கம்ளியே அதிரடி ஆட்டக்காரராக இருந்தார். ரஞ்சித் கோப்பையின் தனது அறிமுகத்தின்போதே தான் சந்தித்த பந்தை ஆறு ஓட்டங்களாக பெற்று 157 ஓட்டங்களை மிகவும் வேகமாக குவித்திருந்தார்.
90-91ஆம் அண்டு காலங்களில் இந்திய அணியில் இடம்பிடித்த வினோத் கம்ளி, இரண்டு, இரட்டை சதங்கள், மற்றும் இரண்டு சதங்களை வெறும் ஏழு ரெஸ்ட்களில் பெற்றதன்மூலம் அட்டகாசமாக தனது ரெஸ்ட் வரவை அனைவராலும் உற்றுப்பார்க்கவைத்தார்.
ஒருநாள் போட்டிகளிலும் அதிரடி மற்றும் அதிக ஓட்டங்களை குவிக்கும் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் அதேவேளை களத்தடுப்பில் சிறப்பான ஒரு வீரராகவும் இவர் விளங்கினார். 1996ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இலங்கையுடனான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா அடுத்தடுத்து இலக்குகளை இழந்தபோதும் மறுமுனையில் கம்ளி நிதானமாக நின்றும் இறுதியில் இந்தியா தோற்றபோது கண்ணீருடன் அவர் மைதானத்தை விட்டு வெளியேறியது இன்னும் கண்களில் உள்ளது.

பிரசாந்த்.

இன்றைய இளைய தலைமுறை நடிகர்களின் சீனியராக வைகாசி பிறந்தாச்சு திரைப்படத்தில் அறிமுகமான பிரசாந்த் அன்றைய 90களின் ஆரம்ப ஆண்டுகளில் நடிப்புலக இளவரசனாகவே வலம்வந்தார். பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்றதுடன், பல நாடுகளிலும் (முக்கிமாக இலங்கை) பிரசாந்த் நைட்ஸ் என்ற நிகழ்ச்சியையும் பலத்த ஆதரவோடு நிகழ்த்திவந்தார். அதன் பின்னர் இயக்குனர் சங்கரின் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் பாரிய ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு செதுக்கப்பட்ட பிராசாந்தின் காலம் அதன் பின்னர் ஏறுமுகமாகவே சென்றது. அதன் பின்னர் நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். அருமையான திரைப்படங்களை தேர்தெடுத்து சிறப்பாக நடித்தார். கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஆசையில் ஓர் கடிதம், பூமகள் ஊர்வலம், பிரியாத வரம் வேண்டும் என அத்தனை படங்களும் இரசிக்கும் வண்ணம் இருந்தன.
மற்ற நடிகர்களைப்போல அல்லாமல் எந்தவித ரிஸ்க்காக இருந்தாலும் தான் நடிப்பதில் பிரசாந்திற்கு நிகர் யாரும் இல்லை. அதேபோல சகல திறமைகளையும் அவர் தன்னகத்தே வைத்திருந்தார். யாருமே எதிர்பார்க்காத விதத்தில் உச்சத்தில் இருந்த அவர் சிறந்த படங்கள் இல்லாமல் இருப்பது சற்று ஜீரனிக்கமுடியாதவாறே இருக்கின்றது.

சுரேஸ் பீட்டர்ஸ்

ஜென்டில் மேன் திரைப்படத்தில் பிரபுதேவாவும், கௌத்தமியும் ஆடும் ஒரு பாடல் கட்டம் வருகின்றது அல்லவா? அந்த “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே” என்ற பாடல் ஒலிக்கத்தொடங்கியபோது தமிழ் இசை ரசிகர்கள் புதிதாக மேலைத்தேய குரலை தமிழில் பாடும் ஒரு பாடகனை இனங்கண்டுகொண்டார்கள். அன்றைய நாட்களில் இளைஞர்கள் எல்லோரும் சுரேஸ் பீட்டர்ஸின் திடீர் இரசிகர்கள் அனார்கள்.
அடுத்து, காதலன் திரைப்படத்தில் ஊர்வசி.. ஊர்வசி, பெட்டராப் போன்ற பாடல்கள் அன்றைய இளைஞர்களை சுரேஸ் பீட்டர்ஸின் பாடல்கள் மேல் பைத்தியம் பிடிக்க வைத்தன.
சுப்பர் பொலிஸ் திரைப்படத்தின் சுந்தரா நீ யாரடா? என்ற பாடலில் சுரேஸ் அனைவரையும் எழுந்து ஆடவைத்தார்.
கீபார்ட், பியானோ மற்றும் றம்ஸ் என்பன வாசிக்கத்தெரிந்த சுரேஸ் பீட்டர்ஸ், திரைப்படங்களில் பாடுவது மட்டும் இன்றி மின்னல், ஓவியம், எங்கிருந்தோ போன்ற அல்பங்களையும் வெளியிட்டிருந்தார். பாராட்டப்படவேண்டிய வித்தியாசமான இசை, மேற்கத்தேய ரப், ஜாஸ் என பல வகைகளிலும் அவர் பல மெட்டுக்களை தமிழில் போட்டார். கூலி, தென்காசிப்பட்டணம் போன்ற தமிழ்ப்படங்களுக்கும் 15ற்கும் மேற்பட்ட மலையாளத்திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார்.
இருந்தபோதிலும் இவருக்குரிய இடம் கிடைக்கவில்லை என்பது வேதனையே.

பிரபஞ்ச அழகிப்போட்டி 2009


58ஆவது முறையாக 2009ஆம் அண்டிற்கான பிரபஞ்ச அழகிப்போட்டிகளின் இறுதிபபோட்டி பஹமஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள அத்லான்டிக் பரடைஸ் தீவில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஓகஸ்ட் மாதம் 2009ஆம் திகதியான நேற்று இடம்பெற்றது. 83 நாடுகளைச்சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்தப்போட்டிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று தற்போது இறுதிப்போட்டியும் முடிவடைந்துள்ளது.
83 நாடுகள் கலந்துகொண்ட இந்தப்போட்டிகளில் இம்முறை சிறப்பான விடயங்கள் என்வென்றால், ஆரம்ப நிலை போட்டிகளே பல தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டமைதான். இந்த போட்டிகளில் கலந்துகொள்வதென அறிவித்த சிறி லங்கா, டென்மார்க், கசஹஸ்தான், வட மரியானா, பெர்முடா ஆகிய நாடுகள் அடங்கலாக எட்டு நாடுகள் இந்தப்போட்டிகளில் இருந்து பின்வாங்கிக்கொண்டன.


இந்தப்போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் சுவீடன், மிஸ் கொசாவோ, மிஸ் அவுஜ்ரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்ஸர்லாந்த், மிஸ் அமெரிக்கா, மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆபிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷியா ஆகிய 15 அழகிகள் தகுதி பெற்றனர். இந்திய இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 15 பேரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.


மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபனியா பெனாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யூனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெபானியாவுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசூலாவின் டயானா மென்டெஸ் கிரீடம் சூட்டினார்.


அழகிப் பட்டங்களை வெல்வதில் வெனிசூலா புதிய சாதனையும் படைத்துள்ளது. இதுவரை வெனிசூலா ஐந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டங்களை வென்றுள்ளது. இதுதவிர ஐந்து மிஸ் வேர்ள்ட், நான்கு மிஸ் இன்டர்நேஷனல் பட்டங்களையும் அது வென்றுள்ளது. வேறு எந்த நாட்டு அழகியும் இவ்வளவு அதிக பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மிஸ் யுனிவர்ஸ் பெனான்டஸ் ஸ்டெபானியா, ரஷ்ய, உக்ரைனிய, காலிசிய, போலந்து நாடுகளின் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் நடியா கிருபிஜ் ஹோலோஜாத் மற்றும் தந்தை கார்லோஸ் பெர்னாண்டஸ் ஆவர். 18 வயதாகும் ஸ்டெபானியா கன்னி ராசியைச் சேர்ந்தவர். நீச்சல், டென்னிஸ் இவரது பொழுதுபோக்குகள் ஆகும். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் கடைசி ஐந்து இடங்களுக்கு ஸ்டெபானியா தவிர மிஸ் டொமினிக்கன், மிஸ் அவுஸ்ரேலியா, மிஸ் பியூர்டாரிகோ, மிஸ் கொசாவோ ஆகியோர் முன்னேறினர்.


விசேட விருதுகளின் படி, முதலாவது ரன்னர்ஸ் அப் விருது மிஸ் டொமினிக்கன் குடியரசுக்கும், இரண்டாவது ரன்னர்ஸ் அப் மிஸ் கொசோவாவுக்கும், சிறந்த புகைப்பட அழகி விருது மிஸ் தாய்லான்டுக்கும், சிறந்த உடலசைவு விருது மிஸ் சீனாவுக்கம், வழங்கப்பட்டள்ளது.

இந்தப்போட்டிகளின் காட்சிகள் சில…


Saturday, August 22, 2009

குடும்ப மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லுங்கள்…


இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் நாளாந்தம் வேலை, வேலைமுடிந்ததும் வீடு, இடைக்கிடை உணவு, இரவு உறக்கமில்லா இறுக்கம் என அவிழ்க்கமுடியாத அளவுக்கு கழுத்தில் ஒரு கயிறு ஒவ்வொருவர்மீதும் விழுந்துவிட்டது.
உலகம் இயந்திரத்தனமாக இன்னும் வேகம்பெற வேகம்பெற, மனிதனின் முகத்திலும் இறுக்கங்கள் வலுக்கின்றன. “நேரான மனிதர்களையும் வளைத்துப்போடும் உதட்டின் சிரிப்பு எனும் வளைவு”, இன்று பல முகங்களில் இருந்து விடைபெற்றுப்போய்விட்டன.
பணம் என்னும் பெயரில் உள்ள வெறும் காகிதத்தாள்களுக்காக மனிதம் தொலைந்துபோய்க்கிடக்கின்றது.


இவை எல்லாம் எனக்கிருந்தால், இவற்றை எல்லாம் நான் செய்தால், இப்படி எல்லாம் நான் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக, காலம் முழுவதும் சந்தோசமாக வாழலாம் என்று எமக்கு நாமே நீண்டதொரு தேவைப்பட்டியல்களை தயார் செய்துவைத்திருக்கின்றோம். அதை எதிர்பார்த்து அதைப்பூர்திசெய்வதற்கான வழிகளில் எமது வாழ்க்கையினை நாம் நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்.
இதற்கெல்லாம் தேவை பணம்..பணம்..பணம்.. இந்தப்பணத்திற்காக ஒரு கணம்கூட ஓய்வில்லை. ஓட்டம், அலைச்சல், போட்டி, பொறாமை, இவற்றின் விiளைவுகளாக ஏமாற்றங்கள், பிரச்சினைகள், தோல்விகள். மகிழ்ச்சி என்பது உண்மையில் பணம் சம்பந்தப்பட்ட விடயமா? உண்மையில் இல்லை. ஏன் பணம் இல்லாமல் மகிழ்ச்சி கிடைக்காதா? உண்மையில் மகிழ்ச்சி என்பது ஒரு மன நிலை. அது மனது மற்றும் உணர்வு சம்பந்தப்பட்டது.


சரி விடயத்திற்கு வருவோம். கடல் அடிமட்டத்தில் (ஆளத்தில்) உலாவும் மீன்கள் கூட இடைக்கிடை மேல் மட்டத்திற்கு வந்து சுத்தமான காற்றினை சுவாசித்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்செல்லுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் மட்டும் இன்று இயற்கையிடமிருந்து தன்னை தூரப்படுத்திக்கொண்டு நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கின்றான். ஒரு சிலருக்கு தனது மனைவியுடனோ அல்லது கணவனுடனோ அல்லது குழந்தைகளுடனோ சிறிது நேரத்தை ஒதுக்கி பேசுவதற்கே நேரமில்லாமல் போய்விட்டது. காரணம் பணம் தேடல்.
பணம் என்பதும், அவர் அவர் வகிக்கும் பதவிகள், அவர்களுக்கான வேலைகள் என்பவை மிக முக்கிமானதே. இருந்தாலும் கூட இந்த உழைப்புக்கள் எல்லாம் எதற்கு? எமது பணம்தான் மகிழ்ச்சி என்ற தவறான எண்ணத்தினாலேயே.


ஒரு குழந்தைக்கு அவனது உள்ளத்தின் முதல் கதாநாயகன் அந்த குழந்தையின் தந்தைதான். அதேபோல அந்த குழந்தைக்கு தெரிந்த முதல் அன்பானவள், முதல் உலக அழகி அந்த குழந்தையின் தாய்தான். பெற்றோர்கள் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசத்தைவிட குழந்தைகள் பெற்றோர்கள்மீது அளவுகடந்த நம்பிக்கையினையும், பாசத்தையும் வைத்துள்ளன. எனவே அந்தக்குழந்தைகளின் ஏக்கங்கள் எப்படி இருக்கும் என்று யாம் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில் தமது அப்பாவினதும், அம்மாவினதும் கைகளை பிடித்தவண்ணம் இயற்கையோடு இணைந்த இடங்களில் நடந்துசெல்வதுதான் அந்த குழந்தையின் சொர்க்கமாக இருக்கும்.


சுற்றுலாக்கள், முக்கிய இடங்கள், சுற்றுலா தளங்கள், என்பவற்றுக்கு குடும்பத்துடன் செல்ல உங்களுக்கான நேரங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள். அந்த சுற்றுலாக்கள் உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி உங்களுக்குள்ளும் ஒரு குதூகலத்தை தரும். உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெறும். கணவன் மனைவியருக்கிடையிலான பாசத்தினையும். குழந்தைகள்மேல் உங்களுக்குள்ள பாசத்தினையும் பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைக்கும். குழந்தைகளுக்கும் பெருங் குதூகலமும் புதிய பல அனுபவங்களும் கிடைக்கும். பின்னாட்களில் அவர்கள் இந்த பயணங்களை நினைத்து சந்தோசம் கொள்ள ஏதுவாக அமையும்.


அட, இதெல்லாம் பணம் உள்ளவங்களுக்கு சரி நமக்கு எங்க? என்ற எண்ணம் எவருக்கும் வரவேண்டாம். நிச்சயமாக சுற்றுலா பயணங்களுக்கு என உங்கள் சம்பளத்தில் ஒரு தொகையினை தனியாக சேமித்து வையுங்கள். வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கான சேமிப்புக்கணக்குகளே உள்ளன. குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் சேர்க்கும் பணம் கணிசமான ஒரு தொகை வந்தவுடன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஜாலியாக கிளம்புங்கள். குடும்பத்தாருடன் செல்லும் சுற்றுலா ஆனந்தமானதே அதையும் விட குறிப்பிட்ட ஒருநாளில் உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களது குடும்பங்கள் இணைந்து சுற்றுலா செல்வது பேரின்பமானதாகவும், சந்தோசமானதான அனுபவங்களையும் தரும்.


சுற்றுலா என்றால் உடனடியாக சுவிஸர்லாந்திற்கோ, அல்லது நயாகராவை பார்க்கப்போவதாகவோ நினைத்துக்கொள்ளாதீர்கள். அருகில் உள்ள கடற்கரைக்கோ, மிருகக்காட்சிச்சாலைக்கோ, சற்று தொலைவிலுள்ள கோவிலுக்கோ செல்வது கூட சுற்றுலாதான். அங்கு நீங்கள் சென்று நின்மதியாக பொழுதை கழித்துவிட்டு வரலாம்.
“எவ்வளவு தூரம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு மகிழ்வானது என்பதே முக்கியமானது”


சுற்றுலாவுக்கு சென்றால் உங்கள். தொழில், கல்வி, அந்தஸ்துக்களை ஒருபுறம் தள்ளிவைத்தவிட்டு நீங்களும் ஒரு குழந்தைகளாகுங்கள். உங்கள் மகிழ்வுகளை குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். திருமணவீடுகள், பூப்புனித நீராட்டுவிழாக்கள், குடிபுகல்விழாக்கள், நண்பர்களின் பிறந்ததின நிகழ்வுகள் என்பவைகூட உங்களுக்கு மகிழ்வுகளை தரக்கூடிய நிகழ்வுகளே. அவர்கள் ஏன் உங்களை அழைக்கின்றார்கள் என எண்ணிப்பாருங்கள். தங்கள் மகிழ்ச்சிகளை உங்களுடன் பகிரவேண்டும் என்பதற்காக அல்லவா? அதேபோல சுற்றுலாவுக்கு சென்று உங்கள் மகிழ்ச்சிகளை மற்றவர்களுடன், குடும்பத்தாருடன் பகிர்ந்து உங்கள் மனங்களையும், மற்றவர்களின் மனங்களையம் மலரச்செய்வதுடன், குடும்பத்திலும் நிலையான ஒரு மகிழ்ச்சிக்கு அத்திவாரம் இடுங்கள்.


இத்தனை சொன்னதற்கப்புறம். சப்பா…ஈஸியா சொல்லிவிடலாம், எனக்கிருக்கிறவேலைகளுக்கு இது எல்லாம் முடியிறகாரியமா? என்று உங்களில் பலர் நினைப்பது எனக்கு புரிக்கின்றது. உண்மையும்தான்..
என்றாலும் உலகில் முதல்தர வல்லரசு நாடு ஒன்றின் ஜனாதிபதியாக இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும்? உலகில் எந்தநாளும் பெரும் ரென்ஸனாக இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவே இருப்பார். அப்படி ஜனாதிபதியாக உள்ள பாரக் ஓபாமா அவர்களே, இத்தனை தனது பதவி, வேலைப்பழுக்கள், அரசியல் நகர்வுகள், என அத்தனைக்கும் மத்தியில் தனது குடும்பத்துடன் உற்சாகமாக சுற்றுலாவுக்கு செல்கின்றார் என்றால் உங்களால் செல்லமுடியாதா என்ன?

Friday, August 21, 2009

“TOP 25” இந்தியாவின் அதிபிரபலங்கள்

ஐஸ்வர்யா ராய்

உலகின் ஈர்ப்பு மிக்க பெண்களின் பட்டியலில் 10 ஆண்டுகள் தாண்டியும் தனக்கான ஒரு இடத்தினை தொடர்ந்து தக்கவைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய் பச்சன். 1994ஆம் ஆண்டு உலக அழகியாக முடிசூடிக்கொண்ட இவர். அதன் பின்னர் இந்திய சினிமாவில் நுளைந்து, பொலிவூட்டின் ராணி என்ற நிலைக்கு உயர்ந்தவர்.

அணில் அம்பானி.

இந்திய தொழிலதிபர்களின் பிதாமகர் அம்பானியின் இளைய வாரிசான இவர், அணில் டிருபைன் குழுமத்தின் தலைவராக இருக்கின்றார். 2003 ஆம் ஆண்டு எம்.ரி.வியின் உயர் விருதான இளம் வயது தொழில் முன்னேற்றத்திற்கான விருதையும், 2004ஆம் ஆண்டுக்கான சீ.இ.ஓ விருதினையும் பெற்றவர். 2004ஆம் ஆண்டு ராஜ்சபா உறுப்பினராகவும் இவர் தெரிவாகியிருந்தார்.

டொக்ரர். அணில் ஹகோட்கர்.

இந்தியாவின் அதிமுக்கமான அணு விஞ்ஞானியான இவர். 1974 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணுப்பரிசோதனைகளில் பெரும் பங்காற்றியவர்.
இந்திய அணு சக்தி ஆணைக்குழு, அணுசக்தி திணைக்களம் என்பவற்றின் தலைவராக பதவி வகிக்கின்றார்.

அல்லாஹ் ரக்ஹா ரஹ்மான்.
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ள தமிழரான இவர் அற்புதமான ஒரு இசையமைப்பாளர். ஆரம்பகாலங்களில் விளம்பரங்களுக்கு இசையமைப்பதன்மூலம் தனது இசைப்பயணத்தினை தொடங்கிய அவர் இன்று ஒஸ்கார் விருதுவரை சென்றுள்ளார்.

அஷிம் பிரேம்ஜி

1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பணக்காரன் என்று “போர்பெஸ்ஸினால்”; தெரிவு செய்யப்பட்டிருந்தார். வைப்ரோ நிறுவனமானது உலகின் முதற்தர நிறுவனங்களின் பட்டியலில் உள்ளமை இவரது நிர்வாகத்தின் சிறப்பினை காட்டிநிற்கின்றது.

இந்திரா நூயி

தமிழ்நாடு சென்னையில் 1955ஆம் ஆண்டு பிறந்த இந்திரா கிருஸ்ணமூர்த்தி நூயி, பெப்ஸி நிறுவனத்தின் தலைவராகவும் அதன் தலைமை இயக்கனராகவும் உள்ளார் (அமெரிக்காவில்). உலக பணக்காரப்பெண்களின் பட்டியலிலும், உலக சக்திமிக்க பெண்கள் வரிசையிலுல் 4 ஆவதாகவும் இவருக்கு “போர்பெஸ்” சஞ்சிகை இடம்கொடுத்துள்ளது.

குஷல் பல் சிங்

1931ஆம் ஆண்டு பிறந்த இவர். இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்ரேட் நிறுவனத்தினை தொடங்கினார். தமது அனுபவங்கள், திறமைகள் மூலம் இன்று உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்ரேட் நிறுவனமாக அவரது டி.எல்.எவ் யூனிவேர்சல் உயர்ந்து நிற்கின்றது.

லக்ஸ்மி நாராயண் மிட்டல்

1950ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த இவர். லண்டனில் வசித்துவருபவர். உலகின் பாரிய இரும்புருக்கு தொழிற்சாலையான சீ.இ.ஓ மற்றும் அர்ஷலோ மிட்டல் தலைவராக உள்ள இவர் தற்போது உலகின் எட்டாவது பணக்காரனாகவும், இங்கிலாந்தின் முதலாவது பணக்காரனாகவும் உள்ளார்.

லலித் மோடி

கிரிக்கட்டின் புதிய 20, 20 ஆட்டத்தின் மூலம் உலகத்தின் கண்ணில் பட்டவர் லலித்மோடி. ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக உள்ளார். இந்தியாவில் தற்போது இரண்டு துறைகளில் மிக முக்கியமானவராக கருதப்படுகின்றார் இவர். கிரிக்கட் மற்றும் பொலிவூட்டே அவை.

எல்.கே.அத்வானி

81 வயதாகும் இவர், இந்தியாவின் மிக முக்கியமானதும், இந்துத்துவவாத கட்சியுமான பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள இவருக்கு இன்றும் இளைஞர்களின் பேராதரவு உண்டு. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதே தமது இலட்சியம் என்று தொடர்ந்தும் கூறிவருகின்றார். இந்தியாவின் தற்போதைய பலமிக்க தலைவர்களில் மிக முக்கியமானவர் இவர்.

டொக்ரா. மன்மோகன் சிங்

1932 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்தியாவின் 14ஆவது பிரதமராக உள்ளார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான இவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற இவர் இந்தியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக கணிக்கப்பட்டுள்ளார்.

முகேஸ் அம்பாணி

அம்பானியின் தலைமகனான மகேஸ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொழிற்துறை நிறுவனமான ரிலைன்ஸின் தலைவராக உள்ளார். உலகின் மிகவும் கொளரவத்திற்குரிய தொழிலதிபர்கள் நூறுபேரின் பட்டியலில் முகேஸ் அம்பானி 42ஆவது இடத்தினை பெற்றுள்ளார்.

நந்தன் எம். நிலக்கனி

இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடன்தலைவராகப் பணிபுரிந்த மென்பொருள் தொழில்முனைவர். இந்திய அரசால் இந்திய வேறிலித்தனி அடையாளவெண் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை யடுத்து ஜூலை 9, 2009 ஆம் ஆண்டு இன்போசிஸ் பதவியை துறந்தார்.

நாராயண மூத்தி

இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். திரு நாராயண மூர்த்தி கடந்த 2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின், தமது நேரத்தை சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

நரேந்திர தாமோதரதாஸ் மோடி

பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.குஜராத் கலவரம் இவர் ஆட்சிக்காலத்தில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இவரும் ஒருவர்.

பிரகாஸ் கரத்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவே பிரகாஸ் கரத் உள்ளார்.

பிரணாப் முகர்ஜி.

1935ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்த இவர் இந்திய தேசிய கொங்கிரஸ் கட்சியின் முத்த உறுப்பினர்கள் ஒருவராவார். கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தை பெற்றுள்ளார். தற்போதைய கொங்கிரஸ் அமைச்சரவையின் நிதி அமைச்சராக உள்ளார்.

ராகுல் காந்தி

நேரு வம்சத்தின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் ராகுல் காந்தி. நாளைய இந்தியாவின் தலைவர் என கொங்கிரஸ் தொண்டர்களின் ஆரவாரங்களுக்கிடையில் அமைதியாக வலம் வரும் ஒருவர்.

ரத்தன் ராட்ரா

ராட்ரா குழுமத்தின் தலைவர்;. இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் தனது குடிசார் பொறியியல் படிப்பை முடித்து பின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் மேலாண்மைப் படிப்பை 1974- 1975-ல் முடித்தார். 1991ஆம் ஆண்டு டாட்டா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்றார். இந்தியாவின் தொழிலதிபர்களில் மிக முக்கிமான ஒருவர்.

சச்சின் ரமேஸ் தென்துல்கர்.

கிரிக்கட் என்பது ஒரு மதமாக இருக்குமானால் கண்டிப்பாக அதன் தெய்வம் சச்சினாகத்தான் இருப்பார் என இரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நபர். ஒருநாள் சர்வதேச ஆட்டங்கள், மற்றும் சர்வதேச ரெஸ்ட் ஆட்டங்களில் எவரும் நெருங்கமுடியாத இமாலய சாதனைகளை படைத்த ஒரு வீரர் சச்சின்.
விளம்பரங்பகள் மூலம் கோடிக்கணக்கான பணங்களை அள்ளுபவர் இவர்.

சாருக்ஹான்

பிரபல இந்தித் திரைப்பட நடிகர். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்

சோனியா காந்தி.

இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக தற்போது இவரே உள்ளார். ராஜீவ் காந்தியின் மனைவி என்ற தகுதியுடன் அரசியலில் இறங்கிய இவர் ஒரு இத்தாலி நாட்டவர். இவரது உண்மையான பெயர் எட்விங் அன்ரொனினா அல்பினா மைனோ என்பதாகும். தற்போதைய இந்திய அரசியலின் அதி உச்ச சக்தியாக இவரே உள்ளார்.

சுனில் பார்த்தி மிட்டேல்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர். அதிசிறந்த நிர்வாகி. இந்தியாவின் தனியார் தொலைத்தொர்புகளின் முன்னோடியாக இவரை கூறலாம்..
மேலும் http://janavin.blogspot.com/2009/07/blog-post.html
என்ற இணைப்பை சொடுக்கி இவர் பற்றிய எனது முன்னைய பதிவை பாhர்க்கவும்.

விஜய் மல்லையா

United Breweries Group, Kingfisher Airlines, Force India, Royal Challengers Bangalore, United Racing and Bloodstock Breeders என்பவற்றின் தலைவர். ஐ.பி.எல் ரோயல் சலெஞ்சர்ஸ் என்ற அணியின் சொந்தக்காராகவும் உள்ளார். இந்தியாவின் தனியார் விமான சேவைகளில் இவரது கிங் பிஷர் விமானசேவை முதல் இடத்தை பிடித்துள்ளது.

மாதவன் நாயர்.

இந்திய விண்வெளித் திணைக்களத்தின் செயலாளர் நாயகம். சந்திராயன் விண்திட்டத்தின் முதன்மையான நபர். 1943 இல் பிறந்த இவர் கேரளத்தினை சொந்த இடமாகக்கொண்டவர்.

LinkWithin

Related Posts with Thumbnails