Labels

Showing posts with label இலைதுளிர்காலத்து உதிர்வுகள். Show all posts
Showing posts with label இலைதுளிர்காலத்து உதிர்வுகள். Show all posts

Wednesday, September 21, 2011

இலைதுளிர் காலத்து உதிர்வுகள்........09

விடை தெரியாத பகீரதத்தனமான விடிவை நோக்கிய பயணத்தில் மருட்சியான நாட்கள் பல, நாம் எப்படி போகப்பொகின்றோம் என்ற மலைப்பே அப்போது ஈழத்தமிழர்களிடம் கலக்கமாக இருந்ததே தவிர சென்றடைவேண்டிய இடம் பற்றிய தெளிவு அனைவரிடமும் இருந்தது.

இருட்டாக இருந்த அந்த நாட்கள் அவ்வளவு சீக்கிரம் விடிவுக்கு வரவில்லை.
எமக்காக தாம் கதைப்பதாகத்தானே இந்தியா சொன்னது அப்படி இருந்தும் டில்லியில் ஏன் இந்த இறுக்கத்தை அது கொண்டிருக்கின்றது இதன் பின்னிணியில் இருக்கும் மர்ம முடிச்சுக்கள் என்ன? அவை சிலவேளைகளில் பாராதூரமாக இருந்துவிடுமோ? நாம் தாழிக்கு பயந்து நெருப்பினுள் விழுந்துவிடுவோமோ என்ற பதை பதைப்பை அப்போது ஒவ்வொருவரினதும் முகங்களில் நன்றாக அவதானிக்ககூடியதாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் அழைத்து செல்லப்பட்ட போராளிக்குழுத்தலைவர் உட்பட அவர்களின் உயர்மட்ட குழுவினர் ஒருநாள் மதியம் அவசரமாக கொண்டுவந்து தரையிறக்கிவிடப்படுகின்றனர்.
இந்த நிலையில் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழமுரசு விசேட செய்தி ஒன்றை மாலை வெளியிடுகின்றது.
அதில் விடுதலைப்புலிகளின் தலைவரை இந்திய உயர் மட்டத்தினர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுமாறு பகிரங்கமாக வற்புறுத்தியமையும், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்தாகி இந்தியாவிலிருந்து தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்திய இராணுவத்தினர் அமைதிப்படையாக வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவித்திருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தமும் ராஜீவ் காந்தியின் கொழும்பு வருகையுடன் கைச்சாத்திடப்பட்டது....
(இந்த ஒப்பந்தம் இடம்பெற்ற பொழுது இடம்பெற்ற சம்பவங்கள், அந்தநேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வுகள், இந்திய அமைதிகாக்கும் படையின் வருகை தமிழர் தாயகத்தில் எப்படி பார்க்கப்பட்டது என்பன பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் பார்க்க இருப்பதால் இப்போது அந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் யாழ்;பாணத்தில் நடந்த சம்பவத்திற்கு போகின்றேன்)

இந்த நிலையில் அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலை என்ன? என்ற பெரிய கேள்வி தமிழ் மக்கள் மனதில் பெரும் கேள்வியாக எழுந்தது.
அந்தவேளையில்தான் யாழ்ப்பாணம் சுதுமலையில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் சுற்றாடலில் 1987 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் நாள் மாபெரும் கூட்டம் ஒன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
மாலை நேரம் கூட்டம் இடம்பெறவுள்ளதென்றபோதிலும் காலையே இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் பெரும் ஆர்வம் கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்த கூட்டத்தில் தூர இடங்களில் இருந்தும் வந்து கலந்துகொள்ளும் மக்களுக்காக வாகன ஒழுங்குகள் எல்லாம் முறையாக அவர்களால் செய்யப்பட்டிருந்தன.

அவ்வாறான ஒரு வாகனத்தில் என் வீட்டு நபர்களுடன் நானும் அந்த சுதுமலையினை அடைந்தேன். அப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த திலீபன் தலைமையில் அந்தக்கூட்டம் ஆரம்பமாகியது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அவர்களின் மிக முக்கிய உயர் மட்டத்தினர் பலர் இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.... ஒருவரை தவிர.
கூட்டம் தொடங்கி ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தனர், அவர்களின் பேச்சுகளில் சில வரிகள் இப்போதும் என் இதயத்தில் உள்ளன, அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக இருந்த குமரப்பா பேசும்போது,
' எனக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் பந்தம் இன்றுவந்த ஒன்றல்ல, அது எங்கள் உயிரோடும் ஊணோடும் ஒன்றாக கலந்திருக்கும் பந்தம்'
இன்றும் சாதாரணமாக ஒரு கிரிக்கட் மச்சிலேலே கூட ஏன் நாம் அத்தனை நாடுகளையும் தள்ளிவைத்துவிட்டு இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றோம், ஏன் என்றால் அதுவும் ஒருவகையில் எங்கள் தாய்நாடு என்ற எண்ணத்தில்தான் என்றார்.

அந்தநேரம் அவர்களின் உயர் மட்டத்தில் காணமல் இருந்த ஒருவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். கூடியிருந்த அத்தனை மக்களும் எழுந்துநின்று கரவோசை எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தியதை மிகப்பெரும் பூரிப்புடன் என் இரண்டு கண்களாலும் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கால்கள் நடக்கமுடியாமல், ஊன்றுகோல்தடியுடன் மேடையை நோக்கி ஏறிய அவரது கம்பீரம் இன்றும் எனக்கு தைரியம் என்ற வார்த்தைக்கு அகராதி சொல்லிக்கொண்டிருக்கின்றது.
மேடையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அதை அவதானித்த மறுகணமே ஓடிச்சென்று அவரை வாஞ்சையுடன் அணைத்து மேடையில் ஏற உதவிசெய்து வந்து தன் பக்கத்திலே உட்கார வைக்கிறார்...
ஆம்..... அவர்தான் அப்போது மட்டுமல்ல எப்போதுமே யாழ்ப்பாண தளபதி கிட்டு.

பலரது பேச்சுகளின் பின் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய நாளான அன்று வரலாற்றில் சுதுமலைப்பிரகடனம் என்று எழுதப்பட்ட அந்த உரையை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மக்கள் முன் ஆற்றினார்.

அவர் அங்கே ஆற்றிய உரையினை பார்வையிட

அந்த பேச்சின் அவர் அரம்பத்திலேயே கூறிய விடயம்போல எமக்கு அப்பால் பட்டு நிகழும் இந்த நிகழ்வு எமக்கு சாதகமாக இருக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடனே மக்கள் கலைந்து சென்றனர்.
அப்போது எங்கள் ஊரில் பைத்தியமாக பிச்சை எடுத்து திரியும் செட்டி என்ற மனிதன் சுற்றி திரிவான், அவன் அன்று வீதியால் செல்லும்போது தீர்க்கதரிசனமாக ஒரு எதிர்வுகூறலை சொல்லிக்கொண்டுபோனான்,

'வயித்து குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே
சிங்களவனைவிட எங்களை இவன் சில்லெடுக்காட்டி இருந்து பாரு.....!!'

அந்த பைத்தியக்காரனுக்கு புரிந்த விடயம் எங்கள் மக்களுக்கு அப்போ புரிந்திருக்கவில்லை..........

இலைகள் உதிரும்.........

(குறிப்பு – புதிதாக ஆர்வத்துடன் இந்த தொடரை படிப்பவர்கள் தயவு செய்து இந்த இலை துளிர் காலத்து உதிர்வுகள் என்ற தொடரை ஆரம்பம் முதல் சிரமம் பார்க்காமல் படிக்க வேண்டுகின்றேன்)


Tuesday, July 19, 2011

இலைதுளிர் காலத்து உதிர்வுகள்.......08


ரலாற்றில் நியாயமான உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் மாறான தீர்வுகள் கிடைத்ததில்லை. ஒரு வகையில் உலகமும், நியதியும், இயற்கையும் நியாயத்தின் பக்கங்களே நிற்றுபோனதாகவே உலக வரலாறுகளும், அதன் சுவடுகளும் குறிகாட்டிச்சென்றுள்ளன.
ஈழத்தில் தமிழர்களின் வலிகள், ரணங்களுக்கான வலிநிவாரணியாக ஒரு தீர்மானமான முடிவு கிடைத்துவிடும், முக்கிமாக மதத்தாலும், உணர்வாலும், சம்பிரதாய கலாசார விழுமியங்களாலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா எம் விடயத்தில் ஒரு போதும் எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்துவிடாது, நிச்சயம் பாரதம் நமக்கொரு மகுடம் வழங்கும் என்ற பேதலிப்புடனேயே விடியல் நோக்கிய விழிகளாக ஈழத்தில் ஒவ்வொரு தமிழனும் வடக்குநோக்கிய தமது பார்வைகளாக வடக்கிருந்தனர்.

வழமைபோலவே அகாஷவானியின் செய்திகள் குறித்த நேரத்தில் ஒலிபரப்பாகின்றன. டில்லியில் இடம்பெற்ற இந்திய அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுக்களில் பல முக்கிய விடங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், கூடியவிரைவில் இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

ஆனால் அழைத்துச்செல்லப்பட்ட போராளிக்குழப்பிரதிநிதிகள், அங்கே சுதந்திரமாக கருத்துக்கள் வெளியிட முடியாதபடி தங்கக்கூண்டில் அடைக்கப்பட்டதற்கு ஒப்பான ஒரு தோற்றப்பாட்டை தாய் நாட்டு மக்கள் ஏதோ ஒரு உணர்வில் நன்றாக அறிந்தே வைத்திருந்தனர்.
இந்தக்கட்டத்தில்த்தான் ஈழ மக்களுக்கு முதன்முறையாக இந்தியாமீது சிறு சந்தேகக்கண் விழத்தொடங்கிய கட்டமாகும்.
'ஏன் இவை வேண்டும் என்றால் எங்கட பிள்ளைகளை எங்கட இடத்தில், எங்களுக்கு மத்தியில் வைத்து பேசி இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரலாம்தானே' அதென்ன கௌரவமாக பேசப்போவதாக சொல்லி கொண்டுபோய் அடைத்துவைப்பது' என்ற கேள்விகள் ஒவ்வொரு சாதாரண பொதுமகனிடம் இருந்தும் அந்த சூழ்நிலையில் வந்துகொண்டே இருந்தது.

ஆகாஷவானியின் செய்திகளின் போக்கும், இந்தவிடயத்தில் இந்திய அரசாங்கத்தின் தொனியும் செய்தி நேரத்திற்கு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக தொளி மாறிக்கொண்டே சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கமுடியாத முட்டாள்களாக இல்லை அன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள்.

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, இந்த நேரத்தில் தமிழ் மக்களின் நியாயமான தீர்வுக்காகவும், நிரந்தர அமைதிக்காவும், பல கோவில்களில் வரிசையாக விசேட வழியாடுகள் ஆராதனைகளை பல அமைப்புக்கள் முன்னின்று நடத்திக்கொண்டிருந்தன. திக்கற்றுப்போன இந்த காலகட்டத்தில் தெய்வந்தான் துணை என்று அந்த மக்கள் நினைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லைத்தானே!

இந்த நேரத்தில் 'சோல்ட்' எனப்படும் மாணவர்களைக்கொண்ட அமைப்பு பொதுமக்களை அசுவாசப்படுத்தும் நோக்கில் இன்றைய காலகட்டத்தில் எம் வரலாற்றுக்கடமையும், எமது பாதையும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களுக்கு நிலை விளக்கங்களையும், அசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை சிறிது சிறிதாக பொதுமக்களுக்கான கூட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

வரலாறு ஒன்று எதர்பாராதவிதமாக புரள்வாகும் ஆரம்ப நிலைகள், அல்லது திசைமாறி பயணிக்கப்போகும் திருப்பமாக இந்த சூழ்நிலை ஈழத்தில் ஒரு இனந்தெரியாத இறுக்கத்தை வலுக்கட்டாயமாக கொண்டு வந்திருந்தது.
மாலை மங்கும்நேரம் மேகம்முழுவதும் கடுமையான கருமுகில்களாக காணும் ஒரு நிலை அந்தநேரத்தில் காணப்பட்டது.
இந்த கருமுகில்கள் தரப்போவது பூமழையா, அல்லது பெரும் அனர்த்தமா என்பது அற்றைப்பொழுதுகளில் ஈழவர் ஒவ்வொருவர் முகத்திலும் தொற்றிக்கொண்ட கேள்விக்குறிகளாக தொக்கி நின்றது.

- இலைகள் உதிரும் -

Thursday, June 9, 2011

இலை துளிர்காலத்து உதிர்வுகள்.......07

உலக வரைபடத்தில் இலங்கையை உற்று நோக்கினால், அது அழகான ஒரு தேசம்தான், சகல வளங்களையும், இயற்கை அழகையும் உடைய வாழ்வதற்கு சிறப்பான சீதோஷ்ண, உகந்த காலநிலைகளைக்கொண்ட வலையத்தில் அமைந்த சிறப்பு கொண்ட நாடுதான்.
ஆனால் வெள்ளைத்தோலர்களின் வெளியேற்றத்தின் பின்னர், குறிப்பிட்ட இனம்மட்டும் சிந்தி முடித்த கண்ணீர் முழுவதையும் சேர்த்தால் இந்த இலங்கையே இந்து மா சமுத்திரத்தினுள் மூழ்கிவிடும் அளவுக்கு அந்த கண்ணீரின் கனதியும், உவப்பும் மிக மிக ஆழமானது.

ஓவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகங்கள் உள்ளுக்குள் மறைந்திருக்கும் என்பதற்கு அன்று என்வீடும் விதிவிலக்கில்லை என்றானது.
இந்தியா சென்று மேற்கல்வி மற்றும் பயிற்சிகளை பெற்ற ஒரு சிறந்த ஓவியரும், ஆசிரியருமான எனது தாய் மாமனார் 'சிங்கோ மாஸ்ரர்' என்று மட்டு நகர் மாணவர்களாலும், சுற்றத்தாலும் அன்போடு அழைக்கப்பட்ட பகவத்சிங்.
அவர் வரையும் ஓவியங்கள் வண்ணமயமாக இருந்தாலும், அவர் உடுக்கும் உடை என்றுமே வயிட் அன்ட் வயிட்தான். நெடிய உருவம், சிவத்த தேகம், நீளமான தலைமுடி, அடர்த்தியான தாடி, கிட்டத்தட்ட கே.ஜே.ஜேசுதாஸ் போன்றதொரு கொளரவமான உருவம் அவருடையது.
தாய்வீட்டு தொடர்பாக எனக்கிருந்த ஒரே ஒரு தாய்மாமன் அவர் மட்டுமே.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற அசம்பாவிதமொன்றில் அவர் தன்னுயிரை விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
நெஞ்சுக்குள் கல்லொன்றை போட்டதுபோன்ற ஒரு உணர்வு, ஆசிரியையான என் மாமியாரையும், மைத்துனர்களையும் நினைத்துப்பார்க்கின்றேன்.

அதே மட்டக்களப்பு நகரில்த்தான் நான் பிறந்திருந்தேன், அன்றைய தினத்திலே அதே மட்டு நகரில்த்தான் எப்போதுமே எனக்கு முகம்தெரியாத அவரின் தங்கையான என் தாயாரை என் பிறந்த தினத்திலேயே இழந்திருந்தேன்.
நான் பிறந்தபோது தன் அருமை தங்கையை இழந்த பரிதவிப்புடன், அவளது மகவை, மருமகன் என்று முதன்முதல் கைகளில் ஏந்திய அன்று, அந்த மனது எப்படி பரிதவித்திருக்கும்?
கரைபுரண்டோடும் கண்ணீரை நிறுத்திக்கொள்ளமுடியவில்லை.. மனது மாமா..மாமா என்று பரிதவித்துக்கொண்டிருந்தது, வாஞ்சையான நான் ஆசையுடன் உக்காரும் அந்த வெள்ளை டவுசர் அணிந்த மடியையும், என் மாமாவின் உடல் சூட்டின் அரவணைப்பையும் ஏங்கி மனது பரிதவித்துக்கொண்டிருந்தது.
வீடு மட்டுமன்றி மனதும் சுடுகாடாகிவிட்டிருந்தது அன்று.

அன்பாக முத்தம் கொடுக்கும்போது குத்திக்கொள்ளும் அந்த தாடியும், தூரத்தில் அவர் உருவம் தெரிந்தாலே குதூகலத்தில் துள்ளிக்கொள்ளும் என் உருவத்தின் நிழல்களும், இலாவகமாக, ஸ்ரைலாக அவர் பிடிக்கும் சிகரட்டும், மனதுக்குள் வந்துகொண்டே இருந்தன...

இதுபோன்று இந்த யுத்தம் எத்தனை இளம்குருத்துக்களின் மாமன்களை கருவறுத்திருக்கும், எத்தனை ஆசைகளை, எத்தனை கற்பனைகளை கருவிலேயே கருக்கலைப்பு செய்திருக்கும். அப்பா.. இந்த யுத்தம் எத்தனை கொடுமையானது என்பதற்கு எனக்கு நேரடிப்பதிலாக கிடைத்த கொடுமையான விளக்கமாக அது இருந்தது.

சில இரவுகளும் சில பகல்களும் கழிந்துபோன நாள் ஒன்றிலே யாழ் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராளிகளின் வாகனங்களை வழமைக்கு மாறாக அதிகமாக அங்கும் இங்கும் ஓடும் அவசரத்தனைத்தை அவதானிக்கமுடிந்தது.
அவற்றுக்கான விடைகள் மக்களுக்கு கிடைக்க அதிக நேரம் ஆகியிருக்கவில்லை.
இந்திய உலங்கு வானூர்த்திகள் திடீர் என வந்திறங்கியதாகவும், போராளிக்குழுத்தலைவர் உட்பட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு விரைவாக அந்த வானூர்திகள் இந்தியா நோக்கி கிளம்பிவிட்டதாகவும் பெருசுகள் மத்தியில் கதைகள் அடிபடத்தொடங்கியிருந்தன.

ஏன் பாருங்கோ கொண்டுபோட்டாங்கள் ஏதும் வில்லங்கமே?
சீச்சீ.. நீர் ஏனும்காணும் சும்மா பயப்படுறீர்? எங்கட சோகங்களுக்கு ஒரு விடிவுகாலம் வரப்போகுது என்று மனதை தேற்றுற வழியைப்பாரும் காணும், ஒன்றுக்கும் யோசியாதையும், எங்கட பிள்ளைகள் பத்திரமாக வந்திடுவாங்கள், இந்தியாதானே கூட்டிக்கொண்டுபோகுது, அவங்கள் எண்டைக்கும் எங்கட பக்கம்தான் காணும்..
என்று பென்ஷன் வாங்கிய பொலிஸ்காரரான மார்க்கண்டருக்கு தெளிவுபடுத்திக்கொண்டிருந்தார், ஸ்ரேஷன் மாஸ்டராக இருந்து பென்ஷன் எடுத்த திருநாவுக்கரசர்.
இந்த சம்பாசனையினை வீட்டுமதிலில் இருந்து கொண்டு, ஒரு புழுகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது என் மனது.

வழமைபோல மாலை நேரம் இந்தியச்செய்திகளை கேட்க ஆர்வம் வீட்டாருக்கு அதிகமாகவே கூடியிருந்தது. செய்திகள் கொண்டு செல்லப்பட்டவர்கள் டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் அவர்களுக்கும், இந்திய உயர்மட்டத்தினருக்கும் நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன...

இலைகள் உதிரும்....

Monday, May 23, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்……06

திடுக்கிட்டு திரும்பிய நான் ஆர்வமாக அந்த முகத்தை பார்க்கின்றேன். முழுமையாக மழிக்கப்பட்டிருந்த கேசம், அடர்த்தியாக மேவி வாரப்பட்டிருந்த தலைமுடி, மெல்லிய நீல மேற்சட்டை, முழங்கைக்கு கீழே நேர்த்தியாக மடித்து விடப்பட்டிருந்தது. அப்போதைய கறுப்கு ஹரா துணியில் ஜீன்ஸ் அணிந்து அழகாக மேற்சட்டை உள்ளே விடப்பட்டிருந்தது.
அப்போதுதான் அந்த உருவத்தை முதல் முதலில் பார்க்கின்றேன். மனதில் இனம்புரியாத ஒரு பயம் தொற்றிக்கொள்கின்றது. நான் ஏதும் குழப்படி செய்கின்றேன் என்று நினைத்து என்னை இவர் அடிக்கப்போகின்றாரோ என்ற சிறுவயது பேதமை அது!

மென்மையான, அனால் ஆழுத்த மான குரல் என்னைநோக்கி விழுகின்றது. தம்பிக்கு என்ன பெயர்?
ஜனா… ஜனார்த்தனன்..
ஏன் பயப்படுறீங்கள் மாமா ஒன்றும் பிடித்துக்கொண்டு போகமாட்டேன்..
ம்ம்ம்….
எங்கே படிக்கின்றீர்கள், எத்தனையாம் ஆண்டு? எங்கே இருக்கின்றீர்கள் என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் உசாராக பதிலளிக்கின்றேன்.
தம்பி… கெட்டிக்காரன் போல இருக்கு மாமா கேள்வி கேட்கவே?
பதிலாக அசடு வழிய நெழிந்துகொண்டு சிரித்திருக்க வேண்டும் நான் அப்போது..

சரி..உலகத்தில பெரிய நாடு எது?
சோவியத் ஜூனியன் என்றேன் சட்டென்று..
ஓம்..தம்பி நாலாம் ஆண்டெல்லே எங்க ஈழத்து புலவர்கள் இரண்டு மூன்று பேரிண்டை பெயர் சொல்லும் பார்ப்பம்?
ஆ…. சின்னத்தம்பி புலவர், சோமசுந்தரப்புலவர், கல்லடி வேலாயுதம்….
கேட்டிக்காரன் தான்…
சரி பள்ளிக்கூட புத்தகம் தவிர வேற என்ன புத்தகங்கள் படிக்கிறனீங்கள்?
கோகுலம், அம்புளிமாமா, வாண்டுமாமா, அர்சுனா இப்படி மா…மா..

சரி.. ஏன் இங்கை ஒன்றையும் படிக்க பிடிக்வில்லையோ தம்பிக்கு?
சரி வாரும்… நான் எடுத்து தாறன் என்று அலமாரிகளில்தேடி கொஞ்சம் சிறுவர் கதைப்புத்தகங்களை கொண்டுவந்து போட்டுவிட்டு, சிரித்தார்.
பிறகு இப்போது எனக்கு நினைவு வருகின்றது… சிறுவர்களுக்கான நூல்களாக சில பெரியோர்கள் பற்றி வந்த மெல்லிய புத்தகங்களை காட்டினார்.
ஆபிரகாம் லிங்கன், பாராதியார், காந்தி, போல பலர் பற்றி இருந்தன சின்ன சின்ன புத்தகங்களாக
தம்பி..கதைப்புத்தகங்கள் தவிர இவைகளையும் நீங்கள் படிக்கவேண்டும், அப்பத்தான் நல்ல கெட்டிக்கானாக வரலாம், பேச்சுப்போட்டிகளிலை பேசலாம், பரிசுகள் வாங்கலாம், ரீச்சர்ஸ், பிரின்ஸிபல் எல்லாம் பாராட்டுவார்கள் என்ன!
என்று அன்பாக சொன்னார்.

பேச்சுக்கள் ஒன்றும் வராமல் இன்னும் திரு… திரு என்று முழித்த படியே வெருண்டுகொண்டு நின்றேன் நான்.
வீடு பக்கத்திலைதானே.. இரண்டு.. இரண்டு புத்தகங்களாக வீட்டை கொண்டுபோய் படிக்க போவதென்றாலும் பறவாய் இல்லை.
என்று விட்டு அங்கிருந்த பொறுப்பான ஒருவரிடம், இங்க…! இந்த தம்பி கேட்கும் இரண்டு புத்தகங்களை கொடுங்கோ, தம்பி படிச்சுப்போட்டு திரும்பித்தருவார், பிறகு ரெண்டு ரெண்டாக தம்பியிட்ட கொடுங்கோ என்றார்.

பிறகு என்னிடம்…தம்பி பத்திரமாய் கொண்டுபோய் கிழிக்காமல் படிக்கவேண்டும், பேந்துவந்து இந்த அண்ணாட்ட குடுத்துட்டு வேற புத்தகம் எடுத்து கொண்டுபோம் என்ன என்றார்.
ஓம்..என்று உற்சாகத்துடன் தலையாட்டினேன்.
இவன்தான் தியாகத்திற்கு ஒரு முத்திரை பதிக்கப்போகும் மனிதன், அகிம்சையின் மறுஉருவம், போற்றுதலுக்கு அப்பாற்பண்ட புண்ணியமான மாமனிதன் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கிவில்லை.

சரி தம்பி…என்று என் தலையை கோதிவிட்டு, அங்கிருந்த ஒரு மோட்டார் பைக்கில், முடமாவடி சந்திவழியாக சென்று மறையும்வரை அந்த உருவத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
(இதை எழுதும்போதும் என் கண்களில் வழியும் நீரை இப்போதும் மறைக்கமுடியவில்லை)

இன்றும்கூட நல்லூர் மேற்குவீதியில் உள்ள அந்த நெல்லி மரத்தடியை பார்க்கும்போதும், யாழ்ப்பாணக் கோட்டை பகுதியில் நிற்கும்போதும் இதயத்தில் அசரீதியாக அந்த இடங்களில் தீர்க்க தரிசனமாக இவன் உதிர்ந்த வசனங்கள் காதுகளில்கேட்டு, கண்களை நனைக்கின்றது.

இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு அரக்க பரக்க முழித்துக்கொண்டு நின்ற என் அருகில் வந்த மைத்துனன் டேய்.. வாடா வீட்ட போகலாம் என்றான்.
ஓன்றுமே பேசாமல் வீடு சென்றடைந்து சாப்பிட்டுவிட்டு, எடுத்துவந்த முதலாவது புத்தகத்தை பார்த்த நான் திடுகிட்டேன். அது ஒரு சிறுவர் புத்தகம்தான் ஆனால் ஆங்கிலப்புத்தகம். ஆனால் அழகான நீழமான பின்னல் பின்னிய பெண்ணின் படம், இளவரச, இளவரசி கதை என்று படங்களைப்பார்த்து புரிந்தது!
அதை பிறகு வீட்டில் கேட்டு அறியலாம் என்று வைத்துவிட்டு, கொண்டுவந்த காந்தி பற்றிய புத்கத்தை திருப்புகின்றேன்.
காந்தி சிறுவயதாக இருந்தபோது தனது தாயாரின் நோன்பு நாளில் தாயார் உணவருந்திவிடவேண்டும் என்ற பாசம் கலந்த பதைபதைப்புடன் தொடங்கியது அந்த புத்தகம்.
ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது!

அந்தவேளையில் பேரிடியாக ஒரு செய்தி கிழக்கில் இருந்து எங்கள் குடும்பத்திற்கு கிடைக்கின்றது. வீட்டில் அனைவரும் ஆளாளுக்கு அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
ஏன் எனப்புரியமால் நான் பரிதவித்துக்கொண்டிருக்கின்றேன்.
என்ன பிரச்சினை என்று ஒன்றும் புரியவில்லை.. அயலவர்கள் வந்து கேட்கும்போது வீட்டார்கள் சொன்ன பதிலில்த்தான் அறிந்துகொண்டேன். இந்த யுத்தத்தில் என் குடும்பத்தில் முதலாவது இழப்பு நிகழ்ந்துவிட்டது என்று…

-இலைகள் உதிரும் -

Saturday, May 21, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்…..05

வலிந்த வான் தாக்குதல்கள், நெருப்புக்குண்டுகக்கும், இயந்திரப்பறவைகளின் வான்மறைப்பு என்பவற்றால் பாடசாலை என்பது அப்போது எங்களுக்கு பெரும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது.
அப்படி பாடசாலை நடந்தாலும்கூட ஹர்த்தால், மாணவர் அமைப்பு பகிஸ்கரிப்பு என்று நடக்கின்றது ஓடுங்கடா என்று பெரிய அண்ணாமார் வெள்ளையும் வெள்ளையுமாக வந்து எங்களை துரத்தி விடுவார்கள்.
இப்படி ஒரு கால கட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர், இன்றைக்கு ஸ்கூல் தொடங்குதாம் என்ற மனோகரன் மாஸ்டரின் பேச்சை நம்பி நான் அவசர அவசரமாக வீட்டில் வெளிக்கிடப்படுத்தப்படுகின்றேன்.
பெரிய தந்தையார் வாஞ்சையுடன் தனது வாகனத்தில் அழைத்துச்சென்று பாடசாலை வாசலில் இறக்கி விடுகின்றார்.

டேய்.. ஜனா வந்திட்டான்டா என்ற உட்சாகமான சத்தம், எல்லாவற்றையும் மறந்து மனதுக்குள் துள்ளிக்குதிக்க சொல்லுகின்றது. இருந்தாலும் நான் நல்லபிள்ளை என்று பெரியப்பாவுக்கு பாசாங்கு காட்டி அவரது வாகனம் மறையும் மட்டும் டாட்டா காட்டிவிட்டு, கர்ணன்களை நீண்ட நாள் பிரிந்த துரியோதனன்போல கத்திக்கொண்டே உள்ளே நுளைகின்றேன்.
ஆண்டு 4 ஏ கிளாஸ் நீண்ட நாள் காணாத தன் அன்பு செல்லங்களை கண்டு வாரி அணைப்பதுபோன்ற உணர்வு கிளாஸிற்குள் சென்றபோது உணரப்பட்டது.

என்ன கொடுமை என்றால் மாணவர்கள் 60 வீதமானவர்கள் வந்திருந்தார்கள், ஆனால் ஆசிரியர்கள் பெரிதாக வரவில்லை. ஆசை தீர விளையாடிக்கொண்டிருந்தோம். நேரம் ஒரு 10.30 மணியிருக்கும் பேரிடி காதுகளை பிளந்துகொண்டு விழுவதுபோல அடுத்தடுத்து கூவிக்கொண்டு மூன்று ஷெல்கள் விழுந்தன. புhடசாலைக்கு மிக அண்மையில்த்தான் அவை விழுந்திருந்தன. யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளே அவை.
ஆசிரியர்கள் குஞ்சுக்கோளிகளின் ஆபத்தறிந்து எகக்காலத்துடன் கொக்கரிக்கும் கோழிகள்போல எங்களை இழுத்துக்கொண்டு ஷெல் மற்றும் விமானத்தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அமைக்கப்பட்டிருக்கும் பங்கர்களுக்குள் (பதுங்கு குழி) எங்களை அவசரமாகத்தள்ளுகின்றார்கள்.
என்னடா என் வெள்ளை உடுப்பின் அரைக்கை மடிப்படியில் ஏதோ பிசுபிசுக்கின்றதே என்று உணர்ந்து என் முழங்கைக்கு மேலே பார்த்த நான் திடுக்கிட்டப்போனேன்.

அந்த இடத்தில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அரைக்கை வெள்ளைச்சட்டை சிவப்பாகிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த உடன்தான் எனக்கு வலிக்க ஆரம்பித்து.
அதற்குள் டேய்…ஜனா என்னடா இரத்தம் வருது! குண்டு பட்டுட்டா என்று மற்ற சினேகிதர்கள் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில்த்தான் எனக்கு வலிக்கவே ஆரம்பித்தது.

உண்மை என்னவென்றால் அந்தக்காயம் குண்டு அடிபட்டு வரவில்லை. அந்த பதுங்கு குழி வாசலில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு இரும்பு துண்டு கிழித்ததால்த்தான் அது ஏற்பட்டது என்பது சட்டென்று எனக்கு புரிந்தது.
பின்னர் என் அழுகைக்கு மத்தியில் மற்றவர்களுக்கும் அது புரிந்தது.

அன்றைய தினமே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒரு மாணவத்தலைவனாக இருந்த பொன்.விபுலானந்தன் என்ற மாணவன் கோட்டையில் இருந்து குண்டுமாரி பொழிவதையடுத்து விரைந்து சென்று மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு திரும்பும் பொழுது குண்டடிபட்டு தன் உயிரை தனது கல்லூரி மண்ணிலேயே விட்டிருந்தார்.

சரி..என் விடையத்திற்கு வருகின்றேன். கையில் இரத்தம் வழிந்துகொண்டிருக்க கிடைத்த ஒரு ஷெல் விழாத இடைவெளிக்குள் எனது பெரிய தந்தையார் வந்து என்னை அழைத்து சென்று ஒரு மருந்தகத்தில் காயத்திற்கு மருந்து கட்டிவிட்டார்.
வீட்டில் வந்து பெரும் மனக்குழப்பத்துடன் பத்திரமாக இருந்தேன்.
இப்போதைக்கு ஸ்கூலுக்கு போகவேண்டாம் என்ற ஒருமித்த கட்டளை வீட்டில் விழுந்தது.

மறுநாள் வேறு வழியில்லை. வீட்டில் இருக்கவும் பைத்தியம் பிடித்தது. எனது மைத்துனன் ஒருவன் லைபிரரிக்குப்போறேன் வாரியா? என்று வீட்டில் வந்து கேட்டான் அவன் 8ஆம் வகுப்பு படிப்பவன், நான் அரைவாசி.
அவனுடன் போவதென்பதால் பத்திரமா கூட்டிப்போய் வா என்று அவனிடம் என்னை ஒப்படைத்தனர். அப்போ நல்லூர் கோவிலுக்கு பின் புற வீதியில், போராளி ஒருவரின் பெயரில் ஒரு படிப்பகம் இருந்தது. அங்குதான் கூட்டிப்போனான்.

புத்தகங்கள் மீது எனக்கு காதலை ஏற்படுத்திய முதலாவது சம்பவம் அது. என்னை விட்டுவிட்டு, அவன் கற்கண்டு சஞ்சிகையை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். நான் அங்கிருந்த புத்தங்கள் ஒவ்வொன்றையும் பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அங்கே எனக்கு அந்த வேளைகளில் பிடித்தமான “கோகுலம்” புத்தகம் இருக்கா என்று தேடினேன். அதில் வரும் 16 பக்க வண்ணக்கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கே அது இல்லை. பெரும்பாலும் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களே தொகையாக இருந்தன.

நமக்கு காரியம் ஆகாது! என்ற எண்ணத்துடன் அங்கிருந்த சட்டம் ஒன்றில் சாய்ந்துகொண்டே வீதியில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது என் பின் புறமிருந்து வாஞ்சையாக ஒரு கை என் தலையை தடவிவிட்டது. திரும்பி பார்த்து பிரமித்து நின்றேன்.
என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.

சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்.

- இலைகள் உதிரும் -

Thursday, April 28, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள்…. 04


அந்த பேரிரைச்சல் தமிழர்களின் போராட்ட வலுவின் புதியதொரு உத்வேக பரினாமமாக கேட்டு, தென்னிலங்கையை நடுங்கவைத்தது. ஜூலை மாதம் 05ஆம் நாள் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தின் மூலம் ஈழத்தமிழரின் போராட்ட வலு உச்சம் கண்டுள்ளது என உலகம் வியந்துபார்த்தது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஒன்றே.

மறுமுனையில் இந்தியா, இலங்கையினை தனது வலைக்குள் விழவைப்பதற்கான திட்டங்களை செவ்வனே தீட்டிக்கொண்டிருந்தது. அதேவேளை அரசியல் தந்திர சாலியான ஜூலியன் ரிச்சர்ட் ஜெயவர்த்தன என்ற இயற்பெயர் கொண்ட அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அந்த வலையினை வெட்டி தன் வலைக்குள் இந்தியாவையும், தமிழ் போராட்ட குழுவையையும் ஒருமிக்க முடிய சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார்.

சரி… என் பார்வைக்கு வருகின்றேன்…
இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும்போது திடீர் என மாலை மங்கும் பொழுதில் ஒருநாள் யாழ்நகரின் கிழக்கு பகுதியில் போர் விமானங்கள், ஹெலி கொப்ரர்களின் சஞ்சாரம் திடீர் என்று அதிகரித்தது. இரண்டு தரப்பினரிடையிலான துப்பாக்கிச் சூட்டு பரஸ்பர வேட்டுக்கள் அந்த பகுதியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அதே பிரதேசத்தை நோக்கி சியாமா செட்டி விமானங்கள், அவ்ரோ விமானங்கள், இரண்டு ஹெலிகொப்ரர்கள் என அதே பரப்பினை மையமிட்டே இடைக்கிடை தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தது.

அந்த பகுதியில் அப்போது இருந்த ஸ்ரீ லங்கா இராணுவத்தின் நாவற்குளி இராணுவ முகாமை அண்டிய பகுதியில் துருப்பு காவி விமானம் ஒன்று பழுதடைந்த நிலையில் தரைதட்டியுள்ளதாகவும், அதை அழிப்பதற்கு போராளிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதை எதிர்த்தே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தன.
அந்த நாளில் இருளின் மையத்தில் விமானங்களின் விளக்குகளின் அணிவகுப்பு இப்போதும் என் கண்களுக்குள் நிற்கின்றன.
இருந்த போதிலும், வான்படையினரின் உதவியுடன், இராணுவத்தினர் போராளிகளின் எதிர்த்த தாக்குதல்களை சமாளித்தவண்ணம் விமானத்தை பாதுகாப்பாக நாவற்குளி முகாமுக்குள் இழுத்து சென்றுவிட்டனர்.

இவ்வாறான சம்பவங்களுடனேயே ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் கறுப்பாகவே இருக்கும் ஜூலை மாத முற்பகுதி சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் மறுமுனையில் இந்தியாவுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைநோக்கி பல் இழிக்க ஆரம்பித்தது. இந்த வேளையில் அப்போதைய செய்திகளில் முதற்கட்டமாக இந்தியாவின் சிறப்பு தூதுவர்கள் வருகை தரவுள்ளதாக செய்திகள் வரத்தொடங்கின.

பூரி, குப்தா வருகை
இந்தியாவின் உதவிப்பொருட்களை இப்போது இலங்கை அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் கொண்டுவருவதாகவும், அதேவேளை இந்தியாவின் முதற்கட்ட தூதுவர்களாகவும், போராளிகள், மற்றும் அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்த
கர்த்தீப் பூரி, கப்டன் குப்தா அகியோர் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டனர் என இந்திய செய்திகள் சொல்லின.

உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்றனர்தான். ரீயூசன் முடிந்து வீட்ட போகும்போது நல்லூருக்கு முன்னால் என்னடா சனம் என்று தண்ணி தொட்டியில் ஏறி நின்று எனது கண்களால் இந்த புண்ணியவான்களை பார்த்திருகின்றேன்.
யார் வந்தாலும் நம்பி வளவளக்கிறதுதானே எங்கட சனத்தின்ட பழக்கம், சில அம்மாமார், மொழிதெரியாதை இவையிட்ட, “அப்பனே ராசா நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும்!!! ஷெல்லால அடித்து சாக்கொல்லுறாங்கள், பொம்மறாலை வானத்திலை நிண்டு அடித்து கொல்லுறாங்கள், கடலிலை வந்து நின்று அடிக்கிறாங்கள், பட்டினி போடுறாங்கள், எத்தனை பேர ராசா நாங்கள் காவு கொடுத்துவிட்டு நிற்கிறம் என்று சொல்லி ஆழதிச்சினம்”.

பூரியும், குப்தாவையும் சும்மா சொல்லக்கூடாது, சீரியஸாக படு சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அந்த அம்மா மாரை ஆறுதல் படுத்திவிட்டு லான்ஸர் காரிலை ஏறி கிழம்பினார்கள்.

மறுநாள் இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய சம்மதித்துள்ளதாகவும், இந்திய பிரதமர் ராஜீவின் பணிப்பின்பேரில் போராட்டக்குழுத்தலைவரை டில்லிக்குவர அவர் அழைத்துள்ளதாக இவர்கள் இரண்டுபேரும் தெரிவித்துள்ளதாகவும் செய்தி இதழ்கள் தெரிவித்தன.

சிங்களவன் பயந்திட்டான் கண்டியோ! இந்தியா எண்டால் சும்மாவே!! பாரான் என்ன நடக்கப்போகுதென்று, ஏதோ இந்தியா நல்ல ஒரு முடிவை தரப்போகுது எண்டது சந்தோசம்தான்..என்று இப்போது போல அப்போதும் எங்கட பேய்த்தரவழிகள் கதைச்சுக்கொண்டுதான் இருந்திச்சுதுகள்…

இலைகள் உதிரும்…

Wednesday, April 6, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …03

ஒபரேஷன் பூமாலை….

வான்வெளியில் வழமைக்கு விரோதமான பேரிரைச்சல்களும், வித்தியாசமான பெரிய விமானங்களும், மக்களை ஒருகணம் குலைநடுங்க வைத்தன.
பேரிழவு வந்ததோ! குலத்தோடு கைலாயம்தானோ என்ற எண்ணங்களில் மக்கள் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள்.
சுமார் ஏழு மிகப்பெரிய விமானங்கள் அன்று வான் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் 10 நிமிடங்கள் ஆனாலும் எந்தவொரு குண்டு சத்தங்களும் கேட்டதாக தெரியவில்லை.
மாறாக அந்த விமானங்களில் இருந்து பல சிறிய பரசூட்டுக்கள், பொதிகள் என்பன விழுந்துகொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தன.
அதற்குள் உத்தேசமான செய்தி ஒன்று மக்கள் மத்தியில் ஆறுதல் படும் அளவுக்கு கிடைத்திருந்தது. வந்திருப்பவை இந்திய “மிராஜ“; இரக விமானங்கள் என்றும், அவற்றில் இருந்து உலர் உணவுப்பொதிகள் போடப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், செய்திகள் பரவின.


பிறகென்ன அன்றைய விடலைத்தர இளைஞர்கள், முந்தி அடித்துக்கொண்டு உணவுப்பொருட்கள் விழும் இடங்களுக்கு சந்தோசத்துடன் ஓடினார்கள்.
குறிப்பிட்ட சில நேரத்திற்குள் பெருமளவிலான உலர் உணவு பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன. குறிப்பாக, பயறு, பருப்பு உட்பட்ட தானியப்பொருட்கள், பிரட் வகைகள், குழந்தைகளுக்கான அமுல் பால்மா டின்கள் என்பவற்றை என் கண்காளல் பார்த்தேன்.
எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்பேர் எம் பக்கத்தில் பக்கபலமாக இருக்கின்றார்கள், எமக்காக இந்தியாவே இருக்கின்றது! பாரதம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும், எல்லாவற்றுக்கும்மேலாக எங்கள் எம்.ஜி.ஆர் இருக்கும்வரை எமக்கு எந்த கவலையும் இல்லை! தானாடாவிட்டாலும் தசை ஆடுமல்லவா!!
என்பன போன்ற பலதரப்பட்ட சம்பாசனைகள், அடிபட்டு நொந்துபோய், இருந்த மக்கள் மத்தியில் இந்த சம்பவத்தின்பின் ஒரு உற்சாகமாக பரவிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் ஒரு செய்தி இளைஞர்கள் மத்தில் போய்க்கொண்டிருந்தது. தோலைக்காட்சியில் அப்போது கொழும்பில் இடம்பெற்ற இந்திய - இலங்கை ரெஸ்ட்போட்டியின்போது சிறிகாந்த் துடுப்பெடுத்து ஆடும்போது இலங்கை பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து “தமிலகொட்டி” “கொட்டி” (தமிழ்ப்புலி) என்ற சத்தங்கள் அதிகமாக வந்ததாகவும், சிறி காந்த் அந்தப்போட்டியில் 50 அடித்து விட்டு அவர்களை நோக்கி பட்டை ஆவேசத்துடன் தூக்கி காட்டியதாகவும் பேசிக்கொண்டார்கள்.
இவ்வாறான இந்திய அதிவிரோத நிலை தென்னிலங்கையில் தலை தூக்கியது. சிறி லங்கா அரச சார்பான ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தியா பற்றி வசைமாரி பொழியப்பட்டுக்கொண்டிருந்தது.

பெரிய ஆச்சரியம் என்ன என்றால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் வந்து போனதன் பின்னர், அன்று முழுவதும் எந்தவொரு ஷெல், தாக்குதலோ, விமானத்தாக்குதல்களோ எதுவும் இடம்பெறாமல் வழமைக்கு விரோதமாக எந்தவொரு குண்டு சத்தங்களும் அற்ற ஒரு பொழுதை நீண்ட நாட்களின் பின்னர் அனுபவிக்கக்கூடியதாக இருந்தது அன்று.
அந்த சந்தோசம் அவ்வளவு நீண்டதாக இருக்கவில்லை. மறுநாளே யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களில் விமானத்தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் முருகன் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக போற்றப்படும் செல்வச்சந்நிதி ஆலயத்தின்மீதும் கடும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த கோவிலின் மிக உயரமான அதேவேளை அழகான சித்திரத்தேர், முற்றுமுழுதாக குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்டது.
அதேவேளை சொல்லி வைத்தாலப்போல், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆலயங்களை மையமாக வைத்து அடுத்து அடுத்து வான் தாக்குதல்கள் அப்போது இடம்பெற்றன.

ஒபரேஷன் லிபரேஷன்.

யாழ்ப்பாணத்தை பொதுவாக வலிகாமப்பிரதேசம் எனவும், ஏழு தீவுகள் அடங்கிய தீவகம் எனவும், தென்மராட்சி எனவும், வடமராட்சி எனவும் நான்காக பிரிக்கலாம். இந்த வகையில் சிறி லங்கா அரசாங்கத்தால், அப்போது வடமாராட்சியை கைப்பற்றி தொடராக யாழ்ப்பிரதேசம் முழுமையாக கைப்பற்ற எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த பயங்கர இராணுவ நடவடிக்கையே ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சிறி லங்கா அரசாங்கத்திற்கு பெருமெடுப்பிலான உதவிகளை செய்தவண்ணம் இருந்தன.
மேலும் மேலும் மக்கள் மீதான தாக்குதல்களும் உச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுக்கொண்டிருந்தன.

சரமாரியன ஷெல் வீச்சுக்களால் நாளாந்தம் பெருமளவிலானவர்கள், மடிந்துகொண்டிருந்தார்கள். பாரிய தாக்குதல்கள் மூலம் வடமாராட்சியில் இருந்து அங்கிருக்கும் நெல்லியடி என்ற இடம்வரையும் இராணுவத்தினர் முன்னகர்ந்து, நெல்லியடியில் இருக்கும் முக்கிமான பெரிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரியில் பாரிய முகாமிட்டு அங்கிருந்து பாரிய நடவடிக்கைகளை எடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்…
வந்து சேரும் செய்திகள் ஒவ்வொன்றுமே மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கிக்கொண்டிருந்தன. எல்லாம் ஒரே அடியாக முடியப்போகின்றதா என்று பயந்துகொண்டிருந்தனர்.
“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”. இலங்கை அதற்கு ஒரு பூச்சியைப்போல, தொடர்டந்து சேட்டை விட்டால் பார்த்துக்கொண்டா இருக்கப்போகின்றார்கள், அடித்து தூக்கி எறியமாட்டார்களா? என்று பேசி தம்மையும், சுற்றத்தாரையும் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார்கள் சில பெரியவர்கள்…

இப்படி பீதியுடனும், அவநம்பிக்கையுடனும், நாளை என்ற பெரிய பயங்கரத்துடனும் போராடிக்கொண்டிருக்கும்வேளையில்….. நெல்லியடி மட்டும் அல்ல முழு இலங்கையுமே ஒரு கணம் அதிர்ந்தது…
-இலைகள் உதிரும் -

Tuesday, April 5, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …02

" எல்லாச்சாலைகளும் ரோமுக்குத்தான் செல்கின்றதோ என்னமோ" ! அந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் உயிருக்கஞ்சி ஓடும் பாதைகள் எல்லாம் திடீர் மாற்றத்திற்கு உள்ளாகும் "அகதிமுகாம்களையே " சென்றடைவதாக இருந்தன.

ஓடுவார்கள் ஓடுவார்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள், கைகளில் அகப்பட்ட முக்கிய பொருட்களும், தமது உயிர்களுமே அவர்களுக்கு அப்போது சொந்தமாக இருக்கும். கெட்டதிலும் நன்மைகளாக பல நன்மைகளும் இந்த ஓட்டம்காணும் சமுதாயத்திற்கு அப்போது இல்லாமல் போனதும் இல்லை. எத்தனையோவருடங்களாக முகம்கொடுத்து பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.

பாடசாலைகளில் ஏதிலிகளாக வந்து தங்கும் மக்களுக்கு, அடுத்த ஆபத்து தமக்குதான் என்பதையும் உணர்ந்துகொண்டு முன்னின்று அவர்களைத் தேற்றும் நடவடிக்கைகளில் அயல் ஊர் மக்கள் ஈடுபடுவதையும், அங்கே அவர்கள் தங்குவதற்கு உரிய அத்தியாவசிய உதவிகளை வழங்குவதையும் கண்டு அந்த சிறுவயத்திலேயே என்னையும் அறியாமல் கண்கசிந்துள்ளேன். இயைபாக்கம் அடைவது உலகியலில், விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை என்பதை நிரூபிப்பதுபோல காலப்போக்கில், தொடர்ந்து முகம்கொடுத்துவரும் துயரங்களும், இழப்புக்களும் அவர்களுக்கு புழக்கமாகிவிட்டிருந்தன. வாழ்க்கையில் விரக்தி, நாளைகள்மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையீனம், வெறுப்பு என்பன அவர்களை ஆட்கொண்டிருந்தது மட்டும் இன்றி இவை அனைத்தையும் விட மோசமான தன்மீதே தனக்கான " சுயவெறுப்பு" மனோநிலைக்கும் அவர்கள் ஆளாகியிருந்தனர்.

இந்த மக்கள் இடம்பெயர் தொடர்கள் இடம்பெறும் காலங்களில் மழைவேறு வந்துவிட்டால் இவர்களின்பாடு இன்னும் மோசமானதாகவே வந்துவிடும். இந்தக்கால கட்டங்களில்த்தான் எனக்கும் நிற்சயமற்ற ரீதியில் எப்போது பாடசாலை தொடங்கும் என்ற கேள்வி மனதில் உதித்தது. பாடசாலை இல்லாது விட்டாலும் எங்கள் வயது " அரை ரிக்கட்டுகளின்" பாடு படு சந்தோசமாகவே போய்க்கொண்டிருந்தது. எங்கும் பிள்ளைகளை வெளியில் செல்ல பெற்றோர்கள் அனுமதிப்பது கிடையாது. ஆனால் பாடசாலையில் ஆசியர்களைவிட படுமோசமாக " புத்தகத்தை எடுத்து படி" என்ற வார்த்தைகள் மட்டும் எங்கள் காதுகளுக்கு வேத மந்திரம்போல் எப்போதும் ஓதப்பட்டுக்கொண்டிருக்கும்.

நாங்களும் படித்துக்கொண்டுதான் இருப்போம். ஷெல், மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் மத்தியிலும், ஓடிவரும் மக்களின் அவலக்குரல்கள், உறவுகளை இழந்த மக்களின் கதறல்களுக்கு மத்தியிலும் நாங்களும் படித்துக்கொண்டுதான் இருந்தோம்.
ஏன் … எனது பெரியம்மா ஒருநாள் வந்து "இன்று காலை விழுந்த ஷெல்லில உன்னோட படிக்கிற சிறாப்பர் தனபாலசிங்கத்தின்ட மகனும் தாயும் செத்திட்டினமாம். என்று சொல்லும்போது கூட நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.

" விமலகாந்தன்"! மனது ஒருமுறை அவனது பேரை உச்சரித்துக்கொண்டது. மனதுக்குள் என்னவென்று சொல்லமடியாத ஒரு உணர்வை அப்போது உணர்ந்துகொண்டேன். " விமலகாந்தன்" என் வாழ்நாளில் குண்டுவீச்சினால் நான் இழந்த முதலாவது நண்பன்.

படிப்பு சுமார்தான், அனால் இன்றும் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது அவன் நன்றாகப்பாடுவான். எங்களைப்போல் குழப்படி செய்வதில்லை. அப்போதெல்லாம் எங்களைப்போல் " நீ அவன்ர சைட்டா? எங்கட சைட்டா?" என கேள்விகள் கேட்டு " சைட்" பிரித்து அடிபடுவதில்லை. மாறாக யார் வம்புக்கும் போகாமல் அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டே இருப்பான் " என்ன சத்தம் இந்த நேரம்" , " தேன் மொழி என்தன் தேவி நீ" என்ற பாடல்கள் அவன் அதிகம் விரும்பி பாடும் பாடல்கள் என்பது மட்டும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.
ஆசிரியர்கள் வழித்துணையுடன் கைகளில் "நித்திய கல்யாணிப்பூவுடன் " அவனினதும், அவனை ஈன்ற தாயுடையதுமான சாவீட்டில் இருந்து சுடுகாடு மட்டும் சென்று அடிவயிற்றில் தீயிட்டவளுடனேயே அவனும் தீயுடன் சங்கமானது வரையான நிகழ்வுகள் இன்றும் அவ்வப்போது " கறுப்பு வெள்ளை" காட்சிகாக மனத்திரையில் வந்துவிட்டுப்போகும். கிட்டத்தட்ட என் விழிகளில் நின்று தூங்கவிடாமல் திரும்ப திரும்ப நினைவுகளில் வந்துகொண்டிருந்தான் விமலகாந்தன். மனம் அவனது இழப்பை ஏற்க மறுத்துக்கொண்டே இருந்தது. எங்கே அவன் என்னருகில் ஆவி ரூபத்தில் வந்துவிடுவானோ என்ற பயமும் என்னை சில நாட்களாக அலைக்கழிக்கத்தவறவில்லை.

அப்போதெல்லாம் நாம் செய்திகள் கேட்பதென்றால், காலையில் இந்தியச் செய்திகளைத்தான் கேட்போம். ஈழத்தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும், அவர்களின் போராட்ட வெற்றிகள் குறித்தும் உணர்வோடு குறிப்பட்டு இந்தியச் செய்திகள் முழங்கிய காலம் அது. யாழ்ப்பாணத்தில் மக்கள் அனுபவித்துவரும், உணவுப்பற்றாக்குறை, மனித அவலங்கள் குறித்து அந்த செய்திகளில் முக்கியமாக செய்திகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். எங்கள் ஊரிலிருந்தும், அயல் ஊர்களிலிருந்தும் ஓடுவதற்கு இனி இடம் இல்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் " தமிழ் நாட்டிற்கு" சென்றுகொண்டிருந்தனர்.
உணவுக்கான போராட்டத்திலும் மக்கள் அப்போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கூட்டுறவுக் கடைகள் உள்ள வீதிகள் " இப்போது ரஜினியின் படத்திற்கு முதல்நாள் திரையரங்குகளில் கூடிநிற்கும் இரசிகளர்களைவிட" மக்கள் கூட்டம் நிறம்பி இருக்கும்.வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, நிரம்பல் மிக்க தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கு இருந்தன.

எங்களுக்கான உணவுகளை தந்துவிட்டு தமது பகல்கால, இராக்கால உணவுகளாக வெறும் தண்ணீரையே அகாரமாக எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் நிறையப்பேர் இருந்தனர்.

ஒருநாள் மதியம் எதேட்சையாக "லங்கா புவத் " என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகள் காதில் விழுகின்றன. " இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுளைய முயன்ற இந்திய கடற்படையினரின் கப்பல்கள், எமது சிறி லங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டன என்பதே அந்த செய்தி.

அவசரமாக எனது பெரிய தந்தையார் ஆர்வம் மேலோங்க இந்திய செய்திகளை கேட்பதற்காக அந்த வானொலியுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆலிந்தியா ரேடியோ ….( All India Radio) என்ற சொல்லுடன் ஆரம்பமான அந்த இந்தியச் செய்தியை அப்போது சீத்தாராம் வாசித்துக்கொண்டிருந்தார், யாழ்ப்பாணத்தில் உணவின்றி இலங்கை அரசின் இனவாத நோக்கத்திலான பொருளாதார தடையினால் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் மக்களின் உணவுத்தேவையினை தீர்க்கும் பொருட்டு, இந்திய கடலோர ரோந்துப்படையினரும், இந்திய கடற்படையினரும் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை, யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியாதென சிறி லங்கா கடற்படையினர் வழிமறிப்பு செய்து தடுத்துள்ளனர் என்பதே அந்த செய்தி. இந்த செய்தி கேட்டு (லங்கா புவத்) தென்னிலங்கையில் பட்டாசு கொழுத்தி சிங்கள மக்கள் ஆரவாரம் செய்ததாகவும் அறியமுடிந்தது.

அதே நாள் மாலை சுமாராக 4.30 மணியிருக்கும் என நினைக்கின்றேன். காதைப்பிளக்கும் ஓசைகளுடன், நாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் எமது வான் பிராந்தியங்கள் மேலாக பேரோசை எழும்பியது … வழமைக்கு விரோதமான இந்த சத்தங்களும், நிலம் அதிர்வதைப்போன்ற பேரிரைச்சலும், மக்களை மேலும் பயமுறுத்தியன!
-இலைகள் உதிரும்-

Monday, April 4, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01



முற்குறிப்பு – நான் ஜனனித்த ஈழ மணித்திருநாட்டில், யுத்த வடுக்களால் மட்டுமே எழுதப்பட்டிருந்த என் பால்குடிப்பருவங்களில் குறிப்பாக எனது நினைவு தெரிந்த அதேநேரம் நெஞ்சுக்குள் இன்றும் அடிக்கடி என்னை சித்திரவதை செய்துகொண்டிருக்கின்ற சம்பவங்களும், நிகழ்வுகளும் அன்றைய காலக்கண்ணாடியாகவே, ஒரு ஒன்பது வயது சிறுவனின் மனதில், பதிந்துள்ளவை, மரணப்படுக்கை வரை தொடர்ந்து பயணிக்கப்போகும் நினைவுகளை அந்த சிறுவனின் கண்களின் ஊடாகவே சொல்லவேண்டும் என நான் நினைத்து நினைத்து ஏங்கியவைகளை சொல்லத்தான் நினைத்து அடக்கி என் இதயக்கூட்டுக்குள் புதைந்து வைத்திருந்தவைகளை உங்களுடன் தொடராக பகிர்ந்து கொள்கின்றேன்.
சிந்தனைக்கும் அப்பால்ப்பட்ட இந்த சிறுவனின் ஏக்கங்களை, கண்ணால் கண்டவைகளை, சோகங்களை சிந்தனைக்கு உட்பட்ட எழுத்துக்களில் செதுக்கிவிடுபவை கஸ்டமான காரியம்தான். என்றாலும் கூட முடிந்தவரை என்கண்களினூடே உங்களையும் பயணிக்கவைக்க முயல்கின்றேன். இதில் வரும் சம்பவங்கள் நீங்கள் அறிந்தவைகள்தான், புரிந்தவைகளும் கூட, ஆனால் ஒரு சிறுவனின் மனம் அந்த சம்பவங்களை எப்படி உள்வாங்கிக்கொண்டது, அதன் தாக்கங்கள் உங்களை மட்டுமின்றி சிறுவர்களையும் எவ்வாறு தாக்கியது என்பதையும், அதேநேரம் இந்த சம்பவங்களுக்கு பிறகு பிறந்து இன்று வாலிபப்பருவங்களையும் தொட்டுவிட்ட என் இளையோருக்கு ஒரு சுவையான சோகத் தகவலாகவும் இது இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒன்று மட்டும் நிச்சயம் இன்று தொடர்ந்தும் ஈழத்தில் அணையாத காட்டுத்தீயாக கொழுந்துவிட்டெரியும் யுத்தத்தீ இன்றும் பல சிறுவர்களை இன்னும் இருபது வருடங்களில் இதுபோன்று சொல்லவைக்கும் என்பது மட்டும் உண்மை..
இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????

மேற்குறிப்பு -இதை பதிவுலகிற்கு வந்த புதிதில் தொடராக எழுதி வந்தேன். எனினும் இதில் நான் கண்ணால் கண்ட வேதனையான உண்மை சம்பவங்களையே எழுத வேண்டி வரும், குறிப்பாக இந்திய இராணுவம் அந்தக்காலங்களில் ஈழத்தில் நடத்திய அநியாயங்கள் அத்தனையும் விரிவாக வரும் என்பதால் அதை எழுதுவதை இடை நிறுத்தி இருந்தேன். என்றாலும், அன்றைய நிகழ்வுகள் தெரியாத, மறைக்கப்பட்ட சிலர் எம் வேதனை புரியாமல் விதண்டாவாதம் புரிந்து மேலும் மேலும் வேல்பாச்சும் கதைகளை தொடர்ந்து பேசிவருவதால், இந்த உண்மைகள் அவர்கள் புத்தியில் இப்போதாவது உறைக்காதா? என்ற எண்ணத்துடனனேயே மீண்டும் எழுத விழைக்கின்றேன். அன்று நான் கண்ணால்கண்ட, அனுபவித்த துயரங்கள், சம்பவங்களே இவை இதில் இம்மி அளவுகூட நான் கற்பனை செய்யப்போவதில்லை என என் எழுத்தின் மேல் சத்தியம் செய்கின்றேன்.
இந்த தொடர் இந்திய நண்பர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாதிக்கும். ஆனால் உங்கள் மனங்களை வேதனைப்படுத்தவோ, அல்லது இந்தியாவை பழிக்கவோ நான் இதை மீண்டும் எழுத முனையவில்லை. மறைக்கப்பட்டவைகள், காலம் கடந்தும் இன்றும் கவனியாது விடப்பட்ட பெரும் தவறுகள் என்றாவது வெளிச்சத்திற்கு வரவேண்டும், காந்தீயம் பேசும் இந்தியா என்றோ ஒருநாள் ஈழத்தமிழரிட்ம் இந்த சம்பவங்களுக்கு வெளிப்படையான மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே என் அவா...



1987 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஓருநாள். ஆன்று காலைப்பொழுதே.. கதிரவன் ஒளி கசிந்து, வசந்தகால குறியீடுகளான குயிலின் கூவல்களிலும், அணிலின் கீச்சிடல்களிலும், பூக்களின் வாசங்களுடனும் விடிந்திருக்கவில்லை. வழமைபோல வானத்தில் இரண்டு உலங்குவானுர்திகளினதும், அவற்றினால் கக்கப்பட்டும் எரிகுண்டுகளுடனுமே விடிந்தது. அப்போதெல்லாம் சிறுவயது பேதமை மனமோ அல்லது விரக்தியோ தெரியவில்லை வானிலே பலியெடுக்கும், இரும்பு இராட்சதர்கள் வராது போனால் ஏதோ ஒரு வழமைவிரோத பண்பு தலைதூக்கும்.
அன்று அப்படி இல்லை. காலையிலேயே கச்சேரி ஆரம்பித்திருந்தது. "நல்லூர்க்கோவிலடிப்பக்கம்தான் கொட்;டுறாங்கள் " உடனடி முந்திய செய்தியை தெரிவித்துவிட்டு வீதியால் சைக்கிளில் செல்கின்றார் பாண் விற்பவர். மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரரின் சுற்றுப்பாதை அகலத்தொடங்கியது, கிணற்றுக்கட்டில் குளித்துக்கொண்டிருந்த என்தலைக்குமேலால் பறந்து செல்வது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. மறுகணம் பட பட என்ற பாரிய சத்தத்துடன் முற்றுப்பெறாத வாக்கியத்தொடர்போல் 50 கலிபர் துப்பாக்கி ரவைகள் வீதியோரங்களை நோக்கி பாய்ந்துகொண்டிருந்தன. குளித்துக்கொண்டிருந்த என் மனதுக்குள்ளும் பயம் வந்து புகுந்துகொள்ள, மனதுக்குள் அப்போது பெரும் காப்பகமாகப்பட்டது சுமார் 10 வாழைகள் உள்ள எங்கள் வீட்டின் வாழைத்தோட்டம் தான்.

அப்போது தான் கவனித்தேன் இரண்டு ஹெலி கொப்ரர்கள் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் இருந்த எங்கள் ஊர் வான்பரப்பின்மீது மேலும் "சியாமா செட்டி" என அழைக்கப்பட்ட இரண்டு குண்டு வீச்சு விமானங்களும், அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (பெரும்பாலும் அது பரல் குண்டுகள் என்ற வகை குண்டுகளையே வீசும்.) கூட்டுச்சேர்ந்திருந்தன.

வாழைகளின் மத்தியிலிருந்து அன்று என் சின்ன ஆராய்வு மூளை சொல்லியது "இன்று நடக்கப்போவது அதிகமாகவே இருக்கும் என்று ".அப்போதெல்லாம் எங்கள் அயலவர்களுக்கு தெரிந்திருந்த அறிவியல் உண்மை! பிளாட் போட்ட வீடுகளில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதுதான். அது எவ்வளவு முட்டாள் தனம் என்பது பிறகு நடந்த சம்பவங்கள் வேறு இருக்கின்றது.

இந்த நிலையில் பல அயலவர்களும் எங்கள் வீடு பிளாட் போடப்பட்டது என்பதால் எங்கள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். அங்கு மேலால் நிலவிய பதட்டங்களைவிட தங்கள் கதைகளால் பதட்ட நிலைகளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகரித்துக்கொண்டிருந்தனர். "இங்கபாருங்கோ … இவங்கள் பொம்பர்ல இருந்து ஓதோ எரிகுண்டு ஒன்று போடுறான்களாம், போட்டால் கீழே ஒரு சுற்று வட்டாரத்துக்கு ஒருத்தரும் தப்ப ஏலாதாம் " தன் ஆரம்ப உரையை மிகப்பயங்கரமாக அரங்கேற்றினார், ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலாயுதம். அவரது மாணவர் என்பதானாலோ என்னமோ உடனடியாக அதை வழிமொழிந்தார் மனோகரன் மாஸ்ரர். கேட்டுக்கொண்டிகொண்டிருந்த மற்றவர்களின் முகங்களில் ஈகூட ஆடவில்லை.

"மம்மி பின் கேட்டை லொக் பண்ணாமல் வந்திட்டேன், கேக் அடித்து வைத்திருக்கிறம் தானே.. இந்த ஏயார் பொம்பிங்கால பேக் பண்ணவும் குடுக்கேல்ல எங்கட "லான்ஸி" போய் அதுகளை சாப்பிட்டுபோடுமோ தெரியாது என்று தனது தாயிடம் செதல்லிக்கொண்டிருந்தா லக்ஸி அக்கா.அப்போது அவ உயர் தரம்படித்துக்கொண்டிருந்தா..அவவின்ட அப்பா வெளிநாட்டில இருந்தவர். கொஞ்சம் தமிழுடன் ஆங்கிலத்தை கலவி கொள்ள வைப்பதில் அவவுக்கு கொஞ்சம் விருப்பம் அதிகம் தான். அவ லான்ஸி என்று குறிப்பட்டது அவர்கள் வீட்டு நன்றியுள்ள நாலுகால் உடையவர்.

சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன? கொஞ்சம் அதட்டினார் வேலாயுதம் மாஸ்டர்.
இந்த சம்பவங்களுக்குள் எதுவுமே தெரியாமல் தனது தாயின் மடியில் இருந்துகொண்டே என் புது பேனாவை நான்காக உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் "காகத்தை" காவம் என்று சொல்லப்பழகும் 2 வயதுடைய சஞ்சீவன்.

திடீர் என மிக பதிவாக விமானத்தின் ஓசை ஒன்று எங்கள் காதுகளின் செவிப்புலன்களை கெடுத்துவிடுவதுபோல் பேரிரைச்சலுடன் பதிந்து வந்தது. ஐயோ… முருகா, பிள்ளையாரப்பா… என்றெல்லாம் யார் யார் சொன்னார்கள் என்பதற்கு இடையில் பெரும் சத்தத்துடன் குண்டு ஒன்று போடப்பட்டு வெடித்தது. என் நெஞ்சுக்கூட்டின் இடைகளில் அடைப்பது போன்ற உச்ச பய உணர்வு அப்போது தெரிந்தது. எனக்கு ஆறுதலாகவோ அல்லது அவரது பயத்தாலோ மனோகரன் மாஸ்ரர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

முதலில் நானும் அவரும்தான் வெளியில் எட்டிப்பார்ததோம் …நிலத்தில் கண்ணாடித்துண்டுகளும், சில குண்டு பிசிர்களும் முதலில் தென்பட்டன. வானத்தில் குண்டுச்சத்தம் கேட்ட திசையில் "நோட்டீஸ்கள்" பறப்பதுபோல மின்னி மின்னி ஏதோ பறந்தகொண்டிருந்தது. கீழே வந்து விழும்போது தான் அவைகள் நொட்டிஸ்கள் அல்ல விமானக்குண்டு விழுந்த கட்டடத்தின் ஸீட்கள்தான் மேலே பறந்து பின்னர் வந்து கீழே விழுவதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் பயப்பீதி உந்தவே வீட்டின் உள்ளே ஓடிச்சென்று விட்டோம். வீதியிலும் எவரையும் காணமுடியவில்லை. வானில் சத்தமும் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல வீதியில் ஆளலரம் அவலத்துடன் நடமாடுவதை உணரமுடிந்தது.

சொல்லி வைத்ததுபோல் அவ்விடத்தில் இருந்து அனைவருமே ஒன்றாக எழுந்து வீதிக்கு வந்தோம். முதலில் பல பொது இளைஞர்கள், தயவு செய்து இரத்தம் தேவைப்படுகின்றது கொடுக்கக்கூடியவர்கள் ஆஸ்பத்திரிக்கு உடனவாங்கோ எனத் தெரிவித்துக்கொண்டே சைக்கிள்களில் அவசரமாக ஓடினார்கள், அவர்களின் பின்னால், நான் கண்ட காட்சி அப்படியே சப்த நாடிகளையும் ஆட்டம் காணவைத்தது!! வயிற்றுப்பகுதியில் இரத்தம் வழிந்தோட கண்கள் மேலே சொருகியபடி மேல் மூச்சுவாங்க ஒரு நபரை இருவர் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல சன நடமாட்டம் காணத்தொடங்கியது வீதி.
அன்றைய குண்டு வீச்சு விபரங்களும் வெளிவரத் தொடங்கியது. இரண்டு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், நல்லூர் பகுதியில் இரண்டாம் குறுக்கு வீதி, முத்திரச்சந்தையில் உள்ள ஒரு உருக்கு நிறுவனம், நல்லூர் பின்வீதியில் முடமாவடியில் இருந்த ஒரு பிரபலமான கட்டம் என்பன இந்த குண்டுவீச்சு தாக்குதல்களால் தரை மட்டமாகியதாக செய்திகள் உடன் வந்தன.. பலரது வாய்மூல அறிக்கைகளாக.. சிறிய ஒரு ஓய்வுக்கு பின்னர் நல்லூரில் இருந்த எனது வீட்டிலிருந்து தென்கிழக்காக தொடர்ச்சியாக ஆழுத்தம் கொடுக்கும் ஒரு அதிர் வெடி போன்று தொடர்ச்சியாக குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நமக்கு அண்மையாக இருந்த இராணுவ முகாம்கள், ஒன்று கோட்டை இராணுவ முகாம், அடுத்தது நாவற்குளி இராணுவ முகாம்.

குடிமனைகளை நோக்கிய ஷெல்த்தாக்குதல்கள் கோட்டை இராணுவ முகாமிலிருந்தே இடம்பெறும். இரவு பகல் என்று காலவறைகள் எதுவும் அதற்கு கிடையாது. தென்கிழக்காக சத்தம் கடுமையாக கேட்டுக்கொண்டே இருந்தது. "நாவக்குளி காம்பில இருந்தும் அடிக்கத் தொடங்கிட்டான்போல! என வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் மதியப்பொழுதை தாண்டி செல்லும் வேளைவரை இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சந்று நேரத்தால் வீதியில் பெரும் சனமாட்டத்துடன் கூடிய குரல்கள் எழுந்தபோது என்னையறிமாலே வீதிக்கு ஓடிச்சென்று பார்த்தேன். குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு கிடைத்த தமது பொருட்களையும் ஏந்திக்கொண்டு பெருவாரியாக மக்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனர். வீதியில் நின்ற பெரியவர் ஒருவர் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் "எங்கியிருந்து தம்பி வாறிங்கள்? எங்க பிரச்சினை என்று கேட்டார். பாசையூர், குருநகர் இடங்களில இருந்து வாறம் அண்ணை. கண்போட்டால கொண்டுவந்து வெழுக்கிறான். கனபேருக்கு காயம் அண்ணை வீட்டு பக்கத்தில எல்லாம் வந்து விழுகுது. அதுதான் அங்கிருந்து பாதுகாப்புக்காக ஓடி வாறோம் என்றார்.

அவர்களில் பெரும்பாலான மக்கள் கல்விப்பணிமனைக்கு அருகில் உள்ள சாதனா படசாலையில் தங்கியிருந்தனர். நாங்கள் உட்பட பல எங்கள் இட மக்கள் தேனீர், படுக்கைகள் போன்றவற்றை அங்கு கொண்டுவந்து அந்த மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சில இன்னும் அந்த சத்தத்தினால் ஏற்பட்ட பதட்டம் மாறாமல் காணப்பட்டனர். பெரியவர்கள் பெரும் வேதனை கலந்த தோற்றத்துடன் இருந்தனர். ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்ற மும்முனைத்தாக்குதல்களாலும் மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருந்னர்.

நான் உட்பட அனைவரும் தொடரப்போகும் அபாயங்கள் பற்றி தெரியாமல் இன்றைய நாளில் எமது பயங்கரம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இது ஆரம்பம்தான் இதைவிட பயங்கர அனுபவங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கப்போகின்றது என்று …
( இலைகள் உதிரும்)

LinkWithin

Related Posts with Thumbnails