Showing posts with label பண்டித்தலைச்சி. Show all posts
Showing posts with label பண்டித்தலைச்சி. Show all posts

Monday, March 26, 2012

பங்குனித்திங்களும் மட்டுவில் பண்டித்தலைச்சியும்............


யாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒன்றுகூடி விழா எடுப்பதும் ஒரு சிறப்பான அம்சமாகும். தெய்வபக்தி, ஆன்மிகம் என்பவற்றைத்தாண்டி, காலகாலமாக ஒரு சமுதாய மரபு பல பரம்பரையினரிடையே கொண்டு செல்லப்பட்டு இன்றும் தொடர்ந்து கைக்கொள்ளப்படுவது இங்கு மிகச்சிறப்பான ஒரு அம்சமாகும்.

அந்த வகையில், யாழ்ப்பாண நகரில் இருந்து வட கிழக்காக தென்மராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமே மட்டுவில் என்னும் மருதநிலம் சார் ஊராகும். அங்கு சிறப்பம்சம் பொருந்திய ஒரு தலமாக உள்ளது மட்டுவில் பண்டித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தானமாகும்.
தமிழில் பங்குனி மாதம் தொடங்கியவுடன், வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும், யாழ்ப்பாணத்தின் மற்ற அனைத்து ஊர்களில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பெருந்தொகையான மக்கள் இங்கு வந்து குவிவது சிறப்பான ஒரு அம்சமாகும்.

பெரும்பாலும் உற்றாரும் சுற்றத்தாரும் தமது ஊர்களில் இருந்து பெரிய பொங்கல்பானைகள், பாளைகள் என்பவற்றை வாகனத்தில் எடுத்துவந்து, காலைவேளையே இங்குவந்து ஒன்றுகூடி இங்குள்ள தேவஸ்தான கேணியில் நிராடிவிட்டு, அம்பாள் தரிசத்தை முடித்துவிட்டு, பொங்கல்வைத்து, மடைவைத்து வணங்கி அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வது சிறப்பான ஒரு அம்சமாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது சிறப்பம்சமாகும்.

இங்கு முக்கிமானதாக ஒன்றினை குறிப்பிடவேண்டும்,
ஆம் அதுதான் இந்த ஊரான மட்டுவில் என்ற ஊரினையே அடைமொழியாக வைத்து இங்கு மட்டுமே பயிரடப்பட்டு, சந்தைக்கு வரும் மட்டுவில் கத்தரிக்காய். நல்ல உறுண்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக்கத்தரிக்கயை, தேங்காய்ப்பால் நிறையவிட்டு, கறிசமைத்து, வெண்பொங்கல் பொங்கி இங்கு உண்பதே பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக இருக்கின்றது



எது எப்படியோ, பெரும்பாலான மக்கள் இன்றும் தமது மரபு மாறாது பங்குனித் திங்களுக்கு இங்கு வந்து ஒன்று கூடுவது இன்றும் தொடர்வது மனதுக்குள் சந்தோசமே. பல வகையான நேத்திக்கடன்களும் இங்கு நடைபெற்றுவருவது வழமை. காவடி, முடி எடுத்தல், குழந்தைகளுக்கு காது குத்தல், புது வாகனங்களை பூசை செய்தல் என்பவை இந்த தினங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன.

கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையிலான தரைவழிப்பாதை தடை செய்யப்பட்டிந்தது.
தற்போது மக்கள் சுதந்திரமாக ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுவருவதனால் இம்முறை அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்றைய தினமே அதிகளவிலான மக்கள் வரத்தொடங்கியுள்ளமையும், தென்னிலங்கை வர்த்தகர்கள் கோவில் சுற்றாடல்களில் தமது வர்த்தக நிலையங்களை கொண்டுவந்து மடை விரித்துள்ளமையினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தற்போது புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்துவரும் ஈழத்து இதயங்கள் பலவற்றிலும், இந்த பங்குனித்திங்களும், பண்டித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் பொங்கலும் பசுமையான ஒரு நினைவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

LinkWithin

Related Posts with Thumbnails