Wednesday, June 30, 2010

நான் சந்தித்த பதிவர்கள் -புகைப்படத்தொகுப்பு

பதிவுலகத்தில் நான் காலடி எடுத்துவைத்தபோதே பல அரிய நண்பர்களின் நட்பு எனக்கு கிடைத்ததும், தற்போதும் அந்த நட்பு வட்டம் நாளாக நாளாக பெருத்துக்கொண்டு செல்வதும், ஒரு ஆக்கபூர்மான சிந்தனையுடைய நண்பர்களின் உண்மையான நட்பு கிடைத்திருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவும், வலைப்பதிவு எனக்கு தந்த ஒரு போனஸாகவும் நான் கருதுகின்றேன்.
சென்னையில் எனது உயர்கல்வி நிமித்தம் தங்கியிருந்தபோதே அந்த நட்பு வட்டம் அச்சாரம் இடப்பட்டது. பதிவுலக நண்பர்களின் அன்பு வெள்ளத்தில் பல தடவைகள் திக்குமுக்காடியும் இருக்கின்றேன்.

அதில் ஒரு கட்டமாகவே பதிவுலகில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், நான்கு பதிவர்கள் சேர்ந்து ஒரு கருவில் நான்கு கதைகளை வேறு வேறு கோணங்களில் எழுதி பல தரப்பட்டவர்களின் பாராட்டுக்களையும், கவனிப்புக்களையும் பெற்றிருந்தோம்.
இந்த நட்பு வட்டங்களின் மூலமே பல இலக்கிய கூட்டங்களுக்கு செல்லவும், எழுத்துப்பிரம்மாக்களை நேரடியாகச்சந்திக்கவும் வாய்ப்புக்களும் கிடைத்ததை மறந்துவிடமுடியாது.
அதேவேளை நான் சென்னையில் தயாரித்து எடுத்த மூன்று குறும்படங்களுக்கும் பதிவுலக நண்பர்களின் பேராதரவையும் இன்றும் நான் மறந்துவிடவில்லை.
நான் தாயகம் திரும்பி இப்போது இலங்கையில் இருந்து எனது வலைப்பதிவுகளை தொடர்ந்தாலும் என் சென்னை பதிவுலக நண்பர்களின் பசுமையான நினைவுகளை இப்போம் அதே சீதோஸ்ணத்தில் என் இதய குளிர்சாதனத்தில் வைத்திருக்கின்றேன்.

அடுத்து இலங்கைப்பதிவர்கள். இலங்கைப்பதிவர்களில் அனைவரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு இப்போதும் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக பலரை சந்தித்துவருகின்றேன். குறிப்பாக யாழ்தேவி நண்பர்கள் வட்டத்தினூடாக என் மண்ணின் பதிவுலக நண்பர்களை சந்தித்து வருகின்றேன்.
நான் சென்னையில் இருந்தவேளையில் இலங்கை பதிவர் சந்திப்புக்கள் இரண்டும் நடந்துமுடிந்தமையினால் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு நழுவிட்டது துரதிஸ்டமே. வெகுவிரைவில் நான் அனைவரையும் சந்திப்பேன் என்பது என் நம்பிக்கை.

சரி வாருங்கள் நான் சந்தித்த பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்..(இதில் சில பதிவர்களை சந்தித்தும் புகைப்படங்கள் கிடைக்கவில்லை)

சென்னை பதிவர்கள்

நான், சீலன், அடலேறு, நிலாரசிகன்


தண்டோரா மணிஜி, காவேரிகணேஸ்


ரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், மற்றும் நர்சிம்


கேபிள் சங்கர், எவனோ ஒருவன் அதிபிரதாபன், நான், சங்கர் மற்றும் திருக்குமரன் (இலங்கை)


அகநாழிகை பொன் வாசுதேவன், கேபிள், வனைமனை சுகுமார், முரளிகண்ணன், பட்டர்பிளை சூரியா.


ஊர்சுற்றி மற்றும் ஆதிஷா


சமுத்திரனுடன் நான்


சயந்தன் (நதிவழி), தவறணை புகழ் டிலான் மற்றும் நான்

இலங்கை பதிவர்கள்

சேரன்கிரிஸ், பாலவாசன், நான், மருதமூரான்


கூல்போய், பாலவாசன், இலங்கன், மருதமூரான், சேரன்கிரிஸ், புள்ளட்


பாலவாசன்,கூல்போய்,மருதமூரான்-2,சேரன் கிரிஸ், இலங்கன், கான்கொன், நான்


இலங்கன், கான்கொன், நான்


பாலவாசன், சுபாங்கன்

Sunday, June 27, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (27.06.2010)

நாயகத்துதிக்கோர் வாலி!

நவீன காலத்தில் குறிப்பாக சினிமாவுக்குள் தமிழ் தலையை புதைத்துக்கொண்ட காலத்தில், நாயகத்துதியினை தமிழுக்கு ஏற்படுத்தி விட்டவர்கள், எம்.ஜி.ஆர், வாலி, எம்.எஸ்.வி. கூட்டணியினர்தான். இதிலும் குறிப்பாக பாடலாசிரியர் என்ற ரீதியில் தமிழ் சினிமாவின் நாயகத்துதியின் ஆரம்ப கர்த்தாவே சாத்யாத் இந்த கவிஞர் வாலியே என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின்னர் 90 களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றுக்கு அவர் வளங்கியிருந்த ஒரு செவ்வியில் இது குறித்து கேட்டபோது, தகுதியான மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் உன்னதாமான தலைவன் ஒருவனையே எனது எழுதுகோல் போற்றி பாடியது, அந்த சரித்திர நாயகனை அன்றி இன்னும் ஒருவனை என் எழுதுகோலோ, என்நாவோ பாடுவதற்கு இல்லை, என்று கூறியிருந்தார் இந்த வாலி.
ஆனால் தற்போது பல மேடைகளிலும் கலைஞரை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதற்காக பிறர் முகம் சுழிக்கும் அளவுக்கு, கலைஞர் புகளாரம் சூட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இன்றி தமிழுலகம் உவகை கொள்கின்றது.
நேற்று செம்மொழி மாநாட்டில் கவிஞர் வாலி தலைமையில் இடம்பெற்ற “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற தலைப்பினாலான கவியரங்கத்தில் வாலியின் கலைஞர் துதி உச்சத்திற்கே சென்றது. வீணாக அதில் தமிழை இழுத்து தலைப்பில் மட்டும் கொடுத்திருக்காமல் “ கலைஞருக்கும் அமுதென்று பேர்” என்று வைத்திருந்தால் மிகச்சிறப்பானதாகவும், மிக மிக பொருத்தமானதாகவும் அது அமைந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் தற்போது கலைஞரை புகழால் இளைஞராக்கும் செயலில் வாலி ஆகிய இவர் வாலிபன் ஆகின்றாரே!!
இதற்கும் நாங்களும் சொல்லலாம் ஆஹா…(வடிவேல் சொல்லும் ஆஹா) இதற்கு மேல் ஆகா..(சப்பா…ஏன் இந்த கொலை வெறி!!)

தமிழ்ப்போதை மட்டும் போதுமா என்ன?

அடடா உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் என்ன விசேடங்கள் என்று ஆராய்ந்துகொண்டு போகையில் கண்ணில் பட்டது இந்த செய்தி.
மாநாடு தொடங்கிய நாளில் இருந்து மூன்று தினங்களில் கோவையில் 10 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருக்கின்றதாம்.
கோவையில் உள்ள 136 மதுபான சாலைகளில் (டாஸ்மார்க் கடைகளில்) மாநாடு தொடங்கிய முதல் நாளில் 3.89 கோடி ரூபாய்க்கும், இரண்டாம் நாளில் 3.35 கோடி ரூபாய்க்கும், மூன்றாம் நாள் 3.20 கோடி ரூபாய்வுக்கும் மது அமோக விற்பனை ஆகியுள்ளது கொஞ்சம் கலக்கலான செய்திதான்.
இறுதிநாள் இன்று என்றபடியால் 4 கோடிக்கு விற்பனை எகிறும்போல இருக்கு.
அட போங்கையா…வாள்க தமிள்ள்ள்..ஸியேஸ்…

Children's Play


ஆர்ஜென்ரீனா – பிரேஸில்

உலக காற்பந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜாம்பவான்கள் ஆர்ஜென்ரீனா மற்றும் பிரேஸில்தான் என்று ஒரு வகையில் சொல்லமுடியும். காரணம் நிறுவனம் ஒன்று உலகலாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்ரீன அணிகளுக்கே அதிகமான இரசிகர்கள் உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ முன்பு தொடக்கம் என் இரசிப்பும், நேசிப்பும் ஆர்ஜென்ரீனா அணிமீதுதான் இருந்து வருகின்றது. காரணம் மரேடோனாவாகவும் இருக்கலாம்.
இந்த இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு வந்தால்???? சொல்லவும் வேண்டுமா? ஆனால் காற்பந்தாட்ட உன்னத ஜாம்பவான்களில் முதன்மையானவரான பேலே கூட பிரேஸில் மற்றும் ஆர்ஜென்ரீன அணிகளே இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும் என தாம் உறுதியாக நம்புவதாக சொல்லியிருக்கின்றார்.
எனது எதிர்பார்ப்பும் அதுவேதான்..அனால் போர்த்துக்கல், ஜேர்மன் அணிகள் என்ன சும்மாவா? பார்ப்போம் நடக்கப்போவது என்ன என்று!!!

காற்சட்டைப் பருவத்தில் மனதோடு கலந்த கானம்…

அப்போது சரியாக 1987 ஆம் ஆண்டு, பலாலி இராணுவ முகாமில் இருந்து இரவு வேளைகளில் புன்னகை மன்னன் படத்தை 36 தடவைகள் ஒளிபரப்புவார்கள், அப்போதெல்லாம் எங்களுக்கு அந்தப்படமே பாடமாக இருந்தது.
ஆனால் சின்னக்குயில் சித்திராவின் ஒரு பாடல் ரீங்கரம் ஒன்று, சொல்லாமலே வந்து இதயத்தில் உக்காந்துகொண்டுவிட்டது.
காற்சட்டைப்பருவகால இரசிப்புக்கள் வித்தியாசமென்றாலும்கூட இந்தப்பாடல், பாடல்வரிகள், பாடிய சித்திரா ஆகியோர் மீது அன்றே எனக்கு ஓர் பேர் அபிமானம் வந்துவிட்டது உண்மை.
சிலபூக்கள் தானே மலர்கின்றது…பல பூக்கள் எனோ உதிர்கின்றது…
பதிலென்ன கூறு? பூவும் நானும் வேறு..என்ற அந்த வரிகள் அற்புதமானவை.
சித்திராவுக்கென்றே முற்றுமுழுதான அந்தப்பெண்மை கலந்த குரல், எப்போதுவேண்டுமென்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

ஷர்தாஜி ஜோக்
மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?

Tuesday, June 22, 2010

சிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரானியத் திரைப்படங்கள்.

மீள்பதிவு


ஆணும் பெண்ணும் தொட்டு, கைகோர்த்து நடிப்பதற்கு தடை, முத்தக்காட்சிகளுக்குத்தடை, வன்முறைகளின் காட்சிப்படுத்தலுக்குத் தடை, இஸ்லாமியச்சட்டத்திற்கு விரோதமாக படமாக்கலுக்கு தடை, சிறு சலன ஆபாசத்திற்கும் தடை, என ஈரானிய சினிமாவுக்கு தடைகள் மேல் தடைகள் போடப்பட்டாலும், அந்த தடைகளுக்குள்ளாகவே, உணர்வுகளை மட்டுமே கருப்பொருளாகக்கொண்டு வெற்றிபெறலாம் என்பதை நிரூபித்து தலைநிமிந்து நிற்கின்றது ஈரானிய சினிமா.

உலகின் வெற்றிபெற்ற, விருதுகளைப்பெற்ற படங்கள் அத்தனையையும் எடுத்துப்பாருங்கள், அதில் உணர்வு ஓட்டமான கட்டங்கள் பல இருக்கும். விருதுகளும், மரியாதைகளும் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களுக்கே வழங்கப்படுகின்றதே தவிர பிரமாண்டமான படங்களுக்கு அல்ல.
இன்றைய நிலையில் இரானில் அத்தனை அழுத்தமான சட்டங்களுக்கு மத்தியில் அந்த சட்டதிட்டங்களுக்கு எற்றதுபோல சிறுவர்களின் உணர்வுகள். அவர்களின் வாழ்வுலகம். அவர்களின் எண்ணங்கள், எதிர்பாhர்ப்புக்களை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி பெருவெற்றிபெற்றுள்ளதை அவதானிக்கலாம்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் நின்றுவிடாது அதை ஒரு சமுகத்தின் கருத்துக்களையும், முக்கியமாக மற்றவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களின் வலிகளை மற்றவர்களும் உணரும் ஒரு ஊடகமாக இத்தகய சினிமாக்கள் உள்ளன.
பிரமாண்டங்களைக்கண்டு பிரமிப்பவர்கள் கூட, இன்று மெல்ல மெல்லமாக இந்த உணர்வோட்டமான சினிமாவின் பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
முக்கியமாக ஈரானிய சினிமா இன்று கையில் எடுக்கும் முக்கியமான விடயம் சிறுவர்களின் உணர்வுகள், பிரச்சினைகளை உணர்விற்கும் விதமானவைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன.
இன்று உலகத்தில் உள்ள அனைவருமே சிறுவர் என்ற பராய வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். அன்றைய நாட்களின் வசந்தங்களையும், சிறுபிராயத்தின் தமது மனதின் உணர்வுகளையும் தொலைத்துவிட்டு இன்றும் அந்த இறந்தகாலத்தில் ஒரு தடவையாவது வாழமுடியாதா என ஏங்கி, இறந்தகாலத்திற்கு தமது நினைவுகளை கொண்டு செல்பவர்களாகவே நாம் அனைவரும் உள்ளோம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்காது.

இந்த நிலையில் இந்த சிறுவர்களை மையப்படுத்தி வரும் உலகத்தரமான சினிமாக்கள் எங்களை சிலிர்க்க வைக்கின்றது. இவை எங்கள் தமிழ் சினிமா உட்பட இந்தியச்சினிமா கட்டுண்டுகிடக்கும் பல மாஜைகளைளுக்கு அப்பால் உள்ள பிரகாசமான ஒளியாக தெரிக்கின்றது.
ஒரு நான்கு சண்டைக்காட்சிகள், ஆறு பாடல்கள், அவற்றில் இரண்டு குத்துப்பாட்டுக்கள், கீரோஹிசம், விரசம், கவர்ச்சி என்று மூன்றாம்தரமான நிலையில் இருக்கும் இந்திய சினிமாக்களின் தோலை உரிக்கின்றன இத்தகைய சினிமாக்கள்.சரி…இன்றைய பகிர்வுக்காக நான் எடுத்துக்கொண்ட ஈரானிய திரைப்படங்கள் சிறுவர் சம்பந்தப்பட்ட மிகப்புகழும், விருதுகளும் பெற்ற படங்களே. உலகப்புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிடியின் திரைப்படங்களில் இருந்து
1996 ஆம் அண்டு வெளியாகிய “த ஃபாதர்” (The father), 1997 ஆம் ஆண்டு வெளியாகிய “சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven), மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளியாகிய “த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise) ஆகிய திரைப்படங்களை நாம் பார்த்தோமானால், முற்றிலும் இந்த திரைப்படங்கள் சிறுவர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டதாகவே உள்ளன. மூன்று திரைப்படங்களை பார்த்து வெளிவரும்போதும் இதயத்தில் ஒரு வலியும் நெருடலும், ஒரு செய்தியும் கண்டிப்பாக இருக்கும். உச்ச வெயிலில் பாலை வனத்தில், வறண்ட மணற்காற்றில் பயணிக்கும் எங்களை ஒரு மெல்லிய ஊற்று அருவி ஒன்று தடவிச்செல்வதுபோல உணர்வுகளை இந்தத்திரைப்படங்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி எம் மனதில் தடவிவிட்டுப்போகும்.

த ஃபாதர் (The father)

தந்தையை இழந்த தனது குடும்பத்தில் தனது தாயார் மற்றும் மூன்று தங்கைகளுக்கும், காப்பரனாக குடும்பத்தில் மூத்தவன் என்ற ரீதியில் தானே உள்ளதாக, தானே உணர்ந்து தனது ஊரில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பட்டணம் ஒன்றில் வேலை செய்துவருகின்றான். முஹ்மூத் என்ற சிறுவன்.
அவன் தொழில் செய்யும் இடத்தில் அவனுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பணமும் வழங்கப்படுகின்றது. அந்தப்பணத்தில் தனது தயாருக்கும், தனது தங்கைகளுக்கும் என பார்த்துப்பார்த்து ஆசை ஆசையாக அவன் பொருட்களையும், துணிமணிகளையும் வாங்குகின்றான். அவற்றை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு தனது ஊரை நோக்கி பயணமாகின்றான்.

ஊர் எல்லையில் சந்திக்க நேரும் நண்பன்வழியாக தெரியவரும் செய்தி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உள்ளூரில் இருக்கிற காவல்துறை அதிகாரிக்கும் அவன் தாயாருக்கும் திருமணம் நிகழ்ந்த செய்தியை அவனால் நம்பமுடியவில்லை. தாயார்மீது கடுமையான கோபம் கொள்கிறான் அவன். அவளையும் தங்கைகளையும் காப்பாற்றும் பொறுப்பை தானே விரும்பிச் சுமந்துசென்றவன் அவன். தன் தந்தையைப்போல குடும்பப் பாரத்தைச் சுமக்க நினைத்தவன். ஒரு தந்தையாக நின்று அக்குடும்பத்தை அவன் நிலைநிறுத்தவேண்டும். இப்படித்தான் அவன் மனம் நினைக்கிறது. இதனாலேயே அவன் பதற்றம் அதிகரிக்கிறது. சிறுவயதுக்கே உரிய துடுக்குத்தனமும் புரியாமையும் வேகமும் எகத்தாளமும் தந்திரமும் அவனிடம் அவ்வப்போது வெளிப்படாமல் இல்லை. ஆனால் அவையனைத்தும் சில கணங்கள்மட்டுமே நிலைத்திருக்கின்றன. மிக விரைவாகவே மறுபடியும் அவன் தந்தை என்னும் கோட்டுக்குச் சென்றுவிடுகிறான்.

தாயை மணந்துகொண்டு தன் சகோதரிகளுக்குத் தந்தையாக இருக்கிற அதிகாரிக்கும் அவனுக்கும் தொடக்கத்திலேயே மோதல் உருவாகிவிடுகிறது. மெல்லமெல்ல அம்மோதல் வலுப்பதில் சிறுவனுடைய இதயம் வெறியுணர்வால் நிரம்பிவிடுகிறது. ஆவேசத்தின் உச்சத்துக்குப் போன சிறுவன் தனக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமையையும் அதிகாரியின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தந்தைமையையும் ஒரே நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளும் தருணத்தை முன்வைத்துப் படம் முடிவெய்துகிறது. தந்தைமை என்பது ரத்த உறவால் உருவாவதில்லை. சட்ட உறவாலும் உருவாக்கப்படுவதில்லை. அது அனைத்துக்கும் மேலான ஓர் உணர்வு. அரவணைக்கிற உணர்வு. தன்னையே வழங்குகிற உணர்வு. அன்பைப் பொழிகிற உணர்வு. எங்கும் எதிலும் வேறுபாடுகளைக் காணாத உணர்வு. பாதுகாப்பை வழங்குகிற உணர்வு. அதைக் கண்டடையும்போது நம் நெஞ்சம் அடையும் பரவசத்துக்கு அளவே இல்லை.

ஒரு கட்டத்தில் காவல் பணியில் சின்னமாக விளங்கக்கூடிய கைத்துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிற சிறுவனை நகரத்தில் கண்டுபிடித்து கைவிலங்கிட்டு மீண்டும் அழைத்து வருகிறார் அதிகாரியான வளர்ப்புத்தந்தை. ஒரு கைதியாக அவரைத் தொடர்ந்து வரும் சிறுவனுக்கும் அவருக்கும் இடையே சாதாரண உரையாடல் எதுவுமே இல்லை. வளர்ப்புத் தந்தைக்கு தன் தரப்பில் எவ்வளவோ சொல்வதற்கிருந்தும் எதுவும் சொல்வதில்லை. அச்சிறுவனுக்கும் தன் தரப்பில் சொல்வதற்கிருந்தும் அவனும் எதையும் சொல்வதில்லை. எப்போதும் இருவருக்கும் ஒரு முறைப்பு. வெறுப்பு கலந்த பார்வை. எரிச்சல். இகழ்ச்சி புரளும் புன்னகை. இவைமட்டுமே அங்கே நிகழ்கின்றன. அதிகாரி ஏமாந்த தருணத்தில் வாகனத்தோடு தப்பிச் சென்றுவிடும் சிறுவனுடைய முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. குறுக்குவழியில் அவனை மீண்டும் பிடித்துவிடுகிறார் அதிகாரி. ஆனால் வாகனம் பழுதடைந்துவிடுகிறது. பாதைகள் மாறிவிட்டதில் திசை குழம்பிவிடுகிறது. உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட திசையைநோக்கி அவர்கள் பாலைவனத்தில் நடக்கத் தொடங்குகிறார்கள். எங்கும் ஒரே வெயில். நாக்கு வறள்கிறது. ஒரு வாய் தண்ணீருக்கு தவியாய்த் தவிக்கிறது நெஞ்சம். அங்கங்கே


தோண்டிவைக்கப்பட்டிருக்கும் ஊற்றுகள் வற்றிப்போய்க் கிடக்கின்றன. கானல்நீராய்த் தெரியும் ஓடைக்கரைகள் அருகில் சென்றதும் ஏமாற்றத்தைத் தருகின்றன. உணவு இல்லை. நீரும் இல்லை. இருவரையும் களைப்பு வாட்டியெடுக்கிறது. அதிகாரி சட்டென ஒரு முடிவெடுத்தவராக சிறுவனுடைய கைவிலங்கை அவிழ்த்து ஓடிப் பிழைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். தப்பிக்கும் கணங்களுக்காக அதுவரை காத்திருந்த சிறுவன் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகாரியைவிட்டு விலகாமல் அவர் அருகிலேயே நடக்கிறான். திடீரென பாலைவனத்தில் சூறாவளிக்காற்று வீசுகிறது. மண்புழுதி எங்கும் பற்றிப் படர்கிறது. பலமணிநேரம் வீசிய புயற்காற்றைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அதிகாரி கீழே விழுந்துவிடுகிறார். புழுதி தணிந்த கணத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒட்டகங்கள் மந்தையாக மேய்வதைப் பார்க்கிறான் சிறுவன். அவனுக்குள் ஒரு நம்பிக்கை ஊற்று சுரக்கிறது. அந்தப் புள்ளியைக் குறிவைத்து ஓடுகிறான். அவன் கணக்கு தப்பவில்லை. சளசளத்தபடி ஓரிடத்தில் நீர் பொங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருகணம்கூட தயங்காமல் திரும்பி ஓடிவரும் சிறுவன் மயக்கமாகி விழுந்திருக்கும் அதிகாரியின் கைகளைப் பிடித்து நீர்நிலைவரை இழுத்துச் செல்கிறான். கரையில் இருவரும் சரிந்துவிழுகிறார்கள். தண்ணீரின் குளுமை அவன் தவிப்புக்கு இதமாக இருக்கிறது. ஒரு கை அள்ளி பருகக்கூடத் தோன்றாமல் உடல்முழுக்கப் படரும் அந்தக் குளுமையில் ஆழ்ந்தபடி கிடக்கிறார்கள். ஒரு தந்தையின் பாதுகாப்பான கரங்களில் இருப்பதைப்போல அந்தத் தண்ணிரின் கரங்களில் அவர்கள் படுத்திருப்பதாகத் தோன்றுகிறது.
தண்ணீர் வலிமையான ஒரு படிமமாகப் படத்தில் இயங்குகிறது. சுட்டெரிக்கும் பாலைக்கு நடுவே தேடிவருகிறவர்களுக்கு ஆதரவாக ஓடிக்கொண்டிருக்கிறது அந்தத் தண்ணீரோடை. தந்தைமை என்பதும் ஒருவகையான ஆதரவு உணர்வு. வாழ்க்கை என்னும் பாலையில் நோய்வாய்ப்பட்டுவிட்ட பிள்ளைகளைக் காப்பாற்றமுடியாமல் தவிக்கிற பெண்ணுக்கு ஆதரவளிக்கத் தூண்டுகோலாக இருந்தது தந்தைமை உணர்வு. முதல்முறையாக சிறுவன் அதிகாரியைப் புரிந்துகொள்கிறான். அவருக்குள் வெளிப்பட்ட தந்தைமை உணர்வையும் புரிந்துகொள்கிறான்.

“சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven)

அலி எனும் சிறுவன் தனது தங்கையின் கிழிந்த சப்பாத்தினை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழங்கு வாங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே சப்பாத்தினை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் சப்பாத்தினை எடுத்துச் செல்கிறான்.
சப்பாத்து தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கை ஜாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.


அண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் சப்பாத்தினை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து சப்பாத்தினை வாங்கி அணிந்து சென்றால் சப்பாத்து தொலைந்ததை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.
தனக்குப் பொருந்தாத அண்ணனின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. மற்ற குழந்தைகளின் பளபளப்பான காலணிகள் அவளிடம் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தை மனதில் தோற்றுவிக்கிறது. மேலும் ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் சப்பாத்தினை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.


அப்படியும் வகுப்பு தொடங்கிய பிறகே ஒவ்வொரு நாளும் அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின்
பரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.
இதனிடையில் தொலைந்து போன தனது சப்பாத்தினை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் என்பது தெரிந்ததும் அண்ணனும் தங்கையும் ஏதும் பேசாமல் மவுனமாக வீடு திரும்புகிறார்கள்.
இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் மூன்றாவதாக வருகிறவர்களுக்கு பரிசு ஒரு ஜோடி சப்பாத்து என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் மன்றாடி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் மூன்றாவதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் சப்பாத்தினை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜதை சப்பாத்து வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.


பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு சப்பாத்தை கொடுக்க ஓடிவரும் சத்தமும், சப்பாத்து தொடர்பான அவர்களது உரையாடலும் ஒலிக்கிறது. இறுதியில் போட்டியில் மூன்றாவதாக வருவதற்குப் பதில் முதலாவதாக வருகிறான் அலி. தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் மூன்றாவதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான்;. மூன்றாவதா..? முதல்பரிசே உனக்குத்தான் என்கிறார் ஆசிரியர். அந்த சிறுவனின் முகம் வாடிப் போகிறது. ஏக்கத்துடன் சப்பாத்துப்பரிசை பாக்கின்றான் அனால் அவனுக்கு தங்கப்பதக்கமும், பெரிய வெற்றிக்கோப்பையும் பரிசளிக்கப்படுகின்றது.


வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் தொங்கிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.
அலியின் சப்பாத்து இப்போது நைந்து கிழிந்து போயிருக்கிறது. தொட்டியின் அருகே அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப் பந்தயம் அவன் கால்களில் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வலியும் ஏமாற்றமும் ஒரு சேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.

“த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise)

டெஹ்ரானில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் எட்டு வயதான மொகமது விடுமுறை மாதங்களைத் தன் பாட்டியோடும் இரண்டு சகோதரிகளுடனும் கழிக்க ஆவலோடு இருக்கிறான். விடுதியில் உள்ள சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வருகின்றனர். மாலை வேளையில் விடுதி அமைதியாக இருக்கிறது. மொகமது மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான். வெகு நேரம் கழித்து மொகமதுவின் அப்பா வருகிறார். பள்ளி நிர்வாகத்திடம், மொகமதுவைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடியாது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் அவனைத் தன்னோடு அழைத்துச் செல்கிறார்.

தங்களுடைய மலைக்கிராமத்தை அடைய அவர்கள் வெகுதூரம் பயணம் செய்கிறார்கள். மொகமது பேரூந்தில் பயணம் செய்யும் போது, தனது அப்பாவிடம் சன்னலுக்கு வெளியே என்ன காட்சிகள் தெரிகின்றன எனக் கேட்கிறான். அவனுடைய அப்பா வெறுப்பாக பதில் சொல்கிறார்.
அவர்களின் கிராமம் வருகிறது. நடக்கும் போதே தனக்குப் பழகிய இடம் வருதுவிட்டதை அறிந்த மொஹமத் உற்சாகமாகத் தனியே ஓடுகிறான். ஊர் எல்லையைத் தொட்டதுமே 'பாட்டி' , 'பாட்டி' என உரக்கக் கூப்பிடுகிறான். அவனுடைய இரு சகோதரிகளும் இவனை வரவேற்க ஒடி வருகின்றனர். மொகமது சகோதரியின் முகத்தைத் தடவி பார்த்து ''போன தடவ விட இப்ப வளர்ந்திருக்க'' என்கிறான்.
மொகமகவும், சகோதரிகளும் பாட்டியைப் பார்க்கத் தோட்டத்திற்கு செல்கின்றனர். பாட்டி பார்க்கும் போது தன்னை மரத்தின் பின்னால் ஒளித்துக் கொண்டு குரல் கொடுக்கிறான். மொகமத் இதைப் பார்த்த பாட்டியின் மனது நெகிழ்கிறது. மொகமதுவின் விடுமுறை நல்ல முறையில் செல்கிறது.
மொகமதுவின் அப்பா தன்னுடைய மனைவி இறந்த காரணத்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு மொகமது தடையாக இருப்பதனால் மரத்தச்சு செய்யும் ஒருவரிடம் மொகமதுவை சேர்க்க நினைக்கிறார். மரத் தச்சு செய்பவரும் கண்பார்வை இழந்தவர் என்பதனால் இதைக் காரணம் காட்டி பாட்டியிடம் சம்மதம் கேட்கிறார். ''உன்னுடைய சுயநலத்திற்காக படிக்க விரும்பும் பையனின் வாழ்க்கையைக் கெடுக்காதாதே'' என பாட்டி கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாள்.


மொகமது பிடிவாதம் செய்து உள்ளூரில் இருக்கும் சகோதரிகளின் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான். பள்ளியில் அவனை அனைவரும் அன்போடு வரவேற்கின்றனர். மொகமதுவின் 'பிரெய்லி' கல்வி முறையும், வாசிப்பும் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். மற்றவர்கள் வாசிப்பதைத் திருத்துகிறான் மொகமத். ஆசிரியர் மொகமதுவை வாசிக்கச் சொல்கிறார். எந்தத் தடையுமில்லாமல் வாசிக்கிறான். பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் மொகமதுவை சுற்றிக் கொள்கின்றனர். இதனைத் தூரத்தில் இருந்து அவன் அப்பா பார்க்கிறார். கோபத்தோடு பாட்டியிடம் சண்டை போடுகிறார்.
மொகமதுவின் ஆர்வத்தைக் கெடுக்க வேண்டாமென்று பாட்டி கெஞ்சுகிறாள்.

ஒருநாள் பாட்டி சந்தைக்கு சென்றிருக்கும் நேரத்தில் மொகமதுவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அப்பா. கடைக்குச் சென்று வரும் பாட்டி, முகமது வீட்டில் இல்லை என்றதும் புரிந்து கொள்கிறாள். முகம் இறுக்கமடைகிறது.
மொகமதுவும், அவன் அப்பாவும் பயணம் செய்கின்றனர். தான் வேலை செய்யும் நிலக்கரி தொழிற்சாலையில் மொகமதுவை உட்கார வைக்கிறார் அவன் அப்பா. மொகமது சுற்றிலும் கேட்கும் பறவைகளின் ஒலி, குதிரையின் கனைப்புச் சத்தம், நீரின் சலசலப்பு ஒலிகளை தன்னுள் மொழிபெயர்த்துக் கொள்கிறான்.
வேலை முடிந்ததும் மொகமதுவும் அவன் அப்பாபவும் மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அப்பா அழைத்துச் செல்லும் பாதையில் கேட்டும் ஒலிகளை வைத்து இது தன்னுடைய கிராமத்திற்கு செல்லும் பாதை இல்லை என தெரிந்து கொள்கிறான். பாட்டியிடம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் மொகமதுவை பலவந்தமாக அழைத்துச் செல்கிறார் அவன் அப்பா.
மரவேலை செய்பவரிடம்; மொகமதுவை விட்டு கிளம்பிச்செல்கிறார். மரவேலை செய்பவர் மொகமதுவிகம் தானும் அவனைப் போல பார்வை இல்லாதவன் தான் என ஆறுதல் சொல்கிறார். மொகமது அழுகிறான். ''ஏன் அழுகிறாய்'' என கேட்கிறார் அவர்;.


"எனக்கு கண் தெரியாத்தால் யாரும் என்னை விரும்புவதில்லை. என் பாட்டிக்குக் கூட என்னைப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆசிரியர் ''கண்பார்வையற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார். நான் கேட்டேன், பிறகு ஏன் கருணையுள்ள அவர் பார்வையற்றவர்களை படைக்கிறார்? அதற்கு ஆசிரியர், ' ஏனென்றால் கடவுளும் கண் பார்வையற்றவர்தான் ' என்கிறார். கடவுளை நாம் நம் விரல் நுனியில் அறிய முடியும் என்று சொன்னார். அதிலிருந்து நான் விரல் நுனியின் ஸ்பரிச்த்தில் கடவுளை அறிகிறேன். என் மனதில் உள்ள இரகசியங்களைக் கூட அவரிடம் சொல்கிறேன்" என்று அழுதுகொண்டே சொல்கிறான் மொகமத். மரவேலை செய்வர் சிறிது நேர மேளனத்திற்குப் பிறகு, "உங்கள் ஆசிரியர் சொன்னது சரி தான்" என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார்.


இங்கு பாட்டிக்கும், அப்பாவுக்கும் விவாதம் வருகிறது. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்புகிறாள். மொகமதுவின் அப்பா போக வேண்டாமென்று தடுக்கிறார். ஆனாலும் கிளம்பி விடுகிறாள் பாட்டி. போகும் வழியில் மயக்கமாகி விழும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா.
உடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறார் மொகம்துவின் அப்பா. பாட்டி அமைதியாக தன்னுடைய நகைகளை எடுத்துக் கொடுக்கிறாள். அன்றிரவே இறந்து போகிறாள்.
மரவேலை செய்பவர் மொகமதுவிற்கு வேலை கற்றுது தருகிறார்- அங்குள்ள சூழலோடு தன்னை இணைத்துக் கொள்கிறான் மொகமத். பாட்டியின் இறப்பைத் தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்து கொள்கிறான் மொகமது. வருத்தத்தில் அழுகிறான் . பாட்டியின் மரணத்தை துர்சகுனமாக நினைத்து மொகமத் அப்பாவின் திருமணத்தை நிறுத்துகின்றனர். மனம் நொந்து போய் மொகமதுவைத் தன்னோடு அழைத்துக் கொள்ள வருகிறார் அவனுடைய அப்பா.
இருவரும் மௌனமாகவே பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது எதிர்பாராத விதமாக பாலம் உடைந்து அற்றில் விழுகின்றான் மொகமத். ஆற்றியல் அவன் அடிததுச்செல்லப்படுகின்றான், அவனைக்காப்பாற்ற அவனது தந்தையும் அற்றில் குதித்து அடித்துச்செல்லப்படுகின்றார். இறுதியில் அவர் நினைவினை இழக்கின்றார். கண் விழிக்கும்போது ஒரு கடற்கரை ஓரம் அவர் ஒதுங்கி இருப்பதை உணர்கின்றார். சுற்றும் முற்றும் பார்த்து மொகமத் எங்காவது தென்படுகின்றானா என அராய்கின்றார், தூரத்தில் அவன் கரையொதுங்கி இருப்பது கண்டு ஓடிச்சென்று அவனை வாரி அணைத்து எழுப்பி பார்க்கின்றாh,; அவனிடம் இருந்து ஒரு சலனமும் இல்லை. அவனை தன் மார்போடு இறுக்கி அணைத்து கதறி அழுகின்றார். அந்த வேளை பறவைகளின் ஒலிகள் கேட்கின்றன. அந்த சத்தங்களையும், சூழலில் நிலவிய தட்பவெப்பத்தையும் கிரகித்து அவனது விரல் நுனிகள் அசைவதுடன் இந்த திரைப்படம் நிறைவு பெறுகின்றது

Sunday, June 13, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (13.06.2010)


சுப்பர் ஸ்ரார் ரஜினிக்கு ரோயல் சலூட்.
இலங்கையில் நடந்த சர்வதேச இந்தியன் பிலிம் அக்கடமியின் விருது வழங்கும் விழா முழு தோல்வியில் முடிந்தது என்றுதான் கூறவேண்டும்.
இந்த நிலையில் தமிழக நடிகர்கள் தவிர தென்னிந்திய நடிகர்கள் மற்றும் அமிதாப் உட்பட பல முக்கியமான பிரபலங்கள் இலங்கைக்கு வராமல் தவிர்த்துக்கொண்டமைக்கு ரஜினிகாந்த் வழங்கிய அலோசனைதான் முக்கிய காரணம் என விபரமறிந்த வட்டாரங்கள் கூறிவருகின்றன.
அமிதாப் முன்னதாக விழாவில் கலந்துகொள்ள இருந்தபோதும் அவர் ரஜினியுடன் இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே தனது முடிவினை மாற்றிக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதை எப்படியோ அறிந்துகொண்ட இலங்கை அரசாங்க வட்டங்கள், ரஜினியுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த முயன்றதாகவும், ஒரு கட்டத்தில் இலங்கை அரசின் உச்ச நபரே தொடர்புகொண்டதாகவும் இருந்தாலும் ரஜினி அந்த தொடர்பிலேயே பிடி படாமல் தவிர்த்துவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் இத்தனை தீக்குளிப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என எத்தனையோ நடத்தியும்கூட அதனை அசட்டை செய்யாமல் ஏழனப்படுத்திவிட்டு, ஈழத்தமிழர்களை கொன்ற சிறி லங்கா அரசாங்கம் மீது ரஜினி உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாக இரசிகர் வட்hரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ தனது செல்வாக்கை வைத்து ரஜினி அமிதாப் உட்பட, தென்னிந்திய நடிகர்கள், திரைப்படத்துறையினரையே இலங்கை செல்லாமல் தடுத்தள்ளார் என்றால், இதே ஓராண்டின் முன்னால், தன்னை உலகத்தமிழித்தின் தலைவன் என்று தன்னை சுற்றி உள்ளவர்களை கூறவிட்டு மகிழும் பழுத்தவர் நினைத்திருந்தால் அந்த அவலத்தை நிறுத்தியிருக்கமுடியாதா என்ன? அதில் அவர் நடித்த உச்சக்கட்ட நாடகங்கள்வேறு உலகத்தமிழரையே அவர்மேல் காறித்துப்பவைத்துவிட்டது.
ஒரு தமிழ்ச்சமுதாயத்தையே கண்முன் காவுகொடுத்துவிட்டு, தமிழுக்கு மாநாடு எடுக்கிறாராம்! அதுக்குப்பெயர் செம்மறியின் மாநாடு!! மன்னிக்கவும் செம்மொழி மாநாடாம்!!! வாழ்க தமிழ்!!!

நாகபூஷணின் உற்சவமும், திணறும் குறிகட்டுவானும்

யாழ்ப்பாணத்தின் தீவுகளில் வராற்றுப்புகழும், தெய்வீகப்பிரசித்தமும் கொண்ட நயினாதீவில் உள்ள 64 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும், நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மஹோட்சவம் நேற்று (12.06.2010) தொடக்கம் 15 நாட்கள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் வரும் மக்கள் தீவகப்பயணத்தைமேற்கொண்டு குறிகாட்டுவான் என்ற ஏறுதுறையில் இருந்து லோஞ்சுகள் என அழைக்கடும் படகுகளிலேயே நயினாதீவினை அடையமுடியும். இந்த நிலையில் இம்முறை ஏ-9 பாதை திறக்கப்பட்டதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வரும் காரணத்தினாலும், அதே வேளை தென்னிலங்கை சிங்கள சுற்றுலா பெருமக்களின் வருகையாலும், மக்கள் கூட்டம்கூடி குறிகாட்டுவான் திணறுகின்றது.
இத்தனை ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்திற்கு 5-10 வரையான படகுகளே சேவையில் உள்ளதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்தவண்ணம் உள்ளனர்.
நேற்றைய தினம் படகு கிடைக்காமல் பெருந்தொகையான மக்கள் ஏமாற்றத்துடன் தரிசனம் கிடைக்காமல் திரும்பிவந்ததினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தை உடனடியாக ஆராய்ந்து உரிய நடைமுறைகளை எடுப்பார்களா பார்ப்போம்.

கொச்சிக்கடை மற்றும் பாசையூர் அந்தோனியார் பவனி.

ஜூன் மாதம் 13 ஆம் நாள், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மற்றும் யாழ்ப்பாணம் பாசையூர் அந்தோனியார் தேவாலயம் ஆகியவற்றின் அந்தேரியார் திருப்பவனி இடம்பெறுவது வழமை. இந்த தினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பகுதியே பெருவிழாக்கோலம் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். கொழும்பு நகர மக்கள் பெரும்பாலும், மதபேதங்கள் இன்றி இந்த விழாவில் கலந்துகொள்வது வழமையான ஒரு நிகழ்வாகும்.
அதேபோல யாழ்ப்பாணத்தில் மிகப்பழமை வாய்ந்ததும், பிரபல்யமானதுமான பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தின் அந்தோனியார் பவனியும் இன்று இடம்பெறுகின்றது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைக்குப் பின்னர் கடந்த 22 வருடங்களின் பின்னர் இந்த தேவாலயத்தில் இருந்து சுண்டிக்குளி வழியாக அந்தோனியார் பவனி வர இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடிக்கடி தென்படும் சிறு நில அதிர்வுகள் சொல்லும் செய்தி என்ன?

நேற்று நள்ளிரவு தாண்டியவேளை கொழும்பின் பல பாங்களிலும் நில அதிர்வுகளை உணரக்கூடியதாக இருந்ததாக அறியமுடிகின்றது. அதன் பின்னர் இந்து சமுத்திரத்தின் கடலடித்தளத்தில் 7.7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று எற்பட்டதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நள்ளிரவு தாண்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது “நியூஸ் அலேட்” குறுஞ்செய்திச்Nவை கூறியது.
அதன் பி;ன்னர் இலங்கைக்கு சுனாமிவரும் சாத்தியங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கேள்வி என்னவென்றால்! நான் நினைக்கின்றேன் 1999 ஆம் ஆண்டுமுதல் கொழும்பிலும் மலையகத்தின் சில பாகங்களிலும் இதுபோன்ற கிட்டத்தட்ட 6 தரம் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த சிறிய நிலநடுக்கம் ஒவ்வொரு தடவையும் சொல்லிச்செல்லும் செய்தி என்ன? இது குறித்து அரசாங்கமும், ஆய்வாளர்களும் என்ன ஆரோக்கியமான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஒரு பாரிய நில நடுக்கம் ஒன்றுக்கான முன்னெச்சரிக்கையாகவே இது தெரிவதாக பலரும் சொல்வதை உரேயடியாக ஒதுக்கிவிடமும் முடியாது. கொழும்பில் தொடர்மாடிக்கட்டங்கள் அதிகம் என்றாலும், ஒரு தொடர்மாடிகூட நிலநடுக்கத்திற்கு அமைவான முறையின் பிரகாரம் கட்டப்படவில்லை என பொறியிலாளர் ஒருவர் அண்மையில் ஊடகம் ஒன்றில் எச்சரித்திருந்தமையும் அடிவயிற்றில் புளியை கரைக்கின்றது.

KIWI


ஷர்தாஜி ஜோக்
நம்ம ஷர்தாஜியுடன் உருகி உருகி ஒருபெண் நெடுநாட்களாக பேசிவந்தார். ஒருநாள் தைரியம் வந்தவராக நம்ம ஷர்தாஜி அந்தப்பெண்ணிடம்….
என் உயிர்த்தோழியே…இன்று இரவு நீ எனது வீட்டுக்குவா…வாசல்க்கதவைத்திறந்தே வைத்திருப்பேன்…பயப்படவேண்டாம் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றார்…..
இரவு அந்தப்பெண் ஷர்தாஜியின் வீட்டுக்கு வந்தாள்.. ஷர்தாஜி சொன்னது உண்மைதான் வீட்டில் எவருமே இருக்கவில்லை.

Wednesday, June 9, 2010

“வோட்டர் கேட்”… பேனா முனையினால் உலகத்தலைவரையே வீழ்த்திய கதை.


கால் ஃபேர்ன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட், இந்த இருவரையும் இன்றைய ஊடகவிலாளர்கள் மட்டும் அல்ல, செய்தித்துறை, எழுத்துத்துறை, பதிவுலகத்துறையில் இருக்கும் அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
தமது பேனாமுனை என்ற ஆயுதத்தால் ஒரு மிகப்பெரிய வல்லரசின் தலைமை நாக்காலியையே சரித்துவிழுத்திய சரித்திர நாயகர்கள் இவர்கள்.
ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு என உலகிற்கு புடம்போட்டுக் காட்டியவர்கள் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர்.

வோட்டர் கேட் ஊழல்

அமெரிக்காவின் வரலாற்றிலேயே வோட்டர்கேட் ஊழல் மிக முக்கியமான ஒன்றாகும்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1968 முதல் 1974 வரை இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55 வயதில் 1968 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1972 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வேளையில் 1973ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர் ஜனாதிபதி நிக்ஸன் மேல் குற்றம்சாட்டி, சில ஆதாரங்களுடன் அமெரிக்காவையே திடுக்கிடவைத்த செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். என்னதான் பெரிய ஜனநாயக நாடு என்றாலும் அந்த நாட்டின் தலைவர்மேல், ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தி ஒரு செய்தியை வெளியிடுவதாக இருந்தால் இந்த இரண்டுபேரும் எத்தனை நெருக்குவாரங்களை சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இது குறித்து பின்னாளில் நிக்ஸனே தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.

சரி என்ன இந்த வோட்டர்கேட்? அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்.
தேர்தல் வேளையில் இங்கு இந்த எதிர்க்கட்சியின் தலைமையகம் இருந்த வோட்டர்கேட் மாளிகையில் நிக்ஸனின் பணிப்பின் கீழ், மிக இரகசியமான முறையில், நவீன தொழிநுட்பமுடைய ஒலிப்பதிவு கருவிகளைப்பொருத்தி, அங்கு எதிர்கட்சியினரின் உரையாடல்களை, மற்றும் அவர்களின் செயற்திட்டங்களை, கள்ளத்தனமாக அறிந்துகொண்டு, அவர்களின் தேர்தல் விபரங்கள் பற்றி முற்றுமுழுதாக அறிந்துகொண்டு, தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பதே இந்த இரண்டு பத்திரிகையாளர்களாலும் சில ஆதாரங்களுடன் எழுதப்பட்ட திடுக்கிடவைத்த செய்தியாகும்.


இந்த விவகாரம் 1974இல் பூதாகரமானது, அவரது கட்சியினரே, எதிர்கட்சியுடன் சேர்ந்து நின்று இந்த மோசடிகுறித்து விவாதிக்கும் நிலை உருவாகியது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோசடிக்குற்றச்சாட்டை நிக்ஸன் மறுத்தேவந்தார். இருந்தாலும், நாளுக்கு நாள் ஆதாரங்கள் வலுப்பெறத்தொடங்கியதுடன் பிரச்சினை மிகப்பெரிய நிலைக்குச்சென்றது.
இந்த நிலையில் இதுகுறித்து பூர்வாங்க விசாரணைகளை நடத்தி அமெரிக்க செனட் குழு “நிக்ஸன் குற்றவாளி என்றும்” அவரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவரலாம் எனவும் ஆணையிட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "நான் குற்றவாளி" என்றும் ஒப்புக்கொண்டார்.

தான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, "நான் பதவியில் இருந்து இராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்" என்று அறிவித்தார்.
உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.
நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். "பதவியை விட்டு நீங்களே விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்" என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக இராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
9.8.1974 அன்று அதிகாலை 6.30 மணிக்கு நிக்சன் தொலைக்காட்சியில் தோன்றி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு இராஜினாமா ஏற்கப்பட்டது.

நிக்ஸன் பதவி விலகியவுடன் அதற்கு காரணமாக இருந்த செய்தியார்களான கால் ஃபேன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட் அகியோரின் புகழ் எங்கும் பரவியது. அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய பல செய்திகள், புலனாய்வுச்செய்திகள், மற்றும் விபரணங்களை வாங்க பல நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றன.
ஒரு விதத்தில் நிக்ஸனால் இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால் பாவம் நிக்ஸன் பதவி விலகியதன் பின்னர் கலிபோர்னியாவில் வசித்த அவரால் அரசாங்க வரியைக்கூட கட்டமுடியாமல் போனது.

கால் ஃபேர்ன்ஸ்ரன்

1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வோஷிங்டனில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு யூதராவார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கல்வி கற்றாலும் இவர் அதை பூர்த்தி செய்து பட்டம் பெற்றிருக்கவில்லை.
பின்னர் ஒரு ஊடகவிலாளராகவும், எழுத்தாளராகவும் அவர் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட்; பத்திரிகையில் இவரும் ஃபொப் வூட்வேர்ட்டும் இணைந்து எழுதிய வோட்டர்கேட் ஊழல் மோசடி பற்றிய செய்தியே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அதைத்தொடர்ந்து அவருக்கு உச்ச விருதான புலிச்சர் விருதும் அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் பின்னர் ஒரு விடயம் சம்பந்தமாக ஆணித்தரமாக இவரது கட்டுரை ஒன்று வெளியானமையினைத்தொடர்ந்து சி.ஐ.ஏ.யினரின் விசாரணைகளுக்கு இவர் உட்படுத்தப்பட்டிருந்தார்.
இருந்தபோதிலும் தொடர்ந்தும் தனது எழுத்துப்பணிகளை தொடர்ந்துகொண்டிருக்கும் அவர் வினிட்டி ஃபெயார் என்ற சஞ்சிகையினை வெளியிட்டுவருகின்றார்.

ஃபொப் வூட்வேர்ட்

ரொபேர்ட் உப்ஷர் வூட்வேர்ட் என்ற இயற்பெயர்கொண்ட இவர் 1943ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ஆம் திகதி பிறந்தவராவார். ஜாலே பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர் ஊடகத்துறையில் பிரவேசம் செய்தார்.
பல்வேறு ஊடக நிறுவனங்களில் தொழிலாற்றிவந்த இவர் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், கால் ஃபேர்ன்ஸ்ரன் உடன் செய்தி வழங்கிய வோட்டர்கேட்டே இவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
1973,2002 ஆம் ஆண்டுகளில் இவர் புலிச்சர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த ஊடகவிலாளருக்கும் அமையாததுபோல முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸை ஆறு தடவை இவர் பேட்டிகண்டுள்ளார். அதேவேளை Bush at War (2002), Plan of Attack (2004), State of Denial (2006), and The War Within: A Secret White House History (2006–2008) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

Sunday, June 6, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (06.06.2010)

அம்பானி சகோதர யுத்தம் சமரசத்தில்!

இந்திய ரிலைன்ஸ் குழுமத்தை உருவாக்கிய த்ருபாய் அம்பானியின் மறைவுக்குப்பினர் அவரது இரண்டு புதல்வர்களான மகேஸ் அம்பானி மற்றும் அணில் அம்பானி ஆகியோரிடையே சொத்து பாகப்பிரிவினை தொடர்பிலும் முக்கியமாக முகேஸ் அம்பானி வசம் உள்ள பெற்றறோலிய சுத்திகரிப்பு ரிலைன்ஸ் இன்ரஸ்ரி தொடர்பாகவே இருவரிடமும் பிணக்குகள் வலுப்பெற்று நீதிமன்றம் வரை செல்லும் நிலைமைக்கு கொண்டு சென்றன.

இந்நிறுவனம் கிருஷ்ணாகோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டு பிடித்து உள்ளது.
இங்கிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவை அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தனது ஆர்என்எஸ் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று அனில் அம்பானி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இரு சகோதரர்களும் சமரச தீர்வுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையிலேயே சகோதரர்கள் இருவரும் சந்தித்து மனம் திறந்து பல மணித்தியாலங்கள் கலந்துரையாடியதாகவும், இந்த சந்திப்புகளில் அவர்கள் சமரச முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சகோதரர்கள் பிரச்சினையினை தீர்ப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல மக்கிய பிரமுகர்கள் பெரும் சிரத்தை எடுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் நான்கு பதிவர்கள்
கடந்த சனிக்கிழமை (29.05.2010) அன்று (அதற்கு முதலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றது) பதிவர் சுபாங்கன், பதிவர் பாலவாசன், பதிவர் கூல்போய், மற்றும் அடியேன் ஜனா ஆகியோர் சந்தித்து பல விடயங்கள் பற்றியும் கருத்து பகிர்தல்களையும், தமது பதிவுலக, பிற அனுபவங்கள் பற்றியும் சுமார் 3 மணிநேரம் அருமையான ஒரு சந்திப்பினை நிகழ்த்தும் பாக்கியம் கிடைத்தது.
முக்கியமாக கருத்துப்பகிர்வுகள், இலக்கியம், இசை, பிரபல எழுத்தாளர்கள், குறும்படங்கள், பதிவுலகம், கற்றல் போன்ற பல்வேறு துறைகளிலும் மிகச் சுவாரகசியமான ஒரு கலந்துரையாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.
பாலவாசனின் குறும்பட ஆர்வத்தை நான் குறிப்பெடுத்துவைத்துள்ளேன்.
மொத்தத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான அதேவேளை பல விடயங்களை பகரிந்துகொள்ளும் ஒரு சந்திப்பாக இது இருந்தது என்பதில் பெரு மகிழ்ச்சியே.

த்ரீ இடியற்சிற்கு 11 விருதுகள்

சர்வதேச இந்தியன் பிலிம் அக்கடமியின் திரைப்பட விழா இலங்கையில் பாரிய சர்ச்சைகளின் மத்தியில் இடம்பெற்றமை யாவரும் அறிந்ததே. விழாவில் கடந்த ஆண்டு வெளியான இந்தி படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆமிர்கான த்ர்P இடியட்ஸ் படம் 11 விருதுகளை பெற்றது.
சிறந்த படம், சிறந்த நடிகை, குணச்சித்திர நடிகர், சிறந்த இயக்குனர், திரைக்கதை உள்பட பல பிரிவுகளில் இப்படம் விருதுகளை தட்டிச் சென்றது.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும். வெற்றிக்காக கற்பதை தவிர்த்து, திறமையை வளர்த்துக்கொள்ள கற்றுத்தர வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம் இது. இதில் நடித்த கரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. ராஜ்குமார் ஹிரானி, சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். “பா” படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

FOR THE BIRDS


மொழி கடந்த இசை.
எங்கள் வயதினை ஒத்தவர்களின் மொண்டசறிக்காலங்களில்; வந்து மொழி புரியாவிட்டாலும் எங்கள் காதுகளை தன்பக்கள் இழுத்த ஒருபாடல் “குர்பாணி” திரைப்படத்தில் வரும் “ஆப் ஜய்ஸா கொய்மே” எனத்தொடங்கும் ஜீனத் அமன் பாடல்காட்சியில் தோன்றி அசத்தும் அந்தப்பாடல். அந்த இசையின் லாவகம் அப்படியே சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. இன்றும் தெவிட்டாத அந்த பாடல் பல ரீமிக்ஸ்களாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
அன்றைய நாட்களில் இலங்கை வானொலியிலக்கூட இந்த பாடல் அதிகமாக ஒலித்த ஞாபங்கள் இன்றும் மனதுக்குள் தாலாட்டும்.


சர்தாஜி ஜோக்
நம்ம பன்டாசிங் திருமணத்திற்கு முதல் நடந்த சம்பவம் இது அவரது மனைவியை அப்போது (அவரது காதலி) அவர் காதலித்துக்கொண்டிருந்தகாலம். ஒருநாள் மாலை ஆத்திரத்துடன் போன்போட்டு அவரது காதலியை நம்ம ஷர்தாஜி பேசிய வார்த்தைகள் இவை
“நீ ஒரு ஏமாற்றுக்காரி….மோசக்காரி…என்னை நீ முட்டாளாக்கிவிட்டாய்…
இன்று பதிவுத்திருமணம் செய்துகொள்வோம் என்று நீதானே சொன்னாய்…இன்று அதிகாலையில் இருந்து மாலை வரை தபால்நிலையத்தில் நீவருவாய் என எவ்வளவு நேரம் காத்திருந்தேன்..

Saturday, June 5, 2010

சிலோன் பொப் இசைப்பாடல்கள் (மீள்பதிவு)


பொப் எனும் இசைவடிவம் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.
இந்தவகையில் இலங்கை 1505 அம் அண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658 வரை ஆளப்பட்டது. அந்தக்காலங்களில் இலங்கை மக்களின் சமயங்களான இந்து, பௌத்த சமயங்களைச்சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டும் என ஆணைபிறப்பித்திருந்தனர் போத்துக்கேயர். இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள் கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என கேட்கப்பட்டனர். அதன்பொருட்டு இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்த இடங்களில் தேவாலயங்கள் எழுப்ப்பட்டது. அப்போதைய இலங்கை மக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்த போத்துக்கேயர், தேவ ஆரதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப் இசையினை பயன்படுத்த தொடங்கினர், இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்தியாவரத்தின் சாயலே இன்றும் இலங்கையின் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.

அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சில தமிழ் பொப் இசைப்பாடல்கள் செவிமடுக்கப்பட்டுவந்துள்ளன. அந்தக்காலங்களில் பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களை பாடிவந்திருந்தனர்.
“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”
அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”
என்று ஆரம்பிக்கும் பாடலும்,
அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பதுபோன்ற
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சினோரே!
போத்திபொத்தி பிடி அந்தோனி!!
கூவிக்கொண்டோடுது சினோரே”
போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயே தமிழில் உருவாகிய பிரபலமான பாடல்கள். ஆகவே இது போன்ற பல பாடல்கள் கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன.
அதன்பின்னர் அங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேற்கத்தேய நாகரிகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறை வந்ததும், இசை வடிவத்திலும் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின, ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம், போன்ற வாத்தியங்கள், இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேற ஆரம்பித்தது.
குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்கள், விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்ற நிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்ற அட்டத்தின்போதும் இந்த பொப் இசை மேற்கத்தேய இசைக் கருவிகளின் பக்கவாத்தியத்துடன் புது உத்வேகத்துடன் அரங்கேறின. அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும். திருமணம் போன்ற வீட்டு விசேசங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன.

சுதந்திரத்தின் (1948) பின்னரான
காலங்களில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல புதிய இசைக்குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள். இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக்குழுக்களால் இசைக்கப்பட்டுவரத் தொடங்கியது. இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால் 1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக்கூடியதாக இருந்தது.

அதன் பின்னர் இலங்கையிலும் நிகழ்ந்த பல அரசியல்க்குழப்பங்கள், 58 கலவரங்கள், சிறிமா ஆட்சியில் பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப்பொப் இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று.
1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக்கொள்கையினை கொண்டுவந்து, அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி, மேலைநாடடு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்துசேர்ந்தபோது, தமிழ் பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறுகொண்டெழுந்து என்றும் இல்லாத சிகரத்தை அடைந்தது.


ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும்.
“சின்னமானியே உன் சின்னமகள் எங்கே” என்ற ஏ.ஈ மனோகரனின் பாடல்,
“சுராங்களி சுராங்களி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,
“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,
“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றன.
அவை இலங்கையில் மட்டும் அன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை எற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின.
நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு, ஸ்டெனி சிவாநந்தன், அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வர பொப்பிசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத்தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.

அன்றைய காலங்களில் இலங்கை பொப் இசைகள் நகைச்சுவை, இலங்கை மண்ணியில்ப்பண்பு, இலங்கை மொழிவழக்கு, என்பவற்றை மட்டும் இன்றி சமுதாய சீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது. இதற்கு நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே என்ற பாடலை சொல்லலாம். அந்தக்காலங்களில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்ற பேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக மாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும், பல்கலைக்கழகங்களில் இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாக இருந்தனர். இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம் போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது.

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலி மூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமையாகும்.

பின்னர் இந்த இலங்கை பொப் இசைப்பாடல்கள் தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாகிற்று. 1977 அம் அண்டு, “அவர் எனக்கே சொந்தம்”என்ற படத்தில் “சுராங்கனி, சராங்கனி” என்ற பாடலை இளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப் இசையை ஒட்டியதாக, “அண்ணே அண்ணே சிப்பாயண்ணே”, “உப்புமா கிண்டிவையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள்கலவை இசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை பார்த்திருக்க முடியும்.
எனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப்பிரச்சினைகள், கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்திய சினிமா பாடல் மோகம் என்பன போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கை பொப் பாடல்கள் குறைந்துகொண்டு சென்று அழிவுப்பாதையில் செல்கின்றது.

இதற்கு உயிர்கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை காத்துவைக்க அங்குள்ள எந்த அரச, தனியார் வானொலிகளுக்கும் வக்கத்துப்போய்விட்டது.எனினும், மேற்படி பொப் இசையில் சிங்களவர்கள் அதி சிகரத்தை அடைநதுள்ளனர். சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களை கொடுத்து அதை ஊக்குவிக்கின்றன.

எது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்துவாழும் மேற்படி பொப்பிசை திலகங்களை தொடர்புகொண்டு வெளிநாடகளில் வாழும் தமிழர்களாவது தமது இலங்கைத் தமிழர்களின் தனிச்சிறப்பான பொப் இசையினை வழங்க முயற்சி செய்யவேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails