Wednesday, September 28, 2011

வலைப்பதிவு எழுதுவதால் ஏதாவது நன்மை இருக்கா?


இணயத்தின் வாயிலான வலைப்பதிவுகள் என்பது நாளாந்தம் அதிகரித்துக்கொண்டு செல்வதுடன், அதை கவனித்து ஈர்க்கப்படுவோரின் தொகையும் அதிகரித்துக்துக்கொண்டே செல்கின்றது.
இன்றைய எழுத்துலகத்தில் வலைப்பூக்கள் ஒதுக்கப்படமுடியாத ஒரு இடத்தினை பெற்றுவிட்டன என்பதுகூட மிகையாகாது. பல வலைப்பதிவர்களும் பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து பல பதிவுகளை இடுகின்றார்கள், மிக காத்திரமான பதிவுகள் முதல் ஜனரஞ்சகப்பதிவுளையும், இலக்கியம், விளையாட்டு, சினிமா, உலக நடப்புக்கள், முகாமைத்துவம், மருத்துவம், என பல்வேறு பட்ட துறைகளிலும் பதிவுகளை இட்டுவருகின்றமை வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.

வலைப்பதிவுகள் அதிகரித்தமையினாலும், வலைப்பதிவர்களின் அதிகரிப்பினாலும், வாசிப்பு என்பது தானாகவே கூடியுள்ளதுடன், வேறு வேறு துறைகளில் உள்ளவர்களும் மற்ற துறைபற்றி இலகுவாக அறிந்துகொள்ள ஏதுவாகிவிடுகின்றது.
அதேவேளை ஆங்கிலத்தில் உள்ள சில ஆக்கங்கள், செய்திகள், தகவல்கள், பிரபலமான கதைகள் என்பவற்றை பல பதிவர்கள் தமிழாக்கம் செய்து பதிவிட்டும் வருவதனால் அதன்மூலம் பயனடைபவர்களின் தொகையும் அதிகரித்துக்கொண்டிருப்பது சிறப்பான ஒரு அம்சமாகும்.

இணையபாவனை இளைஞர்களை தவறான பாதைகளுக்கு கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சம் பெற்றோருக்கும், சமுதாய ஆய்வாளர்களுக்கும் இருந்துவரும் நிலையில் இளைஞர்கள் இவ்வாறான வலைப்பதிவுகளின் பக்கம் தம் கவனத்தை திருப்பி வருகின்றமை மிக ஆக்கபூர்வமான விடயம் என்பதுடன், பெரும்பாலான பெற்றோருக்கு பெரும் நின்மதியையும் கொடுத்துள்ளது.

வலைப்பதிவுகளை இடும் பதிவர்கள் மத்தியிலே ஆரோக்கியமான ஒரு நட்புவலை அமைக்கப்படுகின்றது. இதன்மூலம் ஆக்கபூர்வமான விடயங்களைப்பேசும் ஒரு நட்பு வட்டம் இன்றைய இளைஞர்களுக்கு தனியாகக்கிடைத்துவிடுகின்றது என்பது கண்கூடு.
இவாறான நட்பு வட்டங்களால் முதல் நன்மையாக வாசிப்பு பழக்கம் மேன்மைப்படுத்தப்பட்டு, அறியாத பல விடயங்கள் பற்றியும் அறியவேண்டிய தேடல் உணர்வு எழுப்பட்டுகின்றது. தமது வலைத்தளங்களில் காத்திரமான, பயனுள்ள பல பதிவுகளை எழுதி தன் எழுத்துக்கள்மேல் பிறருக்கு ஒரு கௌரவத்தையும், தன்னை நிரூபிக்கும் ஒரு களமாக வலைப்பூவையும் உருவாக்க இந்த இளைஞர்கள் எத்தனிக்கின்றனர். இதன்காரணமாக தேடல்கள் கூடுகின்றது.
இந்த தேடல்கள்மூலம் அவனது எழுத்தும், அறிவும் மேலும் மேலும் மேன்மைப்படுத்தப்படுகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வலைப்பதிவுகளை எடுத்துப்பார்ப்பீர்களேயானால் இவற்றில் பெரும்பான்மையாக தமிழ்நாட்டு வலைப்பதிவர்கள் பலர் பல்வேறுபட்ட வலைப்பதிவுகளை வலையேற்றிவருகின்றனர், அடுத்ததாக புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் இருந்து இலக்கியம், கலை, தேசியம், விஞ்ஞானம், மெய்யியல் என பல்வேறுபட்ட துறைகளிலும் பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதுபோல சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான தமிழ்மொழிப்பதிவாளர்கள் தமது வலைப்பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று தமிழிலேயே எந்தவிடயம் குறித்த சந்தேகத்தையும், தேடுதளங்களில் பொறிப்பித்து அதற்கான விடைகளை ஏராளமான வலைப்பதிவுகளில் இருந்து பெற்றுக்கொண்டுவிட முடிவதாக உள்ளமை இணையத்தமிழுக்கு வலைப்பதிவுகளால் கிடைத்த நன்மையே.

இன்று தமிழகத்தில் சினிமாவில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் செலுத்தும் காரணியாக வலைப்பூக்கள் உள்ளன என எழுத்தளர் ஞாநி உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. படம் வெளியிடப்பட்டு முதலாவது காட்சி முடிந்த சில விநாடிகளிலேயே வலைப்பூக்களில் அந்த திரைப்படம் தொடர்பான விமர்சனங்கள் வெளிவந்துவிடுகின்றன. இதன்மூலம் சிறந்தபடம் எது, தவிர்க்கவேண்டிய படங்கள் எது என்பதை பெரும்பாலானவர்கள் கணித்துக்கொள்ள இது ஏதுவாக அமைந்துவிடுகின்றது.

இலங்கையிலும் இன்று வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டுவருகின்றது. பல இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன், பலதேடல்கள் மூலம் தாம்பெற்ற தகவல்களை பதிவேற்றிவருகின்றனர். பதிவுகளின் தரங்களும் கூடிக்கொண்டு செல்கின்றமையையும் அவதானிக்கமுடிகின்றது.


1995களில் வெளிநாடுகளில் செல்லிடப்பேசிகள் சர்வசாதாரணமாக பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இலங்கையில் அவை எட்டுமா என்ற ஏக்கம் இருந்தது எனினும் ஐந்துவருடங்களினுள் இலங்கையிலும் செல்லிடப்பேசி என்பது சர்வசாதாரணமாக்கப்பட்டுவிட்டது. அதேபோல கணனிப்பாவனையும் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சாதாரணமாக ஆகிக்கொண்டுவருகின்றது.
இந்த வகையில் தமிழ்ப்பதிவுகள் இனிவரும்நாட்களில் இலங்கையிலும் கணனி பாவனையில் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது என்பது யதார்த்மான உண்மை.

எனவே வலைப்பூக்கள் என்பது தமிழ் எழுத்தியிலின் ஒரு புரட்சி என்று கூறிக்கொள்ளமுடியும். சில எழுத்தாளர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற பல விடயங்களையும் இன்று சாதாரணமாக ஒரு வலைப்பதிவரே அதைவிட சிறப்பாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதிச்செல்வதை கண்ணூடாகப்பார்க்கின்றோம்.
எனவே கணனிப்பாவனையின் ஒரு ஆக்கபூர்வமான விடயமாக வலைப்பதிவுகளை கொள்ளமுடியும். இலங்கையிலும் தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி வேகமாக பரவி வருவது வரவேற்கத்தக்க ஒருவிடயமே.

(இலங்கையில் பிரபலமான தமிழ் தினசரிப்பதிரிகையான தினக்குரல், மற்றும் இலங்கை வலைப்பதிவர்களின் திரட்டியாக இருந்த யாழ்தேவி என்பன இலங்கை பதிவர்கள் பலரின் இணையப்பதிவகள் பலவற்றை வாரந்தோறும் பத்திரிகையில் எடுத்து சென்றதுடன், பதிவுகள் பதிவர்கள் என்பவர்களை இணையத்தில் இல்லாத சாதாரண மக்களுக்கும் அறிமுகம் செய்துவைக்கும் நடைமுறைகளையும் செயற்படுத்தியிருந்தன. இந்த நடைமுறையின் ஓராண்டு பூர்தியை முன்னிட்டு தினக்குரல் பத்திரிகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்ததே இந்த கட்டுரை.)

Tuesday, September 27, 2011

கேன்சரும் கமலும்.

வாழ்வே மாயம் இந்த திரைப்படத்தை பார்த்தபின்னர்தான் எனக்கு கேன்சர் என்ற நோய் எத்தனை கொடியது என்று முதன்முதலில் புரிய முடிந்தது. ஆனால் அந்த நோய் அதைவிட மிகக்கொடியது என்று காலம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றது.
மனிதனின் மகிழ்ச்சியான வாழ்வின் ஒரு பெரும் குறுக்கீடாக இந்த கேன்சர் எனும்நோய் நாளாந்தம் ஒவ்வொருவரினம் வாழ்வில் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றது, மார்பு புற்றுநோய், கற்பப்பை புற்றுநோய், எலும்பு புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், தோல் புற்றுநோய், இரத்தப்புற்றுநோய், மூளை புற்றுநோய் என பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஒருவருக்கு மட்டுமின்றி அவரை சுற்றமுள்ள சுற்றத்தையும் ஆழாத துயரத்தில் ஆழ்திவிடுகின்றது.

கேன்சருக்கு எதிராக, கேன்சர் நோயாளர்களின் நலன்களை பேணுவதற்காக இன்று உலகம் முழுவதும் பல அமைப்புக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான சேவைகளில் கமல் நற்பணி மன்றம் மும்மரமாக ஈடுபட்டிருந்ததும் யாவரும் அறிந்த ஒன்றே.
வாழ்வே மாயம் திரைப்படத்தில் ஒரு புற்றுநோய் உள்ளவராக கமல் நடித்திருந்தாலும், இந்த கேன்சர் என்ற நோய் கமலை சுற்றியுள்ள, கமலுக்கு நெருக்கமான பலரை காவுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றே.
சாவித்திரியில் இருந்து கௌத்தமி வரை அந்த நோய்க்குள்ளான பலருக்கு அவர்களின் வேதனைகளில் பங்கெடுத்து கமல் ஆறுதலளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றே.
குறிப்பாக மகேந்திரனுடைய மரணம், ஸ்ரீ வித்யாவுடைய மரணங்கள் என்பன கேன்சரால் இடம்பெற்றன அந்த மரணங்கள் கமலை வெகுவாக பாதித்தும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் யதாத்தவாதியாகவும், உலகியலை தத்துருவமாக கமல் புரிந்துவைத்திருக்கின்றார் என்றாலும், அவருக்கு நெருங்கியவர்களின் இழப்புக்கள் அவரை ஒவ்வொரு கட்டத்திலும் பெரிதும் பாதிக்கும் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் சொல்கின்றனர். பேச்சுக்களிலும், செயல்பாடுகளிலும் முதிர்ந்த தெளிவான தன்மையினை கமல் ஹாசன் என்ற இந்த மனிதன் கொண்டிருந்தாலும், பாசத்திலும், நட்பிலும் இந்த மனிதன் ஒரு குழந்தை என்று மதன் சுட்டிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு மிக நெருங்கியவர்களை கேன்சர் நோய்க்கு பறி கொடுத்த கமல், கேன்சர் நோயாளர்கள்மீது விசேட கவனம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களிலும், வாழ்வே மாயத்தில் தான் ஒரு கேன்சர் நோயாளியாக அவர் நடித்திருந்தாலும், நினைத்தாலும் இனிக்கும் படத்தில் ஜெயப்பிரதாவின் பாத்திரம் உட்பட தனது பல படங்களில் இந்த கேன்சர் நோயின் சோகமுடிவுகளை சொல்லிவருவதையும் அவதானிக்கலாம், சமீபத்திய உதாரணம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், இதில் கேன்சர் வந்த இளைஞனை காப்பாற்றமுடியாமல் கமல் கண்கலங்கி நடிப்பது நடிப்பாக தெரிய வாய்ப்பிருக்கவில்லை.


மலையாளத்தில் கமலின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்த படம் 4 பிரன்ஸ், இதில் ஜெயராம், ஜெய்சூர்யா, குஞ்சாக்கோ போபன், மற்றும் மீரா ஜஸ்மின் என்போர் நடித்திருந்தனர். இந்த நான்குபேரும் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மரணத்தை நோக்கி போகும் இவர்களின் விரத்திப்போக்கில் திருப்புமுனையாக அவர்களை இரட்சிக்கும் பாத்திரத்தில் வருகின்றார் கமல் ஹாசன். இந்த படம் புற்றுநோயாளர்கள் மீதான் சமுகத்தின் பார்வையினை மாற்றும் எனவும், புற்றுநோயாளர்களுக்கும் ஒரு மனவலுவாக அமையும் என்றும் அதன் இயக்குனர் சாஜி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
வார்தைகளுடன் மட்டும் வாழ்பவர் இல்லை கமல் என்று அவர் சிலாகிப்பது உண்மைதான், புற்றுநோய் சம்பந்தமான கருவூட்டல் மையக்கருத்து இந்த திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு சல்லிக்காசினை பெறவில்லை கமல் ஹாசன்.

இதே திரைப்படம் தமிழிலும் 'அன்புள்ள கமல்' என்ற பெயரில் மொழிமாற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
ஆம்.... கமலுக்கு அந்த அடைமொழி மிகப்பொருத்தமானதுதான்.

Friday, September 23, 2011

ஹொக்ரெயில் - 23.09.2011

தங்கத்தட்டுப்பாடும், கடலடித்தங்க வேட்டையும்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தின் பெறுமதி நாளுக்கு நாள் உயர்வு என்ற வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கின்றது.
உலக பொருளாதார சரிவு, பங்குவர்த்தக மிதப்பு நிலை என்பவற்றால், பெரும்பாலானவர்கள் தங்கத்தில் தமது முதலீடுகளை செய்ய கவனம் செலுத்தியுள்ளமையே இதன்காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று வல்லரசுகளின் கவனங்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளன.
இந்த நிலையில்தான் கடலடித்தளங்களில், உள்ள பாறைகளுடன் பல்வெறுபட்ட கனிம படிமங்களுக்குள் தங்கமும் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் சீனா ஏற்கனவே இந்த கடலடித் தங்க வேட்டையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது.
தென் சீனக்கடற்கரை, மற்றும் மஞ்சூரிய கடல் ஆளப்பகுதி பசுபிக்கடலின் கிழக்கு ஆள் கடல்களில் இந்த தங்க படிமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி அமெரிக்காவும் இத்தகய கடல் அடித்தளங்களில் உள்ள தங்கங்களை குறிவைத்து தமது வேட்டைகளையும் ஆராய்வுகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பணம் பாதாளம் வரை பாயும் என்பது எவ்வளவு உண்மை பார்தீர்களா?

தேவையான பல புத்தகங்களை தரும் தமிழ்கியூப்.

வாசிப்பதற்கு ஒரு சிறந்த தமிழ் புத்தகத்தை சொந்தமாக வாங்கப்போனால் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் அது யானை விலை குதிரை விலை.
அதேவேளை தேர்ந்தெடுக்க நினைத்த புத்தகங்கள் பணம் கொத்து பெற முயன்றாலும் எமக்கு கிடைப்பது எட்டாக்கனிதான்.
அதேவேளை நூலகங்களில் இருந்து எடுத்து படிக்கும் புத்தகங்களும் ஆறுதலாக படிக்க அமைவானதாக இருக்காது என்பதாலும், நாம் தேடும் பல புத்தகங்களை தரவிறக்கும் வசதி கொண்ட இணையங்களை நாம் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
அந்த வகையில் தமிழ்கியூப் எமக்கு சிறந்த தமிழ் புத்தகங்கள் பலவற்றை பீடிஎவ் ஆக தரவிறக்கி படிக்க ஆவன செய்கின்றது.
கல்கியின் புத்தகங்களில் இருந்து, சித்தர் பாடல்கள், இலக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், செய்யுள் தொகுப்புகள் என பல்வேறுபட்ட தேவையான வகையறாக்களை தரவிறக்கி படிக்கும் வசதியை தருகின்றது.
ஒருமுறை சென்று பார்த்து தேவையான ஒரு புத்தகத்தை தரவிறக்கி முதலில் படித்துப்பாருங்கள்.

இந்தவாரக்காட்சி......

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு! ஆமா தானே?

இந்தவார இனிப்பு புளிப்பு...
இந்தவார இனிப்பு – ஐந்தாம் அண்டு பலமைபரிசில் பரீட்சையில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலே இருந்து முதன்நிலையில் சித்தியடைந்த மாணவன் பற்றிய தகவலும், அவன் அவனுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சரின் காலில் விழ மறுத்த செய்தியும் யாவரும் அறிந்த ஒன்றே.இங்கே அரசியல், உணர்வுகள் என்ற விடயங்களை அப்பால் வைத்துவிட்டு, மாதா, பிதா, குரு, தெய்வம், உறவினர்களில் மூத்தவர்கள் என்பவர்களை தவிர வேறு எவரினதும் காலில் விழவேண்டிய தேவை இல்லை என்பதை இந்த பத்துவயதிலேயே நெஞ்சில் உரமாக வைத்திருந்த அந்த சிறுவனுக்கு இந்தவார இனிப்பு.

இந்தவார புளிப்பு...யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் பணியில் இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஈடுபட்டு வருவது நல்லவிடயம் என்பதுடன் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.ஒரு குடம் பாலுக்கு ஒருதுளி விசம்போல 'யுத்தம் ஒன்று வந்தால் இழப்பு என்பது இடம்பெறுவது சகயம்தான்' என்று அவர் கூறியிருப்பது அமைந்துள்ளது.ஆவர் ஒரு தமிழர் (அப்படித்தான் பலர் சொல்லிக்கொள்கிறார்கள்) என்ற ரீதியில் ஒரு பெரும் அவலத்தை மூடிமறைக்க பிறர் தரும் அழுத்தத்தில் அவர் அப்படி கூறியிருப்பதே வேதனையானது.பாராபட்சமில்லாமல் இந்த வார புளிப்பு முரளிக்கே.(அவராவது பறவாய் இல்லை நம்மட ஒருவர் வன்னியில் ஒரு மக்களும் சாகவில்லை என்று கூறியிருக்கிறாரே!)

இந்தவார புகைப்படம்.

ஸ்ரன்லி போர்மன் (அமெரிக்கா) எடுத்த புகைப்படம். தீவிபத்து ஒன்றில் தப்பிப்பதற்காக கீழே இருவர் குதிக்கும்போது எடுத்த புகைப்படம்.
கவலைவேண்டாம் பயலுக பத்திரமாக மீட்கப்பட்டாங்களாம், இது நடந்தது 1975 பொஸ்ரன் நகரிலே.

மியூஸிக் கபே...

எஸ்.பி.பியின் ரம்யமான இராக ஆலாபனைகளில் முக்கிமான ஒரு பாடல் இது.

ஜோக் பொக்ஸ்.
இந்திய மாகாணங்களுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி ஒன்றை பார்ப்பதற்காக ஷர்தாஜி சென்றிருந்தார். அங்கே அன்றைய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக சிறுவயதில் அவருடன் படித்து இப்போது கலக்ரராக இருக்கும் குர்வீர்சிங் வந்திருந்தார். நம்மாளைப்பார்த்தவுடன் நட்புடன் அழைத்து தன் அருகில் இருத்தினார்.
அப்போது ஓட்டப்போட்டி ஆரம்பமானது..வீரர்கள் எல்லோரும் ஓடினார்கள்...நம்ம ஷர்தாஜிஇ கலக்ரர் நண்பரிடம் கேட்டார் ஏன் எல்லோம் ஓடுறாங்க? என...அதற்குஇ ஓடி முதலிடம் வருபவருக்கு தங்கக்கோப்பை பரிசாக கொடுக்கப்போகின்றேன் என்றார் கலக்ரர். உடனே நம்ம ஷர்தாஜி கேட்டார் சரி தங்கக்கோப்பை வாங்குபவர் ஓடுவது சரி ஏன் மற்றவர்களும் ஓடுகின்றார்கள் என்று...கலக்ரர் எழுந்துபோய் வேறு ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டார்.

Wednesday, September 21, 2011

இலைதுளிர் காலத்து உதிர்வுகள்........09

விடை தெரியாத பகீரதத்தனமான விடிவை நோக்கிய பயணத்தில் மருட்சியான நாட்கள் பல, நாம் எப்படி போகப்பொகின்றோம் என்ற மலைப்பே அப்போது ஈழத்தமிழர்களிடம் கலக்கமாக இருந்ததே தவிர சென்றடைவேண்டிய இடம் பற்றிய தெளிவு அனைவரிடமும் இருந்தது.

இருட்டாக இருந்த அந்த நாட்கள் அவ்வளவு சீக்கிரம் விடிவுக்கு வரவில்லை.
எமக்காக தாம் கதைப்பதாகத்தானே இந்தியா சொன்னது அப்படி இருந்தும் டில்லியில் ஏன் இந்த இறுக்கத்தை அது கொண்டிருக்கின்றது இதன் பின்னிணியில் இருக்கும் மர்ம முடிச்சுக்கள் என்ன? அவை சிலவேளைகளில் பாராதூரமாக இருந்துவிடுமோ? நாம் தாழிக்கு பயந்து நெருப்பினுள் விழுந்துவிடுவோமோ என்ற பதை பதைப்பை அப்போது ஒவ்வொருவரினதும் முகங்களில் நன்றாக அவதானிக்ககூடியதாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் அழைத்து செல்லப்பட்ட போராளிக்குழுத்தலைவர் உட்பட அவர்களின் உயர்மட்ட குழுவினர் ஒருநாள் மதியம் அவசரமாக கொண்டுவந்து தரையிறக்கிவிடப்படுகின்றனர்.
இந்த நிலையில் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழமுரசு விசேட செய்தி ஒன்றை மாலை வெளியிடுகின்றது.
அதில் விடுதலைப்புலிகளின் தலைவரை இந்திய உயர் மட்டத்தினர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுமாறு பகிரங்கமாக வற்புறுத்தியமையும், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்தாகி இந்தியாவிலிருந்து தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்திய இராணுவத்தினர் அமைதிப்படையாக வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவித்திருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தமும் ராஜீவ் காந்தியின் கொழும்பு வருகையுடன் கைச்சாத்திடப்பட்டது....
(இந்த ஒப்பந்தம் இடம்பெற்ற பொழுது இடம்பெற்ற சம்பவங்கள், அந்தநேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வுகள், இந்திய அமைதிகாக்கும் படையின் வருகை தமிழர் தாயகத்தில் எப்படி பார்க்கப்பட்டது என்பன பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் பார்க்க இருப்பதால் இப்போது அந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் யாழ்;பாணத்தில் நடந்த சம்பவத்திற்கு போகின்றேன்)

இந்த நிலையில் அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலை என்ன? என்ற பெரிய கேள்வி தமிழ் மக்கள் மனதில் பெரும் கேள்வியாக எழுந்தது.
அந்தவேளையில்தான் யாழ்ப்பாணம் சுதுமலையில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் சுற்றாடலில் 1987 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் நாள் மாபெரும் கூட்டம் ஒன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
மாலை நேரம் கூட்டம் இடம்பெறவுள்ளதென்றபோதிலும் காலையே இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் பெரும் ஆர்வம் கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்த கூட்டத்தில் தூர இடங்களில் இருந்தும் வந்து கலந்துகொள்ளும் மக்களுக்காக வாகன ஒழுங்குகள் எல்லாம் முறையாக அவர்களால் செய்யப்பட்டிருந்தன.

அவ்வாறான ஒரு வாகனத்தில் என் வீட்டு நபர்களுடன் நானும் அந்த சுதுமலையினை அடைந்தேன். அப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த திலீபன் தலைமையில் அந்தக்கூட்டம் ஆரம்பமாகியது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அவர்களின் மிக முக்கிய உயர் மட்டத்தினர் பலர் இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.... ஒருவரை தவிர.
கூட்டம் தொடங்கி ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தனர், அவர்களின் பேச்சுகளில் சில வரிகள் இப்போதும் என் இதயத்தில் உள்ளன, அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக இருந்த குமரப்பா பேசும்போது,
' எனக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் பந்தம் இன்றுவந்த ஒன்றல்ல, அது எங்கள் உயிரோடும் ஊணோடும் ஒன்றாக கலந்திருக்கும் பந்தம்'
இன்றும் சாதாரணமாக ஒரு கிரிக்கட் மச்சிலேலே கூட ஏன் நாம் அத்தனை நாடுகளையும் தள்ளிவைத்துவிட்டு இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றோம், ஏன் என்றால் அதுவும் ஒருவகையில் எங்கள் தாய்நாடு என்ற எண்ணத்தில்தான் என்றார்.

அந்தநேரம் அவர்களின் உயர் மட்டத்தில் காணமல் இருந்த ஒருவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். கூடியிருந்த அத்தனை மக்களும் எழுந்துநின்று கரவோசை எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தியதை மிகப்பெரும் பூரிப்புடன் என் இரண்டு கண்களாலும் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கால்கள் நடக்கமுடியாமல், ஊன்றுகோல்தடியுடன் மேடையை நோக்கி ஏறிய அவரது கம்பீரம் இன்றும் எனக்கு தைரியம் என்ற வார்த்தைக்கு அகராதி சொல்லிக்கொண்டிருக்கின்றது.
மேடையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அதை அவதானித்த மறுகணமே ஓடிச்சென்று அவரை வாஞ்சையுடன் அணைத்து மேடையில் ஏற உதவிசெய்து வந்து தன் பக்கத்திலே உட்கார வைக்கிறார்...
ஆம்..... அவர்தான் அப்போது மட்டுமல்ல எப்போதுமே யாழ்ப்பாண தளபதி கிட்டு.

பலரது பேச்சுகளின் பின் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய நாளான அன்று வரலாற்றில் சுதுமலைப்பிரகடனம் என்று எழுதப்பட்ட அந்த உரையை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மக்கள் முன் ஆற்றினார்.

அவர் அங்கே ஆற்றிய உரையினை பார்வையிட

அந்த பேச்சின் அவர் அரம்பத்திலேயே கூறிய விடயம்போல எமக்கு அப்பால் பட்டு நிகழும் இந்த நிகழ்வு எமக்கு சாதகமாக இருக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடனே மக்கள் கலைந்து சென்றனர்.
அப்போது எங்கள் ஊரில் பைத்தியமாக பிச்சை எடுத்து திரியும் செட்டி என்ற மனிதன் சுற்றி திரிவான், அவன் அன்று வீதியால் செல்லும்போது தீர்க்கதரிசனமாக ஒரு எதிர்வுகூறலை சொல்லிக்கொண்டுபோனான்,

'வயித்து குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே
சிங்களவனைவிட எங்களை இவன் சில்லெடுக்காட்டி இருந்து பாரு.....!!'

அந்த பைத்தியக்காரனுக்கு புரிந்த விடயம் எங்கள் மக்களுக்கு அப்போ புரிந்திருக்கவில்லை..........

இலைகள் உதிரும்.........

(குறிப்பு – புதிதாக ஆர்வத்துடன் இந்த தொடரை படிப்பவர்கள் தயவு செய்து இந்த இலை துளிர் காலத்து உதிர்வுகள் என்ற தொடரை ஆரம்பம் முதல் சிரமம் பார்க்காமல் படிக்க வேண்டுகின்றேன்)


Monday, September 19, 2011

அர்த்த யாமம் அர்த்தமுள்ளது – சென்னை நைட்லைஃப்


அன்னியத்தாக்கங்கள், நவீனத்துவமோகங்கள், பிரமாண்டங்களை கண்ட பிரமிப்புக்கள் என்பன எமக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் பல. அவற்றில் ஒன்றுதான் பெருநகரங்களில் களைகட்டும் களியாட்டங்களை மையப்படுத்திய இரவு கேளிக்கைகள் அல்லது நைட்லைஃப்.
கலாசார விழுமியங்கள், கலாசாரத்திற்கு உதவாத நடத்தைகள் என்பனபோன்ற பார்வைகளை ஒரு பக்கம் இப்போதைக்கு வைத்துவிட்டு யுத்புஃள் மைண்டுடன் இவை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
ஒருவகையில் சொல்லப்போனால், நைட் கிளப்பிற்கு அல்லது பப்பிற்கு போவதே ஒரு பெரிய ஸ்டேட்டஸை தரும் என்ற நினைப்புக்கூட பல இளவட்டங்களுக்கு உண்டு. அதேபோல இரவுகளின் சௌர்க்கபுரி இது என்று நாளாந்தம் தஞ்சமடையும் பலரும் இங்கு உண்டு. ஏன் ஒரு சிலருக்கு இது ஒருவித அடிட்டாகவே போய்விட்டதும் உண்டு.

சென்னை நைட் கிளப்களை எடுத்துக்கொண்டால் எல்லா கிளப்களிலும் களியாட்டங்கள் எக்பென்ஸிவாக இருந்தாலும்கூட சில வி.ஐ.பி மற்றும் பாரினஸ் ஒன்லி கிளப்களும் உண்டு. இந்த கிளப்கள் சும்மா சொல்லக்கூடாது ஒரு நைட்கிளப்புக்கரிய முறையான அம்சங்களுடனேயே இருக்கின்றன.
நடனமாடும் இடத்தின் அதன் தளத்தின் தன்மை, அதன் அளவு, ஒலி, ஒளி லைட்டிங் முறைகள் எல்லாம் பக்காவாக இருந்தன. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் கரோக்கி வசதிகள் கூட இங்கே தரப்படும் என்பதுடன் உயர் மட்டத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் செம டீசென்ஸியும் இருந்ததை காணக்கூடியதாகவே இருந்தது.

இது தவிர சில உயர் இடத்து பயல்கள் தங்கள் பிறந்ததினங்களை மேற்படி கிளப்பில் தங்கள் நண்பர்களுக்கு பெரிய அளவிலான ட்ரீட்டாக செலிபிரேட் பண்ணுவதையும் காணலாம்.
பெரும்பாலும் ஐ.டி துறைசார்ந்தவர்களை கணிசமான அளவுக்கு மேற்படி கிளப்களிலும், பப்களிலும் காணக்கூடியதாக இருக்கும்.

சரி... நம்ம அனுபவத்திற்கு வருகின்றேன். நான் சென்னையில் இருந்த நாட்களில் லண்டனில் இருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரது அழைப்புக்கிணங்கவே முதல்முறையாக சென்னையில் ஒரு கிளப்பிற்கு சென்றேன்.
அந்த கிளப் பாரினஸ் ஒன்லி கிளப்தான், நாம அங்க பாரினஸ்தானே! சோ...சாதாரணமாக நாங்கள் அங்கே போகலாம். அதேவேளை கோள்டன் நுளைவு அனுமதி பெற்றால் உள்ளூர் ஒருவரையும் ஒருபாஸ்போர்ட் வீதம் அழைத்து செல்லலாம் என்றபடியால், சென்னை சிட்டி சென்டரில் முதல்நாள் சந்தித்த நண்பிகள் ஆன இருவரையும் அழைத்து சென்றிருந்தோம் (தமிழச்சிகள் அல்லர்) கொழும்பு கிளப்களுக்கும் இதற்கும் பாரிய வித்தியாசத்தை காணக்கூடியதாக இருந்தது.

சும்மா சொல்லக்கூடாது ரோயல் சேர்விஸ் தரத்திற்கு அவர்களது சர்விஸ் இருந்ததை மறுக்கமுடியாது. என்னடா இது வெளியில கஸ்டமர் கெயார் என்றால் என்ன? என்று கேட்கும்படியான சேவைகளும் மூடப்பட்ட பிரமாண்டமான இடத்தில் விழுந்துவிழுந்து கவனிப்பதும் எனக்கு பெரும் ஆச்சரியமாகவே இருந்தது. எங்கும் காசுதான் குறிக்கோள் என்றாலும் அந்த காசைப்பெறுபவர்களுக்கு உயர் கௌரவத்தை வளங்கும் தன்மை ரொம்ப பிடித்துப்போன ஒரு விடயம் தானே!

இது தவிர தொடர்ந்து வாரத்தில் ஒருநாள் என தொடர்சியாக சில கிளப்புக்கு சென்னை ஐ.டி நண்பர் ஒருவர் தந்த ஹைட் வியூவுடன் சென்று வந்தோம்.
என்ன சார்.... நீங்க இப்பெல்லாம் இங்கு வந்து துட்டை வீசுவதால் பிகர்ஸ் எல்லாம் ஸ்ரீ லங்கன் என்றவுடன் பின்னால போகிறாளுக, நம்மளை கணக்கெடுக்கமாட்டாளுக என்று ஆதங்கத்துடன் சொன்னார் அந்த நண்பர்.
அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பதை பல கிளப்களிலும் கண்டுகொண்டேன்.. அந்த இரச்சல்களின் மத்தியிலும் பலர் எம்மிடம் யுவர் நேட்டிவ் ஜஃப்னா? என்று கேட்டு இப்போ என் பேஸ்புக் நண்பர்கள் பட்டியலிலும் உள்ளனர் நம்ம பயலுகள்.

டப்ளின் என்ற கிளப்பில் அப்போது பல குறைபாடுகள் இருந்தன என்பதைவிட, மனுகாட்டில் உள்ளதை விட அதிகமான பணத்தை பில்லாக தந்த சம்பவமும் அங்கு மட்டும் நடந்தது.
ஜொப்ரீஸ், ஏச்.எவ்.ஓ, பிளேம் லீ கிளப் என்பவற்றில் வருவோர்களின் தொகை அதிகமாகவே இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

சரி இனி விடையத்திற்கு வருவோம், கிளப், அல்லது பப் என்றாலே தேவையில்லாமல் காசை எடுத்து வீசும் ஒரு இடமாகவே கருதவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் எதுவுமே தெரியாமல் நான் நல்ல பிள்ளை என்று இருப்பதை விட அனைத்துவிடையங்களையும் அறிந்து சிலவற்றை தவிர்துக்கொள்வதே சிறந்ததாக இருக்கும். யுத்புஃள் காலங்களில் இதுபோல சில கேளிக்கை விநோதங்கள் ஒருவகையில் கிளுகிளுப்பு தரும் விடையம் ஒன்றதான். ஆனால் இதற்குள் அடிட்டாகும் தன்மையினை ஒருபோதும் எட்டிவிடக்கூடாது.


அதேவேளை இந்த கிளப்களில் பேசனல் சீட்களை அரேஞ் செய்து பல கம்பனி சந்திப்புக்கள், பல முக்கிமான விடையங்கள் பற்றிய விவாதிப்புக்கள் என்பவற்றை செய்யும் சிலரையம் நான் பார்த்திருக்கின்றேன், சில பிஸ்னஸ் புறப்போசல்களை ஓ.கே பண்ண இந்த இன்வயர்மென்ட் ஒரு நபரை ஓ.கே பண்ணும் £ழ்நிலைக்கு கொண்டுவரும் என்பதை பின்னர் நான் அனுபவ ரீதியாகவும் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.

உழைத்து உழைத்து என்னத்தை கண்டோம் மாதத்தில் ஒரு நாள் கொஞ்சம் ஜாலியாக இருந்தால், மனதுக்கு கொஞ்சம் ரீபிரஸ் கிடைக்கும், வேர்க்லோட்களில் இருந்தும் ரென்சன்களில் இருந்தும் ஒரு நைட் நல்ல பூஸ்டை தருகின்றது என்றும் இந்த களியாட்டங்கள் பற்றிய சிலரது கருத்துக்கள் உள்ளன. உண்மைதான் லகரங்கள் தொட உழைப்பவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும், ஆனால் இதை சில ஆயிரங்கள் உழைப்பவர்கள் உதாரணங்களாக கொள்ளக்கூடாது. ஏன் எனில் இங்கேயான செலவே பல ஆயிரங்களாக இருக்கும்.

ஜெஸ்... இங்கேதான் சௌர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே!!

Friday, September 16, 2011

நான் எனும் நீ....

இந்த "விருட்சமுனி" பற்றிப்பேசவேண்டும் என்றால் கொஞ்சம், அரசியல், மத, பிரதேச, இன அடையாளங்களை அப்பால் வைத்துவிட்டு முழுமையான ஆளுமையினை பற்றி பேசவேண்டும். இவரைப்பற்றி பேசுவதே ஒரு ஆளுமையினைப் பற்றி முழுமையாக பேசியதற்கு ஒப்பாகும் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.
தலைவன் ஒருவன் பிறக்கின்றானா அல்லது உருவாக்கப்படுகின்றானா? என்ற கேள்வி தள்ளாடி நிற்கும் இடங்களில் கண்டிப்பாக இவரது பிம்பமும் இருக்கும்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் என்றால் அரசியல் கடந்த ஒரு தூரநோக்குடைய சிந்தனாவாதியுடைய ஆளுமை என்று பொருள் படுமோ என்ற அளவுக்கு ஆற்றலுடையவராக, இருந்து காட்டிய ஒரு மனிதர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலக்கணம் பிசாகமல் பேசிய ஒருவராக அவரை பார்க்கலாம்.
அவரது தமிழ் உச்சரிப்புக்களே கேட்கும்போது அவ்வளவு சுருதி சுத்தமான தொனியாக ஆவலாக கேட்கும் விதத்தில் கணீர் என்று ஒலிக்கும்.
தமிழை அடைமொழியாக கொண்டு பாராளுமன்றம் சென்ற எந்த உறுப்பினரும் தமிழை இவ்வளவு சுத்தமாக அந்த பாராளுமன்றத்தில் பேசியதாக நான் இதுவரை அறியவில்லை.
இது அவருக்கு சாத்தியப்பட்டது அவர் தமிழ்மொழியின் காதலனாக தன்னை கருதியதும் ஒரு கவிஞனாக இருந்ததும்தான் என்று நினைக்கின்றேன்.

இலங்கை சட்டக்கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்று சட்டவல்லுனராக மடடுமன்றி, ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் இருந்த அஸ்ரப் அவர்கள், குறிப்பாக தமிழ் வாசிப்பு பிரியர் என்றும் கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவதில் அவருக்கு பெரும் ஆர்வமும் ஆரம்பமும் சிறுவயது முதலே அவருக்கு இருந்தது என்கின்றனர் அவரது நட்பு வட்டத்தினர்.
விருட்சமனி என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் அருமையானவை என்பது மட்டுமன்றி ஆளமானவையாகவும் சிந்திக்கத்தாண்டுவனவாகவும் உள்ளன.

2000 ஆம் ஆண்டு செப்ரம்பர் 16 ஆகிய இதே நாள் உலங்குவானூர்தி விபத்தில் இவர் இந்த உலகைவிட்டு நீங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கவிதை தொகுப்பான நான் என்னும் நீ என்ற கவிதை தொகுப்பிலிருந்து முக்கியமான ஒரு கவிதையினை படித்துப்பாருங்கள்.

"போராளிகளே புறப்படுங்கள்"

ஒரு துப்பாக்கியின் ரவைகளினால் எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய் நமது எதிரி வென்றுவிட்டான் என்று நீ குழம்பிவிடக் கூடாது

அன்றுதான் போராட்டம் எனும் நமது இருண்ட குகைக்குள் வெற்றிச் சூரியனின் வெண்கதிர்கள் நுழைகின்றன என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை நீ எப்போதும் மறந்திடாதே! தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதனை நான் சொல்லித்தரவில்லையா? என்னை அதற்காய் நீ மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில் நடந்து வந்தவர்கள் நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில் நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில் சூடுண்டாலும், வெட்டுண்டாலும் சுகமெல்லாம் ஒன்றேதான் நமது போராளிகள் யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள் ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வேடுக்க நேரமில்லை

இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை பன்னீரும் தேவையில்லை

உங்கள் தலைவனின் உடலில் இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?

அது அவனின் மண்ணறையில் சதா மணம் வீச வேண்டுமெனில் தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால் கடைசி நேரத்தில் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறாதீர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் போதும் கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும் எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள் வேண்டுமெனில் எனது “இஹ்ராம்” துண்டுகளை அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும் இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும் பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும் எனது காதுகளுக்குள்ளும் பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத் தோற்றத்தை பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான் சுவாசிக்காமலும் சில வேலைகளில் உங்களை நான் கேட்காமலும் சில வேலைகளில் உங்களை நான் பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமையர்களாகவும் இல்லாதவர்களால் இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது என்னை சுவாசிக்க அனுமதியுங்கள் ஹூர்லீன்களின் மெல்லிசைகளை கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும் சுணக்கவும் தேவையில்லை. தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள் ஓரத்தில் நின்றுகொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி

கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்துங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்

வேகத்தைக் குறைக்காமல் வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்

ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம் வாழவேண்டும் – அதை வாழ்விற்கப் புறப்படுங்கள்

எனது பணி இனிது மடிந்தது உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப் புறப்படுங்கள்

அவனின் நாட்டத்தை இவனின் துப்பாக்கி ரவைகள் பணிந்து தலைசாய்ந்து நிறைவேற்றியுள்ளன.

விக்கி அழுது வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம் தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள்

Wednesday, September 14, 2011

ஹொக்ரெயில் - 14.09.2011

த லேடி - மெசல் யோ சூ ஹெங்.
பர்மாவின் ஜனநாயகத்திற்கான தவம் என்று வர்ணிக்கப்படும் ஆங் சாங் சூகியின் வாழ்க்கையினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் த லேடி.
நேற்று முன்தினம் 12ஆம் திகதி இந்த திரைப்படம் ரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் பலதரப்பட்டவர்களது கவனத்தையும் ஈர்ந்துள்ள. இந்த திரைப்படத்தில் சூகியின் பாத்திரமேற்று நடித்த மெசல் யோ சூ ஹெங் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் தோற்ற ஒற்றுமையினை மட்டுமின்றி சூகியின் நடை உடை பாவனை அத்தனையையும் இவர் பிரதிபலித்துள்ளதாக புகழ்பெற்ற இயக்கனர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கின்றார் இவர்.

ஹொலிவூட் இரசிகர்களுக்கும் இவர் தெரியாத ஒருவர் இல்லை என்றே கூறலாம் ஏன் என்றால் 1997 ஆம் ஆண்டு வெளியாகிய ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான "ருமாரோ நெவர் டைஸ்" திரைப்படத்தில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1962 இல் பிறந்து தற்போது 49 வயதினை எட்டியுள்ள இவர் பிறந்த இடம் மலேசியாவாகும். பலதரப்பட்டோரின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டிருக்கும் இவர் இது குறித்து கூறுகையில்,
சூகியின் பாத்திரத்தில் நடிப்பதே மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், ஆனால் அதையே வாழ்க்கையாக கொண்டு இலட்சியத்தோடு வாழ்ந்தவர் ஆங் சாங் சூகி என்பது மலைப்பாக இருப்பதாகவும், அவரது பாத்திரத்தில் தான் நடித்தது தனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய விருதாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லூ பெஸ்ஸன் இயக்கதில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களின் பட்டியலில் இணைத்து வைத்திருங்கள்.

இன்றைய குறும்படம்
தமது குழந்தைகளின் இணையப்பாவனைகளை மேற்பார்வைசெய்யும் பெற்றோர்கள் இன்று எத்தனை பேர் உள்ளார்கள் என்பதே தற்போதைய கேள்வி?

இந்தவாரவாசிப்பு – ஜெயமோகன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
கடந்தமாத கடுமையான வேலைப்பழுக்களை கடந்த நிலையில் நான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம் இது. அண்மைக்காலங்களாக ஜெயமோகனின் தொகுப்புக்களை அதிகமாக வாங்கி வாசிப்பவன் என்ற வகையில் எனக்கு தோன்றிய ஒருவிடயம் ஜெயமோகனின் சிறுகதைகளை குறும்படம், அல்லது டெலி ட்ராமா ஆக்குவதென்றால் ஸ்கிர்ப்ட் ரைட்டிங் தேவையில்லை என்பதுதான். ஏன் என்றால் பெரும்பாலான ஜெயமோகனின் சிறுகதைகள் வாசிக்கும்போதே எமது மனக்கண்முன் மிக எழிதாக எங்கள் மைன்ட் விஸ்வலை விழச்செய்துவிடுவது அவரது எழுத்துக்களின் ஆச்சரியமாக உள்ளது.
57 சிறுகதைகளைக்கொண்ட இந்த தொகுப்பு ஜெயமோகனின் பல்வெறுபட்ட பார்வைகளை காட்டி நிற்கின்றது. குறிப்பாக இரண்டு கதைகளை சொல்லியே தீரவேண்டும்....
கண் என்ற ஒரு சிறுகதை இந்த சிறுகதையின் நுணுக்கம் தெரியாமல் எத்தனைபேர் இதை படிக்காமல் விட்டார்களோ தெரியாது, ஒரு கதையினை மிகப்பெரிய தொடர் வர்ணனைகளாலேயே கொண்டுசெல்லும் தைரியம் ஜெயமோகனிடம் இருக்கின்றது. அடுத்தது மாடன் மோட்சம்.... இந்த சிறுகதைத்தொகுப்பிலேயே ஜெயமோகனுக்கு மட்டுமின்றி எனக்கும் ரொம்ப பிடித்த ஒரு கதை. கிராமியத்தெய்வங்கள் கவனிக்கப்படாமை, அதன் பின்னரான கிராமியத்தெய்வங்கள் ஆகமத்தெய்வங்களாக மருவி உள்வாங்கப்படல் என்பவற்றை ரணத்தோடு கொண்டுசெல்லும் பாங்கு பிரமிக்க வைக்கின்றது. சந்தாப்பம் கிடைத்தால் கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.

மியூஸிக் கபே...

நெஸ்பிறே காலங்கள்....

அண்மையில் ஒரு தேவைக்காக பழைய பொருட்களை சேரித்து வைத்திருக்கும் என் வீட்டின் பின் புறம் உள்ள அறையை அராய்ந்துகொண்டிருக்கையில் என் கைகளில் அகப்பட்டுக்கொண்டது நெஸ்பிறேயின் பன்னிரெண்டு கதைகள் அடங்கிய ஒரு தொகுதி.
(நெஸ்பிறே என்பது எங்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் மில்க் பவுடர் பிராண்ட்டுகளில் ஒன்று)
நான் நினைக்கின்றேன் 1988, 89 காலப்பகுதிகளில் நாம் தேடித்தேடி சேகரித்த அப்போதைய பொக்கிசங்கள் அவை.
அன்றைய நாட்களில் ஒரு பால் பவுடர் பக்கட்டில் ஒரு புத்தகம் ஒன்ற ரீதியில் 12 கதைகளும் அதை சேகரித்து வைக்க ஒரு பெரிய என்வலப்பும் வரும்.
நாம் சேகரிக்குமபோது எமக்கு வரும் டபிள்சை பிற நண்பர்களிடம் மாற்றி அவற்றை சேரித்த நினைவுகள் அற்புதமானவை.
ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் அந்த கதைகள்
ஆச்சடிக்கபட்டிருக்கும். கதைகளுக்கு ஏற்ற ஓவியங்கள் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும்.

டிக்கரிலியா, புசணித்திருடன், லியனகவும் கித்துலும், சௌர்க்லோகம் சென்ற கிராமவாசி, சுரக்காய், நரியும் நீலச்சாயமும், அந்தரேயின் மனைவி, பேயும் விவசாயியும், போன்ற கதைகள் இப்போதும் மனதில் இருப்பவை. ஆவை அழகானதொரு பசுமையான நினைவுகளும் கூட...

இந்தவாரப்புகைப்படம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கெனடி அவர்கள் வெள்ளை மாளிகையில் தமது பணிகளில் ஈடுபடுவதையும், அவரது மகன் ஜூனியர் கெனடி தந்தையின் மேசையின் கீழ் இருந்து விளையாடுவதையும் காட்டும் ஒரு படம்.

இந்தவார இனிப்பு, இந்தவார புளிப்பு....
தமிழ்நாட்டு சஞ்சிகைகளின் பாணியில் இனி வாரவாரம் எமது நாட்டில் இடம்பெறும் விடயங்களை வைத்து நம்ம ஹொக்ரெயிலிலும் இந்த வார இனிப்பு இந்தவார புளிப்பு என்ற பகுதி வருகின்றது.

இந்தவார இனிப்பு :- தெய்வவழிபாட்டில் மிருக வதை என்பது எந்த காரணத்தைக்கொண்டும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அந்தவகையில் நாடு முழுவதும் தற்போது மீண்டும் முளை விட்டுள்ள மிருக பலி வழிபாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய ஒன்று.அரசியலுக்காகவோ, அல்லது வேறு எதற்ககாவோ ஆனால் மிருக வதையினை தடுத்து நிறுத்திய ஆச்சார்ய மேவர்வின் சில்வாவுககு இந்தவார இனிப்பு.

இந்தவார புளிப்பு – நேற்று ரொபேட் பிளக் வரும்போது யாழ்ப்பாணத்தில் ஒரு அவசரக்கூத்து இடம்பெற்றது. அதோடு அரச செயலகத்தில் அவருக்கு எந்த மரியாதையும் வழங்கப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சிலருக்கு அமெரிக்க விசாக்கள் மறுக்கப்பட்ட கறள்களிலும், அவருக்கு எதிராக சில சக்திகள் விக்கி லீக் என்றாலே என்ன என்று தெரியாத கூட்டத்தை வைத்து நடத்திய கூத்தும், அமெரிக்கா என்றதை விட்டுவிடுவோம் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரி வரும்போது அவருக்கான கௌரவத்தை வழங்கத்தவறி அரசியல் காட்டிய யாழ்ப்பாண செயலகத்திற்கும் இந்தவார புளிப்பு.

ஜோக் பொக்ஸ்
வெளியூருக்கு மாற்றலாகி போய் ஆங்கில வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அங்கே பல மாணவர்கள் கோம் வேர்க் செய்யாமல் வரவே அவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டார் அவர்...சேர் நேற்று முழுவதும் எங்க ஏரியாவிலை எலக்ரிக்குட்டி இல்லைசேர் எப்படி படிக்கிறது என்றார்கள் மாணவர்கள். ஆசிரியர் எலக்ரிக்குட்டி இல்லைங்கடா அது எலக்ரிசிற்றி என்று விளக்கியும் அவர்கள் தொடர்ந்தும் எலக்ரிக்குட்டி என்றே பதிலளித்தனர் உடனே ஆசிரியர் பக்கத்து வகுப்பெடுக்கும் ஆசிரியரிடம் இதை வினவினார் அவரும் அவங்களை விடுங்க சார்.. அவங்க பப்பிளிக்குட்டிக்காக அப்படி சொல்லுவாங்க என்றார் ஆசிரியருக்கு தலை சுற்றியது இதைப்போய் அதிபரிடம் விரிவாக விவாதித்து மனம் வருந்தினார்.அவரது தோழை தட்டி ஆசுவாசப்படுத்திய அதிபர் சொன்னார்...விடுங்க சார்... அவங்கட கப்பாக்குட்டியே அவ்வளவுதான் :)

Friday, September 9, 2011

ஏழாவது அறிவின் தோற்றத்தை அழிக்கும் ஆறாவது அறிவு!

மனித மனத்தின் விந்தைகளும் அதன் செயற்பாடுகளும், எமது கற்பனைக்கும் எட்டாத வகையில் மிக அதிசயமானது என்பதுடன், வக்கிரமானதும்கூட.

மனிதனுடைய சில செயற்பாடுகள் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு அப்பால் பட்ட நிலையில், சாதாரண மனிதர்களின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் மோசமான செய்திகளுடன் கூடிய கென்பிரஸி தியரிகளாக சிக்குப்பட்டு கிடக்கின்றன.

சில ஆழமான அறிவியல் விடயங்கள் தொடர்பாக அவனது அறிவியல் இரகசிய காய் நகர்த்தல்கள் பெரும் ஆச்சரியமாகவும், சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவுமே இருந்துவருகின்றன.

உலகில் வாழும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, மற்றும் ஐந்தறிவு விலங்கினங்களைவிட பகுத்தறியும் அறிவு என்ற ஆறாவது அறிவினால் மனிதன் எடுத்திருக்கும் விஸ்வ ரூபயங்களே புதிரானதும், அதிசயமானதும்தான்.

விலங்கினமாக திரிதல், வேட்டையாடல், நதிக்கரைகளை சேர்த்தல், பயிர்செய்தல், நாகரிகம் பெறல், தன்னிறைவு அடைதல் வான் பார்த்தல் என மனித இனம் இந்த ஆறாவது அறிவின்மூலம் எடுத்துக்கொண்ட விஸ்வரூபங்கள் புதிரானவை.

இங்கே கூர்ப்பு விதிகள், இல்லாத ஒன்று புதிதாக வருவதில்லை எனவே ஏற்கனவே மனித வலுவுடை சமுதாயம் ஒன்று இருந்துள்ளது, போன்ற தியரிகள் இப்போதும் விவாதங்களுக்கு உரியதாக உள்ளதால் அவற்றினை விட்டுவிட்டு மற்றவற்றை பார்ப்போம்.

உன்னிப்பாக கவனித்தீர்களே என்றால் 19 ஆம் இருபதாம் நூற்றாண்டுகள் மனித இனத்தின் ஆறாம் அறிவின் உச்சமான ஒரு பாய்ச்சல்காலம் என்பதை அவதானிக்கமுடியும். இக்காலங்களிலேயே மனிதன் இயற்கையினையும் வென்றுவிடுவான் என்ற மமதைகள் மனித மனங்களுக்குள் வித்திட முயன்றன.

காலப்போக்கில் பிரபஞ்சத்தின் விஸ்தாரமும், மனிதனின் அறிவு வளர்ச்சியும் இயற்கையினை வெற்றிகொள்ளல் என்ற சொல்லே எவ்வளவு அபத்தமானது என்று அதே மனத்தை வெக்கம் கொள்ள வைத்தது.

இதேவேளை இயற்கை பற்றிய நுண்ணறிவில் ஆறறிவு உள்ள மனிதனை விட ஐந்தறிவுள்ள விலங்கினங்கள் அபாராமாக செயற்பட்ட சம்பவங்களையும் நாம் கவனிக்கலாம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், 2004ஆம் ஆண்டு எமது பிரதேசங்களில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம்.

சரி நாம் இப்போது அந்த ஏழாவது அறிவு என்ற விடயத்திற்கு வருவோம். இந்த ஏழாவது அறிவைக்கூட மனஅதிவளம் மட்டுமின்றி உடல் வலு உச்சத்தினையும், சக்தி உச்சத்தினையும்கூட கவனிக்கவேண்டும் என்று கூறப்படுகின்றது.

இந்த ஏழாவது அறிவின் தோற்றப்பாடுகள் மனித வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய அதி உச்ச அறிவியல் யுகத்தில் இந்த ஏழாவது அறிவு இன்னும் கற்பனைக்கு எட்டாத வகையில் புலப்படும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கே ஈஸ்பி பவர் என்னும் அசாதாரண சக்தியை ஒருவர் கொண்டிருப்பதும், சாதாரண மனிதர்களைவிட மிஞ்சிய அறிவாற்றல், தகவல்களை வைத்திருக்கும் நடைமுறைப்படுத்தும் தன்மைகளை கொண்டிருத்தல், சாத்தியப்படாத சிலவற்றை சாத்தியப்படுத்துபவர்கள் என தென்படும் சிலர் இந்த ஏழாவது அறிவின் வெளிப்பாடுகள் என்று கூறப்படுகின்றது.

சிறப்பு தேர்ச்சிகளின் அடிப்படையில் வெளிப்படும் திறமைகள், அனுபவம் மற்றும், கடுமையான பயிற்சிகளின் அடிப்படையில் வெளிப்படும் திறமைகள் என்பவற்றை தாண்டி அல்லது தவிர்த்து எட்டமுடியாத உச்சங்களை அதிசக்தி வலுக்களை அடையும் வலுவையே அந்த ஏழாவது அறிவு கட்டத்தினுள் இவர்கள் இடுகின்றார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் இந்தவகையில் பட்டியலிடப்படுகின்றார்கள், நொஸ்ரடாமில் இருந்து மிச்சல் பெல்ப்ஸ் வரையான பட்டியல் இவற்றை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

சரி… இந்தவிடயங்கள் இவ்வாறாக இருக்க முக்கியமான விடயத்திற்கு வருவோமானால், இந்த ஏழாவது அறிவு சமுதாயம் ஒன்று உருவானால் இது இன்றைய ஆறாவது அறிவு சமுதாயத்திற்கும், இந்த பூமிக்கும் அழிவுநிலையினை உருவாக்கிவிடும் என்று நினைக்கும் ஒரு அறியவியல்க்கூட்டத்தால் இவ்வாறான ஏழாமறிவின் தோற்றப்பாடுகள் எங்கு புலப்பட்டாலும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது அல்லது அமுக்கப்படுவதாகவும் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திகளில் அவ்வாறான அதிசக்தி ஆற்றலுடைய அறிவுடைய பலர் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக அறிவியல் அதிசக்தி வாய்ந்த சிலர் உலகில் குறிப்பிட்ட விஞ்ஞான ஆய்வகம் ஒன்றினால் உள்வாங்கப்பட்டு, அவர்களின் சக்திகள் கணிப்பிடப்பட்டு தரவுகள் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அழிக்கப்பட்டதாகவும், அதேவேளை வெளியில் இருந்து புகழ்படைத்த சிலர், திட்டமிட்டவகையில் அழிக்கப்பட்டதாகவும், கென்பிஸி தியரிகளின் அடிப்படையிலான சில செய்திகள் உலாவுகின்றன.

இவ்வாறு அழிக்கப்பட்டவர்கள், அல்லது அமுக்கப்படுபவர்கள் பட்டியலில் புரூஸ்லி, மற்றும் சில விளையாட்டுவீரர்களின் பெயர்களும் உள்ளமை ஆச்சரியமாக உள்ளது.

அடுத்த கட்டமாக சுட்டிக்காட்டப்படும் முக்கியமான விடயம் என்னவென்றால், இவ்வாறு நடவடிக்கைகள் சென்றுகொண்டிருந்தாலும், தற்போது பிறக்கும் 60 வீதமான குழந்தைகள், முன்னைய சமுதாயம்போல அல்லாமல் குறிப்பிட்ட வயதுகளில் அந்த சமுதாயத்தால் எட்டப்பட்ட அறிவுகளை விரைவாக எட்டுவது கவனிக்கப்படுகின்றது. ஒருவகையில் இது மரபணுவீத முன்னேற்றம் என்று பார்த்தாலும் மற்றபக்கத்தில் வேறு ஒரு கோணத்தில் ஏழாமறிவின் வரவுகள் பரம்பலாக அதிகரிக்கப்போவதை இது காட்டுவதாகவும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

எது எப்படியாக இருந்தாலும் உலக நியதிகளின் பிரகாரம் நடைபெறவேண்டிய மாற்றங்கள் எப்படி தடுத்தாலும் நடைபெற்றுவிடும் என்பதே யதார்த்தபூர்வமான உண்மையாக உள்ளது.

Thursday, September 8, 2011

வானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான் - அனுபவ பகிர்வு

ஒருவனுடைய திறமைக்கும் வெற்றிக்கும் உந்துதலாக ஆரோக்கியமான ஒரு போட்டியும், திறந்த சவாலும்கூட ஒருவனை எவ்வாறு வெற்றியாளனாக ஆக்கும் என்பதற்கு கடந்த ஒருமாதத்திற்கும்மேலான என் அனுபவம் சிறப்பானதொரு உதாரணமாக இருந்தது.

எதையும் சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஒரு வெற்றியை பெற்றுவிட்டு மற்றவர்களுக்கும் ஒரு மோட்டிவேஸனுக்காக அனுபவங்களை பகிர்ந்துகொள்வதே.. நிதிசார் முகாமைத்துவ, நிர்வாக முகாமைத்துவத்தில் என் ரோல் மொடல்களாக நான் நினைத்திருக்கும் நபர்களின் தனிப்பண்பாக அமைந்துள்ளது.


அந்தவகையிலேயே நான் கடந்த பல நாட்களாக பதிவுலகத்தின் பக்கமே தலைவைத்து படுக்காத அளவுக்கு முழுமூச்சுடன் செயற்பட்டு ஒரு இலக்கினை அடைந்த கதையினை சொல்லவிளைகின்றேன்.

இதில் என்னை நான் பெருமையாக சொல்லிக்கொள்ள முயற்சிக்கவில்லை. பதிவுலகில் புதிதாக தொழில் புரிய புறப்பட்டிருக்கும் இளவல்கள் பலர் உள்ளனர், ஏற்கனவே வாசிப்பு மற்று அறிவுதேடல் உள்ள அவர்களுக்கு இது ஏதோ ஒரு வகையில் அவர்களின் துறைகளில் வெற்றிபெற ஒரு அணில் பிள்ளை உதவியாக இருந்தாலே அதுவே இந்த பதிவுக்கும் என் அனுபவத்திற்கும் கிடைத்த வெற்றி என்று நினைக்கின்றேன்.


ஒரு உயர்ந்த நிறுவனம் எப்போதும் தன் பணியாளர்கள் சகல தரப்பினரையும் சிறப்பு செயற்பாடு நிலையில் வைத்திருக்கவே விருப்பம் கொள்ளும்.

அதற்காகவே அவ்வாறான நிறுவனங்கள் பணியாளர்களின் தரங்களுக்கு ஏற்ப அவர்களுக்கான முகாமைத்துவ, திறமை அபிவிருத்தி, நிதி முகாமைத்துவ, சுய அபிவிருத்தி பயிற்சி, வலுவூட்டல் என பல கருத்தரங்குகளை தனது பணியாளர்களுக்கு வழங்கி அவர்களின் தரங்களை மென்மேலும் உயர்த்த பெருமுயற்சிகளை மேற்கொள்கின்றது.

அது மட்டுமின்றி பிறநாடுகளில் உள்ள சிறப்பான பயிற்சியாளர்களை எமது நாட்டுக்கு வரவழைத்து பல சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதோடு, பிறநாடுகளில் தொழிலால் வெற்றிபெற்றவர்களையும் அழைத்து அவர்களின் அனுபவங்கள், தொழில் வெற்றிக்கு அவர்கள் கைக்கொள்ளும் முறமைகள் என்பவற்றையும் தனது நிறுவன அதிகாரிகளுடன் பகிரும்படி வகை செய்கின்றது.


அத்தோடு தாம் கற்ற கல்விநிலையினை ஒரு பட்டமாக கருதுபவர்கள் என்றும் ஜெயித்ததில்லை. தாம் கற்றவற்றில் புதிய கோட்பாடுகள் பல மேலதிகமாக புகுத்தப்படுவதை இவர்கள் கவனிக்கத்தவறுவதுடன், தங்கள் வட்டத்திலேயே அவர்கள் நிற்கவேண்டிய நிலைமைகளும் பாராதூரமான ஒரு விடையமாக அமைந்துவிடுகின்றது.

மாறாக வெற்றியாளன் தன் கற்றலை பட்டத்திற்கானதாக பார்க்காத பண்புடையவனாக இருப்பதுடன், உலக வர்த்தக ஓட்டத்திற்கு தக்கவாறாக தன்னையும் தன் கற்றலையும் 'அப்டேட்' செய்துகொண்டிருப்பவனாகவே இருப்பான்.


ஓயாத கற்றல் அதன்மூலமானதொரு தேடல், தன் தொழில்சார் வெற்றியாளர்கள் பற்றிய தரவுகள், அவர்களின் வெற்றியின் காரணங்கள், அவர்கள் கைக்கொள்ளும் முறைகள் என்பவற்றை கவனித்துக்கொண்டே, அல்லது தேடி அறிந்துகொண்டே இருந்தால் எம்மை அறியாமல் நாம் அதுவாகவே ஈர்க்கபட்டு செயற்படத்தொடங்குவோம் என்பது பலரின் அனுபவ உண்மை.


ஆனால் இத்தனையும் இருக்கம்போதும் எமக்கிருக்கும் சில பழக்கவழக்கங்கள், ஈர்ப்புகள், மேற்படி எமது இலக்குகளை அடைய சிரமத்தை கொடுத்தால் அவற்றை சிலகாலம் இடைநிறுத்தவோ அல்லது முழுமையாக துரக்கி எறியவோ தயங்காதவர்களாக நாம் எம்மை தயாராக்கவேண்டும்.

முக்கிய உதாரணம், சமுக இணையதளங்களிலான வேலைக்கழிப்பு, வலைப்பூக்கள் பக்கமான அதிக நேரம் செலவிடல்.

அது மட்டுமின்றி எமக்கு இருக்கும் தயக்கங்கள், சுய பின்னடிப்புக்கள், நம்பிக்கை இல்லாமைகள், இவற்றுக்கு மேலாக முன் நிற்கும் சோம்பல், பஞ்சி என்பவற்றை கொழுத்தியேவிடவேண்டும்.


சரி... என் அனுபவத்டதிற்கு வருகின்றேன்.


சில நாட்களின் முன் கொழும்பில் இடம்பெற்ற முகாமைத்துவம் சார் கருத்தரங்கொன்றை வழங்குவதற்காக வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவர் வந்திருந்தார், அவர் பேச தொடங்கியத்தில் இருந்து பேசி முடிக்கும்வரை ஒரு ஊசி விழுந்து சத்தம் வரவில்லை. ஓவ்வொரு சொல்லும் உடலிலும் மனத்திலும் பெரும் புத்துணர்வையே ஏற்படுத்தியிருந்தன.

அந்த கருத்தரங்கை முடித்துவிட்டு ஹொட்டலில் தங்கியிருக்கும்போது நானும் என் தரத்தில் உள்ள சக அதிகாரியும் இது பற்றி பல விடையங்களையும் பேசிக்கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் ஒரு மாதத்தில் அதிகமாக திட்டங்கள், நிகழ்;சி திட்ட ங்கள், அமுலாக்கங்கள், குழு உச்ச செயற்பாடுகள் என்பவற்றை உயர்த்தி எங்கள் வருமானத்தையும் குறிப்பிட்ட ஒரு தொகையினை இலக்காக்கி ஒரு மாதத்தினுள் இவ்வளவும் செய்து அதற்கான ஊதியமாக நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையினை பெறமுடியுமா? என இருவருமே சவால் விட்டு கொண்டோம்.


உண்மையில் எமக்கு போதிய வருமானம் கிடைக்கின்றது என்று நிறுவனம் தரும் செயற்திட்டங்களை மட்டும் செய்து கணிசமான ஊதியத்தை பெற்றுவந்ததே எம் விஸ்பரூபங்கள் அடக்கப்பட்டிருந்ததன் முழுமையான காரணம்.


போட்டி கடந்த மாத ஆரம்பத்திலேயே செயலுக்கு வந்தது. இருவரும் பல திட்டங்களை முன்வைத்தோம், ஆரம்ப முயற்சிகள் சில இருவருக்குமே பெரிதாக வெற்றி இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் விடா முயற்சியாக மோதிக்கொண்டோம். என் செயற்திட்டங்களை நான் பார்ப்பதைவிட கணனித்திரையில் அவர் பார்ப்பதே அதிகமாக இருந்தது, அதுபோலவே என் நிலையும். அடுக்கடுக்காக புதிய புதிய திட்டங்களை போட்டு என் குழுவினரையும் வலுப்படுத்தி இயங்கசெய்தேன். அங்கே இங்கே போக்கு காட்ட நினைத்தவர்களுக்கு ருத்திர தாண்டவமும் ஆடிக்காட்டினேன்.

திட்டங்கள் விரைவு பெற்றன, வெற்றியின் சிகரங்கள் தெரிய ஆரம்பித்தன.

அந்த நேரத்தில் ஆரம்பமாகியது நல்லூர் திருவிழா.. மனைவி, குழந்தை திருவிழா என்ற சிறு வட்டம்வேறு விழுந்தன. சரி... மாலை ஐந்தரையில் இருந்து ஏழுமணிவரை அதற்கு ஒதுக்கினேன். அதன் பின்னரும் நிறுவன வேலைகளை பார்த்தேன்.


நிற்க... இந்தநேரம் ஏன் பதிவு எழுதவில்லை. கடந்த வலைப்பதிவர் ஒன்றுகூடலில்கூட என்னதான் வேலை என்றாலும் பதிவு எழுதலாம் என்று பேசியிருந்தவன் நான்தான் மறுக்கவில்லை. சத்தியமாக இரவு 3 மணியாகினால்க்கூட ஒரு பதிவு எழுத்தியிருக்கலாம். ஆனால் அங்கே மனம் சென்றால் இங்கே இருக்கும் வேகம் வலு குறைந்தவிடும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது தான் முன்னேயே சொல்லியிருக்கின்றேன். எமது முன்னெற்றம் தொழில் என்பவற்றுக்கு பதிவுகள், இணையங்கள் தடை என்றால் அதை தூக்கி எறியவும் தயங்க கூடாது என்று!


ஒரு கட்டத்தில் என் குழுவினருக்கும் என் வேகம் பிடித்துக்கொண்டது. என் ஓட்டத்திற்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யத்தொடங்கினார்கள்.

இதற்கிடையில் பல சமயங்களில் இந்தப்போட்டிகளால் போட்டிபோடும் அதிகாரியும் நானும் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன.

உண்மையை சொல்லவெண்டும் என்றால் சில சில மனக்கசப்புகளும் ஏற்பட்டன.

23ஆம் நாளுக்கு பின்னர் இருவரின் செயற்பாடுகளும் எப்படி என்று மற்றவர் மற்றவரை பார்க்க முடியாதபடி நெட்வேர்க் முறை மாற்றப்பட்டது.

இருவரும் எம் பாட்டிற்கு ஓடினோம். மாத இறுதிநாள் இரவு 10.30 வரை இந்த திட்டத்திற்கான வேலைகள் ஓடி முடிவடைந்தன.

இதில் நான் ஆச்சரியப்பட்ட விடயம் என்னவென்றால் இலகுவான நடைமுறைகள், நிகழ்ச்சி திட்டங்களையே முதலில் தயாரிக்க முடிவெடுத்து செயற்பட்டேன் அனால் ஆரம்பத்தில் அதில் சிறு திருத்தங்கள் செய்யவேண்டிய நிலையும் வந்தது. ஆனால் உச்சவேகத்தில் செயற்பட்டால்கூட பென்டிங்காக பெரிய விடயங்கள் உள்ளனவே என்ற கவலை இரவுகளில் என்னை வெருட்டியவண்ணமே இருந்தது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இறுதிப்பகுதியில் அவை அடுத்தடுத்து மிக இலகுவாக செய்து முடிக்ககூடியதாக இருந்ததே.

இம்மாத ஆரம்பத்திலேயே இன்னுமொரு நிகழ்வுக்காக தம்புள்ளைக்கு நிறுவனத்தால் அழைக்கப்பட்டிருந்தோம். அந்த கருத்தரங்கில் சிறப்பாக செயற்பட்டவர்கள் 10 பேரின் பெயர்கள் இல ங்கை மட்டத்தில் செல்ல ஆரம்பித்தன. 3 ஆவது நபர் பற்றிய விபரம் திரையில் விழுந்தது, அடுத்து இரண்டாவது அதிலும் எம் இருவரின் பெயர்கள் இல்லை, இறுதியாக முதலாவது நபருக்கான ஸ்கிரீன்பிளே செல்ல இருதயத்துடிப்பு அதிகரிக்க ஆவலுடன் பார்த்தோம்.

ஆம்... அங்கே எனது பெயரும் அந்த அதிகாரியின் பெயரும் அந்த இடத்திற்கான இருவராக வந்துகொண்டது.

விழிமுந்தியதோ கரமுந்தியதோ... என்ற வரிகளுக்கு அமைவாக இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் இறுக கட்டி அணைத்தோம். அந்த அணைப்பில் இருவரின் உறுதிம், விடாமுயற்சியும், இருந்தது. எமக்குள் இருந்த போட்டி, சில கசப்புகள், வலிகள் அத்தனையும் உண்மையில் அந்த அணைப்பில் அழிந்தபோகின. ஓன்றல்ல இரண்டல்ல சுமார் 10 நிமிடங்கள் கட்டிப்பிடித்து ஒரவரை ஒரவர் மாறி மாறி வாழ்த்திக்கொண்டிருந்தோம்.

மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி இதுதான் என்பதை இருவரும் உணர்ந்தோம்.


இன்று எமது கைகளில் நாம் எட்ட நினைத்த ஊதியம், எமக்கு பக்கத்துணையாக நின்ற குழுவினர் இன்று மலேசியா, சிங்கப்பூருக்கான சுற்றுலாவுக்கு செல்கின்றனர்.

சரி..கொஞ்சம் ஓய்வாக இருப்போம் என நாம் நினைத்தாலும் இனி எம்மை எம் நிறுவனம் விடப்போவதில்லை.


ஆம்... ஒரே மாதம் உங்களால் முடியும் என்று ஒரு விடயத்தை அடைய உங்கள் தொழிலில் விடாமுயற்சியுடன் முயன்றுபாருங்கள்...

நிற்சயமாக உங்களால் முடியும்.


LinkWithin

Related Posts with Thumbnails