Saturday, May 4, 2013

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.......வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது.
மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்புகை, என முழுவதும் மனதுக்குள்ளும் ஒரு எரிவை ஏற்படுத்திவிடும்.

பரபரப்புடன் பிங் கலர் குடையை பிடித்துக்கொண்டு நிலப்பக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தவள், நெருசலில் சில ஆண்டிமாரும், சில நடுத்தரங்களும் உஸ்.. உஸ் கொட்டியபோதுதான், குடை அவர்களுடன் உரசிப்பார்த்ததை உணர்ந்து அவசரமாக தனது குடையினை சுருக்கிக்கொண்டாள்.
அவள்  இலங்கையில்தான் வசித்துவந்தாலும் சத்தியமாகத்தான் அவளுக்கு வெயில் ஒத்துவராது.

நிலப்பக்கத்தில் இருந்து கடற்பக்கமாக மாறினால் கொஞ்சம் வெயில் குறைவாகப்படும் என்று அவளது ஆறாவது அறிவு அந்தப்பக்கம் இழுக்கவே மற்றப்பக்கமாக கடக்க எத்தனித்தவள் தன்னிலை மறந்து கொஞ்சநேரம் ஸ்தம்பித்து நின்றாள்...
ஆமாம் அவளைச்சுற்றி நுவரேலியாவின் குளிர் சூழ தொடங்கியது, கொழுத்தும் வெயில் சண்கிளாஸினூடே பார்ப்பதுபோல மங்கிப்போனது, அவளைச்சூழ புரூட் பெர்பியூம் நறுமணம் பரவ தொடங்கியது......
ஆம் நிச்சயமாக அவன் வந்துவிட்டான்...... இது அவனேதான் என்று உணர்ந்த மறுகணமே அவளது முகம் இன்னும் சிவந்துகொண்டது. 

ஓவ்வொன்றையும் இரசித்தபோதும் அவன் பின்தொடர்வதை உணர்ந்த அவள், அவசரமாக தன் நடையினை வேகமாக்கிக்கொண்டாள். அவன் வந்த அறிகுறிகள் ஒன்றும் குறையாததைக்கண்டு அவன் தனது நடைக்கு ஈடாகவே தானும் பின்தொடர்வதை அறிந்துகொண்டாள். மனதிற்குள் விபரிக்கமுடியாத ஒரு கிளுகிளுப்பு! ஆதனால் அவளுக்கு பயங்கரமாக ஒரு படபடப்பு ஏற்பட்டது.

தான் முதல் நினைத்ததுபோலவே வாகனங்களை சமாளித்துக்கொண்டு அவசரமாக எதிர்த்திசை சென்று, அதே அவரமாக தரிப்பிடத்தில் இருந்து புறப்பட தொடங்கிய பஸ்ஸில் அது என்ன பஸ்? எத்தனையாம் இலக்கம் என்பதைக்கூட பார்க்காமல் ஏறிக்கொண்டாள்.
பஸ்ஸில் கொஞ்சம் கூட்டம்தான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நின்றவள், தன் அருகில் நிலவிய குளிர்மை அதிகரித்திருப்பதையும், பூருட் பெர்பியூம் மிக அருகில் மணப்பதையும் உணர்ந்து கால்கள் நடுங்கத்தொடங்க பயந்தவளாக அதேநேரம் அதை இரசிப்பவளாக முகத்தில் சிறு புன்முறுவல் பூத்தாள்.

என்ன 155 பஸ்ல ஏறியிருக்கிறீங்க? மோதரைக்குத்தானே போறீங்க? என்று அவள் காதுமடல்களின் பின்னால் குழைவான குரலில் அவனது குரலைக்கேட்டதும் சொக்கித்து நின்றாள். 
அந்தநேரத்தில் கொன்டக்டர் வரவே மோதரைக்கு இரண்டு என்று சிங்களத்தில் சொல்லி காசைக்கொடுத்தான் அவன்.
 மற்ற ஆள் யார்? என்று சிங்களத்தில் கென்டக்டர் கேட்டபோதுதான் இயல்பு உலகத்திற்கு வந்தான் அந்த காதல் கிறுக்கன்.

Thursday, May 2, 2013

நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை.ஆம் அது ஒரு காலம்....... யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை அமைதி காக்கத்தான் வந்திருக்குது, எங்கட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று கனக்கக்கப்பேர் அவையை பூப்போட்டு வரவேற்ற காலம்.
அதாவது 1987 ஆம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மிஞ்சி மிஞ்சிப்போனால் வெறும் இரண்டு மாத்களே. அதற்குள் என்றுமில்லாத விமர்சையாக வந்து போன நல்லூர்த்திருவிழா!

சும்மா சொல்லக்கூடாது இந்த இரண்டு மாதங்களும் யாழ்ப்;பாணத்தைப் பொறுத்தவரை ஒரு ஜொலிபுள் மாதங்கள் தான். அப்ப விடலை கண்ட அண்ணை அக்கா மார், ரியூசனுகளுக்கும் சாலியில (ஒரு வகை மோட்டார் சைக்கிள்) போய் இறங்கினது இப்பவும் என் கண்ணில் நிற்கிறது.
ஜி ரென் டெக்குகளும், சொனி ரீவிகளும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திறங்கி வீடியோ வாடைக்கு விடுறவைபாடு படு பிஸியாக இருந்த காலகட்டம் அது.

இந்தியாவில இருந்து பாஸ்போட் இல்லாம வந்திறங்கிய அமைதி காக்கும் படையுடன், யாழ்ப்பாணத்திற்கு அந்த நதியா மோகமும் வந்திறங்கியதாகவே இப்பவும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.
தமிழ்நாட்டுக்காரார் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும், அங்க முதல் முதல் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினதென்டால் அது குஸ்புக்கு என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்...... ஆனால் யாழ்ப்பாணத்திலை அந்தநேரம் நதியாக்கு இருந்த மார்க்கட்டே தனி ரகம்.

அந்த நாட்களில் பூக்கும் பூக்கள் எல்லாம் நதியாவாகவே பல அண்ணன்மாருக்கு பூத்தன, தலை வெட்டிலிருந்து பாவாடை வெட்டுவரை நதியாவாகவே பல அக்காமார் மாற முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
நதியாவின் வகை வகையான புகைப்படங்கள் சேர்ப்பதிலே பல அண்ணன்மாருக்கு போட்டி நடந்துகொண்டிருந்தது. 
நதியாவின் புண்ணியத்தில் பான்ஸி கடைகள் எல்லாம் வீறுகொண்டு எழுந்து கூட்டத்தில் சிக்கித்தவித்தன. பல பான்ஸி கடைக்காரர்களின் யாழ்ப்பாண பீக் ரைம் இதுதான் என்று இன்றும் பல மூத்த பான்ஸி கடைக்காரார்கள் சொல்லிக்கொண்டிருகின்றார்கள்.

புடவைக்கடைகளில் நதியா புரொக், நதியா ஸ்கேட், நதியா புளவுஸ், நதியா பெல்ட், நதியா பியாமா என்று நிறைய, பன்ஸி கடைகளில் நதியா தோடு, நதியா வளையல், நதியா ஹேர் பான்ட், நதியா கம்மல், நதியா பட்டன் என ஏராளமான நதியா ஐட்டங்கள் வெளியில் எடுத்து 15 நமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
மறு புறம் நதியா செருப்பு, நதியா சைக்கிள், நதியா பொட்டு, நதியா ஹான்ட் பாக் என குவிந்துகொண்டிருந்தன.
இவற்றில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாம் நதியா திரைப்படங்களில் உடுத்து, அணிந்து நடித்த பார்க்கக்கூடிய ஐட்டங்கள்தான்.
ஆனால் அதே நேரத்தில் நதியா சென்ட் என்று ஒரு ஜஸ்மின் நறுமண சென்ட் வகை அப்போது பெண்கள் பெரும்பாலானவர்கள் பாவித்த ஒன்று!

சரி........ இவ்வாறு வாங்கிக்குவித்தவற்றை போட்டுக்காட்டுவதற்கான களம் ஒன்று வேண்டாமா? கணக்காக வந்தது நல்லூர் கந்தன் திருவிழா. அப்பா அந்த 25 நாட்களையும் வேற எந்த வருட 25 நாட்களுடனும் ஒப்பிட முடியுமா என்ன?
நதியா ஹாவ்சாறிகள் நிறைந்து நின்றன நல்லூர் வீதிகள் எங்கும்.

மேற்சொன்ன நதியா வகையறாக்களை விட மேலும் பல நதியா ஐட்டங்கள் வந்து குவிந்தன இதைப்பார்த்து வேறு விற்பனையாளர்கள் கூட தமது பொருட்களையும் நதியா என்ற அடைமொழியுடனே விற்கத்தொடங்கினர்.
நதியா ஐஸ்கிறீமில் இருந்து நதியா கச்சான் வரை சென்றது.

உண்மைதான் என்னைப்பொறுத்தவரை நதியா, மற்றும் நதியா கோஸ்மட்டிக் பொருட்களுக்கு அப்போதைய யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த வரவேற்பை அதன் முன்போ, அதன் பின்போ வேறு யாருக்கும் தரவில்லை.
யாழ்ப்பாணம் ஜொலிபுள்ளாக இருந்த அந்த 1987 ஜூலை, ஓகஸ்ட்டு மாதங்களில் அடித்த நதியாப்புயல் அதை நினைத்துப்பார்க்காத அளவுக்கு கரைபுரண்டு சென்றது அடுத்தடுத்து நிகழ்ந்த யுத்தங்களால்.

Wednesday, May 1, 2013

வல்லமை தாராயோ..........
இந்த வரிகள் இப்போதெல்லாம் அடிக்கடி இதயப்பொருமலுடன் முணுமுணுத்துக்கொள்ளும் வறட்சியான வார்த்தைகளாக இதயத்தில் தொக்கி நிக்கின்றது. 
'கலியுக முடிவுக்காலம் என குறிப்பிடப்பட்ட விபரணங்கள் எமக்கே நடப்பதுபோல ஒரு முரட்சியும் அப்பப்போ மிரட்டிக்கொண்டுதான் இருகின்றது'

உலகப்பரப்பில் நாம் யார்? நாம் சபிக்கப்பட்ட ஒரு இனமா? அரசியல் அநாதைகளா?
இவையே மனம் முழுவதும் மரணவேதனையை விட அதிக ரணம் தரும் சுய அதிஉச்ச கேள்வியாக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் துளைத்துக்கொண்டிருக்கின்றது.

கால தேச வர்த்த மானங்களைத்தாண்டி ஒரு முடிவின்றி வரையறையின்றி அல்லலும், இன்னலும்;தான் பரிசுகளாக மாறி மாறி வருவதென்றால் வாழ்வியலில் எங்கோ ஆழமான ஒரு புரழ்வு இருப்பதாகவே தெரியும்.
மறுபுறம் முடிவின்றி தொடரும் அல்லல்களின் இடையே பல தலைமுறைகள் மாறிவிட்டன. தலைமுறைகளின் சிந்தனை வயப்புகள் பெரும் வியப்பு நிலைக்கு இட்டுச்செல்கின்றன.

இந்நிலைக்கு காரணம் அவைதான், அவர்கள்தான், அவங்கள்தான், என மாறி மாறி விரல்களை சுட்டிக்கொட்டிக்கொண்டிப்பதிலேயே காலங்கள் கரைந்துகொண்டிருகின்றது. 
வரலாற்று, பூகோள, அமைவிட, கலாசார இருப்புகள்தான் நமக்கு பாதகமாகப்போகினவோ தெரியாது! 
சரியான ஒரு அரசியல் தலைமை இல்லை, பொறுப்பான ஒரு வழிகாட்டல் இல்லை, தோழ்கொடுக்க ஒரு நாடுகூட இல்;லை, அடக்கு முறையை எதிர்க்க ஒரு நாதி இல்லை, நாளைகள் மீது நம்பிக்கை மட்டும் எப்படி வரும்? 

இப்போதெல்லாம் நம்மில் பலரை பார்த்திருக்கின்றேன், எதையும் யோசிக்காமல், பத்திரிகை கூட பார்க்காமல் கஸ்டப்பட்டு தாம் உண்டு தம்பாடு உண்டு என்று இருக்கவேண்டும் என்றே பிரயத்தனம் எடுத்து வாழப்பழகுகின்றார்;கள், இருந்தபோதிலும் ஏதோ ஒரு வகையில் அவர்களையும் அக்கிரமங்களும், அஜாக்கிரகங்களும் துரத்திக்;கொண்டுதான் இருகின்றன.

ஒரு முப்பது வயதை கடந்து அடுத்த சந்ததியையும் கைகளில் ஏற்தியுள்ள பெண் ஒருவர்  'நான் பிறந்தது மயிலிட்டி ஆனால் நான் இன்றுவரை என் இடத்தில் வாழ்ந்ததில்லை' என கண்களின் ஈரத்துடன் சொல்வது ஒன்றும் செய்திக்;கான தொனிப்பொருள் இல்லை, அந்த சொல்லின் உள்ளே அவளின் ஆணிவேரே அறுக்கப்பட்ட வேதனை அடங்கியுள்ளது.

நாதியற்று குற்றுயிராய்க்கிடக்கும் ஒரு சமுதாயம் வேதனையுடன் வான் பார்த்து நிற்பதென்னமோ.... அட எங்காவது ஒரு ஒளிக்கீற்றாவது தென்படுகின்றதா என்பதுதான். இப்போது தென்படும் எரிகற்களை எல்லாம் நட்சததிரங்கள் என்று நம்பினால் மீண்டும் ஒரு ஏமாற்றததுடன் நிரந்தரமாக கண்மூடுவதை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

மீண்டும் இதெற்கெல்லாம் காரணம் அவங்கள்தான், அவர்தான், அவைதான், என்று சுட்டுவிரல்களைக் காட்டாமல் ஒட்டுமொத்தமாக உ(எ)ங்கள் யாருக்குமே வல்லமை இல்லை என்ற பெரிய உண்மையை ஒத்துக்கொண்டு.
இனியாவது சிந்தித்து சாணக்கியத்தனமாக வல்லமையாக இருக்க முயற்சி செய்வோமா?

(அடடா...... இந்த பதிவை பொறித்துக்கொண்டு இருக்கும்போது வீதியால் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது என ஒரு ஐஸ்பழ வாகன ஒலிபெருக்கி பாடிக்கொண்டு செல்கின்றது)

LinkWithin

Related Posts with Thumbnails