இன்று நான் பதிவிடல் ஒன்றை மெற்கொண்டால் அது எனது ஐம்பதாவது பதிவாக இருக்கும். அனால் இன்னும் ஒரு முக்கியமான ஐம்பதுடன் ஏதேட்சையாக என்பதிவுகள் ஐம்பதை எட்டிய நாளும் பொருந்தியுள்ளது புதிராகவே உள்ளது.
இன்றுதான் தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி பதித்தநாள்;. இன்று அவரது கலைப்பணிக்கு பொன்விழா நாள், அதாவது 50ஆவது கலை உலக நிறைவு நாள்.
1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் திகதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்தார் கமல்ஹாசன்.
அப்புறம் மேலும் சொன்னப்போனால் கமல்ஹாசன் பற்றிய ஒரு பதிவாகவே இந்தப்பதிவு மாறிவிடும். ஏன் என்றால் அந்த அளவுக்கு நான் அவரின் இரசிகர்களில் ஒருவன்.
பதிவுலகத்திற்கும், இணையத்தளங்களுக்கும் நான் புதியவன் அல்ல, என்பது பல மூத்த பதிவுலக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், மற்றும் உலகத்தமிழ் ஊடக நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த வேளைகளில் எழுத்துக்கள் என்னை உள்வாங்கிக்கொண்டபோது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கின்றேன்….
1992 ஆம் அண்டு, நான் ஆண்டு 09 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது (அதற்கு முன்னர் சிறுவர் மலர்கள், ஞாயிறு இதழ்களில் கேட்ட கதைகள், சொல்லித்தந்த கட்டுரைகள், நண்பர்களுடன் பகிரும் நொடிகள் என்பன எழுதி பிரசுரிக்கப்பட்டதும் உண்டு) அப்போது யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த அறிவுக்களங்சியம் நூலில் பல கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கப்பட்டது. அந்தக்காட்சட்டைப்பருவங்களில், கேட்கப்படும் கட்டுரைகளை எழுதி அஞ்சலிட்டுவிட்டு, அடுத்த சஞ்சிகை வரும் என ஒவ்வொருநாளும் நகம்கடித்திருப்பேன் வந்தவுடன் ஓடிச்சென்று அதைவாங்கி அதில் எனது கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிந்தவுடன், நல்லூரின் முன்னால் உள்ள புத்தக்கடையில் இருந்து எனது வீடுவரை நடக்கும்போது எப்படித்தான் எனக்குள் ஒரு கம்பீரம் புகுந்துகொள்ளுமோ தெரியாது. அன்றில் இருந்து தேடிப்படிக்கவும், படித்ததை வைத்து கிறுக்கவும் ஆரம்பித்தேன். நூலகம் சென்று படிப்பது, யாரிடமும் இரவல் வாங்கி படிப்பது என்பவை எனக்கு சரிப்பட்டுவராத காரணத்தினால் தேவையான புத்தகங்களை சொந்தமாக வாங்கியே படிக்கப்பழகிக்கொண்டேன். அந்தப்பருவங்களில் ராணிக்கொமிக்ஸ் மாயாவியுடன் மற்ற மாணவர்கள் மாயாவியின் மண்டை ஓட்டுக்குறியை ஆராய்ச்சி செய்யும்போது நான் சேகுவாராவைப்பற்றி முழுமையாக அறிய அரம்பித்துவிட்டேன். இதைக்கண்டுபிடித்து என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் (யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் துணைவியார்.)

அதன்பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய ஈழநாதம், நடத்திய 15 வயதிற்கிடையலானவர்களுக்கான கட்டரைப்போட்டியில் எனக்கு முதலாமிடம் கிடைத்தது. அதேபோல தமிழ்த்தின போட்டிகளில் கட்டுரை, சிறுகதை இரண்டுக்கும் ஒவ்வொருமுறையும் மாவட்ட மட்டங்கள் வரை போய் வென்றுவந்தேன்.(ஏன் தேசிய மட்டத்திற்கு போகவில்லை என்று கேட்பீர்கள் அன்றைய சூழ்நிலையில் அதி உச்சமாக நாங்கள் மாவட்ட மட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டோம். அதேபோல மறுபக்கம் கவிதைகளில் நண்பர் திருமயூரனும், பேச்சுக்களில் நண்பர் பிரியதீபன், நண்பர் திருக்குமரன் அகியோர் கலக்கிக்கொண்டிருந்தநேரம் அது.
1994 ஆம் ஆண்டு சாதாரண தரப்பிரீட்சைகளை முடித்து. 1995ஆம் ஆண்டு உயர்தரத்தில் நாங்கள் கற்கத்தொடங்கிய அந்த ஆண்டு என்னைப்பொறுத்தவரையில் என் எழுத்துக்களின் உச்சம் என்றுதான் பெருமிதம் கொள்வேன்.
அந்தக்காலம் மிக அழகானது. அறிந்தும் அறிமால் இருந்த புதிர்களுக்கு மேலும் புதிர்போட்ட காலங்கள் அவை. என்ன அதிசயம்! அதுவரை என்பகத்தில் பேசாமல் இருந்த பல நண்பர்களும், திடீரென கவிஞர்கள் ஆகிய பருவங்கள் அது. விவாத மேடைகளில் அனல் பறந்திருக்கின்றது. சில நண்பர்களின் ஆணித்தரமான விவாதங்களால் என் கர்வங்கள் தகர்ந்திருக்கின்றன. மீண்டும் எமது உயர்தரப்பரீட்சை நெருங்கும் 1997ஆம் ஆண்டு, பேராதனையில் பொறியியல் மாணவனான வரப்பிரகாஷ் என்ற மாணவன் பகிடிவதை, மிருகவதை ஆகியதால் இறந்துபோனான் எனக்கேட்டு ஆத்திரத்தில் உதயனுக்கு நான் எழுதிய பகிடிவதை பற்றிய கட்டுரையுடன் சமகாலநடப்பு தொடர்பாக, வெளியப்பiடான ஒரு எழுத்தாளனாக நான் உருவாகினேன். அந்த கட்டுரை அப்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாவர்கள் மத்தியில் (பலரும் எனக்கு தெரிந்தவர்கள்) ஒரு அலையினை ஏற்படுத்தி, ஒருவாரம் நான் ஒழிந்துதிரிந்த காலமது.

அதன்பின்னர் உதயன்பத்திரிகையில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அதேபோல ஈழநாதத்திலும், தின முரசிலும், எனது சில கட்டுரைகள், கவிதைகள், கதைகள், சொந்தப்பெயரிலேயே வெளிவந்தன.
அதன்பின்னர் பல்கலை உயர்கல்விக்காக நான் கொழும்பு வந்து, சிலகாலங்கள் கல்வியுடன் போனதால் எழுதும் வாய்ப்பு குறைந்தது. அதன் பின்னர் சுடர் ஒளி பத்திரிகை வரவைத்தொடர்ந்து பல ஆக்கங்கள், அனேகமாக அரசியல் ஆக்கங்களை எழுதினேன்.
மற்றப்பக்கம் என் கல்வித்தேடல் சட்டம், சமுகவிஞ்ஞானம் என்று போய்கொண்டிருந்தது. இயல்பாகவே ஊடகத்துறைமேல் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செய்தி ஆசிரியராக, தயாரிப்பாளராக, சங்சிகை ஒன்றின் ஆசிரியராக, செய்தி இணையம் ஒன்றின் அமைப்பாளராக, அசிரியராக, சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, இலங்கைக்கு அப்பாலும் உள்ள எழுத்து ஊடங்களின் கட்டுரை அசிரியராக, இணைய எழுத்தாளனாக என பல பாத்திரங்களுக்கு ஊடகம் என்னை இட்டுச்சென்றது. சில கட்டங்களில், தயாரிப்பு, ஸகிரிப்ட் எழுதல், நிகழ்ச்சி வழங்கல், ஒளித்தொகுப்பு, பொன்ற பலவேலைகளும் தனி ஆளான என்மீது விழுந்தவைகளும் உண்டு. அனேகமாக அப்போதெல்லாம் எனது சொந்தப்பெயரில் எந்த ஆக்கத்தினையும் எழுதவில்லை, கல்கி, மேகநாதன், நல்லைமைந்தன் ஆகிய பெயர்களில் எழுதிவந்தேன்.
பல காலங்களாகவே நண்பர்கள் வலைப்பதிவு ஒன்றை எற்படுத்தி எழுதுமாறு சொல்லி வந்தனர் நானும் 2003 தொடக்கம் பல புளக்களை பல பெயர்களில் தொடங்கி, பின்னர் அப்படியே கைவிடப்பட்ட வரலாறுகளே பெரும்பாலும் உண்டு. இந்த நிலையில்த்தான் எனது சொந்தப்பெயரிலேயே சுய முகவரியுடன் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். வேலைப்பழுக்களிலும், கற்றல் நடவடிக்கைகளுக்கும், குடும்பவிடயங்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லாமல் இந்த வலைப்பதிவு மட்டும் போய்க்கொண்டிருக்கின்றது, இந்த மூன்றுமாதங்களில் ஐம்பதாவது பதிவை தொட்டு நிற்பதும் எனக்கே பாரிய ஆச்சரியமாகவே உள்ளது.
உண்மையினைச்சொல்லப்போவதென்றால் பெரும்பாலான பதிவுகளை நான் பதிவேற்றும்போது பெம்பாலும் நேரம் நள்ளிரவு 12 மணியினை தாண்டியிக்கும். இருப்பினும் இந்த வலைப்பதிவில் எனது எழுத்து நடையினையே மாற்றி நான் பதிவிடுகின்றேன் என்பது உண்மைதான். ஏன் எனின் எனது முன்னைய பத்திரிகை மற்றும் பிரபல கணினிவலைப்பதிவு முகவரியில் நான் கைக்கொளும் எழுத்து நடையினை இதில் கைக்கொள்ளவில்லை. பல நண்பர்கள் இதனை என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் வலைப்பதிவுகளில் பலதரப்பட்டவர்களும் உலாவருவார்கள் என்பதால் எழுத்துக்கள் மிக எழிமையாக இருக்கட்டும் என மூத்த இலக்கியவாதி ஒருவர் எனக்கு அறிவுரை கூறியதால் மட்டுமே.
இதேவேளை இந்த வலையமைப்பில் தொடர்ந்தும் எனக்கு உறுதுணையாக அபிப்பிராயங்களை தெரிவிக்கும் நண்பர்கள், அதிக பின்னூட்டம் இடும் நண்பர்களான பிரதீப், அபர்ணா, மனோன்மணி, நிஜாம், மருத்தவர்.முருகானந்தம், கவிஞர்.எதுகைமோனையான், நண்பர் கோபி மற்றும் நான் யூதர்கள் -தமிழர்கள் என்ற பதிவை இட்டுவந்தபோது என்னுடன் மின்- அஞ்சல்வாயிலாக பல விடயங்கள் குறித்து அராய்ந்து ஆதரவு தந்த பல நாடுகளில் இருந்த தமிழ் இளையோர் அமைப்புக்கள், என் கட்டுரையினை அனைவரினதும் கண்ணுக்கு படவைத்த தமிழ்த்திரட்டிகள் அனைவருக்கும் இந்தநேரத்தில் என் நன்றிகள்.
அடுத்து இப்போது முக்கியம் பெற்றுள்ள ஒரு செய்தி இலங்கை பதிவாளர் சந்திப்பு. இது மிக மிக வரவேற்கத்தக்க ஒன்றே. இலங்கை பதிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தை கொடுத்து, ஒரு வட்டத்தினர், ஒரு குழுவினரின் ஆதிக்கத்தினுள் அந்த அமைப்பினை வைத்திருக்காமல் அனைத்து பதிவாளர்களின் கருத்துக்களுக்கும் உரிய கௌரவம் அளித்து இந்த சந்திப்புக்கள், தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் ஆக்கபூர்வமாகன கருத்தரங்குகள், இலக்கிய முயற்சிகளுக்கு வழிகோருவார்கள் என நம்புகின்றேன். தற்போது நான் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் குறிப்பிட்ட நாளை அண்டிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் உள்ளதாலும் இந்த கலந்துரையாடலுக்கு சமுகமளிக்க என்னால் முடியவில்லை என்பது மனவேதனையே. ஐம்பதை தொட்டு விட்ட என்பதிவுகள் 5000களை தாண்டும்வரை இயற்கையும், என் தன்னமிக்கையும், எனது மனமும், நண்பர்களாகிய நீங்களும் எனக்கு ஒத்துளைப்பீர்களாக..









































