Friday, October 23, 2009

Where the Wild Things Are மற்றும் ஒரு சிறுவர் விருந்து…


1963ஆம் ஆண்டில் அமெரிக்க சிறுவர் புனைகதை எழுத்தாளர், மவுரைஸ் ஷென்டக் என்பரால் சித்திரக்கதைப்புத்தகமாக வெளியடப்பட்ட கதையே “Where the Wild Things Are” என்பதாகும்.
அன்றில் இருந்து இன்றுவரை காலத்திற்கு காலம் மீள்பதிப்பு இடப்பட்டுவந்த இந்த சித்திரக்கதை பெரும் வரவேற்பையும், புகழையும் சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப்பருவத்தோரிடம் இருந்து பெற்றுக்கொண்டது.

2000ஆம் ஆண்டின் பின்னர் இந்த Where the Wild Things Are என்ற கதைகளை வைத்துகொண்டு பல முப்பரிமாண கார்ட்டூன் சித்திரங்கள், வீடியோ கேம்ஸ் என்பன வந்து மிகப்பிரபலம் பெற்றன.
அதேவேளை இறுதியாக 2008ஆம் ஆண்டு மீள்பிரசும் செய்யப்பட்ட Where the Wild Things Are சித்திரக்கதைப்புத்தகங்கள் 19 மில்லியன் பிரதிகள் உலகம் பூராகவும் விற்றுத் தீர்ந்தமை பலரையும் ஆச்சரியப்படவைத்தது.


இந்த நிலையிலேயே இந்த Where the Wild Things Are கடந்த வெள்ளிக்கிழமை (16.10.2009) அன்று அமெரிக்காவில் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கின்றது.
தற்போதெல்லாம் ஈரானியத்திரைப்படங்களைப்போல சர்வதேச ரீதியிலும் சிறுவர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவருவதும் அவை வெற்றிபெறுவதும் வரவேற்கத்தக்க விடயங்களாகும்.

ஆனால் ஒரு Where the Wild Things Are வைவிட, Harry potter விட சிறந்த கதைகளை கேட்டுவளர்ந்த நாங்கள் அவற்றை திரைப்படமாக எடுக்கவோ, எடுத்தாலும் அவை வெற்றிபெறுவதோ தற்போதைய நிலையில் வாய்ப்புக்கள் இங்கு அறவே இல்லை என்றே கூறவேண்டும்.


சரி.. Where the Wild Things Are திரைப்படம் பற்றிய பார்வைக்கு வருவோம்.
இந்த திரைப்படத்தின் நாயகன் மக்ஸ். கொஞ்சம் கோபசுபாவம் உடையவன், தன்னிடன் விளையாடவராத அக்காமீதும், தன்னுடன் நேரம் ஒதுக்கிக்கொள்ளமுடியாத அம்மாவிடமும் கோபம் கொண்டு தனிமைப்படுபவன்.
கற்கும் பாடசாலையில்க்கூட ஒரு பிடிப்பு அவனிடம் இல்லை.
ஒரு இரவில் அவன் தனிமையில் தன் அறையில் இருக்கின்றான் தனது தாயாருடன் உரையாடுவதற்காக வீட்டின் வராந்தாவுக்கு வருகின்றான், அங்கே அவனது தாய் அவளது காதலனுடன் பேசிக்கொண்டு இருக்கின்றாள்.

தாய்க்கும் மகனுக்கும் இடையில் எற்படும் வாக்குவாதத்தை தொடர்ந்து, அவன் உச்சக்கட்ட கோபத்தில் ஓடுகின்றான், வீட்டு கதவைத்தாண்டி, வீதியைத்தாண்டி, புதர்களைத்தாண்டி, சிறு காட்டினைத்தாண்டி என ஓடி, இறுதியில் ஒரு கடற்கரையினை அடைந்து அங்கு காணப்படும் ஒரு சிறிய படகில் எறி அந்த படகை திசையற்ற இலக்கு நோக்கிச்செலுத்துகின்றான் மக்ஸ்.


நெடுந்தூர பயணத்தின்பின் அவனுக்கு கழைப்பு எற்படுகின்றது, யாராவது உள்ளீர்களா என குரல் எழுப்புகின்றான். அப்போது சற்று தொலைவில் ஒரு தீவு ஒன்று தென்படுகின்றது. படகை அந்தத்தீவினை நோக்கிச்செலுத்துகின்றான்.
பேரலைகள் அவன் படகினை அலைக்கழித்தாலும் அந்த தீவினை நோக்கி பயணமாகி அந்த தீவினை அடைகின்றான்.


அந்த தீவில் நெருப்பு மூட்டப்பட்டு இருக்கும், அங்கு பலரது பேச்சுக்கள் கேட்பதை அறிந்து பதுங்கியிருந்து பார்க்கின்றான். அப்போது விசித்திரமான தோற்றங்களை உடைய அளவில் பெருத்த விகாரமான ஜந்துக்கள் அந்த தீவில் உள்ளதை மக்ஸ் அறிகின்றான்.
அவர்களுக்கு தன்னை அறிமுகம் செய்யும் மக்ஸ் தான் ஒரு இளவரசன் என்றும், அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கே அங்கே வந்துள்ளதாகவும் கூறுகின்றான், அந்த ஜந்துக்களும் அவனை தமது அரசனாக முடிசூட்டி அன்டன் பழகுகின்றன.

அவர்களுடன் அவன் அறிமுகமாகி மறுபடியும் கப்பலில் ஏறி தனது இருப்பிடம் செல்ல மட்டும் பல சுவாரகசியமான கட்டங்களையும், இவன் அங்கு செய்யும் மாற்றங்களையும், குதூகலங்களையும் சிறப்பாக படம்பிடித்துள்ளமை இந்தப்படத்தின் சிறப்பு.


விகாரமான பெரிய முகங்களை உடைய ஜந்துக்கள் என்பதனால் அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுகளை முகத்தில் கொண்டுவருவது மிகக்கஸ்டமாக உள்ளமை தெரிகின்றது.
அத்துடன் ஹரிப்பொட்டர்போல மந்திர தந்திர சாகசங்கள் இதில் இல்லை என்பதனால் அப்படி ஒரு கட்டங்களை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு (நான் உட்பட) இந்த திரைப்படம் ஏமாற்றமே. உரையாடல் அதிகமாக இருக்கும், அனால் அந்த உரையாடல்கள் மிக சுவையானதாகவும், உணர்வானதாகவும் இருக்கும்.

கதையில் வருவது போல பல சுவாரகசியங்களை சொல்ல இந்த திரைப்படம் தவறிவிட்டது என்று பல விமர்சனக்குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. எனினும் அமெரிக்க சிறுவர்கள் கடந்த ஒருவாரமாக அமெரிக்க திரையரங்குகளுக்கு படையெடுத்தவண்ணமே உள்ளனர்.

(பிற்குறிப்பு - இந்த பதிவை எழுதிவிட்டு பதிவேற்ற நினைத்தபோது மக்கர் பண்ணிய பிளாக்கருக்கு ஒரு குட்டு)

Monday, October 19, 2009

கவிதையும் இல்லை! ஹைக்கூவும் இல்லை!!

யதார்த்தம்.


மரித்துப்போனவனின்
மனதுக்கு மட்டும் புரியும் எது யதார்தம்
விஞ்ஞானம் முரணாக…

தேவை.


தேவை… . தேவையென்ற கேள்விகள்
ஏது மற்ற நிரம்பல்கள்.

ஆளம்.


அற்புதங்கள், ஆச்சரியங்கள்
ஐ..ஐ..யோ முடிந்துவிட்டதே என் ஆயுள்.

மனைவி.


நிச்சயிக்கப்படாத நிட்சயதார்தம்.
தேவதையின் அருள், சாத்தானின் சாபம்
இரண்டினதும் ஒரே உருவம்.

கடவுள்.


உயிர்களுக்காக அத்தனை அழகும் படைத்தும்
பொறித்துவிட்டு போகவில்லை
உபயம் நான் என்று…

சாத்தான்.


ஸ்ரீ லங்கா -ஈழத்தில் தமிழர்படுகொலை..
சீனா -திபெத்தை ஆக்கிரமித்தது..
பாகிஸ்தான் -ஸ்ரீ லங்காவுக்கு உதவி…
ஆரம்பங்கள் அதன் விம்பங்கள்.

தமிழன்.


உலகமெங்கும் பறந்து
பிறர்கூடுகளில் முட்டையிடும் பறவைக்கு
சொந்தமாக இல்லை ஒரு வளை.

துரோகி.


அடிப்படை மரபுரிமைகள்
என்றும் மறைவதில்லையாம்
சொல்கின்றது விஞ்ஞானம்…
உண்மைதான்..ஆப்பிள் கடித்த நாள்முதல்
தொடர்கின்றதே..

நட்பு.

சார்பியல் பொய்யில்லை,
தனித்து நிற்காத அட்டைகள்
சார்ந்து தலை முட்டி நிலைத்து நிற்கின்றதே..

நன்றி.


பரஸ்பர சந்தோசம்
நான் பண்பானவன்
செய்தவன் மனம்குளிர்கின்றது…

Sunday, October 18, 2009

ஞாயிறு ஹொக்ரெய்ல். (18.10.2009)


இனியாவது வெடிக்கட்டும் திருப்தி மத்தாப்பூக்கள்.
வழமையாக சுத்தமான காற்றினை சுவாசிப்பதற்காகவும், சில புதிய விடயங்கள் பற்றி அமைதியாக இருந்து சிந்திப்பதற்காகவும் நான், காலாற கடற்கரைக்கு சென்று இருந்துவிட்டுவருவது வழமை. ஆனால் நேற்றைய தினம் கடற்கரையில் இவை ஒன்றுமே எனக்கு கிடைக்கவில்லை. காரணம் நேற்று டீவாலியாம்.

அப்பப்பா எத்தனை விதம் விதமான வானவெடிகள், எத்தனை அழகாக மேலே சென்றுவெடித்து நொடியில் காணமற்போகின்றன. ஒன்று இரண்டென்றால் பறவாய் இல்லை பார்த்துக்கொண்டிருக்கும்போது கண்முன்னே எத்தனை ஆயிரம்?? இதை பார்த்துகொண்டிருக்கும்போது, வழமையாக வந்து “அண்ணே சுண்டல் வாங்கிக்கிறிங்களா அண்ணே?” என்று கேட்கும் அந்த சின்னஞ்சிறிய பெண்ணைப்பார்த்ததும் ஏனோ கண்கள் கலங்கின நேற்று.

ஒரு உடை கூட போடமுடியாமல் தெருவோரங்களில்; திரியும் குழந்தைகள் எத்தனை? இந்த வானவேடிக்கையில் ஒரு நிமிடம் சிரிக்கும் மத்தாப்பூவைவிட அந்த ஏழைப்பிள்ளை ஒன்றுக்கு உடுத்த உடைவாங்கிக்கொடுத்து அந்தக்குழந்தையின் சிரிப்பை பாருங்கள், கண்டிப்பாக உங்கள் மனங்களில் 1000 திருப்தி மத்தாப்புக்கள் வெடிக்கும்.

நெஞ்சைபதறவைத்த செய்தி.

அவுஸ்ரேலியாவில் மெல்போர்னில் உள்ள பிரதேச ரெயில்வே ஸ்ரேஷன் ஒன்றில் இடம்பெற்ற 6 மாத ஆண் குழந்தை ஒன்று, எதிர்பார்க்காத கவனயீனத்தால் ரெயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்த காட்சி பல ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. விபத்துக்கள் எதிர்பாராததுதான் என்றாலும் குழந்தைகள் விடயங்களில் மிக கவனமாக அதேவேளை அவதானமாக பெற்றவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு படிப்பினையாக இருக்கும்.

கலக்கியது கானா

எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற குஐகுயு இருபது வயதிற்குட்பட்ட உலக காற்பந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் கடந்த 16ஆம் திகதி பிரேஸில் மற்றும் கானா அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. உண்மையில் மிகவும். விறுவிறுப்பாகவும் சுவாரகசியம் மிக்கதாகவும் இந்தப்போட்டிகள் அமைந்தன. ஆட்டத்தில் இரண்டு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை. அந்த அளவில் ஆட்டம் மிகவும் இறுக்கமாக அமைந்திருந்தது.

இதன்காரணத்தினால் ஆட்டம் பனால்ட்டி ஷ_ட் அவுட் முறைக்கு சென்றது. பிரேஸில் அணியின் நட்சத்திரவீரர் மெய்க்கான் எல்லாப்போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்கியிருந்தாலும்;, இந்தப்போட்டியில் பலனல்டி கோலில் சொதப்பியதால் பிரேஸில் தோல்வியடையவேண்டியதாயிற்று. முக்கிமான விடயம் என்னவென்றால் சழைக்காமல் விளையாடிய கானா அணி, மிக அதீத திறமைகளை வெளிக்காட்டியது.

ஆட்டத்தில் 37ஆவது நிமிடத்திலேயே கானா அணியின் வீரர் டானியல் அடேடோ, ரிவ்ரியால் ரெட்கார்ட் காட்டப்பட்டு அனுப்பட்ட நிலையில் 10 வீரர்களே விளையாட்டு மைதானத்தில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகள் அல்லாத ஒரு ஆபிரிக்க நாடு பிபாவின் 20 வயதிற்குட்பட்ட உலக சம்பியன் ஆகியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

ரீவைண்ட்

சுவாரகசியமாக டி.வி.டியில் படம் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கையில் உள்ள ரிமோட்டினால் உங்களுக்கு பிடித்த கட்டங்கள் கடந்துபோனாலும் டி.வி.டி பிளேயரை கட்டுப்படுத்தி ரீவைண்ட் செய்து மீண்டும் அந்த காட்சியை பார்க்க நீங்கள் கொடுக்கும் அந்த கொமாண்ட், டி.வீ.டி பீளேயரைக்கடந்து உங்கள் சுற்றுச்சூழலையே ரிவைன்ட் பண்ணினால்??? ஒரு சின்ன கற்பனை!! பாருங்கள்….

எத்தனைநாளுக்குத்தான் எங்களை ஏமாற்றப்போறீர்கள்???

கூரையில ஏறி கோழி பிடிக்கத்தெரியாத ஒருவன், எங்கேயோ ஏறி வைகுண்டம் போகமுயன்றானாம் என்ற கதைக்கு தக்கதாகவே தமிழ்நாட்டில் தற்போது ஆழுந்தரப்பு ஈழத்தமிழர் விவகாரத்தில் நடந்துகொள்ளும் விதங்கள் உள்ளன. முதலில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறி லங்கா கடற்படையினால் தாக்கப்படும் சம்பவங்களையே தடுத்துநிறுத்த திராணியற்ற இவர்கள் ஈழத்தமிழர்களின் துயரத்தை துடைத்துவிடுவார்களா? ஈழத்தமிழர்கள் ஒன்றும் மடையர்கள் அல்லர் என்பது இன்னும் இந்தியாவுக்கும்.தமிழ்நாட்டிற்கும் சரியாகப்புரியவில்லை.

ஒருவனை சிரித்துக்கொண்டே ஒருதரம் முதுகில் குத்தலாம், ஆனால் ஒவ்வொருநாளும் குத்தும் இந்த வஞ்சகம் அருவருக்கத்தக்கது. மரீனாவில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த அன்றுதான் வன்னியில் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், அனால் சொல்லப்பட்டது இவரது உண்ணாவிரதத்தால் தாக்குதல் நின்றதாக, இப்போது ஐ.நா செல்லிக்கேட்காத, அமெரிக்கா சொல்லிக்கேட்காத, இங்கிலாந்து, பிரான்ஸ் சொல்லிக்கேட்காத சிறி லங்கா அரசு இங்கிருந்போன ஒன்றுக்கும் ஆகாத தூதுக்குழுசொல்லி மக்களை தங்கள் சொந்த இடத்திற்கு அனுப்ப தொடங்கிவிட்டார்களாம்!!! இதைவிட பெரிய கொடுமை இருக்குமா சரவணா????

சொற்களை பிரித்து சேர்த்து எழுதல்
தமிழில் சொற்களை சேர்த்து பிரித்து சரியான வரியில் சரியாக எழுதவேண்டும் இல்லை என்றால் சொல்லவந்த கருத்தினையே அப்படியே புரட்டிபோட்டுவிடும். இங்கே சில… சொல்லவந்த செய்திகளையும் சொல்லப்பட்ட விதங்களையும் பாருங்கள்.

பாவித்த பெண்கள் ஸ்கூட்டி, உடன்விற்பனைக்கு உண்டு
பாவித்த பெண்கள், ஸ்கூட்டியுடன் விற்பனைக்குண்டு

பிரமணர்கள் சாப்பிடுமிடம்
பிரமணர் கள் சாப்பிடுமிடம்

கணபதிபிள்ளை தாச்சிப்போட்டியில் வெற்றிபெற்றார்
கணபதி பிள்ளைதாச்சிப்போட்டியில் வெற்றிபெற்றார்.

Thursday, October 15, 2009

காற்றினிலே வந்த கீதம்…


அரிவரி தொடங்கி, கைதேய மண்மீது அகரம் எழுதத்தொடங்கிய காலங்களின் முன்னேயே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்துவிடுகின்றது.
கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள்கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்துவரும்போது, என் இயல்புகள் அத்தனையும் தொலைத்துவிட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்தஓட்டம் அதிகம்பாய சிலிர்துப்போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலகித்த சம்பவங்கள் பல…

என் கண்கண்ட தெய்வங்கள், வித்தாக உறங்குமிடத்தில் கார்த்திகைப்பூவின் மாதத்தில் ஒளிவெள்ளமெழுப்பி இசைபாடும் அந்த “எங்கே எங்கே ஒருதரம் உங்கள் திருமுகம் காட்டுங்கள்” என்ற அந்த இசையினால் எத்தனை தரம் தேம்பித்தேம்பி அழுதிருப்பேன்.
காதல் உணர்வுகளில் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றனரே??
அதைவிட ஆயிரம்மடங்கு பட்டாம்பூச்சிகளை இசையினால் பரப்பிவிடமுடியும்.
இதை இசைமூலம் நிரூபித்தவர்கள் பலர், பீத்தோவானில் இருந்து, இளையராஜாவரை என்னை சிலிர்க்கவைத்த இசை ஸ்ரிங்காரர்கள் பலர்.

நிகழ்கால எதிர்நீச்சல்களிலும், எதிர்கால சவால்களுக்கும் மத்தியில் மனதிற்கு அப்பப்போ ஆறுதல் தருவது இறந்தகால வசந்தங்களே. அவை எப்போதும் இனி திரும்பி வந்துவிடப்போவதில்லை.
அகரம் கிறுக்கத்தொடங்கிய காலங்கள் அது! அம்மம்மா எங்கே என்று கேட்க, அம்மம்மா சாமியிட்ட போட்டாங்க, என்று பதில் வந்தவுடன். கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அம்மம்மாவை தேடிய காலங்கள் அது.


அந்தக்காலங்களில்த்தான், என் வீட்டில் அருகில் இருக்கும் அதே நல்லூர் கந்தசுசாமி கோவிலில்த்தான் அந்த இசை என்னும் நாத வெள்ளம், நாதஸ்வரமாகி என் காதுகளில் தேன்பாச்சி சுவாமியை விட்டுவிட்டு, என்னை அந்த ஸ்வர வித்தைகளால் கவர்ந்தவர் லயஞான பூபதி பத்மநாதன் அவர்கள்.
அந்த நாளில் இருந்து உயர்தரம் கற்கும்வரை நான் அந்த நாதஸ்வர இசையினை இரசித்தேன், ஓலங்களாக காற்றில்வரும் பிசிறுகள் எல்லாவற்றாலும், தான் இழுத்து ஊதும் காற்றுக்களால் கீதங்களாக மாற்றிய வித்தகர் அவர்.

மாநிறம், கூர்மையான கண்கள், கலைக்கான முகம், அகன்ற நெற்றி, நிமிர்ந்த தேகம், எட்டுமூலை வேட்டி, அதன்மேல் இடையில் பட்டுத்துணி நாதஸ்வர துளைகளைத்தடவும் விரல்களில் மோதிரங்கள். என் கண்களில் இன்றும் நிலைத்திருக்கும் அந்த இசை வித்தகரின்தோற்றம் இதுதான். அப்பப்பா இந்தமனிதரால் கோவிலுக்கு வந்த அத்தனைபேரையும் எப்படி அந்த கான இசையினால் கட்டிப்போட முடிகின்றது என என்முகம் ஆச்சரியக்குறியாகிய சந்தர்ப்பங்கள் பல.


இவன் கோவிலுக்கு வந்து சாமியையா கும்பிடுகின்றான், பீப்பி, மேளத்தைத்தான் பார்த்துக்கொண்டு அதன் பின்னாலேயே சுற்றுகின்றான் என என் அக்கா தாத்தாவிடம் முறையிட்டதும், அதற்கு என் தாத்தா அளித்த பதிலும் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
என் தாத்தா ஒரு கலாநிதி. பகுத்தறிவாளனும்கூட, கோவிலுக்கு செல்வதில்லை.
அவர் கேட்ட கேள்வி ஒன்றுதான் யார் அங்கே நாதஸ்வரம் வாசிப்பது என்பதுதான்.
என் அக்கா:- பத்மநாதன் என்றதும், அப்படி என்றால் இவன் செய்வது சரிதான். என்றுவிட்டு பத்தமநாதன் பற்றி பல தகவல்களையும் எனக்கு அன்று விரிவாக கூறினார். தன் பேரன் போற்றுதலுக்குரிய ஒரு நாதஸ்வர வித்தகரின் இரசிகனாகிவிட்டானே என்ற பெருமையினை அவர் முகத்தில் அன்று நான் பார்த்தேன்.

யாழ்ப்பாணத்தில் அளவையூர் என்று சிறப்பிக்கப்படும், அளவெட்டி பிரதேசத்தை சொந்த இடமாகக்கொண்டவர் பத்மநாதன் அவர்கள். 1931ஆம் அண்டு பிறந்த இவர், புகழ்பெற்ற கலைஞர்களான வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, முல்லைவாசன் முத்துவேற்பிள்ளை, அப்புலிங்கம், ஆறுமுகம்பிள்ளை ஆகியோரால் செதுக்கப்பட்டவராவார்.
பின்னர் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்த சீர்காழி பீ.எம்.திருநாவுக்கரசிடமும், திருச்சி கிரிஸ்ணமுர்திப்பிள்ளையிடமும் நாதஸ்வரக்கலையின் நுட்ப நுணுக்கங்களை கற்றுத்தேர்ச்சிபெற்றார்.


பின்னர் இவரது காலத்தின் பொற்காலம் என்றும், இன்றும் ஈழத்தமிழர்களால் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான காலமும் இவரும் உலகப்புகழ்பெற்ற தவில்மேதை தெட்சணாமூர்த்தியும் இணைந்து இசைபரப்பிய காலகட்டங்களாகும்.
இது இவரது 25 ஆவது வயதிலிருந்து ஆரம்பித்ததாக அறியமுடிகின்றது.
நான் அறிந்து இவர் வாசிக்கும்போது தவில்மேதை புண்ணியமூர்தி அவர்களும், அதன்பின்னர், அவரது மாணவனும், தவில்மாமேதை தெட்சணாமூர்த்தியின் புத்திரன் உதயசங்கர் அவர்களும் தவில் வாசித்தனர்.

பலபொழுதுகளில் நான் இவரை இரசித்தது நல்லூர் தேவஸ்தானத்திலேயே மற்றும்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இசை விழாக்களிலும், பிற கோவில் மஹோட்சவங்களிலும் இவரது கச்சேரிகளை பாhத்திருக்கின்றேன். இவர் வாசிக்கும் மல்லாரியை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒருதடவை இசை விழா ஒன்றில் இவர் வாசித்த தில்லானாவை நேரில் பார்த்து நான் இருக்கும் இடமே தெரியாமல் இலகித்து அந்த இடத்தில் நான் இல்லை என்ற உணர்வு நிலைக்கே சென்றிருக்கின்றேன்.

என் இரசிப்பு வெறியாகிய சந்தர்ப்பத்தில் என் தாத்தா ஓர் நாள் இவரது இல்லத்திற்கு என்னை அழைத்துசென்று சந்திக்கவைத்தார். அன்றுதான் நான் அவரது வாயினால் வரும் பேச்சினையும் கேட்டேன். அட எவ்வளவு அன்பான மனிதர்! என் தாத்தா அவரின் இரசிகன் நான் என்றதும் என்னை தன் மடியில் இருந்தி கதைபேசினார். என் தாத்தா பற்றி நான் அறியாத பல விடயங்களை என்னிடம் சொன்னார். அந்த பொழுதுகளை இன்று நினைத்தாலும் மனம் பெருமை கொள்கின்றது.

அடுத்து 91 அல்லது 92 ஆம் ஆண்டு கட்டத்திலே அவருக்கு நடந்த மணிவிழாவை என்னால் மறக்கமுடியாது. நல்லை ஆதீன மண்டபத்தில் நடந்த அந்த விழா மிகவும்; சிறப்பாக நடைபெற்றது. பெரிய பெரிய கல்விமான்கள், இசை வித்தகர்கள் எல்லோரும் இவரை புகழ்ந்துபேசினார்கள், தாங்களும் இவரின் இரசிகர் என்றார்கள். அப்பா…! அந்த விழாவே இன்றும் என்மனக்கண்ணில் முழுப்பதிவாக இருக்கின்றது.

அதைதொடர்ந்து நான் மிருதங்கம் கற்ற இசைமன்றத்தினரால் இவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மற்றும் பாராட்டு விழாவில் இவரை புகழ்ந்து கவிதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்கு என் தமிழாசிரியரிடம் உதவி கேட்டேன், உண்மையான கலைஞன் ஒரு 13 வயது சிறுவனின் மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வான், எனவே நீயே எழுதவேண்டும் என அவர் சொல்லிவிட்டார். அன்று ஒரு கவிதை எழுதினேன், வாசித்தேன்..பலர் கைகள்கூட தட்டினார்கள். அது கவிதையா இல்லையா என்று எனக்கு இன்றுவரை தெரியாது.


2003ஆம் ஆண்டு இவர் இயற்கையெய்திய செய்தி அறிந்தேன். அந்த ஆண்டு நல்லூர் திருவிழா பற்றிய ஊடகம் ஒன்றுக்கான ஒளித்தொகுப்பு பெட்டகம் ஒன்றுக்கு இந்த ஆண்டு வழமைபோல் நல்லூரில் எல்லாம் இருக்கும், ஆனால் அந்த தெய்வீக நாதம் இருக்காது என்று உண்மையான கவிதை ஒன்று வாசித்தேன்.
தற்போதும் கூட நல்லூர் வாசலில் நான் போய் நிற்கும்போதும் நான் இரசித்த அந்த நாதஸ்வர இராகம் தேவாமிர்தமாக என்காதுகளில் கேட்கும். சுவாமி வீதிவலம் வந்தால் அங்கு நாதஸ்வரம் இசைப்பவரை ஏக்கத்துடன் மனம் பார்க்கும்.
காற்றில் வந்த அந்த கீதம், அந்தச்சூழலில் இன்றும் காற்றில் வந்து கலந்துகொண்டுதான் இக்கின்றது.

Sunday, October 11, 2009

ஞாயிறு ஹொக்ரெய்ல். (11.10.2009)

ஞாயிறு ஹொக்ரெய்ல் -

ஓடி உழைக்கும் கூட்டத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமைகள் ஒரு ஓய்வுநாள்தான். சிலருக்கு இந்த நாளில் நண்பகல் 12 மணிக்கு பின்னர்தான் விடியவும் செய்யும். அட நம்ம பதிவர்கள்தான் பலதரப்பட்ட பதிவுகளையும் வாரம் ஒருநாள் தொகுத்து பல்வேறுபட்ட பெயர்களில் போட்டிட்டுவராங்களே.

அதேபோல எல்லோருக்கும் நேரம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமையில் இரவு நேரங்களில் கடற்கரை ஓரமொன்றில் ஒதுங்கி ஹொக்ரெயில் சாப்பிட (குடிக்க) அழைக்கின்றேன்.
சியேஸ் சொல்லிக்கொண்டே இருக்கின்றேனே ஒரு நாளும் ஊத்தி கொடுக்கவில்லையே என என் பதிவுலக நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். இதோ ஹொக்ரெயில்.. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.. இல்ல நாம இதை தொடமாட்டோம் என்று சொல்லிறவங்களுக்கும் மிக்ஸ் புருட் தயாராகவே உள்ளது…
கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு நேரத்தில் ஒருதடவை வந்து எட்டிப்பாருங்கள்..

சும்மா இருந்ததற்கே நோபல் பரிசு.

60 வயதிற்கு மேற்பட்ட இரண்டுபேர் உலக விடயங்கள் பற்றி பேசும்போது அவர்கள் அறியாமல் அவர்கள் பேசுவதை நோட்டம்விட்டால் மிக சுவாரகசியமான, சிரிப்பூட்டும் தகவல்கள் கிடைக்கும்.
அண்மையில் இரண்டு சீனியர் சிட்டிசன்மார் கடற்கரையில் வந்து பேசும்போது நான் போட்ட நோட்டத்தில் அவர்கள் பேசிய கருத்து.

சும்மா இருந்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதுதான். ஒருவர் சொல்ல மற்றவர் ஆமோதித்த அந்த விடயம் இதுதான். இதே ஒரு ஆண்டு காலத்திற்கு புஸ் இருந்திருந்தால் குறைந்தது நான்கு நாடுகளின் நின்மதி போயிருக்கும். இந்த ஒபாமாபயல் ஒன்றும் பண்ணாம பொருளாதாரத்திலேயே மையமிட்டு மற்ற நாட்டு விடயங்களில் மூக்கை நுளைக்காமல் சும்மா இருந்ததினாலதான் இந்த விருதுகிடைத்திருக்காம்!
கேட்ட எனக்கு வியப்பு ஒருபக்கம், சிரிப்பு ஒருபக்கம். என்றாலும் அவர்கள் சொன்னவற்றிலும் உண்மை இல்லாமலும் இல்லைத்தானே?

ஒரு மைல் கல்லை தாண்டிய குறும்பட வட்டம்.

தமிழ் ஸ்ரூடியோ.கொம் என்ற அமைப்பு குறும்பட வட்டம் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கான ஒன்று கூடல் என்பவற்றை மாதம்தோறும் சென்னையில் நடத்திவருகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், குறும்படம் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் இலைமறை காயாக இருக்கும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து அவர்களை குறும்பட இயக்குனர்கள் ஆக்கிய பெருமையும் இந்த அமைப்புக்கு உண்டு.
எந்தவிதமான இலாப நோக்கங்களும் இன்றி, மற்றவர்கள் பயன்படுத்தி மேலே ஏறிச்செல்ல ஒரு ஏணியாக இருக்கும் இந்த அமைப்பினை பாராட்டுவதில் தவறில்லை.

அந்த வகையில் நேற்றைய தினம் இந்த குறும்பட வட்டத்தினரின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், சிறப்பு குறும்பட வட்ட நிகழ்வும் எழும்பூரில் உள்ள இச்சா சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் சிறப்பு அதிதிகளாக திருமதி.சிவகாமி ஐ.ஏ.ஸ், திருதிரு துறுதுறு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நந்தினி, ஈரம் திரைப்படத்தின் இயக்குனர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்கள்.
இதில் என்ன விசேட விடயம் என்றால், நம்ம பதிவர், வண்ணாத்துப்பூச்சியார், பதிவர் தண்டோரா, பதிவர் எவனோ ஒருவன், மற்றும் இதை எழுதும் நான் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தோம். நம்ம நண்பர் பதிவர் கேபிள் சங்கரின் குறும்படமான “அக்ஸிடன்ட்” சிறந்த எடிட்டிங்குக்கான விருது பெற்றிருந்தது. கேபிள் வராததனால் அதை எங்கள் அன்பு வண்ணத்துப்பூச்சி மெதுவாக பறந்துபோய் எங்கள் கைகளுக்கு கொண்டுவந்தது.(ஹா..ஹா..ஹா..)

நண்பர் சஜந்தனுக்கு பிறந்ததின வாழ்த்துகள்.

நான் சென்னைக்கு வந்ததும், இங்கு தங்கும் காலங்கள் குறுகியதென்றாலும் எனக்கு கிடைத்த நல்ல நண்பர்களில் சஜந்தனும் ஒருவர். மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்க ஒருவர். இலக்கிய கூட்டங்கள் என்றால் அங்கே முதலாவது அளாக ஆஜராகும் ஒருவர். வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்ட ஒருவர். இந்தியாவில் பல இடங்களுக்கும் சென்று அவற்றைப்பற்றி குறிப்பெடுத்து வைத்திருக்கும் அவர், சிறப்பாக எழுதக்கூடியவரும்கூட, விரைவில் கனடா பயணமாக இருக்கும் அவர் வலையுவகிலும் கால் பதித்து முக்கியமாக தனது பயண அனுபவங்களை இலக்கிய நயத்தோடு விபரிக்கும் அவர், பயணக்கட்டுரைகளை எழுதவேண்டும் என என் சார்பாகவும், சக பதிவுலக நண்பர்களான, அடலேறு மற்றும் எவனோ ஒருவன் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றேன். பிறந்த தினத்திற்கும் வலையுலக விரைவான வரவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Motor Cycle Diaries

கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒருபடம். முக்கியமாக சேகுவாராவின் வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள், சேகுவாராவை நேசிப்பவர்கள், பின்பற்றுபவர்கள், இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும். இந்த திரைப்படத்தை பார்த்துமுடித்த பின்னர் “அட இத்தனை நாளாய் இந்த திரைப்படத்தை பார்க்காமல் இருந்திருக்கின்றேனே”! என்ற உணர்வே மேலோங்கியது. இந்த திரைப்படத்தை எனக்கு பரிந்துரைத்து கண்டிப்பாக பார்க்கவைத்த வண்ணத்துப்பூச்சியாருக்கு கோடானகோடி நன்றிகள். (கதைகளை நான் சொல்லவில்லை. திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்காத நண்பர்கள் பாருங்கள்)

IPL

நான் கல்வி கற்ற கல்லூரி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் என்றாலே அந்தப்பாடசாலைதான் என்று சொல்லும் அளவுக்கு அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருமே சிறந்த கிரிக்கட் வீரர்களாகவும், விளையாட்டுவீரர்களாகவுமே இருப்பார்கள்.

இந்த நிலையில் 1986ஆம் அண்டு முதல் நான் தொலைக்காட்சியில் கிரிக்கட் பார்க்கப்பழகி, 1996 -1999 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அதில் ஒரு வெறியனாகவும் இருந்தேன். கிரிக்கட் மட்ச் நடக்கும்போது உலகம் அழிந்தாலும் எனக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற ஒன்றிப்பு. அதன் பின்னர் நாள் செல்ல செல்ல அதிலிருந்துவிலகி, இன்று முற்றிலுமாக விலகிவிட்டேன் என்றுதான் கூறவேண்டும். இப்போது என்னமோ பேர்னாட்சோ சொன்னது உண்மைதான் என்று மனமும் ஒத்துக்கொள்கின்றது.

தற்போதெல்லாம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று ஒரு தொகை புத்தகங்களை தெரிவு செய்துவிட்டேன். இந்த கிரிக்கட் பார்க்கும் நேரங்களை நான் அதில் செலவழிக்கின்றேன். வாசிப்பு ருசி, கிரிக்கட்டை குப்பை தொட்டிக்குள் எறியவைத்தது ஒருவித சந்தோசமே.

Friday, October 9, 2009

புரட்சியின் செங்கதிர் சே…


சிவப்பு நிறத்தில் உண்டு புரட்சி
கண் சிவந்ததனால் மண் சிவப்பானதன்
காரணங்களும் புரட்சிகளே..
புரட்சிகள் இன்றி ஒரு மலர்ச்சியும் இல்லை
புரட்சிகள் தோற்றன என்ற
அயர்ச்சிகளும் இங்கில்லை..


புரட்சிகள்
இவனால், இப்படி, இங்கு வரும் என
இறையோனும் கூறல் இயலாது
ஆர்ஜென்ரீனாவில் பூத்தமலர்
கியூபா, பொலிவியா,கொங்கோ எனத்தாண்டி
மணம்பரப்பும் என்பதுவும்
யாருமே கணித்தில்லை


புயலானவன்,
பாய்வதில் புலியானவன்
மனமோ மலரானவன்
எங்கே அடக்குமுறையோ அங்கே
கொடும் புயலானவன்
மருத்துவம் படித்து, மார்க்ஸியமாக வாழ்ந்தவன்
இவன் புரட்சியின் செங்கதிர் சே..


எனஸ்ரோ குவேரா டி லா செர்னா
என்ற குழந்தை 1928இல்
ஜூன் வந்து 14ஆம் நாள் பிறந்தபோது
ஏந்த தேவதையும் வந்து ஆரூடம்கூறவில்லை
எந்த நட்சத்திரமும் பிராசிக்கவில்லை –ஆனால்
கண்டிப்பாக அன்று பூத்த மலர்கள் எல்லாம்
இவன் பிஞ்சுக்கால்களை மானசீகமாக
முத்தமிட்டிருக்கும்…


உடல் பலவீனப்பட்டாலும்
உள்ளத்தால் பலமாகி அதையும் வென்றான்
இளமையிலேயே புத்தன்கண்ட காட்சிகள் கண்டு
இவனும் மனமொடிந்தான்
ஆனால் வெறுப்புற்று போதியின் கீழ்
ஞானம் பெற்றுவதே ஞாலம் என இவன் இல்லை
இதை மாற்றவேண்டும் என்று ஞானம் கண்டான்
தன்னை அர்ப்பணித்தான், செயலில் இறங்கினான்
புரட்சி என்ற சொல்லின் அர்த்தத்தின் உருத்தை
உலகம் கண்டது இவனின் உருவத்தில்


இவன் தாய்க்குமட்டும் இவன் பிறப்பின்
இரகசியங்கள் தெரிந்ததோ?
எப்படி ஊகித்துபொருத்தமாக சே..என்று
உற்ற பெயர் வைத்தாள்?
ஆர்ஜென்ரீன மொழியில் சே என்றால் தோழனாம்.
இவன் உலகத்தின் தோழனாயிற்றே!
காஸ்ரோ, சே என்ற சிகரங்களின்
சந்திப்பின் பின்னர் உலகம்
உற்சாகத்துடன் சூழல ஆரம்பித்ததோ என்னமோ!!


பாடிஸ்டா, சன்ரோ கிளேரோ, ஹவானா
என எத்தனை களமுனைகள் இவன் வீரத்தை
கண்டு சிலித்து இவன் பாதங்களை முத்தமிட்டன?
கரந்தடிப்போர்முறை பற்றிய இவனது புத்தகம்
பின்னாளில் வந்த புரட்சி இயக்கங்களுக்கு ஒரு
ஊன்றுகோலகத்தானே இருந்தது..
இவனே ஒரு எழுத்து, இவனே ஒரு பிரபஞ்சம்
இவனே ஒரு சிரித்திரம், இவனே அதுவேயாகி வழ்ந்தவன்
இவனைப்பற்றி வேறு எழுத என்விரல்களுக்கு
சக்தியில்லை.
ஆனால் நம்பினால் நம்புங்கள்
நான் இவனை பார்த்திருக்கின்றேன்.

ஆம்…ஆர்ஜென்ரீன ரொஸாரியோ என்ற இடத்திற்கும்
ஈழத்தில் ஊரெழுவிற்கும் தொடர்பு உள்ளதாகவே
நான் கருதுகின்றேன்…

(1967 ஒக்ரோபர் 8ஆம் நாள் பொலிவியப்படைகளால் சே உட்பட 17 முக்கிய வீரர்கள் சுற்றிவளைப்பு, பொறிக்குள் அகப்பட்டனர். இதில் சே காயமடைகின்றார்.
இதேநாள் (09.10.1967) சே கொலை செய்யப்பட்டார்)

Sunday, October 4, 2009

தென் அமெரிக்கா கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக்ஸ் - 2016


உலகின் பல விடயங்களில் தென் அமெரிக்க நாடுகள் தொடர்ச்சியாக, மேலாதிக்க சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் பேற்றினை பிரேஸில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது 2012ஆம் வருடம் இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அடுத்ததாக, 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த போட்டிகளை நடத்துவதற்காக அமெரிக்கா, ஜப்பான், ஸ்பெயின்; ஆகிய நாடுகளுடன் இந்த போட்டியை நடத்துவதற்காக பிரேசிலும் வாக்கெடுப்பில் மோதிக்கொண்டன. சிக்காக்கோவில் இந்தப்போட்டிகளை நடத்துவதற்காக அமெரிக்காவும், ரோக்கியோவில் இந்தப்போட்டிகளை நடத்துவற்காக ஜப்பானும், மட்றிட்டில் நடத்துவதற்காக ஸ்பெயினும்;, அதேவேளை ரியோடி ஜெனிரோவில் நடாத்துவதற்காக பிரேசிலும் இதில் கலந்துகொண்டன.
1904 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை சென்லொயிஸிலும், 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை லொஸ் ஏஞ்சல்ஸிலும், 1984 மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸிலும், இறுதியாக 1996ஆம் ஆண்டு அட்லான்டாவிலும் என நான்கு தடவைகள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்கா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 2016 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் இந்த போட்டிகளை நடத்த வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி பாரக் ஒபாமா உட்பட அமெரிக்கா அதிகாரிகள் பலரும் பகீரதப்பிரயத்தனம் செய்தனர்.
இந்தப்போட்டிகளை நடத்த அமெரிக்காவே தெரிவுசெய்யப்படும் என்ற கருத்துக்கணிப்புக்களே அதிகம் இருந்தமையினால் மிகுந்த நம்பிக்கையுடன், அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா, சிக்காக்கோ மேஜர் உட்பட அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு நேற்று டென்மார்க் விரைந்திருந்தனர். ஆனால்; 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் உரிமையினை பிரேஸில் பெற்றுள்ளதாக ஒலிம்பிக்ஸ் சர்வதேச கொமிட்டி டென்மார்க்கில் அறிவித்துள்னளமை அவர்களை பலத்த ஏமாற்றமடையவே செய்திருக்கும்.


மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட வாக்களிப்பினை நாம் பார்த்தோமானால்,
முலாவது சுற்றில்
மற்ரிட் 28
ரி.ஜெனிரோ 26
ரோக்கியோ 22
சிக்காக்கோ 18

இரண்டாவது சுற்றில்
மற்ரிட் 29
ரி.ஜெனிரோ 46
ரோக்கியோ 20

மூன்றாவது சுற்றில்
மற்ரிட் 32
ரி.ஜெனிரோ 66
என்ற வாக்குகளை பெற்றிருந்தன. இந்த ரீதியில் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தவுள்ளது பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா கண்டத்தின் விளையாட்டு என்றதும் உதைபந்தாட்டம் மட்டுமே அனைவரது மனத்திரைகளிலும் விழுந்துவிடும் அதை மாற்றி மெய்வன்மை போட்டிகளையும் மிகச்சிறப்பாக நடத்தமுடியும் என பிரேஸில் நிரூபிக்கக்காத்திருப்பதாகவும், அதேவேளை உலகில் அதிசக்தி வலு மற்றும், அதி சக்தி தொழிநுட்பங்களை கொண்டு மிகத்தரமான விளையாட்டரங்கங்களை நிர்மானிக்கவுள்ளதாகவும், ஆரம்பத்திலேயே மிக அசத்தலாக தென் அமெரிக்க கண்டத்தில் முதலாவது ஒலிம்பிக்ஸை ஆரம்பித்துவைப்பதில் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ பெருமை கொள்கின்றது என அந்த நாட்டின் தலைவர் அறிவித்துள்ளார்.


இந்தப்போட்டிகளை நடாத்த தாம் 1440 கோடி அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வோம் என ஒலிம்பிக்ஸை நடத்த விண்ணப்பித்த பிரேஸில் தெரிவித்திருந்தது.
இதற்கமைய முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்காக தற்போது 280 கோடி அமெரிக்க டொலர்களை பிரேஸில் முதலீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்தப்போட்டிகளை நடத்துவதன் மூலம் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேஸிலுக்கு
5110 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீடுகளை கொண்டுவரும் என பிரேஸிலின் விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நம்ம ஆசியாவில் இதுவரை ஜப்பான், தென்கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் ஒலிம்பிக்போட்டிகளை நடத்திமுடித்துள்ளன. 2100 இற்குள் இந்தியாவால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எந்தவித சாத்தியக்கூறுகளும் அறவே இல்லை என பல ஆய்வாளர்களாலும் அடித்து சொல்லப்பட்டுள்ளது.
இலங்கை..???? கேட்பதே பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும்.
பரவாயில்லை நாம் சார்க் விளையாட்டுப்போட்டிகளில் எமக்குள்ளே போட்டிவைத்து பதக்கங்களையும் அள்ளிக்குவித்தால்ப்போச்சு…

LinkWithin

Related Posts with Thumbnails