Wednesday, December 15, 2010

ஆபிரிக்கக் கவிதைகள்.


ஆபிரிகக்கவிதைகள் என்ற அருமையான புத்தகத்தை நண்பர் ஒருவர் நூலகம் ஒன்றில் இருந்து எடுத்துவந்து தந்தார். பிரபலமான சில ஆபிரிக்கக்கவிதைகளை தொகுத்து, அதை தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார் சோ.பா என்று பலராலும் அறியப்பட்ட சோ.பத்மனநாதன் அவர்கள்.
பொதுவாகவே பிறமொழிகதைகள், கவிதைகளை படிப்பதில் எனக்கு பெரு விருப்பம் உண்டு, இவற்றின்மூலம் வித்தியாசமான கலாச்சாரப்பின்னணிகளையும், வித்தியாசமான சிந்தனைகளையும், வித்தியாசமான கற்பனைகளையும் கண்டுகொள்ள ஏதுவாக அவைகள் இருக்கும்.

இருந்தாலும் இந்த ஆபிரிக்கக் கவிதைகள், படித்து முடித்தபின்னர் நெஞ்சில் கொஞ்சம் வலி இருந்தது என்பதே உண்மை. காரணம் அவற்றில் பல எம்வாழ்வியலிலுடன் ஒத்துப்போய் இருந்ததே.
ஓளி பொருந்தி, கனிமங்களும், இயற்கை வரங்களும், நிறைந்த ஒரு பரந்த பூமி, முழுமையாக சுரண்டப்பட்டு “இருண்டகண்டம்” என இரக்கமின்றி அடைமொழி கொண்டு அழைக்கப்படுவது எவ்வளவு கேவலமான விடையம் என்பது மனதை சாட்டையால் அடிக்கவைக்கின்றது.

ஆபிரிக்க கண்டத்தில் வாழும் மக்களுக்கு இது விதி என்று நினைப்பவர்களுக்கு, இந்த கவிதைகள் இது விதியல்ல ஆதிக்க சக்திகளின் சதி எனத் தெளிவுபடுத்துகின்றன.
ஆதிக்க சக்திகள் கொண்டுவந்த அந்நிய மொழிகற்று அந்த அந்நிய மொழிகளிலேயே தங்கள் மண்ணியம் பற்றி கூறவேண்டிய நிர்ப்பந்தம் அந்த மக்களுக்கு வந்தது மிகப்பெரும் கொடுமை.

இதோ அந்த ஆபிரிக்க கவிதைகளில் இருந்து சில கவிதைகள் உங்கள் இரசனைக்கு விருந்தாக மட்டும் இன்றி, சிந்திக்கும் மருந்தாகவும்…

பிணந்தின்னிகள்

நாகரிகம் எங்கள் முகத்தில் அறைந்த
அந்நாட்களில்
ஆசிநீர் எங்கள் கூனிய புருவங்களில் மோதிய
ஆந்நாட்களில்
பிணந்தின்னிகள்,
நம் நகரங்களின் நிழலில்,
நம் ‘பாதுகாவலுக்காக’
இரத்தம் தோய்ந்த சின்னங்களை எழுப்பிய
அந்நாட்களில்,
கல்லடுக்கிய பெரு நகரங்கள் தோறும்
வேதனைச் சரிப்பே விளைந்தது

பரமண்டலத்தில் இருக்கும் பிதாவைத்
தோத்தரிக்கும் தொணதொணப்பு
பெருந்தோட்டங்களில் இருந்து கிழம்பிய
அழுகுரலை அழுத்தியது!

ஓ..வலிந்து பெற்ற முத்தங்களின்
கசந்த நினைவுகள்!
துப்பாக்கிய முனையில் பொய்யாகிய வாக்குறுதிகளின்
கசந்த நினைவுகள்!

மனிதராகத் தென்படாத அந்நியர்கள் பற்றிய
கசந்த நினைவுகள்!
எல்லா நூல்களும் தெரிந்தும்
அன்பு தெரியத நீங்கள்!
பூமியை சூழ்கொள்ளச்செய்யும் நம் கைகளை
வேரிலேயே புரட்சி வீறுபடைத்த நம்கைகளை
அறியா நீங்கள்!
இடுகாடுகளிடை நீங்கள் பாடும்
பரணிகளுக்கு மத்தியிலும்
குலைந்து வெறிச்சோடிப்போன
ஆபிரிக்க கிராமங்களுக்கு மத்தியிலும்
குலையாத கோட்டை போன்று
நம் நெஞ்சில்
நம்பிக்கை வாழ்ந்தது!

சவீசுலாந்தின் சுரங்கங்கள் தொடக்கம்
புழுங்கி வியர்க்கும் ஐரோப்பிய தொழிற்சாலைகள்
வரை
ஒளிமிக்க எங்கள் காலடிகளின் கீழ்,
வசந்தம் மீண்டும் மலரத்தான் போகின்றது!

- டேவிட் டியோப் (செனகல்)

ஒரு சாதாரண ஆபிரிக்கனின் காதல்ப்பாட்டு.

இனியவளே
உன் நிழல்போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில் நிழல்கள்
அந்தியில் மங்கிவிடும்
நானோ
சாமக்கோழி கூவும்வரை
உன்னை
என்னருகில் வைத்திருக்க விரும்புகிறேன்

குடமிளகாய்போல
என்னை நேசிக்காதே
அது வயிற்றை காந்தும்
என் பசிக்கு
உன்னை உட்கொள்ள முடியாது
தலையணைபோல என்னை நேசிக்காதே
ஏனெனில்
உறக்கத்தில் ஒன்றாய் இருப்போம்
பகலில் சந்திக்கவே மாட்டோம்

சோற்றைப் போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில்
விழுங்கியபின் அதை யார் நினைக்கின்றார்கள்?

மெல்லிய உரையாடல்போல்
என்னை நேசிக்காதே
ஏனெனில்
அதுவிரைவில் மறந்துவிடும்

தேனைப் போல்
என்னை நேசிக்காதே
இனியதாயினும்
அதுதான் எழிதில் கிடைக்குமே!

பகலில் என் நம்பிக்கையாய்
இரவில் உன் உயிராய்
அழகிய கனவாய்
இம் மண்ணில் என்னை விட்டுப்பிரியாத
நாணயமாய்
பயணத்தில் கூடவரும் நண்பனாய்
உடைந்தாலும்
என் கிட்டாரில் பாலமாகும்
நீர் கொள்ளும் ஒரு சுருவைக்குடுவைபோல
என்னை நேசிப்பாய் இனியவளே!

- பிளேவியன் ரனைவோ (மடகஸ்கார்)

நான் மரம்

வெட்ட வெளியில்
காற்றில் கிறீச்சிடும்
முறுக்கேறிய
முரட்டு மரம் நான்!

காற்றில் கிறீச்சிட்டு
தன் சோக எதிர்ப்பைக்காட்டும்
முறுக்கேறிய தகரக் கொட்டகையின்
கூரைத்தகடு நான்!

இரவு முழுவதும்
முடிவின்றி அழுது அரற்றியபடி
ஆறுதல் அடைய மறுக்கும்
குரல் நான்!

- டெனிஸ் புரூட்டஸ் (தென் ஆபிரிக்கா)

ஒரு சிறுமியின் கதை

முன்பு
பின்னி விட்ட கூந்தல்
முற்றவர்களைப் பார்த்து
வானை நோக்கி உணர்த்தியஇ
முடக்கிய கைகள்
ஏட்டு வயதான
சிறுமி என்று சொன்னார்கள்!
பின்னொரு நாள்-
ஒரு சிவப்பு கலவை
சிதறிய மாமிசத் துண்டங்கள்
காற்றில் படபடக்கும்
கந்தைத் துணி
பூப்போட்ட சட்டை அணிந்த
முன்னை நர்
சிறுமியென்று சொன்னார்கள்

- டெனிஸ் புரூட்டஸ் (தென் ஆபிரிக்கா)

தேடல்

கடந்த காலம்
நிகழ் காலத்தின் கரி
எதிர்காலம்
வான் முகிலுக்குள் மறைந்த
புகை

கோமாளிகள் கைகளில்
சொற்கள் நினைவுகளாக
நினைவுகள் கருவிகளாவதால்
அன்பே, இரங்கு
பரிவுகாட்டு

புத்தரின் முகத்தில்
கிறிஸ்துவின் கைரேகையை பார்த்துவிட்டதால்
அறிஞர்கள் மௌனித்துவிட்டார்கள்

ஆகவே அன்பே
அவர்கள் பேச்சில்
ஞானத்தை,
வழிகாட்டலை தேடாதே
அவர்களை நாவெழாது செய்த
அந்தப் பொறி
எமக்கு பாடமாகட்டும்

இரவின் மோகச்சுமைகளை
நீயும் நானும்
உறங்கித் தீர்த்த வேளை
மழை பொழிந்தது
அவர்கள் புதிதாய்ப்பெற்ற
ஞானமெனும் மின்னற் கீற்று
மூடர்களின் அடிமைகளாக
அவர்கள் வாழ்ந்துவிட்ட உண்மையை
வெளிச்சம்போட்டு காட்டியது.

-க்கியீசி ப்பியூ (கானா)

Tuesday, December 14, 2010

ஹொக்ரெயில் - 14.12.2010

அர்த்தமுள்ள ரஜினியின் 60

ரஜினிகாந்த் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் சினிமாவில் ஆழமாகப்பதிந்துவிட்ட ஒரு காந்தப்பெயர். ரஜினியிடம் அனைவருக்குமே பிடித்த ஒரு குணம், அவர் உயர உயர அவரிடம் அதிகமாகிய பணிவேதான். சிண்டுமுடியும் தமிழ்சினிமாவில் பலருக்கும் தன் இயல்பான குணத்தினால் அவர்களே நாண நேர்வழியில் நடந்த சம்பவங்கள் எண்ணில் அடங்காதவை. எமக்கு முதல், நாங்கள் என்று கடந்து இன்று பிறந்த குழந்தைகளுக்குக்கூட ரஜினி அன்புக்குரியவராகவே உள்ளதே பெரும் அதிசயமாக உள்ளது.

தன்னை ஏற்றிவிட்ட ஏணிகளை எப்போதும் நன்றியுடன் எண்ணி, அவர்களுக்கு எப்போதும் ஒரு அடிமையைப்போல உதவும் ரஜினியின் குணம் ஆச்சரியப்படவைக்கின்றது. தனக்கு போட்டியாளனாக கருதப்படும் கமலின் முன்னால் எப்போதும் கமலை உயர்வாகப்பேசி, தன்னை தாழ்த்திக்கொள்ளும் ஒரு அருமையான போட்டியாளனை எந்தத்துறையிலும் பார்க்கமுடியாது.
ஒரு மிகப்பிரபல்யம் மிக்க ஒருவனுக்கு பிரதானமாக அவன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியது முதலில் அவனது மனதே. அந்த வகையில், ரஜினி ஆன்மீகம் என்ற கருவிகொண்டு எப்போதும் தன் மனதையும், பிறர் மனதையும் மலரச்செய்தவண்ணமே உள்ளார். ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டும்தான்.

தியாகராஜர் ஆராதனை.

மார்கழி மாதம், தை மாதம் என்றால் சங்கீதப்பிரியர்களுக்கு உட்சாகமான நாட்கள்தான். சங்கீத மும்மூர்திகளில் முதன்மையானவரான தியாகராஜர் வசித்து வந்ததாக கூறப்படும் தஞ்சாவூரில் உள்ள திருவையாறே உற்சாக விழாக்கோலம் பூண்டுவிடும். பல சங்கீதப்பிரியர்களும், சங்கீத வித்வான்களும் திருவையாற்றை நோக்கி படையெடுத்துவிடுவார்கள். எங்கும் கர்நாடக இசை மனதிற்குள் பூரிப்பை ஏற்படுத்திவிடும். திருவையாற்றிலே தை மாதம் 5 நாட்கள் இந்த பெரும் கர்நாடக சங்கீத உட்சவம் பெருவிழாவாகவே கொண்டாடப்படுவது, காதுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பூரிப்பை உண்டாக்கும்.
அதேபோல திருவையாறு என்ற பெயரில் சென்னையிலும் மார்கழி மாதத்தில் கர்நாடக சங்கீதத்திருவிழா பெருவிழாவாக எடுக்கப்பட்டுவருவது மகிழ்ச்சியானதே.

ஓலங்கள் பலவற்றை கேட்ட காதுக்கு கீதங்கள் சுகமான அனுபவங்களாக இருக்கும். இசை முறைகளில் கர்நாடக சங்கீதத்தின் மேல் பலருக்கும் பவ்வியமான ஒரு மயக்கம் உண்டு. காரணம் அதில் தெய்வீகத்தன்மை இயல்பாகவே கலந்துள்ளதாக இருக்கலாம்.
இலங்கையில் உள்ள நம்போன்ற கர்நாடக சங்கீதப்பெரும் பிரியர்களுக்கு இதுபோன்ற ஒரு இசைத்திருவிழா இடம்பெறாதா என்ற ஏக்கம் மனதிற்குள் எப்போதும் உண்டு.

1992 முதல் 1994 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கர்நாடக சங்கீதம் பாரிய ஒரு எழுற்சி பெற்று விஸ்பரூபம் எடுத்து நின்றது. திரு.பொன்.சுந்திரலிங்கம் அவர்களும், யாழ்ப்பாணம் அண்ணாமலை இசைத்தமிழ் மன்னத்தினரும், இராமநாதன் இசைக்கல்லூரி சுற்றமும் இந்த எழுச்சியில் அப்போது பெரும் பங்கு கொண்டன. இலங்கை கலைஞர்கள், மிருதங்க அம்பலவாணர் அவர்கள், வயலின் ஓ.ராதாகிருஷ்ணன் அவர்கள், லயஞான திலகம். ஏல்.திலகநாயகம்போல் அவர்கள், சுரஞான வித்தகர் நாதஸ்வர கலைஞர் பத்மநாதன் அவர்கள், தவில் வித்வான் தெட்சணாமூர்தி அவர்கள் போன்றோர்கள் இசையால் ஈழநாட்டில் மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு தேசங்களிலும் தங்கள் இசை சாம்ராஜ்யத்தை அமைந்தது தெரிந்ததே.
இன்று ஈழத்தில் கர்நாடக ரீதியான இசையை மீண்டும் பேரெழுச்சிகொள்ளவைப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது. வீணையையே கொடியாகக்கொண்ட இசைமன்னன் ஆண்டபூமியல்வா எமது!

டபிள் பிரமோசன் முறை மீண்டும் தேவை!

இலங்கையின் கல்விமுறையில் முன்னர் டபிள் பிரமோசன் முறை; இருந்துவந்தது. அதாவது சுப்பர் கிரேட் எடுக்கும் மாணவர்கள் அவர்களின் அறிவாற்றலை காரணமாகக்கொண்டு, அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்படாது அதற்கு அடுத்த வகுப்புக்கு அனுப்பி வைக்கும் முறை.
பின்னர் அவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இன்றைய சந்ததியினர் அதிபுத்திசாலித்தனங்களை உடையவர்களாக இனங்காணப்பட்டுள்ள இன்றைய நிலையில் இவ்வாறான டபிள் பிரமோசன் முறை மீண்டும் தேவை என பல அறிஞர்கள் வாதிட்டுவருகின்றனர்.
அதில் ஒரு காரணம் மிக முக்கியமானது அதாவது.

இன்றைய வகுப்பு சூழ்நிலையில் குறிப்பிட்ட அளவு சித்தி எல்லையை அடையாத மாணவன் அசாதாரண மாணவனாக கருதப்படும் நிலை காணப்படுகின்றது. அதேவேளை அதேவகுப்பில் எதிர்பார்க்கும் திறமைக்கு அப்பால் சுப்பர் கிரேட் மாணவன் ஒருவன் இருந்தால் அவனும் அசாதாரண மாணவனே. பாடத்திட்டத்திலும், அதைவிட நுண்ணறிவிலும், இன்ன பிற அறிவிலும் உள்ள அவன் அடுத்த வகுப்பு பாடத்திட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நிலையை கொண்டிருக்கின்றான் என்றால், தொடர்ந்தும் அவனை அதே வகுப்பில் வைத்திருந்து, அவன் அறிந்த பாடத்திட்டத்தையே திரும்ப திரும்ப அவனுக்கு போதிக்கும்போது அவனது மனதில் விரக்தி நிலை தோன்றிவிடும் என்று சாயல்பட ஒரு கருத்து சிந்திக்க வைக்கின்றது.
அதே வேளை இந்த டபிள் பிரமோசனால் வயது என்று கருதும்போது, அவர்களது வளர்ச்சி, சக மாணவர்கள், இன்னும் பிற சிக்கல்களும் உருவாகும் நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இது பற்றி கல்வியலாளர்களும், பரீட்சைத்திணைக்களமும், கல்வி அமைச்சும் கொஞ்சம் சிந்திக்கலாமே!!

இன்றைய குறும்படம்.

கொழும்பில் பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி.

எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை 19ஆம் நாள் காலை 9.30 மணியளவில் கொழும்பில் இலங்கை தமிழ் பதிவர்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளது யாவரும் அறிந்தவிடயமே. இதற்கு முதன்நாள் 18ஆம் நாள் சனிக்கிழமை பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நல்ல புரிதலையும், மகிழ்ச்சியையும், ஒற்றுமையினையும் மேன்மைப்படுத்த பெரிதும் உதவும் என்ற நிலையில், குறிப்பாக பதிவர்களிடையே ஒரு கிரிக்கட் போட்டி என்பது எவ்வளவு சந்தோசத்தையும் ஆர்வத்தையும் தோற்றுவித்துள்ளது. நிற்சயமாக இதில் வெற்றிதோல்வியோ, அல்லது மான் ஒவ் த மச்சாக வருவதோ இல்லை. எல்லோரும் ஒன்றுகூடி விளையாடுவதே மிகப்பெரிய மகிழ்சிக்குரிய விடையமாகும். கல்லூரி காலங்களில் விளையாடிய என்போன்றோர்கள் கையில் பட்டை பிடித்தே இன்று 13 வருடங்கள் கடந்துவிட்டது.
இருந்தாலும் இந்தச்சந்தர்ப்பத்திலாவது விளையாட்டு நினைவில் உள்ளதா என்று பரீட்சிக்கவேண்டாமா?

சர்தாஜி ஜோக்
தனது மொபைல் பில் எவ்வளவு என அறிய விரும்பிய ஷர்தாஜி..வாடிக்கையாளர் சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டார். அங்கே அழைப்பில் வாடிக்கையாளர் சேவைக்குரிய பெண் தொடர்பை எடுத்தார்…
பெண் - நான் உங்களுக்கு எந்த வகையில் உதவவேண்டும் சேர்?
ஷர்தாஜி –எனக்கு எனது மொபைல் பில் எவ்வளவு எனத்தெரியவேண்டும்.
பெண் - நல்லது சேர்! இதற்கு நீங்கள் அழைப்பை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. *123# என்ற குறியீட்டை அழுத்தினாலே உங்கள் கரன்ட் பில் எவ்வளவு எனக்காண்பித்துவிடும்.
ஷர்தாஜி – முட்டாளே…நான் எனது கரன்ட் பில் எவ்வளவு என்று கேட்டகவில்லை மொபைல் பில் பற்றித்தான் கேட்டடேன்.

Monday, December 13, 2010

வாசகன் வம்பு!!

Dr.பாலவாசகனும் மரக்கறிக்கடைக்காரனும்




எச்சரிக்கை
மரக்கறி கடைக்காரன் :
இஞ்சியுடன், மரவள்ளி கலந்தானென்றால்
கொலைகாரப்பய எச்சரிக்கை.

கத்தரிக்காய் மட்டும் வித்தானா!
ஒழுக்கங்கெட்டவன் எச்சரிக்கை

தராசில் நிறுக்கையில் கதைபேசினால்
அனுபவம் மிக்கவன் எச்சரிக்கை

மிச்சம் தருகையில் அரசியல்பேசினால்
எண்ணிப்பார்த்துக்க எச்சரிக்கை
நீதான் பெஸ்ட்டு கஸ்ரமர் என்றானா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

சந்தைக்குவருமுன்னே மொத்தமாய் வாங்கி
பிரிச்சில்போடுதல் அதுவே நலமாகக்கொள்

லாபம் ஒன்றே குறியானபின்
கழிப்பது உன்னிடம் வேஸ்ட்டுகள்தான் என்று கொள்

உன்னை மரக்கறி வியாபாரி கேனையன் எனக்கொள்வான்
யோசிக்காமல் கண்ணாடிபார்த்து ஒத்துக்கொள்;.

மேலும் கீழும் காட்டும் ஐட்டம்ஸ்
உன் பைக்குள் வராது என்றே கொள்

வெங்காயத்தின் தலைமேல்
வேஸ்டைக்கட்டுதல் என்ற பண்டை செயலில்
உன் புத்தி கலவாது ஏற்றுக்கொள்

இந்த வியாபரிக்கெதிராய் கொன்சூமர் ஒன்றை
நாடத்துணியும் பணி சேர்த்துக்கொள்

பாலவாசகன்:
ஆஹா… நடாத்த துணியும் பணி சேர்த்துக்கணுமா?
பணியே கட்டியடிப்பதை வாங்கிச்செல்வதென்றான பின் கொன்சூமர் என்றெதற்கு?
தனியே வருவேன்…

மரக்கறி கடைக்காரன் :
அப்படி வாங்க வழிக்கு..
ஸோ..நீங்கள் பேமானிதானே?

பாலவாசகன்:
பிறில்லியன்ஸி அஸ் அக்கியூஸ்ட்

மரக்கறி கடைக்காரன் :
அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்

பாலவாசகன்:
சொல்லுங்க…

மரக்கறி கடைக்காரன் :
பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை

பாலவாசகன்:
யாருக்கு?

மரக்கறி கடைக்காரன் :
அது கவிதை என்று நீங்க சொல்லும் கண்றாவியை கேட்டாத்தானே தெரியும்?

பாலவாசகன்:
ஹக்…. அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது!

மரக்கறி கடைக்காரன் :
ஏன் வியாபாரிகளை பற்றி கேலியா?

பாலவாசகன்:
சாச்சா…இது ஒரு வியாபாரியின் வேண்டுதல் மாதிரி
ஒரு வியாபாரி தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்!
பின்னர் நானே கேட்கும் கேள்விகள்!!

மரக்கறி கடைக்காரன் :
ஓ… நீங்க சத்திமானா?

பாலவாசகன்:
நான் மிஸ்ரர் பீனா என்பதே கேள்விக்குறியா இருக்கு!

மரக்கறி கடைக்காரன் :
கவிதையை கேட்டால் கௌ;விக்குறி? சோதனைக்குறியா மாறலாம் இல்லையா?

பாலவாசகன்:
ம்ம்ம்ம்… மே பி… மே ஐ..

மரக்கறி கடைக்காரன் :
கன்ராவி…

பராக்கு

பாலவாசகன்:
மரக்கறி விற்கையில் பேரம்பேசி
தலையில் துண்டைப்போடாது, சொன்னதைக்கேட்கும்
என்போன்று இழிக்கும் வென்னிற பற்கள் வேண்டும்

10 ரூபா விலை சொன்னால் 1ரூபா கேட்டு
கடுப்பேற்றாதவன் என்போல் வேண்டும்.
அழுகிப்போனதை எறியமனமின்றி நிற்கையில்
வாங்கிப்போக என்போல் பலர் வேண்டும்
ஆடு பறக்கிறது என்றால் அண்ணாரவேண்டும்
பாவம்டா நீ எனத் திண்தோள் வேண்டும்!

நீலம்பாரித்த மரவெள்ளியை தட்டிட வசதியாய்
ஆர்வப்பதத்தில் நீயும்வேண்டும்
அதற்கு பின்னும் நீ உயிருடன்வேண்டும்

சந்தையில் மரக்கறி வீட்டில் சொஸேயஸ் என
சமைத்து சாப்பிட பணமும்வேண்டும்
ஏ.ரி.எம்மும்வேண்டும் டெபிட்டும் வேண்டும்
எனக்கென்று கிரடிட்கார்ட் கேட்கும்வேளையில்
ஏமாற்றவேண்டிய திட்டமும் வேண்டும்

இப்படி உன்போல் பலர் வரவேண்டும் என்று
21 நாட்கள் நோன்பிருந்தேன்
வரம் தருவான் விநாயகன் என
கடும் விரதம் இருந்து வேண்டிப்போனேன்

ம.வி: வேண்டி எங்க போனீங்க???

கடலுக்குத்தான்…

தூசனம் கொட்டியே வெறிமுறியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
அப்புக்கள் பலபேர் திரிவதைக்கண்டேன்..
ரைம் மிஸின் உதவியால் சுபாங்கன்
வானிலே பறப்பதைக்கண்டேன்…

இந்தக்காலத்தில் ஏமாற்றமே என்றுவிட்டு..
ஐந்நூறுஆண்டுகள் முன்னால்ப்போய் மரக்கறி பார்த்தேன்.
எச்சந்தை ஆனால் என்ன வென்று லெமோரியாக்கண்டம்வரை
சென்றுபார்த்தேன்.
இன்று மட்டும் அல்ல அன்றும்
நல்ல லட்சணம் நிறைந்த வியாபரி
மரக்கறிச்சந்தையில் மிக மிகக்குறைவு

வரந்தரக்கேட்ட பிள்ளையாரே உனக்கு
சாப்பாடுகள் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் மாம்பழத்தை தவிர வேறு எது பலித்தது?
தும்பிக்கையில் சுற்றியிருக்கும் அந்த மோதகம் எப்படி?

பிரபஞ்சம் படைத்த உனக்கு நல்ல மரக்கறி கிடைத்தது உண்டோ?
சுவையும், இயற்கையும், பதமும் உள்ள நல்லமரக்கறி கிடைத்தது உண்டோ?

உனக்கேனும் அமையப்பெற்றால் உண்மையிலே அதிஸ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச்செய்யேன்

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே"

Sunday, December 12, 2010

இந்தவாரப் பதிவர் - திரு. வந்தியத்தேவன்


ந்தியத்தேவன்…தமிழ் பதிவுலகம், பதிவுகள், வலையுலக வாசகர்களால் எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு முத்திரை பதித்துவிட்ட ஒரு பெயர். இலங்கைப்பதிவுலக மூத்தவர்களில் (பதிவுகளால்) ஒருவர் என்றுகூட இவரைச்சொல்லிக்கொள்ளலாம். மயூரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர், ஒரு தகவல் தொழிநுட்பத்துறையை சேர்ந்தவர். ஆரம்பகாலத்தில் தகவல் தொழிநுட்பம் சம்பந்தமாக சில பத்திரிகைகளில் எழுதிவந்துள்ளமையும் குறிப்பிடப்பிடவேண்டிய ஒன்று.

பதிவுலகத்தில் வந்தியத்தேவன் என்ற பெயருடன் அந்தப்பெயருக்கு ஏற்றால்ப்போல தனக்கேயான கம்பீரமான எழுத்து நடையுடன் பயணித்துக்கொண்டிருப்பர் இவர்.
2006 ஆம் ஆண்டுமுதல் பதிவுலகத்திற்கு வந்த இவர், தனது ஓயாத தேடல்களாலும், மேலும் மேலும் சிறப்பு என்ற முகாமைத்துவ மகுடத்தை தன் எழுத்துக்களில் அமுல்ப்படுத்தியதாலும், பதிவுலகம் நின்று கவனிக்கும் இடமாக தன் தளத்தை பதிவர்கள், வாசகர்களின் மனங்களில் ஆழமாகப்பதித்துவிட்டவர்.

அலட்டலில்லாமல், வர்ணனைகள், சுற்றிவளைப்புக்கள் இல்லாமல் எடுத்துக்கொண்ட விடயத்தை பொட்டில் அடித்தாலப்போல இலகு நடையில் வாசகர்களுக்கு புரியவைப்பது இவரின் எழுத்துக்களின் முறை. இலக்கியம், அரசியல், விளையாட்டு, சமுகக்கண்டோட்டம், சமகால உலகம் என்று எழுத்துக்கள் வாசகர்களை சுற்றிக்கொண்டு வந்து ஒரு இடத்தில் விட்டுச்செல்லும் வித்தைத்தனம் இவரது எழுத்துக்களில் உண்டு. தான் உட்பட உலக விடையங்கள் அனைத்தையும் தர்க்கரீதியில், அதேநேரம் நியாயப்பாடாக ஆழமாகச்சென்று பார்க்கும் தன்மையினை இவரின் எழுத்துக்களை உன்னிப்பாக கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம்.

சினிமா என்றுவந்துவிட்டால். “தமிழ் சினிமா ஒரு கோவில் என்று கொண்டால் கமல்ஹாசனே அங்கு தெய்வமாக இருக்கமுடியும்” என்ற கொள்கையில் அசைக்கமுடியாதவராக இருக்கின்றார். இதனால்த்தானோ என்னமோ இவரின் சுயவிபரப்படத்தில்க்கூட அந்த “களத்தூர் கண்ணம்மா” குழந்தைக்கமலின் விபரிக்கமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படத்தை என்றும் மாற்றம் செய்யாமல் இட்டுவருகின்றார்.

இடைவிடாத தேடல், தொடர்ச்சியாக்கும் தன்மை, எடுத்துக்கொண்ட விடயப்பரப்பில் தளம்பல் இல்லாத உறுதியான தன்மை என்பவையே வந்தியத்தேவனின் சிறப்பியல்புகள். தான் பதிவுலகில் மூத்தவர் என்ற எண்ணம், அல்லது ஈகோ எதுவும் இன்றி இன்று எழுதத்தொடங்கும் பதிவர்வரை சென்று அவர்களை ஊக்கப்படுத்துவது அவரது பண்பட்ட தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் “காதல் உணர்வு பூர்வமானதா? அறிவுபூர்வமானதா?” என்ற கேள்வியுடனான பதிவுடன் வலையுலகில் வந்தியத்தேவன் காதலுடன் அறிமுகமானார். வாசித்துப்பார்த்தால் “நான் ஈழத்தில் உள்ள சராசரி இலக்கிய இரசிகன். என் உளறல்கள் என என் வலைப்பதிவுக்கு தலைப்பிட்டகாரணம், என் பதிவுகள் வெறும் உளறல்களே” என்று அவர் கூறிய வார்த்தை அப்போதே அடிபட்டுப்போய்விட்டது. அவை வெறும் உளறல்களாகத்தோன்றவில்லை. வெறும் அவையடக்கமே அது என்பது இவரது எழுத்துக்களுடன் பயணிப்பவர்களுக்கு தெரிந்துவிடும்.

“ஹொட் அண்ட் சவர்சூப்” பதிவுலகத்திற்கும், வாசகர்களுக்கும் இவர் வைக்கும் ஒரு சுவையான கலவை விருந்து. பதிவுலகில் ஐந்து வருட அனுபவங்கள் கொண்டுள்ள அதேவேளை இன்றும் புதிய பதிவாளனாகவே தன்னை வெளிப்படுத்தும் சிறந்த தன்மை கொண்ட ஒரு சில மாயைகளுக்குள் அகப்படாத பிரகாச வெளிச்சமாக இன்றும் வீரத்துடன் நிற்கின்றார் இந்த வந்தியத்தேவன்.

இப்போதாவது ஒரு உண்மையை சக பதிவர்களுக்கு இதை எழுதும் நானும், வந்தியத்தேவனும் மேலும் மறைக்காமல் சொல்லிவிடவேண்டும். அதாவது நானும் பதிவர் வந்தியத்தேவனும் பதிவுலகத்திற்கு வரமுன்னரே நண்பர்கள். 1999 முதல் 2005 வரை எங்கள் சந்திப்புக்கள் சகநண்பர்களுடன் அடிக்கடி ஏற்பட்டுள்ளன.

சரி.. இந்தவார பதிவரான பதிவர் வந்தியத்தேவனினிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளையும், அவரின் பதில்களையும் வாசிக்க ஆர்வமாக இருப்பீர்கள்..
அவை இதோ..

கேள்வி:இலங்கையில் பதிவர்களில் ஒரு மூத்தவர் நீங்கள். வலைப்பதிவுகள் எழுதவேண்டும் என நீங்கள் முடிவெடுத்த காரணங்கள் என்ன? அப்போதைய வலைப்பதிவுலகம் எப்படி இருந்தது?

வந்தியத்தேவன் :2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா,
சினேகிதி, சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன்
ஆனால் பின்னூட்டம் இட்டத்தில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம்,
பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில்
எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.


2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக்
களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது
நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு
வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார். அத்துடன்
கருத்தக்கொழும்பான் மாம்பழம் மூலம் அறிமுகமான என் சகா கானாப் பிரபாவின்
ஆலோசனைகளினாலும் எனக்கான வலையை உருவாக்கினேன்.

ஆகவே ஒரு ஆர்வக்கோளாற்றில் சரி நானும் எழுதிப்பார்ப்போம் என
துணிந்தேன்.பாடசாலை நாட்களில் கட்டுரை எழுதிய அனுபவம் நிறைய
இருக்கின்றது. அத்துடன் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்தபோது
பத்திரிகைகளில் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்(என்
வலையில் இதுவரை எந்த தொழில்நுட்ப பதிவும் எழுதவில்லை என்பது தனிக்கதை).
ஆகவே தைரியத்துடன் களத்தில் குதித்தேன்.

அந்தநாட்களில் வலைப்பதிவர்களிடையே தற்போது இருப்பது போல் நட்புகள்
அவ்வளவாக இல்லாவிடிலும் கருத்துமோதல்களும் மறுதலிப்புகளும் ஓரளவு இருந்தன
ஆனால் தற்போது இருப்பதுபோல் தனிமனிதத் தாக்குதல்களும்
காழ்ப்புணர்ச்சிகளும் இல்லை அல்லது அவ்வளவு இல்லை எனலாம்.

கேள்வி:வந்தியத்தேவன் என்ற பெயரை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? வாசிப்புக்களின்மேல் உங்கள் ஆர்வம் கூட ஏதுவாக அல்லது காரணமாக இருந்தவை அல்லது இருந்தவர்கள் யார்?

வந்தியத்தேவன் :எனது சொந்தப்பெயரில் எழுதலாம் என்றால் ஏற்கனவே மு.மயூரன், மயூரேசன், மாயா
என்ற மயூரன் எனப் பல மயூரன்கள் வலையுலகில் இருப்பதால் கல்கியின் அழியாப்
புகழ் கொண்ட பாத்திரமான வந்தியத்தேவன் என்ற பெயரை எனக்கு புனை பெயராகச்
சூட்டினேன். வலையுலகில் என் சொந்தப் பெயரை விட வந்தி என்ற பெயரே நிலைத்து
நின்றுவிட்டது.

எனது ஆச்சி, தாத்தா, அம்மா அப்பா போன்றவர்களின் வாசிப்புப் பழக்கத்தைப்
பார்த்து எனக்கும் இந்த ஆரவம் ஏற்பட்டது. என் வாசிப்புக்கு சிறுவயதில்
மிகவும் உதவியவர் என் அம்மா ஆவார். கிட்டத்தட்ட ஐந்து வயதில்
எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தது என் வாசிப்புப் பழக்கம்.
ஆரம்பத்தில் அம்மா எனது வயதுக்குரிய புத்தகங்களை மட்டும் எனக்கு
வாசிக்கத் தருவார். பின்னர் நானாகவே என் வயதுக்கு மீறிய‌ பல புத்தகங்களை
(பெரும்பாலானவை துப்பறியும் நாவல்கள்) தேடி வாசிக்கத் தொடங்கினேன். இந்த
ஆர்வத்தால் வடமராட்சி வதிரிப் பொது நூலகத்தில் ஒரு தடவையும் சாகவச்சேரி
பொது நூலகத்தில் ஒரு தடவையும் நான் என்னை மறந்து வாசித்து நூலகர் என்னைக
கவனிக்காமல் உள்ளே விட்டுப்போன கதையும் நடந்தது.

வாசிப்பில் இலங்கை இந்திய எழுத்தாளர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி
எனக்குப் பிடிக்கும் எதையும் விட்டுவைத்ததில்லை. என் அப்பா ஆங்கிலப்
புத்தகங்களை எனக்கு அறிமுகப்படித்தினாலும் எனக்கு பலகாலம் அவற்றில் காதல்
வரவில்லை ஆனால் இப்போ கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலப் புத்தகங்கள்
வாசிக்கின்றேன்.


கேள்வி:பதிவுலகம் பெருத்துக்கொண்டு செல்வது ஆரோக்கியமானதா? பதிவுகளும், பதிவர்களும் எப்படி இருக்கவேண்டும் என்று உங்கள் ஆழ்மனத்தில் உள்ள ஆசைகள் எவை?

வந்தியத்தேவன் :சர்ச்சையான கேள்வி. பதிவுலகம் பெருத்துக்கொண்டுபோவது ஒரு வகையில்
ஆரோக்கியமானதாக இருந்தாலும் இன்னொரு வகையில் தனிமனிதக்
காழ்ப்புணர்ச்சிகளும் சுய விளம்பரப் பிரியர்களின் தொல்லைகளும்
அதிகரித்திருப்பது என்பது என் கருத்து. இவற்றையும் தாண்டிச் சிலர் நல்ல
நட்புகளுடன் இருப்பது பாராட்டத்தக்கது.

ஒரு பதிவு போட்டவுடனேயே தம்மை சுஜாதா, செங்கைஆழியான் என நினைத்துச் சிலர்
போடும் ஆட்டங்களும் தம்முடைய வலையைப் பிரபலப்படுத்த போலி வலைகள் போலிப்
பின்னூட்டங்கள் போட்டு நாடகம் ஆடுவது என ஒரு சில பதிவர்களின்
செயற்பாடுகளினால் பதிவுலகம் என்றால் வம்புச் சண்டைபோடும் இடம் என
வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைக்கின்ற நிலைக்கு வந்துவிட்டது.

சில நாட்களாக இந்தியப் பதிவுலகில் நிகழ்ந்த புனைவுப் பிரச்சனைகளும்,
இலங்கைப் பதிவர்களிடையே சச்சரவுகளை ஏற்படுத்த ஒரு வெளிநாட்டுப் பதிவருடன்
சேர்ந்து இன்னொரு இலங்கைப் பதிவர் நடத்தி தோற்றுபோன நாடகங்களும் சிறந்த
உதாரணங்களாகும்.

எவரும் தங்கள் கருத்துகளை எழுதும் உரிமை ஜனநாயக நாடுகளில் உண்டு. அந்த
வகையில் பதிவர்களும் தங்கள் மாற்றுக் கருத்தை மற்றவருக்கு இடிக்காததுபோல்
எடுத்துரைக்கலாம்.

பதிவுகளைப் பொறுத்தவரை அவர் அவருக்கு எது முடியுமோ அதை எழுதுவதே
சிறந்தது. அதே நேரம் வெறுமனே ஒரே வகையான பதிவுகளை பதிவேற்றாமல்
நகைச்சுவை, விளையாட்டு, அரசியல், திரையுலகம், சமூக தார்மிக உணர்வுகள் என
பலதையும் கலந்து எழுதினால் மட்டுமே பலரால் ரசிக்கமுடியும்.

இந்தியாவில் பதிவுலகம் பலராலும் கவனிக்கப்பட்டு வருவது மிகவும்
ஆரோக்கியமானது ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஒரு சில ஊடகங்கள் மட்டுமே
பதிவுலகத்தை ஓரளவு கவனிக்கின்றன. இந்த நிலையை மாற்றவேண்டும்.

உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். அத்துடன் வளர்ந்துவருகின்ற
இளம்(நானும் இளம் தான்)புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்துங்கள்.


நல்லது நண்பர்களே இன்று பதிவர் திரு. வந்தியத்தேவன் பற்றியும் அவரது பதில்களையும் பார்த்தோம். மீண்டும் அடுத்த ஞாயிறு பதிவர் சந்திப்பு என்பதால் நிறையப்பதிவர்களை நேரிலேயே சந்தித்துவிட்டு, அதற்கு அடுத்த ஞாயிறு ஒரு பதிவுலக நண்பருடன் உங்களை சந்திக்கின்றேன்.

நன்றிகள்.

Friday, December 10, 2010

யாழ்ப்பாணம்! மேட்டுக்குடி!! தலித்தியம்!!!


ண்மைக்காலமாக அதுவும் புலம்பெயர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்தீர்களேயானால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விமர்சிக்கும் எழுத்துக்கள், குறிப்பாக தலித்திய எழுத்துக்கள் என்ற வரையறைககுள் நின்று பலர் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், மேட்டுக்குடியினர் என்று பரவலாக வசைபாடும் தன்மையினையும், பல வரலாற்று ஆதாரங்களை சான்றுகளாக முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
சாதிகள் இல்லையடிபாப்பா.. என்ற பாரதியாரின் வாக்குக்கு என்னிடமும் எதிர்கருத்துக்கள் கிடையாது. “சாதிகள் எங்கே வரையறுக்கப்படுகின்றதோ அங்கே மனிதம் செத்துவிட்டது” என்ற கருத்து என் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஆனால் சாதியத்தை எதிர்க்கின்றோம் வெறுக்கின்றோம் என்ற போர்வையில் குறிப்பட்ட ஒரு சாதியினரை தாக்குவதும், பழைய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் தோண்டி எடுத்து தமது எழுத்துக்களில் சொருகுவதும் ஒருபோதும் ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

கடந்த 35வருட இருண்ட நாட்களில் தலைகளில் வந்து விழுந்த ஷெல்கள் சாதிபார்த்து பிரித்துவந்து விழவில்லை. அதேபோல இழப்புக்களும், ஆற்றமுடியாத மனவடுக்களும் சாதிகள் பார்த்து வரவும் இல்லை.
இன்றைய நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களும் எமது எதிர்காலத்தை வலுவாக நிர்ணயிக்கவேண்டியுள்ளகாலத்தில், அதேவேளை நவீனத்துவமாக கால ஓட்டத்துடன் எமது சமுதாயமும், வெளிவந்து உலகத்தை உற்றுநோக்கிவரும் காலத்தில், இந்த சாதி, வர்க்க, பிரதேச வாத அடிப்படைகள் தன்பாட்டிற்கு அடிபட்டுபோய் இல்லாமல்போய்விடும் நிலையில்.
ஏதோ எழுதுகின்றோம் என்ற போர்வையில் யாழ்ப்பாண சாதி அமைப்பை விமர்சிப்பதும், தலித்தியம் என்றால் என்ன? என்று புரியாதவர்கள் சிலர்கூட தலித்தியம் கதைக்கின்றோம் என்று எப்போது பார்த்தாலும் மேட்டுக்குடி வர்க்கத்தின், மேட்டுக்குடி சிந்தனைகள் என்று ஒரே பல்லவி பாடுவதும் ஆரோக்கியமாக அமையாது என்பதே உண்மை.

தான் ஒரு தலித் என்று கூறி எழுதுவதன்மூலமும், அல்லது பேசுவதன்மூலமும், இந்தப்பிரிவில் தான் ஒரு இலக்கியவாதி அல்லது பேச்சாளனாக மற்றவர்கள் கவனிக்கும் ஒருவனாக வரவேண்டும் என்ற எண்ணம் எழுதும் பலரின் அடிமனதில் உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றாலும் அதுவும் ஒரு ஆழ்மனத்தில் உள்ள காரணம் என்பது உண்மையே.
அதேவேளை தலித்துக்கள் இல்லாதவர்கள்கூட சாதிபேசதங்கள் இல்லை, அனைவரும் ஒருவரே என்று எழுதியும்பேசியும் வருகின்றனர். இது வரவேற்கக்கூடிய ஒன்றே என்றாலும், நான் அறிந்தவர்கள் உட்பட அனைவரும் வாய்ச்சொல்லில் வீரர்களாகவே உள்னர். வெளிப்படையாக சொல்வதென்றால், என்னதான், அவர்கள் சாதிகள் இல்லை என பேனாக்கள் எழுதினாலும், மேடைகளில் முழங்கினாலும் திருமணம்மூலம் கலந்துபோகவோ, அல்லது தம்குடும்பங்கள் கலந்துபோவதையோ ஒருபோதும் விரும்பாதவர்களாக “ஊருக்கு உபதேசமடி கண்ணே நமக்கு இல்லை” என்ற அடிப்படையிலேயே உள்ளனர்.

இவ்வாறான எழுத்துக்களை பார்த்து மனம் நொந்து எதுவும் பேசமால் போனவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் அண்மையில் பலரது பதிவுகள், நல்லூர் மேட்டுக்குடி வர்க்கத்தினர் என, ஒரு ஊர்சமுதாயத்தைப்பற்றியும், திரிபுபடுத்திய பல தகவல்களையும் எழுதுவதாலேயே
இவர்களின் தலித்தியம் என்ற எழுத்துக்கள் ஆரோக்கியமாக அல்லாமல் வெறும் சாதியத்தையும் தனிமனித வெறுப்புக்களையும் கொட்ட ஆரம்பித்துள்ள நிலையிலுமே என்னையும் சற்று எழுத வைக்கின்றது.

நல்லூர் மேட்டுக்குடி வர்க்கம் அபாயகரமானது, ஆறுமுகநாவலரில்தொடங்கி அவர்பற்றி விமர்சித்துச்சென்று, போராட்டத்திற்கு என்றும் அவர்கள் ஆதரவு வழங்கியதில்லை என்பதுமட்டுமன்றி பல திரிபுச்செய்திகள் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் பலரது எழுத்துக்களில் அடுக்கப்பட்டதை பார்த்தேன்.
60களின் முற்பட்ட காலத்தில் தீண்டாமை, கீழ்ச்சாதியினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமை என்பன இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.
அதேபோல சாதிக்கட்டமைப்பு உச்சத்தில் நின்று கரணம்போட்ட நடவடிக்கைகள் வருத்தமானவை என்பதுடன், மனிதம் அங்கு செத்துக்கொண்டிருந்தது என்பதையும் நிரூபிக்கின்றது.
ஆனால் இன்று நல்லூரில் நிலை அப்படி அல்ல. சாதிபேதங்களை யாரும் பார்ப்பது கிடையாது என்பதே உண்மை. இன்று வளர்ந்துவரும் சந்ததிகள் சாதிகள் என்றால் என்ன? என்று கேட்கும் நிலை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சில பெருசுகள் இன்றும் தமது அடிமனதில் தமது சாதி வக்கிரகங்களை அவர்கள் மீதும் திணிக்க எத்தனித்தாலும், நடுவயதை உடையவர்கள் அவற்றை தவறு எனச்சுட்டிக்காட்டும் சம்பவங்களை பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.

புலம்பெயர் யாழ்ப்பாண தலித்திய எழுத்தாளர்கள் இன்று நல்லூர் மேட்டுக்குடியினர் என்பவர்கள்மீது சாட்டிய குற்றங்களையும், தற்போதைய நிலையையும் பார்ப்போம்.
கோவிலுக்குள் அன்று கீழ்சாதியினர் அனுமதிக்கப்படவில்லை. உண்மைதான் மறுக்கமுடியாது. ஆனால் இன்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திலேயே, சொந்த ஊர்காரர்களைவிட முகம் தெரியாத பலரே வந்து தொண்டுகளை செய்கின்றார்கள், சுவாமி காவுகின்றார்கள், திருவிழா செய்கின்றார்கள், இதை எழுதும் நான் உட்பட ஊர்க்காரர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கையே பார்க்கின்றோம்.
அன்று நல்லூர் வீரமாகாளி அம்பாள் ஆலயத்தில் சமபந்தி போசனம் என்று அறிவித்துவிட்டு அதில் அமர்ந்து சாப்பிட அமிர்தலிங்கமே தங்கி நின்றார்.
உண்மைதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்றும் அந்த நிலை இல்லை. ஒரு கோவில் அன்னதானம் என்றால் சகலரும் இறைவன் முன்சமன் என்ற நிலை காணப்படுகின்றது.

மேட்டுக்குடியினர் தாமே மேலோங்கிநின்றனர், போராட்டத்திற்குக்கூட ஆதரவு தரவில்லை என்ற குற்றச்சாட்டு.
பொதுவாக இவர்கள் குறிப்பிடும் மேட்டுக்குடியினர், பரம்பரையாக வந்த சொத்து, திருமணத்தின் பயனாக உள்வாங்கப்படும் சீதனச்சொத்து, தனக்கான ஒருவீடு, ஊதியத்திற்கான வயற்காணிகள், தமக்கான கௌரவமான ஒரு அரச தொழிலோ அல்லது அதற்கு சமமான தொழில் என்ற வரையறைக்குள் வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கை முறையிலேயே பழக்கப்பட்டவர்கள். தமது சொத்துக்களே போனாலும் சரி தமது குழந்தைகள் கல்விகற்று உயர்நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தைக்கொண்டு செயற்பட்டவர்கள். இந்த நிலையில் யுத்தம் ஒன்று திணிக்கப்பட்டு இந்த கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டவேளைகளில் செய்வதறியாது திகைத்து நின்றதே உண்மை. மாறிவரும் உலக நியதிற்கேற்ப தனியே ஆயுதப்போராட்டத்தால் உரிய பயனை அடைந்துவிடமுடியாது என்பதை அறிந்தவரர்களாகக்கூட இருந்திருக்கலாம்.
ஆனால் போராட்டத்திற்கு எந்தவொரு ஆதரவையும் அவர்கள் வழங்கவில்லை என்பது ஒரே அடியாக ஏற்கமுடியாத குற்றச்சாட்டு.

1960 களின் பின்னர் கொமினிஸ சிந்தனைகள் இலங்கையிலும், யாழ்ப்பாணத்திலேயும்கூட வலுப்பெற்று வந்தவேளையில்க்கூட அந்த சிந்தனைகளை நல்லூர் மேட்டுக்குடியினர் ஏற்கவில்லை எனவும் அவர்கள் எப்போதும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பின்னால்த்தான் நின்றார்கள் என்றும் இவர்களால் கூறப்படுகின்றது. மிகத்திறமையானவரின் பின்னால் படித்தவர்க்கம் செல்வதை சாதிப்பார்வையில் பார்ப்பதே விரோதமானது என்று நினைக்கின்றேன். அதேவேளை கொமினிஸ சிந்தனைகள் அரசடியையும், ஆனைக்கோட்டையையும் மட்டுமே சுற்றி நின்றதை இவர்கள் மறுப்பார்களா? காரணம் அங்கு ஒரு குழு மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதே அதன்காரணம்.

பழைய கதைகள், சாதியங்கள் என்பவற்றை குழிதோண்டி புதைக்கக்கூடாது ஏனென்றால் எப்போதுவேண்டும் என்றாலும் அது மீள எழுந்துவிடலாம். அவற்றை பெற்றோல் ஊற்றி எரித்துவிடவேண்டும். சாதியத்திற்கு எதிராக எழுதுகின்றோம் என்று மேட்டுக்குடி என்று ஒரு வர்க்கத்தினரை தொடர்ந்தும் விமர்ச்சித்துப்போவதும் சாதிய எழுத்துக்களே. தலித்திய எழுத்துக்கள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு ஆரோக்கியமான பாதையில் இதுபோன்று எழுதுபவர்கள்பயணிக்கவேண்டும். சாதிகள் இல்லாமல்போவதற்கான ஆவனவற்றை செய்யவேண்டும். இனிவரும் சமுகம் சாதிகள், வர்க்க, பிரதேசவாதங்கள் அற்ற ஒரு சமுதாயமாக வரவேண்டும்.
இவற்றின்மூலமாகவே நாம் எமக்கான பிரதான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியுமே தவிர, மீண்டும் மீண்டும் ஒரே குட்டைக்குள் நின்று பழய கதைகளை பேசவும், பழிதீர்க்கவும் உரிய காலம் இதுவல்ல.

Thursday, December 9, 2010

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளும் நாங்களும்!!!

பயோகமான தொலைக்காட்சி நிகழ்வுகள் குறைந்துகொண்டுவரும் நிலையில் நாளாந்தம் தொலைக்காட்சி பார்க்கும் பட்டியலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஷீ தமிழின் டொப் 10 செய்திகள் இடம்பிடித்தன. ஆரம்பத்தில் இருந்து கடந்த சில நாட்கள்வரை, தமிழகச்செய்திகள், இந்தியச்செய்திகள், உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள் என்ற பிரிவில் சில உடனயடியான தகவல்களை தொகுத்து செய்தியாக வழங்கிவந்தனர்.
அலட்டலில்லாத உடனடிச்செய்திகள் பார்க்க விரும்பும் விதமாகவே இருந்தது.
இப்போது இந்த செய்திகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. முழுவதுமே பொழுதுபோக்கு செய்திகளாக மாறிவிட்டனவோ என்ற நிலையில், டொப் 10 தமிழகம், டொப் 10 இந்தியா, டொப் 10 வெளிநாடு அத்தனையுமே சினிமாவை மையப்படுத்திய செய்திகளே தொடர்ந்து வருவது எரிச்சலை உண்டாக்கின்றது.

முன்னர் ஒருகாலத்தில் (1999-2000) சக்தி எவ்.எம் வானொலியில் “கடந்தவார உலகம்” என்ற தலைப்பில் அந்த வாரத்தில் உலகில் இடம்பெற்ற முக்கியமான நிகழவுகள் குறித்த ஆழமான பார்வையாக ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றுவந்தது. அந்த நிகழ்ச்சி கேட்டதனாலேயே அப்போது ஒரு பரீட்சையில் நான் இலகுவாக சித்தியடையத்தக்கவாறு சமகால கண்ணோட்டம் அற்புதமாக அமைந்த நிகழ்ச்சி.
அப்போது அந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.வி.லோஷனும், மற்றவர் மாறன் என நினைக்கின்றேன் இருவருமே சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
காலப்போக்கில் பொழுதுபோக்கே முக்கியத்துவம் பெற்றதனால் அவ்வாறான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படாமலே விடப்பட்டு, பின்னர் நிர்வாகமே அடியோடு மாற்றப்பட்ட கதைகள் வேறு.
தற்போதுகூட அப்படியான ஒரு நிகழ்வு எந்தவானொலியிலாவது இடம்பெறாதா என்ற ஏக்கம் என்னைப்போன்றவர்களிடம் உண்டு.

திவெழுதுவதுடன் நாம் நின்றுவிடாது எம் மத்தியில் உள்ள ஒருதுறையில் அபாரமான எழுத்தாற்றல் உள்ள பதிவர் ஒருவரை, நாம் மட்டும் அன்றி பலரும் அறியும் வகையிலும் அவரது திறமையினை ஏனையவர்களுக்கும் பகிரும் வகையிலும் பதிவர்கள் செயற்படுவது ஆரோக்கியமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.
எம்மத்தியில் எம்முடனே இருந்து கிரிக்கட் உட்பட விளையாட்டு செய்திகளை அபாரமான புதிய நுணுக்கங்களுடன், தனக்கே ஆன பாணி ஒன்றில், மிகத்தரமானதாக எழுதிவருகின்றார் பதிவர் கன்-கொன் என்ற பதிவர் கோபி.
சர்வதேச கிரிக்கட் விமர்சகர்களின் தரத்திற்கு அவர் தமிழிலே திறம்பட ஆராய்வு செய்கின்றார் என்பது ஒரு மிகைப்பட்ட வசனம் கிடையாது.
இவர் போன்ற திறமையானவர்களை சில ஊடகங்கள் பயன்படுத்திக்கொண்டால், அது அவருக்கு அல்ல, ஆர்வமுடைய வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் பெருவிருந்தாக இருக்கும் அல்லவா?
ஊடகங்களில் பணியாற்றும் பதிவுலக நண்பர்களே… இதைக்கொஞ்சம் கவனியுங்கள்.

யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் வழிமுறையே “கல்வி” என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பட்டுவருகின்றது. முதலில் இது அனைவராலும் பாராட்டப்படவேண்டிய முக்கியமான விடயங்களாகும். சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான கருத்துரைகள், ஒருவகுப்பறைபோன்ற ஒளிபரப்புக்கள், பரீட்சை வழிகாட்டுதல் போன்றன இந்த ஒளிபரப்பில் இடம்பெறுகின்றது. பெரும்பாலான பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பிள்ளைகளை இதை பார்க்கும் வண்ணம் பணிப்பதை நான் கண்ணூடே பார்த்திருக்கின்றேன்.
இதேவேளை மாணவர்களிடையேயான பிரச்சினைகள், மாணவர்களின் கலந்துரையாடல்கள், மாணவர்களை உளவியல்ரீதியாக தயார்ப்படுத்தல், மாணவர்களுக்கான போட்டிகள், கல்வியுடனான பொதுஅறிவு என்பவற்றையும் இனிவரும் காலங்களில் செய்தார்களே ஆனால் இது மேலும் பெலம்பெறும் என்பது உண்மை. தொலைக்காட்சி என்பது மாணவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றது என்று கருத்து நிலவும் வேளையில் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயம் பாராட்டத்தக்கதே.

டுத்ததும் பதிவர்கள் - ஊடகங்கள் சம்பந்தப்பட்டதே. தென்னிந்தியாவில் சில எப்.எம்கள் உட்பட ஜெயா ரீ.வி. பல பதிவர்களை அறிமுகம் செய்து அவர்களின் பதிவுகள், பதிவுலகம், அவற்றின் பயன்கள் பற்றி சாதாரண மக்களுக்கு அறிமுகம் செய்து. பதிவுகளுக்கான கௌரவத்தை கொடுத்துக்கொண்டுவருகின்றனர்.
ஜேயா.ரி.வியின் காலைவசந்தம் நிகழ்ச்சியில் பல பதிவர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஊடகம் ஒன்றின் இந்தப்பணியை வெகுவாகப்பாராட்டிவருகின்றனர்.
இதேபோல இலங்கையிலும் யாழ்தேவி – தினக்குரல் இணைந்து பதிவர்கள் பற்றியும் பதிவுகள் பற்றியும் பொதுமக்களுக்கான ஒரு அறிமுகவாளராக செயற்பட்டமை பாராட்டப்படவேண்டியதே. ஆனால் மற்றைய ஊடகங்கள் பதிவுகள், பதிவர்கள் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மாறாக அந்த ஊடகங்களால் சிலவேளைகளில் பதிவர்களின் பல ஆக்கங்கள் வெளிப்படையாகவே களவாடப்பட்டுவரும் சந்தாப்பங்களும் உண்டு.
இதில் பெரியவேதனை என்னவென்றால் இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் சக்தி மிக்க வானொலி ஒன்றும் பதிவர்களை அறிமுகம் செய்து, பதிவுகளை ஒலிபரப்பினார்கள்தான். ஆனால் அதில் எவருமே இலங்கைப்பதிவர்கள் இல்லை என்பதும், அந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து மேற்படி பதிவர்களுடன் தொடர்பு கொண்டவர்கூட ஒரு இலங்கைப்பதிவர்தான் என்பதையும், இந்த அறிந்ததும் அனுபவங்களை எல்லாம் எங்கே போய் சொல்வது?

டான் தொலைக்காட்சி என்று ஒரு தொலைக்காட்சி இங்கே கேபிள் லைனாலும் வருகின்றது. ரூபவாஹினி, ஐ.ரி.என் என்பவற்றைவிட சூப்பராக நல்லா ஊதுது.
82 சனல்கள் இருப்பதனால் யார் கவனிக்கப்போகின்றார்கள் என்று நினைத்தாலும், போர் அடிக்கும்போது அப்பப்போ சனலை மாற்றிக்கொண்டு போகும்போது அந்த ரி.வியில் சில பிள்ளைகள் வந்து வாசிப்பு பழகுவதை அவதானிக்கமுடிகின்றது.
இரவானால் தேடிக்கண்டுபிடித்து பலர் அழைத்துவரப்பட்டு மன்னர்துதி பாடவைக்கப்படுகின்றார்கள்.
இதைவிட பெரிய சிரிப்பு என்னவென்றால் “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” பாடலைப்போட்டுவிட்டு, சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தீர்கள் என்று சொல்லுறாங்கப்பா…

ன்று ஒருநாள் ஞாயிறு வீட்டில் இருக்கும் நாளாச்சே என்று கலைஞர் ரி.வி.யில் “ரசிகனே” நிகழ்ச்சி பார்த்தேன். அங்கே பல நெஞ்சங்களையும் வென்ற பி.எச்.ஏ.ஹமீத் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.
நான் கூட அவரது குரலுக்கு இரசிகனே. என்றாலும்கூட அன்று மலேசியா வாசுதேவன் பாடியபாடல்கள் பற்றிய நிகழ்ச்சி என்பதால் மலேசியா வாசுதேவனும் வந்திருந்தார். அங்கே மலேசியா வாசுதேவன் அவர்களே 1959 ஆம் ஆண்டு நீங்கள் அதை செய்தீர்கள், பின்னர் சென்னைவந்து 1963 இல் இப்படி இருந்தீர்கள், இந்தப்பாடலைபாடினீர்கள், இந்த இசையமைப்பாளருக்கு இந்தப்பாடல் பாடினீர்கள் என்று மலேசியா வாசுதேவனை பேசவிடாமல் தானே அனைத்தையும் சொல்லிக்கொண்டுபோனார் ஹமீத். பார்க்க எரிச்சலாகவும், அதேநேரம் அப்போது ஏன் அங்கே மலேசியா வாசுதேவன் வந்தார் என்பதுபோலவும் மனதில் கேள்வி எழுந்தது.
தீ..படப்பிடிப்பு இலங்கையில் நடந்தபோது நடிகர் ரஜினிகாந்தை செவ்விகாணப்போய் வித்துவச்செருக்கை காட்டி ரஜினியிடம் வாங்கிய அனுபவங்கள் தற்போது ஹமீத்துக்கு மறந்துவிட்டதோ என்னமோ?

Wednesday, December 8, 2010

80களில் ரூபவாஹினி கார்டூன்கள்


80 களில் இலங்கையில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி, மற்றும் ஐ.ரி.என் ஆகிய தொலைக்காட்சிகளே இருந்தன. எமக்கு அப்போது வேறு சொய்ஸ்கள் கிடையாது. சில காலநிலைகளில் அப்பப்போ இந்திய டி.டி.வன் தொலைக்காட்சி பிடிபடும். ஆனால் கார்ட்ரூன்கள் என்றால் அதில் அப்போதும் எமக்கு பெருவிருந்தாக ரூபவாஹினி காட்டூன்கள் இருந்தன.

காட்டூன்கள் முடிந்தவுடன் படிக்க புத்தகம் தூக்கவேண்டும் என்ற கனவான் ஒப்பந்தத்துடன் நாம் அப்போது தொலைக்காட்சிமுன்னால் அனுமதிக்கப்படுவோம்.
ஓவ்வொருநாளும் பெரும்பாலும் மாலை 5 மணிக்கும் 5.30ற்கும் கார்டூன்கள் ஒளிபரப்பாகும்.
பெரும் உற்சாகத்துடன் நாம் அவற்றுக்கு தயாராக இருப்போம்.
இன்றும் பார்க்கமுடியாதா? என்று ஏங்கவைக்கும் கார்ட்டூன்களும் அதில் அடக்கம். முக்கியமாக வூடிவூட்பெக்கர், ரொம் அன்ட் ஜெரி, ரோட் ஸ்பீடர் என்பன இப்போது பார்த்தாலும் எம்மை மறக்கக்கூடியதாகவே உள்ளன.

ஏற்கனவே 80களில் அப்போது ரூபவாஹினியில் ஒளிபரப்பான ஆங்கிலத்தொடர்களைப்பற்றி முன்னர் ஒருபதிவு இட்டுள்ளேன். இப்போது அந்தக்காலத்தில் நாம் பார்த்து ஒன்றித்துப்போன காட்டூன்களை கொஞ்சம் அசைபோடலாமே…
முக்கியமாக கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்துவிட்டதனால், சிலவற்றை மறந்துவிட்டேன். இருந்தாலும் பதிவர் லோஷன் என் வயதை உடையவர் என்றபடியாலும், அடுத்து பதிவர் வந்தியத்தேவன் எங்களைவிட மூத்தவர் என்றபடியாலும், யோவொயிஸ் யோகா எங்கள் வயதுக்கு அண்மித்தவர் ஆகையால் இவர்கள் மூவரும் நான் மறந்தவைகளை நினைவு படுத்துவார்கள் என நினைக்கின்றேன்.

ரொம் அன்ட் ஜெரி.

இந்தக்கார்ட்டூன் பற்றி எழுதவேண்டிய தேவையே இல்லை. ஏன் என்றால் அந்த அளவுக்கு அது பிரபல்யம் மிக்கது. அப்பொழுதுகளில் கோம்வேர்க் பண்ணவேண்டும், கட்டுரை எழுதவேண்டும் என்று இருந்த மனச்சுமைகளை மறந்து கொஞ்சம் சிரிக்க, மனதுக்கு ரிலாக்ஸ் ஆக அப்போது இருந்தது.
எப்போதுமே நான் ரொம்முக்குத்தான் (பூனை) சப்போர்ட்.

வூட்பெக்கர்.

விழுந்து விழுந்து சரிப்பது என்பதன் அர்தத்தை புரியவைத்த ஒரு கார்ட்டூன். மரங்கொத்தி ஒன்றின் அளவுக்கு அதிகமான லொள்ளுத்தனமும், குறும்புகளும், வயிறு வெடிக்கும் அளவுக்கு சிரிக்கவைக்கும்.

ரோட் ஸ்பீடர்.

பீ…பீ… என்று ஒலிஎழுப்பி உச்சவேகத்தில் ஓடும் ஒரு பறவையை பிடிக்க ஒரு நரி எடுக்கும் பகிரதய பியத்தனம்தான் இந்தக் காhர்ட்டூன் முழுவதும். அதைப்பிடிக்கும் முயற்சியில் விக்கிரமாதித்தன்போல நரி எடுக்கும் முயற்சிகளும் எப்போதுமே தனது அதிபுத்திசாலித்தனத்தால் பறவை தப்புவதுமே இந்தக்கார்ட்டூன்.

ஹீ –மான்.

அநியாயங்களை எதிர்த்துப்போராடும் ஒரு குழு, ஒவ்வொரு கட்டத்திலும் பல சிக்கல்களை சந்தித்து நிற்கும். அப்போது நாயகன் தனது வாளை உயர்த்தி குரல் எழுப்பும்போது மிகுந்த சக்திமிக்கவனாக மாறுவதும், பின்னர் எதிரிகளை துவம்சம்செய்வதுமான ஒரு கார்ட்டூன்.

கெக்கிலி ஜக்கிலி

இரண்டுகாகங்கள் மரத்தில் இருந்து சாலை நிகழ்வுகளை அவதானிப்பதும், தமக்குள் உரையாடுவதும், சில தேவைகள் நிமித்தம் தம் சாகசங்களை காட்டுவதுமான ஒரு கார்ட்ரூன் இது.

டக்ரலிஸ்

டிஸ்னிவேள்ட் தயாரிப்பில் உலகப்பிரபலம் பெற்ற ஒரு கார்ட்டூன். இந்தக்கார்ட்டூன் அடிப்படையில்தான் முட்டாள்வாத்து, வாத்துமடையன் என்ற பெயர்கள் வந்தனவோ என்று அப்போது நான் யோசித்துப்பார்த்ததுண்டு.

பட்மன்டஸ்

சித்திரக்கதைகளில்வரும் பட்மான் பாத்திரத்தை சித்தரிக்கும் ஒரு கார்ட்டூன். பட்மானின் சாகசங்களும், தனது சக்தியால் எதிரிகளை திணறடிக்கும் சாகசங்களும் நிரம்பிய விறுவிறுப்பான கார்ட்டூன் இது.

ஸ்பைடர்மான்.

சிலந்தி மனிதனின் சாகசங்கள் நிறைந்த கார்ட்டூன் இது. தனது அற்புதமான சாகசங்களால் மக்கள் மத்தியில் பிரலம்பெற்று, அனர்த்தநேரங்களில் மக்களை காப்பாற்றி, பல எதிரிகளின் சூழ்ச்சிகளையும் துவசம் செய்வார் ஸ்பைடர்.
பின்னர் இதுவே படமாக எடுக்கபட்டு சக்கைபோடு போட்டகதைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

வில்லிங்ஸ்.

விண்வெளி சம்பந்தமான கொஞ்சம் போறடிக்கும் ஒரு கார்ட்டூன். விண்வெளியில் பயணிக்கும்போது சில தீய சக்திகளை எதிர்த்து போராடும் ஒரு தொடர்கார்ட்டூன்.

டொக்ரர் ஹொட்டகித்த

இன்றும் இந்த காட்டூன்பாடல் காதுக்குள் ஒலிக்கும். ஒரு சிக்கள கார்ட்டூன் தொடர். டொக்ரர் ஹொட்டகித்தவுடன் கப்பலில் பயணிக்கும், குரங்கு, முயல் முதலான பாத்திரங்களின் நகைச்சுவைகளும், டொக்ரரின் பெட்டிக்குள் மியூசிக் குரூப் நடத்தும் எறும்புகளின் பட்டாளமும் அருமை.

அந்தநேரத்தில் மனதில் நின்ற இந்தக்கார்ட்டூன்கள் காலங்கள் பல கடந்தாலும் இன்றும் மனதில் நிற்கின்றன. என்ன இருந்தாலும் இந்தக்கார்ட்ரூன்கள்போல இப்போது வரும் கார்ட்டூன்கள் மனதில் இடம்பிடிக்கமறுக்கின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails