Wednesday, January 19, 2011

வட்டங்களுக்குள் நம் வாழ்க்கை கட்டுமானங்கள்.






கட்டுமானங்கள், திட்டங்கள், யாப்பமைப்புக்கள் என்பன பெரிய நிறுவனங்களுக்கோ, அல்லது நாடுகளின் கட்டமைப்புகளுக்கோ மட்டும் இன்றி நமது வாழ்க்கையிலும் தனி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்டுமானம் உண்டு.
அதை தெரிந்துகொண்டோ அல்லது தெரியாமலோ நாம் அந்த கட்டுமானங்களுக்குள்ளாகவே எமது வாழ்க்கையினையும் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.
இந்த கட்டுமானங்களை எமக்கே தெரியாமல் எம் கட்புலனுக்கு அப்பாற்பட்ட எம்மைச்சுற்றி நாமே போட்டுக்கொண்டு வாழும் வட்டங்களின்மூலம் ஓரளவுக்கு தெளிவு படுத்திவிடலாம். எம்மைச்சுற்றி குறைந்தது மூன்று வட்டங்களையாவது நாம் போட்டிருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மிகப்பெரிய விடயம் ஒன்றை ஒரு பதிவில், சுருங்கச்சொல்வது என்பது இயலாதகாரியம் என்றாலும், அந்த பெரிய விடயத்தை சிறியதாக ஓரளவுக்காவது புரியும் வண்ணம் சொல்லநினைக்கின்றேன்.

நான்..என்ற இடத்தில் இருந்து எமக்காக நாம் போட்டுக்கொண்ட வட்டங்கள் ஆரம்பமாகின்றன.
இதில் முதலாவது வட்டமாக மனைவி, குழந்தைகளோ, பெண்கள் என்றால் கணவன் குழந்தைகளோ என்று வருகின்றது. இதுவே ஒருவனின் அல்லது ஒருத்தியின் மூலாதாரவட்டமாக அமைந்துவிடுகின்றது. (சில சமையங்களில் இந்த வட்டமே சிதைந்து ஏனையவட்டங்களில் தாக்கம் செலுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு அதற்கு பின்னர் வருவோம்.)

இரண்டாவது வட்டம். கணவனின் பெற்றோர்கள், சகோதரர்கள், அதேபோல மனைவியின் பெற்றோர்கள் சகோதரர்கள் என்போர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மூன்றாவது வட்டத்தினுள் ஏனைய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் உள்ளடக்கட்டிருக்கின்றனர்.

நான்காவது வட்டத்தினுள், கூடத்தொழில் புரிபவர்கள், அன்றாடம் பழகிக்கொள்பவர்கள், வாடிக்கை வைத்திருக்கும் கடைக்காரர்கள் இன்ன பிற நபர்களை கூறிக்கொள்ளலாம்.

இவற்றை தாண்டி ஐந்தாவது வட்டம், செல்வாக்கு, உச்ச பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், மத குருக்கள் என்போரை கொள்ளலாம்.

சரி… வாசித்துவிட்டீர்கள் அல்லவா? ஒருமுறை கண்களைமூடி…உங்கள் உறவுகள் நண்பர்களை, உங்களுக்கு தெரிந்த எழுமாறான நபர்களை நினைத்துப்பாருங்கள்.
உங்களுக்கும் உங்கள் வட்டங்கள் தெரிந்து, நீங்கள் நினைத்த நபர் எந்தவட்டமோ அந்த வட்டத்தினுள் நிற்பதை உணரமுடிகின்றதா?
அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.

எமக்கு உரிய, அறிமுகமான நபர்களை நாம் அன்றாடம் எந்த எந்த வட்டங்களில் போடவேண்டுமோ அந்த அந்த வட்டங்களில் போட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
உதாரணமாக மூன்றாவது வட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவரையோ, அல்லது அயலவர் ஒருவரையோ அவரது எம்சார்ந்த இயல்புகள், ஈர்ப்புக்கள், உச்ச அன்பு காரணமாக இரண்டாவது நிலைக்கு அவரை உற்ற உறவினர், சகோதரர்களின் நிலைக்கான இரண்டாம் வட்டத்திற்கு உள்ளீர்த்து வைத்துவிடுவதும் உண்டு.
அதேபோல பல்வேறு காரணங்களுக்காக இந்த வட்டத்தில், முன்னகர்வு, பின்னகர்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்.
ஆனால் இரண்டாவது வட்டம் கட்டாயமானது, அந்த வட்டத்தை அழித்துவிடவோ, அல்லது சிதைக்கவோ நம்மால் முடியாது. ஏனெனில் அது பிறப்பால் அமைந்தது.

முதலாவது வட்டமே சிதைவுறும் நிலை விவாகரத்துக்களில் உண்டு. விவாகரத்துக்கள் மூலாதார வட்டத்தையே சிதைவுக்கு உள்ளாக்கிவிடுகின்றன. இதன் தாக்கம் பிறவிட்டங்களிலும் பிரதிபலிப்பை காட்டும்.
இரண்டாவது வட்ட உறவிர்களில் சரிபாதி எதிரிகளாகும் சந்தர்ப்பங்களும், ஏனைய உறவினர்கள், நண்பர்கள், இந்த நிலையில் மூலாதார வட்டத்திற்குள் வரவேண்டிய தேவைகளும் இதன்போது ஏற்பட்டு ஒரு குழப்பமான நிகழ்வே அரங்கேறிவிடுவது இயல்பு.

அடுத்து மூன்றாவது வட்டம் அந்த வட்டத்தின் தனிநபரான ஒருவனின் உணர்வுகள், அபிலாசைகளை தீர்த்துக்கொள்ள மிகவும் தேவையான விடயம். ஏனெனில் இந்த வட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் நண்பர்கள். யாரிடமும் சொல்லமுடியாத, மனக்கஸ்டங்களையும், பிரச்சினைகளையும் இரண்டு வட்டங்களைத்தாண்டி இந்த மூன்றாவது வட்டத்தினரிடமே சொல்லக்கூடியதாக இருக்கும். இந்த ஐந்து வட்டங்களிலும் இது சென்ஸிட்டிவ்வான வட்டம் என்று சொல்லலாம்.
ஏனைய வட்டங்களைவிட இந்த வட்டத்தினரிடமே ஒருவனுக்கு ஆறுதலும், அமைதியும் கிடைக்கும். எனவே இந்த வட்டத்தினுள் நிதானமாகவே ஆராய்ந்து நபர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

அடுத்த நான்காவது வட்டம் நாம் அன்றாடம் பழகிக்கொள்ளும் வட்டம். இந்த வட்டத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என்றாலும் உடனடியான உதவிகளுக்கும், அதேவேளை திடீர் என ஏற்படும் ஆபத்திற்கும் முன்னுக்கு நிற்கப்போகும் வட்டம் இதுவாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வட்டத்தில் உள்ளவர்களைத்தான் நாம் தினம் தினம் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். மறைமுகமாக எம்மீது செல்வாக்கு செலுத்துபவர்கள் இவர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியும்.

இறுதிவட்டம், ஐந்தாவது வட்டம் சிலருக்குத்தான் உண்டு. தொழில் நிமித்தம், நண்பர்கள் நிமித்தம், கலை நிமித்தம் கட்டாயமாக ஏற்பட்டுவிடும் வட்டம் இது.
குறிப்பாக இந்த வட்டம் பற்றி ஏனைய வட்டத்தினருக்கே தெரியாதபடி நாம் இந்த வட்டத்தை இரகசியமாக எம்முடன் வைத்திருப்போம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பேச்சிலேயே சில வேலைகள் முடிவடையவும் இந்த வட்டமே பெரிதும் உதவும். எம்மால் முடியாத, எம்மைமீறிய ஒரு காரியத்திற்கு இந்த வட்டம் உதவலாம்.

ஆனால் உண்மையான அன்பு, நேசம், கபடமற்ற, கயமையற்ற நட்புக்கள், அன்பு உள்ளங்கள், இந்த வட்டங்கள் அத்தனையினையும் தாண்டி முதல் வட்டத்திற்கு மிக அருகில் வந்து நின்றுவிடுவதும் உண்டு. அதேபோல கடும் விரோதங்களால் எந்தவொரு வட்டத்தில் உள்ளவர்களும், அனைத்து வட்டங்களிலும் இருந்து நகர்த்தப்படாமல் ஒரே அடியாக அழித்துவிடப்படுவதும் உண்டு.
ஏன் என்றால் அனைத்துமே மனித மனம் அல்லவா?
சரி..இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி நீங்கள் போட்டிருக்கும் வட்டங்கள் எத்தனை?

Tuesday, January 18, 2011

ஹொக்ரெயில் - 18.01.2011

தகுதியானவர்களைச்சேரும் விருதுகள்.

தமிழகத்தின் கலை பண்பாட்டு துறையின் சார்பில், தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இயல்துறையில் சிறந்து விளங்கும் ஜெயகாந்தனுக்கு பாரதி விருதும், இசைத்துறையில் சிறந்துவிளங்கும் இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டியத்துறையில் சிறந்துவிளங்கும் பத்மா சுப்பிரணியத்திற்கு பாலசரஸ்வதி விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
யார் செய்தாலும் என்ன? மகிழ்ச்சியான விடயம் என்பதன் காரணம் மிகத்தகுதியான இடங்களுக்கு விருதுகள் சென்றடைந்தமைதான்.

பூமியின் பூகம்பப் பிரதேசம்.
2004 ஆம் அண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதியை உலகம் என்றும் மறந்துவிடுவதற்கில்லை. ஏனெனில் குறிப்பிட்ட ஒரு சில மணித்தியாலங்களில் உலகத்தையே புரட்டிப்போட்ட வேதனையும், துயரமும் கலந்த மிகப்பெரும் துன்பியல் நிகழ்வு அது. அந்த நாளில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாகவே பூமியின் தென்கிழக்கு மூலையில் உள்ள யாவா, சுமாத்திரா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடக்கப்பட்டுள்ள வலையங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டவண்ணமே உள்ளன.

சுமாத்திராவில் பூகம்பம் ரிக்டர் அளவு 5.1, இந்தோனேசியாவில் பூகம்பம் ரிக்டர் அளவு 6.2 என்ற செய்திகள் உலகிற்கு இப்போ சர்வசாதரணமான நிகழ்வுகள் ஆகிவிட்டிருக்கின்றன.
பாரிய நிலக்கீழ் தகடு பிரியும் இடம் அதுவென பூகோள ஆராட்சியாளர்கள் தெரிவித்தாலும்கூட, திடீர் என ஏன் இந்தப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இப்படி நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழாமலும் இல்லை.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரீகனுடைய காலங்களில் இந்தப்பிரசேங்களில் கழிவு மற்றும் அணுக்கழிவுகளை, கடலின் அடியில் ஆழமாக ரில் செய்து அடைக்கப்பட்டதாகவும், அதன் விளைவுகளே இது எனவும் ஒரு செய்தி சொல்கின்றது, இதுபோல அச்சரியமூட்டும் பலவிதமான செய்திகள் மேலும் உள்ளன.

இந்தப்பிரதேசத்தில் பூமி அதிர்வினால் பாதிக்கப்படும் பிரதேசங்களிலேயே நாமும் உள்ளதனால்த்தான் இந்த பயமே.
எது எப்படியோ சுனாமி என்பதுபற்றி 2004ஆம் ஆண்டுதான் நாம் கண்களால்ப்பார்த்து அபாயத்தை புரிந்துகொண்டாலும், இலங்கை இந்தியாவுக்கு சுனாமித்தாக்கம் ஏற்பட்டது இது முதல்தடவை அல்ல, ராஜராஜசோழனுக்கு முற்பட்ட காலத்திலும், இலங்கையில் விகாரமாதேவியின் காலத்திலும் சுனாமித்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சில தகவல்களை பலர் மேற்கோள் காட்டியும் வருகின்றனர்.

சுஜாதா.
இந்தவாரம் முன்னர் வாசித்த சுஜாதாவின் மூன்று புத்தகங்களை மீள வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாசித்து பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும் மீண்டும் வாசிக்கும்போது பழைய நினைவுகள் அப்பப்போ எட்டிப்பார்த்ததை வாசித்துக்கொண்டு போகும்போது உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

நிர்வாண நகரம்.

கொஞ்சம் வித்தியாசமான கதைதான். தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகவே தொய்வு நிலை எங்கும் ஏற்பட்டுவிடாமல் சுஜாதா ஒரே இழுவையில் இழுத்துக்கொண்டு செல்வதுபோன்ற உணர்வு படிக்கும்போது ஏற்படும்.
மிகவும் கெட்டித்தனம் உள்ள ஒருவன், சமுகத்தால் புறக்கணிக்கப்படும்போதும், தன் திறமை கவனிக்கடாதபோதும் சமுகத்தின்மேல் வெறுப்புறுகின்றான்.
அந்த நகரத்தையே நிர்வாணமாக்கவும், அதன்மூலம் தான் பிரபலமடையவும் நினைக்கின்றான். மிகச்சாதுரியமாக தன் குறிக்கோள்களை பக்காவாக நகர்த்துகின்றான். நாமும் அவனுடனேயே போய்க்கொண்டிரக்கின்றோம்.
இறுதியில் கணேஷ் வசந்த் வருகின்றார்கள். திடீர் திருப்பங்கள்…
இந்தக்கதையின் முக்கியமான ஒரு அம்சமே இறுதியில் இந்தக்கதை நாயகனும் கணேஷ_ம் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பமே.

“மிஸ்ரர் கணேஷ், நான் இந்த நகரத்தை நிர்வாணிக்கமுயன்றேன்! நிர்வாணம்னா எக்ஸ்போஷர். எங்கோ மூலையில பூச்சியா ஒரு எறும்பா இருந்தவனை….ஒரு அநாம தேயத்தை இந்த நகரம் பேச ஏன் கொண்டாடக்கூட ஆரம்பிச்சுடுச்சு பாருங்க. அவுங்களுக்கு வேண்டியது லெஸ்ஷேன். என்னைப்பத்தி அஸெம்பிலியில் பேசினாங்க. லாவணி பாடினாங்க. பெண்கள் டி ஷேட்ல எழுதினாங்க…பஸ் ஸ்ராண்டு, ரயில், செய்தித்தாள்கள் எங்கும், எங்கும் என்னைப்பத்தித்தான் சென்ற மூன்று மாசங்களாக பேசிக்கொண்டிருந்தாங்க. என்ன ஒரு கல்சுரல், அபர்ரேஷன் பாருங்க!
இந்த நகரத்தை என்னுடைய முறையில பழிவாங்குறது, கெலி செய்யுறது திருப்பித்தறது குற்றமா?” சிவராஜ் கேட்கும்கேள்வி கொஞ்சம் சிந்திக்கவைக்குது…

மூன்றுநாள் சொர்க்கம்.

குருராஜ், ராஜ், மனோ, சரஸ்வதி என்ற நான்கு விடலைப்பருவ இளைஞர்களின் அனுபவங்கள் ஊடான ஒரு பயணம்.
விடலை வயதினரை பெற்றவர்கள், சமுகங்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை சுஜாதா சொல்லாமல் சொல்லியிருக்கின்றார். பணம், பெண், போதை என்பவற்றினை நோக்கி விடலை மனங்கள் இழுத்து செல்லப்படுவதையும், அதனால் வாழ்வில் ஏற்பட்டுவிடுகின்ற அபத்தங்களையும் சுவாரகசியமூடாக நாசுக்காக சொல்லிவிடுகின்றார் சுஜாதா.
விடலைப்பருவத்தினர், விடலைப்பருவத்து பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய மூன்றுநாள் சொர்க்கம்.

அப்ஸரா

சிவராஜன் என்னும் சைக்கோபாத் எழுமாறாக கொலைகளை செய்துகொண்டு போகின்றமையும், அந்த கொலைகளுக்கு அவன் தனது கணனித்துறை வேலையில் றன்டமாக சில பெயர்களை தெரிவுசெய்து கொலைவேட்டையில் ஈடுபடுவதையும் அறியும்போது உச்சி உறைகின்றது. இந்த கதையில் கணேஷ் வசந்த் இல்லை என்றாலும் பொலிஸாரின் புலனாய்வும், தப்பு துலக்கலும் கலக்கலாக ஆவலுடன் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது.
இந்தக்கதையின் இறுதியில்…

The Psychopath is a Social aggressive highly impulsive person who feels little or no guilt and is unable to from bonds of affection with other human beings.
என்று மக்கார்ட் சொன்னது இங்கு நினைவு கூரத்தக்கது. சிவராஜன் சைக்கோபாத் மட்டுமல்ல, காரண காரியங்களையும் செயல்களில் தராதரங்களையும் பாகுபடுத்த முடியாத நிலையில் ஏறக்குறைய மிருக நிலையில் இருக்கின்றான். அவனை உடனடியாக இன்ஸிரியூட்டில் சேர்க்கவேண்டும் என்று சிபாரிசுசெய்கின்றேன். இவனை கோட்டில் அழைத்துச்சென்று கூண்டில் அடைத்து குற்றம் சாட்டி வழக்கு நடத்தி தண்டனை கொடுத்து சிறையில் அடைப்பதிலோ அல்லது தூக்கில் தொங்கவிடுவதிலேயோ சமுகத்தில் எந்தவிதக்காரணமும் எந்த விதத்திலும் முன்னேறுவதில்லை. இது என் அபிப்பிராயம் என இறுதியில் டாக்டர் சேர்டிபிக்கேட்டில் அபிப்பிராயம் சொல்லியிருப்பது டாக்டரது அபிப்பிராயம் மட்டும் இன்றி சுஜாதாவினதும் நமதும் அபிப்பிராயமாகவும் இருக்கும்.

இந்தவாரக்குறும்படம்


துனீஸியா

உலகச்செய்திகளில் தற்போது முதன்மை இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது துனீஸியா. ஆபிரிக்க கண்டத்தில் வட ஆபிரிக்காவில், மத்தியதரைக்கடலுக்கு அண்மையில் அமைந்துள்ளது துனீஸியா தேசம்.
1987ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் ஏற்பட்ட இராணுவப்புரட்சி மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜய்னுல் ஆப்தீன் தொடர்ந்தும் அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகின்றார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது 89 சதவீத வாக்குகளை பெற்று இவர் ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், இவரது ஊழல் மலிந்த ஆட்சி பற்றி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைதோன்றியிருந்தது, அதேவேளை நாட்டில் ஆபிரிக்க கண்டத்திலேயே மிக அதிகமாக கல்வி அறிவு கொண்டிருக்கும் நாடு என்ற மதிப்பை பெற்றிருந்தும், வேலைவாய்ப்புக்கள் இன்றி இளைஞர்கள் வீதியில் நின்றதே இவருக்கு பெரும் சிக்கலாக அமைந்துவிட்டது.
இளைஞர்கள் வீதிக்கிறங்கி, போராட்டங்களை நடத்த அதற்கு மக்களின் ஆதரவு வலுப்பெற்றுச்செல்ல, இவற்றை அடக்க இராணுவத்தை பயன்படுத்த ஜனாதிபதி முடிவெடுக்க பிரச்சினை விஸ்பரூபமாகிவிட்டது.
இறுதியில் ஜனாதிபதி நாட்டில் இருப்பதே தனக்கு ஆபத்து என்று நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு அது கொண்டுசென்றுவிட்டது. முன்னர் அவர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் வந்தாலும், பிரான்ஸ் உடனயடிhக அதை மறுத்துவிட, சவுதி அரேபியா அவர் தமது நாட்டில்த்தான் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆக… துனிஸியா மக்கள் பல நாட்டு தலைவர்களுக்கும் ஒரு எதிர்காலச்செய்தியை சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியுது.

4 கோல்டன் குளோப் விருதுகள்: கலக்கிய சோசல் நெட்வேர்க்

68ஆவது கோல்டன் குளோப் விருதுவழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்றது. இதில் பலரும் ஆரூடம்கூறியபடியே சோசல் நெட்வேர்க் நான்கு விருதுகளைப்பெற்று கலக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த இயக்குனருக்கான விருதையும், சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த இசைக்கான விருதுகளையும் இந்தத்திரைப்படமே தட்டிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம்முதல் இறுதிவரை திரைப்படம் விறுவிறுப்பாகவும், திறமையான வசன நகர்வாகவும் சென்றபோதே இந்த திரைக்கதைக்கு நிற்சயம் விருது கிடைத்துவிடும் என பலர் ஆரூடம் குறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் சிறந்த இயக்குனருக்கான விருதை டேவிட் பின்ஞ்சரும், சிறந்த திரைக்கதைக்கான விருதை ஆர்ரொன் சோர்க்கினும், சிறந்த இசையமைப்புக்கான விருதை ரன்ட் டெஸ்னர் மற்றும் ஹர்டிக்கஸ் ரோஸ் அகியோர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும் 127 ஹவர்ஸ் திரைப்படத்தின் இசைக்காக இரண்டாவது தடவையாகவும் ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இம்முறை தவறிவிட்டது.

மியூசிக் cafe


ஜோக் பொக்ஸ்
ஒரு தொழிற்சாலை முதலாளி தனது தொழிற்சாலையில் பணிபுரிவதற்கு அழகிய பெண்கள் தேவை. நல்ல சம்பளத்துடன், போனஸ்கள் தரப்படும் என்று விளம்பரம் செய்தார். பல அழகான பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களின் மிக அழகானவர்களை தெரிவு செய்து வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
முதல்மாச சம்பளத்துடன், அவர்கள் அனைவருக்கும் பாவாடை போனஸாக கொடுக்கப்பட்டது.
மறுமாதமே முதலாளி போனஸை உயர்த்தும் வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

Monday, January 17, 2011

ஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.

ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.
எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.
அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதில் இன்றுவரை அந்த சமுகம் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நெஞ்சில் வைத்து துதித்துகொண்டிருக்கின்றது.

மருதூர் கோபாலமேனன் இராமச்சிந்திரன் இதேநாள் 1917 ஆம் ஆண்டு இலங்கையில் நாவலப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்து டிசெம்பர் 24 1987ஆம் ஆண்டு உடலால் மறைந்தாலும் இன்றுவரை கோடிக்கணக்கான உள்ளங்களில் என்றுமே ஒரு சக்கரவர்த்தியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
எம்.ஜி.ஆர் உடைய திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்பவற்றை சொல்லப்போனால் அது சூரியனுக்கே கண்ணாடி பிடித்து காட்டுவதுபோலாகிவிடும்.
எனவே என்பார்வையிலும், என் அனுபவங்களிலும் எம்.ஜி.ஆர் என்ற கோணத்தில் போகின்றேன்.

1987 ஆம் ஆண்டுகளின் முன்பகுதி பாரிய அனர்த்தங்கள் ஆபத்துக்கள், குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்களுக்கு மத்தியில் நாளை எங்கள் உயிர் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டுவிடும் என்ற பீதியுடன் நாம் வாழ்ந்துவந்தாலும், எம்.ஜி.ஆர் இருக்கின்றார் என்ற தைரியம் எம் சுற்றத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சுக்களிலும், போராளிகளின் நம்பிக்கைகளிலும் தெளிவாகத்தெரிந்தமையினை அப்போது 09 வயதுதான் என்றாலும் தெளிவாகப்புரிந்துகொண்டேன்.
உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் உணவுகளுடன் வந்த இந்தியக்கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையினால் எச்சரிக்கப்பட்டு, திரும்பி அனுப்பட்டதும், ஆனால் உடனயடியாகவே பிற நாடு ஒன்றின் வான்பரப்பு என்றாலும் வாடுவது தமிழ் இனம் என்ற எம்.ஜி.ஆரின் அசைக்கமுடியாத பிடிமானத்தால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கைக்கு மேலாக சுற்றிவந்து உணவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றதும்,
அப்போது எங்களுக்கு வானில் இருந்து அருள் புரிந்தது மிராஜ்களாக தெரியவில்லை எம்.ஜி.ஆராகவே தெரிந்தார்.

ஆனால் சில சூழ்ச்சிகளால், இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில், ஈழத்தமிழர்களின் தாயகங்களில் சிங்களவனையும் மீறிய ஊழித்தாண்டவங்கள் இடம்பெற்றபோது, நோய்ப்படுக்கையில் படுத்திருந்தாலும் அவர்களுக்காக ஏங்கிய ஒரே உன்னதமான ஜீவன் எம்.ஜி.ஆர் மட்டுமே.
இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நாம் இருக்கும்வேளைகளில், இந்திய அமைதிகாக்கும் படைகள், ட்ராக்குலாக்களாக எங்கள் இரத்தங்களை வெறிகொண்டு குடித்துவந்த நிலையில், எம்.ஜி.ஆரின் இழப்பு எங்களின் இழப்பாகவே எங்களுக்கும்தோன்றியது.

ஐயோ… எங்களைக்காப்பாற்ற இனி எவரும் எம் இனத்தில் இல்லை என்ற அன்றைய நாட்களின் அந்த மக்களின் அவலக்குரல் இறுதிமட்டும் தீர்க்கதரிசனமாகவே போய்விட்டது.
எம்.ஜி.ஆரின் எங்கள் மீதான் கரிசனை வெறும் வார்த்தைகளாக இருக்கவில்லை, அரசியல் இலாபங்களாக இருக்கவில்லை, அதற்கான தேவைகளும் உச்சத்தில் இருந்த அவருக்கு இருக்கவில்லை. காசுக்காகவோ, தன் காரியங்களுக்காகவோ அது இருக்கவில்லை. உண்மையான உணர்வு, பாசம், நேசிப்புக்களுக்காகவே அது இருந்தது. அந்த நேசம், பாசம் அவர் மறையும் வரை அவரிடம் உச்சமாக இருந்தது.
நிச்சயம் எம் மீதான ஒரு பெரும் ஏக்கத்துடனனேயே அந்த ஜீவன் பிரிந்திருக்கும் என்பது ஈழத்தமிழரின் அசைக்கமுடியாத உண்மை.

சென்னை சென்ற முதலாவது நாள்.. முதல்வேலையாக மரினாபீச்சுக்கு சென்று அங்கே..இங்கே பார்க்காமல் நேராகச்சென்றேன் எம்.ஜி.ஆரின் புகழுடல் “ஈழத்தமிழன் விடிவு பற்றிய நல்லசெய்தி தன் கல்லறையின் காதுகளில் விழாதா” என்ற ஏக்கத்துடன் இருக்கும் இடத்திற்கு.
தூரத்தில் “எம்.சி.ஆரின் வாச்சு சத்தம் கேக்குதுப்பா.. என்று சிலர் கல்லறையில் காதுகளை வைத்து கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் வேடிக்கையாக திறப்புக்களால் தட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அகலும்வரை காத்திருந்துவிட்டு அந்த இடத்திற்கு செல்கின்றேன். கண்கள் கலங்குகின்றன, இருதயத்தில் ஒரு பரிதவிப்பு, இதோ கோடி இயதங்களில் வாழும் ஒருவரின், எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் ஒரு உன்னதமானவரின் உறங்கும் இடத்திற்கு செல்கின்றேன் என்ற பதபதப்பு. அமைதியாக கைகளை கட்டி நானும் என்னுடன் வந்த நண்பர்களும் நிற்கின்றோம். எனக்கு கண் குழமாகிவிட்டது. நண்பர்களை பார்த்தேன் அதில் ஒருவர் அழுதே விட்டார். “காற்று நம்மை அடிமை என்று சொல்லவில்லையே” என்று தொடர்ந்து அந்த பாடல் வரிகள் மனதிற்குள் கேட்டுக்கொண்டிருந்தன.

பக்கத்தில் கடமையில் இருந்த காவல்அதிகாரி தம்பி நீங்கள் சிலோனுங்களா? என்று கேட்டார். ஓம்.. என்றோம். ஏதோ சொல்லவந்தவர், கல்லறையினையும் எங்களையும் பார்த்து தொண்டைவரை வந்த வசனங்களை கஸ்டப்பட்டு விழுங்கிவிட்டு, எங்களை தட்டிக்கொடுத்துவிட்டு அப்பால் சென்றார்.
தமிழ்நாட்டில் எம் இனத்தின் எம்மீதான் அன்றைய நிலையாக அவரது செய்கை சிம்போலிக்காக இருந்தது நமக்கு.

இதோ இப்போது திக்குத்தெரியாத காட்டில் என்ன செய்வதென்று தெரியாது தவிப்புடன் இப்போது எம்மினம் அடிபட்டு நிற்கின்றது. அப்போது திக்கற்றுநின்ற நமக்கு இதுதான் கிழக்கு என்று தெளிவாகக்காட்டிய அந்த எம்.ஜி.ஆரின் பாசக்கரங்கள். இப்போது மீண்டும் திக்கற்ற சமுதாயமாக இருக்கும் நமக்கு ஒரு ஆன்மபலமாக நின்று வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்….இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

Sunday, January 16, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.தர்ஷன்.

தர்ஷனால் “பதியவும் பகிரவும்” படும் விடயங்கள், மனதிற்குள் பல ஆச்சரியங்களை கொண்டுவருவதாக அமைந்துவிடுகின்றன. தர்ஷனின் எழுத்துக்கள்
சமூகத்தின் கண்ணாடியாக பலவேளைகளில் பிம்பங்களை காண்பித்து நிற்பதை அவதானிக்கமுடிகின்றது. எதையும் “பிரக்டிக்கலாக” எடுத்தியம்பும் முறை, சாத்தியப்பாடுகள், வேறுபட்டகோணங்கள் என மெதுவாக ஆராய்ந்து முடிவுகளை வாசகர்வசமே பல இடங்களில் விட்டுவிடுவது தர்ஷனின் காத்திரமான எழுத்துக்களின் பண்பு.
அரசியல், சமூகம், நாட்டு நடப்பு, கவிதை, இலக்கியம், விஞ்ஞானம், பௌத்தறிவு, விளையாட்டு, சமகாலம், உலகம், இசை, சினிமா, கலை என தர்ஷன் குறிவைக்கும் விடயங்கள் பல. ஆனால் வைக்கும்குறி தப்பாது இருக்கவேண்டும் என்பதில் தர்ஷன் மிகக்குறியாக இருப்பதை அவரது எழுத்துக்கள் நிரூபித்துவிடுகின்றன.

சிறிஸ்கந்தகுமார் தர்ஷன் என்ற இயற்பெயரைக்கொண்ட இவர் மாத்தளையை சொந்த இடமாகக்கொண்டவர். ஒரு விஞ்ஞான ஆசிரியர். ஆசிரியத்தொழிலை விரும்பி ஏற்று அந்த தொழிலின் மகத்துவம் உணர்ந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு நாளைய சிறந்த சிற்பிகளை உருவாக்கும் பணியில் குறிக்கோளாக இருந்துவருபவர்.

தந்தைபெரியார் மேல் அளவுகடந்த பற்றும், அவரின் கருத்துக்களில் உறுதியும் உடையவர் தர்ஷன் என்பது, காத்திரமான பல விடயங்களை அவர் எழுதும்போது உள்ளே இழையோடும் பெரியாரிஸமும், அவரது தளத்தின் முகத்திலேயே இருக்கும் தந்தை பெரியாரின் உருவமும் நிரூபித்துவிடுகின்றன.
அடுத்து அதிசயிக்க வைப்பது, இலங்கையில் இருந்துகொண்டே உண்மையின் பக்கம் நின்று அரசியல் சுத்துமாத்துக்களை சுட்டிக்காட்டி அந்த எழுத்துக்களில், சாட்டைகளை சுழலவிட்டிருப்பது. எந்தவொரு முகஸ்துதிகளோ, அல்லது எந்தவொரு வசைபாடல்களோ தர்ஷனின் எழுத்துக்களில் அறவே கிடையாது.
உண்மைகள், யதார்த்தங்கள் எதுவோ அவற்றைத்தேடியே அந்த எழுத்துக்கள் கொண்டுசெல்லப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

அதேவேளை ஆரம்பத்தில் தர்ஷனிடமிருந்து வந்த காத்திரமான அரசியல், சமுகம் சார்ந்த விடயங்கள் தற்போது சற்று குறைந்துகாணப்படுவது, நாட்டின் சூழ்நிலை அல்லது அவரது வேலைப்பழுக்களாக இருக்கலாம்.
காத்திரமான பதிவுகள் மட்டும் இன்றி ஜனரஞ்சகத்தன்மையான பதிவுகள் எழுதுவதிலும் தர்ஷன் கில்லாடி.

சூப்பர்ஸ்ரார் ரஜினியின் பரம ரசிகனான தர்ஷன்.

"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே"

என்று எங்க அப்பா… ஐயம்பெருமாள் அறிவுடைநம்பி கலியப்பெருமாள் அவர்கள் சொல்லியிருக்கார் என்று தில்லுமுல்லு படத்தில் ரஜினி சொன்ன வசனத்தையே தன் தளத்திலும் பொக்கிசமாக வைத்திருக்கின்றார்.

இது கவிதையோ என்று தெரியாது!, டேய்..என்னையும் அனத்த விடுங்கடா!! என்று தொடராக கவிதை எழுதுவது தர்ஷனின் எழுத்துக்களின் மெனாரிஸம்.
ஆனால் வாசிததுப்பார்த்துவிட்டால் அவை கவிதையா என்ற சந்தேகங்களையும், அனத்தங்கள் இல்லை என்ற உண்மைகளும் புரிந்துவிடும். சில இடங்களில் அப்படியொரு வேண்டாத தன்னடக்கம் தர்ஷனுக்கு!

தர்ஷனிடம் இருக்கும் இன்னும் ஒரு பெரிய ஆச்சரியம் தர்ஷனின் அபரிவிதமான தேடல்கள்தான். சமகாலத்தில் என்ன விடயம் நடந்தாலும், அல்லது பேசப்பட்டாலும் அது சம்பந்தமான தகவல்களை விரல் நுனிகளில் வைத்திருந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடுவார் மனிதர்.
அடுத்த ஒரு பெரிய ஆச்சரியம் பல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வாசித்துக்கொண்டிருக்கும் தர்ஷனின் எழுத்துக்களில் எந்தவொரு எழுத்தாளரின் எழுத்துத்தாக்கமும் இல்லாமல் தனக்கான எழுத்துக்களுடன் உலாவருவதுதான்.

பதிவுலகில் தர்ஷன், பல பதிவர்களின் பதிவுகளையும் தேடிப்போய் வாசித்து, கருத்துக்களை பகிர்ந்துகொள்பவர். பெரும்பாலான பதிவர்களின் தின விருந்தாளியாக இருப்பவர். நட்புடன் கௌரவத்தைப்பேணிக்கொள்பவர்.
ஒரு ஆசிரியராக இருப்பது எவ்வளவு உன்னதம் என்பதைவிட, அது எவ்வளவு சிரமமான பணியும்கூட, அப்படி இருந்தும் பதிவெழுதுவதை தொடர்ந்து ஆச்சரியம் கொள்ளச்செய்பவர்.

சரி இந்தவாரப்பதிவரான தர்ஷனிடம் கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளும் அதற்கான அவரது பதிலையும் பார்ப்போம்.

கேள்வி :வலைப்பூ எழுத வேண்டும் என்ற ஆர்வம்எப்படி ஏற்பட்டது?

தர்ஷன்: வாசிப்பும் எழுத்தும் எனக்கு சிறுவயதில்இருந்தே பிடித்த விடயங்கள்.அம்புலிமாமா,கோகுலம்,பாலமித்ரா,காமிக்ஸ்கள் என சின்ன வயதில் ஆரம்பித்தஎன் வாசிப்பார்வம் தொடர்ந்துசுஜாதா,ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டைபிரபாகர்,சாண்டில்யன் என வளர்ந்தது.இதைத்தான் என்றில்லாமல்எதுவென்றாலும் சின்ன வயதிலிருந்தேவாசிப்பேன். அத்தோடு பாடசாலையில்தமிழ்மொழித்தினம் உள்ளிட்ட போட்டிகளின்போது பேச்சு,கட்டுரை,விவாதம் போன்ற பலபோட்டிகளிலும் பங்கேற்க வேண்டிதிருக்குறள்,பாரதியார் கவிதைகள் எனபலதையும் மனனம் செய்ய வேண்டிஇருந்ததனால் என் சிறுவயதிலேயே ஓரளவுநல்ல வாசிப்பு இருந்தது. பின் கல்லூரிக்காலங்களில் முற்போக்கு எழுத்துகளிலும்நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் வந்துவாசித்தேன். இவ்வாறு நான் பெற்றவாசிப்பனுபவம் தந்த தூண்டுதலே என்வலைப்பதிவு. வாத்தியாரின் கற்றதும்பெற்றதும் இலங்கையின் பத்திரிகையில்வெளிவந்த கே.எஸ். சிவகுமாரன்,இளையஅப்துல்லா போன்றோரின் பத்திஎழுத்துக்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆகஅப்பத்தி எழுத்துக்களை நாமும் முயன்றுப்பார்க்கக் கூடிய களமான வலைப்பூக்கள்பற்றி அறிந்து பின் எனக்கென ஒரு வலைப்பூஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில் இங்கு என்னை நிறையஊக்குவித்த பதிவர் கலை ராகலை(ஏனோஇப்போது எழுதுவதில்லை). எனதுவலையுலக பயணம் பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்ற போதும்அவ்வப்போது எழுதுவதில் ஒரு திருப்தி.


கேள்வி :உங்களுக்கு எழுத்தார்வத்தைஏற்படுத்தியவர்கள் யார்?

தர்ஷன்: அம்மம்மா, அம்மா, சித்தி என வீட்டில்எல்லோரும் ஆசிரியர்கள் என்பதால்அவர்களும் எப்போதும் எதையேனும் படிஎனப் புத்தகங்களையே வாங்கித்தந்திருக்கின்றனர். அதிலும்தமிழாசிரியையான எனது சித்திகொஞ்சமேனும் நான் நல்ல தமிழில் எழுதமுக்கிய காரணம். பாடசாலையிலும் தரம்ஏழிலிருந்து சாதாரணதரம் வரைஅவர்களிடமே கற்றேன். அத்தோடுபாடசாலை வாழ்வில் என் உற்ற நண்பன் சஜிஎனக்கு எழுத்தார்வம் வர இன்னுமொருமுக்கியக் காரணம்.

கேள்வி :நீங்கள் எழுதும் பதிவுகள் பற்றி?

தர்ஷன்:சினிமா,அரசியல், மற்றும் கண்ணில் பட்டவிடயங்களைப் பற்றி ஏதோ நாலு வரியில்சுவாரசியமாய் எழுதி விட்டு செல்வதையேசெய்துக் கொண்டிருக்கிறேன். சின்னதாய்நாலு வரியில் ஏதேனும் அலங்காரமானவார்த்தையை கிறுக்கி விட்டு அதை என்ட்டர்தட்டி type பண்ணி விட்டு கவிதை என்றுசொல்வதுமுண்டு. எதிர்காலத்தில் ஏதேனும்காத்திரமாக எழுதும் ஆர்வம் உண்டு.முயல்கிறேன்.

தர்ஷனின் வலைத்தளம் - ஸ்ரீ தர்ஷன் "பதியவும் பகிரவும்"

Saturday, January 15, 2011

விகடன் விருதுகள் 2010 - ஒரே பார்வையில்.












Friday, January 14, 2011

மனதைக்குடையும் சில அறிவியல்! கேள்விகள்

“மனிதனது சிந்தனைகள், கேள்விகள் என்பன வெறும் புத்தகங்களால் மட்டும் இன்றி தன்நிலை சுற்றம் உணர்தல், வான்பார்த்து சிந்தித்தல் போன்றவற்றில் இருந்தும் வரவேண்டும்” என்று யாரோ ஒரு சிந்தனையாளர் சொன்னதாக படித்த நினைவு இருக்கின்றது.
எனினும் இந்த கருத்தை படிப்பதற்கு முன்னதாகவே என் மனதை குடைந்துகொண்டிருந்த சில கேள்விகளும், அவற்றிக்கான தேடல்களினாலும், பலரிடம் கேட்டறிந்தவற்றாலும் இன்றும் திருப்தி அடையாமல் மனதில் உறுதிக்கொண்டிருக்கும் சில கேள்விகள் உள்ளன.

இந்த உறுத்தும் கேள்விகளுடன் ஒரு பதிவை இட்டு, இந்த கேள்விகளுக்கான பதில்கள் பின்னூட்டங்களில் வந்துவிடலாம் என்ற அபிப்பிராயத்துடன், முதன்முதலில் என் கேள்விகளுக்கான விடைதேடலாக இந்த பதிவை சமர்ப்பிக்கின்றேன். வாசிக்கும் பெருந்தகைகள் உங்களுக்காவது பதில்கள் தெரிந்திருந்தால் மறக்காமல் சொல்லிவிட்டுப்போங்களேன்... (நான் தேடும் இந்த கேள்விகள் சிலவேளைகளில் அபத்தமாகவும் தெரியலாம் மன்னித்துவிடுங்கள்)

(01) உலக முன்னேற்றத்திலும், நவீனத்துவத்திலும் நாடுகாண் பயணங்கள் முக்கியமான ஒரு இடத்தை வகிக்கின்றன. இந்த நாடுகாண் பயணங்களின் ஊடாகவே சில மொழிகள், பல நாடுகள், பல்லின மக்கள் இணைக்கப்பட்டனர் என்றுகூட ஒருவகையில் சொல்லிவிடலாம்.
இந்த நிலையில் இந்த தேடல்களின் முன்னாலேயே மனித இனங்கள் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்துகிடந்தன. பல மொழிகள் பேசிக்கொண்டிருந்தன. இவற்றில் மிகப்புராதனமான மொழிகள் பல. இப்படி இருந்தாலும்கூட சகல மொழிகளிலும் தமது நாளுக்கும் கோளுக்கும் சம்பந்தம்வைத்தே மக்கள் நாட்களை வரையறுத்திருக்கின்றார்கள் அல்லவா?
தமிழ் சனி, ஞாயிறு திங்கள்..என்பதுபோல், ஆங்கிலம் சண்டே, மண்டே என்கின்றதே, அதுபோல் சீனமொழி, கொரியமொழி, பிரஞ்சு மொழி என பெரும்பாலான மொழிகளிலும் தொடர்பற்றிருந்த மக்கள் ஒத்தசிந்தனையாக எப்படி தமது நாட்களை கோள்களுடன் இணைத்திருப்பார்கள்? மிகப்பெரிய ஆச்சரியமாக அல்லவா இது உள்ளது?

இந்த கேள்விக்கு முக்கியமாக எனக்கு கிடைத்த பதில்கள் இரண்டு.
முதல் கிடைத்த பதில் - இந்தக்கேள்வியே அபத்தமானது. மனித இனம் ஒன்று எங்கோ ஒரு இடத்தில் இருந்தே ஏனைய இடங்களுக்கு பரம்பலானது. குறித்த ஆதி மனிதனின் சிந்தனைகள், ஜெனட்டிக், டி.என்.ஏ என்பன மனித இனம் எங்கு பரம்பலானாலும் ஒன்றாகவே இருந்திருக்கும். இதன்மூலமாக சிந்தனைகள் ஒன்றியிருக்கும். தமிழ்நாட்டில் ஆதி மரணுக்களை உடைய ஒருவர் கிராமம் ஒன்றில் இனங்காணப்பட்டதுமுதல், உலகம் இணைந்திருந்த பஞ்சியாக்கண்டம்வரை இதற்கான உதாரங்களும் தரப்பட்டது. எனினும் திருப்தி இல்லை.

இந்த கேள்விக்கு இரண்டாவதாக கிடைத்த பதில் ஒரு ஆராட்சியின்முடிவு.
அதாவது குறித்த இரண்டு தீவுகள் காணப்படுகின்றன. இடையில் பெருங்கடல். ஆனால் இந்த இரண்டு தீவுகளிலும் இரண்டு வௌ;வேறு குரங்கினங்கள் வாழ்வதை சிலகாலங்கள் ஆராட்சி செய்ததில் அதிசயமான பல தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. அதாவது இந்த இரண்டு இனக்குரங்குகளுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பாடல் சாத்தியங்களும் இருக்கவில்லை. இருக்கவும் முடியாது.
ஆனால் ஒரு தீவில் குரங்குகள் புதுவகையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்போது, சில நாட்களில் அடுத்த தீவில் உள்ள குரங்குகளும் அவற்றை ஒத்த செயல்களில் செயற்பட்டதை அவதானிக்கமுடிவதாக கூறப்படுகின்றது. முக்கியமாக காலநிலை இதில் எந்தவொரு செல்வாக்கும் செலுத்தவில்லை என நூறுவீதம் அடித்து கூறப்பட்டது. இருப்பினும் இது எவ்வாறு சாத்தியம் என்றபோது, அந்த இரண்டு தீவுகளுக்குகிடையில் இருக்கும் குரங்குகளும் தம்மை அறியாமலே சிந்தனைகளை கடத்தியுள்ளதாக முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதேபோலவே இந்தக்கேள்விக்கு மனிதம் நாட்களுடன் கோள்களை இணைத்ததும் அப்படி இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால் இவை இரண்டிலும் இன்றுவரை எனக்கு திருப்தி இல்லை.

(02) “அணுவைத் துணைத்து ஏழ் கடலைப்புகுட்டி
குறுக்கே தறித்தகுறள்” –ஒளவையார்.
இங்கே வந்த “அணு” என்னும் பதம்தான் மனதைக்குடையும் கேள்வி, சர்ச்சை எல்லாமே!
அதாவது “அட்டம்” என்பதைத்தான் இங்கே அணு என்று கூறப்பட்டதா? அப்படி என்றால் அணு பற்றி ஒளவையார் அன்றே அறிந்திருந்தாரா? அவர் அறிந்தது விஞ்ஞானத்திலா? மெஞ்ஞானத்திலா? என்பதை விட்டுவிடுவோம். ஆனால் அங்கு வந்த அணு என்ற பதம் எப்படி வந்தது?
சிலர் இன்றும் வாதிக்கின்றார்கள், ஒரு புலவரான ஒளவையார் பார்ப்பதை பாடியுள்ளார், அணு என்பதன் ஆராட்சி அன்றே இடம்பெற்றதுதான் என்று!
ஆனால் மறுசாராரோ, தமிழில் மிக மிக குறுகியதான பொருளுக்கு “அணு” என்பது தமிழ் பெயர் மட்டுமே. இரண்டு அடியில், ஏழ்கடல்போன்ற விடயத்தை அந்த இரண்டுவரியினுள் கொண்டுவந்ததைத்தான் ஒளவையார் அப்படிக்கூறினாரே தவிர அவருக்கும் தற்போதைய அணு ஆராட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர். இரண்டாவதில் மனம் கொஞ்சம் ஒத்துப்போனாலும் முழுமையாக ஏற்கமுடியாதுதானே?

(03) தமிழில் முதல் தோன்றியவற்றில் ஆதியாக கிடைக்கப்பெற்ற நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்.
“இலக்கியம் முதல் தோன்றிதா? இலக்கணம் முதல் தோன்றியதா? என்பதுதான் என் கேள்வி.
இலக்கியம் என்பது இப்படி இருக்கவேண்டும் என்று வரையறை செய்வதுதானே இலக்கணம்! அப்படி என்றால் இலக்கியம் இல்லாமல் எப்படி ஒரு வரையறை கொடுத்திருக்கமுடியும்?
கொஞ்சம் யோசித்து சொல்லுங்க இலக்கியமா? இலக்கணமா முதல் வந்தது?

(04) பெர்முடா முக்கோணம், ஏரியா 51 என்பன உலகை அதிசயிக்கவும், ஆச்சரியப்படவும், ஏமாறவும் வைத்த பிரதேசங்கள். இருந்தாலும் இந்தப்பிரதேசங்களில் வல்லரசுகள் ஏதோ விiளாடிக்கொண்டு உலகை ஏமாற்றுகின்றன என்ற “கொன்பிரஸி” தியரிகளே உள்ளனவே தவிர இன்றுவரை, அந்த “கொன்பின்ஸி”தியரிகளை எந்தவொரு லீக்கும் வந்து உடைத்துக்காட்டவில்லை. இன்றும் அவை தொரும் மர்மங்கள்தான்.
சுந்திரன், செவ்வாய், அண்டவெளி, அண்டவெளிதாண்டி சூரியர்கள் என்று வியாபித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் ஏன் இன்றுவரை பூமியிலேயே உள்ள ஆச்சரியங்களுக்கு விடை தரவில்லை, அல்லது விடைகளை ஒழித்துவைத்திருக்கின்றன?

இதுபோன்ற கேள்விகள் மனதில் இன்றுவரை குடையும் கேள்விகளில் சில. முழுவதையும் ஏழுதி நான் குழம்பியதுபோதாமல் உங்களையும் குழப்ப நான் விரும்பவில்லை. இந்த கேள்விகளுக்கு உங்கள் மேல்வீடுகளில் பதில் உள்ளவர்கள் கொஞ்சம் அதை இங்கே அள்ளி தெழித்துவிட்டுச் செல்லுங்கள்.
பொறுக்கிக்கொள்ள ஆவலுடன் நான் இங்கே…

Thursday, January 13, 2011

வேற்றுமொழிக்கதைகள்>>>>கிறிஸ்மஸ் கனவுகள்.

லெக்ஸ்ரா நகரம் கிறிஸ்மஸை வரவேற்கத்தயாராகிக்கொண்டிருந்தது. சில வர்ணங்கள்மாறி புதிய வர்ணங்களுடன் பெரிய கட்டங்களும், வர்ணங்கள் மாறும் மின்குமிழ் ஒளிர்வுடனும், பார்வையால் மனதிற்குள் சந்தோசத்தை தோற்றுவிக்கும் விதமாக நகரமே பெருவிழாக்கோலம் பூண்டுகொண்டிருந்தது.
பல பல வேடங்களை அணிந்தவண்ணம், நத்தார் ஆராதனைக்குழுக்கள் பல வாத்தியங்களை வாசித்துக்கொண்டு தெருக்களில் பவனி வந்தனர்.
சிறுவர்கள் அனைவரும் வினோதமான ஆடைகளை அணிந்துகொண்டு பெரியவர்கள் அவர்கள் தொப்பிகளுக்குள் போட்டுவிட்டு செல்லும் சாக்லட்டுக்களை, இனிமையுடன் கடித்துச்சுவைத்தக்கொண்டு குதூகலித்துக்கொண்டு சென்றனர்.
இன்னும் பல மக்கள் தம்குடும்பத்தாருடன் கொள்முதல்களை முடித்துக்கொண்டு ஆனந்தமனத்துடன் அந்த வீதிகளையும் ஆனந்தமாக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.

அத்தனை ஆனந்தங்களையும் ஏழ்மையின் பிஞ்சு மனம் ஒன்று மனவிம்மலுடன், ஏழ்மை நிரந்தர குத்தகைக்கு எடுத்திருந்த தன் வீட்டு வாசல் தூணில் கன்னங்களை அழுத்தியவாறு பார்த்துக்கொண்டு நிற்கின்றது.
அந்த ஏழ்மைப்பிஞ்சின் பெயர் மொறிஸ். வயது ஏழாகப்போகின்றது.
வறுமையின் வெறுப்புக்களை அவன்மேல்காட்டி, தன் ஆதங்கங்களை தீர்த்துக்கொள்ளும் ஓர் ஏழைத்தந்தையின் ஆதரவில் ஏதோ அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது. பகட்டும், காமமும் பெரிதாக நினைத்து பெற்ற இவனை விட்டுவிட்டு, நான்காவது ஆளையும் மாற்றிவிட்ட இவன் தாய்பற்றி இவன் கேள்விப்பட்டிருக்கின்றான். என்றும் சந்திக்கவேண்டும் என்ற ஆர்வம்கூட ஏற்படுவதில்லை.

கிடைப்பது 5 ரூபிள்கள் என்றாலும் அதில் 3 ரூபிள்களுக்கு குடித்துவிட்டு, வரும் தந்தை, அவன் நினைவிருந்தால் வாங்கிவரும் தின்பதற்கேற்ற ஏதாவதுதான் அவன் உணவு. இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று அமைதியாக வாழ்ந்துவரும் பெரியவர் ஒருவரின் கண்ணில் இவன் பட்டதனால் ஏதோ அவர் புண்ணியத்தில் இவன் கல்வி ஓடிக்கொண்டிருக்கின்றது. அங்கேதான் இது குப்பையில் இருக்கும் குண்டுமணி என்று பலருக்கு வெளிச்சமாக தெரிந்தது.

வீதியின் வினோதங்களை ஏக்கத்துடன் பார்த்து பொருமிய அந்த நெஞ்சிற்கு திடீர் என்று ஒரு காட்சி கண்ணில் பட்டது. ஆம் முன்திசையில் சற்று தூரத்தில் இருந்த பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்னால் கிறிஸ்மஸ் தாத்தா ஒருவர் ஆடிப்பாடி அங்கு நின்ற சிறுவர்களுக்கு சாக்லட்டுக்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கிக்கொண்டிருந்தார். அவனை அறியாமல் ஒரு ஏக்கத்துடன் இவனது கால்கள் வாஞ்சையுடன் அந்த தாத்தாவை நோக்கி செல்கின்றது. மெதுவாக அந்த சிறுவர்களின் மத்தியில் வருகின்றான். பல சிறுவர்கள், இவனைக்கண்டு விலகிப்போகின்றனர், சிலர் முன்வந்து இவனை தள்ளவும் செய்கின்றனர்.
ஆந்த சிறுவர்களால் தள்ளப்பட்டு வீழ்ந்த நிலையிலேயே அதே வாஞ்சையுடன் அந்த கிறிஸ்மஸ் தாத்தாவை நோக்கி கைகளை நீட்டினான். அவனை கவனித்தும் கவனிக்காதவர்போல அந்த கிறிஸ்மஸ் தாத்தா மற்ற சிறுவர்களை அழைத்துக்கொண்டு அந்த அங்காடிக்குள் சென்றுவிடுகின்றார்.

இருதயமே வெடித்துவிடும் உணர்வுடனும், அந்த தாக்கம் இருதயத்தில் இருந்து கழுத்துவழியாக உறுத்திக்கொண்டு அவன் வாய்வழியாக குழறி அழவேண்டும் போன்ற உணர்வை அடைகின்றான். இருந்தாலும் கண்ணீர் சொரிய மெதுவாக எழுந்து மீண்டும் தன் ஏழ்மை வீட்டிற்கு வருகின்றான்.

ஏக்கம், அந்த ஏக்கத்தினால் அவனுக்கு கிடைத்த அவமானம், துக்கம், வெறுப்பு இப்படி அனைத்து உணர்வுகளும் ஒன்று சேர சோக உச்சத்தில், படுக்கையை விரித்து தொப்பென்று விழந்து, அழுக்குப்படிந்த தலையணைக்குள் வாய்குழைய புதைத்துக்கொண்டு ஓவென்று விக்கி விக்கி அழுதான்.
அழுகை தந்த சோர்வினாலேயே அசதியாக தூங்கிவிட்டான் மொறிஸ்.

நள்ளிரவு ஆராதனை மணி அடிப்பது, தூக்கம் கலையாமலே அரைத்தூக்கத்துடன் அவனுக்கு நன்றாககேட்கின்றது. பட்டாசு ஒலிகளும், ஜனத்திரள் ஓசைகளும், வாகனங்களின் நெரிசல் ஒலிகளும் கேட்கின்றது. மீண்டும் நன்றாகத்தூங்கிவிட்டான்.

இதோ…நந்தவனம்போன்ற ஒரு இடம். அதை தாண்டிய ஒரு பூங்கா. அதில் அவன் மெல்லிய குளிர்காற்று தலைகளை வருடிவிட ஆனந்தமான உணர்வுகளைப்பெற்றுக்கொண்டு நிற்கின்றான்.
எதிரே…நத்தார் கீதங்களை பாடியபடி தூய்மையான வெள்ளை உடையணிந்து தலையும் தாடியும் நன்றாக நரைத்த தாத்தா ஒருவர் வருகின்றார்.
மொறிஸ்…வாஞ்சையுடன் அவனை அழைக்கின்றார். என் பெயர் சாண்டோ கிளஸ்..
நான்தான் உண்மையான உன் கிறிஸ்மஸ் தாத்தா.
என்ன பார்க்கின்றாய் என்னடா இவன் வெள்ளை உடையுடன் நிற்கின்றானே என்றா?
உண்மைதான் நான் எந்த முதலாளித்துவத்தின் பிராண்டையும், அதன் பொருட்களின் நிறங்களையும் சுமக்காத உண்மையான நேசமான தாத்தா!

அங்கே விழுந்தாயே மகனே…வலிக்கின்றதா??? என்று வாஞ்சையுடன் அவனது உடலை தடவிவிடுகின்றார். வாஞ்சையுடன் அவனை அணைத்து உச்சிமுகர்ந்து, அவனை பாசத்துடன் அணைத்துக்கொள்கின்றார்.
பின்னர்..சற்று பின்னால் சென்று தன்கைகளை தன்பின்னால் மறைத்து, பின்னர் தன்கைகளை முன்னால் இவனை நோக்கி நீட்டுகின்றார்.
அந்த கைகளில் பல ரோஜா மலர்கள்…ஒரு பை நிறைய சாக்லட்டுக்கள்.
சின்னமலரே..உன் மனம்போலவே இந்தப்பூக்கள் உனக்கு என் நத்தார் பரிசு என அவன் கன்னங்களில் தட்டிவிட்டு மறைந்துவிட்டார்.

விடியல் ஒன்றின் வழமையான உணர்வுகளால் கண்களை கசக்கிக்கொண்டே எழுந்துகொள்கின்றான் மொறிஸ். சுற்றும் முற்றும் பார்த்து தந்தையை தேடினான். தந்தை நேற்று இரவு வந்ததற்கான தடங்களே இருக்கவில்லை. அந்த அழகான கனவு நினைவுக்கு வருகின்றது. அவன் சிறு இதழோரம் ஒரு ஆனந்த சிரிப்பு.
வாசல்பக்கம் எட்டி வந்து கதவைத்திறந்து சொக்கித்து நிற்கின்றான்.

அவன் வீட்டு முற்றத்திலே பல ரோஜாக்கள் பூத்துக்குலுங்கிய ஒரு ரோஜாசெடி, அதன் பக்கத்தில் ஒரு சாக்லட்பொதி. முதலில் ஆச்சரியமும், பின்னர் ஆனந்தமும் பட்டுக்கொண்டே துள்ளிக்குதிக்கின்றான். மொறிஸ்..
தாங்கியூ கிஸ்மஸ் தர்த்தா, தாங்கியூ என்று துள்ளிக்குதித்துக்கொண்டே அவற்றை சுற்றி சுற்றி ஆனந்தத்தில் மிதக்கின்றான்.

தூரத்தில் இதைப்பார்த்து தன்கண்ணாடியை மீண்டும் தன் மேல்கோட்டினால் துடைத்துவிட்டு, மனம்நிறைந்த சந்தோசத்துடன், அவன் தன்னை பார்த்துவிடாமல்
ஒழிந்துகொள்கின்றார் ரிட்டையர்ட் மேஜர் விளாடிமிர்.

LinkWithin

Related Posts with Thumbnails