யுத்தமொன்று திணிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்பட்டு கொண்டு செல்லப்படும் என்பது உலகம் பல யுத்தங்களில் கண்ட உண்மைதான். ஆனால் இங்கு நடைபெற்றது உள்நாட்டு யுத்தம் என்று சொல்லிக்கொள்ளப்பட்டாலும் இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாகவே நடைபெற்றது. அதேபோல யுத்தமுடிவும் வெற்றி பெற்றவர்களால் செயற்படுத்தப்பட்டும், கொண்டாடப்பட்டும் இருந்தது.
யுத்தத்தை தொடர்ந்து வடபகுதி மக்கள் எதிர்பாராத நேரம் அவர்களை நோக்கி அதே சூட்டோடு பிரகடனப்படுத்தபட்டதே பொருளாதார யுத்தம்.
இன்றைய நிலையில் இந்த பொருளாதார யுத்தத்தின் முற்றுகைக்குள் அகப்பட்டு செய்வதறியாது திண்டாடுகின்றது வடபுல பொருளாதாரம். இதுவே யதார்த்தம். இதை புரிந்துகொள்ளாது இன்னும் தூங்குபவர்களும், தூங்குபவர்கள் போல நடிப்பவர்களும் இனி எழுந்திருக்கவே முடியாத நிலைக்கே போய்விடுவர்.
இளைய தலைமுறையின் தவறானபாதை!
அனைவரும் சொல்லிக்கொள்வதுபோல கட்டுக்கோப்புடன் இருந்த ஒரு தலைமுறை கட்டுக்கோப்பு அறுபடும்போது சிதறி ஓடுவதுபோல இன்றைய இளைய சமுதாயம் வடபுலத்தே போய்க்கொண்டுள்ளது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
காவாலித்தனங்கள், குழுச்சண்டைகள், காதுகூசும் வார்த்தைப்பிரயோகங்கள், அடிதடி வாள் வெட்டுக்கள் என்று இன்று இளைய தலைமுறைகள் சில தறுதலைச் சமுதாயமாக போய்க்கொண்டிருப்பதை கண்ணூடாகவே காணக்கூடியதாக உள்ளது.
பேற்றோர்கள், ஆசிரியர்கள், சமுக நலன்விரும்பிகள், மதப்பெரியவர்கள், அரியல்வாதிகள் என்போர் முன் எப்போதும் இல்லாதவாறு இன்றைய நாட்களில், வளமான சமுதாயம் ஒன்றை உருவாக்க பெருமுயற்சி கண்டிப்பாக எடுக்கவேண்டிய நாட்கள் இன்நாட்களே.
கல்வியும் வேலைவாய்ப்பும்
யுத்தகாலத்தைவிட தற்போது வடபுல கல்வி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் எனில் முன்னர்போல பெறுபேறுகள் பெரிய அளவில் இல்லாது விடினும் உயர் கல்வி என்பது பல்கலைக்கழகம் என் மட்டுப்படாமல் பல்வேறு கற்கை நெறிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளதனால் முன்னரை விட உயர் கல்வி கற்பவர்களின் அளவு கணிமான அளவு உயர்ந்துள்ளது.
தொழில் விடயத்தில் முன்னைய நிலையை விட பல நிறுவனங்கள் தாராளமான வேலை வாய்ப்புக்களை கொடுத்துவருகின்றபோதிலும் இன்னும் அரசாங்க வேலை, வெளிநாடு என்ற கனவுகளுடன் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு என்று அரசியல் வாதிகளிடம் போவது ஆளுமையை விடுத்து அடிமையாவதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.
சரி.... இந்த இடத்தில் வடபுல சமுதாயத்தின் நிலையினை நிறுத்திக்கொண்டு வடபுல தேர்தல் நிலைக்குச்செல்வோம்.
முன்னரே குறிப்பிட்டதுபோல தமிழ்த் தேசியக் கூடடமைப்பு, சுதந்திரக்கட்சி ஈ.பி.டி.பி. கூட்டணி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இவையே வடபுலத்தில் பிரதானமாக மோதவுள்ள கட்சிகள்.
ஐக்கிய தேசியக் கட்சி.
நாட்டின் பிரதானமான எதிர்கட்சி! என்ற பெயரை மட்டும்தான் இன்றைய நிலையில் தன்னகத்தே வைத்துள்ள ஒரு கட்சி.
வடபுலத்தே மகேஸ்வரனை மையப்படுத்தி வெற்றிகண்டதும், மகேஸ்வரனின் செல்வாக்கில் பல வருடங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி கொண்டதும் உண்மைதான்.
அதை தொடர்ந்து மகேஸ்வரன் குடும்பம், காரைநகர் என்ற வட்டங்களிலேயே இந்தக்கட்சி தனது செயற்திட்டங்களை எடுத்துவருவது அதன் கையாலாகாத தனம்.
இந்தத்தேர்தலில் ஒன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அல்லது அதற்கு எதிரான ஆளும்தரப்பு இரண்டில் ஒன்றுக்கு வாக்குப்போட்டாலும் அதில் நிஜாயம், நாட்டிலேயே செல்லாக்காசாக இன்று மாறி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து என்ன பிரயோனம் என்ற யதார்த்தமான கேள்வியை மக்கள் கேட்டுக்கொண்டால் நிலமை என்ன என்பதே இப்போதைய கேள்வி.
இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறைந்தது ஒரு ஆசனமாவது வடமாகாணசபைத்தேர்தலில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி.
அரசாங்கம், மக்கள், முழு இலங்கை, ஏன்! தமது கட்சியினருக்கே இந்தத்தேர்தலில் எப்படியும் பெரும்பாலான ஆசனங்களைப் பெற்று தமது இருப்பை நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை எல்லோரையும் விட ஈ.பி.டி.பிக்கு இருக்கின்றது.
இணைந்த வடக்கு கிழக்கு! மத்தியில் கூட்டாட்சி!! மாநிலத்தில் சுயாட்சி!!! இவையோடு இணைந்து செயற்படும் இணக்க அரசியல் என்ற அவர்களது கொள்கையை அவர்கள் இப்போதும் வைத்திருக்கின்றனர் என்பதும், ஏனைய கட்சிகள் ஏளனம் செய்வதுபோல சொந்த சின்னத்திலேயே கேட்க முடியவில்லையே என்ற அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அவர்களே நோகவேண்டிய விடயங்கள் என பல இறுக்கங்களும், மறைமுக அளுத்தங்களுக்கும் மத்தியில் இந்தத்தேர்தலில் அவர்கள்.
ஆனால் வடக்கில் தேர்தலில் குத்தித்துள்ள கட்சியில் வடக்கில் அமைச்சர் ஒருவரை கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி அவர்கள் மட்டும்தான் என்பது அவர்களின் மிகப்பெரிய பலம்.
அது தவிர ஏனையவர்களை விட மக்களின் வாழ்வாதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையையும், மக்களுக்கான ஏதோ ஒரு வழி உதவிகள், வேலைவாய்ப்புக்கள் என்பவற்றை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர்கள் என்பதையும் மறுக்கமுடியாது.
அதேவேளை சொந்த இனம் அல்லலுற்று நின்ற சில வேளைகளில் கைகட்டி, வாய்பொத்தி நின்றமையும், அரசாங்கத்தால் சொல்லப்பட்டதை அறிக்கையாக கூறியதும் பெரிய பலயீனமே.
அது தவிர வெற்றிபெற்ற சபைகளில் உலகறிய நடக்கும் ஊழல்கள், மேசைக்கு கீழே வாங்கும் பெட்டிகள் என்பனவும் பெரும் பலவீனமே.
எனினும் ஈழமக்கள்! ஜனநாயக்கட்சி இந்த மாகாணசபைத்தேர்தலில் ஆகக்குறைந்தது 05 ஆனங்களையாவது கைப்பற்றும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி.
ஆளும் தரப்பு என்பதும், தொடர்சியான தேர்தல் வெற்றிகள் என்பனவும் எவருக்கும் இல்லாத மிகப்பெரிய பலம் இவர்களது.
ஆனால் மறு புறம் வடபுலத்தில் எதிரி மனோநிலை குறிவைத்துள்ளதும் இவர்கள்மேலே என்பது வடமாணசபை தேர்தல் என்ற வகையில் இவர்களின் மிகப்பெரிய பலவீனமும் அதுவே.
பேரினவாதத்தின் கரம், எமக்கு வலி தந்தவர்கள், வமது எதிரிகள் என்ற எண்ணங்களும் அதை தூண்டிவிடும் கோசங்களும் இந்த தேர்தல் காலத்தில் காட்டுத்தீபோல கனன்று கொண்டே இருப்பது இன்னொரு பலவீனம்.
கட்சி வேட்பாளர்களிடையே ஒருங்கிணைவு, ஒற்றுமை இல்லாமை மிகப் பெரும் பலவீனம்.
ஒரு சம்பவம் இடம்பெற்ற உடனேயே இந்த கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் இப்படி நடந்தால் நாங்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவோம் என அறிககை விட்டது நகைப்புக்குரியதே.
இத்தனை இருந்தாலும்கூட நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும், இன்றைய காலங்களை ஓரளவு சிரமமின்றி கொண்டு செல்வதற்கும், நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களில் கட்சியின் நேரடி வேட்பாளராக இருந்து அமைச்சர்கள் வருவதுபோல வடபுலத்திலும் ஆளும் தரப்பில் நேரடியான ஒரு அமைச்சர் இருப்பது மற்றவர்கள் மறுத்தாலும் உண்மையில் தேவையே. யதார்த்தநோக்கத்தோடு இதை நோக்கினால் உண்மையாக இந்த மண்ணின் மக்களுக்கு தன்னாலான உதவிகளை நேரடியாக பெற்றுத்தரக்கூடிய ஒரு நபரை உருவாக்குவதும் தேவையே. இது ஒருவகையில் மக்களின் சாணக்கியமே.
எது எவ்வாறு இருப்பினும் ஸரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் கூடியது 03 பேருக்கு ஆசனங்கள் அமையலாம்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு
தமிழ் கட்சி, தமிழ்த்தேசியம், தமிழர் தாயகம், தமிழ் என்பனவே இவர்களின் பலங்கள். மக்களுக்கு நியாயமான வேறு தெரிவுகள் இல்லாமை இவர்களுக்கு பலத்திலும் பெரிய பலம். 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதானே சக்கரை' என்ற வடபுல பெரும்பாலான மக்களின் எண்ணமும், வேறு வழி இன்மையும்தான் இவர்கள் அடைந்த அடையப்போகும் வெற்றிகள்.
சந்தேகத்துக்குரிய தலைமை, உள்குத்துக்களும், களுத்தறுப்புக்களும், மனக்கசப்புக்களும் கொண்ட பல கூட்டங்கள். இப்படி பல விடயங்கள் இவர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.
எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களின் எண்ணங்களையும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இவர்களைவைத்தே தெரிவிக்கவேண்டும் என்ற தமிழர்களின் நிலையே இவர்களின் பலத்தில் பெரிய பலம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற சொந்த கட்சி பதிவு செய்யப்படாமல் இலங்கை தமிழரசுக்கட்சி பெயரிலேயே தொடர்ந்தும் சொந்த சில்லில் ஓடாமல் இரவல் சில்லில் ஓடுவதை இவர்களே அறிந்தாலும் அசட்டையீனமாக தொடர்ந்து இருந்து வந்தவர்கள் ஐயன்மார்களே!
சரி... விடயத்திற்கு வருவோம் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது குறித்து அரசாங்கத்தைத் தவிர யாரும் ஏன்! இவர்களே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
எனினும் பேரினவாதம், தமிழர்களுக்கு ஏன் உரிமை! என்ற விடாப்பிடியை பிடித்துவைத்திருக்கும் பேரினவாத அரசுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் மாறவேண்டும் என்று கொக்கரிப்பது பேடித்தனமானது.
மறுபுறம் அரச சார்பான கட்சிகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து என்னத்தை பெறப்போறீர்கள், அபிவிருத்தியை நாம்தான் செய்வோம், வேலைவாய்ப்பினை நாம் தான் தருவோம், யுத்தம் முடிந்த பின்னர் எத்தனை அபிவிருத்தி பாருங்கள் என்பன எல்லாம் வேடிக்கைப்பேச்சே.
வெறும் வேலைவாய்ப்புக்கும், அபிவிருத்திக்குமாகத்தான் இத்தனை இலட்சம் பேர் முப்பது வருடமாக மடிந்தார்களா என்ன? பேரினவாதமும், பெரும்பான்மை சமுகமும் அடாவடியாக மாறாமல் இருக்கும்போது நிஜாயத்திற்காக மாறாமல் இருப்பதில் தமிழர்களது குற்றம் ஏதுமில்லை.
மாறாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டோம் என்று கொக்கரித்தவர்களே மீட்கபட்ட மக்களுக்கான அபிவிருத்திக்கு முழுப்பொறுப்பானவர்கள்.
அடுத்தது தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை முழுமையாக கூட்டமைப்பின் முதன்மைவேட்பாளர் புரிந்துகொண்டு பேசவேண்டும்.
இறுதி யுத்தத்தில் அங்கே மக்கள் மடியும்போது நீங்கள் வாய்பொத்தி இருந்தபோதும், மனைவி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நீங்களும் போய்வந்தபோதும் தீக்குளித்தும், போராட்டம் நடத்தியும் உறவுகளுக்காக கண்ணீரும் செந்னீரும் விட்ட உறவுகள் அவர்கள்.
ஈழத்தமிழரின் போராட்டங்களின் ஒவ்வொரு கட்ட ஆணிவேர்களும் அங்கிருந்து கிடைத்தவையே என்பதை மறந்துவிடாதீர்கள். நாக்கில் நன்றி கெட்டத்தனமாக பேசாதீர்கள்.
இந்த விடயம் கிள்ளுக்கீரை விடயம் அல்ல... வாய்க்கு வந்தபடி எல்லாம்பேசிக்கொள்ள. உயிரோட்டமான உடன்பிறப்புகளின் விடயம். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
அதேநேரம் கடந்த பல தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்த மக்களுக்கு இனிவரும் காலங்களிலாவது அவர்கள் ஏதாவது செய்தே ஆகவேண்டும். வெறுமனே வாய்ச்சொல்லில் வீரர்களாகவே அவர்கள் நீடித்த அரசியலை மேற்கொள்வார்களே ஆனால் பிளவுகள் ஏற்படுவதும், புதிய கட்சிகள் உருவாவதும், பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதும் தடுக்கமுடியாதவையாகப்போகும்.
'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூதானே சர்க்கரை' என்ற மக்களின் எண்ணமே இந்த முறையும் கூட்டமைப்புக்கு இறுதியாக கொடுக்கும் பலமாக அமையும். ஆகக்கூடியது 10 ஆசனங்கள் வெளியால் போக மிச்சம் உள்ளவைகள் அனேகமாக இவர்களுக்கே செல்லும்.