Friday, January 7, 2011

மண்ணின் பாடல்கள்.

ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், மேற்கே வடக்கு பார்த்தாலும் கிழக்கு எனும் வெளிச்சத்தில் பார்த்தல், வானத்தைப்பார்த்து மானத்தை இழக்காமை, வெளி மயக்கங்களால், உள் ஒளியை மறக்காத தெளிவு.
இத்தனை மன ஆரோக்கியம் மிக்க ஒருவருக்கு மண்
ணின் பாட்டு சுவையாய், ஒளியாய், ஊறாய், ஓசையாய், நாற்றமாய் வகைப்பட்டுக் கேட்கும்.

இக்கேட்டலில் பிறக்கும் ஞானம் பிறருக்கு தா
னமாய் கிடைக்கும். தமிழ் மனம் கனிய தனிக்குணம் துணியக்கிடைக்கும் ஞானதானத்தால் ஒரு இனம் மட்டும் அல்லாது உலகின் பல இனங்களும் பயனடையும். இப்பயன்பாட்டினை – பண் பாட்டின் வழி கிடைத்த வாழ்வியல் உண்மைகளை பிறநாட்டவர்கள் வணக்கம் செய்து வரவேற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஏட்டுக்கல்வி பெரும்பாலும் எட்டாத நாட்டு மக்களிடையே, எழுதாக்கவிதைகளாக தொன்று தொட்டு வழங்கிவரும் பாடல்கள், கிராமியப்பாடல்கள், நாட்டார்பாடல்கள், பாமரர்படல்கள், என பல்வேறு பெயர்களில் நாம் தமிழில் அழைத்துவருகின்றோம். ஆ
னால் இவ்வாறான பாடல்
வகைகள் எல்லா மொழிகளிலும் உண்டு.
பாடல்கள் மட்டும் இன்றி கதைகள், பழமொழிகள், முதுமக்கள் பெருமைகள் என்பனவும் உள்ளன.
இவை எழுத்தறிவு குறைந்த பாமர மக்களால் தொன்று தொட்டு பாடப்பட்டு வந்ததாக சொன்னாலும்கூட, இவற்றின் கருத்தாழங்கள், இசையுடன் ஒத்த தன்மைகள் என்பன இன்றும் வியப்பையே உண்டாக்கின்றன.
இதன் காரணத்தாலேயே இவற்றையும் ஒரு இலக்கிய வடிவமாக இந்த நாகரிக உலகமும், நாகரிக இலக்கியவாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கிராமியப்பாடல்களின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பாட்டப்பாடுவது மனிதனது இயல்பாகவே தோ
ன்றுகின்றது. பாரதியார் பாடியதுபோல இயற்கையிலே

“காளப் பறவை கலகலவெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத்திடையே உதிர்க்கும் இசையிலும்”

ஆதி மனிதன் நெஞ்சம் பறிகொடுத்திருப்பான். இயற்கையில் உண்டாகும் ஒத்திசை பொருந்திய ஒலிகளினால் அவன் உள்ளம் தூண்டப்பெற்று தானும் தன் குரலொலியினை எழுப்பியிருப்பான். மொழி அவனுக்
கு துணை வந்தபோது, முதற்பாடல் தோன்றியிருக்கும். இந்தப்பாட்டிலே இன்பம் கண்டவன் மேலும் மேலும் பாடி மகிழ்ந்திருப்பான். சமுகத்தின் ஒரு கட்டமாக அவன் இருந்ததனால் ஒருவனை பின்பற்றி பலரும் பாடியிருப்பர். இந்த நிலையிலேயே பாடலோடு ஆடலையும் இணைத்தி
ருப்பர். ஒருவர் ஒரு அடியைப்பாட, மற்றவர் மற்ற அடியை பாடவும், ஒருவர் வினாவாகப்பாட, மற்றவர் பதிலாக பாடியும் இப்படியே பல் வகைகளாக கிராமியப்பாடல்கள் தோன்றியிருக்கவேண்டும்.

கிராமியப்பாடல்களின் தாக்கம், தமிழ் செய்யுள் இலக்கியங்களிலும் தம் செல்வாக்கை பெற்றிருப்பதை பல இலக்கியங்களை எடுத்து நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். நாடுபாடி, அரசுபாடி, மக்களின் வாழ்க்கை முறை பற்றி, செம்மொழிப்புலவன் ஒருவன் பாட வருகையில் அவன் தொடவேண்டிய இடமாக
மண்ணின்பாடல்கள் இருந்தன.

தாலாட்டு, ஒப்பாரி, கும்மி, குழந்தை வேடிக்கை,
ஊஞ்சல், கோலாட்டம், விளையாட்டு, தொழில், அருவி
வெட்டு, கடவுள் வழிபாடு, சடங்குகள் என மண்ணின்பாடல்கள் பல வடிவங்களில் அன்றைய கிராமிய வாழ்க்கையுடன் ஒன்றிப்பிணைந்து இருந்தன. மக்களின் வாழ்வியலுடன் ஒன்றி, அவர்களுடனேயே உணர்வோடு இருந்ததனால் மண்ணின்பாடல்கள் செய்யுள் பாடல்களைவிட உணர்வாக பிரகாசிக்கின்றன.

சரி.. கிடைத்த வரையில் அந்த மண்ணின் பாடல்கள் சிலவற்றை பார்ப்போமே..

தாலாட்டு.

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கண்ணு மணிஉறங்கு கானகத்து வண்டுறங்கு
பொன்னு மணிஉறங்கு பூமரத்து வண்டுறங்கு

வாசலிலே வன்னிமரம் வம்முசங்க ராசகுலம்
ராசகுலம் பெத்தெடுத்த ரத்தினமே கண்ணுறங்கு

பச்சை இலுப்பைவெட்டி பால்வடியும் தொட்டில்கட்டி
தொட்டிக்குமேல துணையிருப்பா மாரியம்மா

முத்திடிச்சு மாகொளிச்சு முத்தமெல்லாம் கோலமிட்டு
கோலமிட்ட திண்ணையிலே கோவலரே நித்திரைபோ.

கும்மி

தன்னானே நாதினம் தன்னானே –தன
தன்னானே நாதினம் தன்னானே

தன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க
நாவுக்கு சக்கர நான்தாறேன்
தில்லாலே என்று சொல்லுங்கடி
திங்க சக்கரை கொஞ்சம் நான்தாரேன்.

கடகடன்னு மழை பேய
கம்பளி தண்ணி அலைமோத
காரியகாரராம் நம்மய்யா கங்காணி
கடுக்கன் மின்னலை பாருங்கடி.

குதிர வாரதப் பாருங்கடி –ஐயா
குவிஞ்சு வாரதப் பாருங்கடி
குதிரை மேலதான் நம்மையா கங்காணி
குனிஞ்சு சம்பளம் கேளுங்கடி

நன்னயமாகவே கொண்டைகட்டி
நாகூரு லேஞ்சிய மேலேகட்டி
கண்ணியமாகவே வாராரு –ஐயா
காசு பணமள்ளித் தாராரு.

ஊஞ்சல்.
கடற்கரையில் மணற்பரப்பி நடக்க முடியாது
கானலிலும் வெய்யிலிலும் ஓட முடியாது

கச்சாயில் புளியிலே ஊஞ்சலும் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமொன் றாடி

காலோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்
காக்கொத்து மச்சாளை பெண்டென் றிருந்தேன்

ஓடோடி புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்
ஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்

கண்டபிணி கொண்டவலி கால்மாறிட ஓட
கண்ட சிவ ராத்திரியை காதலுடன் நோற்பாய்

ஏறுமயில் ஏறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை தெரியுமடி தோழி

விளையாட வெகுதூரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலை தணியுமடி தோழி.

வேடிக்கை பாடல்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
அம்மியடியில் கும்மியடித்தேன் சும்மாவா இருந்தேன்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
ஆட்டுக்குட்டிக்கு ஆறுதல் சொல்லினேன் சும்மாவா இருந்தேன்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
கோழி முட்டையில் மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
பாம்புக் குட்டிக்கு பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன்.

காதல் பாட்டு.

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,
நல்லபாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே

நல்லபாம்பு வேடங்கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்குருவி வேடம்கொண்டு உயரப்பறந்துடுவேன்

ஊர் குருவி வேடங்கொண்டு உயரப்பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்

செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கவந்தால்
பூமியைக் கீறியெல்லோ புல்லாய் முளைத்துடுவேன்

பூமியை கீறியெல்லோ புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை

காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆலமரத்தடியில் அரளிச்செடி தானாவேன்

ஆலமரமுறங்க அடிமரத்தில் வண்டுறங்க
உன்மடியில் நானுறங்க என்னவரம் பெற்றேனடி.

அத்திமரம் நானாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
நந்திவரும் மச்சானுக்கு முத்துச்சரம் நானாவேன்.

தொழிற்பாடல்.

ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்
அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்
செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்
சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
கண்ணான எங்கள் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காவும் ஐயனாரே

மட்டுருக் காலை அருவாளு மடித்து
மாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி
வெட்டும் பிடியைச் சிறக்கவே போட்டு
வெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு
வளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை
நாவூறு வாராமற் காரும் ஐயனாரே.

ஒப்பாரி.

பொன்னான மேனியில – ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன!
தங்கத்திருமேனியில – ஒரு
தகாதநோய் வந்ததென்ன!

ஊருப் பரிகாரி – ஒரு
உள்ளகதை சொல்லவில்லை!
நாட்டு பரிகாரி – ஒரு
நல்லகதை சொன்னதில்லை!

மலையில் மருந்தெடுத்து – நாங்கள்
மாமலையில் தேனனெடுத்து
இஞ்சி அரைத்துமெல்லோ – நாங்கள்
ஏராதி ஊட்டிநின்றோம்.

குளிகை கரைக்க முன்னம் - உன்
குணமோ திரும்பியது!
மருந்து கரைக்கு முன்னம் -உன்
மனமோ திரும்பியது

அரைத்த மருந்தோ - இங்கே
அம்மிபாழ் போகுதெணை!
உரைத்த மருந்தோ - இங்கே
உருக்குலைந்து போகுதெணை

பொன்னும் அழிவாச்சே – உன்
பொன்னுயிரும் தீங்காச்சே!
காசும் அழிவாச்சே – உன்
கனத்த உயிர் தீங்காச்சே.

உசாத்துணை நூல்கள் - நாட்டார் பாடல்கள், தமிழர் நாட்டுப்பாடல்கள்.

9 comments:

Ramesh said...

இதுபற்றி தேடிக்கொண்டிருக்கிறேன். நன்றி தகவலுக்கு என் தேடல் முற்றினால் பதிவாகும்

தர்ஷன் said...

இந்தப் பாடல்களைக் கொண்ட ரொம்ப பழைய புத்தகமொன்றை வீட்டில் பார்த்த ஞாபகம் அண்ணா ''ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,'' இன்னமும் ஞாபகம் உண்டு. இது மில்க்வைட் பிரசுரமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மண்ணின் பாடல்களை உலகம் முழுவதும்சென்றடைய வழி செய்தமைக்கு மிக்க நன்றி..தொடரட்டும் உங்கள் முயற்சி..

Unknown said...

நல்ல பதிவு பாஸ்! செம தேடல்ல இருக்கீங்களோ? :-)

KANA VARO said...

அண்ணே! பதிவு பாடசாலைக்காலங்களை மீட்டிப் பார்க்க உதவுகிறது. பகிர்வுக்கு நன்றி.

pichaikaaran said...

பலதரப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு பாராட்டுக்கள்

Unknown said...

ஹஹா எங்கயோ கொண்டு போய்டீங்க நா...வாழ்த்துக்கள்..

Muruganandan M.K. said...

பரந்த தேடலுடன் மண்ணின் மணம் வீச வைக்கும் பதிவு.
மேம்போக்கான பதிவுகளுடன் பலரும் வலம்வரும் காலத்தில் உங்கள் பதிவு அதிசயிக்க வைக்கிறது.

vetha (kovaikkavi) said...

மிக மிக அருமை சியேர்ஸ் ஐனா! நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்
http://www,kovaikkavi.wordpress.com

LinkWithin

Related Posts with Thumbnails