Tuesday, August 3, 2010

சங்க இலக்கிய காதல்..


சங்க காலம்!!!! இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்துக்கொண்டால் எந்தவொரு மொழிக்கலப்பும், இனக்கலப்பும் இல்லாமல் தமிழ் தமிழாக இருந்த காலம் என்று கூறிக்கொள்ளலாம்.
சங்ககாலம் பற்றி எழுதப்போனால் அதற்கே இருபது, முப்பது பதிவுகள் தேவைப்படும். அதுகுறித்து ஆழமாக போகாமல் சங்க காலத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் சிலவற்றை எடுத்து அந்த காதல் ரசத்தை கொஞ்சம் நாக்கில் விட்டு தித்திப்பில் இலகிக்கலாம் வாருங்கள்.

பொதுவாகவே அன்றிலிருந்து இன்றுவரை தமிழில் வந்த இலக்கிய வகைகள், இலக்கியம் கடந்து காலவோட்டத்தில் வந்த இன்றைய சினிமாவரையான பகுதிவரை (அதுக்காக சினிமாவையும் இலக்கியம் ஆக்கிப்புடலாமா என்று கேட்கக்கூடாது) காதல், வீரம் என்ற இரண்டு கருப்பொருட்கள் எல்லாவற்றிலும் புகுந்துவிட்டது.
உண்மையை சொல்லப்போனால் இந்த காதல், வீரம் ஆகிய இரண்டும் சங்க கால மக்களின் பெரு வாழ்க்கைமுறையில் அவர்களின் வாழ்வியங்களாகவே இருந்துவந்தமையும், அவற்றையே இலக்கியங்களும் பாடியமையினாலேயே இந்த மரபணுப்பாய்ச்சல் இற்றைவரை எமக்குள்ளும் பாய்ந்துகொண்டிருக்கின்றது.

சரி…காதலை சொல்லமுதல் அந்த வாழ்க்கைமுறைபற்றி கொஞ்சம் தொட்டுவிட்டு போவோமே! சங்ககாலத்தில் ஆண்களும் பெண்களும் சம அந்தஸ்துடனேயே நோக்கப்பட்டார்கள் என்பதுடன், இலக்கியம் வாயிலாக ஆழநோக்கினால் இந்தக்காலத்தில் பெண் அடிமைத்தனம், அபரிதமான பெண்மைக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அனைவருக்கும் உரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆண்களுடன் பெண்கள் சகஜமாகப்பழகினார்கள், ஆனால் அவர்கள் அந்த சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை. கற்புநெறியில் சீரிய வாழ்க்கைமுறையை கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆண் என்றால் அவன் வீரனாக இருக்கவேண்டும் என்பதே பெண்ணின் எதிர் பார்ப்பாக இருந்தது.

நிலத்தின் தன்மைகளைக்கொண்டு அவர்கள் வாழ்ந்துவந்த இடத்தை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக வகுத்து வாழ்ந்துவந்தார்கள். நிலத்தின் தன்மைகள், அவற்றின்மேலான தொழில், அவற்றின் மூலம் உண்டாகும் இயல்புகள் என்பன இலக்கியங்களில் தாக்கத்தை செலுத்தின.
பொதுவாகவே சங்க கால காதல் இலக்கியங்களுக்கு ஆழமான ஒரு வரையறை உண்டு. அந்த வரையறை உடைபட்டால் அது காதல் இலக்கியமாக (அகம்) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தம்முள் கூடும் இன்னம் இன்தென்று சொல்லாமை, பெயர்சுட்டாமை, ஒவ்வாத காதல், முரணான காதல்கள் (பொருந்தாக்காமம்) அகம் என்று கொள்ளல் ஆகாது.
இப்படி நிறைய விதிகளும் உண்டு. இதுகுறித்து ஆழமாக போனாலும் பக்கங்கள் நிறைந்துவிடும் சரி..விடயத்திற்கு வருவோம் தேர்ந்தெடுத்த காதல் தேன் சொட்டும் செய்யுள்கள் சிலவற்றை பார்ப்போம்…


*மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் உண்டான காதல் இது
ஒரு பெண் காதலினால் படும் இன்பவலியை அழகாக எடுத்துரைக்கின்றார் இந்த செய்யுளை இயற்றிய கபிலர்.


“வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கொட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே..”


சிறிய ஒரு கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம்போல,
காதல் வியப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப்பெரியது, அனால் அதை தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச்சிறியது.
இந்த வேதனையினையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ!
வேர்ப்பாலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டு பாதுகாக்கும் மலைநாட்டின் தலைவனே!!
என விழிக்கின்றது.

*அடுத்து இது கொஞ்சம் படு செக்ஸியான செய்யுள்தான். அப்படியே பொருளை சொல்லிவிடமுடியாது. பட்டும்படாமலும்தான் சொல்லவேண்டும் கடைசிவரி பொருளை அப்படியே கண்டுபிடிப்பவர்களுக்கு முழுவதும் விளங்கும். வேண்டுமென்றால் முயன்றுபாருங்களேன்.
இது ஒரு பெண்ணின் உச்சக்கட்ட விரகாத உணர்வு. நீண்டநாள் பிரிவின் ஏக்கம்.
பாலைநிலத்து பெண் ஒருவள் விரகதாப உச்சத்தில் பிதற்றுவதாக கொல்லன் அழிசி என்ற புலவனின் செய்யுள்.


“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”


கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்துபோகும் பசுவின் பாலைப்போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் விணாகிக்கொண்டிருக்கின்றதே (இப்படித்தான் கொஞ்சம் மறைச்சு பொருள் விளக்கம் தரமுடியும்)

*ஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிட்டால் முதலில் கெடுவதென்ன தூக்கம்தானே?
அப்படி காதல் வயப்பட்ட பெண்கள், தாங்கள் தூங்காது அடிச்சுப்போட்டதுபோல தூங்கும் ஊரைப்பாhர்த்து பொறமாமைப்படுவதும், ஆத்திரப்படுவதும் கொஞ்சம் ஓவர்தான்.
நெய்தல் நிலப்பெண் காதல் வயப்பட்டு தூக்கம் தொலைத்து நின்ற உணர்வை பதுமனார் என்ற புலர் சொல்கின்றார் இப்படி

“நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”



நள்ளிரவு நிசப்தம் நலவுகின்றதே.. தமது சத்தங்களை எல்லாம் தொலைத்து மக்கள் தூங்குகின்றனரே, அடடா உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர!
(மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச்சொல்லி?)

*அடடா கால் என்று சொன்னால் அது பெண்ணுக்குத்தானா? ஆண் காதல் தாபத்தில் தவிக்கமாட்டானா? என்று எண்ணுகின்றோம் அல்லவா?
ஆணுக்கு நாணம் வந்தால் அதைவிட அவஸ்தை வேறு இல்லை என்பதை சரியாக்குவதுபோல குறிஞ்சி நிலத்து தலைவன் ஒருவன் வெக்கப்படுகின்றான் ஏன் என்று புலவர் தொல்கபிலர் சொல்கின்றார் இப்படி

“அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்த்து இலக்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற, யா அம் நாணுகம் சிறிதே”


நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள்,
குறைவான பேச்சு உள்ள இந்தப்பெண்ணை தான் அடைந்தபோது, அந்த ஊரே தன்னை இந்த “நல்லவன்தான்” இவளின் கணவன் என்று சொல்லும்போது தான் கொஞ்சம் வெக்கப்படுவாராம் இவர். (அப்பவே வடிவேலுவின் காமடிகள் ரிலீஸ் ஆகிட்டோ)

*காதலிச்சா கண்ணின் நிறம்மாறுமா? மாறும்தான் என்கின்றனர் அனுபவ சாலிகள்.
ஒருவகையில் நித்திரை இன்றி கண் நிறம்மாறும், ஆழுது அழுது கண்ணின் நிறம் மாறும், துரத்திக்கொண்டு வெயிலில் திரிந்தால் கண்ணின் நிறம் மாறும், அடி வாங்கிக்கூட கண்ணின் நிறம்மாறும்.
அட போங்க ஆளே மாறும்போது கண்ணின் நிறம் மாறாத என்ன?
குறிஞ்சி நிலத்தைச்சேந்த தலைவி ஒருத்தி காதலித்து தன் கண்களின் நிறம்மாறியது என்பதுபோல எழுதியுள்ளார் புலவர் கபிலர்.

“மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல்
பைதல் ஒரு தலைச்சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே”


அழுக்குப்போக சுத்தமாக கழுவப்பட்ட யானையினைப்போலவும், பெரும் மழையினால் நிலமெல்லாம் கழுவப்பட்டு சுத்தமான நாட்டைச்சேர்ந்தவன் எனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான என் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என்கின்றாள்.
மஞ்சளாய்ப்போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னமோ இவளது கண்கள் பச்சையாகிவிட்டனவோ தெரியாது.

இப்படியே விரக தபாங்கள், பொய்க்கோபங்கள், நாணங்கள், கூடலின் பின் ஊடல்கள், பழியை காதலிமீதும், காதலன்மீதும் மாறி மாறி போடும் தன்மைகள், தங்கள் காதலை உலகமே கவனிக்கவேண்டும், அதுவே மிகப்பெரிய விடயம் என்ற எண்ணங்கள், விரகதாபத்தின் உச்சத்தில் வரும் சுய கோபங்கள் என்று காதலர்களின் பல்வேறு உணர்வுகளையும் சங்க இலக்கிய காதல்கள் தொட்டு நிற்கின்றன.
எத்தனையோ அற்புதமான செய்யுள்கள்! தமிழ்; பக்தி மொழி என்பது தவறு.
தமிழ் உணர்வுகளின் மொழி என்று சொல்லுங்கள்.
தமிழுக்கு உருகி உருகி கும்பிடவும் தெரிந்திருக்கின்றது.
அதைவிட உருகி உருகி காதலிக்கவும் தெரிந்துள்ளது.

23 comments:

balavasakan said...

“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”

தீண்டாய்மெய்தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்...
உன் விரல் வந்து என்னை தீண்டியதே
என் நரம்போடு வீணைமீட்டியதே
மனம் அவன் தானா இவன் என்று திடுக்கிட்டதே...

என் பேவரைட் பாட்டு ....

KANA VARO said...

காதல் - இலக்கியம்

ப்ளீஸ் ஆழமா வாசிச்சிட்டு கமென்ட் பன்னுரனே!

balavasakan said...

நீங்க விளக்கம் கொடுக்காட்டி ஒண்ணுமே புரியாது ஆனா எனக்கு அந்த கடைசிவரிக்கு மட்டும் அர்த்தம் தெரியும் நானும் பிறகு சொல்கிறேன்

கவிஞர்.எதுகைமோனையான் said...

வணக்கம் ஜனா. எப்படி இருக்கின்றீர்கள். நீண்ட நாட்களின் பின்னர். தாங்கள் ஊர் திரும்பியதை எனக்கு தெரிவிக்காமல் போய்விட்டீர்களே! எழும்பூர் இலக்கிய கூட்டத்திலும் தங்களை காணவில்லை என்று நினைத்தேன். பின்பு எனது இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியீட்டு விழாவிற்கும் தங்களுக்கு அழைப்பு எடுத்து கிடைக்கவில்லை. நண்பர் நிலாரசிகன் மூலம் தாங்கள் ஊர்திரும்பிமையையும், பதிவுகளை தொடர்வதாகவும் அறிந்தேன்.
சங்க இலக்கிய காதல் மிக இலகு தமிழில் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்தும் இலக்கிய பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தங்களின் குட்டி தேவதைக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக்கொள்ளுங்கள்.

Anonymous said...

கறந்தபால் செய்யுள் என்ன செக்ஸி ஜனா. தாங்கள் அறிந்திருப்பீர்களே! இராமன் கைகேகி சதியால் காடேகியதும், இராமனைத்தேடி பரத பரிவாரங்கள் வனம்வரும்போது, அந்த பிரளயத்திலும், இராத்திரி கிலு கிலுப்பு வைத்திருப்பார் பாருங்கள். அங்கே நிற்கிறார் அந்த வம்பன். மன்னிக்கவும் கம்பன்.

அந்த செய்யுள்களில் இந்த இறுதிவரிகள் அதிகமாக வரும்.. இராமன் காடுசென்று தசரதன் இறந்த படு சோகங்களையும் மீறி காமம் கொப்பளிக்கும்.

டிலான் said...

ஓகோ..இலக்கியமோ என்றுவிட்டு ஓடப்பார்த்தேன். பரவாய் இல்லை நல்ல லேசான தமிழ்ல சொல்லியிருக்கிறிங்கள். எதையோ சொல்லுறிங்கள் அடல்ஸ் ஒன்லி என்று லோசாத்தான் புரியுது.
தங்களுக்கு போன் பண்ணி கேட்கிறன்.

வந்தியத்தேவன் said...

தீண்டா மெய் தீண்டாய் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் தான் , சங்க இலக்கியப் பாடல்களில் இலைமறைகாயாக இருந்த காமத்தை நம்ம சினிமாப் பாடல்களில் நேரடியாகவே சொல்கின்ரார்கள்.

சயந்தன் said...

காமம் என்று அல்லல் படுவார்களே! முகம் கோணுவார்களே! காமம் என்ன நோயா? வலியா? பசுமையான புல்லை நிதானமாக மெதுவாக ஆசைதீர தின்றுவிட்டு, வந்து மாடு அதை மெல்லமாக அசைபோடுவதுபோல நினைக்க நினைக்க இன்பம் தருவது காமம் என்று ஒரு பாடல் காமத்திற்கு பதில் சொல்வதாக எப்போதோ படித்த நினைவுகள்.
உண்மைதான் இலக்கிய கவிதைகள் காமத்தை கையாண்டவிதம் வேறு இன்றைய சினிமா கையாளும் விதம் வேறு.

Karthik said...

//தமிழுக்கு உருகி உருகி கும்பிடவும் தெரிந்திருக்கின்றது.
அதைவிட உருகி உருகி காதலிக்கவும் தெரிந்துள்ளது.//

Ya that is True. Sanaga Kaalam - Kaathal.
Pallavar Kaalam - Bakthi

Very Nice Article.

Jana said...

@Balavasakan
கற்பூரமாய் பிடிக்கிறிங்களே வாசகன். அப்படியே இதில் வரும் அனைத்து செய்யுளிற்கும் உதாரணமாக மிகப்பொருத்தமான ஒவ்வொரு சினிமா பாடல்களையும் குறிப்பிடலாம். குறிப்பிடத்தான் நினைத்தேன் பின்னர் விட்டுவிட்டேன். சங்கம் சங்கம்தான் சினிமா சினிமாதான் என்று.

Jana said...

@KANA VARO
மிக ஆழமாக போய்டாதீங்க வரோ...மூழ்கிடுவீங்க

Jana said...

@Balavasakan
சரி. என்ன கவிஞர்.சுபாங்கன் மிஸ்ஸிங். இது அவருக்கு ரொம்ப பிடித்த சப்ஜக்ட் ஆச்சே..

Jana said...

@கவிஞர்.எதுகைமோனையான்
ஐயா வணக்கம்.நாடு திரும்பும்போது பல முறை தொடர்புகொண்டேன் உங்கள் லைன் கிடைக்கவில்லை என்று சொன்னால் தாங்கள் நம்பவா போகின்றீர்கள். புத்தக வெளியீடு தொடர்பாக தங்கள் மின்-அஞ்சல் கிடைத்தது வாழ்த்துச்செய்தியும் அனுப்பியிருந்தேனே!
கவனம் எடுத்துக்கொள்கின்றேன். இலக்கியக்கூட்டங்கள் எல்லாம் எப்படிப்போகின்றது. நண்பர்கள் அருண் குணா ஆகியோரை விசாரித்ததாகச்சொல்லவும்.
தேவதை நலமே.

Jana said...

@சமுத்திரன்.
உண்மைதான் சமுத்திரன். படித்துப்பார்த்திருக்கின்றேன். கம்பனை வம்புக்கு இழுக்காமல் இருக்கமாட்டீர்கள் போல

Jana said...

@டிலான்
அதற்காவது போன் பண்ணுங்கள் டிலான். என்ன ஒபாமாவுக்கு பிறந்தநாள் எல்லாம் நடத்திறீங்கபோல! நடக்கட்டும்..நடக்கட்டும்

Jana said...

@வந்தியத்தேவன்
நன்றி வந்தி.
சரியாகச்சொன்னீர்கள். பாடல்கள் போற போக்கை பார்த்தால் காதை பொத்திக்கொள்ளவேண்டிய காலங்களும் மிக அண்மித்துவிட்டனபோலத்தான் இருக்கு. (உதாரணம் - பூக்காரன் பூக்காரன் அட உங்களில் யார் உண்டு? முதல்வரியை எழுதவில்லை)

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்று ஒரு பாடல் டீ.ஆர் எழுதியிருந்தார் அல்லவா? அதில்
"மாதங்களை எடுத்தால் பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை இன்னொன்றைக்கூட்ட"
என ஒரு விடயத்தை சிலேடையாக மிக அற்புதமாக அவர் கூறியிருப்பார் அல்லவா?
அதன் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா வந்தி?
அப்படி எழுதுவதுதான் காமத்திற்கும் அழகு.

Jana said...

@சயந்தன்
தாங்கள் ஒரு இலக்கிய ஆர்வலர் என்பதை காட்டியிருக்கின்றீர்கள் சயந்தன்

காமம் காமம் என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே: நினைப்பின்
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே!

இதுதான் நீங்கள் சொன்ன பாடல். மிளைப்பெருங் கந்தனார் என்ற புலவர் இதை எழுதியுள்ளார்.

Jana said...

@ Karthik
நன்றி கார்த்திக்
ஆனால் காதலை விஞ்சிய பல்லவர்கால பக்தி இலக்கியங்கள் பல தமிழில் உள்ளன. அவை பற்றி இன்னும் ஒரு பதிவில் கண்டிப்பாக பார்ப்போம்.

Subankan said...

மிகவும் தாமதமாக வந்துவிட்டேனோ? அந்தக் கடைசி வரியின் ஒற்றை வார்த்தையே ஊகிக்கவைத்துவிடுகிறதே? மறைத்துப் பொருள் எல்லாம் பிறகெதற்கு?

Jana said...

வாங்க சுபாங்கன். அதுவும் சரிதான்.

ம.தி.சுதா said...

ஒன்று மட்டும் தெரியுதா? பண்டைய காலத்தில் போருடன் இவர்களுக்கு காதலிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது.

தர்ஷன் said...

தாமதமான வருகை ஜனா,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். “நள்ளென்றன்றே," எனத் துவங்கும் பாடலை வாசித்தால் பல சினிமாப் பாடல்கள் ஞாபகம் வருகின்றன. முக்கியமாக "ஊருசனம் தூங்கிரிச்சி" பாடல்

Ilakkuvanar Thiruvalluvan said...

இலக்குவனார் சங்கத் தமிழ் விருது
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
சங்கத்தமிழை இணையத்தளங்கள், வலைப்பூக்கள்,
கட்டுரைகள், நூற்கள், சொற்பொழிவுகள், போட்டிகள்,
வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும்
பரப்பும் சங்கத் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் சங்கத்
தமிழ் விருது வழங்கப் பெறும்.
இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி ஆகியன இணைந்து வழங்க
உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய
விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல்,
தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன
வேண்டுகிறோம். சங்கத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களை அறிந்த
பிறரும் பரிந்துரைக்கலாம்.
விருது பெற விழைவோர் தங்கள் பெயர், முகவரி, மின்வரி முதலிய விவரங்களைத் தங்களின் சங்கத்தமிழ்ப்பணி விவரங்களுடன்
thamizh.kazhakam@gmail.com
மின்வரிக்குத் தெரிவிக்க வேண்டப்படுகின்றனர்.
இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்பு க்கழகம்
புலவர்ச.ந.இளங்குமரன்
நிறுவுநர்-செயலர், வையைத்தமிழ்ச்சங்கம், தேனி
பொறி.திருவேலன் இலக்குவன்
ஒருங்கிணைப்பாளர்,
இலக்குவனார் இலக்கிய இணையம்
9884481652

LinkWithin

Related Posts with Thumbnails