Sunday, November 15, 2009

நண்பர் கேபிள் சங்கரின் தந்தையார் அமரர்.பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலிகள்.

பிரபல பதிவர், அன்பு நண்பர் கேபிள் சங்கர் அவர்களுடைய தந்தையார் பாலசுப்பிரமணியன் அவர்கள், நேற்று 14.11.2009 சனிக்கிழமை அன்று காலமாகியுள்ள செய்தி கிடைத்தது. இந்த செய்தி நான் உட்பட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் பெரும் துக்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் கொடுத்த, ஆயிரம் கோடி தெய்வங்களிலும்மேலான ஒரு தந்தையின் இழப்பு என்பது ஈடு செய்யப்படமுடியாத ஒரு பேரிழப்பே.
எத்தனை ஆறுதல் வார்த்தைகள் கூறியோ, இயற்கையின் வழமையினை நினைத்தோ அதை ஆற்றமுடியாது.

இந்த நிலையில் ஒரு அன்பான தந்தையினை இழந்து தவிக்கும் அன்பு நண்பன், கேபிள் சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும்
என் சார்பிலும் பதிவுலக நண்பர்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Saturday, November 14, 2009

உபாலியின் விமானவிபத்தும், தொடரும் மர்மமும்!!


சிறி லங்கா என்ற பெயரினை உலகம்முழுவதும் முதன்முறையாக உச்சரித்த தினம், 1983ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் 13ஆம் திகதி.
அன்றைய தினம்தான் மலேசியாவில் இருந்து, தனது சொந்த லியர்ஜெட் விமானத்தில் கொழும்புநோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கையின் மாபெரும் வர்த்தக காந்தமாக திகழ்ந்த, உபாலி விஜேவத்தன அவர்கள் விமான விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் இலங்கையில் மட்டும் இன்றி உலகம்பூராகவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இருந்தபோதிலும், அந்த விமானத்தில் இருந்து அவரது உடல் கண்டு எடுக்கப்படவில்லை. இது இலங்கை மக்களிடையே பெரும் பரபரப்பையும் சர்ச்சையினையும் ஏற்படுத்தியிருந்தது. இன்றுவரை உபாலிக்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக பலரும் பேசிக்கொள்வதை அறியக்கூடியதாகவே உள்ளது. உண்மையில் அந்த விமானத்தில் உபாலி பயணம் செய்தாரா? அப்படி என்றால் அவரது உடல் ஏன் கண்டுபிடிக்கமுடியாமல்போனது போன்ற பல கேள்விகளுக்கு விடை இன்றும் மர்மமாகவே உள்ளது.

கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் கொழும்பை வந்தடையவில்லை என்றதும், அனைவருக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து குறித்த லியர்ஜெட் விமானத்திற்கான தொடர்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், குறித்த விமானம் ஏதோ ஒரு அசம்பாவிதத்தில் மாட்டிக்கொண்டுவிட்டதை அதிகாரிகள் உணர்ந்து கொண்டார்கள்.
இந்த நேரத்தில் இந்தோனேசியாவின் “மெடன்” என்ற கடற்பிரதேசத்தில் இந்த விமானத்தின் சக்கரம் ஒன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டு, இந்தோனேசிய காவற்துறையினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பணிப்பின்பேரில், அமைச்சராக இருந்த லலித் அத்துலக்முதலியும், டொக்ரர் ரத்வத்தையும், உடனடியாக இந்தோனேசியா விரைந்து இந்தோனேசிய ஜனாதிபதியினை விமானத்தை மீட்க உதவி வழங்கக்கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிரகாரம் இந்தோனேசிய அரசாங்கத்தின் பணிப்பின்பேரில் உடனடித்தேடுதல் நடவடிக்கையில் விமானம் கடலினுள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது.
ஆனால் அந்த விமானத்திலோ அருகில் உள்ள இடங்களிலோ உபாலி விஜேவத்தனவின் உடல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் உபாலியின் குடும்பத்தினரும், அவரின் சகோதரிகள் இருவரும் உபாலி உயிருடன்தான் உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டு, அவர் எந்தவித அசம்பாவிதங்களையும் சந்திக்காமல் வீடு திரும்ப வேண்டும் என சர்வமத பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவந்தனர்.

உபாலி விஜேவத்தன குறுகிய காலகட்டம் ஒன்றினுள், வர்த்தகத்தில் உச்சத்திற்கு சென்றவர் என்பதுடன், இலங்கையில் மறக்கமுடியாத ஒரு நபராகவும் உருவெடுத்துக்கொண்டவர்.
“உபாலி குரூப்” என்ற அவரது வர்த்தக நிறுவனம், குறுகிய காலத்தில் இலங்கையில் புகழ்பெற்று, முன்னணியில் நின்றது.
1938ஆம் ஆண்டு பிறந்த உபாலி விஜேவர்த்தன இரண்டு மூத்த சகோதரிகளின் பின்னர் பிறந்தவராவார். இவர் தனது 1,1/2 வயதில் தனது தந்தையாரை இழந்து,
தயாரான அனுல கல்யாணவதி விஜேவர்த்தனவின் பாரமரிப்பில் வளர்ந்துவந்தார். தனது கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றுவந்த இவர், தனது உயர் கல்வியை இங்கிலாந்து சென்று கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

நாடுதிரும்பியதும், இலங்கையில் லீவர் பிரதர்ஸ் நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாராக பணியில் அமர்ந்தார். அதன் பின்னர் தனது சொந்த நிறுவனமாக உபாலி குரூப் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் இலட்சினையாக சூரியனை தெரிவு செய்துகொண்டார்.
பத்திரிகை, சொக்லட்வகைகள், அத்தியாவசியபொருட்கள், என அவரது நிறுவனம் தனது விஸ்தரிப்பினை இட்டுக்கொண்டு சென்றது.
அத்தோடு குதிரை பந்தயத்தை இலங்கையில் சூடுபிடிக்க வைத்த பெருமையும் இவரையே சாரும்.

குறுகிய காலத்தில் தொட்டதெல்லாம் வெற்றி பெற்ற நிலையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உள்நாட்டு விமானசேவை நிறுவனமாக உபாலி எயார் என்ற நிறுவதன்தை ஆரம்பித்தார். இது இலங்கை வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். 70 களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இந்த விமானசேவையில் 20 ஆசனங்கள் கொண்ட இரண்டு விமானங்களை முதல்முறையாக உள்நாட்டு விமானசேவைக்காக இறக்குமதி செய்து உள்நாட்டு விமான பயணசேவையினை அரம்பித்துவைத்தார்.

இலங்கையில் சுதந்திர வர்த்தக மையம் அமைப்பதில் முக்கியமான பங்கு உபாலிக்கு உண்டு. இலங்கை சுதந்திர வர்த்தக மையங்களை அமைத்து நாட்டின் உற்பத்தினையும், வேலைவாய்ப்பினையும், அன்னியச்செலவாணியினையும் பெற்றுக்கொள்ள, நாட்டினை அபிவிருத்தி செய்ய இவ்வாறான வர்த்தக மையங்கள் அவசியம் என்ற கருத்தில் ஆணித்தரமாக நின்று உழைத்தவர்.

முக்கியமாக சொல்லப்படவேண்டிய விடயம் என்வென்றால் இவரது “உபாலி குரூப்” நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் தமிழர்களே இருந்துவந்தார்கள். இது தொடர்பாக மூத்த தமிழ் ஊடகவிலாளர் ஒருவர் தமது உபாலி பற்றிய நினைவுக்குறிப்பில். தான் அவரை செவ்விகண்டபோது, தற்போது இலங்கையில் சிறுபான்மையினர் தமிழர்கள் என்றுகூறி பல்துறையிலும் ஒதுக்கப்படுகின்றார்ளே என வினவியபோது, உபாலி விஜேவத்தன சிரித்துக்கொண்டே,
இந்த நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் ராஜூ குமாரசாமி உள்ளார், நிதிச்செயலாளராக சாந்தி சண்முகம் உள்ளார், மேலாளராக ஞானம் உள்ளார்,
சிங்கப்பூருக்கான எமது தூதுவராக சி.ஞானசிங்கம் உள்ளார். இங்கே உண்மையில் நான்தான் சிறுபான்மையினன் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருந்தாராம்.
இது தவிர யாழ்ப்பாத்தவர்களுக்கு தனி மரியாதையே கொடுத்து வந்தாராம் உபாலி என தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு லக்மனி ரத்தவத்தை என்ற பெண்ணை கரம்பிடித்த உபாலிக்கு, குழந்தைகள் இல்லை. இவரது விமான விபத்தின் பின்னர் 12 வருடங்கள் கடந்து லக்மனி, நிமல் வெல்கம என்பவரை மணம்புரிந்துகொண்டார்.
உபாலியின் சொத்துக்கள் தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்றன.
உபாலிக்கு சொந்தமான பல நிறுவனங்களை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என உபாலியின் சகோதரிகளுக்கும், லக்மனிக்கும் இடையில் வழக்குகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

எது எப்படியோ 26 வருடங்கள் கடந்தோடிவிட்டபோதிலும்கூட உபாலி பயணம் செய்த விமான விபத்தின் உள்ள மர்மம் கலையாத இருட்டாக தொடர்ந்தும் நீடித்துக்கொண்டே உள்ளது.

Friday, November 13, 2009

ரஷ்ய போலீஸை திடுக்கிட வைத்த இலங்கையன்.

1960 களில் ரஷ்யாவின், அப்போதைய சோவியத் யூனியனின் மலைப்பிரதேசங்களில் ஒன்றில் அமைந்திருக்கும் லுமும்பா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ படிப்புக்காக இலங்கையிலிருந்து ஒரு துடிப்பான மாணவன் சென்றிருந்தான். சூழலில் நடக்கும் எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்ளும் தன்மையும், அமைதியாக இருந்து இயற்கையினை இரசிக்கும் தன்மையும் அவனிடம் அதிகமாகவே காணப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் நுழைவின்போதிலும் யாருடனும் அவன் உடனடியாக பேசுவதோ, அல்லது தன்னை அறிமுகப்படுத்த முண்டி அடிப்பதோ கிடையாது.
அமைதியாகவே இருப்பான். ரஷ்ய மொழியினை கற்பதில் அதீத ஆர்வத்தை காட்டி நின்றான்.

மருத்துவ படிப்பு கற்றுவந்தாலும், மார்க்ஸிஸ சிந்தனைகள் அவனை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுக்க முற்பட்டது. அவனும் அதன்பக்கம் மிக வேகமாக முன்னோக்கிச்சென்றான். அவனது பல்கலைக்கழக விடுதி அறைமுழுவதையும், மாஸ்ஸிச, கொமினிஸ் புத்தகங்கள் தொகை தொகையாக அலங்கரிக்கத்தொடங்கின, மலைச்சாரலிலும், அருகில் இருந்த பெரிய, எவரும் ஏறமுடியாத வழுக்கலான மலையின் பக்கத்திலும் இவனது அறை இருந்ததன் காரணத்தினால், வாசிப்புக்குரிய சூழலை தாளாரமாக இவனுக்கு வழங்கியிருந்தது.
அதிக நேரங்கள் இவனது முகம் புத்தகங்களின் உள்ளேயே புதைந்து கிடந்தது.

மாக்ஸிஸ, கொமினீஸிய சிந்தனைகள் உச்ச நிலைக்கு சென்று, புரட்சியின் செங்கதிராக உயர்ந்து நின்ற சேகுவாரா இவன் முன்னால் ஒரு உலக சரித்திர நாயகனாக உயர்ந்து தெரிந்தான்.
இவன் மனம் முழுவதையும் அந்த சரித்திரநாயகன் கொள்ளை கொண்டிருந்தான்.
ரஷ்யாகூட மர்க்ஸிஸ தத்துவம் பேசியும், லெனிலின் பெயரால் ஒரு சோஷலிச பூமியை உலகில் பிரமாண்டமாக கட்டுவதாக சொன்னாலும், சோவியத் யூனியனின் கொள்கைகளில் இவனுக்கு முரண்பட்ட கொள்கைகள் தோன்றின.

இவன் தங்கியிருந்த பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் பெரும் சர்ச்சை, நாளாந்தம் நடந்துகொண்டிருக்கும், என்னவென நின்றுபார்க்காமல். அதை தாண்டி இவன் ஒவ்வொருநாளும் வெளியேறிக்கொண்டிருப்பான்.
அந்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகமாகி இறுதியில் ரஷ்யக்காவற்துறையினர் குழுமி ஆராயும் நிலைக்கும் சென்றது.

அந்த சார்ச்சைகளுக்கும், ரஷ்யக்காவற்துறை பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் ஆராய்வு நடத்தியதன் காரணம் இவைதான், யாருமே ஏறமுடியாத, விடுதியின் அருகில் உள்ள அந்த வழுக்கி மலையின் மேற்பகுதிகளில், சோவியத் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து, புதிய சிந்தனைகளை விதைக்கும் வசனங்கள் உள்ள பெரிய பிரசுரங்களை அதில் ஒட்டும் அந்த அசாதாரண மனிதன் யார் என்பதே!

எவருக்குமே விடை தெரியவில்லை. காவற்துறைகூட ஆராய்ந்துபார்த்துவிட்டு, உதட்டை புதுக்கிகொண்டு சென்றுவிட்டது. உண்மைதான் இந்த வழுவழுப்பான மலையின் இந்த அளவு தூரத்திற்கு ஏறி, எந்த மனிதனாலும் பிரசுரங்களை ஒட்டமுடியாது.
ஆனால் இவனுக்கு மட்டும் அதன் விடை தெரிந்திருந்தது. ஏனென்றால், அந்த விளையாட்டை விளையாடுபவனே இவன்தானே.

இவன் செய்யும்வேலை இதுதான், ஒரு பெரிய கடதாசியில் எழுதவேண்டிய வாசகங்களை மிகப்பெரிதாக சிவப்பு மையினால் எழுதுவான், அதுமட்டும் இன்றி கடதாசியின் மறுபக்கத்திலும் அதேபோல எழுதிவிடுவான். எழுதி முடிந்த உடன், அந்த கடதாசியின் இரண்டு பக்கங்களிலும், பசையினை அப்பலாகப்பூசிவிட்டு, அனைவரும் உறங்கிவிட்டபின்பு, விடுதியின் மொட்டைமாடிக்குச் செல்வான், காற்று பலமாக அடிக்கும்போது அந்த கடதாசியை விரித்துப்பிடித்து அந்த மலைக்கு எதிராக நின்று விட்டுவிடுவான். கன கச்சிதாக மலையின் மேற்பகுதிகளில் அந்த பிரசுரம் காற்றினால் ஒட்டப்பட்டு. காலையின் எழுந்திருப்பர்களின் கண்களுக்கு காலை வணக்கம் கூறிக்கொள்ளும்.

பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டுவரை மருத்துவம் கற்றான். அதைவிட அதிகமாக மாக்ஸிஸத்தையும், அரசியல் பொருளாதார தகவல்களையும் கற்றுக்கொண்டான். கிடைக்கும் ஓய்வுநேரங்களில் தன் இருப்பிடத்தை சுற்றியுள்ள, விவசாயிகளின் நிலங்களில் அவர்களுடன் விருப்பத்துடன் இணைந்து வேலை செய்துவந்தான்.
1963ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக மொஸ்கோ மருத்துவமனையில், சிகிற்சை பெற்று அதன்பின்னர் இலங்கை திரும்பிய இவன், இலங்கையின் வரலாற்றில் ஒரு திசைதிருப்பியாளனாக மாறியிருந்தான்.

ஆம் 1989ஆம் ஆண்டு இதேநாள் (நவம்பர் 13 இல்) முதன்நாள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜனதா விமுத்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிதாமகன்தான் ரோஹன விஜயவீர என்ற இந்த புரட்சியாளன்.
1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பட்டபெண்டி நந்தசிறி விஜயவீர என்ற இயற்பெயருடன் பிறந்து, 1971ஆம் ஆண்டு இலங்கையில் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு புரட்சியாளன்.
பின்னாட்களில் இவர் ஆரம்பித்த அதேகட்சி, பல தடங்கள் புரண்டு இவரது கொள்கைகளுக்கு மாறாக நடந்து, இன்றும் ஜனதா விமுத்தி பெரமுன என்ற பெயருடன் கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கின்றது என்பது வேறுகதை.

(அனுர விமுத்தி தயாநந்த என்ற நண்பன் பல்கலைக்கழகக்காலங்களில் எனக்கு சொன்ன ஜே.வி.பி. கதைகளில் இருந்து)

Tuesday, November 10, 2009

பிடிச்சிருக்கா! பிடிக்கலையா!!


நேற்று இரவு மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது பதிவுலக நண்பர் ஊர்சுற்றி அவர்கள் ஒரு மின் மடலை அனுப்பியிருந்தார். அதில் பிடித்தது பிடிக்காதது பகுதிக்கு அழைப்பு விடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இன்னும் தனது பிடித்த பிடிக்காதவைகளைப்பற்றி பதிவிடவில்லை. ஆனால் நான் எனக்கு பிடித்தவைகளை பற்றி பட்டியல் இட்டுவிட்டேன். பிடிக்காதவைகளை கண்டுபிடிக்கத்தான் பெரும்பாடு படவேண்டிய நிலை.

சரி..எழுதிமுடிந்துவிட்டால் அது பதிவுக்கு வந்துவிடவேண்டும் காத்திருக்கும் நேரத்தில்க்கூட விருப்பங்கள் மாறிவிடுமே.
ஸோ.. கேட்டுக்கொண்ட மூலவர் பதிவை முந்திக்கொண்டு பதிவிடுகின்றேன்.
நண்பர் ஊர்சுற்றி மன்னிப்பாராக.

பிடித்தமொழி -தமிழ்
பிடிக்காத மொழி -இந்தி

பிடித்த புலவர் -திருவள்ளுவர்
பிடிக்காத புலவர் -கம்பர்

பிடித்த கவிஞர் -கண்ணதாசன்
பிடிக்காத கவிஞர்? -கலைஞர்

பிடித்த விளையாட்டு – கிரிக்கட்தான்
பிக்காத விளையாட்டு – கோல்ப்

பிடித்த அணி - தென்ஆபிரிக்க அணி
பிடிக்காத அணி - இலங்கை, இந்திய அணிகள்

பிடித்த வீரர் -சச்சின் ரமேஸ் தென்டுல்க்கர்
பிக்காத வீரர் -முத்தையா முரளிதரன்

பிடித்த நடிகர் -மம்முட்டி
பிடிக்காத நடிகர் -சிறிகாந்த்

பிடித்த பாடகர் -கே.ஜே.ஜேசுதாஸ்
பிடிக்காத பாடகர் - கிரிஷ்

பிடித்த பாடகி - வாணி ஜெயராம்
பிடிக்காத பாடகி - இல்லை

பிடித்த பாடலாசிரியர் - வைரமுத்து
பிடிக்காத பாடலாசிரியர் - பா.விஜய்

பிடித்த எழுத்தாளர் - செங்கையாழியான்
பிடிக்காத எழுத்தாளர் -ஞானி

பிடித்த நிறம் - மேக நீலம்
பிடிக்காத நிறம் - கோப்பி நிறம்

பிடித்த அறிவிப்பாளர் -பி.எச்.அப்துல்ஹமீட்
பிடிக்காத அறிவிப்பாளர் - நிறையப்பேர்

பிடித்த இசையமைப்பாளர் - இளையராஜா
பிடிக்காத இசையமைப்பாளர் -சிறிகாந்த் தேவா

பிடித்த இயக்குனர் - உதிரிப்பூக்கள் மகேந்திரன்
பிடிக்காத இயக்குனர் -பேரரசு

பிடித்த தலைவர் - உங்களுக்கு தெரியும்
பிடிக்காத தலைவர் - முத்துவேல் கருணாநிதி

பிடித்த இசை – மெலடி
பிடிக்காத இசை – துள்ளிசை, ரீமிக்ஸ்

பிடித்த பேச்சாளர் -சீமான்
பிடிக்காத பேச்சாளர் -கம்பவாரிதி ஜெயராஜ்

பிடித்த நவாலாசிரியர் -சுஜாதா
பிடிக்காத நாவலாசிரியர் -பாலகுமாரன்

பிடித்த காலம் - இப்போ நடக்கும் மாரிகாலம்தான்
பிடிக்காத காலம் - கோடை காலம்

பிடித்த உணவு – யாழ்ப்பாண உணவுகள்
பிடிக்காத உணவு – வட இந்திய உணவுகள்

சரி, இவைபோதும் என நினைக்கின்றேன். பிடித்தவைகள் பல இருக்கின்றன ஆனால் அவற்றில் ஒன்றைத்தான் சொல்லவேண்டும் என்பது கட்டுப்பாடாம். அதுதான் பலவற்றை தவிர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
சரி..நிற்க..
இந்த இடத்தில் நானும் ஐந்துபேரை மடக்கிப்போடவேண்டாமா? இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுத!!
இதோ என்னிடம் அகப்படும் பாண்டவர்கள்…

01.அடலேறு (பிடித்தவைகள், பிடிக்காதவைகளைக்கூட கவியாக சொல்லக்கூடியவர்)
02.எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் (இதைக்கூட அழகாக சிறுகதைபோல தருவார்)
03.தங்கமுகுந்தன் (அருமையாக, பகைப்படங்களை பிடித்து விளக்கம் கொடுத்து பதிவு தருவார்)
04.சயந்தன் -(பதிவுக்கு புதியவர், ஏழுத்துலகத்திற்கு பழையவர், உணர்வோட்டத்துடன் பதில் தருவார்)
05.டிலான் -(சுதேச சொல்லாடல் எழுத்துக்களால் பதிவுலகத்தையே தன்பக்கம் திரும்ப வைத்து அமர்க்களப்படுத்துபவர். தவறணையில் இருந்து விருப்பு வெறுப்பு கதைத்தால்!!! அதன் சுவையோடு தருவார்)

Sunday, November 8, 2009

ஞாயிறு ஹொக்ரெயில். 08.11.2009


அடாது பெய்த மழையும் நின்றுபோன பதிவர் சந்திப்பும்.
நேற்று சனிக்கிழமை (07.11.2009) கே.கே. நகரில் ஒரு கேட்போர் கூடத்தில் சென்னை பதிவர்கள் சந்திப்பு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மிக ஆவலாக ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு சென்னை பதிவர்கள் எல்லோரும் ஆவலாக இருந்தனர். பல பிரபலமான பதிவர்கள் அடுத்தடுத்து அழைப்பு எடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர்.
கண்டிப்பாக கலந்துகொள்வதுதான் என்ற முடிவில் இருக்கும்போது. அடாது மழை தொடங்கிவிட்டது. வீதிகளில் வெள்ளம்வேறு.
மழையின் கோரம்கண்டு காலையிலேயே அடுத்தடுத்து அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் இன்று சந்திப்பு இல்லை எனத் தகவல் தந்தன. மனதுக்கு சற்று ஏமாற்றமே.
இதுபோன்ற பதிவர் சந்திப்பு ஒன்றிலேயே எனக்கு சிறந்த பல நண்பர்கள் கிடைத்தார்கள். இன்னும் பலருடன் பேச நிறைய விடயங்கள் இருந்தன.
ஆனால் அது தள்ளிப்போயுள்ளது வருத்தமாகவே உள்ளது.
சென்றமுறையும் பதிவர் சந்திப்பு திறந்தவெளியில் நடத்தப்பட்டதால் மழையும் அழையாத விருந்தாளியாக தானும் வந்திருந்தது. இந்தமுறையும் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றது.

ஞாயிறு தினக்குரலில் என்பதிவுகள் பற்றி.

இலங்கையின் முன்னணி தினசரிப்பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு தினக்குரலில் நட்டசத்திரப்பதிவாளர் அறிமுகம் என்ற பக்கத்தில் என்னைப்பற்றிய தகவல்களும், ஒரு குறும்படம் பற்றிய எனது ஆக்கமும் இன்று வெளியாகியிருந்தது.
இலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள். குறிப்பாக பலருக்கு நான் வலைப்பதிவுகள் எழுதுவது இன்றுதான் தெரியவந்ததாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இந்தவேளையில் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தினருக்கும், முக்கியமாக யாழ்தேவி இணையத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஓடியற்கூழ்.
யாழ்ப்பாணத்தவர்களின் தனிப்பட்ட சிறப்பியல்புகளில் ஒடியல்கூழ் காய்ச்சி விருந்து வைத்தல் என்பது ஒரு பாரம்பரியமாக அந்த நாட்களில் நடந்துவந்துள்ளது.
இதன் பெருமைகளை கூற. “கொண்டாடினாள் ஒரு ஒடியற்கூழ்” என்ற பாடலையே நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள் பாடியுள்ளார்.
இந்த வகையில் கடல்கடந்து பல தேசங்களில் வாழ்ந்துவந்தாலும் இன்றும் அங்கெல்லாம் இதன் மூலப்பொருளான “ஒடியல்மா” சென்றடைந்து அந்தந்த தேசங்களிலும் ஒடியற்கூழ் காய்ச்ச்சி குடித்து மகிழ்வது இன்று மரபாக உள்ளது.
அந்த விதத்தில் சென்னையிலும் இன்று யாழ் நண்பர் ஒருவரின் வீட்டில், ஒடில்க்கூழ் காய்ச்சி விருந்துக்கு அழைக்கப்பட்டோம். நீண்ட நாட்களின் பின்னர், மழைக்கும் ஒரு இதமாக ஒடியற்கூழின் சுவை யாழ்ப்பாணத்தின் பெருமை கூறியது.
(ஒடியற்கூழ் என்பது ஒடியல்மாவை மூலப்பொருளாக கொண்டு, மீன், நண்டு. இரால், கணவாய், மரவெள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், முருங்கை இலை, என்று பல பொருட்களை இட்டு காய்ச்சப்படும் ஒரு கூழ்வகை)

எங்கிருந்தோ அழைக்கும்…

அரைக்காட்சட்டை பருவங்களில். ஐந்தாம்வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விழுந்து விழுந்து எங்களை படிக்க அனைவரும் வற்புறுத்திய காலங்களில் என் காதுகளை நனைத்த பாடல் “என் ஜீவன் பாடுது” திரைப்படத்தில் இடம்பெற்ற “எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம”; பாடல்.
இப்போதும் என் நினைவுகளில் தெளிவாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு என் குடும்பத்தாருடன் ஒரு விழாவுக்கு நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது முதன் முதலாக அந்தப்பாடல் என் காதில் விழுந்தது.
அன்றைய பொழுதுகளிலேயே, நான் இளையராஜாவின் இசைக்கு மட்டும் இன்றி அவரது குரலுக்கும் அடிமையாகியிருந்தேன்.
(அடுத்து கார்த்திக். நான் பார்த்து பிரமித்த நடிகர்களில் ஒருவர். அற்புதமான ஒரு நடிகர். இன்றுவரை, மௌனராகம் திரைப்படத்தில் திடீர் என வந்து ஒரு கலக்கு கலக்கிய கார்த்திக்கின் பாத்திரம்போல் இதுவரை நான் பார்த்தது இல்லை.)
“வசந்தமும் இங்கே வந்ததென்றே வாசனை மலர்கள் சொன்னாலும், தென்றலும் இங்கே வந்து நின்று, இன்பத்தின் கீதம் தந்தாலும், நீயின்றி ஏது வசந்தமிங்கே! நீயின்றி ஏது ஜீவனிங்கே! சேர்ந்திடவே உனையே” அற்புதமான வரிகள்.

குறும்படம் “லிட்டில் மான்” (18)

பெண்களின் நடவடிக்கைகளை அவதானித்து இவர் நடத்தும் ஆரட்சிகளும், ஒவ்வொரு செயல்களின் முடிவும், குறும்படத்தின் முடிவும் அற்புதம்.

சர்தாஜி ஜோக்.
ஒரு அமெரிக்க உல்லாசப்பயணி டெல்லி, மற்றும் ஆக்ராவை சுற்றிக்காட்ட நம்ம ஷர்தாஜியை விழிகாட்டியாக எற்பாடு செய்துகொண்டார். செங்கோட்டைக்கு சென்றபோது அதைப்பார்த்து வியந்த அமெரிக்கர் நம்ம ஷர்தாஜியிடம் இதைக்கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் சென்றன என்று கேட்டார். ம்ம்ம்…இருவது வருடங்கள் என்று ஷர்தாஜி பதில் தந்தார்…
ப்பூ….இந்தியர்கள் அவ்வளவு சொம்பேறிகளா? அமெரிக்கர்கள் இதை வெறும் இரண்டுவருடங்களில் கட்டிமுடித்திருப்பார்கள் என்றார் அமெரிக்கர்.
தாஜ் மஹாலைப்பார்த்து லயித்துப்போன அமெரிக்கர் சரி…இதைக்கட்ட உங்களுக்கு எவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டார்…சர்தாஜி வேண்டும் என்றே வருடங்களைக்குறைத்து வெறும் 10 ஆண்டுகள்தான் சென்றன என்றார்… அதற்கும் அந்த அமெரிக்கர்…இதை நாங்கள் ஒருவருடத்தில் கட்டிமுடித்திருப்போம் என்றார்.
சென்ற இடமெங்கும் காலங்களைக்கேட்பதும், ஷர்தாஜி பதிலளித்தவுடன்…அமெரிக்கர்கள் இதை குறுகிய காலத்தில் முடித்திருப்பார்கள் என பெருமை பேசுவதுமே அமெரிக்கரின் வழக்கமாயிருந்தது…
ஷர்தாஜிக்கு கடும் எரிச்சல் எற்பட்டது…போகும் வழியில் “சகாரா” தொலைக்காட்சி கோபுரத்தைக்கண்ட அமெரிக்கர் அது என்ன கோபுரம் என்று கேட்டார்…அதற்கு பதிலளித்த நம்ம ஷர்தாஜி அங்கே போய்த்தான் நாங்கள் அதை விசாரிக்கவேண்டும் இன்றுகாலை நான் இந்தப்பக்கமாக வந்தபோது இந்தக்கோபுரம் இங்கு இருக்கவில்லை என்றார்.

Wednesday, November 4, 2009

Operation Smile

நாளாந்தம் எம் பயணங்களில் எதேட்சையாக ஒரு தடவையாவது, பிறவிக்குறைபாடாக இருக்கும் “உதடு அன்னப்பிளவு” உள்ள குழந்தைகளை கடந்துசென்றிருக்கின்றோம். அடடா.. என்ன அழகான குழந்தை, அதன் உதடுகளுக்கு இப்படி நேர்ந்தவிட்டதே என்று எண்ணிக்கொண்டு பயணத்தை தொடர்ந்திருப்போம்.
ஏன்.. இந்த பிறவிக்குறைபாடான உதடு அன்னப்பிளவினால் பாதிக்கப்பட்டவர்களாக எம்முடன் படித்தவர்களோ, அல்லது எமது உறவினர்களோ, நண்பர்களோ ஏன் எமது குடும்ப உறுப்பினர்கள்கூட இருந்திருக்கலாம்.

உதடு அன்னப்பிளவால் பாதிக்கப்படும் சிறுவர்கள், தங்கள் புன்னகைளை மட்டும் தொலைத்துவிடவில்லை. சரளமாகப்பேசுவதற்கு மிகவும் சிரமப்படவேண்டியவர்களாக உள்ளனர். அதேவேளை மற்றவர்களுடன் தன்னை பார்த்து ஒரு வித தாழ்வு மனப்பாண்மை அவர்களுக்குள் குடிகொண்டுவிடுகின்றது. அது தவிர பல விடயங்களிலும் அவர்கள் புறக்கணிப்புகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சாதாரணமாக வருடம் ஒன்றிற்கு உலகமட்டத்தில் இரண்டு இலட்சம் குழந்தைகள் இந்த பிறவிக்குறைபாடான உதடு அன்னப்பிளவுடன் பிறப்பதாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலனவர்கள் வசதிகள் குறைந்த நிலையில் உள்ளதன் காரணமாக தங்கள் குழந்தைகளின் உதடு அன்னப்பிளவு சீர் செய்யப்படக்கூடியதொரு குறைபாடுதான், நவீன மருத்துவமுறையினால் அவற்றை நிவர்த்தி செய்துவிடமுடியும் என்ற அறிவு குறைந்தவர்களாகவும். அப்படி அறிந்தாலும் அதற்கான செலவினை செலுத்தி தமது குழந்தைகளுக்கு சிகிற்சைகளை மேற்கொள்ள முடியாதவர்களாகவுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேதனை தரும் சம்பவங்கள் என்னவென்றால், இவ்வாறான பிறவி உதடு அன்னப்பிளவுடன் பிறக்கும் குழந்தைகளை பெற்றவர்களே ஒதுக்கி நடப்பதும், மூன்றாந்தரப்பிரஜைகளாக சமுகம் அவர்களை பார்ப்பதும்தான் என சமுக சேவகர்கள் வருத்தம் கொண்டுள்ளனர். கல்வி கற்கும் இடம், விளையாட்டு என்ற சிறுவர்களுக்கேயான ஈர்ப்புள்ள இடங்களிலும் இவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த வருட முற்பகுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒஸ்கார் விருதுபெற்ற ஒஸ்கார் விழாவிலே “ smile pinki” என்ற உதடு அன்னப்பிளவினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிபற்றிய ஆவணப்படத்திற்கும் விருதுவழங்கப்பட்டிருந்ததை அறிந்திருப்பீர்கள்.
மேற்படி உதடு அன்னப்பிளவு பற்றிய வழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்ட ஆவணப்படமே “smile pinki” ஆகும்.

பிறவிக்குறைபாடான உதடு அன்னப்பிளவானது பரம்பரை நோயோ, அல்லது கடவுளின் சாபமோ அல்ல. உண்மையில் அது ஒரு மற்றுமுழுதான பிறவிக்குறைபாடே ஆகும். என்றாலும் இன்றைய மருத்துவ நவீன சிகிற்சைகள் மூலம் அதை உடனடியாகவே சீர்ப்படுத்திவிட முடியும் என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.

இவ்வாறான குழந்தைகளின் உதடுகளில் அழகான புன்னகைகளை கொண்டுவருவதற்காக 1982ஆம் ஆண்டுமுதல் கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேலான நாடுகளில் இயங்கிவரும் அமைப்பே “Operation Smile” ஆகும்.
இதுவரை பல இலட்சம் பிறவி உதடு அன்னப்பிளவுள்ள குழந்தைகளுக்கு சிகிற்சைகளை வழங்கி அவர்களின் அழகிய புன்னகையினை கண்டுள்ளது இந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனம்.

தனியே சிகிற்சைகள் மட்டும் இன்றி, இந்த பிறவி உதடு அன்னப்பிளவு பற்றிய வழிப்புணர்வை உலகலாவிய ரீதியில் முன்கொண்டு செல்வதிலும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான ஒரு காப்பரணாகவும், இது தொடர்பான மருத்துவ முறைகள், கற்கை நெறிகள் என்பவற்றை நடத்தியும் வருகின்றது இந்த அமைப்பு.

முன்னமே சொன்னதுபோல நாம் இவ்வாறான குழந்தைகள் பலரை கண்டு ஏங்கியிருப்போம். எமக்கு அந்த வலி வரும்வரை நாம் அதுபற்றி பார்வையாளராக இருந்துவிடுவதூன் மனித இயல்பாக உள்ள நிலையினை மாற்றி, எம்மால் முடியாவிட்டாலும், இந்தகுழந்தைகளுக்கு உதவும் “Operation Smile “ போன்ற தொண்டர் அமைப்புகளுக்கு எம்மாலான நிதிகளை கொடுத்தாகினும், உலகம் முழுவதிலும், குறைபாடில்லாத குழந்தைகளின் அழகான புன்னகைக்கு வழிவகுக்கலாமல்லவா?

செய்தி.
“Operation Smile” தொண்டு நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு வழிப்பணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இன்று (நவம்பர் 04 முதல் 16ஆம் திகதிவரை) வியட்னாமில் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் 3000 வியட்னாமிய பிறவி உதடு அன்னப்பிளவு உள்ள குழந்தைகளுக்கு இலவச சீரமைப்பு சிகிற்சை வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு “Operation Smile” அமைப்பின் கௌரவ தூதுவரான பிரபல நடிகர் ஜாக்கி ஷான் நேடியாகவே இன்று வியட்னாமுக்கு விஜயம் செய்து இந்த 20ஆம் ஆண்டு வழிப்புணர்வு ஊட்டும் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

Sunday, November 1, 2009

ஞாயிறு ஹொக்ரெயில் (01.11.2009)

அச்சுவலைச் சந்திப்பு

இருக்கிறம் சஞ்சிகை ஒழுங்கு செய்துள்ள ஊடகத்துறையினருக்கும், வலைப்பதிவாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியினை தொடர்ந்து இலங்கை பதிவாளர்கள் அனைவரும் பெரும் உட்சாகத்துடன் காணப்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இலங்கை பதிவர்களின் முதலாவது சந்திப்பின் பின்னர் இவ்வாறானதொரு ஒழுங்குபடுத்தல் மூலம் பல வலைப்பதிவாளர்களும் ஒன்றுகூட நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஊடகத்துறையினருக்கும், வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் ஒரு நட்புறவு ஏற்பவது நல்லதொரு விடயமே. இதன்மூலம் வலைப்பதிவாளர்களின் பல வலைப்பதிவுகள் அச்சேற்றம்பெறவும், ஒலிவடிவம் பெறவும் ஏதுவாக இருக்கும்.

பல இலட்சம் மருமக்களின் மாமா

இலங்கை வானொலியில் “வானொலிமாமா” என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி, தனது மென்மையான குழந்தைகளுக்கே உரிய பேச்சுக்களால் பல இலட்சம் குழந்தைகளின் அன்பு மாமாவாக பிரவாகம் எடுத்திருந்த ச.சரவணமுத்து அவர்கள் கடந்த 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் தனது 94ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இலங்கை வானொலியின் பிதாமகர்களில் ஒருவராக இவரை கொள்ளமுடியும். நிகழ்ச்சிவழங்கல் மட்டும் இன்றி நாடக நடிப்பு மற்றும் நாடக தயாரிப்புக்களிலும் இவர் ஈடுபாடுடையவராக இருந்ததாக அறியமுடிகின்றது.

இலங்கையர்கோனின் “விதானையார் வீடு” என்ற இலங்கையில் புகழ்பெற்ற நாடகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடன் முக்கிமான பாத்திரம் ஒன்றில் இவர் நடித்துள்ளதாக தகவல்கள் உண்டு.
வானொலி மாமா என்ற அடைமொழியுடன் இவர் ஆரம்பித்த அந்த சிறுவர் நிகழ்ச்சி காலம்காலமாக மற்றய அறிவிப்பாளர்களால் இந்தப்பெயருடனே இவரது பாணியிலேயே நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்படத்தக்கது.
(படம் - நன்றி கானாபிரபா)

மனிதம் செத்துப்போன நாட்டில்…
கொழும்பில் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்கள் மக்கள் பரவலாகவும், மிகச்செறிவாகவும் வாழும் பகுதிகள் ஆகும், இந்த பகுதிகளில் பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்ந்துவருகின்றனர்.
கோல்பேஸ் என அழைக்கப்படும் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை தற்போது மூடப்பட்டுள்ளதால், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி கடற்கரையில் காதலர்கள் உட்பட இளைஞர்கள், குடும்பத்தினர், சிறுவர்கள் என பலர் கூடுவது வழக்கம்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில், மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவனை சிங்கள இனத்தவர்கள் (ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட) கடலுக்குள் தள்ளி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்றும் அது காட்சியாக பதிவாகியுள்ளதும் எனக்கு நீங்கள் நினைப்பதுபோல அதிர்ச்சியை தரவில்லை. ஏனென்றால் மனிதம் எப்போதோ செத்துப்போன ஒரு நாட்டில இப்படி எல்லாம் நடப்பது ஒன்றும் அதிசயமோ அல்லது புதிதாக ஒரு அதிர்ச்சியையோ தந்துவிடவில்லையே.
என் கோபம் என்னவெனில் பலர் கண்முன்னால் நடந்திருக்கும் இந்த மிருகத்தனத்தை அப்போதே தட்டிக்கேட்டு தடுத்துநிறுத்த ஒரு மனிதாபிமானம் உள்ள மனிதனும் இல்லை என்பதுதான்.

பிடித்த ஒரு கேள்வி – பதில்

ஏன் ஒரு எழுத்தாளனின் படைப்புக்களை சக படைப்பாளிகள் ஒப்புக்கொள்வதில்லை? (எழுத்தாளனுக்கு பதில் பதிவர்கள் என்றும் போடலாம்)

பிரஞ்சு தேசத்தைச்சேர்ந்த எழுத்தாளர் அன்ரே ழீட் தனது படைப்புக்கள் குறித்து இப்படி ஒருமுறை கூறியிருந்தார்.
“பல இலட்சம் பேர்களில் சில ஆயிரம்பேர்கள் ழீட் எழுதியதில் சில நூல்களையாவது படித்திருப்பார்கள். இந்த சில அயிரம்பேர்களில் சில நூறு ஆசாமிகளாவது ழீட் சொல்வதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கின்றது என்று நினைப்பார்கள். அந்த நூறு ஆசாமிகளில் ஒருவர் நிச்சமாக ழீட் சொல்வது சரி என்று எண்ணுவார். அட..அந்த ஒருவர் ழீட் தான்”

அப்படி என்றால் சக எழுத்தாளர்கள்????

Darkness at dawn (குறும்படம்)
போரின் தாக்கத்தினை மெல்லிதான ஒரு உணர்வு ஓட்டத்துடன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லப்புரியவைக்கும் ஒரு இலங்கை குறும்படம்.
கொடிய யுத்தம் உலகம் முழுவதிலும் எத்தனைபேரை ஊனமுற்றவர்களாக்கியிருக்கும்? அதிலும் எத்தனை சிறுவர்களை???

எப்போ வருவாரோ???
நமக்கும் சங்கீதம் என்றால் அலாதிபிரியம். கர்நாடாக சங்கீதத்தில் மொழி தெரியாத உருப்படிகளைவிட செந்தமிழால் இசை மணம்பரப்பிய எம்.எஸ்.சும்பு லட்சுமியின் காற்றினிலே வரும்கீதம், குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ஆகிய பாடல்களை கட்டு தன்னிலை மறந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.
அதேபோல எனக்கு பிடித்த பாடல் “எப்போ வருவாரோ எந்தன் கலி தீர”
என்ற பாடல். ஆனால் இப்போது என்னமோ, அந்தப்பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன். கலிதீர்க்க வருவார் என்ற ஒரு நம்பிக்கையுடன்.
செஞ்சுறுட்டி இராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்த இந்தப்பாடலை கோபலகிருஷ்ண பாரதியார் அவர்கள் இயற்றியிருக்கின்றார்கள்.

ஒரு சர்தாஜி ஜோக்.
சர்தாஜி ஒருநாள் நூலகத்திற்கு சென்றிருந்தார். அங்கே நெப்போலியனின் படமும் போட்டு..”முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்ற அவரது வசனமும் போடப்பட்டிருந்தது. அதை வாசித்த சர்தாஜி, நெப்போலியனின் படத்தைப்பார்த்து
இப்ப நீங்கள் இதைச்சொல்லி என்ன பிரியோசனம்.? அகராதியை வாங்க முதல் நீங்கள் அதை கண்டிப்பாக சரிபார்த்திருக்கவேண்டும். வாங்கிவிட்டு குறைகூறக்கூடாது என்றார்.

LinkWithin

Related Posts with Thumbnails