Friday, January 7, 2011

மண்ணின் பாடல்கள்.

ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், மேற்கே வடக்கு பார்த்தாலும் கிழக்கு எனும் வெளிச்சத்தில் பார்த்தல், வானத்தைப்பார்த்து மானத்தை இழக்காமை, வெளி மயக்கங்களால், உள் ஒளியை மறக்காத தெளிவு.
இத்தனை மன ஆரோக்கியம் மிக்க ஒருவருக்கு மண்
ணின் பாட்டு சுவையாய், ஒளியாய், ஊறாய், ஓசையாய், நாற்றமாய் வகைப்பட்டுக் கேட்கும்.

இக்கேட்டலில் பிறக்கும் ஞானம் பிறருக்கு தா
னமாய் கிடைக்கும். தமிழ் மனம் கனிய தனிக்குணம் துணியக்கிடைக்கும் ஞானதானத்தால் ஒரு இனம் மட்டும் அல்லாது உலகின் பல இனங்களும் பயனடையும். இப்பயன்பாட்டினை – பண் பாட்டின் வழி கிடைத்த வாழ்வியல் உண்மைகளை பிறநாட்டவர்கள் வணக்கம் செய்து வரவேற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

ஏட்டுக்கல்வி பெரும்பாலும் எட்டாத நாட்டு மக்களிடையே, எழுதாக்கவிதைகளாக தொன்று தொட்டு வழங்கிவரும் பாடல்கள், கிராமியப்பாடல்கள், நாட்டார்பாடல்கள், பாமரர்படல்கள், என பல்வேறு பெயர்களில் நாம் தமிழில் அழைத்துவருகின்றோம். ஆ
னால் இவ்வாறான பாடல்
வகைகள் எல்லா மொழிகளிலும் உண்டு.
பாடல்கள் மட்டும் இன்றி கதைகள், பழமொழிகள், முதுமக்கள் பெருமைகள் என்பனவும் உள்ளன.
இவை எழுத்தறிவு குறைந்த பாமர மக்களால் தொன்று தொட்டு பாடப்பட்டு வந்ததாக சொன்னாலும்கூட, இவற்றின் கருத்தாழங்கள், இசையுடன் ஒத்த தன்மைகள் என்பன இன்றும் வியப்பையே உண்டாக்கின்றன.
இதன் காரணத்தாலேயே இவற்றையும் ஒரு இலக்கிய வடிவமாக இந்த நாகரிக உலகமும், நாகரிக இலக்கியவாதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கிராமியப்பாடல்களின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பாட்டப்பாடுவது மனிதனது இயல்பாகவே தோ
ன்றுகின்றது. பாரதியார் பாடியதுபோல இயற்கையிலே

“காளப் பறவை கலகலவெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத்திடையே உதிர்க்கும் இசையிலும்”

ஆதி மனிதன் நெஞ்சம் பறிகொடுத்திருப்பான். இயற்கையில் உண்டாகும் ஒத்திசை பொருந்திய ஒலிகளினால் அவன் உள்ளம் தூண்டப்பெற்று தானும் தன் குரலொலியினை எழுப்பியிருப்பான். மொழி அவனுக்
கு துணை வந்தபோது, முதற்பாடல் தோன்றியிருக்கும். இந்தப்பாட்டிலே இன்பம் கண்டவன் மேலும் மேலும் பாடி மகிழ்ந்திருப்பான். சமுகத்தின் ஒரு கட்டமாக அவன் இருந்ததனால் ஒருவனை பின்பற்றி பலரும் பாடியிருப்பர். இந்த நிலையிலேயே பாடலோடு ஆடலையும் இணைத்தி
ருப்பர். ஒருவர் ஒரு அடியைப்பாட, மற்றவர் மற்ற அடியை பாடவும், ஒருவர் வினாவாகப்பாட, மற்றவர் பதிலாக பாடியும் இப்படியே பல் வகைகளாக கிராமியப்பாடல்கள் தோன்றியிருக்கவேண்டும்.

கிராமியப்பாடல்களின் தாக்கம், தமிழ் செய்யுள் இலக்கியங்களிலும் தம் செல்வாக்கை பெற்றிருப்பதை பல இலக்கியங்களை எடுத்து நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். நாடுபாடி, அரசுபாடி, மக்களின் வாழ்க்கை முறை பற்றி, செம்மொழிப்புலவன் ஒருவன் பாட வருகையில் அவன் தொடவேண்டிய இடமாக
மண்ணின்பாடல்கள் இருந்தன.

தாலாட்டு, ஒப்பாரி, கும்மி, குழந்தை வேடிக்கை,
ஊஞ்சல், கோலாட்டம், விளையாட்டு, தொழில், அருவி
வெட்டு, கடவுள் வழிபாடு, சடங்குகள் என மண்ணின்பாடல்கள் பல வடிவங்களில் அன்றைய கிராமிய வாழ்க்கையுடன் ஒன்றிப்பிணைந்து இருந்தன. மக்களின் வாழ்வியலுடன் ஒன்றி, அவர்களுடனேயே உணர்வோடு இருந்ததனால் மண்ணின்பாடல்கள் செய்யுள் பாடல்களைவிட உணர்வாக பிரகாசிக்கின்றன.

சரி.. கிடைத்த வரையில் அந்த மண்ணின் பாடல்கள் சிலவற்றை பார்ப்போமே..

தாலாட்டு.

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கண்ணு மணிஉறங்கு கானகத்து வண்டுறங்கு
பொன்னு மணிஉறங்கு பூமரத்து வண்டுறங்கு

வாசலிலே வன்னிமரம் வம்முசங்க ராசகுலம்
ராசகுலம் பெத்தெடுத்த ரத்தினமே கண்ணுறங்கு

பச்சை இலுப்பைவெட்டி பால்வடியும் தொட்டில்கட்டி
தொட்டிக்குமேல துணையிருப்பா மாரியம்மா

முத்திடிச்சு மாகொளிச்சு முத்தமெல்லாம் கோலமிட்டு
கோலமிட்ட திண்ணையிலே கோவலரே நித்திரைபோ.

கும்மி

தன்னானே நாதினம் தன்னானே –தன
தன்னானே நாதினம் தன்னானே

தன்னானே என்றுமே சொல்லுங்கடி – ஒங்க
நாவுக்கு சக்கர நான்தாறேன்
தில்லாலே என்று சொல்லுங்கடி
திங்க சக்கரை கொஞ்சம் நான்தாரேன்.

கடகடன்னு மழை பேய
கம்பளி தண்ணி அலைமோத
காரியகாரராம் நம்மய்யா கங்காணி
கடுக்கன் மின்னலை பாருங்கடி.

குதிர வாரதப் பாருங்கடி –ஐயா
குவிஞ்சு வாரதப் பாருங்கடி
குதிரை மேலதான் நம்மையா கங்காணி
குனிஞ்சு சம்பளம் கேளுங்கடி

நன்னயமாகவே கொண்டைகட்டி
நாகூரு லேஞ்சிய மேலேகட்டி
கண்ணியமாகவே வாராரு –ஐயா
காசு பணமள்ளித் தாராரு.

ஊஞ்சல்.
கடற்கரையில் மணற்பரப்பி நடக்க முடியாது
கானலிலும் வெய்யிலிலும் ஓட முடியாது

கச்சாயில் புளியிலே ஊஞ்சலும் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமொன் றாடி

காலோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்
காக்கொத்து மச்சாளை பெண்டென் றிருந்தேன்

ஓடோடி புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்
ஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்

கண்டபிணி கொண்டவலி கால்மாறிட ஓட
கண்ட சிவ ராத்திரியை காதலுடன் நோற்பாய்

ஏறுமயில் ஏறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை தெரியுமடி தோழி

விளையாட வெகுதூரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலை தணியுமடி தோழி.

வேடிக்கை பாடல்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
அம்மியடியில் கும்மியடித்தேன் சும்மாவா இருந்தேன்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
ஆட்டுக்குட்டிக்கு ஆறுதல் சொல்லினேன் சும்மாவா இருந்தேன்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
கோழி முட்டையில் மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன்.

ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
பாம்புக் குட்டிக்கு பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன்.

காதல் பாட்டு.

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,
நல்லபாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே

நல்லபாம்பு வேடங்கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்குருவி வேடம்கொண்டு உயரப்பறந்துடுவேன்

ஊர் குருவி வேடங்கொண்டு உயரப்பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்

செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கவந்தால்
பூமியைக் கீறியெல்லோ புல்லாய் முளைத்துடுவேன்

பூமியை கீறியெல்லோ புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை

காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆலமரத்தடியில் அரளிச்செடி தானாவேன்

ஆலமரமுறங்க அடிமரத்தில் வண்டுறங்க
உன்மடியில் நானுறங்க என்னவரம் பெற்றேனடி.

அத்திமரம் நானாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
நந்திவரும் மச்சானுக்கு முத்துச்சரம் நானாவேன்.

தொழிற்பாடல்.

ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்
அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்
சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்
செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்
சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
கண்ணான எங்கள் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காவும் ஐயனாரே

மட்டுருக் காலை அருவாளு மடித்து
மாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி
வெட்டும் பிடியைச் சிறக்கவே போட்டு
வெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு
வளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை
நாவூறு வாராமற் காரும் ஐயனாரே.

ஒப்பாரி.

பொன்னான மேனியில – ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன!
தங்கத்திருமேனியில – ஒரு
தகாதநோய் வந்ததென்ன!

ஊருப் பரிகாரி – ஒரு
உள்ளகதை சொல்லவில்லை!
நாட்டு பரிகாரி – ஒரு
நல்லகதை சொன்னதில்லை!

மலையில் மருந்தெடுத்து – நாங்கள்
மாமலையில் தேனனெடுத்து
இஞ்சி அரைத்துமெல்லோ – நாங்கள்
ஏராதி ஊட்டிநின்றோம்.

குளிகை கரைக்க முன்னம் - உன்
குணமோ திரும்பியது!
மருந்து கரைக்கு முன்னம் -உன்
மனமோ திரும்பியது

அரைத்த மருந்தோ - இங்கே
அம்மிபாழ் போகுதெணை!
உரைத்த மருந்தோ - இங்கே
உருக்குலைந்து போகுதெணை

பொன்னும் அழிவாச்சே – உன்
பொன்னுயிரும் தீங்காச்சே!
காசும் அழிவாச்சே – உன்
கனத்த உயிர் தீங்காச்சே.

உசாத்துணை நூல்கள் - நாட்டார் பாடல்கள், தமிழர் நாட்டுப்பாடல்கள்.

Thursday, January 6, 2011

இதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்

ஏ.ஆர்.ரஹ்மான்.

1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள்.
தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான சிம்மாசனத்தில் இளையராஜா என்ற இசை வித்தைக்காரன் இசையால் செங்கோலாட்சி, இசை என்றால் ராஜாதான் என்று லகித்து நின்ற காலங்கள்.
இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது அப்போது, யாழ்ப்பாணம் புனித சம்பந்தரிசியார் கல்லூரியில் மாபெரும் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.
எனவே எமது கல்லூரியால் நாமும் அழைத்துச்செல்லப்பட்டோம். கண்காட்சியைப்பார்த்துவிட்டு, பிற்பகல் நேரம் ஒன்றில், சம்பந்தரிசியார் கல்லூரி பிரதான சாலைவழியாக வெளியேறிக்கொண்டிருக்கின்றபோது, அந்த “ சின்னச் சின்ன ஆசை” பாடல் காதுகளில் ஒலித்து ஒரு கணம் நிற்கச்செய்தது.
அதில் வரும் அந்த ஏ.ஆர்.ஆர்.இன் ஹம்மிங்கில் சகலதும் மறந்து ஒருகணம் நின்றேன், பின்னர் காதல் “ரோஜாவே எங்கே நீயெங்கே” என்ற பாடலையும் கேட்டுவிட்டு, பக்கத்தில் நின்ற நண்பனிடம், எதுவுமே பேசாமல் புருவங்களில் வியப்பைக்காட்டியபடியே அவனை பார்த்துக்கொண்டேன்.
மச்சான் ஆரோ..ஒரு புதிய மியூசிக் டிரக்டர். ஏதோ கொம்பியூ+ட்டர் இசை அமைப்பாம். என்று என்னைவிட தனக்கு தெரிந்த விளக்கங்களை எனக்கு தந்தான்.

மற்றும் ஒரு நண்பனின் தந்தையார், அப்போது பாடல்கள் பதிவிட்டு “கெசெட்கள்” விற்பவர், அவரிடம் நேரேயே போய், காசு நாளைக்கு தருகின்றோம் மாமா என்று அன்பு வார்த்தைபேசிவிட்டு, கெசெட்டை கொண்டுபோய்…
தெரியும்தானே அந்த நாட்களில் எங்கள் ஊரில் மின்சாரம் இல்லை, ஆனால் டைனமோவை சுற்றி அதில் பிறப்பாகும் டி.சி. கரண்ட் மூலம் பாடல்கள் கேட்போம்.
அப்படித்தான் கேட்டேன் ரோஜா பாடல்கள் முழுவதையும்.

அன்று இரவு தூங்கும்வேளையில், ரஹ்மானை ஏற்க மனம் மறுதலித்துக்கொண்டே இருந்தது. அந்த அளவுக்கு இளையராஜாமேல் மோகமாக இருந்தேன்.
ஆனால் அந்த மறுதலிப்புக்கும், அசரவைத்த இசை என்றாலும், வந்த இடம் வேறு என்ற கோணத்தாலும் மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது.
பன்னர் படிப்படியாக இருதயத்தில் ராஜாவுடன் ரஹ்மானுக்கும் உரிய இடத்தை என்னை அறியாமல் என் மனமே வழங்கிவிட்டது மாயம்தான்.

விருதுகளின் கதைகளை மீண்டும் சொல்லத்தேவையில்லை, ஆனால் உண்மையான ஒரு தமிழனாகவும், ஆனால் சாதனைகள் மேல் ஒரு செருக்கும் இல்லாமல்
கடவுள் நம்பிக்கை உள்ள அவர், “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று இறைவனின் முழு சரணாகதியாக இருப்பதும். அவரது இசையை மட்டும் அன்றி அவரைப்பற்றியும் மனங்களை பெருமதிம் கொள்ள வைக்கின்றது.

சரி… ரஹ்மானின் பிறந்ததினத்தை ஒரு புதிய அவரது இசையுடன் கொண்டாடலாமே?
கிளிக் பண்ணி குவாலிட்டியான ரஹ்மானின் புதிய இசையை தரவிறக்கலாமே!

கபில்தேவ்.

கிரிக்கட்டின் இராட்சதர்களிடமிருந்து (மேற்கிந்தியத்தீவுகள்), அப்போது அவர்களுக்கு இதுதான் சிறப்பான அடைமொழி (இப்போது!!!) இந்தியா உலகக்கோப்பையினை தட்டிப்பறித்திருந்தது (1983). கபில்தேவின் கைகளில் உலகக்கோப்பை கண்டு உலகம் ஒருமுறை எழுந்து கரகோசமிட்டது.
இதை தொடர்ந்து இந்தியாவில் கிரிக்கட் மீதான அலாதி பிரியம், கிர்…என்று ஏறிக்கொண்டிருந்தது. அதன் தாக்கம் யாழ்ப்பாணத்திலும் தெரிந்தது.
1986 அந்த ஆண்டில்த்தான் எனக்கு கிரிக்கட் என்றால் என்ன, ஆ… இந்தியா வெல்லவேண்டும், இந்திய வீரர்கள் தான் எம் நாயகர்கள், இப்படி எல்லாம் சுற்றத்தைக்கண்டு விழங்கிக்கொண்டு இடைக்கிடை காட்டப்படும் ஒளிபரப்புக்களை அப்பப்போ பார்த்துவந்த நாட்கள்.
அப்போது கிரிக்கட் என்றால் எனக்கு தெரிந்த பெயர்கள் சுனில் ஹவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீ காந்த், விவிலியன்ட் ரிச்சர்ட், இம்ரன்ஹான் போன்ற பெயர்கள் மட்டும்தான்.
கபில்தேவை நான் முதன் முதலாக அறிந்துகொண்டது அப்போது நாங்கள் விரும்பி படிக்கும் சிறுவர் மலரான “கோகுலம”; புத்தகத்தில்த்தான். அதில் கபில் பற்றி படித்து, மனம் ஹரியானாவரை இழுபட்டுக்கொண்டது.
பின்னர் வீட்டில் ஏற்கனவே இரண்டு கிரிக்கட் பைத்தியங்கள் இருந்ததால், ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் மூலம், கபில்மேல் அபிலாசைகள் கூடிக்கொண்டிருந்தன.

பின்னர் 1987, அவரின் ஊர்க்காரர்களே துவக்குகளுடன் எங்கள் பக்கத்தில், சப்பாத்திகளை சப்பிக்கொண்டு நின்றதால், பல இந்திய கிரிக்கட் ஆட்டங்களை பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த அருமையான பீரியட்டில்த்தான், கபில் என் காதலன் ஆனார்.
இன்றுவரை கபிலில் இருந்த அந்த லகிப்பு, இம்ரான்ஹான் மேல் இருந்த ஈர்ப்பு, பின்னர் சச்சினை தவிர எவர்மேலும் இல்லாதது ஆச்சரியமாகவே உள்ளது.
இலங்கையுடன் அவர் பந்துவீச்சில் சாதனை புரிந்தபோது நேரடியாக கண்டு எவ்வளவு ஆனந்தப்பட்டேனோ, அதேபோல அந்த நல்ல மனிதனை வேண்டுமென்றே சிக்கலுக்குள் மாட்டிவிட்டு, அவர் பி.பி.சி பேட்டியில் கவலையின் உச்சத்தில் அழுததை இன்றுவரை என் மனம் ரணமாகவே உணர்கின்றது.
இந்தியாவை கௌரவித்து, இந்தியாவை உலகம் திரும்பிப்பார்க்க வைத்த நல்ல மனிதனுக்கு, இந்தியர்கள் கொடுத்த சிறந்த பரிசு அது என்பது இப்போதும் நான் வேதனைப்படும் சம்பவம்.
இன்று கொடிகட்டி பறக்கும் ஐ.பி.எல். ஐடியாகூட கபிலுடையதுதான். ஆனால் குறுக்கு வழியில் வந்தவர்களுக்கே இப்போது காலம் கைகொடுத்துவருகின்றது.

எது எப்படியோ என்போன்று பல மனங்களை வென்று நிலைத்து நிற்கின்றார் கபில்தேவ். இதை எவராலும் அகற்றமுடியாது. இதுவே உண்மையான வெற்றி.

ஸ்ரில் ஐ பீல் லவ் வித் யூ கபில்…. (இது ஹரியானா வரை கேட்குமா?)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரியானாவின் புயலே…

கலீல் ஜிப்ரான்.

இது..1994 ஆம் ஆண்டு காலங்கள். சாதாரண தரப்பரீட்சை எடுத்துவிட்டு, பரீட்சை பெறுபேறுகள் வரும்வரை, விளையாடிக்கொண்டு திரிந்த காலங்கள்.
இடைக்கிடை ஏதாவது வாசிக்கலாமே என்று அந்தநேரத்தில் ஆங்காங்கே இருந்த படிப்பகங்களில் ஒதுங்கும் வேளைகளில் (மழைகாலங்களில் அல்ல)
எல்லாமே படு சீரியஸான கம்முனீஸ புத்தகங்களாக இருக்கும், வேண்டாம்டா சாமி, ஏதாவது வித்தியாசமாக இருக்கா என்று தேடும்போது “தீர்க்கதரிசி – கலீல் ஜிப்ரான்” என்ற புத்தகம் கண்ணில் பட்டது.
அங்கிருக்கும் பொறுப்பான அண்ணையிடம் அனுமதி பெற்று வீட்டில் வந்து, இலாவகமாக கட்டிலில் படுத்திருந்துகொண்டு வாசிக்கத்தொடங்கினேன்.
நான் நினைக்கின்றேன், நான் படித்த முதலாவது பெரிய மொழிபெயர்ப்பு நூல் அதுவாகத்தான் இருக்கும்.
கலீல் ஜிப்ரான் என்ற பெயரை கண்டு, இவர் இந்தியராக இருப்பார், அல்லது அரேபியராக இருப்பார் என்றே முதலில் எண்ணினேன். புத்தகம் முடியும்வரை முன்னுரையை பார்க்காத படியால் படித்துமுடிந்தவுடன்தான் அவர் ஒரு அமெரிக்கர் என்பது புரிந்தது. நம்புவதற்கு கொஞ்சம் மனம் அப்போது மறுத்தது.

இன்றும்கூட மனம் சஞ்சலப்படும்வேளைகளில் ஜீப்ரானின் வரிகள் ஒரு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருக்கும். பின்னர் கொஞ்ச நாட்கள் கலீல் ஜிப்ரானை தேடித்தேடி வாசித்தேன். தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் பெரிதாக கிடைக்காத காரணத்தால் வெறும் நான்கு நூல்களே கிடைத்தன. முறிந்த சிறகுகள், ஞானிகளின் தோட்டம் என்பன நினைவில் உள்ளன.

நல்லவேளை ஞாபகம் வந்தது. ஜிப்ரானின் பிறநூல்களை இப்பொழுதாவது தேடிப்படிக்கவேண்டும்.
ஜிப்ரானும் இதே நாளில்த்தான் பிறந்தார்.

Wednesday, January 5, 2011

வேற்றுமொழிக்கதைகள்>>>>மேடை நாடகம்.

ரு பெருந்திருவிழா நடந்து கலைந்துவிட்ட நிலம்போல திமோத்தியின் மனம் வெறித்துப்போய்க்கிடந்தது. இன்றைய பொழுதுகளின் நடிப்பு கலைகளை இவர்கள் தெளிந்துதான் நடிக்கின்றார்களா? என்னைப்போல் எத்தனை திறமையானவர்கள் வெளியில் நிற்கின்றோமே? காலமும், நேரமும் எங்கள் பக்கம் திரும்பாமல், அரைகுறைத்திறமைகள் பக்கமே சாருகின்றனவே இது ஏன்?

ஒருவனின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்காமை என்பது, வாழ்வின் எத்தனை கொடிய துயரம் என்பதை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக திமோத்தி அனுபவித்துவருகின்றான். ஒரு நடிப்பு திறமை உடையவன் மட்டும் அன்றி, நாடக கலை பற்றிய அறிவினையும் முழுமையாக கற்றிருந்தான். கிரேக்க நாடகங்களில் இருந்து, நவீன நாடகங்கள்வரை அத்தனை தகவல்களையும் விரல்நுனிகளில் பாதுகாத்து வைத்திருக்கின்றான்.

ஒரு நாடகத்தின் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடித்துவிடவேண்டும் என்ற துடிப்புடன், மோஸ்கோ நகரமெங்கும் எத்தனை நாடக அரங்குகளில் நேரம்காலம் பார்க்காமல் அவன் தவங்கிடந்திருக்கின்றான். எத்தனை பிரபல நடிகர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏதாவது ஒரு நடிப்பு சந்தர்ப்பத்திற்காக ஒரு தவம்போல் காத்திருந்திருக்கின்றான். ஆனால் இத்தனைபேரும் அவன் திறமைகளை கண்டு ஒருமுறையாவது திடுக்கிடாமல் இருந்தது கிடையாது. தனக்கான அங்கீகாரம் கேட்டுச்சென்றவர்கள் ஒவ்வொருவரிடமும் தன் திறமைகளை மடைபோல திறந்துவிட்டு வியக்கப்பண்ணியிருக்கின்றான்.
ஆனால் அவனைக்கண்டு வியந்தவர்கள் அத்தனைபேருக்கும் ஏன் அவனது திறமைகளை அங்கீகரிக்க எண்ணம் வரவில்லை என்பது பெரும் ஆச்சரியமே!

அவனை புறக்கணித்தவர்கள் சிலர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்கு சந்தர்ப்பம் தருவதாக சொல்லி அவனை அலைக்கழித்து ஏமாற்றியவர்கள் நிறையப்பேர். தன் திறமைகளுக்கான அங்கீகாரத்தை வழங்காதவர்கள் மீது அவனுக்கு எப்போதும் கோபம் வருவதில்லை. காரணம் என்றாவது திறமைகள் நிரூபிக்கப்பட ஏதாவது ஒரு வாசல் வெளிச்சம் தெரியத்தான் போகின்றது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருந்தான் அவன். ஆனால் தனக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தவர்கள்மீதுதான் அவன் கடும் கோபம் கொண்டிருந்தான்.
இருந்தாலும், அவனின் இயலாமை, சில வேளைகளில் தலைதூக்கிவிடும் சுயவெறுப்புக்களால் இந்தக்கோபங்கள் அர்த்தமற்றதாகிவிடுவது அதிசயமில்லையே?

இராக்காலங்கள் அவனுக்கு சுகமானது. ஏனென்றால் இராக்காலங்களில் வரும் கனாக்களில் அவன் எத்தனை வேடங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கின்றான்.
“டோல்ஹவுஸ”; நாடகத்தில், நோராவின் குடும்ப நண்பனாக, “சோர்க் சேர்க்கிள்” நாடகத்தின் வில்லனாக, “வன்ஸ போனர் டைம் இன் ரஷ்யா” நாடகத்தில் மீரோத்தாக என அத்தனை நாடகங்களிலும் கனவு என்றாலும் அர்ப்பணிப்புடன் நடித்து மனம் மகிழ்ந்திருக்கின்றான் திமோத்தி.

கனவுகள் தவிர்ந்து திமோத்தியின் நடிப்பை அங்கீகரித்து, அவனது நடிப்பின் முதல் இரசிகையாக இருப்பவள் கிளேரா. திமோத்தியை விட அவனின் அதி அற்புத நடிப்பு திறமைமேல் அதீத நம்பிக்கை உடையவள் கிளேரா. வெளிப்படையாகவே திமோத்தியை காதலிப்பவள். ஆனால் தன் முதல் காதலி, தன் உயிர் அத்தனையும் நடிப்புத்தான், தான் ஒரு நடிகன் என்பதை இந்த மோஸ்கோ நகருக்கு மட்டும் அன்றி கிளேராவுக்கும் நிரூபித்து காட்டிவிட்டே கிளேராவை ஏற்றுக்கொள்வது என்ற உறுதியுடன் இருந்தான் திமோத்தி.

நாளுக்கு நாள், திமோத்தியின் நடிப்பு ஆசை, வெறியாகிக்கொண்டு செல்வதையும்,
ஒவ்வொரு தோல்வியும் அவன் மனத்தை பெருமளவில் தாக்குவதையும் கிளேரா கவனிக்கத்தவறவில்லை.

சில நாட்களின் பின்னர் மோஸ்கோ நகருக்கு நாடகம் போட, ஒரு பிரஞ்சு நாடக குழுவொன்று வந்திருப்பதை அறிகின்றாள் கிளேரா. நேரடியாகவே அங்கு சென்று அந்த நாடகக்குழுவின் தலைவரிடம் திமோத்தி பற்றி கூறுகின்றாள். அவன் திறமைகளுக்கு நீங்களாவது ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கதறுகின்றாள்.

இதோ… திமோத்தி அந்தக்குழுவினரால் அழைக்கப்படுகின்றான். அவன் திறமைகள் ஒத்திகை பார்க்கப்படுகின்றது. அவனுக்குள் இருந்து வெளிப்பட்ட நடிப்பு ஒளியை கண்டு அவர்கள் கண்கள் கூசிக்கொண்டன. ஏதோ ஒரு பாத்திரத்திற்காக அழைக்கப்பட்ட அவன் அந்த நாடகத்தின் கதாநாயகன் ஆகின்றான்.
“பாரிஸ் லவ்” என்ற அந்த நாடகத்தில் சாம்ஷன் என்ற கதாநாயகப் பாத்திரம் திமோத்திக்கு.

சாம்ஷன் - பிரைனா, இருவரும் காதலர்கள், சாம்ஷன் ஒரு இருதயநோயாளி, நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த அவன் சில சூழ்ச்சிகளால் ஏழையாக்கப்படுகின்றான். ஆனால் மீண்டும் தன் முன்னையோரின், வரலாறு அழிக்கப்படாது இருக்க ஆக்ரோசமாக போரடுகின்றான். ஒரு இக்கட்டு நிலையில் அவன் தப்புவதற்காக பிரைனா தியாகம் செய்கின்றான். இறுதியில் தன் இலட்சியத்தை அடைந்து, சாதித்துவிட்ட உட்சாகத்திலும், தனது காதலியின் தியாகத்தின் சோகத்திலும் இருதய நோய் உச்சமாக சரிந்து இறந்துவிடுகின்றான்.

இதோ…நாடகம் தொடங்க இன்னும் கொஞ்சநேரம்தான் இருக்கின்றது. வேடமிடும் அறையில் இருந்து எழுந்துவந்து அரங்கின் மறைவாக நின்று மண்டபம் நிறைந்த கூட்டத்தை பார்த்து கண்ணீர் சொரிகின்றான் திமோத்தி.
அவன் கண்கள் கிளேராவை தேடுகின்றன. அவள் அங்கே இல்லை. வாழ்வின் தோல்விகளில் தன்னை தோழில் ஏந்திய அவள், வெற்றியின் பொழுதுகளில் பக்கத்தில் இல்லையே என ஏங்கினான்.
இதோ அரங்க பார்வையாளர்களின் பின்புறமாக இருந்து, காவலர்கள் புடைசூழ விலங்கிட்டு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு, முன் இருக்கையில் அமரவைக்கப்படுகின்றாள் கிளேரா.
புதிராகவும், மனதில் பாரத்துடனும் மறைவில் இருந்து பார்த்து அதிர்ச்சியடைகின்றான் திமோத்தி.
நாடகக்குழுவின் தலைவன் தவிர்க்கமுடியாத வகையில் ஒரு கொலை செய்ய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், என்ன செய்வது என்று அவன் தவித்தநேரத்தில், கிளேரா வந்து திமோத்திக்காக சந்தர்ப்பம் கேட்டதும், அந்த சந்தர்ப்பத்தை நாடகக்குழுத்தலைவன் இப்படி சந்தர்ப்பம் ஆக்கியமை பற்றி பிற கலைஞர்களால் திமோத்திக்கு புரியவைக்கப்படுகின்றது.

இதோ…திரைவிலகுகின்றது…. காட்சியில் திமோத்தி…புகுந்து அசத்திக்கொண்டிருந்தான். முகபாவங்களாலும், உடல் இலாவகங்களாலும், குரல் ஏற்றத்தாழ்வுகளாலும், பார்வையாளர்களை இருக்கைகளின் நுனிக்கு கொண்டுவந்தான்.
இதோ நாடகத்தின் இறுதிக்கட்டம்…அரங்கமே..பரபரப்பாக..திமோத்தியில் இலகித்துக்கொண்டிருந்தது. கிளேரா ஆழமாக திமோத்தியை கவனித்தாள்…

அவன் முகபாவத்தில் அப்படி ஒரு…அற்புதம், அவள் இதுவரை பார்த்திராத மாற்றம். முகத்தின் இரசப்பிடிப்பில் அத்தனை தீவிரம்.

“கிளேரா…நடிப்பு ஒரு தவம்… ஒரு பாத்திரத்தின் நான் என்பதைவிட பாத்திரமே நானாகி விடுவது எத்தனை பேரின்பம் தெரியுமா? அதை உணர்ந்தவர்களை நான் காணவில்லை. ஆனால் நடிப்பின் இத்தனை நாள் தவம் எனக்கு அதனை தந்துள்ளது. அது விபரிக்கமுடியாத உணர்வு. கதையில் அந்த பாத்திரம் என்ன எழுதப்பட்டதோ அவற்றை முறையாக இயல்பாக அதே இயற்கையுடன், துளி நடிப்பு இன்றி, மிக இயல்பாக… அதுவே ஆகி..அதாகவே இலகிப்பது..அதுவே நடிப்பு. என்று அதிசயத்துடன் அவன் ஒருநாள் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

புரிந்துகொண்டாள்…இப்போது அங்கே திமோத்தி.. இல்லை. முற்றிலுமாக சாம்ஷன்தான். கதையின் போக்கு அவளுக்கு தெரிந்திருந்தபடியாலும், நாடகத்தின் இறுதிக்கட்டங்கள் நெருங்கிவிட்டிருந்ததாலும்; பெரும் கலவரமடைந்தாள்.

இதோ இறுதி…சாம்ஷன் இறக்கும் தருணம்…
அரங்கமே அமைதியாக கண்களில் கண்ணீருடன், திமோத்தியை உற்று நோக்கிக்கொண்டிருந்தது. மேடையை நோக்கி ஓலமிட்டபடியே… ஓட எத்தனிக்கின்றாள் கிளேரா. காவலர்கள் தடுகின்றனர்.
இதோ நாடகத்தில் சாம்ஷன், சாதித்த மகிழ்ச்சியையும், திடீர் என்று தன் காதலியின் தியாகத்தையும் முகபாவத்தில் காட்டி, இருதயநோவால் துவண்டு விழும் காட்சி…
திமோத்தி…அப்படியே சரிகின்றான்.
அவன் வாயில் இருந்து இரத்தம் கொப்பளிக்கின்றது. சக கலைஞர்கள் திமோத்தி! திமோத்தி!! ஏன்று அலறுகின்றனர். எந்த சலனமும் இல்லை.

சாம்ஷன்…. என்று பேரிடிபோல அலறினாள் கிளேரா… சாதித்த புன்னகையுடன் அவளை பார்த்துவிட்டு, பின்னர் ஒரு நன்றிப்பார்வையை அவளுக்கு வழங்கிவிட்டு, மரணிக்கின்றான் திமோத்தி.

Tuesday, January 4, 2011

ஹொக்ரெயில் - 04.01.2011

டயானாவின் மருமகள்.

இளவரசர் வில்லியத்தின் இதயத்தை பித்துக்கொண்ட ஹேட் மெடல்டன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் அவரை கரம்பிடித்து இளவரசியாகவுள்ளார்.
எட்டுவருடகால இந்தக்காதல், சென்ரூட்ஸ் பல்கலைக்கழகத்தில் மலர்ந்ததாகவும், இருவரும் மனமொத்த காதலர்கள் எனவும் அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ, பேரனின் காதலை மகாராணியாரும், மகனின் திருமணத்தை இளவரசர் சார்லஸ_ம் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இது குறித்து பிரித்தானிய மக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் அந்த திருமணத்தை காண பெரும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த லொலிட்டா?

லொலிட்டா….பலருடைய கதைளிலிலும், பாடல்களிலும் வந்துபோகும் ஒரு தேவதைப் பெயர். அதேபோல அழகான ஒரு பெண், அடையாளமோ பெயரோ தெரியாது என்றவுடன் லொலிட்டா என்று சொல்லி அழைக்கும் மரபுகளும் உண்டு. தமிழ்ப்பாடல்கள் பலவற்றில்க்கூட வந்து போன ஒரு பெயர் லொலிட்டா…
யார் இந்த லொலிட்டா…ஏன் இந்த லொலிட்டா??? எப்போதாவது சிந்தித்ததுண்டா?
“விலாடிமிர் நபோக்கோப்” என்ற எழுத்தாளரினால் 1955 ஆம் ஆண்டு பாரிஸில் எழுத்தப்பட்ட ஒரு காதல் ரசம் சொட்டும் ஒரு புத்தகம்தான் வொலிட்டா.
எழுத்து நடை, பிரமாதமான விபரிப்பு என்பவற்றிற்காக சர்வதேச ரீதியில் புகழப்பட்ட ஒரு நாவல் லொலிட்டா.
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த நாவல்கள் தொகுப்பில் நான்காவது இடத்திலும் (மொடேன் லைபரரியின் கருத்து கணிப்பு), ரைம்ஸ் கருத்து கணிப்பில் சிறந்த ஆங்கில நாவல்களில் பட்டியலிலும் இடம்பிடித்ததன் பெருமை பெற்றது.
இந்த லொலிட்டா நாவல் பாத்திரத்தில்வரும் பெண் பற்றிய விபரிப்பு, இந்த நாவலின் காதல் ரசம், இந்த நாவலின் நாயகியுடன் வாசகர்களின் உலகலாவிய இலகிப்பு என்பவையே “லொலிட்டா” என்ற பெயர் மந்திரமாகி உலகப்புகழ் பெற்றதன் காரணம். அட… அழகான பெண் ஆனால் பெயர் தெரியவில்லையா? நீங்களும் லொலிட்டா என்று அழையுங்கள்.

ஜெயமோகனின் குறுநாவல்கள்.

குறுநாவல்கள் பற்றி எனக்கு நெடுநாளாக ஒரு மயக்கம் ஏற்பட்டதுண்டு. ஏன் என்றால் கொஞ்சம் பெரிய சிறுகதை என்றாலே குறுநாவல்தானோ? என்ற ஒரு மயக்கம் என் மனதில் இந்த புத்தகத்தை வாசிக்கும்வரை இருந்தது.
அதில் எனது தவறு என்றும் சொல்வதற்கில்லை. காரணம் கொஞ்சம் பெரிய சிறுகதை “குறுநாவல்” என்ற கருத்தில் சில பிரபல எழுத்தாளர்கள் எழுதியவற்றை வாசித்த மாயை அதுவாக இருக்கலாம்.
ஆனால் ஜெயமோகனின் இந்த குறுநாவல் அவ்வாறான ஒரு எண்ணக்கருவை முழுமையாக மாற்றிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
மண், நிழலாட்டம், இறுதி விஷம், பத்மவியூகம், அம்மன் மரம், பரிணாமம், பூமியின் முத்திரைகள், கிளிக்காலம், டார்த்தீனியம், மடம், லங்கா தகனம்.
போன்ற குறுநாவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதில் வந்த “மடம்” என்னும் குறுநாவல் வாசித்து முடிக்கையில் ஒருவித உணர்வை பெறக்கூடியதாக இருந்தது. இதில் வந்த பாத்திரமான “பண்டாரம”; கதை முடிந்தவுடனும்கூட பெரியதொரு ஆச்சரியமாகவும், பண்டாரத்தின் இறுதிச்சிரிப்புக்கும், கதை ஆரம்பத்தில் வந்த குருநாதரின் சமாதிச்சிரிப்புக்கும் இடையிலான நிகழ்வுகள்….. ஒருமுறை வாசித்துப்பாருங்கள்.

இந்தவாரக்குறும்படம்

ரஹ்மானின் ஓய்வு வருடம்!

2011 ஆம் ஆண்டுமுழுவதும் தாம் ஓய்வெடுக்க விரும்புவதாகவும், இந்த வருடத்தில் தாம் தமது குடும்பத்தாருடன் அதிக நாட்களை செலவுசெய்யவும், தன் இசைக்கல்லூரியின் வளர்ச்சிகளில் கூடிய கவனம் எடுக்கவுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த அறிவிப்பு அவரின் இசை இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் என்றாலும்கூட ஓய்வில்லாத அவரின் தொழிலுக்கு ஒரு நிதானமான அமைதியும், ஓய்வும் தேவை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சென்றவருடம் முழுவதும் படு பிஸியான ஒருவராக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்தார். இசையமைப்புக்கள் மட்டும் அன்றி பெரும்பாலான நாடுகளில் இசை நிகழ்வுகளையும் அவர் நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், தன் மகளை தான் பார்ப்பதே அவளது தூக்கத்தில்தான் என்று சொன்ன விடயம் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் அவரின் இந்த வருட ஓய்வு அறிவிப்பும், குடும்பத்தாருடன் வருடத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஏற்கனவே தாம் ஏற்றுக்கொண்ட இசையமைப்பு வேலைகள் அத்தனையையும் ஏ.ஆர்.ரஹ்மான் செய்து முடித்துள்ளார் என்பது மேலதிக தகவல்.

படித்தவர்களுக்காக படமெடுக்கும் மணிரத்னம்!

தனது கணவர் மணிரத்னம்போல கௌதம் வாசுதேவ மேனனும் படித்தவர்களுக்காக படம் எடுக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியான விடயம் என சுஹாசினி கூறியுள்ள விடயம் சர்ச்சை ஒன்றை தோற்றுவித்துள்ளது.
கௌதம் வாசுதேவ மேனனின் தயாரிப்பில் அஞ்சனா இயக்கத்தில் வெளிவரவுள்ள “வெப்பம்” திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சுஹாசினி மணிரட்னம் இவ்வாறு கூறியுள்ளார்.
புடித்தவர்களுக்கான படம் என்று அவர் எதை வரையறை செய்கின்றார் என்ற கேள்வி எழுக்கின்து. மணிரட்னம், கௌதம் வாசுதேவ மேனன் என்பவர்கள் நகரத்தை மையமாக வைத்து தமது திரைப்படங்களை அமைப்பதால் அதைத்தான் படித்தவர்களுக்கான படம் என்று அவர் கருதுகின்றாரா என்றும், அதேவேளை அப்படி என்றால் ஏனைய இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் படித்தவர்களுக்கானது அல்ல என அவர் கூறுகின்றாரா? படித்தவர்களுக்கு படம் எடுக்கும் மரபுக்கவிதை போன்ற திரைப்பட இரசனை இது என்று பெருமை கொள்கின்றாரா? என்பது போன்ற பெரும் கேள்விகள் பல மட்டத்திலும் எழுகின்றன.
பொதுவாகவே இன்று சுஹாசினியின் பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கிவருகின்றது.
அவர் சொல்லவது உண்மைதான்! இராமாயணம், மஹாபாரதம், வரலாறுகள், பிற நாவல்களைப்படித்தவர்களுக்குத்தானே மணிரத்னம் எடுக்கும் படங்கள் புரியும்!! என்று எழும் காமன்டுகளும் இங்கு கவனிக்கப்படவேண்டும்.

எதிர் எதிர் முற்றத்தில் ஒரு வீட்டு சிங்கங்கள்!

நாளைய இந்தியா!!! என்ற பெரும் கேள்வி பலர் மத்தியிலும் உதித்துள்ளது.
இருந்தபோதிலும் இந்தியாவில் மட்டும் அன்றி தெற்காசிய பிராந்தியத்திலேயே வலுவான ஒரு தலைவராக இருக்கும் தகுதிகள் ராகுலுக்கு முழுமையாக வந்துவிட்டன என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவின் தற்போதைய தேவையும் வலுவான ஒரு தலைவராகத்தான் இருக்கின்றது. ராஜீவ் காந்திக்கு பின்னர் அப்படி ஒரு “மாஸ்” உள்ள தலைவர் அங்கே பெரும் வெற்றிடமாகவே உள்ளது.
அதேபோல மறுமுனையில் பா.ஜ.க. அத்வானி, சுஸ்மா ஆகியோரின் பின்ரான உறுதியான வெற்றிடம் நேரடியாகவே கொண்டுவரப்போவது வருணை.
வரலாறுகள் நிகழ்த்திக்காட்டிய ஆச்சரியங்கள் எண்ணில் அடங்காதவை.
ஏன் நாளைகளில் பிரதமர் ராகுல்காந்தி, எதிர்கட்சித்தலைவர் வருண்காந்தி என்ற நிலை வருவதுகூட ஆச்சரியப்படுவதற்கில்லையே!!
(இதைத்தான் சொல்லவந்தேன் அதைவிடுத்து என்ன! நாளைய இந்தியாவே ஒரு குடும்த்திடமா? அண்ணன் தம்பிகளிடமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் பொறுப்பாளி இல்லை)

என்னவண்ணமோ?
“எனி டைம் பேவரிட்” என்ற வரையறைக்குள் இந்த “ராஜ“ கீதத்தை போட்டுவைத்துக்கொள்ளலாம்.

சர்தாஜி ஜோக்
நம்ம சர்தாஜி அரசாங்க வேலை ஒன்றுக்காக விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்காக வெளியில் காத்திருந்தார். உள்ளே இன்னும் ஒருவர் நேர்முகப்பரீட்சையை சந்தித்துக்கொண்டிருந்தார்.
நிர்வாகி - இந்தியாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைத்தது?
மற்றவர் - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி -இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் யார்?
மற்றவர் - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – நல்லது. எயிட்ஸ் நோயை தடுக்கமுடியுமா?
மற்றவர் - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.

மேற்படி மற்றவரின் பதிலை கேட்ட நிர்வாகிகள் அவரை கைலாகுகொடுத்து வாழ்த்துவதையும், மெச்சுவதையும் கண்ணாடியினூடாக நம்ம ஷர்தாஜி பார்த்துவிட்டார். அவர் வெளியில் வந்ததும் அவரிடம் ஓடிச்சென்று..நண்பரே உள்ளே அவர்கள் எத்தனை கேள்வி கேட்டார்கள்? என்று கேட்டார்..அவரும் 3 என்றார்…..சரி அப்படி என்றால் அந்த 3 கேள்விக்கும் நீங்கள் சொன்ன பதிலை எனக்கு சொல்லுங்கள் என்றார் அவரும் சொன்னார்..
அடுத்து உள்ளே போன நம்ம ஷர்தாஜி நிர்வாகியிடம் தெரிவித்தவைகள்

நிர்வாகி – நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
ஷர்தாஜி - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.
நிர்வாகி – உங்களது தந்தை பெயர் என்ன?
ஷர்தாஜி - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க
என்னால் முடியாது.
நிர்வாகி – உனக்கு என்ன பைத்தியமா?
ஷர்தாஜி - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே
அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்

Monday, January 3, 2011

நிழல்…

உண்மையின் ஒரு வடிவம்

அது ஒரு குக்கிராமம்…
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதில் எந்த புகழ்ச்சியும் இருக்கவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயம் என, இவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டபோது, அகதிகள் என்ற முத்திரையுடன் அலையத்தொடங்கியவர்களின் ஆதாரபூமி.

தற்காலிக கொட்டகைகள் என நிறுவனங்களால் வரைவிலக்கணப்படுத்தப்பட்ட கிடுகு கூடாரங்கள் இவர்களுக்கு மட்டும் வரைவிலக்கணங்களைத்தாண்டி இரண்டு தசாப்தங்களை கடக்க உதவிய புகழரன் ஆகியிருக்கின்றது.

பகலில் வெயிலுடனும், இரவில் இருளுடனும் போராடவே நேரம் சரியாகிப்போன இவர்களுக்கு அடிப்படை வசதிகள் என்பதுகூட ஆச்சரியக்குறிதான்.
வறுமையின் கசையடிகளுக்கு மருண்டோட பழகிக்கொண்ட இவர்கள், வாழ்க்கை மேம்பாடைப்பற்றியோ, சமூககட்டமைப்புக்களை பற்றியோ, கவலைப்பட்டதாகத்தெரியவில்லை.
இன்னொருவகையில் சொல்வதானால் இவர்களுக்கு கவலைப்பட நேரமும் இல்லை.

நீண்ட நாட்களின் பின்னர், இவர்கள்பால் கண்திறந்து கருணை காட்டினாள் கண்ணாத்தா என்பதுபோல அகதிமுகாமாக இருந்த பிரதேசம், அரசாங்க உயர் அதிகாரிகளின் அனுசரணையுடன் இவர்களுக்கான நிரந்தர காணிகளாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சில அபிவிருத்தி நிறுவனங்களின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மெல்ல மெல்ல தன்னை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ள தலைப்படுகின்ற இக்கிராமத்தை ஒரு நிழல் உற்றுப்பார்க்கின்றது….

மூன்று தசாப்த வறுமையின் ஆழத்தையும் பிடிமானமற்ற நலிவான சமூகக்கட்டமைப்பினையும் தன் தொழிலுக்கு மூலதனமாக்க முனைகின்றது இந்த நிழல். புசப்பு வார்த்தைகள் பேசி பெற்றொரைக்கவரும் இன்நிழல், வெளியிடங்களில் வேலைவாங்கிக்கொடுப்பதாகக்கூறி இளம்பெண்களை குறிவைக்கின்றது.

ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்ற விளம்பர துண்டுப்பிரசுரம், இந்நிழலால் வர்த்தகமானி அறிவித்தல்போல் மக்களிடையே பிரமாண்டமாக சித்தரிக்கப்படும்.
பல்வேறு பண நெருக்கடிகளின் மத்தியில் புரளும் பெற்றோர்களுக்கும் இது ஒரு வசந்தத்தின் பாதை என்று தோன்றும். இன்னும் உற்று வாசித்தால், கவர்;சிப்பொடிகள் தூவிய அந்த தண்டுப்பிரசுரம் சுற்றுலாக்களைப்பற்றியும், களியாட்ட விழாக்கிளைப்பற்றியும், கவர்ச்சிகரமான தங்குமிட வசதிகள் பற்றியும் கூறி நீண்டு செல்கின்றது.

இன்றைய திகதியில் கவலையான செய்தி, இரண்டு இளம்பெண்கள் ஏற்கனவே ஆடைத்தொழிற்சாலைக்கு என இக்கிராமத்தில் இருந்து அகன்றுவிட்டனர் என்பதுதான். இத்துடன் நின்றுவிடாத நிழல் மேலும் ஆறு பெண்களை தயார்ப்படுத்திவருகின்றது. இவர்கள் உண்மையில் ஆடைத்தொழிற்சாலை பணிக்குத்தான் கொண்டு செல்லப்பட்டார்களா? இவர்களை வேலைக்கு இழுப்பவர்கள் சட்டத்தின் எல்லைகளுக்குள் நின்றுதான் செயற்படுகின்றனரா? இதனால் இவர்கள் அடையப்பொகும் சமுக புரள்வுகள்தான் என்ன? என்கின்ற கேள்விகள் பதில்காணமுடியாது நீழ்கின்றது.
இதுபற்றி பெற்றோர்களிடம் கேட்டபோது, அனுப்பட்ட இடமோ, அனுப்பட்ட தொழிற்சாலையோ, அவர்கள் செய்யும் பணியோ பற்றி எதுவும் தெரியாமல் மாலையில் அந்த நிழலினாலக்கொடுக்கப்படும் கையடக்கத்தொலைபேசியின் தமது மகளின் இரண்டு ஒரு வார்த்தைகளை கேட்டவண்ணம் காலத்தை கடத்துகின்றனர்.

இது இவர்களின் மடமையா? இல்லை உடைந்துபோன சமூகத்தின் குறிகாட்டிகளா?
தொலைந்துபோன வாழ்க்கை பற்றிய நம்பிக்கையின் பிம்பங்களா?

இது நம்பினால் நம்புங்கள் என்று பூச்சாண்டி பற்றி சொல்லப்படுகின்ற கதை அல்ல.
யாழ்ப்பாண மண்ணில் நடந்து கொண்டிருக்கின்ற உண்மைச்சம்பவம்.
எங்கோ ஒரு குக்கிராமம் என்று நினைக்காதீர்கள் இது உங்கள் கிhமமாகக்கூட இருக்கலாம் இல்லை உங்கள் அயல்க்கிராமமாகக்கூட இருக்கலாம்.

பாய்ந்துவருகின்ற இந்த நரோட்டம் உங்கள் உறவுகளையும் பதம்பார்க்கும்நேரம்வரை பொறுத்திருக்கப்போகின்றீர்களா?

எங்கே போனது எங்கள் சமுகக்கட்டமைப்பு? எங்கே அடகுவைக்கப்பட்டது எங்கள் இளைஞர்களின் தன்மானம்? எங்கே மறைக்கப்பட்டது எங்கள் விழுமியங்கள்?
செறிந்த பாரம்பரிய பின்புலம் உள்ள யாழ்மண்ணிற்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற மாற்றங்கள் ஏற்புடையதா? இப்புரள்வுநடைமுறைகளை சரி செய்யும் பொறுப்பு இப்போது யாரைச்சார்ந்து? காவலர்களை நியமிப்பதுயார்? காவலர்களை கண்காணிப்பது யார்? என்கின்ற பல கேள்விகளை நிறுத்தி முடிக்கின்றேன்.

இன்றல்ல சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு கிடப்பில் இருந்தது. இன்று மீண்டும் பார்க்கவேண்டிய தேவை வந்தது.


Sunday, January 2, 2011

இந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா

“சுடுசோறு” தமிழ் பதிவுலகமே அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்ட புதியதொரு வார்த்தை. இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் பதிவர். திரு.மதி.சுதா அவர்கள்.
ஒரு கலைஞனோ அல்லது ஒரு எழுத்தாளனோ, அன்றில் ஒரு வலைப்பதிவனோ, தன் கலைகள், எழுத்துக்கள்போலவே மற்றவர்களின் கலைகள், எழுத்துக்களை திறந்தமனதுடன் ஓடிச்சென்று பாராட்டிவிடும் மனம் உள்ளவனாக இருப்பது அவசியம்.
வஞ்சகமற்ற வாஞ்சையுடனான உடனயடியான பாராட்டுக்கள், களங்கங்கள் அற்ற நட்புகளை ஏற்படுத்திவிடுவது மிக இயல்பானது, யதார்த்தமானதும் கூட.
அப்படி ஒரு வெள்ளை மனதுக்காரன் பதிவர் மதி.சுதா.

மதி.சுதா என்ற ஒரு பெயர் இன்று பதிவுலகத்தில் மிகப்பிரபலம். ஏனென்றால் மதி.சுதா அத்தனைபேருக்கும் சொந்தக்கார் என்பதுடன் மிக நெருக்கமானவன் என்ற உணர்வுகள்தான். சலிப்பற்ற தொடர்வாசிப்பு, ஈகோக்களை தூக்கி எறிந்த ஒரு பண்பு, அதிரடியான பதிவுகள், இயல்பான மிக லேசான நடைகளுடனான எழுத்துக்கள், எழுத்துக்களில் மட்டும் இன்றி செயல்பாடுகளிலும் வாஞ்சையான பண்பு, இவற்றின் மொத்தப் பெயர்தான் இந்த மதி.சுதா.

தில்லையம்பலம் சுதாகரன் என்ற இயற்பெயரை உடைய பதிவர் மதி.சுதா, தனது தாயாரான மகேஸ்வரியின் “ம”, தந்தை தில்லையம்பலத்தின் “தி” இரண்டையும் தன் பெயரின்முன்னே “மதி” ஆக்கி பதிவுலகத்தில் மதி.சுதா என்ற பெயருடன் ஆயிரம் கைகளின் கரகோசங்களுடன் வலம்வந்துகொண்டிருக்கின்றார்.
அதேபோல முன்னரே “சுடர் ஒளி” பத்திரிகைக்கு எழுதிய தாய் பற்றிய தனது கவிதையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன்மாதம் பதிவெழுத தொடங்கி தன் முதன் பதிவையே தனது தாய்க்கு சமர்ப்பித்து பதிவுலகத்திற்கு வந்தார்.
ஆரம்பத்திலேயே ஒரு சென்டிமென்ட் “டச்” உடன் வந்த மதிசுதா, பதிவுலகத்திலும், பதிவெழுதுவதிலும் காட்டியவிஸ்பரூபம் பதிவுலகத்தையே ஆச்சரியப்படவைத்தது.

காட்டாறு உடைப்பெடுத்தால் எப்படி கரைபுரண்டோடுமோ, தன் போக்கிற்கு எப்படி அது எதிர்ப்பட்டவற்றை எல்லாம் ஈர்த்துக்கொள்ளுமோ அப்படி ஒரு காட்டாறாக பெருக்கெடுத்தது மதி.சுதாவின் பதிவுகள்.
ஒரு சவலாக வேண்டும் என்றாலும் சொல்லிவிடலாம் பதிவெழுத தொடங்கி சில நாட்களிலேயே மிகப்பெரும் பிரபலம் அடைந்து, எண்ணற்ற நண்பர்களை தனக்குள் ஈர்த்துக்கொண்டது இன்றுவரை மதி.சுதாவைத்தவிர வேறு எவரும் கிடையாது.

அந்த வேகத்திற்கும், அந்த எழுத்துக்களுக்கும், அந்த தொடர்ச்சிக்கும், காரணம், கடந்தகால வரலாற்றுவடுக்களால் மதி.சுதாவின் மனதின் தாக்கங்கள், ஏக்கங்களாகக்கூட இருக்கலாம். இதுகூட மதி.சுதாவின் பல பதிவுகளில் வெளிப்படையாகத் தெரிந்தன.

கவிதை, இலக்கியம், விஞ்ஞானம், புதிய, பாரம்பரிய, கிராமிய கண்டுபிடிப்புக்கள், சமுகத்தின் மீதான சாட்டைகள், யதார்த்தங்கள், சினிமா, கதைகள் பற்றிய ஆராட்சிகள், என பல வடிவங்களையும் மதி.சுதாவின் எழுத்துக்கள் தொட்டுக்கொண்டன.
கவிதைகளில்க்கூட அறிவியலைப்புகுத்தும் நுட்பம், சாதாரண நிகழ்கால உள்ளுர் கண்டுபிடிப்புக்களைக்கூட காலப்பதிவாக எழுத்தில் அடக்கும் பண்பு என மதி.சுதா எழுத்துக்களால் தொடும் விடயப்பரப்புக்கள் சில மூக்கில் விரலை வைக்க வைக்கின்றது.

பதிவெழுதத்தொடங்கி முழுதாக 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், மதி.சுதா சாதித்துக்காட்டியவை மிகநிறைய. பெரும் ஆர்வக்கோளாறு மதி.சுதா என சக பதிவர்கள் வெளிப்படையாகவே பேசும் அளவிற்கு உண்மையிலேயே பதிவுலகில் பெரும் ஆர்வக்கோளாறாகவே மதி.சுதா அதிவேகத்துடன் வலம் வந்துகொண்டிருக்கின்றார். தன் பின்னூட்டம் என்னும் மிகப்பெரும் பானையில் இருந்து, பதிவுலகத்தின் 70 வீதத்திற்கும் அதிகமான பதிவர்களுக்கு சுடச்சுட சுடுநோறுகளை வழங்கி ஆச்சரியப்படவைத்திருக்கின்றார்.

இது வேறு எந்த பதிவர்களுக்கும் சாத்தியப்படாத விடயம். உண்மையை சொல்லவேண்டும் என்றால், எதிர்பார்ப்புக்கள், ஈகோக்கள், பதிவுலக வீணான குரோதங்கள், தங்களுக்கான வட்டங்கள், மமதைகள், பதிவுலக அரசியல்கள், அத்தனையையும் தாண்டிய ஒரு தெளிந்த மனம், வெள்ளை உள்ளம் உடையவர்களாலேயே இது சாத்தியம். அந்த வகையில் பதிவுலகத்தில் சகலரையும்விட உயர்வான இடத்தில் இருக்கின்றார் மதி.சுதா.

கடந்த 30 வருட இருண்ட யுத்தத்தினால், உயிர், உடமை இழப்புக்களைவிட, தமது கற்ற கல்வி, எதிர்காலம், நாளைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகளில் மதி.சுதாவும் ஒருவர்.
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.

இதோ இந்தவாரப்பதிவரான மதி.சுதாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரது சுருக்கமான பதில்களும்…

கேள்வி: உங்களைப் பற்றி நீங்களே சொன்னால் ?

மதி.சுதா: அதை நான் சொல்லித் தான் தெரியணுமா. செம காமடியன்... மூஞ்சியை வெள்ளையாக்க முயன்றேன் முடியல அதலா மூணு வேளையும் பல்லைத் தீட்டி வெள்ளையாக்கி அதையே காட்டுகிறேன் (இருக்கிறதத் தானே காட்டலாம் நான் என்ன நடிகையா பஞ்சு வச்சுக் காட்ட ஹ..ஹ..ஹ..)

கேள்வி: இந்தப் புத்தாண்டில் நீங்கள் விரும்புவது ?

மதி.சுதா: என் பேச்சும் மூச்சும் ஒரே வாக்கியம் தான் போரற்ற ஒரு புது உலகம் சமைப்போம். எம் உயிரையும் உணர்வுகளையும் வைத்து புதுப் போரை நடத்தும் அந்தச் சமூகம் தாமே தம் பிள்ளைகளை கொடுத்து வழமை போல் பணம், புகழ் சம்பாதிக்கட்டும். இனி நான் குளிர் காய்கிறேன்.

கேள்வி: பதிவுலகில் உங்களைப் பாதித்த சம்பவம் ஏதாவது ?

மதி.சுதா: நான் என்ன தமிழா "கல் தோன்றி மண் தோன்றாக் காலம்" எனத் தொடங்க முந்த நாள் பெய்த மழையில நேற்று முளைத்த காளான் நான் (ஒரு பெரிய சிரிப்பு) ஆனால் இருக்கிறது.
என்னை ஒரு ஜனநாயகவாதி எனவும் ஈழத் தமிழருக்கு எதிரானவன் எனவும் ஒரு சிலர் முத்திரை குத்த முயல்கிறார்கள். புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து சொல்ல முடியாது அது ஒருவனின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் போரை வெறுப்பவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் ஆதரிப்போன் மட்டும் தான் நாட்டப்பற்றாளரா ??

உண்மையில் இந்தப் பதிவுலகம் மிகவும் பிடித்தமான ஒன்று உலகின் எங்கெங்கோ மூலைகளில் உள்ள இத்தனை உறவையும் பெற்றுத்தந்துள்ளது.... என் அன்பு உறவுகளுக்கு எப்போதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன் நன்றிகள்..
ஆனால் இந்த எழுத்துக்களையும் நட்புக்களையும் மெருகேற்றிக்கொள்ளும் இடத்தில் ஏற்படுகின்ற தேவையற்ற எழுத்து தாக்குதல்களும், சிலருக்கிடையிலான மனக்கசப்புக்களும், மனதிற்குள் வேதனைகளை தருகின்றன.
மற்றும்படி ஆரோக்கியமான இந்த தளத்தில் எம்மையும் , எழுத்துக்களையும் அரோக்கியமாக்குவோம் என்ற கருத்தில் நான் எப்போதும் உறுதியாக இருக்கின்றேன்.
அதனாலேயே எனக்கு அதிமான நட்புக்கள் கிடைத்தன என நினைக்கிறேன்.


சரி..அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் ஒரு பதிவுலக நண்பர் பற்றிய தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.
நன்றி

Saturday, January 1, 2011

மீண்டும் ஒரு தொடக்கம்...

ந்த இனிய புத்தாண்டு உலகிலே சாந்தி, சமாதானம், சுபீட்டசங்கள் செழித்து ஓங்கி, அனைத்து உயிர்களும் மகிழ்வுடன் வாழ பிரார்த்தனைகளோடு, வாழ்த்துக்கள்”

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், யதார்த்தங்களுடன் முரண்பட்டுக்கொண்டு, மனதில் இருக்கும் குழந்தைத்தனமான வாஞ்சையுடன் நாம் இது சாரப்பட ‘ஒரு சம்பிரதாயத்திற்கு’ இந்த நாளில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறிவருகின்றறோம்.

மனதிற்கு வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும்கூட ஒரு ஆறுதலாகவே அமைந்தும் விடுகின்றது. 365 நாட்கள் கொண்ட ஒரு காலத்தொகுதியின் முடிவில், அடுத்த தொகுதிக்கு செல்கையில் எங்களை புதுப்பித்துக்கொள்ள இந்த வாழ்த்துக்கள் ஏதுவானதாக அமைந்துள்ளது.

பருவங்கள் பல கொண்ட ஆண்டில், வசந்தங்கள் மட்டும் அதிமாக இருக்கவேண்டும், என்று எண்ணுவதும்கூட ஒரு அடிமனதின் ஏக்கமே.
இயற்கை என்னும் மெய்மையை மனிதம் பொய்ப்பிக்க எண்ணியதால் இன்று இயற்கையும் பொய்துவிடுவது பெரும்வேதனையாகவே உள்ளது.

மகிழ்வான வாழ்வுக்கான ஆசிகளாக கூறப்படும் இந்த வாழ்த்துக்களில், இந்த பூமி என்னும் கிரகத்தில் மனித இனம் மட்டும் இன்றி அனைத்து இனமும், என்றும் நிலையாக வாழும்வண்ணம், ஒரு பெரிய முதலீடாக
“இயற்கையினை காப்போம்” என இந்த நாளில் சபதம் எடுத்துக்கொள்வோம்.

LinkWithin

Related Posts with Thumbnails