Tuesday, May 24, 2011

ஹொக்ரெயில் -24.05.2011


ரஜினிக்கு நடந்தது என்ன?
நாளாந்தம் ரஜினி பற்றிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒன்றுமே ரஜினி ரசிகர்களையோ, அல்லது சாதாரண தமிழ் மக்களையோ திருப்திப்படுத்துவனவாக இல்லை. ஏனோதானோ என்ற நிலையில் வரும் அறிக்கைகளால் பெரும்பாலான மக்கள் இந்த விடையத்தில் பெரும் குழப்பத்துடனேயே இருக்கின்றர்.
தமிழர்கள் மத்தியில் ரஜினியின் தாக்கம், அவரது செல்வாக்கு என்பன உச்சத்தில் என்றும் இருப்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ரஜினி பற்றிய செய்திகளை வதந்திகள் என்றே மக்கள் கருதினார்கள், பின்னர் வந்த செய்திகள்தான், அவரது இரசிகர்களை கவலை கொள்ளச்செய்தது.

எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கும் ரஜினி இறுதியாக “எந்திரன்” மூலம் விஸ்வரூபம் எடுத்திருந்தார். அகில இந்தியா ரீதியில் என்றில்லாமல் உலக ரீதியில் ரஜினியின் மீது பல கண்ணகள் பட்டன.
இந்த வேளையில் அடுத்த “ராணா” திரைப்படத்திலும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு என்பது உண்மையில் பேரதிர்ச்சியான ஒன்றுதான்.

பிரபலங்களின் பிரார்த்தனைகள், அரசியல்வாதிகளின் நலம்பெறவாழ்த்துக்கள் என்பன ரஜினியின் உடல் நலக்குறைவை பெரிய அளவுக்கு சந்தேகம் கொள்ள வைக்கின்றது. எனினும் அவர் நலமாக இருக்கின்றார் என்று தொடர்ந்து வரும் செய்திகளும், இறுதியாக வெளியான புகைப்படங்களும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றன.
பலருக்கு ஒரு உதாரணபுருஸராக, உயர்ந்த இடத்தில் இருந்தும் தாழ்வுக்கு உதாரணமாக இருக்கும் உத்தமான அந்த மனிதர் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்பதே அனைவரது அபிலாசைகளும்.
கண்டிப்பாக நம்ம சூப்பர் ஸ்ரார் விரைவில் மீண்டும் பட்டையை கிளப்புவார்.

யாழ்ப்பாண இந்து மக்களை திகிலடையச்செய்துள்ள சுவாமி சிலைத் திருட்டுக்கள்.
இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு வழமையான செய்தியாக ஏதாவது ஒரு கோவிலில் சுவாமி சிலை களவாடப்பட்டிருக்கும் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு கோவில்களில் சுவாமி சிலைகள் களவாடப்பட்டிருக்கும்.
அண்மையில் திகிலூட்டும் இந்த புதுமுறைத்திருட்டுக்களால் இப்போது கோவில் தர்மகத்தாக்கள் உசாரடைந்து காவலாளிகளை நியமித்து வருவதாக அறியமுடிகின்றது.
இருந்தபோதிலும், சுவாமி சிலைகளை குறிவைத்து களவுகளை தொடரும் ஒரு கூட்டத்தின் நோக்கம் என்ன? இந்த சிலைகளால் அவர்களுக்கு உண்டாகும் இலாபம் என்ன என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த தொடர் திருட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தாலும்கூட, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்து மா சபைகள், இந்து ஒன்றியங்கள், சன்னிதானங்கள், அதிகாரமுள்ளவர்கள் இந்த விடையத்தில் வாயடைத்தப்போய் உள்ளமையும் பெரும் அச்சரியமாகவே உள்ளது.

புத்தர் சிலைகள் வருகுது என்று கத்துபவர்கள், ஊர்களில் இருக்கும் பிள்ளையார் சிலைகள் களவாடப்படுவதை பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.
எது எப்படியோ இந்த திருட்டுக்கள் பற்றி மக்கள் மத்தியில் பலத்த ஊகங்கள் நிலவுகின்றன. அதேவேளை எவரும் எந்த நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதையும் புரிந்துகொண்ட மக்களும், தர்மகத்தா சபைகளும், தங்கள் தங்கள் கோவில்களின் பாதுகாப்பினை தாங்களே கவனிக்க ஆரம்பித்துள்ளமை நல்ல விடையம்தான்.
கொஞ்சம் அலேட்டாக இல்லை என்றால், பிள்ளையாரை மட்டும் இல்லை நம்மையும் தூக்கிட்டு போயிடுவாங்க!!

இன்றைய காட்சி..

இந்த வார வாசிப்பு
அதிகாலையின் அமைதியில்.. சப்பா..ஒரு யுத்தகளத்தின் அருகில் இருந்து உன்னிப்பாக அந்த குறிப்பிட்ட குழுவுடனேயே இருந்து அவர்களின் வெற்றிகளில் மகிழ்ச்சி கொண்டும், ஒவ்வொருவரின் மரணங்களிலும், துடித்தும், இறுதிவரை நெஞ்சம் பதைபதைக்க அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தித்துக்கொண்டே படிக்கத்தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு இந்த அதிகாலையின் அமைதியில்.
அட..இந்த அற்புதமான படைப்பினை இத்தனை நாள் எட்டாமல் இருந்தேனே என்று மனது ஏங்குகின்றது.
கண்டிப்பாக முழுமையாக இதுபற்றி ஒரு நீண்ட பதிவு போட்டே ஆகவேண்டும்.
ப்ரீஸ்வஷிலீயின் எழுத்துக்கள் பிரமிக்கவைக்கின்றது.
ரஷ்ய – ஜெர்மன் எல்லைகளில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதை இது. ரஷ்ய எல்லைகளுடாக ஊடுருவி கேடுவிளைவிக்க எத்தனிக்கும் ஜெர்மன் படைகளுடன் மோதும் ஒரு பிரிவு ரஷ்ய படையினரின் கதைதான் இது. பெண்கள் குழுவையும் படையில் கொண்ட ரஷ்ய படைத்தலைவன் வஸ்கோவ் இறுதிவரை நெஞ்சில் நிற்கின்றான்.
வாசிப்பில் பிரமிப்பை தேடுபவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
(வாசிக்கும்போது கொஞ்சம் நம்ம பேராண்மை படமும் நினைவுக்கு வந்து போகுது)


மியூசிக் கபே

இன்றைய புகைப்படம்.
இந்த புகைப்படத்தில் சடலமாக இருக்கும் நபர் யார்? கெட்டிக்காரர்கள் பின்னூட்டுங்கள். சென்றமுறை புகைப்படத்தை கண்டுபிடித்த அகுலனுக்கு பாராட்டுக்கள்.

ஜோக் பொக்ஸ்..
இந்த பகுதிக்கு என் இனிய நண்பர் ஒருவரின் அனுபவத்தையே தருகின்றேன்.
கொழும்பில் ஒரு இடத்தில் 90களின் ஆரம்பங்களில் நண்பர்கள் ஒரு வீடொன்றை எடுத்து தங்கிருந்திருக்கின்றார்கள். அந்த வேளையில் இரவு வேளைகளில் யாரும் அறைகளில் படுத்துறங்குவதில்லையாம். எல்லோரும் ஹோலிலேயே பாயை போட்டுவிட்டு உறங்கிவிடுவது வழக்கமாமாம்.
ஒரு நாள் இரவு எல்லோரும் படுத்திருக்கவே நண்பர் அங்கிருந்த சோபா ஒன்றில் படுத்திருக்கையில், நள்ளிரவு தாண்டிய நேரம் தன் முகத்தின் முன்னால் ஒரு வெளிச்சம் வருவதுபோல உர்ந்து கண்ணை லேசாக வழித்து பார்த்திரக்கின்றார்,

எதிரே இருந்த அறையில் இருந்து அவரது கண்ணுக்கு நேரே ஒளி ஒன்று தென்பட்டிருக்கின்றது உண்மையிலேயே பயந்துபோய்விட்ட அவர், மெதுவாக எழ முயன்றிருக்கின்றார், ஆனால் அவர் எழும் நேரம் திடீர் என்று அந்த ஒளி மறைந்திருக்கின்றது. மிகவும் பயந்துபோன அவர், மற்றவர்களை எழுப்ப முயற்சித்து பின்னர், சரி படுப்போம் என்று படுத்திருக்கின்றார், அந்தநேரம் மீண்டும் அதே ஒளி தென்பட்டிருக்கின்றது. திடீர் என்று எழுந்திருக்கின்றார், ஒழி மறைந்துவிட்டிருக்கின்றது.
இப்படியே தொடர்ந்து பல தடவைகள் நடக்கவே.
நண்பர்களை அழைத்திருக்கின்றார், யாருமே எழுவதாக இல்லை, அருகில் ஒரு கட்டை ஒன்றையும் எடுத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கின்றார் நண்பர்.
உண்மையில் யாரோ ஒரு வல்லை படுக்கமுன்னர் அயன் பண்ணிவிட்டு, அயன் பொக்ஸை ஆவ் பண்ணாமல் போய் படுத்திருக்கின்றது. அந்த ஸ்திரி பெட்டியின் வெளிச்சமே அது என்று தெரிந்து அசடு வழிந்திருக்கின்றார் அவர்.

Monday, May 23, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்……06

திடுக்கிட்டு திரும்பிய நான் ஆர்வமாக அந்த முகத்தை பார்க்கின்றேன். முழுமையாக மழிக்கப்பட்டிருந்த கேசம், அடர்த்தியாக மேவி வாரப்பட்டிருந்த தலைமுடி, மெல்லிய நீல மேற்சட்டை, முழங்கைக்கு கீழே நேர்த்தியாக மடித்து விடப்பட்டிருந்தது. அப்போதைய கறுப்கு ஹரா துணியில் ஜீன்ஸ் அணிந்து அழகாக மேற்சட்டை உள்ளே விடப்பட்டிருந்தது.
அப்போதுதான் அந்த உருவத்தை முதல் முதலில் பார்க்கின்றேன். மனதில் இனம்புரியாத ஒரு பயம் தொற்றிக்கொள்கின்றது. நான் ஏதும் குழப்படி செய்கின்றேன் என்று நினைத்து என்னை இவர் அடிக்கப்போகின்றாரோ என்ற சிறுவயது பேதமை அது!

மென்மையான, அனால் ஆழுத்த மான குரல் என்னைநோக்கி விழுகின்றது. தம்பிக்கு என்ன பெயர்?
ஜனா… ஜனார்த்தனன்..
ஏன் பயப்படுறீங்கள் மாமா ஒன்றும் பிடித்துக்கொண்டு போகமாட்டேன்..
ம்ம்ம்….
எங்கே படிக்கின்றீர்கள், எத்தனையாம் ஆண்டு? எங்கே இருக்கின்றீர்கள் என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் உசாராக பதிலளிக்கின்றேன்.
தம்பி… கெட்டிக்காரன் போல இருக்கு மாமா கேள்வி கேட்கவே?
பதிலாக அசடு வழிய நெழிந்துகொண்டு சிரித்திருக்க வேண்டும் நான் அப்போது..

சரி..உலகத்தில பெரிய நாடு எது?
சோவியத் ஜூனியன் என்றேன் சட்டென்று..
ஓம்..தம்பி நாலாம் ஆண்டெல்லே எங்க ஈழத்து புலவர்கள் இரண்டு மூன்று பேரிண்டை பெயர் சொல்லும் பார்ப்பம்?
ஆ…. சின்னத்தம்பி புலவர், சோமசுந்தரப்புலவர், கல்லடி வேலாயுதம்….
கேட்டிக்காரன் தான்…
சரி பள்ளிக்கூட புத்தகம் தவிர வேற என்ன புத்தகங்கள் படிக்கிறனீங்கள்?
கோகுலம், அம்புளிமாமா, வாண்டுமாமா, அர்சுனா இப்படி மா…மா..

சரி.. ஏன் இங்கை ஒன்றையும் படிக்க பிடிக்வில்லையோ தம்பிக்கு?
சரி வாரும்… நான் எடுத்து தாறன் என்று அலமாரிகளில்தேடி கொஞ்சம் சிறுவர் கதைப்புத்தகங்களை கொண்டுவந்து போட்டுவிட்டு, சிரித்தார்.
பிறகு இப்போது எனக்கு நினைவு வருகின்றது… சிறுவர்களுக்கான நூல்களாக சில பெரியோர்கள் பற்றி வந்த மெல்லிய புத்தகங்களை காட்டினார்.
ஆபிரகாம் லிங்கன், பாராதியார், காந்தி, போல பலர் பற்றி இருந்தன சின்ன சின்ன புத்தகங்களாக
தம்பி..கதைப்புத்தகங்கள் தவிர இவைகளையும் நீங்கள் படிக்கவேண்டும், அப்பத்தான் நல்ல கெட்டிக்கானாக வரலாம், பேச்சுப்போட்டிகளிலை பேசலாம், பரிசுகள் வாங்கலாம், ரீச்சர்ஸ், பிரின்ஸிபல் எல்லாம் பாராட்டுவார்கள் என்ன!
என்று அன்பாக சொன்னார்.

பேச்சுக்கள் ஒன்றும் வராமல் இன்னும் திரு… திரு என்று முழித்த படியே வெருண்டுகொண்டு நின்றேன் நான்.
வீடு பக்கத்திலைதானே.. இரண்டு.. இரண்டு புத்தகங்களாக வீட்டை கொண்டுபோய் படிக்க போவதென்றாலும் பறவாய் இல்லை.
என்று விட்டு அங்கிருந்த பொறுப்பான ஒருவரிடம், இங்க…! இந்த தம்பி கேட்கும் இரண்டு புத்தகங்களை கொடுங்கோ, தம்பி படிச்சுப்போட்டு திரும்பித்தருவார், பிறகு ரெண்டு ரெண்டாக தம்பியிட்ட கொடுங்கோ என்றார்.

பிறகு என்னிடம்…தம்பி பத்திரமாய் கொண்டுபோய் கிழிக்காமல் படிக்கவேண்டும், பேந்துவந்து இந்த அண்ணாட்ட குடுத்துட்டு வேற புத்தகம் எடுத்து கொண்டுபோம் என்ன என்றார்.
ஓம்..என்று உற்சாகத்துடன் தலையாட்டினேன்.
இவன்தான் தியாகத்திற்கு ஒரு முத்திரை பதிக்கப்போகும் மனிதன், அகிம்சையின் மறுஉருவம், போற்றுதலுக்கு அப்பாற்பண்ட புண்ணியமான மாமனிதன் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கிவில்லை.

சரி தம்பி…என்று என் தலையை கோதிவிட்டு, அங்கிருந்த ஒரு மோட்டார் பைக்கில், முடமாவடி சந்திவழியாக சென்று மறையும்வரை அந்த உருவத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
(இதை எழுதும்போதும் என் கண்களில் வழியும் நீரை இப்போதும் மறைக்கமுடியவில்லை)

இன்றும்கூட நல்லூர் மேற்குவீதியில் உள்ள அந்த நெல்லி மரத்தடியை பார்க்கும்போதும், யாழ்ப்பாணக் கோட்டை பகுதியில் நிற்கும்போதும் இதயத்தில் அசரீதியாக அந்த இடங்களில் தீர்க்க தரிசனமாக இவன் உதிர்ந்த வசனங்கள் காதுகளில்கேட்டு, கண்களை நனைக்கின்றது.

இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு அரக்க பரக்க முழித்துக்கொண்டு நின்ற என் அருகில் வந்த மைத்துனன் டேய்.. வாடா வீட்ட போகலாம் என்றான்.
ஓன்றுமே பேசாமல் வீடு சென்றடைந்து சாப்பிட்டுவிட்டு, எடுத்துவந்த முதலாவது புத்தகத்தை பார்த்த நான் திடுகிட்டேன். அது ஒரு சிறுவர் புத்தகம்தான் ஆனால் ஆங்கிலப்புத்தகம். ஆனால் அழகான நீழமான பின்னல் பின்னிய பெண்ணின் படம், இளவரச, இளவரசி கதை என்று படங்களைப்பார்த்து புரிந்தது!
அதை பிறகு வீட்டில் கேட்டு அறியலாம் என்று வைத்துவிட்டு, கொண்டுவந்த காந்தி பற்றிய புத்கத்தை திருப்புகின்றேன்.
காந்தி சிறுவயதாக இருந்தபோது தனது தாயாரின் நோன்பு நாளில் தாயார் உணவருந்திவிடவேண்டும் என்ற பாசம் கலந்த பதைபதைப்புடன் தொடங்கியது அந்த புத்தகம்.
ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது!

அந்தவேளையில் பேரிடியாக ஒரு செய்தி கிழக்கில் இருந்து எங்கள் குடும்பத்திற்கு கிடைக்கின்றது. வீட்டில் அனைவரும் ஆளாளுக்கு அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
ஏன் எனப்புரியமால் நான் பரிதவித்துக்கொண்டிருக்கின்றேன்.
என்ன பிரச்சினை என்று ஒன்றும் புரியவில்லை.. அயலவர்கள் வந்து கேட்கும்போது வீட்டார்கள் சொன்ன பதிலில்த்தான் அறிந்துகொண்டேன். இந்த யுத்தத்தில் என் குடும்பத்தில் முதலாவது இழப்பு நிகழ்ந்துவிட்டது என்று…

-இலைகள் உதிரும் -

Saturday, May 21, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்…..05

வலிந்த வான் தாக்குதல்கள், நெருப்புக்குண்டுகக்கும், இயந்திரப்பறவைகளின் வான்மறைப்பு என்பவற்றால் பாடசாலை என்பது அப்போது எங்களுக்கு பெரும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது.
அப்படி பாடசாலை நடந்தாலும்கூட ஹர்த்தால், மாணவர் அமைப்பு பகிஸ்கரிப்பு என்று நடக்கின்றது ஓடுங்கடா என்று பெரிய அண்ணாமார் வெள்ளையும் வெள்ளையுமாக வந்து எங்களை துரத்தி விடுவார்கள்.
இப்படி ஒரு கால கட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர், இன்றைக்கு ஸ்கூல் தொடங்குதாம் என்ற மனோகரன் மாஸ்டரின் பேச்சை நம்பி நான் அவசர அவசரமாக வீட்டில் வெளிக்கிடப்படுத்தப்படுகின்றேன்.
பெரிய தந்தையார் வாஞ்சையுடன் தனது வாகனத்தில் அழைத்துச்சென்று பாடசாலை வாசலில் இறக்கி விடுகின்றார்.

டேய்.. ஜனா வந்திட்டான்டா என்ற உட்சாகமான சத்தம், எல்லாவற்றையும் மறந்து மனதுக்குள் துள்ளிக்குதிக்க சொல்லுகின்றது. இருந்தாலும் நான் நல்லபிள்ளை என்று பெரியப்பாவுக்கு பாசாங்கு காட்டி அவரது வாகனம் மறையும் மட்டும் டாட்டா காட்டிவிட்டு, கர்ணன்களை நீண்ட நாள் பிரிந்த துரியோதனன்போல கத்திக்கொண்டே உள்ளே நுளைகின்றேன்.
ஆண்டு 4 ஏ கிளாஸ் நீண்ட நாள் காணாத தன் அன்பு செல்லங்களை கண்டு வாரி அணைப்பதுபோன்ற உணர்வு கிளாஸிற்குள் சென்றபோது உணரப்பட்டது.

என்ன கொடுமை என்றால் மாணவர்கள் 60 வீதமானவர்கள் வந்திருந்தார்கள், ஆனால் ஆசிரியர்கள் பெரிதாக வரவில்லை. ஆசை தீர விளையாடிக்கொண்டிருந்தோம். நேரம் ஒரு 10.30 மணியிருக்கும் பேரிடி காதுகளை பிளந்துகொண்டு விழுவதுபோல அடுத்தடுத்து கூவிக்கொண்டு மூன்று ஷெல்கள் விழுந்தன. புhடசாலைக்கு மிக அண்மையில்த்தான் அவை விழுந்திருந்தன. யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளே அவை.
ஆசிரியர்கள் குஞ்சுக்கோளிகளின் ஆபத்தறிந்து எகக்காலத்துடன் கொக்கரிக்கும் கோழிகள்போல எங்களை இழுத்துக்கொண்டு ஷெல் மற்றும் விமானத்தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அமைக்கப்பட்டிருக்கும் பங்கர்களுக்குள் (பதுங்கு குழி) எங்களை அவசரமாகத்தள்ளுகின்றார்கள்.
என்னடா என் வெள்ளை உடுப்பின் அரைக்கை மடிப்படியில் ஏதோ பிசுபிசுக்கின்றதே என்று உணர்ந்து என் முழங்கைக்கு மேலே பார்த்த நான் திடுக்கிட்டப்போனேன்.

அந்த இடத்தில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அரைக்கை வெள்ளைச்சட்டை சிவப்பாகிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த உடன்தான் எனக்கு வலிக்க ஆரம்பித்து.
அதற்குள் டேய்…ஜனா என்னடா இரத்தம் வருது! குண்டு பட்டுட்டா என்று மற்ற சினேகிதர்கள் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில்த்தான் எனக்கு வலிக்கவே ஆரம்பித்தது.

உண்மை என்னவென்றால் அந்தக்காயம் குண்டு அடிபட்டு வரவில்லை. அந்த பதுங்கு குழி வாசலில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு இரும்பு துண்டு கிழித்ததால்த்தான் அது ஏற்பட்டது என்பது சட்டென்று எனக்கு புரிந்தது.
பின்னர் என் அழுகைக்கு மத்தியில் மற்றவர்களுக்கும் அது புரிந்தது.

அன்றைய தினமே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒரு மாணவத்தலைவனாக இருந்த பொன்.விபுலானந்தன் என்ற மாணவன் கோட்டையில் இருந்து குண்டுமாரி பொழிவதையடுத்து விரைந்து சென்று மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு திரும்பும் பொழுது குண்டடிபட்டு தன் உயிரை தனது கல்லூரி மண்ணிலேயே விட்டிருந்தார்.

சரி..என் விடையத்திற்கு வருகின்றேன். கையில் இரத்தம் வழிந்துகொண்டிருக்க கிடைத்த ஒரு ஷெல் விழாத இடைவெளிக்குள் எனது பெரிய தந்தையார் வந்து என்னை அழைத்து சென்று ஒரு மருந்தகத்தில் காயத்திற்கு மருந்து கட்டிவிட்டார்.
வீட்டில் வந்து பெரும் மனக்குழப்பத்துடன் பத்திரமாக இருந்தேன்.
இப்போதைக்கு ஸ்கூலுக்கு போகவேண்டாம் என்ற ஒருமித்த கட்டளை வீட்டில் விழுந்தது.

மறுநாள் வேறு வழியில்லை. வீட்டில் இருக்கவும் பைத்தியம் பிடித்தது. எனது மைத்துனன் ஒருவன் லைபிரரிக்குப்போறேன் வாரியா? என்று வீட்டில் வந்து கேட்டான் அவன் 8ஆம் வகுப்பு படிப்பவன், நான் அரைவாசி.
அவனுடன் போவதென்பதால் பத்திரமா கூட்டிப்போய் வா என்று அவனிடம் என்னை ஒப்படைத்தனர். அப்போ நல்லூர் கோவிலுக்கு பின் புற வீதியில், போராளி ஒருவரின் பெயரில் ஒரு படிப்பகம் இருந்தது. அங்குதான் கூட்டிப்போனான்.

புத்தகங்கள் மீது எனக்கு காதலை ஏற்படுத்திய முதலாவது சம்பவம் அது. என்னை விட்டுவிட்டு, அவன் கற்கண்டு சஞ்சிகையை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். நான் அங்கிருந்த புத்தங்கள் ஒவ்வொன்றையும் பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அங்கே எனக்கு அந்த வேளைகளில் பிடித்தமான “கோகுலம்” புத்தகம் இருக்கா என்று தேடினேன். அதில் வரும் 16 பக்க வண்ணக்கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கே அது இல்லை. பெரும்பாலும் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களே தொகையாக இருந்தன.

நமக்கு காரியம் ஆகாது! என்ற எண்ணத்துடன் அங்கிருந்த சட்டம் ஒன்றில் சாய்ந்துகொண்டே வீதியில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது என் பின் புறமிருந்து வாஞ்சையாக ஒரு கை என் தலையை தடவிவிட்டது. திரும்பி பார்த்து பிரமித்து நின்றேன்.
என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.

சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்.

- இலைகள் உதிரும் -

Tuesday, May 3, 2011

ஹொக்ரெயில் - 03.05.2011

சுஜாதா 76
எழுத்து துறையில் மூன்று தலைமுறை இளைஞர்களை கட்டி இழுத்துவைத்திருந்த வியப்பான ஒரு எழுத்தாளர், அதிலும் தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்னும் எஸ்.ரங்காநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மனிதன்தான்.
ஆம்..இன்று தமிழ் எழுத்துலகத்தை விட்டு மறைந்தாலும் எப்போதும் தனது படைப்புக்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று.
சுஜாதா ஒரு சிறுகதை, நாவல், துப்பறியும் கதை, குறுநாவல், இலக்கிய ஆராய்வு, விஞ்ஞானக்கதை, விஞ்ஞானப்புனைகதை, அறிவியல் தர எழுத்தாளர் என்பதையும் கடந்து அவர் ஒரு பொக்கிசமான தகவற்களஞ்சியம் என்பதே யதார்த்தமானது.
“ஜெனரேசன் கப்” என்பது தனக்கும் தலைமுறை கடந்த வாசகருக்கும் இடையில் சற்றும் விழுந்துவிடாது இறுதிவரை காத்துக்கொண்டமையே பெரும் ஆச்சரியமாக உள்ளது.

சுஜாதாவினுடைய எழுத்தை இரசிப்பவர்களுக்கு, போனசாக அவரால் பல்வேறு பட்ட தகவல்களும், அறிவியலும், ஏன் சிக்கலான சில கோட்பாடுகளும் கூட, புளிப்பு மிட்டாயில் இனிப்பு தடவி கொடக்கப்பட்டு செரித்துக்கொண்டதுபோல பல தகவல்கள் கிடைத்துவிட்டிருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மை.

அடுத்து நேர்த்தியான ஒரு வாசித்தலுக்கு வாசிப்புத்துறைக்கு ஒரு சிறந்த ஹைடாகக்கூட சுஜாதாவின் எழுத்துக்கள் இருந்திருக்கின்றமை வெட்ட வெளிச்சம்.
சுஜாதாவால் பல அருமையான படைப்புக்கள் மேற்கோள் காட்டப்பட்டு, அல்லது ஏதாவது ஒரு பகுதியில் கூறப்பட்டு வாசகர்கள் அதையும் படிக்கவேண்டும் என்ற தனது ஆவலை ஆங்காங்கே வெளிப்படுத்தியிருப்பார்.
ஜெஸ்… சுஜாதா சுஜாதாதான். வேறு உவமைகள் கிடையாது.

உலகப்பத்திரிகை சுதந்திரம்!
உலகத்தின் முகத்தை உலகம் பார்க்க ஒரு காலக்கண்ணாடியாக இருப்பதே பத்திரிகை. உலகின் போக்கையே மாற்றக்கூடிய சக்தி இந்த பத்திரிகைகளுக்கு உண்டு என்றால் அது மிகை இல்லைத்தான். காலச்சக்கரத்தில் பத்திரிகைகளாலேயே பல ஆட்சிகள் கலைந்து போயிருக்கின்றன, பல வழக்குகள், நியாயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன, பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன, இத்தனையும் ஏன் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் ஆன்மக்குரலாக பத்திரிகைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓங்கி ஒலித்திருக்கின்றன என்பதற்கு வரலாற்றின் சுவடுகள் சாட்சி.

வளர்ந்த நாடுகளில் தற்போது பத்திரிகை சுதந்திரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பேணப்பட்டுள்ளது என்பதற்கு தற்போதைய நடைமுறைகளே சாட்சியாக இருக்கின்றன. ஆனால் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாக இருப்பது மூன்றாம் உலக நாடுகளில்த்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் சில இடங்களில் பத்திரிகைச்சுதந்திரத்திற்கு மிலேசத்தனமான அடக்குமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளில் பல ஊடகவிலாளர்கள் கொலை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, ஏன் நேரடியாக உயர் மட்டங்களால் எச்சரிக்கவும் பட்டு வருவது வேதனையானது என்பதுடன் கேவலமானதும் கூட.

ஒருநாட்டின் வளர்ச்சியை கணிப்பிடுவதற்கு முக்கிமாக அந்த நாட்டின் பத்திரிகை சுதந்திரமும் கணிக்கப்படவேண்டும் என தற்போது ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் ஏகமனதாக வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.
இதேவேளை இந்த பத்திரிகை சுதந்திரத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் விதமாக இன்று பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு கட்சியினரும் தமக்கான பத்திரிகைகளையும், பிற ஊடகங்களையும் வசப்படுத்தி வருகின்றமை மறுபுறத்தே பெரு வேதனையையே தோற்றுவிக்கின்றது. பத்திரிகா தர்மம் என்பதையே இவை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளாகவே கருத்தப்படவேண்டும்.

உண்மையில் எந்த ஒரு நாடு ஊடகசுதந்திரத்தை அடக்க முனைகின்றதோ அந்த நாடு 100 ஆண்டுகள் பின்னோக்கிப்போக தலைப்படுகின்றது.
இன்று உலக பத்திரிகை சுதந்திர தனம்.

இன்றைய காட்சி
மரினாவில் இன்னும் கிரிக்கட் விளையாடத்தடையா?

ஹசானின் கெட்ட நேரமா! இலங்கை கிரிக்கட்டின் கெட்ட நேரமா!!
ஆட்ட நிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள், நாடுகளின் தலைகள் உருளத்தொடங்கி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்கூட, ஸ்ரீ லங்கா அணி தொடர்பாக இதுவரை பெரிதாக ஒரு ஆட்ட நிர்ணய சதி குற்றசாட்டுகளும் எழுந்ததில்லை. அந்த அளவுக்கு கனவான் விளையாட்டை, கனவான் தனமாகவே இலங்கை கிரிக்கட் கடைப்பிடித்து வருவதாகவே பலரினதும் அபிப்பிராயங்கள் இருந்து வந்தன.

இருந்த போதிலும், கடந்த உலகக்கோப்பை இறுதி போட்டி, பல தரப்பினர் மனதிலும் சிறிய சந்தேகங்களை உருவாக்கிவிட்டது என்பது உண்மைதான்.
அடுத்தடுத்த இராஜிநாமாக்களும், விலகல்களும், சிரேஸ்ர வீரர்களின் சலிப்பான பேட்டிகளும் இதற்கு மேலும் தூபம் போட்டுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஹசான் திலகரட்னவின் கருத்து திடீர் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

இந்த நிலையில் ஹசானுக்கு ஆதவரவான குரல்களும் எதிரான குரல்களும் எழும்பத்தொடங்கிவிட்டன. இந்த நிலையில் சற்றுமுன் வந்த செய்திகளின் படி ஸ்ரீ லங்கா புலனாய்வுப் பிரிவினரால் ஹசான் இதுதொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னமோ ஏதோ..பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், இது ஹசானின் கெட்டகாலமா அல்லது ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கெட்டகாலமா என்று!

இந்த வாரவாசிப்புக்கள்.
இந்த வார வாசிப்புக்காக குறிப்பாக முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், நிர்வாகம் சம்பந்தமான புத்தகங்களையே வாசித்துக்கொண்டிருக்கின்றேன். (மை பெஸ்ட் ஸ்ரெப், டெவலெப்மென்ட் போர் ஈச் அதர்ஸ், கவ் ரூ கிளியர் யுவர் ஓன் வே.. என்பன அவற்றில் சில)
இருந்த போதிலும் கைவசம் வாசித்தவைகள் தவிர தமிழில் இது சம்பந்தமான புத்தகங்கள் கிடைப்பது அரிதாகவே இருப்பதால் இணையத்தேடுதலுக்கு போனால்,

ஈ புத்தகங்களாக சில கிடைக்கின்றன. ஏற்கனவே வாசித்தவைகள்தான் பெரும்பாலும்.
என்றாலும் கூட “சவாலே சாமாளி” என்ற ஆடியோ புத்தகத்தை தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.
இவற்றை படிப்பதில், கேட்பதில் இன்ரஸ்டிங்காக இருப்பவர்கள் கீழே கிளிக் பண்ணி அதை தரவிறக்கலாமே…

மியூசிக் கபே
மழைதருமோ என்ற கேள்வியுடன் ஆரம்பித்துவிட்டு மனதுக்குள் மெலடி மழை தூவிவிட்டு போகின்றது இந்த பாடல்.

இந்தவாரப்புகைப்படம்
இன்றைய ஊடக சுதந்திர தினத்துடன் தொடர்பு பட்ட கொலம்பியாவை சேர்ந்த பத்திரிகையாளரே இவர். ஆண்டு தோறும் இவர் பெயராலேயே சிறந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு யுனஸ்கோ விருது வழங்கி கொளரவிக்கின்றது.
இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.

ஜோக் பொக்ஸ்
வீடுகளில் பெரும்பாலும் டி.வி ரிமோட் யார் கையில் இருக்கும் என்று ஒரு பாலர் பாடசாலையில் ஒரு சர்வே எடுத்தாங்க..
அதில பெரும்பாலான மாணவ மாணவிகள் அம்மா கையிலதான் என்று தெரிவித்திருந்தாங்க சரிதான்..சர்வே முடிவு நூறு வீதம் அம்மாக்கள் கையிலதான் ரிமோட் என்று எழுதப்போகும் நேரத்தில ஒரு பையன் அவசரமாகச் சொன்னால் எங்க வீட்டில டி.வி. ரிமோட் அப்பா கையிலதான் இருக்கும் என்றான்..
ஆச்சரியமாக அப்படியா என்று சர்வே எடுக்கவந்தவர் கேட்டு முடிப்பதற்குள் சொன்னான்..
ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இருக்கு!

Monday, May 2, 2011

இவர்கள் இப்போ என்ன செய்கின்றார்கள்?

அஜய் ஜடேஜா

1992 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரை இந்திய கிரிக்கட் அணியில் இடம்பிடித்திருந்தவர் அஜய் ஜடேஜா. ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இவருக்கு போட்டிகளில் விளையாட ஐந்தாண்டு தடை டில்லி உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.
ராஜ்புட் அரச வம்சத்தில் பிறந்த அஜய் ஜடேஜா, குறிப்பாக 1994 -1999 ஆண்டு வரையான காலத்தில் பிரகாசமாக ஜொலித்தவர் என்பதுடன் பெரும்பாலான பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்ததுடன், பெருமளவிலான விளம்பரங்களிலும் சச்சினை முந்திக்கொண்டு நடித்துக்கொண்டிருந்தார்.
15 ரெஸ்ட் மற்றும் 196 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 2000 ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போட்டியின்பின்னர் அவரது, கிரிக்கட் வாழ்வு திடீர் என்று அஸ்தமனத்திற்குள்ளாகி காணாமற்போயிருந்தார்.

அதன் பின்னர் அடிக்கடி வெளிநாடுகளில் தங்கி நின்ற ஜடேஜா, 2003முதல் 2005ஆம் ஆண்டுவரை ஜம்மு காஸ்மீர் அணிக்காக விளையாடி வந்தார், அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2006வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார், அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல் போட்டிகளை என்.டி.ரியில் தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக வந்து முகம் காட்டினார்.
அதற்கும் சிலர் மத்தியில் இருந்து பாரிய எதிர்ப்புக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தற்போது அவர், முதலீட்டு வர்த்தகம், மற்றும் ரியல் எஸ்ரேட் என்பவற்றில் பெரியளவில் முதலீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக்ஹெய்ல் கொர்ப்பச்சேவ்

உலகம் இரு வல்லரசுகளின் கீழ் இருந்த காலத்தின் ஒரு வல்லரசின் தலைமை கதாநாயகனாக இறுதியில் இருந்தவர்.
சோவியத் யூனியன் என்ற பரந்துபட்ட பூமி சிதைவுறும் வரை 1985 முதல் 1991ஆம் ஆண்டுவரை அந்த இணைந்த தேசத்தின் தலைவராக கொலுவீற்றிருந்தவர் கொர்ப்பச்சேவ்.
ஒரு இலட்;சியத்தை நோக்கிய நீண்டகால தூரநோக்கான பயணியாக கொர்ப்பச்சேவை குறிப்பிடுகின்றது உலகம்.
பிறப்பு அடையாளங்கள் (பேர்த் மார்க்) பற்றிய உதாரணமாகவும் அவரே (அவரது தலையில் உள்ள பிறப்படையாளம்) முன்லை பெறுகின்றார்.

சோவியத் ஜூனியனின் சிதைவுக்கு பின்னதான காலங்களில் ஆடிய கால் சும்மா இருக்காது என்பதற்கு தக்கவாறு பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கத்தவராக இருந்ததுடன், மீண்டும் ஒரு வலுவான தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்த பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இருப்பினும் 2003ஆம் ஆண்டு புதிய கட்சி (ரஷ்ய சமுக ஜனநாயக கட்சி) முன்னிறுத்தி தேர்தலில் செல்வாக்கு செலுத்த எடுத்த முயற்சியும் பலிக்காது, 2007 ஆம் ஆண்டு அந்த கட்சி ரஷ்ய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் தனது மனைவின் பெயரில் தர்ம ஸ்தாபனம் ஒன்றை அமைத்து கொஞ்சம் சமுகசேவைப்பக்கம் அக்கறை காட்டினார்.
கடந்த (2010) ஒக்டோபர் 27 அன்று தனது 80ஆவது பிறந்தநாளை லண்டனில் விமர்சையாக கொண்டாடியுள்ளார் கொர்ப்பச்சேவ்.
தற்போதும் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளுடன் மொஸ்கோவில் வசித்துவருகின்றார்.

டி.ஆர்.கார்த்திகேயன்

தமிழ்நாட்டை சேர்ந்தவா.; இந்தியாவாலும் குறிப்பாக தமிழர்களாலும் மறந்துவிட முடியதவரும்கூட. ஏற்கனவே பல்வேறு சாதனைகளை புரிந்தவர் இவர் என்றாலும்கூட ராஜீவ் காந்தி கொலை வழங்கு மூலம் மேலும் பிரபலம் பெற்று ஜொலித்தவர். விசாரணைகள் தொடங்குமுன்னமே இதை செய்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்று முன்கூட்டிய முடிவுடன் செயற்பட்டு, மேலிட அழுத்தங்கள், சுய விஸ்வாசங்களால் தான் நினைத்தபடியே அந்த கொலை கேஸை தன் இஸ்டப்படியே நகர்த்தியவர்.
என்று நான் சொல்லலையுங்க இவருக்கு அடுத்த நிலை அதிகாரியாக இருந்த ரதோத்தமன் இப்படி கூறியிருக்கின்றார். அதேவேளை விடுதலைப்புலிகள் கருவிகளாகவே பயனப்டுத்தப்பட்டிருந்தனர் எனவும் ஏவியவர்களை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளுக்கு கார்த்திகேயன் பெரும் தடையாக இருந்ததாகவும் இவருடன் பல அதிகாரிகள் முரண்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இவர் மொஸ்கோ, நியுஸிலாந்து, புஜி ஆகிய தேசங்களின் இந்திய தூதரக செயலாளராக கடமையர்றியதுடன், தற்போது இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.

ராஜீவ் மேனன்

இந்தியாவின் தலைசிறந்த சினிமோட்டோகிரபர், சிறப்பான விளம்பர பட இயக்குனர், மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற கலர்புல்லான திரைப்படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன்.
இப்போதும் பிரபல கம்பனிகளின் விளம்பரங்கள், ஏன் இந்திய அரசாங்கத்தின் வரி விளம்பரம் என பல சிறப்பான விளம்பரங்களை இயக்கிவருகின்றார்.
அத்தோடு மிட்ஸ்கிறீன் பிலிம் இன்ஸிரியூட் என்ற நிறுவனத்தின் ஊடாக பல இளைய திறனாளர்களை உருவாக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதமூரான்

இலங்கைப்பதிவர்களில் மிகக்காத்திரமான யதார்த்தநிலை மற்றும் நடுநிலையான தரத்தில் நின்று காத்திரமான பதிவுகளை எழுதிவந்தவர்.
அரசியல், சினிமா, இலங்கியம், சமுகம் என்று மிக இயல்பாக அதேவேளை கனதியான பார்வையுடன் தனது பதிவுகளை தந்துவிடுவது இவரது சிறப்பியல்பு.
நீண்ட காலமாக பதிவுலகப்பக்கம் காணமுடியாத இவரை தற்போது மூஞ்சிப்புத்தகத்தில் தர்க்க ரீதியான பல பிலோசொபிக்கல் டாப்பிக் விடயங்களுடன் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
இருப்பினும் மிகத்தரமான அச்சு இதழ் ஒன்றை வெளியிடும் வேலைகளில் மிக பிஸியாக இருப்பதாக அறியமுடிகின்றது.(மருதமூரானுக்கு மட்டும் ஹி..ஹி..ஹி..)

Thursday, April 28, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள்…. 04


அந்த பேரிரைச்சல் தமிழர்களின் போராட்ட வலுவின் புதியதொரு உத்வேக பரினாமமாக கேட்டு, தென்னிலங்கையை நடுங்கவைத்தது. ஜூலை மாதம் 05ஆம் நாள் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தின் மூலம் ஈழத்தமிழரின் போராட்ட வலு உச்சம் கண்டுள்ளது என உலகம் வியந்துபார்த்தது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஒன்றே.

மறுமுனையில் இந்தியா, இலங்கையினை தனது வலைக்குள் விழவைப்பதற்கான திட்டங்களை செவ்வனே தீட்டிக்கொண்டிருந்தது. அதேவேளை அரசியல் தந்திர சாலியான ஜூலியன் ரிச்சர்ட் ஜெயவர்த்தன என்ற இயற்பெயர் கொண்ட அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அந்த வலையினை வெட்டி தன் வலைக்குள் இந்தியாவையும், தமிழ் போராட்ட குழுவையையும் ஒருமிக்க முடிய சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார்.

சரி… என் பார்வைக்கு வருகின்றேன்…
இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும்போது திடீர் என மாலை மங்கும் பொழுதில் ஒருநாள் யாழ்நகரின் கிழக்கு பகுதியில் போர் விமானங்கள், ஹெலி கொப்ரர்களின் சஞ்சாரம் திடீர் என்று அதிகரித்தது. இரண்டு தரப்பினரிடையிலான துப்பாக்கிச் சூட்டு பரஸ்பர வேட்டுக்கள் அந்த பகுதியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அதே பிரதேசத்தை நோக்கி சியாமா செட்டி விமானங்கள், அவ்ரோ விமானங்கள், இரண்டு ஹெலிகொப்ரர்கள் என அதே பரப்பினை மையமிட்டே இடைக்கிடை தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தது.

அந்த பகுதியில் அப்போது இருந்த ஸ்ரீ லங்கா இராணுவத்தின் நாவற்குளி இராணுவ முகாமை அண்டிய பகுதியில் துருப்பு காவி விமானம் ஒன்று பழுதடைந்த நிலையில் தரைதட்டியுள்ளதாகவும், அதை அழிப்பதற்கு போராளிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதை எதிர்த்தே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தன.
அந்த நாளில் இருளின் மையத்தில் விமானங்களின் விளக்குகளின் அணிவகுப்பு இப்போதும் என் கண்களுக்குள் நிற்கின்றன.
இருந்த போதிலும், வான்படையினரின் உதவியுடன், இராணுவத்தினர் போராளிகளின் எதிர்த்த தாக்குதல்களை சமாளித்தவண்ணம் விமானத்தை பாதுகாப்பாக நாவற்குளி முகாமுக்குள் இழுத்து சென்றுவிட்டனர்.

இவ்வாறான சம்பவங்களுடனேயே ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் கறுப்பாகவே இருக்கும் ஜூலை மாத முற்பகுதி சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் மறுமுனையில் இந்தியாவுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைநோக்கி பல் இழிக்க ஆரம்பித்தது. இந்த வேளையில் அப்போதைய செய்திகளில் முதற்கட்டமாக இந்தியாவின் சிறப்பு தூதுவர்கள் வருகை தரவுள்ளதாக செய்திகள் வரத்தொடங்கின.

பூரி, குப்தா வருகை
இந்தியாவின் உதவிப்பொருட்களை இப்போது இலங்கை அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் கொண்டுவருவதாகவும், அதேவேளை இந்தியாவின் முதற்கட்ட தூதுவர்களாகவும், போராளிகள், மற்றும் அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்த
கர்த்தீப் பூரி, கப்டன் குப்தா அகியோர் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டனர் என இந்திய செய்திகள் சொல்லின.

உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்றனர்தான். ரீயூசன் முடிந்து வீட்ட போகும்போது நல்லூருக்கு முன்னால் என்னடா சனம் என்று தண்ணி தொட்டியில் ஏறி நின்று எனது கண்களால் இந்த புண்ணியவான்களை பார்த்திருகின்றேன்.
யார் வந்தாலும் நம்பி வளவளக்கிறதுதானே எங்கட சனத்தின்ட பழக்கம், சில அம்மாமார், மொழிதெரியாதை இவையிட்ட, “அப்பனே ராசா நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும்!!! ஷெல்லால அடித்து சாக்கொல்லுறாங்கள், பொம்மறாலை வானத்திலை நிண்டு அடித்து கொல்லுறாங்கள், கடலிலை வந்து நின்று அடிக்கிறாங்கள், பட்டினி போடுறாங்கள், எத்தனை பேர ராசா நாங்கள் காவு கொடுத்துவிட்டு நிற்கிறம் என்று சொல்லி ஆழதிச்சினம்”.

பூரியும், குப்தாவையும் சும்மா சொல்லக்கூடாது, சீரியஸாக படு சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அந்த அம்மா மாரை ஆறுதல் படுத்திவிட்டு லான்ஸர் காரிலை ஏறி கிழம்பினார்கள்.

மறுநாள் இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய சம்மதித்துள்ளதாகவும், இந்திய பிரதமர் ராஜீவின் பணிப்பின்பேரில் போராட்டக்குழுத்தலைவரை டில்லிக்குவர அவர் அழைத்துள்ளதாக இவர்கள் இரண்டுபேரும் தெரிவித்துள்ளதாகவும் செய்தி இதழ்கள் தெரிவித்தன.

சிங்களவன் பயந்திட்டான் கண்டியோ! இந்தியா எண்டால் சும்மாவே!! பாரான் என்ன நடக்கப்போகுதென்று, ஏதோ இந்தியா நல்ல ஒரு முடிவை தரப்போகுது எண்டது சந்தோசம்தான்..என்று இப்போது போல அப்போதும் எங்கட பேய்த்தரவழிகள் கதைச்சுக்கொண்டுதான் இருந்திச்சுதுகள்…

இலைகள் உதிரும்…

Tuesday, April 12, 2011

ஹொக்ரெயில் - 12.04.2011

ரஜினி ஜோக்கும் ஹிந்தி குரோதமும்.

தற்போது வட இந்தியாவில் ஷர்தாஜி ஜோக்குகளுக்கு சமனானதாக ரஜினி ஜோக்ஸ் என்ற தொனியில் எஸ்.எம்.எஸ்கள், வலைப்பதிவுகள், நகைச்சுவை இணையசெய்திகள் என்பன பிரபலமடைந்துவருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள், ரஜினி ரசிகர்களை பெரும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான ஜோக் ஒன்றை பாலிவூட் சுப்பர் ஸ்ரார் அமிதாப் பச்சன் தன் ரூவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பவே,
தான் ரஜினியை கேவலப்படுத்தும் விதமாக அதை பகிரவில்லை என்றும், அவர் எப்போதுமே தனது பெருமதிப்புக்குரிய நண்பர் என்றும் தெரிவித்துக்கொண்டதுடன், அதற்காக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இருந்தபோதிலும் இவ்வாறான ஜோக்குகள், ரஜினி ஜோக்குகள் என்ற விடயப்பரப்புக்குள் வந்தமை, ஹிந்தி மேலாதிக்க குரோத மனப்பான்மையின் வெளிப்பாடு என்பதையே தெளிவாக காட்டுகின்றது.


எந்திரன் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் சிகரத்தை தொட்டுக்கொண்டமையும், ரஜினிகாந்த் என்ற தென்புல நடிகர் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தன்னை நிலைநாட்டிக்காட்டியமையும், வடக்கு பக்கம் எப்போதும் உள்ள குரோதத்தை மீண்டும் காட்ட வழிகோலியுள்ளமையின் வெளிப்பாடாகவே இதை கருத்தில் கொள்ளமுடிகின்றது.
80களின் ஆரம்ப காலங்களிலேயே தென்னிந்திய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்பவர்கள் ஹிந்தியிலும் வெற்றிகளை குவித்தபோது அதை பொறுக்காது திட்டமிட்டு அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்த குரோத நெஞ்சங்கள் அல்லவா அவர்கள்!

எந்தகால கட்டத்திலும் தெற்கின் பெருவளர்ச்சியையும், விஸ்வரூபங்களையும் வடக்கு ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ போவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகியுள்ளது.
அத்தோடு இப்போது ரஜினி போல உள்ள “பேவரிட் ஹீரோ” ஒருவர் கிரிக்கட் ஆடி அத்தனை பந்துகளையும் எல்லைக்கு வெளியே அனுப்புவதுபோன்ற விளம்பரம் ஒன்றையும் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது.
திராவிடத்தின் வளர்ச்சிகண்டு ஆரியம் கொதிப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லையே!!

வீழ்வது யாராகினும் வாழ்வது நானாகட்டும்!!

நாளை தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது அனைவரின் ஆர்வத்தையும் அந்தப்பக்கம் திருப்பியுள்ளது.
மக்களுக்கான நலத்திட்டங்கள், பாரிய சவால்மிகுந்த பொருளாதார பாதைக்கு முகம்கொடுத்து முன்னேற்றகரமான திட்டங்களை முன்வைத்து, மக்களை வளப்படுத்தும் நலத்திட்டங்களை யாராவது அறிவிப்பார்களா? என்று பார்த்தால், மாறிமாறி வசைபாடுவதே முக்கியம் பெற்றுள்ளது இன்னும் ஏனைய சமுதாயங்களை எட்டிப்பிடிக்க நாம் எவ்வளவோ தூரம் செல்லவேண்டி உள்ளது என்பதையே காட்டி நிற்கின்றது.
ஏதோ மக்கள் சக்தியே அரசியல்வாதிகளின் புண்ணியத்தில்த்தான் ஓடிக்கொண்டு இருப்பதுபோன்ற கட்சிக்காரர்களின் விளம்பரங்களை கண்டு அடக்கமுடியாத ஆத்திரம்தான் ஏற்படுகின்றது.


தமிழர்களை ஏனைய இனங்கள்தான் அடக்கவும், ஒடுக்கவும், கேவலப்படுத்தவும் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றார்கள் என்று பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகள்தான் அவ்வாறான ஏனையவர்களின் சிந்தனைகளுக்கு வழிகோலிநிற்கின்றனர் என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றனர்.
மமுக்கள் கூட்டம் ஒரு ஆட்டுமந்தைபோலவும், தாமே தேவலோக மீட்பர்களாகவும் எண்ணும் எண்ணங்கள் மக்களால் சரியான முறையில் கழையப்படவேண்டும்.
கட்சி, அரசியல், அரசு என்பன மக்கள் சேவர்களே தவிர மக்கள் அவர்களின் சேவகர்கள் அல்லர்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் “வீழ்வது நாமகினும் வாழ்வது தமிழாக வேண்டும்” என்று சொன்ன திருவாய்… இன்று (இன்று அல்ல என்றும்) வீழ்வது யாராகினும் வாழ்வது நானும் என் குடும்பமும் ஆகட்டும் என்று வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது தமிழ்நாட்டின் சாபக்கேடே.
அதைவிடச்சாபக்கேடு இந்தப்பக்கம் முதலை, அற்தப்பக்கம் கொடுநாகம் என்ற தலையெழுத்தே இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு!

இன்றைய காட்சி

கல்யாணம்…கல்யாணம்…

ஆயிரம் கல்யாணம் உலகத்தில் நடக்கலாம் ஆனால் ரோயல் கல்யாணம், பிரமாண்ட கல்யாணம் அல்வா?
இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளது இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - ஹேட் திருமண நிகழ்வுக்கு. உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் திருணம் என்றால் சும்மாவா என்ன?
இந்த நிலையில் அண்மையில் திருண நிகழ்வுகள் சம்பந்தமான நிகழ்வொழுங்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி
எதிர்வரும் 29 ஏப்ரல் (நிகழும் கர வருடம், சித்திரை 15, வெள்ளிக்கிழமை சுவாதி நட்சத்திரமும், மிதுன லக்கினமும், கூடிய சுபமூகூர்த்த வேளையில்! ஹி..ஹி..ஹி..) இலண்டன் வெட்மின்ஸ்ரர் அபேயில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
0830 BST (0730 GMT; 3:30 a.m. EDT): பிரதம விருந்தினர்கள் வெட்மின்ஸ்ரர் அபேயில் ஒன்று கூடுவர்.
110 a.m. BST (after 0900 GMT; 5 a.m. EDT): ரோயல் குடும்பத்தினர் நிகழ்விடத்திற்கு வந்து சேருவர். இறுதியாக மகாராணி இரண்டாவது எலிசபெத்தும் கோமகனும் வந்து சேர்வார்கள். இறுதியாக மணமக்கள் இளவரசர் ஹரியால் அழைத்துவரப்படுவர்.
1100 BST (1000 GMT; 6:00 a.m. EDT): மணமக்கள் அறிமுகத்துடன் திருமண நிகழ்வுகள் இடம்பெறும்.
1215 BST (1115 GMT; 7:15 a.m. EDT): இளவரசர் வில்லியம் தனது புதுமனைவி சகிதம் அபேயில் இருந்து பக்கிங் காம் அரண்மனைக்கு பவனிசெல்வார்.
1325 BST (1225 GMT; 8:25 a.m. EDT): புதுத்தம்பதியினரும், குடுபத்தினரும் அரண்மனை பல்கனியில் ஒருமித்து காட்சியளிப்பார்கள்
1330 BST (1230 GMT; 8:30 a.m. EDT): உள் அரங்கில் மகாராணி தலையில் விருந்தினருக்கான உபசரிப்புக்கள் நிகழும்.
எனவே அன்றையதினம் அனைவரும் இந்த நிகழ்வகளை பி.பி.ஸி, ஸ்கை போன்ற தொலைக்காட்சிகளில் பார்த்து மணமக்களை ஆசீர்வதித்து விசேடமாக உங்கள் வீடுகளிலேயே சiமைத்து உணவருந்தும்படி அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனவாம் 

மியூசிக் கபே
சுஜாதா…தமிழ் சினிமாவில் கண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நடிகை. ஆரம்ப காலங்களில் அவர்கள், அவள் ஒரு தொடர்கதைபோன்ற கே.பியின் படங்களில் நிலைத்து நின்று பெயர் சொல்லும்படியான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஒரு அற்புதமான நடிகை.
இன்றும் நினைவில் நிற்கும் “விதி”, “அந்தமான் காதலி” போன்ற படங்களில் தனககேயான தனிமுத்திரை பதித்து சென்றவர்.
அவருக்கு அஞ்சலியாக இந்தப்பாடல்…

இந்தவார வாசிப்பு

எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
எனக்கு மிகத்தேவையானதொரு புத்தகம் என்று தேடி வாங்கி வாசித்துக்கொண்டதல்ல, மனதில் நிறுத்திக்கொண்ட புத்தகம் இது.
வாழ்க்கையில் பலதரப்பட்டவர்களுடன் நாம் பழகிவருகின்றோம், அவர்களில் தாராளமாக எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை சந்திக்கவேண்டி வரும். இந்த நிலையில் அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் எப்படி வெற்றி கொள்வது என்பதே நமக்கு சிக்கலை தோற்றுவித்துவிடும்.
அந்த வகையில் இந்த நூலின் ஆசிரியர் அபிராமி யதார்த்தமாக மிக இலகுவான நடைமுறையில் பல விளக்கங்களுடன் பல தகவல்களை ஆணித்தரமாக தந்துள்ளார்.
சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும் என்பதுடன், வாழ்வின் தடங்கல்களாக நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணக்காரர்களை விரோதித்துக்கொள்ளாமல், அவர்களையும், அவர்களது கருத்துக்களையும் வெற்றி கொள்வது எவ்வாறு என்பதையும் மிக தெளிவாக கூறியுள்ளார் அபிராமி.
கண்டிப்பாக வாசித்துப்பாருங்கள்.

இன்றைய புகைப்படம்


ஜோக் பொக்ஸ்
இரண்டு கைராசிக்கார திருடர்கள், ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதிவாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில் ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்றுகொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ பொலிஸாருக்கு தெரிந்து அடுத்த ஸ்ரேசனில் இவர்களை பிடிக்க பொலிஸார் ஆயத்தமாக இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே பொலிஸாரை பார்த்துவிட்ட திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும் இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர். ஒருவன் தனது யடாமுடியினுள் வைரத்தை ஒழித்துவைத்தான், மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்.

சோதனை போட்டுக்கொண்டு வந்த பொலிஸார் இவர்களிடம் வந்ததும், இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து யடாமுடிக்குள் வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர். முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும் “அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்றதிருடனைப்பார்த்து கண்ணடித்தான். மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பொலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு.. பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.

LinkWithin

Related Posts with Thumbnails