Saturday, December 31, 2011

அடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்!


இதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூபித்துக்காட்டுவது வருட இறுதிக்கணங்கள்தானோ என்று அப்பப்போ பெரும் சந்தேகங்கள் எழுந்துமறைவதுண்டு.

ஒவ்வொரு ஆண்டுகளும் எமக்குப்பருவகாலங்கள்போல கொடுத்துவிட்டுப்போகும் அனுபவங்களும் வேறு வேறானவையே. ஓவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களிலும் ஒவ்வொருவருக்குள்ளும் இனம்புரியாது தொற்றிக்கொள்ளும், ஒரு சிறு சோகமும், அடுத்த புதுவருடத்தை வரவேற்கும் குதூகலமும் எமக்குச்சொல்லிக்கொள்ளும் உளவியல்ப்பாடங்களாகவும் இருக்கலாம்.

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை நின்று நிதானித்து சற்று எம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், அடுத்த படியை எப்படி வைப்பது என்பதை தீர்மானிக்கவும் இந்த வருட இறுதிநாட்கள் சிறந்தவை என எல்லுனர்கள் வரையறுக்கின்றனர்.
இந்தவருடம் உலகுக்கு உரக்கச்சொன்ன விடயங்கள், மக்கள் கிளர்ச்சிகள், ஆட்சியார்களுக்கு எதிரான போராட்டங்கள், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜப்பான் சுனாமி, என ஏராளம். அதேபோல ஒவ்வொருவரினதும் சுய வாழ்;கையிலும், சந்தோசங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், இணைவுகள், இழப்புக்கள் என பல பல...

நாம் திட்டமிட்டு வாழ்ந்துவந்தாலும், உலக ஓட்டம் எவ்வாறு நகரும் என்று கணித்தாலும், உண்மையில் அடுத்த நொடி எமக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்கள் புதிர்கள் ஏராளம்... ஏராளம்....

இதோ வழமைபோலவே எமை நோக்கி வாசல்வரை வந்துவிட்டது 2012 என்ற ஆண்டு. (உலக அழிவு நிச்சயம் என்ற பீடிகையுடன் அதுவேறு)
எதிர்வரும் ஆண்டு வாசகர்களான உங்களுக்கு வசந்தங்கள் மட்டுமே கொடுக்கட்டும், எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என இயற்கையினை பணிந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.



ஸியேஸ்....
என்றும் அன்புடன்
உங்கள் ஜனா

Thursday, December 15, 2011

உன்னாலும் முடியும் தம்பி! - தொடர்ச்சி

ஓன்றை நிதானமாகக்கவனித்திருக்கின்றீர்களா? மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும்.
அதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.
அதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது.

இந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால்
எல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும்?

சில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள்.
முக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால் நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

திட்டம் 02 – பொற்சேமிப்பு
1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள்.
இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம்.
எனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள்.
மாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளார்கள்.
மாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும்.
நாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம்.
புதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.

திட்டம் 03 – காப்புறுதி
எங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை.
ஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நின்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது.
ஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி! என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி.

ஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும்.
அத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது.
இதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும்.

தோழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில்.
காப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும்.
இதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.


திட்டம் 04 – கடன்களை தவிர்த்தல்.
'கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு' என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், 'கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது.
அதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதவே உண்மை.

சரி....... இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம் என்று சொல்கின்றேன். இந்த திட்டங்களை இதை படித்த யாரோ ஒருவராவது கடைப்பிடித்து வாழ்வில் வெற்றிபெற்றால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருப்பேன்.
முற்கூட்டிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

Wednesday, December 14, 2011

உன்னாலும் முடியும் தம்பி!

'எதையும் பிளான் பண்ணி செய்யணும்' என்று போக்கிரி திரைப்படத்தில் வடிவேலு சொல்வது நகைச்சுவைக்காட்சி என்றாலும் அது எவ்வளவு சீரியஸான விடயம் என்பதையும் அந்த சிரிப்பின் ஊடே நாம் நினைத்துக்கொண்டோம் அல்லவா?
அன்றாடம் நாம் ஓய்வின்றி தூக்கமின்றி உழைக்க விளைவது வெளிப்படையாகச்சொன்னால் பணத்திற்காகத்தானே!
அப்படி என்றால் நாம் உழைக்கும் பணத்தை பற்றி எமக்கு என்ன பிளான் உள்ளது. அந்த பணம் எமக்கு எவ்வாறான விதத்தில் இலாபங்களை, உயர்வை சம்பாதித்து தரப்போகின்றது என்ற திட்டத்துடன் உழைப்பவர்களா நீங்கள்?

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தமது ஊதியம் தொடர்பில் எந்தவொரு பிளானும் இல்லாமலேயே செயற்பட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றது.
நான்கூட இதுபற்றி சில நண்பர்களிடம் கேட்டபோது 'என்ன பிளான் வேண்டிக்கிடக்கு எடுக்கும் சம்பளத்தில் 30 நாளையே ஓட்டுவது கஸ்டமாக உள்ளது என்று சலித்து கொள்கின்றனர்.

அனால் மறுபுறத்தே தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் நாளை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே தமது சேமிப்பு, முதலீடு, காப்புறுதி, மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் என்பவற்றில் பணத்தை போடுகின்றனர்.
அத்தோடு நிலத்திலும் தங்கத்திலும் தமது பணத்தைப்போட்டு இலாபத்தை ஈட்ட நினைப்பவர்களும் இப்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பெரிய விடயங்கள், பெருமெடுப்பிலான பண முதலீடுகள், தொன் கணக்கிலான தங்கமுதலீடுகள், இலட்சக்கணக்கான பங்குகளை வாங்கி விற்றல், கோடிக்கணக்கான காப்புறுதியை பெறல் போன்றவற்றை பின்னர் விரிவாகப்பார்ப்போம்.
இப்போது நாம் பார்க்கப்போகும் விடயம் ஜஸ்ட் எங்கள் மாதாந்த வருமானத்தைக்கொண்டு எங்கள் பணத்திட்டத்தை இடுவதைப்பற்றித்தான்.

இன்றே நமது என்று சொல்லிக்கொள்ளும் தைரியம்.
நாம் அனைவரும் வேலை செய்கின்றோம் உழைக்கின்றோம், அதற்கான வருமானத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எம்மில் பலபேர் அன்றாடம் காட்சியாக இருக்கின்றோம். அதற்கு மிகப்பெரும் முக்கிய காரணம் நமது மனம்தான். எம் எண்ணங்கள் எமக்கு மணி மனேஜ்மன்ட் பற்றி இடைக்கிடை பாடங்களை எடுத்தாலும்கூட மனம் அதை கேட்டுக்கொண்டிருப்பது இல்லை.
எடுக்கும் சம்பளத்தை ஒரு பைசா மிச்சமில்லாமல் அந்த மாதத்தை கொண்டு செல்பவர்களே தோற்றுப்போனவர்கள் என்றிருக்க இன்னொரு வர்க்கத்தினர் 15ஆம் திகதியுடனே கைகடிக்க தொடங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.
இது ஆரோக்கிமானது அல்ல என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் இப்போதுதான் நான் அப்படி ஆனால் நாளை நமதே என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் நம்முள் உண்டு.
நாளை நமதே என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் ஏன் என்றால் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர். பாடும்போது இன்றே 99 வீதம் அவர் கையில் இருந்தது மீத ஒரு வீதத்திற்காகவே அவர் நாளை நமதே என்றார். நாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா?


பலருக்கு வங்கிக்கடன், கிரடிட்காட், எல்லாம் இருக்கும், ஆனால் மந்திலி இன்கம் பிளான் அறவே கிடையாது. வங்கி, வீட்டு, வாகன கடன்களை கட்டுவதிலும், கிரடிட்காட் கடன்களை கட்டுவதிலும் அவர்கள் படும் அல்லல்களை நாம் எம் கண்ணுர்டே கண்டிருக்கின்றோம்.
முக்கிமாக கடன் என்பது எமது எல்லை என்ன? எமது மீளளிப்பு நிலமை என்ன? மீளளிப்புக்கு போதுமான காலப்பகுதியா? என்பற்றை கணித்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இவற்றை கருத்திற்கொள்ளாதுவிடின் கண்டிப்பாக திண்டாட்டங்கள் தொடரும்.

சரி... இந்தக்கட்டுரை வாசிப்பவர் யாரோ ஒருவருக்காவது பிரயோசனமாகி அவர் இந்த நிதி திட்டத்தை பின்பற்றினால் அதுவே என் திருப்தி.
நீங்கள் மாத வருமானம் 3000 ரூபா எடுப்பவராகவும் இருக்கலாம் 300,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவராகவும் இருக்கலாம்.
இதோ நீங்கள் செல்வந்தர் ஆவதற்கான மார்க்கங்கள் அல்ல, எப்போதும் பணக்கஸ்டம், சந்தோசம், தைரியம், நிதி ஸ்தரத்தன்மை தரப்போகும் மந்திரத்தை கற்றுக்கொள்ளப்போவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.
முடிந்தவரை படு ஸ்ரிக்காக இந்த திட்டங்களை உங்களுக்கு உகந்ததாக படுபவற்றை, அல்லது அத்தனை திட்டங்களையும் அடுத்த ஜனவரியில் புது வருடத்தில் இருந்து அமுலுக்கு கொண்டுவாருங்கள்.
எப்போதும் உங்கள் கை நிறைவானதாகவே இருக்கும்.

திட்டம் 01. கட்டாய சேமிப்பு.
உங்கள் வருமானம் உங்களுக்கானதே அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாத வருமானம் அந்த மாதத்திற்கு மட்டுமானது அல்ல.
மாத வருமானம் என்ற பெயரையே பலர் தவறாக புரிந்து வைத்திருப்பதே சேமிப்புக்கள், இல்லாதுபோவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
முனதில் திடமான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு புதிதாக ஒரு சேமிப்புக்கணக்கினை சிறந்த வங்கியில் திறந்துகொள்ளுங்கள், கண்டிப்பாக தயவு செய்து, ஏ.ரி.எம். கார்ட் அந்த கணக்கிற்கு வேண்டவே வேண்டாம்.
மாதம் உங்கள் வருமானத்தில் 30 வீதம் இந்த கணக்கில் கண்டிப்பாக விழுந்தே ஆகவேண்டும். அது எந்த கஸ்டம் வந்தாலும் பறவாய் இல்லை என்ற திடமான முடிவை எடுங்கள், இரண்டு ஒரு மாதங்கள் கஸ்டப்பட்டாலும் மூன்றாவத மாதத்தில் இருந்து பழக்கமாகிவிடும்.
உங்கள் அலுவலகத்தில் குறிப்பிட்ட இந்த 30 வீதத்தை மேற்படி வங்கி கணக்கிற்கு செலுத்தும் வசதி தொழில் தருணரிடம் இருந்தால் மேலும் சிறப்பானதாக இருக்கும்.

அத்தோடு. உங்களுக்கு கிடைக்கும் போனஸ்கள், மேலதிக வருமானத்தில் ஒரு பகுதி, ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை கழியாட்டங்களை கொண்டாடி பாழ்படுத்தாமல் இந்த கணக்கிற்கு தள்ளிவிடுங்கள்.
உங்கள் கண்முன்னாலே உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருப்பதை குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து நீங்கள் அவதானிக்க முடியும்.
முpக மக்கிமானது இந்த செமிப்பு ஒவ்வொரு இலட்சத்தை அடையும்போதும் உடனடியாக எடுத்து குறைந்தது மூன்று மூன்று கால நிரந்தர வைப்பு திட்டத்தில் இட்டுக்கொண்டிருங்கள். எந்தக்காரத்திற்காகவும் இப்போது எடுப்போம் பிறகு போடுவோம் என்ற சாத்தானின் தூண்டுதலுக்கு இங்கே ஆட்பட்டு விடாதீர்கள்.

அடுத்த கட்டமாக இன்னும் பணம் சேரத்தொடங்கியவுடன் சுமாராக ஒன்றரை வருடத்தில் இரண்டு இலட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிரந்தரவைப்புடன், வங்கி சேமிப்பு சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்ளுங்கள், அவசர நேரங்களில் இந்த சான்றிதழ் உங்களுக்கு வங்கி கடன் (உங்கள் பணத்தை மிள எடுக்காமலே) எடுக்க ஏதுவானதாக இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார். அவரும் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்தான். சேமிப்பு கணக்கு புத்தகங்கள் அத்தனை வங்கியிலும் வைத்திருக்கின்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது எல்லா வங்கி புத்தகங்களையும், ஏ.டி.எம் களையும் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசையினால்தான் அப்படி அடுக்கி வைத்திருக்கின்றார் போல என்று நான் நினைத்திருந்தேன்.

ஆனால் அவரது திட்டமோ வேறு விதமாக இருந்தது. அவரது சம்பளம் வர ஒரு புத்தகம், அன்றாட செலவுகளுக்கு ஒரு புத்தகம், குடும்ப மருத்துவத்திற்கு ஒரு புத்தகம், கல்விச்செலவுக்கு ஒரு புத்தகம், மனைவிக்கு, உணவுக்கு, கழியாட்டங்களுக்கு, உடைகள் கொள்வனவுக்கு, இப்படி என ஒவ்வொரு தேவைக்கும் செமிப்பு தவிர்ந்த பணத்தை இவ்வளவுதான் என்ற திட்டத்துடன் பிரித்து பிரித்து சம்பள நாளே போட்டுவிட்டு, தனது பேர்சில் சிறு தொகை பணத்தையே வைத்துக்கொண்டு அனைத்தையும் குறிப்பிட்ட கணக்குகளின் வங்கி காட்களையே பயன்படுத்தி வருகின்றார். இதன்மூலம் தன் பணச்செலவுத்திட்டம் பெருமளவு குறைந்ததாகவும் தான் சேமிக்க கூடியதாக இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகுமோ தெரியாது.

திட்டங்கள் தொடரும்...

Tuesday, December 13, 2011

அப்பா........

ஒரு மகளின் பார்வையில் அவளது அப்பா... அவளது கண்களுக்கும் மனதிற்கும் எப்படி எல்லாம் காட்சியளிக்கின்றார் உணர்வுடன் பாருங்கள்...

அப்போது தான் நான் பிறந்திருந்தேன் என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கின்றனர். என் அப்பாவின்; கைகளின் ஸ்பரிசம் பட்டவுடன் இறைவனை தொட்ட உணர்வு எனக்குள்ளே...
என்னை வாஞ்சையுடன் அணைத்த என் அப்பாவின் கண்;களில் இருந்து என் கைகளிலே விழுந்த ஆனந்தக்கண்ணீர் இப்போதும் என் கைகளை நனைக்கின்றது...

சுமார் ஒரு மாதம். என் உடல் சூழல் தட்ப வெப்பங்களை மறுதலித்தபோதெல்லாம் அதற்கான ஒத்த தன்மைகளை வருடிதந்துகொண்டிருந்தார் என் அப்பா...

ஏழு மாதங்கள், நான் மெல்ல மெல்ல தவண்டு செல்ல ஆரம்பிக்கின்றேன். என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒடிவந்து அள்ளி அணைத்து என் கால்களை தடவிக்கொடுக்கும் என் அப்பாவின் கருணையை உணர்கின்றேன் மெல்ல...

இதோ ஒரு வயதை எட்டிவிட்டேன். ஆவலுடன் நடக்க விளைகின்றேன். நான் விழுவேன் என்றும் எனக்கு தெரிகின்றது. ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் விழும்போது இதயம் நொந்து கண்கலங்கி என்னை தூக்கி உச்சிமுகரும் என் அப்பா எனக்கு மலைப்பாக இருக்கின்றார்.

சில வேளைகளில் எனக்கு உடல் இயலாமை தெரிகின்றது. நோ நிமித்தம் அழுகின்றேன். எனக்கு நோ என்றால் என் அப்பா படும் அவலத்தையும், அவரது கண்களில் கண்ணீரையும் கண்டு எத்தனை தரம் பிரமித்திருக்கின்றேன்.

எனக்கு நான்கு வயது எனது அப்பா எவ்வளவு இனிமையானவர்...

இப்போ ஐந்து வயது எனது அப்பாவுக்கு தெரியாத விடயம் ஒதுவும் இல்லை..
என் அப்பா பெரீரீரீய... ஆள்.

எனக்கு வயது ஆறு: எனக்கு எல்லாவற்றையும் உணர முடிகின்றது...
என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.

இப்போ வயது 8 எனக்கு ஒரு பொருள் வாங்கித்தருவதற்காக பணம் வைத்திருந்த அப்பா..
ஒருவர் அவசர உதவி நாடி வந்ததும் அதை கொடுத்த விட்டார். முதலில் கோபம் வந்தாலும், பிறகு பெருமையாக இருந்தது.

வயது 12. நான் பெண் என்பது முழுமையாக உணர்கின்றேன். அப்பாவின் பாதுகாப்பு முழுமையாக எனக்கு தேவை என்று எண்ணுகின்றேன்.

வயது 14. நான் வளர்ந்துவிட்டேன் இன்னும் என்னை குழந்தையாக நினைத்து ஒரு விடையத்தை திரும்ப திரும்ப விளங்கப்படுத்தி அறுக்கிராரே அப்பா...

இப்போ எனக்கு வயது 16 என் தனிப்பட்ட சில விருப்பு வெறுப்புகளில் தேவையின்றி தலையிடுகிறாரே இந்த அப்பா. அவரது காலம் வேறு என் காலம் வேறு புரியவில்லை இந்த அப்பாவுக்கு..
இப்போதெல்லாம் அப்பாவை நினைத்தாலே அவர் இராணுவ உடையில் இருப்பதாகத்தான் மனதில் விம்பம்.

வயது 18 முதன் முறையாக அப்பாவுடன் முரண்பட்டுக்கொள்கின்றேன். பிரமிப்பாக என்னை அப்பா பார்த்ததும், அதன் பின் பேசாமல் இருந்ததும் எனக்கு அழுகையாக இருந்தது.

இப்போ வயது 24 நான் ஒரு பட்டதாரியாக வெளியேறுகின்றேன். எல்வாம் என் அறிவினால் கிடைத்தது என்ற இறுமாப்புடன் குதூகலத்தில் துள்ளிக்குதிக்கின்றேன். ஆனந்த கண்ணீருடன் உச்சிமுகர்ந்து வாழ்துகின்றார் என் அப்பா.

வயது 25 – நான் ஏன் வேலைக்கு போகணும்? இரண்டு வயதில் இருந்து படித்து படித்து கழைத்துவிட்டேன் கொஞ்சநாளாவது ப்ரியாக இருக்கவேண்டாமா?
அதை தாங்க எலாதே இந்த மனசனுக்கு... ஏன் இந்த அப்பா இப்படி இருக்கிறாரோ தெரியாது..

வயது 28 எனக்கு திருமண ஏற்பாடு அமோகமாக நடக்கின்றது. மனதில் ஒரு மகிழ்ச்சிதான். இதோ திருமண இறுதிப்பொழுது அப்பாவுடன் மணமேடைக்கு என் கணவனை நோக்கி செல்கின்றேன். என் பெயரில் இருந்தல்ல வாழ்வில் இருந்தே அப்பா தூரப்போவதுபோல ஒரு கலக்கத்தை உணரமுடிகின்றது.

வயது 30 இப்போ என் மகனுக்கு நானும் ஒரு தாய்.
அவனது ஒவ்வொரு அசைவும் என் அப்பாவை நினைவு படுத்துகின்றன.

அவன் தவழுகின்றான், அனால் எனக்கு வலிக்கவில்லை, நடக்க முயற்சி செய்து விழுகின்றான் ஓடிப்போய் தூக்கி அணைக்கவில்லை...
ம்ம்ம்.... அப்பா சொல்லுவது எல்லாம் சரிதான்...


இப்போ எனக்கு வயது 35 - என் அப்பாவைப்போல இந்த உலகத்தில் வேறு எதுவும் கிடையாது. இறைவனின் மறு உருவம்தான் அப்பா.

Sunday, October 9, 2011

சிங்களத் தலைமைத்துவத்தில் வித்தியாசமான ஒரு கருவறுப்பு விஜய குமாரணதுங்க!


விஜய குமாரணதுங்க!
இலங்கையில் வாழ்ந்துவரும் பெரும்பான்மையான சிங்களவர்களால் மட்டும் அல்ல சிறுபான்மையினரான தமிழர்களாலும் நேசிக்கப்பட்ட ஒரு மனிதர். இலங்கை சிங்கத்திரைப்பட புகழ்பெற்ற ஒரு நடிகர்.
'திரையில் தவிர நிஜத்தில் நடிக்கத்தெரியாத ஒரு நல்லவர்' என்று எப்போதும் மட்டுமல்ல இறக்கும்போதும்கூட அவரது நண்பன் ஒஸி அபயகுணசேகர சொல்லிக்கொண்டதற்கு ஏற்பவே வாழ்ந்தவர் அவர் என்று தமிழ்மக்கள்கூட இன்றும் கூறிக்கொள்ளும் மனிதர்.

தனது மனைவியும், இலங்கையின் இரண்டு பிரதமர்களான எஸ்.டபிள்யூ.அர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அகியோரின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தன் நாட்டின் உயர்சக்திமிக்க ஜனாதிபதியாக வருவார் என்று அவர் எப்போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
ஏன் என்றால் தனது மனைவி அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் அவர் பெரும் அக்கறை கொண்டிருந்தார் விஜய குமாரணதுங்க.

இடதுசாரி, சோசலிச சிந்தனைகளே விஜய் குமாரணதுங்கவை பெரிதும் ஈர்ந்திருந்தது. சோசலிஸ தத்துவத்தில் லெனினுடைய பல கொள்கைகள் பலவற்றில் அவர் பெரும் ஈடுபாடுடைய ஒருவராகவே இருந்துவந்தார்.
விஜய் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்தி சிந்திக்கத்தெரியாத மனிதன் என்றும், மற்றவர்களின் கஸ்டங்களை கைகட்டி பார்த்திருக்கும் தன்மை விஜய்க்கு இல்லை எனவும், உதவி என்று கேட்குமுன்னமே ஒடி வந்து உதவும் ஒரு உன்னதமான நண்பன் விஜய குமாரணதுங்க என்று இன்றும் அவரது நண்பர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஏம்.ஜி.ஆரைப்போல சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் பிரவேசம் செய்துகொண்டவர் விஜய் குமாரணதுங்க, இலங்கையின் முதலவாது பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற பெருமையினை இன்றும் தன்னகத்தே வைத்துள்ள ஒரே கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியில் சேர்ந்துகொண்ட விஜய குமாரணதுங்க அந்த கட்சியின் பல செயற்பாடுகளிலும் முன்னிலையில் நின்று உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 1974 ஆம் அண்டிலேயே அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்துப்போட்டியிட்ட சுதந்திரக்கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேஹடுவவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.
இதனால் மீண்டும் ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவின் கழுகு கண்களுக்கு விஜய குமாரணதுங்க தப்பிக்க வாய்ப்பிருக்கவில்லை.
நக்ஸலைட் மற்றும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான அவதுர்று வழக்கில் விஜய் மாரணதுங்க சிறைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

பின்னர் சிறையில் இருந்து மீண்ட விஜய் குமாரணதுங்க முழுநேர அரசியலில் ஈடுபடும் நோக்கத்தை உறுதியாக எடுத்துக்கொண்டார். இந்தக்காலங்களில் இலங்கையில் இனப்பிரச்சினை விஸ்வரூபம் கொண்டு எழுந்து நின்றது.
அடக்குமுறைகளை அரசு தமது ஆயுதமாக தொடர்ந்தும் பயன்படுத்திவந்தது.
இந்த நடவடிக்கைகளை அடியோடு வெறுத்தார் விஜய் குமாரணதுங்க.
1984 ஆம் ஆண்டு ஸ்ர்P லங்கா மகஜன பக்ஸய (இலங்கை மக்கள் கட்சி) என்ற கட்சியை ஆரம்பித்தார். ஜாதி, மத, குலங்களுக்கு அப்பாற்பட்ட இலங்கை மக்கள் அனைவரும் சமம் எனவும் அனைவருக்கும் சமமான வாழ்வாதாரமும், சம பாதுகாப்பு உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கையுடன் நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவம் என்ற ஒரே குடையின்கீழ் கொணடுவரவதற்கு தாம் பாடுபட இருப்பதாகவும் அறை கூவினார் விஜய குமாரணதங்க.
இலங்கை சிங்கள தமிழர்களிடம் நிலவி வந்த இனப்பிரச்சினைக்கு சமஸ்டிமுறையிலான தீர்வே இறுதித்தீர்வு என்று அந்தக்காலகட்டத்திலேயே பெரும் சிங்கள பேரினவாத சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெளிப்படையாகவும், உறுதியாகவம் கூறியிருந்தார் விஜய் குமாரணதுங்க.
இந்த பதங்களை அவர் வெறும் பேச்சுக்கானதாக சொல்லவில்லை என்பதையும் செயல்வீரத்துடன் துணிவுடனே சொல்லியதாகவும் தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளும் வண்ணம் எந்தவொரு சிங்களத்தலைவர்களும் செய்யமுடியாத செயலை செய்துகாட்டினார் விஜய குமாரணதுங்க.

1986 அம் அண்டு அப்போது விதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து, விடுதலைப்புலிகளின் உயர் மட்டத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் குமாரணதுங்க.
அவர்மேல் உள்ள மரியாதை நிமித்தம். அவரது நேர்மைச்செயற்பாட்டிற்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் கைது செய்து வைத்திருந்த 12 பேர் அடங்கிய ஸ்ரீ லங்கா பொலிஸ் குழுவொன்றையும் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சாபக்கேடு இனவாதங்களில் ஊறிப்போன இரு கட்சிகளுமே மாறி மாறி அரசுக்கட்டிலில் வீற்றிருப்பதே. எபபோ சிந்தித்து புரட்சி ஒன்றை செய்ய முனையும் சிங்களத்தலைவன் ஒவ்வொருவனும் அதே இனவாதத்தினால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அந்த குறிக்கு முன்னேற்றமான ஒரு பாதைக்கு இலங்கையை கொண்டு செல்ல எத்தனித்த விஜய் குமாரணதுங்கவும் தப்பிக்கமுடியவில்லை.
1988 அம் ஆணடு பெப்ரவரி மாதம் 16 ஆம் நாள் அவரது வீட்டில் இருக்கும்போதே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகளால் அவர் சுட்டு சரியக்கப்பட்டார்.

ஒரு பிரபல நடிகனாக விஜய் குமாரணதுங்க
காலங்களை மீறிய உடை அலங்காரம், நேர்த்தியான நடை உடை பாவனை, மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் முகம் என்பன சிங்ளகத்திரையிலே தோன்ற ஆரம்பித்தபோது, ஹிந்தி திரையில் சிக்கியிருந்த சிங்கள பார்வைகள், தமது சினிமாப்பக்கம் வர ஆரம்பித்தன.
'ஹந்தான கத்தாவ' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய விஜய குமாரணதுங்க தொடர்ந்தும் 141 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் சுவாரகசியமான விடயம் என்னவென்றால் 1979 ஆம் ஆண்டு இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பில் உருவாகிய நங்கூரம் என்ற திரைப்படம் வந்திருந்தது. முத்துராமன். லக்ஸ்மி ஆகியோர் இதில் நாயக நாயகியாக நடித்திருந்தனர், இந்த திரைப்படத்தில் விஜய் குமாரணதுங்க நடித்திருந்தார், அவருடன் இணைந்து இலங்கையரான ஏ.ஈ.மனோகரனும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதுடன், இந்த திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இலங்கை இசையமைப்பாளரான ஹேமதாஸவும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1945 ஆம் ஆண்டு இதேநாள் பிறந்திருந்த விஜய குமாரணதுங்க இன்றிருந்திருந்தால் அவருக்கு வயது 66.

Saturday, October 8, 2011

பெண்களுக்கு ஏற்ற இடம்!



பெண் எனப்படுபவள் பூவைப்போன்றவள், தேவை ஏற்படும்போது புயலாகவும் மாறக்கூடியவள், நாளைய சமுகத்தின் வளர்ச்சி அவள் கையிலேதான் உள்ளது, பெண்மைபோற்றும் உலகமே உன்னத உலகம் என்றெல்லாம் எழுதி பெண்களையே கடுப்பேற்ற நான் விரும்பவில்லை.

இருந்தாலும்கூட பெண்கள் பற்றி சில விடையங்களை பேசாமல் இருந்துவிடவும் முடியாது. சமூக அக்கறை கொண்ட சமுகத்தின்மேல் அதன் முன்னேற்றத்தின்மேல் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பெண்களின் முன்னேற்றம் வளர்ச்சி சுதந்திரம் பற்றி பேசாமல் இருக்கமுடியாது.
அதனால்த்தான் உண்மையான சுதந்திரம் பற்றி பேசிய மகாத்மா காந்தி நள்ளிரவில் ஆபரணங்களுடன் தனிமையாக ஒரு பெண் சுதந்திரமாக அச்சமின்றி செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் என்று கூறியிருக்கின்றார்.
இங்கே அவர் நள்ளிரவில் தனிமையில் செல்லும் பெண் ஒருத்தியை தனியே முன்னிறுத்தவில்லை இந்த ஒரு உதாரணத்திலே சமுகத்தில் ஏற்படவேண்டிய பல மாற்றங்களையும், பெண்ணிய சுதந்திரம் அபரிதமான வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார் என்றே கூறலாம்.

ஒரு விடயத்தை உன்னிப்பாகவும், நேரடியாகவும் கவனித்தீர்களேயானால் பெண்ணை அடிமைப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக இருக்கும் என்பதையும், ஒரு பெண் அடிமைப்பட்டால் ஒரு நாட்டின் எதிர்காலமே அடிமைப்படப்போகின்றது என்பதும் வெளிப்படை உண்மை.
காரணம் ஒரு பெண்தான் நாளைய சமுதாயமான தன் குழந்தைகளை ஈன்று வளர்க்கின்றாள், அவளே அடிமைப்பட்டு, கல்வியறிவற்று திறனற்று இருந்தால் அவளின் குழந்தைகள் எப்படி அறிவாhர்ந்தவர்களாக மாறுவது?

இன்று வளர்ச்சி கண்ட அபிவிருத்தியை வெற்றிகொண்ட நாடுகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம், சமத்துவம், அனைத்துமே அந்த நாடுகளை இந்த நிலைக்கு கொண்டுவந்தன என்பதிலும் எந்த உண்மையும் இல்லாமல் இல்லை.
இன்றைக்கு பதினான்கு ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் ஒலித்துக்கொண்டிருக்கும் 33 வீத இட ஒதுக்கீடும், தொடர்ச்சியான கோரிக்கைகளும் எதைக்காடுகின்றது?
பெண் என்ற பார்வையினை இந்தியா போன்ற நாடுகள் இன்னும் களைந்துவிட்டு உலக சவால்களை வெற்றிகொள்ளும் பாதையில் பயனிக்க தயார் இல்லை என்பதையே. பெண்ணுக்கு உரிய இடத்தையோ உரிமைகளையோ இன்னும் வளங்காது இதுபோன்றே பயணிக்க எத்தனித்தால் 2020 இல் வல்லரசு என்ற கனவு பகல்கனவுதான்.

மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள் கல்விநிலையில் இன்று வியக்கத்தக்க முன்னேற்றங்களையும், சிறப்பு தேர்ச்சிகளையும் பெற்றுவருவது மனதிற்குள் ஒரு ஓரத்தில் ஒளியை பரவவிடுவதுபோன்ற உணர்வை தருகின்றது.
இருந்தபோதிலும் கிராமமட்டங்களில் பெண்களின் கல்வி நிலைகள் உயர் கல்விக்கு செல்லாது இருப்பது வேதனையானதே.
மற்றப்பக்கம் இன்று வெளியிடப்படும் சகல பரீட்சை பெறுபேறுகளிலும் பெண்கள் முன்னிலையில் நிற்பது ஆணாதிக்க வர்க்க சிந்தனைகளுக்கும், ஆதிக்கங்களுக்கும் கிடைக்கும் செருப்படி என்பது குறிப்பிடத்தக்கது.

சரி... இப்போது விடையத்திற்கு வருவோம் ஆம் இன்றைய உலகில் பெண்களுக்கு எற்ற இடம் என்று ஆய்வுகளில் முதல் இடத்தில் இருக்கும் இடம் அல்லது நாடு எது தெரிமா?
ஐஸ் லன்ட்.....

பெண்ணியம், சட்டபாதுகாப்பு, சுகாதாரம், உரிமைகள், பாதுகாப்பு, பெண் முன்னேற்றம், கல்வி என்பனவற்றை அடிப்படையாக வைத்து உலக நாடுகளில் மேற்கொண்ட ஆராட்சி முடிவுகளே இதை சொல்கின்றது.

இந்த வகையில் பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளாக முதல் ஐந்து இடத்தையும் பெற்றுள்ள நாடுகளாவன, ஐஸ்லன்ட். சுவீடன், கனடா, டென்மர்க் மற்றும் பின்லான்ட் ஆகியன.
இந்த வகையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா 8 ஆம் இடத்திலும், இங்கிலாந்து 19 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

அதேவேளை பெண்கள் வாழ்வதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக ஸாட், ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ, மலீ, சொலமன் தீவுகள், நைகர், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலிடப்படடுள்ளன.

அப்ப நம்ம நாடுகள் இதிலை எத்தனையாவது இடங்களை பிடித்துள்ளன என்று அறிய உங்களுக்கு மட்டுமில்லைங்க எனக்கும் ஆவலே. இந்த வகையில் ஸ்ரீ லங்கா பெண்களுக்கு வாழ்வதற்கு ஏதுவான நாடுகள் பட்டியலில் 74ஆவது இடத்தை பிடிச்சுருக்கு. பரவாயில்லையே என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது, இந்த முன்னிலைக்கு காரணம் கல்விவீதம் கூடியதாக இருப்பதே, சட்டபாதுகாப்பு, பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பதில் பின்னிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பெரும் யுத்தம் ஒன்றினால் சூழப்பட்டிருந்த ஒரு தேசம் என்ற வகையில் இந்த நிலை ஸ்ரீ லங்காவைப் பொறுத்தவரையில் போதுமானதே.

அடுத்து இந்தியா.... பெண்கள் நள்ளிரவு சுதந்திரமாக அபரணங்களுடன் செல்ல கனவு கண்ட தேசபிதாவின் நாடு இதில் இருப்பது 141ஆவது இடத்தில்.

வல்லரசுப்பார்வை ரொம்ப தெளிவா இருக்கு.....

Friday, October 7, 2011

வோட்டர் கேட்


கால் ஃபேர்ன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட், இந்த இருவரையும் இன்றைய ஊடகவிலாளர்கள் மட்டும் அல்ல, செய்தித்துறை, எழுத்துத்துறை, பதிவுலகத்துறையில் இருக்கும் அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
தமது பேனாமுனை என்ற ஆயுதத்தால் ஒரு மிகப்பெரிய வல்லரசின் தலைமை நாக்காலியையே சரித்துவிழுத்திய சரித்திர நாயகர்கள் இவர்கள்.
ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு என உலகிற்கு புடம்போட்டுக் காட்டியவர்கள் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர்.

வோட்டர் கேட் ஊழல்

அமெரிக்காவின் வரலாற்றிலேயே வோட்டர்கேட் ஊழல் மிக முக்கியமான ஒன்றாகும்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 1968 முதல் 1974 வரை இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55 வயதில் 1968 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறகு 1972 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த வேளையில் 1973ஆம் ஆண்டின் பிற்பகுதிகளில் “வோஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையின் நிருபர்களாக இருந்த, கால் ஃபேர்ன்ஸ்ரன் மற்றும் ஃபொப் வூட்வேர்ட் ஆகியோர் ஜனாதிபதி நிக்ஸன் மேல் குற்றம்சாட்டி, சில ஆதாரங்களுடன் அமெரிக்காவையே திடுக்கிடவைத்த செய்தி ஒன்றை வெளியிட்டார்கள். என்னதான் பெரிய ஜனநாயக நாடு என்றாலும் அந்த நாட்டின் தலைவர்மேல், ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தி ஒரு செய்தியை வெளியிடுவதாக இருந்தால் இந்த இரண்டுபேரும் எத்தனை நெருக்குவாரங்களை சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். இது குறித்து பின்னாளில் நிக்ஸனே தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார்.

சரி என்ன இந்த வோட்டர்கேட்? அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்.
தேர்தல் வேளையில் இங்கு இந்த எதிர்க்கட்சியின் தலைமையகம் இருந்த வோட்டர்கேட் மாளிகையில் நிக்ஸனின் பணிப்பின் கீழ், மிக இரகசியமான முறையில், நவீன தொழிநுட்பமுடைய ஒலிப்பதிவு கருவிகளைப்பொருத்தி, அங்கு எதிர்கட்சியினரின் உரையாடல்களை, மற்றும் அவர்களின் செயற்திட்டங்களை, கள்ளத்தனமாக அறிந்துகொண்டு, அவர்களின் தேர்தல் விபரங்கள் பற்றி முற்றுமுழுதாக அறிந்துகொண்டு, தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பதே இந்த இரண்டு பத்திரிகையாளர்களாலும் சில ஆதாரங்களுடன் எழுதப்பட்ட திடுக்கிடவைத்த செய்தியாகும்.


இந்த விவகாரம் 1974இல் பூதாகரமானது, அவரது கட்சியினரே, எதிர்கட்சியுடன் சேர்ந்து நின்று இந்த மோசடிகுறித்து விவாதிக்கும் நிலை உருவாகியது. இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த மோசடிக்குற்றச்சாட்டை நிக்ஸன் மறுத்தேவந்தார். இருந்தாலும், நாளுக்கு நாள் ஆதாரங்கள் வலுப்பெறத்தொடங்கியதுடன் பிரச்சினை மிகப்பெரிய நிலைக்குச்சென்றது.
இந்த நிலையில் இதுகுறித்து பூர்வாங்க விசாரணைகளை நடத்தி அமெரிக்க செனட் குழு “நிக்ஸன் குற்றவாளி என்றும்” அவரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்க சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவரலாம் எனவும் ஆணையிட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள நிக்சனின் ஆதரவாளர்கள் பலரும், அவர் பதவி விலகுவதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அதன் மூலம்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட குறையை போக்க முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில் நிக்சன் திடீர் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "நான் குற்றவாளி" என்றும் ஒப்புக்கொண்டார்.

தான் குற்றவாளி என்று நிக்சன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டத்தை அவர் கூட்டினார். மந்திரிசபை கூட்டத்தில் நிக்சன் பேசும்போது, "நான் பதவியில் இருந்து இராஜினாமா செய்யமாட்டேன். தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பேன்" என்று அறிவித்தார்.
உண்மையை ஒப்புக்கொண்டால், தனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நிக்சன் நம்பினார். ஆனால் அது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தின. நிக்சனுக்கு ஆதரவாக இருந்த சிலரும், அவருக்கு எதிராக மாறினார்கள்.
நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருந்ததால் நிக்சனின் குடியரசு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடி ஆலோசனை செய்தார்கள். நிக்சனின் முக்கிய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

பதவியில் இருந்து நிக்சன் விலகவேண்டும் என்று அவர்கள் அனைவருமே கருத்து தெரிவித்தார்கள். "பதவியை விட்டு நீங்களே விலகிவிடுங்கள் அல்லது நாங்கள் உங்களை பதவியில் இருந்து நீக்கவேண்டியது இருக்கும்" என்று அவர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி நிக்சனிடம் தெரிவித்து விட்டார்கள்.

குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகும் ஜனாதிபதி மீது அவர் செய்த குற்றத்துக்காக கோர்ட்டில் வழக்கு தொடரமுடியும். ஆனால், நிக்சன் அவராக இராஜினாமா செய்வதால் அவர் மீது வழக்கு தொடராமல் விட்டு விடலாம் என்று அமெரிக்க மேல் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
9.8.1974 அன்று அதிகாலை 6.30 மணிக்கு நிக்சன் தொலைக்காட்சியில் தோன்றி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இராஜினாமா கடிதத்தை வெளிநாட்டு இலாகா மந்திரி கிசிங்கரிடம் கொடுத்தார். பிறகு இராஜினாமா ஏற்கப்பட்டது.

நிக்ஸன் பதவி விலகியவுடன் அதற்கு காரணமாக இருந்த செய்தியார்களான கால் ஃபேன்ஸ்ரன், ஃபொப் வூட்வேர்ட் அகியோரின் புகழ் எங்கும் பரவியது. அவர்கள் இருவரும் இணைந்து எழுதிய பல செய்திகள், புலனாய்வுச்செய்திகள், மற்றும் விபரணங்களை வாங்க பல நிறுவனங்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றன.
ஒரு விதத்தில் நிக்ஸனால் இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால் பாவம் நிக்ஸன் பதவி விலகியதன் பின்னர் கலிபோர்னியாவில் வசித்த அவரால் அரசாங்க வரியைக்கூட கட்டமுடியாமல் போனது.

கால் ஃபேர்ன்ஸ்ரன்

1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வோஷிங்டனில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு யூதராவார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கல்வி கற்றாலும் இவர் அதை பூர்த்தி செய்து பட்டம் பெற்றிருக்கவில்லை.
பின்னர் ஒரு ஊடகவிலாளராகவும், எழுத்தாளராகவும் அவர் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட்; பத்திரிகையில் இவரும் ஃபொப் வூட்வேர்ட்டும் இணைந்து எழுதிய வோட்டர்கேட் ஊழல் மோசடி பற்றிய செய்தியே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அதைத்தொடர்ந்து அவருக்கு உச்ச விருதான புலிச்சர் விருதும் அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் பின்னர் ஒரு விடயம் சம்பந்தமாக ஆணித்தரமாக இவரது கட்டுரை ஒன்று வெளியானமையினைத்தொடர்ந்து சி.ஐ.ஏ.யினரின் விசாரணைகளுக்கு இவர் உட்படுத்தப்பட்டிருந்தார்.
இருந்தபோதிலும் தொடர்ந்தும் தனது எழுத்துப்பணிகளை தொடர்ந்துகொண்டிருக்கும் அவர் வினிட்டி ஃபெயார் என்ற சஞ்சிகையினை வெளியிட்டுவருகின்றார்.

ஃபொப் வூட்வேர்ட்

ரொபேர்ட் உப்ஷர் வூட்வேர்ட் என்ற இயற்பெயர்கொண்ட இவர் 1943ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ஆம் திகதி பிறந்தவராவார். ஜாலே பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர் ஊடகத்துறையில் பிரவேசம் செய்தார்.
பல்வேறு ஊடக நிறுவனங்களில் தொழிலாற்றிவந்த இவர் 1973ஆம் ஆண்டு வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், கால் ஃபேர்ன்ஸ்ரன் உடன் செய்தி வழங்கிய வோட்டர்கேட்டே இவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
1973,2002 ஆம் ஆண்டுகளில் இவர் புலிச்சர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த ஊடகவிலாளருக்கும் அமையாததுபோல முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸை ஆறு தடவை இவர் பேட்டிகண்டுள்ளார். அதேவேளை Bush at War (2002), Plan of Attack (2004), State of Denial (2006), and The War Within: A Secret White House History (2006–2008) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.


மீள் பதிவு

LinkWithin

Related Posts with Thumbnails