Monday, February 6, 2012

மத்தியின் சாட்சியாக....


பெரும் அதிர்வு கொண்டு காதுபிளக்கும் எறிகணை சத்தங்களும், இடைவிடாது தொடர்ச்சியாக கோர்வையாக கேட்கும் துப்பாக்கி ரவை சத்தங்களுக்கும், யாழ்ப்பாண கோட்டையை சூழவுள்ள முழுமையான பிரதேசங்களே சுடுகாடாக காட்சி தந்தபோதும், இங்கு மட்டும் கல்விச்சத்தம் நின்றது கிடையாது.
கூரைஇல்லாத கட்டடமுகடுகளில் சுவர் உடைந்த பிசிறல்களுக்கு இடையிலும் சரஸ்வதி குடிகொள்வாள் என்று அப்போது கண்டுகொண்டது என்னமோ இந்த இடத்தில்த்தான்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.

முற்றுப்புள்ளி என சிலர் . இப்படி இட்ட புள்ளிகளைக்கூட அதே முற்றுப்புள்ளியில் இருந்து ...... இப்படி கோடிட்டு எழுந்து நின்று காட்டிய பெருமை பெற்ற கல்லூரி அது என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.
பீனிக்ஸ் பறவைக்கு ஜப்பானையும், ஜப்பான் மக்களையும் பலர் உவமானங்களாக காட்டுவார்கள். அதேபோல சாம்பலில் இருந்து மீண்டெழுந்து இன்று மீண்டும் யாழ்ப்பாணத்தின் தலைமை, நகர, பட்டிண கல்லூரி நான்தான் என்று வீறுகொண்டு எழுந்திருக்கின்றது இந்தக்கல்லூரி.

எண்பதுகளின் ஆரம்பம் முதல் தொண்ணூறுகளின் இறுதிவரை இந்தக்கல்லூரி ரணத்தோடு நடந்துவந்த சரித்திரம் ஆச்சரியமானது.
இலங்கைக்கு முதன் முதல் சர்வதேச ரீதியாக தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்த எதிர்வீரசிங்கம், அதை பெற்றது இந்தக்கல்லூரி மாணவனாகத்தான், பாதிரியார்கள் அதிபர்களாக இருந்த கிறிஸ்தவ பாடசாலை இது என்றாலும், சைவமும், தமிழும் போற்றும் ஆறுமுகநாவலரை உருவாக்கியதும், இந்த கல்லூரிதான், கிஸ்தவ சமயத்தின் வேதாகமமான பைபிளை தமிழுக்கு தந்ததும் இந்த பாடசாலைதான், அதேபோல காலகலமாக எத்தனையோ பொறியிலாளர்கள், மேலாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், முகாமையாளர்கள் என சமுகமட்டத்தில் உயர்ந்தவர்கள் பலரையும் தந்ததுடன், யாழ்ப்பாணத்தில் விளையாட்டு என்றால் சென்றல்தான் என்று விளையாட்டுக்கு அன்று தொட்டு இன்றுவரை முக்கியத்துவமளித்துவருவதும் இந்தக்கல்லூரியே.
அதற்குச்சான்றாக எந்த கல்லூரிக்கீதத்திலும் இல்லாத வகையில், இந்தக்கல்லூரியின் கீதத்தில் ஒரு உதைபந்தாட்டத்தை மையப்படுத்தியும், நேரம், மற்றும், ஒழுங்கை கொண்டாதவும் இசைக்கப்படுகின்றது.
இதேபோல வட மாகாணத்தில், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கொக்கி, ரக்பி, வலைப்பந்தாட்டம், என சகல விளையாட்டுக்களையும் முதன்முதல் அறிமுகம் செய்த பெருமையும் இந்தக்கல்லூரியை சார்ந்ததே.

எல்லாவற்றுக்கும் மேலாக நூற்றாண்டுகள் கடந்து சென்றாலும் சில பாரம்பரியங்களை எந்த இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கைக்கொண்டுவருவது இந்த கல்லூரியின் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் முக்கியமானது இந்தக்கல்லூரிபோலவே நூற்றாண்டு கடந்தும் கரம்கோர்த்து அந்தப்பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இணைந்து பயணிக்கும் பரி.ஜோவான் கல்லூரி. சென்றல் என்றால் அடுத்தது நிற்சயமாக சென்.ஜோன்ஸ் இருக்கும் என்ற அளவிற்கு இருகல்லூரிகளும் ஒன்றை ஒன்று அணைத்து சகாவாக பயணிப்பது பெரும் ஆச்சரியமே!

சரி... இந்த நாள் இந்தக்கட்டுரையை ஏன் நான் வரைய நினைத்தேன், என்பதற்கு உணர்வுபூர்வமான சம்பந்தம் உள்ளதால் இனி.. விடயத்திற்கு வருகின்றேன்.

இந்தக்கல்லூரி வெறும் சுவர்களையும், அத்திவாரங்களையும் மட்டும் இழந்து, இன்று வீறுகொண்டெழுந்து சர்வதேச பாடசாலைகளுக்கு ஒப்பான அளவுக்கு வீறு கொண்டு எழுந்திருக்கவில்லை. பெரும் ரணத்தோடு பயணித்தே இந்த இமாலயத்தை தொட்டுள்ளது.
கல்லூரி வேளையில், கல்லூரியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவன் பொன்.விபுலானந்தன், சாதாரண தரத்தில் எட்டு அதிசிறப்பு பெறுபேறுகளை தந்துவிட்டு, மீண்டும் உயர்தரத்தில் 4 அதிசிறப்பு பெறுபேறை தந்த சதீஸ்காந்தன் என பல உயிர்களையும் விலைகொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டுமுதல் முதற்பாதி கோட்டைப்பகுதியில் நிலவிய அசதாரண £ழ்நிலை கல்லூரியை பிடுங்கி எறிந்த நிலையை தந்தது. பின்னர் இந்திய இராணுவகாலங்களின் பின்னர் 1990 – 1993 வரையான கால கட்டங்களில் நிர்மூலமாக்கப்பட்ட நிலையிலும் கல்வி தொடர்ந்ததும், மாணவர்கள் தைரியத்த்டன், உயிரைப் பயணம் வைத்து கல்வி கற்றதும் மிகப்பெரும் ஆச்சரியமே.
இப்போதும் எனக்கு நினைவு இருக்கின்றது, உடைந்த கட்டடத்தின் முன்னால் ஒன்றுகூடும் நாம், அப்போதைய எமது அதிபர் திரு. நா.க.சண்கநாதபிள்ளை எழுதிய பாடலை உற்சாகமாகப்படிப்போம்.
'எங்கள் அரும் கல்லூரியை வளர்க்கப்போகின்றோம், இடிந்தவற்றை கட்டி மீள எழுப்பபோகின்றோம்' எனத்தொடங்கும் அந்தப்பாடல் கண்களில் கண்ணீருடன் ஆனால் மனம் முழுவதும் தைரியத்தையும் உற்சாகத்தையும் அப்போது எமக்குள் விதைத்தது.

எமது கல்லூரியின் பாராம்பரியம், விழுமியங்கள், முன்னைய சாதனையாளர்கள் பற்றி இடைவிடாது எமக்கு கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் எமது கல்லூரி மீண்டும் எழும், யாழ்ப்பாணத்தில் இதுபோல ஒரு கல்லூரி இல்லை என்ற நிலைக்கு வரும் என்று கனவு காண்போம்.
அந்த கனவு இன்று யாழ்ப்பாணம் மட்டும் அல்ல இலங்கையில் என்று சொல்லும் அளவுக்கு பெருவிருட்சமென கண்முன் நிற்கின்றது.

1991ஆம் ஆண்டு கோட்டை இராணுவ முகாமைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் எறிகணை சத்தங்கள், விமானத்தாக்குதல்கள் என பல இடம்பெறுகின்றன.
ஏல்லாமே எமக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டதனால், எமது கல்லூரியின் பழைய மாணவர் விடுதி உள்ள பிரதேசத்தில் நானும் இரண்டு நண்பர்களும் ஆவலாக மண்ணைஆழமாக வெட்டி அதன் மேல் பொலித்தீன் பைகைளை வைத்து தண்ணீர் விட்டு நீச்சல் தடகாம் கட்டி மகிழ்ந்தோம்.
எமது கல்லூரிக்கான நீச்சல் தடாகம் அது எனவும், 12 அடிக்கு மேலே ஆழம் எனவும், பல கதைகள் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம். அப்போது என் அருகில் நின்ற ஜனகன் என்ற மாணவன் இந்த நீச்சல் தடாகத்தை எமது ஜனாதிபதி டிங்கிரி பண்டார விஜேதுங்க (அப்போது அவர்தான் ஜனாதிபதி) திறந்துவைப்பார் என்று சொன்னது இன்னும் நினைவு.

அட... என்ன ஆச்சரியம் நாம் அப்படி கட்டி விளையாடும்போது எந்த தேவதை மேலால் கடக்கும்போது, இது அப்படியே பலிக்கட்டும் என்றுவிட்டு போனதோ தெரியாது.
இன்று அதே இடத்தில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்று இப்போதைய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்போது இதை சொன்ன அந்த ஜனகன் என்ற மாணவன் இப்போது இல்லை. ம்ம்ம்.... 1995 முதல் அவனது பெயரும் காணமற்போனோர் பட்டியலில்த்தான்.

சில ஊடகங்களின் கவனத்திற்கு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நீச்சல் தடாகம் என்பது சில தமிழ் ஊடகங்களுக்கு என்னவிதத்திலோ ஒருவித சலிப்பை, வெறுப்பை தருவதை சில தினங்களாகவே கவனித்தே வருகின்றேன்.
ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எதையும் அரசியல் பார்வை பார்க்கும் சிறு சுற்று சிந்தனையுடையவர்களாகவே அப்போது பார்க்கமுடிகின்றது.
அன்று ஒரு பத்திரிகையில் மிக ஆடம்பரமான மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக படத்தையும், அருகில் தகரம் அடித்த ஒரு பாடசாலையையும் காட்டி ஒரு பத்திரிகை தனது முதலாவது பக்கத்தில் செய்தி வெளியட்டிருந்தது.
வாஸ்தவம்தான், நகரம் மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். மறுக்கவில்லை.
ஆனால் அத்திவாரம் தெரியும் நிலையில் எமது கல்லூரி தகர்ந்து நின்றபோது, நாமே நம்மை அசுவாசப்படுத்தி எழுந்தபோதெல்லாம் உங்கள் கண்ணுக்கு ஏன் படவில்லை? அது பற்றி எமது நிலை பற்றி ஒரு செய்தியாவது போட்டிருந்தீர்களா?

இதே நீச்சல் தடாகம் இவர்கள் எதிர்பார்க்கும் இன்னும் ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தால், எந்தவித கதையும், செய்தியும், படமும், கேலிச்சித்திரமும் வந்திருக்காது.

ஒரு பிரபல கல்லூரிக்கு, தேசிய கல்லூரிக்கு, அதுவும் முக்கிமான மாவட்டம் ஒன்றின் நகரத்தில் உள்ள பாடசாலைக்கு உடனயடியான தரமுயர்த்தல்கள் அபிவிருத்திகள் தேவை அவையே இப்போது நடைபெறுவதாகத்தோன்றுகின்றது.

3 comments:

Pradeep said...

நானும் ஒரு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் என்பதில் பெருமை கொள்கின்றேன். மத்தியின் மணிக்கொடி நிச்சயம் நிலைக்கும். நன்றிகள்.

fasnimohamad said...

சரியாக சொன்னிங்க அண்ணா....... நான் யாழ்ப்பாணத்துக்கு வந்தது கூட கிடையாது இருந்தும் அந்த மண் மிது இனம் புரியாத மரியாதை உள்ளது...... சில வளர்ச்சிகள் எம்மவர்களுக்கே பிடிக்காதது மனவர்தபடகூடியதே

fasnimohamad said...
This comment has been removed by the author.

LinkWithin

Related Posts with Thumbnails