Tuesday, January 8, 2013

தேவதைக்கதைகளின் கதை – 02



பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், கொடுமை, அடிமை நிலை என்பவற்றினால் தவிக்கும் இந்த தேவதைக்கதாபாத்திரங்கள் கதையோட்டத்தால் அந்த சூழ்சிகளில் இருந்து தப்பி இறுதியில் உயர்ந்த நிலையை அடைவதாகவே கதையோட்டங்கள் யாவும் அமைந்துசெல்வதை கவனிக்கலாம்.

பாலர் பருவங்களில் அவர்களின் மனங்களில் விதைக்கப்படும் இந்தக்கதைகள், காலங்கள் கடந்தாலும் அவர்களின் மனங்களை விட்டகலாமல் இருப்பதற்கு அந்தக்கதைகளின் பாத்திர வார்ப்புக்களும் பிரதான காரணம்தான் எனலாம்.

பியூட்டி அன்ட் த பீஸ்ட்

இந்த தேவதைக்கதையின் நாயகியாகிய தேவதையின் பெயர் பெல்லி. மென்மையான எதையும் நேசிக்கும் மாசற்ற அன்புள்ளம் கொண்டவர்களுக்கு எவற்றின்மீதும், மயமோ, அச்சமோ, அதீத ஆசைகளோ கிடையாது அன்பு எந்தவொரு மாஜத்தையும் செய்துவிடும் என்று கருத்தை பறைசாற்றுகின்றது இந்தக்கதை.

இதுவும் ஒரு பிரஞ்சுதேசத்துக்கதைதான், 1740 ஆம் ஆண்டு பிரஞ்சுப் பெண் புனைகதை எழுத்தாளரான கேப்ரியல் ஸூசான் பார்போர்ட் விலனியூவ் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது என அறியப்படுகின்றது.
அதேவேளை 1756ஆம் ஆண்டு இதே கதையினை ஜென்னி மரீன் என்பவர் மீள் பிரசுரம் செய்துவைத்தபோதே இந்த தேவதைக்கதை மிகப்பிரபலம் அடைந்ததாக குறிப்புக்கள் கூறுகின்றன.
அந்தவகையில் அடுத்த ஆண்டாகிய 1757ஆம் ஆண்டே இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உலகமெல்லாம் பீஸ்ட்டுடன் அந்த தேவதை உலாவரத் தொடங்கினாள்.

இது மட்டுமன்றி மேற்படி பியூட்டி அன்ட் த பீஸ்ட் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடக அரங்கங்களில் பெரிதும் இடம்பிடித்த மக்களின் மனதைக்கவர்ந்த நாடகமாவும் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளுக்கு நவரசத்தையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்கும் இந்தக்கதை அவர்களை வெகுவாகக்கவர்ந்து கொண்டது எவ்வாறு என்ற சந்தேகத்தையே இல்லாது செய்துவிட்டது.

மனைவியை இழந்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார் ஒரு வர்த்தகர். அந்த மூன்று பெண்களிலும் இளையவளான மூன்றாவது பெண் பெல்லி ரொம்ப அழகானவள்.
அவளது அழகு மட்டும் அன்றி, அவளது இனிமையானபேச்சு, அன்பான அணுகுமுறை, மென்மை, நேர்த்தி என்பன பலருக்கு அவள் மேல் பேரபிமானத்தை ஏற்படுத்திவிட்டன.
இதனால் மூத்தவர்களான இரண்டு பெண்களுக்கும் இவள்மேல் பொறாமை இருந்துவந்தது. 

இந்தவேளை வர்தகரின் கப்பல் ஒன்று புயலிலே சிக்குண்டுவிட்டதாக செய்திவருகின்றது. அதனால் அவர்களின் தந்தையான வர்த்தகர் பெருந்துயரத்திற்கு உள்ளாகின்றார். அந்தவேளை பெல்லி அவருக்கு ஆறுதல் வார்ததைகள்கூறி அவரை ஆசுவதப்படுத்துகின்றாள். கப்பல் மீண்டும் கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருங்கள் என்கின்கின்றாள்.

அவள் சொன்னதுபோலவே வணிகருடைய கப்பல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்ததாக செய்தி வருகின்றது. சந்தோசமடைந்த வர்ததகர் கப்பலை பார்க்க பிராயாணத்திற்கு ஆயத்தமாகின்றார்.
அந்தவேளை தமது மூன்று பெண்களையும் அழைத்த தந்தை, உங்களுக்;கு என்ன வேண்டும் என்று வினவுகின்றார். அதற்கு பதிலளித்த முதலிரு பெண்களும், தமக்கு விதவிதமான உயர்தர ஆடைகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் என அடுக்குகின்றனர்.
ஆனால் பெல்லியோ தனக்கு எதுவும்வேண்டாம் என தந்தையின் நிலையை உணர்ந்து சொல்கின்றாள். ஆனால் அவளது தந்தை எதையாவது நீயும் கேள் மகளே என்றபோது.... சரி எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ மட்டும் வாங்கிவாருங்கள் என்றாள்.

துறைமுகத்தை அடைந்த தந்தை அங்கு தனது கப்பலை பார்த்துவிட்டு, நெடுந்தூரப்பயணமாக பெருநகரத்தில் தனது முதல் இரு மகள்மாரின் வேண்டுகோளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி நெடுந்தூரம் தனது வீட்டைநோக்கி பயணிக்கும்போது தாகம் பசி கழைப்பு நிலைக்கு உள்ளாகின்றார், தூரத்தில் அவர் கண்களுக்கு அழகான அரண்மனை ஒன்று தென்படுகின்றது. 

மகிழ்ச்சியுடன் அந்த அரண்மனையை அடைகின்றார், அங்கு எவரையும் காணமுடியவில்லை, ஆனால் நிறைய பழரசங்கள் முதல் மேசையிலே இருந்தன, அவற்றை எடுத்து அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றார். பின்னர் அறுசுவை உணவாக பலவேறான உணவுகள் நாவுக்கு ருசியாக அவருக்கு தெரிகின்றன அவற்றையும் உட்கொண்டு பசியாறுகின்றார்.
அடுத்து சோம்பலாக இருக்கவே காற்றோட்டமான இடத்தில் உயர்தர இலவம்பஞ்சு மெத்தையிலே படுத்து உறங்குகின்றார். 

உறக்கம், சோம்பல் இரண்டும் விடுபட்ட நிலையில் அப்போது மேசைமேலே இருந்த தேனீரை அருந்தியவாறே இந்த உபசரிப்பு செய்தவர் யார்? அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என அங்குமிங்கும் யாராவது உள்ளனரா எனத்தேடுகின்றார்.
அந்தநேரம் அந்த அரண்மனை தோட்டத்திற்கு வருகின்றார். அங்கே பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைக்கண்டு தனது இளைய மகளின் நினைவு வரவே ஒரு ரோஜா மலரை அவர் பிடுங்கிவிடுகின்றார்.

அந்தவேளையில் பேரிரைச்சலுடன் அவர் முன்னால் ஒரு பூதம் தோன்றுகின்றது...
ஏ...... மானிடனே உன் புத்தியை காட்டிவிட்டாயே........ அருந்த பழரசம், விதவிதமான உணவு, இளைப்பாற மெத்தை இத்தனையும் தந்தேன் ஆனால் இந்த நந்தவனத்தில் உள்ள பூக்களை கொய்ய உனக்கு உரிமை இல்லை. இந்தப்பூவை நீ யாருக்காக கொய்தாயோ அவரை நீ இங்கே சேவகம் செய்ய நீ அனுப்பி வைக்கவேண்டும் என ஆணையிடுகின்றது........

அதன் பின்னர் அந்த அரண்மனைக்கு வரும் பெல்லியின் அன்பால், கவரப்படும் பூதம் ஒரு கட்டத்தில் அவளைப்பிரிந்து இறக்கும் நிலைக்கு செல்லும்போது, பெல்லி ஓடிவந்து அந்த பூதத்திறகாக அழுவதும், அவளது தூய்மையான கண்ணீர் பட்டதும் பூதம் சாப விமோசனம் பெற்று அழகிய இளவரசனாகி பெல்லியையே மணந்துகொள்வதும் நீங்கள் அறிந்த கதைதானே!

இவ்வாறான தேவதைக்கதைகள் குழந்தைகளின் முனதில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு இந்த தேவதைக்கதைகள் தொடரை எழுதும் நானே சிறந்த உதாரணம். இந்தக்கதைகளை படித்த பாலர் காலத்திலே எனது பெரிய தந்தையார் வெளியூர் பிரயாணம் ஒன்று செல்லும்போது அன்பாக எம்மிடம் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச்சொல்ல 'எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ போதும்' என்று சொன்னவன் சாட்ஜாத் நான் தான்.

அடுத்த பதிவில் மீண்டும் ஒரு தேவதையுடன் உங்களை சந்திக்கின்றேன்.

1 comment:

nishaptham said...

...
ஜனா
தங்கள் வலைப்பதிவில் உள்ள ஆக்கங்களைப் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது. பிரித்தானியாவில்; இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை சம்பந்தமாக உங்களுடன் தொடர்பு கொள்ளவிரும்புகிறேன்தயவு செய்து.எனது மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியுமா?gmail-subasart@gmail.com

LinkWithin

Related Posts with Thumbnails