Saturday, May 4, 2013

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.......



வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது.
மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்புகை, என முழுவதும் மனதுக்குள்ளும் ஒரு எரிவை ஏற்படுத்திவிடும்.

பரபரப்புடன் பிங் கலர் குடையை பிடித்துக்கொண்டு நிலப்பக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தவள், நெருசலில் சில ஆண்டிமாரும், சில நடுத்தரங்களும் உஸ்.. உஸ் கொட்டியபோதுதான், குடை அவர்களுடன் உரசிப்பார்த்ததை உணர்ந்து அவசரமாக தனது குடையினை சுருக்கிக்கொண்டாள்.
அவள்  இலங்கையில்தான் வசித்துவந்தாலும் சத்தியமாகத்தான் அவளுக்கு வெயில் ஒத்துவராது.

நிலப்பக்கத்தில் இருந்து கடற்பக்கமாக மாறினால் கொஞ்சம் வெயில் குறைவாகப்படும் என்று அவளது ஆறாவது அறிவு அந்தப்பக்கம் இழுக்கவே மற்றப்பக்கமாக கடக்க எத்தனித்தவள் தன்னிலை மறந்து கொஞ்சநேரம் ஸ்தம்பித்து நின்றாள்...
ஆமாம் அவளைச்சுற்றி நுவரேலியாவின் குளிர் சூழ தொடங்கியது, கொழுத்தும் வெயில் சண்கிளாஸினூடே பார்ப்பதுபோல மங்கிப்போனது, அவளைச்சூழ புரூட் பெர்பியூம் நறுமணம் பரவ தொடங்கியது......
ஆம் நிச்சயமாக அவன் வந்துவிட்டான்...... இது அவனேதான் என்று உணர்ந்த மறுகணமே அவளது முகம் இன்னும் சிவந்துகொண்டது. 

ஓவ்வொன்றையும் இரசித்தபோதும் அவன் பின்தொடர்வதை உணர்ந்த அவள், அவசரமாக தன் நடையினை வேகமாக்கிக்கொண்டாள். அவன் வந்த அறிகுறிகள் ஒன்றும் குறையாததைக்கண்டு அவன் தனது நடைக்கு ஈடாகவே தானும் பின்தொடர்வதை அறிந்துகொண்டாள். மனதிற்குள் விபரிக்கமுடியாத ஒரு கிளுகிளுப்பு! ஆதனால் அவளுக்கு பயங்கரமாக ஒரு படபடப்பு ஏற்பட்டது.

தான் முதல் நினைத்ததுபோலவே வாகனங்களை சமாளித்துக்கொண்டு அவசரமாக எதிர்த்திசை சென்று, அதே அவரமாக தரிப்பிடத்தில் இருந்து புறப்பட தொடங்கிய பஸ்ஸில் அது என்ன பஸ்? எத்தனையாம் இலக்கம் என்பதைக்கூட பார்க்காமல் ஏறிக்கொண்டாள்.
பஸ்ஸில் கொஞ்சம் கூட்டம்தான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நின்றவள், தன் அருகில் நிலவிய குளிர்மை அதிகரித்திருப்பதையும், பூருட் பெர்பியூம் மிக அருகில் மணப்பதையும் உணர்ந்து கால்கள் நடுங்கத்தொடங்க பயந்தவளாக அதேநேரம் அதை இரசிப்பவளாக முகத்தில் சிறு புன்முறுவல் பூத்தாள்.

என்ன 155 பஸ்ல ஏறியிருக்கிறீங்க? மோதரைக்குத்தானே போறீங்க? என்று அவள் காதுமடல்களின் பின்னால் குழைவான குரலில் அவனது குரலைக்கேட்டதும் சொக்கித்து நின்றாள். 
அந்தநேரத்தில் கொன்டக்டர் வரவே மோதரைக்கு இரண்டு என்று சிங்களத்தில் சொல்லி காசைக்கொடுத்தான் அவன்.
 மற்ற ஆள் யார்? என்று சிங்களத்தில் கென்டக்டர் கேட்டபோதுதான் இயல்பு உலகத்திற்கு வந்தான் அந்த காதல் கிறுக்கன்.

2 comments:

தனிமரம் said...

ஆஹா ஜனாவுக்கு மோதரைக்காற்றுக்கேட்கின்றதே:))))

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_3791.html) சென்று பார்க்கவும்... நன்றி...

LinkWithin

Related Posts with Thumbnails