“மனிதனது சிந்தனைகள், கேள்விகள் என்பன வெறும் புத்தகங்களால் மட்டும் இன்றி தன்நிலை சுற்றம் உணர்தல், வான்பார்த்து சிந்தித்தல் போன்றவற்றில் இருந்தும் வரவேண்டும்” என்று யாரோ ஒரு சிந்தனையாளர் சொன்னதாக படித்த நினைவு இருக்கின்றது.
எனினும் இந்த கருத்தை படிப்பதற்கு முன்னதாகவே என் மனதை குடைந்துகொண்டிருந்த சில கேள்விகளும், அவற்றிக்கான தேடல்களினாலும், பலரிடம் கேட்டறிந்தவற்றாலும் இன்றும் திருப்தி அடையாமல் மனதில் உறுதிக்கொண்டிருக்கும் சில கேள்விகள் உள்ளன.
இந்த உறுத்தும் கேள்விகளுடன் ஒரு பதிவை இட்டு, இந்த கேள்விகளுக்கான பதில்கள் பின்னூட்டங்களில் வந்துவிடலாம் என்ற அபிப்பிராயத்துடன், முதன்முதலில் என் கேள்விகளுக்கான விடைதேடலாக இந்த பதிவை சமர்ப்பிக்கின்றேன். வாசிக்கும் பெருந்தகைகள் உங்களுக்காவது பதில்கள் தெரிந்திருந்தால் மறக்காமல் சொல்லிவிட்டுப்போங்களேன்... (நான் தேடும் இந்த கேள்விகள் சிலவேளைகளில் அபத்தமாகவும் தெரியலாம் மன்னித்துவிடுங்கள்)
(01) உலக முன்னேற்றத்திலும், நவீனத்துவத்திலும் நாடுகாண் பயணங்கள் முக்கியமான ஒரு இடத்தை வகிக்கின்றன. இந்த நாடுகாண் பயணங்களின் ஊடாகவே சில மொழிகள், பல நாடுகள், பல்லின மக்கள் இணைக்கப்பட்டனர் என்றுகூட ஒருவகையில் சொல்லிவிடலாம்.
இந்த நிலையில் இந்த தேடல்களின் முன்னாலேயே மனித இனங்கள் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்துகிடந்தன. பல மொழிகள் பேசிக்கொண்டிருந்தன. இவற்றில் மிகப்புராதனமான மொழிகள் பல. இப்படி இருந்தாலும்கூட சகல மொழிகளிலும் தமது நாளுக்கும் கோளுக்கும் சம்பந்தம்வைத்தே மக்கள் நாட்களை வரையறுத்திருக்கின்றார்கள் அல்லவா?
தமிழ் சனி, ஞாயிறு திங்கள்..என்பதுபோல், ஆங்கிலம் சண்டே, மண்டே என்கின்றதே, அதுபோல் சீனமொழி, கொரியமொழி, பிரஞ்சு மொழி என பெரும்பாலான மொழிகளிலும் தொடர்பற்றிருந்த மக்கள் ஒத்தசிந்தனையாக எப்படி தமது நாட்களை கோள்களுடன் இணைத்திருப்பார்கள்? மிகப்பெரிய ஆச்சரியமாக அல்லவா இது உள்ளது?
இந்த கேள்விக்கு முக்கியமாக எனக்கு கிடைத்த பதில்கள் இரண்டு.
முதல் கிடைத்த பதில் - இந்தக்கேள்வியே அபத்தமானது. மனித இனம் ஒன்று எங்கோ ஒரு இடத்தில் இருந்தே ஏனைய இடங்களுக்கு பரம்பலானது. குறித்த ஆதி மனிதனின் சிந்தனைகள், ஜெனட்டிக், டி.என்.ஏ என்பன மனித இனம் எங்கு பரம்பலானாலும் ஒன்றாகவே இருந்திருக்கும். இதன்மூலமாக சிந்தனைகள் ஒன்றியிருக்கும். தமிழ்நாட்டில் ஆதி மரணுக்களை உடைய ஒருவர் கிராமம் ஒன்றில் இனங்காணப்பட்டதுமுதல், உலகம் இணைந்திருந்த பஞ்சியாக்கண்டம்வரை இதற்கான உதாரங்களும் தரப்பட்டது. எனினும் திருப்தி இல்லை.
இந்த கேள்விக்கு இரண்டாவதாக கிடைத்த பதில் ஒரு ஆராட்சியின்முடிவு.
அதாவது குறித்த இரண்டு தீவுகள் காணப்படுகின்றன. இடையில் பெருங்கடல். ஆனால் இந்த இரண்டு தீவுகளிலும் இரண்டு வௌ;வேறு குரங்கினங்கள் வாழ்வதை சிலகாலங்கள் ஆராட்சி செய்ததில் அதிசயமான பல தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. அதாவது இந்த இரண்டு இனக்குரங்குகளுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பாடல் சாத்தியங்களும் இருக்கவில்லை. இருக்கவும் முடியாது.
ஆனால் ஒரு தீவில் குரங்குகள் புதுவகையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்போது, சில நாட்களில் அடுத்த தீவில் உள்ள குரங்குகளும் அவற்றை ஒத்த செயல்களில் செயற்பட்டதை அவதானிக்கமுடிவதாக கூறப்படுகின்றது. முக்கியமாக காலநிலை இதில் எந்தவொரு செல்வாக்கும் செலுத்தவில்லை என நூறுவீதம் அடித்து கூறப்பட்டது. இருப்பினும் இது எவ்வாறு சாத்தியம் என்றபோது, அந்த இரண்டு தீவுகளுக்குகிடையில் இருக்கும் குரங்குகளும் தம்மை அறியாமலே சிந்தனைகளை கடத்தியுள்ளதாக முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதேபோலவே இந்தக்கேள்விக்கு மனிதம் நாட்களுடன் கோள்களை இணைத்ததும் அப்படி இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால் இவை இரண்டிலும் இன்றுவரை எனக்கு திருப்தி இல்லை.
(02) “அணுவைத் துணைத்து ஏழ் கடலைப்புகுட்டி
குறுக்கே தறித்தகுறள்” –ஒளவையார்.
இங்கே வந்த “அணு” என்னும் பதம்தான் மனதைக்குடையும் கேள்வி, சர்ச்சை எல்லாமே!
அதாவது “அட்டம்” என்பதைத்தான் இங்கே அணு என்று கூறப்பட்டதா? அப்படி என்றால் அணு பற்றி ஒளவையார் அன்றே அறிந்திருந்தாரா? அவர் அறிந்தது விஞ்ஞானத்திலா? மெஞ்ஞானத்திலா? என்பதை விட்டுவிடுவோம். ஆனால் அங்கு வந்த அணு என்ற பதம் எப்படி வந்தது?
சிலர் இன்றும் வாதிக்கின்றார்கள், ஒரு புலவரான ஒளவையார் பார்ப்பதை பாடியுள்ளார், அணு என்பதன் ஆராட்சி அன்றே இடம்பெற்றதுதான் என்று!
ஆனால் மறுசாராரோ, தமிழில் மிக மிக குறுகியதான பொருளுக்கு “அணு” என்பது தமிழ் பெயர் மட்டுமே. இரண்டு அடியில், ஏழ்கடல்போன்ற விடயத்தை அந்த இரண்டுவரியினுள் கொண்டுவந்ததைத்தான் ஒளவையார் அப்படிக்கூறினாரே தவிர அவருக்கும் தற்போதைய அணு ஆராட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர். இரண்டாவதில் மனம் கொஞ்சம் ஒத்துப்போனாலும் முழுமையாக ஏற்கமுடியாதுதானே?
(03) தமிழில் முதல் தோன்றியவற்றில் ஆதியாக கிடைக்கப்பெற்ற நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல்.
“இலக்கியம் முதல் தோன்றிதா? இலக்கணம் முதல் தோன்றியதா? என்பதுதான் என் கேள்வி.
இலக்கியம் என்பது இப்படி இருக்கவேண்டும் என்று வரையறை செய்வதுதானே இலக்கணம்! அப்படி என்றால் இலக்கியம் இல்லாமல் எப்படி ஒரு வரையறை கொடுத்திருக்கமுடியும்?
கொஞ்சம் யோசித்து சொல்லுங்க இலக்கியமா? இலக்கணமா முதல் வந்தது?
(04) பெர்முடா முக்கோணம், ஏரியா 51 என்பன உலகை அதிசயிக்கவும், ஆச்சரியப்படவும், ஏமாறவும் வைத்த பிரதேசங்கள். இருந்தாலும் இந்தப்பிரதேசங்களில் வல்லரசுகள் ஏதோ விiளாடிக்கொண்டு உலகை ஏமாற்றுகின்றன என்ற “கொன்பிரஸி” தியரிகளே உள்ளனவே தவிர இன்றுவரை, அந்த “கொன்பின்ஸி”தியரிகளை எந்தவொரு லீக்கும் வந்து உடைத்துக்காட்டவில்லை. இன்றும் அவை தொரும் மர்மங்கள்தான்.
சுந்திரன், செவ்வாய், அண்டவெளி, அண்டவெளிதாண்டி சூரியர்கள் என்று வியாபித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் ஏன் இன்றுவரை பூமியிலேயே உள்ள ஆச்சரியங்களுக்கு விடை தரவில்லை, அல்லது விடைகளை ஒழித்துவைத்திருக்கின்றன?
இதுபோன்ற கேள்விகள் மனதில் இன்றுவரை குடையும் கேள்விகளில் சில. முழுவதையும் ஏழுதி நான் குழம்பியதுபோதாமல் உங்களையும் குழப்ப நான் விரும்பவில்லை. இந்த கேள்விகளுக்கு உங்கள் மேல்வீடுகளில் பதில் உள்ளவர்கள் கொஞ்சம் அதை இங்கே அள்ளி தெழித்துவிட்டுச் செல்லுங்கள்.
பொறுக்கிக்கொள்ள ஆவலுடன் நான் இங்கே…
12 comments:
won the toss........me
கேள்வி 01
விடை 02க்கு வாய்ப்புகள் உண்டு...எப்படி என்றால் வானொலி கேட்டு கொண்டிருக்கும் போது எம் மனதினுள்ளே ஒரு பாடலை இப்போது கேட்டால் நன்றாக இருக்கும் என எண்ணும் போது எதிர்பாரமலேயே வானொலியில் அப்பாடல் ஒலிபரப்பப்படுவது...போலவே இதுவும்..ஆனால் மனதில் ஆழமாக எண்ண வேண்டும் என நான நினைக்கின்றேன்..
அதே போன்று நாம் செய்யும் செயல்களை தொடர்பற்ற இன்னொருவர் செய்வார் என நான் நினைக்கின்றேன்..
கேள்வி 02
ஃஃதமிழில் மிக மிக குறுகியதான பொருளுக்கு “அணு”ஃஃ
இது கூட ஒரு ஆய்வின் முடிவுதானே...??
கேள்வி 03
ஒரு நுால் தோன்றுவதென்றால் அதற்கு எழுத்துகள் வசனங்கள் அவசியம்..
தொல்காப்பியம் ஒரு நுால் என்பதாலும் அது தவறுகளை சுட்டிக்காட்டும் நுால்(இலக்கண விதி வரைய முன் எங்கோ இலக்கணத்தவறு இடம்பெற்றிருக்க வேண்டும்) ஆகவே அது தோன்ற முன்னரே இலக்கியம் தோன்றி இருக்கும்...
அடுத்து தொல்காப்பியமானது சங்க மருவிய காலத்து நுால் என்பதால் அதற்கு முன்னரே சங்க காலத்தில் இலக்கியங்கள் தோன்றியுள்ளதும் இங்கு நோக்கத்தக்கது..
ஆயினும் தொல்காப்பியம் நம் கைகளில் கிடைத்த இலக்கண நுால்களில் முந்தியது என்று கூறப்படுகிறதே தவிர இதுதான் முதல் நுால் என்று கூறப்படவில்லை..
ஆகவே இது அன்றைய, பாதுகாக்கும் பழக்கமில்லாத தமிழர்களின் செயலால் இன்று நாம் அனுபவிக்கும் விடைகாண கேள்வியே...
ஆனாலும் என் கருத்துப்படி தவறு ஏற்பட்டால் தான் சுட்டிகாட்டும் விடயங்கள் நடந்தேறும்..ஆகவே இலக்கியம் முந்தியது.
பதிவு சூப்பர்..கேள்விகள் கலக்கல்...
இதே கேள்விகள் எனக்கும் உண்டு. பதில் எதிர்பார்க்கிறேன்
//இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...//
இதற்கு இந்த பதிவு சரியான பொருத்தமானதாக இருக்கு அண்ணை.
என் மேல்வீட்டில் அள்ளித் தர ம்கூம்.. அறிவு காணாது.
வணக்கம் ஜனா அண்ணா
இவை இவற்றுக்கான பதில்கள் என்பதை விட என் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே
1. காலத்தை நாள்,மாதம்,வருடம் என கணித்தல் அறிவியலும் ஏனைய நாடுகளுடனான தொடர்புகளும் மேலோங்கியக் காலத்திலேயே உருவாகியிருக்கும். அக்காலப்பகுதியில் வானசாஸ்திரத்தில் மேம்பட்டிருந்த நாடுகளின் கண்டு பிடிப்புகள் மெல்ல ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்பதே என் அனுமானம்.
மற்றும்படி ஜீன்களில் பதியப்பட்டிருப்பது சில அடிப்படை இயல்புகளே அன்றி சிந்தனைகள் அல்ல. இரட்டை எம்ஜியார்களில் ஒருவர் ஜெவைக் கட்டியணைக்கையில் மற்றவருக்கு பரவசமாயிருத்தல் சினிமாவிலே மட்டுமே சாத்தியம்.
2. அணுவைப் பற்றி எல்லாம் அவ்வையாருக்கு தெரியாது நுண்ணியதை குறிக்க அவர் பயன்படுத்திய சொல் பின்னாளில் atom ஐக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
3. ப்ளாக் இருப்பதால் நான் எல்லாம் எழுத முற்படுவதில்லையா? அப்படி அப்பவும் ஆளாளுக்கு எழுதக் கிளம்பியிருப்பங்க. அப்போது இதோ பாருங்கப்பா இப்படி எழுதுவதுதான் இலக்கியம் என நெறிபடுத்த இலக்கணம் தோற்றம் பெற்றிருக்கும். சோ இலக்கியமே முதல்
4. நீங்க எங்க வரப்பார்க்கிறீங்கன்னு தெரியுது இது பெரும்பாலும் அந்த விபத்துக்கு பிறகுன்னு நினைக்கிறேன். அங்க ஒரு மண்ணாங்கட்டி ஆச்சரியமும் இல்லை. இந்த உயிர் கோளத்தின் வயதோடு ஒப்பிடுகையில் நவீன விஞ்ஞானத்தின் ஆயுள் குறைவில்லையா? இன்றில்லாவிட்டாலும் என்றேனும் எல்லா புதிர்களுக்கும் விடை தெரியும்.
அண்ணா அப்புறம் வாறன்..
இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
நல்ல கேள்விகள்! எனக்கும் பதில் தேவை!
அந்த தீவு - குரங்குகள் விஷயம் 'டெலிபதி' தொடர்பானது! நானும் வாசித்தேன்.
மனிதர்களுக்கிடையிலான உரையாடல் ஆரம்பித்த போதே இலக்கியமும் உருப்பெற்றிருக்கும். இலக்கணம் அதன்பிறகுதான் வகுக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன்!
இவை பற்றித் தெரிந்துகொள்ள நானும் ஆவலாயிருக்கிறேன்!
இந்த உலகில் மனிதர்களால் தெளிவு படுத்தப்படாத, புரிந்து கொள்ளப்படாத ஆச்சரியங்கள் நிறையவே இருக்கின்றன!
எண்னங்கள் கடத்தப் படுகின்றன என்பத்தை நான் பூரணமாக ஆதரிக்கிறேன்.
எங்களுக்கு கேள்விகளை கேட்க மட்டுமே தெரியும், பதில் தெரியாது
முதலில் ஆங்கிலத்தில் Atom என்னும் வார்த்தை எங்கிருந்து வந்தது? அது கிரேக்கத்தில் இருந்து átomos என்ற வார்த்தையிலிருந்து. இதன் பொருள் பகுக்க முடியாதது என்பதாகும். பொருட்களைப் பகுத்துக் கொண்டே போனால் கடைசியில் பகுக்கவே முடியாதது ஒன்று வந்தால் அதுதான் அணு என்ற எண்ணத்தில் அணுக்களுக்கு Atom என்று பெயரிட்டார்கள். அப்புறம்தான் அணுக்களுக்கு உட்கரு, சுற்று வட்டப் பாதையில் எலெக்ட்ரான்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், அணுக்கருவும் பிளவு படக் கூடியது, அதில் புரோட்டங்களும், நியூட்ரான்களும் உள்ளன என்று கண்டறியப் பட்டது. இப்போது புரோட்டங்களும், நியூட்ரான்களும் கூட குவார்க் என்னும் துகள்கள் ஆனவை என்கிறார்கள், மேலும் இன்னும் வெங்காயத்தின் தொலை உரிப்பது போல எவ்வளவு வரை போகுமே தெரியவில்லை, எல்லை உள்ளதா என்றும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இப்போ எதை வைத்து Atom என்று பெயரிட்டார்களோ அந்தக் காரணமே அடிபட்டு போய் விட்டது, எனினும் இன்றும் அவற்றை Atom என்றே கூறுகிறோம். ஔவையார் எந்த அர்த்தத்தில் அணு என்று சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை,
but இன்றைக்கு அறிவியல் கூறும் அணு அல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியும். [வெளிநாட்டுக் காரன் கண்டுபிடிக்கும் முன்பே நாம் இதைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை, இப்போது சொல்வது ஏற்கத் தக்கதல்ல.] இருப்பதிலேயே மிகச் சிறிய துகள் என்று ஔவையார் கருதிய ஒன்று என்று வேண்டுமானால் சொல்லலாம்.
Post a Comment