ஆலெக்ஸ்ரா நகரம் கிறிஸ்மஸை வரவேற்கத்தயாராகிக்கொண்டிருந்தது. சில வர்ணங்கள்மாறி புதிய வர்ணங்களுடன் பெரிய கட்டங்களும், வர்ணங்கள் மாறும் மின்குமிழ் ஒளிர்வுடனும், பார்வையால் மனதிற்குள் சந்தோசத்தை தோற்றுவிக்கும் விதமாக நகரமே பெருவிழாக்கோலம் பூண்டுகொண்டிருந்தது.
பல பல வேடங்களை அணிந்தவண்ணம், நத்தார் ஆராதனைக்குழுக்கள் பல வாத்தியங்களை வாசித்துக்கொண்டு தெருக்களில் பவனி வந்தனர்.
சிறுவர்கள் அனைவரும் வினோதமான ஆடைகளை அணிந்துகொண்டு பெரியவர்கள் அவர்கள் தொப்பிகளுக்குள் போட்டுவிட்டு செல்லும் சாக்லட்டுக்களை, இனிமையுடன் கடித்துச்சுவைத்தக்கொண்டு குதூகலித்துக்கொண்டு சென்றனர்.
இன்னும் பல மக்கள் தம்குடும்பத்தாருடன் கொள்முதல்களை முடித்துக்கொண்டு ஆனந்தமனத்துடன் அந்த வீதிகளையும் ஆனந்தமாக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.
அத்தனை ஆனந்தங்களையும் ஏழ்மையின் பிஞ்சு மனம் ஒன்று மனவிம்மலுடன், ஏழ்மை நிரந்தர குத்தகைக்கு எடுத்திருந்த தன் வீட்டு வாசல் தூணில் கன்னங்களை அழுத்தியவாறு பார்த்துக்கொண்டு நிற்கின்றது.
அந்த ஏழ்மைப்பிஞ்சின் பெயர் மொறிஸ். வயது ஏழாகப்போகின்றது.
வறுமையின் வெறுப்புக்களை அவன்மேல்காட்டி, தன் ஆதங்கங்களை தீர்த்துக்கொள்ளும் ஓர் ஏழைத்தந்தையின் ஆதரவில் ஏதோ அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது. பகட்டும், காமமும் பெரிதாக நினைத்து பெற்ற இவனை விட்டுவிட்டு, நான்காவது ஆளையும் மாற்றிவிட்ட இவன் தாய்பற்றி இவன் கேள்விப்பட்டிருக்கின்றான். என்றும் சந்திக்கவேண்டும் என்ற ஆர்வம்கூட ஏற்படுவதில்லை.
கிடைப்பது 5 ரூபிள்கள் என்றாலும் அதில் 3 ரூபிள்களுக்கு குடித்துவிட்டு, வரும் தந்தை, அவன் நினைவிருந்தால் வாங்கிவரும் தின்பதற்கேற்ற ஏதாவதுதான் அவன் உணவு. இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று அமைதியாக வாழ்ந்துவரும் பெரியவர் ஒருவரின் கண்ணில் இவன் பட்டதனால் ஏதோ அவர் புண்ணியத்தில் இவன் கல்வி ஓடிக்கொண்டிருக்கின்றது. அங்கேதான் இது குப்பையில் இருக்கும் குண்டுமணி என்று பலருக்கு வெளிச்சமாக தெரிந்தது.
வீதியின் வினோதங்களை ஏக்கத்துடன் பார்த்து பொருமிய அந்த நெஞ்சிற்கு திடீர் என்று ஒரு காட்சி கண்ணில் பட்டது. ஆம் முன்திசையில் சற்று தூரத்தில் இருந்த பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்னால் கிறிஸ்மஸ் தாத்தா ஒருவர் ஆடிப்பாடி அங்கு நின்ற சிறுவர்களுக்கு சாக்லட்டுக்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கிக்கொண்டிருந்தார். அவனை அறியாமல் ஒரு ஏக்கத்துடன் இவனது கால்கள் வாஞ்சையுடன் அந்த தாத்தாவை நோக்கி செல்கின்றது. மெதுவாக அந்த சிறுவர்களின் மத்தியில் வருகின்றான். பல சிறுவர்கள், இவனைக்கண்டு விலகிப்போகின்றனர், சிலர் முன்வந்து இவனை தள்ளவும் செய்கின்றனர்.
ஆந்த சிறுவர்களால் தள்ளப்பட்டு வீழ்ந்த நிலையிலேயே அதே வாஞ்சையுடன் அந்த கிறிஸ்மஸ் தாத்தாவை நோக்கி கைகளை நீட்டினான். அவனை கவனித்தும் கவனிக்காதவர்போல அந்த கிறிஸ்மஸ் தாத்தா மற்ற சிறுவர்களை அழைத்துக்கொண்டு அந்த அங்காடிக்குள் சென்றுவிடுகின்றார்.
இருதயமே வெடித்துவிடும் உணர்வுடனும், அந்த தாக்கம் இருதயத்தில் இருந்து கழுத்துவழியாக உறுத்திக்கொண்டு அவன் வாய்வழியாக குழறி அழவேண்டும் போன்ற உணர்வை அடைகின்றான். இருந்தாலும் கண்ணீர் சொரிய மெதுவாக எழுந்து மீண்டும் தன் ஏழ்மை வீட்டிற்கு வருகின்றான்.
ஏக்கம், அந்த ஏக்கத்தினால் அவனுக்கு கிடைத்த அவமானம், துக்கம், வெறுப்பு இப்படி அனைத்து உணர்வுகளும் ஒன்று சேர சோக உச்சத்தில், படுக்கையை விரித்து தொப்பென்று விழந்து, அழுக்குப்படிந்த தலையணைக்குள் வாய்குழைய புதைத்துக்கொண்டு ஓவென்று விக்கி விக்கி அழுதான்.
அழுகை தந்த சோர்வினாலேயே அசதியாக தூங்கிவிட்டான் மொறிஸ்.
நள்ளிரவு ஆராதனை மணி அடிப்பது, தூக்கம் கலையாமலே அரைத்தூக்கத்துடன் அவனுக்கு நன்றாககேட்கின்றது. பட்டாசு ஒலிகளும், ஜனத்திரள் ஓசைகளும், வாகனங்களின் நெரிசல் ஒலிகளும் கேட்கின்றது. மீண்டும் நன்றாகத்தூங்கிவிட்டான்.
இதோ…நந்தவனம்போன்ற ஒரு இடம். அதை தாண்டிய ஒரு பூங்கா. அதில் அவன் மெல்லிய குளிர்காற்று தலைகளை வருடிவிட ஆனந்தமான உணர்வுகளைப்பெற்றுக்கொண்டு நிற்கின்றான்.
எதிரே…நத்தார் கீதங்களை பாடியபடி தூய்மையான வெள்ளை உடையணிந்து தலையும் தாடியும் நன்றாக நரைத்த தாத்தா ஒருவர் வருகின்றார்.
மொறிஸ்…வாஞ்சையுடன் அவனை அழைக்கின்றார். என் பெயர் சாண்டோ கிளஸ்..
நான்தான் உண்மையான உன் கிறிஸ்மஸ் தாத்தா.
என்ன பார்க்கின்றாய் என்னடா இவன் வெள்ளை உடையுடன் நிற்கின்றானே என்றா?
உண்மைதான் நான் எந்த முதலாளித்துவத்தின் பிராண்டையும், அதன் பொருட்களின் நிறங்களையும் சுமக்காத உண்மையான நேசமான தாத்தா!
அங்கே விழுந்தாயே மகனே…வலிக்கின்றதா??? என்று வாஞ்சையுடன் அவனது உடலை தடவிவிடுகின்றார். வாஞ்சையுடன் அவனை அணைத்து உச்சிமுகர்ந்து, அவனை பாசத்துடன் அணைத்துக்கொள்கின்றார்.
பின்னர்..சற்று பின்னால் சென்று தன்கைகளை தன்பின்னால் மறைத்து, பின்னர் தன்கைகளை முன்னால் இவனை நோக்கி நீட்டுகின்றார்.
அந்த கைகளில் பல ரோஜா மலர்கள்…ஒரு பை நிறைய சாக்லட்டுக்கள்.
சின்னமலரே..உன் மனம்போலவே இந்தப்பூக்கள் உனக்கு என் நத்தார் பரிசு என அவன் கன்னங்களில் தட்டிவிட்டு மறைந்துவிட்டார்.
விடியல் ஒன்றின் வழமையான உணர்வுகளால் கண்களை கசக்கிக்கொண்டே எழுந்துகொள்கின்றான் மொறிஸ். சுற்றும் முற்றும் பார்த்து தந்தையை தேடினான். தந்தை நேற்று இரவு வந்ததற்கான தடங்களே இருக்கவில்லை. அந்த அழகான கனவு நினைவுக்கு வருகின்றது. அவன் சிறு இதழோரம் ஒரு ஆனந்த சிரிப்பு.
வாசல்பக்கம் எட்டி வந்து கதவைத்திறந்து சொக்கித்து நிற்கின்றான்.
அவன் வீட்டு முற்றத்திலே பல ரோஜாக்கள் பூத்துக்குலுங்கிய ஒரு ரோஜாசெடி, அதன் பக்கத்தில் ஒரு சாக்லட்பொதி. முதலில் ஆச்சரியமும், பின்னர் ஆனந்தமும் பட்டுக்கொண்டே துள்ளிக்குதிக்கின்றான். மொறிஸ்..
தாங்கியூ கிஸ்மஸ் தர்த்தா, தாங்கியூ என்று துள்ளிக்குதித்துக்கொண்டே அவற்றை சுற்றி சுற்றி ஆனந்தத்தில் மிதக்கின்றான்.
தூரத்தில் இதைப்பார்த்து தன்கண்ணாடியை மீண்டும் தன் மேல்கோட்டினால் துடைத்துவிட்டு, மனம்நிறைந்த சந்தோசத்துடன், அவன் தன்னை பார்த்துவிடாமல்
ஒழிந்துகொள்கின்றார் ரிட்டையர்ட் மேஜர் விளாடிமிர்.
9 comments:
நல்லா இருக்கு பாஸ்! யாரோட கதை பாஸ்?
Leo Tolstoy...?
அருமையான கதை . மனித நேயம் உலகம் எங்கும் இருப்பதை உணர்த்தியது
உங்கள் மொழிபெயர்ப்பு அருமை
எளிமையுடன் அதே வேலை அழகு குறையாமலும்
ரூபிள்,விளாடிமீர் ரஷ்ய கதை எனத் தெரிகிறது யார் எழுதியது
அருமையான கதை...தேடல் அனைத்தும்...
இக்கதை புகட்டுகிறது உலகத்தின் உயிரை...
கதையை வாசிக்கும் பொது நெஞ்சு நெகிழ்கிறது.. பதிவுக்கு நன்றி ஜனா அண்ணா..
கதைகளுக்கு நடுவே என்ன கதை வடிவில் எழுத்து.............
அருமை
உங்களால் மட்டும் தான் முடியுது பாஸ்...நல்ல கதை..
இதெல்லாம் எப்புடி எழுத முடியுது அண்ணா?
அருமை ஜனா அண்ணா
Post a Comment