ஏ.ஆர்.ரஹ்மான்.
1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள்.
தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான சிம்மாசனத்தில் இளையராஜா என்ற இசை வித்தைக்காரன் இசையால் செங்கோலாட்சி, இசை என்றால் ராஜாதான் என்று லகித்து நின்ற காலங்கள்.
இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது அப்போது, யாழ்ப்பாணம் புனித சம்பந்தரிசியார் கல்லூரியில் மாபெரும் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.
எனவே எமது கல்லூரியால் நாமும் அழைத்துச்செல்லப்பட்டோம். கண்காட்சியைப்பார்த்துவிட்டு, பிற்பகல் நேரம் ஒன்றில், சம்பந்தரிசியார் கல்லூரி பிரதான சாலைவழியாக வெளியேறிக்கொண்டிருக்கின்றபோது, அந்த “ சின்னச் சின்ன ஆசை” பாடல் காதுகளில் ஒலித்து ஒரு கணம் நிற்கச்செய்தது.
அதில் வரும் அந்த ஏ.ஆர்.ஆர்.இன் ஹம்மிங்கில் சகலதும் மறந்து ஒருகணம் நின்றேன், பின்னர் காதல் “ரோஜாவே எங்கே நீயெங்கே” என்ற பாடலையும் கேட்டுவிட்டு, பக்கத்தில் நின்ற நண்பனிடம், எதுவுமே பேசாமல் புருவங்களில் வியப்பைக்காட்டியபடியே அவனை பார்த்துக்கொண்டேன்.
மச்சான் ஆரோ..ஒரு புதிய மியூசிக் டிரக்டர். ஏதோ கொம்பியூ+ட்டர் இசை அமைப்பாம். என்று என்னைவிட தனக்கு தெரிந்த விளக்கங்களை எனக்கு தந்தான்.
மற்றும் ஒரு நண்பனின் தந்தையார், அப்போது பாடல்கள் பதிவிட்டு “கெசெட்கள்” விற்பவர், அவரிடம் நேரேயே போய், காசு நாளைக்கு தருகின்றோம் மாமா என்று அன்பு வார்த்தைபேசிவிட்டு, கெசெட்டை கொண்டுபோய்…
தெரியும்தானே அந்த நாட்களில் எங்கள் ஊரில் மின்சாரம் இல்லை, ஆனால் டைனமோவை சுற்றி அதில் பிறப்பாகும் டி.சி. கரண்ட் மூலம் பாடல்கள் கேட்போம்.
அப்படித்தான் கேட்டேன் ரோஜா பாடல்கள் முழுவதையும்.
அன்று இரவு தூங்கும்வேளையில், ரஹ்மானை ஏற்க மனம் மறுதலித்துக்கொண்டே இருந்தது. அந்த அளவுக்கு இளையராஜாமேல் மோகமாக இருந்தேன்.
ஆனால் அந்த மறுதலிப்புக்கும், அசரவைத்த இசை என்றாலும், வந்த இடம் வேறு என்ற கோணத்தாலும் மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது.
பன்னர் படிப்படியாக இருதயத்தில் ராஜாவுடன் ரஹ்மானுக்கும் உரிய இடத்தை என்னை அறியாமல் என் மனமே வழங்கிவிட்டது மாயம்தான்.
விருதுகளின் கதைகளை மீண்டும் சொல்லத்தேவையில்லை, ஆனால் உண்மையான ஒரு தமிழனாகவும், ஆனால் சாதனைகள் மேல் ஒரு செருக்கும் இல்லாமல்
கடவுள் நம்பிக்கை உள்ள அவர், “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று இறைவனின் முழு சரணாகதியாக இருப்பதும். அவரது இசையை மட்டும் அன்றி அவரைப்பற்றியும் மனங்களை பெருமதிம் கொள்ள வைக்கின்றது.
சரி… ரஹ்மானின் பிறந்ததினத்தை ஒரு புதிய அவரது இசையுடன் கொண்டாடலாமே?
கிளிக் பண்ணி குவாலிட்டியான ரஹ்மானின் புதிய இசையை தரவிறக்கலாமே!
கபில்தேவ்.
கிரிக்கட்டின் இராட்சதர்களிடமிருந்து (மேற்கிந்தியத்தீவுகள்), அப்போது அவர்களுக்கு இதுதான் சிறப்பான அடைமொழி (இப்போது!!!) இந்தியா உலகக்கோப்பையினை தட்டிப்பறித்திருந்தது (1983). கபில்தேவின் கைகளில் உலகக்கோப்பை கண்டு உலகம் ஒருமுறை எழுந்து கரகோசமிட்டது.
இதை தொடர்ந்து இந்தியாவில் கிரிக்கட் மீதான அலாதி பிரியம், கிர்…என்று ஏறிக்கொண்டிருந்தது. அதன் தாக்கம் யாழ்ப்பாணத்திலும் தெரிந்தது.
1986 அந்த ஆண்டில்த்தான் எனக்கு கிரிக்கட் என்றால் என்ன, ஆ… இந்தியா வெல்லவேண்டும், இந்திய வீரர்கள் தான் எம் நாயகர்கள், இப்படி எல்லாம் சுற்றத்தைக்கண்டு விழங்கிக்கொண்டு இடைக்கிடை காட்டப்படும் ஒளிபரப்புக்களை அப்பப்போ பார்த்துவந்த நாட்கள்.
அப்போது கிரிக்கட் என்றால் எனக்கு தெரிந்த பெயர்கள் சுனில் ஹவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீ காந்த், விவிலியன்ட் ரிச்சர்ட், இம்ரன்ஹான் போன்ற பெயர்கள் மட்டும்தான்.
கபில்தேவை நான் முதன் முதலாக அறிந்துகொண்டது அப்போது நாங்கள் விரும்பி படிக்கும் சிறுவர் மலரான “கோகுலம”; புத்தகத்தில்த்தான். அதில் கபில் பற்றி படித்து, மனம் ஹரியானாவரை இழுபட்டுக்கொண்டது.
பின்னர் வீட்டில் ஏற்கனவே இரண்டு கிரிக்கட் பைத்தியங்கள் இருந்ததால், ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் மூலம், கபில்மேல் அபிலாசைகள் கூடிக்கொண்டிருந்தன.
பின்னர் 1987, அவரின் ஊர்க்காரர்களே துவக்குகளுடன் எங்கள் பக்கத்தில், சப்பாத்திகளை சப்பிக்கொண்டு நின்றதால், பல இந்திய கிரிக்கட் ஆட்டங்களை பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த அருமையான பீரியட்டில்த்தான், கபில் என் காதலன் ஆனார்.
இன்றுவரை கபிலில் இருந்த அந்த லகிப்பு, இம்ரான்ஹான் மேல் இருந்த ஈர்ப்பு, பின்னர் சச்சினை தவிர எவர்மேலும் இல்லாதது ஆச்சரியமாகவே உள்ளது.
இலங்கையுடன் அவர் பந்துவீச்சில் சாதனை புரிந்தபோது நேரடியாக கண்டு எவ்வளவு ஆனந்தப்பட்டேனோ, அதேபோல அந்த நல்ல மனிதனை வேண்டுமென்றே சிக்கலுக்குள் மாட்டிவிட்டு, அவர் பி.பி.சி பேட்டியில் கவலையின் உச்சத்தில் அழுததை இன்றுவரை என் மனம் ரணமாகவே உணர்கின்றது.
இந்தியாவை கௌரவித்து, இந்தியாவை உலகம் திரும்பிப்பார்க்க வைத்த நல்ல மனிதனுக்கு, இந்தியர்கள் கொடுத்த சிறந்த பரிசு அது என்பது இப்போதும் நான் வேதனைப்படும் சம்பவம்.
இன்று கொடிகட்டி பறக்கும் ஐ.பி.எல். ஐடியாகூட கபிலுடையதுதான். ஆனால் குறுக்கு வழியில் வந்தவர்களுக்கே இப்போது காலம் கைகொடுத்துவருகின்றது.
எது எப்படியோ என்போன்று பல மனங்களை வென்று நிலைத்து நிற்கின்றார் கபில்தேவ். இதை எவராலும் அகற்றமுடியாது. இதுவே உண்மையான வெற்றி.
ஸ்ரில் ஐ பீல் லவ் வித் யூ கபில்…. (இது ஹரியானா வரை கேட்குமா?)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹரியானாவின் புயலே…
கலீல் ஜிப்ரான்.
இது..1994 ஆம் ஆண்டு காலங்கள். சாதாரண தரப்பரீட்சை எடுத்துவிட்டு, பரீட்சை பெறுபேறுகள் வரும்வரை, விளையாடிக்கொண்டு திரிந்த காலங்கள்.
இடைக்கிடை ஏதாவது வாசிக்கலாமே என்று அந்தநேரத்தில் ஆங்காங்கே இருந்த படிப்பகங்களில் ஒதுங்கும் வேளைகளில் (மழைகாலங்களில் அல்ல)
எல்லாமே படு சீரியஸான கம்முனீஸ புத்தகங்களாக இருக்கும், வேண்டாம்டா சாமி, ஏதாவது வித்தியாசமாக இருக்கா என்று தேடும்போது “தீர்க்கதரிசி – கலீல் ஜிப்ரான்” என்ற புத்தகம் கண்ணில் பட்டது.
அங்கிருக்கும் பொறுப்பான அண்ணையிடம் அனுமதி பெற்று வீட்டில் வந்து, இலாவகமாக கட்டிலில் படுத்திருந்துகொண்டு வாசிக்கத்தொடங்கினேன்.
நான் நினைக்கின்றேன், நான் படித்த முதலாவது பெரிய மொழிபெயர்ப்பு நூல் அதுவாகத்தான் இருக்கும்.
கலீல் ஜிப்ரான் என்ற பெயரை கண்டு, இவர் இந்தியராக இருப்பார், அல்லது அரேபியராக இருப்பார் என்றே முதலில் எண்ணினேன். புத்தகம் முடியும்வரை முன்னுரையை பார்க்காத படியால் படித்துமுடிந்தவுடன்தான் அவர் ஒரு அமெரிக்கர் என்பது புரிந்தது. நம்புவதற்கு கொஞ்சம் மனம் அப்போது மறுத்தது.
இன்றும்கூட மனம் சஞ்சலப்படும்வேளைகளில் ஜீப்ரானின் வரிகள் ஒரு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருக்கும். பின்னர் கொஞ்ச நாட்கள் கலீல் ஜிப்ரானை தேடித்தேடி வாசித்தேன். தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் பெரிதாக கிடைக்காத காரணத்தால் வெறும் நான்கு நூல்களே கிடைத்தன. முறிந்த சிறகுகள், ஞானிகளின் தோட்டம் என்பன நினைவில் உள்ளன.
நல்லவேளை ஞாபகம் வந்தது. ஜிப்ரானின் பிறநூல்களை இப்பொழுதாவது தேடிப்படிக்கவேண்டும்.
ஜிப்ரானும் இதே நாளில்த்தான் பிறந்தார்.
13 comments:
தகவலுக்கு நன்றி..
மூவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி
மூவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கபிலை முதலில் போட்டிருக்கவேண்டும். ரகுமான் ஆஸ்கார் வென்றமைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் சந்தோஷப்படவில்லை. ஆனால் கபில் 1983ல்லோர்ட்ஸ்சில் உலகக்கோப்பையை கைப்பற்றியபோது ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது.
மூவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரகுமான் உங்களை போல் என்னுள்ளும் மாற்றங்கள் ஏற்படுத்தியது, ரோஜா என்னும் ஆரம்ப இனிங்சில் தான்.
கபில் என்னும் மாபெரும் சாதனையாளனை கீழே தள்ளிவிட்டு அவரது முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள் பண முதலைகள். கபில் கிரிக்கட்டை முன்னேற்ற கையாண்ட உத்திகளை கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள் இந்திய கிரிக்கட் சபையினர்.
கபில் போற்றதக்கவர் . மரியாதை செய்ததற்கு நன்றி
தகவலுக்கு நன்றிங்கோ..
என்னை எத்தனையோ தடவைகள் ஆட வைத்த அமைதிப்படுத்திய துன்பங்களை மறக்க வைத்த அந்த இசைக்கு சொந்தகாரனுக்கு என் இதயம் நறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
முதல் இருவரும் எல்லோருக்கும் பரீட்சயம். ஆனால் 3மவரைப்பற்றி எனக்கு தெரியாது. இப்போதுதான் அறிகிறேன். இவரது புத்தகங்கள் பெரும்பாலும் எதை பிரதிபலிக்கும் என்று சொல்லவில்லையே!
ஜிப்ரானின் புத்தகமொன்றை முன்பொருமுறை வாசிக்கத் தொடங்கிவிட்டு நூலகத்தில் வைத்துவிட்டு வந்தேன்.அடுத்த தடவை செல்கையில் அது இல்லை.பின்பொருமுறையும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.நீங்கள் மீள நினைவூட்டி விட்டீர்கள் ஜனா அண்னா.பார்ப்போம்..
நம்ம தல(ARR) க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :-)
இசைப்புயல்
கட்டுரையில் அவருக்கு வாழ்த்து சொல்வதையும் விட என்ன இருந்தாலும் அவர் ராஜாவுக்குப் பின்தான் என நிறுவ முயல்வது போல் தெரிகிறதே
கபில்தேவ்
அன்றொரு நாள் தம்பி கேட்டான் "நீ கபில் விளையாடிய மேட்ச் பார்த்திருக்கியா? உண்மையிலேயே நல்ல சர்வதேச தர பாஸ்ட் போலரா? பாகிஸ்தான் தவிர்த்து உபகண்ட அணிகளில் நல்ல வேகப்பந்து வீச்சாளர் உருவாக முடியாதென்ற எண்ணத்தில் இருக்கிறான். அப்படியான நிலையில் கபில் செய்தது பெரிய சாதனை. டான் அனுரசிறி செகண்ட் ஸ்லிப்பில் பிடி கொடுத்ததும் அசாரும் கபிலும் சீன் போட்டதும் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. முரளி அந்தப் போட்டியில் கபிலுக்கு ஒரு சிக்ஸர் அடித்ததாயும் ஞாபகம் எங்கள் வீட்டில் என்னதான் கவாஸ்கர்,ரவி சாஸ்திரி, கபில்,ஸ்ரீகாந்த் என சொல்லிக் கொண்டிருந்தாலும் நான் ரசிகனானது அரவிந்த டி சில்வாவுக்கு மட்டுமே
கலீல் கிப்ரான்
பாதிதான் அண்ணா அமெரிக்கர் பிறந்தது லெபனானில் குழந்தைகளாய் அவர்களாய் வளர விடுங்கள் எனப் பொருள் தருமாறு ஏதோ கூறியிருந்ததாய் ஞாபகம்
அண்ணா மிக்க நன்றி..
கலீல் ஜிப்ரான் பற்றி இன்று தான் அதிக விடயம் அறிந்தேன்...
மூவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி
Post a Comment