(குறிப்பு : இந்தப்பதிவும் ஒரு மீள்பதிவே, இந்தப்பதிவு, இலங்கையில் வெளியாகும் சஞ்சிகை ஒன்றிலும், வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிலும், ஒலி ஊடகம் ஒன்றிலும் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.)
உலக நாடுகளின் புதியவை எவை அறிமுகமாகின்றதோ அதனை உனடியாக சோதித்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்துப்பார்க்க பிரியப்படுபவர்கள் யாழ்ப்பாண மக்கள். ஆரம்ப காலங்களில் இலங்கையில் ட்ரான்ஸ் சிஸ்ரர் என்று சொல்லப்பட்ட அப்போதைய பெரிய திருகு வட்டங்கள் கொண்ட ரேடியோக்கள், கிராமோபோன் ரெக்காடர்கள், தொலைக்காட்சிகள் என அவை முதன் முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
19ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே யாழ்ப்பாணத்தவர்கள், வெளிநாடுகளில் வர்த்தகங்கள், தொழில்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், யாவா போன்ற நாடுகளுக்கு அன்றைய பிரித்தானிய கொலனித்தவ ஆட்சியின் அரச அலுவலகர்களாக பெருமளவிலான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்தவர்கள் அன்றே கல்வி நிலையில் ஆசியாவில் உயர்ந்து நின்றதன் காரணத்தால் வெள்ளையர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். அது தவிர அன்றைய நிலையில் இலங்கையில் ஏனைய பிரதேசங்களுக்கு கொடுக்காத ஒரு சலுகையினை ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருந்தனர் என்பது அன்றைய நாட்களில் பல நூல்களை எழுதியவர்களின் கருத்துக்களில் இருந்து தெரியவருகின்றது.
இந்த நிலையில் இலங்கைக்குள்ளேயே ஏனைய சமுதாயங்கள் சுழன்றுகொண்டிருந்தபோது உலகஓட்டத்திற்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்த ஆரம்பித்துக்கொண்டவர்களும் யாழ்ப்பாண மக்களே. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் மேல்நிலையினை அடைந்திருந்த அந்த மக்கள், இலங்கை பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர், அவர்களின் ஆத்திரங்களாலும், பொறாமைகளாலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதும், குழிபறிக்கப்பட்டதும் வரலாறு அறிந்த உண்மை. இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல சளைத்துவிடவில்லை. பெரும்பான்மை இனத்தினர் நினைத்ததுபோல அவர்களின்மூளை வெள்ளையனால் வந்ததல்ல, ஜீன்களிலேயே உள்ளது.
1979 ஆம் ஆண்டு இலங்கையில் ஒளிபரப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் ஆரம்பமாக தொடங்கின. இந்த நிலையில் 1979ஆம் ஆண்டு ஐ.ரி.என். என்ற சுவாதீன ஒளிரப்பு சேவையும், 1982ஆம் ஆண்டு இலங்கையின் தேசியத் தொலைக்காட்சியான ரூபவாஹினியும் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் இவை இரண்டுமே அரசாங்க தொலைக்காட்சி சேவைகளாகவே நடத்தப்பட்டன. இந்த சேவைகளிலும் தமிழ் நிகழ்ச்சிகள் மிக மிக அரிதாகவே காணப்பட்டன. இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ்த்திரைப்படங்கள் என்பவற்றை வீட்டில் இருந்தவாறே பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் யாழ்ப்பாண மக்களிடம் எழுந்தது.
அந்த எண்ணங்கள் உடனடியாகவே செயற்பாடுகளாக மாற்றம் கண்டன. 1983 ஆம் ஆண்டு, மற்றும் 1984ஆம் ஆண்டு காலங்களிலேயே யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பு சேவைகளை நடத்தத் தொடங்கிவிட்டன
அன்றைய நிலையில் வி.எச்.எஸ் அலையமைப்பில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஒளிபரப்புக்கள் யாழ்ப்பாண மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஒன்று இரண்டென ஆரம்பிக்கப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் 15 ற்கும் மேற்பட்ட யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் உருவாகும்வரை தொடர்ந்தன.
யாழ்ப்பாணத்தில் ஈச்சமோட்டை மற்றும் அரியாலை பகுதிகளில் வைத்து “றீகல் வீடியோ மூவிஸ்” என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச்சேவை யாழ்ப்பாண நகரை பெரும்பாலும் மையப்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண நகருக்குள் தௌ;ளத்தெளிவாக அதன் ஒளிபரப்புக்களை பார்க்கக்கூடியதாக அந்த ஒளிபரப்பு இருந்தது.
அதேபோல மானிப்பாய், நவாலி, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு ஒளிபரப்பினை தெளிவாக பார்க்கக்கூடியவாறு “விக்னா” என்ற ஒளிபரப்பு சேவை ஒளிபரப்பட்டது. அதேபோல யாழ்ப்பாணம் கச்சேரியடிப்பகுதியில் இருந்து “செல்வா வீடியோ மூவிஸ்” என்ற தொலைக்காட்சி அலைவரிசையும், யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம் சகோதரர்களால் “வாஹிட்” என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளும் நடத்தப்பட்டு வந்தன.
புலவர் வீடியோ, லவ்பேர்ட்ஸ், நல்லூர் வீடியோ, என 15 க்கும்; மேற்பட்ட தனியார் ஒளிபரப்பு சேவைகள் தொடங்கப்பட்டன.
இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயங்கள் என்னவென்றால், இவர்கள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்ளாது, ஒரு செயற்குழு ஒன்றினை அமைத்து, நேரப்பிரகாரம் தமது ஒளிபரப்பு சேவைகளை வழங்கிவந்தார்கள்.
ரூபவாஹினியில் “என்ன சுந்தரி புது சட்டையா?” என்ற சண்லைட் விளம்பரம் சிரிக்கத்தக்க ஒரு விளம்பரமாக வந்தபோதே தரமான விளம்பரங்களை யாழ்ப்பாண விளம்பர அமைப்புக்கள், யாழ்ப்பாண விற்பனை நிலையங்களின் விளம்பரங்களை தரமாக அமைத்திருந்தார்கள். ரூபவாஹினியில் மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்திற்கு தவமிருந்து பார்த்து இரசித்த மக்களுக்கு, புதிய புதிய திரைப்படங்களை திகட்ட திகட்ட வழங்கினார்கள் இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு நிலையத்தவர்கள்.
விளம்பரங்கள், விசேட நிகழ்வுகள், போட்டிகள், பண்டிகை விழாக்கள், மாணவர்களின் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கள், விளையாட்டுப்போட்டி ஒளிபரப்புக்கள், கல்வி நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள், கலைநிகழ்ச்சிகளின் ஒளிபரப்புக்கள், கோவில்களின் உற்சவங்களின் நேரடி ஒளிபரப்புக்கள் என்று மெல்ல மெல்ல தரமான தனியார் ஒளிபரப்புக்களுக்கான வித்தினை 1983-84ஆம் ஆண்டுகளிலேயே போட்டுவிட்டன யாழ்ப்பாண தனியார் தமிழ் ஒளிபரப்புக்கள்.
பொழுபோக்கு நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டாலும் திரைப்படங்கள் மட்டும் என்ற வரையறைக்குள் நின்றுவிடாது, அன்று மக்களுக்கு புதிதாக இருந்த சிங்கப்பூர் ஒளியும் ஒலியும் என்ற மேடைநிகழ்சிகள், முதல் முதல் இடம்பெற்ற திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற ஸ்ரார் கிரிக்கட் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கார்ட்ரூன் நிகழ்வுகள், ஆழ்கடல் உலகம், வினோத உலகம் போன்ற நிகழ்வுகள் என்பவற்றையும் ஒளிபரப்பு செய்தனர். அடுத்து முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய சம்பவங்கள் என்னவென்றால் மாணவர்களுக்கான உயர்தரப்பரீட்சை மற்றும் சாதாரண தரப்பரீட்சைகள் என்றால் தமது ஒளிபரப்புக்களை அந்த பரீட்சைகள் முடியும்வரை ஒத்திவைத்திருந்தனர்.
வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்து உச்ச பயனை அடைவது பொருளியலின் சவால் என்றாலும், யாழ்ப்பாண மக்களே இந்த விடயத்திற்கு எடுத்துக்காட்டானவர்கள். அவர்களின் பல கட்டங்களிலும் கவனித்துப்பார்த்தால் அந்த விடயம் புரியும். குறைந்த வளங்களை வைத்து நிறைந்த பயனை அடையும் அவர்களின் திட்டங்கள் பாராட்டத்தக்கவை. பெற்றோல் தட்டுப்பாடாக இருந்தபோதும் வாகனங்களை இயக்கியது, மின்சாம் இல்லாத போதும், டைனமோவில் இருந்துவரும் ஏ.சி மின்சக்தியை டி.சி சக்தியாக ஒரு சேர்க்கிட்மூலம் மாற்றி சைக்களை சுற்றி ரேடியோகேட்டது, அதேபோல வாகனங்களின் வைப்பர் மொட்டர்களை சற்றி தொலைக்காட்சி பார்த்தது, திகைக்கவைக்கும் பல சுதேச கண்டுபிடிப்புக்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் இதற்கு முன்னதான காலத்தில் அதி நவீன கருவிகள் இல்லாமல் தம்மிடம் இருக்கம் ஒரு சில சிறிய கருவிகள் துணைகொண்டே இவர்கள் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை மிகவும் தரமாகவும், சிறப்பாகவும் செய்துகாட்டினார்கள். கிட்டத்தட்ட 1987வரை தொடர்ந்த இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்புக்கள் அதன் பின்னர் இந்தியப்படையின் ஆக்கிரமிப்பும், அதன் பின்னர் இடம்பெற்ற மோதல் காலங்களில் யாழ்ப்பாணம் மின்சாரமின்றி இருந்ததும் அனைவரும் தெரிந்தவிடங்களே.
இன்று இலங்கையில் தமிழ் தனியார் தொலைக்காட்சி வரலாற்றினை ஆரம்பித்தவர்கள் நாங்களே. தமிழ்வளர்ப்பவர்கள் நாங்களே என்று சொல்லிக்கொள்பவர்கள்!! யாழ்ப்பாண ஒளிபரப்புக்கு என்று ஒரு வரலாறு உண்டு என்பதை புரிந்துகொண்டால் சரி.
13 comments:
Nice,
Thanks for your visit and comments in my blog.
எனக்கு முக்கியமான பதிவு! கொஞ்சம் லேட்டாப் படிக்கிறேன்! படத்தில இருக்குற சுட்டிகள் உங்க வீட்டு குழந்தைகளா?
// “றீகல் வீடியோ மூவிஸ்” என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச்சேவை யாழ்ப்பாண நகரை பெரும்பாலும் மையப்படுத்தியிருந்தது.//
ம்ம் தெரியும்...
மிச்சம் தெரியா பாஸ்
புதிய தகவல்
புதிய தகவல்..........
தகவலுக்கு நன்றி... முடக்கப்பட்டுள்ளதை மீள ஆரம்பிக்க முடியாதா... அரசியலைத்தாண்டுதல் ??
எப்போதாவது ரூபவாகினியில் வரும் தமிழ் படங்களை தென் தமிழ் நாட்டிலும் ஆர்வமாக பார்த்ததுண்டு . தனியார் சேவை குறித்த தகவல்கள் புதிதாக உள்ளன .
தொடர்ந்து நவீன வசதிகள் வந்து சேரட்டும் யாழ் நகருக்கு..
நல்ல தகவல்கள்!
அண்ணே புதிய தகவல்கள்! யாழ்ப்பாணத்தானாக இருந்தபோதும் இப்போதுதான் இதையெல்லாம் அறிகிறேன். தொடர்ந்து எம்மவர்களின் திறமைகளை பறைசாற்றுங்கள்!
தமிழக மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்போம் வாருங்கள்.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html
வணக்கம்சகோதரா, இன்றுதான் தங்களின் வலைப் பதிவிற்கு முதல் விஜயம்.
பி்ற்காலப் பகுதியில் நிதர்சனம் என அழைக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியும் யாழ்ப்பாணத்தில் இருந்தது என்று எனது தந்தையார் கூறினார். இவ் நிதர்சனம் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். வவுனியாவிலும் அரசியல் கட்சிகளை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சி சேவைகளை/ மீள் ஒளிபரப்பு நிலையங்களை உருவாக்கியிருந்தார்கள். உதாரணமாக டெலோ- சன்ரீவி, புளொட் விஜய்ரீவி, மற்றும் இதர கட்சிகள் ஆளுக்கொரு தொலைக்காட்சி சேவைகளை மீள் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த தொலைக்காட்சிகளின் நேரடி விளம்பரங்களை இவர்கள் கட் பண்ணி, வவுனியா உள்ளூர் வர்த்தக விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள்.
யாழ்ப்பாணத்தில் தனியார் விளம்பர சேவையும் வானொலி ஒலிபரப்பு போல பஸ் நிலையப்பகுதியில் இற்றைவரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே போல வவுனியாவிலும் ஒரு அரசியல் கட்சியினர் நீண்டகாலமாக ஒரு வானொலி சேவையினை நடாத்துகிறார்கள். இவ் வானொலியிலும் வர்த்தக விளம்பரங்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
வட கிழக்கின் ஏனைய பகுதிகளின் ஒளி, ஒலி தொழில்நுட்பங்கள் பற்றி அறியும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். தங்களின் நினைவு மீட்டல் பதிவுக்கு நன்றிகள்.
Post a Comment